ஊரடங்கில் இன்னொரு நாள் – 2

ஏப்ரல் 23, 2020

தேங்காய் எண்ணெய் ஆட்டச் சென்றிருந்தோம். எங்கள் ஊரில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பினைத்தாண்டிச் செல்வதற்காக முன்பே அங்கிருந்த காவல்துறையினரிடம் அனுமதி கேட்கப்போனேன். விடிய விடிய அங்கிருக்கிறார்கள். உணவு, நுங்கு என்று பக்கத்து வீடுகளிலிருந்து வாங்கிக்கொள்கிறார்கள். ஒரு பெண்காவலரும் இருந்தார். இருப்பதிலேயே மூத்தவரிடம் கேட்டேன். சிரித்தபடியே போகச்சொன்னார். சிறிது உரையாடிவிட்டுவந்தேன். பொள்ளாச்சி அரசுமருத்துவமனையில் பிரசவத்துக்கு வந்த பெண்களுக்குக் கொரோனா வந்துவிட்டதால், மருத்துவமனை மூடப்பட்டுவிட்டதாகவும், பிரசவம் மட்டும் ஒரு தனியார் மருத்துவமனை வளாகத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறினார். வீட்டுக்குவந்து உடைத்துக் காயவைத்த தேங்காய்க் கொப்பரையை காரில் ஏற்றிக்கொண்டு சென்றோம்.

செக்குக் கடையில் நல்ல கூட்டம். அனைவரும் முகக்கவசங்களுடன் இருந்தனர். தேங்காய் இறக்கிவைத்தபின் காரை அங்கேயேவிட்டுவிட்டு, வீட்டுரிமையாளரின் மின்கட்டணம் செலுத்த, வங்கியில் பணம் எடுக்க, காய்கறி வாங்க என்று ஒரு நடை சென்றோம். ஒரு திருப்பத்தில், வருகின்ற இருசக்கர வாகனங்களிலெல்லாம் கைகளில் போத்தலும் தூரிகையுமாக இருந்த ஒரு காவலர் நிறுத்தி, பச்சைச் சாயம் பூசிவிட்டார். ஏன் எதற்கு என்ற கேள்விகளெல்லாம் பின்னர்தான் கேட்டார். ‘எங்களுக்கும் கணக்குக் காமிக்கணுமில்ல. யாராவதுவந்து ஏன் சாயம் பூசலன்னு கேட்டா நான்தான பதில்சொல்லணும்?’ என்று ஒரு வண்டியோட்டியிடம் கூறிக்கொண்டிருந்தார்.

வாகனங்கள்மீது ஒரு முறை சாயம் பூசிவிட்டால் சாலையில் ஒரு வாரத்துக்கு அவ்வாகனத்தை ஓட்டமுடியாதாம். அடுத்த வாரம் வேறு நிறச் சாயமாம். எண்ணெய் ஆட்ட வந்த ஒரு வயதானவர் இதற்குப் பயந்துகொண்டு மதியம் இரண்டு மணிக்கும் வீட்டுக்கு உணவுண்ணச் செல்லாமல் வேலைமுடியக் காத்துக்கொண்டே அமர்ந்திருந்தார். ‘எல்லாம் இந்த மைனர்களால வர்ற பிரச்சனை. நேத்து மருந்துவாங்கப் பொள்ளாச்சி போயிருந்தேன். அறுபது எழுபது பைக்ல இந்த மைனர்க அங்கயும் இங்கயும் பறந்துகிட்டிருக்கானுக. அப்புறம் போலீஸ் இப்படி எல்லாத்தையும் தடுக்கமாம என்ன பண்ணுவாங்க,’ என்றார்.

விவசாயப் பணிக்கு வருகிறவர்கள் ஒருமுறை மாட்டிவிட்டால் பிறகு அந்த வண்டியை ஓட்டமுடியாதே என்று கேட்டேன்.

‘ஆமாங்க. பாவம் அதுக்குப் பயந்துட்டே யாரும் வேற கிராமத்துக்கு வேலைக்குப் போக மாட்டேங்கிறாங்க.’

பக்கத்து வளாகத்தில் மும்முரமாகத் தேங்காய் மட்டை உரித்துக்கொண்டிருந்தார்கள். எல்லாருமே உள்ளூர்க்காரர்கள் என்றார் அவர்.

முந்தைய நாள் எங்கள் ஊர்த் தேங்காய் வியாபாரியிடம் பேசிக்கொண்டிருந்தபோது, வெளியூரிலிருந்து யாரும் வர அஞ்சுவதால் ஆள் கிடைக்காமல் வேலை மெதுவாகச் செல்வதாகத்தான் கூறியிருந்தார்.

கடையில் எண்ணெய் ஆட்டுவதற்கு எங்களுக்கு முன் வந்திருந்த இரு இளைஞர்கள் இருநூறு கிலோ கொப்பரை கொண்டுவந்திருந்தார்கள். மருந்திடாத காய்கள் வீட்டுப்பயன்பாட்டுக்கு, மருந்திட்ட காய்கள் தோட்டத்தில் பணிசெய்பவர்களுக்கு என்று பிரித்துவைத்திருந்தனர். அவர்களுக்கு ஆட்டிமுடிக்கவே மணி மூன்றாகிவிடும் போலிருந்தது. மகள் வேறு வீட்டில் மதிய உணவு உண்ணாமல் காத்திருப்பாள். காவல்துறைக் கெடுபிடியும் 1 மணிக்குமேல் அதிகமாக இருக்கும். என் மனைவி அந்த இளைஞர்களிடம் பேசிப் பாதியில் எங்கள் தேங்காயை ஆட்டிக்கொள்வதற்கு ஒப்புக்கொள்ளவைத்துவிட்டாள். அவர்கள் தயவில் இரண்டு மணிக்கு எங்கள் வேலை முடிந்துவிட்டது. அவர்களிருவரது உணவும் மேலும் ஒரு மணிநேரம் தாமதப்படும்.

காற்றோட்டமில்லாத அறையில் எண்ணெய் ஆட்டிக்கொண்டிருந்தவர் வெயில் தாளாமல் மயக்கம் வருவதாகக் கூறினார். நல்லவேளையாக எங்களிடம் குடுவையில் கொஞ்சம் சூடான (பாலில்லா) தேநீர் இருந்தது. குடித்துவிட்டுத் தெம்பாக வேலைசெய்தார். நித்யாவும் கூடமாட உதவிசெய்தாள். அவர் கோவையில் ஒரு பல்மருத்துவரிடம் தோட்டவேலை செய்திருக்கிறாராம். நித்யாவும் பல்மருத்துவர் என்றறிந்தவுடன் கூடுதல் பிரியத்துடன் வேலை செய்தார். கொப்பரையைச் சக்கையாகப் பிழிந்து நிறைய எண்ணெய் எடுத்தார். புண்ணாக்கை அவர்களுக்கே கொடுத்துவிட்டதால் ஆட்டுக்கூலி கிடையாது. வீடு திரும்பினோம். இனி இரண்டு மூன்று நாட்கள் எண்ணெயை இளம்வெயிலில் காயவைத்து, வடிகட்டினால் முடிந்தது. மாலையில் மழைமேகங்கள் கூடின. மின்னலும் இடியுமாக இருந்தது. ஆனால் கருமுகில்கள் தென்மேற்காய் நகர்ந்தபோது மழை வரப்போவதில்லை என்று தெரிந்தது. எப்படியோ மழைக்குமுன் ஒருவழியாக தேங்காயெண்ணெய் வேலை முடிந்தது. ஆனால், இப்பட்டத்தில் சோளம் கடலை என்று விதைத்தவர்கள் எல்லாருக்கும் பெரும் இழப்புதான். முதல் ஈரத்தில் உழவு ஓட்ட வண்டிகிடைத்தவர்கள் மட்டும் ஓரளவு பிழைத்துக்கொள்வார்கள்.

இந்த முறை தேங்காய்க் கொப்பரை காயவைக்கும்போது எப்போதுமில்லாமல் ஒரு புதிய பிரச்சனை. தவளைகள். இவ்வாண்டு ஏராளமான தவளைகள் சுற்றிக்கொண்டிருக்கின்றன. ஆங்காங்கு மூத்திரமும் மலமும் கழித்துவிடுகின்றன. ஆரம்பத்தில் நான் மகளிடம் அவளது நாய்கள்தாம் அசுத்தப்படுத்துகின்றன என்று சண்டைப்போட்டுக்கொண்டிருந்தேன். பிறகு அவள்தான் தவளைகள் அவ்வாறு செய்வதைக் கண்டுபிடித்தாள். அவளுக்குப் பிடிக்காத விலங்கினமாகத் தவளைகள் ஆகிவிட்டன. இரவு குளிக்கப்போனால் குறைந்தது பத்துத் தவளைகள் குளியலறையில் இருக்கின்றன. விரட்டுவதும் கடினம். சுவரோடு அப்பிக்கொள்கின்றன. மிகவும் விரட்டி அவை குதித்தால், இவளும் குதிக்கிறாள். அப்படியே ஒரு மூலையில் இருக்கவிட்டுக் குளித்துவரவேண்டியதுதான். வெயிலில் காயப் பரப்பிய தேங்காய்களை மழையில்லாதபோதும் இரவில் சுருட்டி வைக்கவேண்டியதாயிற்று. இல்லையெனில் தேங்காயெண்ணையோடு தவளை மூத்திரமும் கலந்தே இருக்கும் அபாயம் இருந்தது. நான்கு நாட்களும் காலையில் மறுபடியும் (எப்போதும்போல்) கடைபரப்பி, ஒவ்வொரு தேங்காய்த்துண்டாய் வெண்புறம் மேல்நோக்கித் திருப்பிவைக்கவேண்டியிருந்தது. பகலில் அணில்கள், நாய்கள், காக்கைகள், தவிட்டுக்குருவிகள் ஆகியவற்றிடமிருந்து காக்கவேண்டும். உச்சிக்குப்பின் வெயிலே பெருமளவு அந்த வேலையைச் செய்துகொண்டது.


ஊரடங்கில் ஒரு நாள்

ஏப்ரல் 23, 2020

17-4-2020

கிணற்றிலிருந்து வரும் குழாய் இணைப்பு விட்டுப்போய் இரண்டு வாரங்கள் ஆகிவிட்டன. அழைத்துப்பார்த்த குழாய்நுட்பர் [ப்ளம்பர் ] வருவதாகச் சொல்லிச்சொல்லி வரவேயில்லை. இரண்டு மழை கிடைத்ததால் நானும் அதிகம் கவலைப்படவில்லை. இப்போது ஈரம் காய்ந்துவிட்டது. வெயில் கொளுத்துகிறது. இன்றைக்கு நாமே ஒட்டிவிடலாம் என்று இரண்டு கிராமம் தள்ளியிருக்கும் கடைக்குச் சென்று குழாய் ஒட்டும் பசைவாங்கிவர நானே கிளம்பிவிட்டேன். எங்கள் ஊர் தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, நுழைவாயிலில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, எந்நேரமும் மூன்று நான்கு காவல்துறையினர் அமர்ந்திருக்கின்றனர். காரில் செல்ல வாய்ப்பில்லை. முகக்கவசம் அணியாதவர்களுக்கு ஐந்நூறு ரூபாய் அபராதம் விதிப்பதாகவும் பேச்சு.

மத்திய அரசு விதிமுறைகளைப் பின்பற்றி கைக்குட்டையையும் இரண்டு ரப்பர் வளையங்களையும் கொண்டு நானே ஒரு முகக்கவசம் செய்துகொண்டேன். சின்னதாக இருப்பினும் மூக்கு வாயினை நன்றாக மூடுகிறது.

கடை மூன்று கிலோமீட்டர் தள்ளியுள்ளது. யாருமற்ற சாலையில் முகமூடியோடு நடந்துசெல்வது வினோதமாகத்தான் இருந்தது. கிழக்கு நோக்கி நடந்துகொண்டிருந்ததால், காலை நேரத்து இளம் வெயில் முகத்தில் நேராக விழுந்தது. ஒவ்வொரு முறை மூச்சுவிடும்போதும் நான் அணிந்திருந்த கண்ணாடி ஈரமாகிக் கண்ணை மறைத்தது.

பாதிவழியில் ஒரு மரத்தடியில் புதிய சாலையோரக் காய்க்கடை முளைத்திருந்தது. நிறையக் காய்வகைகள் ஓரளவு புதிதாக இருந்தன. திரும்பும் போது வாங்கிக்கொள்வதாகச் சொல்லிவிட்டுச் சென்றேன்.

கடைக்குச் சென்றதும் ஏக வரவேற்பு. அக்கடைக்கு எதிரில் இரண்டாண்டுகள் குடியிருந்திருக்கிறோம். கடைக்காரர் ஜப்பார் (ஜாஃபர்) பொருள்கள் வாங்க வெளியில் சென்றிருந்தார். அவரது மனைவி, மக்கள், மருமக்கள் எல்லாரும் இருந்தனர். காபி வேண்டுமா தேநீர் வேண்டுமா ஜூஸ் குடியுங்கள் என்று உபச்சாரம் பலமாக இருந்தது. பழமாவது சாப்பிடுங்கள் என்றார்கள். நான் வாங்க வந்த பசை என்னவோ 16ரூபாய்தான். மகளுடைய செருப்பினை நாய்க்குட்டிகள் கடித்துப்பிய்த்துவிட்டன. ஊரடங்கின் போது செருப்பெதற்கு என்று அவை நினைத்திருக்கலாம். அவளுடைய அளவுக்கு அங்கு செருப்பும் இருந்தது. 100 ரூபாய், உங்களுக்கு எழுபதுக்குத் தருகிறேன் என்றார் கடைக்காரம்மா. அவற்றுடன் இரண்டு சோப்புகளும் வாங்கிக்கொண்டேன்.

எதிர் வீட்டில் இருப்பவர் ஊர்ஊராக நெகிழி வாளிகளையும் பிற சாமான்களையும் எடுத்துச்சென்று விற்பவர். மகன் சுவர்ச்சாயம் பூசுபவர். இருவரும் வெளியில் செல்ல வழி இல்லை. எப்படியோ சமாளிக்கிறோம் என்றார்.

வழியில் காய்கறிகள் வாங்கிக்கொண்டேன். அங்கும் எங்களிடம் படித்த பையன் துணைக்கிருந்தான். 120 ரூபாய்க்கு ஐந்தாறு நாட்களுக்குத் தேவையானவை கிடைத்தன.

வீட்டுக்கு வந்ததும் கைக்குட்டையைக் கழற்றித் துவைத்துக் காயப்போட்டபிறகுதான் இதை எந்நேரமும் அணிந்துகொண்டு பணிசெய்பவர்களின் பாடு புரிந்தது.

நாராயணனை ஐந்து நிமிட வேலைதான் என்று உதவிக்கு அழைத்துக்கொண்டு, தோட்டத்துக்குச் சென்றேன். அவரே குழாய்களை இணைத்து ஒட்டிவிட்டார். குழாய் மீண்டும் பெயர்ந்துவராமல் இருக்கக் குழிதோண்டிக் கம்பு நட்டு அணைப்புக்கொடுத்தார். ஆனால் மோட்டார் ஓட்ட வழியில்லை. மின்சாரம் ஒரு ஃபேஸ் போயிருந்தது. நாளைவரை காத்திருக்கவேண்டும்.

அவர் சென்ற பிறகு தேங்காய்களை எடுத்துப் போட்டேன். ஓரிடத்தில் கீழே விழுந்தேன். கையிலிருந்த தேங்காய் தரையில்பட்டுத் தெறித்து வாய்மீது பட்டதில், உதடு சிறிதே கிழிந்து சற்று நேரம் உதிரம் சொட்டியது. இரு நாட்களாக மகளுக்குக் காலிலும் மனைவிக்குத் தலையிலும் அடிபட்டிருந்தன.

பார்வதி நிலத்தை உழுது விதைத்திருந்த சோளம் இன்னும் பெரிதாக முளைக்கவில்லை. டிராக்டர் கிடைக்கத் தாமதமாகியிருந்தது. நிழலடியில் மட்டும் கொஞ்சம் துளிர்த்திருந்தன. பார்வதிக்கு நாலாயிரம் செலவாகியிருக்கும். இன்னொரு தூறலாவது கிடைக்காவிட்டால் கடினம்தான் என்கின்றனர்.

நாளை தேங்காய் உடைத்து எண்ணெய் ஆட்டலாம் என்றிருக்கிறோம். செக்குக் கடை திறந்துள்ளதாம். மழைக்குமுன் காயவைத்துவிடவேண்டும். காரில் எடுத்துச்செல்வதில் சிரமங்கள் இருக்கலாம். பார்ப்போம்.

மாலையில் மாபி டிக் கொஞ்சம் படித்தேன். மகள் தாகூர் சிறுகதைகள் படித்தாள். அம்மாவோடு வாழைப்பழ கேக் செய்தாள். பின்னர் திடீரென்று இந்தி கற்றுக்கொள்ளலாம் என்றாள். உயிரெழுத்துகள் சொல்லிக்கொடுத்தேன். இணையத்தில் வரிசை உச்சரிப்பு எல்லாம் மாறிமாறிச் சொல்கிறார்கள் – குறிப்பாக ஐ, ஔ, ரி அல்லது ரூ (சின்ன வயதில் க்ரூ என்று படித்த நினைவு). என்ன மொழியோ என்று கிண்டலடித்தாள். நானும் மனைவியும் இரவு முபியில் ஒரு ஜார்ஜியப் படம் [Brother] மெதுவான இணைய இணைப்பில் பார்த்தோம். அவ்வப்போது இரு காட்சிகளுக்கிடையே விழும் இடைவெளிகளில் காரோட்டும் போது சிக்னலில் உறங்குவதுபோலத் தூங்கித்தூங்கி விழித்தேன்.

அவ்வளவுதான். சொல்வதற்கு வேறொன்றும் பெரிதாக இல்லை. ஊரடங்கில் ஒரு நாள் கழிந்தது.


கொரோனா குறித்த குறிப்புகள்

மார்ச் 27, 2020

18, மார்ச், 2020

பள்ளிகளை மூடியாயிற்று. மாணவர்களுக்கு மகிழ்ச்சி. எங்கள் பயிலகத்துக்கும் மாணவர்களின் விருப்பத்துக்கு எதிராக விடுப்பு கொடுத்தாயிற்று.

ஆனால் பக்கத்து கிராமத்தில் டாஸ்மாக் கடை எப்போதும் போல் ஜெகஜோதியாய்க் காட்சியளித்தது.

இரு வாரங்கள் முன்பு, பயிலக மாணவர்கள் சிலரது வீடுகளுக்கு இரவு வகுப்பு முடிந்த பிறகு சென்றிருந்தேன். ஏனோ சில வாரங்கள் மாணவர்கள் வராமல் பயிலகம் தடைபட்டிருந்தது. அன்றுதான் வந்திருந்தார்கள். ஒவ்வொரு வீடாகச் சென்றதில் அவர்களுக்கு மகிழ்ச்சி. ஒருவனது வீட்டில், நடுக்கூடத்தில் அவன் அப்பா மல்லாந்து படுத்துக்கிடந்தார். வாசலில் நாற்காலியிட்டார்கள். அங்கேயே அமர்ந்து கொண்டேன். சத்தமில்லாமல் அந்த மாணவன் வாயிற்கதவைச் சாத்திவைத்தான். பக்கத்து வீட்டிலிருந்தோ கடையிலிருந்தோ தேனீர் கொண்டு வந்தார்கள். பிறரது தந்தையர் அன்று தெளிவாகவே இருந்தார்கள். தாங்கள் படிக்கவில்லை, பிள்ளைகளை நன்றாகப் படிக்கவைக்க வேண்டும் என்பது பற்றியே மிகுந்த அக்கறையுடன் பேசினார்கள்.

அடுத்த நாள், “அண்ணா, நேத்து எங்கப்பாவப் பார்த்தீங்களாண்ணா?” என்றான் அவன். “நேத்து ஹால்ல படுத்துட்டிருந்தாரில்ல, அவர்தானே” என்றேன் சங்கடமாக. “ஆமாங்கண்ணா. தினமும் இப்படித்தான்,” என்றான் கூச்சத்துடன். பல சமயங்களில் அவன் வீட்டில் இருந்தால் அவனது அம்மாவை அதிகமாக அடிக்கமாட்டார் என்பதாலேயே அவன் பயிலகத்துக்கு வராமல் இருந்துவிடுவதுண்டு என்று பிற மாணவர்கள் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதற்குமேல் என்ன பேச. “சரி, பரவால்ல விடு. நீ தினமும் ஒழுங்கா இங்க வந்துடு.”

சென்ற வாரம் இன்னொரு மாணவன் தனது 5 வயதுத் தங்கையையும் 6 வயது அத்தை பெண்ணையும் அழைத்து வந்திருந்தான். அவனது அம்மா இரு ஆண்டுகளுக்கு முன்பே இறந்து போயிருந்தார். அத்தை பெண் விருந்துக்கு வந்திருக்கிறாளா என்று கேட்டேன். இல்லை, இனிமேலே அத்தையும் அவரது இரண்டு குழந்தைகளும் இங்கேதான் இருக்கப்போகிறார்கள் என்றான்.
அவனது தங்கை தன் மழலை மொழியில் மேலும் விவரங்கள் தந்தாள். “அண்ணா, அண்ணா, அவங்க அப்பா தினமும் குடிச்சிட்டு வந்து அவங்க அம்மாவப் போட்டு அடிஅடின்னு அடிக்கிறாராம்மா. இந்தப் பொண்ணு ‘இனிமே எங்க அம்மாவ அடிச்சேன்னா நான் இங்க இருக்கவே மாட்டேன்’னு சொல்லிட்டா. இங்கயே வந்துட்டாங்கண்ணா. இனிமே எங்க ஸ்கூல்லதான் படிக்கப்போறா.’

சொல்லிவைத்தாற்போல், இவ்வாரமே இன்னொரு குடிக்கதையையும் கேட்க நேர்ந்தது. ‘எங்க சித்தப்பா எங்க அப்பா வேனை எடுத்துப்போயிருந்தாருங்கண்ணா. லேசா குடிச்சிருந்தாரு. எங்கயோ பலமா மோதி வேன்ல முன்பக்கமெல்லாம் உடைஞ்சு போச்சு. ஈவில்லாம இப்படிப் பண்ணிட்டாரேன்னு எங்கப்பா ரெண்டு நாளா தூங்கவே இல்ல. மில்லுக்கு எப்படி எல்லாரையும் கூட்டிட்டுப் போறது? இனிமே எங்ககூட இருக்கக் கூடாதுன்னு அவங்கள பொள்ளாச்சிக்கே அனுப்பிட்டாங்க.’ கூடவே முன்பு இங்கு வந்துகொண்டிருந்த அவர்களது குழந்தைகளும் சென்றுவிட்டனர்.

கிராமத்தில், (நண்பரின்) தோட்டத்தின் நடுவே, காற்றோட்டமான, சுவரற்ற கூடத்தில் என்ன ஆகிவிடப்போகிறது, பயிலகத்தைத் தொடர்ந்து நடத்தலாமா என்றுகூட ஒரு சபலம் எழத்தான் செய்கிறது. இங்கே வராவிட்டாலும் சிறுசிறு குழுக்களாகச் சேர்ந்துதான் விளையாடப்போகிறார்கள். எனினும், யாருக்கும் நம்மால் பாதிப்பு வந்துவிடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வு மேலோங்கி, விடுமுறை விட்டுவிட்டோம். விடுமுறை அறிவித்த பிறகும் நேற்று மாலை எல்லாரும் வந்துவிட்டார்கள். நேற்றைய வகுப்பை மட்டும் எட்டு மணிவரை நடத்திவிட்டு, இன்றுமுதல் கட்டாயம் விடுமுறை, வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள் என்று அனுப்பிவைத்தோம்.

பள்ளிகளை மூடலாம்; ஆனால் அரசுக்கும் குடிமக்களுக்கும் டாஸ்மாக் இன்றியமையாதது என்றாகிவிட்டது. குடிகாரத் தகப்பன்களோடு பல குழந்தைகள் முழுநேரமும் இருக்க நேர்ந்திருப்பதை நினைத்தால் கலக்கமாகத்தான் இருக்கிறது.

[நீண்ட பள்ளி விடுமுறையோ பயிலக விடுமுறையோ புதிதல்லதான். பெற்றோர்களின் பங்கை ஆசிரியர்களின் பங்கு விஞ்சிவிடப்போவதில்லைதான். இருப்பினும் இம்முறை இக்கட்டாய விடுப்பால், இவ்விரு வார நிகழ்வுகளால் இந்த உணர்வே மேலோங்குகிறது.

பயிலகம் வருவதை வீட்டிலிருந்து கிடைக்கும் விடுதலையாக நினைப்பவர்கள் எல்லாரும் பள்ளிகளை ஏன் அப்படிக் கருதுவதில்லை என்பதையும் சிந்திக்கவேண்டியுள்ளது.]


20-மார்ச்-2020

சுவரில் எந்த ஆணியும் அசைக்கப்படாமல் பத்திரமாக இருப்பது மகிழ்ச்சிக்குரிய செய்திதானே, மித்ர.


22-மார்ச்-2020

இன்று கிராமத்தில் இருக்கிறோம். நேற்றிரவு ஓரளவு நல்ல மழை. மின்சாரம் துண்டிக்கப்பட்டது இன்னும் வரவில்லை. இன்று இனி வரும் என்று தோன்றவில்லை. எனது கைபேசியும் மடிகணினியும் விரைவில் அணைந்துவிடும். எனது நேரலைப் பதிவுகளிலிருந்து நீங்கள் தப்பிவிடலாம்.

மழைக்குப் பின்னான அதிகாலைகள் அழகானவை. பறவைகளும் அணில்களும் ஆர்ப்பாட்டமாய் ஒலியெழுப்புகின்றன. கதிரவன் மெல்ல மேலெழுகிறான். நாங்கள் நான்கு சுவர்களுக்குள் இருக்கவேண்டியதில்லை. ஓரெட்டெடுத்து வாசலுக்கு வந்தால், சுவர்களற்ற நிலம் எங்களைச் சூழ்கிறது. நாய்க்குட்டிக்கள் பொன்னனும், பாங்கோவும் கால்மீது தொற்றுகிறார்கள். வெயிலேறியதும், விரைவில் வியர்த்துக் கொட்டப்போகிறது. மின்சாரம், மின்விசிறி இருக்கப்போவதில்லை. மாமரத்து நிழலை நாடிப்போகலாம். கொஞ்சம் படிக்கலாம்.

இன்று நாங்கள் குடியிருக்கும் தோட்டத்தில் நாராயணன் வேலைக்கு வந்துவிட்டார். அவருக்குக் காது கேட்காது; ஆனால் ஊரடங்கைப் பற்றி அறிந்திருந்தார். அதையெல்லாம் பார்த்தால் வேலையாகுமா. ஆடுமாடுகளுக்கு தீவனம் வைக்கவேண்டும். மேயவிடவேண்டும். அதிகாலையிலேயே பால் எடுக்கவருவதாக பால்க்காரர் கூறியிருக்கிறார். அதனால் காலை ஐந்து மணிக்கே வந்து, மாட்டுக்கொட்டகையில் அவரது கயிற்றுக்கட்டிலில் சிறிது நேரம் படுத்திருந்திருக்கிறார். வழியில் பொள்ளாச்சியில் இருந்து வரும் இன்னொரு விவசாயி, அவரது தோட்டித்திலிருந்து பாலெட்டுத்துச் செல்வதற்கு வரும்போது சந்தித்ததாய்க் கூறினார். ‘அவருக்கு 30 லிட்டர் பால் கிடைக்கும் – அத்தனையும் எப்படி வீணாப் போக விடறது. எடுத்துட்டுப் போய் பொள்ளாச்சில எல்லாருக்கும் ஏழு மணிக்கு முன்னாடி குடுத்துருவார்.’ கிராமத்தில் பிறருக்கு அந்த நல்வாய்ப்பு இல்லை…அவர்களது பால்க்காரர்கள் பால்கறக்க வர இயலாது என்று கூறிவிட்டார்கள். கிராமத்தில் மற்ற வீடுகளுக்குப் பாலை இலவசமாக வழங்கிவிடுவார்கள்.

நமது நற்தலைவர்கள் இந்தியாவின் பாதிக்கும் மேலானோர் இன்னும் கிராமங்களில் இருப்பதை மறந்துவிட்டார்கள். கிராமங்களுக்கென்று தனித்த அணுகுமுறைகள் தேவைப்படும். வீட்டில் குடிகாரப் மகனோடோ தந்தையோடோ அடைந்துகிடப்பதைவிட தோட்டத்தில் தனியே வேலைசெய்யும்போது நோய்த்தொற்றுக்கான வாய்ப்பு குறைவாகவே இருக்கக்கூடும்.

என் மனைவியும் எங்கள் தோட்டத்துக்கு நடந்து சென்றுவிட்டாள். மழைக்கு அடுத்த நாளை அவள் ஒருபோதும் தவறவிடவிரும்புவதில்லை – கொஞ்சம் களையெடுக்கலாம், எங்கள் தொல்லையின்றி அவளது பறவைகளோடு காலங்கழிக்கலாம். நீங்களென்னவோ நான்தான் எங்கள் வீட்டின் கலகக்காரன் என்று நினைத்திருக்கிறீர்கள்.

(இது ஊரடங்கை மீறுவதற்கான அழைப்பெல்லாம் இல்லை. எங்கள் வழியில் எங்களை நாங்கள் தனிமைப்படுத்திவிட்டோம். எல்லாரும் எச்சரிக்கையாக இருங்கள். இன்று மட்டுமன்றி, இனி வரும் வாரங்களிலும் இயன்றவரை தனித்திருங்கள். எனது எச்சரிக்கையின்மையால், கரோனாவைத் தாங்கிச்சென்றுப் பிறருக்குப் பரப்பிவிட்டால், ஒருபோதும் என்னை நான் மன்னிக்கமாட்டேன். மளிகை, காய்கறி வாங்க வெளியில் செல்லவேண்டியிருக்கும்போது, இந்த அச்சம்தான் மிகவும் தொந்தரவு செய்கிறது.)


24-மார்ச்-2020

மறுபடியுமா/மீண்டுமா/அடக் கடவுளே/once again?/not again/OMG போன்ற சொற்களும் உணர்வுகளும் இன்று எத்தனை பேர் மனதில் தோன்றின?