க.மு.நடராஜன்: வரலாற்றுடன் ஒரு வாழ்க்கைப் பயணம்

ஓகஸ்ட் 25, 2021

(2021 ஜூலை மாதக் காலச்சுவடு இதழில் வெளிவந்த அஞ்சலிக் கட்டுரை)

உலக அளவில் க.மு.நடராஜன் என்ற பெயரை அறியாத காந்தியர்களைக் காண்பது அரிது. ஆனால் சர்வோதய இயக்கத்துக்கு வெளியில் அதிகம் அறியப்படாமலே மறைந்த பெரும் ஆளுமை அவர். தமிழ்நாட்டில் கொரோனாக்காலத்தில் ஏற்பட்ட பேரிழப்புகளில் ஒன்று அண்மையில் நேர்ந்த அவரது திடீர் மரணம். 88 வயதிலும் அவர் சுமந்துகொண்டிருந்த பொறுப்புகள் ஏராளம். காந்தியையும் காந்தியத்தையும் காந்தியின் மறைவுக்குப் பிறகு உயிர்ப்புடன் வைத்திருந்து 21ம் நூற்றாண்டுக்குக் கடத்திவந்த காந்திய ஊழியர்களின் முதல் வரிசையில் நின்றவர் அவர். கே.எம். அண்ணாச்சி என்று மிகுந்த அன்புடன் சர்வோதய இயக்கத்தினரால் அழைக்கப்பட்டார். முதல் தலைமுறை காந்தியர்களுக்கும் அவர்களது நேரடிச் செயல்பாட்டினை அறியாத அடுத்தடுத்த தலைமுறையினருக்கும் அவர் ஒரு பாலமாகத் திகழ்ந்தார்.

க.மு.நடராஜன் ஒரு மிகப்பெரிய செயல்பாட்டாளராகவும் அதே நேரத்தில் தேர்ந்த அறிஞராகவும் இருந்தவர். அவர் மதுரை காந்தி அருங்காட்சியகம், தமிழ்நாடு சர்வோதய மண்டல், அனைந்திந்திய காந்தி நினைவு நிதி, சர்வ சேவா சங்கம், சர்வோதய இலக்கியப் பண்ணை ஆகிய நிறுவனங்களில் தலைமைப் பொறுப்புகள் வகித்தார். சர்வோதய இலக்கியப் பண்ணை, காந்திய இலக்கிய சங்கம் ஆகிய பதிப்பகங்களின் மூலம் பல முக்கியமான காந்திய நூல்களைப் பதிப்பித்திருக்கிறார். சர்வோதயம் மலர்கிறது, கிராம ராஜ்ஜியம் ஆகிய இதழ்களுக்கும், Sarvodaya Talisman என்ற ஆங்கிய இதழுக்கும் ஆசிரியராக இருந்தார். இறுதிவரை அவரது நேரடிப் பங்களிப்பில் வெளிவந்த இந்த மூன்று இதழ்களும் காந்தியக் கருத்துகளையும் சரித்திரத்தையும் காந்திய நோக்கில் சமகால விமர்சனங்களையும் தொடர்ந்து தாங்கி வரும் முதன்மையான காந்திய இதழ்களாக உருவெடுத்தன.

கிருஷ்ணம்மாள்-ஜெகந்நாதன் தம்பதியினரின் பல்லாண்டுகாலப் பணிகளுக்கு நடராஜன் உற்ற துணையாக இருந்தார். 1950ம் ஆண்டில் ஜெகந்நாதனின் கரம் பிடித்தே அவர் பொது வாழ்வுக்கு வந்தார். அதற்கு முன்பாகவே அவர் காந்தியால் ஈர்க்கப்பட்டிருந்தார். காந்தி 1946ம் ஆண்டு கடைசிமுறையாகத் தமிழ்நாடு வந்தபோது, மதுரையில் கூடியிருந்த பெருந்திரளான கூட்டத்தில் சிவகங்கையிலிருந்து வந்திருந்த நடராஜனும் இருந்தார். கூட்டத்தில் கட்டுக்கடங்காத சலசலப்பு ஏற்பட்டதால் காந்தி அன்று பேசவில்லை. மேடையிலிருந்த தலைவர்கள் பதின்மவயது நடராஜனுக்குச் சிறு புள்ளிகளாகவே தெரிந்ததாகக் கூறிவார். அடுத்தநாள் ஒரு கடையின் மேல்மாடியிலிருந்தும் காந்தியைப் பார்த்திருக்கிறார். அதுவே அவருக்குச் சமூகப் பணியில் ஈடுபடவேண்டும் என்ற வேகத்தை ஏற்படுத்தப் போதுமானதாக இருந்திருக்கிறது. மதுரையில் அருணா அஸப் அலியுடைய உரையாலும் உந்துதல் பெற்றிருக்கிறார்.

பள்ளிப்படிப்பு முடித்தவுடனேயே காந்திகிராமப் பல்கலைக்கழக வளாகத்தையொட்டியுள்ள ஊழியரகத்தில் ஜெகந்நாதன் ஒருங்கிணைத்திருந்த கோடைக்காலப் பயிற்சி முகாம் நடந்தது. அதில் ஜே.சி. குமரப்பா ஒருவாரம் தங்கியிருந்து பயிற்றுவித்திருக்கிறார். ரவீந்திர வர்மா, ஆச்சார்ய கிருபளாணி, வங்க முதல்வராக இருந்த பி.சி.கோஷ் போன்றவர்களெல்லாம் வகுப்பெடுத்திருக்கிறார்கள். அப்போதே குமரப்பாவின் உரைகளைத் தொகுத்து ‘உழவும் தொழிலும்’ என்ற இதழில் நடராஜன் எழுதியிருக்கிறார். பிறகு கல்லூரியில் சேர்ந்து இண்டர்மீடியட் முடித்துவிட்டு மீண்டும் ஜெகந்நாதனிடமே சேர்ந்துவிட்டார். அச்சமயம் அவருக்குக் கிடைத்த அரசு வேலையை உதறிவிட்டார். 2021ம் ஆண்டுக்கான சர்வோதயா-ஜெகந்நாதன் விருது நடராஜனுக்கு வழங்கப்பட்டது. அவ்விருதினை ஏற்றுப் பேசும்போது, “ஜெகந்நாதனை நம்பிப் போகாதே, அரசுவேலையில போயிச் சேரு; இதுலதான் ஜாப் செக்யூரிட்டி இருக்குன்னாக. இப்ப எனக்கு 89 வயதாகுது. இப்பவும் எனக்கு ஜாப் செக்யூரிட்டி இருக்கு, ஜெகந்நாதனோட சேர்ந்ததால,” என்றார். பிறிதொரு முறை கோடை வானொலிக்கு அளித்த நேர்காணலில், அரசு வேலையை உதறியதால், உலகெங்கும் உள்ள பல காந்தியர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததாகக் கூறினார்.

வினோபா பாவேயின் பூமிதான இயக்கம் தமிழகத்தில் தொடங்கிய காலம் முதலே நடராஜன் அதில் முக்கிய பங்காற்றினார். வினோபா தெலுங்கானாவில் பூமிதான யாத்திரையைத் தொடங்கிய உடனேயே அவருடன் ஜெகந்நாதன் நான்கைந்து மாதங்கள் நடந்திருக்கிறார். பிறகு தமிழ்நாட்டிலும் பூமிதான இயக்கத்தைத் தொடங்குவதற்காகச் சிவகங்கையில் ஒரு மாநாடு நடத்தியிருக்கிறார். அதற்கு அவினாசிலிங்கம் செட்டியார், ஓ.பி. ராமசாமி ரெட்டியார், சர்தார் வேதரத்தினம், சங்கர் ராவ் தியோ போன்ற காந்தியத் தலைவர்கள் வந்திருந்தனர். நடராஜன் அந்த மாநாட்டை நடத்தும் பணியில் ஈடுபட்டிருக்கிறார். பிறகு ராமேசுவரம் தனுஷ்கோடியிலிருந்து சங்கர் ராவ் தியோ தலைமையில் பூமிதான யாத்திரை தொடங்கியிருக்கிறது. அதிலும் இவர் கலந்துகொண்டிருக்கிறார். “எம்.ஜி.சங்கர ரெட்டியார் என்பவர் நாங்குநேரி பகுதியிலிருந்து 150 ஏக்கர் நிலத்தைத் தானமாக அளித்தார். அதைத்தொடர்ந்து ராமநாதபுரம் ராஜா 1000 ஏக்கர் கொடுத்தார்,” என்றும் நடராஜன் குறிப்பிட்டிருக்கிறார். தமிழ்நாட்டில் 26000 ஏக்கர் நிலம் கிடைத்ததாகவும், அவற்றில் பெரும்பங்கு நிலத்தை வேளாண்மைக்கு ஏற்றவாறு செப்பனிடும் பணிகளைச் செய்து கொடுத்தனர் என்றும் கூறியுள்ளார். 1956ல் வினோபா தமிழ்நாட்டுக்கு வந்தபோது பூமிதானம் பெறுவதை நிறுத்திவிட்டு கிராமதானம் கேட்கத்தொடங்கியிருந்தார். பீகாருக்கு அடுத்தபடியாகத் தமிழ்நாட்டில்தான் அதிகமாக கிராமதானம் நிகழ்ந்திருக்கிறது. காமராஜர் ஆட்சியிலிருந்த போது பூமிதான-கிராமதான இயக்கத்துக்குப் பெரும் ஆதரவாக இருந்திருக்கிறார். பின்னர் வந்த அரசுகள் அதிக அக்கறை காட்டவில்லையென்றும் நடராஜன் கூறுவார்.

ஜெகந்நாதன் பூமிதான இயக்கத்தோடு நின்றுவிடவில்லை. பல நிலவுரிமைப் போராட்டங்களிலும் ஈடுபட்டார். வலிவலம், விளாம்பட்டி போன்ற இடங்களில் கோயில் நிலங்கள் சரியான முறையில் குத்தகைக்கு விடப்படாமல் சில தனிநபர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதைக்கண்டு சத்தியாகிரகம் நடத்தியிருக்கிறார். வினோபாவுக்கு இப்படியான சத்தியாகிரகங்களில் முழு உடன்பாடு இல்லாதபோதும் ஜெகந்நாதனின் பொருட்டு இவற்றை அரைமனதுடன் அனுமதித்திருக்கிறார். ‘Gentle, gentler, gentlest’ ஆக சத்தியாகிரகங்கள் இருக்கவேண்டும் என்றிருக்கிறார். இப்போராட்டங்களின்போது நடராஜன் பல்வேறு பொறுப்புகளை ஏற்றிருக்கிறார். கூட்டங்களில் பேசுமாறு ஜெகந்நாதன் நடராஜனை மட்டுமே அனுமதிப்பாராம். ‘ஆள வையக்கூடாது. ஒழுங்கா அந்தப் பிரச்சனைய மட்டும் சொல்லணும்,’ என்று இருவரும் கவனமாக இருப்பார்கள். அமைச்சர்களுக்கும், பிற தலைவர்களுக்கும் கடிதங்கள் எழுதுவது, நாளிதழ்களுக்கு அறிக்கைகள் வழங்குவது, பல ஊர்களில் இருந்து சத்தியாகிரகிகளை ஒருங்கிணைத்து வரவழைப்பது என்று பல பணிகளையும் நடராஜனே செய்துவந்ததாக அவருடன் 60 ஆண்டுகாலம் பணியாற்றியுள்ள வாடிப்பட்டி சுந்தரராஜன் நினைவுகூர்கிறார்.

வடபாதிமங்கலத்தில் இருந்த ஒரு கரும்பு ஆலை செயல்படாமலிருந்து அதற்குச் சேர்ந்த 4000 ஏக்கர் நிலம் சும்மா கிடந்ததை எதிர்த்துப் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். போராட்டம் வெற்றிபெற்று, 4000 குடும்பங்களுக்கு அந்நிலத்தைப் பிரித்தளித்திருக்கின்றனர். நடராஜன் ஜெகந்நாதனுடன் சேர்ந்து 60களிலும், பிறகு 80களிலும் கிராம சுயராச்சிய பாத யாத்திரை மேற்கொண்டிருக்கிறார். எஸ்.ஆர்.சுப்பிரமணியம் நடத்திய மதுவிலக்கு யாத்திரையிலும் கலந்துகொண்டிருக்கிறார். ஜெகந்நாதன் தலைமையில் மதுவிலக்கு சத்தியாகிரகத்தையும் ஒருங்கிணைத்திருக்கிறார். தினமும் 100 பேர் மதுக்கடைகள் முன்னர் மறியல் செய்வார்கள் என்று தில்லி காந்தி அருங்காட்சியக இயக்குநர் அ.அண்ணாமலை கூறுகிறார்.

இந்திரா காந்தி கொணர்ந்த அவசரநிலைக் காலத்தில் ஜெகந்நாதன், நடராஜன் ஆகியோர் ஜெயப்பிரக்காஷ் நாராயணனின் தலைமையை ஏற்று அவருடன் இணைந்திருந்தனர். திமுக ஆட்சி கலைக்கப்பட்டு திமுக தலைவர்கள் சிறைப்படுத்தப்பட்டபோது ஜெகந்நாதனும் கைது செய்யப்பட்டார். வெளியிலிருந்து பல்வேறு ஒருங்கிணைப்புப் பணிகளையும், வடக்கிலிருந்து தமிழ்நாடு வந்திருந்த பலரையும் பாதுகாப்பாகத் தங்கவைக்கும் பணியையும் நடராஜன் செய்திருக்கிறார்.

1990களில் நாகப்பட்டினம் பகுதியில் இறால் பண்ணைகள் பெரும் சுற்றுச்சூழல் கேட்டையும் வேலைவாய்ப்பிழப்பையும் ஏற்படுத்துவதைக் கண்டு ஜெகந்நாதன் இறால் பண்ணைகளுக்கெதிராகப் போராடத் தொடங்கினார். அப்போதும் 90 வயதினை நெருங்கிக்கொண்டிருந்த ஜெகந்நாதன் உண்ணாவிரதம் இருந்து கைது செய்யப்பட்டார். பிறகு உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் பெண்களைத் திரட்டிப் போராட்டம் நடத்தினார். இறால் பண்ணைகளின் கேடுகள் குறித்த தகவல்களைத் திரட்டுவது முதல் பல்வேறு பணிகளையும் நடராஜன் உடனிருந்து செய்தார். உச்சநீதிமன்றம் 1996ல் இறால் பண்ணைகளுக்கெதிரான தீர்ப்பினை வழங்கியது. ஆனால் அத்தீர்ப்பை மழுங்கடிக்கும் மசோதா ஒன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படலாம் என்றறிந்த ஜெகந்நாதன் தில்லியில் காந்தி சமாதி முன்னர் மீண்டும் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். அப்போதும் அவருக்குத் துணையாக நடராஜன் இருந்தார். அரசு தரப்பிலிருந்து உறுதிகள் பெற்றபிறகே உண்ணாவிரதம் கைவிடப்பட்டது. ஆனால் அதன்பிறகும் அத்தீர்ப்பைச் செயல்படுத்துவதில் அரசுகள் மெத்தனமாகவே இருந்தன.

நடராஜன் இப்படியான பல்வேறு வரலாற்று நிகழ்வுகளின் போது அவற்றுக்குச் சாட்சியமாகவும் அவற்றை நிகழ்த்துபவராகவும் இருந்திருக்கிறார். அவருடைய அற்புதமான நினைவாற்றலும் பேச்சுத்திறனும் அவரை ஒரு வரலாற்றுப் பெட்டகமாக மாற்றியிருந்தன. சுதந்திர இந்தியாவின் பெரும்பாலான தலைவர்களைக் குறித்தும் நிகழ்வுகளைக் குறித்தும் கூறுவதற்கு அவரிடம் எப்போதும் ஏதேனும் தனிப்பட்ட செய்திகள் இருந்தன. வினோபாவோடும், ஜெயப்பிரக்காஷ் நாராயணனோடும் பயணம் செய்திருக்கிறார். அவர்களுடைய உரைகளை மொழிபெயர்த்திருக்கிறார்.

வினோபா திருவாசகத்துக்கு எப்போதும் உருகுவார் என்பார். பல இடங்களில் திருக்குறளிலிருந்தும் திருவாசகத்திலிருந்தும் வினோபா தமிழிலேயே மேற்கோள் காட்டிப் பேசுவார். கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனையும் வினோபா பார்க்கும் போதெல்லாம் ‘முத்தி நெறி அறியாத’ என்ற அச்சோ பதிகத்தைப் பாடச் சொல்வார். கோவை அருகில் வினோபா பேசவிருந்த ஒரு கூட்டத்தில் தலித் மக்கள் வெகுதொலைவில் தனியே கூடியிருந்ததைக் கண்டித்து, எல்லாரும் ஒன்றாக அமர்ந்தால்தான் பேசுவேன் என்று கூறிவிட்டாராம். பிறகு அனைவரும் ஒன்றாகக் கூடியபிறகே பேசியிருக்கிறார். ராமச்சந்திர குகா வினோபா மீது வைத்த கடுமையான விமர்சனங்களுக்கு மறுப்பாக நடராஜன் இந்நிகழ்வை முன்வைப்பார். அமெரிக்காவிலிருந்து இந்தியாவில் குடியேறி, ஜெகந்நாதனுடன் சேர்ந்து ஊழியரகத்தைத் தன் கைகளால் கட்டிய ரால்ப் ரிச்சர்ட் கெய்த்தானுடைய வாழ்க்கையை ஆய்வுசெய்துகொண்டிருக்கும் ராமச்சந்திர குகா நடராஜனை நேரில் சந்தித்தார். அப்போது வினோபா குறித்த கருத்துகளை குகா மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று கூறியதாக நடராஜன் சொல்வார். குகா நடராஜனுக்குச் சிறப்பானதொரு சிறு அஞ்சலிக் குறிப்பை எழுதியுள்ளார். அதில் நடராஜனுக்கு கிரிக்கெட்டின் மீதிருந்த ஆர்வத்தைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். கிரிக்கெட் பற்றிய ஒரு புத்தகத்தையும் நடராஜன் பதிப்பித்திருப்பதாகவும், அதைத் தனக்கு அன்பளிப்பாக வழங்கியதாகவும் எழுதினார். இந்த கிரிக்கெட் ஆர்வம் அவரோடு நெருங்கிப் பழகிய பலருக்குமே (நான் உட்பட) புதிய செய்தியாக இருந்தது.

நடராஜனைப் பற்றிய தனது அஞ்சலிக் கட்டுரையில், அமெரிக்கப் பேராசிரியர் டேவிட் ப்ளேக் வில்லிஸ் 1977ல் கெய்த்தான் மூலமாகத்தான் நடராஜனை முதன்முதலாகச் சந்தித்ததாகக் கூறுகிறார். அந்த உறவு இறுதிவிரை நீடித்தது. ’சர்வோதயா என்றாலே எனக்கு அண்ணாச்சிதான். அமைதி, திடம், கனிவு,’ என்கிறார் டேவிட். அவரது ஜப்பானிய-அமெரிக்க மனைவி மிக்கா ஓபயாஷி, ‘களிப்பு மின்னும் கண்களோடும் புன்னகையோடும் அவர் அமர்ந்திருப்பதே என் நினைவிலிருக்கும்,’ என்கிறார்.

காமராஜருக்கு ஜெகந்நாதன் மீது மிகுந்த நம்பிக்கை உண்டு என்பார் நடராஜன். ஜெகந்நாதன் காமராஜரிடம் சென்று நிலப்பிரச்சனை தொடர்பாகப் பேசிவிட்டு, சத்தியாகிரகம் செய்யப்போவதாகக் கூறினால், ‘நீங்க சத்தியாகிரகம் செய்யுங்க. எங்க அப்பன் சத்தியாகிரகம் செஞ்சாலும் பிடிச்சு ஜெயில்ல போட்டுறுவேன்,’ என்பாராம் காமராஜர். ஆனால் அவர் காங்கிரசு செயற்குழுவின் தலைவராகப் போனபிறகு இவர்கள் போராட்டம் செய்தபோது, கூட்டத்திலேயே வந்து, ‘என்னய்யா, எழுநூறு பேரு ஜெயிலுக்குப் போயிருக்கான். பேசாம இருக்கீங்க. யாரையாவது அனுப்பி சமரசம் பண்ணுங்கய்யா,’ என்றிருக்கிறார். அதன் விளைவாகத்தான் விளாம்பட்டி சத்தியாகிரகத்தில் கக்கன் வந்து சமரசம் செய்து போராட்டத்தை முடித்துவைத்திருக்கிறார்.

திருநெல்வேலியில் ஜெகந்நாதன் நடத்திய ஒரு போராட்டத்துக்கு வந்த ஜே.சி.குமரப்பாவை ‘கதர்ச் சட்டை போட்ட கம்யூனிஸ்டு’ என்று குறிப்பிட்டு நிலக்கிழார்கள் அப்போது உள்துறை அமைச்சராக இருந்த வல்லபாய் படேலுக்குப் புகார்க் கடிதம் எழுதினார்கள். அக்கடிதத்தைப் படேல் குமரப்பாவிடமே விளையாட்டாகப் பகிர்ந்து கொண்டதாக நடராஜன் கூறினார். குமரப்பாவுக்கும் நேருவுக்கும் பொருளாதார அடிப்படையில் நேர்எதிரான கருத்துகள் இருந்தன என்பார். திட்டக்குழுக் கூட்டத்துக்கு குமரப்பா மாட்டுவண்டியில் போக முயன்ற கதையையும் சொல்வார். ‘விவசாயிகள் வாழக்கூடிய இந்த நாட்டில் மாட்டு வண்டியை அனுமதிக்க மாட்டேன்னு சொல்லலாமா?’ என்று கேட்டதற்கு, நேரு, ‘ராணுவ வண்டிகள் வரக்கூடிய சாலையில் மாட்டுவண்டிகளுக்கு விபத்து நேர்ந்துவிடும்,’ என்று பதில் சொன்னதாகவும், அதற்கு குமரப்பா, ‘விபத்தை ஏற்படுத்துபவனை விட்டு ஏன் பாதிக்கப்படுகிறவனைத் தடுக்கவேண்டும்,’ என்று கேட்டார் என்பார். குமரப்பாவின் பேச்சுத்தமிழ் மழலைத் தமிழ் போல இருக்கும் என்றும் சொல்வார். காந்திகிராம அறக்கட்டளை அலுவலகத்தின் எதிரில்தான் கிருஷ்ணம்மாள்-ஜெகந்நாதன் திருமணம் நடைபெற்றது. சௌந்தரம், ஜி.ராமச்சந்திரன், குமரப்பா, கெய்த்தான் ஆகியோர் உடனிருந்தனர். கெய்த்தான் இருவருக்கும் சேர்த்து ஒரு கதர் சிட்டம் செய்து அவர்களது கழுத்துகளைச் சுற்றிப் போட்டார். குமரப்பா முதுகில் ஓங்கி அடித்துத் தன் ஆசிகளைத் தந்தார் என்றார் நடராஜன். அப்போது மாணவர் சேவாதளத்தின் பிரதினிதியாகச் சென்றிருந்த நடராஜன் ஒரு வாழ்த்து மடலைப் படித்திருக்கிறார்.

நடராஜனுக்கு இவான் இலிச், E.F. ஷூமேக்கர், மார்க் லிண்ட்லே, ராமச்சந்திர குகா போன்ற பல்வேறு அறிஞர்களுடன் வெவ்வேறு தருணங்களில் பழகும் வாய்ப்புக்கிட்டியது. உலகின் பல நாடுகளுக்கும் பயணம் செய்து அங்குள்ள காந்தியச் சோதனைகளைக் கண்டிருக்கிறார். பல மாற்றுக்கருத்துகள் கொண்டவர்களுடனும் சிறந்த நட்பிலிருந்தார். ருசிய இலக்கியங்களை மொழிபெயர்த்த நா.தர்மராஜன் இவரது நெருங்கிய நண்பர். கீழை மார்க்சிய அறிஞர் எஸ்.என்.நாகராசனுடனும் அடிக்கடி உரையாடுவார். பூமிதான இயக்க காலத்திலேயே கம்யூனிஸ்டு தலைவர் ஜீவானந்தத்தைப் பேசுவதற்கு அழைத்திருக்கிறார். நல்லக்கண்ணுவோடும் நெருங்கிய தொடர்பு உண்டு.

ஈரோடு ஜீவா, பாவண்ணன் போன்றோரை சர்வோதயம் மலர்கிறது இதழில் தொடர்ந்து எழுதவைத்தார். என்னையும் எப்போதும் எழுதுவதற்கு ஊக்கம் கொடுத்துக்கொண்டே இருப்பார். பிற செயல்களில் திசைமாறி நான் எழுதவதாகக் கூறிய ஏதேனும் கட்டுரையை எழுதாமல் காலம் கடத்திக்கொண்டிருந்தால், சிறிதும் கடிந்துகொள்ளாமல் தொடர்ந்து பொறுமையாக நினைவுபடுத்துவார். நல்ல நூல்களைச் சட்டென்று அடையாளம் கண்டுகொள்ளும் ஆற்றல் அவருக்கிருந்தது. அவற்றை வாங்கி அனுப்பி அவற்றுக்கான விமர்சனங்களை எழுதச் சொல்வார்.

சமூகச் செயல்பாட்டில் முழுமையாக ஈடுபட்டுவிட்டதால் இலக்கியமெல்லாம் அவர் விரும்பிய அளவு தீவிரமாகப் படிப்பதற்கு நேரமில்லாமல் போய்விட்டது என்பார். ஜெயகாந்தன் போன்றவர்களால் ஈர்க்கப்பட்டாலும் அவர் குடிப்பழக்கத்தை நியாயப்படுத்திப் பேசியது தனக்கு உவப்பாக இல்லை என்பார். இலக்கியவாதிகள் தனிவாழ்விலும் அறத்தைப் பேணவேண்டும் என்று கருதினார். ஜி.நாகராஜன் அவரது நெருங்கிய நண்பராக இருந்தார் என்ற சுவையான செய்தியைப் பாமயன் எழுதியுள்ளார். நடராஜன் விரும்பியவண்ணம் இலக்கியம் பயிலாவிட்டாலும் இருமொழிகளிலும் சிறப்பான தேர்ச்சி பெற்றிருந்தார். சொல்ல வந்த கருத்துகளை – எழுத்திலாகட்டும், பேச்சிலாகட்டும – மிகத் தெளிவாகவும், எளிமையாகவும், சுவையாகவும் கூறும் ஆற்றல் அவருக்கிருந்தது.

காந்தியப் பொருளாதாரத்திலும், கிராம சுயாட்சியிலும் நடராஜன் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார். அவற்றுக்கெதிரான போக்குகளைக் கடுமையாக விமர்சித்துப் பேசியும் எழுதியும் வந்தார். இன்றைய சூழலியல் சிக்கல்களுக்கு பரவலாக்கப்பட்ட அதிகாரமும், உற்பத்தி முறைகளும், வேலைவாய்ப்புகளும் அவசியம் என்று கருதினார். மதச்சார்பின்மையை வலியுறுத்தியும் அரசின் பல நடவடிக்கைகளைக் கண்டித்தும் பல தலையங்கங்களையும் கட்டுரைகளையும் எழுதினார்.

2012ம் ஆண்டு மதுரையில் நாராயண் தேசாயின் ‘காந்தி கதா’ நிகழ்வு நடக்கவிருப்பதாகத் தெரிந்தவுடன் சென்னையிலிருந்து மதுரைக்குக் கிளம்பிச் சென்றேன். நாராயண் தேசாய் காந்தியின் அணுக்கச் செயலாளராக இருந்த மகாதேவ் தேசாயின் மகன். காந்தியின் கண்பார்வையில் வளர்ந்த அனுபவங்களை அழகாகப் பதிவு செய்தவர். எனவே அந்நிகழ்ச்சியைத் தவறவிடக் கூடாது என்று நினைத்தேன். அங்குதான் க.மு.நடராஜன் அவர்களை முதன்முறையாகச் சந்தித்தேன். அந்த ஐந்து நாள் உரையை அவர்தான் ஒருங்கிணைத்திருந்தார். நாராயண் தேசாயிடம் நேர்காணல் செய்வதற்கான அனுமதியை அவரிடம்தான் பெற்றேன். ஆனால், அப்போது நடராஜனைப் பற்றி நான் எதுவும் அறிந்திருக்கவில்லை. ஒரு நீண்ட நெருங்கிய உறவு அன்று தொடங்கவிருக்கிறது என்பதையும் நான் அப்போது உணரவில்லை. முதலில் காந்தி-இன்று தளத்தில் அந்த நேர்காணல் வெளிவந்தது. பிறகு நண்பர்கள் சுனில் கிருஷ்ணன், ராட்டை ரகு ஆகியோர் அந்த நேர்காணலையும் சுனிலின் கட்டுரையையும் நடராஜனிடம் பகிர்ந்துகொண்டபோது, உடனே அதை சர்வோதய இலக்கியப் பண்ணை வெளியீடாக தமிழிலும் ஆங்கிலத்திலும் நூல்வடிவம் கொடுத்துப் பதிப்பித்தார். அப்போதுதான் அவரோடு எனது பழக்கம் முறையாகத் தொடங்கியது. ஒருவகையில் இந்த அனுபவமே எனக்கு அவரைப்பற்றி முழுமையாகப் புரிந்து கொள்வதற்கான வாய்ப்பாகவும் அமைந்தது. காந்தியின் மீது ஆர்வம் கொண்டவர்களை சர்வோதய இயக்கத்தோடுப் பிணைப்பதற்குக் கிடைக்கும் வாய்ப்பை அவர் தவறவிடுவதில்லை என்பதை உணர்ந்தேன். காந்தியப் பணியைச் செய்யக்கிட்டும் எந்த வாய்ப்பையும் அவர் தேடிப்போய்ப் பற்றிக்கொள்வார் என்பதையும் அறிந்தேன். முதலில் நாராயண் தேசாயின் காந்தி கதா கூடங்குளம் போராட்டக் குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அந்நிகழ்ச்சி அங்கு நடைபெற முடியாத சூழல் ஏற்பட்டதை அறிந்தவுடன், உடனே அவரை அணுகி மிகக்குறுகிய காலத்தில் மதுரை காந்தி அருங்காட்சியக வளாகத்தில் அந்நிகழ்ச்சி நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை நடராஜன் செய்தார். பலவகைகளில் இந்நிகழ்ச்சியின் மூலமாகக் கிடைத்த தொடர்புகளும், அனுபவங்களும் எனது வாழ்க்கையைப் புரட்டிப்போட்டு வேறு தடத்தில் செலுத்தக்கூடியவையாக மாறின. அந்த மாற்றத்தின்போது எனக்கும் என் குடும்பத்தினருக்கும் ஊக்கம் தருபவராகவும் வழிகாட்டுபவராகவும் நடராஜன் இருந்தார். அவரது எழுபதாண்டுகால காந்தியப் பணியில் இப்படி எண்ணற்ற நிகழ்ச்சிகளை அவருடன் தொடர்பில் வந்த ஒவ்வொருவராலும் நினைவுகூர முடியும்.

கடந்த சில ஆண்டுகளாக என்னோடு வாரமொருமுறையேனும் பேசாமலிருக்கமாட்டார். ஒவ்வொரு முறையும் ஒருமணிநேரமாவது பேசுவார். என்னைவிட இருமடங்கு வயதும் பன்மடங்கு அனுபவமும் அவருக்கு இருந்தாலும் என்னோடு ஒரு இணைநண்பனாகவே பழகினார். நான் அண்மைக் காலங்களில் அதிகம் உரையாடியது அவருடன்தான். அதிலும் கடந்த ஓராண்டாக இருந்த பொதுமுடக்கத்தின் போது கிராமத்திலுள்ள நான் சோர்ந்து போய்விடக்கூடாது என்பதில் கருத்தாக இருந்தார். எனது அப்பாவை முதுமையின் தனிமை தீண்டாமல் அடிக்கடி போய் பார்த்துக்கொள்ளும்படி அறிவுறுத்துவார். கபசுரக்குடிநீர் கிடைத்ததா என்று கேட்டு இல்லை என்றபோது மதுரையிலிருந்து கபசுரக்குடிநீர்த் தூளும் பிற மருந்துகளும் அனுப்பிவைத்தார்.

இப்படியான அனுபவங்களை அவரது அஞ்சலிக் கூட்டங்களில் ஒவ்வொருவரும் பகிர்ந்துகொண்டனர். ஒவ்வொருவரும் தம்மீது அவர் தனிக்கவனமும் தனிப்பிரியமும் வைத்திருந்ததாக எண்ணியிருந்தனர். எல்லோருடனும் தனித்துவமான உறவை அவரால் பேணமுடிந்தது. ஒரு கூட்டம் முடியும்வரை கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் தொடர்ந்து கண்ணீர் சொரிந்தபடியே அமர்ந்திருந்தார். அவர்களது நீண்ட நெடிய சமூகப்பயணத்தில் நடராஜன் எத்தனை உற்ற துணையாக இருந்திருக்கிறார் என்பதற்கு நாம் எழுதக்கூடிய எந்த சொற்களையும் விட அந்தக் கண்ணீரே சான்றாகியது.

பல சர்வோதய நிறுவனங்களுக்குத் தலைவராகவும் இருந்து, இரண்டு இதழ்களைத் தொடங்கி, மூன்று இதழ்களுக்கு ஆசிரியராக இருந்து தொடர்ந்து நடத்தியதென்பது ஓர் அரிய சாதனை. அதனை எண்பத்தெட்டு வயதுவரை அவர் செய்துவந்தார் என்பது அவருக்கு காந்தியத்தின் மீதிருந்த ஈடுபாட்டையும், நிறைவாழ்வு வாழ்ந்து முதுமையடைந்த பிறகும் தன் பணி முடிந்துவிடவில்லை என்ற எண்ணத்தையும், உலகநலனுக்காகத் தன்னால் இன்னும் பங்காற்ற முடியும் என்று அவருக்கிருந்த நம்பிக்கையையும் காட்டுகின்றன. தன்மீது அவருக்கிருந்த நம்பிக்கையும் மற்றவர்கள் மீதிருந்த தீராத அன்புமே அவரது இந்த எழுபதாண்டுகாலச் சமூகப்பணியைச் சாத்தியமாக்கியிருக்கிறது.


க.மு.நடராஜன்: நண்பென்னும் நாடாச் சிறப்பு

ஜூன் 27, 2021

(சர்வோதயம் மலர்கிறது இதழில் எழுதிய அஞ்சலிக் கட்டுரை)

2012ம் ஆண்டு மதுரையில் நாராயண் தேசாயின் ‘காந்தி கதா’ நிகழ்வு நடக்கவிருப்பதாகத் தெரிந்தவுடன் சென்னையிலிருந்து மதுரைக்குக் கிளம்பிச் சென்றேன். நாராயண் தேசாய் காந்தியின் அணுக்கச் செயலாளராக இருந்த மகாதேவ் தேசாயின் மகன். காந்தியின் கண்பார்வையில் வளர்ந்த அனுபவங்களை அழகாகப் பதிவு செய்தவர். எனவே அந்நிகழ்ச்சியைத் தவறவிடக் கூடாது என்று நினைத்தேன். அங்குதான் க.மு.நடராஜன் அவர்களை முதன்முறையாகச் சந்தித்தேன். அந்த ஐந்து நாள் உரையை அவர்தான் ஒருங்கிணைத்திருந்தார். நாராயண் தேசாயிடம் நேர்காணல் செய்வதற்கான அனுமதியை அவரிடம்தான் பெற்றேன். ஆனால், அப்போது கே.எம்.என். அண்ணாச்சி என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட நடராஜன் ஐயாவைப் பற்றி நான் எதுவும் அறிந்திருக்கவில்லை. ஒரு நீண்ட நெருங்கிய உறவு அன்று தொடங்கவிருக்கிறது என்பதையும் நான் அப்போது உணரவில்லை. முதலில் காந்தி-இன்று தளத்தில் அந்த நேர்காணல் வெளிவந்தது. பிறகு நண்பர்கள் சுனில் கிருஷ்ணன், ராட்டை ரகு ஆகியோர் அந்த நேர்காணலை நடராஜன் ஐயாவிடம் பகிர்ந்துகொண்டபோது, உடனே அதை சர்வோதய இலக்கியப் பண்ணை வெளியீடாக தமிழிலும் ஆங்கிலத்திலும் நூல்வடிவம் கொடுத்துப் பதிப்பித்தார். அப்போதுதான் அவரோடு எனது பழக்கம் முறையாகத் தொடங்கியது. ஒருவகையில் இந்த அனுபவமே எனக்கு அவரைப்பற்றி முழுமையாகப் புரிந்து கொள்வதற்கான வாய்ப்பாகவும் அமைந்தது. காந்தியின் மீது ஆர்வம் கொண்டவர்களை சர்வோதய இயக்கத்தோடுப் பிணைப்பதற்குக் கிடைக்கும் வாய்ப்பை அவர் தவறவிடுவதில்லை என்பதை உணர்ந்தேன். காந்தியப் பணியைச் செய்யக்கிட்டும் எந்த வாய்ப்பையும் அவர் தேடிப்போய்ப் பற்றிக்கொள்வார் என்பதையும் அறிந்தேன். முதலில் நாராயண் தேசாயின் காந்தி கதா கூடங்குளம் போராட்டக் குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அந்நிகழ்ச்சி அங்கு நடைபெற முடியாத சூழல் ஏற்பட்டதை அறிந்தவுடன், உடனே அவரை அணுகி மிகக்குறுகிய காலத்தில் மதுரை காந்தி அருங்காட்சியக வளாகத்தில் அந்நிகழ்ச்சி நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை நடராஜன் செய்தார். பலவகைகளில் இந்நிகழ்ச்சியின் மூலமாகக் கிடைத்த தொடர்புகளும், அனுபவங்களும் எனது வாழ்க்கையைப் புரட்டிப்போட்டு வேறு தடத்தில் செலுத்தக்கூடியவையாக மாறின. அந்த மாற்றத்தின்போது எனக்கும் என் குடும்பத்தினருக்கும் ஊக்கம் தருபவராகவும் வழிகாட்டுபவராகவும் நடராஜன் ஐயா இருந்தார். முதன்முதலாக என்னை ஜெகந்நாதன் நினைவாக நடைபெறும் சர்வோதய தின நிகழ்ச்சிக்கு வரச்செய்ததும் நடராஜன் ஐயாதான். அங்கு அம்மா கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் குடும்பத்தினருடனும் உலகெங்கும் இருந்து வரும் காந்திய அன்பர்களுடனும் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டு எங்கள் வாழ்வை நெறிப்படுத்தின. அவரது எழுபதாண்டுகால காந்தியப் பணியில் இப்படி எண்ணற்ற நிகழ்ச்சிகளை நம் ஒவ்வொருவராலும் நினைவுகூர முடியும்.

க.மு.நடராஜன் ஒரு மிகப்பெரிய செயல்பாட்டாளராகவும் அதே நேரத்தில் தேர்ந்த அறிஞராகவும் இருந்தவர். அவர் வாழ்ந்த காலத்தில் அவரைச் சர்வோதயக் குடும்பத்தைத் தாண்டி பொதுச் சமூகத்துக்கு அறிமுகப்படுத்திக் கொண்டாடத் தவறிவிட்டோம். எனினும் காந்தியையும் காந்தியத்தையும் காந்தியின் மறைவுக்குப் பிறகு உயிர்ப்புடன் வைத்திருந்து புதிய தலைமுறைகளுக்குக் கடத்திவந்த ஆளுமைகளுள் அவர் முதல் வரிசையில் நின்றவர்.

பல சர்வோதய நிறுவனங்களுக்குத் தலைவராகவும் இருந்து, மூன்று இதழ்களுக்கும் ஆசிரியராகப் பொறுப்பேற்றுத் தொடர்ந்து நடத்தியதென்பது ஓர் அரிய சாதனை. அதனை எண்பத்தெட்டு வயதுவரை அவர் செய்துவந்தார் என்பது அவருக்கு காந்தியத்தின் மீதிருந்த ஈடுபாட்டையும், நிறைவாழ்வு வாழ்ந்து முதுமையடைந்த பிறகும் தன் பணி முடிந்துவிடவில்லை என்ற எண்ணத்தையும், உலகம் உய்வதற்குத் தன்னால் இன்னும் பங்காற்ற முடியும் என்ற நம்பிக்கையையும் காட்டுகின்றன.

புதியவர்களைச் சர்வோதயக் குடும்பத்துக்குள் கொண்டுவர வேண்டும் என்பதில் எப்போதும் தணியாத ஆர்வம் கொண்டிருந்தார். ஒருமுறை அவருடன் தொடர்பில் வந்துவிட்டால் தன் அன்புக்கரங்களால் பற்றிக்கொள்வார். அவர் தன்னோடு தொடர்பில் வந்தவர்கள் அனைவரிடமும் தொடர்ந்து அன்பு பாராட்டினார். ஒவ்வொருவரோடும் இடைவிடாத தொடர்பில் இருந்தார். அவருக்கான அஞ்சலிக் கூட்டங்களின்போது நான் உணர்ந்தது அதுவே. அனேகமாக அனைவரும் தம்மை அவர் கைப்பேசியில் அழைத்துப் பேசியவண்ணம் இருந்ததாகக் குறிப்பிட்டனர். அனைவருமே அவர் தம்மீது தனிக்கவனம் செலுத்திவந்ததாகவும் தனிப்பிரியம் கொண்டிருந்ததாகவும் கருதியிருந்தனர். ஒவ்வொருவரையும் அவர்கள் இன்றியமையாத பங்காற்றவேண்டியிருப்பதாக உணரச்செய்தார்.

நானும் அப்படித்தான் அவரோடு எனக்கு மட்டுமே வாய்த்த தனிச்சிறப்புகொண்ட ஓர் உறவு இருந்ததாக நினைத்துக்கொண்டிருந்தேன். கடந்த சில ஆண்டுகளாக என்னோடு வாரமொருமுறையேனும் பேசாமலிருக்கமாட்டார். ஒவ்வொரு முறையும் ஒருமணிநேரமாவது பேசுவார். என்னைவிட இருமடங்கு வயதும் பன்மடங்கு அனுபவமும் அவருக்கு இருந்தாலும் என்னோடு ஒரு இணைநண்பனாகவே பழகினார். நான் அண்மைக் காலங்களில் அதிகம் உரையாடியது அவருடன்தான். இதுகுறித்து என் மனைவிக்கு அவர் மீது ஓர் அன்பான பொறாமையே உண்டு. அதிலும் கடந்த ஓராண்டாக இருந்த பொதுமுடக்கத்தின் போது கிராமத்திலுள்ள நான் சோர்ந்து போய்விடக்கூடாது என்பதில் கருத்தாக இருந்தார். எனது அப்பாவை முதுமையின் தனிமை தீண்டாமல் அடிக்கடி போய் பார்த்துக்கொள்ளும்படி அறிவுறுத்துவார். கபசுரக்குடிநீர் கிடைத்ததா என்று கேட்டு இல்லை என்றபோது மதுரையிலிருந்து கபசுரக்குடிநீர்த் தூளும் பிற மருந்துகளும் அனுப்பிவைத்தார்.

அவர் பல நிகழ்வுகளுக்கு என்னை அழைத்துச் சென்றார். அந்நிகழ்ச்சிகளைக் குறித்து எழுதவைத்தார். அங்கு வருபவர்களில் அனேகருடனும் அறிமுகம் செய்துவைப்பார். நான் மதுரையில் இல்லாமல் போய்விட்டேன் என்று ஆதங்கப்படுவார். இருந்தால் மேலும் அதிக பணிகளைச் சேர்ந்து செய்யலாமே என்பார். ஏதேனும் புத்தகம் படித்ததாகக் கூறினால் உடனே அதுகுறித்து எழுதி அனுப்பச் சொல்வார். அவரும் புத்தகங்கள் அனுப்பி வைப்பார்.

என் மனைவி என்னைவிட நன்றாக மொழிபெயர்ப்பதாகக் கூறி அவரையும் எழுதுவதற்குத் தூண்டுவார். பல நிகழ்ச்சிகளில் பிறரது உரைகளை அவரை மொழிபெயர்க்கவைத்தார். எங்கள் மகளின் மீதும் பேரன்பு கொண்டிருந்தார். அவள் அவருக்குத் தெரிந்த பாடலைப் பாடினால் பெருமகிழ்ச்சி கொள்வார். அந்தப் பாடலுக்கும் அவருக்குமான தொடர்பினைப் பற்றி அவளிடம் கூறுவார்.

இரண்டாண்டுகளுக்கு முன்னர் எழுத்தாளர் பாவண்ணனை அவருக்கு அறிமுகப் படுத்தியிருந்தேன். அதன்பிறகு பாவண்ணன் பல ஆளுமைகளைப் பற்றி எழுத நடராஜன் தூண்டுதலாக இருந்தார். அவருக்கு வேண்டிய நூல்களும் தொடர்புகளும் கிடைக்க ஏற்பாடுகள் செய்தார். ஒவ்வொருமுறை என்னோடு பேசும்போதும் அவரை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி கூறுவார். அதுபோலவே நான் அறிமுகப்படுத்திய பிற நண்பர்களான சித்ரா பாலசுப்பிரமணியன், பாலசுப்பிரமணியம் முத்துசாமி போன்ற பிறரையும் தொடர்ந்து எழுதவைக்கவேண்டும் என்று கூறியபடி இருப்பார்.

பிற செயல்களில் திசைமாறி நான் எழுதவதாகக் கூறிய ஏதேனும் கட்டுரையை எழுதாமல் காலம் கடத்திக்கொண்டிருந்தால், சிறிதும் கடிந்துகொள்ளாமல் தொடர்ந்து பொறுமையாக நினைவுபடுத்துவார். நல்ல நூல்களை சட்டென்று அடையாளம் கண்டுகொள்ளும் ஆற்றல் அவருக்கிருந்தது. பன்னாலால் தாஸ்குப்பதாவின் Revolutionary Gandhi என்ற நூல்பற்றிக் கூறியவுடன் கல்கத்தாவில் இருந்து அதைத் தருவித்து எனக்கு அனுப்பிவைத்தார். அந்நூலுக்கான விமர்சனக் கட்டுரையை நான் வெகுகாலம் எழுதாமலே இருந்தேன். சளைக்காமல் என்னை உந்தியுந்தி அந்நூலைப் பற்றி எழுதவைத்தார். மார்க்சிய நோக்கில் காந்தியை அறிமுகப்படுத்திய அந்நூல் அவருக்கு மிகவும் முக்கியமானதாகப் பட்டது. இறுதியாக நான் எழுதிய கட்டுரையைப் படித்துவிட்டு அந்நூலைப் படிக்கவிரும்புவதாகக் கூறிய மருத்துவர் ஜீவாவுக்கும் அந்நூலை வாங்கி அனுப்பினார். எனது தல்ஸ்தோய் பற்றிய ‘எழுத்தில் விரியும் வியனுலகம்’ கட்டுரையை பல இதழ்களில் பிரித்துத் தொடர்ந்து பதிப்பித்தார். அதற்கு ஆதாரமான ‘The Kingdom of God is Within You’ என்ற தல்ஸ்தோயின் நூல் தமிழில் மொழிபெயர்க்கப்படவில்லை என்பதை அறிந்து மருத்துவர் ஜீவாவை மொழிபெயர்க்கச் சொல்லிக் கேட்டார். அவர் ருசிய மொழி அறிந்த தனது சகோதரியை மொழிபெயர்க்கச் சொல்லியிருப்பதாகக் கூறினார். மருத்துவர் இறந்த செய்தி அறிந்தபோது இடிந்துபோனார். அவருக்கு வந்த அஞ்சலிக் குறிப்புகளையெல்லாம் தொகுத்து அனுப்பிவைக்கும்படி கூறி படித்தார். சர்வோதயம் மலர்கிறது இதழ் மூலமாக அவருக்குச் சிறப்பான அஞ்சலி செலுத்தினார். இன்று அண்ணாச்சியும் நம்மிடையே இல்லை.

எனது ஆங்கில மொழிநடை அவருக்குப் பிடிக்கும். அதை எல்லாரிடமும் குறிப்பிடுவார். ஆனால் என் தமிழ் மொழிநடை மீது அவருக்கு விமர்சனங்கள் உண்டு. இலக்கிய நடையில், பண்டித நடையில் எழுதுவதாகக் குறிப்பிடுவார். எளிமையாக எழுதவேண்டும்; எல்லாரையும் சென்றடைய வேண்டும் என்று வலியுறுத்துவார். எனினும் என் கட்டுரைகளை அதிக மாற்றங்களின்றிப் பதிப்பிப்பார்.

சமூகச் செயல்பாட்டில் முழுமையாக ஈடுபட்டுவிட்டதால் இலக்கியமெல்லாம் அவர் விரும்பிய அளவு தீவிரமாகப் படிப்பதற்கு நேரமில்லாமல் போய்விட்டது என்பார். ஜெயகாந்தன் போன்றவர்களால் ஈர்க்கப்பட்டாலும் அவர் குடிப்பழக்கத்தை நியாயப்படுத்திப் பேசியது தனக்கு உவப்பாக இல்லை என்பார். இலக்கியவாதிகள் தனிவாழ்விலும் அறத்தைப் பேணவேண்டும் என்று கருதினார். அவர் விரும்பியவண்ணம் இலக்கியம் பயிலாவிட்டாலும் இருமொழிகளிலும் சிறப்பான தேர்ச்சி பெற்றிருந்தார். சொல்ல வந்த கருத்துகளை – எழுத்திலாகட்டும், பேச்சிலாகட்டும – மிகத் தெளிவாகவும், எளிமையாகவும், சுவையாகவும் கூறும் ஆற்றல் அவருக்கிருந்தது.

எல்லாரைப் பற்றியும் கூற பிறருக்குத் தெரியாத தகவல்கள் அவரிடம் இருந்தன. குமரப்பா, வினோபா, ஜெயப்பிரக்காஷ் நாராயண், கெய்தான், ஜெகந்நாதன், காமராசர், கக்கன் போன்ற தலைவர்களைக் குறித்தெல்லாம் பகிர்ந்துகொள்ள பல தனிப்பட்ட அனுபவங்கள் அவருக்கிருந்தன. இவான் இலிச், E.F. ஷூமேக்கர், மார்க் லிண்ட்லே, ராமச்சந்திர குகா போன்ற அறிஞர்களுடனும் வெவ்வேறு தருணங்களில் பழகும் வாய்ப்பு அவருக்குக்கிட்டியது. பல மாற்றுக்கருத்துகள் கொண்டவர்களுடனும் சிறந்த நட்பிலிருந்தார். கம்யூனிச இயக்கத்தொடர்பு கொண்ட நா.தர்மராஜன், எஸ்.என்.நாகராசனுடனும் ஆகியோர் அவரது நெருங்கிய நண்பர்கள்.

நடராஜன் சர்வோதய இயக்கத்தில் பல பதவிகளை வகித்துவந்த போதும் எப்போதும் தன்னை முன்னிறுத்திக் கொள்ளாதவராகவே இருந்தார். தனி உரையாடல்களின்போதும் உரைகளின்போதும் எண்ணற்ற அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டே இருப்பார். ஆனால் அந்த அனுபவப் பகிர்வுகளில் பிறரது ஆளுமைகள்தாம் வெளிப்பட்டனவேயொழிய இவரது பங்கினை மிகக் குறைவாக முன்வைப்பார். இவ்வாண்டு சர்வோதய விழாவில், ஜெகந்நாதன்-சர்வோதயா விருது நடராஜன் அண்ணாச்சிக்கு வழங்கப்பட்டது. விருதாளர்களின் பட்டியலை இறுதிசெய்யும் பொறுப்பு எப்போதும் அவரிடமே இருந்தது. ஆனால் இம்முறை அவருக்குத் தெரியாமலே அவரது பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டது. எனினும் விருதுச் சான்றிதழை அவரது அலுவலகத்தில் எப்போதும்போல அவரிடமே அனுப்பிவைத்தனர். எனவே அவருக்குக் கிடைக்கவிருந்த கடைசிநேர இனிய அதிர்ச்சி நிகழவில்லை. அவர் அந்த விருதினைக் கூச்சத்துடனே ஏற்றுக்கொண்ட போதும், அதை அவரது வழிகாட்டியாக இருந்த ஜெகந்நாதனுக்குச் செய்யும் மரியாதையாகக் கருதினார். அன்றைய தினம் அவர் ஆற்றிய உரையை நான் சர்வோதய தினம் பற்றிய கட்டுரையில் சற்றே விரிவாக எழுதியிருந்தேன். கட்டுரையின் நீளம் கருதி முழுமையாகக்கூட எழுதவில்லை. ஆனாலும் கட்டுரையை அவருக்கு அனுப்பியபோது உடனே என்னை அழைத்து, ‘எதுக்கு நான் பேசனதெல்லையாம் இவ்வளவு விரிவா எழுதினீங்க?’ என்று நெகிழ்ச்சியுடன் கேட்டார்.

நடராஜன் ஒரு மாபெரும் வரலாற்றுப் பெட்டகமாக இருந்தார். அவரது நினைவுகளையும் அனுபவங்களையும் நாம் முழுமையாகப் பதிவுசெய்யவில்லை என்பது ஒரு மிகப்பெரிய குறையாகவே இருக்கும். ஒவ்வொரு முறை அவரிடம் ஒரு நீண்ட நேர்காணல் செய்வதற்கு நேரம் கேட்கும் போதும் அதற்கென்ன அவசரம் என்று வேறு ஏதேனும் பணியில் நம்மை ஈடுபடுத்திவிடுவார். அவரோடு சில நாட்கள் கூடவே இருந்து உரையாடி அனைத்தையும் பதிவு செய்யவேண்டும் என்ற எனது ஆசையை நிறைவேற்ற நானும் உரிய வேகம் காட்டவில்லை என்பது எனக்குள் ஒரு குற்றவுணர்வையே ஏற்படுத்துகிறது.

அண்மையில் அயல்நாட்டு நண்பர்களோடு நடந்த கூட்டமொன்றில் நடராஜன் அண்ணாச்சியை நினைவுகூர்ந்த அம்மா கிருஷ்ணம்மாள் தன்னையும் அறியாமல் நிகழ்ச்சி முழுவதும் கண்ணீர் சொரிந்தபடியே அமர்ந்திருந்தார். அவர்களது நீண்ட நெடிய சமூகப்பயணத்தில் நடராஜன் அண்ணாச்சி எத்தனை உற்ற துணையாக இருந்திருக்கிறார் என்பதை நாம் எழுதக்கூடிய எந்த சொற்களையும் விட அந்தக் கண்ணீரே சான்றாகியது. அவரளவு நீண்ட தொடர்பு எனக்கு இல்லாவிட்டாலும் அவர் உணர்ந்த அதே வெறுமையை நடராஜன் ஐயாவின் மறைவிலிருந்து நான் உணர்ந்துகொண்டிருக்கிறேன். சர்வோதய இயக்கத்தில் அவர் விட்டுச்சென்றிருக்கும் வெற்றிடம் அவ்வளவு எளிதில் நிரப்பிவிடக்கூடியதன்று.


சர்வோதய தின நிகழ்வுகள் – 2021

மே 26, 2021

(சர்வோதயம் மலர்கிறது இதழுக்காக எழுதியது)

ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தில் சர்வோதய தினம் மறைந்த சர்வோதயத் தலைவர் ஜெகந்நாதனின் நினைவாக காந்திகிராமம் ஊழியரகத்தில் நடத்தப்பட்டு வருகிறது. உலகின் பல நாடுகளிலிருந்தும், இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும், நாகப்பட்டினம் பகுதி கிராமங்களிலிருந்தும் பலரும் திரண்டுவந்து பங்கேற்கும் நிகழ்வாக இது இருந்திருக்கிறது. இவ்வாண்டு கொரோனா பெருந்தொற்றால் பல நூறு பேர் ஒரே இடத்தில் கூடுகிற விழாவாக இந்நிகழ்வு அமைக்கப்படவில்லை. எனினும் ஒருசிலர் நேரில் வந்தும் வேறு பலர் இணையம் மூலமாக இணைந்தும் பங்குபெற்று இவ்வாண்டும் சர்வோதய தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. பிப்ரவரி 10ம் நாள் முதல் 12ம் நாள் வரை மூன்று நாட்கள் நேரிலும் மெய்நிகர் கூடுகையிலும் பல செம்மையான உரைகள் ஆற்றப்பட்டு செறிவான கலந்துரையாடல்களும் நிகழ்ந்தன.

முதல் நாள் – பெருந்தொற்று தோற்றுவித்த சவால்கள்

முதல் நாள் நிகழ்ச்சி பெருந்தொற்றின் போதும் அதற்கு அப்பாலும் சந்திக்கிற சவால்களும் அவற்றுக்கான தீர்வுகளும் என்ற தலைப்பில் நடந்தது. காந்திகிராமப் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் ராஜா அன்றைய தினத்தின் பேச்சாளர்களை அறிமுகப்படுத்தி நிகழ்வை ஒருங்கிணைத்தார்.

முதலில் பேசிய பேராசிரியர் ரிச்சர்ட் ரோஸ் இங்கிலாந்தின் நார்த்தம்ப்டன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகிறார். உலகெங்கிலும் கல்வி குறித்துச் சந்திக்கும் சவால்களை முன்வைத்துப் பேசினார். சமூக-பொருளாதார இடைவெளி அண்மைக்காலங்களில் அதிகரித்து விட்டதைச் சுட்டிக்காட்டினார். விளிம்புநிலைச் சமூகக் குழந்தைகள் ஏன் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்ற கேள்வியை எழுப்பினார். வறுமையை ஒழிக்காமல், பெண்கள் ஒடுக்கப்படுவதைக் களையாமல் கல்வியில் சமத்துவத்தை எட்டமுடியாது. குழந்தைகளிடம் ஊட்டச்சத்துக் குறைபாடு இருக்கும்வரை சமமான கல்வி வழங்க இயலாது. பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளில் மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள் (258 மில்லியன்) சகாராவையொட்டிய ஆப்பிரிக்க நாடுகளிலும் தெற்கு ஆசியாவிலும் வாழ்கின்றனர் என்பதைக் குறிப்பிட்டார். கடந்த இருபது ஆண்டுகளில் ஒட்டுமொத்த ஐரோப்பாவைவிட இந்தியாவில் அதிகமான மில்லியனர்கள் உருவாக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டினார். கொரோனா பொதுமுடக்கத்தால் பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளிடம் பல உளச்சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. எல்லாப் பெற்றோர்களாலும் தங்கள் இல்லங்களில் குழந்தைகளுக்குக் கற்றுத்தர முடியாது. பெற்றோர்களிடையே உள்ள ஏற்றத்தாழ்வுகளை நாம் அங்கீகரிக்க வேண்டும். தொழில்நுட்பம் பொய்யான தீர்வுகளைத் தந்துள்ளது – எல்லாக் குழந்தைகளும் இணையத்தையும் தொலைக்காட்சியையும் பயன்படுத்த வழியில்லை என்றார். எல்லாக் குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் அவசியம்தானா, குழந்தைகள் கற்ற வேண்டியவை என்ன என்ற வினாக்களை எழுப்பினார் ரிச்சர்ட ரோஸ்.

அடுத்து பேசிய ஹெதர் குமின்ஸ் ஜாம்பியா நாட்டிலிருந்து பேசினார். SSAP என்ற தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த அவர் அங்கு ஒரு தொலைதூர கிராமத்தில் இருப்பதாகவும், அக்கிராமம் அடுத்த நகரத்திலிருந்து 80 கி.மீ. தொலைவிலிருப்பதாகவும் குறிப்பிட்டார். மின்னிணைப்பு இல்லாததால் சூரியஒளியைக் கொண்டு குறைந்த மின்சாரம் உற்பத்திசெய்து மடிகணினியைப் பயன்படுத்துகிறார். ஜாம்பியாவில் தனிமைப்படுத்துதல் ஓரளவு உதவியாக இருந்துள்ள போதும், மக்கள் முகக்கவசம் போன்றவற்றை பயன்படுத்துவதில்லை. பெருந்தொற்றின் பாதிப்பை அவர்கள் கண்ணால் காணவில்லை. அங்கு மிக அதிகமாக மலேரியா, எய்ட்ஸ், டைபாய்ட், காலரா போன்ற நோய்களை அவர்கள் தொடர்நுத சந்தித்து வருகின்றனர். பருவநிலை மாற்றத்தால் இரண்டாண்டுக்கொரு முறை வறட்சியும் மூன்றாண்டுக்கொரு முறை பெருமழையும் பெய்கின்றன. இப்புவியை மாசுபடுத்த அவர்கள் எதுவும் செய்யாவிடிலும், மிக அதிக பாதிப்புக்கு அவர்களே ஆளாகின்றனர். ஹெதர் குமின்ஸ் சியரா லியோனில் ஓர் அகிம்சை ஆசிரமம் நிறுவ வேண்டும் என்று விரும்புகிறார். காந்தியை இறந்தபோன குருவாகக் கருதுகிறார். அகமதாபாத்தின் குஜராத்தி வித்யாபீடத்தில் அவர் காந்தியம் குறித்துப் படித்திருக்கிறார். மக்கள் பணி செய்வதற்கு காந்தியே உந்துதலாக இருப்பதாகக் கருதுகிறார். அவரது தொண்டு நிறுவனம் வழங்கும் குறுங்கடன்களைப் பெறுவதற்கு வருபவர்கள் காலணிகள் அணிந்திருப்பதில்லை. கிழிந்த உடைகளை உடுத்தியிருப்பர். கடனைத் திரும்பக் கட்டுவது எப்படி என்று யோசித்திருக்கமாட்டார்கள். அப்போதைக்கு உணவுக்காகும் என்று மட்டுமே நினைப்பார்கள். ஹெதரின் அச்சிறு திட்டம்தான் அவர்களுக்கிருக்கும் ஒரே நம்பிக்கை, ஒரே வாய்ப்பு. வேறு எவரும் அத்தகைய வாய்ப்பை அவர்களுக்குத் தந்ததில்லை. ஒரு தனிநபர் நிறையச் செய்துவிட முடியும் என்றார் ஹெதர்.

பிறகு உரையாற்றிய முனைவர் பங்கஜம் காந்திகிராமப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர். இந்தியாவில் முதன்முதல் ஒருநாள் அடையாள வீடடங்கு அறிவிக்கப்பட்டபோது எப்படி எல்லாரும் வீட்டுக்குள்ளேயே இருந்தனர்; இத்தனை ஒழுங்குடன் எப்படி நடந்தகொண்டனர் என்று வியந்தார். ஆனால் பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்ட பிறகு மக்கள் அதன் நெருக்கடியை உணரத்தொடங்கினர். குழந்தைகளின் கல்வி மிகவும் பாதிக்கப்பட்டது. மலைப்பகுதிகளில் மின்சாரம் கூடக் கிடையாது. எப்படி இணையம் மூலம் கற்றுக்கொள்வார்கள். கல்வி என்பது குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு வழிவகுக்க வேண்டும். உடல் வளர்ப்பது மட்டுமன்று, ஆன்மாவையும் வளர்க்கவேண்டும். தொழில்நுட்பத்தால் அதைச் செய்யமுடியுமா என்று வினவினார். இப்போது இருப்பது கல்வித்திட்டமே அல்ல என்றார். குழந்தைகள் சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். படித்தவர்கள் எல்லாரும் முன்வந்து கிராமத்துக் குழந்தைகள் கல்விகற்க உதவவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இறுதியாகப் பேசிய முனைவர் ஜெனிஃபர் லாட் நிற, இன, வர்க்க பேதங்களைக் குறைக்கப் பணியாற்றும் கிளாஸ் ஏக்‌ஷன் என்ற அமைப்பை நடத்துகிறார். அன்றைய தினம் அமெரிக்காவிலிருந்து பேசியபோது அவருக்கு அங்கு காலை 4 மணி. 1980களில் முதன்முதலாக இந்தியா வந்து கிருஷ்ணம்மாள்-ஜெகந்நாதன் குடும்பத்தினரைச் சந்தித்த பிறகு அவர்களால் உள எழுச்சியுற்று, தொடர்ந்து அவர்களது இயக்கத்தோடும் இந்தியாவோடும் தொடர்பிலிருக்கிறார்.

ஜெனிஃபர் லாட் அமெரிக்கா செல்வச்செழிப்புக்குப் பெயர் போனதெனினும் அங்கு கடுமையான வறுமையும் உண்டு என்றார். அமெரிக்கர்களில் 12% பேர் வறுமையில் உள்ளனர் (3.8 கோடி). அவர்களுள் 1.5 கோடிப் பேர் குழந்தைகள். கொரோனா காலத்தில் செல்வர்களிடம் மேலும் செல்வம் சேர்ந்தது. கோடீஸ்வரர்களின் செல்வம் 38% உயரந்தது. மிகப்பெரும் செல்வந்தர்கள் ஐவரது செல்வம் 85% அதிகரித்தது. இனம், வர்க்கம், வீடற்றோர், ஆங்கிலம் பேசாதோர், உடல் குறைபாடுடையோர், சிறப்புக் கல்வி தேவைப்படும் குழந்தைகள், நகரம்/கிராமம், பாலினம் என்று பல பரிமாணங்களில் ஏற்றத்தாழ்வுகள் நிலவுகின்றன. கொரோனா இறப்பு விகதம் அமெரிக்க ஆதிக்குடிகளிடமும், கறுப்பினத்தவரிடம் கூடதலாக உள்ளது. ‘சூம் (zoom) பள்ளி’களில் உள்ள அநீதியை அவர் விளக்கினார். விரைவான இணைய இணைப்பு எல்லாருக்கும் இருப்பதில்லை. 5 குழந்தைகள் உள்ள வீடுகளில் பெற்றோரிடம் ஒரு திறன்பேசிதான் இருக்கக்கூடும். அதைப் பகிர்ந்துகொள்வது கடினமானது. இளஞ்சிறார்கள் கணிப்பொறியையே தினமும் 4-5 மணிநேரம் பார்த்துக்கொண்டிருப்பதும், விளையாடாமலும், தனித்திருப்பது அவர்களது சமூக ஊடாட்டங்களைக் குறைத்து அவர்களது சமூகரீதியான வளர்ச்சிக்குத் தடையாக உள்ளது. பள்ளி வகுப்புகளுக்கு மட்டம்போடுதல் இருமடங்காகியுள்ளது. வீடற்ற குழந்தைகள் அதிக இடர்ப்படும் சூழலில் உள்ளனர். கோவிட்டால் வேலைகள் பறிபோதல், வருமானம் குறைதல் ஆகியவற்றால் வீடுகளை இழத்தலும். குடும்பங்கள் சிதறுவதும் அதிகரித்துள்ளது. கோவிட் பாதிப்பு பெண்கள் மத்தியில்தான் அதிகம். பெண்களில் அதிக விகிதம் வேலையை இழக்கின்றனர். குடும்பத்தைப் பார்த்துக்கொள்ள வேலைகளில் இருந்து நீங்கவும் செய்கின்றனர் என்று பல பிரச்சனைகளை ஜெனிஃபர் பட்டியலிட்டார். முக்கியமாக, பள்ளிகள் கல்வியோடு சேர்த்து ஏழைக்குழந்தைகளுக்கு உணவும் வழங்கிவந்தன. ஐந்து குழந்தைகளில் ஒருவர் உணவுப்பாதுகாப்பின்றி உள்ளனர். அவர்கள் உணவின்றிப்போகும் அபாயம் உள்ளது. இன்றும் பல பள்ளிகள் வீடுதேடி உணவு வழங்குகின்றன என்றார். ஜெனிஃபர் பல ஆக்கப்பூர்வமான தீர்வுகளையும் முன்வைத்தார். வீட்டிலிருந்து படிப்பதன் சாதகங்களைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார். மெய்நிகர் வகுப்புகளின் போதும் குழந்தைகள் தமக்குள் தனியே பேசிக்கொள்ளவும் விளையாடவும் இடைவேளைகளை வழங்க வேண்டும். ஆசிரியரும் புதிர்களையும் விளையாட்டுகளையும் பயன்படுத்தவேண்டும். அண்டைஅயல் வீட்டுக் குழந்தைகள் ஒன்று சேர்ந்து கற்கலாம்; குடும்பங்களே குட்டிப்பள்ளிகளை வீடுகளில் அமைத்திடலாம். பள்ளிகள் சமூகத்தின் பல அங்கங்களோடு இணைக்கப்படுவதை ஒரு முறையான செயல்திட்டமாக்கவேண்டும் என்று பல தீர்வுகளையும் கோடிட்டுக் காட்டினார். எல்லாவகைகளிலும் எல்லாநிலைகளிலும் சமூக அமைப்பிலுள்ள அநீதியையும் ஏற்றத்தாழ்வுகளையும் களைந்து குழந்தைகளின் ஒட்டுமொத்த நலனைப் பேணுவதே கல்வியின் தலையாய கடமையாக அவர் காண்கிறார்.

பின்னர் தானம் அறக்கட்டளையின் தலைவர் வாசிமலை எல்லா உரைகளையும் தொகுத்து, அனைவருக்குமிடையே ஓர் உரையாடலை ஒருங்கிணைத்தார். அப்போது ஒரு கேள்விக்குப் பதிலளித்த ரிச்சர்ட் ரோஸ், கோவிட் எதையும் மாற்றிவிடவில்லை; ஏற்கனவே உள்ள நிலையை நமக்கு மேலும் தெளிவாகப் புலப்படுத்தியிருக்கிறது என்றார். டேவிட் வில்லிஸ், இந்த இக்கட்டு எங்கும் போய்விடப் போவதில்லை. இது பருவநிலைச் சீரழிவால் இனிவர இருக்கும் அழிவுகளுக்கு ஓர் முன்னோட்டம்தான் என்றார். பூமிக்குமார் மனிதன் இயற்கையைச் சிதைப்பதால், பெருந்தொற்றுக்களுக்கு இடையே இருந்த கால இடைவெளி குறைந்து வருவதைக் குறிப்பிட்டார். வாசிமலை குடும்பமே ஒரு பள்ளியாகச் செயல்படக்கூடிய சாத்தியத்தைப் பற்றி என்னோடு உரையாடினார். கல்வி எல்லோரது பணியும்தான் என்றார். தத்துவம்தான் அறிவியலை வழிநடத்தவேண்டும் என்று அன்றைய உரையாடலை முடித்துவைத்தார்.

இரண்டாம் நாள் – வளங்குன்றா வேளாண்மை

இரண்டாம் நாள் உரைகள் வளங்குன்றா வேளாண்மையும் மக்களை முன்னிறுத்தும் செயல்திட்டங்களும் என்ற கருப்பொருளில் அமைந்தன.

முதலில் பேசிய பாமயன் சர்வோதய இயக்கத்தோடு நீண்ட நெருங்கிய தொடர்புடையவர். தமிழகத்தின் தலையாய வேளாண் அறிஞர்களில் ஒருவர். இந்தியா வேளாண்மை சார்ந்த சமூகம்; காலச்சூழலில் மாற்றம், மழையளவிலும் வெப்ப அளவிலும் மாற்றங்கள், நீராதாரங்கள் குன்றிவருவது ஆகியன நிகழும் சூழலில் தற்சார்பு வேளாண்மையின் அவசியத்தை வலியுறுத்தினார். நான்கு அடிப்படைகளை முன்வைத்தார். முதலாவதாக, பசுமைப் புரட்சியின் விளைவாக தற்சார்பு அழிக்கப்பட்டது. விதைகளும் உரங்களும் உழவர்களிடமிருந்து பறிக்கப்பட்டன. இரண்டாவதாக, இந்திய ஒரு ஜனநாயக நாடு. மக்கள் ஒன்றுகூடிக் குரல் கொடுத்தால்தான் அவர்களுக்கான நன்மைகள் கிடைக்கும். ஆனால் உழவர் சமுதாயம் ஒன்றாகச் சேர்ந்து குரல் கொடுக்க முடியாத சமூகமாக உள்ளது. உதிரிகளாகத் தனிமைப்பட்டு இருக்கிறார்கள். உழவர்கள் போராடினால் அவர்களேதான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். முதல் ஐந்தாண்டுத் திட்டத்துக்குப் பிறகான சட்டங்கள் உழவர்களை நிலத்திலிருந்து அகற்றுவதிலேயே குறியாக இருக்கின்றன. மூன்றாகவதாக, சந்தைகள் உழவர்களுக்குச் சாதகமாக இல்லை. நான்காவதாக, இவற்றுக்குத் தீர்வாக மரபு சார்ந்த வேளாண்மையை, தாளாண்மைப் பண்ணை என்கிற தற்சார்பு வேளாண்மை முறை அமையும்.

பண்டைத் தமிழர்கள் நிலத்தைக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்று நான்காகப் பிரித்தனர். ஐந்திணைகளை வகுத்தனர். நிலத்தின் தன்மைக்கேற்ப வேளாண்மை முறையும் மாறுபட்டது. குறிஞ்சி நில வேளாண்மை மசானபு புக்கோக்கா சொல்வது போன்ற உழாத வேளாண்மையாக இருந்தது. குறிஞ்சி நிலங்கள் அடுக்குமுறைத் தாவர அமைப்பு கொண்ட அணிநிழல் காடுகளைக் கொண்டவை. அங்கு ஏழு வகைப் பயிர்கள் ஒரே இடத்தில் காணப்படும்; பெய்கின்ற மழையோ அடிக்கின்ற வெயிலோ மண்ணைத் தொடாது. மண்மீது விழுகின்ற இலைகளும் தழைகளும் சேர்ந்துசேர்ந்து மண்ணைப் பஞ்சு போன்று ஆக்கும். மண்வளம் சிறப்பாக இருக்கும். உழத்தேவையில்லை. ‘தொய்யாது வித்திய துளர்படு துடவை,’ என்றது மலைபடுகடாம். முல்லை நிலத்தில் கால்நடைகளால் கிடைக்கக்கூடிய கழவுகளை மக்கவைத்து மக்குஉரம் செய்தனர். மருத நிலத்தில் நீர்ப்பாசண முறைகளை அமைத்தனர். கல்லணை போன்ற அணைகளில் ஆற்றுநீரைத் தேக்கினர். 40000 ஏரிகளைத் தமிழ்நாட்டில் அமைத்தனர். 36 வகைக் கலப்பைகளைப் பயன்படுத்தினர். மிக உயர்ந்த வேளாண்மை முறையாக இது இருந்ததால் பேரரசுகள் உருவாகின. நெய்தலில் பழனம் எனப்படும் வேளாண்மை இருந்தது. நெல்லும் மீனும் சேர்ந்திருந்தன. பாமயன் இவற்றைத் தான் குறிப்பிடுவது மரபைத் தூக்கிப்பிடிக்கவோ பழைமையைப் பேசவோ அல்ல என்று தெளிவுபடுத்தினார். நில இயல்புக்கு மாறாகப் பயிர் செய்யும் போது சிக்கல்கள் ஏற்படுகின்றன. நீர்ப்பற்றாகுறை வரும். ஆழ்துளைக்கிணறுகள் தோண்டி நிலத்தடி நீர் குறைகிறது. இச்சூழலில் நிலத்துக்கேற்ற வேளாண்மை முறை அவசியமாகிறது என்றார். தாளாண்மைப் பண்ணைகளை நல்லதொரு தீர்வாக முன்வைக்கிறார். கூட்டுப் பண்ணைகள் கொண்ட பசுமை/திணை கிராமம் அமைந்தால் பல துறைசார்ந்த விற்பன்னர்கள் தேவைப்படுகிறார்கள். ஆண்டுமுழுதும் பண்ணைகள் உயிரோட்டத்துடன் இருக்கும் என்றார்.
தென்காசி அருகில் 110 ஏக்கர் நிலத்தை 103 நண்பர்கள் வாங்கி ஒரு பசுமை கிராமம் அமைத்துக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். இங்கு நிர்வாகத்தை ஒரு கூட்டமைப்புதான் மேற்கொள்கிறது. மதிப்புக்கூட்டும் சிறு தொழில்கள் தொடங்கப்பட்டுள்ளன. பண்ணைக் குட்டைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவ்வாண்டு முதல் தைப்பொங்கல் கொண்டாடப்பட்டது. பண்ணை இயக்கம் ஒன்றை நடத்தி தற்சார்பு வாழ்வியலை நோக்கி நகரவேண்டும். அமைதியும் வளமும் நிறைந்த உலகம் அப்போதுதான் அமையும் என்றார் பாமயன்.

அடுத்த பேசிய ராமசுப்பிரமணியன் சமன்வயா என்ற தொண்டு நிறுவனத்தை நடத்திவருகிறார். அன்றைய தினம் தில்லியில் நடந்துகொண்டிருந்த விவசாயிகள் போராட்டம் 76 நாட்களைத் தொட்டிருப்பதைச் சுட்டிக்காட்டினார். 200 பேருக்கு மேல் இறந்திருந்தார்கள். எனினும் வேறெங்கும் இல்லாதவாறு அமைதியாகப் போராடிக்கொண்டிருந்தனர் என்று கூறி அவர்களுக்காக ஒரு சீக்கியப் பிரார்த்தனையுடன் தனது உரையைத் தொடங்கினார். பாமயன் போன்ற வேளாண் அறிஞர்கள் ஏன் நம் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களாக அமர்த்தப்படுவதில்லை என்ற கேள்வியை எழுப்பினார். உழவர்கள் ஒட்டுவிதைகள் மூலம் அதிக பணம் ஈட்டுவதைவிட, நாட்டு விதைகள் மூலம் அதிக மகிழ்ச்சியோடும் சுதந்திரத்தோடும் இருப்பதையே விரும்பதை விளக்கும் ஓர் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். கடந்த 15-20 ஆண்டுகளில் மரபான வேளாண்மையைக்குறித்தும் இயற்கை வேளாண்பொருள்களின் நன்மை குறித்தும் ஒரு பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இப்பெரும் மாற்றம் அரசாங்கத் திட்டங்களால் வரவில்லை. மக்கள் இயக்கங்களால் ஏற்பட்டுள்ளது என்றார். ராம் மூன்று முக்கியமான பிரச்சனைகளை எழுப்பினார். முதலாவதாக, நம் கல்விமுறையில் நம் மரபில் இருக்கும் மிகப்பரந்த அறிவு நிராகரிக்கப்பட்டிருக்கிறது. இன்றைய வேளாண்மைப் பல்கலைக்கழகங்கள் இயற்கை வேளாண்மை குறித்த பாடத்திட்டங்களைக் கொண்டிருப்பதில்லை. நம் மராபார்ந்த அறிவை மைய நீரோட்டத்துக்குக் கொண்டு வரவும், அரசாங்கக் கொள்கைகளில் உள்ளடக்கவும் தவறிவிட்டோம். இன்றும் தமிழகத்தில் இயற்கை வேளாண்மைக் கொள்கை இல்லை. இரண்டாவதாக, நாம் இன்னும் காலனிய ஆட்சிமுறையிலிருந்து விடுபடவில்லை. அதிகாரத்தை மையப்படுத்துதல் அதிகரித்துவருகிறது. மூன்றாவதாக, சந்தைகள் மக்களுக்கும் குறிப்பாக உழவர்களுக்கு எதிராக உருவெடுத்துள்ளது. மக்கள் இயக்கங்களுக்கு அவை எதிரானவை. மாதிரி கிராமங்கள் 1952லேயே முயன்றுபார்க்கப்பட்டன. ஆனால் மையப்படுத்தப்பட்ட சந்தையைச் சென்றடைவதில் தோல்வியுற்றன. வட்டார, உள்ளூர் சந்தைகளை உருவாக்கவேண்டும் என்றார். இவ்வாண்டு காந்திய வரலாற்று அறிஞர் தரம்பாலின் நூற்றாண்டு கொண்டாடப்படுவதையும் நினைவுகூர்ந்தார். அவர் எழுத்துகளைத் தொகுத்து dharampal.net என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

அடுத்து பேசிய பாலசுப்பிரமணியம் முத்துசாமி ‘இன்றைய காந்திகள்’ நூலின் ஆசிரியர். டான்சானியா நாட்டில் பணிசெய்துகொண்டிருக்கிறார். அமுல், அரவிந்த் போன்ற நிறுவனங்களை காந்திய முறையில் வர்த்தக ரீதியாகவும் வெற்றிகரமாக நடத்தப்படும் நிறுவனங்களாக முன்வைக்கிறார். வேளாண்மையில் கூட்டுறவு இயக்கத்துக்கான சாத்தியங்களை இந்த உரையில் ஆராய்ந்தார். ஆனந்த பால் கூட்டுறவு வல்லபாய் படேல், மொரார்ஜி தேசாய், திரிபுவன்தாஸ் படேல் ஆகியோரின் ஈடுபாட்டுடன் 1946ம் ஆண்டு தொடங்கப்பட்டு, பிறகு வர்கீஸ் குரியனின் தலைமையில் மிகப்பெரிய இயக்கமாகவும் நிறுவனமாகவும் வளர்ந்தது. 22 மாநிலங்களில் 1.25 கோடி பால் உற்பத்தியாளர்கள் பால் கூட்டுறவுத் துறையில் அங்கம் வகிக்கின்றனர். வாடிக்கைகயாளர்கள் கொடுக்கும் விலையில் 70% இந்திய பால் உற்பத்தியாளர்களைச் சென்றடைகிறது. அமெரிக்காவில் இந்த விகிதம் 30% தான். மிகப்பெரும் கூட்டுறவு நிறுவனமான அமுல் ஆண்டுக்கு 7 பில்லியன் டாலர்கள் வருமான ஈட்டுகிறது. 35 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயன்பெறுகின்றனர். இது போலவே எண்ணெய் வித்துகள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து கொண்டிருந்த காலத்தில், சாம் பிட்ரோடாவின் தலைமையில் இந்நிலையை மாற்றும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. தேசிய பால்வள வளர்ச்சி வாரியம் இப்பணியிலும் ஈடுபடுத்தப்பட்டது. எண்ணெய் வித்து உற்பத்தியாளர்கள் கூட்டுறவு தொடங்கப்பட்டது. உள்நாட்டில் சமையல் எண்ணெய் உற்பத்தியைப் பெருக்கி, தன்னிறைவை அடையும் நோக்க்கதுடன் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்திற்கு ஆபரேஷன் கோல்டன் ஃப்ளோ என்று பெயரிட்டார்கள். இந்தச் செயல்பாடுகளின் மையமாக ‘தாரா’ என்னும் பிராண்டு உருவாக்கப்பட்டது. உற்பத்தி அதிகரித்தது. இறக்குமதி சரிந்தது. நான்கு ஆண்டுகளில் சமையல் எண்ணெயில் தன்னிறைவடைந்தோம். ஆனால் மீண்டும் 1991க்குப் பிறகு சரிவடைந்தது. நுகர்வோர் நலனுக்காக உற்பத்தியாளர் நலன்கள் பலியிடப்பட்டன. இப்போது சமையல் எண்ணெய்க்கான சந்தை மாபெரும் தனியார் நிறுவனங்கள் வசம் உள்ளது. இவர்களது வலிமைக்கு முன்னர் உழவர்களால் தாக்குப்பிடிக்க முடிவதில்லை. குமரப்பா இந்த அதிகாரச் சமநிலையின்மை குறித்துப் பேசியிருக்கிறார். ஒரு வணிகர் அதே அளவு பணம் கொண்ட உழவரை விட அதிக அதிகாரம் படைத்தவராக இருக்கிறார். இந்தியாவில் பால் பொருளாதாரம் உணவுத்தானியப் பொருளாதாரத்தை விடப் பெரிதாக உள்ளது. ஒட்டுமொத்த விநியோகச் சங்கிலியும் பால் உற்பத்தியாளர்களின் உரிமையிலேயே இருக்கிறது. இடைத்தரகர்கள் எவரும் இல்லை. இந்திய வேளாண்மைக்கும் கூட்டுறவு முறையே மிகப் பொருத்தமான வழியாக இருக்க முடியும். பாலோடு சேர்த்து உணவுத்தானியங்களும், மாமிசம், சூரிய ஒளி மின்சாரம் ஆகியவற்றை கூட்டுறவு முறையில் உற்பத்தி செய்து விற்பனை செய்தால் உழவர்கள் அதிக வருமானம் ஈட்ட முடியும் என்றார் பாலசுப்பிரமணியம்.

இறுதியாகப் பேசிய முனைவர் சோபனா நெலாஸ்கோ ஒரு பொருளாதார வல்லுனர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார். இந்தியாவில் முடிவு எடுக்கும் அதிகாரம் ஒரு சிறுபான்மையினரின் கரங்களில் இருப்பதாகவும், வேளாண்மையைச் சார்ந்திருக்கும் 70 விழுக்காடு மக்களை அவர்கள் ஆலோசிப்பதில்லை என்றும் குற்றம்சாட்டினார். இந்நிலையை மாற்ற ஒரு புரட்சிகரமான இயக்கம் தேவைப்படுவதாகச் சொன்னார். வேளாண்மையோடு தொடர்பில்லாதவர்கள் வேளாண்மை குறித்த சட்டங்களை வகுக்கின்றனர். தவறாக நபர்களுக்கு விருதுகளும் மரியாதைகளும் வழங்கப்படுகின்றன. அத்தியாவசியப் பொருள்களை மக்களுக்கு வழங்க வேண்டிய அரசு டாஸ்மாக் மூலம் மதுவை வழங்கிக்கொண்டிருக்கிறது. முதியவர்கள் முடிவெடுக்கும் இடத்திலிருந்து விலகி இளையவர்களுக்கு வழிவிடவேண்டும். வேளாண்மை மாநிலங்கள் பட்டியலுக்கு மாற்றப்படவேண்டும். எல்லாரும் அடிப்படை ஊதியம் வழங்கவேண்டும். நாம் ஒவ்வொருவரும் சமூகச் செயல்பாட்டாளாராக மாறி அரசியலில் பங்கெடுக்கவேண்டும் என்று பல்வேறு கருத்துகளை முன்வைத்தார் முனைவர் சோபனா.

பிறகு பேராசிரியர் பழனித்துரை உரையாற்றியவர்களின் கருத்துகளைத் தொகுத்து கலந்துரையாடலை ஒருங்கிணைத்தார். மையப்படுத்தப்பட்ட நிர்வாக முறை வேளாண்மைக்குப் பொருந்திவராது. அது சந்தைக்குத்தான் உதவியாக இருக்கும். முன்பு திட்டங்களைச் செயல்படுத்தும்போது ஊழல் இருக்கும். இப்போது நாம் கொள்கையளவிலேயே ஊழலைப் பார்க்கிறோம். ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு மாநிலத்துள் பல வட்டாரங்களுக்கும் என்ன மாதிரியான கொள்கைகள் வேண்டுமென்பதைச் சிந்திக்கவேண்டும். சந்தைகள் அரசியல் கட்சிகளைக் கைப்பற்றிவிட்டன. அரசியல் கட்சிகள் மீது தாக்கம் செலுத்துவதன் மூலம்தான் நம்மால் கொள்கை வகுத்தல் மீது தாக்கம் செலுத்தமுடியும். இளைஞர்கள் பலரும் நம்மாழ்வாரின் இயக்கத்தால் இயற்கை வேளாண்மைக்குள் வந்துள்ளது நம்பிக்கை அளிக்கிறது என்றார்.

மூன்றாம் நாள் – ஜெகந்நாதன் நினைவுச் சிறப்புரை

இறுதி நாளான சர்வோதய தினம் சங்கரன்கோயில் உலக அமைதிக் கோயிலிருந்து வந்திருந்த புத்த பிக்குகளின் தலைமையில் நிகழ்ந்த ஓர் அமைதி நடையுடன் தொடங்கியது.

மூத்த சர்வோதயத் தலைவர் க.மு.நடராஜன் தலைமை தாங்கி வரவேற்புரை ஆற்றினார். ஜெகந்நாதன் அவர்களின் வாழ்க்கையிலிருந்து பல எழுச்சியூட்டும் தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். ஜெகந்நாதன் பள்ளிப் பருவத்திலேயே சத்தியாகிரத்தில் ஈடுபட்டவர். பின்னர் கோகுலம் என்ற பெயரில் கல்லூரி மாணவர்களுக்கான விடுதி நடத்தியிருக்கிறார். பஞ்சாலைத் தொழிலாளர் சங்கம் தொடங்க உதவியிருக்கிறார். விவசாய சங்கம் அமைப்பதில் அதிக ஆர்வம் காட்டி மாயவரம் அருகே ஒரு சங்கம் தொடங்கக் காரணமாக இருந்தார். அம்பாசமுத்திரம் மாஞ்சோலை தேயிலைத் தோட்டங்களிலிருந்தெல்லாம் சங்கத்துக்கு உறுப்பினர்கள் சேர்த்தார். நிலம் சார்ந்த பல போராட்டங்களில் ஈடுபட்டார். திருநெல்வேயில் அவர் நடத்திய போராட்டத்துக்கு வந்த ஜே.சி.குமரப்பாவை கதர் சட்டை போட்ட கம்யூனிஸ்டு என்று குறிப்பிட்டு நிலச்சுவாந்தார்கள் உள்துறை அமைச்சர் வல்லபாய் படேலுக்குக் கடிதம் எழுதினார்கள். ஜெகந்நாதன் கள்ளங்குடியில் நிலவெளியேற்றத்துக்கெதிரான போராட்டம் நடத்தினார். விளாம்பட்டியில் கோயில் நிலத்தைத் தவறான முறையில் பயன்படுத்துவதை எதிர்த்துப் போராட்டம் நடத்தினார். வலிவலம் தேசிகர் 390 ஏக்கர் கோயில் நிலத்தை அனுபவித்து வந்தார் – அதை எதிர்த்துப் போராட்டம்; வடபாதிமங்கலத்தில் கரும்பு ஆலையைச் சேர்ந்த 4000 ஏக்கர் நிலம் சும்மா கிடந்ததை எதிர்த்துப் போராட்டம் என்று பல போராட்டங்களை நடத்தினார். ஊழியரகத்தில் கதர் பயிற்சி, மாணவர்களுக்கான பயிற்சி முகாம்கள் போன்றவை நடைபெற்றன. நடராஜன் 1950ல் பத்தாம் வகுப்பு முடித்திருந்த நிலையில் குமரப்பா தலைமையில் நடந்த பயிற்சி முகாமில் கலந்துகொண்டதாகக் கூறினார். Agrarian Reform Committee தலைவராக குமரப்பா இருந்தபோது ‘நிலம் உழுபவர்க்குச் சொந்தமாக வேண்டும்,’ என்று அவர் சொன்னது ஜெகந்நாதனுக்குப் பிடித்திருந்தது. தஞ்சாவூர்ச் சிறையிலிருந்தபோது, நிலத்தில் பாடுபடுபவர்களுக்கு நிலம் சொந்தமாக வேண்டும்; அப்போதுதான் தீண்டாமையை ஒழிக்க முடியும் என்று அவர் மனதிலே ஒரு தீர்மானம் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாகவே அவர் பூமிதான இயக்கத்தில் பங்குபெற்றார். காந்திகிராம டிரஸ்ட் அலுவலகத்தின் எதிரில் தான் கிருஷ்ணம்மாவைத் திருமணம் செய்துகொண்டார். ஜி.ராமச்சந்திரன், குமரப்பா, கெய்தான் ஆகியோர் உடனிருந்தனர். கெய்தான் இருவருக்கும் சேர்த்து ஒரு சிட்டம் செய்து அவர்களது கழுத்துகளைச் சுற்றிப் போட்டார். குமரப்பா முதுகில் ஓங்கி அடித்துத் தன் ஆசிகளைத் தந்தார். மதுரைக்கு 25000 பேரைத் திரட்டிக் கொண்டு ஓர் யாத்திரை சென்றனர். தஞ்சாவூரில் 15000 ஏக்கர் நிலத்தை ஹரிஜனக் குடும்பங்களுக்குக் கொடுத்துள்ளனர். கீழ்வெண்மணியில் பல கட்சியினர் ஆண்டுவிழாவைக் கொண்டாடினாலும், அங்கிருப்பவர்கள் இவர்கள் பெயரையே சொல்கிறார்கள். அத்தனை பேருக்கும் 1 ஏக்கர் நிலம் வாங்கித்தந்தார்கள். கிருஷ்ணம்மாள் படிப்பறிவில்லாத கிராமத்துப் பெண்களுக்கும் கூட திருவருட்பா அகவலைக் கற்றுத்தந்துவிடுவார். இறால் பண்ணை எதிர்ப்புப் போராட்டத்தைப் பெண்களை முன்னிலைப் படுத்தியே நடத்தினர். 20000-25000 பேர் அவர்களாகவே வந்துவிடுவார்கள். சட்டப்பூர்வமான அவர்களது வெற்றி வெளிநாடுகளிலும் கொண்டாடப்பட்டது. ஜெகந்நாதன் மாணவர்கள் வேலை, விவசாயிகள் வேலை, தொழிலாளர்கள் வேலை, ஆதிவாசிகள் வேலை, பொருளாதார சமத்துவம் சார்ந்த வேலை என்று எப்போதும் வேலை வேலை என்றே இருந்தார். எப்போதும் போராட்டம்தான். செயல்தான். நிர்மாணப்பணிதான். தற்போது கனவில் வந்தால்கூட ஏதேனும் யாத்திரைக்கு அழைக்கிறார் என்று நடராஜன் அவர்கள் பல சுவையான அரிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். அப்பேராளுமையின் நினைவுநாளைக் கொண்டாடுவதில் மகிழ்ச்சியடைவதாகக் கூறினார்.

அடுத்த பேசியவர் கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவைச் சேர்ந்த திரு.கிருஷ்ணமூர்த்தி. சமூக மாற்றத்தில் பெண்கள் பங்கு குறித்து அவர் பேசினார். இந்தியா உலகுக்கு வழிகாட்டும். பெண்களே வழிநடத்துவார்கள். பெண்கள் ஒன்று சேர வேண்டும். நாங்கள் அஞ்சமாட்டோம், ஓடமாட்டோம், தாக்கவும் மாட்டோம் என்று எதிர்த்து நிற்குமுடியும். சிப்கோ இயக்கத்தின் போது பெண்கள் மரங்களைக் கட்டிக்கொண்டனர். இப்போது காடுகள் அழிக்கப்படுவதால் உத்தராகண்டில் நிலச்சரிவுகளும் பேரழிவுகளும் ஏற்படுகின்றன. சுற்றுச்சூழலைப் பெண்களே பாதுகாக்க முடியும். சமூக அந்தஸ்தினைப் பெறுவதற்கு அவர்கள் போராடவேண்டும். வாழ்வின் நிலையான விழுமியங்களை அவர்கள் கடைப்பிடிக்கவேண்டும் – பயன்படுத்தி எறிந்துவிடும் கொள்கைகளை அல்ல. மரபான அறிதலுக்கும் முக்கியத்துவம் தரவேண்டும். லாரி பேக்கர் போன்றவர் மரபார்ந்த அறிவினைக் கட்டிடக்கலையில் சிறப்பாகப்பயன்படுத்தியுள்ளனர். பெண்கள் கருணையோடும் புரிந்துணர்வோடும் நடந்துகொள்ளவேண்டும். விடாமுயற்சியோடு இருக்கவேண்டும். இவற்றை கிருஷ்ணம்மாள் அம்மாவிடமிருந்து கற்க வேண்டும் என்று கிருஷ்ணமூர்த்தி பெண்களுக்கான பாதை குறித்து உரையாற்றினார்.

பிறகு கோயமுத்தூர் சாந்தி ஆசிரமத் தலைவர் மருத்துவர் வினு அறம் பேசினார். கோவிட் பெருந்தொற்றின் போது குழந்தைகளிடம் ஒரு சமூக பாதுகாப்பு வலையை ஏற்படுத்துவது என்ற தலைப்பில் உரையாற்றினார். 1948ல் சர்வோதய தினம் கொண்டாட முடிவுசெய்யப்பட்டது. இன்றுவரை நாம் ஒன்றுகூடுவதற்கான தேவை இருக்கிறது என்றார். பெருந்தொற்றின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று, நாம் தனிமைப்படுத்தப்படும்போது மனித உணர்வுகள் வெளிப்படுகின்றன. இது நாம் விமர்சனங்கள் மட்டுமே செய்வதைத் தவிர்த்து, ஆழ்ந்து சிந்தித்து அசைபோட வேண்டிய தருணம். நவீன இந்தியாவோ நவீன உலகோ இப்படி மொத்தமாக ஸ்தம்பித்ததே இல்லை. பருவநிலை மாற்றம் குறித்துப் பணிசெய்யும் செயல்பாட்டாளர்கள் இப்படியான ஒரு சாத்தியத்தை எப்போதும் முன்வைத்தே இருந்திருக்கிறார்கள். எல்லா மாற்றங்களும் ஒரு நோய்த்தொற்று தோன்றுவதற்கான அறிகுறிகுளைக்கொண்டிருந்தன. நாம் இப்படியான பேரிடரைச் சந்திக்கத் தயாராக இல்லை. வறுமை, ஊட்டச்சத்துக் குறைபாடு, செல்வம் பரவியிருப்பதலில் சமமின்மை ஆகியவை நம்மை இத்தகைய பேரிடருக்கு உட்படுத்தப்படும் அபாயத்தைக் கொண்டிருந்தன. நாம் ஒரு சமூக பாதுகாப்பு வலையை உருவாக்கவேண்டும். ஆய்வுசெய்தலில் அதிக நேரமும் செயல்பாட்டில் குறைந்த நேரமும் செலவழிக்காமல் இரண்டையும் சமமாகச் செய்யவேண்டும். சாந்தி ஆசிரமம் இப்பெருந்தொற்றின் போது எளிதில் பாதிப்புக்கு ஆளாகக்கூடிய குழந்தைகள், குடும்பங்கள், தனித்திருக்கும் பெண்கள், பிற நோயாளிகள் என்று குறிப்பிட்ட தரப்பினரை முதன்மைப்படுத்தி அணுகியது. சமூகத்தோடு தொடர்ந்த இணைப்பிருந்தது பெரிய சாதகமாக இருந்தது. ஏழைகளுக்கு மிக உயர்தரமான தீர்வுகளை நாம் வழங்க வேண்டும். காந்தியச் சிந்தனைகளை இளைஞர்களுக்கு அவர்கள் ஏற்கும்படியாக எடுத்துச்செல்லவேண்டும். இனிமேலும் இத்தகைய அதிர்ச்சிகள் குறைந்த இடைவெளிகளில் ஏற்படும். அவற்றைச் சந்திக்க நாம் தயாராக வேண்டும் என்று கூறினார் வினு அறம்.

அடுத்ததாக ஜெகந்நாதன் நினைவுச் சிறப்புரையை ஏக்தா பிரிஷத்தின் தலைவர் திரு.பி.வி.ராஜகோபால் வழங்கினார். இன்று வெற்றி என்பது பணத்தைக் கொண்டும் அதிகாரபலத்தைக்கொண்டுமே அளக்கப்படுகிறது. தியாகம், அர்ப்பணிப்பு, உழைப்பு போன்ற விழுமியங்கள் மறைந்து வருகின்றன. பல சொற்கள், உதாரணமாக ஜனநாயகம், அரசியல் போன்ற சொற்கள், மறைந்தும் பொருள் திரிந்தும் வருகின்றன. அச்சொற்களை இளைஞர்களுக்கு நாம் சரியான பொருளில் மறுஅறிமுகம் செய்யவேண்டும். தலைமைப் பண்புகளுக்கான மாதிரிகளை நாம் உருவாக்கவேண்டும். இன்று ரஷ்யாவிலும், அமெரிக்காவிலும், துருக்கியிலும், பிரேசிலிலும் காணக்கிடைப்பவை சரியான முன்னுதாரணங்கள் அல்ல. ஜெகந்நாதன், கிருஷ்ணம்மாள் போன்ற உதாரணத் தலைவர்களை நாம் அறிமுகப்படுத்தவேண்டும். இளைஞர்கள் வெறும் பேச்சுகளில் ஆர்வமிழந்துவிட்டார்கள். தலைமை என்றால் என்ன என்பதைச் செயலில் காட்டவேண்டும். அடுத்ததாக, மக்களை அடுத்தக்கட்ட விழிப்புணர்வுக்கு அழைத்துச் செல்லவேண்டும். வெறும் வெறுப்புப் பேச்சுகளால் குறுகிய குழுக்களான தலைவர்களை மட்டுமே உருவாக்க முடியும். நம் நாட்டில் இப்போது தேசியத் தலைவர்களோ சர்வதேசத் தலைவர்களோ இல்லை. இந்நிலை இந்தியாவை வெகுதூரம் கொண்டு செல்ல முடியாது. சர்வோதய இயக்கம் இன்றைய பிரச்சனைகளுக்குத் தீர்வுகள் காண வேண்டும். இறால் பண்ணைகள் இவ்வளவு பெரும் பிரச்சனை என்பதை மக்கள் அறிந்திருக்கவில்லை. ஜெகந்நாதன் அதை உயர் மட்டத்துக்கு எடுத்துச்சென்றார். உச்சநீதி மன்றத் தீர்ப்பு வந்தபோது இங்கிலாந்தில்கூட அதைக்கொண்டாடினார்கள். காரணம் உலகெங்கும் பல லட்சம் மக்கள் அதனால் பாதிப்படைந்துவந்தனர். இயற்கை வளங்களையும் செல்வத்தையும் மக்களிடம் சமமாகப் பகிர்ந்தளித்தல் முக்கியமானது. பிரேசில் நாட்டில் வாசகங்களைக் கொண்டு வரலாற்றை எழுதும் முறை உண்டு. அதுபோல இந்தியாவில் இருந்துள்ள வாசகங்களை வைத்துப் பார்த்தால், வாசகங்கள்தான் மாறியிருக்கின்றனவே ஒழிய மக்கள் நிலை பெருமளவு மாறவில்லை என்பதை உணரலாம். நிலப்பிரச்சனையைத் தீர்க்க நான்கு வழிகள் உள்ளன. 1) தொலைந்து போன நிலத்தை மீட்பது 2) சரியான பட்டங்கள் பதிவு செய்யப்படாத நிலங்களுக்குப் பதிவு செய்வது. 3) சர்ச்சைக்குரிய நிலங்களில் சச்சரவைத் தீர்ப்பது. 4) நிலம் பகிர்ந்தளிப்பது. 2012ல் 1 லட்சம் மக்கள ஒரு மாதம் நடையாத்திரை சென்று போராடியதால் ஆக்ரா ஒப்பந்தம் ஏற்பட்டது. நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. ஆனால் இன்னும் அவை நடைமுறைக்கு வரவில்லை. அடிமட்டத்தில் மக்களோடு உழைப்பது இன்றியமையாதது. அதே வேளையில் கொள்கை உருவாக்கத்திலும் நாம் பங்கு வகிக்கவேண்டும். கோவிட் பெருந்தொற்று வந்தபோது நாம் நமது வளர்ச்சி மாதிரிகளை மறுபரிசீலனை செய்து மாற்றுவோம் என்று நம்பினேன். ஆனால் அது நடக்கவில்லை. இது நீடிக்கக்கூடியதன்று. பருவநிலை நெருக்கடியால் பத்தாண்டுகளில் உலகையே அழித்துவிடுவோம். எனவே, தொடர்ந்து மக்களுக்கு எழுச்சியூட்டி வரவேண்டும் என்று பி.வி.ராஜகோபால் பல முக்கியமான கருத்துகளை உள்ளடக்கிய சிறப்புரையை வழங்கினார்.

இவ்வாண்டுக்கான ஜெகந்நாதன் நினைவு சர்வோதய விருதுகள் க.மு.நடராஜன், வினு அறம் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. அவர்களுடன் சேர்ந்து கிராமப் புனரமைப்பிலும் கிராம சபைகளை வலுப்படுத்துவதிலும் ஈடுபட்டிருக்கும் இளைஞரான க.செல்வராஜ் விருதுபெற்றார். மேலும், Spark Academy என்ற நிறுவனத்தின் மூலம் ஏழை மாணவர்களுக்குப் பயிற்சியளித்தும் நாய்களுக்கான காப்பகம் நடத்தியும் வரும் கே.பி.மாரிக்குமார் என்பவருக்கும் விருதுவழங்கப்பட்டது.

இறுதியில் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் ‘ஒரு அஞ்சு நிமிஷம் பேசட்டுமா?’ என்று கேட்டு எப்போதும் போல முத்தாய்ப்பான ஒரு சிற்றுரையாற்றினார். ‘நின்னுட்டே பேசறேன். ரொம்ப சீக்கிரமா சொல்லணுமில்ல,’ என்று நின்றவாறே பேசினார். ‘இப்ப எங்கயும் போறதில்லை. வீட்டில படுத்துட்டே இருக்கேன். ஆனா மண்டைல மட்டும் சில காரியங்க ஓடிட்டே இருக்கு. அது என்ன காரியம்னா, நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகுது. ஆனா இந்த நாட்டைப் பத்தி நாம நினைக்கும் போது, ஐயா பாடின பாட்டு ஒன்னு:
உடுக்கவோ ஒரு கந்தைக்கு மேலில்லை
உண்ணவோ உணவுக்கும் வழியில்லை
படுக்கவோ பழம்பாய்க்கும் கதியில்லை
பாரில் நல்லவர் பால்சென்று பிச்சைதான்
எடுக்கவோ துணிவில்லை
என்று ஐயா இராமலிங்கம் பாடினாரு. இன்னிக்கு கோடிக்கணக்கான ஆத்மாக்கள், ஐயோ, சோறில்லையே, கண்ணில்லையே, படுக்க ஒரு பாய்கூட இல்லையே அப்படினு பதறிட்டுக்கிடக்கு. அதை எட்டி யாரும் பார்க்கறதுக்கு ஆளுக இல்ல. நம்ம சர்வோதயக் குடும்பமாவது பார்க்கணும்னு நினைச்சு நான் பண்ணினேன்…’ என்று ஆதங்கத்தோடு கலந்த தன் அனுபவங்களைப் பகிரத் தொடங்கினார். அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியிடம் சென்று, அதிகாலையில் சந்தித்து, நிலத்தைப் பெண்கள் பெயரில் பதிவு செய்யவும், இலவசமாகப் பதிவு செய்யவும் அனுமதி பெற்றதைக் கூறினார். அவர் கட்டிய வீடுகள் புயலில் அழிந்துவிட்டதால், மீண்டும் வீடுகள் கட்ட நினைக்கிறார். மீண்டும் எல்லாரையும் சென்று சந்தித்து நிதி திரட்டி இப்பணியைத் தொடங்க வேண்டும் என்கிறார். அதற்கு உறுதுணையாக, அவருக்கு ஒரு நண்பரிருப்பதாகவும், அவர் ‘எல்லாம் செயல்கூடும்’ என்று சொல்வதாகவும் கூறினார். நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிக்கொண்டிருந்த லீலா அவர்கள் கூறியது போல், அம்மாவைப் பார்க்குந்தோறும் அவரது பேச்சினைக் கேட்குந்தோறும் ஒவ்வொருக்கும் புதிய உத்வேகம் பிறக்கிறது.


க.மு.நடராஜன் : அஞ்சலி

மே 26, 2021

நம் காலத்தின் மிகப்பெரிய காந்திய ஆளுமைகளில் ஒருவரான க.மு.நடராஜன் மறைந்துவிட்டார். காந்தியக் காலத்தின் கடைசிக் கண்ணிகளில் ஒருவர். பூமிதான இயக்கத்தில் ஈடுபட்டவர். வினோபா, ஜெயப்பிரக்காஷ் நாராயணன் ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர். அவர்களது தமிழ்நாட்டுப் பயணங்களின் போது பல சமயங்களில் அவர்களது உரைகளை மொழிபெயர்த்தவர். ஜெகந்நாதன், கிருஷ்ணம்மாள் தம்பதியரின் செயல்பாடுகளில் அவர்களுக்கு உற்ற துணையாக இருந்தவர். பெரும் அறிஞர். தொண்ணூறு வயதிலும் மூன்று அச்சிதழ்களுக்கு (சர்வோதயம் மலர்கிறது, கிராம ராஜ்ஜியம், Sarvodaya Talisman) ஆசிரியராக இருந்தவர். எதையும் அஞ்சாமல் பேசவும் எழுதவும் செய்தவர். பல சர்வோதய நிறுவனங்களுக்குத் தலைவராக இருந்தார். அவரொரு வரலாற்றுப் பெட்டகம். உலகச் செய்திகள் அனைத்தையும் தொடர்ந்து கவனித்துவந்தார். மத நல்லிணக்கம், அனைவருக்குமான வளர்ச்சி ஆகியவற்றை வலியுறுத்தியும் அரசின் செயல்பாடுகளை விமர்சித்தும் எத்தனையோ தலையங்கங்கள் எழுதியுள்ளார்.

தனிப்பட்ட முறையில் என்மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தவர். கடந்த சில ஆண்டுகளாக என் மதிப்புக்குரிய வழிகாட்டியாக இருந்தவர். வாரமொருமுறையேனும் பேசாமலிருக்கமாட்டார். ஒவ்வொரு முறையும் ஒருமணிநேரமாவது பேசுவார். நான் அண்மைக் காலங்களில் அதிகம் உரையாடியது அவருடன்தான். இதுகுறித்து என் மனைவிக்கு அவர் மீது ஓர் அன்பான பொறாமையே உண்டு. புதியவர்களை சர்வோதயக் குடும்பத்துக்குள் கொண்டுவர வேண்டும் என்பதில் எப்போதும் தணியாத ஆர்வம் கொண்டிருந்தார். ஒருமுறை அவருடன் தொடர்பில் வந்துவிட்டால் தன் அன்புக்கரங்களால் பற்றிக்கொள்வார். இரண்டாண்டுகளுக்கு முன்னர் எழுத்தாளர் பாவண்ணனோடு தொடர்பு ஏற்பட்டபிறகு அவர் பல ஆளுமைகளைப் பற்றி எழுதத் தூண்டுதலாக இருந்தார். ஒவ்வொரு முறை பேசும்போதும் அவரை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி கூறுவார். என்னையும் பல மூத்த காந்தியர்களுக்கு அறிமுகப்படுத்திவைப்பார். பல நிகழ்வுகளுக்கு அழைத்துச் சென்றார். மதுரையில் இல்லாமல் போய்விட்டேன் என்று ஆதங்கப்படுவார். ஏதேனும் புத்தகம் படித்ததாகக் கூறினால் உடனே அதுகுறித்து எழுதி அனுப்பச் சொல்வார். அவரும் புத்தகங்கள் அனுப்பி வைப்பார். என் மனைவி என்னைவிட நன்றாக மொழிபெயர்ப்பதாகக் கூறி அவரையும் எழுதுவதற்குத் தூண்டுவார். மகளின் மீதும் பேரன்பு கொண்டிருந்தார்.

கடந்த எண்பது ஆண்டுகளில் நடந்த நிகழ்வுகள், வாழ்ந்த ஆளுமைகள் குறித்தெல்லாம் பதிவு செய்யப்படாத பல அரிய தகவல்களைத் தொடர்ந்து பகிர்ந்துகொண்டே இருப்பார். அவற்றை முறையாகப் பதிவு செய்யவேண்டும் என்பது என் நீண்டகால ஆவல். அவரிடமும் பிற நண்பர்களிடமும் தெரிவித்துக் கொண்டே இருந்தேன். ஆனால் செய்யாமலே விட்டுவிட்டேன். அது எனக்கு எப்போதும் பெரிய மனக்குறையாகவே இருக்கும். நம் எல்லாருக்கமே அது பெரிய இழப்புதான்.உண்மையிலேயே அவரது மரணம் ஈடுசெய்யமுடியாத பேரிழப்பு.


கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் – சுதந்திரத்தின் நிறம்

நவம்பர் 12, 2019

(18-அக்டோபர்-2019)

காந்திகிராம் பல்கலைக்கழகத்தை ஒட்டியுள்ள கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் அம்மாவின் ஊழியரகத்துக்குக் கடந்த சில ஆண்டுகளாகவே சென்று வருகிறோம். ஊழியரகம் காந்திகிராம் பல்கலைக் கழகத்துக்கும் முன்னரே கட்டப்பட்டது. ஜெகந்நாதனும், இந்தியா வந்து குடியேறி தன்னலமற்ற காந்தியப் பணியாற்றிய அமெரிக்க மிசனரியான கெய்த்தானும் சேர்ந்து அருகிலிருந்த மலையிலிருந்து பெரும் கற்களைத் தாமே சுமந்து வந்து கட்டிய கட்டிடம் இது. கஃபார் கான் முதல் மார்டின் லூதர் கிங் வரை பலரும் வந்து சென்ற இடம். தமிழகத்தின் சர்வோதய ஊழியர்களுக்குப் பயிற்சியளிக்கும் களமாக இருந்த இடம். இன்றும் உலகின் பல்வேறு இடங்களிலிருந்து காந்தி மீதும், கிருஷ்ணம்மாள் குடும்பத்தின்மீதும் பற்று கொண்ட பலரும் தொடர்ந்து வந்து செல்லும் இடம். சுதந்திரத்தின் நிறம் என்று இப்புத்தகத்தின் மூலத்தை இத்தாலிய மொழியில் எழுதிய லாரா கோப்பா அத்தகைய ஒருவர். இதை ஆங்கிலத்தில் பதிப்பித்த டேவிட் ஆல்பர்ட் இன்னொருவர். டேவிட் கடந்த நாற்பது ஆண்டுகளாக அனேகமாக ஒவ்வொரு ஆண்டும் இவர்களைக் காண இந்தியா வந்துகொண்டிருப்பவர். அவர்களது மூத்த மகன் என்றுதான் எல்லாக் கூட்டங்களிலும் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்வார்.

ஆண்டுதோறும் ஜெகந்நாதன் நினைவுநாளன்று நடைபெறும் சர்வோதய தினத்தன்று நாகப்பட்டினம் பகுதியிலிருந்து வரும் கிராமத்து மக்கள் நிறைந்திருக்க ஜெகந்நாதன் விருதுகள் வழங்கப்படுகின்றன. சென்ற ஆண்டு நண்பர்கள் குக்கூ சிவராஜ், தன்னாட்சி நந்தக்குமார் ஆகியோருக்கும் ராஜேந்திரன், சுந்தரராஜன் போன்ற மூத்த சர்வோதய ஊழியர்களுக்கும் வழங்கப்பட்டது. அப்போதுதான் குக்கூ இளைஞர்கள் பலரும் முதன்முதலாக ஊழியரகத்துக்கு வந்தனர். அவர்களை அழைப்பதில் நானும் ஒரு சிறு பங்காற்றினேன் என்பதை இன்று நிறைவுடன் நினைத்துக்கொள்கிறேன்.

நேற்றைய புத்தக வெளியீட்டு விழாவின் போது குக்கூவோடு இணைந்து பணி செய்யும் இளைஞர்களும் எழுத்தாளர் ஜெயமோகனின் நண்பர்களும் வாசகர்களும் ஊழியரகத்தை நிறைத்திருந்தனர். பொதுவாக அமைதியாக இருக்கும் ஊழியரகம் நேற்று இளமைத் துள்ளலுடன் காணப்பட்டது. கரவொலிகளும் சீழ்க்கையொலியும் சிரிப்பொலியும் கண்ணீரும் எனப் புதுப்பொலிவுடன் விளங்கியது. ஜெயமோகன் உரையும் சிறப்பாக அமைந்தது. நண்பர் பாலாவின் ‘இன்றைய காந்திகள்’ நூலை வெளியிடவும் இதைவிடப் பொருத்தமான இடம் அமைந்திருக்கமுடியாது.

‘குக்கூ ஆசிரமத்துல இருந்து வந்த பசங்க நேத்து என்னமாதிரி வேலை செஞ்சு இந்த இடத்தையெல்லாம் சுத்தப்படுத்திட்டாங்க. நாம அந்தக் காலத்துல வேலை செஞ்ச மாதிரியே இருக்காங்க,’ என்று கிருஷ்ணம்மாள் அம்மா அவரோடு பலகாலம் பணியாற்றியுள்ள சுந்தரராஜன் அவர்களிடம் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன் சொன்னார்.

‘செய் அல்லது செத்து மடி’ என்ற காந்தியின் வாசகத்தை அம்மா அடிக்கடி சொல்வார். நாங்கள் சர்வோதய தின நிகழ்ச்சிகளை நடத்துவது எப்படி என்று திட்டமிடும் போதெல்லாம், அமைதியாகக் கேட்டிருந்துவிட்டு இறுதியில் எப்போதும் ஏழைகளுக்கு வீடுகள் கட்டுவது குறித்தே பேசுவார். அதற்கு பணம் சேர்க்க வேண்டும், மக்களுக்கு போர்வைகள் சேர்க்கவேண்டும், ஆளுனரைப் பார்க்க வேண்டும், ஆட்சியரைப் பார்க்கவேண்டும், அனுமதியும் நிதியும் வாங்கவேண்டும் என்று உண்மையான செயல்திட்டங்களைப் பற்றியே அவரது கவனம் இருக்கும். நேற்றும் அவரது பேச்சை செய் அல்லது செத்து மடி என்ற ஒற்றை வரியிலேயே அடக்கலாம்.

2012ல் அவரை முதன்முதல் சந்தித்தபோது என் கரத்தைப் பற்றிக்கொண்டு வாஞ்சையுடன் பேசினார். இன்றுவரை ஒவ்வொரு முறை சந்திக்கும் போது அதே அன்புடன்தான் கரங்களைப் பற்றிக் கொள்கிறார். அவரது குளிர்ந்த ஸ்பரிசம் ஒவ்வொரு முறையும் உடலுள் மின்சாரத்தைப் பாய்ச்சுகிறது.

விடைபெறச் செல்லும் போது உறங்கிவிட்டிருந்தார். அவரது மகள் சத்யா, ‘சொல்லாமல் போய்விட்டால் அம்மா நிச்சயம் வருத்தப்படுவார்,’ என்று கூறி அவரை எழுப்பிவிட்டார். உடனே விழித்து, உறக்கம் கலைந்த சலிப்பு ஒரு கணநேரமும் தோன்றாமல், எழுந்து அமர்ந்து வழியனுப்பினார். ‘நித்யாவும் மகிழ்மலரும் ஏன் வரவில்லை, வாரம் ஒருமுறையேனும் மகிழோடு ஸ்கைப்பில் உரையாட வரவேண்டும், அம்மா கேட்டுக்கொண்டே இருக்கிறார்,’ என்றார் சத்யா அக்கா. நான் மிகவும் மதிக்கும் தலைவர் என்பதையெல்லாம் தாண்டி அவர்களது அற்புதமான குடும்பத்தில் நாங்களும் ஓர் அங்கம் என்ற உணர்வுதான் இப்போது மேலோங்குகிறது. இது எங்களுக்கு மட்டும் கிடைக்கும் தனி வரவேற்பல்ல; அவரோடு பழகும் ஒவ்வொருவருக்கும் அவரிடம் கிடைக்கும் அளவற்ற அன்பு. தம்மை நெருங்கிவரும் எல்லாரையும் தமது குடும்பத்தில் ஒருவராய் இணைத்துக் கொள்வதிலும் இவர்கள் காந்தியின் வாரிசுகளாகவே இருக்கிறார்கள்.

செயல் தரும் உற்சாகமே அம்மாவை இந்த வயதிலும் ஓடவைக்கிறது. சென்ற ஆண்டு சற்றே உடல்நலம் தளர்ந்திருந்தவர் கஜா புயலுக்குப் பின் மீண்டும் வீடுகள் கட்டும் பணி துரிதமடைந்ததால் துடியாகப் பயணம் செய்யத்தொடங்கிவிட்டார். இத்தனை இளைஞர்களுக்கு அவர் எந்தளவு ஊக்கம் தந்தாரோ அதைவிடப் பன்மடங்கு ஊக்கத்தை அவர்களது உற்சாகத்திலிருந்து அவர் அள்ளியெடுத்திருப்பார் என்பதை உறுதியாகக் கூறுவேன்.

இதைச் சாத்தியப்படுத்திய நண்பர் சிவராஜுக்கும் குக்கூ நண்பர்களுக்கும் வாழ்த்துகளும் நன்றிகளும். இப்புத்தகமும் இதை வெளியிடும் நிகழ்வை ஒரு திருவிழாவாக்கியதும் அடுத்த தலைமுறைக்கு கிருஷ்ணம்மாவையும் சர்வோதயத்தையும் காந்தியையும் கடத்திச் செல்வதற்குப் பெரிதும் பயன்படும் என்பதில் ஐயமில்லை.

நூல்: சுதந்திரத்தின் நிறம்

ஆசிரியர்: லாரா கோப்பா

வெளியீடு: தன்னறம்


சர்வோதய தினம் 2019

பிப்ரவரி 18, 2019

சுதந்திரத்துக்குப் பின்னான காந்தியத் தலைவர்களுள் மிகவும் முக்கியமான ஒருவரான ஜெகந்நாதன் நினைவு நாளையொட்டி, கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் முன்னெடுப்பில் காந்திகிராமப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் சர்வோதய தின நிகழ்வுகளில், கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து கலந்து கொள்ள முடிந்திருக்கிறது.

இவ்வாண்டுக்கான ஜெகந்நாதன் விருது கட்டிடத் தொழிலாளர் சங்கம் மற்றும் பல்வேறு சமூகப்பணிகளில் ஈடுபட்டு வரும் ஆர்.கீதா, மூத்த சர்வோதய இயக்கச் செயல்பாட்டாளர்களான சுந்தரராஜன், ராஜேந்திரன் ஆகியோருக்கும், மறைந்த இத்தாலிய காந்தியத் தலைவர் ஆல்பர்டோ லபாட்டே ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

இந்த மூத்த செயல்பாட்டாளர்களோடு சேர்த்து இளம் நண்பர்களான ‘தன்னாட்சி’ நந்தகுமார், ‘குக்கூ’ சிவராஜ் ஆகியோருக்கும் இவ்விருது வழங்கப்பட்டது மிகுந்த மகிழ்ச்சி அளித்தது.

நந்தகுமார் சிவா கிராம சபைகள் குறித்த விழப்புணர்வை ஏற்படுத்துவதில் கடந்த சில ஆண்டுகளாக பெரும்பங்காற்றியிருக்கிறார்.

சிவராஜ் குழந்தைகளோடு பணியாற்றுவதற்கு ஒரு பெரிய இளைஞர் திரளை ஈர்த்திருக்கிறார்.

முந்தைய நாள், மாணவர்களோடு பேசிய ‘துலா’ அனந்து சமூகத்தின் மீதும், இயற்கையின் மீதும் கரிசனத்துடன் செய்ய வேண்டிய தொழில்கள் குறித்த தன் விரிவான, செறிவான, உணர்வுப்பூர்வமான உரை மூலம் வந்திருந்த அனைவரின் மனசாட்சிகளையும் ஓர் உலுக்கு உலுக்கிவிட்டார்.

நண்பர்கள் சிவகுருநாதன், ஸ்டாலின் ஆகியோரும் மூன்று நாட்களும் கைத்தறி ஆடைகள், கருப்பட்டி கடலைமிட்டாய், குக்கூ நூல்கள் ஆகியவற்றுக்கான விற்பனையரங்குகளை அமைத்து, மாணவர்களோடு உரையாடி சமூகநலத் தொழில்கள் குறித்த ஓர் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

விழா முடிந்தபிறகு, கடந்த ஐம்பது வருடங்களாகத் தொடர்ந்து இந்தியா வந்துகொண்டிருக்கும் அமெரிக்கப் பேராசிரியர் டேவிட் வில்லிஸ் தன் மனைவி மிக்காவுடன் எங்களோடு வந்து எங்கள் கிராமத்திலும், கோவையில் பெற்றோர் வீட்டிலும் தங்கியிருந்தது மாறுபட்ட ஓர் அனுபவமாக அமைந்தது. கிராம மாணவர்களுக்கும் அயல்நாட்டினரோடு முதன்முதலாக உரையாடி பல்வேறு கேள்விகளைத் தொடுத்து உறவாட ஒரு வாய்ப்பு.

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.


சர்வோதய தின நிகழ்வுகள் – சில நினைவுகள்

மே 30, 2016

சர்வோதயம் மலர்கிறது மார்ச் 2016 இதழில் வெளிவந்த கட்டுரை.


 

சர்வோதய இயக்கத்தில் அர்ப்பணிப்புடன் பங்காற்றி, உயிர்ப்புடன் வழிநடத்திய ஜெகந்நாதன் அவர்களை நினைவுகூரும் கருத்தரங்கம் ஒரு மாறுபட்ட முயற்சியாக ஆண்டுதோறும் (பிப்ரவரி 10,11,12 தேதிகளில்) மேற்கொள்ளப்ப்பட்டு வருகிறது. ஜெகந்நாதன் என்கிற ஒரு தனிநபரைப் பற்றிய அஞ்சலிகளாகவும், பலராலும் மதிக்கப்படுகிற ஒரு தலைவரைப் பற்றிய புகழுரைகளாகவும் மட்டும் குறுக்கிவிடாமல், அவர் விரும்பிய சமூக மாற்றத்திற்கான ஒரு தேடலாக இந்த மூன்று தினங்கள் அமைந்துவிடுகின்றன. இவ்வாண்டு கல்வி, மருத்துவம் ஆகியவை குறித்த கருத்தரங்குகள் நடைபெற்றன. துறை வல்லுனர்களும், இளம் மாணவர்களும் ஒன்றிணைந்து சிந்தித்து, கருத்துகளைப் பரிமாறி, செயலூக்கம் பெற்றுச் செல்வதற்கான ஒரு களமாக இந்த நிகழ்ச்சி அமைந்துவிட்டது.

முதல் நாளன்று, மருத்துவர் பூமிக்குமார் வரவேற்புரையாற்ற, க.மு.நடராஜன் அவர்கள் தொடக்கவுரையாற்றினார்.   ஜகந்நாதன் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். ஆசிரியராக இருந்தபோது ஜகந்நாதன் தனது கைக்கடிகாரத்தை மகாத்மா காந்தியிடம் ஹிரிஜன் சேவை நிதிக்காக நேரடியாக அளித்ததைப் பற்றிப் பேசினார். மு.அருணாசலம் போன்ற பல சர்வோதயத் தலைவர்கள் அவரது மாணவர்களாக இருந்து உருவானவர்கள் என்பதைச் சுட்டிக்காட்டினார். ஜகந்நாதன் ஜவ்வாது மலையில் பழங்குடியினக் குழந்தைகளுக்குக் கல்வி பயிற்றுவித்ததையும் நினைவுகூர்ந்தார்.

அடுத்து பேசிய காந்திகிராம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர், முனைவர் பங்கஜம், பள்ளிமுதல் பட்டப்படிப்புவரை ஆதாரக்கல்வி முறையில் தான் பயின்றதாகக் கூறினார். எதிர்காலக் கல்வித்திட்டம் மாணவர்களிடமிருந்து வரவேண்டும் என்றார். எல்லாருக்குமான கல்வி மறுக்கப்படுவது, தரமான கல்வி எல்லாருக்கும் கிடைக்காதது, ஊரகப் பகுதிகளில் அதிக மாணவர்கள் பள்ளியிலிருந்து விலகிவிடுவது, கற்றவர்கள் வேலைவாய்ப்பில்லாமல் தவிப்பது, திறன்மிக்கவர்கள் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்வது, ஆசிரியர்களின் தரத்தில் வீழ்ச்சி என்று இன்றைய கல்வித்துறை எதிர்நோக்கும் சவால்களைப் பட்டியலிட்டார்.  ஆதாரக் கல்வி முறை காலத்திற்கேற்ற மாற்றங்களுடன் வளர்க்கப்பட வேண்டும்; ஆய்வுகள் பட்டங்களும் பதவியுயர்வும் பெறுவதற்காகவன்றி, செயல்படுத்தப்படக்கூடிய தீர்வுகளை நோக்கியனவாக இருக்க வேண்டும்; தில்லியிருந்து பாடத்திட்டம் வகுக்கப்படாமல், கிராமங்களின் தனித்தன்மைக்கேற்ப உள்ளூரில் வடிவமைக்கப்படவேண்டும்; இளவயதிலேயே திறமைகளை அடையாளம் காணவேண்டும்; ஆரம்பக்கல்விக்கும் முன்பிருந்தே குழந்தைகளும் அதிக அறிவூட்டம் அளிக்கவேண்டும்; மாணவர்கள் தேர்வு செய்யப் பல்வேறு மாற்றுகளை வழங்கவேண்டும்; நீடிக்கத்தக்க வளர்ச்சியை நோக்கி நகர வேண்டும் என்று மேலும் பல கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.

அடுத்து பேசிய ஜெனிஃபர் லேட், அமெரிக்காவில் ‘Class Action’ என்ற அமைப்பை நடத்தி வருபவர்.  பொருளாதார மாற்றங்களும், பருவநிலை மாற்றங்களும் நிகழ்ந்துவரும் சூழலில் உறுதியான சமூகக்கட்டமைப்பினை உருவாக்குவது எப்படி என்கிற கேள்வியை எழுப்பி அதனுள் கல்வியின் பங்கினைப் பற்றிப் பேசினார். கல்வியின் அடித்தளம் என்று ஆறு அம்சங்களை அடையாளப்படுத்தினார்: ஒவ்வொருவருக்குள்ளும் ஓர் ஒளி உள்ளது – கல்வியின் நோக்கம் அந்த ஒளியை வெளிக்கொணர்வது; சூழலுக்கேற்ப, காலத்திற்கேற்ப மாறும் தன்மை; குடும்பம், சமூகம், சரித்திரம் ஆகியவற்றை கணக்கில் கொள்ளும் அமைப்பு சார்ந்த சிந்தனை; பெருமாற்றம் விளைவிக்கும் வழிகளைக் கண்டடைதல்; நீடிக்கும்திறன் மீதான கவனம் – ஏழு தலைமுறைகளின் மீதான பாதிப்பினை மனதில் வைத்து முடிவெடுத்தல்; துணிவு. அதைத் தொடர்ந்து, ஜெனிஃபர் என்னோடும் என் மனைவி நித்யாவோடும் ஓர் உரையாடலை நிகழ்த்தியது இனிய அனுபவமாக அமைந்தது. பெருநிறுவன வாழ்விலிருந்து விலகி கிராமத்திற்கு இடம்பெயர்ந்து விவசாயத்தையும் கிராமக் குழந்தைகளுக்கு கற்பித்தலையும் மேற்கொண்டிருப்பதையும், எங்கள் மகள் வீட்டிலேயே கற்றுக்கொள்வதையும் கவனப்படுத்தினார்.

பின்னர் குழுமியிருந்த அனைவரும் சிறு குழுக்களாகப் பிரிந்து, கல்வி குறித்து உரையாடி, தங்கள் கருத்துகளை முன்வைத்தனர். குழுவிவாதங்களின் சாரமாகப் பின்வரும் கருத்துகள் அமைந்தன:

கல்வி சார்ந்து திட்டமிடுதல் பன்முகப்படுத்தப்படவேண்டும். உள்ளூர் தேவைகளுக்கும் சூழலுக்கும் ஏற்ப அமைய வேண்டும்.
ஆதாரக் கல்வியின் அடிப்படையில் கைத்தொழில் மூலமாகப் பல செய்திகள் கற்றுத்தரப்பட வேண்டும்.
அறம் குறித்தும் விழுமியங்கள் குறித்தும் கவனத்தை ஏற்படுத்தவேண்டும்.
மாணவர்களின் திறன்கள் மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே அளவிடப்படக்கூடாது.
எல்லாருக்கும் தரமான கல்விக்கான சமமான வாய்ப்புகள் வழங்கப்படவேண்டும்.
தாய்மொழி பயிற்று மொழியாக அமையவேண்டும்.
ஆசிரியர்கள் பயிற்சியிலும் மதிப்பிடலிலும் மாற்றங்கள் நிகழவேண்டும்.
அரசுப் பள்ளிகளின் தரம் உயர்த்தப்படவேண்டும்.
அச்சமின்றி எல்லாரும் கற்கும் நிலை உருவாகவேண்டும்.

இரண்டாம் நாளுக்கான கருப்பொருளாக மருத்துவம் அமைய, நிகழ்ச்சிகளை டாக்டர்.சத்யா ஒருங்கிணைத்தார். அரவிந்த் கண்மருத்துவமனையின் நிறுவனர்களில் ஒருவரான கண்மருத்துவர். நாச்சியார் தன் நிறுவனத்தின் சமூகப்பயணம் குறித்து உரையாற்றினார். உலகில் 39 மில்லியன் மக்களும் இந்தியாவில் 12 மில்லியன் மக்களும் கண்பார்வை இழந்துள்ளதாகவும், 80 விழுக்காடு பார்வைக் குறைபாடுகளை மருத்துவம் மூலமாகக் குணப்படுத்த முடியும் என்றார். அரவிந்த் மருத்துவமனை கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள 56 ஆரம்ப சுகாதார மையங்களின் மூலமாக மக்களை நேரடியாகச் சென்றடைவதாகக் கூறினார். நகரங்களிலுள்ள பெருமருத்துவமனைகளைவிட கிராம மையங்கள் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை; அவற்றில் உள்ளூர் மக்களுக்கே பயிற்சி அளித்துப் பணியில் அமர்த்த வேண்டும் என்றார். இலவச மருத்துவம் அளித்தாலும் நோயுற்றவர்களுக்கு அது இலவசமாக இருப்பதில்லை; அந்த உதவியைப் பெற அவர்கள் குறிப்பிடத்தக்க விலையை அவர்கள் வழங்க வேண்டியிருக்கிறது என்று அவர் கூறியது முக்கியமான திறப்பாக எனக்கு அமைந்தது.

மனநல மருத்துவரும் எம்.எஸ்.செல்லமுத்து அறக்கட்டளை நிறுவனருமான ராமசுப்பிரமணியன் சமூக மனநல மருத்துவத்தில் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். இன்றைய சமூகம் மனநிலைக் குறைபாடுகளை ஒரு சாபமாகக் கருதுகிறது; தனிநபர்கள் மட்டுமல்லாமல் குடும்பம் முழுவதும் பாதிக்கப்படுகிறது என்றார். அறியாமையாலும், பயத்தாலும், அதிக கட்டணத்தாலும் மனநல மருத்துவர்களைப் பெரும்பாலானவர்கள் அணுகவதில்லை; ஆனால் ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடித்து சிகிச்சை அளித்தால் எல்லா மனநோய்களும் குணப்படுத்தகூடியவையே என்றார். அவரது அறக்கட்டளை வாயிலாக முசுண்டகிரிப்பட்டி என்ற கிராமத்தில் ஒரு மனநல மருத்துவமனை தொடங்கியதன் பின்னணியைப் பகிர்ந்துகொண்டார். ஆரம்பத்தில் கிராம மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை; ஆனால் அதே கிராமத்தைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரைக் குணப்படுத்தி, அவரையே பணியில் அமர்த்தியபிறகு கிராம மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டது என்றார். ஏர்வாடி தீவிபத்துக்குப் பிறகு, அங்கு இருந்த மத நிறுவனங்களோடு இணைந்து, அவர்கள் மூலமாகவே மனநல மருத்துவர்களிடம் நோயாளிகளை அனுப்பும்படியான ஒரு ஏற்பாட்டினைச் செய்ததாகக் கூறினார். சமூக மாற்றங்களுக்கான நடவடிக்கைகளின் போது, மத நம்பிக்கைகளோடு முரண் ஏற்படும்போது கையாள்வதற்குச் சிறந்த வழியாக இது தெரிந்தது.

நார்வே நாட்டில் ஸ்டாவெங்கர் பல்கலைக்கழக மருத்துவமனையின் பல்பண்பாட்டு மையத்தில் மனநல மருத்துவராக உள்ள ஜோனே சான்சே ஓல்சன் (Jone Schanche Olsen), போரில் பாதிக்கப்பட்டவர்களோடும் அகதிகளோடும் பணிசெய்ததில் கிடைத்த அனுபவங்களைப் பதிவுசெய்தார். எரித்ரியா போன்ற ஆப்ரிக்க நாடுகளிலிருந்து நார்வே போன்ற ஐரோப்பிய நாடுகளுக்கு பல ஆண்டுகளாக அகதிகள் வந்த வண்ணம் உள்ளனர். தற்போது சிரியாவிலிருந்தும் அகதிகள் பெருமளவில் வரத்தொடங்கியுள்ளனர். பல நாடுகளைத் தரை வழியாகவும், நீர் மார்க்கமாகவும் இவர்கள் கடந்து வரவேண்டியுள்ளது. இவர்களில் பலரும் சிறுவர்கள்; பதின்பருவத்தினர். பல கோர சம்பவங்களைக் கண்டதாலும், பாலியல் ரீதியான துன்பங்களை அனுபவித்ததாலும் இவர்களது மனநிலை பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறது. இவர்களோடு பணி செய்ய செவிலியர்க்கும், சமூகப் பணியாளர்களுக்கும் பயிற்சி வழங்கப்படுகிறது. குழு சிகிச்சை வழங்கப்படுகிறது.

டேவிட் ஆல்பர்ட் இந்தியாவிற்கு நாற்பது ஆண்டு காலமாக வந்துகொண்டிருப்பவர்; ஜகந்நாதன்- கிருஷ்ணம்மாள் தம்பதியினரோடு நீண்ட காலமாக நெருங்கிய தொடர்பிலிருப்பவர்; இல்லக்கல்வி (Homeschooling) குறித்து பல நூல்களை எழுதியுள்ளார். Friendly Water for the World என்கிற நிறுவனத்தின் மூலமாக ஆப்ரிக்க நாடுகளிலும் இந்தியாவிலும் சுகாதாரமான குடிநீர் வழங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். கல்விக்கும் சுகாதாரத்துக்கும் குடிநீருக்குமான தொடர்பினைக் குறித்துப் பேசினார். இந்தியாவில் 40 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததைவிட நீரின் தரம் குறைந்துவிட்டது. நிலத்தடி நீர்நிலை தாழ்ந்துவிட்டது. 48 விழுக்காடு குழந்தைகள் பிறப்பின்போது ஊட்டச்சத்துக்குறைவால் வளர்ச்சி குன்றிப் பிறக்கின்றனர். குழந்தைகள் நீரினால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அமெரிக்காவிலும்கூட கறுப்பினக் குழந்தைகளிடம் ஊட்டச்சத்துக் குறைபாடு இந்தியா அளவிற்கே உள்ளது. அவர்களிடம் இறப்புவீதமும் இந்தியாவின் அளவிலேயே உள்ளது. நீர் சுத்திகரிப்பு, நீர் மேலாண்மை குறித்த அறிவினை நமது கல்வி நிறுவனங்கள் வழங்கத் தவறிவிட்டன. ஒவ்வொரு ஆசிரியரும் கழிப்பறைகளைச் சுத்தம் செய்ய வேண்டும்; ஒவ்வொரு குழந்தைக்கும் சுத்தமான நீர் குறித்தும் கைகளைச் சுத்தம் செய்வது குறித்தும் கற்றுத்தர வேண்டும். காந்தி கழிப்பறைகள் தொடர்பாகச் செய்த சோதனைகள் அனைத்தும் சத்திய சோதனைகள். ஊழலும், சுகாதாரமற்ற நிலையை ஏற்றுக்கொள்வதும் மனநலக் குறைபாடுகளே என்று பல விஷயங்களைத் தொட்டுப் பேசிய டேவிட், அவற்றையெல்லாம் நீருடனான தொடர்பால் இணைத்தார்.

மூன்றாம் நாள் (பிப்ரவரி 12) ஜகந்நாதனின் நினைவுநாள். சர்வோதய தினமாகக் கொண்டாடப்படுகிறது. காந்தியப் பணிகளில் ஈடுபட்டுவரும் பல ஊழியர்கள் ஒன்றுகூடும் தினம் இது. கிருஷ்ணம்மாள்-ஜகந்நாதன் பணியாற்றிய நாகப்பட்டினம் பகுதியிலிருந்து பல கிராம மக்களும் வந்து கூடியிருந்தனர். ம.பா.குருசாமி, பாதமுத்து, மார்க்கண்டன், மருத்துவர் ஜீவானந்தம் ஆகியோர் உரையாற்றினர். இனாமுல் ஹசன், ராஜேந்திரன் ஆகியோர் வெள்ள நிவாரணப் பணிகளின் போது ஏற்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்தனர். மருத்துவப் பணியில் நெடுங்காலமாகப் பெருஞ்சேவை செய்துவரும் மருத்துவர் கௌசல்யா தேவி, சர்வோதய இயக்கங்களில் தொடர்ந்து பணியாற்றித் தன் பாடல்கள் மூலம் உணர்வெழுச்சி ஏற்படுத்திவரும் வேங்கையன் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. காந்திகிராம் பல்கலைக்கழகத் துணைவேந்தர் எஸ். நடராஜன் மருத்துவர் கௌசல்யா தேவி குறித்தும், க.மு.நடராஜன் வேங்கையன் குறித்தும் பேசினர்.

இந்த மூன்று நாட்களும் மேலும் உத்வேகத்துடன் நாம் மேற்கொண்டுள்ள பணிகளைச் செய்வதற்கும் இன்னும் பல பணிகளை மேற்கொள்வதற்கும் ஊக்கம் தருவனவாக அமைந்தன. மூன்று நாட்களின் முத்தாய்ப்பாக அமைந்த நிகழ்வு, கடைசி நாள் காலை நிகழ்வுகள் முடிவுக்கு வரும் போது நடந்தது. பலரும் பேசிய பிறகு, உணவு வேளையும் நெருங்க, குழுமியிருந்தவர்களின் கவனம் சற்றே குலையத் தொடங்கியிருந்த போது, கிருஷ்ணம்மாள் ஜகந்நாதன் பேச வேண்டிய தருணம் வந்தது. மேடையில் அமர்ந்திருந்த அவர் எழுந்து வேகமாக நடக்கத்தொடங்கினார்; அறையின் நடுவில் நின்று ஒரு சிறு பிரார்த்தனைக்குப் பின் உருக்கமான பேச்சுத் தமிழில் உரையாடத் தொடங்கினார்.  அவர் தட்டிவிட்ட மைக்கை ஒருவர் பிடிவாதமாக நீட்ட வேண்டியிருந்தது.  என்னருகில் மொழிபுரியாதபோதும், மரியாதை நிமித்தம் அத்தனை நேரம் பொறுமையாக அமர்ந்திருந்த அமெரிக்க நண்பர், ‘This is the way to do it,” என்று எழுந்துவிட்டார். கூட்டம் நடந்த அதே இடத்தில், 1948ல் தான் ஒரு விடுதியில் தலைவியாக இருந்து, அங்கிருந்த ஆதரவற்ற பெண்களைச் செவிலியராக்க உதவியதையும், பல ஆண்டுகளுக்குப் பின்னர் அங்கிருந்தபோது கீழவெண்மணிப் படுகொலை பற்றிக் கேள்விப்பட்டவுடன் அங்கு விரைந்து சென்று, அங்கேயே தங்கி நிலமற்ற தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நிலம் வாங்கித் தரும் பணியைத் தொடங்கியதையும் நினைவு கூர்ந்தார். “பேப்ர்ல வந்துச்சு – எல்லாருக்கும் பொங்கலுக்கு அரிசி, வெல்லம், ஒரு துண்டு கரும்பு….வக்கத்தா போனீங்க, கழுதைகளா? வக்கத்துப் போனீங்களேடா – பத்து ரூபாய்க்கு அரிசியும், வெல்லமும், கரும்பும் வாங்க. இத்தனை வருஷமா ஆட்சியில இருந்தவங்க, அறுபது ஆண்டுகள் இந்த நாட்டை ஆண்டவங்கெல்லாம் என்ன வேலை செய்தாங்க. மக்களுக்கு நிலம் கொடுத்தானா, வீடு கட்டுனானா, அல்லது எல்லாரையும் படிக்க வைச்சானா, மிஞ்சினதெல்லாம் ‘இவன் தாழ்ந்தவன்’னு பேரு,” என்று முடித்துவிட்டு சட்டென்று திரும்பிவிட்டார். அதுவரை நீடித்திருந்த துல்லியமான அமைதி, சில நொடிகள் திக்கற்று நின்று, பின் கரவொலியில் கலைந்தது. அந்த சில கணங்கள், கூட்டத்துள் மின்சாரம் பாய்ந்த உணர்வு எழுந்தது.


ஜகந்நாதன் – ஒரு காந்தியப் போராளிக்கு அஞ்சலி

பிப்ரவரி 12, 2013

தமிழகத்தின் முக்கியமான காந்தியப் போராளிகளில் ஒருவரான ஜகந்நாதன் இன்று மரணமடைந்த செய்தி படித்தேன். மனைவி கிருஷ்ணம்மாள் ஜகந்நாதனோடு இணைந்து, பல இயக்கங்களை முன்னின்று நடத்தியவர்.

ஐந்திணை விழாவின் போது கிருஷ்ணம்மாள் ஜகந்நாதன் அம்மாவைச் சந்தித்தேன். தனியே உரையாடவும் வாய்ப்பு கிடைத்தது. இந்த 88 வயதிலும், வாரத்தில் பாதியை நாகப்பட்டினத்தில் சமூகப் பணிகளுக்காகவும், மீதியை செங்கல்பட்டில் உடல்நலமற்று இருந்த ஜகந்நாதன் ஐயாவைப் பார்த்துக் கொள்ளவும் பயன்படுத்திவந்தார். அவரைச் சந்தித்த எல்லார் மீதும் அவரின் அன்பின் குளுமை பொழிந்தது. இறால் பண்ணைகளை முதலில் பார்த்தபோது, ஜகந்நாதன் ஐயா ‘இதற்காகவா நாங்கள் பிரிட்டிஷ் சிறைகளில் புழுத்துப்போன உணவை உண்டோம்’ என்று மீண்டும் சிறைசெல்லத் துணிந்துவிட்டதைப் பற்றிக் கூறியபோது மனம் நெகிழாதவர்களே அந்த அறையில் இருந்திருக்கமுடியாது. (நான் அப்போது எழுதிய பதிவு இங்கே.)

பிறிதொருமுறை அவரைச் சந்திக்கவிரும்பி, அலைபேசியில் பேசியபோதும், என்னை நினைவு படுத்திக்கொள்ள முடியாவிட்டாலும், அதே அன்பு மிதந்துவந்தது. ஐயாவின் உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டு காந்திகிராம் சென்றுவிட்டதாகக் கூறினார். ஜனவரி முடிந்தபிறகு, அவர் உடல்நிலை தேறியபின் பேசுவோம் என்று நம்பிக்கையுடன் கூறினார்.

இந்த அபூர்வ தம்பதியரின் பெரும் பங்களிப்புகள் நம்மில் பலருக்கும் தெரியாமலே உள்ளது. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், மாணவர்களிடம் அவர்களின் கதையைப் பகிர்ந்து வருகிறேன்.

இந்தப் பேரிழப்பிலிருந்து அம்மா மீண்டு வரவேண்டும்.