காந்தியின் அறிவியல்

ஜனவரி 30, 2023

(ஜனவரி 2023 காலச்சுவடு இதழின் காந்தி சிறப்புப் பகுதியில் வெளிவந்த எனது கட்டுரை.)

காந்தியின் அரசியலை ஏற்கின்ற பலரும் காந்தியின் அறிவியல் பார்வையைப் புறந்தள்ளுபவர்களாக இருப்பதைக் காண்கிறோம். இது காந்தியை ஏற்று அவருடன் நெருங்கிப் பணியாற்றியவர்களில் பெரும்பகுதியினர் அவருடன் கொண்டிருந்த முரண்பாடுகளில் ஒன்றாக எப்போதும் இருந்துள்ளது.

காந்தியின் அறிவியல் பார்வை 20ம் நூற்றாண்டின் முதற்பாதியில் கற்றோரிடையே உருக்கொண்டிருந்த பொதுப்பார்வைக்கு நேரெதிரானதாக இருந்தது. அறிவியல் வளர்ச்சியின் நீட்சியாகக் காணப்பட்டத் தொழில்நுட்ப வளர்ச்சியும் மேற்குலகப் பண்பாடுமே மக்களின் வளர்ச்சிக்கான ஐயத்திற்கு அப்பாற்பட்ட வழிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்த காலத்தில், அவை குறித்த மாறுபட்ட மதிப்பீடுகளை காந்தி முன்வைத்தார். தொழிற்புரட்சியின் எதிர்மறைத் தாக்கங்களைக் குறித்துப் பேசக்கூடிய மிகச்சிலரில் தலையானவராக காந்தி உருவெடுத்தார்.

அன்று காந்தி தொழில்மயமாதல் குறித்து வெளிப்படுத்திய கடுமையான கருத்துகளால் அறிவியலுக்கே எதிரானவராக அவரைப் பலரும் புரிந்துகொண்டனர். காந்தி மீதான விமர்சனங்கள் வாயிலாக அவர்களுக்குக் காந்தியின் அறிவியல் பார்வை குறித்திருந்த புரிதலும் மதிப்பீடுகளும் மதிப்பீடுகளில் நேர்ந்த மாற்றங்களும், காந்தியின் அறிவியல் பார்வையுமேகூட வெவ்வேறு கோணங்களில் துலங்குகின்றன. Brave New World என்ற புகழ்பெற்ற நாவலின் ஆசிரியரான அல்டௌசு ஹக்சிலி 1933ம் ஆண்டு எழுதிய கட்டுரையில் காந்தியைப் பற்றிய இந்த மதிப்பீடு மிகக் கடுமையாக வெளிப்பட்டது.

‘தல்ஸ்தோயர்களும் காந்தியர்களும் நாம் இயற்கைக்குத் திரும்ப வேண்டும் என்கின்றனர்; வேறு சொற்களில், அறிவியலை முற்றும் துறந்துவிட்டு வானரங்கள் போல வாழவேண்டும், மீறிப்போனால், நம் இடைக்கால முன்னோர்களின் வழியில் வாழவேண்டும் என்கின்றனர். இந்த அறிவுரையின் இடர்ப்பாடு, இதைக் கடைப்பிடிக்க முடியாது என்பதே; வேறுவிதமாகச் சென்னால், 80-90 கோடி மக்களைப் பலியிடத் தயாராக இருந்தால், இதைக் கடைப்பிடிக்கலாம். நவீனத் தொழில்மயமாக்கம், வேளாண் தொழில்நுட்பம் ஆகியவற்றின் வடிவில் செயல்படும் அறிவியல் ஏறத்தாழ மூன்று தலைமுறைகளில் உலகின் மக்கள்தொகை இரட்டிப்பாக வழிவகுத்துள்ளது. நாம் அறிவியலை அழித்துவிட்டு, இயற்கைக்குத் திரும்பினால், மக்கள் முன்பிருந்த நிலைக்குத் திரும்பிவிடுவார்கள் – நூறாண்டுகளில் அல்ல, நூறு வாரங்களிலேயே திரும்பிவிடுவார்கள். பஞ்சமும் கொள்ளைநோய்களும் படுவிரைவாகத் தம் வேலையைச் செய்துமுடிக்கும். தல்ஸ்தோயும், காந்தியும் மானுடநேயர்கள் என்று தம்மைக் கருதுபவர்கள். ஆனால், தைமூரும் செங்கிஸ் கானும் இழைத்த படுகொலைகள் கூட அற்பமானவையாகத் தோன்றவைக்கும் அழித்தொழிப்பைப் பரிந்துரைக்கிறார்கள்,’ என்று அல்டௌசு ஹக்சிலி எழுதினார்.

Science in the Changing World என்ற கட்டுரைத்தொகுப்பில் வெளிவந்த ஹக்சிலியின் கட்டுரையைச் சிறையில் படித்த ஜவகர்லால் நேரு அவருக்கு ஒரு மறுப்பு எழுதினார். அதில் காந்தி பெரும் இயந்திரங்களுக்கு எதிரானவரே அன்றி அறிவியலுக்கு எதிரானவர் அல்லர் என்று வாதாடினார். ஆனால் அக்கட்டுரையில் காந்தியுடனான முரண்பாடுகளையும் தீர்க்கமாக முன்வைத்தார். ’காந்தியின் இந்நிலைப்பாடு சரியானதாக இல்லாமற் போகலாம். அதில் தருக்கப்பிழை இருக்கலாம். ஆனால் அதற்கு அவர் அறிவியலை மறுக்கிறார் என்றோ இயந்திரம்சார் தொழிலை அழிக்க முனைகிறார் என்றோ பொருள்கொள்வது தவறு. […]
காந்தியின் அரசியல் கூட்டாளிகளும் அவரைப் பின்பற்றுவோரும் இந்நிலைப்பாட்டை ஏற்கிறார்கள் என்றுகூட உறுதியாகக் கூறமுடியாது. தனிப்பட்ட முறையில், நான் இதனோடு உடன்படவில்லை. இந்திய காங்கிரசும் தேசிய இயக்கமும் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையும் நான் தெளிவுபடுத்த வேண்டும். உண்மையில் காந்தி காங்கிரசுக் கட்சியைத் தன் நிலைப்பாட்டை முன்னெடுக்குமாறு வலியுறுத்தவே இல்லை – ஒரு திட்டத்தைத் தவிர. அது இராட்டை என்பதை உலகம் அறியும்…’ என்ற நேரு காங்கிரசு கட்சி ஏன் கதரை ஓர் அரசியல் இயக்கமாக எடுத்துச் செல்கிறது என்பதையும் விளக்கினார். மேலும், ‘நான் இவற்றைக் கூறுவது இராட்டைக்கு ஆதரவாகப் பேசவேண்டும் என்பதற்காக அல்ல; இந்திய தேசியம் பேரெந்திரங்களுக்கு எதிரானதன்று, அறிவியலுக்கு அறவே எதிரானதன்று என்பதை நீங்கள் உணரத்தான். அதிகாரம் கிட்டும்போது, தேசிய இயக்கம் நாட்டை மிக வேகமாக தொழில்மயப்படுத்தும் என்பதில் எனக்கு ஐயமில்லை. அதுவரையில், ஆதரவற்ற நிலையிலுள்ள நாங்கள், கிடைக்கும் வாய்ப்புகளை ஏற்றுத் தற்காலிக ஏற்பாடுகளைச் செய்யத்தான் வேண்டியுள்ளது. என்னைப் பற்றி இதைக் குறிப்பிட விரும்புகிறேன்: வாழ்க்கை குறித்த எனது நோக்கு முழுக்க அறிவியல்பூர்வமானது; சமயங்கள் நோக்கியோ அவற்றின் முறைகளை நோக்கியோ நான் எப்போதும் ஈர்க்கப்பட்டதில்லை. உடலுறவு, கருத்தடை, துறவறம் போன்றவற்றில் காந்தியுடன் முழுமையாக முரண்படுகிறேன். இயந்திரத்தின் மீது எனக்கு நம்பிக்கையுண்டு. இந்தியாவை இயந்திரமயமாக்கவே விரும்புகிறேன். எனினும் அது சமூகக் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும் என்றெண்ணுகிறேன். சமூகவுடைமையும் தொழில்மயமாதலும் இந்தியாவில் அமையவேண்டும் என்பதே என் விருப்பம்,’ என்று நேரு எழுதினார். ‘இத்தகைய நம்பிக்கைகளையுடைய நானோ என்னைப் போன்ற பலரோ மக்களின் அழித்தொழிப்புக்கு வழிவகுக்கும் கொள்கையை – அறிவியலுக்கும் தொழிலுக்கும் எதிரான கொள்கையைக் கொண்ட ஒருவரோடு இத்தனை ஆண்டுகள் நெருங்கிப் பழகி ஒத்துழைக்க முடியுமா? அதற்காகவா வாழ்வின் பல்லாண்டுகளைச் சிறையில் கழிப்போம்?’ என்ற கேள்வியை எழுப்பினார்.

காந்தியின் மீதான ஹக்சிலியின் கடுமையான விமர்சனைத்தை மறுக்கும் பொருட்டு நேரு இக்கடிதத்தை எழுதியிருந்தாலுமேகூட, அதில் அவருக்கும் காந்தியின் அறிவியல் மீது அதே எதிர்மறை நோக்கு இருந்தது என்பது மென்மையாக வெளிப்படுகிறது.

‘காந்தியின் சமகாலத்தவர்கள் பெரும்பாலானோர் செய்த தவறு, தொழில்நுட்பமும், (சமூக/நிர்வாக) அமைப்புகளும் அற்ப மானுட விலங்கை மீமானிடப் பிறவியாக்கும் என்றும் எல்லையற்ற ஆன்மிக ஞானத்திற்கு மாற்றினை அவற்றால் வழங்கமுடியும் என்றும் கருதியதுதான். அந்த மாற்றின் இருப்பை மறுப்பதே பழைமைவாதமாகி விட்டிருந்தது,’ என்று அதே அல்டௌசு ஹக்சிலி காந்தியின் மரணத்துக்குப் பின்னர் எழுதினார். அதில் காந்தியைக் குறித்த அவரது பார்வையில் ஏற்பட்ட மாற்றத்தை உணரலாம். அதிகார/உற்பத்திப் பரவலாக்கத்தை முழுமையாக ஏற்றுக்கொள்ளும் ஹக்சிலி, அக்கட்டுரையிலேயே, கைகளால் செய்யப்படும் கருவிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று காந்தி கருதுவதை மறுப்பதாகவும், செயல்திறனைக் கூட்டுவதற்காக ஆற்றல்வாய்ந்த இயந்திரங்களைச் சரியான அளவில் பயன்படுத்துவதில் தனக்கு மறுப்பில்லை என்பதையும் கூறுகிறார். ஆனால் அத்தகைய இயந்திரங்களைப் பெரும் தொழிற்சாலைகளிலேயே செய்யவேண்டியிருக்கும் என்றும் மூன்றில் ஒரு பங்கு உற்பத்தி பெரும் இயந்திரங்களைக் கொண்ட ஆலைகளில் நிகழவேண்டியிருக்கும் என்கிற முரணையும் சுட்டுகிறார்.

நேருவும் பின்னாளில் காந்தியின் அணுகுமுறைக்கு நெருங்கி வந்துள்ளார். 1963ல் பாராளுமன்ற உரையொன்றில் தனது அணுகுமுறையை காந்தியின் அணுகுமுறையோடு ஒப்பிட்டு உரசிப்பார்க்கிறார். “திட்டமிடுவோர் பொதுவாக ஏட்டறிவு சார்ந்த அணுகுமுறையில் செயல்படுவர். ஏட்டளவில் அது மிக நன்றாக இருப்பினும், சில நேரங்களில் மானுடக் கூறுகளைக் கவனிக்கத் தவறிவிடுகின்றனர். ஒரு பொருளை உற்பத்தி செய்யும் தேவையுள்ளது; மிகச் சிறந்த விளைவுகளைத் தரும் இடத்தில் ஒரு தொழிற்சாலையையோ இன்னபிறவோ நிறுவுவதே அதை உற்பத்தி செய்யச் சிறந்த வழி என்று அவர்கள் கூறலாம்.
அதன் விளைவாக, தேர்ந்தெடுத்த இடங்களில் தொழிற்கூடங்களையும் பிறவற்றையும் பெருக்கிக்கொண்டே செல்வார்கள். உற்பத்திக்கூடங்களை அங்கே குவிக்கக்குவிக்க, அங்கு இன்னொரு தொழிற்சாலையைத் தொடங்குவதும் எளிதாகிவிடுகிறது. இது தருக்கம்சார்ந்ததாக இருக்கலாம், அதிக உற்பத்தியையும் வழங்கலாம்; ஆனால், இந்தியாவின் பேரளவினைக் கணக்கில் கொண்டால், அது ஒரு மானுடநேய அணுகுமுறை அல்ல.
மேலும் மேலும் மகாத்மா காந்தியின் அணுகுமுறை குறித்துச் சிந்திக்கத் தொடங்கியுள்ளேன். இது தொடர்பாக நான் அவரது பெயரைக் குறிப்பிடுகிறேன் என்பது விந்தையாகத்தான் உள்ளது. நான் முழுமையாகவே நவீன இயந்திரங்களை வியந்து புகழ்பவன்; சிறந்த இயந்திரங்களும், சிறந்த செய்நுட்பங்களும் எனக்கு வேண்டும். நாம் மிக வேகமாக இயந்திர யுகத்தை நோக்கி நகர்ந்துகொண்டுள்ளோம் – நகர்வோம். எனினும், இன்று இந்தியாவில் உள்ள நிலையைக் கருதினால், பெருவாரியான மக்கள் அதனால் (இயந்திர யுகத்தால்) தீண்டப்படவில்லை; நீண்ட காலத்துக்குப் பலன்பெறப் போவதுமில்லை. அவர்களை உற்பத்தியில் கூட்டாளிகளாக ஆக்கிக்கொள்ளும் வேறு ஏதேனும் வழிமுறை வளரவேண்டும்; நவீன செய்நுட்பங்களோடு ஒப்பிட்டால், அவர்களது உற்பத்திக் கருவிகள் செயல்திறன் குறைந்தவையாக இருப்பினும், நாம் அவற்றைப் பயன்படுத்தவேண்டும்; இன்றேல், அவை வீணடிக்கப்படும். இந்த எண்ணத்தை நாம் மனதிலிறுத்திக் கொள்ளவேண்டும். நம் நாட்டின் ஏழைகளைக் குறித்து நாம் கூடுதலாகச் சிந்திக்கவேண்டும்; அவர்களது நிலை மேம்பட இயன்றவரை விரைவாக ஏதேனும் செய்தாக வேண்டும். இச்சிக்கல் என்னைப் பெரிதும் வருத்துகிறது,” என்கிற நேருவிடமும் அவர் முன்பு முரண்பட்ட அறிவியல்-பொருளாதாரத் தளத்திலும் காந்தியை நோக்கிய நகர்வைக் காணலாம்.

காந்தியை ஆழமாக உள்வாங்குகிற எவரும் வந்தடையக்கூடிய இடமாகவே இது உள்ளது. காந்தியம் என்ற கோட்பாட்டை உருவாக்கியதாகவோ அவ்வாறான ஒன்று இருப்பதாகவோ காந்தியே கருதாத போதுமேகூட, காந்தியின் செயல்பாடுகளிலிருந்தும் கருத்துகளிலிருந்தும் நம்மால் காந்தியத்தை ஒரு கோட்பாடாக வளர்த்தெடுத்துக் கொள்ள இயலும். காந்தியத்தின் பல்வேறு கூறுகளும் கூடிவரும் போதே காந்தியக் கோட்பாடு முழுமை கொள்கிறது. காந்தியத்திலிருந்து அரசியலையோ பொருளாதாரத்தையோ அறிவியலையோ பிரித்து விலக்கும்போது காந்தியம் வழங்கும் ஒட்டுமொத்த சித்திரம் சிதைவுறவே செய்கிறது. அந்த வகையில் காந்தியின் அரசியலுக்கும் பொருளாதாரத்துக்கும் அறிவியலுக்கும் அடித்தளமாக இருக்கும் கொள்கைகள் பொதுவானவை. குறிகிய காலப் பலன்களை ஒதுக்கி நிலையான உண்மைக்கான தேடல், சர்வோதயம் – பெரும்பான்மையினர் நலன் என்பதைத்தாண்டி அனைத்து மக்களும் நிகராகச் செழிக்க வேண்டும் என்ற எண்ணம், மானுட நேயத்துக்கும் இயற்கை வளங்கள் மீதும் பிற உயிர்கள் மீதுமான அக்கறைக்கும் இடையே உள்ள நீங்காத உறவு என்று பரந்துபட்ட அளவில் காந்தியத்தின் அடிப்படைகளாக வகுத்துக்கொள்ளலாம். அகிம்சைக்கும் அதிகாரப் பரவலாக்கத்துக்கும் காந்திய அறிவியல் நோக்குக்கும் இணைப்புச் சரடுகளாக இருப்பவை இந்த அடிப்படைகளே. நடைமுறையில் காந்தியே இந்த அடிப்படைகளில் இருந்து சில நேரங்களில் பிறழ்ந்து செயல்பட்டோ முரணான கருத்துகள் கூறியிருக்கவோ கூடும். எனினும் அவரது ஒட்டுமொத்த வாழ்வையும் செய்தியையும் ஆழ நோக்குகையில் முரண்களற்ற காந்தியம் என்ற முழுமையான கோட்பாடு திரண்டு வருகிறது.

உண்மைக்கான தேடலின் பகுதியாகவே காந்தி அகிம்சை என்ற நெறியை வந்தடைந்தார். அரசியல் தளத்தில் அகிம்சையைப் பின்பற்றுவதற்கான கருவிகளாகவே சத்தியாகிரகம், ஒத்துழையாமை ஆகியவற்றை வளர்த்தெடுத்தார். அதுபோலவே அவரது அறிவியல் பார்வையும் உண்மைக்கான தேடலாகவே அமைந்திருந்தது. கதர், கிராமத் தொழில்கள், கிராமத் தன்னாட்சி, நவீன இயந்திரங்களின் கண்மூடித்தனமான பயன்பாட்டை எதிர்த்தல், கட்டற்ற நுகர்வைத் தவிர்த்தல் ஆகியவையும் அவரது அறிவியல் நோக்கின் கருவிகளாக அமைந்தன. அவர் தன் வாழ்வையே சோதனைக்கூடமாகவும் தன் உடலையும் உள்ளத்தையும் சோதனைப்பொருள்களாகவும் ஆக்கினார்.

‘காந்தியடிகளைப் போலவே, ஐசக் நியூட்டன், அறிதலின் கரையில் தான் கூழாங்கல் பொறுக்கும் சிறுவன் என்றும் தன் எதிரே எல்லையற்ற பெருங்கடல் கண்டறியப்படாமல் விரிந்து கிடக்கிறது என்றும் ஒருமுறை கூறினார். காந்தியின் பணிவு மேலோட்டமானதல்ல. தான் உண்மையின் ஒரு கீற்றைத்தான் கணநேரம்தான் கண்டிருப்பதாக உண்மையிலேயே நம்பினார். இப்பணிவுதான் ஓர் உண்மையான அறிவியலாளருக்கான தரமுத்திரை. அத்தகைய பணிவான தளராத விடைதேடலே அறிவியலுக்குப் பின்னுள்ள அடிப்படை அகத்தூண்டுதல்,’ என்றார் ஆயுதம்தாங்கிய பொதுவுடைமைப் புரட்சியாளராக இருந்து, நீண்ட சிறைவாசத்தின்போது காந்தியராக மாறிய பன்னாலால் தாஸ்குப்தா (Revolutionary Gandhi).

உண்மைக்கான தேடலை முதன்மைப்படுத்திய காந்தி நிறுவனமாக்கப்பட்ட, அரசியல்படுத்தப்பட்ட நவீன அறிவியல்முன் மண்டியிட்டு வணங்க மறுத்தார். அறிவியலை வெறும் இயற்பியலாகவும் வேதியலாகவும் மருத்துவமாகவும் தொழில்நுட்பங்களாகவும் மெய்ப்பிக்கப்பட்டுவிட்ட விதிகளாகவும் சமன்பாடுகளாகவும் சூத்திரங்களாகவும் சுருக்கிக் கொள்ள மறுத்தார். அவரது மறுப்புக்குப் பின்னால், மரபுக்குத் திரும்புவோம், இயற்கைக்குத் திரும்புவோம், கிராமத்துக்குத் திரும்புவோம் போன்ற பின்னோக்கிய வாதங்கள் இல்லை. மக்களின் நீண்டகால நலனுக்குத் தேவையானது எது என்ற எதிர்காலத்தை நோக்கிய தேடல் மட்டுமே இருந்தது. அத்தேடலின் விளைவாக அவர் கண்டடைந்த எதையுமே புதியவை பழையவை, உள்நாடு அயல்நாடு, கைத்தொழில் உயர்தொழில்நுட்பம் என்ற பாகுபாடின்றி ஏற்கவும் மறுக்கவும் செய்தார்.

‘கதரின் அறிவியலுக்கு மிக உயர்ந்த தொழில்நுட்ப, இயந்திரவியல் திறன்கள் தேவைப்படுகின்றன. ஜெகதீஷ் சந்திர போஸ் தனது சோதனைக்கூடத்தில் நமது சக உயரினங்களான செடிகளின் சின்னஞ்சிறு இலைகளிடமிருந்து இயற்கையின் மறைபொருள்களைக் கவர்ந்தெடுக்கக் கொடுக்குமளவு கவனத்தை அதுவும் கோருகிறது,’ என்றார். புதியதும், பெரியதும், ஒருசில கூறுகளில் செயல்திறன் மிக்கதுமான உற்பத்தி முறைகள் உயர்ந்தவை என்ற மேலோட்டமான புரிதலுக்குள் காந்தி அடைபடவே இல்லை.

அறிவியலில் புதியன அறிதல், புதியன படைத்தல் என்பவற்றை முதன்மை நோக்கங்களாகக் கொள்ளாமல், அரசியலிலைப் போலவே யார் பலன் பெறுவார்கள், யார் பாதிப்படைவார்கள் என்ற தேடலுனேயே அணுகினார். ‘நீ அறிந்ததிலேயே பரம ஏழை உன்னுடைய செயலால் பயன்பெறுவானா?’ என்ற அவருடைய கடைசித் தாயத்தை அறிவியலுக்கும் கட்டிவிட்டார்.

‘அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை,’
என்ற வள்ளுவனின் வினாவே காந்தியின் வினாவாகவும் இருந்தது.

“ஒரு காலம் வருகிறது. அப்போது, உலகின் உண்மையான வளங்களையும் அறிவையும் பெருக்குகிறோம் என்று இறுமாந்து எண்ணியபடி இன்று தங்களது தேவைகளைப் பெருக்கிக் கொள்வதற்கு அலைமோதிக் கொண்டிருப்போர் தங்களது காலடித்தடத்தில் பின்னோக்கிச் சென்று, ‘நாம் என்ன காரியம் செய்து விட்டோம்?’ என்று பதைப்பார்கள். நாகரிகங்கள் தோன்றி மறைந்துவிட்டன. நாம் பெருமிதம் கொள்ளும் இந்த வளர்ச்சிக்கெல்லாம் இடையில், எனக்கு மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றுகிறது, ‘இதெல்லாம் எதன் பொருட்டு?’” என்று காந்தி 1927ல் கேட்டார். ஐம்பது ஆண்டுகளின் அற்புதமான கண்டுபிடிப்புகள் மானுடத்தின் தார்மீக வளர்ச்சியை இம்மியும் கூட்டவில்லை என்ற வாலசின் கூற்றையும் மேற்கோள் காட்டினார்.

எனினும் அறிவியலின் அறம் சார்ந்த கேள்விகளையும் தெளிவான நடைமுறை ஏரணத்துடனேயே எதிர்கொண்டார். ‘ஒரு கிராமத்தில் பெரியம்மைப் பரவல் ஏற்படுகிறது என்று கொள்வோம். நம்மில் சிலர் தடுப்பூசியில் நம்பிக்கையற்றவர்களாய் இருப்பதால், தடுப்பூசி குத்திக்கொள்ள மறுக்கிறார்கள். எனினும் அவர்கள் மக்களிடம் சென்று தொண்டாற்ற வேண்டும் என்று விரும்புகிறார்கள். நாம் இத்தடுப்பூசி தோல்வியடைந்துவிட்டது என்று உறுதியாக நம்புகிறோம். ஆனாலும் நாம் தொண்டாற்ற விரும்பும் மக்களிடம் இந்நோயைப் பரப்பும் நோய்த்தாங்கிகளாக நாம் இருந்துவிடக் கூடாது. எனவே நமது அகிம்சைக் கடன் தடுப்பூசி எடுத்துக்கொள்வதிலோ அந்த இடத்தைவிட்டு அகல்வதிலோ இருக்கிறது. இந்த முதன்மை தர்மத்தின் முன்பு, தடுப்பூசி எடுத்துக்கொள்ளக்கூடாது என்ற குறைந்த தர்மம் மறைந்துவிடுகிறது. பம்பாயிலும் சென்னையிலும் தடுப்பூசிச் சட்டம் குறித்த எனது கருத்தைக் கேட்டார்கள். மருத்துவர் வர்க்கியிடம், தடுப்பூசியில் நம்பிக்கையில்லாதவர்கள் அப்பகுதியைவிட்டு விலகவேண்டும்; இன்றேல், தடுப்பூசி எடுத்துக்கொள்ளவேண்டும் என்று கூறினேன். இதுதான் அகிம்சை. ஒரு வகையில் இது எளிமையானது. இன்னொரு வகையில் இது அத்தனை எளிமையானதன்று,’ என்று ஒருமுறை எழுதியுள்ளார்.

இவ்வாறு சிறிதும் பெரிதுமான ஒவ்வொரு செயல்பாட்டுக்கும் அறம், அகிம்சை, கடைசி தாயத்து என்று பல்வேறு கோணங்களில் அலசியே முடிவெடுத்தார். அத்தகைய முடிவுகள் சில நேரங்களில் தவறாக அமைந்துவிடுவதும் உண்டு. தென்னாப்பிரிக்காவில் காந்தியுடன் நெருங்கிப் பணியாற்றிய ஹென்றி போலக்கின் மனைவியான மிலி போலக் தனது ‘காந்தி எனும் மனிதர்’ என்ற நூலில் அத்தகைய ஒரு நிகழ்ச்சியைப் பற்றி எழுதியுள்ளார்.
‘திரு.காந்தியின் உடல்நலச் சோதனைகள் சில அறிவார்ந்தவையாகவும் இல்லை; பயன்பயப்பனவாகவும் இல்லை என்பதையும் கூறவேண்டும். எனது முதல் குழந்தையின்மீது அத்தகைய ஒரு சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்பொது அவள் ஆறு வராமே ஆன கைக்குழந்தை. உடலின் இயற்கைக் கடன்களைச் சீராக்க, ஈர மண் பட்டியை அவள் வயிற்றில் போட்டார். குழந்தை அதிர்ச்சியில் அழுது கதறியது. பின்னர் நீல நிறமாகி, விறைத்துப் போனது. நான் மண்பட்டியைக் கிழித்து, குழந்தையின் உடலை என்னுடலோடு சேர்த்தணைத்துச் சூடாக்கினேன். நல்லவேளையாகக் குழந்தை உடனே சரியாகிவிட்டது. ஆனால் வேறு பல நேரங்களில், பிற குழந்தைகளோடும் பெரியவர்களோடும் பணியாற்றும்போது, ஈர மண் பட்டிகள் மூலம் வீக்கத்தையோ அடைப்பையோ திரு.காந்தி சரிசெய்துள்ளதையும் நான் அறிவேன்,’ என்கிறார் மிலி போலக். அறிவியலாளர்களின் சோதனைகளில் தோல்வியுறுவதைப் போலவே காந்தியும் சில தோல்விகளைச் சந்தித்துள்ளார். சில பிழையான முடிவுகளையும் எடுத்துள்ளார். பொதுப்புரிதலுக்குப் பிழையாகத் தென்படும் சில கருத்துகளையும் தெரிவித்துள்ளார். அவற்றைக் கொண்டு காந்தியின் அறிவியல் பார்வையைப் புறந்தள்ளுவது தோல்விகளைக் கொண்டு ஒரு விஞ்ஞானியை எடைப்போடுவது போன்றதுதான்.

காந்தியின் அறிவியல் பார்வையை மூன்று கல்லூரிகளில் அவர் ஆற்றிய உரைகள் மேலும் தெளிவுபடுத்துகின்றன.

‘நவீன அறிவியலாளர்களுக்கு ஊக்கம் தரும் ஆராய்ச்சி மனப்பாங்குக்கு எனது வணக்கங்களைச் செலுத்துகிறேன். அந்த உணர்வுக்கு எதிராக எனக்கு எந்த சச்சரவும் இல்லை. ஆனால் அந்த உணர்வு எடுத்துள்ள திசைக்கு எதிராகத்தான் எனது முறையீடு. நவீன அறிவியலின் வாடிக்கையாளர்களது பொருளியல் வளர்ச்சிக்கு மட்டுமே வழிவகுக்கக்கூடிய விதிகளையும் வழிமுறைகளையும் கண்டறிவதிலேயே அது முதன்மையாக ஈடுபட்டுள்ளது. உண்மைக்கான தேடலில் ஈடுபடும் நவீன அறிவியலாளர்களின் ஊக்கம், முனைப்பு, தியாகம் ஆகியவற்றை நான் பாராட்ட மட்டுமே செய்கிறேன். என் அனுபவத்தில், இத்தகைய உணர்வினை நமது ஹக்கீம்களும் வைத்தியர்களும் குறிப்பிடத்தக்க வகையில் வெளிப்படுத்துவதில்லை என்ற கருத்தை வருத்தத்துடன் பதிவுசெய்கிறேன். எந்தக் கேள்வியுமின்றி சூத்திரங்களைப் பின்பற்றுகிறார்கள். மிகக் குறைவான பரிசோதனைகளையே மேற்கொள்கிறார்கள். உள்ளூர் மருத்துவத்தின் நிலை மிகவும் கண்டிக்கத்தக்கதாக உள்ளது. புதிய ஆய்வுகளை அறிந்துகொள்ளாமல் இருப்பதால், அவர்களது தொழில் அவப்பெயர் பெற்றுள்ளது. இக்கல்லூரி இக்குறைபாட்டைக் களைந்து ஆயுர்வேதத்தையும் உனானியையும் அவற்றின் உச்சப்புகழுக்கு மீட்டுச்செல்லும் என்று நம்புகிறேன். எனவே, மேற்கத்திய அலகு இந்நிறுவனத்தில் இருப்பது நிறைவளிக்கிறது. இந்த மூன்று மருத்துவ முறைகளும் ஒன்றிணைந்து ஒத்திசைவுடன் கலந்து ஒன்று மற்றொன்றிலுள்ள குறைகளைக் களையும் என்று எதிர்பார்ப்பது அதிகப்படியாக இருக்காதே? இறுதியாக, இக்கல்லூரி எல்லா போலி மருத்துவத்துக்கும் – மேற்கத்தியப் போலியானாலும், கிழக்கத்தியப் போலியானாலும் அவற்றுக்கு எதிராக முகம்திருப்பும் என்று எதிர்பார்க்கிறேன். உண்மையான மதிப்பை மட்டுமே அங்கீகரிக்கும் என்றும் மருத்துவத் துறை என்பது வலியையும் துன்பத்தையும் நீக்குவதற்கானது; பெருங்கட்டணம் வாங்குவதற்கானதன்று என்று மாணவர்களை உணரச்செய்யும் என்றும் எதிர்பார்க்கிறேன், ’ என்று 1921ம் ஆண்டு தில்லியில் திபியா கல்லூரியைத் தொடங்கிவைக்கும்போது உரையாற்றினார். மரபு என்பதற்காக மரபை ஏற்கவோ, அயலானது என்பதால் அயலானதைப் புறந்தள்ளவோ காந்தி முனையவில்லை என்பதை இவ்வுரையில் காணலாம்.

‘இந்தியாவில் 7,00,000 கிராமங்கள் உள்ளன. தாராளக் கல்வியைப் பெறும் நீங்கள், அக்கல்வியையும் அக்கல்வியின் கனிகளையும் கிராமங்களுக்கு எடுத்துச் செல்வீர்கள் என்று எதிர்பார்க்கிறோம். கிராம மக்களிடம் எப்படி உங்கள் அறிவியல் அறிவைத் தொற்றவைக்கப் போகிறீர்கள்? கிராமங்களுக்குத் தேவையான கல்வியை நீங்கள் கற்கிறீர்களா? அற்புதமான வசதிகளுடன் இவ்வளவு பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுள்ள கல்லூரியில் நீங்கள் பெறும் கல்வி நடைமுறை சார்ந்ததாக இருக்குமா? கிராம மக்களின் நன்மைக்காக உங்களால் செயல்படமுடியுமா?’ என்று 1925ம் ஆண்டு திருவனந்தபுரம் கல்லூரியொன்றில் பேசினார். ‘அறிவியல் தேடலுக்கு எல்லைகளுண்டு. அந்த எல்லைகள் மானுடம் நம்மீது சுமத்தியுள்ள எல்லைகள்’ என்றும் அதே உரையில் குறிப்பிட்டார்.

“நாம் கிராம மக்களைச் சந்தித்து எப்படி அவர்களது பணத்தைக் கட்டடங்களும் ஆலைகளும் கட்டுவதற்குப் பயன்படுத்துகிறோம், ஆனால் அவை அவர்களுக்கு ஒருபோதும் பயன்தரமாட்டா; ஒருவேளை அவர்களது பிற்காலத் தலைமுறைகளுக்குப் பயன்தரலாம் என்றெல்லாம் விளக்கினால், அவர்களுக்குப் புரியப்போவதில்லை. […] உங்கள் பேராசிரியர் நீங்கள் பயன்படுத்தும் சில வேதிப்பொருள்களின் தன்மைகளை அறியப் பல ஆண்டுகள் ஆகும் என்கிறார். ஆனால் யார் இந்த கிராமங்களை அறிந்துகொள்ள முனைவார்கள்? உங்கள் சோதனைக் கூடங்களில் சில சோதனைகள் 24 மணிநேரமும் நடைபெறுவதுபோல, உங்கள் உள்ளத்தில் ஒரு பெரிய மூலை கோடானுகோடி ஏழைகளுக்காக இதமாக இருக்கட்டும்…தெருவில் செல்லும் சாதாரணர்களைவிட உங்களிடம் நான் கூடுதலாக எதிர்பார்க்கிறேன். உங்களால் ஓர் அற்புதமான (கம்பியற்ற) தொலைத்தொடர்புக் கருவியைப் புற ஆய்வுகள் தேவைப்படாமல் அக ஆய்வுகள் மூலம் உருவாக்க முடியும் – அக ஆய்வற்ற எந்த ஆய்வும் பயனற்றது – அக்கருவியால் உங்கள் உள்ளங்களை கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களோடு இணைத்துக் கொள்ளமுடியும். நீங்கள் செய்யும் கண்டுபிடிப்புகள் அனைத்துமே ஏழைகளின் நலனையே தம் இறுதிக் குறிக்கோளாகக் கொண்டிருந்தாலொழிய, ராஜாஜி நகைச்சுவையாகச் சொன்னதுபோல, உங்கள் பணிமனைகள் அனைத்தும் சாத்தானின் பணிமனைகளாகிவிடும்,” என்று 1927ல் பெங்களூரு தேசிய அறிவியல் நிறுவனத்தில் உரையாற்றினார்.

விடுதலைக்குப் பின் இந்தியா காந்தியின் அறிவியல்-பொருளாதார நோக்குகளை நிராகரித்துப் பெருந்தொழில்களின் திசையில் தடம் மாறியது. எனினும் இன்றைய காலகட்டத்தில் காந்தியின் அறிவியல் நோக்குக்கான தேவை உலகளவில் எழுந்துள்ளது. சூழலியல் அழிவுகள் மானுடமும் இயற்கையும் அறிவியல் மீது விதித்துள்ள எல்லைகளைப் புலப்படுத்துகின்றன. அதிகாரமும் உற்பத்தியும் மையப்படுவதே பெரும் சூழலியல் நெருக்கடியை உருவாக்கியது என்கிற புரிதலுக்கு சூழலியல் செயல்பாட்டாளர்கள் வந்தடைந்துள்ளனர். இந்தச் சூழலியல் நெருக்கடிகள் அடித்தட்டு மக்களையே முதலில் பாதிக்கின்றன. இந்நிலையில் காந்தியின் ஒருங்கிணைந்த அரசியல்-அறிவியல் கோட்பாடு மறுகண்டுபிடிப்பு செய்யப்படுகிறது. மேலும் தீவிரமாக இதன் இன்றியமையாமை உணரப்படுகிறது.

இக்கட்டுரைக்கான சிந்தனையிலிருந்தபோது, சேலம்-திருவண்ணாமலை இடையே, கல்வராயன் மலைசூழ்ந்த பள்ளத்தாகிலுள்ள சிட்டிலிங்கி கிராமத்துக்கு ஒரு கூட்டத்துக்காகச் சென்றிருந்தேன். ஏற்கனவே சிட்டிலிங்கி பற்றி அறிந்திருந்தாலும், நான் அங்கு செல்வது அதுவே முதல்முறை. முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் மருத்துவத் தம்பதியினராகிய ரெஜி-லலிதா ஆகிய இருவரும் அப்பகுதியில் தம் மருத்துவப் பணிகளை ஒரு சிறிய குடிசையில் தொடங்கினர். பழங்குடியினர் வாழும் சிட்டிலிங்கிப் பகுதி அப்போது தமிழகத்திலேயே மிக அதிகமான குழந்தை இறப்புகளைக் கொண்டிருந்தது. இவர்கள் அங்கு பழங்குடிகளுக்கான மருத்துவமனை ஒன்றை அமைத்தனர். குழந்தை இறப்பு விகிதம் குறைய அது பெரிதும் உதவியது. அதன்பிறகு அங்கு வந்து சேர்ந்த கட்டடக் கலைஞர்களான கிருஷ்ணா-அணு இணையர் கல்விப் பணிகளிலும், மாற்றுக் கட்டடங்கள் கட்டப் பயிற்சியளிப்பதிலும் ஈடுபட்டனர். துளிர் என்ற பள்ளி தொடங்கப்பட்டது. உடல்நலம் பேண வெறும் மருத்துவம் போதாது; கல்வியும் வேலைவாய்ப்பும் பொருளாதாரமும் தேவை என்ற புரிதல் அவர்களுக்கு ஏற்பட்டது. அங்கிருந்து அவர்களது பார்வை விரிவடைந்து உணவை நோக்கிச் சென்றது. அப்பழங்குடி கிராம மக்கள் தங்களுக்குத் தேவையான ஊட்டச்சத்து மிக்க உணவை விளைவித்து, உட்கொண்டு, நல்ல விலைக்கு விற்பனை செய்யவும் வழிவகுக்கும் பொருட்டு உழவர்களை ஒன்றுதிரட்டி, இயற்கை வேளாண்மைக்கு மாற்றி, ஒரு விற்பனை அமைப்பையும் உருவாக்கினர். பல நூறு பழங்குடி உழவர்கள் இதன்மூலம் பலன்பெற்றனர். உணவுப் பழக்கத்திலிருந்து மறைந்துகொண்டிருந்த சிறுதானியங்கள் போன்றவை மீண்டும் அவர்களது உணவில் இடம்பிடிக்கத் தொடங்கின. அவர்களது வேளாண் வருமானமும் பெருகியது. கருவுற்றிருந்த பெண்களிடையே ஏற்படும் இரத்த சோகை போன்ற குறைபாடுகளும் ஊட்டமிக்க உணவுமூலம் குறைந்தன. மருத்துவம், கல்வி, பொருளாதாரம், உணவு ஆகியவற்றின் அடுத்த கட்டமாகத் திறமான ஆட்சி-நிர்வாக அமைப்புக்கான தேவையை அவர்கள் உணர்ந்தனர். பழங்குடி மருத்துவமனையில் செவிலியாகப் பணியாற்றிய மாதேசுவரி மஞ்சுநாத் என்ற பழங்குடிப் பெண் ஊராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிட முன்வந்து வெற்றியும் பெற்றார். அவரது தலைமையில் கிராம நிர்வாக அமைப்பு வலுப்படுத்தப்பட்டு வருகிறது. கிராம சபைகள் கூடித் திறம்படச் செயல்படுகின்றன. இக்குழவினர் பேசும்போது காந்தியின் சுயராச்சியத்தை இவ்வாறாகத்தான் படிப்படியாகப் புரிந்துகொண்டு அதை நெருங்கியுள்ளதாகக் கூறினர். காந்திய அரசியலைப் புரிந்துகொள்வதோடு காந்திய அறிவியலைப் புரிந்துகொள்ளவும் இத்தகைய அனுபவங்களே துணைநிற்கின்றன. ஒற்றைப் புள்ளி ஏதொன்றிலும் தேங்கிவிடாமல், மக்களின் தேவைகளுக்கேற்ப விரிவடைந்து, ஒவ்வொரு சிக்கலுக்குமான மூல காரணிகளை ஆராய்ந்தறிந்து அவற்றை நீக்கி, மானுட நேயத்துடனும் சனநாயகத் தன்மையுடனும் இயற்கை மீதான அக்கறையுடனும் இயங்குவதே காந்திய அறிவியல்.

உதவிய நூல்கள்/கட்டுரைகள்

  1. M.K.Gandhi, ’The Collected Works of Mahatma Gandhi’, Publications Division, New Delhi.
  2. Jawaharlal Nehru, “Letter to Aldous Huxley refuting his characterisation of Congress views as anti-Science”, Mainstream, VOL LX No 6, New Delhi, January 29, 2022
  3. Aldous Huxley , “A NOTE ON GANDHI”, Huxley and Orwell on Gandhi, The Beacon, October 24, 2019.
  4. M.K.Gandhi, Jawaharlal Nehru, The Charkha and the Rose, Publications Division, New Delhi, 2007.
  5. Shambhu Prasad, “Gandhi’s Views On Current Topics”, https://www.mkgandhi.org/articles/views_on_sci.htm
  6. Ramachandra Guha, “Gandhi and Science”, The Telegraph, February 4th, 2006
  7. Millie Graham Polak, “Mr.Gandhi: The Man”, January 1931.
  8. M.K.Gandhi, Divya Joshi, “Gandhi on Khadhi”, Mani Bhavan Gandhi Sangrahalaya, Mumbai, 2002.
  9. M.K.Gandhi, R.K.Prabhu, “Industrialize and Perish!”, Navajivan Publishing House, February 1966.

ஒளிர்மணம் கொண்ட மலர்கள்: காந்தியின் அரையாடை நூற்றாண்டு

செப்ரெம்பர் 22, 2021

காந்தியின் அரையாடையேற்பு நூற்றாண்டையொட்டிப் பேசுமாறு நண்பர் சரவணன் கடந்த வாரம் கேட்டார். நான் அன்றிருந்த ஏதோ மனநிலையில் தயங்கினேன். அதைப்பற்றிக் குறிப்பாக அதிகம் படித்ததில்லையே என்றேன். இப்போது எண்ணிப்பார்த்தால் அத்தயக்கம் பொருளற்றதாகத் தெரிகிறது. காந்தியின் அரையாடை என்பது வெறும் ஆடைத்துறப்பு மட்டுமன்று. அன்றுர அரையாடை மட்டுமே உடுத்த இயன்ற பிற மனிதர்மீது கொண்ட கண்ணோட்டம் மட்டுமன்று. கருமம் சிதையாமற் கண்ணோட வல்லவர் காந்தி. இது மொத்த காந்தியத்தின் குறியீடு. சொற்களால் விளக்க இயலாத கொள்கைகளை எளியோர்க்கும் விளக்கிய குறியீடு. இன்றும் காந்தியத்தின் சாரத்தை நமக்கு நினைவூட்டி நிற்கும் படிமம்.

சத்தியாகிரகத்தைவிட, நாட்டுவிடுதலையைவிட மகாத்மா காந்தியின் முதன்மையான பங்களிப்புகளாக நான் கருதுபவை அதிகாரப் பரவலாக்கம், உற்பத்திப் பரவலாக்கம், கிராம/ தற்சார்புப் பொருளாதாரம், நுகர்வு அடிமைத்தனத்துக்கு எதிரான எளிய வாழ்க்கை, கடையனுக்கும் கடைத்தேற்றம் என்ற சர்வோதயக் கொள்கை, அறிவியலின் நோக்கம் குறித்த தெளிவு, ஆதாரக் கல்வி முதலியவை. இவையே நம்மை மூழ்கடிக்கும் சூழலியல் நெருக்கடியில் மாந்த இனத்தின் எதிர்காலத்தைக் காக்கத் தேவையானவை. இவை அனைத்தையும் உள்ளடக்கி முழுமை பெறுவதே காந்தியம். இவை அனைத்தையும் அந்த அரைக்கதராடை தன்னுள் தாங்கி நிற்கிறது. இவை காந்திய அகிம்சையின் பிரிக்கவியலாக் கண்ணிகள். எதிராளியைத் தாக்காமல் அவருக்கு வலிக்காமல் திக்கற்ற அன்பு செலுத்துவது மட்டுமே அகிம்சையன்று. இந்திய விடுதலைப் போராட்டத்தை அகிம்சையின் வெற்றி என்பதை முதலில் மறுத்தவர் காந்திதான். பிரித்தானியர்களிடமிருந்து விடுதலை பெறுவதை முழுமையான விடுதலை என்றே முதலில் ஏற்கமறுத்தவரும் காந்திதான். காந்தி காட்டும் மாற்றுப் பாதை கரடுமுரடானதாக இருந்தாலும், சிலருக்கு மட்டும் கிட்டக்கூடிய வசதிகளைத் துறந்து எல்லாருக்கும் எட்டக்கூடிய எளிமையை ஏற்பதை வலியுறுத்தினாலும், பாழ்குழியிலிருந்து வெளியேற இருக்கும் வழி அது. இல்லை, இப்பாழ்குழியே மேலென்று களிப்புடன் தீராச்சுழலில் உழன்று புதையுண்டும் போகலாம். காந்தியத்தின் தலையாய கூறுகளை மறுத்து காந்தி என்ற மாமனிதரைப் போற்றுதல் மலரைக் கட்டிய நாரை வியத்தலன்றி வேறில்லை. இம்மலர்கள் எதிர்வரும் இருளைக் கடக்கவல்ல ஒளிர்மணம் கொண்டவை.


க.மு.நடராஜன்: நண்பென்னும் நாடாச் சிறப்பு

ஜூன் 27, 2021

(சர்வோதயம் மலர்கிறது இதழில் எழுதிய அஞ்சலிக் கட்டுரை)

2012ம் ஆண்டு மதுரையில் நாராயண் தேசாயின் ‘காந்தி கதா’ நிகழ்வு நடக்கவிருப்பதாகத் தெரிந்தவுடன் சென்னையிலிருந்து மதுரைக்குக் கிளம்பிச் சென்றேன். நாராயண் தேசாய் காந்தியின் அணுக்கச் செயலாளராக இருந்த மகாதேவ் தேசாயின் மகன். காந்தியின் கண்பார்வையில் வளர்ந்த அனுபவங்களை அழகாகப் பதிவு செய்தவர். எனவே அந்நிகழ்ச்சியைத் தவறவிடக் கூடாது என்று நினைத்தேன். அங்குதான் க.மு.நடராஜன் அவர்களை முதன்முறையாகச் சந்தித்தேன். அந்த ஐந்து நாள் உரையை அவர்தான் ஒருங்கிணைத்திருந்தார். நாராயண் தேசாயிடம் நேர்காணல் செய்வதற்கான அனுமதியை அவரிடம்தான் பெற்றேன். ஆனால், அப்போது கே.எம்.என். அண்ணாச்சி என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட நடராஜன் ஐயாவைப் பற்றி நான் எதுவும் அறிந்திருக்கவில்லை. ஒரு நீண்ட நெருங்கிய உறவு அன்று தொடங்கவிருக்கிறது என்பதையும் நான் அப்போது உணரவில்லை. முதலில் காந்தி-இன்று தளத்தில் அந்த நேர்காணல் வெளிவந்தது. பிறகு நண்பர்கள் சுனில் கிருஷ்ணன், ராட்டை ரகு ஆகியோர் அந்த நேர்காணலை நடராஜன் ஐயாவிடம் பகிர்ந்துகொண்டபோது, உடனே அதை சர்வோதய இலக்கியப் பண்ணை வெளியீடாக தமிழிலும் ஆங்கிலத்திலும் நூல்வடிவம் கொடுத்துப் பதிப்பித்தார். அப்போதுதான் அவரோடு எனது பழக்கம் முறையாகத் தொடங்கியது. ஒருவகையில் இந்த அனுபவமே எனக்கு அவரைப்பற்றி முழுமையாகப் புரிந்து கொள்வதற்கான வாய்ப்பாகவும் அமைந்தது. காந்தியின் மீது ஆர்வம் கொண்டவர்களை சர்வோதய இயக்கத்தோடுப் பிணைப்பதற்குக் கிடைக்கும் வாய்ப்பை அவர் தவறவிடுவதில்லை என்பதை உணர்ந்தேன். காந்தியப் பணியைச் செய்யக்கிட்டும் எந்த வாய்ப்பையும் அவர் தேடிப்போய்ப் பற்றிக்கொள்வார் என்பதையும் அறிந்தேன். முதலில் நாராயண் தேசாயின் காந்தி கதா கூடங்குளம் போராட்டக் குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அந்நிகழ்ச்சி அங்கு நடைபெற முடியாத சூழல் ஏற்பட்டதை அறிந்தவுடன், உடனே அவரை அணுகி மிகக்குறுகிய காலத்தில் மதுரை காந்தி அருங்காட்சியக வளாகத்தில் அந்நிகழ்ச்சி நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை நடராஜன் செய்தார். பலவகைகளில் இந்நிகழ்ச்சியின் மூலமாகக் கிடைத்த தொடர்புகளும், அனுபவங்களும் எனது வாழ்க்கையைப் புரட்டிப்போட்டு வேறு தடத்தில் செலுத்தக்கூடியவையாக மாறின. அந்த மாற்றத்தின்போது எனக்கும் என் குடும்பத்தினருக்கும் ஊக்கம் தருபவராகவும் வழிகாட்டுபவராகவும் நடராஜன் ஐயா இருந்தார். முதன்முதலாக என்னை ஜெகந்நாதன் நினைவாக நடைபெறும் சர்வோதய தின நிகழ்ச்சிக்கு வரச்செய்ததும் நடராஜன் ஐயாதான். அங்கு அம்மா கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் குடும்பத்தினருடனும் உலகெங்கும் இருந்து வரும் காந்திய அன்பர்களுடனும் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டு எங்கள் வாழ்வை நெறிப்படுத்தின. அவரது எழுபதாண்டுகால காந்தியப் பணியில் இப்படி எண்ணற்ற நிகழ்ச்சிகளை நம் ஒவ்வொருவராலும் நினைவுகூர முடியும்.

க.மு.நடராஜன் ஒரு மிகப்பெரிய செயல்பாட்டாளராகவும் அதே நேரத்தில் தேர்ந்த அறிஞராகவும் இருந்தவர். அவர் வாழ்ந்த காலத்தில் அவரைச் சர்வோதயக் குடும்பத்தைத் தாண்டி பொதுச் சமூகத்துக்கு அறிமுகப்படுத்திக் கொண்டாடத் தவறிவிட்டோம். எனினும் காந்தியையும் காந்தியத்தையும் காந்தியின் மறைவுக்குப் பிறகு உயிர்ப்புடன் வைத்திருந்து புதிய தலைமுறைகளுக்குக் கடத்திவந்த ஆளுமைகளுள் அவர் முதல் வரிசையில் நின்றவர்.

பல சர்வோதய நிறுவனங்களுக்குத் தலைவராகவும் இருந்து, மூன்று இதழ்களுக்கும் ஆசிரியராகப் பொறுப்பேற்றுத் தொடர்ந்து நடத்தியதென்பது ஓர் அரிய சாதனை. அதனை எண்பத்தெட்டு வயதுவரை அவர் செய்துவந்தார் என்பது அவருக்கு காந்தியத்தின் மீதிருந்த ஈடுபாட்டையும், நிறைவாழ்வு வாழ்ந்து முதுமையடைந்த பிறகும் தன் பணி முடிந்துவிடவில்லை என்ற எண்ணத்தையும், உலகம் உய்வதற்குத் தன்னால் இன்னும் பங்காற்ற முடியும் என்ற நம்பிக்கையையும் காட்டுகின்றன.

புதியவர்களைச் சர்வோதயக் குடும்பத்துக்குள் கொண்டுவர வேண்டும் என்பதில் எப்போதும் தணியாத ஆர்வம் கொண்டிருந்தார். ஒருமுறை அவருடன் தொடர்பில் வந்துவிட்டால் தன் அன்புக்கரங்களால் பற்றிக்கொள்வார். அவர் தன்னோடு தொடர்பில் வந்தவர்கள் அனைவரிடமும் தொடர்ந்து அன்பு பாராட்டினார். ஒவ்வொருவரோடும் இடைவிடாத தொடர்பில் இருந்தார். அவருக்கான அஞ்சலிக் கூட்டங்களின்போது நான் உணர்ந்தது அதுவே. அனேகமாக அனைவரும் தம்மை அவர் கைப்பேசியில் அழைத்துப் பேசியவண்ணம் இருந்ததாகக் குறிப்பிட்டனர். அனைவருமே அவர் தம்மீது தனிக்கவனம் செலுத்திவந்ததாகவும் தனிப்பிரியம் கொண்டிருந்ததாகவும் கருதியிருந்தனர். ஒவ்வொருவரையும் அவர்கள் இன்றியமையாத பங்காற்றவேண்டியிருப்பதாக உணரச்செய்தார்.

நானும் அப்படித்தான் அவரோடு எனக்கு மட்டுமே வாய்த்த தனிச்சிறப்புகொண்ட ஓர் உறவு இருந்ததாக நினைத்துக்கொண்டிருந்தேன். கடந்த சில ஆண்டுகளாக என்னோடு வாரமொருமுறையேனும் பேசாமலிருக்கமாட்டார். ஒவ்வொரு முறையும் ஒருமணிநேரமாவது பேசுவார். என்னைவிட இருமடங்கு வயதும் பன்மடங்கு அனுபவமும் அவருக்கு இருந்தாலும் என்னோடு ஒரு இணைநண்பனாகவே பழகினார். நான் அண்மைக் காலங்களில் அதிகம் உரையாடியது அவருடன்தான். இதுகுறித்து என் மனைவிக்கு அவர் மீது ஓர் அன்பான பொறாமையே உண்டு. அதிலும் கடந்த ஓராண்டாக இருந்த பொதுமுடக்கத்தின் போது கிராமத்திலுள்ள நான் சோர்ந்து போய்விடக்கூடாது என்பதில் கருத்தாக இருந்தார். எனது அப்பாவை முதுமையின் தனிமை தீண்டாமல் அடிக்கடி போய் பார்த்துக்கொள்ளும்படி அறிவுறுத்துவார். கபசுரக்குடிநீர் கிடைத்ததா என்று கேட்டு இல்லை என்றபோது மதுரையிலிருந்து கபசுரக்குடிநீர்த் தூளும் பிற மருந்துகளும் அனுப்பிவைத்தார்.

அவர் பல நிகழ்வுகளுக்கு என்னை அழைத்துச் சென்றார். அந்நிகழ்ச்சிகளைக் குறித்து எழுதவைத்தார். அங்கு வருபவர்களில் அனேகருடனும் அறிமுகம் செய்துவைப்பார். நான் மதுரையில் இல்லாமல் போய்விட்டேன் என்று ஆதங்கப்படுவார். இருந்தால் மேலும் அதிக பணிகளைச் சேர்ந்து செய்யலாமே என்பார். ஏதேனும் புத்தகம் படித்ததாகக் கூறினால் உடனே அதுகுறித்து எழுதி அனுப்பச் சொல்வார். அவரும் புத்தகங்கள் அனுப்பி வைப்பார்.

என் மனைவி என்னைவிட நன்றாக மொழிபெயர்ப்பதாகக் கூறி அவரையும் எழுதுவதற்குத் தூண்டுவார். பல நிகழ்ச்சிகளில் பிறரது உரைகளை அவரை மொழிபெயர்க்கவைத்தார். எங்கள் மகளின் மீதும் பேரன்பு கொண்டிருந்தார். அவள் அவருக்குத் தெரிந்த பாடலைப் பாடினால் பெருமகிழ்ச்சி கொள்வார். அந்தப் பாடலுக்கும் அவருக்குமான தொடர்பினைப் பற்றி அவளிடம் கூறுவார்.

இரண்டாண்டுகளுக்கு முன்னர் எழுத்தாளர் பாவண்ணனை அவருக்கு அறிமுகப் படுத்தியிருந்தேன். அதன்பிறகு பாவண்ணன் பல ஆளுமைகளைப் பற்றி எழுத நடராஜன் தூண்டுதலாக இருந்தார். அவருக்கு வேண்டிய நூல்களும் தொடர்புகளும் கிடைக்க ஏற்பாடுகள் செய்தார். ஒவ்வொருமுறை என்னோடு பேசும்போதும் அவரை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி கூறுவார். அதுபோலவே நான் அறிமுகப்படுத்திய பிற நண்பர்களான சித்ரா பாலசுப்பிரமணியன், பாலசுப்பிரமணியம் முத்துசாமி போன்ற பிறரையும் தொடர்ந்து எழுதவைக்கவேண்டும் என்று கூறியபடி இருப்பார்.

பிற செயல்களில் திசைமாறி நான் எழுதவதாகக் கூறிய ஏதேனும் கட்டுரையை எழுதாமல் காலம் கடத்திக்கொண்டிருந்தால், சிறிதும் கடிந்துகொள்ளாமல் தொடர்ந்து பொறுமையாக நினைவுபடுத்துவார். நல்ல நூல்களை சட்டென்று அடையாளம் கண்டுகொள்ளும் ஆற்றல் அவருக்கிருந்தது. பன்னாலால் தாஸ்குப்பதாவின் Revolutionary Gandhi என்ற நூல்பற்றிக் கூறியவுடன் கல்கத்தாவில் இருந்து அதைத் தருவித்து எனக்கு அனுப்பிவைத்தார். அந்நூலுக்கான விமர்சனக் கட்டுரையை நான் வெகுகாலம் எழுதாமலே இருந்தேன். சளைக்காமல் என்னை உந்தியுந்தி அந்நூலைப் பற்றி எழுதவைத்தார். மார்க்சிய நோக்கில் காந்தியை அறிமுகப்படுத்திய அந்நூல் அவருக்கு மிகவும் முக்கியமானதாகப் பட்டது. இறுதியாக நான் எழுதிய கட்டுரையைப் படித்துவிட்டு அந்நூலைப் படிக்கவிரும்புவதாகக் கூறிய மருத்துவர் ஜீவாவுக்கும் அந்நூலை வாங்கி அனுப்பினார். எனது தல்ஸ்தோய் பற்றிய ‘எழுத்தில் விரியும் வியனுலகம்’ கட்டுரையை பல இதழ்களில் பிரித்துத் தொடர்ந்து பதிப்பித்தார். அதற்கு ஆதாரமான ‘The Kingdom of God is Within You’ என்ற தல்ஸ்தோயின் நூல் தமிழில் மொழிபெயர்க்கப்படவில்லை என்பதை அறிந்து மருத்துவர் ஜீவாவை மொழிபெயர்க்கச் சொல்லிக் கேட்டார். அவர் ருசிய மொழி அறிந்த தனது சகோதரியை மொழிபெயர்க்கச் சொல்லியிருப்பதாகக் கூறினார். மருத்துவர் இறந்த செய்தி அறிந்தபோது இடிந்துபோனார். அவருக்கு வந்த அஞ்சலிக் குறிப்புகளையெல்லாம் தொகுத்து அனுப்பிவைக்கும்படி கூறி படித்தார். சர்வோதயம் மலர்கிறது இதழ் மூலமாக அவருக்குச் சிறப்பான அஞ்சலி செலுத்தினார். இன்று அண்ணாச்சியும் நம்மிடையே இல்லை.

எனது ஆங்கில மொழிநடை அவருக்குப் பிடிக்கும். அதை எல்லாரிடமும் குறிப்பிடுவார். ஆனால் என் தமிழ் மொழிநடை மீது அவருக்கு விமர்சனங்கள் உண்டு. இலக்கிய நடையில், பண்டித நடையில் எழுதுவதாகக் குறிப்பிடுவார். எளிமையாக எழுதவேண்டும்; எல்லாரையும் சென்றடைய வேண்டும் என்று வலியுறுத்துவார். எனினும் என் கட்டுரைகளை அதிக மாற்றங்களின்றிப் பதிப்பிப்பார்.

சமூகச் செயல்பாட்டில் முழுமையாக ஈடுபட்டுவிட்டதால் இலக்கியமெல்லாம் அவர் விரும்பிய அளவு தீவிரமாகப் படிப்பதற்கு நேரமில்லாமல் போய்விட்டது என்பார். ஜெயகாந்தன் போன்றவர்களால் ஈர்க்கப்பட்டாலும் அவர் குடிப்பழக்கத்தை நியாயப்படுத்திப் பேசியது தனக்கு உவப்பாக இல்லை என்பார். இலக்கியவாதிகள் தனிவாழ்விலும் அறத்தைப் பேணவேண்டும் என்று கருதினார். அவர் விரும்பியவண்ணம் இலக்கியம் பயிலாவிட்டாலும் இருமொழிகளிலும் சிறப்பான தேர்ச்சி பெற்றிருந்தார். சொல்ல வந்த கருத்துகளை – எழுத்திலாகட்டும், பேச்சிலாகட்டும – மிகத் தெளிவாகவும், எளிமையாகவும், சுவையாகவும் கூறும் ஆற்றல் அவருக்கிருந்தது.

எல்லாரைப் பற்றியும் கூற பிறருக்குத் தெரியாத தகவல்கள் அவரிடம் இருந்தன. குமரப்பா, வினோபா, ஜெயப்பிரக்காஷ் நாராயண், கெய்தான், ஜெகந்நாதன், காமராசர், கக்கன் போன்ற தலைவர்களைக் குறித்தெல்லாம் பகிர்ந்துகொள்ள பல தனிப்பட்ட அனுபவங்கள் அவருக்கிருந்தன. இவான் இலிச், E.F. ஷூமேக்கர், மார்க் லிண்ட்லே, ராமச்சந்திர குகா போன்ற அறிஞர்களுடனும் வெவ்வேறு தருணங்களில் பழகும் வாய்ப்பு அவருக்குக்கிட்டியது. பல மாற்றுக்கருத்துகள் கொண்டவர்களுடனும் சிறந்த நட்பிலிருந்தார். கம்யூனிச இயக்கத்தொடர்பு கொண்ட நா.தர்மராஜன், எஸ்.என்.நாகராசனுடனும் ஆகியோர் அவரது நெருங்கிய நண்பர்கள்.

நடராஜன் சர்வோதய இயக்கத்தில் பல பதவிகளை வகித்துவந்த போதும் எப்போதும் தன்னை முன்னிறுத்திக் கொள்ளாதவராகவே இருந்தார். தனி உரையாடல்களின்போதும் உரைகளின்போதும் எண்ணற்ற அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டே இருப்பார். ஆனால் அந்த அனுபவப் பகிர்வுகளில் பிறரது ஆளுமைகள்தாம் வெளிப்பட்டனவேயொழிய இவரது பங்கினை மிகக் குறைவாக முன்வைப்பார். இவ்வாண்டு சர்வோதய விழாவில், ஜெகந்நாதன்-சர்வோதயா விருது நடராஜன் அண்ணாச்சிக்கு வழங்கப்பட்டது. விருதாளர்களின் பட்டியலை இறுதிசெய்யும் பொறுப்பு எப்போதும் அவரிடமே இருந்தது. ஆனால் இம்முறை அவருக்குத் தெரியாமலே அவரது பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டது. எனினும் விருதுச் சான்றிதழை அவரது அலுவலகத்தில் எப்போதும்போல அவரிடமே அனுப்பிவைத்தனர். எனவே அவருக்குக் கிடைக்கவிருந்த கடைசிநேர இனிய அதிர்ச்சி நிகழவில்லை. அவர் அந்த விருதினைக் கூச்சத்துடனே ஏற்றுக்கொண்ட போதும், அதை அவரது வழிகாட்டியாக இருந்த ஜெகந்நாதனுக்குச் செய்யும் மரியாதையாகக் கருதினார். அன்றைய தினம் அவர் ஆற்றிய உரையை நான் சர்வோதய தினம் பற்றிய கட்டுரையில் சற்றே விரிவாக எழுதியிருந்தேன். கட்டுரையின் நீளம் கருதி முழுமையாகக்கூட எழுதவில்லை. ஆனாலும் கட்டுரையை அவருக்கு அனுப்பியபோது உடனே என்னை அழைத்து, ‘எதுக்கு நான் பேசனதெல்லையாம் இவ்வளவு விரிவா எழுதினீங்க?’ என்று நெகிழ்ச்சியுடன் கேட்டார்.

நடராஜன் ஒரு மாபெரும் வரலாற்றுப் பெட்டகமாக இருந்தார். அவரது நினைவுகளையும் அனுபவங்களையும் நாம் முழுமையாகப் பதிவுசெய்யவில்லை என்பது ஒரு மிகப்பெரிய குறையாகவே இருக்கும். ஒவ்வொரு முறை அவரிடம் ஒரு நீண்ட நேர்காணல் செய்வதற்கு நேரம் கேட்கும் போதும் அதற்கென்ன அவசரம் என்று வேறு ஏதேனும் பணியில் நம்மை ஈடுபடுத்திவிடுவார். அவரோடு சில நாட்கள் கூடவே இருந்து உரையாடி அனைத்தையும் பதிவு செய்யவேண்டும் என்ற எனது ஆசையை நிறைவேற்ற நானும் உரிய வேகம் காட்டவில்லை என்பது எனக்குள் ஒரு குற்றவுணர்வையே ஏற்படுத்துகிறது.

அண்மையில் அயல்நாட்டு நண்பர்களோடு நடந்த கூட்டமொன்றில் நடராஜன் அண்ணாச்சியை நினைவுகூர்ந்த அம்மா கிருஷ்ணம்மாள் தன்னையும் அறியாமல் நிகழ்ச்சி முழுவதும் கண்ணீர் சொரிந்தபடியே அமர்ந்திருந்தார். அவர்களது நீண்ட நெடிய சமூகப்பயணத்தில் நடராஜன் அண்ணாச்சி எத்தனை உற்ற துணையாக இருந்திருக்கிறார் என்பதை நாம் எழுதக்கூடிய எந்த சொற்களையும் விட அந்தக் கண்ணீரே சான்றாகியது. அவரளவு நீண்ட தொடர்பு எனக்கு இல்லாவிட்டாலும் அவர் உணர்ந்த அதே வெறுமையை நடராஜன் ஐயாவின் மறைவிலிருந்து நான் உணர்ந்துகொண்டிருக்கிறேன். சர்வோதய இயக்கத்தில் அவர் விட்டுச்சென்றிருக்கும் வெற்றிடம் அவ்வளவு எளிதில் நிரப்பிவிடக்கூடியதன்று.


காந்தியின் ஆதாரக் கல்விமுறை

ஜூன் 27, 2021

[நமது நம்பிக்கை (ஜூன் 2021) இதழில் வெளிவந்த கட்டுரை]

(1)

காந்தி முன்வைத்த கல்விமுறை அரசியல், பொருளாதார தளங்களில் அவரது பிறரது பங்களிப்புகளுக்கு இணையான ஒன்று. ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இருபதாம் நூற்றாண்டில் வளர்த்தெடுக்கப்பட்ட நவீன மாற்றுக் கல்விமுறைகளோடு ஒத்தும் முரண்பட்டும் இருப்பது காந்தியக் கல்விமுறை. கல்வி நோக்கில் எந்தவொரு நவீன முறைக்கும் இணையானது. காந்தியக் கல்விமுறை சுதந்திர இந்தியாவில் முற்றிலுமாக நிராகரிக்கப்பட்டது ஒரு வரலாற்றுச் சோகம்.

இன்றைய மையநீரோட்டக் கல்விமுறை மதிப்பெண்களையும் மாணவர்களின் எதிர்காலப் பொருளாதார வெற்றியையுமே முதன்மையாகக் கருதுகின்றது. நிலவும் அரசியல்/அதிகார அமைப்புகளைப் பேணுதலும் வெளிப்படையாகப் புலப்படாத அதன் அடிநாதமாக உள்ளது. அதற்கு மாற்றாக உலகெங்கிலும் கல்வியில் பல சோதனை முயற்சிகள் நடைபெறத்தான் செய்கின்றன. இந்தியாவில் நிகழும் பல சோதனை முயற்சிகள் காந்தியக் கல்விமுறையின் சாரத்தை உள்வாங்கியே செயல்பட்டுள்ளன. ஆனால் இச்சோதனைகள் தனிநபர்களின் முன்னெடுப்பில் நிகழ்ந்துள்ள மிகச்சிறிய முயற்சிகள். பெரும்பாலான கல்வியாளர்களும் மாணவர்களும் காந்தியக் கல்வியின் அடிப்படைகள் குறித்த அறிமுகம்கூட இல்லாமலே இருக்கின்றனர். மாற்றுக்கல்வி முயற்சிகளுக்காகட்டும் மையநீரோட்டக் கல்விக்காகட்டும் காந்தியக் கல்விமுறையிலிருந்து பல கூறுகளை உள்வாங்கிக்கொள்வது மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்துவதோடு மட்டுமன்றி இன்று நம்மை எதிர்நோக்கும் பல சமூக-பொருளாதார-சூழலியல் சவால்களுக்குத் தீர்வுகளைக் காணவும் உதவி செய்யும்.

(2)

காந்தி தென்னாப்பிரிக்காவில் தனது பிள்ளைகளுக்குத் தானே கற்றுத்தரத் தொடங்கியதிலிருந்தே கல்வி குறித்த வலுவான கருத்துகளை வளர்த்துக்கொள்ளத் தொடங்கினார். பிறகு ஃபினிக்ஸ் பண்ணையும் தல்ஸ்தோய் பண்ணையும் நிறுவிப் பல குழந்தைகளுக்குக் கற்றுத்தந்த போது பல சோதனை முயற்சிகள் செய்தார். இவற்றிலெல்லாம் குறிப்பிடத்தகுந்த வெற்றிகளையும் தோல்விகளையும் சந்தித்தார். அவற்றிலிருந்து கற்றுக்கொண்டும் இருந்தார். இந்தியா வந்தபிறகும் அவரது கல்விச் சிந்தனைகளில் மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணம் இருந்தன.

திடமான தனிச்சரடுகளாக இருந்த காந்தியின் பல்வேறு சிந்தனைப் போக்குகளும், 1937ல் பிரித்தானிய ஆட்சியின் கீழ் இந்திய மாகாணங்களில் காங்கிரஸ் அரசுகள் அமைந்தபோது, ஒன்றிணைந்து ஒரு முழுமையான வடிவம் பெறத் தொடங்கின. அப்போது ’ஆதாரக்கல்வி’ என்றும், பின்னர் ‘நயி தாலீம்’ என்றும் பெயரிட்டு அழைக்கப்பட்ட காந்தியக் கல்விமுறை மிகப்பெரும் சாத்தியங்கள் நிறைந்தவொன்றாக, ‘மௌனமான புரட்சிக்கு வழிகோலும் ஈட்டிமுனையாக’ உருவெடுத்தது. காந்திய வழியில் இயங்கும் ஒரு சமூகத்தைக் கட்டமைக்கவல்ல ஆற்றல்மிக்கதாக அமைந்தது. உழைப்புக்கும் அமைதிக்கும் அன்புக்கும் அறத்துக்கும் அறிவுக்கும் சமமான அழுத்தம் கொடுத்தியங்கும் ஒரு புதிய உலகுக்கு இளம் உள்ளங்களை வழிநடத்திச்செல்லக்கூடிய வாய்ப்பினைக் கொண்டதாக இருந்தது. வெறும் கல்விமுறையாக மட்டுமின்றி குழந்தைகளுக்கும் சமூகத்துக்கமான ஒரு வாழ்க்கைமுறையாகத் தோன்றியது.

1937 அக்டோபரில் வர்தாவில் நடைபெற்ற தேசியக் கல்வி மாநாட்டில் அறிமுக உரை ஆற்றிய காந்தி, அவரது எண்ணப்போக்கையும், புதிய கல்விமுறைக்கான தேவையையும் முன்வைத்தார். அதே ஆண்டில் அதற்கு முன்பும் பின்பும் அவர் எழுதிய கட்டுரைகள், கடிதங்கள் மற்றும் அவரது உரையாடல்கள் வாயிலாக ஒரு புதியக் கல்விக் கொள்கை தெளிவாக வெளிப்படுத்தப்பட்டது. ஜம்னாலால் பஜாஜ், அரியநாயகம், ஆஷாதேவி அரியநாயகம், வினோபா பாவே, ஆச்சார்ய கிருப்பளானி, காகா காலேல்கர் என்று பலரும் காந்தியின் புதிய பார்வையை ஆதரித்தனர்; மேலும் மெருகேற்றினர். ஜாக்கீர் ஹூசைன் தலைமையிலான ஒரு குழு, மாநாட்டின் முடிவில் ஒரு தீர்மானம் நிறைவேற்றியது. மேலும் விரிவான அறிக்கைகளும், பாடத்திட்டங்களும் அடுத்த சில மாதங்களில் வரையப்பட்டன. காங்கிரஸ் கட்சி இதையே தேசியக் கல்விக் கொள்கையாக ஏற்றுக்கொண்டது.

காந்தியக் கல்விமுறை உடனடியாகப் பல இடங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் (முக்கியமாகக் காங்கிரஸ் அரசுகள் கலைக்கப்பட்டதால்), முதிர்ச்சி அடையும் முன்பே கைவிடப்பட்டது. சுதந்திர இந்தியா காந்தியக் கல்விமுறைக்கு முற்றிலும் எதிர்த்திசையில் பயணித்தது. ஆனால், அடிப்படையில் இன்றைக்கும் என்றைக்குமான ஒரு முறையாகதான் நயி தாலீம் தென்படுகிறது.

காந்திய ஆதாரக் கல்விக்கொள்கையின் சில முக்கியக் கூறுகளைச் சற்றே விரிவாகக் காணலாம்:

1. ஏட்டுக்கல்வியும் எழுத்தறிவும் தம்மளவில் கல்வியின் முடிவாகிவிட முடியாது. கல்வியின் ஓர் அங்கமாக மட்டுமே இருக்கவேண்டும்.

“எழுத்தறிவுக்கு நான் எதிரானவன் என்று குற்றம் சாட்டுகிறார்கள். இல்லவே இல்லை! மாறாக, அது எப்படிப் புகட்டப்பட வேண்டும் என்ற வழியைத்தான் காண்பிக்க விரும்புகிறேன்,” என்றும்

“நம் குழந்தைகளை நம் பண்பாடு மற்றும் நம் நாட்டின் அசலான மேதைமை ஆகியவற்றின் உண்மையான பிரதிநிதிகளாய் ஆக்கவேண்டும்,” என்றும் காந்தி கூறினார். (வர்தா உரை, 22-10-37)

2. தொழில் சார்ந்த கல்வி தரவேண்டும். தொழிற்கல்வி என்று தனியாக இல்லாமல், கைத்தொழில் மூலமாகப் பிற பாடங்களை அறிவியற்பூர்வமாகக் கற்பிக்க வேண்டும்.

“இதுவரை நான் சொல்லிவந்ததெல்லாம் அறிவுப் பயிற்சியோடு சேர்த்து, தொழிற்பயிற்சியும் அளிக்க வேண்டும் என்ற அளவில்தான் என்பதை நான் ஒப்புக்கொண்டாக வேண்டும். ஆனால், இப்போது நான் சொல்வது – உடலுழைப்பு சார்ந்த தொழிலே அறிவாற்றலைத் தூண்டிவிடும் முக்கிய வழிமுறையாக வேண்டும்.”

“ஏதாவது கைத்தொழில் மூலமாகத்தான் கல்வி முழுவதுமே வழங்கப்படவேண்டும்”

அவ்வாறு செய்யும்போது, “தொழிற்கல்வி என்பது பல்வேறு அறிவுத்தளங்களிலும் குழந்தைகளின் மனங்களை விரிவடையச் செய்யக்கூடிய கருவியாகிறது.”

காந்தியின் சிந்தனைப் போக்கில் நிகழ்ந்த மிகமுக்கியமான மாற்றம் இதுதான். இன்று வரையில் பலரும், வகுப்பறையில் கல்வியும் வெளியில் ஏதேனும் தொழிற்கல்வியும் அளித்தால், அதுவே காந்தியக் கல்வி என்று நம்பி வருகிறார்கள். இது காந்தியின் ஆரம்ப காலச் சிந்தனையேயன்றி, அவரது ஆதாரக் கல்விக் கொள்கைக்கு சற்றே முரணானது. நூல் நூற்றல், தோட்டவேலை, சுகாதாரப்பணிகள் மூலமாக மொழியறிவும், கணிதமும், அறிவியலும், புவியியலும், வரலாறும் கற்பிக்க முடியும் என்பது மிகப்பெரும் மாற்றங்களை விளைவிக்கக்கூடிய ஒரு புத்தம்புதிய கல்விச்சிந்தனை.

செயற்கல்வியை மாண்டிஸோரி போன்ற பல கல்வியாளர்களும் வலியுறுத்திவந்தனர். உடலுக்கும், புலன்களுக்கும், உள்ளத்துக்கும் உள்ள தொடர்பு ஆழமானது என்பது அவர்களால் நிறுவப்பட்டது. ஆனால், கல்விக்கென்று பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட செயற்கையான கருவிகளின் மூலமாகவும் பிற முறைகளின் மூலமாகவும் செயற்கல்வி அளிப்பதைவிட, காந்தி கூறுவது போல், ஓர் இயல்பான கைத்தொழில் மூலமாக அளிக்கப்படும் கல்வி பன்மடங்கு ஆற்றல் வாய்ந்ததாக இருக்கும். மாணவர்களுக்குத் தங்கள் உற்பத்தியில் விளையும் பயன்களைக் காணும்போது பெரும் தன்னிறைவு கிட்டும். உடலுழைப்பின் போது தூண்டப்படும் ஆர்வத்தினைப் பயன்படுத்தி அறிவியற்பூர்வமாகக் கற்பிக்கப்படும் செய்திகள் மனதில் விரைவாகவும் ஆழமாகவும் பதியும்.

3. முழுமையான கல்வி கிராமங்களிலேயே வழங்கப்படவேண்டும். பள்ளிக்கல்விக்காக கிராமங்களிலிருந்து நகரங்களுக்குச் செல்வது பயனற்றது. அது கிராம மக்களின் தொழிலிருந்தும் வாழ்க்கை முறையிலிருந்தும் அவர்களை அந்நியப்படுத்திவிடும்.

ஆதாரக் கல்வி பற்றிப் பேசும் போது வினோபா, “சேவாகிராமில் கற்பிப்பதுபோலவே பௌனாரில் (சில மைல் தொலைவில்தான் இருந்தாலும்) கற்பிக்கமுடியாது. ஏனெனில், பௌனாரில் நதி இருக்கிறது; சேவாகிராமில் இல்லை,” என்றார்.

4. தாய்மொழி வழியாகவே கற்பிக்க வேண்டும் என்பதை காந்தி தொடர்ந்து வலியுறுத்தினார். ஆச்சார்ய கிருபளானி ஒருபடி மேலே சென்று நுட்பமான ஒன்றைப் பதிவுசெய்தார். ஆதாரக் கல்வியில், “உண்மையான பயிற்றுமொழி வேலைதான்; மொழியே அல்ல; பேசுமொழி என்பது தகவல் பரிமாற உதவும் ஊடகமேயன்றி பயற்றுமொழியல்ல,” என்றார்.

5. ஆதாரக் கல்வியின் புரட்சிகரமான இன்னொரு சிந்தனை பள்ளிகளைத் தற்சார்படையச் செய்வது. 1937ல் மாகாணங்களில் காங்கிரஸ் ஆட்சி வந்தபிறகும், இலவசக் கல்வி வழங்க வேண்டுமாயின், குடியின் வாயிலாக வரும் வருமானத்தில் தான் பள்ளிகள் நடத்தப்பட வேண்டும் என்ற நிலை, காந்தியை மிகவும் ஆற்றாமை கொள்ளச்செய்தது. இன்றும் அந்நிலை நீடிக்கிறது. தொழில் சார்ந்த கல்வி வழங்கும்போது, அந்தத் தொழிலில் மாணவர்கள் ஈடுபடுவதன் மூலமாகவே தற்சார்பு அடைந்துவிட முடியும் சாத்தியத்தை உணர்ந்து வலியுறுத்தினார்.

“முழுமையாக நோக்கினால், இத்தகைய கல்வி தற்சார்பு உடையதாக இருக்க முடியும், இருக்க வேண்டும். தற்சார்புதான் அதன் நடைமுறைச் சாத்தியத்துக்கு உரைகல்.”

அப்படியொரு தற்சார்பு நிலையை அடைவதற்குத் தேவையான உதவிகளைச் செய்வதில்தான் அரசாங்கத்தின் பங்கிருப்பதைக் கண்டார். பள்ளிகளில் உற்பத்திசெய்யப்படும் பொருள்களுக்கான சந்தையை உருவாக்கித்தரும் பொறுப்பு அரசாங்கத்துக்கு இருப்பதாக நம்பினார்.

6. பள்ளி என்பது தனித்தீவாக இயங்காமல், மாணவர்களும் ஆசிரியர்களும் கிராம வாழ்வோடு இயைந்து சேவை செய்யவேண்டும். அப்போது மாணவர்களுடைய கல்வி என்பது சமூகம் முழுமைக்குமான கல்வியாக அமைந்துவிடும். காந்தியைப் பொருத்தவரை, ‘சமூகத்தின் ஆரோக்கியத்தை மருத்துவமனைகளை நிறுவுவதன் மூலம் மட்டும் அடைந்துவிடமுடியாது; அதேபோல, சமூகத்தின் கல்வி – சுயராஜ்ய உணர்வை ஊட்டி வளர்த்துப்பேணக்கூடிய கல்வி – வெறும் பள்ளிகளை நிறுவுவதன் மூலம் மட்டும் அடைந்துவிடமுடியாது.’

“நமது செயல்பாடு 7 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நயி தாலீம் முறையில் கல்வி அளிப்பதோடு சுருங்கிவிடுவதில்லை; அது பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்க்கை முழுவதையும் தீண்டுவதாக இருக்கவேண்டும். [….]
கிராமத்தினர்க்கு நாம் ஆசிரியர்களாக வேண்டும்; உண்மையில் அதன் பொருள், கிராமத்தார்க்கு நாம் சேவகர்களாக வேண்டும் என்பதே. அதற்கான பரிசு அகத்திலிருந்து வரவேண்டும்; புறத்தேயிருந்தல்ல. உண்மையை நோக்கிய நமது தேடலில் நமக்கு மனிதத்துணை கிடைக்கிறதா இல்லையா என்பது ஒரு பொருட்டேயல்ல. நயி தாலீம் புறவயமான பொருளாதார உதவியைச் சார்ந்திருப்பதுமல்ல. விமர்சகர்கள் என்ன சொன்னாலும், அது அதன் வழியில் தொடரும். உண்மையான கல்வி தற்சார்புடையதாக இருந்தாகவேண்டும். இதில் வெட்கப்பட எதுவும் இல்லை. நாம் சொல்வதைச் செய்துகாட்டி, மனதின் உண்மையான வளர்ச்சிக்கு இட்டுச்செல்லும் ஒரே முறை இதுவென நிரூபித்தோமேயானால், இது ஒரு புதுமையான சிந்தனையாக ஏற்கப்படும். இன்று நயி தாலீமை நிந்தனை செய்பவர்கள் எல்லாரும் முடிவில் அதனைப் போற்றுபவர்களாக மாறுவார்கள்; நயி தாலீம் பரவலான ஏற்பினைக் கண்டடையும்.” (சேவாகிராமில் காந்தியின் உரை, 11-1-45)

வர்தா மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் ஆதாரக் கல்வி குறித்த கருத்துகளைத் தொகுத்துக்கொள்ள உதவுகின்றன:

  • இலவசமான, கட்டாயக்கல்வி தேசம் முழுவதும் ஏழாண்டுகளுக்கு வழங்கப்பட வேண்டும்.
  • பயிற்றுமொழி தாய்மொழியாகவே இருக்கவேண்டும்.
  • இந்த கல்விக்காலம் முழுவதும் உடலுழைப்பு சார்ந்த ஓர் உபயோகமான தொழிலை மையமாக்கியே கல்விமுறை அமையவேண்டும். குழந்தையின் வாழ்க்கைச்சூழலுக்கு ஏற்பத் தேர்ந்தெடுக்கப்பட்ட கைத்தொழில் மூலமாகவே, முடிந்தவரை மற்ற திறன்களுக்கான பயிற்சிகளும் ஒருங்கிணைப்படவேண்டும்.
  • இந்தக் கல்விமுறை மூலமாகப் படிப்படியாக ஆசிரியர்களின் ஊதியம் தற்சார்பான முறையில் வழங்கப்படும்.

(3)

கல்வி என்பது வெறும் ஏட்டுக்கல்வியாக இல்லாமல், செயல்களின் மூலமாக பல்வேறு பாடங்களையும் பயில்வது என்பது காந்தியக் கல்விமுறைக்கும் பிற நவீன ஐரோப்பிய-அமெரிக்க கல்விமுறைகளுக்கும் இருக்கக்கூடிய மிக முக்கியமான ஒற்றுமை. இவற்றிடையே இருக்கக்கூடிய மிக முக்கியமான வேறுபாடு கல்வியின் நோக்கம் குறித்ததாக இருக்கிறது. பெரும்பாலான நவீன முறைகள் முழுக்க முழுக்கக் குழந்தையை மையமாக வைத்துச் செயல்படுகின்றன. குழந்தைகளை ஒற்றைப்படையான பண்டங்களாகப் பார்க்கும் மையநீரோட்டக் கல்விமுறைக்கு மாற்றாக குழந்தையை மையப்படுத்தும் சிந்தனை முன்வைக்கப்படுவது வரவேற்கப்படவேண்டிய ஒன்றுதான். ஆனாலும் இத்தகைய பார்வையில் உள்ள குறைபாடு குழந்தைக்கும் சமூகத்துக்குமான உறவின் மீது கவனம் இல்லாமற் போவதுதான். காந்தியக் கல்விமுறை அக்குறையைக் களைய முனைகிறது. குழந்தைகளின் கல்வி என்பதை தனிப்பட்ட செயல்பாடாகக் காணாமல் ஒட்டுமொத்த சமூகச் செயல்பாடாகக் காண்கிறது. அதிலும் குறிப்பாக, உள்ளூர்ச் சமூகங்களையே முதன்மைப்படுத்துகிறது. அந்தந்த இடத்துக்கும் சூழலுக்கும் ஏற்றமாதிரி, பயில்தல் முறைகள் மாறுபடும்; கற்பித்தல் முறைகளும் மாறுபடவேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. குழந்தைகளுக்கும் மண்ணுக்கும் மனிதருக்குமான உறவை அறுந்து போகாமல் பார்த்துக்கொள்கிறது. கல்வியென்பது மாணவர்களை மண்ணிலிருந்து அந்நியப்படுத்தி அப்புறப்படுத்தும் ஆயுதமாக மாறாமல், அவரவர் சமூகங்களுக்குப் பயன்படும் விதத்தில் வடிவமைக்கப்படுகிறது.

இந்தியச் சாதியமைப்பும் அது சார்ந்த சிக்கல்களும் உடலுழைப்பையும் தொழில் சார்ந்த கல்வியையும் மையப்படுத்தும் கல்விமுறையை நடைமுறைப்படுத்துவதில் பெரும் சவால்களாக இருக்கும். கடந்த காலத்திலும் காந்தியக் கல்விமுறை பல காரணங்களால் நம் நாட்டில் ஊன்றமுடியாமல் போனது. அதை அந்த முறையின் தோல்வியாகவோ காந்தியக் கருத்தியலின் தோல்வியாகவோ நாம் காணவேண்டியதில்லை. அக்கல்விமுறையிலிருந்து நாம் வெகுதூரம் விலகிச்சென்றுவிட்ட பின்னர்தான் அதன் தேவையை உணரத்தொடங்குகிறோம். நவீனச் சூழலியற் பார்வை நுகர்வினைக் குறைத்துக்கொண்ட தற்சார்பான சிறுசமூகங்களையே நாம் எதிர்கொண்டிருக்கும் மாபெரும் பருவநிலை நெருக்கடிக்குத் தீர்வாகக் காண்கிறது. நுகர்வையும் அதிகாரம் மையப்படுதலையும் பெருக்கும் கருவியாகவே இன்றைய கல்விமுறை இருக்கிறது. அதனால்தான் ‘எதிர்காலத்துக்கான வெள்ளிகள்’ என்று வெள்ளிக்கிழமைகளில் பள்ளிகள் புறக்கணிப்புப் போராட்டத்தை சுவீடன் நாட்டுப் பள்ளிமாணவி கிரேட்டா துன்பர்க் முன்னெடுப்பில் உலகம் முழுதும் குழந்தைகள் நடத்துகிறார்கள். சுற்றுச்சூழல் மீது மிகக்குறைவான எதிர்மறைப் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய தற்சார்பு சமூகங்களை அமைப்பதற்கு காந்தியக் கருத்தியல் இன்றியமையாத ஒன்று. அத்தகையதொரு சமூகத்தை உருவாக்க முனைந்தால் அதில் காந்தியக் கல்விமுறைக்குத் தவிர்க்கமுடியாத பங்கு இருக்கும்.

உதவிய நூல்கள்:

  1. Collected Works of Mahatma Gandhi, Publications Division, 1999
  2. The Story of Nai Talim, Marjorie Sykes, Nai Talim Samiti, 1988
  3. Towards New Education, M.K.Gandhi, Bharatan Kumarappa, Navjivan Publishing House, 1953
  4. ‘காந்தியக் கல்வி : காந்தியத்தின் ஆதாரம்’ என்று தலைப்பில் காந்தி இன்று ‘Gandhitoday.in’ இணைய இதழில் வந்த எனது கட்டுரை.

காந்தியெனும் இதழாளர்

ஜூன் 27, 2021

(2019ம் ஆண்டு காந்திகிராமப் பல்கலைக்கழகத்தில் சாகித்திய அகாதெமி நடத்திய காந்தி 150 விழாவில் ஆற்றிய உரையின் விரிவுபடுத்தப்பட்ட கட்டுரை வடிவம். தமிழினி மின்னிதழிலும் சர்வோதயம் மலர்கிறது இதழிலும் வெளிவந்தது.)

காந்தி என்ற அகிம்சாவாதியை, தலைவரை, பொருளியற் சிந்தனையாளரை, புரட்சியாளரை, கல்வியாளரைப் பற்றி நிறைய எழுதப்பட்டுள்ளது. அவரது பல்வேறு பரிமாணங்களில் அதிகம் பேசப்படாத ஒன்று அவரது இதழியல் பணி. அவரது நீண்ட இதழியல் வாழ்வின் சில தருணங்களை இக்கட்டுரையில் காணலாம். பொதுவாழ்வில் காந்தி நுழைந்ததே பத்திரிக்கை மூலமாகத்தான் எனலாம். தென்னாப்பிரிக்க வாழ்க்கையில் நிறவேற்றுமையின் காரணமான ஒடுக்குமுறையே அவரைப் பொதுவாழ்வில் ஈடுபடச்செய்தது என்பது பொதுவான புரிதல். உண்மையில் சைவ உணவுப் பழக்கமே அவரை முதலில் இழலாளராக்கியது. அவர் சேர்ந்திருந்த லண்டன் சைவ உணவுக் கழகம் நடத்திய The Vegetarian என்ற இதழில்தான் காந்தி முதன் முதலாக எழுதத் தொடங்கினார். உணவு, இந்திய வாழ்க்கை முறை, சடங்குகள், விழாக்கள் என்று பல்வேறு கூறுகளைத் தொட்டு 11 வாரங்கள் எழுதினார்.

காந்தியின் முதல் கட்டுரை வெஜிடேரியன் இதழில் ‘இந்திய சைவ உணவுக்காரர்கள்’ என்ற தலைப்பில் பிப்ரவரி 2, 1891ல் வெளிவந்தது. இக்கட்டுரையில் பிரித்தானியர்கள் நம்புவதுபோல் இந்தியர்கள் அனைவரும் சைவ உணவு மட்டும் உண்பவர்கள் அல்லர் என்று எழுதினார். இந்துக்கள், முஸ்லிம்கள், பார்சிகள் என்று முப்பெரும் மதங்கள் இருப்பதாகவும், இந்துக்களில் நான்கு வர்ணங்கள் இருப்பதாகவும் கூறி, ‘இவர்களில், கோட்பாட்டளவில், பிராமணர்களும், வைசியர்களும் மட்டுமே தூய சைவ உணவுக்காரர்கள். ஆனால், நடைமுறையில், மற்றவர்களும் சைவ உணவே அதிகம் உண்கிறார்கள். சிலர் தம்முடைய ஆர்வத்தால், பிறர் வேறுவழியில்லாததால். பின்னவர்கள் ஊன் உண்ண விரும்பினாலும், வாங்கும் வசதியற்று இருக்கிறார்கள். இக்கூற்றை இந்தியாவில் ஆயிரக்கணக்கானோர் ஒருநாளைக்கு 1 பைசா வருமானத்தில் வாழ்கிறார்கள் என்ற தகவலின் மூலம் உறுதிசெய்யலாம், ’ என்ற காந்தி, தனது முதல் கட்டுரையிலேயே உப்பு வரி பற்றிப் பேசுகிறார். ‘இவர்கள் ரொட்டியும் உப்பும் மட்டும் உண்கிறார்கள; உப்பு மிக அதிகமாக வரி விதிக்கப்படும் பண்டம்.’

மேலும் இந்திய சைவ உணவுக்காரர்கள் மீன், முட்டை போன்றவற்றை உண்பதில்லை என்கிறார். ஆனால், லண்டனிலுள்ள ‘சைவ உணவுத் தீவிரவாதிகள் செய்வதுபோல பாலையும் வெண்ணையையும் ஒதுக்கவதில்லை,’ என்கிறார். பசுவிலிருந்து பால் கறப்பது தீங்கானதன்று என்று கருதும் இந்தியர்கள் பசுவைப் புனிதமானதாகவும் வழிபாட்டுக்குரியதாகவும் கருதுகிறார்கள் என்றும், பசுக்கொலைக்கு எதிராக இந்தியாவில் ஓர் இயக்கம் வளர்ந்துவருவதாகவும் எழுதுகிறார்.

காந்தி தனது முதல் கட்டுரையில் தொட்ட கருக்களான சைவ உணவு, உப்பு வரி, பால், பசுக்கொலை ஆகியவை குறித்து இறுதிவரை மிக அதிகமாக எழுதினார்.

அவர் தொடர்ந்து எழுதிய பத்திகளில் இந்தியர்கள் பலவீனமானவர்களாக இருப்பதற்கு சைவ உணவு மட்டும் காரணமல்ல, அவர்களுக்குக் குழந்தைத் திருமணம் செய்விப்பது ஒரு முக்கிய காரணம் என்றார். பல வசதியானவர்கள் பல பெண்களோடு உறவு கொள்வதும் ஒரு காரணம் என்றார். அதே வேளையில் உடலுழைப்பு செலுத்தி இயற்கையோடு இயைந்து வாழ்ந்து, சைவ உணவுண்ணும் ஆட்டிடையர்கள் அசைவ உணவு உண்பவர்களுக்குச் சமமான வலுவுடன் இருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டார். பிரித்தானிய ஆட்சியின் விளைவாக இந்தியர்கள் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகியிருக்கிறார்கள் என்றும், ஏழைகளே மிக அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள் என்றும் கூறினார். இவை எல்லாமே அவர் வரும் காலங்களில் தொடர்ந்து பேச இருந்த பிரச்சனைகள்.

இக்கட்டுரைகளில் காந்தியின் தெளிவான சிந்தனையும், மொழியின் மீதான ஆளுமையும், சரியான சொற்களைத் தேர்ந்தெடுப்பதில் கவனமும் வெளிப்படுகின்றன. காந்தியின் எழுத்துத்திறன் பலராலும் குறைவாக மதிப்பிடப்படுகிறது. அவருடைய எழுத்தில் அதிக அலங்காரம் இல்லாவிட்டாலும் சொல்ல வந்ததை அழகாகவும் அழுத்தமாகவும் அவரால் எப்போதும் சொல்ல முடிந்தது. மொழிவழக்குகளை மிகப் பொருத்தமாகவும் நேர்த்தியாகவும் அவரால் பயன்படுத்தமுடிந்தது. தரவுகளையும் கருத்துகளையும் சரியான விகிதத்தில் கலக்கமுடிந்தது. மறுக்கக்கடினமான தருக்கத்தை எப்போதும் முன்வைத்தார். அதே சமயம் உணர்வுகளையும் தீண்டும் வண்ணம் எழுதினார்.

பிரித்தானிய அறிஞர் எட்வர்ட் தாம்ஸன், ‘அவரது மனதின் மீது அவருக்கிருந்த முழுமையான கட்டுப்பாட்டின் விளைவாகவே அவருக்கு ஆங்கில மொழிவழக்கின் மீது ஒப்பிலாக் கட்டுப்பாடு வந்தது எனலாம். வெளிநாட்டவர்களுக்கு நம் மொழியில் இருந்த மிகக் கடினமான விஷயம் முன்னிடைச்சொல் (preposition). காந்தியை விட அவற்றில் அதிகத் தேர்ச்சி பெற்றிருந்த இந்தியரை நான் சந்தித்ததில்லை. […] காந்தி எனது எழுத்தை மேலோட்டமாகப் பார்ப்பார்; பார்த்து ஏதேனும் முன்னிடைச்சொல்லை நுட்பமாக மாற்றுவார் – (உங்களுக்கு ஆங்கிலம் உள்ளத்தின் அடிவேரிலிருந்து தெரியாமலிருந்தால்) நீங்கள் இது ஏதோ அற்பமான மாற்றம் என்று எண்ணக்கூடும். ஆனால் அது தன் வேலையைச் செய்தது. ஒருவேளை ஏதேனும் ஓர் இடைவெளியை விட்டுவைக்கலாம் (அரசியல்வாதிகளுக்கு ஓட்டைகள் பிடிக்கும் என்ற ஓர் ஐயம் எனக்குண்டு). எப்படியோ, அது என்னுடைய அர்த்தத்தை காந்தியின் அர்த்தமாக மாற்றிவிடும். எங்கள் கண்கள் சந்தித்துக்கொண்டு நாங்கள் புன்னகைத்துக்கொள்ளும் போது, என்ன நடந்தது என்பதை அவை எங்கள் இருவருக்குமே காட்டிவிடும்,’ என்று எழுதியுள்ளார்.

வெஜிடேரியன் இதழுக்கு காந்தி கொடுத்த ஒரு நேர்காணலில் – அது கிட்டத்தட்ட கட்டுரை வடிவில் இருப்பதால் எழுத்துப்பூர்வமாகவே நடந்திருக்கவேண்டும், இங்கிலாந்து வர முடிவு செய்ததற்கு தனது பேராவல்தான் காரணம் என்று கூறி, தனது சாதித் தலைவர்களோடு விவாதித்து, மறுத்து, தடைகளை மீறி, இங்கிலாந்து வந்ததைப்பற்றி எழுதுகிறார். தன் அன்னையிடமும் மனைவியிடமும் விடைபெற்ற நிகழ்ச்சியை நாடகத்தன்மையுடன் விவரிக்கிறார். இது பின்னர் அவ்வளவாக வெளிப்படாத காதல்வயப்பட்ட இளம் காந்தியையும் நமக்குக் காட்டுகிறது.

“உறக்கத்திலும், விழிப்பிலும், அருந்தும்போதும், உண்ணும்போதும், நடக்கும்போதும், ஓடும்போதும், படிக்கும்போதும், இங்கிலாந்தே என் கனவுகளிலும் சிந்தனையிலும் இருந்தது. விடைபெறப்போகும் அந்த முக்கியமான நாளைப்பற்றியே சிந்தித்துக்கொண்டு இருந்தேன். இறுதியில் அந்த நாளும் வந்தது. ஒரு புறம், என் தாய் கண்ணீர் நிரம்பிய விழிகளைத் தன் கைகளால் மறைத்துக்கொண்டிருந்தாள். ஆனால் அவள் விசும்பும் ஒலி தெளிவாகக்கேட்டது. மறுபுறம், என் நண்பர்கள் ஐம்பது பேருக்கு மத்தியில் நான் இருந்தேன். “நான் அழுதால், என்னைப் பலவீனமானவன் என்று நினைத்துவிடுவார்கள்; என்னை இங்கிலாந்துக்குச் செல்ல அனுமதிக்க மாட்டார்கள்,” என்று எனக்கு நானே பேசிக்கொண்டேன்; அதனால் என் இதயமே நொருங்கிக்கொண்டிருந்தபோதும், நான் அழவில்லை. இறுதியில், என் மனைவியிடம் விடைபெறும் தருணம் வந்தது. நண்பர்கள் இருக்கும்போது அவளோடு பேசுவதென்பது வழக்கத்துக்கு மாறானது. எனவே அவளைப் பார்க்க நான் வேறு அறைக்குச் சென்றேன். அவள் வெகுநேரம் முன்பே தேம்பி அழத் தொடங்கியிருந்தாள். அவள் முன்னே சென்று ஊமைச் சிலை போலச் சற்று நேரம் நின்றிருந்தேன். அவளை முத்தமிட்டேன். அவள், ‘போகாதே’ என்றாள். அதற்குப் பின் நடந்தததை நான் விவரிக்கவேண்டியதில்லை.”

காந்தி தென்னாப்பிரிக்கா சென்ற சில நாட்களிலேயே அவருக்கு இதழியல் உலகில் ஓர் எதிர்பாராத நுழைவு ஏற்பட்டது. நீதிமன்றத்தில் தன் தலைப்பாகையை அவர் எடுக்காமலிருந்தார். அதை விமர்சித்து, நட்டால் அட்வெர்டைசர் இதழ், ‘வேண்டாத விருந்தாளி’ என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியிட்டிருந்தது. அன்று நடந்த நிகழ்ச்சியை விளக்கும் விதமாக காந்தி அவ்விதழின் ஆசிரியருக்கு ஒரு கடிதம் எழுதினார். அக்கடிதம் வெளியிடப்பட்டது. ‘ஐரோப்பியர்கள் மரியாதை நிமித்தம் தம் தொப்பிகளைக் கழட்டுவது போலவே, இந்தியர்கள் (மரியாதை நிமித்தம்) தம் தலைப்பாகைகளை அணிந்தவண்ணம் இருப்பார்கள். தலைப்பாகை இல்லாமல் ஒருவர் முன்வருவது அவரை அவமதிப்பதாகும்,’ என்று விளக்கினார். தலைப்பாகையைக் கழற்றுவது தனக்கு அவமானமல்ல, எதிரிலிருப்பவருக்கே அவமானம் என்ற புதுமையான வாதத்தை முன்வைத்தார்.

காந்தி தொடர்ந்து செய்தித்தாள்களைப் படித்து வந்தார். பள்ளிப்பருவத்தில் இந்தியாவில் இருந்தவரை அவர் செய்தித்தாள்களைப் படித்ததே இல்லையெனினும், இங்கிலாந்தில் இருந்தபோது Daily Telegraph, Daily News, Pall Mall Gazette ஆகிய மூன்று நாளிதழ்களைத் தினமும் படிப்பார். தென்னாப்பிரிக்காவிலும் பல்வேறு செய்தித்தாள்களைப் படித்து, அவற்றில் இந்தியர்களின் நிலை குறித்தும் உரிமைகள் குறித்தும் தொடர்ந்து எழுதினார். எதிலெல்லாம் இந்தியர்களைப் பற்றித் தவறான செய்திகள் வந்துள்ளனவோ அவற்றுக்கெல்லாம் மறுப்புகள் எழுதினார். வழக்கு முடிந்தபின்னரும் தென்னாப்பிரிக்காவில் தங்க நேர்ந்ததே அவர் விடைபெறும் தினத்தன்று ஒரு செய்தியைப் படித்து, அது குறித்து நண்பர்களை எச்சரித்ததால்தான்.

1896ல் இந்தியா வந்தபோது தென்னாப்பிரிக்க இந்தியர்களின் நிலையை விளக்கும் ஒரு ‘பச்சை அறிக்கையை’ (Green Pamphlet) அச்சடித்தார். இந்தியாவில் இந்தியர்களுக்கு கிடைக்கும் உரிமைகளுக்கும் தென்னாப்பிரிக்காவில் கிடைக்கும் உரிமைகளுக்கும் இருந்த வேறுபாடுகளை வெளிப்படுத்தினார். பூனே, பம்பாய், சென்னை, கல்கத்தா ஆகிய நகரங்களில் அவர் உரையாற்றிய போது அந்த பச்சை அறிக்கையை எல்லாருக்கும் கொடுத்தார். பல செய்தி நிறுவனங்களுக்கும் வழங்கினார். அவரது உரைகளும் பதிப்பிக்கப்பட்டன. அவற்றின் ஆசிரியர்களைச் சந்தித்து உரையாடினார். கட்டுரைகள் எழுதினார். கடிதங்கள் எழுதினார். பம்பாயில் Times of India, Bombay Gazette, சென்னையில் The Hindu, Madras Standard, கல்கத்தாவில் The Statesman, The Englishman, Amrit Bazaar Patrika, Bangabasi, அலகாபாத்தில் The Pioneer ஆகிய இதழ்கள் அவரது எழுத்துகளைப் பதிப்பித்தன. மதராஸ் ஸ்டாண்டர்ட், இங்கிலிஷ்மேன் போன்ற இதழ்களில் ஆசிரியர்கள் காந்தி விரும்பியதைத் தமது இதழ்களில் எழுதலாம் என்று அவருக்கு முழுச் சுதந்திரம் வழங்கினர்.

தென்னாப்பிரிக்கா திரும்பியபோது இந்திய இதழ்களில் வெளிவந்திருந்த அவரது எழுத்துகள் தென்னாப்பிரிக்க இதழ்களில் திரித்து வெளியிடப்பட்டதால், அவர் வந்த கப்பல் துறைமுகத்திலேயே இருப்பத்திமூன்று நாட்கள் நிறுத்திவைக்கப்பட்டு, கரைக்கு வந்ததும்கடுமையாகத் தாக்கப்பட்டார். பின்னர், நட்டால் அட்வெர்டைஸர் இதழுக்கு அளித்த நேர்காணல் மூலமாகத் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினார். “இரண்டாண்டுகளுக்கு முன் நான் நட்டால் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு திறந்த மடல் எழுதினேன். அதிலிருந்த கருத்துகளைச் சொல்லுக்குச்சொல் எனது பச்சை அறிக்கையில் அப்படியே பிரதி எடுத்திருந்தேன். இந்தியர்கள் இங்கு நடத்தப்படும் விதம் பற்றி அதில் எழுதியிருந்தேன். இங்கு அக்கடிதம் பதிப்பிக்கப்பட்டபோது யாரும் காலனியவாதிகள் மீது கறுப்புச்சாயம் பூசுவதாகக் கூறவில்லையே? அதையே இந்தியாவில் வெளியிடும்போதுதான் இப்படிச் சொல்கிறார்கள். இது எப்படி காலனியர்களின் குணத்தின்மீது கருஞ்சாயம் பூசுவதாகும் என்று எனக்குப் புரியவில்லை. அப்போது எல்லா இதழ்களும் நான் நடுநிலையாகப் பேசியுள்ளேன் என்று கூறி, நான் சொன்ன எதையும் மறுக்கவில்லை,’ என்று மிகத் திறமையாக வாதம் செய்தார். “நான் இந்திய அரசாங்கத்தையோ, இந்தியப் பொதுமக்களையோ, பிரித்தானிய அரசையோ காலனியர்களின் மனச்சாய்வுகளுக்கு எதிராக அணுகவில்லை. இந்தியர்கள் தென்னாப்பிரிக்காவில் மிகவும் வெறுக்கப்பட்ட ஜந்துக்களாக இருக்கிறார்கள் என்றும் அங்கு அவர்கள் மோசமாக நடத்ததப்படுகிறார்கள் என்றும் கூறினேன். ஆனால், அரசாங்கத்திடம் இவற்றுக்கான தீர்வுகளை நாங்கள் கோரவில்லை. இந்தியர்கள் மீது சுமத்தப்படும் சட்டரீதியான சுமைகளுக்கே தீர்வுகள் கோருகிறோம். மனச்சாய்வுகள் காரணமாக இயற்றப்படும் சட்டங்களை எதிர்க்கிறோம்; அவற்றிலிருந்து விடுபடத் தீர்வுகள் கேட்கிறோம்,” என்றார். ஒரு தேர்ந்த அரசியல்வாதியும், வழக்குரைஞரும், பத்திரிக்கையாளரும் ஒன்றிணைந்து அறம் சார்ந்த பார்வையைச் சட்டத்தோடு பிணைத்து முன்வைப்பதை இங்கு காணலாம்.

காந்தியின் இன்னொரு பழக்கம் திறந்த மடல்கள் எழுதுவது. உதாரமணாக, நட்டால் காலனியச் செயலர், ‘கப்பலலிருந்து காந்தி கலவரமான சூழலில் கரையிறங்கியது தவறான அறிவுரையைக் கேட்டுத்தான் என்று ஒப்புக்கொண்டதாகக் கூறினார்,’ என்று நட்டால் மெர்குரி இதழ் செய்தி வெளியிட்டபோது, அக்கூற்றை மறுத்து விளக்கம் கேட்டு அவருக்குக் கடிதம் எழுதினார். அக்கடிதத்தையும் நட்டால் மெர்குரியில் வெளியிட்டார். “எனக்கு வழங்கப்பட்ட அறிவுரை சிறப்பானதுதான் என்றே கருதினேன்; இப்போதும் கருதுகிறேன். எந்த அடிப்படையில் தாங்கள் அவ்வாறு சொல்கிறீர்கள் என்பதைத் தெரிவித்தால் மகிழ்ச்சியடைவேன்,” என்று அக்கடிதத்தில் எழுதினார்.

தென்னாப்பிரிக்க இந்தியர்களின் பிரச்சனைகளைப் பேசியதோடு அல்லாமல், இந்தியாவில் பஞ்சம் நேர்ந்தபோது, இந்திய மக்களுக்காக நிதி திரட்டவும் நட்டால் அட்வெர்டைசர் இதழில் கோரிக்கை வைத்தார். கல்கத்தா பஞ்ச நிவாரண கமிட்டி நிதி கேட்டு கோரிக்கை அனுப்பியதைத் தொடர்ந்து, பஞ்சத்தின் தீவிரம் குறித்துக் கட்டுரை எழுதினார். முதல் முறையாக இந்தியாவுக்காக பிரித்தானிய காலனிகளில் நிதி கேட்டுக் கோரிக்கை வந்திருப்பதாகக் கருதுவதாகவும் குறிப்பிட்டார்.

தாதாபாய் நௌரோஜி லண்டனில் ‘இந்தியா’ இதழை நடத்திவந்தார். காந்தி அவ்விதழுக்குத் தென்னாப்பிரிக்க நிருபராகச் செயல்பட்டிருக்கிறார். 1896ல், அரசாங்கத்துக்கு இந்திய மக்களை வேறு இடங்களுக்குப் பெயர்க்கும் உரிமை இருப்பதாக நீதிமன்றம் தீர்ப்பளித்ததைக் கண்டித்து எழுதினார்.

டைம்ஸ் ஆப் இந்தியா இதழுக்கும் எழுதிவந்தார். ஆங்கிலேய-போயர் போரில் மருத்துவப்பணி செய்யச் சென்றபோது நேர்ந்த அனுபவங்களை எழுதி அனுப்பினார். ‘இந்தியப் படுக்கைத்தூக்கிளுக்கு வாரத்துக்கு 20 சில்லிங்களும், பிரத்தானியப் படுக்கைத்தூக்கிகளுக்கு 35 சில்லிங்களும்’ தரப்பட்டதாகக் கூறுகிறார். புகார் கூறுகின்ற தொனி இல்லாதபோதும், போர்க்களத்தில்கூட இருந்த ஏற்ற தாழ்வை, போகிற போக்கில் மெலிதாகக் கோடிட்டுச் செல்கிறார். “கூடாரங்கள் அமைக்கப்படும் முன்னர் (படைவீரர்களுக்கு மட்டுமே கூடாரங்கள், படுக்கைத்தூக்கிகள் வெட்டவெளியில், பல சமயங்களில் போர்வைகூட இல்லாமல், உறங்கவேண்டும்), மருத்துவ அதிகாரி அடிபட்டவர்கள் 50 பேரை சீவெலி ரயில்நிலையம் தூக்கிச்செல்லவேண்டும் என்றார்,” என்று இன்னொரு இடத்தில் கூறுகிறார். இந்திய மக்கள் வெளியிலிருந்தும் இப்போருக்கு அளித்த ஆதரவைப் பற்றியும் பெருமையாக எழுதுகிறார். “பழங்கள் விற்றுத் தன் தினசரி வாழ்வைக் கடத்திய ஓர் இந்தியப் பெண், படைவீரர்கள் டர்பன் வந்தபோது தனது கூடையில் இருந்த அத்தனை பழங்களையும் டாமியின் வண்டியில் கொட்டிக் காலி செய்து, அன்றைய தினத்துக்கு அவ்வளவுதான் தரமுடியும் என்று சொன்னதாகக் கேள்விப்பட்டோம். அந்த கருணைமிக்க பெண் அன்றைய தினத்துக்கான உணவை எங்கிருந்து பெற்றாள் என்பதை யாரும் சொல்லவில்லை,” என்றும் பதிவு செய்கிறார். இதே போரின்போது தென்னாப்பிரிகாவிலிருந்து இன்னொரு வருங்காலத் தலைவரும் செய்திகள் அனுப்பிக்கொண்டிருந்தார். அவர் வின்ஸ்டன் சர்ச்சில்.

ஜூன் 4, 1903 முதல் இந்தியன் ஒப்பீனியன் இதழ் தொடங்கப்பட்டது. முதல் இதழே ஆங்கிலம், இந்தி, தமிழ், குஜராத்தி ஆகிய மொழிகளில் வெளிவந்தது. காந்தியின் முதல் தலையங்கம் பெயரிடப்படாமல் வெளிவந்தது. அதன் முதல் பத்தி தமிழில் இவ்வாறு மொழிபெயர்க்கப்பட்டிருந்தது:
“நம் ஆவசியகம்
இந்தியர்களுக்கு ஒரு பத்திரிக்கை இருக்க வேண்டியது மகா ஆவசியகம். ஆதலின், இந்தியன் ஒப்பீனியன் வெளிவர நியாங் கூறவேண்டியதில்லை. இத்தென்னாப்பிரிக்கா ராஜதந்திரங்களில் இந்திய ஜனசமூகமும் அங்கீகரிக்கப்பட்ட ஓர் அங்கமாகும். அதன் கருத்தை வெளியிடவும், விசேஷமாய் அதற்காக வேண்டியவிஷயங்களையே எடுத்துப் பேசவும் தக்கதோர் பத்திரிக்கை இங்கில்லை ஆதலின் ‘இந்தியன் ஒப்பீனியன்’ எல்லாம்வல்ல கடவுள் அருளால் நடைபெற்று, அக்குறைதீர்க்கும் என்றே முற்றும் நம்புகிறோம்.
இத்தென்னாப்பிரிக்காவிலுள்ள இந்தியர்களெல்லாம் இராஜபக்தி நிறைந்தவர்களும், இராஜசக்ரவர்த்தியின் பிரஜைகளுமாக இருந்தாலும், தகாத அநீதியான பல சட்டங்கள் நம்மவர்களை வருத்துகின்றன. அவைகளைப்பற்றி பலர் போராடியும் வருகிறார்கள். இன்னும் ஒழிந்தபாடில்லை. இவற்றிற்குக் காரணம்:-
(1) இந்தியர்களும் தாங்களும் சமத்துவமான பிரிட்டிஷ் பிரஜைகளென்ற உண்மையை எண்ணிப்பாராத குடியேற்றநாட்டவரின் தப்பெண்ணம்.
[…]
சரியான விஷயங்களைச் செய்யவேண்டும் என்கிற நம் அவா காலக்கிரமத்தில்தான் பூர்த்தியாகும். ஆயினும் நாம் உதவியின்றி அதிகம் செய்ய முடியாதாகையால் நம் தேசத்தாருடைய … உதவியை நம்பியிருக்கிறோம். மாட்சிமை பொருந்திய ஏழாம் எட்வர்ட் மகாராஜாவை ‘இராஜசக்ரவர்த்தி’யென மங்களம்பாடுகிற பெரிய ஆங்கிலேய சாக்சன் ஜாதியாரிடத்தும் நாம் இவ்வுதவிக்கெதிர்பார்க்கலாமா? பலாஷ்டிகமான ஏகாதிபத்தியத்தைச் சார்ந்த பலவேறு பிரிவினர்க்குள்ளும் ஒற்றுமையும், நன்மதிப்பும் விருத்தியாகவேண்டுமென்ற ஒரே நோக்கம் தவிர வேறொன்றும் நம் உத்தேசத்திலில்லை என்போம்.”

இதற்குப் பிறகு இந்தியன் ஒப்பீனியன் ஓர் இயக்கத்தை உருவாக்கவும், வழிநடத்தவும் காந்தி பயன்படுத்திய வாகனமாயிற்று. அதுவே ஓர் இயக்கமாயிற்று என்றும் கூறலாம். “இந்தியன் ஒப்பீனியனின் குறிக்கோள் எட்வர்ட் மன்னரின் இந்தியப் பிரஜைகளையும் ஐரோப்பியப் பிரஜைகளையும் நெருங்கச்செய்வதும், பொதுமக்களின் கருத்தை வளர்த்தெடுப்பதும், தவறான புரிதல்களை நீக்குவதும், இந்தியர்களுக்கு அவர்களது குறைகளைச் சுட்டிக்காட்டுவதும், உரிமைகளை பெறப் போராடும்போது கடமைகளின் வழியைக் காண்பிப்பதும் ஆகும்.” நகரத்தில் அச்சாகிக்கொண்டிருந்த இதழை ஃபினிக்ஸ் பண்ணைக்கு மாற்றினார். பல சிரமங்களுக்கிடையில் அச்சிட்டு வெளியிட்டார். மதன்ஜித், மன்சுக்லால் ஹிராலால் நாசர், ஆல்பர்ட் வெஸ்ட், ஹெர்பெர்ட் கிட்சின், ஹென்றி போலக், மகன்லால் போன்ற பலரும், ஃபினிக்ஸ் பண்ணைக்கு குடிபெயர்ந்த பிறரும் இந்த இதழை வெளிக்கொணர்வதில் பங்காற்றினர். காந்தி தனது வருமானத்தில் பெரும்பகுதியை இவ்விதழ் நடத்துவதற்குப் பயன்படுத்தினார். 1906 பிப்ரவரியில் இந்தியன் ஒப்பீனியனின் தமிழ், இந்தி ஆகிய இரண்டு பதிப்புகளும் நடத்த இயலாமல் நிறுத்தப்பட்டன. ஆங்கிலத்திலும் குஜராத்தியிலும் தொடந்து வெளிவந்தன.

காந்தி சத்தியாகிரகம் பற்றிய கருத்துகளை இதில்தான் எழுதி வளர்த்தெடுத்தார். சத்தியாகிரகம் என்ற பெயரையே பத்திரிக்கையில் அறிவித்த போட்டியின் மூலமாகத்தான் தேர்ந்தெடுத்தார். தன் ஆசிரமங்களில் செய்த சோதனைகள் குறித்து எழுதினார். இந்தியர்கள் சந்தித்த பல்வேறு பிரச்சனைகளைக் குறித்து எழுதினார். டால்ஸ்டாய், ரஸ்கின், தோரோ போன்ற உலகச் சிந்தனையாளர்களை அறிமுகப்படுத்தினார். வாசிங்க்டன், லிங்கன், நைட்டிங்கேல், மாஜினி போன்ற தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளை எழுதினார். வாசகர் கேள்விகளுக்குப் பதில் எழுதினார்.

காந்தியின் முக்கியமான புத்தகங்கள் எல்லாம் அவரது பத்திரிக்கைகளில் தொடர்களாக வெளிவந்தனவே. ஜான் ரஸ்கினின் Unto the Last நூலை சர்வோதயா என்ற பெயரில் குஜராத்தியில் மறு ஆக்கம் செய்தார். பின்னர் இந்திய சுயராச்சியம் நூலும் இந்தியன் ஒப்பீனியனில் வெளிவந்தது.

இந்தியா திரும்பிய பின்னர் வெவ்வேறு காலக்கட்டங்களில் அவர் நவஜீவன் (இந்தி), யங் இந்தியா (ஆங்கிலம்), ஹரிஜன் (ஆங்கிலம்), ஹரிஜன் சேவக் (ஹிந்தி), ஹரிஜன் பந்து (குஜராத்தி) ஆகிய இதழ்களை நடத்தினார். நவஜீவனும் யங் இந்தியாவும் 1919ல் தொடங்கப்பட்டு 1931-32ல் வட்டமேசை மாநாட்டுக்குப்பின் காந்தி சிறைக்குச் சென்றபோது நிறுத்தப்பட்டன. பிறகு 1933ம் ஆண்டு ஹரிஜன் இதழ் மூன்று மொழிகளில் தொடங்கப்பட்டது. 1946ல், ஹரிஜன் இதழைத் தமிழில் தொடங்கி நடத்த சின்ன அண்ணாமலைக்கு அனுமதியளித்தார்.

இவை அனைத்துமே மக்களோடு தொடர்ந்து உரையாடுவதற்கான ஊடகமாக காந்திக்கு அமைந்தன. பல மொழிகளில் தனது எழுத்துகளைக் கொண்டுவந்து மக்களைச் சென்றடைய வேண்டும் என்று கருதினார். ஹரிஜன் சேவக் இதழை தேவநாகிரி, உருது ஆகிய இரண்டு எழுத்துருக்களில் கொண்டுவந்தார்.

குஜராத்திகளுக்கு அடுத்தபடியாக காந்திக்கு மிக நெருக்கமான உறவு அமைந்தது தமிழர்களோடுதான். தென்னாப்பிரிக்கப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு கணிசமானது. காந்தி தமிழ் குறித்தும், தமிழர்கள் குறித்தும் பல கட்டுரைகளையும் குறிப்புகளையும் எழுதியுள்ளார். 1905ம் ஆண்டு, இலங்கையிலிருந்த வந்த ஒரு வேண்டுகோளுக்கிணங்கி, லண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஒரு விருப்பப் பாடமாக வைக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை காந்தி வழிமொழிந்தார். “தமிழ் ஒரு மகத்தான திராவிட மொழி; பரந்ததோர் இலக்கியத்தைக் கொண்டுள்ளது. அது இந்தியாவின் இத்தாலிய மொழியாகக் கருதப்படுகிறது. லண்டன் பல்கலைக்கழகத்தில் விருப்பப்பாடமாக வைப்பதற்கு எல்லா வகையிலும் தகுதியான மொழி” என்று எழுதினார்.

காந்தி தமிழ் கற்றுக்கொள்வதற்காக ஜி.யு.போப் எழுதிய கையேட்டினைப் பயன்படுத்தினார் (First Lessons in Tamil: A Handbook of the Ordinary Dialect of the Tamil Language). ஜி.யு.போப் மார்ச், 1908ல் மறைந்தபோது, “சென்னை மக்கள் மதிப்பும் மரியாதையும் செலுத்தவேண்டியர்களில் டாக்டர்.போப்பைவிடத் தகுதியான ஆங்கிலேயர்கள் எவரும் இல்லை. அவரது உதாரணம் சென்னை மக்களை ஆராய்ச்சிப் பாதையில் வழிநடத்தி, அண்மைக்காலத்தில் புதைந்துபோன அவர்களது பெரும் வரலாற்றைக் குறித்து உலகம் அறியவும், இலக்கியம், மொழியியல், மெய்யியல், இறையியல் ஆகியவற்றின் பொக்கிசங்கள் வெளிச்சத்திற்கு கொணரவும், மக்கள் தங்கள் எதிர்கால வளர்ச்சிப்பாதையைப் பற்றிய ஓர் அறிகுறியைப் பெறவும் மிளிரும் ஒளியாக உள்ளது,” என்று எழுதி அஞ்சலி செலுத்தினார்.

1935ல், ஹரிஜன் இதழில் திருக்குறள் பற்றித் ‘தமிழ் மறை’ என்ற தலைப்பில் ஒரு சிறு கட்டுரையை காந்தி எழுதியுள்ளார்.

“திருவள்ளுவர் ஒரு தமிழ்த் துறவி. அவரை ஒரு ஹரிஜன நெசவாளர் என்கின்றன தொன்மங்கள். கி.பி. முதலாம் நூற்றாண்டில் அவர் வாழ்ந்ததாகக் கூறுகிறார்கள். புகழ்மிக்க திருக்குறளை அவர் அளித்துள்ளார் – திருக்குறள் புனித முதுமொழிகளைக் கொண்டது; தமிழர்களால் தமிழ்மறை என்று அறியப்படுகிறது; எம்.ஏரியலால், ‘மனிதச் சிந்தனையின் வெளிப்பாட்டில் மிக உயர்ந்த, தூய்மையானவற்றில் ஒன்று,’ என்று போற்றப்பட்டது. இதில் 1330 முதுமொழிகள் உள்ளன. பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பல ஆங்கில மொழிபெயர்ப்புகள் உள்ளன. ஹரிஜன மற்றும் பிற சேவைகளுக்காகச் சர்மாதேவி (சேரன்மாதேவி) ஆசிரமத்தை நிறுவிய, அமரர் வ.வே.சு.ஐயர் அண்மையில் ஒரு மொழிபெயர்ப்பைச் செய்திருந்தார். சர்மாதேவி ஆசிரமத்தையும், இந்த மொழிபெயர்ப்பையும் நாட்டுக்கு அர்ப்பணித்துவிட்டு மறைந்துவிட்டார். சர்மாதேவி இப்போது ஹிரிஜன் சேவா சமிதியின் வசம் உள்ளது. இந்த மொழிபெயர்ப்பின் இரண்டாம் பதிப்பில் 1000 பிரதிகள் மீதமுள்ளன. இந்த நூலின் விலை ரூ.5 ஆக இருந்தது. இப்போது ரூ.2/8 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்பாளர் எழுதியுள்ள ஒரு விரிவான முன்னுரையை இந்நூல் கொண்டுள்ளது. இதிலிருந்து வரும் வருமானம் ஹரிஜன சேவைக்காகப் பயன்படுத்தப்படும். வாசகர்களின் ஆர்வத்தைத் தூண்ட, இரண்டு குறள்களை நேர்ந்தவாக்கில் தேர்ந்தெடுத்து இங்கு தருகிறேன்.

தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை. [327]

இதனை ஆலிவர் கோல்ட்ஸ்மித் எழுதிய வரிகளோடு ஒப்புநோக்குவோம்:

‘சுதந்திரமாய் இப்பள்ளத்தாக்கில் உலவும் எந்த மந்தைக்கும்
மரணத்தை நான் விதிப்பதில்லை;
என்னைக்கண்டு இரங்கும் பேராற்றலால் கற்பிக்கப்பட்ட நான்,
அவற்றைக் கண்டிரங்கவும் கற்றுக்கொண்டேன்.’

அடுத்த தேர்வு:
உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு. [339]

இதனை வேர்ட்ஸ்வொர்த்தின் வரிகளோடு ஒப்புநோக்கலாம்:
‘மரணம் என்பது உறக்கமும் மறதியும் அன்றி வேறில்லை.’ “

காந்தி பாரதியைப் பற்றியும் ஒரு குறிப்பு எழுதியுள்ளார். 1928ல் மதராஸ் மாகாணத்தில் பாரதியின் சுதேசிய கீதங்கள் தடைசெய்யப்பட்டபோது இதை எழுதியுள்ளார். பர்மா அரசு இதைத் தடைசெய்ததைத் தொடர்ந்து தமிழக அரசும் தடைசெய்திருக்கிறது. இதனால், அமைச்சர்களையும் அதிகாரிகளையும் காந்தி கடுமையாகச் சாடியிருக்கிறார்.

தறிகெட்டோடும் நீதி (யங் இந்தியா, 13-12-1928)

இந்த இதழின் பிறிதோர் இடத்தில் மறைந்த தமிழ்க் கவிஞர் பாரதியின் தமிழ்ப்பாடல்கள் சிலவற்றின் மொழிபெயர்ப்பை முதல் தவணையாகத் தந்துள்ளேன். அண்மையில், மதராஸ் அரசாங்கம் பர்மா அரசாங்கத்தின் அறிவுறுத்தலின்படி – இல்லை, ஆணைகளின்படி என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும், பாரதியின் பாடல்களைப் பறிமுதல் செய்தன. பர்மா அரசாங்கம், தனது முறையின்போது, இதை எந்த நீதிமன்ற ஆணையின்படியும் செய்யவில்லை; நிர்வாக அறிவிப்பின்மூலம் செய்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலம், கடந்த 30 ஆண்டுகளாகப் பரவலாகப் படிக்கப்பட்டுள்ள இப்புகழ்பெற்ற தமிழ்க்கவியின் நூல்களை இந்தியாவின் எந்த மூலையிலிருந்தும் பறிமுதல் செய்யலாம்; சென்னை உயர் நீதிமன்றத்தின் முன் வைக்கப்பட்டுள்ள ஆவணச்சான்றுகளின் படி, மதராஸ் கல்வித்துறை இந்த நூல்களைப் பள்ளிப் பாடத்திட்டத்தில் சேர்க்கப் பரிசீலித்துவந்ததாகத் தெரிகிறது. மாகாண அரசாங்கங்களுக்கு இத்தகைய பரந்த நிர்வாக அதிகாரம் இருப்பது எனக்குத் தெரியவில்லை என்பதை நான் ஒப்புக்கொள்ளவேண்டும். இத்தகைய காலத்தில்தான் நாம் வாழ்கிறோம்; பயில்கிறோம். இது கல்வித்துறை அமைச்சரின் அதிகாரத்துக்குட்ட செயல் என்பதில் எந்த ஐயமுமில்லை. ஆனால் நாளுக்கு நாள் ஒன்று தெளிவாகிறது – இந்த அமைச்சக அலுவலகங்களும் சட்டமன்றங்களைப் போலவே வெறும் கேலிக்கூத்துதாம்; அமைச்சர்கள் என்போர் இந்திய குடிமைப்பணி (ICS) அதிகாரிகளின் விருப்பத்தைப் பதிவு செய்யும் குமாஸ்தாக்கள்தாம். எனவே பரிதாபத்துக்குரிய கல்வித்துறை அமைச்சரால் இப்பிரபலமான புத்தகங்களைப் பறிமுதல் செய்வதைத் தடுக்க எதுவும் செய்யமுடியவில்லை. அவை பறிமுதல் செய்யப்ப்பட்டபோது, அவருக்கு அதுகுறித்த தகவல்கூடத் தெரிந்திராமல் இருந்திருக்கலாம். தெரிந்திருந்தாலும் எதில் கையோப்பமிடுகிறார் என்பதைக் குறித்து அவருக்குச் சொல்லப்பட்டிருக்கமாட்டாது. ஆனால் சில நாட்களில் இப்பறிமுதல் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது. பாரதியின் மனைவியின் சார்பாக பாரதியின் நூல்களைப் பதிப்பித்தவரும், இந்தி பிராச்சாரக் கேந்திராலயத்தைச் சேர்ந்தவருமான பண்டிட் ஹரிஹர சர்மா, இப்பறிமுதலைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமுடியவில்லை. எனவே இதைப் பொது விவாதத்துக்கு உட்படுத்தினார். பிறகு இயல்பாகவே சட்டமன்றத்திலும் இது விவாதிக்கப்பட்டு, இப்பறிமுதல் கண்டிக்கப்பட்டது. பண்டிட் ஹரிஹர சர்மா உயர்நீதி மன்றத்திலும் இந்த சட்டத்துக்குப்புறம்பான பறிமுதலைத் திரும்பப் பெறுமாறு வழக்குத் தொடர்ந்தார். பிறகு இப்பறிமுதல் ஆணை திரும்பப்பெறப்படும் என்றும், புத்தகங்கள் திரும்பக் கொடுக்கப்படும் என்றும், மதராஸ் அரசாங்கம் பாரதியின் மனைவிக்கு இழப்பீடு வழங்கும் என்றும் ஏற்பட்ட ஓர் உடன்பாட்டால், இவ்வழக்கு கைவிடப்பட்டுள்ளது. ஆனாலும் தவறு தவறுதான். பண்டிட் ஹரிஹர சர்மாவின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படும் என்றும், புத்தகங்களை திரும்பத்தருவதன்மூலம் தவறு நிவர்த்திக்கப்படும் என்றும் நம்புவோமாக. மதராஸ் அரசாங்கம் என்னதான் இழப்பீடு கொடுத்தாலும், தவறிழைக்கப்பட்ட உணர்வு நீடிக்கும்; பர்மா அரசாங்கத்தின் ஆணைக்கு அடிமைத்தனமாகக் கீழ்ப்படிந்த மதராஸ் அரசங்கத்தின் செயலால் பொதுமக்கள் மனதில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பின்மையும் நீடிக்கும்.

இத்தடையைக் கண்டித்து, யங் இந்தியா இதழில், காந்தி இதில் குறிப்பிட்டபடி ராஜாஜியின் மொழிபெயர்ப்பில் பாரதியின் சில கவிதைகளை வெளியிட்டார். ராஜாஜி எழுதிய ஒரு அறிமுகக் கட்டுரையையும் வெளியிட்டிருக்கிறார். நான்கு இதழ்களில் 17 கவிதைகள் வெளிவந்தன.

காந்தி இக்குறிப்பில் பாரதியின் நண்பரும் பதிப்பாளருமான ஹரிஹர சர்மாவின் முயற்சிகள் பற்றியும் பேசுகிறார். ஹரிஹர சர்மா வாஞ்சிநாதன் போன்றவர்களோடு ஆயுதம் தாங்கிய புரட்சிகர இயக்கங்களில் இருந்துவிட்டு வெளியேறி காந்தியத் தொண்டராகி, அவரது கோச்ரப் ஆசிரம் தொடங்கப்பட்ட காலத்திலேயே அங்கே குடும்பத்தோடு தங்கியிருந்தார்.

காந்தியை மிகவும் பாதித்த இரண்டு தமிழர்கள் வள்ளியம்மையும் நாகப்பனும் என்று சொல்லலாம். அவர்கள் இருவரும் தென்னாப்பிரிக்க சத்தியாகிரகத்தில் சிறைக்குச் சென்று மரணத்தைத் தழுவியவர்கள். இவர்களைப் பற்றி காந்தி தொடர்ந்து பேசியும் எழுதியும் வந்தார்.

இந்தியாவின் புனித மகள் ஒருத்தியை இழந்து விட்டதற்காக வருந்துகிறோம். ஏன், எதற்கு என்று கேட்காமல் தனது கடமையை உணர்ந்து ஆற்றிய காரிகை அவள். மாதர்களுக்கு அணிகலங்களான துன்பத்தைச் சகிக்கும் மனோபாவம், தன்மானம், நல்லொழுக்கம் ஆகியவற்றுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தவள். அவளுடைய உதாரணம் இந்திய சமுதாயத்தில் வீணாய்ப் போகாது என நம்புகிறேன்.

  • இந்தியன் ஒப்பினியன், தமிழ்நாட்டில் காந்தி, ப38.

‘நாகப்பா, தாய் நாட்டுக்காக உன் உயிரை நீ ஈந்தபோது நீயும் ஓர் இளைஞன் தானே? உன் குடும்பத்திற்கு அருளப்பெற்ற ஓர் ஆசீர்வாதமாகவே உன் தியாகத்தை நான் கருதுகிறேன். நீ இறந்துவிட்டாய் என்றாலும் சிரஞ்சீவியே. ஆகவே என் மகன் சிறை சென்றதற்காக நான் ஏன் திடங்குலைய வேண்டும்’
என்று நாகப்பனைத் தன் மகனுக்கு ஈடாக வைத்து எழுதுகிறார்.

காந்தியின் எழுத்து சில சமயங்களில் பெரிய சிக்கல்களையும் உருவாக்கியுள்ளது. உதாரணமாக, 1946ல் காந்தி தமிழ்நாடு வந்திருந்தபோது ராஜாஜிக்கு எதிராக ஒரு சிறுகும்பல் (clique) செயல்படுவதாகவும் மக்கள் ராஜாஜியோடு இருப்பதாகவும் கூறினார். அது காமராஜரை நோக்கிக் கூறப்பட்டதாகக் கருதி, அவர் தமிழ்நாடு பாராளுமன்றக் குழுவிலிருந்து பதவி விலகுவதாக அறிவித்தார். காந்தி தான் சிறுகும்பல் என்பதை வசைச்சொல்லாகப் பயன்படுத்தவில்லை என்று விளக்கமளித்து எழுதினார். ஆங்கிலச் சொல்லைப் பயன்படுத்தியதாலேயே இந்தக் குழப்பம் என்றார். ‘ராஜாஜி விவகாரத்திலோ ராஜாஜி பற்றிய எனது கருத்திலோ தவறிருப்பதாகக் கருதினால் யாரும் என்னைப் பின்தொடர வேண்டாம். எனக்கு எந்த அதிகாரமும் இல்லை,’ என்றார். அவரது அச்சொற்பயன்பாட்டுக்கு எதிராக உண்ணாவிரதம் இருப்பதாகச்சிலர் அறிவித்தபோதும், அச்சொல்லைப் பின்வாங்க மறுத்துவிட்டார். ‘உண்ணாவிரத்தத்தை ஓர் ஆயுதமாக்கியவன் என்கிற முறையில் இப்படியான காரணங்களுக்காக உண்ணாநோன்பைப் பயன்படுத்துவதை நான் கண்டிக்கிறேன். உலகமே எதிர்த்து நின்றாலும் ஒருவர் தன் நேர்மையான கருத்தை மாற்றிக்கொள்ளக்கூடாது. எனவே இந்த உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு அறிவுறுத்துகிறேன்,’ என்றார்.

இப்படியாக காந்தி தன் பத்திரிக்கைகளில எண்ணற்ற மனிதர்களைப் பற்றியும் நிகழ்ச்சிகளைப் பற்றியும் எழுதியிருக்கிறார். அவருடைய எழுத்திலும் சொல்லிலும் எப்போதும் அவருணர்ந்த உண்மை மிளிர்ந்துகொண்டே இருக்கும். உண்மைக்கான தேடலுக்கு அவரது இதழ்கள் அவருக்குப் பெரிதும் துணைசெய்தன. காந்தி அளவுக்கு வாழ்வின் அத்தனை புள்ளிகளையும் தொட்டும் இணைத்தும் எழுதிய தலைவர்களையோ சிந்தனையாளர்களையோ காண்பதரிது. அரசியலும் ஆன்மீகமும், மருத்துவமும் கல்வியும், பொருளாதாரமும் வணிகமும், உழவும் தொழிலும், பெண்களும் குழந்தைகளும், போரும் அகிம்சையும், அறமும் அறமீறல்களும், சாதியும் தீண்டாமையும் அவரது எழுத்துகளில் இடம்பெற்றன. உலகச் செய்திகளும் உள்ளூர் செய்திகளும் அலசப்பெற்றன. அவருடைய எழுத்துகள் மக்களோடு நடந்த ஒரு நீண்ட உரையாடலாகவே அமைந்தன.


எழுத்தில் விரியும் வியனுலகம் – தல்ஸ்தோயும் காந்தியும் – The Kingdom of God is Within You நூலை முன்வைத்து

ஜூன் 27, 2021

(தமிழினி மின்னிதழிலும் சர்வோதயம் மலர்கிறது இதழிலும் வெளிவந்த கட்டுரை)

(1)

என்னை மிகவும் கவர்ந்த, என்மீது தாக்கம் செலுத்திய ரஷ்ய ஆக்கங்கள் பலவுள்ளன. ஆனால் என்னைக் கலைத்துப்போட்டவை இரண்டு. முதலாவது, தஸ்தாயெவ்ஸ்கியின் நாவலான நிலவறைக் குறிப்புகள் (Notes from the Underground). அது வெறுமையான வாழ்க்கைச் சுழலில் சிக்கியிருந்த ஒரு சாதாரண அலுவலனின் கீழ்மைகளையும் கசப்புகளையும் குவித்து இருத்தலியற் பின்புலத்தில் முன்வைத்த நாவல். நானும் முன்பு ஒரு நிறுவனத்தில் பணிசெய்துகொண்டு அப்படியான ஒரு நச்சுச்சுழலில் இருந்தபோது அதன் முதல்பகுதியின் பாதியைக்கூடக் கடக்க முடியாதவாறு என்னைச் சுட்டெரித்தது. அச்சுழலில் இருந்து விடுபட்டு வாழ்க்கைக்குப் புதிய பொருள் பிறந்த பிறகே அதனை மீண்டும் எடுத்து முடிக்க முடிந்தது.

இரண்டாவது நூல் லேவ் தல்ஸ்தோயின் ‘உம்மிடையே உள்ளது இறையாட்சி’ (The Kingdom of God is Within You). இந்நூலையும் படிக்கத் தொடங்கிப் பத்தாண்டுகள் இடைவெளிக்குப் பின்னரே முடித்தேன். அதன் ஆழ்ந்த கருத்துகளை முழுவதும் உள்வாங்கிக்கொள்ள இப்பத்தாண்டுகளின் வாழ்வனுபவங்களும் வாசிப்பும் தேவைப்பட்டிருக்கின்றன. எங்கும் கசியும் இருண்மையை எளிதாகக் கடந்து மானுட மேன்மையை நோக்கி ஒளிகாட்டிச் செல்கிறது இந்நூல். இதுவரை இதன் மொழிபெயர்ப்பு தமிழில் வந்ததாகத் தெரியவில்லை.

தல்ஸ்தோய் இதற்கு ஒன்பதாண்டுகள் முன்னர் எழுதிய ‘நான் நம்புவதென்ன’ (What I Believe) என்ற நூலுக்கு வந்த எதிர்வினைகளுக்குப் பதிலளித்து அங்கிருந்து விரிந்துசெல்லும் விதமாக அமைந்துள்ளது இந்நூல். இவற்றில் அரசமைப்புகளுக்கும், நிறுவனமாக்கப்பட்ட மதத்துக்கும் எதிரான பார்வையைத் தல்ஸ்தோய் பதிகிறார். கிறித்தவத் திருச்சபை வழிவந்த கிறித்தவத்தை முழுமுற்றாக மறுத்தெழுதுகிறார். விவிலியத்தின் புதிய ஏற்பாட்டின் உள்முரண்களையும் மிகைத் தொன்மங்களையும் களைந்து, அதன் மெய்ப்பொருளை மட்டும் கடைந்தெடுத்து, அதையே இயேசு கிறிஸ்துவின் உண்மை மறைநூலாக அளிக்கிறார். மதவாதிகளின் சொற்களிலும் சடங்குகளிலும் பொய்மைகளிலும் மாசுபடிந்துகிடந்த இயேசு கிறிஸ்துவின் சொற்களை மீட்டெடுத்து, அன்பே கடவுள் என்பதை நிறுவ முயல்கிறார். மலைப்பொழிவையே (Sermon on the Mount) இயேசுவின் போதனைகளின் உச்சமாகவும் சாரமாகவும் தல்ஸ்தோய் காண்கிறார். இயேசுவின் சுருக்கமான கருத்துகளை விரித்தெடுக்கிறார். தெளிவற்றவற்றிற்கு தெளிவுகூட்டுகிறார். அன்பும் அகிம்சையும் சமத்துவமுமே இயேசுவின் கிறித்தவத்துக்கு அடித்தளமானவை என்பதை அடையாளம் காண்கிறார். அதனோடு இயைந்திடாது வரும் அத்தனை கருத்துகளையும் கதைகளையும் முற்றாக நிராகரிக்கிறார். பழைய ஏற்பாட்டின் கணிசமான பகுதிகளை அவர் ஒதுக்குகிறார்.

தல்ஸ்தோயின் வாழ்வு தெளிவான இரண்டு அங்கங்களாகப் பிரிந்தமைந்தது. அன்னா கரீனினா, போரும் அமைதியும் போன்ற பெரும் புதினங்களை எழுதி உலகின் முன்னணி எழுத்தாளர்களின் நிரையில் முந்திநின்ற தல்ஸ்தோய், 1880களில் தனது பழைய படைப்புகளைப் புறந்தள்ளி, புனைவெழுத்தாளர் என்கிற அடையாளத்தையேகூடப் பெருமளவு உதறி, தான் பெற்ற, ஈட்டிய செல்வத்தைத் துறக்க முனைந்து – அதில் முற்றாக வெற்றி பெறமுடியாதபோதிலும், தன்னை ஒரு சமூகச் சிந்தனையாளராக, மெய்யியல் அறிஞராக, இறையியல் ஞானியாக, களப்பணியாளராக, உணவீட்ட உழைப்பவராக, கிறித்தவ மதச் சீர்திருத்துனராக, அரசின்மைவாதியாக, பேராசானாக மாற்றியமைத்துக்கொண்டார். அது அவரது குடும்பத்தில் கடும் குழப்பங்களையும் பூசல்களையும் விளைவித்து அவரது இல்வாழ்வு துயர்மிகுந்ததாக மாறியது. எனினும் தனிவாழ்விலும் பொதுவாழ்விலும் தொடர்ந்து பல சோதனைகளைச் செய்து வந்தார். அவர் அடைந்த புதிய அறிதல்களின் ஒளியில் பல முக்கியமான புனைவுகளையும் அல்புனைவுகளையும் இயற்றினார்.

இந்த இரண்டாவது காலகட்டத்தில்தான், ’நான் நம்புவதென்ன’ (What I believe), ’இனி நாம் செய்யவேண்டியதுதான் என்ன’ (What then must we do), பாவ அறிக்கை/சங்கீர்த்தனம் (Confession), சுவிசேஷங்களின் சுருக்கம் (The Gospel in Brief), கலையென்பது என்ன (What is Art?) போன்ற கட்டுரை நூல்களையும், இவான் இலிச்சின் மரணம் (The Death of Ivan Illych), ஹாஜி முரத் (Hadji Murad), புத்தியுர்ப்பு (Resurrection) போன்ற முக்கியமான புனைவுகளையும் பல சிறுகதைகளையும் எழுதினார்.

தல்ஸ்தோயின் முதல் கட்டத்து நாவல்களிலேயே கூட அவரது அரசியல், தத்துவ, வரலாற்றுப் பார்வைகள் மிகுந்து வரவே செய்தன. விமர்சகரின் நிலைப்பாட்டினைப் பொருத்து அது நிறையாகவோ குறையாகவோ சுட்டிக்காட்டப்பட்டது. போரும் அமைதியும் நாவல் முதல்தரமானது என்று விதந்தோதிய போதும், பிரெஞ்சு நாவலாசிரியரான குஸ்தேவ் ஃப்ளாபெர்ட், மூன்றாம் பாகத்தில் ‘அவர் மிகுதியாகத் தத்துவம் பேசுகிறார்; கூறியது கூறுகிறார்,’ என்றார். ஃப்ளாபெர்ட்டுக்கு அந்நாவலை அறிமுகப்படுத்திய இவான் துர்கனேவ், அவரது பிற படைப்புகளை நிராகரித்தார்; தனது மரணப்படுக்கையிலிருந்து, ‘இறைத்தூதர் என்ற பொறுப்பைத் துறந்து, ரஷ்ய நிலத்தின் மகத்தான எழுத்தாளர் என்ற உமது உண்மையான தளத்துக்குத் திரும்புங்கள்,’ என்று தல்ஸ்தோயிடம் இரைஞ்சி ஒரு குறிப்பெழுதினார். தல்ஸ்தோயின் பிந்தைய புனைவுப்படைப்புகள் வெளிப்படையாகவே அவரது கருத்துகளைச் சாற்றும் ஊடகங்களாயின. எனினும் அப்படைப்புகள் பலவற்றிலும் அவரது கலைத்திறன் மிளிரவே செய்தது. ‘இவ்வெழுத்தாளர் ஒரு நல்ல சிந்தனையாளர் என்பதைவிடச் சிறந்த கலைஞராக இருக்கிறார் என்பது நமது நல்லூழ்,’ என்றார் நிக்கலாய் அக்சருமோவ் என்ற விமர்சகர். 1

ஆனால் தல்ஸ்தோய் இதுபோன்ற எளிய இலக்கிய மதிப்பீடுகளைக் கடந்த நிலைக்கு நகர்ந்துகொண்டிருந்தார். அவரது எழுத்துகளின் தாக்கம் இலக்கிய உலகைத் தாண்டி சமூகக்களத்துக்கும் ஆன்மீக உலகுக்கும் விரியும் கூர்கொண்டிருந்தது. அதில் முதன்மையானதொரு படைப்பாக ‘உம்மிடையே உள்ளது இறையாட்சி’ அமைந்தது. “இதோ, இங்கே! அல்லது அதோ, அங்கே! எனச் சொல்லமுடியாது. ஏனெனில், இறையாட்சி உங்கள் நடுவேயே செயல்படுகிறது”(லூக்கா 17.21)2 என்ற விவிலிய வாசகத்திலிருந்து இத்தலைப்பு எழுந்தது. ‘மறைமெய்மைசார் மதமாக இல்லாமல், வாழ்க்கைக் கோட்பாடாகத் திகழும் கிறித்தவம்’ என்ற துணைத்தலைப்பை அறைகூவலாகக் கொண்டிருந்தது இது. “உண்மையை அறிந்தவர்களாயும் இருப்பீர்கள். உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும்,” என்ற இயேசுவின் சொற்களை மேற்கோளாகக்கொண்டு தொடங்குகிறது (யோவான் 8.32). 2

இந்நூலுக்கான முன்னுரையில் இதன் மொழிபெயர்ப்பாளரான கான்ஸ்டன்ஸ் கார்னெட், “தல்ஸ்தோயின் மேதைமை சர்ச்சைக்கு அப்பாற்பட்டது. நமது தலைமுறையின் மாபெரும் நாவலாசிரியராக இவரே இருக்கக்கூடும் என்று நாகரிக உலகம் தீர்ப்பளித்துள்ளது. ஆனால் அவரது பிந்தைய ஆண்டுகளில் வந்த மெய்யியல், மத நூல்கள் ஒருவித அலட்சியமான வரவேற்பையே பெற்றுள்ளன. எழுதியவர் அவர் என்பதாலேயே அவை அதிகம் பேசப்பட்டன; எனினும் தல்ஸ்தோயே முறையிடுவது போல, அவை தீவிர விவாதங்களுக்கு உட்படுத்தப்படவில்லை. இந்நூல் தொடர்பாக அவர் இப்புகாரைக் கூறவேண்டியிருக்காது என்றே நினைக்கிறேன். அவரது கருத்துகளோடு ஒருவர் முரண்படலாம்; ஆனால் அவரது தனித்தன்மையையும், துணிவையும், இத்தனை தீர்க்கமான தர்க்கத்துடன் அவர் வளர்த்தெடுக்கும் சமூகக் கருத்தாக்கத்தின் ஆழத்தையும் எவரும் மறுக்கமுடியாது. நாவலாசிரியர் தல்ஸ்தோய் நிறைமொழி மாந்தரின் சமயம் சார்ந்த உளவெழுச்சியையும், ஆன்மீக உள்ளொளியையும் இந்நூலில் வெளிப்படுத்தியுள்ளார்; அதேபோழ்து சிந்தனையாளனில் கலைஞன் முழுவதுமாகத் தொலைந்து போய்விடவில்லை என்பதும் நமக்கு உவகையளிக்கிறது,” என்கிறார். மேலும், “தல்ஸ்தோய் போலவே பல தீவிர சிந்தனையாளர்கள் நமது சமூக அடுக்குமுறையின் முரண்களுக்குத் தீர்வுதேடிப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அவரைத் தமது ஆன்மீக வழகாட்டியாக ஏற்றுப்போற்றுவார்கள்,” என்றார். இந்நூலின் தாக்கத்தை இதைவிடத் துல்லியமாக எவரும் கணித்திருக்கமுடியாது.

தல்ஸ்தோயை நோக்கிப் பல சீடர்கள் வந்தடைந்தார்கள். ரஷ்யாவிலும் பிற நாடுகளிலும் அவரைப் பின்பற்றத்தொடங்கினார்கள். எளிமையான வாழ்க்கை, வன்முறையை முற்றாக விலக்கல், போர் எதிர்ப்பு, உணவீட்ட உடலுழைப்பு என்ற நெறிகளைக் கடைப்பிடிக்கத் தொடங்கினார்கள். அவர்களுள் ஒருவர், 15000 கிலோமீட்டர்களுக்கப்பால், சிறையிலிருந்து கைவிலங்கிடப்பட்டு நீதிமன்றத்துக்கு அழைத்துச்செல்லப்படும்போதுகூட தனது கையில் ‘உம்மிடையே உள்ளது இறையாட்சி’ நூலையே வைத்திருந்தார்.3 அவர் மோகன்தாஸ் காந்தி. தென்னாப்பிரிக்கவில் அவரது நீண்ட அரசியல் போராட்டத்துக்கும் சத்திய சோதனைகளுக்கும் துணையாகவும் தூண்டுதலாகவும் இருந்தன தல்ஸ்தோயின் எழுத்துகள்; குறிப்பாக இந்நூல். தல்ஸ்தோயால் ஈர்க்கப்பட்ட ஜெர்மானிய யூதரான ஹெர்மன் காலன்பாக் காந்தியின் மிக நெருங்கிய நண்பரானார். ஜொகனஸ்பெர்க் அருகே அவருக்கிருந்த 1100 ஏக்கர் நிலத்தை காந்தியின் சத்தியாகிரகப் பணிகளுக்காகவும் தல்ஸ்தோய முறையில் வாழவும் கொடையளித்தார். இருவரும் அதற்குத் தல்ஸ்தோய் பண்ணை என்றே பெயரிட்டனர். ஏற்கனவே ஜான் ரஸ்கினின் ‘கடையனுக்கும் கடைத்தேற்றம்’ (‘Unto this last’) நூலால் உந்தப்பட்டு நடாலில் ஃபினிக்ஸ் பண்ணை அமைத்துத் தன் குடும்பத்தோடு அங்கு குடிபெயர்ந்து எளிய வாழ்க்கைமுறையைத் தேர்ந்திருந்த காந்தியின் சிந்தனைகளுக்கும் செயல்பாடுகளுக்கும் தல்ஸ்தோயின் எழுத்துகள் வலுக்கூட்டின.

இருபதாம் நூற்றாண்டின் மீது மிகப்பெரிய, ஆகச்சிறந்த தாக்கம் செலுத்தியவர் யாரென்ற கேள்விக்கு பெரும்பாலானோர் காந்தி என்றே சொல்லக்கூடும். அக்கேள்வி 1931ல் லண்டன் சென்றிருந்த காந்தியிடம் கேட்கப்பட்டபோது அவர், “தல்ஸ்தோய். அவர்மட்டுமே,” என்று உறுதிபடக் கூறினார்.4 இந்நூலின் பல கருத்துகளோடு காந்தி உடன்பட்டும் முரண்பட்டும் வளர்த்தெடுத்தும் செல்வதை நாம் காணலாம். அக்கருத்துகள் ஏட்டளவில் தேங்கிவிடாமல் நடைமுறைச் சாத்தியம் கொண்டவை என்பதைப் பற்றிய நம்பிக்கையை உலகெங்கிலும் விதைத்தவர் காந்திதான். எனவே, இந்நூலை காந்தியின் வாழ்க்கைப்பாதையோடு இணைத்துக் காண்பது தவிர்க்கமுடியாதது ஆகிவிடுகிறது.

(2)

தல்ஸ்தோய் தனது பதின்ம வயதுகளிலிருந்தே மறுப்புவாதியாக (nihilist), எந்தவித நம்பிக்கைகளும் அற்றவராக இருந்திருப்பதாகக் கூறுகிறார். 5 அவர் ஈடுபட்ட எல்லாத் துறைகளிலும் நிறைநிலை எட்டுவதில் மட்டுமே ஆர்வம்கொண்டிருந்தார். இளமையில் அவர் வாழ்ந்த வாழ்க்கையை உளவேதனையுடனே பின்னர் நினைவுகூர்கிறார். போர்களில் பிறரைக் கொன்றிருக்கிறார்; இரட்டையர் தனிச்சண்டைக்குக் கொலைநோக்குடன் சவால்விட்டு அழைத்திருக்கிறார்; சூதாட்டங்களில் ஈடுபட்டிருக்கிறார்; களிமகனாய்த் திரிந்திருக்கிறார்; தனது பண்ணைக் குடியானவர்கள் மீது புகாரளித்துத் தண்டனை பெற்றுத்தந்திருக்கிறார்; பல பெண்களோடு உடலுறவு வைத்திருக்கிறார்; பிறரை ஏமாற்றியிருக்கிறார். தான் செய்யாத குற்றங்களே இல்லை என்கிறார். இருப்பினும் அவரது எழுத்துகள் மூலமாகப் புகழும் நல்ல மனிதர் என்ற பெயரும் அவரைத் தேடி வந்தன.6

இவற்றுக்கெல்லாம் இடையில் ஆன்மத் தேடலைத் தொடர்ந்துகொண்டே இருந்தார்.

“நேற்று கடவுள், நம்பிக்கை ஆகியவை குறித்த ஓர் உரையாடலின் போது ஒரு மகத்தான எண்ணம் எழுந்தது. அதை நிறைவேற்றுவதற்காக எனது வாழ்வை என்னால் அர்ப்பணிக்கமுடியும் என்று உணர்ந்தேன் – ஒரு புதிய மதத்தைத் தோற்றுவிப்பதே அந்த எண்ணம். மனிதனின் பரிணாமத்துக்கு ஏற்றதாக, எந்த மதநம்பிக்கைகளும் மர்மங்களும் அற்றதாக, நடைமுறைக்கு உகந்த ஒரு கிறித்தவ மதமாக அது இருக்கும். எதிர்காலத்தில் நிலைப்பேற்றை உறுதியளிக்காது, இந்த உலகத்திலேயே எல்லா அருளையும் வழங்கும். இந்த மதத்தின் மூலமாக மனிதர்களின் ஒன்றிணைவுக்கு முனைப்புடன் உழைக்க வேண்டும். இவ்வாறாகச் சென்ற என் எண்ணம் என்னைத் உயிர்த்திருக்கச் செய்யும் என்று நம்புகிறேன்,” என்று 27வது வயதிலேயே தனது நாள்குறிப்பில் எழுதினார்.7

மனித இனம் தொடர்ந்து வளர்ந்து முன்னேறும் என்று அறிவுத்தளத்தில் இருந்த பொதுவான நம்பிக்கையை தல்ஸ்தோயும் பெற்றிருந்தார். ஒருமுறை பாரீஸ் சென்றிருந்தபோது அங்கு ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவதைக் கண்டிருக்கிறார். அதுவரை மட்டற்ற மனித முன்னேற்றத்தின் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கை அப்போது சற்றே ஆட்டம் கண்டது. அது ஒரு வலுவற்ற மூடநம்பிக்கை என்றுணர்ந்தார். “உடலிலிருந்து தலை துண்டிக்கப்பட்டு, பெட்டிக்குள் ஒவ்வொரு உடற்பகுதியும் தடாலென்று விழும் ஓசையைக் கேட்டபோது, இருத்தலின் பொருளையோ முன்னேற்றத்தையோ விளக்கும் எக்கோட்பாடும் இத்தகைய செயலை நியாயப்படுத்த முடியாது என்பதை அறிவினால் மட்டுமன்றி எனது உடலுயிராலும் புரிந்துகொண்டேன். இது ஏதேனும் கோட்பாட்டின்படி அவசியமானது என்று உலகம் படைக்கப்பட்ட நாள் முதலாக அத்தனை மக்களும் கருதினாலும்கூட, இது தேவையற்றது என்றும் தவறானது என்றும் நானறிவேன் என்பதை உணர்ந்தேன். எனவே மக்கள் என்ன சொல்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்று கருதாமல், எது சரி, எது அவசியமானது என்பதன் அடிப்படையிலேயே எனது மதிப்பீடுகள் அமைய வேண்டும். முன்னேற்றத்தை வைத்து மதிப்பிடாமல் என் அகத்தின் உணர்வைக்கொண்டே நான் மதிப்பிடவேண்டும்,” என்று அந்நிகழ்வைப் பற்றிய நினைவுகளை ‘பாவ அறிக்கை’ நூலில் பதிவுசெய்கிறார்.

அவரது கதைமாந்தர்கள் பலரும் ஆன்மீகத் தேடலும் அலைக்கழிச்சலும் மிக்கவர்களாக இருந்தனர். அவரது கதைகளில் அவரது வாழ்க்கைக்குப் பொருள் தரக்கூடிய நல்ல செயல்களுக்கான ஏக்கங்களைப் பொதித்து வைத்ததாகக் கூறுகிறார். பிறிதொரு இடத்தில், அவரது திருமணத்துக்குப் பின்பான பதினைந்து ஆண்டுகளில், “எழுத்தை அற்பமான செயலாகக் கருதினாலும் தொடர்ந்து எழுதினேன். ஏற்கனவே எழுத்தாளனாக இருப்பதன்மீதான ஈர்ப்பையும், எனது பெறுமதியற்ற எழுத்துகளுக்குக் கிடைத்த பெரும் பொருளாதாரப் பலன்களும் பாராட்டும் ஏற்படுத்திய சபலத்தையும் சுவைத்திருந்தேன். எனது பொருளாதார நிலையை மேம்படுத்திக்கொள்ளவும், வாழ்வின் பொருள் குறித்தும் பொதுவாக வாழ்க்கை குறித்தும் ஆன்மாவுள் எழுந்த வினாக்களை முடக்குவதற்கான கருவியாகவும் கருதி எழுத்துக்கு என்னை ஒப்புக்கொடுத்தேன்,” என்றார். எழுத்தை அற்பமாகக் கருதியதாகக் கூறும் இந்த காலகட்டத்தில்தான் போரும் அமைதியும் நாவலை அவர் எழுதியிருந்தார்.

அவர் ஐம்பது வயதை நெருங்கிக்கொண்டிருந்தபோது, அன்னா கரீனினா நாவலை எழுதி முடித்த காலகட்டத்தில், அவரது ஆன்ம உளைச்சல் உக்கிரமானது. ‘ஏன் இப்படி? அடுத்த என்ன?’ என்ற வினாக்கள் அவரை வதைக்கத்தொடங்கின. அவருடைய ‘சமரா’ பண்ணை விரிவடையும், ‘கோகல், புஷ்கின், ஷேக்ஸ்பியர், மொலியேர் ஆகியோரைவிட அவர் புகழடைவார்’ போன்ற விடைகள் அவருக்கு நிறைவு தரவில்லை. ‘அதனாலென்ன?’ என்ற கேள்வியே எழுந்தது. உலக மெய்யியல் நூல்களிலும் சமய நூல்களிலும் அவருக்கு ஏற்புடைய விடைகள் கிடைக்கவில்லை. பகுத்தறிவின் எல்லைகளை உணர்ந்தார். வாழ்வின் பொருளின்மை அவருள் உயிர்துறக்கும் விழைவையே ஏற்படுத்தியது. பகுத்தறிவுக்குப் புறம்பான நம்பிக்கையே பிறருக்கு வாழ்வின் பொருளை அளிப்பதைக் கண்டார். “கடவுள் என்ற கருத்தாக்கம் கடவுளாகாது. ஒரு கருத்தாகம் என்னுள் தோன்றுவது; கடவுள் என்ற கருத்தாக்கம் என் விருப்பப்படி எனக்குள் எழுப்பிக்கொள்ளும் ஒன்று. இதுவன்று நான் தேடுவது. அதுவன்றி வாழ்க்கை இருக்கமுடியாது என்பதான ஒன்றையே நான் தேடுகிறேன்,” என்ற உளப்போராட்டம் அவருள் நிகழ்ந்தது.

“கடவுளை நாடி வாழ்; கடவுளின்றி வாழ்க்கை இல்லை,” என்ற முடிவுக்கு வந்தார். அவருள் ஓர் ஒளியை உணர்ந்தார். அந்த அறிதலே அவரைத் தற்கொலையிலிருந்து காத்தது என்கிறார். ஆனால் தனது வர்க்கத்தினரின் நம்பிக்கை பகட்டானதாகவும் பொய்யானதாகவும் அவர்களது வாழ்வுக்குத் தேவையற்றதாகவும் அவருக்குத் தோன்றியது. ஏழைகளின் கிறித்தவ நம்பிக்கையே அதுவன்றி வாழ்வில்லை என்னும்படியாக அவர்களது வாழ்வோடு பிணைந்திருந்தது.6

ஆப்டினோ என்ற இடத்திலிருந்த மடாலயத்துக்கு தல்ஸ்தோய் செல்லத் தொடங்கினார். கோகல் (Gogol), தஸ்தாயெவ்ஸ்கி போன்றோரும் அந்த மடாலயத்தை நாடிச்சென்றிருக்கின்றனர். தல்ஸ்தோய் தேவாலய வழிபாடுகளில் பங்கெடுக்கத் தொடங்கினார். கிறித்தவ மத நூல்களை ஆழமாகப் பயில்வதில் மூழ்கினார். “எல்லா நற்செய்திகளிலும் (Gospel), மலைப்பொழிவே என்னை மிகவும் ஈர்த்தது. பிறிதெவற்றையும்விட அதையே நான் மீளமீளப் படித்தேன். வேறெங்கும் கிறிஸ்து அத்தனை மாண்புடன் பேசுவதில்லை. வேறெங்கும் இவ்வளவு தெளிவான, புரியும்படியான, எல்லாருக்கும் ஏற்புடைய அறநெறிகளை வழங்குவதில்லை. கிறிஸ்தவத்தில் தெளிவான திடமான நெறிகள் ஏதேனும் இருந்தால், அவை இந்த மலைப்பொழிவிலேயே தெரிவிக்கப்பட்டிருக்கவேண்டும். மத்தேயு நற்செய்தியின் அந்த மூன்று அத்தியாயங்களில் எனது ஐயங்களுக்கான தீர்வுகளை நான் நாடினேன்,” என்றார்.5

விரைவிலேயே திருச்சபையின் கிறித்தவத்துக்கும் நற்செய்திகளின் கிறித்தவத்துக்குமிடையே இருந்த வேறுபாடுகள் தல்ஸ்தோயை உறுத்தத்தொடங்கின. நிறுவனமாக்கப்பட்ட கிறித்தவத்தையும் விவிலியத்தையும் அப்படியே ஏற்றுக்கொள்ளும் எளிமை அவருக்குக் கைக்கூடவில்லை. அவருடைய கூர்மதி பல நூற்றாண்டுகளாகப் பலரால் புனையப்பட்ட புனிதத்தைத் துளைத்து மெய்யறிவையே நாடியது; தூய பகுத்தறிவு சார்ந்த வரலாற்று அணுகுமுறையையும் தவிர்த்தார். “எனது வாசகர்கள் ஒன்றை நினைவில் கொள்ளவேண்டும்: நற்செய்திகளைத் தூய ஆவியிலிருந்து உதித்த புனித மறைநூல்களாக நான் கருதவில்லை; அதேபோல, அவற்றைச் சமய இலக்கியத்தின் வரலாற்றுச் சின்னங்களாகவும் நான் நினைக்கவில்லை. நற்செய்திகள் குறித்த இறையியல் பார்வையையும் வரலாற்றுப் பார்வையையும் நான் புரிந்துகொள்கிறேன். ஆனால் நான் இதை முற்றிலும் வேறு கோணத்திலிருந்து அணுகுகிறேன். இறையியல் பார்வையாகட்டும், படித்தவர்கள் மத்தியில் பரவலாக உள்ள வரலாற்றுப் பார்வையாகட்டும், இரண்டு பார்வைகளைக்கொண்டும் எனது நூலை அணுகித் தடம்புரண்டுவிடவேண்டாம் என்று வாசகர்களைக் கோருகிறேன். நான் கிறித்தவத்தைத் தூய திருவெளிப்பாடாகவோ ஒரு வரலாற்றுப் போக்காகவோ கருதவில்லை. வாழ்க்கைக்குப் பொருள் நல்கும் ஒரே அறநெறியாகக் கிறித்தவத்தைக் கருதுகிறேன்,” என்றார். “நற்செய்திகளே கிறித்தவ போதனைகளின் தோற்றுவாய். அவற்றில்தான் மெய்யாகவே வாழ்வோரின் வாழ்க்கைக்கு உயிர்ப்பூட்டும் உணர்வுக்கான விளக்கம் கண்டேன். ஆனால் உயிரூட்டும் அத்தூய நீரின் ஓட்டத்தில் சேறும் சகதியும் கலந்துவிட்டிருந்ததை அறிந்தேன். இதுவே என்னை உண்மையான, தூய்மையான நீரைக் காணவிடாமற் செய்தது. உயர்ந்த கிறித்தவக் கட்டளைகளோடு யூத நெறிகளும் திருச்சபையின் போதனைகளும் கலந்துவிட்டன. இவை முன்னதற்கு அந்நியமானவை. எனவே தனக்குக்கிடைத்த ஒரு கழிவுப் பையில் மிகுந்த போராட்டத்துக்கும் கடின உழைப்புக்கும் பிறகு கழிவுகளிடையே எய்தற்கரிய முத்துகள் பலவும் இருப்பதைக் கண்டுபிடிதவனது இடத்தில் என்னை உணர்ந்தேன்,” என்றார். 8

“நான் இறையியல் கேள்விக்கோ, வரலாற்று வினாவுக்கோ அல்ல, வாழ்க்கைச் சிக்கலுக்குத் தீர்வு தேட முனைந்தேன். அதனால்தான் இயேசு கிறிஸ்து கடவுளா இல்லையா, தூய ஆவி எவரிடமிருந்து எழும்புகிறது போன்றவற்றில் எனக்கு நாட்டமில்லை. எந்த நற்செய்தியை எவர் எப்போது எழுதினார்கள், இன்னின்ன நீதிக்கதைகளை இயேசுவே கூறினாரா இல்லையா என்பதையெல்லாம் அறிவதும் முக்கியமற்றது; தேவையற்றது. எனது தலையாய அக்கறை இந்த ஒளி குறித்ததுதான் – ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளாக மனித இனத்தின் மீதும், இன்னமும் என் மீதும் பொழிந்து வந்திருக்கும் இந்த ஒளி,” 8 என்ற சொற்களில் நம்மால் தல்ஸ்தோயை மேலும் அணுக்கமாகப் புரிந்துகொள்ள முடிகிறது.

காந்தியும் மலைப்பொழிவையே விவிலியத்தில் தனக்கு மிகவும் பிடித்த பகுதி என்று குறிப்பிட்டார்.
“பழைய ஏற்பாட்டைப் படித்துப் புரிந்துகொள்ள என்னால் இயலவில்லை. ஆதி ஆகமத்தையும் அதையடுத்த அத்தியாயங்களையும் படிக்க ஆரம்பத்ததுமே எனக்குத் தூக்கம் வந்துவிடும். ஆனால் பைபிளைப் படித்திருக்கிறேன் என்று சொல்லிக்கொள்ள இயலவேண்டும் என்பதற்காச் சிரமத்தோடேயே மற்றப் பகுதிகளையும் மேலெழுந்தவாரியாகப் படித்து முடித்தேன். அதில் எனக்குக் கொஞ்சமும் சிரத்தை ஏற்படவில்லை. எனக்கு அது விளங்கவும் இல்லை. எண்ணாகமம் என்ற பகுதியைப் படிப்பதற்கே எனக்கு வெறுப்பாக இருந்தது.

ஆனால் புதிய ஏற்பாட்டைப் படித்தபோது எனக்கு முற்றும் மாறான உணர்ச்சி ஏற்பட்டது. முக்கியமாக மலைப்பிரசங்கம் நேரடியாகவே என் உள்ளத்தைக் கவர்ந்துவிட்டது. அதைக் கீதையுடன் ஒப்பிட்டுப் பார்த்தேன். ‘தீமைக்குப் பதிலாகத் தீமையைச் செய்யாதே என்று உங்களுக்குக் கூறுகிறேன். உன்னை வலது கன்னத்தில் யாராவது அறைந்தால் மற்றொரு கன்னத்தையும் திருப்பிக் காட்டு. எவனாவது உன் சட்டையை எடுத்துக் கொண்டுவிட்டானாயின் உன் போர்வையையும் அவனுக்குக் கொடு’ என்பன போன்ற உபதேசங்கள் எனக்கு அளவு கடந்த ஆனந்தத்தை அளித்தன,” என்று சத்திய சோதனையில் எழுதினார்.9

தல்ஸ்தோய் வந்துசேர்ந்த இடத்துக்குத் தன்னுடைய ஆன்மீகத் தேடலின் போக்கில் தானும் வந்தடைந்ததால்தான் காந்தியைத் தல்ஸ்தோயின் நூல்கள் இத்தனை ஈர்த்திருக்கக்கூடும்.

“ ‘உன்னுள்ளேயே ஆண்டவன் ராஜ்யம்’ என்ற டால்ஸ்டாயின் நூல் என்னைப் பரவசப்படுத்திவிட்டது. அதில் கண்ட கருத்துகள் என் உள்ளத்தில் பலமாகப் பதிந்துவிட்டன. அந்நூலில் கண்ட சுயேச்சையான சிந்தனை, மிகச் சிறந்த ஒழுக்கம், உண்மை ஆகியவற்றின் முன்பு ஸ்ரீ கோட்ஸ் எனக்குக் கொடுத்திருந்த புத்தகங்கள் எல்லாமே ஒளி இழந்து, அற்பமானவைகளாகத் தோன்றின. இவ்விதம் என்னுடைய ஆராய்ச்சி, கிறிஸ்தவ நண்பர்கள் எதிர்பாராத திக்குக்கு என்னைக் கொண்டுபோய்விட்டது,” என்றும், பிறிதோரிடத்தில், “டால்ஸ்டாயின் நூல்களையும் அதிகக் கவனத்துடன் படித்து வந்தேன். ‘சுவிசேஷங்களின் சுருக்கம்’, ‘செய்ய வேண்டியது யாது?’ என்ற நூல்களும் மற்றவைகளும் என் மனதைக் கவர்ந்தன. பிரபஞ்சத்தில் உள்ள எல்லாவற்றிடமும் அன்புசெலுத்துவதற்கான எண்ணிறந்த வழிகளை மேலும் மேலும் உணரலானேன்,” என்றும் எழுதினார். 9

(3)

மோசஸின் கட்டளைகளை மிகத் தெளிவாக மறுத்து மலைப்பொழிவின்போது இயேசு ஐந்து கட்டளைகளை வழங்கியிருக்கிறார் என்றும், இருவருடைய கட்டளைகளையும் ஒரே மதம் ஏற்கமுடியாதென்றும் தல்ஸ்தோய் வாதிடுகிறார். ஏற்கனவே நிலவும் அரசியல், சமூக அமைப்புகளைக் காப்பதற்கும், திருச்சபைகளின் இருப்பைத் தக்கவைக்கவும் இயேசுவின் முதன்மையான கட்டளைகள் தவறான பொருளில் கற்பிக்கப்படுகின்றன என்றும் பிற நெறிகளுக்கு அளிக்கப்படும் அங்கீகாரத்தால் அவை மீறப்படுகின்றன என்ற முடிவுக்கு தல்ஸ்தோய் வந்துசேர்கிறார். மரபான உரைகளையும் விளக்கங்களையும் ஆய்ந்து, அவற்றுள் பலவற்றை மறுத்து, இயேசுவின் கட்டளைகளை விளக்கி ‘நான் நம்புவதென்ன?’ நூலிலும், நான்கு நற்செய்திகளிலிருந்து அவரது மொத்த வாழ்வையும் செய்தியையும் மீளுருவாக்கம் செய்து, ‘சுவிசேஷங்களின் சுருக்கம்’ நூலிலும் தல்ஸ்தோய் படைக்கிறார்.

உண்மையில், மோசஸின் கட்டளைகளைப் பற்றிப் பேசுகிற அளவுக்கு கிறித்தவ இறையியிலாளர்கள் இயேசுவின் கட்டளைகளைப் பற்றிப் பேசுவதில்லை என்கிறார் தல்ஸ்தோய். மத்தேயு நற்செய்தியில் மலைப்பொழிவின் சில வாசகங்களைக் (5.21-48) இயேசுவின் கட்டளைகள் என்று கண்டடைந்ததே தன்னை ஆச்சரியப்படுத்தியது; காரணம், இயேசுவின் கட்டளைகள் இவையென்று எந்த தேவாலயத்திலும் கற்பிக்கப்படவில்லை என்கிறார். ஆழ்ந்த ஆய்வுக்குப் பிறகும் பல உரைகளையும் பிரதிகளையும் ஒப்புநோக்கிய பிறகும், திரிக்கப்பட்டதாக அவர் கருதும் பகுதிகளைத் திருத்தி ஒவ்வொரு கட்டளையையும் வந்தடைகிறார். 5

“ ‘கண்ணுக்குக் கண்’, ‘பல்லுக்குப் பல்’ என்று கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்; தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம். மாறாக, உங்களை வலக் கன்னத்தில் அறைபவருக்கு மறுகன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள். ஒருவர் உங்களுக்கு எதிராக வழக்குத் தொடுத்து, உங்கள் அங்கியை எடுத்துக்கொள்ள விரும்பினால் உங்கள் மேலுடையையும் அவர் எடுத்துக் கொள்ள விட்டு விடுங்கள். எவராவது உங்களை ஒரு கல் தொலை வரக் கட்டாயப்படுத்தினால் அவரோடு இரு கல் தொலை செல்லுங்கள். உங்களிடம் கேட்கிறவருக்குக் கொடுங்கள்; கடன் வாங்க விரும்புகிறவருக்கு முகம் கோணாதீர்கள்.” (மத்தேயு 5.38-40)2 என்ற வாசகங்கள்தாம் கிறித்தவ மெய்மையை அறிவதற்கான திறவுகோலாக அமைந்ததன என்கிறார் தல்ஸ்தோய். அவற்றைக் கிறிஸ்து வெறும் அணிமொழிகளாகக் கூறவில்லை. நடைமுறையில் கடைப்பிடிக்கவேண்டிய ஒன்றாக, எளிமையான நேரடியான பொருளிலேயே கூறியிருக்கிறார். மோசஸின் கட்டளையை நேருக்குநேர் மறுத்து, எந்நிலையிலும் தீமையை வன்முறையால் எதிர்க்காமை (non-resistance) என்பதை மாறாத உண்மையாக தல்ஸ்தோய் கொள்கிறார். அதையே இயேசுவின் முதன்மையான கட்டளையாக (வரிசையில் நான்காவதாக வந்தாலும்) முன்வைக்கிறார். இதைப் பின்பற்றும் போது இன்னல்கள் விளையவே செய்யும், அவற்றையும் பொறுத்தாக வேண்டும் என்பதையே மறுகன்னத்தை காட்டுதல் குறிக்கிறது என்கிறார். இதை நம்மை நாமே வருத்திக்கொள்ள இயேசு சொல்லவில்லை. வேறெவ்வகையிலும் தீமையை எதிர்கொள்ள முடியாது என்கிறார். அரசு, நீதிமன்ற அமைப்பு மூலம் தண்டனை வழங்குவதும் தவறானதே என்றும், காவல்துறை ராணுவம் என்ற எவையும் தேவையற்றவையே என்றும் தல்ஸ்தோய் கருதுகிறார்.

இயேசுவின் முதல் கட்டளை சினங்கொள்ளாதே என்பது (மத்தேயு 5.21-26). “எல்லாரிடமும் இணைக்கமாக இரு. எப்போதும் உனது சினத்தை நியாயமானது என்று கருதாதே. உனது சகோதரனின் சினத்தைக் காரணமற்றது என்றும் கருதாதே. எவர் உன்னிடம் சினந்திருந்தாலும், காரணமின்றியே சினந்திருந்தாலும், வழிபாட்டுக்கு முன் அவர்களோடு சமாதானமாகிவிடு. உனக்கும் பிறருக்குமிடையேயான எல்லாப் பகையையும் ஒழித்துவிடு; இன்றேல் பகை வளர்ந்து உன்னை அழித்துவிடும்,” என்று இயேசுவின் கட்டளையைத் தன் மொழியில் வழங்குகிறார் தல்ஸ்தோய். மேலும், தன் கடந்தகால வாழ்க்கையைப் பின்னோக்கிப் பார்த்து, வலியோரிடத்துச் சினங்காப்பது எளிது; எளியோரிடத்து விரைவில் சினம் கொண்டதாக உணர்கிறார்.

“செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
காக்கின்என் காவாக்கால் என்?” என்ற குறளை எதிரொலிக்கும் வரிகளை எழுதுகிறார்.

தல்ஸ்தோய் அளிக்கும் இயேசுவின் இரண்டாவது கட்டளை நவீன மனங்கள் ஏற்கக் கடினமான ஒன்று. பிறன்மனை நோக்கக்கூடாது (மத்தேயு 5.27-32). மணவுறவுக்கு வெளியில் உறவுகொள்ளக்கூடாது. எந்நிலையிலும் மனைவியை மணவிலக்கம் செய்யக்கூடாது என்கிறார். முறையற்ற காமமும் பிறழ் உறவுகளுமே மிக அதிகப் பூசல்களை உலகில் நிகழ்த்தியுள்ளன என்கிறார். பெண் பிறனோடு உறவுகொள்ளும்போது மணவிலக்கம் செய்யலாம் என்று பழைய யூத நெறிகள் அளிக்கும் விதிவிலக்கையும் இயேசு மறுப்பதாக தல்ஸ்தோய் கூறுகிறார்.

மூன்றாவது கட்டளை எந்நிலையிலும் விண்ணுலகின் பெயராலோ மண்ணுலகின் பெயராலோ ஆணையிடக்கூடாது என்பது (மத்தேயு 5.33-37). மேலோட்டமாக இது சாதாரணமான கருத்தாகத் தெரிந்தாலும், தல்ஸ்தோய் இதற்கு ஆழ்ந்த பொருள் கூட்டுகிறார். விவிலியத்தின் பெயராலும் பிற மறைநூல்களின் பெயராலும் நீதிமன்றங்களிலும் அரசாங்கப் பதவியேற்கையிலும் ஆணையிட்டு உறுதிமொழியெடுப்பது பொதுவாக எல்லா இடங்களிலும் நடக்கக்கூடியது. இப்படி ஆணையிடுவதன் மூலமாகத்தான் தேசத்துக்கும் அரசுக்கும் நிறைவனங்களுக்கும் பற்றுடன் இருப்பதாக உறுதிவாங்கப்படுகிறது. இதுவே உண்மைக்குப் புறம்பாக நடக்கவும், அறமீறலுக்கும், பிறர்மீது வன்முறையைச் செலுத்தவும் வகைசெய்கிறது. விவிலியத்தின் மீது ஆணையிடும்போதே, ஆணையிடுவதையே தடைசெய்த விவிலியத்திற்கு எதிராகச் செயல்படுகிறீர்கள்; சிலுவையை முத்தமிடும்போதே, ஆணையிடுவதைத் தடைசெய்த கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதாலேயே சிலுவை புனிதமானது என்பதை மறந்துவிடுகிறீர்கள் என்கிறார் தல்ஸ்தோய்.

ஐந்தாவது கட்டளையாக இருப்பது ‘உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்’ (மத்தேயு 5.43-48). நுண்ணிய சொல்லாய்வுக்குப் பின்னர், இங்கு பகைவர் என்பது தனிநபர்களைக் குறிக்காது; பகை நாட்டினரைக் குறிக்கும் என்பது தல்ஸ்தோயின் துணிபு. இதையும் போருக்கு எதிரான கட்டளையாகவே தல்ஸ்தோய் முன்வைக்கிறார்.

காந்தி இக்கட்டளைகளோடு பெருமளவு ஒத்துப்போனர். தேசம் என்ற கட்டமைப்பை ஏற்றக்கொண்ட போதிலும், மக்களின் நாட்டுப்பற்றைத் திரட்டியே பல்லாண்டுகள் போராடியபோதும், அவரது அன்பு தேச எல்லைகளைக் கடந்ததாக இருந்தது. நாட்டுப்பற்றின் பெயரால் அகிம்சைக் கொள்கைகளுக்கு முற்றிலும் எதிராக நடந்துகொண்டது அவர் இங்கிலாந்தின் போர்களில் ஈடுபட்டபோதுதான். அதை முன்னிறுத்தித் தல்ஸ்தோயின் சீடர்களோடு அவருக்கு விவாதம் நிகழ்ந்திருக்கிறது. 1930ம் ஆண்டு செர்க்காஃப்புடன் (V.Tcherkoff) நடந்த ஒரு கடிதப்பரிமாற்றத்தில், ஒரு கட்டுரையில் போரில் கலந்துகொண்டதை காந்தி நியாயப்படுத்தியிருப்பதைச் சுட்டிக்காட்டி செர்க்காஃப் விளக்கம் கேட்டார். காந்தி தன் நிலைப்பாட்டை இவ்வாறு விளக்குகிறார்:

“எனது நாட்டினருடன் இணைந்து செயலாற்றியது எங்கள் தளைகளை உடைப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டது. அத்தளைகளை உடைத்த பின்னர் என்ன உணர்வோம், எப்படிச் செயல்படுவோம் என்பதை அவர்களோ நானோ இப்போது அறியமுடியாது.

தல்ஸ்தோய் என்னுடைய இடத்தில் இருந்திருந்தால் என்ன செய்திருப்பார் என்று கணிப்பது பலனற்றது. ஐரோப்பாவிலுள்ள எனது நண்பர்களுக்கு நான் ஓர் உறுதியளிக்கிறேன் – எனது எந்தவொரு செயலும் வன்முறையை ஆதரிப்பதாகவோ, எனது கொள்கையில் சமரசம் செய்துகொள்வதாகவோ அமைந்ததில்லை. போயர் போரிலும், ஜூலூ எழுச்சியின்போதும் இங்கிலாந்தின் தரப்பில் நான் பங்காற்றியது வன்முறைக்கு ஏற்பளித்தது போன்ற தோற்றம் தந்தாலும், அது தவிர்க்கமுடியாத ஒரு சூழலை அகிம்சையின் பொருட்டு அங்கீகரித்ததே ஆகும். எனது பலவீனத்தாலும் உலகப்பொது நெறியான அகிம்சை குறித்த அறியாமையாலும் நான் அவ்வாறு பங்கெடுத்திருக்கக்கூடும். ஆனால் அப்படியான பலவீனமும் அறியாமையும் என்னிடம் இருந்ததாக நான் அப்போது நம்பவில்லை; இப்போதும் நம்பவில்லை.
ஓர் அகிம்சாவாதி வன்முறையை அடிப்படையாகக் கொண்ட அமைப்பில் வேறு வழியின்றி அங்கம்வகிக்கும்போது, மறைமுகமாகப் பங்காற்றுவதைவிட நேரடியாகப் பங்காற்றுவதையே தேர்ந்தெடுப்பான். பகுதியளவேனும் வன்முறையை அடிப்படையாகக் கொண்டுள்ள ஓர் உலகைச் சார்ந்துள்ளேன். ராணுவ வீரர்கள் என் அண்டைநாட்டினரைக் கொல்வதற்குப் பணம் கொடுப்பதும், நானே ராணுவ வீரனாக இருப்பதுமே என்முன் உள்ள தெரிவுகள் என்றால், எனது கொள்கைகளின்படி நான் ராணுவத்தில்தான் சேரவேண்டும்; வன்முறைச் சக்திகளைக் கட்டுப்படுத்தி என் தோழர்களையும்கூட மனமாற்றம் புரியமுடியும் என்ற நம்பிக்கையுடன் ராணுவத்தில் சேர்வேன்.
தேசிய விடுதலை என்பது புனைவன்று. தனிமனித விடுதலை அளவுக்கு அதுவும் அவசியமானதே. ஆனால் அவை அகிம்சையின் அடிப்படையில் அமைந்திருந்தால், நாட்டுக்கும் தனிமனிதனுக்கும் சமமான சுதந்திரம் இருப்பது ஒன்றுக்கொன்று அச்சுறுத்தலாக இருக்காது. உலகளாவிய விடுதலையும் அவ்வாறே. ‘உனது உடைமையை மற்றவர்களின் உடைமைக்குத் தீங்கு நேராதபடி பயன்படுத்தலாம்’ என்ற சட்டக்கொள்கை அறம் சார்ந்ததாகவும் உள்ளது. பிரபஞ்சம் அணுவில் அடக்கப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். அணுவுக்கு ஒரு சட்டம் பிரபஞ்சத்துக்குப் பிறிதொரு சட்டம் என்றில்லை.” 10

இங்கு காந்தி ஒரு புலம்பெயர் சமூகத்தின் தலைவராக, நாட்டின் தலைவராக நடைமுறைச் சிக்கல்களை அங்கீகரித்து, அவை சார்ந்த நிலைப்பாட்டை எடுப்பதைக் காணலாம். காந்தி ராணுவம் கூடாதென்ற போதும், காவல்துறை கூடாதென்று அத்தனை உறுதியாகக் கூறவில்லை. சுதந்திர இந்தியாவில் உடனே ராணுவத்தைக் கலைக்கவும் அவர் கோரவில்லை. காஷ்மீரில் பாகிஸ்தானிலிருந்து அப்ரிதி இனக்குழுத் தாக்குதல் நடந்தபோது, ராணுவத்தை அனுப்புவதையும் எதிர்க்கவில்லை. ஆனால் இரண்டாம் உலகப்போரில் ஜப்பானியப் படையெடுப்பை அகிம்சை வழியில் எதிர்கொள்வதற்கான ஆயத்தங்களை ஒதிஸாவில் செய்யத்தொடங்கினார். தல்ஸ்தோய் எந்நிலையிலும் ராணுவத்துடன் ஒத்துழைக்கக்கூடாது என்றே கருதினார். எந்த விதமான நாட்டுப்பற்றும் தீங்கானது என்றார். எனினும் அடிமைப்பட்ட நாடுகள் விடுதலை பெறுவதே முதன்மையானது என்பதையும் ஏற்றுக்கொண்டார். இந்தியா அடிமைப்பட்டதன் காரணங்களையும் விடுதலைக்கான வழிமுறைகளையும் ‘ஓர் இந்துவுக்குக் கடிதம்’ என்று தாரக்நாத் தாஸுக்கு எழுதினார். காந்தி அதைப் பதிப்பித்தார். குஜராத்தியிலும் மொழிபெயர்த்தார். இதன்பொருட்டே காந்திக்கும் தல்ஸ்தோய்க்குமான கடிதப் பரிமாற்றம் தொடங்கியது.

“ஒரு வணிக நிறுவனம் 20 கோடி மக்களைக்கொண்ட நாட்டை அடிமைப்படுத்தியது. மூடநம்பிக்கையற்ற எந்த மனிதனிடமாவது இதைச் சொல்லிப்பாருங்கள் – இச்சொற்களுக்கான பொருளை அவனால் புரிந்துகொள்ளமுடியாது. வெறும் 30000 பேர் – பலசாலிகள் அல்லர்; வலுவற்றவர்கள், சாதாரணமானவர்கள் – துடிப்பும், அறிவும், திறமையும், விடுதலை வேட்கையும் கொண்ட 20 கோடி மக்களை அடிமைகொண்டார்களா? இந்தியர்களை அடிமைப்படுத்தியது ஆங்கிலயர் அல்லர்; இந்தியர்கள் தம்மைத்தாமே அடிமைப்படுத்திவிட்டார்கள் என்பதை இந்த எண்ணிக்கையே நமக்குத் தெரிவிக்கவில்லையா? […]

இந்திய மக்கள் வன்முறையால் அடிமைப்படுத்தப்பட்டிருப்பதற்குக் காரணம், அவர்களே வன்முறையால் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதுதான்; மானுடத்தின் உள்ளுறையும் மாறாநெறியான அன்பை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. […]

மனிதர்கள் தங்கள் உள்ளங்களின் இயல்பான அன்புநெறியின்படி வாழட்டும். அந்நெறியின்படி வன்முறை சார்ந்த எந்த எதிர்ப்பும் கூடாது; வன்முறையில் பங்கேற்பதை முற்றிலும் தவிர்க்கவேண்டும்; இது நடந்தவுடனேயே, நூற்றுவர் பல கோடி மக்களை அடிமை செய்யமுடியாது; பல கோடி மக்கள் இணைந்தாலும் ஒரு தனிமனிதரைக் கூட அடிமைப் படுத்தமுடியாது. தீங்கிழைப்பவரை (வன்முறையால்) எதிர்க்கவேண்டாம் – அப்படி எதிர்க்காமலிருக்கும்போது, நீதிமன்றங்கள், வரிகளை வசூலிப்பது, அனைத்துக்கும் மேல் ராணுவத்தில் ஈடுபடுவது என்று நிர்வாகத்தின் எந்தவிதமான வன்முறைச் செயல்களிலும் பங்கெடுக்கவேண்டாம். உலகில் எவராலும் உங்களை அடிமைப்படுத்த முடியாது,” என்று தல்ஸ்தோய் அக்கடிதத்தில் எழுதியிருந்தார்.11

எதிர்க்காமை, செயலறு எதிர்ப்பு (passive resistance) ஆகிய சொற்கள் காந்திக்கு உவப்பாக இல்லை. அவற்றுக்கு மாற்றாகவே சத்தியாகிரகம் (truth force or soul force), அகிம்சை (non-violence) போன்ற சொற்களைத் தேர்ந்தெடுத்தார். “செயலறு எதிர்ப்பு என்ற சொற்றொடர் எனக்குப் பிடிக்கவில்லை. நான் நினைப்பதை அது முழுமையாக வெளிப்படுத்துவதில்லை. அது ஒரு வழிவகையை விளக்குகிறது. ஆனால் அது சிறு அங்கமாகவே இருக்கும் ஒட்டுமொத்த நெறியை விளக்குவதில்லை. தீமைக்கு எதிராக நன்மையைச் செய்வதில்தான் மெய்யான அழகு உள்ளது; அதுதான் என் குறிக்கோள்,” என்றார்.

(4)

1884ம் ஆண்டு தல்ஸ்தோய் ‘நாம் நம்புவதென்ன’ நூலை எழுதிமுடித்திருந்தார். தணிக்கைக்குழுக்கள் அதைத் தடைசெய்தன. ஆனால் அவருக்கிருந்த பெரும்புகழால் அந்நூல் பல வடிவங்களில் ரஷ்யாவிலும் உலகின் பலபகுதிகளிலும் படிக்கப்பட்டது. அந்நூலை எழுதியபோது மெனனைட்டுகள், ஹெர்ன்ஹட்டகர்கள், குவாக்கர்கள் போன்ற கிறித்தவப் பிரிவுகள் வன்முறையை முற்றொதுக்கினர் என்பதை அவர் முழுமையாக அறிந்திருக்கவில்லை. இந்நூலுக்குப் பிறகு வந்த எதிர்வினைகள் அவருக்கு அப்படியான குறுங்குழுக்களைப் பற்றியும் தனிநபர்களைப் பற்றியும் அறிவதற்கு வாய்ப்பளித்தன. 1893ல் அவர் எழுதிய ‘உம்மிடையே உள்ளது இறையாட்சி’ நூலில் இவர்களைப் பற்றி விரிவாக எழுதினார். முதல் அத்தியாயம் முழுவதுமே எதிர்ப்பின்மையையும் செயலறு எதிர்ப்பையும் முன்னெடுத்தவர்களின் கருத்துகளையும் வரலாறுகளையும் தருகிறார்.

பின்னாளில் குவாக்கர்கள் (Quakers) சிலர் காந்திய இயக்கத்திலும் ஈடுபட்டனர். ஹொரேஸ் அலெக்சேண்டர், அகதா ஹாரிசன், மர்ஜோரி சைக்ஸ், லாரி பேக்கர் போன்றவர்கள் காந்தியுடன் தொடர்பில் வந்தனர்.

வில்லியம் லாய்ட் காரிசன் (William Lloyd Garrison) அமெரிக்கக் கறுப்பின மக்களின் விடுதலைக்காகப் போராடியவர். 1838ம் ஆண்டிலேயே அவர் அமைதி மாநாடு ஒன்றை நடத்தித் தீமையை வன்முறையால் எதிர்க்காமை குறித்த அறிக்கையை வெளியிட்டார். ‘எதிர்க்காமைக் கழகம்’ (Society for non-Resistance) என்ற இயக்கத்தைத் தொடங்கினார். ‘எதிர்க்காமை’ என்ற இதழையும் நடத்தினார். ஆனால் இந்த இதழ் அவர்களது கறுப்பின விடுதலை நடவடிக்கைகளுக்கு இடையூறாக மாறலாம் என்று அஞ்சி அதனை நிறுத்திவிட்டனர்.

அடின் பலோவ் (Adin Ballou) ‘எதிர்க்காமையின் விளக்க ஏடு’ ஒன்றை வெளியிட்டார். அரசாங்கத்திலும், தேர்தலிலும், ராணுவத்திலும், நீதிமன்றங்களிலும் பங்கெடுப்பது வன்முறையில் பங்கெடுப்பதற்கு இணையானது என்பதால் அவற்றைத் தவிர்க்கவேண்டும் என்றது அந்த ஏடு. ஐம்பது ஆண்டுகள் பலோவ் தொடர்ந்து எதிர்க்காமை குறித்து எழுதிவந்தார்.

ஜெர்மானியப் பேராசிரியர் ஒருவர் அதுவரை அச்சில் வெளிவராத செக் மொழி நூலைப் பற்றி எழுதினார். பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஹெல்சிட்ஸ்கி என்பவர் ‘நம்பிக்கை வலை’ என்ற அந்நூலை எழுதியிருந்தார். அது தல்ஸ்தோயின் ‘நான் நம்புவதென்ன’ நூலின் கருத்துகளைப் பெருமளவு ஒத்திருந்தது.

இக்குறிப்புகளையெல்லாம் ஓர் ஆய்வாளருக்குரிய பொறுமையுடனும் சிரத்தையுடனும் தொகுத்து முதல் அத்தியாயத்தில் வழங்கினார் தல்ஸ்தோய். அவரடைந்த முடிவுகளைப் பிறரும் அடைந்திருக்கிறார்கள் என்பதை நிறுவினார். அவருடைய எழுத்துகளைப் போலவே இவையும் பல காலமாக அதிகம் கண்டுகொள்ளப்படாமலே விடப்பட்டிருந்தன. தல்ஸ்தோயுமே முந்தைய நூலை எழுதிய பிறகுதான் அறிந்துகொண்டார்.

காந்தி பலோவின் நூலையும் காரிசனின் வாழ்க்கை வரலாற்றை நூலையும் தேடிப் படித்திருக்கிறார் என்பதற்கான குறிப்புகள் அவரது ஒரு கடிதத்திலும் கட்டுரையிலும் கிடைக்கின்றன. இந்திய சுயராச்சியம் நூலில் காந்தி, “இந்தியாவில் பொதுவாகவே வாழ்வின் எல்லாத் தளங்களிலும் செயலறு எதிர்ப்பைப் பயன்படுத்தியுள்ளனர். எங்களது ஆட்சியாளர்களிடம் மனக்குறை கொள்ளும்போது அவர்களோடு ஒத்துழைப்பதை நிறுத்திவிடுவோம். இதுவே செயலறு எதிர்ப்பு,” என்று எழுதினார். பிறகு இவ்வரிகளைத் தொடர்ந்து சென்ற காந்தியரான தரம்பால் பதினேழாம் நூற்றாண்டு முதல் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கம்வரை சென்னையிலும் காசியிலும் இந்தியாவின் பிற இடங்களிலும் நடந்த ஒத்துழையாமைப் போராட்டங்களைப் பற்றிய தகவல்களைத் தொகுத்திருக்கிறார். 12

ஒருபுறம், தல்ஸ்தோயின் கருத்துகளை ஏற்றும் வலுச்சேர்த்தும் சான்றளித்தும் வந்த மறுமொழிகள் ‘நான் நம்புவதென்ன’ நூலுக்குக் கிடைத்தபோதும், மறுபுறம் கடுமையான எதிர்வினைகளும் வந்தன. தடைசெய்யப்பட்ட அந்நூலுக்கு வந்த அந்த எதிர்வினைகள் எவையும் ரஷ்யாவில் தணிக்கை செய்யப்படவில்லை என்பதன் நகைமுரணை தல்ஸ்தோய் கவனிக்கத் தவறவில்லை. அப்படியான எதிர்வினைகளையும் இந்நூலில் விரிவாக அலசுகிறார். இருதரப்புகளில் இருந்து அவருக்கு எதிர்ப்புகள் வந்தன. முதல்தரப்பில் திருச்சபையைப் பின்பற்றும் கிறித்தவர்கள் இருந்தனர். இரண்டாம் தரப்பில் மதச்சார்பற்றவர்களும் இறைமறுப்பாளர்களும் சுதந்திரச் சிந்தனையாளர்களும் தாராளவாதிகளும் முற்போக்காளர்களும் இருந்தனர். தல்ஸ்தோயின் முதன்மையான குற்றச்சாட்டு வன்முறை மூலம் தீமையை எதிர்க்காமை என்ற இயேசுவின் கட்டளையைக் கிறித்தவர்கள் கடைப்பிடிக்காதது குறித்தது. இதற்கு முதல் தரப்பினரின் எதிர்வினைகள் பலவாறாக அமைந்தன:
வன்முறையைப் பயன்படுத்துவது கிறித்தவத்துக்கு எதிரானதன்று.
தீங்கிழைப்பவர்களைத் தடுக்க வன்முறை தேவைப்படுகிறது.
தீங்கிழைப்போரிடமிருந்து அண்டைஅயலாரைக் காப்பதற்காக வன்முறை தேவைப்படுகிறது.
இயேசு இக்கட்டளையிட்டது உண்மைதான்; ஆனால் இது அப்படியொன்றும் முதன்மையானதன்று.
இக்கேள்விக்கு வெகுகாலம் முன்னரே பதிலளிக்கப்பட்டுவிட்டது. இதை விவாதித்து நேரத்தை வீணடிக்கத் தேவையில்லை.

இவற்றைத் தொகுத்து, அலசி, விரிவான பதில்களை தல்ஸ்தோய் வழங்குகிறார். திருச்சபையின் போதகர்கள் விவிலியத்தின் வேறு கட்டளைகளை மீறுவதை ஆதரிப்பதில்லை. ஆனால் தீமையை எதிர்க்காமைக்கு மட்டும், ‘இதை அப்படியே நேரடிப் பொருளில் எடுத்துக்கொள்ளக்கூடாது; சில சந்தர்ப்பங்களில் இதற்கு நேரெதிராகச் செயல்படவேண்டியிருக்கும்; சட்டத்தை நாடியும், எதிர்த்துப் போராடியும் தண்டிக்கவேண்டியும் இருக்கும்; இக்கட்டளையை நிறைவேற்றுவது கடினமானது,’ என்று பல்வேறு சமாதானங்களைக் கூறி மழுப்புகிறார்கள். சிறைச்சாலைகள், போர்க்கலங்கள், படைகள், போர்கள் என்று எல்லாமே திருச்சபையால் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன. திருச்சபை போதகர்கள் இக்கட்டளையை மற்ற கட்டளைகளுக்கு இணையானதாகப் பார்க்கவில்லை என்பதே உண்மை. இதனை அவர்கள் அங்கீகரிக்கவில்லை என்பதை ஒப்புக்கொள்ளத் தயங்கி அதை மறைக்க முயல்கிறார்கள் என்று தல்ஸ்தோய் குற்றம்சாட்டுகிறார்.

இரண்டாம் தரப்பினர், மலைப்பொழிவைப் போன்ற வெகுளியான கொள்கை மனிதர்களை வழிநடத்தமுடியும் என்பதை நம்புவது தல்ஸ்தோய்க்கு இது குறித்துப் போதிய அறிதல் இன்மையையும், வரலாற்றைப் பற்றிய அறியாமையையும், மலைப்பொழிவைப் பின்பற்ற முயன்று தோல்வியுற்றவர்களின் வரலாற்றைப்பற்றிய அறியாமையும், மாந்தர்குலம் அடைந்துள்ள அறிவியல் வளர்ச்சியையும் பண்பாட்டின் மேன்மையையும் புரிந்துகொள்ளாமையையும் வெளிப்படுத்துகின்றன என்றனர். “கிறிஸ்துவின் கருத்துகள் நமக்குப் பயனற்றவை; தொழிலகக் காலத்துக்கு ஒவ்வாதவை,” என்று இறைமறுப்பாளர் இங்கர்சால் கூறினார்.

இவர்களது வாதங்களையும் தொகுத்துக்கொண்ட தல்ஸ்தோய், “கிறிஸ்துவின் கருத்துகள் பயனற்றவை; ஏனெனில், அவற்றை நடைமுறைப்படுத்தினால், வாழ்க்கை இன்றுபோல் தொடரமுடியாது,” என்பதைத்தான் அவர்கள் சொல்லாமற்சொல்கிறார்கள் என்பதாகப் புரிந்துகொண்டார்.

அவர்களைத் தல்ஸ்தோய் இவ்விதம் எதிர்கொள்கிறார் : “சிலர் நன்மை என்று நினைப்பதைப் பிறர் தீமை என்று கருதுகிறார்களே. இப்பூசலை எப்படித் தீர்ப்பது? நான் எதைத் தீமை என்று கருதுகிறேனோ அதுவே தீமை; என் எதிராளி அதை நன்மை என்று நினைத்தால் அது ஒரு பொருட்டல்ல என்பது இச்சிக்கலுக்கான தீர்வன்று. இரண்டே தீர்வுகள்தாம் உள்ளன. ஒன்று, எது தீமை என்பதை மறுக்கவியலாதபடி வரையறுப்பது. மற்றது, வன்முறையால் தீமையை எதிர்க்காமல் இருப்பது. முதல் வழி வரலாறு தொடங்கிய காலம் முதலே முயன்று பார்க்கப்பட்டுள்ளது; இதுவரை எந்த வெற்றிகரமான முடிவுகளுக்கும் இட்டுச்செல்லவில்லை. இரண்டாவது வழி – தீமைக்கான உலகளாவிய வரையறையை அடையும்வரை, நாம் தீமையென்று எண்ணுவதை வன்முறையால் எதிர்க்காமல் இருப்பது – அதுவே கிறிஸ்து வழங்கிய தீர்வு.”

கிறிஸ்துவின் பதில் நமக்கு நிறைவளிக்காது போகலாம். தீமைக்கு உலகளாவிய வரையறைகளை நாம் அடையலாம். ஆனால் இவ்வினாவே இல்லாதது போலவோ, இதற்கு ஏற்கனவே நாம் விடைகண்டுவிட்டது போலவோ நடிக்க முடியாது. திருச்சபையினராகட்டும் சுதந்திரச்சிந்தனை கொண்ட விமர்சகர்களாகட்டும், கிறிஸ்து கற்பித்ததைப் புரிந்துகொள்ளவில்லை அல்லது அவர் தீர்வு கண்ட வினாவையே இவர்கள் புரிந்துகொள்ளவில்லை என்கிறார் தல்ஸ்தோய்.

“நற்செய்தியின் சிறப்பை ஆத்திகர்களிடமிருந்து திருச்சபையும், நாத்திகர்களிடமிருந்து அறிவியலும் மறைக்கின்றன,” என்று இருதரப்பினரையும் இடித்துரைக்கிறார்.

(5)

இறையாட்சியை மண்ணில் நிகழ்த்தும் பொருட்டு தகர்த்தாக வேண்டிய அமைப்புகள் என்று சிலவற்றைத் தல்ஸ்தோய் அடையாளப்படுத்துகிறார். அவற்றில் தலையாயவை நிறுவனமாக்கப்பட்ட மதம், நாடு, அரசாட்சி, ராணுவம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள், தனியுடைமை ஆகியவை. நாமறிந்த வாழ்வை முற்றாகப் மாற்றியமைக்க வல்ல மாற்றங்கள் இவை. தனியுடைமை இருப்பதால் செல்வந்தர்களைக் காக்கும் பொருட்டு நீதிமன்றங்களும் சிறைச்சாலைகளும் தேவைப்படுகின்றன; ராணுவம் அமைகிறது; ராணுவத்தின் துணைகொண்டு அரசாங்கம் அமைகிறது; அரசு, தேசம் ஆகிய கருத்தாக்கங்களுக்கு மத நிறுவனங்கள் இறை அங்கீகாரம் வழங்குகின்றன. இவைதாம் வன்முறையின் ஊற்றுமுகமாக இருக்கின்றன.

மதங்களின் துணைகொண்டும் வன்முறையாலும் அரசுகள் எப்படி அதிகாரம் செலுத்தினவோ அதே போல அறிவியலின் துணைகொண்டும் அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் என்பதையும் தல்ஸ்தோய் கணிக்கிறார். ஆட்சியாளர்கள் ‘தந்திக் கட்டமைப்பு கொண்ட செங்கிஸ் கான்’களாவார்கள் என்று அஞ்சுகிறார்: “நம்காலத்தின் அரசாங்கங்கள் – அனைத்து வகை அரசாங்கங்களும், முற்றதிகார அரசாயினும் தாராளவாத அரசாயினும் – ஹெர்சென் மிகச்சரியாகக் கூறியதுபோல தந்தியுடைய செங்கிஸ் கான் ஆகிவிட்டன; இவை கொடுங்கோன்மையன்றிப் பிறிதொரு கொள்கையில்லாத வன்முறை அமைப்புகள்; அதே வேளையில் சுதந்திரமான சமத்துவமான மனிதர்களின் அமைதியான கூட்டுச் சமூக நடவடிக்கைகளுக்காக அறிவியலால் கண்டுபிடிக்கப்பட்ட அத்தனை கருவிகளையும் தங்கள் குடிகளை அடிமைப்படுத்தவும் ஒடுக்கவும் பயன்படுத்துகின்றன.” மேலும் 125 ஆண்டுகள் கழிந்திவிட்ட நிலையில் அரசு அடக்குமுறைக்கும் அறிவியலுக்கும் உள்ள தொடர்புகுறித்த தல்ஸ்தோயின் அச்சம் இன்று மேலும் பேருருவெடுத்திருக்கிறது.

“தேசங்களாகவே இதுவரை எல்லா நாடுகளும் வளர்ச்சியடைந்திருப்பதால், இந்த அமைப்பு மனிதகுலத்தின் வளர்ச்சிக்கு இன்றியமையாத ஏற்பாடு என்று மக்கள் நம்புகிறார்கள்; இது முழுவதும் மெய்ப்பிக்கப்பட்டுவிட்டது போலவும், வேறு சான்றே தேவையில்லை என்பதுபோலும் திடமாக நம்புகிறார்கள்,” என்று தேசம் என்ற கருத்தாக்கத்தையே உடைக்க முயல்கிறார். வேறு கட்டுரைகளிலும், நாட்டுப்பற்றில் நல்லது தீயது என்ற ஏதுமில்லை; எல்லா நாட்டுப்பற்றும் தீயதுதான்; நாட்டுப்பற்றே எல்லாப் போர்களையும் வன்முறையையும் நியாயப்படுத்துவதற்கு உதவியுள்ளது என்று சாடுகிறார்.13

படைவீரர்களின் எண்ணிக்கை இன்று பல கோடிகளை எட்டியுள்ளதன் காரணம் படைகள்கொண்டு அண்டை நாடுகளிடமிருந்து தற்காப்பதற்காக மட்டுமன்று; குடிகளின் புரட்சி எழுந்தால் அப்புரட்சியை அடக்குவதே படைகளின் முதன்மைப் பணி என்பதைப் பலவாறாகக் கூறுகிறார்.

“அரசுகள் அமைந்ததே தனிநபர்களுக்கிடையிலான பூசல்களின் கொடுமையிலிருந்து மனிதர்களுக்கு விடுதலை அளித்து, நிலையான அரசுமுறைமையால் பாதுகாப்பளிப்பதற்குத்தான். ஆனால், அவை அதைச் செய்யாமல், தனிமனிதர்களைப் பூசல்களுக்கு மீண்டும் உட்படுத்துகின்றன; தனிமனிதப் பூசல்களுக்குப் பதிலாக அண்டைநாடுகளுடனான போர்களைப் பதிலீடு செய்கின்றன. தனிமனிதனுக்கும் நாட்டுக்குமேகூட அழிவும் பாதிப்புகளும் ஏற்படக்கூடுமென்ற ஆபத்து அப்படியே விடப்படுகிறது,” என்றும் பொருமுகிறார். அதிலும் குறிப்பாக, அப்போது ஐரோப்பாவில் பரவலாக இருந்த கட்டாய ராணுவப் பணியை மிகக்கடுமையாகக் கடிந்து எழுதுகிறார்.

நீதிமன்றங்களும் சிறைச்சாலைகளும் எக்காரணத்துக்காக இயங்குகின்றனவோ அதற்கு முற்றிலும் மாறான விளைவுகளையே ஏற்படுத்துகின்றன. குற்றம் புரிந்தவர்களைத் திருத்துவதற்கும் உளமாற்றம் நிகழ்த்துவதற்கும் மாறாகத் தண்டிக்க மட்டுமே செய்கின்றன என்கிறார். புத்துயிர்ப்பு (Resurrection) நாவலில் இச்சிக்கலை மிக விரிவாக எடுத்தாண்டிருப்பார்.

அறிவியலை அரசுகள் தம் ஆற்றலைப் பெருக்கிக்கொள்ளவும் தற்காத்துக்கொள்ளவும் பயன்படுத்திக்கொள்வது போலவே, அரசுகளின் தேவையை அகற்ற மக்களும் பயன்படுத்தலாம் என்று மறுமுனையில் நின்றும் எண்ணினார். “ஒரு காலத்தில் மக்கள் மிகவும் சிதறியிருந்தபோது தகவல்களையும் எண்ணங்களையும் பரிமாறிக்கொள்ள அவர்களுக்கு எந்த வழிவகைகளும் இல்லை; அரசு என்ற அமைப்பு மையத்தில் இல்லாமல் வணிகம், பொருளாதாரம், கல்வி போன்ற எத்துறையிலும் ஒன்றிணைந்து ஒத்துழைக்கவும், பொதுச் செயல்பாடுகளுக்கு உடன்படவும் அவர்களால் இயலவில்லை. இணைந்து செயலாற்ற இயலாத நிலை இப்போது இல்லை. தகவல்தொடர்புக்கும் சிந்தனைப் பரிமாற்றத்துக்குமான வழிவகைகள் பெரிதும் விரிவடைந்துள்ளதால், அறிவியல் பொருளாதார அரசியல் நோக்கங்களுக்காக சங்கங்கள், கழகங்கள், குழுமங்கள், நிறுவனங்கள், மாநாடுகள் ஆகியவற்றை ஒருங்கிணைப்பதற்கு அரசுகளின் உதவிக்கான தேவையை மக்களால் முற்றிலும் உதறமுடிந்திருக்கிறது. உண்மையில், இந்நோக்கங்களை அடைய அரசாங்கங்கள் உதவியாக இருப்பதைவிடப் பெரும்பாலும் தடையாகவே இருக்கின்றன,” என்றார்.

“கிறித்தவம் அரசாட்சியை முடிவுக்குக் கொண்டுவரும்,” என்கிறார் தல்ஸ்தோய். “தொடக்கத்தில் அவ்வாறுதான் புரிந்துகொள்ளப்பட்டது. அதனால்தான் கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டார். கிறித்தவ அரசுகளை நியாயப்படுத்தத் தேவையற்ற எல்லோராலும் அவ்வாறுதான் புரிந்துகொள்ளப்பட்டது. புறவயமாகப் பெயரளவிலான கிறித்தவத்தை அரசுகளின் தலைவர்கள் தரிக்கத் தொடங்கியபோதிருந்துதான், அரசாட்சியைக் கிறித்தவத்துக்கு ஏற்புடையதாக நிறுவும் பல வஞ்சகமான கோட்பாடுகளை உருவாக்கத் தொடங்கினர். ஆனால் பணிவு, தீமையை மன்னித்தல், அன்பு ஆகியவற்றை நெறிகளாகக் கொண்ட உண்மையான கிறித்தவமும், பகட்டும், வன்முறையும், கொலைத்தண்டனைகளும், போர்களும் நிறைந்த அரசுகளும் ஒருபோதும் பொருந்த முடியாது என்பதைக் காண்பதை நம் காலத்தின் எந்தவொரு நேர்மையான தீவிர சிந்தனையுடைய மனிதரும் தவிர்க்கவியலாது. உண்மையான கிறித்தவத்தைக் கடைப்பிடிப்பதாகக் கூறினால், அரசாட்சியை அங்கீகரிப்பதே சாத்தியமில்லை; மேலும், கிறித்தவம் அரசாட்சியின் அடித்தளத்தையே அழிக்கிறது.”

“அப்படிக் கிறித்தவமும் அரசாட்சியும் இயைந்துபோகமுடியாது என்பது சரியென்றால், இயல்பாகவே அடுத்த கேள்வி எழுகிறது: மானுட நன்மைக்கு எது தேவையானது – அரசாட்சியா கிறித்தவமா? எதன்மூலம் மாந்தரின் மகிழ்ச்சி மிகும் – அரசாங்க அமைப்புகளைத் தக்கவைப்பதன் மூலமாகவா அவற்றை அழித்து கிறித்தவத்தை ஏற்பதன்மூலமாகவா?” என்ற வினவுகிறார். கிறித்தவத்துக்கு ஆதரவாக விடைகாணவும் செய்கிறார்.

(6)

தேசம் குறித்த கருத்துகளில் தல்ஸ்தோய்க்கும் காந்திக்கும் பல ஒற்றுமைகளும், குறிப்பிடத்தக்க வேற்றுமைகளும் இருந்தன. நாடு என்ற அமைப்பை காந்தி முற்றிலும் மறுக்கவில்லை. இந்தியா என்ற பெரும் நாடு உருவாவதில் அவரது பங்கு முதன்மையானது. ஆனால் பிற தேசியவாதிகளிடமிருந்தும் அவரைக் விலக்கிக்காட்டும் பல கருத்துகளையும் கொண்டிருந்தார்.

காந்தி தனது தேசபக்தி பிரித்தானியர்களுக்குப் பதிலாக இந்திய மன்னர்களின் காலடியில் மக்கள் நசுக்கப்படுவதை அனுமதிக்காது; தேசபக்தி என்ற சொல்லின் மூலம் அனைத்து மக்களின் நலனையுமே கருத்தில்கொள்வதாகவும் ஆங்கிலேயர்கள் மூலமாக அப்படியொரு நலம் விளைந்தால், அவர்களுக்குத் தலை வணங்கத் தயார் என்றும் சொன்னார். முற்றதிகாரத்தை எதிர்த்து இந்தியா சுதந்திரம் பெறுவதற்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்து இந்நிலத்துக்காகப் பாடுபடும் எந்த ஆங்கிலேயனையும் இந்தியனாக ஏற்று வரவேற்கத் தயார் என்று அறிவித்தார். 14

அதிகாரம் மையத்தில் குவியக்கூடாது. பரவலாக்கப்படவேண்டும். கிராமங்கள் தன்னாட்சி பெறவேண்டும். அதிகாரம் பரவலாக்கப்பட்ட அமைப்பைக் காக்க வன்முறை தேவையில்லை. ஹிட்லரே விரும்பினாலும் ஒரு லட்சம் கிராமங்களை அழிக்கமுடியாது. “ஒரு கிராமத்தானாக இருப்பதால், கிராமங்களின் நிலை எனக்குத் தெரியும். கிராமப் பொருளாதாரம் எனக்குத் தெரியும். மேலிருந்து வரும் அழுத்தம் கீழே உள்ளவர்களை நசுக்கிவிடுகிறது. நாம் செய்ய வேண்டியதெல்லாம், அவர்கள் முதுகுகளிலிருந்து இறங்குவதுதான்,” என்றார் காந்தி. இதில் கடைசி வரி அவர் தல்ஸ்தோயிடமிருந்து பெற்றது. அதைப் பல இடங்களில் மேற்கோளாகப் பயன்படுத்தியிருக்கிறார். “நம் அண்டைஅயலாரின் முதுகளிலிருந்து இறங்கிவிட்டாலே நம்மிடமிருந்து வேறெந்த உதவியும் பெறாமலே உலகம் சரியாகிவிடும் என்று தல்ஸ்தோய் ஒருமுறை கூறினார்.”15

“உலக நலனுக்காக நாடு மடிவது தேவையெனில் அப்படி மடிவதற்காக முதலில் நாடு சுதந்திரமாக இருக்க வேண்டும். அதனால்தான் நாடு சுதந்திரமடையவேண்டும் என்ற ஆசை எனக்குள்ளது – மனித இனம் வாழ்வதற்குத் தேவையெனில் நாடு முழுமையும் மடியட்டும். இன வெறுப்புக்கு இங்கு இடமே கிடையாது. அதுவே நம் தேசியமாக இருக்கட்டும்,” என்றார். “நம் சேவைகளை தேச எல்லைகளைக் கடந்து வழங்குவதற்கு எந்தத் தடையும் இல்லை. கடவுள் இந்த எல்லைகளை உருவாக்கவில்லை,” என்ற ஒரு முக்கியமான கருத்தையும் தெரிவித்தார். “அகிம்சை முறையில் தனது சுதந்திரத்தையும் காத்து, அதன் மூலமாக தனது நாட்டின் சுதந்திரத்தையும், இறுதியில் உலக மக்கள் அனைவரின் சுதந்திரத்தையும் காப்பவனே உண்மையான ஜனநாயகவாதி,” என்று ஒரு ஜனநாயக தேசியத்துக்கான வரையறையை காந்தி தந்தார்.14

(7)

தல்ஸ்தோய் கிறித்தவர்களின் அடிப்படை நம்பிக்கைகளைக் கேள்விக்குட்படுத்துகிறார். திரித்துவத்தையும் (Trinity), இயேசு ஆண்டவனின் மகன் என்பதையும், திருத்தூதர்களில் தூய ஆவி செயலாற்றுதலையும், திருவெளிப்பாடுகளையும் (Revelations), அற்புதச்செயல்களையும், உயிர்த்தெழுதலையும் புறம்தள்ளுகிறார் தல்ஸ்தோய். திருச்சபைகளை கிறிஸ்து நிறுவவில்லை என்றும், தங்களின் இருப்பை நியாயப்படுத்தவும் தக்கவைக்கவும் திருச்சபைகள் கிறித்தவத்தைத் திரித்துவிட்டனர் என்றும் கூறுகிறார். காட்ஃபிரைட் ஆர்னால்ட் (Gottfried Arnold) என்பவர் 1729ல் எழுதிய அதிகம் அறியப்படாத ஒரு நூலைப் பற்றி தல்ஸ்தோய் குறிப்பிடுகிறார். அது சமயநிந்தனைகளின் வரலாற்றைச் சொல்வதன் மூலமாக கிறித்தவத்தின் வரலாற்றை எழுத முயன்ற நூல் என்கிறார்.

“சரியான காரணத்துடனேயே வால்டையர் திருச்சபை இகழ்பெற்றது என்கிறார்: […] சரியான காரணத்துடனேயே திருச்சபையின் வரலாறு மிகப்பெரும் கொடுமைகள் பயங்கரங்கள் ஆகியவற்றின் வரலாறாக உள்ளது,” என்றார். ”திருச்சபை ஒரு கிறித்தவ நிறுவனம் என்ற தவறான பார்வையும் சமயநிந்தனை மீது வெறுப்பும் ஊட்டப்பட்டு வளர்க்கப்பட்ட நமக்கு இது விந்தையாகத்தான் தோன்றும்: சமயநிந்தனை என்று எது அழைக்கப்பட்டதோ அதில்தான் உண்மையான நகர்வு இருந்தது; அதாவது, அதில் உண்மையான கிறித்தவம் இருந்தது; அச்சமயநிந்தனைகள் தம் நகர்வை நிறுத்திவிட்டு தாமும் வேறு நிலையான திருச்சபைகளாக மாறி இறுகியபோது அவையும் உண்மையான கிறித்தவமாக நீடிக்காமற் போயின.”

ஏதேனும் மதச்சின்னங்களையோ சிலைகளையோ திருச்சபையையோ குறைகூறினால் சமயநிந்தனை புரிவதாகச் சொல்லிக் கண்டிக்கவும் தண்டிக்கவும் செய்வார்கள். ஆனால், கிறிஸ்துவின் முதன்மையான கட்டளையான தீமையை எதிர்க்காமையைப் பழித்தும் பகடிசெய்தும் பேசினால் திருச்சபையினர் எதிர்ப்பதில்லை; ஊக்குவிக்கவும்கூடச் செய்கிறனர் என்பதில் உள்ள அவலமுரணைச் சுட்டிக்காட்டுகிறார்.

“மனிதன் தனது மதத்தைத் தவிர வேறு எந்த மாற்று மதத்தினரையும் பார்க்காமிலிருந்தது வரை எல்லாம் சரிதான்; தனது மதம்தான் ஒரே உண்மையான வடிவம் என்று நம்பியிருந்தான். ஆனால் இப்போது தொடர்ந்து நடப்பதுபோல, சிந்திக்கும் திறனுள்ள எந்தவொரு மனிதனும் பிற மதங்களைச் சேர்ந்தவர்களோடு – தம்மளவே நல்லவர்களாகவும் தீயவர்களாகவும் இருப்பவர்களோடு – தொடர்புக்கு வந்தால், தனது நம்பிக்கையின் உண்மைத்தன்மையை ஐயமுறத் தொடங்கிவிடுவான். இந்நாட்களில், முழு அறியாமையிலுள்ள ஒரு மனிதனோ, சமயம் தேரும் வினாக்களில் துளியும் ஆர்வமில்லாதவனோதான் திருச்சபையில் நம்பிக்கையுடையவனாக இருக்கமுடியும்,” என்று தயங்காமல் கூறுகிறார்.

குழந்தைகளை ஏமாற்றுவதுதான் திருச்சபைகளின் பணிகளிலேயே மிக மோசமானது என்கிறார் தல்ஸ்தோய். தாங்களே நம்பாத கதைகளை எல்லாம் குழந்தைகளிடம் விதைத்துவிடுகிறார்கள். அதுவே குழந்தைகளின் இயல்போடு கலந்துவிடுகிறது. வாழ்வின் முதன்மையான மெய்ப்பொருளைப் பற்றியும் ஏமாற்றியேவிடுகிறார்கள். பிறகு அவர்கள் வளரும்போது நடைமுறை உண்மைகளும் அறிவியலும் அவர்களுக்குத் தெரியவரும்போது, அவற்றுக்கும் தங்கள் நம்பிக்கைகளுக்கும் உள்ள முரண்களைக் களைவதற்குத் தடுமாறுகிறார்கள்.

“திருச்சபை மக்களை அறிதுயிலில் ஆழ்த்துவதையும், குழந்தைகளை ஏமாற்றுவதையும் சிறு பொழுதுக்கேனும் நிறுத்தட்டும்; மனிதர்கள் உடனே கிறிஸ்து கற்பித்ததைப் புரிந்துகொள்வார்கள். ஆனால் அப்படிப் புரிந்துகொள்ளும்போது, அதுவே திருச்சபைகளின் இறுதியாகவும் அவற்றின் ஆதிக்கத்தின் முடிவாகவும் அமைந்துவிடும். எனவே திருச்சபைகள் ஒரு நொடிப்பொழுதும் வளர்ந்தவர்களை அறிதுயிலில் ஆழ்த்தும், குழந்தைகளை ஏமாற்றும் தொழிலில் காட்டும் ஊக்கத்தைத் தளரவிடமாட்டார்கள். மனிதர்களிடம் கிறிஸ்துவின் போதனைகளைப் பற்றிய தவறான புரிதலை ஏற்படுத்தி, நம்பிக்கையுள்ளவர்கள் என்றறியப்படுபவர்களில் பெரும்பாலானவர்களிடம் மெய்யான புரிதல் ஏற்பாடாமல் தடுப்பதுதான் திருச்சபைகளின் பணி,” என்று தல்ஸ்தோய் திருச்சபைகள் மீதான தாக்குதலைத் தொடர்கிறார். உலகின் எல்லா மதங்களுக்கும் மத நிறுவனங்களுக்கும் அவர் சொல்வது பொருந்தும் என்பது வெளிப்படை.

மெய்யான கிறித்தவத்தைப் பற்றிய தவறான புரிதலுக்குத் திருச்சபைகள் ஒரு காரணமெனில், மதத்தைப் பற்றிய அறிவியலின் பிழையான புரிதலை மறுகாரணமாகக் காண்கிறார் தல்ஸ்தோய். “முதலாவதாக, அறிவியல் கற்பனை செய்வதுபோல, மதம் என்பது ஒருகாலத்தில் மானுட வளர்ச்சியோடு ஒத்தமைந்து பின்னர் பின்தங்கிவிட்ட ஒரு நெறிமுறை அன்று. அது எப்போதும் மானுட வாழ்வில் உட்பொதிந்த நெறிமுறை; எப்போதும்போல் இப்போதும் அது மானுடத்துட் பொதிந்தே உள்ளது; நீக்கமுடியாததாகவே உள்ளது. இரண்டாவதாக, மதக் கோட்பாடுகளும் வழக்கங்களும் எதிர்காலத்துக்குரியவை; கடந்தகாலத்தைச் சேர்ந்தவை அல்ல; எனவே, கடந்தகால நெறிமுறைகளை ஆராய்வதன் மூலம் மதத்தின் சாரத்தை உள்வாங்க இயலாது என்பது தெளிவாகிறது,” என்கிறார்.

“தாழ்நிலைப் புரிதலில் உள்ளவர்கள் உயர்நிலையில் உள்ள கருத்துகளோடு தொடர்புக்கு வரும்போது, அவற்றைப் புரிந்து கொள்ள முயலாமல், அப்பொருளைக் காண்பதற்கேற்ற நோக்குநிலைக்குத் தங்களை உயர்த்தாமல், தங்கள் தாழ்நிலையில் இருந்தே அதை எடைப்போடுகின்றனர்; எந்த அளவுக்குத் தாங்கள் பேசுவதைப் பற்றிக் குறைவாகப் புரிந்துகொள்கிறார்களோ, அந்த அளவுக்கு அதைக் குறித்த தீர்ப்புகளை உறுதியுடனும் தயக்கமின்றியும் வழங்குகிறார்கள்,” என்றும் சொல்கிறார்.

தல்ஸ்தோய் திருச்சபையோடும் அறிவியலாளர்களோடும் ஒரே நேரத்தில் வாதிடுகிறார். இவரை எந்தக் குப்பியிலும் அடைத்துப் புரிந்துகொள்வது கடினம்தான். தல்ஸ்தோயின் கடவுள் எத்தகையவர் என்று வகுப்பதும் எளிதான செயலாக இல்லை.

காந்தி உண்மையே கடவுள் என்பார். தல்ஸ்தோய் அன்பே கடவுள் என்கிறார். காந்திக்கு வீடுபேற்றிலும் மறுபிறப்பிலும் நம்பிக்கை இருந்தது. தல்ஸ்தோய் அவற்றை நிராகரித்தார். தல்ஸ்தோய் ஓர் இந்துவுக்குக் கடிதத்தில் மறுபிறப்புக் கொள்கையை மறுத்து எழுதியவற்றை, தான் அக்கடிதத்தைப் பதிப்பிக்கும்போது நீக்கிவிட அனுமதி கோரி அவருக்கு எழுதிய மடலில் காந்தி விண்ணப்பித்திருந்தார். “மறுபிறப்பைப் பொருத்தவரை, என்னளவில் நான் எதையும் விடமாட்டேன். நிலைபெற்ற ஆன்மா மீதான நம்பிக்கை, புனித மெய்மை மீதும் அன்பு மீதுமான நம்பிக்கை ஆகியவை அளவுக்கு மனிதர்களிடம் மறுபிறப்பு குறித்த நம்பிக்கை ஒருபோதும் அழமான வேர் பிடித்து அவர்களைக் கட்டுப்படுத்த இயலாது. எனினும், நீங்கள் விரும்பினால் அந்தப் பத்திகளை நீக்கிக்கொள்ள உங்களுக்காக ஒப்புக்கொள்கிறேன்,” என்று பதிலிறுத்தார். இக்கூற்றிலும் தனது நம்பிக்கையைப் பற்றி அவர் சொல்லவில்லை. மனிதர்களைக் கட்டுப்படுத்தும் நம்பிக்கை குறித்தே பேசுகிறார்.

இந்திய, சீன, யூத, கிரேக்க, ரோமானிய தத்துவங்கள் என்று எல்லா சமயங்களாலும் அன்புநெறி இயம்பப்பட்டிருக்கிறது. ஆனால் கிறிஸ்துதான் அதை மிகத்தெளிவாக வெளிப்படுத்தினார். உலகியல் நன்மைகளுக்காகவே மக்கள் வாழ்வது இயல்பானது. அந்த நன்மைகளை வன்முறையால் காக்க அனுமதிப்பது ஆபத்தானது. அன்பு வன்முறைக்குத் துணையாக முடியாது என்பதை இயேசு உறுதியாக அறிந்திருந்தார். எனவேதான் எந்நிலையிலும் வன்முறையை அனுமதிப்பதை அவர் ஏற்கவில்லை என்று காந்திக்கு தல்ஸ்தோய் எழுதிய இறுதிக் கடிதத்தில் குறிப்பிடுகிறார்.

காந்திக்கு வழிபாட்டில் நம்பிக்கை இருந்தது. கூட்டு வழிபாட்டின் மூலமும் அப்போது அவர் ஆற்றிய உரைகள் மூலமும் அவரது இயக்கத்துக்குப் பெரும் வலிமை சேர்த்தார். இந்நூல்களைப் படிக்கும்போது தல்ஸ்தோய்க்கு வழிபாட்டிலும் நம்பிக்கை இருந்ததாகத் தோன்றவில்லை; தேவாலயங்களின் வழிபாட்டுப் பாடல்களையுமே இடித்துரைக்கவே செய்கிறார். தல்ஸ்தோய் கடவுளிடம் எதையுமே எதிர்பார்ப்பதில்லை. அறிவியலுக்கும் பகுத்தறிவுக்கும் உட்பட்டே அவரது நம்பிக்கை இயங்குகிறது. கடவுளின் குரல் கேட்டதாகவோ கடவுள் தண்டிப்பார் என்றோ மன்னிப்பார் என்றோ அரவணைப்பார் என்றோ எதுவுமே சொல்வதில்லை. கடவுளின் குரலாக மனிதர்களிடம் இருப்பது அவர்களது மனச்சான்றும் அன்பும் மட்டுமே. தல்ஸ்தோய்க்கும் கடவுளுக்குமான உறவு முழுக்க முழுக்க எதிர்பார்ப்புகளற்ற ஒன்றாக உள்ளது.

தல்ஸ்தோயின் தனிப்பட்ட கடவுள் நம்பிக்கையைவிட மானுடம் தழுவிய அன்புநெறியை நிலைநாட்ட கடவுளின் தேவையை அவர் உரைக்கும் விதம் சுவையானது.

ஒரு மனிதன் தன்னைத்தான் விரும்புவது, தன் குடியின்மீதும் இனத்தின் மீதும் அன்புசெலுத்துவதும் பொதுவாக நிகழ்வதே. தன் மதத்தினர் மீதும் தன் மொழியினர் மீதும் அன்பு கொள்ளுதலும் இயல்வதே. ஆனால் துருக்கி, ஜெர்மனி, இங்கிலாந்து, ஆஸ்திரியா, ரஷ்யா என்று ஒரு நாட்டின் மீது அன்பு கொள்ளுதல் – அது கிட்டத்தட்ட இயலாத ஒன்று. மிகுந்த முனைப்புடன் இது வளர்க்கப்படுகிறதெனினும், இது ஒரு கற்பனையான உணர்வுதான்; நிதர்சனத்தில் அதற்கு இடமில்லை என்கிறார் தல்ஸ்தோய். “மானுடம்! மானுடத்தின் வரையறை என்ன? எங்கே தொடங்கி எங்கே முடிகிறது? காட்டாள், முட்டாள், குடிவெறியன், பித்தன் போன்றோருடன் மானுடம் முடிகிறதா? கீழ்மக்களை மானுடத்திலிருந்து விலக்கிவிட்டால் எங்கே கோடு போடுவது? அமெரிக்கர்கள் போல கறுப்பினத்தவரையும், சில ஆங்கிலேயர் போல இந்துக்களையும், வேறு சிலரைப் போல யூதர்களையும் விலக்கலாமா? எல்லா மனிதர்களையும் எந்த விலக்கும் இல்லாமல் சேர்த்துக்கொண்டால், உயர்விலங்குகளையும் சேர்க்கலாகாதா – அவற்றில் பலவும் மனித இனத்தின் கீழானவர்களைவிட உயர்வானவைதாமே?” என்று மானுடத்தை விரும்புகிறவன் உண்மையில் யார்யாரை விரும்புவான் என்ற ஐயத்தை எழுப்புகிறார். மானுடம் என்ற திண்ணமான கருத்தாக்கம் ஒன்றில்லை. மானுடத்தை விரும்புவது அற்புதமானது; ஆனால் அது ஒருபோதும் சாத்தியமாகாது. ஏனெனில் வாழ்க்கை குறித்த தனிமனிதப் பார்வையோ சமூகப் பார்வையோ தேசத்தைத் தாண்டி உயர்வதில்லை என்கிறார்.

“கிறித்தவக் கோட்பாடு மனிதனுக்கு அவனது ஆன்மாவின் சாரம் அன்பே என்பதைக் காட்டுகிறது – அவனது மகிழ்ச்சி இப்பொருளையோ அப்பொருளையோ நேசிப்பதைச் சார்ந்திருப்பதில்லை; முழுமையை – கடவுளை – நேசிப்பதைச் சார்ந்துள்ளது. கடவுளையே அவன் தனக்குள் அன்பென்று உணர்கிறான்; எனவே எல்லாப் பொருள்களையும் எல்லா மனிதர்களையும் நேசிக்கிறான்,” என்று இறைவனின் இருப்புக்கும் தேவைக்கும் புதிய பொருள் கற்பிக்கிறார். உட்கலந்த சோதியை, என்னிலே இருந்தஒன்றை (அன்பென்று) யானறிந்து கொண்டபின் மானுடத்தை நேசிக்க முடியும்; வாடிய பயிரைக் கண்டும் வாடலாம் என்று தமிழ்ச்சித்தர் சொற்களில் தல்ஸ்தோயைக் காணலாம்.

(8)

தல்ஸ்தோயின் கிறித்தவம் மனித வாழ்க்கைமுறையைப் புரட்டிப் போடக்கூடிய அடிப்படை மாற்றங்களைக் கோருகிறது. பிளாட்டோவும் அரிஸ்டாட்டிலும் கொண்டிருந்த அறக் கொள்களைகளுக்கு முற்றிலும் எதிரானதாக அடிமைமுறை இருந்தது; எனினும் இருவரும் அதை நோக்கவில்லை. ஏனெனில் அடிமைமுறையை ஒழிப்பதென்பது அவர்கள் வாழ்ந்துவந்த வாழ்க்கைமுறையைச் சிதைக்கவல்லது. அதையே நாம் நவீன உலகிலும் காண்கிறோம். நம் காலத்தில் பாட்டாளி வர்க்கத்தினரின் நிலை பண்டைய காலத்தில் போரில் வெற்றிகொள்ளப்பட்ட அடிமைகளின் நிலையைவிட மேலானதாக இல்லை என்றார் தல்ஸ்தோய். ஆனால் அன்றைக்கு அடிமைகள் தங்களை அடிமைகள் என்றும், மன்னர்கள் இறைவழி வந்தவர்கள் என்றும் இது ஆண்டவன் ஆணை என்றும் அறத்தாறு இதுவென்றும் கருதினர்.

“இன்றைய மனிதன் சகோதரத்துவம், மானுடம், நீதி, அறிவியல் என்ற கொள்கைகளை ஆதரித்துவிட்டு, பாட்டாளி மக்களின் ஒடுக்குமுறையைச் சார்ந்தே வாழ்கிறான்; இதை அவனே கண்டிக்கவும் செய்கிறான்; எனினும் அவனது முழு வாழ்வும் இந்த ஒடுக்குமுறையால் கிடைத்த ஆதாயங்களாலேயே அமைந்துள்ளது. மேலும் அவனது நம்பிக்கைக்கு முற்றிலும் மாறான இதே நிலையைப் பேணுவதற்கு எல்லா முயற்சிகளையும் எடுக்கிறான்.”

“வரலாற்றின் உண்மைகளை நினைவுகூர்வோம் – பல்வேறு அரசவழியினரின் வரலாற்றையன்று, மெய்யான வரலாற்றை, பெரும்பான்மையினரை மிகச்சிலர் ஒடுக்கிய வரலாற்றை – ஏழைகளோடு ஒப்புநோக்க, செல்வந்தர்களிடமிருந்த அனுகூலங்கள் என்பவை சாட்டையடியையும், சிறைப்படுத்தலையும், கொலையையும் சார்ந்திருந்தவைதாம்.”

“இன்று ஒருவரது கருத்துகளும் கல்விநிலையும் என்னவாக இருந்தாலும், அவரது தாராளவாதத்தின் நிறம் என்னவாக இருந்தாலும், மெய்யியலோ அறிவியலோ பொருளாதாரமோ எந்தச் சிந்தனைப் பள்ளியைச் சார்ந்திருந்தாலும், எத்தனை அறியாமையுடனும் மூடநம்பிக்கையுடனும் இருந்தாலும், வாழ்வுக்கும் வாழ்வின் நல்லவை அனைத்துக்கும் எல்லாருக்கும் சம உரிமை இருக்கின்றதென்றும் மக்களில் ஒரு தரப்பினர் மறுதரப்பினரைவிட மேலானவரோ கீழானவரோ அல்லர் என்றும் எல்லாரும் ஒன்றே என்றும் ஒவ்வொருவருக்கும் தெரியும். எல்லாரும் இதை ஐயம்திரிபற அறிவார்கள்; எல்லாரும் இதைத் தங்கள் உடலுயிராலும் உணர்கிறார்கள். எனினும் அதே வேளையில் தம்மைச் சுற்றிலும் மனிதர்கள் இரண்டு சாதிகளாகப் பிரிந்திருப்பதைக் காண்கிறார்கள் – உழைத்தும், ஒடுக்கப்பட்டும், ஏழ்மையில் உழன்றும், அல்லற்பட்டும் ஒரு சாதி; ஒடுக்கியும், செல்வச்செழிப்பில் திளைத்தும், ஊதாரிகளாகவும் மறு சாதி. இதைக் காண்பதோடு மட்டுமல்லாமல், தாமாக விரும்பியோ வலிந்தோ, ஏதேனும் வகையில் ஒவ்வொருவரும் தம் மனச்சான்று கடிந்துகொள்ளும் இந்தப் பாகுபாட்டைப் பேணுவதில் பங்கெடுக்கின்றனர். இந்த முரண் பற்றிய உணர்வினாலும் அதைப் பேணுவதில் இருக்கும் தமது பங்கினாலும் ஒவ்வொருவரும் அல்லற்படுகின்றனர். ஆண்டையோ அடிமையோ, இன்றைய மனிதர் தமது மனச்சான்றுக்கும் உண்மை வாழ்வுக்கும் இடையே உள்ள இடர்ப்படுத்தும் மாறுபாட்டை எப்போதும் உணர்ந்துகொண்டிருப்பதைத் தவிர்க்கவியலாது,” என்கிறார்.

இத்தகைய துயரத்திலிருந்து தப்புவதற்கு ஒரே வழி, மனச்சான்றை மழுங்கடிப்பது; ஆனால் மனச்சான்றை மழுங்கடிப்பதில் வெற்றிபெறுபவர்பகளும் தங்கள் அச்சங்களை வெல்லமுடிவதில்லை. அச்சத்தாலும் வெறுப்பாலும் நிறைந்துவிடுகிறார்கள். உழைக்கும் மக்களும் தாங்கள் உறிஞ்சப்படுகிறோம் என்றறிவார்கள் என்பதும் இவர்களுக்குத் தெரியும். செல்வர் தம் செல்வத்தை பண்டைய மனிதர்கள் போல உரிமையுணர்வுடன் அனுபவிக்க முடியாது. உளச்சான்றின் உறுத்தல்களாலோ அச்சத்தாலோ பீடிக்கப்படுகின்றனர். வசதிபடைத்தவர் தாம் வசதிபடைத்தவர் என்ற உண்மையாலேயே குற்றமிழைப்பதை உணர்கிறார்கள். அவர்களது குற்றவுணர்வைக் குறைக்க அறிவியலுக்கும் கலைக்கும் கொடை அளிக்கிறார்கள்; தியாகம் செய்கிறார்கள் – முன்னாளில் தேவாலயங்களுக்குப் பலியிட்டுத் தமது பாவங்களைக் கழுவியதுபோல, என்கிறார் தல்ஸ்தோய்.

இந்த சமச்சீரற்ற நிலையைக் கலைந்துபோகாமல் காக்கவே அரசாங்கமும் நீதிமன்றங்களும் படைகளும் போர்களும் தேவைப்படுகின்றன.

ஐரோப்பாவில் ஒரு பெரும்போரும் வன்முறைப் புரட்சியும் நிகழ்வதற்கான சூழல் உருவாகிவந்ததை தல்ஸ்தோய் மிகச்சரியாகவே கணித்திருக்கிறார். ஜெர்மனியின் மன்னனாக இருந்த வில்லியம் (William II) குறித்தும் ஒரு துல்லியமான சித்திரத்தை வழங்குகிறார். “இந்த மனிதர் சொல்வதைத்தான் சூழ்மதி கொண்ட எல்லா ஆட்சியாளர்களும் நினைக்கிறார்கள்; ஆனால் கவனமாக மறைக்கிறார்கள். ராணுவ வீரர்கள் அனைவரும் அவரது சேவையில் இருப்பதாகவும், அவர் பணித்ததைச் செய்வார்களென்றும், அவரது நலனுக்காகத் தங்கள் உடன்பிறந்தாரையும் தந்தையரையும் கொல்லத் துணிவார்கள் என்றும் வெளிப்படையாகவே கூறுகிறார். மனிதர்கள் ராணுவத்தில் சேரும்போது புரியத் தயாராக இருக்கும் எல்லாக் கொடூரங்களையும் குற்றங்களையும், கீழ்ப்படிதலை உறுதியளித்து அவர்கள் வீழ்ந்திடும் கீழ்மையின் ஆழங்களையும் வில்லியம் மூர்க்கமான சொற்களில் நேரடியாகவே அம்பலப்படுத்துகிறார். ஒரு துணிந்த அறிதுயில்வல்லுனன் போல அறிதுயிலாழ்ந்தவனின் உணர்வின்மையின் அளவைச் சோதித்துப் பார்க்கிறார். செந்தழல் இரும்பால் அவனது சருமத்தைத் தொடுகிறார்; சருமம் கருகிச் சுட்டெரிகிறது; எனினும் துயில்பவன் விழிப்பதில்லை.” முதலாம் உலகப்போர் மூள்வதற்கு இருபதாண்டுகளுக்குமுன் இந்த எச்சரிக்கை மணியை ஒலித்திருக்கிறார் தல்ஸ்தோய். ஆனால் வில்லியம்மின் தலைமையில் ஜெர்மனி முதலாம் உலகப்போருக்குள் தள்ளப்பட்டு பெருஞ்சேதங்களையும் தோல்வியையும் சந்தித்தது. இரண்டாம் உலகப்போருக்குத் தயாரானது.

கட்டாயமாகப் பணியமர்த்தப்பட்ட ஒரு படைவீரனின் நோக்கிலிருந்தும் இந்நிலையைக் காண்கிறார் தல்ஸ்தோய். “மூடத் தலைவர் எவரேனும் முட்டாள்தனமாக ஏதேனும் கூறி, மறுதரப்பிலும் எவரேனும் அதே உணர்வோடு மறுமொழி தந்தால், கொல்லப்படுவதற்கு ஆயத்தமாகவேண்டும். பிறரைக் கொல்லவும் துணிய வேண்டும் – எனக்கு எத்தீங்கும் இழைத்திருக்காதோரை; என் அன்புக்குரியோரை. இது நடப்பதற்கரிய நிகழ்ச்சியன்று. இதற்காகவே அணியமாகிக்கொண்டிருக்கிறோம். இது நிகழக்கூடியது மட்டுமன்று; நிகழ்ந்தே தீரும் என்ற உறுதிப்பாடு பூண்டுள்ளது. இதைத் தெளிவாக உணர்ந்துகொள்வது ஒரு மனிதனை நிலையழிந்து போகச்செய்து, தன்னையே சுட்டு மாய்த்துக்கொள்ளச் செய்கிறது. இதுதான் நடக்கவும் செய்கிறது; குறிப்பாக, ராணுவ வீரர்களிடையே. ஒரு கணம் தன்னுணர்வு பெற்றுவிட்டால் இத்தகைய முடிவை நோக்கி உந்தித்தள்ளப்படுவார்கள்.”

இந்திய ராணுவத்தில் கடந்த பத்தாண்டுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்துள்ளனர். இது போர்களிலும் பிற தாக்குதல்களிலும் இறந்தவர்களின் எண்ணிக்கையைவிட அதிகம்.

(9)

தல்ஸ்தோய் காட்டும் கிறித்தவத்தின் அன்புவழியை உலகெலாம் தழுவுவதற்கான வழிகள் சிலவற்றையும் முன்னிடுகிறார்.

மாற்றம் தனிமனிதனிலிருந்து தொடங்கவேண்டும் என்கிறார். பொருள்முதல்வாதக் கொள்கையை மறுக்கிறார். படிபடியாகப் புறச்சூழலை மாற்றுவதன் மூலமே மனித வாழ்வு மேம்படும் என்றும் புறச்சூழலை மாற்றுவதற்கே நாம் முதன்மையாக முயலவேண்டும் என்றும் கூறுவதை மறுக்கிறார். தனிமனிதன் மெய்மையை ஏற்றுப் பின்பற்றிப் பிறரையும் ஊக்குவிப்பதிலிருந்தே மாற்றம் தொடங்கும் என்பதே தல்ஸ்தோயின் துணிபு.

“பறக்கக்கூடிய ஒவ்வொரு தேனீயும் பறக்க முயலாமலே இருந்தால், பிற தேனீக்களுக்கும் தூண்டுதல் இருக்காது; தேனீத்திரள் நிலைமாறாது. வாழ்க்கை குறித்த கிறித்தவக் கருத்தாக்கத்தை ஊன்றியறிந்த ஒருவர் மற்றவர்களும் அதையொட்டி வாழத்தொடங்குவதற்காகக் காத்திருந்தால், மாந்தர் இனம் தன் நிலையிலிருந்து மாறவே மாறாது. ஆனால் ஒற்றைத் தேனீ தன் சிறகுகளை விரித்துப் புறப்பட்டுப் பறந்துவிட்டால், அவளுக்குப் பின்னால் இன்னொன்று, இன்னொன்று என்று கிளம்பும்; கூட்டில் பிணைந்து ஒடுங்கியிருந்த தொகை சுதந்திரமாகப் பறக்கும் தேனீக்களின் திரளாகிவிடும். அதேபோல, கிறித்தவம் கற்றுத்தரும் வழியில் ஒற்றை ஆள் வாழ்க்கையைப் பார்க்கட்டும், அவன் பின் இன்னொருவன், மேலுமொருவன் அவ்வாறே செய்யட்டும்; நாடு என்ற கருத்தாக்கத்தின்படி அமைந்த வாழ்க்கை எனும் மாய வட்டத்திலிருந்து தப்ப வழியே இல்லை என்னும் நிலைமாறி, அதை உடைத்து வெளியேறுவர்.”

பேரரசுகளை அமைப்பதனூடாக முடியாத செயலை தனிமனித முன்மாதிரிகளை ஏற்படுத்திச் சாதிக்கமுடியும் என்கிறார்.
“கிறித்தவ உலகத்துக்கு வெளியில் உள்ள எல்லா நாடுகளையும் கானுறைவோரையும் […] கிறித்தவத்தின் கீழ் கொண்டுவர ஒரே வழிதான் உள்ளது. இந்நாடுகளில் கிறித்தவ லட்சிய சமூகத்தைப் பற்றிப் பரப்பவேண்டும்; (கிறித்தவ நாடுகளில்) கிறித்தவ வாழ்வு, கிறித்தவச் செயல்பாடுகள், கிறித்தவ முன்னுதாரணங்கள் ஆகியவற்றின் மூலம் மட்டுமே அதை அடைய முடியும்.”

எந்நிலையிலும் ராணுவத்தில் சேரவும், அரசுக்குக் கீழ்ப்படியும் உறுதிமொழிகளை எடுக்கவும், நீதிமன்றங்களில் பணியாற்றவும், வன்முறைக்குப் பயன்படும் வரிகளைக் கட்டவும் வசூலிக்கவும், தீமையை வன்முறையால் எதிர்க்கவும் மறுக்கவேண்டும் என்கிறார். தனியுடைமையிலிருந்து விடுதலை பெற வேண்டும் – நிலக்கிழார்கள் தமது நிலங்கள் மொத்தத்தையுமோ பெரும்பகுதியையோ உழுபவர்களுக்கே கொடுத்துவிடவேண்டும் என்கிறார்.

குறைந்தபட்சமாக, ஒவ்வொருவரும் தம் மனச்சாட்சிக்குச் செவிசாய்க்கவேண்டும். தாம் அங்கம் வகிக்கும் அமைப்பில் உட்பொதிந்த அநீதியை உணரவேண்டும். அதில் தமது பங்கு என்ன என்பதை அறியவேண்டும். அரசு அலுவலர்களும் ராணுவ வீரர்களும் பிறர்மீது வன்முறை செலுத்தும்படியான ஆணைகளைப் புறந்தள்ள வேண்டும். உண்மையை உணர வேண்டும். உணர்ந்ததன்படிச் செயல்படுவதை நோக்கி நகரத் தொடங்கவேண்டும் என்கிறார் தல்ஸ்தோய்.

தல்ஸ்தோயின் முதன்மையான பங்களிப்பாக நான் காண்பது தீமையை வரையறை செய்வது குறித்த கருத்துகளைத்தான்:

“ஆதி காலத்திலிருந்தே மனிதன் தீமையை வரையறை செய்து எல்லாருக்கும் பொதுவாக்கியிருக்கிறான். இந்த வரையறைகள் சட்டங்களின் வடிவெடுத்தன – இவை இறைவனிடமிருந்து கிடைத்தவையாகவோ, பிழையா அரசர்களாலும் குழுக்களாலும் அமைக்கப்பட்டவையாகவோ கருதப்பட்டன. மனிதர்கள் பிறர்மீது வன்முறை செலுத்தினர்; தங்களையும் பிறரையும் அது தீமைக்கெதிரான வன்முறை என்று நம்பவைத்தனர். […] ஆனால் நாள்பட்ட உலகில் மனித உறவுகள் அதிக சிக்கலானவையாக மாறவும், ஒவ்வொருவரும் தீமை என்றெண்ணியதை வன்முறைகொண்டு எதிர்ப்பது பகுத்தறிவற்றது என்பது கண்கூடாகியது; மோதல்கள் அதனால் எவ்வகையிலும் குறையவில்லை. மாந்தரின் வரையறைகள் எவற்றாலும் சிலர் தீமையெனக் கருதுவதை எல்லாரையும் ஏற்கச்செய்வதில் வெற்றிபெற இயலாது. […] நீரோவும் கலிகுலாவும் தீமையென்று கருதியதைப் பிறர் தீமையென்று ஏற்கமுடியாது.

இப்போது மனிதர்கள் தீமைக்கான பொது வரையறையைக் கண்டறிந்து நிறுவுவது சாத்தியம் என்றோ விரும்பத்தக்கதென்றோகூட நம்புவதை நிறுத்திவிடும் இடத்துக்கு வந்துவிட்டார்கள். அதிகாரத்தில் உள்ளவர்கள் தங்களுக்குப் பிடிக்காததைத் தீமை என்கிறார்கள்; அவர்களது குடிகள் அவர்களது செயல்களைத் தீமைக்கு எதிரானவை என்பதாலன்றி, தங்களுக்கு வேறுவழியில்லை என்பதால் ஏற்றுக் கீழ்ப்படிகிறார்கள்.

சோசியலிஸ்டுகளும் கம்யூனிஸ்டுகளும் முதலாளித்துவ அமைப்பைத் தீங்கானது என்றும், அரசின்மையாளர்கள் எல்லாவகை அரசுகளையும் தீங்கானவையென்றும், முடியாட்சி சார்பாளரும் மரபுச்சார்பாளரும் முதலாளித்துவர்களும் எந்தவொரு சோசியலிச அமைப்பையோ பொதுவுடைமை அமைப்பையோ அரசின்மைவாதத்தையோ தீங்கானவை என்றும் நினைக்கிறார்கள். இவர்கள் அனைவரும் பிறரது ஒப்புதலைப் பெற வன்முறையைத் தவிர வேறு வழிமுறையைக் கொள்வதில்லை. இவர்களில் எவர் தமது திட்டங்களைச் செயல்படுத்துவதில் வெற்றிபெற்றாலும், தற்போதைய வன்முறை வழிவகைகளைச் சார்ந்தோ புதியன கண்டுபிடித்தோ அவர்களது அதிகாரத்தை நிறுவ வேண்டும்.

புதியதொரு மக்கள் குழு ஒடுக்கப்பட்டோராக இருப்பார்கள். அச்சுறுத்தல்கள் புதிய வடிவம் எடுக்கலாம். ஆனால் வன்முறையும் ஒடுக்குமுறையும் மாறாதிருக்கும்; அவை மேலும் கொடூரமாகலாம். ஏனெனில், (ஆயுதமேந்திய) போராட்டம் வெறுப்பைப் பெருக்கியிருக்கும்; புதிய வகை ஒடுக்குமுறைகள் படைக்கப்பட்டிருக்கும். எல்லா புரட்சிகளுக்கும் புரட்சிக்கான முயற்சிகளுக்கும் சதித்திட்டங்களுக்கும் வன்முறையால் அரசுகள் மாற்றப்பட்டதற்கும் பிறகு எப்போதும் இப்படித்தான் நடந்திருக்கிறது. ஒவ்வொரு மோதலும் தற்சமயம் அதிகாரத்தில் இருப்பவர்களின் கரங்களில் ஒடுக்குமுறைக் கருவிகளை வலுப்படுத்துகின்றன.”

தீமையை எல்லாருக்கும் பொதுவான வகையில் வரையறை செய்ய முடியாது என்பதே தல்ஸ்தோயின் முடிபு. அதனால்தான் கிறிஸ்து தீமையை எதிர்க்காமை என்ற கொள்கையை வகுத்தார். இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை வேண்டும் பிறன்கண் செயல். அதே சமயம் இன்னா செய்வாரை வன்முறையால் எதிர்க்காமல், ஒறுக்காமல் இனியவே செய்திட வேண்டும். வள்ளுவன் சொல்லும் சால்பும், இயேசுவும் தல்ஸ்தோயும் கூறும் கிறித்தவமும், காந்தியின் அகிம்சையும் சந்திக்கும் புள்ளி இதுதான்.

(10)

தல்ஸ்தோய் கிறித்தவ மெய்ப்பொருளை உணர்ந்ததாகக் கருதியபிறகு தனது வாழ்வைப் பெருமளவு அக்கருத்துகளின் படியே அமைத்துக்கொண்டார். அதில் பல சவால்களையும் சந்தித்தார். மண்ணில் வியனுலகு அமைவதற்காக ஒரு கனவை இந்நூலிலும் பிற நூல்களிலும் விதைத்தார். பேணும் நல்லறம் பேசும் இயேசு கிறிஸ்துவின் போதனைகளுக்குப் புதிய பொலிவு கொடுத்தார். எனினும் அவர் அளித்தது ஒரு முழுமையான திட்டமாக வளரவில்லை என்றுதான் கூறவேண்டும். தனிமனித மாற்றத்துக்கான உந்துதலையும் நியாயங்களையும் திடமாக ஏற்படுத்திவிடுகிறபோதும், சமூக மாற்றத்துக்கான திட்டங்கள் தல்ஸ்தோயில் முழுமை பெறாமலேயே இருந்தன. இயேசுவின் கனவுக்கு அடுத்தகட்டப் பாய்ச்சல் நிகழ 1800 ஆண்டுகள் ஆயின. ஆனால் தல்ஸ்தோயின் கனவுக்கு அடுத்தகட்டப் பாய்ச்சல் அவரது வாழ்நாளின் இறுதி ஆண்டுகளிலேயே காந்தியின் மூலம் தொடங்கிவிட்டன.

காந்தியும் தல்ஸ்தோயைப் போலவே மாற்றம் தனிமனிதனிடமிருந்தே தொடங்க வேண்டும் என்று கருதினார். இருப்பினும் சமூக மாற்றத்துக்கான ஒரு வரைவையும் செயல்திட்டத்தையும் அவர் அளித்தார்.
தீமையை வன்முறையால் எதிர்க்காமையை தல்ஸ்தோய் வலியுறுத்திய அளவு அதை எப்படி எதிர்கொள்வது என்பதைப் பற்றித் தெளியவில்லை. காந்தியின் சத்தியாகிரகம் அக்குறையை நிறைவு செய்தது. தல்ஸ்தோயின் முறையில் இருந்த எதிர்ப்பின்மையையும் செயலறு எதிர்ப்பையும் காந்தியால் ஆற்றல் மிகு அகிம்சைப் போராக மாற்றமுடிந்தது.

தேச எல்லைகளைத் தகர்ப்பதன் மூலம் அதிகார மையங்களைத் தகர்க்க வேண்டும் என்றார் தல்ஸ்தோய். கிராம சுயராச்சியத்தின் மூலம் தேச எல்லையை சிறு குமுகங்களுக்குள் குறுக்க விரும்பினார் காந்தி. மையத்திலிருக்கும் அதிகாரத்தைப் பரவலாக்குவதன் மூலம் அதைத் தகர்ப்பதற்கு வழிகூறினார்.

தல்ஸ்தோய் உணவுக்கான உடலுழைப்பை மேற்கொள்ளச் சொனார். Bread Labour என்ற சொற்றொரடரை தல்ஸ்தோயிடமிருந்து பெற்றுக்கொண்ட காந்தி ராட்டையில் நூல் நூற்றுக் கதராடை நெய்வதை அறிமுகப்படுத்தி உடலுழைப்பையும் அகிம்சைப் போராட்டத்துக்கான முதன்மைக் கருவிகளில் ஒன்றாக்கினார். வர்க்க முரண்கள் மட்டுமன்றி சாதிப் படிநிலைகளும் தீண்டாமையும் கொண்ட இந்தியச் சமூகத்தில் உடலுழைப்பின் மீதான மேல்தட்டினரின் இழிவுணர்ச்சியைப் பெருமளவு மட்டுப்படுத்தினார்.

தல்ஸ்தோய் தனியுடைமையை எதிர்த்தார். பொருளாதாரச் சுரண்டல் வன்முறையை அடிப்படையாகக் கொண்டது என்றார். நிலக்கிழார்கள் நிலத்தைக் குடியானவர்களுக்குப் பிரித்து வழங்கிவிட வேண்டும் என்றார். காந்தி செல்வந்தர் அனைவரும் அறங்காவலர் ஆகவேண்டும் என்றார். விடுதலைக்குப் பின் காந்தியின் சீடரான வினோபாவின் வழிகாட்டலில் நடந்த பூமிதான இயக்கத்தின் மூலம் 41.6 லட்சம் ஏக்கர் நிலம் கொடையாகப் பெறப்பட்டது. அதில் 25 லட்சம் ஏக்கர் நிலம் பகிர்ந்தளிக்கப்பட்டது.16 முழுமையான வெற்றி பெறாவிட்டாலும் இவ்வியக்கம் மிக அரிய வரலாற்று நிகழ்வு. காந்தியின் கிராமப் பொருளாதாரக் கொள்கை தற்சார்பையும் தன்னிறைவையும் வலியுறுத்தியது. தல்ஸ்தோய் இடித்துரைக்கும் முதலாளித்துவத்துக்கும் வன்முறை சார்ந்த பொதுவுடைமைப் புரட்சிக்கும் தொழிற்புரட்சிக்கும் மாற்றான ஒரு பாதையை காந்தியும் அவரது இன்னொரு சீடரான குமரப்பாவும் கண்டனர். ‘கடவுளையே தனக்குள் அன்பென்று உணர்வதன்மூலம் எல்லாப் பொருள்களையும் எல்லா மனிதர்களையும் நேசித்தல்’ என்ற தல்ஸ்தோயின் கூற்று இன்று உலகை அச்சுறுத்தும் பருவச்சூழல் நெருக்கடிநிலையில் புதிய பொருள் கொள்கிறது. பருவச்சூழலைச் சிதைக்காத வளங்குன்றா வாழ்க்கைக்கான (sustainable life) சாத்தியம் கொண்ட காந்தியின் தற்சார்பான கிராமப் பொருளாதாரமே இந்நெருக்கடியை எதிர்கொள்ள நம்முன் தெரியும் மிகச்சிறந்த பாதையாக, நாம் ஏற்றாகவேண்டிய வழியாக உள்ளது.

“உங்கள் கடிதமும், உங்கள் புத்தகமான இந்திய சுயராச்சியமும் கிடைத்தது. உங்கள் புத்தகத்தை மிகந்த ஈடுபாட்டுடன் படித்தேன்; காரணம், நீங்கள் இந்த நூலில் எதிர்கொண்டிருக்கும் கேள்வி இந்தியர்களுக்கு மட்டுமல்லாமல், மனிதகுலம் முழுமைக்கும் முக்கியமானது என்று நினைக்கிறேன்,” என்று காந்திக்கு எழுதிய ஒரு கடிதத்தில் கூறுகிறார் தல்ஸ்தோய். காந்தியத்தின் சாரமாக இந்திய சுயராச்சியம் நூலைக் கொள்ளலாம். 1909ல் இங்கிலாந்திலிருந்து தென்னாப்பிரிக்காவுக்கும் கப்பலில் வந்தபோது காந்தி இந்திய சுயராச்சியத்தை எழுதினார். அதே பயணத்தின் போதுதான் தல்ஸ்தோயின் ஓர் இந்துவுக்குக் கடிதத்தையும் குஜராத்தியில் மொழிபெயர்த்து, அதற்கான முன்னுரைகளை ஆங்கிலத்திலும் குஜராத்தியிலும் எழுதினார்.

“கிறிஸ்து நமக்கான இலக்குகளை வழங்கினார். மகாத்மா காந்தி வழிவகைகளை வழங்கினார். மானுடம் முன்னேற வேண்டுமெனில், காந்தி தவிர்க்கமுடியாதவர். அமைதியும் ஒத்திசைவும் கொண்ட உலகை நோக்கி மானுடம் பரிணாமம் கொள்வதைக் காணும் தொலைநோக்கினால் அகத்தூண்டல் பெற்றுச் செயல்பட்டார், சிந்தித்தார், வாழ்ந்தார். நாம் அவரைப் புறக்கணிக்கவே முடியாது,” என்றார் மார்டின் லூதர் கிங். அவர் கிறிஸ்துவுக்குச் சொன்னது தல்ஸ்தோய்க்கும் பொருந்தும். கிறிஸ்துவின் இலக்குகளுக்கு விளக்கமளித்துச் செறிவூட்டித் தெளிவாக்கினார் தல்ஸ்தோய்.

(11)

“குடும்ப, சமூக வாழ்வின் கொள்கைகள் இன்றைக்கு நமக்குத் தோன்றுவது போல, கிறித்தவக் கொள்கைகளான சமத்துவம், சகோதரத்துவம், பொதுவுடைமை, தீமையை வன்முறையால் எதிர்க்காமை ஆகியவை இயல்பானவையாக எளிதானவையாகத் தோன்றும் காலம் வரும் – ஏற்கனவே வந்துகொண்டிருக்கிறது,” என்று நம்பிக்கையுடன் முன்னறிவிக்கிறார் தல்ஸ்தோய்.

தல்ஸ்தோயின் நூல் தணிக்கையாளர்களால் தடைசெய்யப்பட்டபோதும் சரியான வாசகரை அடைந்தது. காந்தி என்ற ஒற்றை மனிதரை அந்நூல் பாதித்ததால், உலக வரலாற்றையே மாற்றும் கருவிகளில் ஒன்றானது.

காந்தியைப் போலவே வேறு சில கூர்மையான வாசகர்களையும் தல்ஸ்தோயின் கருத்துகள் சென்றடைந்தன.

பெர்னார்ட் ஷா தொடக்க கால கிறித்தவர்களுக்கும் ரோமானியர்களுக்கும் நடந்த பூசல்களை மையப்படுத்தி, ஈசாப் கதையொன்றைத் தழுவி, ’ஏண்டிரக்கில்ஸும் சிங்கமும்’ (Androcles and the Lion) என்ற நாடகத்தை எழுதினார். அந்நாடகத்தைவிட நீளமாக அவர் எழுதிய முன்னுரையில், விவிலியத்தை வரலாற்று நோக்கில் விரிவாக அலசினார். அதில் தல்ஸ்தோயின் தாக்கத்தைக் காணலாம்.
“இக்கோட்பாடுகள் கிறிஸ்துவுக்கே தனித்துவமானவை என்று கூறமாட்டேன். […] கிறித்தவம் அறத்தின் பரிணாமத்தில் ஒரு படி; அது எந்த ஒரு தனிப்பட்ட போதகரையும் சார்ந்ததல்ல. இயேசு என்ற ஒருவர் வாழ்ந்திருக்காமலே போயிருந்தாலும்கூட (ஷேக்‌ஸ்பியரின் ஹாம்லட்டைப் போலன்றி வேறேதேனும் வகையில் இயேசு இருந்திருக்கிறாரா என்ற கேள்வி தீவிரமாக எழுப்பப்பட்டுள்ளது), தல்ஸ்தோய் இதே கொள்கைகளைச் சிந்தித்தடைந்து, பயிற்றுவித்திருப்பார்; ரஷ்யாவின் கிரேக்கத் திருச்சபையோடு பொருதிருப்பார்,” என்றார் ஷா.17

விவிலியத்திலிருந்து பெர்னார்ட் ஷா அடைந்த முடிவுகளும் தல்ஸ்தோயின் முடிவுகளோடு பெருமளவு ஒத்துப்போயின. இயேசுவை கம்யூனிஸ்ட் என்றே ஷா வகைப்படுத்தினார். கிறித்தவ உலகம் இயேசுவைக் கைவிட்டு பாரபாஸையே இருபது நூற்றாண்டுகளாக ஏற்றுநிற்பதாகக் குற்றம் சாட்டினார். இயேசு செய்ததாகப் புனையப்பட்ட அற்புதங்கள் அவரது செய்தியின் ஆற்றலில் நம்பிக்கைகொள்ளாமல் அதை மலினப்படுத்துவதாகக் கூறினார்.
“இறையாட்சி உம்மிடையே உள்ளது. நீங்கள் ஆண்டவனின் மைந்தர்; ஆண்டவன் உங்களின் மைந்தர். நீங்கள் இறைவனின் பணியைச் செய்யவே இங்குள்ளீர்கள். நீங்களும் இறைவனும் ஒன்றே என்றார்.
உடைமையை உதறுங்கள். எல்லாச் செல்வத்தையும் பொதுவுடைமையாக்குங்கள். பணப்பரிமாற்றங்களிலிருந்து அறவே விலகுங்கள். தனியொரு குழுந்தைக்கு உணவிலையெனில் நீங்கள் கடவுளைப் பட்டினியாக விடுகிறீர்கள். நாளைக்கான உணவு உடை பற்றிய கவலைகளை விட்டொழியுங்கள். ஏனெனில், ஆண்டவன், கொடுஞ்செல்வம் (Mammon) ஆகிய இரண்டு ஆண்டைகளுக்கு நீங்கள் பணியாற்றமுடியாது.
நீதிபதிகள், தண்டனை, வஞ்சம் ஆகிய அனைத்தையும் தொலைத்துவிடுங்கள். அண்டைஅயலவரை உங்களை நீங்கள் நேசிப்பது போலவே நேசியுங்கள்; அவர்களும் உங்களில் ஒரு பகுதியே. உங்கள் பகைவர்மீதும் அன்புசெலுத்துங்கள்; அவர்கள் உங்களுக்கு அண்டைஅயலவரே.
குடும்பத் தளைகளை விட்டொழியுங்கள். நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு அன்னையும் உம்மையீன்ற அன்னைக்கு இணையானவரே. நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரும் உம் உடன்பிறந்தாரே. குடும்பத்தாரின் ஈமச்சடங்களுக்குச் சென்று காலத்தை வீணடிக்காதீர்; மரணத்தையல்லாமல் வாழ்வைக் கொண்டாடுங்கள் […] உம்மிடையே இருக்கும் விண்ணரசில் திருமணமே இல்லை. உம்மால் இரண்டு திவ்வியப் பேராற்றல்களுக்கு உமது வாழ்வை அர்ப்பணிக்கமுடியாது : ஆண்டவனுக்கும் உம்மை மணந்தவருக்கும்.”17

கடைசிப் புள்ளியில் மட்டும் இருவரும் எதிரெதிர் திசையில் திரும்பியதைக் காணலாம். மண உறவை ஒருபோதும் முறிக்கவே கூடாது என்று இயேசு சொன்னதாய் உரைகண்ட தல்ஸ்தோய், எத்தனையோ சச்சரவுகளுக்கு மத்தியிலும் மனைவியைவிட்டுப் பிரியாது, இறுதியில்தான் அஸ்தபோவாவில் தன்னந்தனியாக மடிந்தார்.

காந்தி கீதையைக் கையாண்டவிதமும் ராமநாமத்தைப் பயன்படுத்திய விதமும் தல்ஸ்தோய் விவிலியத்தை அணுகியமுறைக்குச் சமானமாகவே இருந்தன. காந்தியின் கீதை போர்க்களத்தில் செயலற்று நின்ற பார்த்தனைப் போர்புரியத் தூண்டும் கிருஷ்ணனின் கீதையல்ல. “குருட்சேத்திரம் பார்த்தனும் கண்ணனும் உரையாடுவதற்கான தருணத்தை அமைத்துக் கொடுத்தது. உண்மையான குருட்சேத்திரம் மனித உள்ளம்தான்; இறைவனின் உறைவிடமாகக் கண்டு அவனை அதனை உரிமைகொள்ள அழைத்தால், உள்ளமே தர்மச்சேத்திரமும் ஆகும். நாள்தோறும் ஏதேனும் போர் நிகழும் போர்க்களமும் அதுவே. அப்போர்கள் அனைத்தும் எனது உனது, எம்மவர் அயலவர் என்று வேறுபடுத்திப்பார்ப்பதால் நிகழ்வன,” என்றார் காந்தி.18 அதுவரை யாரும் செய்யாத வகையில் வன்முறைக்கெதிரான கொள்கைகளை வகுத்துக்கொள்ள காந்திக்கு உதவிய நூல் கீதை; அக்கொள்கைகளை மக்களிடம் அவர்களுக்குப் புரியும் மொழியில் கொண்டு சேர்க்க, அனைத்துச் சாதிகளும் சமமென்று கூற, அனைத்துப் பணிகளும் ஒத்தவை என்று நிறுவ, விளைவை எண்ணாது கருதிய கருமம் புரிந்திட உதவியது. அதே போல காந்தியின் ராமனும் தசரதன் மகனாகப் பிறந்த அயோத்தியின் வரலாற்று ராமனல்லன். எல்லாருக்கும் பொதுவானவனாக அவரால் முன்வைக்கப்பட்டவன். தன்னிடமும் மக்களிடமும் ஆன்ம ஆற்றலைத் திரட்டுவதற்கு அவருக்குதவிய பெயர் ராமன். காந்தி படித்த நூல்கள் அனைத்திலும் அவர் காணவிரும்பியதை மட்டுமே எடுத்துக்கொண்டார். ரஸ்கினிடமும் தல்ஸ்தோயிடமிருந்துமே தன் கொள்கைக்குகந்த கருத்துகளை மட்டுமே உள்வாங்கிக்கொண்டார் என்பதை அந்நூல்களைப் பற்றிய அவரது எழுத்துகளைக் கூர்ந்து படிக்கையில் தோன்றும்.

தல்ஸ்தோயும் தான் காணவிரும்பியதையே இயேசுவிடம் கண்டடைந்தார். அவரது உள்ளத்தைத் துளைத்துக்கொண்டிருந்த ஆதாரக் கேள்விகளுக்கான விடைகளை அவர் கிறிஸ்துவின் கருத்துகளில் கண்டபோது, ஐயங்களுடன் தான் வந்தடைந்த இடம் சரியானதுதான் என்று உறுதிசெய்துவிட்ட உற்சாகமே அவரது எழுத்துகளில் தெரிகின்றது. அதனாலேயே அவரது தருக்கத்திற்குப் பொருந்தாதனவற்றை முற்றிலும் ஒதுக்கிவிட்டு, உடன்படுவனவற்றை மட்டுமே இயேசுவின் சொற்களிலேயே முன்வைக்கிறார். தல்ஸ்தோயின் கைகளில் இயேசுவின் எளிமையான ஆழமான ஆணைகள் அவரது படைப்பாற்றலாலும் தருக்க அறிவாலும் செப்பனிடப்பட்டு விரிவடைகின்றன. மேலும் மெருகேறி பட்டை தீட்டிய வைரங்களாகின்றன. தல்ஸ்தோய் கூறியது கூறத் தயங்குவதேயில்லை. அதுவுமே தல்ஸ்தோயின் எழுத்தில் ஓர் அழகையும் அழுத்ததையும் பெறுகிறது. அவர் கண்டடைந்த உண்மையை மீளமீளப் பல்வேறு கோணங்களில் அயராது சொல்கிறார். ஒவ்வொரு முறை அவர் சொல்லவேண்டியதையெல்லாம் சொல்லிமுடித்துவிட்டார் என்று நினைக்கும்போதும் நாம் எண்ணியிராத கோணத்தில் மேலும் சில கூரிய சொற்கள் வந்துவிழுகின்றன. அவரும் நாமும் எட்டுவதற்குச் சில உச்சங்கள் மிச்சமிருக்கின்றன. புதிய திசையில் எண்ணங்கள் எழுந்து செல்கின்றன. தொடர்ந்து கிறித்தவர்களைப் பற்றியே பேசினாலும், ஒவ்வொரு சொல்லும் எல்லாருக்கும் பொதுவானதாகவே ஒலிக்கிறது. உலகப் பொது அறங்களையே தல்ஸ்தோய் கிறித்தவத்தின் பெயரால் பேசுகிறார். தல்ஸ்தோயின் கிறித்தவம் அற்புதங்களும் சடங்குகளும் அற்றது. நான் நம்புவதென்ன, சுவிசேஷங்களின் சுருக்கம், உம்மிடையே உள்ளது இறையாட்சி ஆகிய அனைத்து நூல்களும் இத்தகைய அற்புதங்களைப் பெருமளவு நீக்கியவையாக உள்ளன. சடங்குகளையும் சின்னங்களையும் கைக்கொண்டு, கிறித்தவத்தின் அடிப்படை மெய்மைகளை கிறித்தவர்கள் ஒதுக்கிவிட்டதை தல்ஸ்தோய் சாடுகிறார். அவர் கண்ட மெய்ப்பொருளையே கிறித்தவத்தின் மெய்யான பங்களிப்பாகவும், இன்றைய உலகுக்கும் மாந்தரின் அடுத்தகட்ட வளர்ச்சிக்குத் தேவையானதாகவும் சாற்றுகிறார்.

“ஒரு பேராசான் என்ன செய்ய முடியும் – நான் இறைவனான கிறிஸ்துவைச் சொல்லவில்லை – ஆனால் ஒரு பேராசான், ஓர் ஆசிரியர், இத்தகைய மக்களுக்குப் பயிற்றவிக்கும்போது என்ன செய்யமுடியும்? வாழ்வில் அனைத்துமே – ஒவ்வொரு சிறு பகுதியும், ஒரு திருச்சட்டத்தால் வகுக்கப்படும்போது அக்கடப்பாடுகளை அழித்தொழிக்காமல் என்ன செய்யமுடியும்? எந்த ஒரு இறைவாக்கினரும் செய்யக்கூடியதையே கிறிஸ்துவும் செய்கிறார். மக்கள் புனிதமானதென்று கருதும் பழைய திருச்சட்டங்களிலிருந்து உண்மையான இறைச்சட்டங்களை எடுத்துக்கொள்கிறார். அடிப்படைக் கொள்கைகளை எடுத்துக்கொண்டு, பிறவற்றை ஒதுக்கி, நிலைபெற்ற நெறிகள் குறித்த தனது உள்ளொளியை அவற்றோடு சேர்க்கிறார்,” என்று தல்ஸ்தோய் இயேசுவின் வழிமுறையை விளக்குகிறார்.

“திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன் என நீங்கள் எண்ண வேண்டாம்; அவற்றை அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன்,” என்று கூறிய இயேசு2, மோசஸின் கட்டளைகளுக்கு முற்றிலும் எதிரான கட்டளைகளை அளித்துச் சென்றதையே தல்ஸ்தோய் காட்டுகிறார்.

இயேசுவைக் குறித்து தல்ஸ்தோய் கூறுவது போலவே, தல்ஸ்தோயும் விவிலியத்திலிருந்து தனக்கு ஏற்புடையனவற்றை மட்டுமே எடுத்துக்கொள்கிறார்; பிறவற்றை விலக்குகிறார். மெய்யான மறைநூலின் நெறிகளையே தான் பேசுவதாகவும் தன்னையே உண்மையான கிறித்தவனாகவும் சித்தரித்தார். எனினும் தனித்துவமான கிறித்தவனாகவே இருந்தார். அவர் கூறிய அறங்கள் பகுத்தறிவாளரும், இறைமறுப்பாளரும், அனைத்து மதப்பற்றாளர்களும் அணைத்தேற்கக்கூடிய அறங்களாகவே உள்ளன.

காந்தியும் தன்னை ஓர் உண்மையான சனாதனியாக முன்வைத்தார். ஆனால் தன் கொள்கைக்குப் புறம்பான மதநெறிகளை ஒதுக்கினார். உண்மைக்கும் மதநூல்களுக்குமிடையே முரண்பாடிருந்தால் உண்மையின் பக்கமே நிற்பேன் என்றார். அவரும் தனித்துவமான சனாதனியாகவே இருந்தார். எனினும் எல்லா இந்தியருக்கும் உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானராக ஆனார்.

இயேசுவுக்குச் சிலுவை கிடைத்தது. தல்ஸ்தோய்க்கு மதவிலக்கமும் அஸ்தபோவாவும் கிடைத்தன. காந்திக்குச் சனாதனிகளின் கறுப்புக்கொடிகளும் கோட்சேவின் குண்டுகளும் கிடைத்தன.

ஆனால் அவர்கள் எழுப்ப விரும்பிய விண்ணரசின் ஒளிச்சாரலை மண்ணில் தூவிச் சென்றார்கள். மாந்தரினம் அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி அந்த அன்புவழியில் அவர்களின் ஒளியிலேயே செல்லமுடியும்.

குறிப்புகள்:

  1. The Hedgehog and the Fox, Isaiah Berlin
  2. திருவிவிலியம், பொது மொழிபெயர்ப்பு, விவிலியச் சங்கங்களின் இணையம், வத்திக்கான் ஒன்றிப்புச் செயலகம், 1995.
  3. Who can go to Gaol?, Indian Opinion, 5-6-1909, Collected Works of Mahatma Gandhi (CWMG)
  4. Speech at Chatham House Meeting, London, October 20, 1931, CWMG
  5. What I Believe, Leo Tolstoy
  6. Confession, Leo Tolstoy
  7. From the Introduction by Richard Pevear to What is Art, Leo Tolstoy.
  8. The Gospel in Brief, Leo Tolstoy
  9. மகாத்மா காந்தியின் சுய சரிதை: சத்திய சோதனை; தமிழாக்கம்: ரா.வெங்கடராஜுலு
  10. Difficulty of Practice, Young India, 30-1-1930, CWMG
  11. Mahatma Gandhi and Leo Tolstoy Letters, B.Srinivasa Murthy
  12. Civil Disobedience in Indian Tradition, Dharampal, http://www.gandhitoday.in/2013/07/1.html
  13. ‘Patriotism and Government’, Leo Tolstoy
  14. காந்தியின் தேசியம், த.கண்ணன், காலச்சுவடு இதழ், ஜனவரி 2020.
  15. Neither a Saint nor a Politician, Young India, 12-5-1920, CWMG.
  16. Bhoodan-Gramdan Movement: An Overview, Dr. Parag Cholkar, http://www.gandhiashramsevagram.org/gandhi-articles/bhoodan-gramdan-movement.php
  17. Androcles and the Lion, Bernard Shaw
  18. Discourses on Gita, Gandhi

காந்தியின் தேசியம்

ஜூன் 27, 2021

[காலச்சுவடு இதழில் காந்தி 150ஐ ஒட்டிச் சென்ற ஆண்டில் (ஜனவரி 2020) வெளிவந்த கட்டுரை]

‘கிராம சுயராச்சியம்தான் உண்மையான சுயராச்சியம் என்று பேசிய காந்தி, ஏன் இவ்வளவு பெரிய தேசத்தைக் கட்டமைத்தார்? இந்திய தேசத்தோடு இணைய விருப்பமில்லாத மக்களையும் ஏன் கட்டாயமாக இணைத்தார்?’ என்று ஒரு நண்பர் கேட்டார். அவர் பல்வேறு சமூகப்பணிகளில் ஈடுபட்டிருப்பவர். உள்ளூர் அமைப்புகளை வலுவாக்குவதில் நம்பிக்கைகொண்டவர். தனது பகுதியைத் தன்னிறைவடையச் செய்யப் பாடுபடுபவர். எளிமையான வாழ்க்கை வாழ்பவர். ஒரு காந்தியர் என்றே சொல்லலாம். ஆனால் காந்தியின் தேசியம் காரணமாக அவரைக் கடுமையாக நிராகரிப்பவர். இக்கேள்விக்கு அப்போது சில மேலோட்டமான விடைகளைச் சொன்னாலும் காந்தியின் தேசியத்தை மேலும் ஆழமாக ஆராய்ந்து பார்க்கவேண்டும் என்று தோன்றியது. தேசியத்தின் பெயரால் பலர் போற்றப்படுவதும் தூற்றப்படுவதும் நிகழ்ந்துகொண்டிருக்கும் இச்சூழலில் காந்தியின் தேசியவாதத்தைப் புரிந்துகொள்வது அவசியமாகிறது.

காந்தியின் தேசியம் எளிதில் வகைப்படுத்திவிட முடியாத தனித்தன்மை வாய்ந்ததாக இருந்தது. தேசம், சுயராச்சியம், அகிம்சை குறித்த அவரது வெவ்வேறு கருத்தியல் நிலைகள் ஒன்றுக்கொன்று முரண்பட்டவையாகத் தோன்றலாம். ஆனால் அனைத்தையும் ஒருங்கே நோக்கினால் அவற்றை இணைக்கும் சில பொதுச்சரடுகளைக் காணலாம். நாம் மிக முக்கியமாகக் கருத்தில் கொள்ளவேண்டியது காந்தியின் தேசியம் ஓர் அடிமை நாட்டின் விடுதலைக்காகப் போராடிய ஒருவரின் தேசியம்; விடுதலைக்குப் பிறகு வாழ்ந்த சில மாதங்களிலும் சிதறிக் கிடந்த மக்களை ஒருங்கிணைக்கப் போராடியவரின் தேசியம்; தேசியத்தின் பெயரால் கொல்லப்பட்ட ஒருவருடைய தேசியம். அமைதி நிலவும் சுதந்திர தேசத்தில் அவர் தேசம் கடந்த மனிதநேய நிலையை நோக்கித்தான் சென்றிருப்பார் என்பதை அவர் வெவ்வேறு தருணங்களில் உரைத்த சில கருத்துகளிலிருந்து நாம் உய்த்துணரலாம். காந்தியின் தேசியத்துக்கும் காந்தியைக் கொன்றவர்களின் தேசியத்துக்கும் இடையே பெரும் வேறுபாடு உண்டு.

காந்திக்குப் பலவிதங்களில் வழிகாட்டியாக இருந்த லியோ தல்ஸ்தோய் தேசியவாதத்தை மிகக் கடுமையாக விமர்சித்தவர். “நம் நாளில் தேசபக்தி என்பது ஒரு செயற்கையான, பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட, தீங்கான உணர்வு; இதுவே மனிதகுலம் அனுபவிக்கும் துன்பங்களில் பெரும்பாலானவற்றுக்குக் காரணமாக இருக்கிறது. எனவே, இந்த உணர்வு இப்போது நிகழ்வதுபோல் வளர்க்கப்படக்கூடாது. மாறாகப் பகுத்தறிவுள்ள மனிதர்களால் தமக்குள்ள அனைத்து வழிகளைக் கொண்டும் இது ஒடுக்கப்படவேண்டும்; ஒழிக்கப்படவேண்டும். எனினும், மக்களைப் பாழ்படுத்தும் கொடும்போர்களும் உலகளாவிய ஆயுதமயமாக்கலும் இந்த ஒற்றை உணர்விலிருந்தே எழுகின்றன என்பதை மறுக்கமுடியாதெனினும், தேசபக்தியின் பிற்போக்குத்தனத்தையும், காலத்துக்கு ஒவ்வாமையையும், தீமையையும் நிறுவும் எனது வாதங்கள் மௌனத்தையோ, வலிந்துசெய்யப்படும் தவறான புரிதலையோ, தவறான தேசபக்திதான் (தேசவெறி அல்லது ஆதிக்க உணர்வு) தவறு என்றும் உண்மையான, நல்ல தேசபக்தி மிகவும் மேலான அற உணர்வு என்றும் அதைக் கண்டிப்பது பகுத்தறிவற்ற செயல் மட்டுமன்று கொடூரமானதும்கூட என்றும் கூறும் வினோதமான பதில்களையுமே எதிர்கொண்டன; எதிர்கொள்கின்றன.
நல்ல தேசபக்தி என்பதில் என்னவெல்லாம் அடக்கம் என்பதைக் குறித்து எவருமே எதுவமே சொல்வதில்லை; அப்படியே சொன்னாலும், விளக்கங்களுக்குப் பதிலாக அறுதியிடல்களையோ அலங்காரப் தொடர்களையோதான் நாம் கேட்கிறோம். இறுதியில் தேசபக்திக்குப் பதில் வேறு எதையோ பதிலீடு செய்வார்கள்; நாமறிந்த, தன் விளைவுகளால் நம்மைக் கடுமையாகத் துன்புறுத்திவரும் தேசபக்திக்கும் அதற்கும் சம்பந்தமே இராது,” என்று தேச பக்தியை நவீன உலகின் எல்லாத் துன்பங்களுக்கும் ஊற்றாக அடையாளப்படுத்திச் சாடினார். (1)

வன்முறை மீது நம்பிக்கை கொண்ட சில இந்திய தேசியவாதிகள் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் இருந்தனர். 1908ல், ‘ஃப்ரீ ஹிந்துஸ்தான்’ என்ற இதழை நடத்திய தாரக்நாத் தாஸுக்கு தல்ஸ்தோய் ‘ஓர் இந்துவுக்கு ஒரு கடிதம்’ எழுதியிருந்தார். அதில் ‘…நம் வாழ்வில் ஒரே ஒரு சட்டம்தான் செல்லுபடியாகும் – அது அன்பு; ஒவ்வொரு தனிமனிதனுக்கும் மனிதகுலம் முழுமைக்கும் மகிழ்ச்சியைத் தரவல்லது அன்பு. இதை உணர்வதைத் தடுக்கும், அதிகப்படியாக வளர்ந்துவிட்ட, மலையளவு முட்டாள்த்தனங்களிலிருந்து உங்கள் உள்ளங்களை விடுதலை செய்யுங்கள். உலகின் எல்லா மதங்களுக்கும் பொதுவான, மனிதனுக்குள் இருந்த உள்ளார்ந்த, ஐயமுறமுடியாத உண்மையை மறைத்திருக்கும் அபத்தமான போலியான மத நம்பிக்கைகளிலிருந்து அந்த உண்மை வெளிப்படும்,” என்று எழுதினார். (2) இதை நிறுவும் விதமாக விவேகானந்தர், கீதை, திருக்குறள் என்று பல இந்திய நூல்களிலிருந்து மேற்கோள்கள் காட்டினார். இக்கடிதத்தை ஓர் அறிமுகத்துடன் காந்தி வெளியிட்டார். குஜராத்தியில் மொழிபெயர்க்கவும் செய்தார். இதன்மூலமாகவே அவர்களிடையே கடிதப்போக்குவரத்து தொடங்கியது. அச்சமயத்தில் இங்கிலாந்து சென்று சாவர்க்கர் போன்ற இந்திய தேசியவாதிகளோடு உரையாடிய காந்தி, அங்கு அவர் சந்தித்த கேள்விகளுக்கும் அவர் அவதானித்த போக்குகளுக்கும் எதிர்வினையாக ‘இந்திய சுயராச்சியம்’ (Hind Swaraj or the Indian Home Rule) என்ற நூலை இயற்றினார். இந்நூலை காந்தி தல்ஸ்தோய்க்கு அனுப்பினார். காந்தியின் அரசியல் பார்வையை மிக விரிவாகவும் தெளிவாகவும் எடுத்துரைத்த நூல் இந்திய சுயராச்சியம். அவருக்குப் பதிலெழுதிய தல்ஸ்தோய், “உங்கள் கடிதமும், உங்கள் புத்தகமான இந்திய சுயராச்சியமும் கிடைத்தது. உங்கள் புத்தகத்தை மிகந்த ஈடுபாட்டுடன் படித்தேன்; காரணம், நீங்கள் இந்த நூலில் எதிர்கொண்டிருக்கும் கேள்வி இந்தியர்களுக்கு மட்டுமல்லாமல், மனிதகுலம் முழுமைக்கும் முக்கியமானது என்று நினைக்கிறேன்,” என்றார். (3)

காந்தியால் குருதேவர் என்றழைக்கப்பட்ட ரவீந்திரநாத் தாகூர் எழுதிய பாடல்கள் இரண்டு தேசங்களுக்குத் தேசிய கீதங்கள் ஆயின. ஆனால் அவரும் தேசியவாதத்துக்கு எதிரானவர். ’நான் குறிப்பாக எந்த ஒரு தேசத்துக்கும் எதிரானவனல்லன்; தேசம் என்ற பொதுவான கருத்துக்கே எதிரானவன்,’ என்றார். இன்னும் ஒரு படி மேலேறி, தல்ஸ்தோயைப் போலவே, “தேசியவாதம் மிகவும் ஆபத்தானது. இந்தியவாவின் பல தொல்லைகளுக்கும் அடித்தளமாகப் பல்லாண்டுகளாக இருந்தது இதுவே” என்றார். காரே பைரே, முக்த தாரா போன்ற நூல்களில் தேசியத்தின் சிக்கல்களை வெளிக்கொணர்ந்தார். காந்திக்கும் தாகூருக்கும் இடையே நடந்த பல விவாதங்கள் தாகூரின் சர்வதேசியத்துக்கும் காந்தியின் தேசியத்துக்கும் இடையே இருந்த முரண்களின் அடிப்படையிலேயே அமைந்தன. ஒத்துழையாமை இயக்கத்தில் தேசியத்தின் பெயரால் இருந்த எதிர்மறைத்தன்மையை அவர் விமர்சித்தார். வெளிநாட்டு ஆடைகளைப் புறக்கணிப்பது, ஆங்கிலமொழியைத் எதிர்ப்பது ஆகியவையும் அவருக்கு ஏற்புடையனவாக இல்லை. “அறத்தின் ஆற்றலைக் கேலிக்கூத்தாக மாற்றிவிடுவது குற்றச்செயல்” என்று கடிந்துகொண்டார். இதனாலேயே, காந்தியின் மீது மாறாத அன்பு கொண்டிருந்தபோதும், காந்திய இயக்கங்களில் அவர் முழுமையாக ஈடுபடாமற் போனார். “தற்போதைய இயக்கத்தின் உண்மையான ஆன்மீகத் தன்மை குறித்த சந்தேகப் பேய் ஒரு கணம் தன்னைப் பீடிக்க அனுமதிக்க மறுத்திருந்தாரெனில், இவ்வியக்கம் தேசியம், தேசபக்தி ஆகிய பழைய சொற்களின் பொருளை மாற்றிக்கொண்டும் அவற்றின் செயற்பரப்பை விரிவு செய்துகொண்டும் இருக்கிறது என்பதை நம்பியிருந்தாரெனில் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்,” என்று காந்தி தாகூருக்கு மறுப்பு எழுதினார். “இந்திய தேசியம் பிறரை விலக்குவதோ, மூர்க்கமானதோ, அழிவேற்படுத்துவதோ அன்று. அது நலம் விளைவிப்பது; ஆன்மீகமானது; எனவே, மனிதநேயமிக்கது. இந்தியா மனிதகுலதுக்காக மரணமடைய விழையும் முன் வாழ்வதற்குக் கற்க வேண்டும். பூனையின் பற்களுக்கிடையே பரிதாபகரமாக அகப்பட்ட எலி தன்மீது திணிக்கப்படும் தியாகத்தின் மூலமாக எச்சிறப்பையும் அடைவதில்லை,” என்றார்.

“கவிஞர் தன் கவித்துவ இயல்புக்கேற்ப நாளைய தினத்துக்காக வாழ்கிறார்; நம்மையும் அவ்வாறே வாழச்சொல்கிறார். வியப்பில் விரிந்த நம் விழிகளுக்கு அவர் அளிக்கும் அழகிய சித்திரத்தில் புல்லினங்கள் புலர்காலையில் பண்கள் பாடிப்போற்றி வானில் உயர்ந்து செல்கின்றன. இப்பறவைகள் அன்றைய தினத்துக்கான உணவை உண்டுவிட்டு, முந்தைய இரவில் ஓய்வெடுத்துப் புது ரத்தம் பாயும் சிறகுகளுடன் உயரப்பறக்கின்றன. ஆனால் சிறகுகளை அசைக்க வைக்கக்கூட முடியாத வலுவற்ற நிலையிலுள்ள பறவைகளைப் பார்க்கும் வலியை நான் அனுபவிக்கவேண்டியிருந்தது. இந்திய வானின் கீழே உள்ள மனிதப்பறவை ஓய்வெடுப்பதாக பாவனை செய்வதற்குமுன்பு இருந்ததைவிடப் பலவீனமாக எழுகிறது,” என்று கவிஞரின் குற்றச்சாட்டுக்கு காந்தி கவித்துவமான விடையளித்தார். (4) இந்திய தேசியமும் தேசவிடுதலையும் தாகூரின் சர்வதேசியத்துக்கான முதல்படியாக காந்தி கருதினார்.

இதையே ‘இந்திய சுயராச்சியம்’ நூலைப் படித்த தல்ஸ்தோய் மிகச்சரியாக அடையாளம் கண்டுகொண்டார் எனலாம். தாகூரும், தல்ஸ்தோயும் தாக்கிய தேசியவாதத்தில் இருந்த குழுமனப்பான்மையும், வன்முறையும், தாம்-பிறர் என்று இருமையும், மிகையான பழம்பெருமையும் காந்தியின் தேசியத்தில் இல்லாமலோ மட்டுப்பட்டோ இருந்தன. காந்திக்கு இந்திய வரலாற்றின் மீது மிகையான பற்றும் இல்லை; மேற்கத்தியப் பண்பாட்டின்மீது மிகையான ஈர்ப்பும் இல்லை, காழ்ப்பும் இல்லை. அவர் நவீனத் தொழில்மயமாகும் போக்கை நிராகரித்தபோதும், அதன் நிறைகுறைகளை ஆய்ந்தே நிராகரித்தாரேயன்றி, அது மேற்கிலிருந்து வந்தது என்பதால் நிராகரிக்கவில்லை. ஆங்கில ஆட்சியையுமேகூட அது வெளிநாட்டவரின் ஆட்சி என்பதற்காக அவர் எதிர்க்கவில்லை. தம் நாட்டு மக்களுக்குத் தீமைதரும் ஆட்சி என்று கருதியதாலேயே எதிர்த்தார். அதனாலேயே ஆரம்பத்தில் ஆங்கில ஆட்சியிலேயே இந்தியர்களுக்குத் தேவையான உரிமைகளுடனும் சுயாட்சியுடனும் வாழமுடியும் என்று நம்பினார். அது சாத்தியமில்லை என்று அனுபவப்பூர்வமாக அவர் உணர்ந்த பிறகே ஆங்கில ஆட்சியே நீங்க வேண்டும் என்ற கொள்கையை நோக்கித் தீர்க்கமாக நகர்ந்தார். நல்லாட்சி என்பது தன்னாட்சிக்கு மாற்றாக முடியாது என்றும் எத்தனை குறைபாடுகள் இருந்தாலும் முழு சுதந்திரத்துடன் வாழவேண்டும் என்றும் பின்னர் கூறினார்.

இருபதாம் நூற்றாண்டில் இந்தியா உட்பட உலகெங்கிலும் இருந்த பல தேசியவாதிகளும் கரிபால்டி, மாஜினி ஆகியோரின் இத்தாலிய தேசியவாதத்தின் வெற்றியிலிருந்து உந்துதல் பெற்றனர். தமிழின் தேசிய கவி பாரதி, ’எங்கள் பொன்னுயர் நாட்டை ஒற்றுமை யுடைத்தாய்ச் சுதந்திரம் பூண்டது வாகி/ இன்னுமொர் நாட்டின் சார்வில தாகிக்/ குடியர சியன்றதா யிலக,’ போன்ற வரிகளை ‘மாஜினியின் பிரதிக்கினை’ என்ற கவிதையில் எழுதினான். சாவர்க்கர் மாஜினி சரித்திரம் என்ற நூலை எழுதினார். காந்தியும் மாஜினியைப் புகழ்ந்து கட்டுரைகள் எழுதியிருந்தாலும், இத்தாலிய தேசியத்தை முழு வெற்றியாகக் கருதவில்லை. ஆஸ்திரிய ஆட்சியை வீழ்த்தி இத்தாலியர்களின் ஆட்சி வந்துவிட்டதாலேயே இத்தாலிய மக்களின் நிலை மேம்பட்டுவிடவில்லை என்றார். கரிபால்டியைப் பொருத்தவரை ஆஸ்திரியர்களின் ஆட்சியை அகற்றுவதே நோக்கமாக இருந்தது; அதற்கு மாற்றாக இத்தாலிய மன்னராட்சியையே அவர் முன்வைத்தார். ஆனால் மாஜினியின் வரையறையில் இத்தாலி என்பது உழவர்கள் உட்பட எல்லா மக்களையும் குறிக்கும்; உழைக்கும் மக்கள் மகிழ்ச்சியற்றிருப்பதால், மாஜினியின் இத்தாலி இன்னும் அடிமை நிலையிலேயே இருக்கிறது என்று காந்தி கருதினார். அதுபோலவே தனது தேசபக்தியும் பிரித்தானியர்களுக்குப் பதிலாக இந்திய மன்னர்களின் காலடியில் மக்கள் நசுக்கப்படுவதை அனுமதிக்காது; தேசபக்தி என்ற சொல்லின் மூலம் அனைத்து மக்களின் நலனையுமே கருத்தில்கொள்வதாகவும் ஆங்கிலேயர்கள் மூலமாக அப்படியொரு நலம் விளைந்தால், அவர்களுக்குத் தலை வணங்கத் தயார் என்றும் சொன்னார். சர்வாதிகாரத்தை எதிர்த்து இந்தியா சுதந்திரம் பெறுவதற்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்து இந்நிலத்துக்காகப் பாடுபடும் எந்த ஆங்கிலேயனையும் இந்தியனாக ஏற்று வரவேற்கத் தயார் என்று அறிவித்தார். (5)

வன்முறையின் மீதெழுப்பப்பட்ட தேசியத்தைக் கொள்கையடிப்படையில் எதிர்த்த காந்தி, நடைமுறைத் தர்க்கம் சார்ந்தும் அதை எதிர்த்தார். இத்தாலியர்களைப் போல ஆயுதமேந்தி ஆங்கிலேயர்களை வீழ்த்தவேண்டுமெனில் இந்தியாவும் ஐரோப்பிய முறைகளைத் தழுவ வேண்டும். அப்போது இந்தியாவின் நிலையும் ஐரோப்பாவைப் போலவே பரிதாபத்துக்குரியதாகும். ஐரோப்பியப் பண்பாடுதான் நமக்கு வேண்டுமெனில், அப்பண்பாட்டில் நன்றாகப் பயிற்சிபெற்றிருப்பவர்கள் நம்மிடையே இருப்பதுதானே சிறந்தது. பிறகு சில உரிமைகளுக்காகப் போராடிக்கொண்டு காலம் கழித்துவிடலாம் என்று தீவிரவாத தேசியத்துக்கு எதிராக வாதாடினார்.

1909ல், லண்டனில் இந்திய மாணவர்களோடான ஒரு சந்திப்புக்கு வந்த கர்சன் வில்லி என்ற ஆங்கிலேய அதிகாரியை மதன்லால் திங்க்ரா சுட்டுக்கொன்றார். குறுக்கே வந்து அவரைத் தடுக்க முயன்ற லால்கக்கா என்ற பார்சி மருத்துவரையும் கொன்றுவிட்டார். அப்போது தேசியவாதிகள் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு செயலை காந்தி செய்தார். திங்க்ரா செய்தது தவறு என்று ஒரு கட்டுரை எழுதினார். இன்றும்கூட திங்க்ராவின் நீதிமன்ற அறிக்கை தேசபக்தியின் உச்சங்களில் ஒன்றாகப் பலரால் போற்றப்படுகிறது. (ராமச்சந்திர குகா, திங்க்ராவின் உரையைப் பெற்ற சாவர்க்கர் அதில் ராமர், கிருஷ்ணர் ஆகிய பெயர்களைச் சேர்த்து இந்துமதச் சாயம் கூட்டி வெளியிட்டார் என்கிறார். (6)) அன்று வின்ஸ்டன் சர்ச்சில் ‘தேசபக்தியின் பெயரால் பேசப்பட்ட மிகச்சிறந்த உரை’ என்றும் ‘இன்னும் ஈராயிரம் ஆண்டுகளுக்கு நினைவில் கொள்ளப்படும்’ என்றும் ‘சட்டப்படி அவர் தண்டிக்கப்படவேண்டும் – இறுதிச்சடங்குகள் செய்வதற்கு அவரது உடல் நண்பர்களுக்குத் தரப்படக்கூடாது என்பதைக்கூட நான் ஆதரிக்கிறேன்’ என்றும் தன்னிடம் சொன்னதாகக் வில்ஃபிரட் ப்ளண்ட் கூறுகிறார்(7). இந்தியன் ஒப்பீனியன் இதழில் எழுதிய காந்தி, “மதன்லால் திங்க்ராவின் எதிர்வாதம் ஏற்கத்தகுந்ததன்று. என் பார்வையில் அவர் ஒரு கோழையைப் போல நடந்திருக்கிறார். அவரைப் பார்த்து என்னால் பரிதாபப்படத்தான் முடிகிறது. அவர் படித்த மிக மோசமான எழுத்துகளை அரைகுறையாகப் புரிந்துகொண்டதால் இச்செயலைச் செய்யத் தூண்டப்பட்டிருக்கிறார். அவர் ஆற்றிய எதிர்வாதமும் மனனம் செய்து கற்றது போலிருக்கிறது. அவரைத் தூண்டியவர்கள்தாம் தண்டனைக்குரியவர்கள். என் பார்வையில் திரு.திங்க்ரா தன்னளவில் குற்றமற்றவர். இக்கொலை ஒரு போதைநிலையில் செய்யப்பட்டுள்ளது. மதுவோ கஞ்சாவோ மட்டும் போதைதருவதில்லை; ஒரு வெறியூட்டும் சிந்தனையும் அதைச் செய்யும். இதுதான் திரு.திங்க்ராவுக்கு நிகழ்ந்துள்ளது,” என்றார். ‘இங்கிலாந்தின் மீது ஜெர்மனி படையெடுத்து வந்தால் ஜெர்மானியர்களை எதிர்த்து ஆங்கிலேயர்கள் சுடமாட்டார்களா?’ என்ற திங்க்ராவின் வாதத்துக்கு, “ஆங்கிலேயர்கள் படையெடுத்துவரும் ஜெர்மானியர்களைத்தாம் கொல்வார்கள். எதிர்ப்படுபவர்களையெல்லாம் கொல்லமாட்டார்கள். விருந்தாளியாக வந்தவர்களைச் சுடமாட்டார்கள்,” என்றார். “இப்படிப்பட்ட கொலைப்பாதகங்களின் மூலம் பிரித்தானியர்களை வெளியேற்றினால் அவர்களுக்கு மாற்றாக நம்மை யார் ஆள்வார்கள்? ஒரே பதில்: கொலைகாரர்கள்” என்று வாதிட்டார். (8) பின்னார் ‘இந்திய சுயராச்சியம்’ நூலிலும், “திங்க்ராவின் செயலாலும், அதைப் போல இந்தியாவில் நடந்துள்ள பிற செயல்களாலும் இந்தியா பலனடைந்துள்ளது என்று நினைப்பவர்கள் பெரிய தவறிழைக்கிறார்கள். திங்க்ரா ஒரு தேசபக்தன்; எனினும் அவர் அன்பு குருட்டுத்தனமானது. அவரது உடலைத் தவறான வழியில் பலியிட்டிருக்கிறார். இதன் விளைவு விபரீதமானதாகத்தான் இருக்கும்,” என்று எழுதினார். திங்க்ரா ஆங்கிலேய அதிகாரியை மட்டுமல்லாமல் ஓர் இந்தியரையும் சேர்த்தே கொன்றார் என்பதையும் அவர் குறிப்பிடத் தவறவில்லை.

காந்தி இந்திய சுயராச்சியம் நூலிலேயே பின்னாளில் தன் தேசியத்தின் மிக முக்கியமான அம்சமாக வளர இருந்த மத ஒற்றுமையையும் முன்வைத்தார். காந்தியின் தேசியத்தில் இந்து மத அடையாளம் நிறைந்திருந்தாலும் அவர் சனாதன தேசியவாதிகளிடமிருந்து பெரிதும் மாறுபட்டிருந்தார். “வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த மக்கள் வாழ்கிறார்கள் என்பதாலேயே இந்தியா ஒற்றைத் தேசமில்லை என்றாகிவிடாது. அந்நியர் புகுந்துவிடுவதால் ஒரு தேசம் அழிந்துவிடாது; அவர்கள் அத்தேசத்தில் இணைந்துவிடுகிறார்கள். அப்படியான சூழல் இருக்கும்போதுதான் ஒரு நாடு ஒற்றை தேசமாக இருக்கமுடியும். பிறரை உள்வாங்கித் தன்வயப்படுத்தும் தன்மையை அத்தேசம் பெற்றிருக்கவேண்டும். இந்தியா அப்படியான தேசமாகத்தான் இருந்திருக்கிறது. நடைமுறையில், எத்தனை தனிநபர்கள் இருக்கிறார்களோ அத்தனை மதங்கள் இருக்கின்றன. ஆனால் தேசியத்தின் ஆன்மாவை உணர்ந்தவர்கள் மற்றவர்களது மதத்தில் தலையிடமாட்டார்கள். அப்படிச் செய்தால், அவர்கள் ஒரு தேசம் என்று கருதப்படுவதற்குத் தகுதியற்றவர்கள். இந்தியாவில் இந்துக்கள் மட்டுமே இருக்கவேண்டும் என்று இந்துக்கள் நினைத்தால் அவர்கள் கனவுலகில் உள்ளார்கள். இந்துக்கள், முகமதியர்கள், பார்சிகள், கிறுத்துவர்கள் என்று இந்தியாவைத் தம் நாடாக்கியுள்ள அனைவருமே ஒரே தேசத்தவர்தாம்; அவரவர் நன்மைக்காகவாவது அவர்கள் ஒற்றுமையாக வாழவேண்டும்.,” என்று அவர் 1909ல் எழுதியதைத் மீண்டும் மீண்டும் வெவ்வேறு சொற்களில் இறுதிவரை கூறிவந்தார்.

1947ல் பேசும்போதும், “தேசம் முழுவதும் ஒரே மதத்தினர் இருந்தாலும்கூட தேசிய மதம் என்ற ஒன்றில் நம்பிக்கை இல்லை. அரசின் தலையீடு எப்போதும் வேண்டாத ஒன்றாகவே இருக்கும். மதம் முற்றிலும் தனிப்பட்ட விஷயம். எத்தனை மனங்கள் உள்ளனவோ அத்தனை மதங்கள் உள்ளன,” என்றார். மத நிறுவனங்களுக்கு அரசு நிதி உதவி செய்வதை எதிர்த்தார். பள்ளிகளில் மத போதனை கூடாது; பொதுவான அறங்களையே கற்பிக்கவேண்டும்; அடிப்படை அறங்கள் எல்லா மதங்களுக்கும் பொதுவானவை என்றார். (9) பசுவை மதித்த அவர் பசுவைவிடச் சக மனிதர்களை நேசித்தார். “பசுவைக் காக்க இஸ்லாமியர்களோடு போரிட்டு அவர்களைக் கொல்லவேண்டுமா? அப்போது முகமதியருக்கும் எதிரியாகி, பசுவுக்கும் எதிரியாகிவிடுவேன்,” என்றார். சட்டங்கள் மூலம் பசுவைக் காப்பாற்ற முடியாது, மனமாற்றத்தின் மூலமாக மட்டுமே பசுவைக் காக்கமுடியும் என்று நம்பினார்.

காந்தியின் தேசியம் பெரும்பான்மையினரது விருப்பத்தைப் பிரதிபலிக்கின்ற ஒன்றாக இல்லை. ‘சிறுபான்மையினரின் சேவைக்கு என்னை அர்ப்பணிக்கவே எனது அகிம்சை என்னைப் பணிக்கிறது,’ என்றார்(10) பெரும்பான்மையினரின் விருப்பத்துக்கிணங்கி முடிவெடுக்கவேண்டும் என்ற விதியை மனசாட்சியின்படி செயல்படவேண்டிய விஷயங்களில் நிராகரிக்கவேண்டும் என்ற நிலைப்பாடு எடுத்தார்.

காந்தியின் தேசியம் பிற தேசியவாதிகளிடமிருந்து மாறுபட்ட இன்னொரு இடம், அரசாங்கத்தின் கட்டுப்பாடு எந்தளவு தேவை என்பதில். “அந்நிய ஆட்சியோ தேசிய அரசாங்கமோ, சுயாட்சி என்பதன் பொருள் அரசின் கட்டுப்பாட்டில் இல்லாமல் சுயமாக இயங்குவதற்கான தொடர் முயற்சியில் ஈடுபடுவதுதான். மக்கள் தொடர்ந்து விதிமுறைகளையே நோக்கியிருந்தார்களேயானால் சுயராச்சியம் என்பது ஒரு பரிதாபமான நிகழ்வாகிவிடும்.” (11) வலுவான தேசியவாதம் வலுவான மையத்தையே கோருகிறது. காந்தியின் தேசியமோ மையத்துக்கு எதிரானது. அங்கு அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும். கிராமங்கள் சுயாட்சி பெற்றுத் தன்னிறைவு அடையவேண்டும். மையப்படுத்தப்பட்ட அமைப்பினை வன்முறையால்தான் காக்க முடியும். அகிம்சையைத் தொழில்மயமான பண்பாட்டில் கட்டியெழுப்பமுடியாது. தன்னிறைவு பெற்ற கிராமங்களின் மீதே எழுப்பமுடியும். ஹிட்லரே விரும்பினாலும் ஒரு லட்சம் கிராமங்களை அழிக்கமுடியாது. அந்த முயற்சியில் அவனும் அகிம்சாவாதியாகிவிடுவான். தான் கண்ட கிராமப் பொருளாதாரம் சுரண்டலற்றது. சுரண்டலே வன்முறையின் சாரம் என்று காந்தி நம்பினார். (12) இந்திய நகரங்களில் தென்படும் செல்வத்தைப் பார்த்து ஏமாந்துவிட வேண்டாம் என்று எச்சரித்தார். “அச்செல்வம் இங்கிலாந்திலிருந்தோ அமெரிக்காவிலிருந்தோ வரவில்லை. ஏழைகளின் உதிரத்திலிருந்து வருகிறது. ஏழு லட்சம் கிராமங்கள் இந்தியாவிலிருந்ததாகக் கூறப்படுகிறது. அவற்றில் சில துடைத்தெறியப்பட்டுவிட்டன. வங்காளத்திலும், கர்நாடகத்திலும் பிற இடங்களிலும் எத்தனை ஆயிரம் பேர் பட்டினியாலும் நோயாலும் இறந்தார்கள் என்பது குறித்த எந்தப் பதிவுகளும் இல்லை. கிராம மக்கள் என்னென்ன துன்பங்களை அனுபவிக்கிறார்கள் என்பது பற்றி அரசாங்க ஆவணங்கள் தெரிவிக்கமுடியாது. ஒரு கிராமத்தானாக இருப்பதால், கிராமங்களின் நிலை எனக்குத் தெரியும். கிராமப் பொருளாதாரம் எனக்குத் தெரியும். மேலிருந்து வரும் அழுத்தம் கீழே உள்ளவர்களை நசுக்கிவிடுகிறது.
நாம் செய்ய வேண்டியதெல்லாம், அவர்கள் முதுகுகளிலிருந்து இறங்குவதுதான்.” (13)

1942ல் கிராம சுயராச்சியம் குறித்த விரிவான ஒரு சித்திரத்தை காந்தி தீட்டினார். கிராமம் என்பது ஒரு முழுமையான குடியரசாக இருக்கும். அதன் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றுவதில் அது தன்னிறைவு பெற்றிருக்கும். பிற விஷயங்களில் பிறரைச் சார்ந்திருக்கும். உணவு, உடை, ஆடுமாடுகள், கல்வி, கேளிக்கை போன்றவற்றில் கிராமம் தன்னிறைவு கொண்டிருக்கும். உபரி நிலத்தில் பணப்பயிர்களை விளைவிக்கும். கிராமம் தனக்குத் தேவையான நீர் ஆதாரங்களை ஏற்படுத்திக்கொண்டு பராமரிக்கும். முடிந்தவரை கூட்டுறவு முயற்சியில் எல்லாம் நடைபெறும். இன்றிருப்பது போன்ற சாதியடுக்குகளும் தீண்டாமையும் இருக்காது. கிராம மக்களே கிராமக் காவலர்களாக முறையெடுத்து இருப்பார்கள். கிராம ஆட்சியை குறைந்தபட்ச தகுதிகளையுடைய கிராம மக்களால் ஆண்டுதோறும் தேர்ந்தெடுக்கப்படும் பஞ்சாயத்து அமைப்பு பார்த்துக்கொள்ளும். தேவைப்படும் அதிகாரம் பஞ்சாயத்துக்கு இருக்கும். நாமறிந்த தண்டனைமுறை இருக்காது. பஞ்சாயத்தே சட்டமன்றமாகவும், நீதிமன்றமாகவும், செயல்படுத்தும் அமைப்பாகவும் இருக்கும். தனிநபர் சுதந்திரத்தோடு கூடிய முழுமையான மக்களாட்சி இங்கு இருக்கும். உலகையே எதிர்க்கும் வல்லமை கொண்டிருக்கும்.(14)

திலகர் காலம் தொட்டே இந்திய தேசியவாதிகளின் முக்கியமான ஒரு முன்னெடுப்பாக சுதேசி இயக்கம் இருந்தது. காந்தியின் கதர் இயக்கத்தை அந்த சுதேசி இயக்கத்தின் நீட்சியாகப் பார்க்கலாம். ஆனால் காந்தியின் சுதேசி குறித்த கருத்துகளும் பிற தேசியவாதிகளின் கருத்துகளுக்கு முரணானவையாக இருந்தன. வெளிநாட்டு மூலதனமும் திறமையும் கலந்துவிடுவதாலேயே ஒரு நிறுவனம் சுதேசி நிறுவனமன்று என்றாகிவிடாது. எந்த ஒரு பொருளும் பல லட்சக்கணக்கான மக்களின் நன்மைக்காக அமைந்தால், இந்தியக் கட்டுப்பாட்டில் இருக்கும் எந்த ஒரு நிறுவனமும், அந்நிய மூலதனமும் திறமையும் கலந்திருந்தாலும், சுதேசி நிறுவனம்தான். முழுக்கவே இந்திய முதலீடும் இந்திய ஊழியர்களையும் கொண்டு நடத்தப்பட்டாலும், அந்நியர்கள் கட்டுப்பாட்டில் இருந்து, பொருள்கள் மலிவாக இருந்தாலும் இந்தியத் தொழில்களை நசுக்கினால், அவை சுதேசியாகக் கருதப்படக்கூடாது.(15) அதேபோல, இந்திய முதலாளிகள்வசம் இருந்தன என்ற காரணத்துக்காக இந்தியாவின் பருத்தி ஆலைகளை உண்மையான சுதேசி நிறுவனங்களாகவோ பிரித்தானிய ஆலைகளுக்கு மாற்றாகவோ அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. அவை ஒருசிலருக்கு லாபம் ஈட்டித்தந்தனவேயன்றி பெருவாரியான மக்களுக்குப் பயன்தருவனவாக இல்லை. எனவே அவற்றைக் கதர் இயக்கத்திலிருந்து வேறுபடுத்திப்பார்த்தார். காந்திய தேசிய அளவுகோள்களின்படி ‘இந்தியாவில் உற்பத்தி’ என்பது முக்கியமேயில்லை. யார் பயன்பெறுகிறார்கள் என்பதுதான் கேட்கப்படவேண்டிய கேள்வி.

உடை, மொழி, வாழ்க்கைமுறை என்று அனைத்திலும் காந்தி இந்தியாவின் பல கோடி ஏழைகளை நெருங்கிச் சென்றார். முதன்முறையாக இந்திய தேசிய இயக்கம் அவர்களை உள்ளிழுத்துக்கொண்டது. காந்தி இந்திய தேசியவாதிகளைச் சாதி குறித்தும், தீண்டாமை குறித்தும் சிந்தக்க வைத்தார். செயல்பட வைத்தார். சுயராச்சியத்தைவிட மக்களின் சமூக விடுதலையையும் மேம்பாட்டையும் மேலாக வைத்தார். 1921லேயே தீண்டாமை ஒழிப்பை சுயராச்சியத்தோடு இணைத்துப் பேசத்தொடங்கினார். “கிலாஃபத் அநீதியை நாம் சரிசெய்துவிடலாம். ஆனால் தேசிய உடலின் இந்து அங்கத்தைத் தீண்டாமை என்னும் நஞ்சு அரித்துக்கொண்டிருக்கும்வரை நம்மால் சுயராச்சியத்தை எட்டவே முடியாது…நாமே மனிதத்தன்மையற்று நடந்துகொண்டு ஆண்டவனின் அரியணை முன்பு நின்று பிறரது மனிதநேயமற்ற செயல்களிலிருந்து நம்மை விடுவிக்குமாறு வேண்டமுடியாது,” என்றார். (16) தேசிய விடுதலை இயக்கத்தோடு சமூக விடுதலையையும் பிற நிர்மாணப் பணிகளையும் இணைத்ததை நேரு, சுபாஷ் சந்திர போஸ் உட்படப் பலரும் விமர்சித்தனர். “நம்மவருக்குள் பரஸ்பர அநீதியுள்ளவரை தேசத்தில் ஸமாதானமிராது. நாம் பலவகைகளிலே துன்பப்பட நேரும்,” என்று ‘தீண்டாமை என்னும் பாதகம்’ என்ற கட்டுரையில் எழுதிய பாரதி கூட, “நம்முடைய ஸமூஹ வாழ்வில் அநீதிகள் இருக்கும்வரை நமக்கு ஸ்வராஜ்யம் ஸித்தியாகா தென்ற கொள்கையை நான் அங்கீகரிக்கவில்லை,” என்று அதே கட்டுரையில் குறிப்பிடுகிறான். எனினும் தீண்டாமை ஒழிப்பும், இந்து-முஸ்லிம் ஒற்றுமையும், கிராம சுயராச்சியமும், கதராடையும் காந்தியின் தேசியத்தில் பிரிக்கமுடியாத அம்சங்களாகவே இருந்தன.

வலுவான கிராமக் குடியரசுகளை உருவாக்க நினைத்த காந்தி ஏன் ஒரு பெரிய நாட்டினை உருவாக்க விரும்பினார்? இந்தியா பல மதங்கள், மொழிகள், இனங்கள் கொண்டிருந்தாலும், பண்பாட்டு ரீதியாக பல ஒற்றுமைகள் நிறைந்த ஒற்றை நாடு என்று எண்ணம், பிற இந்திய தேசியவாதிகளைப் போலவே, காந்திக்கும் இருந்தது. தென்னாப்பிரிக்காவிலேயே இந்துக்களோடும் முஸ்லிம்களோடும், தமிழர்களோடும் குஜராத்திகளோடும் பதானியர்களோடும் இணைந்து பணியாற்றிய காந்திக்கு இந்தியர்கள் ஒரே மக்கள் என்னும் கருத்து வலுப்பெற்றிருக்கும். இந்தியாவில் அவரது நீண்ட பயணங்கள் மூலமாக அவர் அதை உறுதிசெய்திருக்கலாம். அசைக்கமுடியாத ஆங்கிலேய அரசை அகிம்சை முறையில் எதிர்ப்பதற்காகப் பிரிந்து கிடந்த மக்களை ஒன்றுதிரட்டிப் போராட வேண்டிய ஒரு நடைமுறைத் தேவையும் அவருக்கிருந்தது. பிரித்தானியர்கள் வெளியேறியபின், மக்கள் விழிப்புணர்வு பெறாவிட்டால், இந்தியா மன்னர்கள் ஒருவரோடொருவர் போரிட்டுக்கொள்ளும் போர்க்களமாகி, அவர்களில் பெரியவர்கள் சிறியவர்களை விழுங்கி ஆட்சியைக் கைப்பற்ற முனைவார்கள் என்ற அச்சத்தையும் ஒருமுறை பகிர்ந்துகொண்டார். சுதந்திரமான, வலுவான ஒன்றிணைந்த இந்தியா உலகத்துக்கொரு புதுமையாகத் திகழும் என்றும் அவர் எதிர்பார்த்தார். “இந்தியா சுதந்திர நாடாகவும் வலிமைமிக்கதாகவும் ஆவதைக் காண விரும்புகிறேன; அதன்மூலம் உலகின் மேம்பாட்டுக்கு அவள் தன்னையே தூய்மையான பலியாகத் தரலாம். ஒரு தனிநபர், தூய்மையாக இருந்தால், குடும்பத்துக்காக தியாகம் செய்வார்; குடும்பம் கிராமத்துக்காகவும், கிராமம் மாவட்டத்துக்காகவும், மாவட்டம் மாகாணத்துக்காகவும், மாகாணம் தேசத்துக்காகவும், தேசம் அனைவருக்காகவும் தியாகம் செய்யட்டும்,” என்றார்.(17) வேறொரு இடத்திலும் இதே கருத்தை வெளிப்படுத்தும்விதமாக, “உலக நலனுக்காக நாடு மடிவது தேவையெனில் அப்படி மடிவதற்காக முதலில் நாடு சுதந்திரமாக இருக்க வேண்டும். அதனால்தான் நாடு சுதந்திரமடையவேண்டும் என்ற ஆசை எனக்குள்ளது – மனித இனம் வாழ்வதற்குத் தேவையெனில் நாடு முழுமையும் மடியட்டும். இன வெறுப்புக்கு இங்கு இடமே கிடையாது. அதுவே நம் தேசியமாக இருக்கட்டும்,” என்றார்.(18) “நம் சேவைகளை தேச எல்லைகளைக் கடந்து வழங்குவதற்கு எந்தத் தடையும் இல்லை. கடவுள் இந்த எல்லைகளை உருவாக்கவில்லை,” என்ற ஒரு முக்கியமான கருத்தையும் தெரிவித்தார். (19)

மொழி வேற்றுமை நிறைந்த பரந்த நாட்டில் இணைப்பு மொழியாக இந்தி வேண்டும் என்று அவர் நினைத்தார். அந்நிய ஆதிக்கத்தின் கருவியாக இருந்த ஆங்கிலத்துக்கு மாற்றாக அவருக்கு ஒரு தேசிய மொழி தேவைப்பட்டது. எனவேதான் ஒவ்வொரு பகுதியிலும் தாய்மொழிப் பயன்பாட்டையும் தாய்மொழிவழிக் கல்வியையும் வலியுறுத்திய காந்தி, இணைப்பு மொழியாக இந்தியையும் வலியுறுத்தினார். முஸ்லிம்களுக்கும் இந்தியை ஏற்புடையதாக்குவதற்காக தேவநாகிரி, உருது ஆகிய இரண்டு எழுத்துமுறைகளையும் எல்லாரும் கற்கவேண்டும் என்றார். அவரது தேசியத்தில் இன்றைய சூழலுக்கேற்ப மறுபரிசீலனை கோரிநிற்கும் அம்சங்களில் அவரது மொழிக்கொள்கை ஒன்று.

காந்தி தன் முதல் முக்கிய நூலான இந்திய சுயராச்சியத்திலேயே தேசியம் குறித்த தன் தனித்துவமான பார்வையை பெருமளவு வெளிப்படுத்திவிட்டார். அவரது பல கருத்துகள் பின்னால் மாறியபோதும், இந்திய சுயராச்சியம் நூலில் வெகுசில சொற்திருத்தங்களைத்தவிர எதையும் மாற்றத்தேவையில்லை என்று அதன் பிந்தைய பதிப்புகளின் போதெல்லாம் கூறினார். அவரது அரசியல் வாழ்வின் ஆரம்பத்தில் உருப்பெற்றுவிட்ட தேசியக் கொள்கைகளுக்கு மிகப்பெரிய சோதனைகள் வந்தது அவரது வாழ்வின் இறுதிக்கட்டத்தில்தான். அவரது தேசியத்தின் வேறு சில பரிமாணங்களும் அப்போது வெளிப்பட்டன.

அஸ்ஸாம் மாகாணத்தில் இன்றைக்கு நாம் சந்திக்கும் குடியேற்றப் பிரச்சனைக்கான வித்துகள் அன்றே தூவப்பட்டன. அன்றைய அஸ்ஸாமில் வடகிழக்குப் பகுதி முழுவதுமே அடங்கியிருந்தது. ஆரம்பத்தில் ஆங்கிலேயர்களால் வங்கத்திலிருந்து மக்கள் அஸ்ஸாமில் உற்பத்திப்பெருக்கத்துக்காகக் குடியேற்றப்பட்டனர். பின்னர் அஸ்ஸாம் பாகிஸ்தானோடு இணைவதற்கு ஏதுவாக வங்கத்திலிருந்து முஸ்லிம்கள் குடியேறுவதை அப்போதைய அஸ்ஸாம் பிரதமராக இருந்த முகமது சாதுல்லாவின் நிலக்குடியேற்றக் கொள்கை ஊக்குவித்தது. கோபிநாத் பர்தொலாய் தலைமையில் அஸ்ஸாம் காங்கிரஸ் கட்சியினர் இதை எதிர்த்தனர். அப்போது அவர்களுக்கு ஆதரவளித்த ஒரே இந்தியத் தலைவர் காந்திதான்.(20) “அரசாங்கத்தின் குடியேற்றக் கொள்கையை ஒடுக்குமுறையாகவும், தேசவிரோதமானதாகவும் மக்கள் கருதினால், அதற்கெதிராக அவர்கள் அகிம்சை முறையிலோ, தேவைப்பட்டால் வன்முறை மூலமோ போராடட்டும்,” என்றார்.(21) ‘தேவைப்பட்டால் வன்முறை மூலம் போராடட்டும்’ என்று காந்தி சொன்னது ஆச்சரியம் தந்தாலும், இப்பிரச்சனை எந்தளவு தீவிரமானது என்பதை அவர் உணர்ந்திருந்தார் என்பதைக் காட்டுகிறது. பின்னர் 1946ல் காபினெட் மிசன் திட்டத்தின்படி அஸ்ஸாம் வங்கத்தோடு இணைந்து ஒரு குழுவில் சேர்க்கப்பட்டது. வங்கம் இந்தியாவிலிருந்து பிரிந்தால் அஸ்ஸாமும் பிரியும் அபாயம் இருந்தது. பர்தொலாய் போன்றவர்கள் இந்தியாவோடு இணைவதையே விரும்பினர். அப்போதும் காந்தி மட்டுமே அஸ்ஸாம் காங்கிரசுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்தார். இக்குழுவில் இணைய மறுத்து தேசியக் காங்கிரஸ் தலைமைக்கும் பிரித்தானிய அரசுக்கும் எதிராகப் போராடச் சொன்னார். “இப்போது நீங்கள் சரியாகச் செயல்படவில்லையெனில் அஸ்ஸாம் முடிந்தது. […] காந்தியே வேண்டாமென்று தடுத்தாலும், நாங்கள் கேட்கமாட்டோம் என்று மக்களிடம் சொல்லுங்கள்,” என்றார். (22) குறிப்பிட்ட இன/பகுதி மக்களின் விருப்புகளுக்கு இணங்கி தேசிய அளவில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு எதிராகச் செல்வதற்கு காந்தியின் தேசியத்தில் இடமிருந்தது.

பிரிவினையின் பிறகு காஷ்மீர், ஜூனாகத், ஐதராபாத் ஆகிய சமஸ்தானங்கள் யாரோடு இணைவது என்பதில் சிக்கல் வந்தபோது, காந்தி பொதுவான நிலைப்பாட்டையே எடுத்தார். மக்களுடைய விருப்பத்துக்குச் செவிசாய்க்கவேண்டும் என்றார். “காஷ்மீரில் இன்னும் மக்கள் ஆதரவு பெற்ற ஆட்சி அமையவில்லை. ஐதராபாத், ஜுனாகத் போன்ற பிற நாடுகளிலும் அதே நிலைதான். என் நோக்கில் இவற்றிற்கிடையே எந்த வேறுபாடும் இல்லை. ஒரு நாட்டின் உண்மையான ஆட்சியாளர்கள் அதன் மக்கள்தாம். காஷ்மீரத்து மக்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருந்தால், உலகின் எந்த சக்தியாலும் அவர்கள் அவ்வாறு செய்வதைத் தடுக்கமுடியாது. ஆனால் அவர்களே முடிவெடுக்க அவர்களைச் சுதந்திரமாக விட்டுவிடவேண்டும். மக்களைத் தாக்கக்கூடாது; கிராமங்களை எரித்துக் மிரட்டக்கூடாது. காஷ்மீரத்து மக்களில் முஸ்லீம்கள் பெரும்பான்மையினராக இருப்பினும், அவர்கள் இந்தியாவோடு இணைய விரும்பினால், யாராலும் அவர்களைத் தடுக்க இயலாது,” என்று கூறினார். (23)

காந்தியின் தேசியத்தில் எப்போதும் மக்கள் குரலுக்கு இடமிருந்தது. மனசாட்சியின் குரலுக்கும் இடமிருந்தது. முடிந்தவரை அரசுடன் ஒத்துழைக்க வேண்டும் என்றது. ஆனால் தவறுகள் சகிக்கமுடியாதுபோகும்போது எதிர்ப்பது மக்களின் கடமை என்றும் கருதியது.

“அகிம்சை முறையில் தனது சுதந்திரத்தையும் காத்து, அதன் மூலமாக தனது நாட்டின் சுதந்திரத்தையும், இறுதியில் உலக மக்கள் அனைவரின் சுதந்திரத்தையும் காப்பவனே உண்மையான ஜனநாயகவாதி,” என்று ஒரு ஜனநாயக தேசியத்துக்கான வரையறையை காந்தி தந்தார். (24)

காந்தியின் தேசியம் குறுகிய எல்லைகளுக்குள் உழல்வதாக இல்லை. ஆட்சிப்பொறுப்பில் யாரிருக்கிறார்கள் என்ற அக்கறையற்று மக்கள் நலனையே மையமாகக் கொண்டது. அடிமைநாட்டில் தேசியமாக இருந்தது, சுதந்திர நாட்டில் தேசம் கடந்து சர்வதேசியமாய் மலர்ந்திருக்கக்கூடும். ஆனால் அந்த வாய்ப்பு காந்தியின் தேசியத்துக்கு முற்றிலும் எதிரான வேறொரு தேசியத்தால் பறிக்கப்பட்டது.

இன்றைய உலகம் சந்திக்கும் அரசியல், பருவநிலை நெருக்கடிநிலையில், புவியியல் எல்லைகளைக் கடந்த, தன்னிறைவான சிறு சமூகங்களை மையமாகக் கொண்ட, உலக மக்களை அரவணைக்கக் கரங்களை நீட்டும் காந்திய தேசியத்துக்கான தேவை அதிகரித்துவருகிறது.

குறிப்புகள்:

  1. Leo Tolstoy, ‘Patriotism and Government’, Pirogóva, 23rd May 1900. [https://libcom.org/files/Patriotism_and_Government.pdf]
  2. B.Srinivasa Murthy, ‘Mahatma Gandhi and Leo Tolstoy Letters’, CA: Long Beach Publications, 1987. [Leo Tolstoy, ‘A Letter to a Hindu’, December, 1908.]
  3. Ibid
  4. Sabyasachi Bhattcharya, ‘The Mahatma and the Poet: Letters and Debates between Gandhi and Tagore 1915-1941’, New Delhi: National Book Trust, 1997.
  5. M.K.Gandhi, ‘Hind Swaraj or Indian Home Rule’, Ahmedabad: Navajivan Publishing House, 1909
  6. Ramachandra Guha, ‘Gandhi Before India’, New Delhi: Penguin India, 2013
  7. Wilfrid Scawen Blunt, ‘My Diaries: Being a Personal Narrative of Events’, London: Martin Secker, 1932
  8. M.K.Gandhi, ’The Collected Works of Mahatma Gandhi’, ‘Curzon Wyllie’s Assassination’, Indian Opinion, 14-8-1909.
  9. Nirmal Kumar Bose, “Selections from Gandhi”, Harijan, 16-3-1947.
  10. R.K.Prabhu, U.R.Rao, ‘The Mind of the Mahatma”, Harijan, 11-5-1947.
  11. Nirmal Kumar Bose, “Selections from Gandhi”, Young India, 6-8-25.
  12. ibid, Harijan, 4-11-1939.
  13. ibid, Anand Bazar Patrika, 30-6-1944.
  14. ibid, Harijan, 26-7-1942.
  15. ibid, Harijan, 25-2-1939.
  16. ibid, Young India, 25-5-1921.
  17. ibid, Young India, 17-9-1925.
  18. ibid, Gandhiji in Indian Villages by Mahadev Desai. S. Ganesan, Triplicane, Madras, 1927.
  19. ibid, Young India, 31-12-1931.
  20. Sangeeta Barooah Pisharoty, ‘Revisiting Partition: Gandhi’s Role in Integrating the Northeast with Independent India’, https://thewire.in/history/partition-gandhi-northeast-independence, 9-8-2017.
  21. M.K.Gandhi, ’The Collected Works of Mahatma Gandhi’, ‘MESSAGE TO PEOPLE OF ASSAM’, The Bombay Chronicle, 19-12-1944.
  22. M.K.Gandhi, ’The Collected Works of Mahatma Gandhi’, ‘Interview to Assam Congressmen’, 15-12-1946, Harijan, 29-12-1946
  23. த.கண்ணன், ‘போரும் அகிம்சையும்: காஷ்மீர் குறித்து காந்தி’, சென்னை: யாவரும் பதிப்பகம், 2019.
  24. R.K.Prabhu, U.R.Rao, ‘The Mind of the Mahatma”, Harijan, 15-4-1939.

க.மு.நடராஜன் : அஞ்சலி

மே 26, 2021

நம் காலத்தின் மிகப்பெரிய காந்திய ஆளுமைகளில் ஒருவரான க.மு.நடராஜன் மறைந்துவிட்டார். காந்தியக் காலத்தின் கடைசிக் கண்ணிகளில் ஒருவர். பூமிதான இயக்கத்தில் ஈடுபட்டவர். வினோபா, ஜெயப்பிரக்காஷ் நாராயணன் ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர். அவர்களது தமிழ்நாட்டுப் பயணங்களின் போது பல சமயங்களில் அவர்களது உரைகளை மொழிபெயர்த்தவர். ஜெகந்நாதன், கிருஷ்ணம்மாள் தம்பதியரின் செயல்பாடுகளில் அவர்களுக்கு உற்ற துணையாக இருந்தவர். பெரும் அறிஞர். தொண்ணூறு வயதிலும் மூன்று அச்சிதழ்களுக்கு (சர்வோதயம் மலர்கிறது, கிராம ராஜ்ஜியம், Sarvodaya Talisman) ஆசிரியராக இருந்தவர். எதையும் அஞ்சாமல் பேசவும் எழுதவும் செய்தவர். பல சர்வோதய நிறுவனங்களுக்குத் தலைவராக இருந்தார். அவரொரு வரலாற்றுப் பெட்டகம். உலகச் செய்திகள் அனைத்தையும் தொடர்ந்து கவனித்துவந்தார். மத நல்லிணக்கம், அனைவருக்குமான வளர்ச்சி ஆகியவற்றை வலியுறுத்தியும் அரசின் செயல்பாடுகளை விமர்சித்தும் எத்தனையோ தலையங்கங்கள் எழுதியுள்ளார்.

தனிப்பட்ட முறையில் என்மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தவர். கடந்த சில ஆண்டுகளாக என் மதிப்புக்குரிய வழிகாட்டியாக இருந்தவர். வாரமொருமுறையேனும் பேசாமலிருக்கமாட்டார். ஒவ்வொரு முறையும் ஒருமணிநேரமாவது பேசுவார். நான் அண்மைக் காலங்களில் அதிகம் உரையாடியது அவருடன்தான். இதுகுறித்து என் மனைவிக்கு அவர் மீது ஓர் அன்பான பொறாமையே உண்டு. புதியவர்களை சர்வோதயக் குடும்பத்துக்குள் கொண்டுவர வேண்டும் என்பதில் எப்போதும் தணியாத ஆர்வம் கொண்டிருந்தார். ஒருமுறை அவருடன் தொடர்பில் வந்துவிட்டால் தன் அன்புக்கரங்களால் பற்றிக்கொள்வார். இரண்டாண்டுகளுக்கு முன்னர் எழுத்தாளர் பாவண்ணனோடு தொடர்பு ஏற்பட்டபிறகு அவர் பல ஆளுமைகளைப் பற்றி எழுதத் தூண்டுதலாக இருந்தார். ஒவ்வொரு முறை பேசும்போதும் அவரை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி கூறுவார். என்னையும் பல மூத்த காந்தியர்களுக்கு அறிமுகப்படுத்திவைப்பார். பல நிகழ்வுகளுக்கு அழைத்துச் சென்றார். மதுரையில் இல்லாமல் போய்விட்டேன் என்று ஆதங்கப்படுவார். ஏதேனும் புத்தகம் படித்ததாகக் கூறினால் உடனே அதுகுறித்து எழுதி அனுப்பச் சொல்வார். அவரும் புத்தகங்கள் அனுப்பி வைப்பார். என் மனைவி என்னைவிட நன்றாக மொழிபெயர்ப்பதாகக் கூறி அவரையும் எழுதுவதற்குத் தூண்டுவார். மகளின் மீதும் பேரன்பு கொண்டிருந்தார்.

கடந்த எண்பது ஆண்டுகளில் நடந்த நிகழ்வுகள், வாழ்ந்த ஆளுமைகள் குறித்தெல்லாம் பதிவு செய்யப்படாத பல அரிய தகவல்களைத் தொடர்ந்து பகிர்ந்துகொண்டே இருப்பார். அவற்றை முறையாகப் பதிவு செய்யவேண்டும் என்பது என் நீண்டகால ஆவல். அவரிடமும் பிற நண்பர்களிடமும் தெரிவித்துக் கொண்டே இருந்தேன். ஆனால் செய்யாமலே விட்டுவிட்டேன். அது எனக்கு எப்போதும் பெரிய மனக்குறையாகவே இருக்கும். நம் எல்லாருக்கமே அது பெரிய இழப்புதான்.உண்மையிலேயே அவரது மரணம் ஈடுசெய்யமுடியாத பேரிழப்பு.


காந்தியின் தேசியம்

ஜனவரி 17, 2020

இம்மாத காலச்சுவடு இதழில் ‘காந்தியின் தேசியம்’ குறித்த எனது கட்டுரை வெளிவந்துள்ளது. இது குடியுரிமைச் சட்ட திருத்தம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் எழுதப்பட்ட கட்டுரை. எனினும் இச்சூழலில் காந்தியின் தேசியம் குறித்த கருத்துகளும், அவர் மிகவும் மதித்த தாகூர், தல்ஸ்தோய் ஆகியோர் தேசியத்தை எதிர்த்துக் கூறிய கருத்துகளும் மேலும் முக்கியத்துவம் பெறுகின்றன.


இணையத்தில் சந்தாதாரர்கள் மட்டுமே இப்போது படிக்கமுடியும். கட்டுரையிலிருந்து சில பகுதிகள்:

/நாம் மிக முக்கியமாகக் கருத்தில் கொள்ள வேண்டியது காந்தியின் தேசியம் ஓர் அடிமை நாட்டின் விடுதலைக்காகப் போராடிய ஒருவரின் தேசியம்; விடுதலைக்குப் பிறகு வாழ்ந்த சில மாதங்களிலும் சிதறிக்கிடந்த மக்களை ஒருங்கிணைக்கப் போராடியவரின் தேசியம்; தேசியத்தின் பெயரால் கொல்லப்பட்ட ஒருவருடைய தேசியம். அமைதி நிலவும் சுதந்திரத் தேசத்தில் அவர் தேசம் கடந்த மனிதநேய நிலையை நோக்கித்தான் சென்றிருப்பாரென்பதை அவர் வெவ்வேறு தருணங்களில் உரைத்த சில கருத்துகளிலிருந்து நாம் உய்த்துணரலாம். காந்தியின் தேசியத்துக்கும் காந்தியைக் கொன்றவர்களின் தேசியத்துக்கும் இடையே பெரும் வேறுபாடு உண்டு./

—-

/தாகூரும் தல்ஸ்தோயும் தாக்கிய தேசியவாதத்திலிருந்த குழுமனப்பான்மையும் வன்முறையும் மிகையான பழம்பெருமையும், தாம்-பிறர் என்ற இருமையும், காந்தியின் தேசியத்தில் இல்லாமலோ மட்டுப்பட்டோ இருந்தன. காந்திக்கு இந்திய வரலாற்றின்மீது மிகையான பற்றும் இல்லை; மேற்கத்தியப் பண்பாட்டின்மீது மிகையான ஈர்ப்பும் இல்லை; காழ்ப்பும் இல்லை. அவர் நவீனத் தொழில்மயப் போக்கை நிராகரித்தபோதும், அதன் நிறைகுறைகளை ஆய்ந்தே நிராகரித்தாரேயன்றி, அது மேற்கிலிருந்து வந்ததால் நிராகரிக்கவில்லை. ஆங்கில ஆட்சியையுமேகூட அது வெளிநாட்டவரின் ஆட்சி என்பதற்காக அவர் எதிர்க்கவில்லை; தம் நாட்டு மக்களுக்குத் தீமைதரும் ஆட்சி என்று கருதியதாலேயே எதிர்த்தார். அதனாலேயே ஆரம்பத்தில் ஆங்கில ஆட்சியிலேயே இந்தியர்களுக்குத் தேவையான உரிமைகளுடனும் சுயாட்சியுடனும் வாழமுடியும் என்று நம்பினார். அது சாத்தியமில்லை என்று அனுபவப்பூர்வமாக உணர்ந்த பிறகே ஆங்கில ஆட்சி நீங்க வேண்டும் என்ற கொள்கையை நோக்கித் தீர்க்கமாக நகர்ந்தார். நல்லாட்சி என்றாலும் அது தன்னாட்சிக்கு மாற்றாக முடியாதென்றும் எத்துணை குறைபாடுகள் இருந்தாலும் முழுச் சுதந்திரத்துடன் வாழ வேண்டுமென்றும் பின்னர் கூறினார்./

/1909இல், லண்டனில் இந்திய மாணவர்களோடான ஒரு சந்திப்புக்கு வந்த கர்சன் வில்லி என்ற ஆங்கிலேய அதிகாரியை மதன்லால் திங்க்ரா சுட்டுக்கொன்றார். குறுக்கே வந்து அவரைத் தடுக்க முயன்ற லால்கக்கா என்ற பார்சி மருத்துவரையும் கொன்றுவிட்டார். அப்போது தேசியவாதிகள் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு செயலை காந்தி செய்தார். திங்க்ரா செய்தது தவறு என்று கட்டுரை எழுதினார். இன்றும்கூட திங்க்ராவின் நீதிமன்ற அறிக்கை தேசபக்தியின் உச்சங்களில் ஒன்றாகப் பலரால் போற்றப்படுகிறது. (‘திங்க்ராவின் உரையைப் பெற்ற சாவர்க்கர் அதில் ராமர், கிருஷ்ணர் ஆகிய பெயர்களைச் சேர்த்து இந்துமதச் சாயம் கூட்டி வெளியிட்டார்’ என்கிறார் ராமச்சந்திர குஹா.) அன்று வின்ஸ்டன் சர்ச்சில் “தேசபக்தியின் பெயரால் பேசப்பட்ட மிகச்சிறந்த உரை” என்றும் “இன்னும் ஈராயிரம் ஆண்டுகளுக்கு நினைவில் கொள்ளப்படும்” என்றும் “சட்டப்படி அவர் தண்டிக்கப்பட வேண்டும் – இறுதிச்சடங்குகள் செய்வதற்கு அவரது உடல் நண்பர்களுக்குத் தரப்படக்கூடாது என்பதைக்கூட நான் ஆதரிக்கிறேன்” என்றும் தன்னிடம் சொன்னதாக வில்ஃபிரட் ப்ளண்ட் கூறுகிறார்.

இந்தியன் ஒப்பீனியன் இதழில் எழுதிய காந்தி, “மதன்லால் திங்க்ராவின் எதிர்வாதம் ஏற்கத்தகுந்ததன்று. என் பார்வையில் அவர் ஒரு கோழையைப்போல நடந்திருக்கிறார். அவரைப் பார்த்து என்னால் பரிதாபப்படத்தான் முடிகிறது. அவர் படித்த மிக மோசமான எழுத்துகளை அரைகுறையாகப் புரிந்துகொண்டதால் இச்செயலைச் செய்யத் தூண்டப்பட்டிருக்கிறார். அவர் ஆற்றிய எதிர்வாதமும் மனனம் செய்து கற்றது போலிருக்கிறது. அவரைத் தூண்டியவர்கள்தாம் தண்டனைக்குரியவர்கள்./


வேருக்கு நீர்

நவம்பர் 12, 2019

ராஜம் கிருஷ்ணனின் ‘வேருக்கு நீர்’ நாவலை இம்மாதம்தான் படித்தேன். தமிழ் இலக்கியத்தில் காந்தி குறித்துப் பேசும்போது சிலர் இதைக்குறிப்பிட்டதாலும், தற்செயலாகக் Kindle Unlimitedல் கண்ணில் பட்டதாலும் படிக்கத்தொடங்கினேன். மிகவும் பிடித்திருந்தது. காந்தி நூற்றாண்டு விழாவின் பின்னணியில் எழுதப்பட்ட நாவல். காந்தி 150க்கும் பொருந்தி வருகிறது. பல ஆழமான உரையாடல்கள் மூலமகாக லட்சியவாதத்துக்கும் வாழ்வின் யதார்த்தங்களுக்கும் ஏற்படும் உரசல்களுக்குள் ஆழமாகச் செல்கிறது. காந்தியின் மீதான அன்றைய ஆயுதம் தாங்கிய மார்க்சியர்களின் விமர்சனங்களையும் சித்தரிக்கிறது. இப்பகுதியை அசோகமித்திரனின் ‘காந்தி’ சிறுகதையோடு ஒப்புநோக்கலாம். அவர் பல அடுக்குகளை அமைத்துத் தொட்ட ஒரு புள்ளியை, இவர் இந்நாவலில் மிக நேரடியாகத் தொட்டுவிடுகிறார். காந்தியத்தால் ஈர்க்கப்பட்ட ஒரு பெண் குடும்ப வாழ்வில் சந்திக்க நேரும் சவால்களைச் சொல்வதில் பி.எஸ்.ராமையாவின் பதச்சோறு கதையோடு இணைத்துப்பார்க்கலாம்.

அரசியல், இலட்சியவாதப் பின்புலத்தில் நடைபெறும் பல உரையாடல்களும், நிகழ்ச்சிகளும் ஒரு பழைய ருஷ்ய நாவலைப் படிக்கும் நிறைவைத் தந்தன. கேள்விகளை எழுப்பின. எளிமையான, இனிமையான நடை. ராஜம் கிருஷ்ணனின் பெயர் சிறுவயது முதலே பரிச்சயமானதுதான் என்றாலும், அவரது தனிமையான இறுதிக்காலம் குறித்து முகநூல் மூலமாகக் கொஞ்சம் அறிந்திருந்தாலும், ஏன் இவரை இதுவரை நான் படித்ததே இல்லை என்பதை என்னை நானே கேட்டுக்கொள்கிறேன். இந்நூலுக்காக சாகித்ய அகாதெமி விருது பெற்றிருக்கிறார். 80 படைப்புகளுக்கு மேல் எழுதியிருக்கிறார் என்கிறது விக்கி. பிற நூல்கள் எப்படியோ, இது நல்லதொரு படைப்புதான்.