தமிழகத்தில் பிரச்சனைகள் வலுக்கிற போதெல்லாம், ஈழப்போர்வைக்குள் பதுங்கிக் கொள்கிறார்கள் நம் அரசியல் தலைவர்கள். ஈழப்போர் முப்பது ஆண்டுகளுக்கும் மேல் மூர்க்கமாய் நடந்து கொண்டுதானிருக்கிறது. ஆனால் நம் தலைவர்களுக்கு ஐந்தாண்டுக்கொருமுறை மட்டும் இந்தப் போர்வை தேவைப்படுகிறது. இந்து நாளிழதளில் குறிப்பிட்ட மாதிரி இது Tamil Chauvinism எல்லாமல்ல; அப்பட்டமான சந்தர்ப்பவாத அரசியல்.
தொடர் மின்வெட்டால் தமிழ்நாடே தவித்துக்கொண்டிருக்கும் போது, அதற்கான தீர்வு காணும் திறனும் அற்று, பிரச்சனைக்கான காரணங்களையேனும் தெளிவாக விளக்கும் துணிவுமற்று, மக்கள் கவனத்தை ஈழத்தின் பக்கம் திருப்புவது எதற்காக? இந்தத் தடங்கலை ஒரு வாய்ப்பாக மாற்ற முனையாமல், நம் அரசியல் தலைவர்களின் இந்த நடத்தை வெறும் திசைதிருப்பல் முயற்சியா, அல்லது, ஈழ மக்கள் மீது திடீரென எழுந்த இரக்கமா, அல்லது, இக்கட்டில இருக்கும் ஒரு தீவிரவாத அமைப்பைக் காக்கும் முயற்சியா? உலகையே உலுக்கிக்கொண்டிருக்கிற ஒரு பொருளாதாரச்சரிவு இந்தியாவையும் நெருங்கிக்கொண்டிருக்கிற வேளையில், மத்திய அரசின் நெற்றியில் துப்பாக்கிவைப்பது மட்டமான, பொறுப்பற்ற அரசியல்.
விடுதலைப் புலிகள் தம் இரக்கமற்ற வன்முறையைக் கைவிடும்வரை ஒரு பயங்கரவாத இயக்கமாகத்தான் கருதப்படுவார்கள்; கருதப்படவேண்டும். சிங்கள அரசு வன்முறையை நிறுத்தட்டும், நாங்கள் நிறுத்துகிறோம் என்கிற பழைய வாதம், அகிம்சையின் வெற்றியை உலகுக்கு உணர்த்திய இந்த மண்ணில் என்றும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது; கூடாது. நிலையான தீர்வு ஒருகாலும் தீவிரவாதத்தால் பெற முடியாது.
பல்லாண்டுகால பயங்கரவாதம் சாதித்ததைவிட, ஒரு மாத அமைதிப்போர் காஷ்மீர் குறித்த இந்திய மக்களின் (நான் உட்பட) எண்ணத்தைப் பெரிதும் மாற்றியதை அண்மையில் கண்டோம். ஈழத்தமிழர்கள் ஆயுதங்களையும், ஆயுதமேந்தத் தூண்டுகற இயக்கங்களையும் துறந்து, தீர்வுகளை அணுக வேண்டிய தருணம் வந்துவிட்டது. ஓர் அகிம்சை இயக்கத்திற்கு இந்திய அரசு மட்டுமல்ல, உலகம் முழுவதுமே செவிசாய்த்தே தீரும்.
அதுவரையில் ஈழப்போர், தமிழகத்தின் நெருக்கடி நேரங்களில்மட்டும் இங்கு மேலோட்டமாய் கவனிக்கப்படும். மத்திய அரசுக்குக் கலைஞர் விதித்திருக்கிற இரண்டு வார கெடு, அதற்குள் பருவமழை வந்து மின்வெட்டு நின்றுவிடும் என்கிற நம்பிக்கையில்தானோ?