இந்தியும் நானும்

மே 31, 2016

முகநூலில் இருந்து இன்னொரு பழைய பதிவு.


ஜாம்ஷெத்பூரில் படித்துக்கொண்டிருந்த போது, தனியே வெளியில் செல்ல நேர்கையிலெல்லாம் என்னுடைய அரைகுறைக்கும் குறைவான இந்தியோடு எப்படியோ சமாளித்துக்கொண்டிருந்த காலம். சிறுவயதில் நான் ப்ராத்மிக்கில் 35 வாங்கிப் பாஸ் செய்திருக்கிறேன். அதுவும் இந்தியிலிருந்து தமிழுக்கோ ஆங்கிலத்துக்கோ மொழிபெயர்க்கும் ஒரு பகுதியிருந்து, அதில்தான் பெரும்பகுதி மதிப்பெண்கள் பெற்ற நினைவு. தூர்தர்ஷனில் போட்ட அத்தனை இந்திப் படங்களையும் பார்த்திருந்த அனுபவமும் ஓரளவு கைகொடுத்தது.
கல்லூரி வாழ்வின்போது, இந்தியிலுள்ள மா-பென் கெட்ட வார்த்தைகளையெல்லாம் செவிகள் நுகர்ந்துகொண்டிருந்தன. அதற்கு முந்தைய நான்காண்டுகள் சகித்துவந்த சென்னைத் தமிழைவிடக் கொடுமொழி உலகில் உண்டு என்னும் ஆறுதல் துளிர்த்து வந்தது. மற்றபடி, கல்லூரிக்குள் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே உரையாடிக்கொண்டிருந்ததால், இந்தி பழகியாகவேண்டும் என்கிற நிர்ப்பந்தம் இல்லை. ஓரிரு நண்பர்கள் மட்டும் பழக்கதோசத்தில் என்னோடு அடிக்கடி இந்தியிலேயே பேசுவார்கள். நான் ஆங்கிலத்திலேயே பதில் சொல்வேன். அங்கிருந்த எனதருமைத் தமிழ்நாட்டுத் தோழர்கள் பெரும்பாலனவர்கள் ஐஐடி-ஆர்இசி வகையறாக்கள்…இந்திக்காரர்களைவிட அதிகமாய் இந்தி பேசுவார்கள். எனவே நான் தனித்த பிராணிதான். விடியவிடியப் படித்துவிட்டோ குடித்துவிட்டோ, அதிகாலையில் மதராஸி சம்மேளனம் சென்று, பொங்கல் சாப்பிட்டுத் தமிழ்ப்பற்றை அவர்கள் வெளிப்படுத்தும்போதுகூட அநேகமாய் நான் உடன் சென்றதில்லை.
‘தண்டா பாணி’ என என்னை நண்பர்கள் கூவி அழைக்கும் போதெல்லாம், இன்னும் உரக்கக் கூப்பிட்டால்தான் கோயமுத்தூரிலிருக்கும் அப்பாவுக்குக் கேட்கும் என்று நவின்று நகர்ந்துவிடுவேன்.

முதலாண்டில் ஒருமுறை, தில்லிக்கார நண்பன் ஒருவன், கடுமையான காய்ச்சல் வந்து டாட்டா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். வேறு நிறையப்பேருக்கும் காய்ச்சல் தொற்றியிருந்தது. மொழிப்பிரச்சனை வரும் என்று தெரிந்தும், ஏதோ தைரியத்தில், அந்த நண்பனுக்குத் துணையாக மருத்துவமனையில் இரவைக் கழிக்கத் துணிந்தேன். காய்ச்சலின் கடுமையில் அவன் உளறிக்கொண்டே இருந்தான். பொதுவாகவே இந்தியில் லொடலொடவெனப் பேசுபவன். இப்போது கேட்கவே வேண்டாம். புரிந்தும் புரியாமலும் எப்படியோ அவனுக்குப் பரிவுடன் உதவிக்கொண்டிருந்தேன். நர்ஸை அழைத்து வருமாறு அவன் கூறியதைப் புரிந்து அழைத்து வரச்சென்றேன். அந்த நர்ஸிடம் தட்டுத்தடுமாறிப் பேசி அழைத்தும் வந்துவிட்டேன்.

அவரிடம், தில்லியின் மேல்த்தட்டு ஆங்கில உச்சரிப்பில் படபடவென ஆங்கிலத்தில் பொரியத்தொடங்கினான். அவருக்கு ஒரு வார்த்தைகூடப் புரியவில்லை.

இத்தனையையும் நான் மொழிபெயர்க்கவேண்டுமா – முழி பிதுங்கியது. ‘டேய், இந்தியில் பேசுடா,’ என்று என் மனம் கதறியது அவனுக்குக் கடைசிவரை கேட்கவேயில்லை.

கல்லூரி முடித்த ஆண்டு, முதல் வேலை தில்லிப்பக்கம் (நோய்டாவில்). நான்கு மாதக் கடுங்காவல் தண்டனை. கிடைத்த முதல் வாய்ப்பில், சென்னைக்குப் பெயர்ந்து விட்டேன் (பிறகு மீண்டும் மும்பய், பெங்களூரு என்று திரிந்தது தனிக்கதைகள்). அதே நண்பன் வேறு வேலைக்கான நேர்முகத்துக்காகச் சென்னைக்கு வந்திருந்தான்; என் வீட்டில் தங்கியிருந்தான். அவனுக்குச் சென்னையிலேயே வேலைகிடைக்கவேண்டும் என்ற எனது பிரார்த்தனைகள் பலிக்கவில்லை.