காந்தியின் தேசியம்

ஜனவரி 17, 2020

இம்மாத காலச்சுவடு இதழில் ‘காந்தியின் தேசியம்’ குறித்த எனது கட்டுரை வெளிவந்துள்ளது. இது குடியுரிமைச் சட்ட திருத்தம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் எழுதப்பட்ட கட்டுரை. எனினும் இச்சூழலில் காந்தியின் தேசியம் குறித்த கருத்துகளும், அவர் மிகவும் மதித்த தாகூர், தல்ஸ்தோய் ஆகியோர் தேசியத்தை எதிர்த்துக் கூறிய கருத்துகளும் மேலும் முக்கியத்துவம் பெறுகின்றன.


இணையத்தில் சந்தாதாரர்கள் மட்டுமே இப்போது படிக்கமுடியும். கட்டுரையிலிருந்து சில பகுதிகள்:

/நாம் மிக முக்கியமாகக் கருத்தில் கொள்ள வேண்டியது காந்தியின் தேசியம் ஓர் அடிமை நாட்டின் விடுதலைக்காகப் போராடிய ஒருவரின் தேசியம்; விடுதலைக்குப் பிறகு வாழ்ந்த சில மாதங்களிலும் சிதறிக்கிடந்த மக்களை ஒருங்கிணைக்கப் போராடியவரின் தேசியம்; தேசியத்தின் பெயரால் கொல்லப்பட்ட ஒருவருடைய தேசியம். அமைதி நிலவும் சுதந்திரத் தேசத்தில் அவர் தேசம் கடந்த மனிதநேய நிலையை நோக்கித்தான் சென்றிருப்பாரென்பதை அவர் வெவ்வேறு தருணங்களில் உரைத்த சில கருத்துகளிலிருந்து நாம் உய்த்துணரலாம். காந்தியின் தேசியத்துக்கும் காந்தியைக் கொன்றவர்களின் தேசியத்துக்கும் இடையே பெரும் வேறுபாடு உண்டு./

—-

/தாகூரும் தல்ஸ்தோயும் தாக்கிய தேசியவாதத்திலிருந்த குழுமனப்பான்மையும் வன்முறையும் மிகையான பழம்பெருமையும், தாம்-பிறர் என்ற இருமையும், காந்தியின் தேசியத்தில் இல்லாமலோ மட்டுப்பட்டோ இருந்தன. காந்திக்கு இந்திய வரலாற்றின்மீது மிகையான பற்றும் இல்லை; மேற்கத்தியப் பண்பாட்டின்மீது மிகையான ஈர்ப்பும் இல்லை; காழ்ப்பும் இல்லை. அவர் நவீனத் தொழில்மயப் போக்கை நிராகரித்தபோதும், அதன் நிறைகுறைகளை ஆய்ந்தே நிராகரித்தாரேயன்றி, அது மேற்கிலிருந்து வந்ததால் நிராகரிக்கவில்லை. ஆங்கில ஆட்சியையுமேகூட அது வெளிநாட்டவரின் ஆட்சி என்பதற்காக அவர் எதிர்க்கவில்லை; தம் நாட்டு மக்களுக்குத் தீமைதரும் ஆட்சி என்று கருதியதாலேயே எதிர்த்தார். அதனாலேயே ஆரம்பத்தில் ஆங்கில ஆட்சியிலேயே இந்தியர்களுக்குத் தேவையான உரிமைகளுடனும் சுயாட்சியுடனும் வாழமுடியும் என்று நம்பினார். அது சாத்தியமில்லை என்று அனுபவப்பூர்வமாக உணர்ந்த பிறகே ஆங்கில ஆட்சி நீங்க வேண்டும் என்ற கொள்கையை நோக்கித் தீர்க்கமாக நகர்ந்தார். நல்லாட்சி என்றாலும் அது தன்னாட்சிக்கு மாற்றாக முடியாதென்றும் எத்துணை குறைபாடுகள் இருந்தாலும் முழுச் சுதந்திரத்துடன் வாழ வேண்டுமென்றும் பின்னர் கூறினார்./

/1909இல், லண்டனில் இந்திய மாணவர்களோடான ஒரு சந்திப்புக்கு வந்த கர்சன் வில்லி என்ற ஆங்கிலேய அதிகாரியை மதன்லால் திங்க்ரா சுட்டுக்கொன்றார். குறுக்கே வந்து அவரைத் தடுக்க முயன்ற லால்கக்கா என்ற பார்சி மருத்துவரையும் கொன்றுவிட்டார். அப்போது தேசியவாதிகள் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு செயலை காந்தி செய்தார். திங்க்ரா செய்தது தவறு என்று கட்டுரை எழுதினார். இன்றும்கூட திங்க்ராவின் நீதிமன்ற அறிக்கை தேசபக்தியின் உச்சங்களில் ஒன்றாகப் பலரால் போற்றப்படுகிறது. (‘திங்க்ராவின் உரையைப் பெற்ற சாவர்க்கர் அதில் ராமர், கிருஷ்ணர் ஆகிய பெயர்களைச் சேர்த்து இந்துமதச் சாயம் கூட்டி வெளியிட்டார்’ என்கிறார் ராமச்சந்திர குஹா.) அன்று வின்ஸ்டன் சர்ச்சில் “தேசபக்தியின் பெயரால் பேசப்பட்ட மிகச்சிறந்த உரை” என்றும் “இன்னும் ஈராயிரம் ஆண்டுகளுக்கு நினைவில் கொள்ளப்படும்” என்றும் “சட்டப்படி அவர் தண்டிக்கப்பட வேண்டும் – இறுதிச்சடங்குகள் செய்வதற்கு அவரது உடல் நண்பர்களுக்குத் தரப்படக்கூடாது என்பதைக்கூட நான் ஆதரிக்கிறேன்” என்றும் தன்னிடம் சொன்னதாக வில்ஃபிரட் ப்ளண்ட் கூறுகிறார்.

இந்தியன் ஒப்பீனியன் இதழில் எழுதிய காந்தி, “மதன்லால் திங்க்ராவின் எதிர்வாதம் ஏற்கத்தகுந்ததன்று. என் பார்வையில் அவர் ஒரு கோழையைப்போல நடந்திருக்கிறார். அவரைப் பார்த்து என்னால் பரிதாபப்படத்தான் முடிகிறது. அவர் படித்த மிக மோசமான எழுத்துகளை அரைகுறையாகப் புரிந்துகொண்டதால் இச்செயலைச் செய்யத் தூண்டப்பட்டிருக்கிறார். அவர் ஆற்றிய எதிர்வாதமும் மனனம் செய்து கற்றது போலிருக்கிறது. அவரைத் தூண்டியவர்கள்தாம் தண்டனைக்குரியவர்கள்./


நல்லதோர் வீணை – ஆங்கிலத்தில் மீட்டினால்!

ஒக்ரோபர் 7, 2008

தாகூரைத் தமிழில் மொழிபெயர்க்க முயற்சிக்கும் போது தோன்றியது, ஏன் தாகூர் அளவிற்கு, பாரதி கவனிக்கப் படவில்லை? நல்ல மொழியாக்கம் இல்லை என்பதாலா? தாகூரின் கவிதையின் சாரத்தை ஆங்கிலத்தில் கண்டு என்னால் தமிழில் ஓரளவு தர முடியும்போது, பாரதியின் படைப்புகளையும் உலகுக்கு அறிமுகப்படுத்த இயலாதா?

தாகூருக்கு ஒரு W.B.Yeats, R.K.Narayanக்கு ஒரு Graham Greene மாதிரி பாரதிக்கு…?

இதோ என்னால் இயன்ற எளிய முயற்சி. இன்னும் வல்லமை மிக்கவர் கரங்களில் இந்த வீணை மேலும் அழகாய் மீட்டப்படக் கூடும்.


நான் கடவுள்! (கீதாஞ்சலி – 4)

ஒக்ரோபர் 6, 2008

நான் பயணித்த பாதை நெடுந்தூரமானது! நெடுநாள் எடுத்தது!

காலையின் முதல் ஒளி துளித்த போது, என் தேரில் கிளம்பினேன். பல உலகங்களில் பயணித்தேன், பல கிரகங்களில், விண்மீன்களில் என் காலடி பதித்தேன்.

ஒரு நெடுந்தூரப் பயணம்தான் உன்னை உனக்கு மிகமிக அருகே அழைத்து வருவது! கடும் பயிற்சிதானே ஓர் எளிய ராகத்திற்கு உன்னை வழிநடத்திச்செல்கிறது?

ஒரு பயணி ஒவ்வொரு அந்நியக் கதவையும் தட்ட வேண்டியிருக்கிறது; அகிலமெங்கும், ஆகாயமெங்கும் அலைந்தபின் தான், இறுதியில், உள்ளிருக்கும் கோயிலை அடைய முடிகிறது.

என் விழிகள் வான்வெளியெங்கும் தேடியபின், இமைமூடினேன். பின் கூறினேன், ‘ஓ! இங்கே இருக்கிறாயா நீ!’

‘எங்கே?’ என்கிற கேள்வியும் கூச்சலும் ஆயிரம் கண்ணீர் ஓடைகளாய் உருகி உலகைச் சூழ்ந்தன, ‘நானே’ என்கிற உறுதி வெள்ளத்தில்!

 

தாகூர் எழுதியதாய் நான் புரிந்து எழுதியது (my interpretation of a verse in Gitanjali)!


கீதாஞ்சலி – 3

ஒக்ரோபர் 6, 2008

விடு! ஜபித்தலையும், ஓதுதலையும், ருத்ராட்சம் உருட்டுதலையும் விட்டுவிடு!

தனிமையில், கோயிலின் இருண்ட மூலையில், கதவுகளை அடைத்துக் கொண்டு, யாரை வணங்கிக் கொண்டிருக்கிறாய்?

திற விழி! உன் கடவுள் உன் முன்னே இல்லை என்பதை அறி!

எங்கே, அந்த உழவன் கடும் நிலத்தைப் பிளந்து உழுதுகொண்டிருக்கிறானோ, அங்கே இருக்கிறான் உன் கடவுள்.

எங்கே, அந்த ஏழை கற்களை உடைத்துச் சாலை அமைக்கிறானோ, அங்கே இருக்கிறான் உன் கடவுள்.

அவர்களோடு வெயிலில் காய்கிறான், மழையில் நனைகிறான்; அவனது உடை கிழிந்து, புழுதி படிந்துகிடக்கிறது.

உன் காவி உடைகளைக் களைந்து, அவனைப்போல் நீயும், புழுதியில் இறங்கி வா!

முக்தியா? மோட்சமா? எங்கே கிடைக்கும் அந்த மோட்சம்? நம் கடவுளே, ஆனந்தமாய் ஆக்கத்தில் ஆழ்ந்திருக்கிறான்; அதன் மூலம் நம்மோடு பிணைந்திருக்கிறான்!

உன் தவங்களைத் துறந்து வா! அந்தப் புனித நறுமலர்களை எறிந்து வா!
உன் உடைகள் கலைந்து, கிழிந்து, கறைபடிவதால் என்ன கேடு நிகழ்ந்துவிட முடியும்?
அவன் உழைக்கும் போது அவனை எதிர்கொள்! உன் நெற்றி வியர்வையில் அவனைக் கண்டுகொள்!
– தாகூர்
(என் மொழிபெயர்ப்பு – தாகூரின் ஆங்கில மொழியாக்கத்திலிருந்து)
 
 

 

 


கீதாஞ்சலி -2

ஒக்ரோபர் 6, 2008

எங்கே மனதில் அச்சமில்லையோ, தலை நிமிர்ந்துள்ளதோ,

எங்கே கலைச்செல்வங்கள் கட்டற்றுக் கிடக்கின்றனவோ,

எங்கே குறுகிய சுவர்களால் சமுதாயம் சிதைக்கப்படாமல் உள்ளதோ,

எங்கே வாய்மையின் ஆழத்திலிருந்து வார்த்தைகள் பிறக்கின்றனவோ,

எங்கே விடாமுயற்சி தன் கரங்களை முழுமையை நோக்கி நீட்டுகின்றதோ,

எங்கே பழம்பழக்கம் என்கிற பாழும் பாலைவனப்புழுதியில் காணாமற்போகாமல், தெள்ளிய நீரோடையான பகுத்தறிவு பாய்கிறதோ,

எங்கே விரிந்த சிந்தனையும், செயல்வேகமும் கொண்டு மனம் முன்னே நடத்தப்படுகிறதோ,

அங்கே, எந்தையே, அந்தச் சுதந்திர சொர்க்கத்தில், என் நாடு விழிக்கட்டும்.

– தாகூர்

(என் மொழிபெயர்ப்பு – தாகூரின் ஆங்கில மொழியாக்கத்திலிருந்து)


கீதாஞ்சலி

ஒக்ரோபர் 6, 2008

என் காதலா, எங்கே எல்லோருக்கும் பின்னே நிழலுக்குள் மறைந்து நிற்கிறாய்?

உன்னை வெறும் வெறுமையாய் நினைத்து, புழுதியில் தள்ளித் தாண்டிச் செல்கிறார்களே!

உனக்காக நான் கடைபரப்பிக் காத்திருக்கிறேன். எல்லோரும் ஒவ்வொன்றாய், உனக்கான, என் பூக்களை எடுத்துவிட்டார்கள்.

காலை கடந்துவிட்டது. மதியமும் தான். மாலையின் நிழலில் என் கண்கள் சொருகக் காத்திருக்கிறேன்.

கடந்து செல்கிறவர்கள் என்னைக்கண்டு புன்னகைத்து என்னை நாணத்தால் நிரப்புகிறார்கள். பிச்சைக்காரியைப் போல சேலையால் முகத்தை மறைத்து அமர்ந்துள்ளேன். என்னதான் வேண்டும் என்று கேட்கிறவர்களுக்கு, முகத்தைத் தாழ்த்தி, விடையுரைக்க மறுக்கிறேன்.

ஓ! எப்படிச் சொல்வேன்? உனக்காக நான் காத்திருக்கிறேன் என்பதை. எனைக்காண வருவேன் என நீ வாக்களித்திருப்பதை.

ஓ! எப்படிச் சொல்வேன்? உனக்கு வரதட்சனையாய் என் வறுமையை மட்டுமே வைத்திருக்கிறேன் என்பதை.

ஆ! என் இதயத்தின் ஆழங்களில் இந்தப் பெருமையை மறைவாய் அணைத்துக்கொள்கிறேன.

புல்வெளியில் அமர்ந்து உன் வருகையைக் கனவு காண்கிறேன். பொற்கொடி பறக்க, ஒளிவீசி, வரும் உன் தேர் கண்டு பிரமித்து வாய்பிளக்கிறார்கள். வெட்கத்தோடும், பெருமையோடும் படபடத்து நிற்கும் என்னைப் புழுதியிலிருந்து அள்ளி, அணைத்து, உன் அருகில் அமர்த்திக்கொள்கிறாய்.

ஆனால் நேரம் சறிந்துசெல்கிறது. ஆர்ப்பரிப்போடு நிறைய ஊர்வலங்கள் கடந்து செல்கின்றன.  உன் தேர் வரும் ஓசை இன்னும் செவிகளில் விழவில்லை.

நீ மட்டும்தான் அந்த நிழலுக்குள் மறைந்து நிற்பாயா? நான் மட்டும்தான், வீண் ஏக்கத்தால், இதயம் தேயக் கண்ணீரோடு காத்திருப்பேனா?

– தாகூர்

(என் மொழிபெயர்ப்பு – தாகூரின் ஆங்கில மொழியாக்கத்திலிருந்து)


இல்லமும் உலகமும் – ஒரு நாவலும் திரைப்படமும்

ஏப்ரல் 17, 2008

தாகூர், சத்யஜித் ரே இருவரது வேறுபட்ட அணுகுமுறையில் இல்லமும் உலகமும் (காரே பாரே/ The Home and the World) என்கிற கதை உருவாக்கப்பட்டிருக்கிற நயம், ஒரு நாவலைத் திரைப்படமாய் எடுப்பதற்கான சிறந்த பாடம்.

முதலில் ரேயின் படத்தைத்தான் சில ஆண்டுகளுக்கு முன் கண்டேன். தேசிய இயக்கத்தைக் கதைக்களமாய்க் கொண்டு, மனித உறவுகளை, தன்மைகளை அலசிய விதம் பிடித்திருந்தது.

தாகூரின் கதையை, அண்மையில் படிக்க நேர்ந்த போதுதான் ரேயின் ஆக்கத்தை இன்னும் அதிகமாய் ஆழமாய் ரசிக்கமுடிந்தது.

கதைக்களம் முற்றிலும் புதியது. சுதேசி இயக்கத்தின் குறைபாடுகளை இவ்வளவு அப்பட்டமாய் அக்காலத்திலேயே அலசுவதற்கு, தாகூருக்கு ஒரு தனித் துணிவு இருந்திருக்க வேண்டும். திலகர்களும், காந்திகளும் மட்டும் கொண்டதல்ல சுதந்திர இயக்கம்; சுயநலவாதிகளும் போலிப் போராளிகளும் கூடப் பங்கெடுத்திருக்கிறார்கள் என்பதைத் தாகூர் வெளிச்சம் போட்டுக் காண்பிக்கிறார்.

மூன்று பாத்திரங்கள் மாறிமாறிக் கதை சொல்கிற ‘நவீன’ உத்தி கையாளப்பட்டிருக்கிறது. பலமுறை ஒரே நிகழ்ச்சியை மூவரும் வெவ்வேறு விதமாய், தத்தமது மாறுபட்ட கோணங்களில் வர்ணிக்கிறார்கள். நாயகன் நிக்கில் 24 காரட் நல்லவன். அதனால் மனைவி பிமலாவுக்குப் பலவீனமானவனாய்த் தென்படுகிறான். அவன் நண்பன் சந்தீப் நேர்எதிர். 24 காரட் சுயநலவாதி. தன் சுயமுன்னேற்றத்திற்கு சுதேசி இயக்கத்தைக் கருவியாக்குகிறான். அவன் வசீகரத்தாலும், சுதேசி இயக்கத்தாலும் ஈர்க்கப்படுகிறாள் பிமலா. நிக்கில் தேசத்தைவிட மனிதர்களை அதிகம் நேசிக்கிறவன். தன்னளவில் மற்றவர்களுக்கு முன்பே சுதேசிப் பொருள்களைப் பயன்படுத்தினாலும், சுதேசி இயக்கம் ஏழைகள் மீது சுமையாய் திணிக்கப்படுவதை எதிர்க்கிறான். மனைவி தன் நண்பனின் மீது கொண்ட மோகத்தை அறிந்தும், அவள் சுதந்திரம் அது என்று சகித்துக்கொள்கிறான். இந்த மூவரின் மனப்போராட்டங்களை, தத்துவ விவாதங்களை விரிவாய் விவரிக்கிறார்.

சந்தீப் Miltonஇன் சாத்தான் (நாவலில் Paradise Lost பற்றிய ஓர் சிறு குறிப்பு எதேச்சையான coincidence  அல்ல என்று நினைக்கிறேன்), ஷேக்ஸ்பியரின் Iago வரிசையைச் சார்ந்தவன். குற்ற உணர்வு சிறிதுமின்றி, தன் ஆற்றல்மீது மிக்க நம்பிக்கையுடன், மிகுந்த  சுயநலச் சிந்தனைகளைச் சிந்திக்கிறான். இறுதிவரை தன்னிலை மாறாமல் இருக்கிறான்.

படிக்கும் போது சத்யஜித் ரேயின் திரைப்படம் குறித்த நினைவுகள் பிரம்மிப்பாய் மலர்ந்தன. உரையாடல்களும், மனப்போராட்டங்களும், தத்துவ விவாதங்களும் நிறைந்த இந்தக் கதையைத் தொய்வில்லாத, உரையாடல் குறைந்த, திரைப்படமாய் உருவாக்கியது அவரது திறமைக்குச் சான்று. உரையாடல்களால் கூற முடியாத சிந்தனை ஓட்டங்களைக் காட்சி அமைப்பின் மூலமும், முகபாவங்கள் மூலமும் வெளிப்படுத்துகிறார். வார்த்தைகளால் வடிக்கப்பட்ட தாகூர் கதையின் ஓட்டத்தை பொருத்தமான காட்சிகளாலும், பார்வையாளர்களை ஊகிக்கத்தூண்டுவதன் மூலமும் வெளிப்படுத்துகிறார்.

நாவல்களைத் திரைப்படமாக்கும் போது பொதுவாய் அதை அப்படியே (இந்த ஊடகத்திற்குப் பொருந்தாமல்) எடுத்தோ, அதை முற்றிலும் மாற்றியோ சிதைத்துவிடுவார்கள். தாகூரின் ஒரு சிறப்பான overstated நாவலை, சற்றும் சிதைக்காமல், understated திரைப்படமாக எடுத்தது சத்யஜித் ரேயின் சாதனைதான். தாகூருக்கு ஏன் நோபல் பரிசு கிடைத்தது, ரேக்கு ஏன், ஆஸ்கார் உட்பட, பல பெருமைகள் கிடைத்தன என்பதற்கு இந்தப் படைப்புகள் விடையளிக்கின்றன.