[நமது நம்பிக்கை (ஜூன் 2021) இதழில் வெளிவந்த கட்டுரை]
(1)
காந்தி முன்வைத்த கல்விமுறை அரசியல், பொருளாதார தளங்களில் அவரது பிறரது பங்களிப்புகளுக்கு இணையான ஒன்று. ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இருபதாம் நூற்றாண்டில் வளர்த்தெடுக்கப்பட்ட நவீன மாற்றுக் கல்விமுறைகளோடு ஒத்தும் முரண்பட்டும் இருப்பது காந்தியக் கல்விமுறை. கல்வி நோக்கில் எந்தவொரு நவீன முறைக்கும் இணையானது. காந்தியக் கல்விமுறை சுதந்திர இந்தியாவில் முற்றிலுமாக நிராகரிக்கப்பட்டது ஒரு வரலாற்றுச் சோகம்.
இன்றைய மையநீரோட்டக் கல்விமுறை மதிப்பெண்களையும் மாணவர்களின் எதிர்காலப் பொருளாதார வெற்றியையுமே முதன்மையாகக் கருதுகின்றது. நிலவும் அரசியல்/அதிகார அமைப்புகளைப் பேணுதலும் வெளிப்படையாகப் புலப்படாத அதன் அடிநாதமாக உள்ளது. அதற்கு மாற்றாக உலகெங்கிலும் கல்வியில் பல சோதனை முயற்சிகள் நடைபெறத்தான் செய்கின்றன. இந்தியாவில் நிகழும் பல சோதனை முயற்சிகள் காந்தியக் கல்விமுறையின் சாரத்தை உள்வாங்கியே செயல்பட்டுள்ளன. ஆனால் இச்சோதனைகள் தனிநபர்களின் முன்னெடுப்பில் நிகழ்ந்துள்ள மிகச்சிறிய முயற்சிகள். பெரும்பாலான கல்வியாளர்களும் மாணவர்களும் காந்தியக் கல்வியின் அடிப்படைகள் குறித்த அறிமுகம்கூட இல்லாமலே இருக்கின்றனர். மாற்றுக்கல்வி முயற்சிகளுக்காகட்டும் மையநீரோட்டக் கல்விக்காகட்டும் காந்தியக் கல்விமுறையிலிருந்து பல கூறுகளை உள்வாங்கிக்கொள்வது மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்துவதோடு மட்டுமன்றி இன்று நம்மை எதிர்நோக்கும் பல சமூக-பொருளாதார-சூழலியல் சவால்களுக்குத் தீர்வுகளைக் காணவும் உதவி செய்யும்.
(2)
காந்தி தென்னாப்பிரிக்காவில் தனது பிள்ளைகளுக்குத் தானே கற்றுத்தரத் தொடங்கியதிலிருந்தே கல்வி குறித்த வலுவான கருத்துகளை வளர்த்துக்கொள்ளத் தொடங்கினார். பிறகு ஃபினிக்ஸ் பண்ணையும் தல்ஸ்தோய் பண்ணையும் நிறுவிப் பல குழந்தைகளுக்குக் கற்றுத்தந்த போது பல சோதனை முயற்சிகள் செய்தார். இவற்றிலெல்லாம் குறிப்பிடத்தகுந்த வெற்றிகளையும் தோல்விகளையும் சந்தித்தார். அவற்றிலிருந்து கற்றுக்கொண்டும் இருந்தார். இந்தியா வந்தபிறகும் அவரது கல்விச் சிந்தனைகளில் மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணம் இருந்தன.
திடமான தனிச்சரடுகளாக இருந்த காந்தியின் பல்வேறு சிந்தனைப் போக்குகளும், 1937ல் பிரித்தானிய ஆட்சியின் கீழ் இந்திய மாகாணங்களில் காங்கிரஸ் அரசுகள் அமைந்தபோது, ஒன்றிணைந்து ஒரு முழுமையான வடிவம் பெறத் தொடங்கின. அப்போது ’ஆதாரக்கல்வி’ என்றும், பின்னர் ‘நயி தாலீம்’ என்றும் பெயரிட்டு அழைக்கப்பட்ட காந்தியக் கல்விமுறை மிகப்பெரும் சாத்தியங்கள் நிறைந்தவொன்றாக, ‘மௌனமான புரட்சிக்கு வழிகோலும் ஈட்டிமுனையாக’ உருவெடுத்தது. காந்திய வழியில் இயங்கும் ஒரு சமூகத்தைக் கட்டமைக்கவல்ல ஆற்றல்மிக்கதாக அமைந்தது. உழைப்புக்கும் அமைதிக்கும் அன்புக்கும் அறத்துக்கும் அறிவுக்கும் சமமான அழுத்தம் கொடுத்தியங்கும் ஒரு புதிய உலகுக்கு இளம் உள்ளங்களை வழிநடத்திச்செல்லக்கூடிய வாய்ப்பினைக் கொண்டதாக இருந்தது. வெறும் கல்விமுறையாக மட்டுமின்றி குழந்தைகளுக்கும் சமூகத்துக்கமான ஒரு வாழ்க்கைமுறையாகத் தோன்றியது.
1937 அக்டோபரில் வர்தாவில் நடைபெற்ற தேசியக் கல்வி மாநாட்டில் அறிமுக உரை ஆற்றிய காந்தி, அவரது எண்ணப்போக்கையும், புதிய கல்விமுறைக்கான தேவையையும் முன்வைத்தார். அதே ஆண்டில் அதற்கு முன்பும் பின்பும் அவர் எழுதிய கட்டுரைகள், கடிதங்கள் மற்றும் அவரது உரையாடல்கள் வாயிலாக ஒரு புதியக் கல்விக் கொள்கை தெளிவாக வெளிப்படுத்தப்பட்டது. ஜம்னாலால் பஜாஜ், அரியநாயகம், ஆஷாதேவி அரியநாயகம், வினோபா பாவே, ஆச்சார்ய கிருப்பளானி, காகா காலேல்கர் என்று பலரும் காந்தியின் புதிய பார்வையை ஆதரித்தனர்; மேலும் மெருகேற்றினர். ஜாக்கீர் ஹூசைன் தலைமையிலான ஒரு குழு, மாநாட்டின் முடிவில் ஒரு தீர்மானம் நிறைவேற்றியது. மேலும் விரிவான அறிக்கைகளும், பாடத்திட்டங்களும் அடுத்த சில மாதங்களில் வரையப்பட்டன. காங்கிரஸ் கட்சி இதையே தேசியக் கல்விக் கொள்கையாக ஏற்றுக்கொண்டது.
காந்தியக் கல்விமுறை உடனடியாகப் பல இடங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் (முக்கியமாகக் காங்கிரஸ் அரசுகள் கலைக்கப்பட்டதால்), முதிர்ச்சி அடையும் முன்பே கைவிடப்பட்டது. சுதந்திர இந்தியா காந்தியக் கல்விமுறைக்கு முற்றிலும் எதிர்த்திசையில் பயணித்தது. ஆனால், அடிப்படையில் இன்றைக்கும் என்றைக்குமான ஒரு முறையாகதான் நயி தாலீம் தென்படுகிறது.
காந்திய ஆதாரக் கல்விக்கொள்கையின் சில முக்கியக் கூறுகளைச் சற்றே விரிவாகக் காணலாம்:
1. ஏட்டுக்கல்வியும் எழுத்தறிவும் தம்மளவில் கல்வியின் முடிவாகிவிட முடியாது. கல்வியின் ஓர் அங்கமாக மட்டுமே இருக்கவேண்டும்.
“எழுத்தறிவுக்கு நான் எதிரானவன் என்று குற்றம் சாட்டுகிறார்கள். இல்லவே இல்லை! மாறாக, அது எப்படிப் புகட்டப்பட வேண்டும் என்ற வழியைத்தான் காண்பிக்க விரும்புகிறேன்,” என்றும்
“நம் குழந்தைகளை நம் பண்பாடு மற்றும் நம் நாட்டின் அசலான மேதைமை ஆகியவற்றின் உண்மையான பிரதிநிதிகளாய் ஆக்கவேண்டும்,” என்றும் காந்தி கூறினார். (வர்தா உரை, 22-10-37)
2. தொழில் சார்ந்த கல்வி தரவேண்டும். தொழிற்கல்வி என்று தனியாக இல்லாமல், கைத்தொழில் மூலமாகப் பிற பாடங்களை அறிவியற்பூர்வமாகக் கற்பிக்க வேண்டும்.
“இதுவரை நான் சொல்லிவந்ததெல்லாம் அறிவுப் பயிற்சியோடு சேர்த்து, தொழிற்பயிற்சியும் அளிக்க வேண்டும் என்ற அளவில்தான் என்பதை நான் ஒப்புக்கொண்டாக வேண்டும். ஆனால், இப்போது நான் சொல்வது – உடலுழைப்பு சார்ந்த தொழிலே அறிவாற்றலைத் தூண்டிவிடும் முக்கிய வழிமுறையாக வேண்டும்.”
“ஏதாவது கைத்தொழில் மூலமாகத்தான் கல்வி முழுவதுமே வழங்கப்படவேண்டும்”
அவ்வாறு செய்யும்போது, “தொழிற்கல்வி என்பது பல்வேறு அறிவுத்தளங்களிலும் குழந்தைகளின் மனங்களை விரிவடையச் செய்யக்கூடிய கருவியாகிறது.”
காந்தியின் சிந்தனைப் போக்கில் நிகழ்ந்த மிகமுக்கியமான மாற்றம் இதுதான். இன்று வரையில் பலரும், வகுப்பறையில் கல்வியும் வெளியில் ஏதேனும் தொழிற்கல்வியும் அளித்தால், அதுவே காந்தியக் கல்வி என்று நம்பி வருகிறார்கள். இது காந்தியின் ஆரம்ப காலச் சிந்தனையேயன்றி, அவரது ஆதாரக் கல்விக் கொள்கைக்கு சற்றே முரணானது. நூல் நூற்றல், தோட்டவேலை, சுகாதாரப்பணிகள் மூலமாக மொழியறிவும், கணிதமும், அறிவியலும், புவியியலும், வரலாறும் கற்பிக்க முடியும் என்பது மிகப்பெரும் மாற்றங்களை விளைவிக்கக்கூடிய ஒரு புத்தம்புதிய கல்விச்சிந்தனை.
செயற்கல்வியை மாண்டிஸோரி போன்ற பல கல்வியாளர்களும் வலியுறுத்திவந்தனர். உடலுக்கும், புலன்களுக்கும், உள்ளத்துக்கும் உள்ள தொடர்பு ஆழமானது என்பது அவர்களால் நிறுவப்பட்டது. ஆனால், கல்விக்கென்று பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட செயற்கையான கருவிகளின் மூலமாகவும் பிற முறைகளின் மூலமாகவும் செயற்கல்வி அளிப்பதைவிட, காந்தி கூறுவது போல், ஓர் இயல்பான கைத்தொழில் மூலமாக அளிக்கப்படும் கல்வி பன்மடங்கு ஆற்றல் வாய்ந்ததாக இருக்கும். மாணவர்களுக்குத் தங்கள் உற்பத்தியில் விளையும் பயன்களைக் காணும்போது பெரும் தன்னிறைவு கிட்டும். உடலுழைப்பின் போது தூண்டப்படும் ஆர்வத்தினைப் பயன்படுத்தி அறிவியற்பூர்வமாகக் கற்பிக்கப்படும் செய்திகள் மனதில் விரைவாகவும் ஆழமாகவும் பதியும்.
3. முழுமையான கல்வி கிராமங்களிலேயே வழங்கப்படவேண்டும். பள்ளிக்கல்விக்காக கிராமங்களிலிருந்து நகரங்களுக்குச் செல்வது பயனற்றது. அது கிராம மக்களின் தொழிலிருந்தும் வாழ்க்கை முறையிலிருந்தும் அவர்களை அந்நியப்படுத்திவிடும்.
ஆதாரக் கல்வி பற்றிப் பேசும் போது வினோபா, “சேவாகிராமில் கற்பிப்பதுபோலவே பௌனாரில் (சில மைல் தொலைவில்தான் இருந்தாலும்) கற்பிக்கமுடியாது. ஏனெனில், பௌனாரில் நதி இருக்கிறது; சேவாகிராமில் இல்லை,” என்றார்.
4. தாய்மொழி வழியாகவே கற்பிக்க வேண்டும் என்பதை காந்தி தொடர்ந்து வலியுறுத்தினார். ஆச்சார்ய கிருபளானி ஒருபடி மேலே சென்று நுட்பமான ஒன்றைப் பதிவுசெய்தார். ஆதாரக் கல்வியில், “உண்மையான பயிற்றுமொழி வேலைதான்; மொழியே அல்ல; பேசுமொழி என்பது தகவல் பரிமாற உதவும் ஊடகமேயன்றி பயற்றுமொழியல்ல,” என்றார்.
5. ஆதாரக் கல்வியின் புரட்சிகரமான இன்னொரு சிந்தனை பள்ளிகளைத் தற்சார்படையச் செய்வது. 1937ல் மாகாணங்களில் காங்கிரஸ் ஆட்சி வந்தபிறகும், இலவசக் கல்வி வழங்க வேண்டுமாயின், குடியின் வாயிலாக வரும் வருமானத்தில் தான் பள்ளிகள் நடத்தப்பட வேண்டும் என்ற நிலை, காந்தியை மிகவும் ஆற்றாமை கொள்ளச்செய்தது. இன்றும் அந்நிலை நீடிக்கிறது. தொழில் சார்ந்த கல்வி வழங்கும்போது, அந்தத் தொழிலில் மாணவர்கள் ஈடுபடுவதன் மூலமாகவே தற்சார்பு அடைந்துவிட முடியும் சாத்தியத்தை உணர்ந்து வலியுறுத்தினார்.
“முழுமையாக நோக்கினால், இத்தகைய கல்வி தற்சார்பு உடையதாக இருக்க முடியும், இருக்க வேண்டும். தற்சார்புதான் அதன் நடைமுறைச் சாத்தியத்துக்கு உரைகல்.”
அப்படியொரு தற்சார்பு நிலையை அடைவதற்குத் தேவையான உதவிகளைச் செய்வதில்தான் அரசாங்கத்தின் பங்கிருப்பதைக் கண்டார். பள்ளிகளில் உற்பத்திசெய்யப்படும் பொருள்களுக்கான சந்தையை உருவாக்கித்தரும் பொறுப்பு அரசாங்கத்துக்கு இருப்பதாக நம்பினார்.
6. பள்ளி என்பது தனித்தீவாக இயங்காமல், மாணவர்களும் ஆசிரியர்களும் கிராம வாழ்வோடு இயைந்து சேவை செய்யவேண்டும். அப்போது மாணவர்களுடைய கல்வி என்பது சமூகம் முழுமைக்குமான கல்வியாக அமைந்துவிடும். காந்தியைப் பொருத்தவரை, ‘சமூகத்தின் ஆரோக்கியத்தை மருத்துவமனைகளை நிறுவுவதன் மூலம் மட்டும் அடைந்துவிடமுடியாது; அதேபோல, சமூகத்தின் கல்வி – சுயராஜ்ய உணர்வை ஊட்டி வளர்த்துப்பேணக்கூடிய கல்வி – வெறும் பள்ளிகளை நிறுவுவதன் மூலம் மட்டும் அடைந்துவிடமுடியாது.’
“நமது செயல்பாடு 7 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நயி தாலீம் முறையில் கல்வி அளிப்பதோடு சுருங்கிவிடுவதில்லை; அது பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்க்கை முழுவதையும் தீண்டுவதாக இருக்கவேண்டும். [….]
கிராமத்தினர்க்கு நாம் ஆசிரியர்களாக வேண்டும்; உண்மையில் அதன் பொருள், கிராமத்தார்க்கு நாம் சேவகர்களாக வேண்டும் என்பதே. அதற்கான பரிசு அகத்திலிருந்து வரவேண்டும்; புறத்தேயிருந்தல்ல. உண்மையை நோக்கிய நமது தேடலில் நமக்கு மனிதத்துணை கிடைக்கிறதா இல்லையா என்பது ஒரு பொருட்டேயல்ல. நயி தாலீம் புறவயமான பொருளாதார உதவியைச் சார்ந்திருப்பதுமல்ல. விமர்சகர்கள் என்ன சொன்னாலும், அது அதன் வழியில் தொடரும். உண்மையான கல்வி தற்சார்புடையதாக இருந்தாகவேண்டும். இதில் வெட்கப்பட எதுவும் இல்லை. நாம் சொல்வதைச் செய்துகாட்டி, மனதின் உண்மையான வளர்ச்சிக்கு இட்டுச்செல்லும் ஒரே முறை இதுவென நிரூபித்தோமேயானால், இது ஒரு புதுமையான சிந்தனையாக ஏற்கப்படும். இன்று நயி தாலீமை நிந்தனை செய்பவர்கள் எல்லாரும் முடிவில் அதனைப் போற்றுபவர்களாக மாறுவார்கள்; நயி தாலீம் பரவலான ஏற்பினைக் கண்டடையும்.” (சேவாகிராமில் காந்தியின் உரை, 11-1-45)
வர்தா மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் ஆதாரக் கல்வி குறித்த கருத்துகளைத் தொகுத்துக்கொள்ள உதவுகின்றன:
- இலவசமான, கட்டாயக்கல்வி தேசம் முழுவதும் ஏழாண்டுகளுக்கு வழங்கப்பட வேண்டும்.
- பயிற்றுமொழி தாய்மொழியாகவே இருக்கவேண்டும்.
- இந்த கல்விக்காலம் முழுவதும் உடலுழைப்பு சார்ந்த ஓர் உபயோகமான தொழிலை மையமாக்கியே கல்விமுறை அமையவேண்டும். குழந்தையின் வாழ்க்கைச்சூழலுக்கு ஏற்பத் தேர்ந்தெடுக்கப்பட்ட கைத்தொழில் மூலமாகவே, முடிந்தவரை மற்ற திறன்களுக்கான பயிற்சிகளும் ஒருங்கிணைப்படவேண்டும்.
- இந்தக் கல்விமுறை மூலமாகப் படிப்படியாக ஆசிரியர்களின் ஊதியம் தற்சார்பான முறையில் வழங்கப்படும்.
(3)
கல்வி என்பது வெறும் ஏட்டுக்கல்வியாக இல்லாமல், செயல்களின் மூலமாக பல்வேறு பாடங்களையும் பயில்வது என்பது காந்தியக் கல்விமுறைக்கும் பிற நவீன ஐரோப்பிய-அமெரிக்க கல்விமுறைகளுக்கும் இருக்கக்கூடிய மிக முக்கியமான ஒற்றுமை. இவற்றிடையே இருக்கக்கூடிய மிக முக்கியமான வேறுபாடு கல்வியின் நோக்கம் குறித்ததாக இருக்கிறது. பெரும்பாலான நவீன முறைகள் முழுக்க முழுக்கக் குழந்தையை மையமாக வைத்துச் செயல்படுகின்றன. குழந்தைகளை ஒற்றைப்படையான பண்டங்களாகப் பார்க்கும் மையநீரோட்டக் கல்விமுறைக்கு மாற்றாக குழந்தையை மையப்படுத்தும் சிந்தனை முன்வைக்கப்படுவது வரவேற்கப்படவேண்டிய ஒன்றுதான். ஆனாலும் இத்தகைய பார்வையில் உள்ள குறைபாடு குழந்தைக்கும் சமூகத்துக்குமான உறவின் மீது கவனம் இல்லாமற் போவதுதான். காந்தியக் கல்விமுறை அக்குறையைக் களைய முனைகிறது. குழந்தைகளின் கல்வி என்பதை தனிப்பட்ட செயல்பாடாகக் காணாமல் ஒட்டுமொத்த சமூகச் செயல்பாடாகக் காண்கிறது. அதிலும் குறிப்பாக, உள்ளூர்ச் சமூகங்களையே முதன்மைப்படுத்துகிறது. அந்தந்த இடத்துக்கும் சூழலுக்கும் ஏற்றமாதிரி, பயில்தல் முறைகள் மாறுபடும்; கற்பித்தல் முறைகளும் மாறுபடவேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. குழந்தைகளுக்கும் மண்ணுக்கும் மனிதருக்குமான உறவை அறுந்து போகாமல் பார்த்துக்கொள்கிறது. கல்வியென்பது மாணவர்களை மண்ணிலிருந்து அந்நியப்படுத்தி அப்புறப்படுத்தும் ஆயுதமாக மாறாமல், அவரவர் சமூகங்களுக்குப் பயன்படும் விதத்தில் வடிவமைக்கப்படுகிறது.
இந்தியச் சாதியமைப்பும் அது சார்ந்த சிக்கல்களும் உடலுழைப்பையும் தொழில் சார்ந்த கல்வியையும் மையப்படுத்தும் கல்விமுறையை நடைமுறைப்படுத்துவதில் பெரும் சவால்களாக இருக்கும். கடந்த காலத்திலும் காந்தியக் கல்விமுறை பல காரணங்களால் நம் நாட்டில் ஊன்றமுடியாமல் போனது. அதை அந்த முறையின் தோல்வியாகவோ காந்தியக் கருத்தியலின் தோல்வியாகவோ நாம் காணவேண்டியதில்லை. அக்கல்விமுறையிலிருந்து நாம் வெகுதூரம் விலகிச்சென்றுவிட்ட பின்னர்தான் அதன் தேவையை உணரத்தொடங்குகிறோம். நவீனச் சூழலியற் பார்வை நுகர்வினைக் குறைத்துக்கொண்ட தற்சார்பான சிறுசமூகங்களையே நாம் எதிர்கொண்டிருக்கும் மாபெரும் பருவநிலை நெருக்கடிக்குத் தீர்வாகக் காண்கிறது. நுகர்வையும் அதிகாரம் மையப்படுதலையும் பெருக்கும் கருவியாகவே இன்றைய கல்விமுறை இருக்கிறது. அதனால்தான் ‘எதிர்காலத்துக்கான வெள்ளிகள்’ என்று வெள்ளிக்கிழமைகளில் பள்ளிகள் புறக்கணிப்புப் போராட்டத்தை சுவீடன் நாட்டுப் பள்ளிமாணவி கிரேட்டா துன்பர்க் முன்னெடுப்பில் உலகம் முழுதும் குழந்தைகள் நடத்துகிறார்கள். சுற்றுச்சூழல் மீது மிகக்குறைவான எதிர்மறைப் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய தற்சார்பு சமூகங்களை அமைப்பதற்கு காந்தியக் கருத்தியல் இன்றியமையாத ஒன்று. அத்தகையதொரு சமூகத்தை உருவாக்க முனைந்தால் அதில் காந்தியக் கல்விமுறைக்குத் தவிர்க்கமுடியாத பங்கு இருக்கும்.
உதவிய நூல்கள்:
- Collected Works of Mahatma Gandhi, Publications Division, 1999
- The Story of Nai Talim, Marjorie Sykes, Nai Talim Samiti, 1988
- Towards New Education, M.K.Gandhi, Bharatan Kumarappa, Navjivan Publishing House, 1953
- ‘காந்தியக் கல்வி : காந்தியத்தின் ஆதாரம்’ என்று தலைப்பில் காந்தி இன்று ‘Gandhitoday.in’ இணைய இதழில் வந்த எனது கட்டுரை.