ஊரடங்கும் காவல்துறையும்

மார்ச் 27, 2020

ஒவ்வொரு சிக்கல் வரும்போதும் நாம் ஒரே தவறைச் செய்கிறோம். காவல்துறையினருக்கு சர்வ அதிகாரத்தையும் வழங்கி அச்சிக்கலைத் தீர்த்துவிடலாம் என்று நம்புகிறோம். ஒவ்வொரு முறையும் இது புதிய சிக்கல்களுக்கே இட்டுச்செல்லும். இட்டுச்சென்றிருக்கிறது.

வெளியில் வருபவர்களையெல்லாம் காவல்துறையினர் அடித்து நொறுக்கவேண்டும் என்பது என்ன மாதிரியான மனநிலை?

விவசாயிகள் தோட்டங்களுக்கு நீர் பாய்ச்சவும் ஆடு மாடுகளுக்குத் தீவனம் வைக்கவும் மேய்க்கவும் பால்கறக்கவும் அவரவர் நிலங்களுக்குச் சென்றுதான் ஆகவேண்டும். மருத்துவம் போல், காவல்துறை போல் இதுவும் அத்தியாவசியப் பணிதான். உணவுப்பொருள் விற்பனை அத்தியாவசியம் எனில் உணவு உற்பத்தி எப்படி அத்தியாவசியமாகமற் போகும்.

இவ்வார இறுதிக்குள் எல்லாருக்கும் காய்கறிகள் தீர்ந்துவிடும். கிராமங்களில் ஓரளவு சமாளிக்கலாம் என்றாலும் கூட இன்றைய சூழலில் சந்தைக்கும் நகரத்துக்கும் சென்றுதான் காய்கறிகள் வாங்கவேண்டிய நிலை பல இடங்களிலும் உள்ளது. பலருக்கும் மருந்துகள் தீர்ந்துவிடும். வாங்குவதற்கு வெளியில் சென்றுதான் ஆகவேண்டும். கிராமங்களுக்கெல்லாம் வீட்டு சேவை வந்துசேர்ந்துவிட்டதா?

இன்று பராக்குப் பார்க்கச் செல்பவர்களை அடித்துக் கொல்லுங்கள் என்று நீங்கள் காவல்துறைக்குக் கொடுக்கும் அதிகாரம்தான் பால் வாங்கச் சென்றவரையும் கொன்றிருக்கிறது.

ஒரு காவலர் மனமுடைந்து கண்ணீர் வடித்ததைக் காண நாமெல்லாம் துடித்துப்போகிறோம்.

இன்று பல மாநிலங்களில் இருக்க இடமின்றித் தமது ஊர்களுக்கு நடைபயணமாகவே சென்றுகொண்டிருக்கும் தொழிலாளிகளைக் காவலர்கள் பல்வேறு நூதனமான முறைகளில் துன்புறுத்திக்கொண்டிருப்பதையும் காண்கிறோம்.

காய்வண்டிகளை அடித்து நொறுக்கிக்கொண்டிருப்பதையும் காண்கிறோம்.

எங்கள் பகுதியில் ஒரு சின்ன தேநீர் கடைக்காரர் கடையைத் திறந்துவிட்டாரென்றும், காவல்துறையினர் வந்து அவரைச் சூழ்ந்து லத்திகளால் அடித்து, கதறக்கதற இழுத்துச் சென்றதாகவும் கேள்விப்படுகிறோம்.

அமைதிக்காலமானாலும் நெருக்கடி நிலையானாலும் காவல்துறையினருக்கு அத்துமீறும் அதிகாரத்தை ஒருபோதும் நாம் வழங்கக்கூடாது.

தவறு செய்பவர்கள் மீது சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்கவேண்டுமோ அதை மட்டும் அவர்கள் எடுக்கட்டும்.

மக்கள் சட்டத்தை மதித்து எவ்வளவு பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டும் என்று எதிர்பார்க்கிறோமோ அதைவிட அதிகப் பொறுப்புடனும் பொறுமையுடனும் காவல்துறையும் நடந்துகொள்ள வேண்டும்.

கொரோனா சென்ற பிறகும் இந்த தேசத்தில் நாம் உயிர்வாழத்தான் வேண்டும். நம் எல்லா உரிமைகளையும் நாமே தாரைவார்த்துத் தந்துவிடவேண்டாம்.