தமிழ் மெய்யியல் மரபு – ‘அறிவு நிலைகள் பத்து’

ஜூலை 12, 2018

கோவை புத்தகக் கண்காட்சியில் ஒருமுறை சந்தித்தபோது, தமிழினி வசந்தகுமார் தமிழ்நாட்டின் மிகமுக்கியமான மெய்யியல் அறிஞர் என்று இரா.குப்புசாமியைக் குறிப்பிட்டு அவரது ‘அறிவு நிலைகள் பத்து’ நூலைப் படிக்கச்சொல்லிக் கொடுத்தார். சரி, அவர் பதிப்பித்த நூல், அதனால் அப்படிச் சொல்கிறாரோ என்ற அசட்டையாலோ என்னவோ நீண்டநாள் படிக்காமலிருந்துவிட்டு சில மாதங்கள் முன்னர் ஒரு நீண்ட பேருந்துப் பயணத்தின் போது படித்தேன். வள்ளுவர், வள்ளலார், திருமூலர், திருவாசகம், சித்த மரபையெல்லாம் இணைத்து எழுதப்பட்ட அருமையான நூல். நானாகத் தேடாது என்னைக் கண்டடைந்த புத்தகங்களில் சிறப்பானதொன்றாக இதைக் கருதுகிறேன். கனமான ஒரு மெய்யியல் நூலை, விறுவிறுப்பானதொரு நாவலைப் போல விடாமல் படித்துமுடித்தேன். இன்னும் ஆழமாய் மீண்டும் படிக்கவேண்டும். கால் எலும்பு முறிவு ஏற்பட்டுப் படுத்திருந்த என் தந்தைக்கும் கொடுத்தேன். வலியை மறந்து அவரும் கூர்ந்து படித்தார்.

‘அறிவு நிலைகள் பத்து’ நூலில் குப்புசாமி தமிழுக்கு என்று தனியே ஒரு மெய்யியல் மரபு இருப்பதாக நிறுவுகிறார். ஆறாவது அறிவைத் தாண்டி மேலும் நான்கு அறிவு நிலைகளைக் குறிப்பிடுகிறார். அன்பு நிலையை, அருள் நிலையையே உயர்ந்ததாக முன்வைக்கிறார். நவீன நடையில் பழங்கவிதைகளுக்கிடையே இருக்கும் ஒப்புமைகளை நாம் எதிர்பார்க்காத வகையில் கண்டறிந்து முன்வைக்கிறார். இடையிடையே அவர் அறுதியிட்டுச்சொல்லும் சில விஷயங்களை இடக்கு செய்யும் என் பகுத்தறிவால் முற்றாக ஏற்றுக்கொள்ளமுடியாதிருப்பினும் மொத்த நூலையும் பெரும் வியப்புடன் படித்தேன் (அவரே அப்படியானவற்றை அறிவியல் புனைகதை மாதிரி படிக்கலாம் என்று சுதந்திரம் கொடுத்துவிடுகிறார்). குறிப்பாக வள்ளுவரைப் புதிய ஒளியில் பார்க்கச்செய்தார். பல குறள்களுக்கு இதுவரை நான் கண்டிராத, ஆனால் ஏற்கத்தகுந்த விளக்கங்களை அளிக்கிறார்.

இந்நூலைப் பற்றி ஜெயமோகனின் ஒரு சிறு குறிப்பும், போகன் சங்கரின் குறுங்குறிப்பும் மட்டுமே இணையத்தில் கண்ணில் பட்டன. நேர்பேச்சில் கோணங்கள் ஆனந்த் அவரது பரவலான வாசிப்புப் பின்புலம் பற்றி மிகவும் சிலாகித்துக் கூறினார்.

தமிழினி மின்னிதழில் இரா.குப்புசாமியின் கட்டுரை வந்துள்ளது. கதே பற்றிய ஆழமான, ஆர்வமூட்டும் அறிமுகத்தைத் தருகிறார். காலங்கள், துறைகள் கடந்து அவர் செய்யும் ‘அறிவு எண்’ ஒப்பீடு போன்றவை மட்டும இடறுகின்றன.

இறுதியில் தொடரும் என்ற சொல்லைக் கண்டபோது மேலும் மகிழ்ச்சியாக இருந்தது.