சுழன்றாடு மத்தே

நவம்பர் 26, 2017

நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் வர்தா சென்றிருந்தபோது இரண்டு பெட்டிச் சர்க்காக்களை (ராட்டை) வாங்கி வந்திருந்தோம். நூற்க கற்றுக்கொண்டு, ஒரு சில நாட்கள் பயன்படுத்தினோம். பெட்டிச் சர்க்காவில் நூற்கப்படும் நூல் இன்று கதராடைகள் செய்யப் பயன்படுத்தப்படுவதில்லை என்பதால், அதிலிருந்த ஆர்வம் விரைவில் விலகிவிட்டது. ஆனால், சர்க்காவைப் போன்ற எல்லோரும் பயன்படுத்தக்கூடிய ஓர் எளிமையான உற்பத்திக் கருவிக்கான ஏக்கம் என் மனதில் எப்போதும் உண்டு. எதாச்சையாக இரண்டு மாதங்களுக்கு முன்பு, மோர் கடையும் வேலையைத் தொடங்கினோம். அன்றிலிருந்து மோர் கடையும் அச்சிறு மத்தே எங்கள் சர்க்கா ஆனது. நான்கைந்து நாட்கள் மோர் கடைந்தால், அடுத்த வாரத்துக்குத் தேவையான நெய் கிடைத்துவிடுகிறது. நாங்கள் மூவரும் தினமும் பங்களிக்கக்கூடிய இன்னொரு செயலாக இது அமைந்துவிட்டது. தயிரை விட மோர் பிடித்திருக்கிறது. அதுவே ஆரோக்கியமானது என்றும் சொல்கிறார்கள். உண்மையில், மோர் என்றால் என்னவென்றே இப்போதுதான் உணர்கிறேன். இது போல், நாம் இழந்திருக்கும் சின்னச்சின்ன மகிழ்ச்சிகள் எத்தனையோ?

****
நெய் என்பது கடைக்குச் சென்று புட்டியில் வாங்குவது அல்ல; பால் கறப்பது முதல் வெண்ணெய் உருக்குவது வரை நெய் உருவாக்குவதற்கு ஒரு நீண்ட செயல்முறை உள்ளது என்கிற அனுபவப் பாடம் என் பெண்ணுக்கு.

****

மகிழ்மலர் மோர்கடைந்து கொண்டிருந்தாள். நான் ஜெயமோகனின் கொற்றவை படித்துக்கொண்டிருந்தேன். அதில் ஒரு வரி…ஆயர் சேரியில் கண்ணகி விழித்தெழும்போது:
‘புலரியில் கண்ணகி நூறு நூறு புறாக்கள் குறுகும் ஒலி கேட்டுப் பலகைமஞ்சம் விட்டெழுந்தபோது மூதாய்ச்சியர் மாயோன் புகழ்பாடி மோர்கடையும் ஒலியே அது என்றறிந்தாள்.’

இந்த வரியை அவளுக்குப் படித்துக் காண்பித்தேன்.
‘ஆமாம்பா. மோர் கடையும் போது புறாச் சத்தம் மாதிரியே கேக்குது.’

அன்றுமுதல் அதிகாலையில் எங்கள் திண்ணையில் புறாக்கள் ஒலிக்கத்தொடங்கிவிட்டன.

****

சிலப்பதிகாரத்தின் ஆய்ச்சியர் குரவை எம்.எஸ்.குரலில் அருமையாக இருக்கும்.
https://www.youtube.com/watch?v=ogm5odfetE4

‘வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கிக்
கடல்வண்ணன் பண்டொருநாள் கடல்வயிறு கலக்கினையே
கலக்கியகை அசோதையார் கடைகயிற்றாற் கட்டுண்கை
மலர்க்கமல உந்தியாய் மாயமோ மருட்கைத்தே’

****

சென்ற வாரம், தமிழிசை ஆய்வாளர் நா.மம்மதுவோடு மருத்துவர் ரமேஷ் வீட்டில் மூன்று நாட்கள் கழித்தோம். சிலப்பதிகாரம் சார்ந்தே அதிகமும் பேசினார். ஆய்ச்சியர் குரவையில் வரும் ‘குடமுதல் இடமுறையாக் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என விரிதரு பூங்குழல் வேண்டிய பெயர்’களும், முல்லைத்தீம்பாணியும் எங்களுள் ஆழப் பதிந்தன. (எம்.எஸ். பாடல் முல்லைத்தீம்பாணியில் இல்லை என்றறிகிறேன்)

 


சிலம்பொலியும், குற்றாலச் சாரலும் – ஓர் இனிய இசைவிருந்து

ஜூலை 31, 2008

சிலப்பதிகாரம் என்று இசைத்தட்டில் பெயர் பார்த்ததும், என்ன, என்று ஆர்வமாய்ப் எடுத்தேன். அட்டையில் மருத்துவர் ராமதாசுவின் படம் பார்த்ததும், வேண்டாம், வைத்துவிடலாம் என்றுதான் முதலில் தோன்றியது – மருத்துவர் அய்யாவின் சாதி அரசியல் மீது உள்ள வெறுப்பில்.  ஆனாலும், பின்னட்டையில் பாடகர்கள் தேர்வில சாதிச்சாயம் தெரியாததால், ஆர்வம் மேலோங்க சிலப்பதிகாரத்தையும் அருகிலிருந்த குற்றாலக்குறவஞ்சியையும் (அதிலும் மருத்துவர் ராமதாசுவின் படம்)  வாங்கிவந்தேன். இரண்டும் பொங்கு தமிழ் அறக்கட்டளையின் வெளியீடுகள்.

என் வெறுப்பை ஒதுக்கிவிட்டு நடுநிலையில் பாடல்களைக் கேட்கத் துவங்கினேன். இனிய ஆச்சர்யம் காத்திருந்தது. இரண்டுமே தரமான படைப்புகள். தமிழில் இத்தகைய முயற்சிகள் வெகு சில. இளையராஜாவின் திருவாசகத்தோடு ஒப்பிட முடியாது என்றாலும், அந்த வகை முயற்சி இது. தமிழ் இலக்கியங்களை நவீன ஒலிகளில் நேர்த்தியாய் வெளிக்கொணர முடியும் என்பதற்கு இன்னுமோர் எடுத்துக்காட்டு.

இசையமைப்பாளர் ந.கோபிநாத் ஓர் அரிய கண்டுபிடிப்பு. பழந்தமிழ்ப் பாடல்களை அழகாய் இக்கால இசைக்குள் கட்டுப்படுத்துவது கடினம். பாரதியின் பாடல்களையே இளையராஜா, விசுவநாதன் தவிர பலரும் சிதைத்திருக்கிறார்கள். நவீன இசை என்பது கீபோர்ட், தபலா, சலிப்பூட்டும் பழைய தூர்தர்ஷன் இசையைத் தாண்டியதில்லை. கர்நாடக இசையில், திருப்புகழ் தவிர வேறு பாடல்கள் இடம்பெறுவது அரிது. தமிழ்ப் பாடல்கள் இசைக்குப் பொருந்தாது என்று அவர்களாய் முடிவுகட்டிக் கொண்டிருக்கிறார்கள் போலும்.

இத்தகு சூழலில், இதுவரை கேட்டறியாத ஓர் இசையமைப்பாளர் இனிய பாடல்கள் மூலம் ஒரு புதிய பாதையில் பயனிக்கறார். தமிழ்ச் சொற்கள் இதமாய் செவிகளுக்கு விருந்தாயின. மிகக்குறைந்த நேரமே நீடித்ததுதான் பெரும் குறை. மற்றபடி இப்படியோர் முயற்சியில் சிறுபிழைகள் மனதில் நிற்பதில்லை.

இக்கட்டுரை எழுதும் போதே எஸ்.ராமகிருஷ்ணின் இதே ஏக்கம் குறித்துப் படிக்க நேர்ந்தது. இளையராஜா இன்னமும் இந்தப் பக்கம் முழுக்கவனத்தை திருப்ப மறுத்தாலும், ந.கோபிநாத் அந்தக் குறையைக் கொஞ்சம் குறைத்திருக்கிறார். இருந்தாலும் இளையராஜாவின் கைவண்ணம் பட்டால் இன்னும் எத்தனை திருவாசகங்கள் உருவாகக்கூடும்! ஹீம்…

இம்முயற்சிக்காக ந.கோபிநாத்தைப் போற்றுதும். பொங்கு தமிழ் அறக்கட்டளையைப் போற்றுதும். இத்தோடு நின்று விடாதீர்கள். உங்கள் இலக்கிய-இசைப் பயணம் இன்னமும் நீளட்டும்.