அகிரா குரோசவாவின் The high and the Low திரைப்படம்

ஜூலை 4, 2008

குரோசவாவின் இந்த ஜப்பானியப் படத்தை, அரை உறக்கத்தில், ஓர் ஞாயிறு பிற்பகலில் zee studioவில் பார்க்கத் துவங்கினேன். தன்னுடைய நிறுவனத்தில் தொடர்ந்து நீடிக்க முயற்சி செய்கிற ஒரு தொழிலதிபரைச் சுற்றி படம் சற்று நேரம் சுழன்றது; என் கண்களும் தான். அவருக்கு ஏதோ நெருக்கடி. நிறைய பங்குகளை, இருக்கிற பணத்தையெல்லாம் திரட்டி உடனே வாங்கியாக வேண்டும், இல்லையேல் நடுத்தெருவிற்கு வரவேண்டிய நிலை என்பது மட்டும் புரிந்தது.

ஒரு காட்சி என்னை அரைஉறக்குத்திலிருந்து, உலுக்கி எழுப்பியது. அவருடைய மகன் கடத்தப்பட்டு விட்டதாய் செய்தி வருகிறது. கடத்தியவன் 30 லட்சம் யென் கேட்கிறான். இவரும் பங்குகள் வாங்கப் புரட்டிய அத்தனை பணத்தையும் தன் குழந்தையை மீட்பதற்காகத் தர ஒப்புக் கொள்கிறார். பின்தான் இவருக்கும் கடத்தியவனுக்கும் தெரிகிறது கடத்தப்பட்டது இவரது குழந்தையல்ல, இவரது ஓட்டுனரின் குழந்தை என்று.

பணமும், குழந்தையும், வாழ்க்கையும் பிழைத்தது என்று இவரும், உடன் இருந்த காவல் அதிகாரியும் பெருமூச்சு விட்டுமுடிக்கும்முன், கடத்தியவனிடமிருந்து மறுபடி தொலைபேசி. ‘நான் கடத்தியது யாருடைய குழந்தை என்பது பற்றி எனக்குக் கவலை இல்லை. நீ தான் அதே அளவு மீட்புத் தொகை தர வேண்டும். இன்றேல் குழந்தையைக் கொன்று விடுவேன்’ என்று உறுதியுடன் மிரட்டுகிறான்.

அப்பா, என்ன சிக்கலான, இக்கட்டான சூழ்நிலை; திருப்பம். திரைக்கதை என்பது இதுதானோ? பார்க்கிற எனக்கே உள்ளுக்குள் என்னவோ பிசைந்தது.

பணத்தைக் கொடுத்துக் குழந்தையை மீட்பதா? இல்லை, தன் குடும்பத்தை நடுத்தெருவிற்கு வராமல் காப்பதா? இந்த moral dilemma தான் இன்னும் வெகு நேரம், பல்வேறு திருப்பங்களுடன் பலப்படுத்தப்பட்டது. நீண்ட மனப்போரட்டத்திற்குப் பிறகு, அந்தக் குழந்தையின் உயிரைக் காக்க எல்லாவற்றையும் இழக்கத் துணிகிறார் அவர். இழக்கவும் செய்கிறார். வாழ்நாள் முழுக்க ஈட்டிய பணத்தை, ஓடும் ரயிலில் வெளியே எறியும் காட்சி உறுக்கம்.

அதன் பின்னர் படம் ஒரு சீரான துப்பறியும் கதையாய் உருமாறுகிறது; அவரது இழப்பின் கனத்தைச் சுமந்து முன்னிறுத்தியவாறே.

ஒரு சாதரணக் கதையை, திறமையான திரைக்கதை, இயக்கத்தின் மூலம், நாயகனின் மனப்போரட்டத்தை பார்ப்பவர் மீது சுமத்தி, திரைப்படத்தை வேறுதளத்திற்கு இட்டுச்செல்ல முடியும் என்பதற்கு இப்படம் சான்று.