Elitist இலக்கியவாதிகளும் இலக்கிய வளர்ச்சி(யின்மை)யும்

ஜனவரி 25, 2008

தமிழ் இலக்கியம் மக்களைச் சென்றடையாமல், மிகச்சிறிய வட்டங்களுக்குள் சிறைபட்டுக் கிடப்பது வருத்தத்திற்குரியது. இதற்கு முதன்மையான காரணம் தமிழ் இலக்கியவாதிகளிடம், கர்நாடக சங்கத வித்வான்களிடம் போல், பரவலாகக் காணப்படுகிற ஒரு வகையான தீவிர brahminical elitist mentality தான்.

தமிழ் வாசகர்கள் வட்டம் ஆங்கில உலகமளவிற்கு விரிவானதல்ல. ஆனால் இங்குள்ள இலக்கியப் பாகுபாடுகள் ஆங்கிலத்தைவிடவும் அதிகம் என்றே தோன்றுகிறது. முற்போக்கு இலக்கியம், தலித் இலக்கியம், வட்டார இலக்கியம், தனித்தமிழ் இலக்கியம், திராவிட இலக்கியம், இடதுசாரி இலக்கியம், பெண்கள் இலக்கியம்  என்று எண்ணற்ற பிரிவுகள். இத்தனை வகைகள் இருப்பதில் தவறில்லை, ஆனால் ஒவ்வொரு வகையினரும் அவரவர்க்கென ஒரு வட்டமைத்து, அந்த வட்டத்திற்குள்ளேயே சிறைபட்டு, வெளியிலிருப்பவர்களை மட்டமாய் நினைப்பது ஒட்டுமொத்த இலக்கிய வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாகவே தெரிகிறது.

பல சமயங்களில் வர்த்தக வெற்றியை, இலக்கியத் தோல்வியாகவே கருதுகிறார்கள். வர்த்தக வெற்றி மட்டுமே இலக்கியத் தரத்திற்கு அளவுகோளாக முடியாது. அதேசமயம், எதிர்மறையாய், பெரும் வர்த்தக வெற்றி பெறுகிறவர்களை அந்த ஒரே காரணத்திற்காகத் தாழ்த்தி எடைபோடவும் கூடாது.

எடுத்துக்காட்டு – வைரமுத்துவிற்கு ஒரு சாராரிடம் கிடைக்கிற அவமரியாதை. இதோ ஜெயமோகன்  – ”’பில்லா’ கறுப்புக்கண்ணாடியை மாட்டிக்கொண்டு முப்பது பாகையில் முகம் திருப்பி ‘தமிழின் நிகழ்காலம்’ [இறந்தகாலம் முதல்வர் கருணாநிதியா?] என்று சுவரொட்டி அடித்து வெட்கமில்லாமல் தெருத்தெருவாக ஒட்டும் வைரமுத்து எப்படி உணர்வாரோ தெரியவில்லை, நல்ல வாசகராக நான் அறிந்த நா.முத்துக்குமார் அதைக் கண்டால் கூசிப்போவார் என்றே நினைக்கிறேன். [இதழில் எனக்குப்பிடித்த இரண்டு கவிதைகளில் ஒன்று அவர் எழுதியது] ”.

இலக்கியத்திற்கும் விளம்பரம் தேவைதான். விளம்பரம் கிடைப்பதாலேயே (சுய விளம்பரமா, தெரியவில்லை) அவரது இலக்கியத்தரம் ஏன் தாழ்ந்து போவதாய் நினைக்க வேண்டும். அவரது படைப்புகளில் நிறைய சேறிருந்தாலும், சேற்றை மறைக்குமளவிற்குச் செந்தாமரைகளும் நிறைந்துதானிருக்கின்றன. படைப்பாளிகள் அத்தனை பேருக்கும் இதே கூற்று ஓரளவு பொருந்தும்.

தனிமனித விருப்புவெறுப்புகளை ஒதுக்கிவிட்டு, பலவகைப்பட்ட படைப்புகளையும் சுவைத்துப்பாராட்டுகிற பக்குவம் நாம் வளர்த்துக் கொள்ளவேண்டும். ஆங்கிலத்தில் Naipaul, Rushdie போன்ற தனிமனிதர்கள் மீதும், அவர்கள் கருத்துகளுடனும் உடன்பாடில்லாதவர்கள்கூட அவர்களின் படைப்புகளுக்குத் தரவேண்டிய மதிப்பைத் தருவதைப் பார்க்கிறோம்.

எனக்கு Tolkien, Walter Scottம் பிடிக்கும், Franz Kafka, Albert Camusம் பிடிக்கும். அதேபோல கல்கியின் பொன்னியின் செல்வனும் பிடிக்கும், சுந்தர ராமசாமியின் ஜே.ஜே சில குறிப்புகளும் பிடிக்கும். ஜெயமோகனின் விஷ்னுபுரமும் பிடிக்கும், வைரமுத்துவின் சிகரங்களை நோக்கியும், ஏன், பல நயமான திரைப்பாடல்களும் பிடிக்கும். இவற்றில் முரண்பாடுகள் இருப்பதாய்த் தோன்றவில்லை.

ஜெயகாந்தன், சுஜாதா போன்றவர்கள் பிரபல வார இதழ்களில் எழுதியதாலேயே தரம்தாழ்ந்தவர்களாய்ச் சில சிற்றிதழ்கள் சித்தரிப்பதைப் பார்த்திருக்கிறேன். விந்தையான வாதம்தான். பத்துப்பேர் மட்டுமே படிப்பதுதான் இலக்கியம் என்று எண்ணுகிற இவர்களின் மனோபாவத்தைத்தான் brahminical elitist mentality என்று கூறினேன், ஜாதி அடிப்படையில் அல்ல (பார்ப்பனன் என்பதால் பாரதியை மட்டம்தட்டுகிறவர்களும் நம்மில் உண்டு!).

இலக்கியம் மக்களைச் சென்றடைய வேண்டும். அப்போதுதான் மென்மேலும் வளரும். அதற்காக நவீன வியாபர உத்திகள் தேவைப்பட்டால், அவற்றையும் பயன்படுத்தித்தான் பார்ப்போமே.  நாம் வறுமையால் இறந்த பாரதிகளையும் புதுமைப்பித்தன்களையும் பார்த்தது போதும்.  இலக்கியத்தால் செழிப்படைந்து, இன்னும் உற்சாகமாய் இலக்கியத்தைச் செழிப்படையச் செய்கிற நிலை, உலகெங்கிலும் போல் இங்கும், உதயமாகட்டும்.


பீமா – விமர்சனம்

ஜனவரி 21, 2008

என் ‘விமர்சனம் பற்றிய விமர்சனம்’  இடுகையில் சொன்ன கருத்திலிருந்து சற்றே விலகி இந்த விமர்சனம் செய்கிறேன் (தற்காலிகமாக;hopefully, this is an exception and not a rule). சில வேளைகளில் நம் விமர்சனங்களுக்கு நாமே இலக்காகவேண்டியிருக்கிறது.

படம் பிடிக்காது என்று தெரிந்தேதான் சென்றேன், வீட்டிற்கு வந்திருந்த விருந்தினர்க்காக. இவ்வளவு மட்டமாக இருந்தது என் எதிர்பார்ப்பையும் மீறியது.

இதற்குமேல் விமர்சிக்க இந்தப் படத்தில் எதுவுமில்லை. இடைவேளையின் போது, ‘first half சுமாரா இருந்திச்சு, second half சகிக்கல’ என்று துவக்கத்தில் உள்ளே நுழையும் போது கேட்ட குரல் செவிக்குள் மறுஒளிபரப்பாகி, பயங்கரமாய் பயமுறுத்தியது – சுமாருக்கு அர்த்தம் இதுவாகின், சகிக்காத இரண்டாம் பாகம் எப்படி இருக்குமென்று.

வியாபர நோக்கில் எடுக்கப்பட்ட மாதிரித் தெரியவில்லை; அப்படி நினைத்திருந்தால், எங்கு வியாபரமாகும் என்று எண்ணினார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளவேண்டும். தமிழர்கள் எதையும் ஏற்றுக்கொள்வார்கள் என்கிற நம்பிக்கையை இவர்களுக்கு அளித்ததற்காகத் தமிழர்கள் தலைகுனிய வேண்டும்.


Anil’s Ghost – இலங்கை பற்றிய பார்வை

ஜனவரி 18, 2008

இலங்கைக் கலவரங்கள் பற்றிய புத்தகம் Michael Ondatjeவின் Anil’s Ghost. இலங்கை பற்றிய நடுநிலையான பார்வையுடன், இலங்கையோடு நேரடித் தொடர்பில்லாத ஒரு மூன்றாம் மனிதனால் எழுதப்பட்ட புதினம்.

வன்முறைக்கு வன்முறை பதிலாகாது என்பதை அழுத்தமாய்க் கோடிட்டுக் காண்பிக்கிறது.  உயிர்ச் சேதம் ஒருபோதும் அமைதிக்கு வழிவகுக்கப் போவதில்லை. சிந்துவது சிங்கள ரத்தமாயினும், தமிழ் ரத்தமாயினும் விளைவு ஒன்றுதான் – இன்னும் சில சடலங்கள், தீர்வைவிட்டு இன்னும் கொஞ்சம் விலகல்.

நாவலில் எனக்குப்பிடித்த வரிகள் – ‘அமெரிக்கத் திரைப்படங்களிலும், புத்தகங்களிலும், இறுதியில் நாயகன், நிறைய சண்டைக்காட்சிகளுக்குப் பின், வியட்னாம் மாதிரியான நாட்டிலிருந்து, நிம்மதியாய் விமானத்தில் பறந்து செல்வான். அவனைப் பொருத்தவரை, வாசகர்களைப் பொருத்தவரை, கதை சுபமாய் முடிந்தது. கீழே தொடர்ந்து கொண்டிருக்கும் போர்பற்றி எவருக்கும் கவலையில்லை.’


விமர்சனம் பற்றிய விமர்சனம்

ஜனவரி 18, 2008

விமர்சர்களின் வேலை மிகச் சுவையானது என்று எண்ணியிருந்த காலம் உண்டு. ஆனால் அது எவ்வளவு துயரமயமானது என்பது இப்போது தான் புரியத் தொடங்கியிருக்கிறது. ஒரு நல்ல விமர்சகர் நல்ல அறிவாளியாக, விமர்சக்கிற விஷயத்தைப்பற்றி ஞானமுள்ளவராக இருக்க வேண்டும். இன்றேல் விமர்சனம் வலுவற்றதாய், மேலோட்டமானதாய் இருக்கும். அத்தகைய விமர்சகர்களை வாசகர்களும், படைப்பாளிகளும் மதிக்கப் போவதில்லை.

தமிழ் இலக்கிய உலகில் கவனிக்கத் தக்க, பாரபட்சமற்ற விமர்சகர்கள் இருப்பதாய்த் தெரியவில்லை. என் அறியாமையாகவும் இருக்கலாம். திரைப்பட விமர்சகர்கள் – மதன், சுஹாசினி போன்றவர்கள் தொலைக்காட்சியின் தயவில் உருவாகியிருக்கிறார்கள். இருவரும் நல்ல ஞானமுள்ளவர்கள். அறிவாளிகள் மாதிரித்தான் தெரிகிறார்கள். இவர்களின் விமர்சனங்களும் ஓரளவு ஏற்றுக்கொள்ளும் படியே இருக்கின்றன.

என் கேள்வி இதுதான். வாராவாரம் எப்படி இவர்களால் இத்தனை திரைப்படங்களைப் பார்க்க முடிகிறது – பெருமளவில் மோசமான திரைப்படங்களே வெளிவருகிற நிலையில், அறிவுஜீவிகளாகப் பாவிக்கப்படுகிற இவர்களால் எப்படி இவ்வளவு மட்டமான படங்களை முழுவதுமாய்ப் பார்த்து அலச முடிகிறது? காளை, பழனி மாதிரியான படங்களைப் பார்க்க வேண்டிய கட்டாயக் கொடுமைக்கு ஆட்படுவதைக் காட்டிலும் வறுமையை விரும்பி அணைத்துக்கொள்ளலாம்.

நான் விமர்சகனாக வேண்டியிருந்தால், நானாய்த் தேர்ந்தெடுத்துப் பார்க்கிற படங்களையும், படிக்கிற புத்தகங்களையும் மட்டுமே விமர்சிக்கும் வாய்ப்பு வேண்டும். நம் எதிர்பார்ப்புகள் எல்லா சமயங்களிலும் சந்திக்கப்படப் போவதில்லை – பின் விமர்சனமே தேவையில்லை. ஆனால் நிச்சயமாய் எதிர்பார்க்கக்கூட எதுவும் இல்லை என்று தெரிந்தே தரமாயிருக்க வாய்ப்பேயற்ற ஒரு படைப்பை நல்ல விமர்சகன் அலசவேகூடாது.


Seemabaddha – சத்யஜித் ரே

ஜனவரி 2, 2008

எத்தனை பேர் zee studioவில் ஞாயிற்றுக்கிழமை சத்யஜித் ரே படங்கள் பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை. பழைய தூர்தர்ஷனில் பன்மொழிப் படங்கள் பார்த்த நாட்கள் நினைவுக்கு வருகின்றன. இன்றைய குழந்தைகள் இழக்கிற நிறைய விஷயங்களில் ஒன்று.

அன்றாட நிகழ்வுகளை அழகாய், துல்லியமாய் தர முடிந்திருக்கிறது ரே’யால். ஒரு மனிதன் வெற்றி என்று தான் நினைக்கிற ஒன்றை அடையத் தர நேர்கிற விலைதான் படம். நாயக்கனுக்கும் நாயக்குமான (மனைவியின் தங்கை) உறவில் நளினம். இத்தகைய உறவுகளைத் திண்ணமாய் விளக்காமல், define செய்யாமல், விடுவதின் மூலம்தான் கதைக்கு ஓர் ஆழம் கிடைக்கிறது – நம்மவர்களும் இதைப் புரிந்து கொண்டால் நாமும் அடுத்த படியில் அடிவைப்போம்.

 கடைசிக்காட்சியின் symbolism அழகு. படிகளில் உயர ஏற ஏற நாயகன் தளர்ந்து போகிறான்.

ஒரு தமிழ் பாத்திரமும் உண்டு. தமிழில் தத்துவார்த்தமாய்ப் பேசுகிறார். ‘நெருப்பை விட்டு மிகவும் விலகியிருக்காதே, பயனில்லை. மிக அருகே சென்றாலும் சுடும். சரியான தொலைவில் இரு.’

அதிக உழைச்சலில்லாமல் எளிதாக ஒரு நல்ல படம் எடுக்க முடிந்திருக்கிறது.


One flew over the cuckoo’s nest

திசெம்பர் 31, 2007

உலக சினிமாக்களில் அவ்வப்போது சஞ்சரித்து வருகிறேன். அண்மையில் One flew over the cuckoo’s nest பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. Milos Forman படம். Michael Douglas தயாரிப்பு (ஆச்சர்யம்!).

ஆழமானது என்றாலும், சாதரணக் கதை (நாவலைத் தழுவிய படம் – நாவலைப் படித்ததில்லை; பிடித்திருக்கும் என்று தோன்றவில்லை). நிர்ணயிக்கப்பட்ட விதகளுக்கும் மனித விருப்பத்திற்கும் விடுதலையுணர்வுக்கும எதிரான போராட்டம். சொன்ன விதம் உலுக்குகிறது. அத்தனை பேரும் அழுத்தமாக நடித்திருக்கிறார்கள். Jack Nicholson நடித்து As good as it gets, Departed பார்த்திருக்கிறேன். Al Pacino, Robert DeNiro வரிசையைச் சார்ந்தவர். சுற்றிலும் அனைவரும் அவ்வளவு சிறப்பாக நடித்திருக்கிற போதும் இவரால் தனித்துத் தெரிய முடிகிறது.

நாயக்கனுக்கும் நாயகிக்கும் இடையில் இடைவிடாத போராட்டம். இறுதியில், தமிழ்ப்படமாக இருந்தால் காதலித்திருப்பார்கள். இதில் பார்வை பரிமாற்றத்தற்கான அர்த்தத்தை (நிறைய வெறுப்பு,போட்டி கொஞ்சம் காமம்கூட இருக்கலாம்) பார்ப்பவர்கள் கற்பனைக்கு விட்டுவிட்டார்கள்.

தமிழில் இப்படி படம் எடுக்க முடியும் என்றே தோன்றுகிறது. சிவாஜியால், கமலால் நடிக்க முடிந்த பாத்திரங்கள்தான். சுற்றிலும் ஈடுகொடுக்க இவ்வளவு துணைநடிகர்கள் கிடைப்பார்களா தெரியவில்லை. பாடல்கள் இல்லாத படத்தை எடுக்க இயக்குனர் கிடைப்பாரா தெரியவில்லை. காதல் இல்லாத படத்தை எடுக்கத் தயாரிப்பாளர் கிடைப்பாரா தெரியவில்லை. ரசிப்பதற்கு நிச்சயம் ஆட்கள் இருக்கிறார்கள்.


பாரதி மீதே பழியா?

திசெம்பர் 28, 2007

அனேகர் பார்க்கிற ஒரு வலைப்பதிவில் பாரதி மீது ஒரு நீண்ட தாக்குதல் நடந்துகொண்டு இருக்கிறது. அவன் மீது சாதிச்சாயம் பூசப்படுவது பார்த்து வருத்தமாக இருக்கிறது. ‘ஆரிய பூமி’ என்று பாடிவிட்டானாம்.

பாரதிமேல் இத்தனை வன்மம் ஏன்?  பாரதி எழுதிய காலத்தில் திராவிடம் என்கிற concept எந்த அளவிற்கு நிறுவப்பட்டிருந்தது என்பது கேள்விக்குறி. ‘பார்ப்பனரை ஐயரென்ற காலமும் போச்சே’ என்று சொன்னவன் பாரதி. அவனை இகழ்ந்தாலும் புகழ்ந்தாலும், அவன் கவிதைகளின் தாக்கம் தணியப்போவதில்லை. நாட்டைப்பற்றி மொழியைப்பற்றி சமுதாயத்தைப்பற்றி, ஏன் உலகைப்பற்றி தமிழில் பாடிய முதல் கவிஞன், முழுமையான கவிஞன் பாரதி.

அறுவை சிகிச்சையின் போது ரத்தத்தை மட்டும் பார்க்கிற மாதிரி இருக்கிறது, பாரதியின் கவிதையின் உயிர்நீக்கித் துகிலுறித்து வெறும் வார்த்தைகளை விமர்சிப்பது.


திறமான புலமையெனில்…

திசெம்பர் 28, 2007

உலக இலக்கியங்களை அலசிப் பார்கையில், தெளிவாய்த் தென்படுகிறது – இன்னமும் நாம் வெகுதூரம் பயனிக்கவேண்டும். நாம் வார்த்தைகளில் விளையாடக் கற்றுக்கொண்ட அளவிற்கு கற்பனையிலோ, கதைக்களத்திலோ, சொல்முறையிலோ, கருத்தாளத்திலோ, கருத்துப்பரப்பிலோ இன்னமும் உலக தரத்தை அடையவில்லை என்பதை வருத்தத்துடன் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். நம் சிந்தனை ஒரு குறுகிய வட்டத்துக்குள் பெரும்பாலும் சிறைபட்டுவிடுவது ஒரு காரணமோ? நம் வாழ்க்கையே ஒரு சின்ன வட்டத்திற்குள் கழிக்கப்படுவது ஒரு காரணமோ? அந்த வட்டத்தைவிட்டு வெளியேறுகிறவர்களில் பெரும்பாலோர் தமிழ்வட்டத்தையும் தாண்டிவிடுவது ஒரு காரணமோ?

திறமான புலமையெனில் வெளிநாட்டார் அதை வணக்கம் செய்தல் வேண்டும். அப்படியோர் நிகழ்வுக்காக நான் காத்திருக்கிறேன்.