உரையாடும் காந்தி : PSG நிலா முற்றம்

பிப்ரவரி 10, 2019

உரையாடும் காந்தி நூலை முன்வைத்து கோவை பி.எஸ்.ஜி. கலைக்கல்லூரியில் நடைபெறும் நிலா முற்றம் கூடுகையில் உரையாற்றினேன். அதற்கான சுட்டி.

நிலா முற்றம் நிகழ்வில் பி.எஸ்.ஜி. கல்லூரியின் தமிழ்த்துறையில் பணியாற்றும் ராமராஜின் வழிகாட்டுதலில் மாணவர்கள் தொடர்ந்து கூடி, நூல்கள் குறித்து உரையாடுகிறார்கள். நிறைவூட்டும் முயற்சி.


புதுமைப்பித்தனின் புதிய ந‍ந்தன் – இருவர் இருவிதமாகக் கண்ட ஒரே ஒளி

ஜனவரி 12, 2019

புதுமைப்பித்தனின் புதிய ந‍ந்தன் கதை நான் மொழிபெயர்த்துவரும் காந்தி தொகுதிக்காகத்தான் படித்தேன். காந்தி வந்துசேர்வதற்கு முன்பே கதை முடிந்துவிட்டாலும், மிகச்சரியான கதையைத் தான் சுனில் கிருஷ்ணன் தேர்வு செய்திருக்கிறார்.


காந்தியும் பெரியாரும்(/அம்பேத்காரும்) எதிரெதிர் துருவங்களாக நிறுத்தப்படும் இன்றைய சூழலில், 1934ல் வந்த இக்கதை, அவர்களது அத்தனை முரண்களுடனும், அவர்கள் இணைகிற புள்ளியை மையப்படுத்துகிறது.
முதல் மேலோட்டமான வாசிப்புக்குச் சாதாரணமான தொடக்க‍ கால சீர்திருத்தக்கதையாகத்தான் தெரிந்தது.


ஆனால் மொழிபெயர்ப்பதில் இருக்க‍க்கூடிய அனுகூலம், படைப்புக்குள் நம்மை ஆழ்ந்து செல்ல வைத்துவிடுகிறது. புதிய ந‍ந்தன் கதையில் பல்வேறு அடுக்குகள் நுட்பமாகப் புனையப்பட்டிருப்பது புரிந்தது.


இப்போதுதான் ந‍ந்தனார் திரைப்படம் பார்த்திருந்த‍தால், ந‍ந்தன் கதையின் நவீன வடிவம் நன்றாக மனதில் நின்றிருந்த‍து.

‘நந்தன் பறைச்சேரியில் விடை பெற்றுக்கொண்ட பிறகு, பறைச்சேரிக்கு என்னமோ கதிமோட்சம் கிடையாது. பழைய பறைச்சேரிதான். பழைய கள்ளுக்கடைதான்.’ போன்ற கூரிய வாசகங்களுடன் கதை தொடங்குகிறது. ஆங்கில ஆட்சி வந்த‍தே அறியாத நெடுந்தூக்க‍த்தில் அவர்கள் இருக்கிறார்கள்.


ஆங்கில ஆட்சி வந்த‍தன் அடையாளமாக முனிசிபல் விளக்கு வந்துவிடுகிறது. ஆனால் அதுவும் தீண்டப்படாமல் இருக்க, மரியாதையான தூரத்திலேயே இருக்கிறது.


ந‍ந்தன் ஆண்டையிடம் அடிமைப்பட்டிருப்பதாக உணர்வதே இல்லை. அவனது அனுமதிக்காகவும் ஆணைக்காகவும் காத்திருக்கிறான். கருப்பனும் அப்படித்தான். தன்னை அக்கிரகாரக் கிணற்றில் நீரள்ளிக் குடித்த‍தற்காக அடித்துக் குருடாக்கிய ஆண்டையிடம்தான் கடைசிவரை காவலனாக வேலை செய்கிறான். அவன் கிணற்றில் நீரள்ளியது புரட்சி செய்வதற்காக அல்ல; அது அறியாமையால் நிகழ்ந்த விபத்து.


பெரிய நிலக்கிழார்களாக இருந்தவர்கள் பிரித்தானிய அரசாங்க வேலைகளில் சென்று சேர்கிற சித்திரமும் வருகிறது. அப்படியானவர்களின் அடுத்த தலைமுறை காந்தியின் உந்துதலால் ஏற்பட்ட லட்சிய வேகத்தில் பெரும் மன மாற்றமடையும் சித்திரமும் வருகிறது. பழைய வேதியர் வழியில் வந்த புதிய வேதியரான பெரிய பண்ணையாகவும், சப்-ரெஜிஸ்டிராராகவும் இருந்தவரின் பிள்ளையான ராமநாதன், எம்.ஏ. படித்து கலெக்டராவதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கும்போது காந்தியின் உப்பு சத்தியாகிரகத்தால் ஈர்க்கப்பட்டு எல்லாவற்றையும் உதறிவிட்டு சிறைக்குச் செல்கிறான்.


என்னதான் ஆண்டைக்கு விசுவாசமாக இருந்தாலும் கருப்பனும் பிள்ளையை ஆண்டை மாதிரி ஆக்குகிறேன் என்று மதம் மாற்ற வந்த ஜான் ‘ஐயர்’ என்கிற போதகர் ஆசை காட்டும்போது இணங்குகிறான். மகன் ஆங்கிலம் படிக்கவேண்டும் என்கிற ஆசையும் அவனுக்கு உள்ளது. ஆங்கிலத்துக்கு ‘இங்குருசி’ என்ற சொல்லைப் புதுமைப்பித்தன் பயன்படுத்துகிறார். இன்றும் இந்தியில் அங்கிரேசி என்றுதான் சொல்கிறார்கள்.


ஆனால் மகனை முன்னேற்றிவிட வேண்டும் என்று நினைக்கிற கருப்பன், ஆண்டையின் மகன் தன் மகளைத் திருமணம் செய்துகொள்ள விரும்பும்போது, பெரும் பாவம் என்று சொல்லி மறுக்கிறான். முன்னேற வேண்டும் என்கிற நினைப்பை, சாதியப்பழைமையில் ஊறிய உணர்வுகள் சமன்செய்துவிடுகின்றன.

கருப்பனின் மகன் பாவாடை தானியேல் ஜான் ஆகி, கிருத்துவத்திலும் சாதி மறையவில்லை என்பதை அறிந்து முதல் விலக்கம் கொள்கிறான். வேளாள ஜான் ஐயர் வேளாளராகவே இருக்கிறார் – தானே முன்னின்று மதம்மாற்றிய தானியேலை “பறக்கழுதை வீட்டைவிட்டு வெளியே இறங்கு” என்று கழுத்தைப் பிடித்து நெட்டித் தள்ளுகிறார்.


பின்னர் கத்தோலிக்க மத‍த்தைத் தழுவி ‘சுவாமியார்’ ஆகப் பயிற்சிபெறுகிறான். அங்கும் ‘சில சுவாமியார்களின் இயற்கைக்கு விரோதமான இச்சைகளும், மனதிற்குச் சற்றும் சாந்தி தராத இரும்புச்சட்டம்’ ஆகியவற்றைப் புதுமைப்பித்தன் சுட்டுகிறார்.


தானியேல் ராமசாமிப் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் இணைகிறான். தோழர் நரசிங்கம் ஆகிறான். ராமநாதனுக்கும் தன் தங்கைக்கும் திருமணம் செய்துவைக்க வேண்டும் என்று தந்தையைக் கட்டாயப்படுத்துகிறான் நரசிங்கம். ஆனால் அவனாலும் கருப்பனின் நம்பிக்கையைத் தகர்க்கமுடிவதில்லை.


தமிழ்நாட்டுக்கு ஹரிஜன நிதி திரட்ட வரும் காந்தியை ஆதனூருக்கு வருவதற்கு ஏற்பாடு செய்கிறான் ராமநாதன். அவனது சனாதனத் தந்தையும் பெரியாரிய நரசிங்கமும் காந்தியிடம் வாதம் செய்து வெல்லக் காத்திருக்கிறார்கள்.


ராமநாதனும் நரசிங்கமும் – இரண்டு பேரும் ஒரே உண்மையை இரண்டு விதமாகக் கண்டார்கள். புதிய ஒளியை இருவிதமாக‍க் காண்கின்றனர்.


ஆனால் இறுதியில் அவர்கள் இருவரும் கருப்பனை ரயிலில் அடிபடாமல் காக்க முயன்று மூவருமாய் இரத்தக்களரியில் மடிந்து, மூவரது இரத்தமும் கலக்கும்போது, கருப்பனும் அதே ஒளியை வேறுவிதமாக‍க் கண்ட‍டைந்திருப்பான் என்பதை ஆசிரியர் நேரடியாக‍க் கூறாமல் விட்டுவிடுகிறார்.


உண்மையில், இது மூன்று பேர் மூன்று விதமாக‍க் கண்ட ஒரே ஒளிதான்.


சிவராம காரந்த்தின் சுயசரிதை

நவம்பர் 20, 2018

சிவராம காரந்த்தின் சுயசரிதையான ‘பித்து மனத்தின் பத்து முகங்கள்’ நூலிலிருந்து (மொழிபெயர்ப்பு: பாவண்ணன், நூறுசுற்றுக்கோட்டை தொகுப்பு) :

[கன்னட எழுத்தாளர் சிவராம காரந்த் ஒத்துழையாமை இயக்கத்தின் போது, கல்லூரியைத் துறந்திருக்கிறார். கதராடை அணிந்து, கிராமங்கள்தோறும் அலைந்திருக்கிறார். சமூகப் பணிகளும் வெள்ளநிவாரணப் பணிகளும் செய்திருக்கிறார். காந்தியை ஆதர்சமாகக் கொண்டு, அப்போது பிரம்மச்சரிய விரதம் மேற்கொண்டிருக்கிறார். தாசிகள் பிரச்சனை அவரை மிகவும் வருத்தியிருக்கிறது.]

(தாசி குலத்தில் பிறந்த நண்பரிடம்) “உன் சகோதரிகளைப் பணத்திற்காக விற்காமல் இருக்கும் பட்சத்தில், எங்கிருந்தாவது அவர்களுக்குத் தகுந்த வரன்களைத் தேடிக்கண்டுபிடித்து கல்யாணம் செய்து வைக்கிறேன்” என்று சொன்னேன். அவனுக்கு ரொம்பவும் சந்தோஷம் ஏற்பட்டது. அவன் ஒத்துக் கொண்டான். ஆனாலும் அவனுடைய வீட்டுக்காரர்கள் இதற்கு ஒப்புக்கொள்வார்களா என்கிற ஐயம் எனக்கு இருந்தது. அவன் தன்னுடைய வீட்டுக்குச் சென்று அவர்களிடம் இந்த விஷயத்தை முறையிட்டான். அவர்களும் இத்திருமணத்துக்குத் தம் ஒப்புதலை அளித்தார்கள். அன்று என் வார்த்தையின் பின்னணியிலிருந்த பொறுப்பை உணர்ந்து கொண்டேன்.

காந்தியின் சமாதானப் பேச்சு

ஏறத்தாழ மூன்று நான்கு ஆண்டுகள், தாசிக் குலத்திலேயே இத்திருமணத்துக்குத் தகுந்த மாப்பிள்ளைகள் கிடைப்பார்களா என்று தேடியலைந்தேன். வடகன்னட மாவட்டம், பம்பாய், மைசூர்ப் பகுதிகளில் சுற்றியலைந்தேன். என் முயற்சிக்கு வெற்றி கிட்டவில்லை. என் வார்த்தைகளின் பின்னணியிலிருந்த பொறுப்பின் சுமை புரிந்தது. மிகவும் நிராசையோடு ஒருமுறை இதைப்பற்றிக் காந்திக்கும் கடிதம் எழுதினேன். அதற்கு அவர், அந்தப் பெண்கள் வாழ்நாள் முழுக்க பிரம்மச்சர்ய விரதம் மேற்கொண்டு வாழட்டும் என்று வழிசொல்லி எழுதினார். அதைப்படித்து நான் மிகவும் அலுத்துக் கொண்டேன். கண்ணீர் சுரந்தது. மனித சுபாவத்தின் அறிமுகமே காந்திக்கு இல்லை. தன்னால் செய்ய முடிந்ததை எல்லாராலும் செய்ய முடியும் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார் என்று தோன்றியது. அப்படிப்பட்ட நிலையில் எனக்கு என்ன பதில்? நண்பனின் வீட்டார் வயசுக்கு வந்த பெண்களை எவ்வளவு காலத்துக்கு வீட்டிலேயே வைத்திருக்க முடியும்? ஒருவேளை இது கைமீறிப்போகும் சந்தர்ப்பம் வரும்போது அம்மூவரில் யாரேனும் ஒரு பெண்ணை நானே திருமணம் செய்துகொண்டு என் வார்த்தையைக் காப்பேற்றவேண்டும் என எண்ணிக்கொண்டேன். அப்போது பிரம்மச்சரிய வாழ்க்கை என் லட்சியமாக இருந்தது.

(பிறகு அம்மூவருக்குமே வரன்கிடைத்துத் திருமணம் செய்து வைக்கிறார். ஆண்டுக்கொரு முறையாவது அவர்களைச் சந்திக்கிறார்.)


சுனில் கிருஷ்ணன்

ஜூலை 1, 2018
[சுனில் கிருஷ்ணன் ‘காந்தி இன்று’ தளத்தைப் பல ஆண்டுகளாக நடத்தி வருகிறார். அதில் காந்தியுடைய ஆக்கங்கள், காந்தி காந்தியம் பற்றிய படைப்புகள் பலவும் மொழிபெயர்க்கப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளன. காந்தி குறித்த பல புதிய கட்டுரைகளும் உள்ளன. படைப்பிலக்கியத்திலும் தொடர்ந்து செயல்பட்டுவரும் சுனில் கிருஷ்ணனின் ‘அம்புப் படுக்கை’ என்ற சிறுகதைத் தொகுப்புக்கு சாகித்ய அகாதெமியின் யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டுள்ளது. சுனில் கிருஷ்ணன் காரைக்குடியில் ஆயுர்வேத மருத்துவராக உள்ளார்.]
நண்பர் சுனில் கிருஷ்ணனுக்கு விருது என்று சென்ற வாரம் அறிந்த போது ஒருபுறம் மகிழ்ச்சியாக இருந்தது. மறுபுறம், விருதுவாங்குபவர்களுக்கென்றே உள்ள பிரத்யேகமான சிகிச்சையும் அவருக்குக் கிடைக்குமே என்ற ஒரு அச்சமும் இருந்தது.
சுனிலின் ஒருசில கதைகளைத்தான் நான் முன்பு படித்திருக்கிறேன். நம்ம சுனில் தானே என்கிற உரிமையிலோ என்னவோ, முழுமையாகப் படிக்காமல் தள்ளிப்போட்டுக்கொண்டே இருந்தேன். இவ்விருது தந்த புது உற்சாகத்தில் இணையத்தில் உள்ள அவரது கதைகளில் பெரும்பாலானவற்றைப் படித்துவிட்டேன்.
பேசும் பூனை, அம்புப் படுக்கை ஆகிய இரண்டு கதைகளும் குறிப்பிடத்தக்கவை என்று பட்டது.
காந்தியவாதிகள் நல்ல இலக்கியம் படைக்கமாட்டார்கள் என்கிற ஒரு முன்முடிவோடு நாம் சுனிலை அணுகவேண்டியதில்லை. (சாரு நிவேதிதா மிகவும் விதந்தோதிய ‘மண்ணில் தெரியுது வானம்’ என்கிற காந்திய நாவலே சற்று தட்டையாகத்தான் எனக்குத் தெரிந்தது. சுனிலின் பாராட்டுவிழாவில் எஸ்.ரா. காந்திக்கு புனைவிலக்கியங்கள் மீதும், இயற்கையின் மீதும்கூட அதிக ஆர்வமில்லை என்று பேசியுள்ளார். அதில் ஓரளவு உண்மையும் (சில தகவல் பிழைகளும்) இருந்தாலும், காந்தி ஹோமர் முதல் கதே வரை படித்திருக்கிறார். எட்வின் ஆர்னால்டின் கவித்துவமான மொழியின் மூலமாகத்தான் அவர் கீதைக்குள் நுழைந்தார். காந்தியின் எழுத்தின் கூர்மையும் தெளிவும் எந்த எழுத்தாளருக்கும் குறைவானதல்ல. ஆனால் அவரது முதன்மையான அக்கறை வேறாக இருந்தது). சுனில் காந்திய ஆர்வலராக இருந்தாலும் தன்னை காந்தியவாதி என்பதையே ஏற்றுக்கொள்வதில்லை என்று நினைக்கிறேன். உண்மையில் ‘காந்தியும் நானும்’, ‘ஆரோகணம்’ என்ற அவரது இரண்டு காந்தி கதைகளுமே முன்வைக்கும் காந்தி பற்றிய சில சித்திரங்களும் கேள்விகளும் விவாதத்திற்குரியவை. காந்தியின் கண்முன் ஐந்து வயதுப் பெண் வன்புணர்ச்சி செய்யப்பட்டிருந்தால் அவர் காந்தியவாதியாக இருந்திருப்பாரா என்பது காந்தியை அறிய முனையும் நம் எல்லோரின் ஆரம்பகட்ட கேள்வி. இக்கதை எழுதி 8 வருடங்களுக்கு மேல் இருக்கவேண்டும். சுனில் இப்போது இக்கேள்வியை வேறு விதமாக அணுகக்கூடும். ஆரோகணம் கதையில் காந்தி ஹரிலால் பற்றி ‘தனது அன்பும் கருணையும் அவனை ரணப்படுத்தியது’ என்று எண்ணுவதாக வருவதற்கு நேர்மாறாகத்தான் எண்ணியிருப்பார் என்பது என் கணிப்பு. ஹரிலாலுக்கு குழந்தைப்பருவம் முதலே தனது அன்பும் கருணையும் கண்காணிப்பும் போதிய அளவு கிடைக்கவில்லை, அதனாலேயே ஹரிலால் பாதை தவறிவிட்டார் என்கிற எண்ணம் காந்திக்கு உண்டு. ஆனால், ஆரோகணம் கதையின் முடிவில், காந்தி மகிழ்ச்சி நிறைந்த சொர்க்கத்தை மறுத்து இன்னல் நிறைந்த நரகத்தைத் தேர்ந்தெடுப்பதாக வரும் சித்திரம் முதலில் சில ஐயங்களை எழுப்பினாலும், அதிலுள்ள உண்மை மறுக்கமுடியாமல் மேலெழுகிறது. சுதந்திரம் பெறும் தறுவாயிலும், சுதந்திரம் பெற்ற பின்னரும் வெற்றிக்களிப்புக்கு ஒரு கணநேரமும் இடங்கொடாது நவகாளி, கல்கத்தா, பிகார், டில்லி (பின்னர் மேற்கு பாக்கிஸ்தான் செல்லும் திட்டம்) என்று கலவரப் பகுதிகளாகத் தேடிச் சென்று பணியாற்றிய காந்தி நினைவுக்கு வருகிறார்.
காந்தியப் பணியையும் படைப்பிலக்கியச் செயல்பாட்டினையும் சுனில் தனித்தனியாகப் பார்க்க விரும்புவதாகத் தெரிகிறது. ஆனால் அவரது படைப்புகளில் காந்தியக் கரிசனம் தலைதூக்காமல் இல்லை. அதில் தவறொன்றும் இல்லை, சுனில். பேசும் பூனை கதையை நவீன அறிவியல் பொருளாதார மாற்றங்கள் நம் வாழ்க்கைமீது செலுத்துகிற ஆதிக்கம் குறித்த கதையாக நான் பார்க்கிறேன். நம்மை அறியாமல் நுகர்வு கலாச்சாரமும், அரசாங்க தனியார் கண்காணிப்பும் நம் வாழ்க்கையில் எப்படி ஊடுறுவுகின்றன என்பதை மாய யதார்த்த முறையில் பேசுகிற கதையாகவும் பார்க்கலாம். காந்தியின் வழியே பயணித்துவந்த கரிசனங்கள் தாமே இவை.
அம்புப் படுக்கை கதையும் இம்மண்ணின் அறிவியல் மரபுக்கும் நவீன அறிவியல் போக்குகளுக்கும் உள்ள உரசலை மையமாகக் கொண்டுள்ளது. மரபைப் பின்பற்றுகிறவர்கள் மீது சமூகம் முன்வைக்கிற விமர்சனங்களைத் தாண்டி, அவர்களுக்கே தம்மீதும் தமது மரபின் மீது தோன்றுகிற ஐயமும், தெளிவும், தெளிவின்மையும் நன்றாக வெளிப்பட்டுள்ளன. தன் மருத்துவ அறிவை நிலைநாட்டுவதைவிடவும் நாயகனிடம் மானுட நேயம் மேலோங்கி வருவதையும் காணலாம். அதே போல், நக்ர ரேதஸ் கதையில் மருத்துவ நெறிகளுக்கும் தனிப்பட்ட விழுமியங்களுக்கும் ஏற்படுகிற மோதல் கதைப்பொருளாகிறது.
வேறு சில கதைகள் எனக்குப் பெரிய திருப்தி தரவில்லை. இணையத்தில் கிடைக்காத ஒரு சில கதைகளை இன்னும் படிக்கவில்லை. குருதிச் சோறு தன்னளவில் நன்றாக இருந்தாலும், தொன்மங்கள் உருவாவது பற்றி நிறைய எழுதியிருக்கும் ஜெயமோகனின் நேரடி பாதிப்பு மேலோங்கியிருக்கிறது. ஜெயமோகனின் பாதிப்பு குறித்து சுனிலுக்கு வருத்தம் எதுவுமில்லை. அவரது வளர்ச்சியில் ஜெயமோகனுக்குப் பெரும் பங்கு இருந்திருக்கிறது. தனிப்பேச்சின்போதும் எழுத்திலும், அசோகமித்திரனும், யுவனும் தன் எழுத்தின்மீது சமமான தாக்கம் செலுத்தியுள்ளார்கள் என்று கூறியிருக்கிறார். ஆனால் பேசும் பூனை போன்ற கதையில் ஜெயமோகனின் தாக்கத்தைத் தாண்டிவந்து அக்கதைக்கென ஒரு மொழியை அடைந்துவிட்டார் என்றே தோன்றுகிறது.
இலக்கியம் ஒருபோதும் ஒரு சுழியத்தொகை விளையாட்டு (zero-sum game) அல்ல. ஆனால் விருதுகள் நம்மை அக்குறுகிய வீதிக்குள் தள்ளுகின்றன. சுனிலுக்கு இணையான, சுனிலை விட மேலான இளம் படைப்பாளிகள் இருக்கலாம் – சமகாலப் புனைவுகளை நான் அதிகமாக உடனுக்குடன் படித்துவிடுகிறவன் இல்லை என்பதால் அது குறித்துக்கூற எனக்கு அதிகமில்லை. ஆனால் சுனிலின் பங்களிப்பு, இக்கதைகளையும் தாண்டி இன்னும் பெரிய பரப்பில் உள்ளது. எவராலும் தவிர்க்கமுடியாதது. (இதைச் சொல்வது அவரது இலக்கிய மனதுக்கு அவ்வளவு உவப்பாக இல்லாமற்போகலாம். உண்மையில் விருது அவரது சிறுகதைத் தொகுப்புக்காக மட்டுமே கொடுக்கவும்பட்டிருக்கலாம்.) பொதுவாக சாகித்ய அகாதெமி விருது தமிழில் ஒரு தனிப்பட்ட படைப்புக்குக் கொடுக்கப்பட்டாலும், ஒற்றைப் படைப்பு என்பது ஒரு proxyதான். பெரும்பாலும் வாழ்நாள் சாதனையாளர்களுக்கே அளிக்கப்பட்டுவருகிறது. யுவ பரஸ்கார் விருதும் அவ்வாறு தரப்பட்டால் அதில் தவறெதுவும் இல்லை. எழுத்துலகில் வாழ்நாள் சாதனை செய்தவர்கள் என்று சொல்லக்கூடிய இளைஞர்கள் அதிகம் இருக்கமுடியாது. சுனில் அத்தகைய ஓர் அரிய இளைஞர். காந்தி குறித்தும், காந்தியம் குறித்தும், மாற்று அரசியல் பொருளாதாரம் கல்வி குறித்தும் ஒரு மறுவாசிப்பையும், புது ஆர்வத்தையும் பல தமிழ் இளைஞர்கள் மத்தியில் உருவாக்கியதில் சுனில் கிரூஷ்ணன், ராட்டை ரகு போன்றவர்களுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது. இவர்கள் ஒரு மிகப்பெரிய பொக்கிஷத்தைத் தமிழுக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். ஓரிடத்தில் தொகுத்திருக்கிறார்கள். தீவிர புனைவிலக்கியம் என்கிற சிறிய வட்டத்தைத் தாண்டி, தமிழ் எழுத்துலகுக்கும், தமிழ் அறிவுலகுக்கும் இது ஒரு மாபெரும் பங்களிப்பு. மாற்று குறித்துப் பேசுகிறவர்கள் மத்தியிலும் சுனில் அதை ஒரு மூர்க்கமான கொள்கையாக முன்வைக்காமல், அமைதியாக தர்க்கப்பூர்வமாக அணுகுகிறார். எனது தனிப்பட்ட அனுபவத்திலிருந்தே சொன்னால், சுனில் மூலமாகத்தான் நாராயண் தேசாய், க.மு.நடராஜன், சங்கீதா ஸ்ரீராம் போன்றவர்களுடனான தொடர்பினை என்னால் ஏற்படுத்திக்கொள்ள முடிந்தது. சுனில் தந்த அழுத்தத்தால் தான் நாராயண் தேசாயுடனான நேர்காணலை நான் எழுதியும் பதிப்பிக்கவும் முடிந்தது. இவை மேலும் பல புதிய பயணங்களுக்கு இட்டுச்சென்றன. (எக்குத்தப்பான ஒரு நிகழ்ச்சியில் மாட்டியும் விட்டிருக்கிறார்.) இதுபோல் பலருக்கும் பல திறப்புகள் நிகழக் காரணமாக இருந்திருக்கிறார், இருப்பார்.
ஆயுர்வேதம் குறித்த அவரது கட்டுரைகளும் ஆழ்ந்த வாசிப்பைக் கோருபவை. பதாகை இதழில் பாஸ்கரோடு சேர்ந்து அவரது பங்களிப்பு கணிசமானது என்பதை நாஞ்சில் நாடன், சு.வேணுகோபால் ஆகியோருடன் கோவையில் நண்பர்களோடு நடத்திய நீண்ட நேர்காணல்களின் போது உணர்ந்தேன். சுனில் பற்றிய பாஸ்கரின் குறிப்பிலும் அதைக் காணலாம்.
இதற்கு முந்தைய பல ஆண்டுகளில் யுவ புரஸ்கார் (அல்லது சாகித்ய அகாதெமி) விருது பெற்ற பலரும் தொடர்ந்து தீவிரமாக எழுதாமற் போயிருக்கலாம். ஆனால் இன்னும் பல ஆண்டுகளுக்கு தமிழ் எழுத்துலகுக்குப் பங்களிக்கக்கூடிய ஆற்றலும் ஆர்வமும் சுனிலுக்கு இருப்பதாய் நினைக்கிறேன். இப்போது அவர் தொகுத்துவரும் தமிழ் இலக்கியத்தில் காந்தி குறித்த பதிவுகள் முக்கியமான ஒரு முயற்சி. (நான் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கிறேன் என்பதால் மட்டும் சொல்லவில்லை.)
அவரது இலக்கிய, காந்தியப் பணிகள் மென்மேலும் கவனம் பெற இந்த விருது உதவும் என்பதால் இது மிகவும் முக்கியமானதே. சுனில் கிருஷ்ணனுக்கு ஒரு வாசகனாகவும், மூத்த நண்பனாகவும், சக பயணியாகவும் எனது வாழ்த்துகள்.

காந்திய விழிப்புணர்வு யாத்திரை – ஓர் அகப் பயணம்

ஒக்ரோபர் 13, 2017

(சர்வோதயம் மலர்கிறது இதழுக்காக எழுதிய கட்டுரை. முதல் பகுதி பயண அனுபவங்களையும், இரண்டாம் பகுதி காந்தியம் குறித்த என் பார்வைகள் சிலவற்றையும் உள்ளடக்கியுள்ளன.)

(1)

காந்திகிராம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் மார்க்கண்டனின் ஒருங்கிணைப்பில், ஆகஸ்ட் மாதம் (3 முதல் 12ம் தேதி வரை) காந்திய விழிப்புணர்வு யாத்திரை மேற்கொள்ளப்பட்டது. கன்னியாகுமரி முதல் சென்னை வரை, பல்வேறு ஊர்களில் பள்ளி-கல்லூரிகளிலும், சர்வோதய சங்கங்களிலும், பொது இடங்களிலும் உரையாற்றியவாறு வாகனத்தில் சென்றோம். 7 பேர் முழு யாத்திரையையும் நிறைவுசெய்தோம். [மார்க்கண்டன், தலைவர், தமிழிக மக்கள் சேவை இயக்கம், கண்ணன், நித்யா, மகிழ்மலர் (சேர்வைகாரன்பாளையம், கோவை), சுப்பையன் (அன்னூர்), சிவக்குமார் (ஆசிரியர், விழிப்புணர்வின் குரல்), ராஜாமணி (திண்டுக்கல்)]. மேலும் சிலர் யாத்திரையின் சில பகுதிகளில் பங்கெடுத்தனர். நான் இந்த யாத்திரையில் மனைவி மகளோடு கலந்துகொண்டேன். புறத்தில் நிகழ்ந்த பயணத்தின் தாக்கம் வரும் காலங்களில்தான் தெரியும். தூவப்பட்ட விதைகள் கண்ணுக்குத் தெரியாமல் முளைக்கலாம்; முளைப்பதே தெரியாமலும் போகலாம். ஆனால் பயணம் செய்த எங்களது அகங்களில் நிகழ்ந்த யாத்திரை முக்கியமானது. காந்தியின் நிழலால் தீண்டப்படும் ஒவ்வொருவரும் அந்த அக யாத்திரையிலிருந்து தப்ப முடியாது.

DSC_1911

முதலில் புற யாத்திரை பற்றிய சில குறிப்புகள். ஆகஸ்ட் 3ம் தேதி கன்னியாகுமரியில் காந்தி மண்டபத்தில், சர்வமத வழிபாட்டுப் பாடல்களுடன் யாத்திரை தொடங்கப்பட்டது. பின்னர் நாகர்கோவில், திருநெல்வேலி, விருதுநகர், டி. கல்லுப்பட்டி, திருமங்கலம், மதுரை, காந்திகிராம் பல்கலைக்கழகம், திண்டுக்கல், திருச்சி, கரூர், காங்கயம், படியூர், திருப்பூர், கோவை, மேட்டுப்பாளையம், ஊட்டி, கோத்தகிரி, சத்தி, கோபி, ஈரோடு, நாமக்கல், மல்லூர், சேலம், திருப்பத்தூர், பச்சூர், வேலூர், காஞ்சிபுரம் வழியாக சென்னை தக்கர் பாபா மையத்தில் முடிந்தது.

நாகர்கோயில் இந்து கல்லூரி, பாளையங்கோட்டை புனித ஜான் கல்லூரி, காந்திகிராம் பல்கலைக்கழகம், கரூர் ஜெயராம்ஸ் கல்லூரி, மேட்டுப்பாளையம் நஞ்சய்யா லிங்கம்மாள் பாலிடெக்னிக், ஈரோடு வேளாளர் பெண்கள் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி ஆகிய கல்லூரிகளிலும், கல்லுப்பட்டி காந்தி நிகேதன், கோத்தகிரி விக்டோரியா ஆர்ம்ஸ்ட்ராங் (நாவா) பள்ளி, பச்சூர் அரசுப் பள்ளி ஆகிய பள்ளிகளிலும் உரையாற்றினோம். பெரும்பாலான இடங்களில் சர்வோதய சங்கங்கள் கூட்டங்களை ஒருங்கிணைத்திருந்தனர். சுற்றுப்புற கிராமங்களிலிருந்து சர்வோதய சங்கங்களைச் சார்ந்த நூற்போர், நெசவோர் இக்கூட்டங்களுக்குத் திரளாக வந்திருந்தனர். அனேகமாக எல்லா இடங்களிலும் வந்திருந்தோர் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. எல்லா இடங்களிலும் மார்க்கண்டன் இன்றைய சமூக அரசியல் சூழல் குறித்தும், அவற்றை எதிர்கொள்வதற்கான காந்தியத்தின் தேவை குறித்தும் நீண்ட உரைகளாற்றினார். பொதுவாழ்விலும் தனிவாழ்விலும் எளிமை, சுயநலமற்ற அர்ப்பணிப்பு, சாதி மத நல்லிணக்கம், மக்கள் அனைவரையும் அணைத்துச்செல்லும் வளர்ச்சி, அதிகாரத்தைப் பரவலாக்குதல், காந்திய வழியில் தொழில் சார்ந்த கல்வி, கைத்தொழில்களிலும் சூழலைப் பாதிக்காத அளவு நவீன முறைகளைப் புகுத்துதல், சர்வோதய சங்கங்களை வலுப்படுத்துதல் – அவற்றின் பணிகளை இன்றைய சூழலுக்கேட்ப விரிவு படுத்துதல் போன்ற பல்வேறு அம்சங்களை வலியுறுத்தினார். மற்றவர்களும் ஆங்காங்கு சிறுது நேரம் உரையாற்றினோம். எங்கள் ஒன்பது வயது மகள் பாடல்கள் பாடினாள் – பல இடங்களில் ‘சாந்தி நிலவ வேண்டும்’ பாடல் அவளது இளங்குரலில் உணர்ச்சிகரமாக ஒலித்தது. சர்வோதய ஊழியர்களும், மாணவர்களும் பல்வேறு கேள்விகள் கேட்டனர்; அந்த கேள்விகளுக்கான பதில்களின் வாயிலாக காந்தியத்தையும், இன்றைய சூழலையும் பற்றி மேலும் விவாதிக்கவும் புரிந்துகொள்ளவும் நல்ல வாய்ப்பாக அமைந்தது.

 

(2)

பயணம் முழுவதும் காந்தியே என் மனதை நிறைத்திருந்தார். புறக்காட்சிகளினூடாக அகப்பயணமே ஆழமாக நிகழ்ந்தது. வெம்மையான கோவில்பட்டியின் கரிசல் காடுகள் வழியாகப் பயணித்தபோதாகட்டும், நீலகிரியின் குளிர்ந்த மழைக்காடுகளின் வழியாகச் சென்றபோதாகட்டும், வேலூரருகே கொட்டும் மழையிலாகட்டும், சென்னையின் வாரயிறுதி போக்குவரத்து நெரிசலில் அகப்பட்டபோதாகட்டும், அகத்தினுள் நிகழ்ந்த பயணம் ஒரே திசையில்தான் இருந்தது. யாத்திரையின் பெரும்பாலான இரவுகளில் பயணக்களைப்பையும் மீறி காந்தி நித்திரையைக் கலைத்தார். அன்றாட வாழ்வின் சமரசங்கள் காந்தியின் கண்ணாடிவழியாகப் பார்த்தபோது பூதாகரமாகத் தெரிந்தன. மக்களுக்கு நாம் எடுத்துச்சென்றுகொண்டிருக்கும் காந்தி யார், எடுத்துச்செல்லவேண்டிய காந்தி யார் என்பவை குறித்து என்னுள் பல கேள்விகள் எழுந்தன. பயணத்தின்போது சந்திக்க நேர்ந்த பலரோடும், உடன் பயணித்தவர்களோடும், உரையாற்றியவர்களோடும் நிகழ்ந்த உரையாடல்களை மனம் அசைபோட்டுக்கொண்டேயிருந்தது. காந்தியின் இந்திய சுயராச்சியம் (ஹிந்த் ஸ்வராஜ்) பாணியில், ஆசிரியனும் வாசகனும் போல, என்னுள்ளேயே ஒரு விமர்சகனும் பயணியும் தோன்றி விவாதித்துக்கொள்ளத் தொடங்கினர். யாத்திரை முடிந்தபின்னும் இந்தப் பயணம் தொடர்ந்தது.

விமர்சகன்: காந்தியை அறியாதவர்கள் யார்? எதற்கு விழப்புணர்வு, பயணம் எல்லாம்?

பயணி: நம்மில் பெரும்பாலனவர்கள் அறிந்துள்ள காந்தி, நமக்குச் சுதரந்திரம் வாங்கித் தந்த காந்தி; பணத்தாள்களில் உள்ள காந்தி; பசுமை பாரதத்தின் விளம்பரப்படங்களில் தோன்றும் காந்தி. ஆனால், காந்தியின் ஆதாரமான கொள்கைகள், செய்திகள் குறித்தெல்லாம் அறிந்தவர்கள் மிகச்சிலரே. அறிந்தவர்களிலும் அக்கொள்கைகளைக் கடைபிடிப்பவர்கள் அதனினும் குறைவே. இப்பயணம் மூலம் உண்மையான காந்தி எதற்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணித்தார், அவரது கொள்கைகளில் பொருத்தமானவற்றை இன்றைய சூழலுக்கு எப்படிப் பொருத்திப் பார்க்கலாம் என்பவை குறித்த சிந்தனையைத் தூண்டி, மக்கள் நலச்செயல்களுக்கு உந்துதலாக இருக்கமுடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

விமர்சகன்: இது என்ன கதையாக இருக்கிறது. காந்தியுடைய கொள்கைகள் எங்களுக்குத் தெரியாதா? காந்தி சுதந்திரத்துக்காக அகிம்சை முறையில் போராடினார். எல்லோரிடமும் அன்பாக இருக்க வேண்டும் என்றார். உண்மையாக இருக்க வேண்டும் என்றார். நாடு சுத்தமாக இருக்க வேண்டும் என்றார். இவையெல்லாம் சின்னக் குழந்தைக்குக்கூட தெரியுமே!

பயணி: நாம் அனைவரும் அவரவர் வசதிக்குத் தேவையான காந்தியை எடுத்துக்கொண்டிருக்கிறோம். அவரவர் தேவைக்கேற்ப காந்தியைச் சுருக்கிக்கொண்டிருக்கிறோம் என்றும் சொல்லலாம். வாய்மை, அன்பு, அகிம்சை – இவையெல்லாம் காந்தியின் கொள்கைகளுக்கு ஆதாரமானவை. மறுக்க முடியாது. ஆனால், இவற்றின் நீட்சியாக காந்தி சமூகத்தைப் பாதிக்கும் எல்லா அம்சங்களைப் பற்றியும் தொடர்ந்து உரையாடியிருக்கிறார். பல்வேறு சோதனைகளைச் செய்திருக்கிறார். நாம் அவற்றையும் கவனிக்க வேண்டும்.

ஒருபுறம் காந்தியின் சுத்தம் பிடிக்கும் என்று சொல்லிக்கொண்டு, சுத்தம் செய்யும் ஏழை மக்களை உயர்த்த காந்தி என்ன செய்தார் என்பதை மறந்துவிட்டோம். ஒருபுறம் காந்தியின் அன்பு பிடிக்கும் என்று சொல்லிக்கொண்டு, இயற்கை மீதும் வருங்காலச் சந்ததியினர்மீது எந்த அக்கறையும் கருணையும் இல்லாமல், வளர்ச்சி என்ற பெயரில் நாம் கட்டவிழ்த்துவிட்டிருக்கும் வன்முறை காந்தியத்துக்கு முற்றிலும் விரோதமானது.

விமர்சகன்: அப்போது காந்தி வளர்ச்சிக்கு எதிரானவர் என்கிறீர்களா?

பயணி: காந்தி என்ன மாதிரியான வளர்ச்சியை விரும்பினார் என்பதை நாம் ஆராய வேண்டும். காந்தி முன்வைத்த வளர்ச்சி ‘சர்வோதயம்’ – கடையனுக்கும் கடைத்தேற்றம். இயற்கையோடு இயைந்து, இச்சமூகத்தின் ஒவ்வொருவரையும் முன்னேற்றுவதே காந்தி கண்ட வளர்ச்சி. எல்லாப் பணிகளையும் சமமாகக் கண்டு, எல்லாப் பணிகளுக்கும் சமமான வருமானம் வரும்படி செய்வதே காந்தி கண்ட வளர்ச்சி. இயற்கையைச் சுரண்டி, சமூகத்தில் ஒரு சிலர் மட்டும் பெரு வளர்ச்சி அடைந்து, பெரும்பகுதியினர் அவர்களைச் சார்ந்திருப்பதை காந்தி ஒரு போதும் வளர்ச்சி என்று ஒப்புக்கொண்டிருக்க மாட்டார். பேராசையின் வெளிப்பாடான நுகர்வுக் கலாச்சாரத்தால் உருட்டப்படும் பொருளாதாரத்தை வளர்ச்சி என்று ஒப்புக்கொண்டிருக்க மாட்டார்.

விமர்சகன்: நவீன வளர்ச்சியின் விளைவாகத்தானே உங்களது இந்த யாத்திரையே சாத்தியம் ஆகியிருக்கிறது. அகலமான நெடுஞ்சாலைகள் இருந்ததால்தானே உங்களால் இத்தனை வேகமாக இத்தனை ஊர்களுக்குப் பயணிக்க முடிந்தது.

பயணி: உண்மையில், இந்த யாத்திரையின் போதுதான் நவீன வளர்ச்சியின் இன்னொரு முகத்தையும் என்னால் காண முடிந்தது. வழியில் பல கிராமங்கள் இருக்கும்; நாங்கள் கிராமத்து மக்களைச் சந்திக்கலாம்; அவர்களோடும் உரையாடிச் செல்லலாம் என்று நினைத்திருந்தோம். ஆனால், இந்த அசுர நெடுஞ்சாலைகள் கிராமங்களை விழுங்கிவிட்டன. அல்லது கிராமங்களை ஒதுக்கிவிட்டன. வழியெங்கும் மக்களும் இல்லை, மரங்களும் இல்லை. இந்த மண்ணிலிருந்தும் மக்களிடமிருந்தும் விலகிச்செல்கின்ற வளர்ச்சியின் குறியீடாகவே இந்த வரண்டு நீண்டகன்ற நெடுஞ்சாலைகள் இருக்கின்றன.

இந்நவீன நெடுஞ்சாலைகள் இல்லாத போதும், காலங்காலமாய் இந்தியாவிலும் உலகெங்கிலும் யாத்திரைகள் நிகழ்ந்து கொண்டுதான் இருந்திருக்கின்றன. எங்களது யாத்திரையின் பலவீனமே இந்த வேகம்தான் என்று தோன்றுகின்றது.

விமர்சகன்: மக்கள் இத்தகைய நவீன வளர்ச்சித்திட்டங்களையே விரும்புகின்றனர். அதைத்தானே நீங்கள் தொடர்ந்து காண்கிறீர்கள். உதாரணமாக, திருச்சி சர்வோதயக்கூட்டத்திலும் ஓர் அம்மா நதிநீர் இணைப்பே இன்றைய உடனடித் தேவை என்று கூறினாரே.

பயணி: மக்கள் தண்ணீர் பிரச்சனையால் தவிப்பதைக் கண்டு அவர் அவ்வாறு கூறுகிறார். அவரது ஆதங்கம் உண்மையானது; அதை நம்மால் புரிந்துகொள்ளமுடிகிறது. ஆனால், காந்திய அணுகுமுறையில் நதிநீர் இணைப்பு என்கிற பேச்சு எழுவதற்குமுன் உள்ளூர் அளவில் வேறு பல முயற்சிகள் நடந்திருக்கும். முதலில் நாம் கிராமங்களிலும், நகரங்களிலும் உள்ள நீர்நிலைகளை மீட்க வேண்டும். அவற்றின் வழித்தடங்களை ஆக்கிரமிப்புகளிலிருந்து காக்கவேண்டும். நம் ஆறுகளில் மணல் கொள்ளையைத் தடுக்க வேண்டும். மழைநீர் தேக்கங்களை உருவாக்க வேண்டும். தண்ணீரை அளவாகப் பயன்படுத்தும் தொழில்களை ஊக்குவிக்க வேண்டும். தண்ணீரை விழுங்கும் பயிர்களையும் விவசாய முறைகளையும் தவிர்க்கவேண்டும். நிலத்தடி நீரை அளவுக்கதிகமாக உறிஞ்சி மண்ணைப் பாழாக்கி, வருங்காலச் சந்ததியினிருக்குச் சொந்தமானதை விரயமாக்கும் பழக்கத்தைக் கைவிட வேண்டும். நம் தேவைகளை, நம் வளங்களுக்கேற்றாற்போல் சுருக்கிக் கொள்ளவேண்டும். மழைக்காடுகளை அழிப்பதைத் தடுக்கவேண்டும்.

முக்கியமாக, நீர் மேலாண்மை கிராம மக்களின் அதிகாரத்துக்கு உட்பட்டதாக இருக்கவேண்டும். மத்திய, மாநில அரசுகளின் மையப்படுத்தப்பட்ட அணுகுமுறையே நீர் மேலாண்மையை மக்களிடமிருந்து விலக்கி, இன்றைய பற்றாக்குறையை நோக்கித் தள்ளியிருக்கிறது.

உள்ளூர் மக்களே செய்யக்கூடிய இத்தனை பணிகளை ஊக்குவிக்காமல், மைய அதிகாரத்தை மேலும் வலுவாக்கி, பெரும் சுற்றுச்சூழல் பாதிப்பினை உருவாக்கி, பெருமளவு மக்களை இடம்பெயரச்செய்யக்கூடிய நதிநீர் இணைப்பையோ அசுர அணைகளையோ பொதுநலனுக்கு எதிரானதாகவும் குறுகியகால நோக்கம் கொண்டதாகவும் காந்திய அணுகுமுறைக்கு மாறானதாகவுமே நாம் பார்க்கமுடியும்.

நாட்டின் நன்மைக்காக ஒரு கிராமம் தியாகம் செய்யவேண்டும், ஒரு கிராமத்துக்காக ஒரு குடும்பம் தியாகம் செய்யவேண்டும், குடும்பத்துக்காக ஒரு தனிநபர் தியாகம் செய்யவேண்டும் என்று காந்தி கூறியதாக கூறப்படுவதை, அவரது ஒட்டுமொத்தப் பார்வையிலிருந்து விலக்கி நாம் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறோம். தனிநபர்களும் கிராமங்களும் தியாகம் செய்யத் தயாராக இருக்கவேண்டும்; ஆனால் அரசுகள் மக்களையும் ஊர்களையும் பலியிடக்கூடாது. ஒவ்வொரு தனிநபரையும், ஒவ்வொரு கிராமத்தையும், இயற்கையையும் அக்கறையுடன் அரவணைத்து, அனைவரது நலனையும் கருத்தில் கொண்டு செயல்படுவதே சரியான காந்தியப் பார்வை. அவ்வாறு செயல்படும்போது, பொதுநலனுக்காகத் தங்கள் சுயநலன்களைத் தியாகம் செய்வதற்கு மக்களே முன்வருவார்கள்.

ஒவ்வொரு வளர்ச்சிப் பணியையும் நாம் இந்த அளவுகோள்களின்படி அணுகினால், எல்லா மட்டத்திலுள்ள மக்களுக்கும் இயற்கைக்கும் ஏதுவான திட்டங்களை வகுக்கமுடியும்.

விமர்சகன்: மைய அதிகாரத்தை வலுவாக்கக்கூடாது என்கிறீர்கள். மக்கள் வலுவான மையம் வேண்டும் என்றுதானே நினைக்கிறார்கள். எல்லாப் பிரச்சனைகளையும் விரைவாகத் தீர்க்கக்கூடிய வலுவான தலைவர்கள் என்று யாரைக் கருதுகிறார்களோ அவர்களைத்தானே தேர்ந்தெடுக்கிறார்கள்.

பயணி: வலுவான தலைமை நமக்குத் தேவைதான். ஆனால், அது வெறும் மத்திய மாநில அரசாங்கங்களில் இருந்து பயனில்லை. கிராமங்களிலும் நகரங்களிலும் உள்ளூர் அமைப்புகளைத் திறம்பட நிர்வகிக்கக்கூடிய வலுவான கூட்டுத்தலைமைதான் நமக்குத் தேவை. அதிகாரத்தைக் குவிக்கின்ற தலைமை சர்வாதிகாரத்தையும் சகிப்பின்மையையும் நோக்கியே இட்டுச்செல்லும்.

அதிகாரம் பரவலாகும் போதுதான், மக்கள் தங்களுக்கான பாதையை தாங்களே சரியான முறையில் தேர்ந்தெடுப்பார்கள். காந்தி கண்ட கிராம சுயாட்சியை அடையும்போதுதான் நாம் உண்மையான சுதந்திரத்தை அடைவோம்.

விமர்சகன்: சகிப்புத்தன்மை குறித்துப் பேசுகிறீர்கள். காந்தியவாதிகளுக்குச் சகிப்புத்தன்மை இருப்பதுபோலத் தெரியவில்லையே. கோவையில் நடந்த கூட்டத்தில், ஒரு காந்தியவாதி குளிர்சாதன வசதியைப் பயன்படுத்தக்கூடாது, கொக்கொ கோலா போன்ற நிறுவனங்களின் தண்ணீரைப் பயன்படுத்தக்கூடாது என்று கட்டாயப்படுத்தினாரே, இல்லையேல் வெளியேறிவிடுவேன் என்று அச்சுறுத்தினாரே. அப்போது, ஒரு பேச்சாளர்கூட காந்தியவாதிகளுக்கு சகிப்புத்தன்மை அவசியம் என்று சுட்டிக்காட்டினாரே.

பயணி: நான் சொல்கிற சகிப்பின்மை அதுவல்ல என்பது உங்களுக்கே தெரியும்.

நீங்கள் குறிப்பிடும் வகையான சகிப்புத்தன்மையை காந்தி ஒருபோதும் வலியுறுத்தியிருக்கமாட்டார். எந்தவொரு கூட்டத்திலும் தவறு நிகழும்போது சுட்டிக்காட்டுவதற்கு அவர் தயங்கியதே இல்லை. இங்கிலாந்து அரண்மனையில்கூட ‘எனக்கும் சேர்த்து அரசரே உடையணிந்திருக்கிறார்’ என்று சொன்னவர்தான் காந்தி. பொதுக்கூட்டங்களில் ஆங்கிலத்திலோ சமஸ்கிரதத்திலோ பேசும்போது, ஏன் தாய்மொழியில் பேசவில்லை என்று கேட்டவர்தான் காந்தி. சிறுமை கண்டு பொங்குகிறவராகவே அவர் எப்போதும் இருந்திருக்கிறார். எதிர்ப்பை வெளிப்படுத்தும் முறையில் தான் அகிம்சையைக் கடைபிடித்தார்.

விமர்சகன்: உங்கள் கருத்தை என்மீது திணிப்பதும் வன்முறைதானே.

பயணி: உண்மைதான். ஆனால், உங்கள் கருத்து தவறென்று சுட்டிக்காட்டுவதில் வன்முறை ஏதும் இல்லை. தான் ஆணித்தரமாக நம்பும் கருத்து ஏற்கப்படாவிட்டால், வெளியேறிவிடுவதாகச் சொல்வதிலும்கூட வன்முறை ஏதும் இருப்பதாக நான் கருதவில்லை. நம் கருத்தை நிலைநாட்டப் போராடுவதிலும் வன்முறை இல்லை. போராடுகிற முறைகளில்தான் வன்முறையும் அகிம்சையும் வருகின்றன.

காந்தியை முன்னிறுத்தி நாம் செயல்படும்போது, குறைந்தபட்ச எளிமையும் நேர்மையும் இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பதில் தவறில்லையே.

குளிரூட்டப்பட்ட வாகனங்களில் பயணிக்கும் போதோ, பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்தாமல், தனிவாகனத்தைப் பயன்படுத்தும்போதோ குற்றவுணர்ச்சி மேலெழுகிறது. மற்றவர்களுக்காகவும் நமது வசதிகளுக்காகவும் நாம் சிறிய அளவிலும் பெரிய அளவிலும் சமரசங்கள் செய்து பழகிவிட்டோம். அத்தகைய சமரசங்கள் நிகழும் போதெல்லாம் காந்தி நம்மைக் கேள்வி கேட்கிறார். காந்தியும் சமரசங்கள் செய்திருக்கிறார்; அவற்றை அவர் சொல்லித்தான் நமக்குத் தெரியும். நாமும் நம் சமரசங்களை நேர்மையுடன் ஒப்புக்கொண்டு, முடிந்தவரையில் களைவதுதான் காந்திய வழிமுறைக்கு நம்மை நெருக்கமாக இருக்கச்செய்யும்.

விமர்சகன்: காந்தியைப் பற்றி உயர்வாகவே பேசுகிறீர்கள். காந்தி மீதான விமர்சனங்கள் மீது உங்கள் சகிப்புத்தன்மை எப்படி? ஒரு பெண்கள் கல்லூரியில் ஒரு மாணவி கேள்வி கேட்டபோது, பெண்களைச் சோதனைக்குள்ளாக்கியது குறித்து விமர்சனம் எழுந்ததே.

பயணி: காந்தியும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் அல்லர். காந்தி மீது வைக்கப்படுகிற விமர்சனங்களைத் தொடக்கி வைத்தவரே காந்திதானே. எல்லா விமர்சனங்களுக்கும் காந்திய ஆர்வலர்கள் தொடர்ந்து பொறுமையாக பதிலளித்து வந்திருக்கின்றனர். உண்மையில், இன்றைக்கு உள்ள சூழலில், காந்தி மீதுதான் மிக எளிமையாக எந்தவிதமான விமர்சனமும் வைத்துவிட்டு எந்தவிதமான வன்முறையான எதிர்விளைவையும் சந்திக்காமல் இருக்க முடியும். அதுவே காந்தியின் வெற்றி.

பகத் சிங் குறித்து, நேதாஜி குறித்து, தலித்கள் குறித்து, வர்ணாசிரமக் கொள்கைகள் குறித்து, பெருமுதலாளிகளின் நிதியுதவியை ஏற்றுக்கொண்டது குறித்து, பெண்கள் குறித்து, ஆப்பிரிக்க மக்கள் பற்றிய ஆரம்பகால எழுத்துகள் குறித்து என்று பல்வேறு விமர்சனங்கள் எழுகின்றன. அவை ஒவ்வொன்றுக்கும் விரிவாக மறுப்புகளோ விளக்கங்களோ எழுதப்பட்டிருக்கின்றன.

இந்த யாத்திரையின் போது இரண்டு விமர்சனங்களைக் குறித்துப் பேச நேர்ந்தது.

முதலில் ஹரிஜன சேவை. ஹரிஜன் என்ற சொல்லை காந்தி உயர்ந்த நோக்கத்துடனேயே பயன்படுத்தினாலும், இன்றைக்கு அது அம்மக்களுக்கு ஏற்பற்றதாக ஆகிவிட்டது என்பதால் தலித் என்ற சொல்லைப் பயன்படுத்துவதே பொருத்தமானது. காந்தி அளவிற்குத் தலித் மக்களுக்காகப் பணியாற்றியவர் வேறு எவரும் இல்லை என்று உறுதியாகச் சொல்லலாம். பாதிக்கப்ப்பட்ட மக்களின் தரப்பிலிருந்து எதிர்ப்புக்குரல் எழுவது அவசியம் என்றபோதும், ஆதிக்கம் செலுத்தும் மக்களின் மனங்களை மாற்றும் பணி அதனைவிட அவசியம். பாதிக்கப்பட்டவர்களும் ஆதிக்கவாதிகளும் ஒரே சமூகமாக ஒரே இடத்தில் வாழவேண்டியிருக்கும்போது இந்த மனமாற்றம் மிகவும் முக்கியமானது. காந்தி அந்த மனமாற்றத்தைக் கொண்டுவந்தார். கடக்க வேண்டியது இன்னும் வெகு தூரம் என்ற போதினும், கடந்துவந்த பாதையும் வெகு நீளம்தான்.

தலித்களுக்கு அனுமதி மறுக்கும் கோயில்களுக்கு, தானோ தன்னைச் சார்ந்தவர்களோ செல்லக்கூடாது என்று காந்தி நினைத்தார். கஸ்தூர்பா காந்தியும், மகாதேவ் தேசாயும் பூரி ஜகன்னாதர் கோயிலுக்குச் சென்றபோது, அதைக் கண்டித்துப் பத்திரிக்கையில் எழுதினார். வர்ணாசிரமத்தை ஆரம்ப காலங்களில் வலியுறுத்திய அதே காந்தி, பின்னாளில் தான் கலந்துகொள்ளும் திருமணங்கள் கலப்புத் திருமணங்களாக – அதிலும் மணமக்களில் ஒருவர் தலித்தாக, இருக்கவேண்டும் என்று நிபந்தனைவிதித்தார்.

தலித்பெண் ஒருவர்தான் இந்தியாவின் முதல் ஜனாதிபதியாக வேண்டும் என்று விரும்பியவர் காந்தி. தலித் அறிஞரான அம்பேத்கர், அரசியல் ரீதியாக எதிர்தரப்பில் இருந்தபோதும்கூட, இந்தியாவின் அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குத் தலைமை தாங்கும் சூழலை ஏற்படுத்தியவர் காந்தி. தொகுதி ஒதுக்கீடு விவகாரத்திலும், அம்பேத்கர் காந்தி ஆகிய இருவரது தரப்பிலும் சில நியாயங்கள் இருந்தன. சமூகம் பிளவுபட்டுவிடக்கூடாது என்கிற நோக்கிலும், ஆதிக்கவாதிகளின் மனமாற்றம் நிகழவேண்டும் என்ற நோக்கிலும் காந்தியின் அணுகுமுறையே அன்றைய நாளுக்குப் பொருத்தமாக இருந்தது. அதனாலேயே தனிவாக்காளர் தொகுதிக் கோரிக்கையை ஏற்ற அம்பேத்கர், பின்னாளிலும் வலியுறுத்தவில்லை. தனித்தொகுதி ஒதுக்கீடு முறையில், ஆதிக்க சாதியினரின் விருப்பப்படிதான் தலித் பிரதிநிதிகள் செயல்படமுடியும் என்ற அம்பேத்கரின் அன்றைய வாதம் இன்றைக்கும் உண்மையாக உள்ளது. இருவரையும் எதிரெதிர் துருவங்களாகக் கட்டமைப்பதைவிடுத்து, இருவரது பங்களிப்பையும் அங்கீகரித்து, இவருவரது நியாயங்களையும் புரிந்துகொண்டு, காந்தியர்களும் தலித் இயக்கத்தினரும் ஒருங்கிணைந்து செயல்படுவதுதான் தலித் மக்களுக்கும் பிற சமூகத்தினருக்கும் நன்மை விளைவிக்கும்.

அடுத்து, பெண்கள் சார்ந்த சோதனை. காந்தியின் பிரம்மச்சரிய விரதம் குறித்த பார்வையும், பாலியல் உணர்வுகளை வென்றெடுக்க அவர் நிகழ்த்திய சோதனைகளும் இன்றைய மதிப்பீடுகளின்படி நெருடலானவை. ஆனால், அவரோடு நெருங்கிச் செயல்பட்ட பெண்கள் தரப்பிலிருந்து எந்தவிதமான குற்றச்சாட்டுகளும் எழுந்ததே இல்லை. அவரது சோதனைகள் குறித்து நாம் அறிந்துகொண்டதெல்லாம், பெரும்பாலும், அவரது எழுத்துகள் வாயிலாகத்தான். நவகாளியில் அவரது உக்கிரமான சோதனையின் போது உடனிருந்த மனு காந்தி, தனது புத்தத்திற்கு, ‘Bapu – My Mother’ என்று பெயரிட்டார். தந்தை என்றுகூடச் சொல்லவில்லை. அன்னை என்கிறார். இந்த ஒற்றை வாசகத்தின் முன் எந்தக் குற்றச்சாட்டும் அர்த்தம் இழக்கும். (யாத்திரையின் போது நிகழ்ந்த உரையாடலை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திய டாக்டர் ஜீவானந்தம் அவர்கள், இந்நூலை உடனே தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். விரைவில் பதிப்பில் வரும் என்று நினைக்கிறேன்.)

விமர்சகன்: பாலியல் சோதனைகளை விடுவோம். தனது மனைவியை அவர் நடத்திய விதத்தைப் பார்த்தால், பெண்ணுரிமை விஷயத்தில் மிகவும் பிற்போக்கானவராகத்தானே தெரிகிறார்.

பயணி: இளமைக் காலத்தில், கஸ்தூர்பாவைப் பல சமயங்களில் காந்தி தவறாக நடத்தியிருக்கிறார். இவையும் அவரது எழுத்துகளில் இருந்துதான் அறிகிறோம். அவர் நடந்துகொண்ட விதத்திற்காக வருத்தம் தெரிவித்தே எழுதியிருக்கிறார். ஆனால், பின்னாளில் கஸ்தூர்பாவிடம் மிகப்பெரும் பொறுப்புகளை ஒப்படைக்கிறார். போராட்டங்களைத் தலைமைதாங்கி நடத்த ஊக்குவிக்கிறார்.

பெண்களைப் போராட்டக் களத்தில் பங்கெடுக்க வழிவகுத்ததில், வரலாற்றில் மிகப்பெரிய இடம் காந்திக்கு என்றும் இருக்கும். கத்தி, துப்பாக்கி போன்ற ஆயுதங்களின் துணைகொண்டு நடந்த வரை போர்க்களங்கள் பெரும்பாலும் ஆண்களின் தனிக்களங்களாகவே இருந்துள்ளன. ஆனால், சத்தியாகிரகம் என்கிற ஆயுதத்தை காந்தி அறிமுகம் செய்த பின்னர்தான் திரளான பெண்கள் போராட்டக் களத்தில் இறங்கிப் பணியாற்றி, தலைமையேற்க வழி பிறந்தது.

பெண்களுக்கு காந்தி கொடுத்த அடுத்த ஆயுதம் ராட்டை. வீட்டிலிருந்தே தங்களது நேரத்தில், அவர்கள் பிரயோகிக்கக்கூடிய போர்க்கருவி.

விமர்சகன்: என்னது, ராட்டையா? பிற்போக்குத்தனத்தின் இன்னொரு அடையாளம்.

பயணி: உண்மையில், காந்தியின் ராட்டை ஏகாதிபத்திய எதிர்ப்பின் சின்னம். இங்கிலாந்து மீதான பொருளாதாரச் சார்பைத் துண்டித்து, ஆங்கிலேயரின் பொருளாதாரச் சுரண்டலைத் தடுக்க முனைந்த ஆயுதம்.

இன்றைக்கும் ராட்டை கிராம சுயாட்சியின் குறியீடு என்பதை இப்பயணத்தின் போதுதான் உணர்கிறேன். சர்வோதய சங்கங்கள் நடத்திய கூட்டங்களுக்கு வரும் நூற்போரையும், நெசவோரையும், குறிப்பாக பெண் ஊழியர்களைப் பார்க்கும் போது காந்தி விதைத்த சுயாட்சி விதை இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது என்று தெரிகிறது. காந்தியத்தின் மிச்சங்களில் முக்கியமானது சர்வோதய சங்கம்; அவர் தக்கார் என்பது காணப்படும் எச்சம். இன்றைக்குப் பல்லாண்டு கால இருப்பின்போது சேர்ந்துவிட்ட குறைகளோடே சர்வோதய சங்கங்கள் இயங்குகின்றன. ஆயினும் அவற்றின் சாத்தியக் கூறுகள் பிரமிக்கவைக்கின்றன.

நம் பொருளாதார அமைப்பு மக்களுக்காக மக்களால் இயங்க முடியும் என்பதன் சாத்தியத்தைச் சர்வோதய சங்கங்கள் போன்ற காந்திய அமைப்புகள் உள்ளடக்கியிருக்கின்றன.

சுதந்திர இந்தியாவில் முதன்முதலாக கதராடைகளுக்கும் கைவினைப்பொருள்களுக்கும் வரி விதிக்கப்பட்டிருப்பது, இந்த சுயாட்சிக்கு எதிரான ஒரு செயல்பாடாகவே நாம் பார்க்கவேண்டும்.

இத்தடைகளையும் மீறி, சர்வோதய சங்கம் போன்ற அமைப்புகள் மக்களுக்குப் பொருளாதார சுதந்திரம் ஏற்படுத்தித்தந்தால்தான், அதிகாரம் பரவலாக்கப்பட்ட அரசியல் சுயாட்சியை நோக்கி நாம் நகரமுடியும்.

இன்றைய சூழலியல் தேவைகளுக்கேற்பத் தங்களை மாற்றியமைத்துக்கொள்ளவேண்டிய அவசியமும் இந்த அமைப்புகளுக்கு உண்டு. அமைப்பின் செயல்பாடுகள், நோக்கங்கள், எதிர்காலக் குறிக்கோள்கள் குறித்து ஓர் ஆழமான அலசலும், கூர்நோக்கும், தொலைநோக்கும் தேவைப்படுகின்றன.

விமர்சகன்: நவீன உலகின் போக்குக்கு முற்றிலும் முரணானதாக இத்தகைய அரசியல், பொருளாதாரப் பார்வை உள்ளது. மைய நீரோட்டத்திற்கு இது ஒரு போதும் வர முடியாது. அதனால்தான் அம்பேத்கர், நேரு ஆகியோர் காந்தியத்தின் இந்த கூறுகளை முற்றிலும் நிராகரித்தனர்.

பயணி: மைய நீரோட்டத்திற்கு இப்பார்வை வராவிட்டால், மைய நீரோட்டம் என்ற ஒன்றே இல்லாத அளவிற்கு அழிவை நோக்கி நாம் சரிந்துவிடுவோம் என்பது நம்மை அச்சுறுத்தும் சூழலியல் சாத்தியம். அம்பேத்கர், நேரு ஆகியோர் அவர்களது காலகட்டங்களின் நிதர்சனத்தில் கால் பதித்திருந்தனர். அந்த நிதர்சனங்களே அவர்களது பார்வைகளைச் செதுக்கின. காந்தியின் ஒரு கால் நிதர்சனத்தில் இருந்தாலும், மறு கால் சத்தியத்தை நோக்கியே நீண்டுகொண்டிருந்தது.

விமர்சகன்: இச்சிக்கலால்தான், காந்தியை அரசியல் தளத்திலிருந்து விலக்கி தனிமனித தளத்தில் மட்டுமே வைக்கவேண்டும் என்று ஒரு பார்வை உள்ளதே.

பயணி: தனிமனித தளத்தில் காந்தி அவசியம் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், அது காந்தியத்தின் சாத்தியங்களைச் சுருக்கிவிடும். அது தொடக்கப்ப்புள்ளி மட்டுமே. எந்த ஒரு நேர்மையான ஆன்மீகவாதியும் காந்தி வெளிப்படுத்திய தனிமனித ஒழுக்கத்தையும், அன்பையும், நேர்மையையும் வெளிப்படுத்தியிருப்பார்கள். ஆனால், காந்தியை சமூக, அரசியல், பொருளாதார தளங்களில் விரித்தெடுக்கும் போதுதான் விசுவரூபம் கொள்கிறார். பல சங்கடம் தரும் கேள்விகளை எழுப்புகிறார். சங்கடம் தரும் தீர்வுகளைத் தருகிறார். தனிமனித தளத்தில் ஆன்ம சாந்தி தரும் காந்தியைவிட, சமூகத் தளத்தில் சங்கடம் தரும் காந்தி தான் நமக்கு அத்தியாவசியம்.

விமர்சகன்: காந்தியை இந்துத்துவர்கள் தமதாகக் கொண்டாடும் காலம் வந்துவிடும் போலிருக்கிறதே. இருவருக்கும் பொதுவான கூறுகள் பல இருக்கின்றனவே – பசுவதை எதிர்ப்பு, சைவ உணவு, இந்திய பண்பாட்டினை மீட்டெடுத்தல், ராமர் பற்று, தேசியம், சுதேசியம், இந்தி ஆர்வம் என்று அடுக்கிக்கொண்ட போகலாமே.

பயணி: காந்தியைச் சுவீகரிக்க முடியுமானால், இந்நேரம் இந்துத்துவர்கள் அதைச் செய்திருப்பார்கள். நீங்கள் குறிப்பிட்ட விஷயங்களில் காந்திக்கும் இந்துத்துவர்களுக்கும் மேலோட்டமான ஒற்றுமை இருப்பதுபோலத் தோன்றினாலும், ஆணித்தரமான மாறுபாடுகள் இருக்கின்றன.

காந்தியின் ராமனும் இந்துத்துவர்களின் ராமனும் ஒருவனல்ல. காந்தியின் ராமன் சரித்திர ராமனோ, புராண ராமனோ அல்ல; எல்லாருக்குமான கடவுளின் ஒரு பெயர்; அவர் கடவுளாகக் கருதிய வாய்மையின் ஒரு பெயர். காந்தியின் ராமன் ஒருபோதும் வன்முறையின் சின்னமாக இருக்கமாட்டான். ஒரு போதும், பெரும்பான்மையினர் ஆதிக்கத்தின் நாயகனாக மாறமாட்டான். எக்காரணம் கொண்டும் ஒரு வழிபாட்டுத்தலத்தை இடித்துவீழ்த்தமாட்டான்.

காந்தி பசுக்கொலையை எதிர்த்தது, பெருந்திரளான மக்களின் மதநம்பிக்கை சார்ந்திருப்பதனாலும், பசு கிராமப் பொருளாதாரத்தின் அச்சாணியாக இருந்ததாலும்தான். ஆனால், சட்டங்கள் மூலம் பசுக்கொலையைத் தடுக்க ஒருபோதும் அவர் துணைபோகவில்லை. பசுவின் பெயரால் இஸ்லாமியர்கள்மீதும், தலித்கள் மீதும் வன்முறை கட்டவிழ்த்துவிடப்படுவதை எப்போதும் எதிர்த்தே இருப்பார். அவர் கோரியது மாற்றுத்தரப்பின் மன மாற்றத்தையே. தம் தரப்பின் திணிப்பை அல்ல. அது மட்டுமன்றி, அவர் பசுவதை ஆங்கிலேயர் காலத்தில்தான் நிறுவனமாக்கப்பட்டு அதிகரித்தது என்று கருதினார். இந்துத்துவர்கள் இஸ்லாமிய ஆட்சியைத்தான் இதற்குக் காரணமாகக் காட்டுகின்றனர். பசுப் பொருளாதாரத்தைச் சிதையவிட்டுவிட்டு, பசுவுக்காகக் கண்ணீர்விடுவதில் உள்ள பாசாங்கினை காந்தி அம்பலப்படுத்தியிருப்பார்.

அதே போல, சைவ உணவை தனிப்பட்ட ஒழுக்கநெறியாகப் பார்த்தாரேயன்றி, ஒரு தேசியத் திட்டமாக அதை முன்வைக்கவில்லை. கான் அப்துல் கஃபார் கான் தன் மகன்களோடு வர்தாவில் தங்கியிருந்தபோது, அவரது மகன்களுக்கு அசைவ உணவு ஏற்பாடு செய்யலாம் என்று கூறியதை நாம் நினைவுகூர வேண்டும்.

காந்தியின் தேசியம் மனிதநேயத்துக்குக் கீழ்ப்படிந்ததாகத்தான் இருந்தது. பாக்கிஸ்தான் உருவாக்கத்தை கடுமையாக எதிர்த்த காந்தி, மக்களின் விருப்பம் அதுவாக இருப்பதை அறிந்தபோது, விரக்தியுடன் அதை ஏற்றுக்கொள்ளத்தான் செய்தார். மக்களின் மனங்களை மாற்றுவதிலேயே அவர் முனைப்பு இருந்தது. ஜின்னாவை பிரிக்கப்படாத இந்தியாவின் பிரதமராக்கலாம் என்ற கோரிக்கையை முன்வைக்கும் அளவிற்கு பிரிவினையைத் தவிர்க்க முயற்சிகள் எடுத்தார். ஆனால், பிரிவினையை எதிர்த்துப் போராட யாரும் துணையாக இருக்கப்போவதில்லை என்பதை அறிந்தபோது, தனியே அதை எதிர்த்துப் போராட அவர் முனையவில்லை. தன் கவனம் முழுவதையும் பிரிவினை விளைவித்த வன்முறையை எதிர்கொள்வதிலேயே செலுத்தினார். தேசியத்தின் பெயரால் எப்பகுதி மக்கள்மீதும் போர்தொடுக்கவோ, கட்டாயப்படுத்தவோ ஒருபோதும் காந்தி இணங்கமாட்டார். இந்தியாவின் பன்மைத்தன்மையை முழுவதும் உணர்ந்திருந்தார் காந்தி. ஒற்றைத்தன்மையுள்ள ஒரு கலாச்சாரத்தை எவர்மீதும் திணிப்பதை எதிர்த்தே இருப்பார். தேசியவாதத்தின் பெயரால், ராணுவப் பலப்பரீட்சைக்கு பெருந்தொகை செலவிடப்படுவதற்கு எதிராக இருந்திருப்பார்.

இந்தியப் பண்பாட்டின் மீது பெரும் மதிப்பு கொண்டிருந்த போதும், இந்தியப் பண்பாட்டின் எதிர்மறை அம்சங்களை விமர்சிக்கவும், துறக்கவும் காந்தி தயங்கியதில்லை. நடக்காதவற்றை நடந்ததாகக் கட்டமைக்கவும் அவர் முயலவில்லை. சாத்திரங்களுக்கும் சத்தியத்திற்கும் முரண் வரும்போது சத்தியத்தையே ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றார்.

காந்தியின் சுதேசியம் ஆத்மார்த்தமானது. கிராம சுயாட்சியையும் அதிகாரப் பரவலாக்குதலையும் அடித்தளமாகக்கொண்டது. வெறுப்பின் ஊற்றுக்கண்ணிலிருந்து உதித்ததல்ல. அதனால்தான், இங்கிலாந்தில் கதர் இயக்கத்தால் வேலையிழந்த மில் தொழிலாளர்கள் காந்தியைத் தம்மவராக ஏற்றுக்கொண்டாட முடிந்தது. பன்னாட்டு நிறுவனங்களும் இந்தியப் பெருநிறுவனங்களும் இந்தியாவில் உற்பத்தி செய்தாலும், சமூக ஏற்றதாழ்வுகளை அதிகரிப்பதை சுதேசியத்தின் பெயரால் ஒருபோதும் காந்தி ஏற்றுக்கொண்டிருக்கமாட்டார்.

ஏகாதியபத்திய எதிர்ப்பின் இன்னொரு ஆயுதமாகவும் தேச ஒருமைப்பாட்டின் கருவியாகவுமே காந்தி இந்தியைப் பார்த்தார். மாற்று மொழியினரின் விருப்பத்திற்கு எதிராக எந்த மொழியையும் திணிப்பது காந்தியம் ஆகாது. இந்தியாகட்டும், வேறு எந்த மொழியாகட்டும், இயல்பாக மக்கள் ஏற்றுக்கொள்வதற்கான சூழலை உருவாக்குவதே காந்திய வழி. சட்டங்கள் மூலமாகவும், அதிகார பலத்தின் மூலமாகவும் திணிப்பது அல்ல. அது மட்டுமன்றி, தாய்மொழி வழியில் கல்வி, தகவல் பரிமாற்றத்தில் தாய்மொழிக்கே தலையாய இடம் என்று தாய்மொழியின் பயன்பாட்டையே பிரதானமாக வலியுறுத்தியவர் காந்தி. ஒற்றைத்தன்மையை நிலைநாட்ட ஒருமைப்பாட்டைக் குலைக்கும் வகையில் செயல்பட்டிருக்கமாட்டார். (காந்தியர்கள் பலரும் மும்மொழிக் கொள்கையை முன்வைப்பவர்களாக உள்ளனர். இந்த யாத்திரையின் போதும், மார்க்கண்டன் அவர்கள் மும்மொழிக்கொள்கை வேண்டும் என்றே பேசினார். ஆனால், அவர்கள் எவரும் மக்கள் விருப்பத்துக்கு எதிரான மொழித்திணிப்பை ஆதரிப்பவர்களாக இருக்கமாட்டார்கள் என்றே நம்புகிறேன்.)

ஆக, இந்துத்துவர்கள் காந்தியை ஓர் ஆன்மீகவாதியாகவும், தூய்மை இந்தியா போன்ற திட்டங்களுக்கு வசதியான ஒரு பிம்பமாகவும் ஏற்றுக்கொள்ளமுடியமே அன்றி, அவரை முழுமையாக சுவீகரித்தால் அவர்களும் இந்துத்துவத்தைத் துறந்து காந்தியர்களாகிவிடுவார்கள். அவர்கள் இந்துத்துவர்களாக இருக்கும்வரை காந்தியைக் கூறு போட்டு, வெகுசில அம்சங்களைத்தான் எடுத்துக்கொள்ள முடியும். அவர் கையில் திணிக்கப்பட்ட விளக்குமாறு அவர்களையும் சேர்த்தே பெருக்கித்தள்ளும் என்பதை அவர்கள் அறியாதவர்களல்லர்.

விமர்சகன்: இந்துத்துவம் மிகவும் வலிமையாகிவரும் இந்த வேளையில், காந்தியர்கள் இந்துத்துவத்துக்கு எதிராகப் பெரிதாக ஏதும் போராட்டம் நடத்தவில்லையே? போராட்டக் களங்களில் இன்று பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் பெயர் கேட்கிற அளவிற்கு காந்தியின் பெயர் கேட்பதில்லையே? காந்தி ஒத்துழைப்பின் அடையாளமாகிவிட்டாரா?

பயணி: சர்வோதயம் மலர்கிறது இதழில் க.மு.நடராஜன், பாதமுத்து போன்றவர்கள் தொடர்ந்து இந்துவத்துக்கு எதிராக எழுதிக்கொண்டுதான் இருக்கிறார்கள். காந்திய விழிப்புணர்வு யாத்திரையில் மார்க்கண்டன் பள்ளி, கல்லூரிகளிலெல்லாம் இந்துத்துவத்துக்கு எதிரான குரலில்தான் பேசினார். இவர்கள் எல்லாம் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள். அடுத்தடுத்த தலைமுறையினர்களிலும், முகநூலிலும் பிற இதழ்களிலும் காந்தியர்கள்/காந்திய ஆர்வலர்கள் காந்தியத்தை முன்னிறுத்தி இந்துவத்துக்கு எதிராக எழுதிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

எனினும், இந்துவத்துக்கு எதிரான பெரிய இயக்கமெதுவும் இதுவரையில் காந்தியர்களால் நடத்தப்படவில்லைதான். தமிழகத்தின் பெரிய போராட்டக் களங்களில் பெரியார், அம்பேத்கர் அளவிற்கு இன்று காந்தியின் பெயர் ஒலிப்பதில்லைதான். கலகக்கார காந்தி இன்றைய மாணவர்களை/இளைஞர்களைச் சென்றடையவில்லை. அல்லது, போராட்டக் களத்தில் மட்டுமன்றி வாழ்க்கையிலும் அர்ப்பணிப்பையும் தியாகத்தையும் கோரும் காந்தி நமக்கு ஏற்புடையவராக இல்லை.

ஆனால், காந்தியை ஒத்துழைப்புக் குப்பிக்குள் நீண்ட நாள் அடைத்திருக்க வாய்ப்பில்லை. ஒத்துழையாமையின் தோற்றுவாய் அவர். காந்தியர்களின் போதாமைகளையும் மீறி, சங்கடப்படுத்தும் கேள்விகளைக் கேட்டு, சத்தியத்தை நோக்கித் தள்ளிக்கொண்டிருப்பவராகவே காந்தி இருப்பார்.

விமர்சகன்: காந்தி அப்படிச் செய்திருப்பார், இப்படிச் செய்திருப்பார் என்று சொல்வதில் என்ன பயன். ஏன், கடந்த காலத்தின் சிறைக்குள் நாம் இருக்கவேண்டும்? இன்றைய சூழலில் நாம் என்ன செய்யவேண்டும் என்பதுதான் முக்கியம், இல்லையா?

பயணி: காந்தி மானுடச் சிந்தனையின், செயல்பாட்டின் உச்சம். காந்தி இப்படி இருந்திருப்பார் என்று கணிப்பதும், நாம் செய்ய வேண்டியது இதுவென்று அறிவதும் வெவ்வேறல்ல. காந்தியைக் கடந்த காலத்தின் பிரதிநிதியாக நான் பார்க்கவில்லை. அவர் நம் நிகழ்காலத்துக்குரியவர்; எதிர்காலத்துக்கு வழிகாட்டி.

*****

மதுரை காந்தி அருங்காட்சியத்தை எனது மகளோடு பார்வையிட்டுக்கொண்டிருந்த போது, ஒரு படத்தைக் காண்பித்து, காந்தி செருப்பு அணியாமல் வெறுங்காலோடு நடந்துகொண்டிருப்பதைச் சுட்டிக் காட்டினாள். அந்தப் புகைப்படம் நவகாளி யாத்திரையின் போது எடுக்கப்பட்டது. தன் வாழ்வில் தான் சந்தித்த மிகச் சிக்கலானப் பிரச்சனையைத் தீர்க்க, தன்னைச் சூழ்ந்திருந்த இருளைக் கிழித்து ஒளி பிறக்க, மிகக் கடுமையான தவம் தேவைப்பட்டது என்று நம்பிய காந்தி, தன் ஏற்கனவே எளிமையான வாழ்க்கையை, மேலும் எளிமைப்படுத்திக் கொள்ள முயன்றார். அப்படியான ஒரு செயல்தான், 77 வயதில், செருப்பு அணியாமல், நவகாளியின் ஈரநிலங்கள் முழுவதும் நடக்கத் துணிந்தது.

யாத்திரையின் போது கேட்ட எல்லா உரைகளை விடவும், அங்கு கண்ட அந்த புகைப்படம் என் மகளின் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதுபோல், யாத்திரையின்போது ஒரு சொல், ஒரு காட்சி, ஒரு செயல் எங்காவது ஒரு விதையாக விழுந்து கொண்டே இருந்திருக்கும் என்ற நம்பிக்கை துளிர்த்தது.

புலம்பெயர்ந்த இந்தியர்களுக்காக தென்னாப்பிரிக்காவிலும், சுதந்திரத்துக்காக தண்டியை நோக்கியும், இந்துக்களுக்காக நவகாளியிலும், முஸ்லிம்களுக்காக பீகாரிலும், தலித்களுக்காக இந்தியாவெங்கும் பல்வேறு யாத்திரைகளை மேற்கொண்டவர் காந்தி. அவரது வாழ்க்கையே சத்தியத்தையும் சர்வோதயத்தையும் நோக்கிய ஒரு யாத்திரைதான். அந்த யாத்திரை இன்னும் தொடர்கிறது. தொடரவேண்டும்.


எஸ்.என்.நாகராசன் : காந்தியமும் மார்க்சியமும் சந்திக்கும் புள்ளி

ஜூன் 29, 2015

28-6-2015 அன்று, எஸ்.என்.நாகராசன் குறித்த கருத்தரங்கு கோவையில் நடந்தது. அவரைத் தமது ஆசானாகக்கருதும் கோவை ஞானி, பாமயன், சுந்தரராமன், பொன் சந்திரன் ஆகியோரை, கடந்த ஓராண்டில் வெவ்வேறு தருணங்களில் சந்தித்திருந்தேன். எஸ்.என்.நாகராசனையும் சிலமுறை சந்தித்திருக்கிறேன்; பல மணிநேரம் கட்டிப்போடும் வகையில் செறிவாக உரையாடக் கூடியவர். 88 வயதிலிலும், எல்லோரையும் ஒருங்கிணைத்து ஆயுதங்களை ஒழிக்கவும் இயற்கையைப் பாதுகாக்கவும் ஓர் உலகளாவிய இயக்கம் நடத்திவிட முடியும் என்கிற நம்பிக்கை தெறிக்கப் பேசுபவர். இரண்டு வாரங்கள் முன்பே இந்நிகழ்ச்சிக்கு வருமாறு பேரார்வத்தோடு அழைப்புவிடுத்திருந்தார். அதே ஆர்வத்தோடு நானும் சென்றிருந்தேன்.

காலை 10 மணிமுதல் இரவு 9 வரை அரங்கு நிறைந்திருக்கும் அளவிற்கு பல நல்ல, ஆழமான உரைகளைக் கேட்க முடிந்தது. நாகராசனின் கீழை மார்க்சியத்தில் மார்க்ஸ் மிகக் குறைவாகவே தெரிகிறார் என்று கோவை ஞானி கூறினார். எனக்கென்னவோ மார்க்ஸ் விட்ட இடத்தைப் பெருமளவு காந்தி நிரப்பிக் கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. பேசியவர்களில், ஈரோடு ஜீவானந்தத்தைத் தவிர காந்தி-குமரப்பாவின் கருத்துகளோடான ஒப்புமை குறித்து வேறு எவரும் அதிகம் கவனப்படுத்தவில்லை.

எஸ்.என்.நாகராசனைச் சந்தித்தபோதெல்லாம், அவர் காந்தியை வசைபாடாமல் இருந்ததில்லை. “Gandhi was a traitor,” என்பதுதான் நான் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டதும் அவர் சொன்ன முதல் வாசகம். டாட்டா, பிர்லா, பிரிவினை, சுபாஷ் என்று பழகிய சங்கதிகள்தாம். ஆனால், காந்தியின் அரசியலை நிராகரிக்கும் நாகராசனின் பல கருத்துகள் பெருமளவு காந்தியத்தையே ஒத்திருக்கின்றன. முந்தைய சந்திப்பில், அதைக் குறிப்பிட்டபோது ஒரு புன்னகையோடு அவர் ஏற்றுக்கொண்டார். உரையின் போதும், சில கட்டுரைகளிலும் “Industrialize and perish”, “Production by masses” போன்ற காந்தியின் கருத்துகளை மேற்கோள் காட்டவும் செய்தார்.

– கிராமங்களுக்கும், விவசாயத்துக்கும் இயற்கைக்கும் தரும் முக்கியத்துவம்
– மனித நேயமற்ற அறிவியல், நவீன வேளாண்மை, தொழில்நுட்பம் குறித்த எதிர்மறைப் பார்வை
– போராட்டங்களில் பெண்கள், இஸ்லாமியர்கள், தலித்களை முன்னிலைப் படுத்தும் நோக்கு
– ஆயுதப் போராட்டத்தின் மீதான அவநம்பிக்கை, ஆயுத ஒழிப்பு
– உழைப்பவரை அந்நியப்படுத்தாத உற்பத்தி முறைகள்
– தன்னலமற்ற சேவை மனப்பான்மை சார்ந்த அரசியலை வலியுறுத்தல்
– வைணவ மரபு
– தாய்மொழியில் கல்வி, பிற செயல்பாடுகள்
– (காந்தி உள்ளிட்ட) வழக்கறிஞர்கள் மீதான ஏளனம்

மார்க்ஸையும் மாவோவையும் விட காந்தியைக் கூடுதலாகப் படித்தவன் என்கிற முறையில், நாகராசன் முன்வைக்கும் இவற்றிலெல்லாமே எனக்கு காந்தியின் குரலே (குமரப்பாவின் குரலும்) கேட்கிறது. நாகராசனின் இன்றைய கருத்துகளில் அதிகம் தெரிவது மார்க்ஸா, மாவோவா, காந்தியா என்று ஒரு பட்டிமன்றம் வைத்திருந்தால், நான் காந்தி என்றே வாதாடியிருப்பேன். காந்தியிடமிருந்து அவர் மாறுபடும் புள்ளிகளும் (தேசிய இன விடுதலை போன்றவை) இருக்கத்தான் செய்கின்றன. ஆனாலும் அவர் மார்க்சிய அணுகுமுறை மூலமும் தனது அசலான சிந்தனை வாயிலாகவும் தமிழ் வைணவ மரபின் வழியாகவும் காந்தியத்தை அடைந்து, விரிவுபடுத்தி, மார்க்சிய மொழியில் புத்துருக் கொடுத்திருப்பதாகவே கருதுகிறேன்.

சென்ற வாரம், மதுரையிலுள்ள மூத்த காந்தியவாதியான K.M.நடராஜன், அலைபேசியில் அழைத்து நாகராசனின் கருத்தரங்குக்குச் செல்லுமாறு அறிவுறுத்தினார்; அடிக்கடி அவர் நாகராசனைப் பற்றி என்னிடம் பேசுவதுண்டு. தமிழ் தேசியத்தை முன்வைக்கும் அய்யநாதன், தியாகு போன்றவர்களும் நாகராசனைக் கொண்டாடினார்கள்; குணா மீதான அவரது தாக்கம் குறித்தும் பொன் சந்திரன் குறிப்பிட்டார். இந்திய ஒருமைப்பாட்டையும் பண்பாட்டு ஒருமையையும் வலியுறுத்தும் ஜெயமோகன் பட்டியலிட்ட தமிழின் மூன்று ‘முதல் சிந்தனையாளர்’களில் நாகராசன் ஒருவர். ஆஷிஸ் நந்தி அசலான இடதுசாரி சிந்தனையாளர்கள் என்று கருதும் இருவரில் நாகராசன் ஒருவர் என்று ஜி. எஸ். ஆர். கிருஷ்ணன் தனது உரையில் குறிப்பிட்டார். நாள் முழுவதும் இருந்த பார்வையாளர்களில் ராஜன் குறையும் இருந்தார். இப்படி முரண்பட்ட சிந்தனையுள்ள பலரும் ஒருசேர உரிமை கொண்டாடி மதிக்கும் அபூர்வ சிந்தனையாளர் எஸ்.என்.நாகராசனாகத்தான் இருப்பார்.


நாராயண் தேசாய்: காந்தியின் ஒளியில் ஒரு பயணம்

ஏப்ரல் 28, 2015

சர்வோதயம் மலர்கிறது இதழில் வெளிவந்த கட்டுரை.

………………………..

Sarvodaya Cover

மார்ச் 15, 2015. காந்தியோடு நெருங்கிய நேரடித் தொடர்பில் இருந்தவர்களில், நம்முடன் வாழ்ந்துகொண்டிருந்த மிகச் சிலரில் ஒருவரான நாராயண் தேசாய் காலமானார். “காந்தியைக் கண்டிராத ஒரு தலைமுறைக்கு, காந்தி இப்படித்தான் இருந்திருப்பார் என்பதை உணரச் செய்தவர்,” என்று ‘காந்தி இன்று’ தளத்தை நடத்தும் நண்பர் சுனில் கிருஷ்ணன் தொலைபேசியில் அழைத்து வருத்தத்தோடு தெரிவித்தார். என் மனதில் ஓடிக்கொண்டிருந்தவையும் அதே சொற்கள்தாம்.  இரண்டரையாண்டுகளுக்கு முன்பு, நாராயண் தேசாய், மதுரை காந்தி அருங்காட்சியம் ஒருங்கிணைத்த அவரது ‘காந்தி கதா’ நிகழ்வுக்காக வந்திருந்தபோதுதான் நாங்கள் இருவரும் அவரைச் சந்தித்தோம். அதன் பின் நாராயண் தேசாயோடு தனியே ஒரு நீண்ட நேர்காணலை நடத்தும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டேன். அந்த நேர்காணலையும், சுனில் எழுதிய ஒரு கட்டுரையையும், மதுரை சர்வோதய இலக்கியப் பண்ணை ‘காந்திய காலத்துக்கொரு பாலம்’ என்ற புத்தகமாகத் தொகுத்து வெளியிட்டது. நாராயண் தேசாயுடனான அந்தச் சந்திப்புதான் எனக்கு ஒரு புதிய உலகத்துக்கான வாயிலைத் திறந்துவிட்டது; பல காந்திய அன்பர்களோடு தொடர்பினை ஏற்படுத்தித் தந்தது. அதற்குப் பிறகும் அவரை இரண்டு முறை சந்தித்தேன். அவரோடு சில நாட்கள் என் குடும்பத்தோடு தங்கியும் இருந்திருக்கிறேன். இன்று அவர் நம்மோடு இல்லை என்பதை ஒரு காந்தியத் தலைவர் மறைந்துவிட்டார் என்பதைவிடக் கூடுதலாய், குடும்பத்தில் நெருக்கமான ஒரு மூத்தவரை இழந்துவிட்டதாகவே உணர்கிறேன். அதே சமயம், நாராயண் தேசாய் ஏன் என் மனதுக்கும் என்னைப் போன்ற பலருடைய மனங்களுக்கும் அவ்வளவு நெருக்கமாகவராகத் தோன்றினார் என்பதை விளக்குவதற்கான வாய்ப்பாகவும் இந்த கனமான தருணத்தைக் காண்கிறேன்.

நாராயண் தேசாய் பிறந்ததுமுதலே காந்தியின் அண்மையில் வளர்ந்தவர். காரணம், அவர் மகாதேவ் தேசாய்-துர்காபென் தம்பதியர்க்கு 1924ல் பிறந்தவர். மகாதேவ் தேசாய் காந்தியின் செயலராகவும், நண்பராகவும், இன்னொரு மகனாகவும் இருந்தவர். கடுமையான உழைப்பாளி. காந்தியுடன் இருந்த இருபத்தைந்து ஆண்டுகளில் இரண்டுமுறைதான் விடுப்பு எடுத்திருக்கிறார். வாரயிறுதி, பண்டிகைநாள் என்று எதுவும் அவருக்கு இருந்ததில்லை. பல்லாயிரக்கணக்கான பக்கங்களில் விரவிக்கிடக்கும் காந்தியின் எழுத்துகளில் கணிசமான பகுதி மகாதேவ் தேசாயின் எழுதுகோள் வழியாக வெளிப்பட்டவை. காந்தி சொல்ல நினைத்தவற்றை காந்தியின் சொற்களில் அவரளவுக்குச் சிறப்பாக எழுதக்கூடியவர் மகாதேவ் தேசாய். மகாதேவ் எழுதிய கட்டுரைகள் பலவற்றோடு முற்றிலும் உடன்பட்டு, எந்த மாற்றமும் இல்லாமல், காந்தி தனது கையொப்பமிட்டு தன் பெயரில் ஹரிஜன் இதழில் பதிப்பித்திருக்கிறாராம்.  அந்த அளவுக்கு, காந்தியின் குரலாகவும் எழுத்தாகவும் விளங்கியவர் மகாதேவ். காந்தியின் அன்றாட வாழ்க்கையைத் தனது நாட்குறிப்புகள் மூலமாகப் பதிவுசெய்து உலகம் அறிய வழிவகுத்தவர். அத்தகைய ஒருவருடைய மகனாகப் பிறந்ததால், காந்தியின் நேச நிழல் அவரது இளமையில் அவர்மீது எப்போதும் படர்ந்திருந்தது. மகாதேவ் மறைந்து, பின் காந்தியும் மறைந்தபின்னும் அவர்மீது படர்ந்த அந்த நிழல் இறுதிவரை அவரைவிட்டு அகலவில்லை. “என் வாழ்வின் மூன்றில் ஒரு பங்கினை காந்தியின் பௌதிக இருப்பில் கழித்ததும், மீதி வாழ்வை அவரது ஆன்ம இருப்பில் கழித்ததும் எனக்கு பேருவகையூட்டும் அனுபவமாக இருந்ததுள்ளது,” என்று அவரது வாழ்வில் காந்தியின் நிரந்தர இருப்பைப்பற்றிக் கூறுகிறார்.

  இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »


காந்தியக் கல்வி : காந்தியத்தின் ஆதாரம்

செப்ரெம்பர் 3, 2014

காந்தி இன்று இணைய இதழில் வெளிவந்த கட்டுரையின் மீள்பதிவு இது.


காந்தியின் கல்விச்சிந்தனைகள் அவரது பிற கருத்துகள் அளவுக்கு அதிகம் கவனம் பெறாதவை. பல காந்தியர்களாலேயே முழுமையாகப் புரிந்து கொள்ளப்படாதவை. ’ஆதாரக் கல்வி’/ ‘அடிப்படைக் கல்வி’ (Basic education) என்றும், பின்னர் நயி தாலீம் (Nai Talim – புதிய கல்வி) என்றும் காந்தி தனது கல்விச் சிந்தனைகளைத் தொகுத்துக் கொண்டார்.   இன்றைக்குப் பல்வேறு நவீனக் கல்விமுறைகள் பின்பற்றப்படும் நிலையில், காந்தியின் ‘நயி தாலீம்’ முறையைப் புதிய பார்வையுடன் அணுகிப் பார்த்தால் அது இன்றும் நவீனத் தன்மையுடன் மிளிர்கிறது; பல வகைகளில் இன்றைய சூழலுக்கும் புரட்சிகரமானதாகத் தென்படுகிறது. காந்தியின் தாக்கம் நிறைந்த பிற எல்லாத்துறைகளையும் போலவே, காந்தியின் கல்வி பற்றிய சிந்தனைகளும் கல்வி என்ற தளத்தில் தனித்து இயங்கவில்லை. அவை சமூகம் முழுவதையும் தொட்டுப் பரவி நின்றன. வரலாற்றுப் பார்வையும், சமூக அக்கறையும், தனி மனித உயர்வும் இணைந்து அவரது கல்விமுறையை தனித்துவம் மிக்கதாகச் செய்கின்றன.

இந்தியக் கல்வியின் வரலாற்றுப் பின்னணியும் காந்தியின் கல்வி சார்ந்த சிந்தனைகளைச் செதுக்கியிருக்க வேண்டும்-

“எனது புள்ளிவிபரங்கள் மறுக்கப்படமுடியாதவை என்கிற நம்பிக்கையோடு சொல்கிறேன் – ஐம்பது, நூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட இன்றைய இந்தியாவில் படிப்பறிவு  குறைந்துள்ளது; பர்மாவிலும் அவ்வாறே; பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இந்தியா வந்தபோது, அங்கிருக்கும் முறைகளை ஏற்றுக்கொள்ளாமல், வேரறுக்கத் தொடங்கியதே இதற்குக் காரணம். மண்ணைத் தோண்டி, வேரைப் பார்க்கத் தொடங்கினர்; அப்படியே விட்டனர்; அழகிய மரம் மரித்தது,”

என்று 1931ல் லண்டனில்  சத்த்தம் ஹவுஸ் என்ற இடத்தில் காந்தி பேசினார். அதன்பிறகு சர் வில்லியம் ஹர்தோக் என்பவர் – டாக்கா கல்லூரியில் முதல்வராக இருந்தவர் – காந்தியின் கருத்துடன் முரண்பட்டு வாதாடினார். காந்தி அளித்த ஆதாரங்களைத் தொடர்ந்து நிராகரித்தார். அவர்களது விவாதம் 8 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்தது. இருவரும் தத்தம் நிலைகளிலிருந்து விலகவேயில்லை. காந்தியின் கல்வி சார்ந்த கருத்துகளுக்கு இருந்த வரலாற்றுப் பார்வையை இந்த விவாதம் வலுப்படுத்தியது. இந்த விவாதத்தை மையமாக வைத்துத்தான், தரம்பால்(Dharampal)  ‘அழகிய மரம்’ (The Beautiful Tree) என்ற நூலை எழுதினார்.

வரலாற்றுப் பின்னணி

“இந்தியாவில் நீண்ட காலமாய் நிலைபெற்று வளர்ந்திருந்த பண்பாட்டின் மூலமாக நாம் உணர வேண்டிய உண்மை இதுதான்: முன்பு இந்தியாவுக்கென்று ஒரு கல்விமுறை இருந்திருக்கிறது; அதுதான் ‘தேசிய’ என்ற அடைமொழியோடு குறிக்கக்கூடிய ஒரே அம்சம்.”
– காந்தி, யங் இந்தியா, 20-3-1924.

சிந்து சமவெளி காலம் முதலே இந்தியாவில் எழுத்துமுறை என்று ஏதோவொன்று இருந்திருக்கவேண்டும். அதற்கான ஆதாரங்கள் நிறையக் கிடைத்துள்ளன. ஆனால், அந்த எழுத்துமுறையைப் படிக்கும் வழியை இன்னமும் அறிந்துகொள்ள முடியவில்லை. பல நூற்றாண்டுகளாய் வேதங்கள் வாய்மொழியாகக் கற்பிக்கப்பட்டு வந்துள்ளன. புத்த, சமண கல்வி மரபுகளும், பிற்காலத்தில் இஸ்லாமியக் கல்விமரபும்  உருவாயின. தக்சசீலம், நளந்தா போன்ற இடங்களில் ஆதி பல்கலைக்கழங்கள் அமைந்தன; மதுரை, காஞ்சி போன்ற நகரங்கள் கல்விக்குப் பெயர்பெற்றன. இலக்கியம், இலக்கணம், கலை, மதம், தத்துவம் என்று பலதுறைகளிலும், தமிழ், சமஸ்கிருதம், பாலி, பிராகிருதம் என்று பல மொழிகளிலும் நூல்கள் படைக்கப்பட்டன.

‘கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.’

என்று கூறும்படியான உயர்ந்த நிலை கல்விக்கு வழங்கப்பட்டது.

ஆங்கிலேயர் வருவதற்கு முன்புவரை இந்த நிலை ஓரளவு நீடித்திருக்கிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், இந்தியாவின் கல்விநிலை குறித்து ஆராய்ந்த பல பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள், இந்தியாவில் ஆரம்பக் கல்வி பரவலாக இருந்ததைப் பற்றி உயர்வாக எழுதியுள்ளனர்.

சென்னை மாகாணத்தின் ஆளுனராக இருந்த ஸர் தாமஸ் மன்றோ, ‘ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு பள்ளி இருந்தது,’ என்று எழுதியுள்ளார். அவர் சேகரித்த புள்ளி விபரங்களின்படி, மூன்றில் ஒரு ஆண்பிள்ளை ஆரம்பக் கல்வி பெற்றுக் கொண்டிருந்துள்ளனர். இந்து, இஸ்லாமிய சமூகங்கள் இரண்டுக்கும் இப்புள்ளிவிவரம் பொருந்தும். தொடக்கக்கல்வி 5 ஆண்டுகளுக்கும் மேல் நீடித்துள்ளது. வீட்டிலேயே படித்தவர்களின் எண்ணிக்கயை அவர்களால் அளவிடமுடியவில்லை. ஆனால், பெண்கள் மிக அரிதாகவே படித்திருக்கின்றனர். சோதிடம், வானவியல், மருத்துவம் தவிர பிறதுறைகளில் உயர்கல்வி பெரும்பாலும் பிராமணர்களுக்கே கிடைத்திருக்கிறது. தீண்டாமையின் காரணமாய் தலித்களுக்குப் பெரும்பாலும் கல்வி மறுக்கப்பட்டிருந்தது. ஆனால், பிராமணர்கள் அல்லாத வேறு பிற சாதியினரும் (வைசியர்களும் சூத்திரர்களும்) பெருமளவில் ஆரம்பக் கல்வி பெற்றதை மன்றோவின் ஆய்வுகளின் சில பகுதிகளில் காணலாம்.

இதே போல, வங்காளம், பஞ்சாப், பம்பாய் மாகாணங்களைச் சார்ந்த ஆட்சியாளர்களும் ஆய்வுகள் செய்து ஒத்த முடிவுகளை அடைந்துள்ளனர். வங்காளத்தில் ஒரு லட்சம் பள்ளிகள் இருந்ததாக வில்லியம் ஆதாம் என்பவர் குறிப்பிட்டுள்ளார். ஆசிரியர்கள் பெரும்பாலும் சூத்திர சாதிகளைச் சார்ந்தவர்களாக இருந்திருக்கிறார்கள். டாக்டர் ஜி. டபில்யூ. லீட்னர் பஞ்சாபில் 1850களில் 3,30,000 மாணவர்கள் இருந்ததாகவும், 1882ல் 1,90,000க்குக் குறைந்துவிட்டதாவும் எழுதியுள்ளார்.

அன்றைய கல்வியின் தரம் குறித்தும், ஆசிரியர்கள் தரம் குறித்தும் முரணான கருத்துகள் பதிவு செய்யப்பட்டிருப்பதைக் காணலாம். எனினும் குறைந்தபட்சமாக எழுத்துத்திறன், இலக்கணம்,  நீதி போதனைகள், வணிகத்துக்குத் தேவையான அடிப்படைக் கணிதம் கற்றுத்தரப்பட்டிருக்கிறது என்பதில் ஐயமில்லை.

இந்த ஆய்வுகள் நடந்தபோதே, இந்தியக் கல்விமுறை சரிந்து கொண்டிருந்துள்ளது என்பதையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும். 1813ல் நிறைவேற்றப்பட்ட சார்ட்டர் ஏக்ட் (Charter Act), இந்தியர்களின் கல்விக்கான பொறுப்பை கிழக்கிந்தியக் கம்பெனி ஏற்கவேண்டும் என்று வலியுறுத்தியது; ஒரு லட்சம் ரூபாய் நிதி கல்விக்காக ஒதுக்கப்பட்டது. அதன்பின்னர் ஆங்கிலேயர்களின் தலையீடு கல்வித்துறையில் அதிகரிக்கவும், இந்தியக் கல்விமுறை மேலும் சிதைந்துள்ளது.

18ம் நூற்றாண்டுக்கு முன் மதபோதகர்களின் செயல்பாடுகள் பெருமளவு இந்திய மொழிகளிலேயே இருந்துள்ளன. தங்கள் மொழியைத் திணிக்க அவர்கள் முயலவில்லை. மாறாக மக்களின் பேசுமொழி மூலமாக மதபோதனைகள் செய்வதன் சாதகங்களை அறிந்திருந்தனர். பிற போதகர்களின் பயன்பாட்டுக்காக இந்திய மொழிகளில் அகராதிகள், இலக்கண நூல்கள் ஆகியவற்றை எழுதினர். கிழக்கிந்தியக் கம்பெனியும் ஆரம்ப காலங்களில் இந்திய மொழிக் கல்விக்கே முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். கல்கத்தா மதராஸா, பெனாரஸ் சமஸ்கிருதக் கல்லூரி ஆகியவற்றைத் தொடங்கினர். பின்னர் ராஜாராம் மோகன்ராய், மெக்காலே ஆகியோரின் தாக்கத்தில் ஆங்கிலத்துக்கான முக்கியத்துவம், குறிப்பாக உயர்கல்வியில், பெருகத்தொடங்கியது.

ஆங்கில ஆட்சியாளர்கள் இந்தியப் பள்ளிகளை முனைப்புடன் மூடியதாகத் தெரியவில்லை. அரசின் ஆதரவு இல்லாமலும், வருவாய் போதாமலும் அவை தாமாகவே அழிந்துள்ளன.  ஆங்கிலேயர்களின் கடுமையான நிலவரிக் கொள்கைகள் கிராமங்களின் தற்சார்பினைச் சிதைத்ததும், குடும்பங்களை கல்விக்கென நிதி ஒதுக்க இயலாத ஏழ்மைக்குத் தள்ளியதும் இந்திய சுதேசப் பள்ளிகள் படிப்படியாக அழிவதற்குக் காரணமாயின.

இந்தியக் கல்விநிலை சரிந்த அதே காலகட்டத்தில்தான், நேர்மாறாக, இங்கிலாந்தின் கல்வித்தரம் உயர்ந்துள்ளது. ஆக்ஸ்போர்ட், கேம்ப்ரிட்ஜ் ஆகிய பல்கலைக்கழகங்கள் 13/14ம் நூற்றாண்டுகளில் தொடங்கபட்டிருந்தாலும், மிகக்குறுகிய அளவில், உயர் வகுப்புகளுக்கு மட்டுமே உரித்தாயிருந்தன. ‘உழவன் மகன் உழவை மேற்கொள்ள வேண்டும்; கைவினையாளரின் மக்கள் அவர்களது பெற்றோர் தொழிலையே மேற்கொள்ள வேண்டும்; சீமான்களின் குழந்தைகள் அரசாங்கத்தையும் சாம்ராஜ்யத்தையும் நிர்வகிக்கும் அறிவினைப் பெறவேண்டும். மற்ற எல்லா நாடுகளைப் போலவும் நமக்கும் உழவர்களின் தேவை உள்ளது: எல்லா வகையான மக்களும் பள்ளி செல்ல வேண்டியதில்லை,’ என்னும் கொள்கைதான் இங்கிலாந்திலும் நிலவியது.

1792ம் ஆண்டில், 40000 மாணவர்கள்தான் பள்ளி சென்றுகொண்டிருந்தனர். அந்த எண்ணிக்கை, அடுத்த அரை நூற்றாண்டில் பன்மடங்கு பெருகி, 1851ல் 21,44,337 ஆக உயர்ந்தது. 1801ல் 3363 பள்ளிகளே இருந்துள்ளன; 1851ல் 461114 பள்ளிகள் உருவாகியிருந்தன. ஆனால் அப்போதும் தொடக்கக்கல்வி சராசரியாக ஓரிரண்டு ஆண்டுகள் மட்டுமே நீடித்துள்ளது.

இங்கிலாந்து இவ்வளவு பெரும் மாற்றத்தைக் குறுகிய காலத்தில் அடைந்ததற்குப் பல காரணங்கள் கூறலாம். இந்த மாற்றத்தை நிகழ்த்திய முக்கியமான இருவர், ஆண்ட்ரூ பெல் மற்றும் ஜோசப் லான்கெஸ்டர். ஆண்ட்ரூ பெல் மதராஸ் முறை (Madras System) என்ற கல்வி முறையை, இந்தியக் கல்விமுறையைக் கவனித்து உள்வாங்கி, சென்னையில்தான் உருவாக்கினார். பின்னர் அதே முறையை இங்கிலாந்தில் சோதனை முயற்சியாகச் செயல்படுத்தினார். அந்த முறையை மேலும் வளர்த்தெடுத்து, ஜோசப் லான்கெஸ்டர் பெரிய அளவில் தனது ‘மாணவர் தலைவர் முறை’ (Monitorial method) மூலம் எடுத்துச் சென்றார். இங்கிலாந்திலிருந்துதான் இந்தியா நவீனக் கல்விமுறையை இறக்குமதி செய்தது என்கிற பொதுபுரிதலுக்கு முற்றிலும் மாறானது, இங்கிலாந்து தனது கல்வி மலர்ச்சிக்கு இந்தியாவிற்குப் பெரிதும் கடன்பட்டிருக்கிறது என்கிற செய்தி.

தரம்பால், தனது ‘அழகிய மரம்’ நூலில் இச்செய்திகளைத் தொகுத்துத் தருகிறார். சுதந்திரத்திற்கு முன்பு எழுதிய ஜே.பி. நாயக், மேஜர் பி.டி.பாசு, ஃப்.இ.கீய் (Rev.FE Keay) ஆகியோர் தமது நூல்களிலும் இதே தரவுகளைப் பயன்படுத்தியிருப்பதைக் காணலாம். அவர்களுக்கும் முன்பே, பல்வேறு அறிஞர்களால், இக்கருத்துகள் பல ஆண்டுகளாகக் கூறப்பட்டு வந்தன. அவற்றின் தாக்கம் காந்தியின் மீதும் இருந்தது என்பதையும், அது மேலும் வலுப்பட்டதையும், சர் வில்லியம் ஹர்தோக் உடனான விவாதத்தின் மூலம் நாம் காணலாம்.

இத்தகையதொரு வரலாற்றுப் பின்புலத்தில்தான் காந்தி அன்றைய கல்விமுறையை முற்றிலும் நிராகரித்து, புதிய பாதையைத் தேடத் தொடங்கினார்.

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »


காந்தியும் திருக்குறளும்

ஓகஸ்ட் 19, 2014

‘காந்தி இன்று’ தளம் மின்னிதழாக மாறியிருக்கிறது. முதல் இதழில் வெளிவந்துள்ள எனது கட்டுரை.

(6-நவம்பர்-2019: இக்கட்டுரையை மேலும் விரிவுபடுத்தித் தனியே பதிந்துள்ளேன்.)

காந்தியும் திருக்குறளும்

ஓர் இலக்கியப் படைப்பின் மீது பெருந்திரளான மக்கள் பேரன்பைப் பொழிய முடியுமா என்ற கேள்வி எழுந்தால், திருக்குறள் மீது தமிழர்கள் கொண்டிருக்கும் உணர்வையே உதாரணமாகக் காட்டமுடியும்.  பெரும்பாலும் ஒரு நீதி நூலாகவே அறியப்படுகிற ஒரு படைப்பு (அது நீதிநூல் மட்டுமே அல்ல என்றாலும்கூட), எப்படி இத்தனை அன்புக்குப் பாத்திரமானது என்பது ஆச்சரியமானதுதான். அந்தத்  திருக்குறள் காட்டும் நெறிக்கு மிக நெருக்கமான வாழ்வை வாழ்ந்தவர்கள் என்று ஒரு பட்டியல் இட்டால், அதில், தமிழர் அல்லாத போதினும், காந்தியின் பெயரைத் தவிர்க்கமுடியாது. காந்தி, திருக்குறள், தால்ஸ்தோய் குறித்து நிறையப் புனைவுகள் உள்ளன. காந்தியைத் திருக்குறள் எந்த அளவுக்கு நேரடியாகப் பாதித்தது என்பதை உறுதியாகக் கூறவியலாது.  ஆனால், காந்தி திருக்குறளைப் பற்றி நன்றாக அறிந்திருந்தார் என்பதை அவரது பதிப்புகளிலும், எழுத்துகளிலும் காணலாம்.


இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »


காந்திய காலத்துக்கொரு பாலம்

ஒக்ரோபர் 30, 2012

நாராயண் தேசாய் – காந்தி, வினோபா, ஜெயப்பிரக்காஷ் நாராயண் ஆகியோரோடு நெருங்கிப் பழகி, உடன் போராடி உழைத்தவர். அவரை மதுரையில் சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அந்த உரையாடல் குறித்து  ‘காந்தி இன்று’ தளத்தில் எழுதியுள்ளேன். ‘காந்தி இன்று’ தளத்தை நடத்திவரும் நண்பர் டாக்டர்.சுனில் கிருஷ்ணனையும் மதுரையில் சந்தித்தேன். காந்தியைப் பற்றிய நூல்களையும் குறிப்புகளையும் தேடித்தேடிப் படித்து, தமிழாக்கம் செய்து பதிவேற்றி வருகிறார்.

ஆறு பகுதிகளாய்ப் பதிப்பித்த அந்தக் கட்டுரைக்கான இணைப்புகள் இங்கே.

பகுதி 1   பகுதி 2   பகுதி 3

பகுதி 4   பகுதி 5   பகுதி 6

ஆங்கிலத்தில் இங்கே படிக்கலாம்.

இந்த நேர்காணலும், சுனில் எழுதிய ஒரு கட்டுரையும் ‘காந்திய காலத்துக்கொரு பாலம்’ என்ற தலைப்பில் ஒரு நூலாகவும் வெளியிடப்பட்டுள்ளது. சர்வோதய இலக்கியப் பண்ணையில் தமிழிலும், ஆங்கிலத்திலும் (நேர்காணல் மட்டும்) கிடைக்கும்.

சர்வோதய இலக்கியப் பண்ணை,

எண் 32/1, மதுரை சந்திப்பு அருகில், மேற்கு வெளி வீது, தெற்கு ரயில்வே காலனி, மதுரை – 625001. தொலைபேசி – 0452 234 1746