அரசியல் குறள்

மார்ச் 27, 2020

நீண்ட நாள்களுக்குப் பிறகு சமகாலக் கட்சியரசியல் பற்றி எதுவும் குறிப்பிடாமல் திருக்குறள் குறித்து இவ்வாரம் ஒரு நீண்ட உரையாற்றினேன். வள்ளுவன் அரசியல் பற்றிச் சொன்ன சில குறள்களை மட்டும் சொல்லிவைத்தேன்.

வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉங் கோடா தெனின். (546)

இயற்றலு மீட்டலுங் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு. (385)

காட்சிக் கெளியன் கடுஞ்சொல்ல னல்லனேல்
மீக்கூறு மன்ன னிலம். (386)

முறைசெய்து காப்பாற்று மன்னவன் மக்கட்
கிறையென்று வைக்கப் படும். (388)

செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ் தங்கு முலகு. (389)

எண்பதத்தா னோரா முறைசெய்யா மன்னவன்
தண்பதத்ததாற் றானே கெடும். (548)

தம்மிற் பெரியார் தமரா வொழுகுதல்
வன்மையு ளெல்லாந் தலை. (444)

இடிப்பாரை யில்லாத வேமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும். (448)

நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே யொழிய விடல். (113)

கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்
டல்லவை செய்தொழுகும் வேந்து. (551)

அல்லற்பட் டாற்றா தழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்கும் படை. (555)

குடிதழிக் கோலோச்சு மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கு முலகு. (544)


டாடா நேனோ -கார்வலம் போகலாம்

ஜனவரி 11, 2008

இந்திய நடுத்தர வர்க்கம் எட்டிப்பிடிக்கிற விலையில் டாடா நிறுவனம் கார் தயாரித்திருக்கிறது. அனைவரும் ஒரு மனதாய் வரவேற்பார்கள் என்று எதிர்பார்த்திருந்தால் ஏமாற்றம் தான் – நிறைய எதிர்ப்புகள், இரு சாராரிடமிருந்து. நிலம் தரக்கூடாது என்று கொடி உயர்த்தியிருக்கிற அரசியல்வாதிகள் ஒருபுறம். சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்று வருந்துகிறவர்கள் மறுபுறம். இரண்டுமே யார் சரி என்று உறுதியாகத் தீர்மானிக்க முடியாத பிரச்சனைகள்.

முதலில் சிங்கூர். கம்யூனிஸ்ட்டுகள் ஆண்டாண்டுகளாய் அவர்களே வளர்த்துவந்த சித்தாந்தத்திற்கு எதிராகச் செல்ல நினைக்கிறார்கள். பழகிப்போன வங்க மக்களோ மாற்றத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். எதிர்த்தே பழகிய இடதுசாரிகளுக்கு, எதிர்ப்பைச் சரியான முறையில் எதிர்கொள்ளத் தெரியாததுதான் கைமீறிய கலவரங்களுக்கு அடிப்படைக் காரணம். சிங்கூரில் எழுந்த எதிர்ப்பலைகள் நந்திகிராமில் இரத்த ஆறாகின. சிங்கூர் எப்படியோ தப்பித்தது.

அடுத்த எதிர்ப்பு இன்னமும் சிக்கலானது, சுற்றுச்சூழல் பற்றியது. எல்லோரும் கார் வாங்கிவிட்டால், உலகமே புகை மண்டலத்தால் சூழ்ந்துவிடும், வெப்பம் பெறுகிவிடும் என்ற அச்சங்களின் அடிப்படையிலானது. நோபல் பரிசு பெற்ற பச்சோரி, சுனிதா நாராயண் போன்றவர்களின் இந்த அச்சத்தில் நியாயம் இருந்தாலும், இந்த நியாயத்தை மிஞ்சுகிற வேறு சில நியாயங்களும் இருக்கின்றன.

சுற்றுச்சூழல் பற்றிய கவலையால், விஞ்ஞான வளர்ச்சியை, பொருளாதார வளர்ச்சியைத் தடை செய்யமுடியுமா? இல்லை. கூடாது.

ஏற்கனவே வளர்ந்துவிட்ட மேல்நாடுகள் வளர்ந்துகொண்டிருந்த போது, இத்தகைய கவலைகள் எதுவும் எழவில்லை. இன்று மற்றவர்கள் முன்னேற நினைக்கையில், சுற்றுச்சூழலின் பெயரால் அந்த முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போடுவது முறையல்ல. மேல்நாட்டில் டாம், டிக், ஹேரி  எல்லாம் கார் ஓட்டும்போது நம் ஊர் குப்புசாமியும் கந்தசாமியும் கார் வாங்க வழிவகுக்கக் கூடாதா? இவர்கள் பேருந்தில் செல்ல ஒப்புக்கொண்டால், வெள்ளையர்களும் அவ்வழியைப் பின்பற்றுவார்களா? நடுத்தர வர்க்கம் கார் ஓட்டினால்தான் சுற்றுச்சூழல் மாசுபடுமா? பச்சோரியும் சுனிதாவும் பேருந்தில் செல்கிறார்களா என்பது தெரியவில்லை. சந்தேகம்தான்.


போராளிகள் கவனிக்கவும்…

திசெம்பர் 28, 2007

வன்முறையை விதைக்கிறவர்கள், வன்முறையை வாழ்க்கையாக்கிக்கொண்டவர்கள் வன்முறைக்ககே இரையாவது மறுபடி மறுபடி நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது.  பூட்டோ மரணம் மற்றுமோர் எடுத்துக்காட்டு. மிரட்டல்களுக்குப் பணியாத துணிவை, உலகத்தோடு சேர்ந்து நானும் பாராட்டுகிறேன். ஆனால் அவர் வளர அனுமதித்த வன்முறை விதைதான் வளர்ந்து, இன்று அவர் மீதே விஷக்காற்றை வீசியிருக்கிறது.

இந்திரா, ராஜீவ் மற்றும் பலரும் அத்தகைய தவறுகளின் விளைவுக்கு இரையானவர்களே! ஏன், மதக்கலவரங்களைக் கட்டுப்படுத்த முடியாத காங்கிரஸின் இயலாமையோ முயலாமையோதான் காந்தியையே வன்முறைக்கு இரையாக்கியது. வாழ்க்கை முழுவதும் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைத்த மாமனிதனுக்கு வன்முறைதான் முற்றுப்புள்ளி வைத்தது – அவன் வளர்த்த இயக்கத்தின் தோல்வியால். ஆனால் மரணத்திற்குப் பின்னும், அந்த அமைதிக் குரல் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது. அமைதியால் மலர்ந்த இந்தியாவையும், அதே நேரத்தில் உதிரத்தில் பூத்த பாக்கிஸ்தானையும் பார்க்கிறவர்களுக்குப் புரியும் -அமைதிப் போரின் வலிமையும், வன்முறையின் ஆறாக்காயங்களும்.

ஆனால், இன்றைக்கும் போராளிகளும், வன்முறையாளர்களும் கூர்வாள்களும் தோட்டாக்களும் நிரந்திரத் தீர்வுகள் தேடித்தரும் என்று நம்புகிறார்கள்? குஜராத்தில் மோடி எத்தனை முறை வென்றாலும் அவர் வளர்த்த வன்ம விலங்கு விழுங்கக்காத்திருப்பது தெரியவில்லையா? இலங்கையில் ஒரு pyrrhic போர் நடத்திவருவது புலிகளுக்குப் புரியவில்லையா? நந்திகிராமில் வைத்த தீ தம்மையும் சேர்த்துப்பொசுக்கும் என்பதைக் கம்யூனிஸ்டுகள் அறியவில்லையா? உலகம் முழுவதும் வியாபித்திருக்கும் இந்த அறியாமைக்கு அழிவே இல்லையா?