சென்ற மாதம் எங்கள் கிராமத்துப் பெரியவர் ஒருவருக்கு சிறுநீர்ப்பையில் ஏதோ பிரச்சனை, கோவை அரசு மருத்துவமனையில் ‘ஆப்பரேசன்’ ஒன்று நடக்கவிருப்பதாகச் சொன்னார்கள். அவர் பண்ணையம் செய்யும் தோட்டம் எங்கள் தோட்டத்திற்குச் செல்லும் வழியில்தான் உள்ளது. அவர்களுக்கு ஒரே மகள் – கணவனையிழந்தவர். 10,11,12வது படிக்கும் மூன்று பேத்திகள்.
அறுவைசிகிச்சைக்கு முந்தைய நாள் மாலை அவரைப் பார்க்கச் சென்றிருந்தேன்.
அவர்களது தோட்டத்து உரிமையாளரின் தந்தை வந்திருந்ததாகவும், அவர்களிடம் பணம் தந்துசென்றதாகவும் சொன்னார்கள்.
‘பத்தாயிரம் செலவாயிருக்குங்க’
‘இங்க என்ன செலவு?’
‘காசு கொடுத்தாத்தான் நமக்கு ஓரளவுக்கு நல்ல பெட் கெடைக்கும். இல்லைனா, அப்படியே ஒரு ஓரத்துல தூக்கிப் போட்டுருவாங்க.’
‘…’
‘தனியார் ஆஸ்பித்திரில பண்ணியிருந்தா, ஒன்றரை லட்சம் செலவாகும்னு சொன்னாங்க. ஒன்றரை லட்சத்துக்குப் பத்தாயிரம் பரவாயில்லைதானுங்க? அதெல்லாம் கணக்குப் பார்க்காம காசு கொடுத்துத்தான் ஆகணும்ங்க’
நர்ஸிடம் கேட்டு கேஸ் ஷீட் பார்த்த்தில், அவருக்கு இன்று cystoscopy செய்ய இருப்பதாக எழுதப்பட்டிருந்தது. இணையத்தில் தேடி நான் புரிந்துகொண்டவரை, இது மேலும் என்ன பிரச்சனை என்று ஆய்வதற்காகப் பயன்படுத்தப்படுகிறது; சில கருவிகளைக்கொண்டு சிறய கட்டிகளை நீக்கவும் பயன்படுத்தலாம் என்றும் குறிப்பிடுகிறார்கள். இவருக்கு என்ன நோக்கத்தில் செய்கிறார்கள் என்பது அப்போது தெளிவாகத்தெரியவில்லை.
அடுத்த நாள் அந்தப் பெரியவரின் மனைவி அழைத்திருந்தார். பெரியவரோடு அவர் மட்டுமே தனியாக இருந்தார். ஒரு வாரமாக, குளிர்ந்த தரையில் துணிவிரித்துப் படுத்திருந்ததில் அவருக்கும் சளி. பொதுவாகவே அவரது குரலில் ஒரு நடுக்கம் இருக்கும். அப்போது தொலைபேசியில் அவரது குரல் நடுக்கம் அதிகமாகத் தெரிந்தது.
‘ஐயாவுக்கு இன்னிக்கு ஆப்பரேசன் செஞ்சாச்சுங்க.’
‘வார்டுக்கு வந்துட்டாருங்களா? எப்படி இருக்காரு?’
‘நல்லா இருக்காருங்க. ட்ரிப்ஸ் எறக்கிட்டிருக்காங்க.’
‘டாக்டர் என்ன சென்னாருங்க?’
‘டாக்டர் கிட்ட நாமெல்லாம் கேக்க முடியாதுங்க.’
‘இல்ல, ஐயாவுக்கு இன்னிக்கு செஞ்ச சிகிச்சை, இன்னியும் ஏதாவது பிரச்சனையிருக்கான்னு தெரிஞ்சக்கிறதுக்காவுந்தான். அதான் ஏதாவது சொன்னாங்களான்னு கேட்டேன்.’
‘டாக்டரெல்லாம் நம்ம கிட்ட பேச மாட்டாருங்க. நர்ஸ்கிட்ட எழுதிக்கொடுத்துட்டுப் போயிருவாங்க.’
‘நர்ஸ்கிட்ட கேட்டீங்களா?’
‘நர்ஸ் எல்லாம் நம்ம கிட்ட எதுவும் சொல்ல மாட்டாங்க.’
‘சரிங்க. நான் அங்க வர்றப்பப் பார்த்துக் கேட்கிறேங்க. உங்களுக்கு ஏதாவது தேவைப்படுதுங்களா?’
‘இல்ல, ஒண்ணும் வேண்டாம் தம்பி.’
பிறகு நானும், நித்யாவும் அடுத்த நாளும் மருத்துவமனை சென்று அவர்களைப் பார்த்தோம்.
‘எப்படியிருக்கு, என்ன பிரச்சனைன்னு டாக்டரைக் கேட்கலாமில்லைங்க? கேட்டா, அவங்க கண்டிப்பா சொல்லுவாங்க.’
‘இல்லீங்க. அப்படியெல்லாம் கேட்க முடியாதுங்க. நம்மள வெளிய அனுப்பிச்சுருவாங்க.’
நாங்கள் மருத்துவரைக் காணச் சென்ற போது, ஆரம்பத்தில் அனுமதி மறுக்கப்பட்டது. நித்யா தானும் மருத்துவர் என்றதும் உடனே உள்ளே அனுப்பினார்கள். மருத்துவரும் அவளை அமர வைத்துப் பேசினார். என்ன சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறித்துவிளக்கினார். சிறுநீர்ப்பைக் கட்டியின் தன்மை பற்றித் தெரிந்துகொள்வதற்காக cystoscopyயும், TURBTம் செய்திருப்பதாகவும், புற்றுநோய் இருப்பதாகச் சந்தேகிப்பதாகவும், ஆய்வு முடிவுகள் வரப் பத்து நாட்கள் ஆகுமென்றும் சொன்னார். நான்கு நாட்களில் வீட்டுக்குச் சென்றுவிட்டு, மீண்டும் ஒரு வாரம் கழித்து வரலாம் என்றார்.
திரும்பும் போது, ஒரு வார்ட்டில் மருத்துவர்கள் ரவுண்ட்ஸ் வந்திருந்தார்கள். துணைக்கு இருப்பவர்கள் எல்லாரும் வெளியேற்றப்பட்டிருந்தனர்.
’28 நாளா ஆஸ்பித்திரில இருந்தோம்க. ஆப்பிரேசனெல்லாம் பண்ணினாங்க. ஆனா என்ன பிரச்சனைனு யாரும் இதுவரைக்கும் சொல்லல,’ என்றார் எங்களுக்கு வழிசொல்லி அனுப்பியவர்.
பெரியவரிடம் நாங்கள் புற்றுநோய் பற்றி எதுவும் சொல்லவில்லை. ஆய்வு முடிவுகள் வரட்டும் என்றிருந்தோம். அப்போது செய்யப்பட்டது சிகிச்சை அல்ல என்பதை மட்டும் விளக்கினோம். ஆறுதல் வார்த்தைகள் சொல்லிவிட்டு எங்கள் பணிகளுக்குத் திரும்பினோம்.
அதன்பிறகு அவ்வார இறுதியில் அவர்கள் வீடு திரும்பிவிட்டனர். இரண்டு வாரங்கள் கழித்து மறுபடி வரச்சொல்லியிருப்பதாகத் தெரிவித்தனர். அவர்கள் மீண்டும் சென்றபோது ஆய்வு முடிவுகள் வரவில்லை என்று கூறிவிட்டார்கள். பாரசெட்டமால் மாத்திரைகளும் விட்டமின் மாத்திரைகளும் தந்திருந்தார்கள். பெரியவர் வலி தாங்க முடியவில்லை என்று அழுதார். அதற்குள்ளாகப் பாதியாக இளைத்திருந்தார்.
மறுவாரம் சென்றபோதும், அவர்களுக்கு என்ன பிரச்சனை என்பது விளக்கப்படவே இல்லை. ஆனால், வேறு மருத்துவப் பிரிவுக்கு அவரை மாற்றியிருந்தார்கள். அவர்கள் வேறு சில ஆய்வுகள் எழுதிக்கொடுத்திருந்தார்கள். ஆனால், எடுத்து முடிக்கும் முன்னர் அந்த லேப்கள் மூடப்பட்டுவிட்டன. மீண்டும் அதற்காகக் கோவைக்குப் பயணம் செய்யவேண்டியிருந்தது. புதிதாக மாற்றப்பட்ட துறையில், அவர்கள் ஆய்வுக்காகக் கொடுத்த தாளினைப் பார்த்தோம். அது புற்றுநோய்த் துறை என்பது புரிந்தது. அந்தப் பெரியவரின் பேத்தி அரசுப் பள்ளியில் 12வது படிக்கிறாள் – அவளும் அந்தத் தாளைப் பார்த்துவிட்டு, ‘கான்சர் வார்டுனு போட்டிருக்கு. தாத்தாவுக்கு கான்சரா பாட்டி’ என்று கேட்டிருக்கிறாள்.
இப்படியாக இவர்கள் மேலும் மூன்று முறை கோவை அரசு மருத்துவமனைக்குச் செல்லவேண்டியிருந்தது. 45 கிலோமீட்டர். பேருந்தில் சென்றால் 3 மணிநேரத்திற்கு மேல் ஆகும். 3 பேருந்துகள் மாறவேண்டியிருக்கும். எனவே, ஒவ்வொரு முறையும், பக்கத்துத் தோட்டத்திலிருந்த காரை இரவல் வாங்கி, ஒரு ஓட்டுனர் வைத்து, பெட்ரோல் போட்டுக்கொண்டு சென்றார்கள். ஒருநாளைக்கு 3000 ரூபாய்க்கு மேல் செலவு. கடைசி முறை ஆட்டோவில் சென்றிருக்கிறார்கள். ஆட்டோவின் குலுங்கலில், பெரியவருக்குத் தாங்கவொண்ணாப் பெருவலி ஏற்பட்டதாகக் கூறினார்கள்.
தெரிந்த ஒருவர் மருத்துவமனையில் அவர்களுக்கு உதவுவதற்கு ஒரு நபரை அறிமுகப்படுத்தியிருந்தார். அவர்தான் இவர்களைப் போகவேண்டிய இடங்களுக்கு அழைத்துச்செல்வார். அரசுமருத்துவமனையில் வேலைபார்த்து, ஓய்வு பெற்றுவிட்டு, தற்போது இடைத்தரகராக இருக்கிறார். ஒவ்வொரு முறையும் அவருக்கு 500-1000 கொடுக்கவேண்டியிருந்ததாம். அவரில்லாமல், இவர்களுக்கு எங்கு செல்வது, யாரைப் பார்ப்பது என்பதிலெல்லாம் பெரும் தயக்கம். மலைப்பு.
நாங்கள் கோவை செல்லும் போதெல்லாம், எங்களோடு வருமாறு அழைத்தோம். ஆனால், அதுவும் அவர்களுக்கு ஏற்புடையதாக இல்லை. நாங்கள் அவர்களை விட்டுவிட்டு கோவையில் எங்கள் வேலைகளுக்குச் சென்றுவிடுவோம், உடனிருந்து அவர்களுக்கு உதவ இயலாது, அன்றே திரும்பவேண்டியிருந்தால் எங்களால் திரும்ப வரமுடியாது என்று அவர்களுக்கு அச்சம். அதில் உண்மையும் இருந்தது. அந்த ஓட்டுனர், அவர்களோடே இருந்து முழுமையாக உதவக்கூடியவர். வேறொருவரைச் சார்ந்திருக்கக்கூடாது என்ற உணர்வும் அவர்களுக்கு இருந்தது. பிற பணிகளை விட்டுவிட்டு, அவர்களோடு முழுமையாக இருந்து உதவும் அர்ப்பணிப்பு எங்களிடமும் இல்லை.
எப்படியோ, அரசு மருத்துவமனையில் இலவச சிகிச்சைக்கு அவர்களுக்குப் பல்லாயிரம் செலவாகியிருக்கிறது. பல நாட்கள் அலைந்தும் நோய் பற்றிய முழுமையான தகவல் அவர்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை. அடுத்த கட்ட சிகிச்சைகளுக்குத் தேவையான ஆய்வுகளுக்கு எழுதித்தரப்பட்டதே தவிர, சிகச்சை பற்றி எதுவும் அவர்கள் புரிந்துகொள்ளும்படி யாரும் அவர்களிடம் பேசவே இல்லை.
இறுதியில் அவர்களிடம் ஓர் ஆய்வறிக்கை அளிக்கப்பட்டது. அதை நாங்கள் பார்த்தோம். புற்றுநோய் தீவரமடைந்திருப்பது உறுதிசெய்யப்பட்டிருந்தது.
மேலும் சில ரத்தப் பரிசோதனைகளுக்காக ரத்தம் எடுக்கப்பட்டதாகச் சொன்னார்கள்.
‘நாங்க மறுபடி போகப்போறதில்லை. இப்படியே இருந்திடலாம்னு இருக்கோம்,’ பாட்டி தனது நடுங்கும் குரலில் மிகவும் உறுதியாகக் கூறினார். தாத்தாவும் ஆமோதித்தார்.
ஜாதகம் பார்த்த சோதிடரும், பக்கத்து கிராமத்தில் ஒரு மருத்துவரும் அதையே சொன்னார்களாம்.
பணம் கூடப் பெரிய பொருட்டல்ல. அவர்களைப் பணியிலமர்த்தியிருப்பவர்கள் அவர்களுக்கு எல்லா வகையிலும் உதவத் தயாராகவே இருக்கின்றனர். ஆனால், அந்த அலைச்சலும், பிறரைச் சார்ந்திருக்கவேண்டிய நிர்ப்பந்தமும், மருத்துவமனைகளில் அவர்கள் சந்திக்கின்ற உதாசீனமும் அவர்களை நிராதரவாக உணரச்செய்துவிட்டது. நடைமுறையில் நல்ல முடிவாகவும் எனக்குத் தோன்றியது.
ஆங்கில மருத்துவத்தில் உள்ள பிற சாத்தியங்கள், மாற்று சிகிச்சை முறைகள் என்று நிறையப் பேசினோம். இனிமேல் ஓட்டுனர் அமர்த்தி வாகனத்தில் தனியாக வேறு ஊர்களுக்குச் செல்வதோ, நீண்ட நாட்கள் தங்கியிருப்பதோ சாத்தியமில்லை என்கிற முடிவுக்கு அவர்கள் வந்துவிட்டிருந்தனர். அந்த மூத்த தம்பதியினர், எல்லாக் கதவுகளையும் மூடிவிட்டு மரணத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கத் தயாராகிவிட்டனர்.
எனக்கு சுஜாதாவின் நகரம் சிறுகதை நினைவுக்கு வந்தது. நாற்பது வருடங்களில் சாலைகளும் மருத்துவ வசதிகளும் எத்தனையோ மாறிவிட்டன. ஆனால், எதுவும் மாறவில்லை.
———————————
(Update: இவ்வாரம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். புற்றுநோய் மருத்துவத்துக்கான வசதிகள் அங்கு இல்லாத போதும், ‘ஒவ்வொரு முறையும் கோவைக்குப் போகமுடியாது. என்னுடைய வலியையேனும் நிறுத்துங்கள்’ என்று பிடிவாதமாகக்கேட்டு அனுமதி பெற்றுள்ளதாக அவரது மகள் சொன்னார்.)