சிவராம காரந்த்தின் சுயசரிதை

நவம்பர் 20, 2018

சிவராம காரந்த்தின் சுயசரிதையான ‘பித்து மனத்தின் பத்து முகங்கள்’ நூலிலிருந்து (மொழிபெயர்ப்பு: பாவண்ணன், நூறுசுற்றுக்கோட்டை தொகுப்பு) :

[கன்னட எழுத்தாளர் சிவராம காரந்த் ஒத்துழையாமை இயக்கத்தின் போது, கல்லூரியைத் துறந்திருக்கிறார். கதராடை அணிந்து, கிராமங்கள்தோறும் அலைந்திருக்கிறார். சமூகப் பணிகளும் வெள்ளநிவாரணப் பணிகளும் செய்திருக்கிறார். காந்தியை ஆதர்சமாகக் கொண்டு, அப்போது பிரம்மச்சரிய விரதம் மேற்கொண்டிருக்கிறார். தாசிகள் பிரச்சனை அவரை மிகவும் வருத்தியிருக்கிறது.]

(தாசி குலத்தில் பிறந்த நண்பரிடம்) “உன் சகோதரிகளைப் பணத்திற்காக விற்காமல் இருக்கும் பட்சத்தில், எங்கிருந்தாவது அவர்களுக்குத் தகுந்த வரன்களைத் தேடிக்கண்டுபிடித்து கல்யாணம் செய்து வைக்கிறேன்” என்று சொன்னேன். அவனுக்கு ரொம்பவும் சந்தோஷம் ஏற்பட்டது. அவன் ஒத்துக் கொண்டான். ஆனாலும் அவனுடைய வீட்டுக்காரர்கள் இதற்கு ஒப்புக்கொள்வார்களா என்கிற ஐயம் எனக்கு இருந்தது. அவன் தன்னுடைய வீட்டுக்குச் சென்று அவர்களிடம் இந்த விஷயத்தை முறையிட்டான். அவர்களும் இத்திருமணத்துக்குத் தம் ஒப்புதலை அளித்தார்கள். அன்று என் வார்த்தையின் பின்னணியிலிருந்த பொறுப்பை உணர்ந்து கொண்டேன்.

காந்தியின் சமாதானப் பேச்சு

ஏறத்தாழ மூன்று நான்கு ஆண்டுகள், தாசிக் குலத்திலேயே இத்திருமணத்துக்குத் தகுந்த மாப்பிள்ளைகள் கிடைப்பார்களா என்று தேடியலைந்தேன். வடகன்னட மாவட்டம், பம்பாய், மைசூர்ப் பகுதிகளில் சுற்றியலைந்தேன். என் முயற்சிக்கு வெற்றி கிட்டவில்லை. என் வார்த்தைகளின் பின்னணியிலிருந்த பொறுப்பின் சுமை புரிந்தது. மிகவும் நிராசையோடு ஒருமுறை இதைப்பற்றிக் காந்திக்கும் கடிதம் எழுதினேன். அதற்கு அவர், அந்தப் பெண்கள் வாழ்நாள் முழுக்க பிரம்மச்சர்ய விரதம் மேற்கொண்டு வாழட்டும் என்று வழிசொல்லி எழுதினார். அதைப்படித்து நான் மிகவும் அலுத்துக் கொண்டேன். கண்ணீர் சுரந்தது. மனித சுபாவத்தின் அறிமுகமே காந்திக்கு இல்லை. தன்னால் செய்ய முடிந்ததை எல்லாராலும் செய்ய முடியும் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார் என்று தோன்றியது. அப்படிப்பட்ட நிலையில் எனக்கு என்ன பதில்? நண்பனின் வீட்டார் வயசுக்கு வந்த பெண்களை எவ்வளவு காலத்துக்கு வீட்டிலேயே வைத்திருக்க முடியும்? ஒருவேளை இது கைமீறிப்போகும் சந்தர்ப்பம் வரும்போது அம்மூவரில் யாரேனும் ஒரு பெண்ணை நானே திருமணம் செய்துகொண்டு என் வார்த்தையைக் காப்பேற்றவேண்டும் என எண்ணிக்கொண்டேன். அப்போது பிரம்மச்சரிய வாழ்க்கை என் லட்சியமாக இருந்தது.

(பிறகு அம்மூவருக்குமே வரன்கிடைத்துத் திருமணம் செய்து வைக்கிறார். ஆண்டுக்கொரு முறையாவது அவர்களைச் சந்திக்கிறார்.)