ஜல்லிக்கட்டு – சில எண்ணங்கள்

ஜனவரி 22, 2020

முகநூல் மூன்றாண்டுகள் முன் நடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டங்கள் பற்றிய நினைவுகளைக் கிளறிக்கொண்டிருக்கிறது. அப்போது சில போராட்டங்களில் நான் அமைதியாகக் கலந்துகொண்டும், தீவிரமாக எழுதிக்கொண்டும் இருந்தேன். ஜல்லிக்கட்டுப் போராட்டம் மீதான எனது ஆர்வத்துக்கும் அதற்கான ஆதரவுக்கும் அடிப்படையாக அமைந்தது ஒரு முக்கியக் கூறு:

தமிழ்நாட்டில் மாணவ சமூகத்தை அரசியல்படுத்தி ஒன்றிணைப்பதற்கு ஜல்லிக்கட்டுப் போராட்டம் உதவியது. சுயநலம் சார்ந்து தம் பிழைப்பு, தம் வளர்ச்சி என்றிருந்த ஒரு தலைமுறை மாணவர்களையும் பெற்றோர்களையும் ஒரு சமூகப் பிரச்சனைக்காகக் களமிறங்கவைத்தது. நான் போராட்டங்களின் போது கண்ட நிகழ்ச்சிகளின் மூலமாக இது ஒரு பரந்த விழிப்புணர்வுக்கும் மாணவர்களிடம் பசுமைச் சிந்தனைக்கும் வழிவகுக்கும் என்று நம்பிக்கை கொண்டேன்.

உழவு, சுற்றுச்சூழல் சார்ந்து பெருமளவு ஆர்வத்தை இப்போரட்டங்கள் ஏற்படுத்தத்தான் செய்தன. சில இளைஞர்கள் சுற்றுச்சூழல் செயல்பாடுகளில் ஈடுபடவும் செய்தனர். தமிழகத்தின் சுற்றுச்சூழல் இயக்கத்தில் ஒரு முக்கியமான நிகழ்வாக இதை நாம் காணலாம். ஆனால் இது தன்னளவில் ஓர் இயக்கமாக வளரவில்லை. அதற்கு ஒரு காரணம், போராட்டத்தை ஒருங்கிணைத்த சிலர் அதை அவசரமாக முடிவுக்குக் கொண்டுவந்தனர். ஜல்லிக்கட்டு மட்டுமே போராட்டத்தின் நோக்கம் என்றும் அது நிறைவேறிவிட்டது என்று அறிவித்தனர். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தொடர்ந்து பல்வேறு விசயங்களைப் பற்றி பேசிவந்தனர். இது அடுத்த நாள் மாணவர்கள்மீது காவல்துறையினர் திட்டமிட்டு நிகழ்த்திய கொடூர வன்முறைத் தாக்குதலுக்கு வழிகோலியது. மீண்டும் அந்த மாணவர்கள் பிற காரணங்களுக்காகப் போராட்டம் செய்வதற்கு அஞ்சும்படியான ஒரு சூழலை உருவாக்கியது. அதனால்தான் தமிழக மாணவர்கள் நீட் எதிர்ப்பு, குடியுரிமைச் சட்ட திருப்பு எதிர்ப்பு என்று எதிலும் பெருமளவு ஈடுபடவில்லை என்று தோன்றுகிறது. இது அகிம்சைப் போராட்டங்களில் நமக்குப் போதிய புரிதலும் பயிற்சியும் இல்லையென்பதையும் வெளிப்படுத்தியது.

ஜல்லிக்கட்டு மூலமாக நாட்டு மாடுகள் மீது மக்களின் ஆர்வம் அதிகரிக்கும் என்றும் சொல்லப்பட்டது. ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்குப்பிறகு நாட்டு மாடுகளின் விலை அதிகரித்தது. மரபான உழவர்களிடையே – குறிப்பாக ஜல்லிக்கட்டு நடைபெறாத எங்கள் பகுதியில் – பெரிதாக ஆர்வம் அதிகமானது மாதிரித் தெரியவில்லை. ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதிகளில் வேறுமாதிரி இருக்கலாம். ஆனால், இது ஆர்வத்தை உயிர்ப்போடு வைத்திருப்பதற்கான ஒரு செயற்கையான வழிமுறைதான். உழவர்கள் நாட்டு மாடுகளை நோக்கித் திரும்புவதற்குத் தேவையான உண்மையான பொருளாதார காரணிகளை இது அடையாளம் கண்டு சரி செய்வதில்லை.

ஜல்லிக்கட்டுப் போராட்டம் இன்னொரு வகையில் முக்கியமானது. உள்ளூர்ச் சமூகங்கள் தங்கள் பழக்கவழக்கங்களைக் கடைபிடிப்பதற்கான உரிமையை நிலைநாட்டவும், அப்படியான உரிமைகளில் தலைநகர் தில்லியோ சர்வதேச நிறுவனங்களோ தலையிட்டு ஆதிக்கம் செலுத்துவதை எதிர்க்கவும் பயன்பட்டது. வெளியாட்களின் தலையீட்டால், உள்ளூர்ப் பழக்கங்களை மாற்றுவதில் எனக்கு இன்னும் உடன்பாடில்லையெனினும், உள்ளூர்ச் சமூகங்கள் தாங்களே தங்கள் மரபுகளையும் பழக்கங்களையும் கேள்விக்கு உட்படுத்தி, தொடர்ந்து பரிணமித்துக்கொண்டிருக்க வேண்டும் என்று உறுதியாக நம்புகிறேன்.

ஒரு விளையாட்டாகவோ, சடங்காகவோ ஜல்லிக்கட்டு என்னைத் தனிப்பட்ட முறையில் பெரிதாக ஈர்க்கவில்லை. உணர்வெழுச்சியில்லாமல் இப்போது இதைப் பார்த்தால், அதன்மீது எனக்கு எந்த ஆர்வமும் தோன்றவில்லை. ஜல்லிக்கட்டை நான் நேரில் பார்த்ததில்லை. தொலைக்காட்சியில் பார்த்திருப்பதோடு சரி. ஆனால் அதுவே இது குறித்துப் பேசுவதற்கான தகுதி எனக்கில்லை என்றாக்கிவிடாது. இதில் எந்தவிதமான அழகியலோ இக்காலத்துக்கேற்ற வேறு உயர்ந்த நோக்கமோ இருப்பதாக எனக்குப் புலப்படவில்லை.

இது வீரத்தைக் கொண்டாடுவதாகக் கொண்டால், இன்றைய உலகில் இத்தகைய வீரத்துக்கான இடம் என்ன என்பதைப்ற்றி நாம் கேள்வி எழுப்பவேண்டும். முரட்டுக் காளைகளின் பின்னால் ஓடித்தான், இன்றைய மக்களாட்சிக்கும், அகிம்சைப் போராட்டங்களுக்கும் எளிமையான வாழ்க்கைக்கும் தேவையான வீரத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றில்லை. ஜல்லிக்கட்டில் கலந்து கொள்பவர்கள் எல்லாருக்கும் ஒரு புதிய பாதையில் நடப்பதற்கான வீரத்தை இப்போட்டிகள் வழங்கிவிடுவதில்லை. இது ஒரு முக்கியான மரபுதான். ஆனால் எல்லா மரபுகளும் என்றென்றும் தொடரப்பட வேண்டியவையல்ல. தொடர்ச்சியாக மக்களைக் காயப்படுத்தியும் காவுவாங்கியும் வருகிற ஒரு விளையாட்டு நமக்கு இன்னும் தேவைதானா? இந்த மரணங்களையும் காயங்களையும் அவற்றின் மீது நாம் காட்டும் அக்கறையின்மையையும் பிற விளையாட்டுகளோடு ஒப்பிட்டு நியாயப்படுத்துவதையும் காண்பது எனக்கு மிகுந்த வருத்தமளிக்கிறது. இன்றைய காலகட்டத்தில் ஜல்லிக்கட்டு மனிதருக்கும் விலங்குகளுக்கும் தீங்கான ஒன்றாக உள்ளது. அப்போது குத்துச்சண்டை, மல்யுத்தம் ஆகியவை என்று கேட்டால், மேற்கோ கிழக்கோ எப்பகுதியாயினும் இத்தகைய வன்முறை விளையாட்டுகள் காட்டுமிராண்டித்தனமானவை என்றே நான் கருதுகிறேன்.

நாட்டு மாடுகள் – பசுக்கள் மாட்டுமல்லாமல் எருமைகளும், காப்பாற்றப்படவேண்டும். அதற்கு மாடுகளைப் பயன்படுத்தும் இயற்கை வேளாண்மை பொருளாதார ரீதியான தற்சார்புடையதாக வேண்டும். இன்றேல், ஜல்லிக்கட்டு மாதிரி என்தனை முட்டுகள் கொடுத்தாலும், நீண்டகால நோக்கில் பயன்படாது.

நாம் விரும்பியதைச் செய்யும் உரிமையை வென்றுவிட்டோம். இனி அந்த உரிமையை அறிவுப்பூர்வமாகப் பயன்படுத்தவேண்டும்.