உரையாடும் காந்தி : PSG நிலா முற்றம்

பிப்ரவரி 10, 2019

உரையாடும் காந்தி நூலை முன்வைத்து கோவை பி.எஸ்.ஜி. கலைக்கல்லூரியில் நடைபெறும் நிலா முற்றம் கூடுகையில் உரையாற்றினேன். அதற்கான சுட்டி.

நிலா முற்றம் நிகழ்வில் பி.எஸ்.ஜி. கல்லூரியின் தமிழ்த்துறையில் பணியாற்றும் ராமராஜின் வழிகாட்டுதலில் மாணவர்கள் தொடர்ந்து கூடி, நூல்கள் குறித்து உரையாடுகிறார்கள். நிறைவூட்டும் முயற்சி.


சுழன்றாடு மத்தே

நவம்பர் 26, 2017

நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் வர்தா சென்றிருந்தபோது இரண்டு பெட்டிச் சர்க்காக்களை (ராட்டை) வாங்கி வந்திருந்தோம். நூற்க கற்றுக்கொண்டு, ஒரு சில நாட்கள் பயன்படுத்தினோம். பெட்டிச் சர்க்காவில் நூற்கப்படும் நூல் இன்று கதராடைகள் செய்யப் பயன்படுத்தப்படுவதில்லை என்பதால், அதிலிருந்த ஆர்வம் விரைவில் விலகிவிட்டது. ஆனால், சர்க்காவைப் போன்ற எல்லோரும் பயன்படுத்தக்கூடிய ஓர் எளிமையான உற்பத்திக் கருவிக்கான ஏக்கம் என் மனதில் எப்போதும் உண்டு. எதாச்சையாக இரண்டு மாதங்களுக்கு முன்பு, மோர் கடையும் வேலையைத் தொடங்கினோம். அன்றிலிருந்து மோர் கடையும் அச்சிறு மத்தே எங்கள் சர்க்கா ஆனது. நான்கைந்து நாட்கள் மோர் கடைந்தால், அடுத்த வாரத்துக்குத் தேவையான நெய் கிடைத்துவிடுகிறது. நாங்கள் மூவரும் தினமும் பங்களிக்கக்கூடிய இன்னொரு செயலாக இது அமைந்துவிட்டது. தயிரை விட மோர் பிடித்திருக்கிறது. அதுவே ஆரோக்கியமானது என்றும் சொல்கிறார்கள். உண்மையில், மோர் என்றால் என்னவென்றே இப்போதுதான் உணர்கிறேன். இது போல், நாம் இழந்திருக்கும் சின்னச்சின்ன மகிழ்ச்சிகள் எத்தனையோ?

****
நெய் என்பது கடைக்குச் சென்று புட்டியில் வாங்குவது அல்ல; பால் கறப்பது முதல் வெண்ணெய் உருக்குவது வரை நெய் உருவாக்குவதற்கு ஒரு நீண்ட செயல்முறை உள்ளது என்கிற அனுபவப் பாடம் என் பெண்ணுக்கு.

****

மகிழ்மலர் மோர்கடைந்து கொண்டிருந்தாள். நான் ஜெயமோகனின் கொற்றவை படித்துக்கொண்டிருந்தேன். அதில் ஒரு வரி…ஆயர் சேரியில் கண்ணகி விழித்தெழும்போது:
‘புலரியில் கண்ணகி நூறு நூறு புறாக்கள் குறுகும் ஒலி கேட்டுப் பலகைமஞ்சம் விட்டெழுந்தபோது மூதாய்ச்சியர் மாயோன் புகழ்பாடி மோர்கடையும் ஒலியே அது என்றறிந்தாள்.’

இந்த வரியை அவளுக்குப் படித்துக் காண்பித்தேன்.
‘ஆமாம்பா. மோர் கடையும் போது புறாச் சத்தம் மாதிரியே கேக்குது.’

அன்றுமுதல் அதிகாலையில் எங்கள் திண்ணையில் புறாக்கள் ஒலிக்கத்தொடங்கிவிட்டன.

****

சிலப்பதிகாரத்தின் ஆய்ச்சியர் குரவை எம்.எஸ்.குரலில் அருமையாக இருக்கும்.
https://www.youtube.com/watch?v=ogm5odfetE4

‘வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கிக்
கடல்வண்ணன் பண்டொருநாள் கடல்வயிறு கலக்கினையே
கலக்கியகை அசோதையார் கடைகயிற்றாற் கட்டுண்கை
மலர்க்கமல உந்தியாய் மாயமோ மருட்கைத்தே’

****

சென்ற வாரம், தமிழிசை ஆய்வாளர் நா.மம்மதுவோடு மருத்துவர் ரமேஷ் வீட்டில் மூன்று நாட்கள் கழித்தோம். சிலப்பதிகாரம் சார்ந்தே அதிகமும் பேசினார். ஆய்ச்சியர் குரவையில் வரும் ‘குடமுதல் இடமுறையாக் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என விரிதரு பூங்குழல் வேண்டிய பெயர்’களும், முல்லைத்தீம்பாணியும் எங்களுள் ஆழப் பதிந்தன. (எம்.எஸ். பாடல் முல்லைத்தீம்பாணியில் இல்லை என்றறிகிறேன்)

 


கேள்வியால் தோட்கப்பட்ட செவி

ஜனவரி 15, 2013

கடந்த ஓரிரண்டு மாதங்களில், சில நல்ல உரைகளைக் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. அவ்வப்போது எழுதத் தவறிவிட்டாலும், இப்போதும் என் மனதில் நிற்கும் நினைவுகளைத் தொகுத்து ஒரு சிறு குறிப்பாக எழுதலாம் என்று இந்தப் பதிவு.

ஞாநி சென்னையில் மாதந்தோறும் நடத்தும் கேணி கூட்டங்கள், இலக்கிய, சமூக, அரசியல் உரையாடல்களுக்கான ஓர் அரிய களத்தை அமைத்திருக்கின்றன. கேணி கூட்டங்களில் கேட்ட இரண்டு பேச்சுகள் மனதைக் கவர்ந்தன.

1. பொ. வேல்சாமி.

சரித்திரம் பற்றிய நமது புரிதல்கள் குறித்துப் பல கேள்விகளை எழுப்பினார். பல சிறிய கூட்டங்களின் தலைவர்கள் இலக்கியங்களிலும், நாட்டுப்பாடல்களிலும் இடம்பெற்றுள்ளபோது, ஏன் ராஜராஜச் சோழன் போன்ற மாமன்னர்கள் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டார்கள், அல்லது அவர்களைப் பற்றிய இலக்கியங்களும் கதைகளும் பொதுநினைவில் நிலைக்கவில்லை என்பது அவர் எழுப்பிய  பல கேள்விகளில் முக்கியமான ஒன்று. பதில்களைத் தேடும் பணியை ஆய்வாளர்களுக்கு விட்டுவிடுகிறார். இப்படிப்பட்ட சிந்திக்கத்தூண்டும் கேள்விகளை எழுப்புவதுதான் அவர் பலம்.  அவரது கட்டுரை நூல் ஒன்றை வாங்கிப்படித்தேன். அதிலும் இது போன்ற பல கேள்விகள் எழுந்தன.

2. ராஜ் கௌதமன்

இவர் எழுதிய ‘தமிழ்ச் சமூகத்தில் அறமும் ஆற்றலும்’ படித்திருந்தேன். அறத்தை முற்றிலும் புதிய கோணத்தில் அணுகியிருந்தார். அறக்கோட்பாடுகள் அதிகாரத்துக்காகப் பயன்படுத்திக்கொள்ளப்பட்டன என்பதை மறுக்கமுடியாது. ஆனால்,  அதிகாரத்தை நிறுவுதற்காக திருக்குறள் உட்பட பல நூல்கள் எழுந்தன என்பது போன்ற ஒரு அணுகுமுறை நூலின் சிலபகுதிகளில் இருந்ததாய் நான் புரிந்துகொண்டது எனக்கு அப்போது ஏற்புடையதாக இல்லை.  ஒரு சீரியஸான பேச்சை எதிர்பார்த்துச் சென்றேன். மனிதர் பார்பதற்கும் ரொம்ப சீரியஸாகத்தான் தெரிந்தார். ஆனால், தன் வலிகளைப் பற்றிப் பேசும்போதுகூட வலிக்க வலிக்கச் சிரிக்க வைத்தார்.  He is a master of dark humor. தன்னைப் பற்றிய கதையின் மூலம் ஒரு சமூகச்சித்திரத்தை உருவாக்கினார். தான் தலித் என்கிற அடையாளத்தைப் புறந்தள்ளி மேலெழுந்து, எவனுக்கும் சளைத்தவன் அல்ல என்கிற இறுமாப்பு சிறுவயது முதலே இருந்திருக்கிறது.  அந்த அடையாளத்தால் கிடைத்த சலுகைகளைக்கூடத் தனக்கு அவமானமாகவும், தன் தகுதிக்காகவே கிடைத்திருக்கவேண்டிய மரியாதை மறுக்கப்பட்டிருப்பதுமாகவே கருதுகிறார். [இது தனது தனிப்பட்ட தன்னம்பிக்கையின் வெளிப்பாடே அன்றி, இட ஒதுக்கீட்டுக்கு எதிரான நிலைப்பாடல்ல என்பதையும் தெளிவுபடுத்தினார்].

இந்த ஆண்டு சிலுவைராஜ் சரித்திரம் கட்டாயம் படிக்க வேண்டும்.

———————-

3.  முனைவர் ரகுராமன்

சென்னையில், தொடர்ந்த உரையாடல்களுக்கான இன்னொரு களத்தை  அமைத்தருப்பது முனைவர் சுவாமிநாதன், கிழக்கு பத்ரி போன்றவர்கள் நடத்தும் தமிழ் பாரம்பரிய அறக்கட்டளை.

இம்மாதம் முனைவர் ரகுராமன் கூத்தநூல் பற்றி உரையாற்றினார். அற்புதமான உரை. தொல்காப்பிய காலத்தில் எழுதப்பட்ட கூத்தநூலின் பல பகுதிகள் எஸ்.டி.எஸ்.யோகியாரால் 1968ல் பதிப்பிக்கப்பட்டிருக்கிறது.  ஆனால் இன்றுவரை பெரும் கவனம் பெறாமல் இருப்பது ஆச்சர்யம்தான். ரகுராமன், கூத்தநூல் பரதரின் நாட்டிய சாஸ்த்திரத்துக்கும் முந்தையது, முன்னோடியானது என்கிறார். தொல்காப்பியம், சங்கப்பாடல்கள், சிலப்பதிகாரம், அடியார்க்கு நல்லார் உரை, உ.வே.சா.வின் குறிப்புகள் என்று பலவற்றையும் சரளமாக இணைத்துப் பேசினார்.

உ.வே.சா. தான் இளவயதில் கண்ட வளையாபதி, குண்டலகேசி ஆகியவை பின்னாட்களில் காணாமற் போனது என்று சொன்னது போல் தனக்கேற்பட்ட ஓர் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். யோகியார் வீட்டுக்கு அண்மையில் சென்ற போதுதான் தெரிந்ததாம் – வைக்க இடமில்லை என்று, 3000ம் அதிகமாய் அவர் சேர்ந்திருந்த அரிய புத்தகங்களை, எடுக்கவோ வாங்கவோ ஆளின்றி, அவர் அங்கு செல்வதற்குச் சிலநாட்களுக்கு முன் பழைய பேப்பர்காரனுக்குப் போட்டார்களாம்.

நல்ல நடை, வசீகரமான பேச்சு – கவனிக்கப்பட வேண்டிய பங்களிப்பு.

அவரது முழுப் பேச்சின் ஒளிவடிவம்  ; http://blog.tamilheritage.in/2013/01/blog-post_10.html

கூத்தநூல் பற்றிய விரிவான ஒரு பதிவு இங்கே.

——————

மார்கழி மாத இசை விழாக்களுக்கு மத்தியில் ‘சங்கம் 4’ என்கிற இலக்கிய விழாவை 21 நாள்களுக்கு ஜகத் கஸ்பரின் ‘நாம்’ அமைப்பு நடத்தியது. இதில் ஒரு சில நல்ல உரைகளைக் கேட்டேன்.

5. ரவிக்குமார்

ரவிக்குமார் அம்பேத்கார் பற்றி ஆழமாகப் பேசினார். அம்பேத்கர் பல துறைகளிலும் பங்களித்திருந்தாலும், அவர் ஒரு தலித் தலைவராக மட்டுமே அடையாளம் காணப்படுவதன் அபதத்தைச் சுட்டிக்காட்டினார். அமர்த்தியா சென் ஆற்றிய ‘Justice’ பற்றிய உரையில் ஒரு முறைகூட அம்பேத்கரைக் குறிப்பிடாமல் எப்படி பேச முடிந்தது என்கிற நியாயமான கேள்வியை வைத்தார்.

6. பி.ஏ.கிருஷ்ணன்

பி.ஏ.கிருஷ்ணன், தான் அரசு அதிகாரியாக இருந்தபோது, அசாமின் முன்னாள் முதல்வர் சரத் சந்திர சின்ஹாவுடனான அனுபவகங்களைப் பற்றி எழுதியதை சில ஆண்டுகளுக்கு முன்பு படித்திருக்கிறேன். அப்போதிருந்தே அவரது புலி நகக் கொன்றையும், பின்னர் கலங்கிய நதியும் படிக்க வேண்டும் என்று எண்ணியிருந்தேன். சங்கம் 4ல் அவர் பேசுவதைக் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது.  ‘அக்கிரகாரத்தில் பெரியார்’ என்கிற தலைப்பில் பி.ஏ.கிருஷ்ணன் முக்கியமான சில பார்வைகளை முன்வைத்தார். பெரியாரின் பிராமண எதிர்ப்பு, கடவுள் மறுப்பு என்ற இரண்டு மையக்கொள்கைகளின் மீதும் கடும் விமர்சனங்களை வைத்தார். அதே சமயம், மற்ற மாநிலங்களைவிட, தமிழகத்தில் அனைத்து சமூகங்களும் ஓரளவு முன்னேறியிருப்பது பெரியாரின் பங்களிப்பினால்தான் என்பதையும் ஏற்றுக்கொள்கிறார்.

கிழக்கு பத்ரி அந்த உரையைப் பற்றிய விரவான குறிப்பினை இங்கே எழுதியுள்ளார்.

நேர்ப்பேச்சில் பி.ஏ.கே.வின் உரை இன்னமும் கூட balanced ஆக இருந்ததாக உணர்ந்தேன். பெரியார் மீதான மரியாதையை வெளிப்படுத்திய அவரது தொணியும்,  இப்பதிவில் விடுபட்டுப்போன அவரது வேறுசில தன்னிலை விளக்கங்களும் காரணங்களாக இருக்கலாம்.

தான் பிராமணனாகப் பிறந்திருந்தாலும், மிஞ்சியிருக்கும் வெகுசில பாதிப்புகள் தவிர, எவ்வகையிலும் தன்னைப் பிராமணனாகக் கருதமுடியாது; கடவுள் நம்பிக்கைத் தனக்கு இல்லை, ஆனால் அதை மற்றவர்கள் மீது திணிப்பதில் ஆர்வமில்லை என்றெல்லாம் முதலிலேயே தெளிவுபடுத்திவிட்டதால், ஒரு நடுநிலையான விமர்சகரின் பேச்சாகவே என்னால் பார்க்கமுடிந்தது.

பெரியாரைக் கண்மூடித்தனமாகப் போற்றவோ தூற்றவோ மட்டுமே செய்பவர்கள் மத்தியில், அவரது கணிசமான பங்களிப்பையும், குறைபாடுகளையும் சரியாகப் புரிந்துகொள்ள உதவும் இத்தகைய ஆழ்ந்த வாசிப்புகள் அரிதாக இருப்பது பெரும் குறைதான்.

7. R.பாலகிருஷ்ணன்

சங்கம் 4ல் கேட்ட இன்னொரு சுவையான உரை, R.பாலகிருஷ்ணன் சிந்து சமவெளிக்கும், கொங்கு வேளாளர்களுக்கும், நாட்டுச் செட்டியார்களுக்குமான தொடர்பைப் பற்றி பேசியது. இதற்கு முன்பே ஆஸ்கோ பார்ப்போலா, ஐராவதம் மகாதேவன் ஆகியோர் சிந்து சமவெளிக்கும் திராவிட/தமிழ் மக்களுக்குமான இணைப்பினைப் பற்றி எழுதியுள்ளனர். ஆயினும், சிந்து சமவெளி நாகரிகமும், மக்களும், அவர்களுது எழுத்துமுறையும், அவர்களின் வீழ்ச்சியும் பல்வேறுவிதமான ஆய்வுகளுக்கும் மாற்றுக்கருத்துகளுக்கும் களமாக உள்ளன. புதியதொரு கோணத்தில் இதை அணுகுகிறார் பாலகிருஷ்ணன்.

ஐ.ஏ.எஸ். அதிகாரியான முதல் தமிழ் மாணவர், பாலகிருஷ்ணன். அவர் தமிழைத் தேர்தெடுத்ததனால், ஆறு மாதங்கள் இவர் தந்தை இவருடன் பேசாமல் இருந்திருக்கிறார். தமிழ்மீது மிகுந்த பற்றுள்ள ஒருவர் இத்தகைய ஆராய்ச்சியைச் செய்யும்போது, அந்தப் பற்றின் காரணமாக அவர் அடைய நினைக்கும் முடிவுகளை நோக்கி ஆய்வினைச் செலுத்துகிறாரோ என்கிற ஐயம் எழத்தான் செய்யும். அதற்கு இடம்கொடாமல் நம்பகத்தன்மையை உருவாக்குவது இவருக்கு கூடுதல் பொறுப்பு.

எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும், பண்பாடுகள் மாறினாலும் ஊர்ப்பெயர்கள் மாறாமல் மறுவி நிலைத்திருக்கும் என்பது இவர் முன்னிருத்தும் கருதுகோள். கண்டிப்பான புள்ளியியல் பகுப்பாய்வுகளின் அடிப்படையில், கொங்குநாட்டு செட்டிநாட்டு ஊர்ப்பெயர்களுக்கும், இன்றைய சிந்துநதிப்பரப்பின் பல ஊர்ப்பெயர்களுக்கும் உள்ள தொடர்பினை நிறுவிக்காண்பிக்கிறார். உலகின் வேறு எந்தப்பகுதியிலும் இத்தகைய பொருத்திப்பார்த்தல் சாத்தியமில்லை என்பதை நிலைநிறுத்தி, இது வெறும் தற்செயல் நிகழ்வல்ல என்கிறார். சங்கப்பாடல்களிலுள்ள பல ஊர்ப்பெயர்கள் தமிழ்நாட்டில் இன்றில்லாவிடனும், சிந்துப்பகுதியில் இப்போது இருப்பது அவர் முன்வைக்கும் இன்னொரு சான்று.

தமிழ்த் தேர்ச்சியையும் அறிவார்ந்த அணுகுமுறையையும் இணைத்து வந்தடைந்த ஆய்வு முடிகளை, நல்ல பேச்சுத்திறனோடு முன்வைத்த இவரது உரை வித்தயாசமானது. தமிழகத்துக்கு வெளியில் எந்த அளவுக்கு இவர் ஆய்வுகள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன என்பதில்தான் இவரது வெற்றி அடங்கியிருக்கும்.

8. எஸ்.ராமகிருஷ்ணன்

எஸ்.ரா. பேசியைதை முதன்முதல் உயிர்மை நடத்திய உலக சினிமாப் பேருரையின் போதுதான் கேட்டேன். சத்யஜித் ரே பற்றி நன்றாகப் பேசினார். ஆயினும், திரைப்படத்தை நானாய்ப் பார்த்து ரசிக்க நினைப்பவன் என்பதால், அவரது மற்ற பேருரைகளுக்குச் செல்லவில்லை. பின்னர் சங்கம் 4ல், பயணங்களின் பரவசம் என்ற தலைப்பில் பேசினார். நிறையப் பயணம் செய்திருப்பவர்களைப் பார்த்தால் எனக்கு எப்போதும் ஒரு பொறாமை உண்டு. அவரது பயணங்களைப் பற்றி பரவசமாய் விவரித்தபோது, அந்தப் பொறாமை மேலும் வலுப்பட்டது. ஒன்று தெளிவாய்ப் புரிந்தது – பயணங்களுக்குப் பணம் தேவையில்லை; வசதிகளை எதிர்பார்க்காமல், வருவதைச் சந்தித்து ஏற்றுக்கொள்ளும் எளிமைதான் வேண்டும். அப்படியொரு மனநிலை வாய்க்கும்போது, நானும் பயணப்படுவேன்.

——————

9. ஜெயமோகன்

பல ஆண்டுகளாய், புத்தகங்கள் மூலமாகவும், இணையத்தின் மூலமுமாகவே கண்டிருந்த ஜெயமோகனை, விஷ்ணுபுரம் விருது விழாவின் போது நேரில் சந்தித்து உரையாடவும், அவரது உரையைக் கேட்கவும் வாய்ப்புகிடைத்தது. ‘காந்தி இன்று’ தளத்தை நடத்தும் நண்பர் சுனில் கிருஷ்ணன் அழைக்க, அவர்கள் தங்கியிருந்த மண்டபத்துக்குச் சென்றேன். அங்கிருந்தவரை, ஜெயமோகன் தொடர்ந்து உரையாடிக் கொண்டேயிருந்தார். பல்வேறு தலைப்புகளைப் பற்றியும், ஏதாவது மாறுபட்ட கோணத்தில் பேசுவதற்கு அவரிடம் ஏதேனும் செய்திகள், கருத்துகள் உள்ளன. காந்தியையும், பெரியாரையும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்களாய்க் கருதும் மனநிலை பற்றியும், காந்தியைப் புறக்கணித்துவிட்டு நாம் முன்வைப்பது எதை/யாரை என்பதைப் பற்றியும் உரையாடினோம். ‘கமலா சடகோபன்’ என்பவர் மறைந்தபோது ஹிந்து நாளிதழ், அவரைப் பெரும் இலக்கியவாதியாக முன்னிருத்தியதே’ என்று கேட்ட ஒரு கேள்விக்கு, கலைமகள் எழுத்தாளர்கள், வணிக எழுத்து என்று எங்கள் நான்கைந்து பேருக்கு ஓர் உடனடிப் பேருரையே சுவையாக நிகழ்த்தினார்.

இளையராஜா போன்ற பிரபலங்களை ஓர் இலக்கிய விழாவிற்கு அழைப்பது அவசியமற்றது என்ற எண்ணம் அன்று வலுத்தது. இளையராஜாவுக்காக அந்தக் கூட்டத்துக்கு வந்தவர்கள் இளையராஜாவுக்காக மட்டுமே வந்திருந்தார்கள்; பரவச நிலையில் ‘ஐயோ, ஐயோ, இளையராஜா!’ என்று கூவி, கைதட்டிக் குதித்தார் அருகிலிருந்த பக்தர்; இங்குமங்குமாய்த் தடுமாறி ஓடிக்கொண்டிருந்தார் 70-80 வயதிருக்கும் ஒரு பெரியவர்; அவர்கள் கவனம் முழுவதும் ராஜாவின் மீது; அவர்கள் மற்றவர்கள் பேசிய எதையுமே பொருட்படுத்திவில்லை; அவர்களால், இலக்கியத்துக்காக வந்த என்னைப் போன்றவர்களும் வேறு எதையுமே பொருட்படுத்த முடியவில்லை.


பலவகையாகப் பரவிடும் பரம்பொருள் – ஒரு கடிதம்

ஒக்ரோபர் 25, 2011

பாரதி பற்றிய இந்தப்பதிவுக்குப்பின், ஜெயமோகன் எதிரிவினையாற்றத் ‘தேர்ந்தெடுக்காத’  ஒரு கடிதத்தை அவருக்கு இரண்டு வாரங்களுக்குமுன் எழுதியிருந்தேன். அவர் விவாதத்தை முடித்துக்கொள்கிறேன் என்கிறமாதிரி தோற்றமளிக்கக்கூடிய பதிவினையிட்டதால், நானும் ‘எழுதிய கடிதம் ஏன் எவர் கண்ணிலும் படாமற்போகவேண்டும்?’ என்று இதை இங்கு பதிவிடுகிறேன்.  முடிவில், விவாதம் great poet என்பது குறித்தா, greatest poet என்பது குறித்தா என்று குழம்பிப்போயிருக்கிறேன்.  அவரும் குழம்பியிருக்கிறார் என்றுதான் நினைக்கிறேன்.  அவரோடு எதிரிவினையாற்றும் தகுதிபடைத்த புதிய குரல் அவருக்குள்ளேயே எழும்பிவிட்டதால் இதோடு நாமெல்லாம் விலகிக்கொள்வது நல்லது.

எனக்கு இவ்விவாதத்தைத் தொடர்ந்ததன் மூலம் எம்.டி.முத்துக்குமாரசாமி, டகால்டிறியாஸ் குரானா போன்ற ரசமான எழுத்தாளர்களை அடையாளம் கண்டுகொள்ளமுடிந்ததில் மகிழ்ச்சி.

————————————————————————

அன்புள்ள ஜெயமோகன்,

சுஜாதா, நகுலன் பற்றிய பிம்பங்களை நீங்கள் உடைத்தபோது, அவற்றோடு முழுமையாக உடன்படாத போதும், உங்கள்  கோணத்தைப் புரிந்துகொள்ள முடிந்தது. பாரதி விவாதத்தில் அப்படியொரு புரிதல் எனக்கும், எதிர்வினைகளை வைத்துப்பார்க்கும்போது பலருக்கும், ஏற்படவில்லை. பாரதியின் கவிதைகளில் கொப்பளிக்கிற உணர்ச்சிகளையும், அவன் எழுதிய காலகட்டத்தையும், அவனிக்கிருந்த சூழலையும் ஒதுக்கி வைத்துவிட்டு, அவன் சரித்திரம் நிலைக்கிறவரை, அவனை அலசவே முடியாது. பாரதி எளிமையை நாடி எளிமையாய் எழுத முயன்றவன். கடினமாய் எழுதியவற்றைக்கூட மற்றவர்களுக்குப்படித்துக்காட்டி, அவர்களுக்குப் புரியாதபோது, மாற்றியவன் (வ.ரா., யதுகிரியின் சரிதைகளின்படி). அவன் கவிதைகள் மீது மரபுக் கவிதையின் அளவுகோள்களையும், நவீனத்துவ நோக்கையும் பாய்ச்சி, அளப்பது சரியாகப் படவில்லை.

நம் உள்ளுணர்வுக்கு எதிராய், பாரதியை நிராகரித்து நாம் என்ன சாதிக்கப்போகிறோம். பாரதியின் பிம்பம் உடைக்கப்பட வேண்டியதாகவே நீங்கள் கருதினாலும், உடைவதால் எதை அடையப்போகிறோம்? அவனை மிஞ்சுவதற்கு எவ்வகையில் மற்றவர்களுக்குப் பாரதி தடையாயிருக்கிறான். பாரதியின் மதிப்பையும், பாதிப்பையும் குறைவாகவே எடைபோட்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன் – எனவேதான் உங்களைத் தொடர்ந்து படிக்கிற என்னைப்போன்ற பலரிடமிருந்தும் இவ்வளவு கடுமையான எதிர்வினைகள்.

தயவுசெய்து, பாரதியை வெறும் பக்திக் கவிஞன் என்ற குப்பிக்குள் அடைக்காதீர்கள். நாத்திகனான நான், திருவாசகத்துக்கும் கம்பராமாயணத்தும் இணையாக, பாரதியின் பக்திக்கவிதைகளிலும் (அவன் மற்ற கவிதைகளைப் போலவே) ஆழமான உணர்வெழுச்சயை அடைந்துள்ளேன்.

“ஒரு இலக்கியவாதி இலக்கியப்பரம்பொருளை அடைய நினைப்பது தப்பா? தப்பா? தப்பா?” என்று கேள்வி எழுப்பியிருந்தீர்கள். ஏன் பரம்பொருள் ஒன்றுதான் என்று நினைக்கிறீர்கள். வாசகனாய், இலக்கிய ஆர்வலனாய், எனக்கு, பாரதி சொன்னமாதிரி ‘பலவகையாகப் பரவிடும் பரம்பொருள் ஒன்றே’ என்றுதான் தோன்றுகிறது. அந்த இலக்கியப்பரம்பொருள் வள்ளுவனிலும், இளங்கோவிலும், கம்பனிலும், பாரதியிலும் பரவி நிற்பதாகவே நான் காண்கிறேன். ஒவ்வொன்றாய் விலக்கிச்சென்றால் பின் பரம்பொருளே இல்லை என்கிற இலக்கிய-நாத்திக நிலைப்பாட்டிற்குத்தான் வந்தாக வேண்டும்.

எது எப்படியோ, நீங்கள் தொடங்கிய இந்த விவாதங்களின் மூலம் ஒரு நன்மை: பாரதியை நான் எவ்வளவு நேசிக்கிறேன் என்பதும், அதன் மாறாத்தன்மையும், எனக்கு மறுபடியும் உறுதியாய்ப் புரிகின்றன.

கண்ணன்.

————————————————————————-

என் மூன்றுவயது மகள் ஆக்ரோஷமாய் ‘அக்கினிக்குஞ்சு’ பாடல் பாடிக்கொண்டிருக்கிறாள்;  ‘காக்கை குருவி’களை நோக்கிநோக்கிக் களியாட்டம் கொண்டிருக்கிறாள்; தீக்குள் விரலை வைத்தால் என்னவாகும் என்று ஆராய்ந்துகொண்டிருக்கிறாள். பாரதி இன்னும் 70 வருடங்களுக்காவது மகாகவிதான். தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்.


பாரதி என்றொரு மானுடன்

ஒக்ரோபர் 11, 2011

முதலில் எழுத்தாளர் ஜெயமோகனுக்கு நன்றி. பாரதி ஒரு மகாகவி இல்லை என்ற விவாதத்தைத் தொடங்கி, பாரதியை விமர்சினங்களால் கண்டடைய முடியாது என்ற தெளிவை ஏற்படுத்தியதற்காக. அவர் எவ்வளவு அற்புதமான மகாகவி என்று எங்களுக்கு நினைவுபடுத்தி, மறுபடியும் நிறுவியதற்காக.

பாரதி ஓர் அற்புதமான நிர்வாணச் சிலை செய்துசென்றான். அதன் நிர்வாணமே அதன் அழகு. அச்சிலையை ரசிப்பதைவிட்டு,  மற்ற சிலைகளின் ஆடை ஆபரணங்கள் போல் இதில் இல்லையே என்று விவாதிப்பதில் பொருளில்லை.

பாரதியின் பல கவிதைகள் நேரடித்தன்மையோடு இருக்கலாம்; ஆழ்படிமங்கள் இல்லாமல் இருக்கலாம்.  ஆனாலும் அவற்றின் உணர்வெழுச்சியே அவற்றிற்கான தனியிடத்தை ஏற்படுத்துகின்றன. அவன் கவிதைகளை, உணர்ச்சிகளைக் கழற்றி வைத்துவிட்டு வெறும் விமர்சனப் பார்வையோடு பார்த்தால், வெற்று விவாதங்கள் தான் விளையும்.

பாரதியை வெறும் இசைப்பாடல் எழுதியவனாகவும், பக்திக் கவிஞனாகவும், உரைநடை முன்னோடியாகவும் மட்டுமே பார்க்க முடிகிறபோது,  ஜெயமோகனின் இலக்கியப்பார்வைமீது எனக்கிருந்த மதிப்பு பலகாதம் கீழிறங்கிவிட்டது.

மற்ற மொழியினர் பாரதியை மட்டுமல்ல, கம்பனையும் வள்ளுவனையும் இளங்கோவையும் தான் இன்னும் அறியாமல், பாராட்டாமல் இருக்கிறார்கள்.  அந்த அளவுகோளின்படி தமிழில் கவிஞர்களே இல்லை என்றாகும். பாரதி உணர்ச்சிகளை வார்த்தைகளில் வடித்தவன். வெறும் மேடைப்பேச்சு தரும் தற்காலிக உணர்வெழுச்சியல்ல அவனுடையது – நூறு ஆண்டுகளுக்குப் பின்னும் சற்றும் மங்காத உணர்வெழுச்சி.  அத்தகைய உணர்வெழுச்சியை மொழிபெயர்ப்பதற்கு பாரதியின் திறத்தோடு இன்னொரு கவிஞன்தான் வரவேண்டும். என்னுடைய மொழிபெயர்ப்புகளையே நான் மறுபடி படிக்கும் போது, எனக்கு என்னுடைய போதாமை புரிகிறது. தமிழில் இருக்கும் வேகத்தையும், எளிமையையும், அழகையும் ஒருசேர என்னால் (மற்றவர்களாலும்) ஒருபோழ்தும் ஆங்கிலத்தில் கொண்டுவர முடியவில்லை என்பது தெளிவு.

ஆனாலும், அது ஒரு பொருட்டல்ல. தொடர்ந்து முயல்வோம். மற்றவர்களை பாரதி சென்றடைந்தாலும், அடையாவிடினும், தமிழனுக்குப் பாரதி மகாகவிதான்.

பாரதியை பக்தி, சமூகம், வேதாந்தம், மொழி என்கிற கூட்டிலெல்லாம் அடைத்துப்பார்க்க முடியாது. அவன் கவிதைகளிற் பொங்கிநிற்பது மானுடம். ஆத்திகனையும், நாத்திகனையும் நகரவிடாமற் கிறங்கடிக்கும் மானுடம். பாரதி என்றொரு மானுடன் கவிபுனைந்த மொழியினை அறிந்தவன் நான். எனக்கு என்றும் அவன் மகாகவிதான்.

பாரதியின் படிமங்களற்ற, காலத்தை வென்று நிற்கும் இந்த நேரடிக் கவிதையையே எல்லா விமர்சனங்களுக்கும் பதிலாய்த் தரலாம்.

தேடிச்சோறு நிதந்தின்று பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி
வாடித்துன்ப மிகவுழன்று பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து
நரைகூடிக் கிழப்பருவமெய்தி
கொடுங்க்கூற்றுக் கிரையெனப்பின்மாயும் பல
வேடிக்கை மனிதரைப்போல் நானும்
வீழ்வேனென்று நினைத்தாயோ ?


தஞ்சைப் பயணம்

ஜனவரி 12, 2011

எனது தஞ்சைப் பயணம் குறித்த ஆங்கிலப் பதிவு இங்கே.

இந்தப் பயணத்தை மேற்கொள்வதற்கு உந்துதலாகவும், உறுதுணையாகவும் இருந்தது,  எழுத்தாளர் ஜெயமோகனின் பயணக் கட்டுரைகள். இது குறித்து அவருக்கு நான் எழுதிய கடிதமும், அவரது பதிலும் இங்கே.

———————————————-

அன்புள்ள ஜெயமோகன்,

அண்மையில் தஞ்சைப் பயணம் சென்றிருந்தேன். உங்கள் தஞ்சைப் பயணம் குறித்த கட்டுரைகளால் உந்தப்பட்டது ஒரு முக்கிய காரணம். நீங்கள் சென்ற இடங்கள் அனைத்திற்கும் செல்ல இயலவில்லை எனினும், நாங்கள் சென்றவை அனைத்தும் நீங்கள் சுட்டிக்காட்டியவை. குடுமியான்மலை, தாராசுரம், கொடும்பாளூர் ஆகிய அற்புதமான இடங்களுக்குச் செல்ல ஆர்வமூட்டியதற்கு என் நன்றிகள்.

மூன்று ஆண்டுகளாய் உங்கள் பதிவுகளைத் தொடர்வதன் விளைவாய், இந்த வருடம் நான் வாங்கிப் படித்துக்கொண்டிருக்கிற பல புத்தகங்களும், நீங்கள் அடையாளம் காட்டியவை…நாஞ்சில் நாடன், ஆ.மாதவன், சுகுமாரன், வண்ணநிலவன் போன்றோர் எழுதியவை. சக எழுத்தாளர்கள் மீதும் வெளிச்சம் போட்டுக்காட்டுவது, ஓர் அரிய பங்களிப்பு.

தஞ்சைப் பயணம் குறித்த என் ஆங்கிலப்பதிவு இங்கே. தமிழறியாத என் நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளும் நோக்கில் எழுதியது.

நான் ‘திசைகளின் நடுவே’ குறித்து எழுதிய கடிதம் உங்கள் கவனித்தில் பட்டதா எனத்தெரியவில்லை. எனவே அந்த மடலின் தொடர்ச்சியாகவே இதையும் இணைத்திருக்கிறேன்.

அன்புடன்
த.கண்ணன்

https://urakkacholven.wordpress.com/

அன்புள்ள கண்ணன்

பதிவைக் கண்டேன். நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.

பொதுவாக நாம் நம்முடைய பண்பாட்டு மூலங்களைப்பற்றி இன்னும் விரிவாக தொடர்ச்சியாகப் பேசுவது அவசியம் என்று நினைக்கிறேன். தமிழின் சொத்துக்கள் எனச் சொல்லப்படும் பல கோயில்கள் பற்றி மிகக்குறைவாகவே பொதுவெளியில் பேசப்பட்டிருக்கின்றன

ஜெ

——————————————–

 


2010ல் படித்தவை

ஜனவரி 1, 2011

இது 2010ல் நான் படித்து, என் மனதில் நின்ற புத்தகங்களின் பட்டியல்.

2010ன் சிறந்த புத்தகங்கள் என்றெல்லாம் என்னால் பட்டியலிடமுடியாது. அந்த அளவிற்கு, நான் இப்போது அதிகம் படிப்பவனல்ல. வந்தவுடன் ஒரு புத்தகத்தைப் படித்துவிடவேண்டும் என்ற முனைப்புமில்லை. அதன் தேவையும் எனக்குப் புரிவதில்லை. இதுவரை வந்த அற்புதமான நூல்கள் எத்தனையோ இன்னும் படிக்கப்படாமல் இருக்கும்போது, இப்போது வந்தவை இன்னும் சில காலம் காத்திருக்கலாம் என்ற தள்ளிப்போடும் மனப்பான்மையாகவும் இருக்கலாம்.

1. புதுமைப்பித்தன் சிறுகதைகள்

பலகதைகளை மறுவாசிப்பு செய்தேன். சில புதிய கதைகள். காஞ்சனை, சாபவிமோசனம், ஒரு நாள் கழிந்தது, செல்லம்மாள், கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும், பால்வண்ணம் பிள்ளை, மனித யந்திரம், மகாமசானம் ஆகிய கதைகள் மனதில் அப்பிக்கொண்டன.  James Joyceன் Dubliners படித்த கையோடு, புதுமைப் பித்தன் படித்தேன். இருவருக்கும் ஒற்றுமைகள் அதிகம் இல்லையெனினும், ஜாய்ஸூக்கு எந்த விதத்திலும் குறைந்தவரில்லை என்றுதான் தோன்றியது.  நகைச்சுவையும், நக்கலும் இழையோட வறுமையை, அச்சத்தை, அன்பை, இயலாமையை, பிடிவாதத்தை, மனிதாபிமானத்தை அழகாய் வெளிப்படுத்தும் பல கதைகள்.

2. ஜெயகாந்தன் சிறுகதைகள்

அப்பா வாங்கி வைத்திருந்த ஜெயகாந்தனின் சிறுகதைகள் தொகுப்புகளிலிருந்து சிலவற்றையும் படித்தேன். எங்கோ யாரோ யாருக்காகவோ , மெளனம் ஒரு பாஷை, ரிஷிபத்தினி, ரிஷிகுமாரன், இன்னும் ஒரு வரம்  போன்ற கதைகள்.

‘எங்கோ யாரோ யாருக்காகவோ’ பள்ளிப்பருவத்தில் படித்தது.  விபச்சாரியின் கதை என்பதாலோ என்னவோ அப்போது பெரிதாகக் கவரவில்லை.  இப்போது படிக்கும் போது புதிய பொலிவோடு தெரிகிறது. அதில் உள்ள முரண்பாடுகளும், மனச்சிக்கல்களும், வேஷங்களும், நியாயங்களும் புரிகறது.

கடைசி மூன்று கதைகளும் ஒரே கதையின் தொடர்ச்சியாக உள்ளன. ஆனால் தனித்தனியாகவும் தனிச்சிறுகதைகளாக நிற்கன்றன என்பது ஒரு மாறுபட்ட முயற்சி. குமுதம் கதைகள் என்பதால் கொஞ்சம் எளிமைப்படுத்தப்பட்ட நடை. ஆனால் கனமான கரு. மற்றவர்களுக்காக வாழ்வதே பெரிய தவம் என்கிறது.

3. திசைகளின் நடுவே – ஜெயமோகன்

ஜெயமோகனின் விஷ்ணுபுரம் சில ஆண்டுகளுக்கு முன் படித்திருக்கிறேன். நவீன தமிழிலக்கியத்தில் ஒரு மிகப்பெரிய ஆக்கம்தான். அதன்பிறகு அவரது blog தொடர்ந்து படித்துவந்தாலும், இப்போதுதான் புத்தக வடிவில் மறுபடி படிக்கிறேன். இத்தொகுப்பில் உள்ள ஆரம்பகாலக் கதைகளில் அவரது வேர்கள் வெளிப்படுகின்றன. இவை பிறகு பெரும் மரங்களாய் விரியக்கூடும் சாத்தியங்கள் அப்போது படித்தவர்களுக்கும் தென்பட்டிருக்கும் என்றுதான் தோன்றுகிறது. மாடன் மோட்சத்திலும், திசைகளின் நடுவேயும், படுகையிலும் பல விஷ்ணுபுரத்தின் வாயில்கள் தெரிகின்றன. பல்லக்கு, வலை, போதி, ஜகன்மித்யை, சவுக்கு ஒவ்வொன்றும் ஒவ்வொரு தளத்தைத் தொடுகின்றன.

இறுதியில் லங்காதகனம் என்னை உலுக்கியது. நதி முதலான மற்றவை அத்தனையும் தகனம் செய்து மனதில் தங்கிவிட்டது. அனந்தன் ஆசான் மட்டுமல்ல, ஜெயமோகனும் இதில் பூரண வேஷம் பூண்டுதான் கலையின் உச்சத்தில் நிற்கிறார்.

4. தமிழ் தாத்தா – கி.வ.ஜகந்நாதன்

உ.வே.சா.வின் வாழ்க்கை வரலாறு. எளிய நடை. இது ஒரு அறிமுக நூலாகத்தான் இருக்கிறது. சுவடிகள் தேடிப் பதிப்பிப்பதற்காகத் தம் வாழ்வை அர்ப்பணித்த அன்றைய மனிதர்களின் மீது பெரும் மதிப்பையும், வியப்பையும், நன்றியையும் உருவாக்குகிறது.

உ.வே.சா.வின் ‘என் சரிதம்’ படிக்கும் ஆவலைத்தூண்டியது…இணையத்தில் படிக்கத்துவங்கிவிட்டேன்.

5. Metamorphosis – Franz Kafka

காப்காவின் The Trial முன்பே படித்திருக்கிறேன். பெரிய பாதிப்பு ஏற்படுத்தவில்லை. Metamorphosis அதே வகை எழுத்துதான் என்றாலும், இம்முறை பிடித்திருந்தது. எல்லா எழுத்துகளுமே எந்த மனநிலையில், எந்த மனமுதிர்ச்சியில் படிக்கிறோம் என்பதைப் பொறுத்துத்தான் பிடிப்பதும் பிடிக்காததும் நிர்ணயிக்கப்படுகிறது என்பதுதான் இந்த வருடம் நான் மறுபடி மறுபடி உணர்ந்தது…இளமையில் மிக அதிகமாகப் படித்துவிட்டால், புத்தகங்களின் மறுவாசிப்பு அவசியம்.

திடீரென ஏதோ பூச்சியாகிவிட்ட கதாநாயகனைக் குறியீடாகக் கொண்டு பல்வேறு தளங்களைத் தொட்டுச் செல்கிறார் காப்கா. நம்மிலிருந்து மாறுபட்டவர்களை நாம் அந்த பூச்சியைவிடக் கீழாகத்தான் நடத்துகிறோம்.

6. Dubliners – James Joyce

இங்கு விரிவாக எழுதியுள்ளேன். ஜாய்ஸ் மீதிருந்த பயத்தை விலக்கி ஆர்வத்தைத் தூண்டியது. விளைவாய் A Portrait of the artist as a Young Man படித்துக்கொண்டிருக்கிறேன்.

7. Alice in the Wonderland

பதின்பருவத்தில் படிக்கத்துவங்கி, ஏதோ fairy tale என்று ஒதுக்கியது. இப்போது மறுபடி படித்தபோது அதன் அபத்தங்களை ரசிக்க முடிகிறது. Catch-22 மாதிரி அழகான அபத்த இலக்கிய வகை. அநியாயத்திற்கு குழந்தைகள் புத்தகமாக்கிக் கொடுமை செய்கிறார்கள்.

8. ஸீரோ டிகிரி – சாரு நிவேதிதா

அபத்த இலக்கியம் என்றவுடன் நினைவுக்கு வருகிறது – ஸீரோ டிகிரி இந்த வருடம் எனக்கு நிகழ்ந்த விபத்து.  எந்த வகை இலக்கியம் என்பதைவிட, இது எந்த வகையில் இலக்கியம் என்ற கேள்விதான் எழுந்தது.

நாஞ்சில் நாடனின் தலைகீழ் விகிதங்கள் படித்துக் கொண்டிருக்கிறேன். அதனால்தானோ என்னவோ அவருக்கு இந்த வருட சாகித்ய அகாதமி வருது வழங்கிவிட்டார்கள் 🙂 வாழ்த்துகள்.  [2001ல் V.S.Naipaulன் A House for Mr.Biswas படித்துக்கொண்டிருந்தபோது, அவருக்கு நோபல் பரிசு வழங்கினார்கள். எழுத்தாளர்கள் கவனிக்கவும்.] நாஞ்சில் நாடனின் இடலாக்குடி ராஜா சிறுகதை இணையத்தில் படித்தது – அற்புதம். அவரது சொல்வனம் கட்டுரைகள் தொடர்ந்து படிப்பதால், அவர் சுட்டிக்காட்டிய  ‘திருக்குறள் உரைக்கொத்து’ என்ற நூலும் வாங்க முயன்று பொருளதிகாரம் மட்டும்தான் கிடைத்தது.

சென்ற மாதம் Amazon Kindle வாங்கினேன். பிரமிக்கவைக்கும் தொழில்நுட்பம். அதற்கு அடுத்தநாள் பெங்களூர் புத்தகக்கண்காட்சியில் பல புத்தங்களை அள்ளிவந்தேன். தமிழ் புத்தகங்கள் படிக்கும் ஆர்வமே இப்போது மேலோங்கி நிற்பதால், கிண்டில் படிக்கப்படாமலே கிடப்பில் கிடக்கிறது.

சென்ற வாரம் தஞ்சாவூர் பயணித்தின் போது சரஸ்வதி மகால் நூலகப் பதிப்புகளான தனிப்பாடல் திரட்டு (2 தொகுதி), தொல்காப்பிய உரைக்கொத்து ஆகியவை வாங்கினேன்.

சுகுமாரன், எஸ்.ராமகிருஷ்ணன், வண்ணநிலவன், ஆ.மாதவன், நீல பத்மநாபன், தி.ஜானகிராமன் ஆகியோர் புத்தகங்களும் இவ்வாண்டு வாங்கிப் படிக்கப்படக் காத்திருக்கின்றன. சுந்தர ராமசாமியின் செம்மீன் மொழிபெயர்ப்பும் வாங்கினேன். அகநானூறு படிக்க எடுத்து வைத்திருக்கும் முக்கிய பழந்தமிழ் இலக்கிய நூல். நண்பருக்கப் பரிசளிக்க Flipkartல் வாங்கிப்பின் தராமல் நானே ஆசைபற்றி வைத்துக்கொண்ட A.K.Ramanujanன் மொழியாக்கம் – Poems Of Love And War: From The Eight Anthologies And The Ten Long Poems Of Classical Tamil.

ஆக, எப்போதும் போல், படித்ததைவிட படிக்கவேண்டும் என்று வாங்கியவையே அதிகம் (வாங்கிய ஆங்கில நூல்களும் பல). வாங்க நினைத்திருப்பவை இன்னும் அதிகம். கிண்டிலில் Project Gutenberg தளத்திலிருந்து சேர்த்துவிட்ட க்ளாசிக்ஸ் நூற்றுக்கும் மேல்.

2010ல் நானும் சில கவிதைகள் எழுத முயன்றுள்ளேன். Facebook வெறும் அரட்டைத்தளமாக இல்லாமல், ஓர் இலக்கிய அரங்கமாகவும் மாற்றமுடியும் என்பது புரிந்தது.

எல்லாவற்றிற்கும் மேலாய் கடந்த சில மாதங்களாக நிறைவாய்ச் செய்வது திருக்குறள் மொழிபெயர்ப்பு. அதற்காகத் தேடித்தேடிப் படிக்கிற திருக்குறள் நூல்கள். குறிப்பாய் பரிமேலழகர் உரை, வை.மு.கோபாலகிருஷ்ணமாச்சார்யரின் விளக்கவுரையுடன்.

இவ்வாண்டு புதிதாய்க் கண்டுகொண்ட மிக முக்கியமான வளைதளங்கள்:

1. http://azhiyasudargal.blogspot.com நவீனத் தமிழ் இலக்கியங்களின் பெட்டகம்.

2. http://dsal.uchicago.edu/dictionaries/winslow/ 1862ல் வெளிவந்த தமிழ்-ஆங்கில அகராதி

3. http://www.tamilvu.org/library/libindex.htm பழந்தமிழ் இலக்கியங்கள் பலவும் உள்ளன. தொல்காப்பியம், திருக்குறள் உரைக்கொத்துக்கள் உட்பட. சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதியும் உள்ளது.

4. http://nanjilnadan.wordpress.com/ நாஞ்சில் நாடன் படைப்புகள்

5. http://vannathasan.wordpress.com/ வண்ணதாசன் படைப்புகள்

6.  ஜெயமோகன், ராமகிருஷ்ணன் தளங்கள் மூன்றாண்டுகளாய்த் தொடர்ந்துவருவன. இவ்வாண்டும் அதிகம் படித்தவை.

இவ்வாண்டு நான் படித்ததில் பிடித்த கவிதைகள்:

குழந்தைகளின் ஜன்னல்கள்

இப்போதுதான் கிடைத்தது ஜன்னல் சீட்
உடனே இறங்கச் சொல்கிறாள் அம்மா
வீடு இங்கேதான் இருக்கிறதாம்…
இதெல்லாம் ஒரு காரணமா?

– முகுந்த் நாகராஜன்.

நான் கட்டினேன் ஒரு வீட்டை
வீடு தனக்காக கட்டிக் கொண்டது
வானம் இறங்க விரித்த
தன் மொட்டை மாடிக்களத்தை.

– தேவதேவன்

காவியம்.

சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின்
தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது

– பிரமிள்


திருக்குறள் (ஆங்கிலத்தில்) – Facebook, Twitter தலைமுறைக்கு

ஒக்ரோபர் 1, 2010

திருக்குறளில் இருந்து நிறையப் பெற்றிருக்கிறேன். வாழ்க்கை குறித்த என் நோக்கைச் செதுக்கிச் செம்மைப்படுத்துவதில் திருக்குறளின் பங்கு மிகப்பெரியது. என்னுடைய ஆங்கிலப் பேச்சுகளையும் திருக்குறள் எப்போதும் மெருகேற்றியிருக்கிறது. ஒவ்வொரு குறளும், தமிழ்  தெரியாதவர்களிடம் ஓர் ஆர்வத்தை உருவாக்குவதைக் கண்டிருக்கிறேன்.

ஆனாலும், திருக்குறளின் நுனியைக்கூட முழுவதுமாய் நான் அளக்கவில்லை என்பதை அறிவேன். எனவே, திருக்குறளைக் கற்று, கற்கின்ற போதே, மற்றவர்கள் கவனித்திற்கும் எடுத்தச் செல்ல ஒரு சிறு முயற்சியை சில நாட்களாய் முன்னெடுத்திருக்கிறேன். Twitter, Facebook போன்ற தளங்களில் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்துவருகிறேன். ஏற்கனவே வேறு ஆங்கில உரைகள் இருந்தாலும், தற்கால மொழிநடையில், இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியையும் பயன்படித்தி, குறளை என் நோக்கில் இங்கு தருகிறேன்.

இதற்காக குறளையும், பல உரைகளையும் (குறிப்பாய் பரிமேலழகர்) படிக்கும் போது ஒன்று தெளிவாய்த் தெரிகிறது – கற்றது கைம்மண்ணளவு, கல்லாதது குறளளவு.

சில சமயம், நான் பார்த்த அனைத்து உரைகளோடும் ஒத்துப்போகாமல், ஆங்காங்கே, சில குறள்களுக்கு, என்நோக்கில் புது உரைதரும் வாய்ப்பும் இதன்மூலம் கிட்டியுள்ளது.

உதாரணம், இந்தக்குறள்:
தம்மிற்றம் மக்க ளறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லா மினிது.
பரிமேலழகர் உரை
தம் மக்கள் அறிவுடைமை = தம் மக்களதறிவுடைமை;
மா நிலத்து மன் உயிர்க்கெல்லாம் தம்மின் இனிது = பெரிய நிலத்து மன்னாநின்ற உயிர்கட்கெல்லாம் தம்மினுமினிதாம்.
பரிமேலழகர் உரைவிளக்கம்
ஈண்டறிவென்றது இயல்பாகிய அறிவோடுகூடிய கல்வியறிவினை.
மன்னுயி ரென்றது ஈண்டறிவுடையார் மேனின்றது, அறிவுடைமை கண்டின்புறுதற்கு உரியார் அவராகலின்.
இதனால் தந்தையினும் அவையத்தா ருவப்பரென்பது கூறப்பட்டது.

இதற்கு எனது ஆங்கில வடிவம்: All living creatures on this earth feel prouder when their children are smarter than themselves.

மற்றொரு எடுத்துக்காட்டு இந்தக்குறள்:

அறத்தா றிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோ டூர்ந்தா னிடை.

இதற்கு ஜெயமோகன், தன்னுடைய நவீன இலக்கியம் பற்றிய ஓர் இடுகையில், பல்வேறு சாத்தியங்கள் இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.

இந்த ஒரு குறளுக்கு மட்டும் எத்தனை வகையாக பொருள் கொள்ளப்பட்டுள்ளது என்று நோக்கினால் எம்ப்சன் என்ன சொல்கிரார் என்று புரியும். ‘பல்லக்கில் செல்பவன் சுமப்பவன் இருவரையும் வைத்து அறத்தின் வழி இதுவே என நினைக்கவேண்டாம்’ இவ்வளவுதான் குறள். இது முற்பிறப்பின் வினைப்பயனைச் சொல்வது என்பது பரிமேலழகர் கூற்று. சமண ஊழ்வினையைச் சொல்கிறது என்பது நச்சினார்க்கினியர் உரை

இப்போதுள்ள இதுவே அறத்தின் எப்போதுமுள்ள வழி என்று நினைக்காதே வண்டியும் ஓர்நாள் ஓடத்தில் ஏறும் என்றுதான் வள்ளுவர் சொல்கிறார் என்றே நான் வாசிக்கிறேன். இன்னும் பல வாசிப்புகளுக்கு இதிலே இடமுள்ளது. இன்னும் இன்னும் சிந்திக்கச் செய்கிரது இந்தக்குறள்.

இக்குறளை நான் புரிந்திருந்திருந்தது இப்படி : One man lifting another on a palanquin, can’t be justified as the fruit of any prior moral deeds.

என்னுடைய கோணம் இம்மூன்றினின்றும் மாறுபட்டதாய் இருந்ததை, ஆச்சர்யமாய் எண்ணி, குறளுக்கு இன்னும் எத்தனை உரை வேண்டுமானாலும் எழுதலாம் என்று என் மொழிமாற்ற முயற்சியை நியாயப்படுத்திக்கொள்கிறேன்.

இரண்டடிக் குறள், Twitter-ன் 140 எழுத்துகளுக்குள் ஓரளவு எளிதாகவே அடங்கிவிடுகிறது. இன்றைய தலைமுறைக்கு ஏற்ற வடிவத்தில் குறளைக் கொண்டு சேர்ப்பதிற்கு Twitter, Facebook உருவாக்கித் தருகிற தளங்கள் பெரிதும் பயன்படுவதாகவே எனக்குத் தோன்றுகிறது. இன்னும் அதிக வாசகர்கள் கவனத்திற்குக் கொண்டு செல்லும்போது, பல குறள்களை மையமாக்கி, ஆக்கப்பூர்வமான உரையாடல்களை நிகழ்த்துவதற்கும் வாய்ப்புகள் அதிகம். கைபேசி மூலம் எழுதவும், படிக்கவும் முடிகிறது என்பது கூடுதல் வசதி.

வள்ளுவன் மூலமாய் தமிழனுக்கு வான்புகழ் இருப்பதாய்ப் பாடுவதென்னவோ பாடிவிட்டோம். ஆனால் குறளையும், மற்ற தமிழ் இலக்கியங்களையும் உலகத்திற்கு அறிமுகப்படுத்துவதில் இதுவரை நாம் பெரும் வெற்றி பெறவில்லை என்பதும், நமக்குள்ளே பழம்பெருமை பேசுவதில் பயனில்லை என்பதும் நாமறியாததல்ல. வெளிநாட்டார் இதை வணக்கம் செய்து, இறவாத புகழோடு குறள் வாழ என்னாலான சிறு முயற்சி இது. இதன்மூலம் குறளுக்கு நான் கொடுப்பதைவிட எடுப்பதே இன்னமும்அதிகமாய் இருக்கிறது.

மேலும் படிக்க, பின்தொடர : Twitter, Facebook


ஆனந்த விகடனா ஆயத்துலா கொமேனியா?

பிப்ரவரி 15, 2008

இணையத்தின் மட்டற்ற சுதந்திர உணர்வுக்கு விகடன் சவால்விட்டிருக்கிறது. ஜெயமோகனின் ‘ஆனந்த விகடனின் அவதூறு’ பதிப்பைப் பார்த்ததும் புரிந்தது. விகடன் இணையதளத்தில் (கட்டுரை முழுவதும் பதிவுசெய்யாமல் படிக்க முடியாது என்பதால்)   தலைப்பு மட்டும் தென்பட்டது; மிரட்டியது.

இது ஓர் ஆபத்தான அபத்தத்தின் உச்சம். எம்.ஜி.ஆர், சிவாஜி பற்றிய ஒரு சாதாரண அங்கதப்பதிப்பினைத் தாக்கித் தலைப்புச் செய்தியாக்குவதற்கு ஒரே உள்நோக்கம் தான் இருக்க முடியும் – ஜெயமோகனுக்கு எதிராய் எதிர்ப்பலை கிளப்பிக் குளிர்காய்ந்து, அதிகப் பிரதிகள் விற்கவேண்டும். இது ஜெயமோகனுக்கு மட்டும் எதிரான செயலில்லை, இணையத்தின் வலிமை உணர்ந்த வலியின் விளைவு. எழுத்தாளர்கள் இணையத்தின் மூலம் நேராய் மக்களைச் சென்றடையத் துவங்கிவிட்டால் பத்திரிக்கைகளின் தாக்கமும் தேவையும் குறைந்துவிடாதா?

இணையத்தில் யார்வேண்டுமானாலும், யாரைப்பற்றியும், எதுகுறித்தும் எதுவும் எழுதலாம். பத்திரிக்கைகளின் கட்டுப்பாடுகளுக்கும், வியாபர நிர்ப்பந்தங்களுக்கும் உட்படவேண்டிய கட்டாயமில்லை. தமக்குத் தேவையானதை வாசகர்கள் தேர்ந்தெடுத்துப் படித்துக்கொள்வார்கள். எழுத்தாளனும் வியாபர நோக்கங்களுக்கு விடுப்புகொடுத்துவிட்டுத் தன் ஆழ்மனதின் கதவுகளைக் கவலையில்லாமல் திறந்துவிட முடியும். பத்திரிக்கைகளில் செய்ய முடியாத பல்வேறு முயற்சிகளை, சோதனைகளைச் செய்துபார்க்க முடியும். இப்படி விளைந்ததுதான் ஜெயமோகனின் பதிப்பும். அதன் தரத்தைப் பற்றி நான் இங்கு அலசப் போவதில்லை. எம்.ஜி.ஆர், சிவாஜியைப் பிடிப்பதும் பிடிக்காததும் அவர் சொந்த விருப்பு. அவர்கள் பற்றி எழுதுவது அவர் உரிமை. இணையம் அளித்த சுதந்திரம். ஏற்பதும் நிராகரிப்பதும் வாசகன் உரிமை. 

அந்தப் பதிப்பை எம்.ஜி.ஆர், சிவாஜிக்கு நேர்ந்த இழிவாய்ச் சித்தரித்து, அளவுக்கதிகமான முக்கியத்துவமளித்து sensationalize செய்வது அரசாங்க அடக்குமுறையை விடவும் கீழ்த்தரமானது. வாய்ப்புக்காகக் காத்திருக்கும் அரசியல் இயக்கங்கள் ஏதேனும் வன்முறையில் இறங்கினால் விகடன் பொறுப்பேற்குமா? இத்தனை ஆண்டுகள் இவர்கள்தான் கருத்து சுதந்திரத்திற்காகக் கொடிபிடித்திருந்தவர்களா? நம்ப முடியவில்லை.

MF ஹூசைனுக்கும், சல்மான் ருஷ்டிக்கும், தஸ்லீமா நஸரீனுக்கும் மத வெறியர்களால், அரசியல் அடிப்படைவாதிகளால் விளைந்த இன்னல்களில் சிறுபகுதியேனும் ஜெயமோகனுக்கு விகடனால் விளைந்தால் அது விகடனுக்கு பெரும் இழுக்கு. பின் விகடனுக்கும் கொமேனிக்கும், டொகாடியாவுக்கும் என்ன வேறுபாடு? தலைவர்கள், கலைஞர்கள், கடவுள்கள், எவருமே விமர்சனங்களுக்கும் விகடத்துக்கும் அப்பாற்பட்டவர்கள் அல்ல என்பது விகடனுக்குத் தெரியாதா?

பிற பதிப்புகளில், ஜெயமோகன் போன்ற தரமான இலக்கியவாதிகள் சிறுபத்திரிக்கைகளுக்குள் சிறைபட்டிருப்பதால் மக்களைச் சென்றடைவதில்லை என்று எழுதியிருக்கிறேன். இச்செயல் பிரபல இதழ்களிலிருந்து அவர்களை மேலும் அந்நியப்படுத்தும். இழப்பு தமிழ் மக்களுக்குத்தான்.

இதிலிருந்து விளையக்கூடிய ஒரே  நன்மை – மேலும் பல எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் இணையத்தின் ஈர்ப்பும் சாத்தியங்களும் புரியும்.


Elitist இலக்கியவாதிகளும் இலக்கிய வளர்ச்சி(யின்மை)யும்

ஜனவரி 25, 2008

தமிழ் இலக்கியம் மக்களைச் சென்றடையாமல், மிகச்சிறிய வட்டங்களுக்குள் சிறைபட்டுக் கிடப்பது வருத்தத்திற்குரியது. இதற்கு முதன்மையான காரணம் தமிழ் இலக்கியவாதிகளிடம், கர்நாடக சங்கத வித்வான்களிடம் போல், பரவலாகக் காணப்படுகிற ஒரு வகையான தீவிர brahminical elitist mentality தான்.

தமிழ் வாசகர்கள் வட்டம் ஆங்கில உலகமளவிற்கு விரிவானதல்ல. ஆனால் இங்குள்ள இலக்கியப் பாகுபாடுகள் ஆங்கிலத்தைவிடவும் அதிகம் என்றே தோன்றுகிறது. முற்போக்கு இலக்கியம், தலித் இலக்கியம், வட்டார இலக்கியம், தனித்தமிழ் இலக்கியம், திராவிட இலக்கியம், இடதுசாரி இலக்கியம், பெண்கள் இலக்கியம்  என்று எண்ணற்ற பிரிவுகள். இத்தனை வகைகள் இருப்பதில் தவறில்லை, ஆனால் ஒவ்வொரு வகையினரும் அவரவர்க்கென ஒரு வட்டமைத்து, அந்த வட்டத்திற்குள்ளேயே சிறைபட்டு, வெளியிலிருப்பவர்களை மட்டமாய் நினைப்பது ஒட்டுமொத்த இலக்கிய வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாகவே தெரிகிறது.

பல சமயங்களில் வர்த்தக வெற்றியை, இலக்கியத் தோல்வியாகவே கருதுகிறார்கள். வர்த்தக வெற்றி மட்டுமே இலக்கியத் தரத்திற்கு அளவுகோளாக முடியாது. அதேசமயம், எதிர்மறையாய், பெரும் வர்த்தக வெற்றி பெறுகிறவர்களை அந்த ஒரே காரணத்திற்காகத் தாழ்த்தி எடைபோடவும் கூடாது.

எடுத்துக்காட்டு – வைரமுத்துவிற்கு ஒரு சாராரிடம் கிடைக்கிற அவமரியாதை. இதோ ஜெயமோகன்  – ”’பில்லா’ கறுப்புக்கண்ணாடியை மாட்டிக்கொண்டு முப்பது பாகையில் முகம் திருப்பி ‘தமிழின் நிகழ்காலம்’ [இறந்தகாலம் முதல்வர் கருணாநிதியா?] என்று சுவரொட்டி அடித்து வெட்கமில்லாமல் தெருத்தெருவாக ஒட்டும் வைரமுத்து எப்படி உணர்வாரோ தெரியவில்லை, நல்ல வாசகராக நான் அறிந்த நா.முத்துக்குமார் அதைக் கண்டால் கூசிப்போவார் என்றே நினைக்கிறேன். [இதழில் எனக்குப்பிடித்த இரண்டு கவிதைகளில் ஒன்று அவர் எழுதியது] ”.

இலக்கியத்திற்கும் விளம்பரம் தேவைதான். விளம்பரம் கிடைப்பதாலேயே (சுய விளம்பரமா, தெரியவில்லை) அவரது இலக்கியத்தரம் ஏன் தாழ்ந்து போவதாய் நினைக்க வேண்டும். அவரது படைப்புகளில் நிறைய சேறிருந்தாலும், சேற்றை மறைக்குமளவிற்குச் செந்தாமரைகளும் நிறைந்துதானிருக்கின்றன. படைப்பாளிகள் அத்தனை பேருக்கும் இதே கூற்று ஓரளவு பொருந்தும்.

தனிமனித விருப்புவெறுப்புகளை ஒதுக்கிவிட்டு, பலவகைப்பட்ட படைப்புகளையும் சுவைத்துப்பாராட்டுகிற பக்குவம் நாம் வளர்த்துக் கொள்ளவேண்டும். ஆங்கிலத்தில் Naipaul, Rushdie போன்ற தனிமனிதர்கள் மீதும், அவர்கள் கருத்துகளுடனும் உடன்பாடில்லாதவர்கள்கூட அவர்களின் படைப்புகளுக்குத் தரவேண்டிய மதிப்பைத் தருவதைப் பார்க்கிறோம்.

எனக்கு Tolkien, Walter Scottம் பிடிக்கும், Franz Kafka, Albert Camusம் பிடிக்கும். அதேபோல கல்கியின் பொன்னியின் செல்வனும் பிடிக்கும், சுந்தர ராமசாமியின் ஜே.ஜே சில குறிப்புகளும் பிடிக்கும். ஜெயமோகனின் விஷ்னுபுரமும் பிடிக்கும், வைரமுத்துவின் சிகரங்களை நோக்கியும், ஏன், பல நயமான திரைப்பாடல்களும் பிடிக்கும். இவற்றில் முரண்பாடுகள் இருப்பதாய்த் தோன்றவில்லை.

ஜெயகாந்தன், சுஜாதா போன்றவர்கள் பிரபல வார இதழ்களில் எழுதியதாலேயே தரம்தாழ்ந்தவர்களாய்ச் சில சிற்றிதழ்கள் சித்தரிப்பதைப் பார்த்திருக்கிறேன். விந்தையான வாதம்தான். பத்துப்பேர் மட்டுமே படிப்பதுதான் இலக்கியம் என்று எண்ணுகிற இவர்களின் மனோபாவத்தைத்தான் brahminical elitist mentality என்று கூறினேன், ஜாதி அடிப்படையில் அல்ல (பார்ப்பனன் என்பதால் பாரதியை மட்டம்தட்டுகிறவர்களும் நம்மில் உண்டு!).

இலக்கியம் மக்களைச் சென்றடைய வேண்டும். அப்போதுதான் மென்மேலும் வளரும். அதற்காக நவீன வியாபர உத்திகள் தேவைப்பட்டால், அவற்றையும் பயன்படுத்தித்தான் பார்ப்போமே.  நாம் வறுமையால் இறந்த பாரதிகளையும் புதுமைப்பித்தன்களையும் பார்த்தது போதும்.  இலக்கியத்தால் செழிப்படைந்து, இன்னும் உற்சாகமாய் இலக்கியத்தைச் செழிப்படையச் செய்கிற நிலை, உலகெங்கிலும் போல் இங்கும், உதயமாகட்டும்.