பேருந்துப் பயணம் 1

திசெம்பர் 11, 2016

பொதுவாக பொள்ளாச்சி-கோவை பாதையில் தனியார் பேருந்துகளில் நான் ஏறுவதில்லை. சாதாரணக் கட்டணம் வசூலிக்கும் அரசுப் பேருந்துகளாகப் பார்த்து, நடத்துனரிடம் உறுதி செய்துகொண்டுதான் ஏறுவேன். நேற்றிரவு, நேரமாகிவிட்டதாலும், சாதாரணக் கட்டண அரசுப் பேருந்து எதுவும் தயாராக இல்லாததாலும், தனியார் பேருந்தில் ஏறினேன்.

கிண்டிலில் படித்தபடியும், உரக்க ஒலித்துக் கொண்டிருந்த பாட்டுகளைக் கேட்ட படியும் பயணம் அமைந்தது. பாட்டோடு பாட்டாக குடிமகன் ஒருவன் பாடிக் கொண்டே வந்து கொண்டிருந்தான். இடையிடையே அஜித் பற்றிப் புகழாரங்கள்.

நடத்துனர் பாட்டை நிறுத்தினார். அஜித் பாட்டு ஒன்றைப் போடச் சொல்லிக் கேட்டான். பதில் வராததால், அவனே பாடத் தொடங்கினான். பின் இருக்கையில் அமர்ந்து கொண்டு என் இருக்கை மீது அவன் தாளம் போட்டது, கிண்டிலில் படிப்பதற்கு இடையூறாக இருந்தது.

‘தல பத்தி யாராவது தப்பா பேசினா, மொட்டைத் தலையில குட்டு வைச்சுருவேன்,’ என்று ஒரு வசனம் சொல்கிற வரை யாரும் அவனைக் கண்டுகொள்ளவில்லை.

மொட்டை அடித்திருந்த இளைஞன் ஒருவன் தன் நண்பனோடு வந்திருந்தான். சந்தனம் பூசியிருந்த மொட்டைத் தலையைச் சுற்றி ஒரு துணி கட்டியிருந்தான். வேகமாக எழுந்து வந்து,
‘நானும் பார்த்துக்கிட்டே இருக்கேன். சத்தம் போட்டுகிட்டே வந்துட்டிருக்க. வாயைப் பொத்திகிட்டு உக்காரு,’ என்று கையை ஓங்கினான்.

குடிமகன், ‘பாஸ், நானும் மதுரதான். என்னை அடிச்சுருவியா,’ என்றான் விடாப்பிடியாக. இருவரும் வாட்ட சாட்டமான இளைஞர்கள்.

மார்பின் மீது ஒரு அடி விழுந்தது. இளைஞனின் நண்பன் தடுத்து அவனை இழுத்துச் சென்றுவிட்டான்.

குடிமகன் கொஞ்ச நேரம் புலம்பிக் கொண்டும் பொருமிக் கொண்டும் அமர்ந்திருந்தான்.

உக்கடம் நெருங்கும் போது, எழுந்து லுங்கியை இறுக்கிக் கட்டியபடி சென்று, ‘என்னை அடிச்சுட்ட இல்ல. கீழ எறங்குடா..ஒத்தைக்கு ஒத்தை பார்த்துடலாம்,’ என்றான் வீறாப்பாக.

மொட்டை இளைஞனும் வேகமாக எழுந்து, ‘எறங்கு பாத்துறலாம்,’ என்றான்.

குடிமகனின் வலது கண்ணில் ஒரு சொட்டுக் கண்ணீர் துளிர்த்தது.நரம்புகள் புடைத்து நின்ற வலுவான வலது கையால் துடைத்துக்கொண்டே,
‘நான் அடிக்க வேண்டாம்னு சொல்லல. என்னை ஏன் பாஸ் அடிச்சீங்க?’ என்று கேட்டுவிட்டு இறங்கிச் சென்றான்.