[காலச்சுவடு இதழில் காந்தி 150ஐ ஒட்டிச் சென்ற ஆண்டில் (ஜனவரி 2020) வெளிவந்த கட்டுரை]
‘கிராம சுயராச்சியம்தான் உண்மையான சுயராச்சியம் என்று பேசிய காந்தி, ஏன் இவ்வளவு பெரிய தேசத்தைக் கட்டமைத்தார்? இந்திய தேசத்தோடு இணைய விருப்பமில்லாத மக்களையும் ஏன் கட்டாயமாக இணைத்தார்?’ என்று ஒரு நண்பர் கேட்டார். அவர் பல்வேறு சமூகப்பணிகளில் ஈடுபட்டிருப்பவர். உள்ளூர் அமைப்புகளை வலுவாக்குவதில் நம்பிக்கைகொண்டவர். தனது பகுதியைத் தன்னிறைவடையச் செய்யப் பாடுபடுபவர். எளிமையான வாழ்க்கை வாழ்பவர். ஒரு காந்தியர் என்றே சொல்லலாம். ஆனால் காந்தியின் தேசியம் காரணமாக அவரைக் கடுமையாக நிராகரிப்பவர். இக்கேள்விக்கு அப்போது சில மேலோட்டமான விடைகளைச் சொன்னாலும் காந்தியின் தேசியத்தை மேலும் ஆழமாக ஆராய்ந்து பார்க்கவேண்டும் என்று தோன்றியது. தேசியத்தின் பெயரால் பலர் போற்றப்படுவதும் தூற்றப்படுவதும் நிகழ்ந்துகொண்டிருக்கும் இச்சூழலில் காந்தியின் தேசியவாதத்தைப் புரிந்துகொள்வது அவசியமாகிறது.
காந்தியின் தேசியம் எளிதில் வகைப்படுத்திவிட முடியாத தனித்தன்மை வாய்ந்ததாக இருந்தது. தேசம், சுயராச்சியம், அகிம்சை குறித்த அவரது வெவ்வேறு கருத்தியல் நிலைகள் ஒன்றுக்கொன்று முரண்பட்டவையாகத் தோன்றலாம். ஆனால் அனைத்தையும் ஒருங்கே நோக்கினால் அவற்றை இணைக்கும் சில பொதுச்சரடுகளைக் காணலாம். நாம் மிக முக்கியமாகக் கருத்தில் கொள்ளவேண்டியது காந்தியின் தேசியம் ஓர் அடிமை நாட்டின் விடுதலைக்காகப் போராடிய ஒருவரின் தேசியம்; விடுதலைக்குப் பிறகு வாழ்ந்த சில மாதங்களிலும் சிதறிக் கிடந்த மக்களை ஒருங்கிணைக்கப் போராடியவரின் தேசியம்; தேசியத்தின் பெயரால் கொல்லப்பட்ட ஒருவருடைய தேசியம். அமைதி நிலவும் சுதந்திர தேசத்தில் அவர் தேசம் கடந்த மனிதநேய நிலையை நோக்கித்தான் சென்றிருப்பார் என்பதை அவர் வெவ்வேறு தருணங்களில் உரைத்த சில கருத்துகளிலிருந்து நாம் உய்த்துணரலாம். காந்தியின் தேசியத்துக்கும் காந்தியைக் கொன்றவர்களின் தேசியத்துக்கும் இடையே பெரும் வேறுபாடு உண்டு.
காந்திக்குப் பலவிதங்களில் வழிகாட்டியாக இருந்த லியோ தல்ஸ்தோய் தேசியவாதத்தை மிகக் கடுமையாக விமர்சித்தவர். “நம் நாளில் தேசபக்தி என்பது ஒரு செயற்கையான, பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட, தீங்கான உணர்வு; இதுவே மனிதகுலம் அனுபவிக்கும் துன்பங்களில் பெரும்பாலானவற்றுக்குக் காரணமாக இருக்கிறது. எனவே, இந்த உணர்வு இப்போது நிகழ்வதுபோல் வளர்க்கப்படக்கூடாது. மாறாகப் பகுத்தறிவுள்ள மனிதர்களால் தமக்குள்ள அனைத்து வழிகளைக் கொண்டும் இது ஒடுக்கப்படவேண்டும்; ஒழிக்கப்படவேண்டும். எனினும், மக்களைப் பாழ்படுத்தும் கொடும்போர்களும் உலகளாவிய ஆயுதமயமாக்கலும் இந்த ஒற்றை உணர்விலிருந்தே எழுகின்றன என்பதை மறுக்கமுடியாதெனினும், தேசபக்தியின் பிற்போக்குத்தனத்தையும், காலத்துக்கு ஒவ்வாமையையும், தீமையையும் நிறுவும் எனது வாதங்கள் மௌனத்தையோ, வலிந்துசெய்யப்படும் தவறான புரிதலையோ, தவறான தேசபக்திதான் (தேசவெறி அல்லது ஆதிக்க உணர்வு) தவறு என்றும் உண்மையான, நல்ல தேசபக்தி மிகவும் மேலான அற உணர்வு என்றும் அதைக் கண்டிப்பது பகுத்தறிவற்ற செயல் மட்டுமன்று கொடூரமானதும்கூட என்றும் கூறும் வினோதமான பதில்களையுமே எதிர்கொண்டன; எதிர்கொள்கின்றன.
நல்ல தேசபக்தி என்பதில் என்னவெல்லாம் அடக்கம் என்பதைக் குறித்து எவருமே எதுவமே சொல்வதில்லை; அப்படியே சொன்னாலும், விளக்கங்களுக்குப் பதிலாக அறுதியிடல்களையோ அலங்காரப் தொடர்களையோதான் நாம் கேட்கிறோம். இறுதியில் தேசபக்திக்குப் பதில் வேறு எதையோ பதிலீடு செய்வார்கள்; நாமறிந்த, தன் விளைவுகளால் நம்மைக் கடுமையாகத் துன்புறுத்திவரும் தேசபக்திக்கும் அதற்கும் சம்பந்தமே இராது,” என்று தேச பக்தியை நவீன உலகின் எல்லாத் துன்பங்களுக்கும் ஊற்றாக அடையாளப்படுத்திச் சாடினார். (1)
வன்முறை மீது நம்பிக்கை கொண்ட சில இந்திய தேசியவாதிகள் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் இருந்தனர். 1908ல், ‘ஃப்ரீ ஹிந்துஸ்தான்’ என்ற இதழை நடத்திய தாரக்நாத் தாஸுக்கு தல்ஸ்தோய் ‘ஓர் இந்துவுக்கு ஒரு கடிதம்’ எழுதியிருந்தார். அதில் ‘…நம் வாழ்வில் ஒரே ஒரு சட்டம்தான் செல்லுபடியாகும் – அது அன்பு; ஒவ்வொரு தனிமனிதனுக்கும் மனிதகுலம் முழுமைக்கும் மகிழ்ச்சியைத் தரவல்லது அன்பு. இதை உணர்வதைத் தடுக்கும், அதிகப்படியாக வளர்ந்துவிட்ட, மலையளவு முட்டாள்த்தனங்களிலிருந்து உங்கள் உள்ளங்களை விடுதலை செய்யுங்கள். உலகின் எல்லா மதங்களுக்கும் பொதுவான, மனிதனுக்குள் இருந்த உள்ளார்ந்த, ஐயமுறமுடியாத உண்மையை மறைத்திருக்கும் அபத்தமான போலியான மத நம்பிக்கைகளிலிருந்து அந்த உண்மை வெளிப்படும்,” என்று எழுதினார். (2) இதை நிறுவும் விதமாக விவேகானந்தர், கீதை, திருக்குறள் என்று பல இந்திய நூல்களிலிருந்து மேற்கோள்கள் காட்டினார். இக்கடிதத்தை ஓர் அறிமுகத்துடன் காந்தி வெளியிட்டார். குஜராத்தியில் மொழிபெயர்க்கவும் செய்தார். இதன்மூலமாகவே அவர்களிடையே கடிதப்போக்குவரத்து தொடங்கியது. அச்சமயத்தில் இங்கிலாந்து சென்று சாவர்க்கர் போன்ற இந்திய தேசியவாதிகளோடு உரையாடிய காந்தி, அங்கு அவர் சந்தித்த கேள்விகளுக்கும் அவர் அவதானித்த போக்குகளுக்கும் எதிர்வினையாக ‘இந்திய சுயராச்சியம்’ (Hind Swaraj or the Indian Home Rule) என்ற நூலை இயற்றினார். இந்நூலை காந்தி தல்ஸ்தோய்க்கு அனுப்பினார். காந்தியின் அரசியல் பார்வையை மிக விரிவாகவும் தெளிவாகவும் எடுத்துரைத்த நூல் இந்திய சுயராச்சியம். அவருக்குப் பதிலெழுதிய தல்ஸ்தோய், “உங்கள் கடிதமும், உங்கள் புத்தகமான இந்திய சுயராச்சியமும் கிடைத்தது. உங்கள் புத்தகத்தை மிகந்த ஈடுபாட்டுடன் படித்தேன்; காரணம், நீங்கள் இந்த நூலில் எதிர்கொண்டிருக்கும் கேள்வி இந்தியர்களுக்கு மட்டுமல்லாமல், மனிதகுலம் முழுமைக்கும் முக்கியமானது என்று நினைக்கிறேன்,” என்றார். (3)
காந்தியால் குருதேவர் என்றழைக்கப்பட்ட ரவீந்திரநாத் தாகூர் எழுதிய பாடல்கள் இரண்டு தேசங்களுக்குத் தேசிய கீதங்கள் ஆயின. ஆனால் அவரும் தேசியவாதத்துக்கு எதிரானவர். ’நான் குறிப்பாக எந்த ஒரு தேசத்துக்கும் எதிரானவனல்லன்; தேசம் என்ற பொதுவான கருத்துக்கே எதிரானவன்,’ என்றார். இன்னும் ஒரு படி மேலேறி, தல்ஸ்தோயைப் போலவே, “தேசியவாதம் மிகவும் ஆபத்தானது. இந்தியவாவின் பல தொல்லைகளுக்கும் அடித்தளமாகப் பல்லாண்டுகளாக இருந்தது இதுவே” என்றார். காரே பைரே, முக்த தாரா போன்ற நூல்களில் தேசியத்தின் சிக்கல்களை வெளிக்கொணர்ந்தார். காந்திக்கும் தாகூருக்கும் இடையே நடந்த பல விவாதங்கள் தாகூரின் சர்வதேசியத்துக்கும் காந்தியின் தேசியத்துக்கும் இடையே இருந்த முரண்களின் அடிப்படையிலேயே அமைந்தன. ஒத்துழையாமை இயக்கத்தில் தேசியத்தின் பெயரால் இருந்த எதிர்மறைத்தன்மையை அவர் விமர்சித்தார். வெளிநாட்டு ஆடைகளைப் புறக்கணிப்பது, ஆங்கிலமொழியைத் எதிர்ப்பது ஆகியவையும் அவருக்கு ஏற்புடையனவாக இல்லை. “அறத்தின் ஆற்றலைக் கேலிக்கூத்தாக மாற்றிவிடுவது குற்றச்செயல்” என்று கடிந்துகொண்டார். இதனாலேயே, காந்தியின் மீது மாறாத அன்பு கொண்டிருந்தபோதும், காந்திய இயக்கங்களில் அவர் முழுமையாக ஈடுபடாமற் போனார். “தற்போதைய இயக்கத்தின் உண்மையான ஆன்மீகத் தன்மை குறித்த சந்தேகப் பேய் ஒரு கணம் தன்னைப் பீடிக்க அனுமதிக்க மறுத்திருந்தாரெனில், இவ்வியக்கம் தேசியம், தேசபக்தி ஆகிய பழைய சொற்களின் பொருளை மாற்றிக்கொண்டும் அவற்றின் செயற்பரப்பை விரிவு செய்துகொண்டும் இருக்கிறது என்பதை நம்பியிருந்தாரெனில் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்,” என்று காந்தி தாகூருக்கு மறுப்பு எழுதினார். “இந்திய தேசியம் பிறரை விலக்குவதோ, மூர்க்கமானதோ, அழிவேற்படுத்துவதோ அன்று. அது நலம் விளைவிப்பது; ஆன்மீகமானது; எனவே, மனிதநேயமிக்கது. இந்தியா மனிதகுலதுக்காக மரணமடைய விழையும் முன் வாழ்வதற்குக் கற்க வேண்டும். பூனையின் பற்களுக்கிடையே பரிதாபகரமாக அகப்பட்ட எலி தன்மீது திணிக்கப்படும் தியாகத்தின் மூலமாக எச்சிறப்பையும் அடைவதில்லை,” என்றார்.
“கவிஞர் தன் கவித்துவ இயல்புக்கேற்ப நாளைய தினத்துக்காக வாழ்கிறார்; நம்மையும் அவ்வாறே வாழச்சொல்கிறார். வியப்பில் விரிந்த நம் விழிகளுக்கு அவர் அளிக்கும் அழகிய சித்திரத்தில் புல்லினங்கள் புலர்காலையில் பண்கள் பாடிப்போற்றி வானில் உயர்ந்து செல்கின்றன. இப்பறவைகள் அன்றைய தினத்துக்கான உணவை உண்டுவிட்டு, முந்தைய இரவில் ஓய்வெடுத்துப் புது ரத்தம் பாயும் சிறகுகளுடன் உயரப்பறக்கின்றன. ஆனால் சிறகுகளை அசைக்க வைக்கக்கூட முடியாத வலுவற்ற நிலையிலுள்ள பறவைகளைப் பார்க்கும் வலியை நான் அனுபவிக்கவேண்டியிருந்தது. இந்திய வானின் கீழே உள்ள மனிதப்பறவை ஓய்வெடுப்பதாக பாவனை செய்வதற்குமுன்பு இருந்ததைவிடப் பலவீனமாக எழுகிறது,” என்று கவிஞரின் குற்றச்சாட்டுக்கு காந்தி கவித்துவமான விடையளித்தார். (4) இந்திய தேசியமும் தேசவிடுதலையும் தாகூரின் சர்வதேசியத்துக்கான முதல்படியாக காந்தி கருதினார்.
இதையே ‘இந்திய சுயராச்சியம்’ நூலைப் படித்த தல்ஸ்தோய் மிகச்சரியாக அடையாளம் கண்டுகொண்டார் எனலாம். தாகூரும், தல்ஸ்தோயும் தாக்கிய தேசியவாதத்தில் இருந்த குழுமனப்பான்மையும், வன்முறையும், தாம்-பிறர் என்று இருமையும், மிகையான பழம்பெருமையும் காந்தியின் தேசியத்தில் இல்லாமலோ மட்டுப்பட்டோ இருந்தன. காந்திக்கு இந்திய வரலாற்றின் மீது மிகையான பற்றும் இல்லை; மேற்கத்தியப் பண்பாட்டின்மீது மிகையான ஈர்ப்பும் இல்லை, காழ்ப்பும் இல்லை. அவர் நவீனத் தொழில்மயமாகும் போக்கை நிராகரித்தபோதும், அதன் நிறைகுறைகளை ஆய்ந்தே நிராகரித்தாரேயன்றி, அது மேற்கிலிருந்து வந்தது என்பதால் நிராகரிக்கவில்லை. ஆங்கில ஆட்சியையுமேகூட அது வெளிநாட்டவரின் ஆட்சி என்பதற்காக அவர் எதிர்க்கவில்லை. தம் நாட்டு மக்களுக்குத் தீமைதரும் ஆட்சி என்று கருதியதாலேயே எதிர்த்தார். அதனாலேயே ஆரம்பத்தில் ஆங்கில ஆட்சியிலேயே இந்தியர்களுக்குத் தேவையான உரிமைகளுடனும் சுயாட்சியுடனும் வாழமுடியும் என்று நம்பினார். அது சாத்தியமில்லை என்று அனுபவப்பூர்வமாக அவர் உணர்ந்த பிறகே ஆங்கில ஆட்சியே நீங்க வேண்டும் என்ற கொள்கையை நோக்கித் தீர்க்கமாக நகர்ந்தார். நல்லாட்சி என்பது தன்னாட்சிக்கு மாற்றாக முடியாது என்றும் எத்தனை குறைபாடுகள் இருந்தாலும் முழு சுதந்திரத்துடன் வாழவேண்டும் என்றும் பின்னர் கூறினார்.
இருபதாம் நூற்றாண்டில் இந்தியா உட்பட உலகெங்கிலும் இருந்த பல தேசியவாதிகளும் கரிபால்டி, மாஜினி ஆகியோரின் இத்தாலிய தேசியவாதத்தின் வெற்றியிலிருந்து உந்துதல் பெற்றனர். தமிழின் தேசிய கவி பாரதி, ’எங்கள் பொன்னுயர் நாட்டை ஒற்றுமை யுடைத்தாய்ச் சுதந்திரம் பூண்டது வாகி/ இன்னுமொர் நாட்டின் சார்வில தாகிக்/ குடியர சியன்றதா யிலக,’ போன்ற வரிகளை ‘மாஜினியின் பிரதிக்கினை’ என்ற கவிதையில் எழுதினான். சாவர்க்கர் மாஜினி சரித்திரம் என்ற நூலை எழுதினார். காந்தியும் மாஜினியைப் புகழ்ந்து கட்டுரைகள் எழுதியிருந்தாலும், இத்தாலிய தேசியத்தை முழு வெற்றியாகக் கருதவில்லை. ஆஸ்திரிய ஆட்சியை வீழ்த்தி இத்தாலியர்களின் ஆட்சி வந்துவிட்டதாலேயே இத்தாலிய மக்களின் நிலை மேம்பட்டுவிடவில்லை என்றார். கரிபால்டியைப் பொருத்தவரை ஆஸ்திரியர்களின் ஆட்சியை அகற்றுவதே நோக்கமாக இருந்தது; அதற்கு மாற்றாக இத்தாலிய மன்னராட்சியையே அவர் முன்வைத்தார். ஆனால் மாஜினியின் வரையறையில் இத்தாலி என்பது உழவர்கள் உட்பட எல்லா மக்களையும் குறிக்கும்; உழைக்கும் மக்கள் மகிழ்ச்சியற்றிருப்பதால், மாஜினியின் இத்தாலி இன்னும் அடிமை நிலையிலேயே இருக்கிறது என்று காந்தி கருதினார். அதுபோலவே தனது தேசபக்தியும் பிரித்தானியர்களுக்குப் பதிலாக இந்திய மன்னர்களின் காலடியில் மக்கள் நசுக்கப்படுவதை அனுமதிக்காது; தேசபக்தி என்ற சொல்லின் மூலம் அனைத்து மக்களின் நலனையுமே கருத்தில்கொள்வதாகவும் ஆங்கிலேயர்கள் மூலமாக அப்படியொரு நலம் விளைந்தால், அவர்களுக்குத் தலை வணங்கத் தயார் என்றும் சொன்னார். சர்வாதிகாரத்தை எதிர்த்து இந்தியா சுதந்திரம் பெறுவதற்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்து இந்நிலத்துக்காகப் பாடுபடும் எந்த ஆங்கிலேயனையும் இந்தியனாக ஏற்று வரவேற்கத் தயார் என்று அறிவித்தார். (5)
வன்முறையின் மீதெழுப்பப்பட்ட தேசியத்தைக் கொள்கையடிப்படையில் எதிர்த்த காந்தி, நடைமுறைத் தர்க்கம் சார்ந்தும் அதை எதிர்த்தார். இத்தாலியர்களைப் போல ஆயுதமேந்தி ஆங்கிலேயர்களை வீழ்த்தவேண்டுமெனில் இந்தியாவும் ஐரோப்பிய முறைகளைத் தழுவ வேண்டும். அப்போது இந்தியாவின் நிலையும் ஐரோப்பாவைப் போலவே பரிதாபத்துக்குரியதாகும். ஐரோப்பியப் பண்பாடுதான் நமக்கு வேண்டுமெனில், அப்பண்பாட்டில் நன்றாகப் பயிற்சிபெற்றிருப்பவர்கள் நம்மிடையே இருப்பதுதானே சிறந்தது. பிறகு சில உரிமைகளுக்காகப் போராடிக்கொண்டு காலம் கழித்துவிடலாம் என்று தீவிரவாத தேசியத்துக்கு எதிராக வாதாடினார்.
1909ல், லண்டனில் இந்திய மாணவர்களோடான ஒரு சந்திப்புக்கு வந்த கர்சன் வில்லி என்ற ஆங்கிலேய அதிகாரியை மதன்லால் திங்க்ரா சுட்டுக்கொன்றார். குறுக்கே வந்து அவரைத் தடுக்க முயன்ற லால்கக்கா என்ற பார்சி மருத்துவரையும் கொன்றுவிட்டார். அப்போது தேசியவாதிகள் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு செயலை காந்தி செய்தார். திங்க்ரா செய்தது தவறு என்று ஒரு கட்டுரை எழுதினார். இன்றும்கூட திங்க்ராவின் நீதிமன்ற அறிக்கை தேசபக்தியின் உச்சங்களில் ஒன்றாகப் பலரால் போற்றப்படுகிறது. (ராமச்சந்திர குகா, திங்க்ராவின் உரையைப் பெற்ற சாவர்க்கர் அதில் ராமர், கிருஷ்ணர் ஆகிய பெயர்களைச் சேர்த்து இந்துமதச் சாயம் கூட்டி வெளியிட்டார் என்கிறார். (6)) அன்று வின்ஸ்டன் சர்ச்சில் ‘தேசபக்தியின் பெயரால் பேசப்பட்ட மிகச்சிறந்த உரை’ என்றும் ‘இன்னும் ஈராயிரம் ஆண்டுகளுக்கு நினைவில் கொள்ளப்படும்’ என்றும் ‘சட்டப்படி அவர் தண்டிக்கப்படவேண்டும் – இறுதிச்சடங்குகள் செய்வதற்கு அவரது உடல் நண்பர்களுக்குத் தரப்படக்கூடாது என்பதைக்கூட நான் ஆதரிக்கிறேன்’ என்றும் தன்னிடம் சொன்னதாகக் வில்ஃபிரட் ப்ளண்ட் கூறுகிறார்(7). இந்தியன் ஒப்பீனியன் இதழில் எழுதிய காந்தி, “மதன்லால் திங்க்ராவின் எதிர்வாதம் ஏற்கத்தகுந்ததன்று. என் பார்வையில் அவர் ஒரு கோழையைப் போல நடந்திருக்கிறார். அவரைப் பார்த்து என்னால் பரிதாபப்படத்தான் முடிகிறது. அவர் படித்த மிக மோசமான எழுத்துகளை அரைகுறையாகப் புரிந்துகொண்டதால் இச்செயலைச் செய்யத் தூண்டப்பட்டிருக்கிறார். அவர் ஆற்றிய எதிர்வாதமும் மனனம் செய்து கற்றது போலிருக்கிறது. அவரைத் தூண்டியவர்கள்தாம் தண்டனைக்குரியவர்கள். என் பார்வையில் திரு.திங்க்ரா தன்னளவில் குற்றமற்றவர். இக்கொலை ஒரு போதைநிலையில் செய்யப்பட்டுள்ளது. மதுவோ கஞ்சாவோ மட்டும் போதைதருவதில்லை; ஒரு வெறியூட்டும் சிந்தனையும் அதைச் செய்யும். இதுதான் திரு.திங்க்ராவுக்கு நிகழ்ந்துள்ளது,” என்றார். ‘இங்கிலாந்தின் மீது ஜெர்மனி படையெடுத்து வந்தால் ஜெர்மானியர்களை எதிர்த்து ஆங்கிலேயர்கள் சுடமாட்டார்களா?’ என்ற திங்க்ராவின் வாதத்துக்கு, “ஆங்கிலேயர்கள் படையெடுத்துவரும் ஜெர்மானியர்களைத்தாம் கொல்வார்கள். எதிர்ப்படுபவர்களையெல்லாம் கொல்லமாட்டார்கள். விருந்தாளியாக வந்தவர்களைச் சுடமாட்டார்கள்,” என்றார். “இப்படிப்பட்ட கொலைப்பாதகங்களின் மூலம் பிரித்தானியர்களை வெளியேற்றினால் அவர்களுக்கு மாற்றாக நம்மை யார் ஆள்வார்கள்? ஒரே பதில்: கொலைகாரர்கள்” என்று வாதிட்டார். (8) பின்னார் ‘இந்திய சுயராச்சியம்’ நூலிலும், “திங்க்ராவின் செயலாலும், அதைப் போல இந்தியாவில் நடந்துள்ள பிற செயல்களாலும் இந்தியா பலனடைந்துள்ளது என்று நினைப்பவர்கள் பெரிய தவறிழைக்கிறார்கள். திங்க்ரா ஒரு தேசபக்தன்; எனினும் அவர் அன்பு குருட்டுத்தனமானது. அவரது உடலைத் தவறான வழியில் பலியிட்டிருக்கிறார். இதன் விளைவு விபரீதமானதாகத்தான் இருக்கும்,” என்று எழுதினார். திங்க்ரா ஆங்கிலேய அதிகாரியை மட்டுமல்லாமல் ஓர் இந்தியரையும் சேர்த்தே கொன்றார் என்பதையும் அவர் குறிப்பிடத் தவறவில்லை.
காந்தி இந்திய சுயராச்சியம் நூலிலேயே பின்னாளில் தன் தேசியத்தின் மிக முக்கியமான அம்சமாக வளர இருந்த மத ஒற்றுமையையும் முன்வைத்தார். காந்தியின் தேசியத்தில் இந்து மத அடையாளம் நிறைந்திருந்தாலும் அவர் சனாதன தேசியவாதிகளிடமிருந்து பெரிதும் மாறுபட்டிருந்தார். “வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த மக்கள் வாழ்கிறார்கள் என்பதாலேயே இந்தியா ஒற்றைத் தேசமில்லை என்றாகிவிடாது. அந்நியர் புகுந்துவிடுவதால் ஒரு தேசம் அழிந்துவிடாது; அவர்கள் அத்தேசத்தில் இணைந்துவிடுகிறார்கள். அப்படியான சூழல் இருக்கும்போதுதான் ஒரு நாடு ஒற்றை தேசமாக இருக்கமுடியும். பிறரை உள்வாங்கித் தன்வயப்படுத்தும் தன்மையை அத்தேசம் பெற்றிருக்கவேண்டும். இந்தியா அப்படியான தேசமாகத்தான் இருந்திருக்கிறது. நடைமுறையில், எத்தனை தனிநபர்கள் இருக்கிறார்களோ அத்தனை மதங்கள் இருக்கின்றன. ஆனால் தேசியத்தின் ஆன்மாவை உணர்ந்தவர்கள் மற்றவர்களது மதத்தில் தலையிடமாட்டார்கள். அப்படிச் செய்தால், அவர்கள் ஒரு தேசம் என்று கருதப்படுவதற்குத் தகுதியற்றவர்கள். இந்தியாவில் இந்துக்கள் மட்டுமே இருக்கவேண்டும் என்று இந்துக்கள் நினைத்தால் அவர்கள் கனவுலகில் உள்ளார்கள். இந்துக்கள், முகமதியர்கள், பார்சிகள், கிறுத்துவர்கள் என்று இந்தியாவைத் தம் நாடாக்கியுள்ள அனைவருமே ஒரே தேசத்தவர்தாம்; அவரவர் நன்மைக்காகவாவது அவர்கள் ஒற்றுமையாக வாழவேண்டும்.,” என்று அவர் 1909ல் எழுதியதைத் மீண்டும் மீண்டும் வெவ்வேறு சொற்களில் இறுதிவரை கூறிவந்தார்.
1947ல் பேசும்போதும், “தேசம் முழுவதும் ஒரே மதத்தினர் இருந்தாலும்கூட தேசிய மதம் என்ற ஒன்றில் நம்பிக்கை இல்லை. அரசின் தலையீடு எப்போதும் வேண்டாத ஒன்றாகவே இருக்கும். மதம் முற்றிலும் தனிப்பட்ட விஷயம். எத்தனை மனங்கள் உள்ளனவோ அத்தனை மதங்கள் உள்ளன,” என்றார். மத நிறுவனங்களுக்கு அரசு நிதி உதவி செய்வதை எதிர்த்தார். பள்ளிகளில் மத போதனை கூடாது; பொதுவான அறங்களையே கற்பிக்கவேண்டும்; அடிப்படை அறங்கள் எல்லா மதங்களுக்கும் பொதுவானவை என்றார். (9) பசுவை மதித்த அவர் பசுவைவிடச் சக மனிதர்களை நேசித்தார். “பசுவைக் காக்க இஸ்லாமியர்களோடு போரிட்டு அவர்களைக் கொல்லவேண்டுமா? அப்போது முகமதியருக்கும் எதிரியாகி, பசுவுக்கும் எதிரியாகிவிடுவேன்,” என்றார். சட்டங்கள் மூலம் பசுவைக் காப்பாற்ற முடியாது, மனமாற்றத்தின் மூலமாக மட்டுமே பசுவைக் காக்கமுடியும் என்று நம்பினார்.
காந்தியின் தேசியம் பெரும்பான்மையினரது விருப்பத்தைப் பிரதிபலிக்கின்ற ஒன்றாக இல்லை. ‘சிறுபான்மையினரின் சேவைக்கு என்னை அர்ப்பணிக்கவே எனது அகிம்சை என்னைப் பணிக்கிறது,’ என்றார்(10) பெரும்பான்மையினரின் விருப்பத்துக்கிணங்கி முடிவெடுக்கவேண்டும் என்ற விதியை மனசாட்சியின்படி செயல்படவேண்டிய விஷயங்களில் நிராகரிக்கவேண்டும் என்ற நிலைப்பாடு எடுத்தார்.
காந்தியின் தேசியம் பிற தேசியவாதிகளிடமிருந்து மாறுபட்ட இன்னொரு இடம், அரசாங்கத்தின் கட்டுப்பாடு எந்தளவு தேவை என்பதில். “அந்நிய ஆட்சியோ தேசிய அரசாங்கமோ, சுயாட்சி என்பதன் பொருள் அரசின் கட்டுப்பாட்டில் இல்லாமல் சுயமாக இயங்குவதற்கான தொடர் முயற்சியில் ஈடுபடுவதுதான். மக்கள் தொடர்ந்து விதிமுறைகளையே நோக்கியிருந்தார்களேயானால் சுயராச்சியம் என்பது ஒரு பரிதாபமான நிகழ்வாகிவிடும்.” (11) வலுவான தேசியவாதம் வலுவான மையத்தையே கோருகிறது. காந்தியின் தேசியமோ மையத்துக்கு எதிரானது. அங்கு அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும். கிராமங்கள் சுயாட்சி பெற்றுத் தன்னிறைவு அடையவேண்டும். மையப்படுத்தப்பட்ட அமைப்பினை வன்முறையால்தான் காக்க முடியும். அகிம்சையைத் தொழில்மயமான பண்பாட்டில் கட்டியெழுப்பமுடியாது. தன்னிறைவு பெற்ற கிராமங்களின் மீதே எழுப்பமுடியும். ஹிட்லரே விரும்பினாலும் ஒரு லட்சம் கிராமங்களை அழிக்கமுடியாது. அந்த முயற்சியில் அவனும் அகிம்சாவாதியாகிவிடுவான். தான் கண்ட கிராமப் பொருளாதாரம் சுரண்டலற்றது. சுரண்டலே வன்முறையின் சாரம் என்று காந்தி நம்பினார். (12) இந்திய நகரங்களில் தென்படும் செல்வத்தைப் பார்த்து ஏமாந்துவிட வேண்டாம் என்று எச்சரித்தார். “அச்செல்வம் இங்கிலாந்திலிருந்தோ அமெரிக்காவிலிருந்தோ வரவில்லை. ஏழைகளின் உதிரத்திலிருந்து வருகிறது. ஏழு லட்சம் கிராமங்கள் இந்தியாவிலிருந்ததாகக் கூறப்படுகிறது. அவற்றில் சில துடைத்தெறியப்பட்டுவிட்டன. வங்காளத்திலும், கர்நாடகத்திலும் பிற இடங்களிலும் எத்தனை ஆயிரம் பேர் பட்டினியாலும் நோயாலும் இறந்தார்கள் என்பது குறித்த எந்தப் பதிவுகளும் இல்லை. கிராம மக்கள் என்னென்ன துன்பங்களை அனுபவிக்கிறார்கள் என்பது பற்றி அரசாங்க ஆவணங்கள் தெரிவிக்கமுடியாது. ஒரு கிராமத்தானாக இருப்பதால், கிராமங்களின் நிலை எனக்குத் தெரியும். கிராமப் பொருளாதாரம் எனக்குத் தெரியும். மேலிருந்து வரும் அழுத்தம் கீழே உள்ளவர்களை நசுக்கிவிடுகிறது.
நாம் செய்ய வேண்டியதெல்லாம், அவர்கள் முதுகுகளிலிருந்து இறங்குவதுதான்.” (13)
1942ல் கிராம சுயராச்சியம் குறித்த விரிவான ஒரு சித்திரத்தை காந்தி தீட்டினார். கிராமம் என்பது ஒரு முழுமையான குடியரசாக இருக்கும். அதன் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றுவதில் அது தன்னிறைவு பெற்றிருக்கும். பிற விஷயங்களில் பிறரைச் சார்ந்திருக்கும். உணவு, உடை, ஆடுமாடுகள், கல்வி, கேளிக்கை போன்றவற்றில் கிராமம் தன்னிறைவு கொண்டிருக்கும். உபரி நிலத்தில் பணப்பயிர்களை விளைவிக்கும். கிராமம் தனக்குத் தேவையான நீர் ஆதாரங்களை ஏற்படுத்திக்கொண்டு பராமரிக்கும். முடிந்தவரை கூட்டுறவு முயற்சியில் எல்லாம் நடைபெறும். இன்றிருப்பது போன்ற சாதியடுக்குகளும் தீண்டாமையும் இருக்காது. கிராம மக்களே கிராமக் காவலர்களாக முறையெடுத்து இருப்பார்கள். கிராம ஆட்சியை குறைந்தபட்ச தகுதிகளையுடைய கிராம மக்களால் ஆண்டுதோறும் தேர்ந்தெடுக்கப்படும் பஞ்சாயத்து அமைப்பு பார்த்துக்கொள்ளும். தேவைப்படும் அதிகாரம் பஞ்சாயத்துக்கு இருக்கும். நாமறிந்த தண்டனைமுறை இருக்காது. பஞ்சாயத்தே சட்டமன்றமாகவும், நீதிமன்றமாகவும், செயல்படுத்தும் அமைப்பாகவும் இருக்கும். தனிநபர் சுதந்திரத்தோடு கூடிய முழுமையான மக்களாட்சி இங்கு இருக்கும். உலகையே எதிர்க்கும் வல்லமை கொண்டிருக்கும்.(14)
திலகர் காலம் தொட்டே இந்திய தேசியவாதிகளின் முக்கியமான ஒரு முன்னெடுப்பாக சுதேசி இயக்கம் இருந்தது. காந்தியின் கதர் இயக்கத்தை அந்த சுதேசி இயக்கத்தின் நீட்சியாகப் பார்க்கலாம். ஆனால் காந்தியின் சுதேசி குறித்த கருத்துகளும் பிற தேசியவாதிகளின் கருத்துகளுக்கு முரணானவையாக இருந்தன. வெளிநாட்டு மூலதனமும் திறமையும் கலந்துவிடுவதாலேயே ஒரு நிறுவனம் சுதேசி நிறுவனமன்று என்றாகிவிடாது. எந்த ஒரு பொருளும் பல லட்சக்கணக்கான மக்களின் நன்மைக்காக அமைந்தால், இந்தியக் கட்டுப்பாட்டில் இருக்கும் எந்த ஒரு நிறுவனமும், அந்நிய மூலதனமும் திறமையும் கலந்திருந்தாலும், சுதேசி நிறுவனம்தான். முழுக்கவே இந்திய முதலீடும் இந்திய ஊழியர்களையும் கொண்டு நடத்தப்பட்டாலும், அந்நியர்கள் கட்டுப்பாட்டில் இருந்து, பொருள்கள் மலிவாக இருந்தாலும் இந்தியத் தொழில்களை நசுக்கினால், அவை சுதேசியாகக் கருதப்படக்கூடாது.(15) அதேபோல, இந்திய முதலாளிகள்வசம் இருந்தன என்ற காரணத்துக்காக இந்தியாவின் பருத்தி ஆலைகளை உண்மையான சுதேசி நிறுவனங்களாகவோ பிரித்தானிய ஆலைகளுக்கு மாற்றாகவோ அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. அவை ஒருசிலருக்கு லாபம் ஈட்டித்தந்தனவேயன்றி பெருவாரியான மக்களுக்குப் பயன்தருவனவாக இல்லை. எனவே அவற்றைக் கதர் இயக்கத்திலிருந்து வேறுபடுத்திப்பார்த்தார். காந்திய தேசிய அளவுகோள்களின்படி ‘இந்தியாவில் உற்பத்தி’ என்பது முக்கியமேயில்லை. யார் பயன்பெறுகிறார்கள் என்பதுதான் கேட்கப்படவேண்டிய கேள்வி.
உடை, மொழி, வாழ்க்கைமுறை என்று அனைத்திலும் காந்தி இந்தியாவின் பல கோடி ஏழைகளை நெருங்கிச் சென்றார். முதன்முறையாக இந்திய தேசிய இயக்கம் அவர்களை உள்ளிழுத்துக்கொண்டது. காந்தி இந்திய தேசியவாதிகளைச் சாதி குறித்தும், தீண்டாமை குறித்தும் சிந்தக்க வைத்தார். செயல்பட வைத்தார். சுயராச்சியத்தைவிட மக்களின் சமூக விடுதலையையும் மேம்பாட்டையும் மேலாக வைத்தார். 1921லேயே தீண்டாமை ஒழிப்பை சுயராச்சியத்தோடு இணைத்துப் பேசத்தொடங்கினார். “கிலாஃபத் அநீதியை நாம் சரிசெய்துவிடலாம். ஆனால் தேசிய உடலின் இந்து அங்கத்தைத் தீண்டாமை என்னும் நஞ்சு அரித்துக்கொண்டிருக்கும்வரை நம்மால் சுயராச்சியத்தை எட்டவே முடியாது…நாமே மனிதத்தன்மையற்று நடந்துகொண்டு ஆண்டவனின் அரியணை முன்பு நின்று பிறரது மனிதநேயமற்ற செயல்களிலிருந்து நம்மை விடுவிக்குமாறு வேண்டமுடியாது,” என்றார். (16) தேசிய விடுதலை இயக்கத்தோடு சமூக விடுதலையையும் பிற நிர்மாணப் பணிகளையும் இணைத்ததை நேரு, சுபாஷ் சந்திர போஸ் உட்படப் பலரும் விமர்சித்தனர். “நம்மவருக்குள் பரஸ்பர அநீதியுள்ளவரை தேசத்தில் ஸமாதானமிராது. நாம் பலவகைகளிலே துன்பப்பட நேரும்,” என்று ‘தீண்டாமை என்னும் பாதகம்’ என்ற கட்டுரையில் எழுதிய பாரதி கூட, “நம்முடைய ஸமூஹ வாழ்வில் அநீதிகள் இருக்கும்வரை நமக்கு ஸ்வராஜ்யம் ஸித்தியாகா தென்ற கொள்கையை நான் அங்கீகரிக்கவில்லை,” என்று அதே கட்டுரையில் குறிப்பிடுகிறான். எனினும் தீண்டாமை ஒழிப்பும், இந்து-முஸ்லிம் ஒற்றுமையும், கிராம சுயராச்சியமும், கதராடையும் காந்தியின் தேசியத்தில் பிரிக்கமுடியாத அம்சங்களாகவே இருந்தன.
வலுவான கிராமக் குடியரசுகளை உருவாக்க நினைத்த காந்தி ஏன் ஒரு பெரிய நாட்டினை உருவாக்க விரும்பினார்? இந்தியா பல மதங்கள், மொழிகள், இனங்கள் கொண்டிருந்தாலும், பண்பாட்டு ரீதியாக பல ஒற்றுமைகள் நிறைந்த ஒற்றை நாடு என்று எண்ணம், பிற இந்திய தேசியவாதிகளைப் போலவே, காந்திக்கும் இருந்தது. தென்னாப்பிரிக்காவிலேயே இந்துக்களோடும் முஸ்லிம்களோடும், தமிழர்களோடும் குஜராத்திகளோடும் பதானியர்களோடும் இணைந்து பணியாற்றிய காந்திக்கு இந்தியர்கள் ஒரே மக்கள் என்னும் கருத்து வலுப்பெற்றிருக்கும். இந்தியாவில் அவரது நீண்ட பயணங்கள் மூலமாக அவர் அதை உறுதிசெய்திருக்கலாம். அசைக்கமுடியாத ஆங்கிலேய அரசை அகிம்சை முறையில் எதிர்ப்பதற்காகப் பிரிந்து கிடந்த மக்களை ஒன்றுதிரட்டிப் போராட வேண்டிய ஒரு நடைமுறைத் தேவையும் அவருக்கிருந்தது. பிரித்தானியர்கள் வெளியேறியபின், மக்கள் விழிப்புணர்வு பெறாவிட்டால், இந்தியா மன்னர்கள் ஒருவரோடொருவர் போரிட்டுக்கொள்ளும் போர்க்களமாகி, அவர்களில் பெரியவர்கள் சிறியவர்களை விழுங்கி ஆட்சியைக் கைப்பற்ற முனைவார்கள் என்ற அச்சத்தையும் ஒருமுறை பகிர்ந்துகொண்டார். சுதந்திரமான, வலுவான ஒன்றிணைந்த இந்தியா உலகத்துக்கொரு புதுமையாகத் திகழும் என்றும் அவர் எதிர்பார்த்தார். “இந்தியா சுதந்திர நாடாகவும் வலிமைமிக்கதாகவும் ஆவதைக் காண விரும்புகிறேன; அதன்மூலம் உலகின் மேம்பாட்டுக்கு அவள் தன்னையே தூய்மையான பலியாகத் தரலாம். ஒரு தனிநபர், தூய்மையாக இருந்தால், குடும்பத்துக்காக தியாகம் செய்வார்; குடும்பம் கிராமத்துக்காகவும், கிராமம் மாவட்டத்துக்காகவும், மாவட்டம் மாகாணத்துக்காகவும், மாகாணம் தேசத்துக்காகவும், தேசம் அனைவருக்காகவும் தியாகம் செய்யட்டும்,” என்றார்.(17) வேறொரு இடத்திலும் இதே கருத்தை வெளிப்படுத்தும்விதமாக, “உலக நலனுக்காக நாடு மடிவது தேவையெனில் அப்படி மடிவதற்காக முதலில் நாடு சுதந்திரமாக இருக்க வேண்டும். அதனால்தான் நாடு சுதந்திரமடையவேண்டும் என்ற ஆசை எனக்குள்ளது – மனித இனம் வாழ்வதற்குத் தேவையெனில் நாடு முழுமையும் மடியட்டும். இன வெறுப்புக்கு இங்கு இடமே கிடையாது. அதுவே நம் தேசியமாக இருக்கட்டும்,” என்றார்.(18) “நம் சேவைகளை தேச எல்லைகளைக் கடந்து வழங்குவதற்கு எந்தத் தடையும் இல்லை. கடவுள் இந்த எல்லைகளை உருவாக்கவில்லை,” என்ற ஒரு முக்கியமான கருத்தையும் தெரிவித்தார். (19)
மொழி வேற்றுமை நிறைந்த பரந்த நாட்டில் இணைப்பு மொழியாக இந்தி வேண்டும் என்று அவர் நினைத்தார். அந்நிய ஆதிக்கத்தின் கருவியாக இருந்த ஆங்கிலத்துக்கு மாற்றாக அவருக்கு ஒரு தேசிய மொழி தேவைப்பட்டது. எனவேதான் ஒவ்வொரு பகுதியிலும் தாய்மொழிப் பயன்பாட்டையும் தாய்மொழிவழிக் கல்வியையும் வலியுறுத்திய காந்தி, இணைப்பு மொழியாக இந்தியையும் வலியுறுத்தினார். முஸ்லிம்களுக்கும் இந்தியை ஏற்புடையதாக்குவதற்காக தேவநாகிரி, உருது ஆகிய இரண்டு எழுத்துமுறைகளையும் எல்லாரும் கற்கவேண்டும் என்றார். அவரது தேசியத்தில் இன்றைய சூழலுக்கேற்ப மறுபரிசீலனை கோரிநிற்கும் அம்சங்களில் அவரது மொழிக்கொள்கை ஒன்று.
காந்தி தன் முதல் முக்கிய நூலான இந்திய சுயராச்சியத்திலேயே தேசியம் குறித்த தன் தனித்துவமான பார்வையை பெருமளவு வெளிப்படுத்திவிட்டார். அவரது பல கருத்துகள் பின்னால் மாறியபோதும், இந்திய சுயராச்சியம் நூலில் வெகுசில சொற்திருத்தங்களைத்தவிர எதையும் மாற்றத்தேவையில்லை என்று அதன் பிந்தைய பதிப்புகளின் போதெல்லாம் கூறினார். அவரது அரசியல் வாழ்வின் ஆரம்பத்தில் உருப்பெற்றுவிட்ட தேசியக் கொள்கைகளுக்கு மிகப்பெரிய சோதனைகள் வந்தது அவரது வாழ்வின் இறுதிக்கட்டத்தில்தான். அவரது தேசியத்தின் வேறு சில பரிமாணங்களும் அப்போது வெளிப்பட்டன.
அஸ்ஸாம் மாகாணத்தில் இன்றைக்கு நாம் சந்திக்கும் குடியேற்றப் பிரச்சனைக்கான வித்துகள் அன்றே தூவப்பட்டன. அன்றைய அஸ்ஸாமில் வடகிழக்குப் பகுதி முழுவதுமே அடங்கியிருந்தது. ஆரம்பத்தில் ஆங்கிலேயர்களால் வங்கத்திலிருந்து மக்கள் அஸ்ஸாமில் உற்பத்திப்பெருக்கத்துக்காகக் குடியேற்றப்பட்டனர். பின்னர் அஸ்ஸாம் பாகிஸ்தானோடு இணைவதற்கு ஏதுவாக வங்கத்திலிருந்து முஸ்லிம்கள் குடியேறுவதை அப்போதைய அஸ்ஸாம் பிரதமராக இருந்த முகமது சாதுல்லாவின் நிலக்குடியேற்றக் கொள்கை ஊக்குவித்தது. கோபிநாத் பர்தொலாய் தலைமையில் அஸ்ஸாம் காங்கிரஸ் கட்சியினர் இதை எதிர்த்தனர். அப்போது அவர்களுக்கு ஆதரவளித்த ஒரே இந்தியத் தலைவர் காந்திதான்.(20) “அரசாங்கத்தின் குடியேற்றக் கொள்கையை ஒடுக்குமுறையாகவும், தேசவிரோதமானதாகவும் மக்கள் கருதினால், அதற்கெதிராக அவர்கள் அகிம்சை முறையிலோ, தேவைப்பட்டால் வன்முறை மூலமோ போராடட்டும்,” என்றார்.(21) ‘தேவைப்பட்டால் வன்முறை மூலம் போராடட்டும்’ என்று காந்தி சொன்னது ஆச்சரியம் தந்தாலும், இப்பிரச்சனை எந்தளவு தீவிரமானது என்பதை அவர் உணர்ந்திருந்தார் என்பதைக் காட்டுகிறது. பின்னர் 1946ல் காபினெட் மிசன் திட்டத்தின்படி அஸ்ஸாம் வங்கத்தோடு இணைந்து ஒரு குழுவில் சேர்க்கப்பட்டது. வங்கம் இந்தியாவிலிருந்து பிரிந்தால் அஸ்ஸாமும் பிரியும் அபாயம் இருந்தது. பர்தொலாய் போன்றவர்கள் இந்தியாவோடு இணைவதையே விரும்பினர். அப்போதும் காந்தி மட்டுமே அஸ்ஸாம் காங்கிரசுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்தார். இக்குழுவில் இணைய மறுத்து தேசியக் காங்கிரஸ் தலைமைக்கும் பிரித்தானிய அரசுக்கும் எதிராகப் போராடச் சொன்னார். “இப்போது நீங்கள் சரியாகச் செயல்படவில்லையெனில் அஸ்ஸாம் முடிந்தது. […] காந்தியே வேண்டாமென்று தடுத்தாலும், நாங்கள் கேட்கமாட்டோம் என்று மக்களிடம் சொல்லுங்கள்,” என்றார். (22) குறிப்பிட்ட இன/பகுதி மக்களின் விருப்புகளுக்கு இணங்கி தேசிய அளவில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு எதிராகச் செல்வதற்கு காந்தியின் தேசியத்தில் இடமிருந்தது.
பிரிவினையின் பிறகு காஷ்மீர், ஜூனாகத், ஐதராபாத் ஆகிய சமஸ்தானங்கள் யாரோடு இணைவது என்பதில் சிக்கல் வந்தபோது, காந்தி பொதுவான நிலைப்பாட்டையே எடுத்தார். மக்களுடைய விருப்பத்துக்குச் செவிசாய்க்கவேண்டும் என்றார். “காஷ்மீரில் இன்னும் மக்கள் ஆதரவு பெற்ற ஆட்சி அமையவில்லை. ஐதராபாத், ஜுனாகத் போன்ற பிற நாடுகளிலும் அதே நிலைதான். என் நோக்கில் இவற்றிற்கிடையே எந்த வேறுபாடும் இல்லை. ஒரு நாட்டின் உண்மையான ஆட்சியாளர்கள் அதன் மக்கள்தாம். காஷ்மீரத்து மக்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருந்தால், உலகின் எந்த சக்தியாலும் அவர்கள் அவ்வாறு செய்வதைத் தடுக்கமுடியாது. ஆனால் அவர்களே முடிவெடுக்க அவர்களைச் சுதந்திரமாக விட்டுவிடவேண்டும். மக்களைத் தாக்கக்கூடாது; கிராமங்களை எரித்துக் மிரட்டக்கூடாது. காஷ்மீரத்து மக்களில் முஸ்லீம்கள் பெரும்பான்மையினராக இருப்பினும், அவர்கள் இந்தியாவோடு இணைய விரும்பினால், யாராலும் அவர்களைத் தடுக்க இயலாது,” என்று கூறினார். (23)
காந்தியின் தேசியத்தில் எப்போதும் மக்கள் குரலுக்கு இடமிருந்தது. மனசாட்சியின் குரலுக்கும் இடமிருந்தது. முடிந்தவரை அரசுடன் ஒத்துழைக்க வேண்டும் என்றது. ஆனால் தவறுகள் சகிக்கமுடியாதுபோகும்போது எதிர்ப்பது மக்களின் கடமை என்றும் கருதியது.
“அகிம்சை முறையில் தனது சுதந்திரத்தையும் காத்து, அதன் மூலமாக தனது நாட்டின் சுதந்திரத்தையும், இறுதியில் உலக மக்கள் அனைவரின் சுதந்திரத்தையும் காப்பவனே உண்மையான ஜனநாயகவாதி,” என்று ஒரு ஜனநாயக தேசியத்துக்கான வரையறையை காந்தி தந்தார். (24)
காந்தியின் தேசியம் குறுகிய எல்லைகளுக்குள் உழல்வதாக இல்லை. ஆட்சிப்பொறுப்பில் யாரிருக்கிறார்கள் என்ற அக்கறையற்று மக்கள் நலனையே மையமாகக் கொண்டது. அடிமைநாட்டில் தேசியமாக இருந்தது, சுதந்திர நாட்டில் தேசம் கடந்து சர்வதேசியமாய் மலர்ந்திருக்கக்கூடும். ஆனால் அந்த வாய்ப்பு காந்தியின் தேசியத்துக்கு முற்றிலும் எதிரான வேறொரு தேசியத்தால் பறிக்கப்பட்டது.
இன்றைய உலகம் சந்திக்கும் அரசியல், பருவநிலை நெருக்கடிநிலையில், புவியியல் எல்லைகளைக் கடந்த, தன்னிறைவான சிறு சமூகங்களை மையமாகக் கொண்ட, உலக மக்களை அரவணைக்கக் கரங்களை நீட்டும் காந்திய தேசியத்துக்கான தேவை அதிகரித்துவருகிறது.
குறிப்புகள்:
- Leo Tolstoy, ‘Patriotism and Government’, Pirogóva, 23rd May 1900. [https://libcom.org/files/Patriotism_and_Government.pdf]
- B.Srinivasa Murthy, ‘Mahatma Gandhi and Leo Tolstoy Letters’, CA: Long Beach Publications, 1987. [Leo Tolstoy, ‘A Letter to a Hindu’, December, 1908.]
- Ibid
- Sabyasachi Bhattcharya, ‘The Mahatma and the Poet: Letters and Debates between Gandhi and Tagore 1915-1941’, New Delhi: National Book Trust, 1997.
- M.K.Gandhi, ‘Hind Swaraj or Indian Home Rule’, Ahmedabad: Navajivan Publishing House, 1909
- Ramachandra Guha, ‘Gandhi Before India’, New Delhi: Penguin India, 2013
- Wilfrid Scawen Blunt, ‘My Diaries: Being a Personal Narrative of Events’, London: Martin Secker, 1932
- M.K.Gandhi, ’The Collected Works of Mahatma Gandhi’, ‘Curzon Wyllie’s Assassination’, Indian Opinion, 14-8-1909.
- Nirmal Kumar Bose, “Selections from Gandhi”, Harijan, 16-3-1947.
- R.K.Prabhu, U.R.Rao, ‘The Mind of the Mahatma”, Harijan, 11-5-1947.
- Nirmal Kumar Bose, “Selections from Gandhi”, Young India, 6-8-25.
- ibid, Harijan, 4-11-1939.
- ibid, Anand Bazar Patrika, 30-6-1944.
- ibid, Harijan, 26-7-1942.
- ibid, Harijan, 25-2-1939.
- ibid, Young India, 25-5-1921.
- ibid, Young India, 17-9-1925.
- ibid, Gandhiji in Indian Villages by Mahadev Desai. S. Ganesan, Triplicane, Madras, 1927.
- ibid, Young India, 31-12-1931.
- Sangeeta Barooah Pisharoty, ‘Revisiting Partition: Gandhi’s Role in Integrating the Northeast with Independent India’, https://thewire.in/history/partition-gandhi-northeast-independence, 9-8-2017.
- M.K.Gandhi, ’The Collected Works of Mahatma Gandhi’, ‘MESSAGE TO PEOPLE OF ASSAM’, The Bombay Chronicle, 19-12-1944.
- M.K.Gandhi, ’The Collected Works of Mahatma Gandhi’, ‘Interview to Assam Congressmen’, 15-12-1946, Harijan, 29-12-1946
- த.கண்ணன், ‘போரும் அகிம்சையும்: காஷ்மீர் குறித்து காந்தி’, சென்னை: யாவரும் பதிப்பகம், 2019.
- R.K.Prabhu, U.R.Rao, ‘The Mind of the Mahatma”, Harijan, 15-4-1939.