வேருக்கு நீர்

நவம்பர் 12, 2019

ராஜம் கிருஷ்ணனின் ‘வேருக்கு நீர்’ நாவலை இம்மாதம்தான் படித்தேன். தமிழ் இலக்கியத்தில் காந்தி குறித்துப் பேசும்போது சிலர் இதைக்குறிப்பிட்டதாலும், தற்செயலாகக் Kindle Unlimitedல் கண்ணில் பட்டதாலும் படிக்கத்தொடங்கினேன். மிகவும் பிடித்திருந்தது. காந்தி நூற்றாண்டு விழாவின் பின்னணியில் எழுதப்பட்ட நாவல். காந்தி 150க்கும் பொருந்தி வருகிறது. பல ஆழமான உரையாடல்கள் மூலமகாக லட்சியவாதத்துக்கும் வாழ்வின் யதார்த்தங்களுக்கும் ஏற்படும் உரசல்களுக்குள் ஆழமாகச் செல்கிறது. காந்தியின் மீதான அன்றைய ஆயுதம் தாங்கிய மார்க்சியர்களின் விமர்சனங்களையும் சித்தரிக்கிறது. இப்பகுதியை அசோகமித்திரனின் ‘காந்தி’ சிறுகதையோடு ஒப்புநோக்கலாம். அவர் பல அடுக்குகளை அமைத்துத் தொட்ட ஒரு புள்ளியை, இவர் இந்நாவலில் மிக நேரடியாகத் தொட்டுவிடுகிறார். காந்தியத்தால் ஈர்க்கப்பட்ட ஒரு பெண் குடும்ப வாழ்வில் சந்திக்க நேரும் சவால்களைச் சொல்வதில் பி.எஸ்.ராமையாவின் பதச்சோறு கதையோடு இணைத்துப்பார்க்கலாம்.

அரசியல், இலட்சியவாதப் பின்புலத்தில் நடைபெறும் பல உரையாடல்களும், நிகழ்ச்சிகளும் ஒரு பழைய ருஷ்ய நாவலைப் படிக்கும் நிறைவைத் தந்தன. கேள்விகளை எழுப்பின. எளிமையான, இனிமையான நடை. ராஜம் கிருஷ்ணனின் பெயர் சிறுவயது முதலே பரிச்சயமானதுதான் என்றாலும், அவரது தனிமையான இறுதிக்காலம் குறித்து முகநூல் மூலமாகக் கொஞ்சம் அறிந்திருந்தாலும், ஏன் இவரை இதுவரை நான் படித்ததே இல்லை என்பதை என்னை நானே கேட்டுக்கொள்கிறேன். இந்நூலுக்காக சாகித்ய அகாதெமி விருது பெற்றிருக்கிறார். 80 படைப்புகளுக்கு மேல் எழுதியிருக்கிறார் என்கிறது விக்கி. பிற நூல்கள் எப்படியோ, இது நல்லதொரு படைப்புதான்.


புதுமைப்பித்தனின் புதிய ந‍ந்தன் – இருவர் இருவிதமாகக் கண்ட ஒரே ஒளி

ஜனவரி 12, 2019

புதுமைப்பித்தனின் புதிய ந‍ந்தன் கதை நான் மொழிபெயர்த்துவரும் காந்தி தொகுதிக்காகத்தான் படித்தேன். காந்தி வந்துசேர்வதற்கு முன்பே கதை முடிந்துவிட்டாலும், மிகச்சரியான கதையைத் தான் சுனில் கிருஷ்ணன் தேர்வு செய்திருக்கிறார்.


காந்தியும் பெரியாரும்(/அம்பேத்காரும்) எதிரெதிர் துருவங்களாக நிறுத்தப்படும் இன்றைய சூழலில், 1934ல் வந்த இக்கதை, அவர்களது அத்தனை முரண்களுடனும், அவர்கள் இணைகிற புள்ளியை மையப்படுத்துகிறது.
முதல் மேலோட்டமான வாசிப்புக்குச் சாதாரணமான தொடக்க‍ கால சீர்திருத்தக்கதையாகத்தான் தெரிந்தது.


ஆனால் மொழிபெயர்ப்பதில் இருக்க‍க்கூடிய அனுகூலம், படைப்புக்குள் நம்மை ஆழ்ந்து செல்ல வைத்துவிடுகிறது. புதிய ந‍ந்தன் கதையில் பல்வேறு அடுக்குகள் நுட்பமாகப் புனையப்பட்டிருப்பது புரிந்தது.


இப்போதுதான் ந‍ந்தனார் திரைப்படம் பார்த்திருந்த‍தால், ந‍ந்தன் கதையின் நவீன வடிவம் நன்றாக மனதில் நின்றிருந்த‍து.

‘நந்தன் பறைச்சேரியில் விடை பெற்றுக்கொண்ட பிறகு, பறைச்சேரிக்கு என்னமோ கதிமோட்சம் கிடையாது. பழைய பறைச்சேரிதான். பழைய கள்ளுக்கடைதான்.’ போன்ற கூரிய வாசகங்களுடன் கதை தொடங்குகிறது. ஆங்கில ஆட்சி வந்த‍தே அறியாத நெடுந்தூக்க‍த்தில் அவர்கள் இருக்கிறார்கள்.


ஆங்கில ஆட்சி வந்த‍தன் அடையாளமாக முனிசிபல் விளக்கு வந்துவிடுகிறது. ஆனால் அதுவும் தீண்டப்படாமல் இருக்க, மரியாதையான தூரத்திலேயே இருக்கிறது.


ந‍ந்தன் ஆண்டையிடம் அடிமைப்பட்டிருப்பதாக உணர்வதே இல்லை. அவனது அனுமதிக்காகவும் ஆணைக்காகவும் காத்திருக்கிறான். கருப்பனும் அப்படித்தான். தன்னை அக்கிரகாரக் கிணற்றில் நீரள்ளிக் குடித்த‍தற்காக அடித்துக் குருடாக்கிய ஆண்டையிடம்தான் கடைசிவரை காவலனாக வேலை செய்கிறான். அவன் கிணற்றில் நீரள்ளியது புரட்சி செய்வதற்காக அல்ல; அது அறியாமையால் நிகழ்ந்த விபத்து.


பெரிய நிலக்கிழார்களாக இருந்தவர்கள் பிரித்தானிய அரசாங்க வேலைகளில் சென்று சேர்கிற சித்திரமும் வருகிறது. அப்படியானவர்களின் அடுத்த தலைமுறை காந்தியின் உந்துதலால் ஏற்பட்ட லட்சிய வேகத்தில் பெரும் மன மாற்றமடையும் சித்திரமும் வருகிறது. பழைய வேதியர் வழியில் வந்த புதிய வேதியரான பெரிய பண்ணையாகவும், சப்-ரெஜிஸ்டிராராகவும் இருந்தவரின் பிள்ளையான ராமநாதன், எம்.ஏ. படித்து கலெக்டராவதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கும்போது காந்தியின் உப்பு சத்தியாகிரகத்தால் ஈர்க்கப்பட்டு எல்லாவற்றையும் உதறிவிட்டு சிறைக்குச் செல்கிறான்.


என்னதான் ஆண்டைக்கு விசுவாசமாக இருந்தாலும் கருப்பனும் பிள்ளையை ஆண்டை மாதிரி ஆக்குகிறேன் என்று மதம் மாற்ற வந்த ஜான் ‘ஐயர்’ என்கிற போதகர் ஆசை காட்டும்போது இணங்குகிறான். மகன் ஆங்கிலம் படிக்கவேண்டும் என்கிற ஆசையும் அவனுக்கு உள்ளது. ஆங்கிலத்துக்கு ‘இங்குருசி’ என்ற சொல்லைப் புதுமைப்பித்தன் பயன்படுத்துகிறார். இன்றும் இந்தியில் அங்கிரேசி என்றுதான் சொல்கிறார்கள்.


ஆனால் மகனை முன்னேற்றிவிட வேண்டும் என்று நினைக்கிற கருப்பன், ஆண்டையின் மகன் தன் மகளைத் திருமணம் செய்துகொள்ள விரும்பும்போது, பெரும் பாவம் என்று சொல்லி மறுக்கிறான். முன்னேற வேண்டும் என்கிற நினைப்பை, சாதியப்பழைமையில் ஊறிய உணர்வுகள் சமன்செய்துவிடுகின்றன.

கருப்பனின் மகன் பாவாடை தானியேல் ஜான் ஆகி, கிருத்துவத்திலும் சாதி மறையவில்லை என்பதை அறிந்து முதல் விலக்கம் கொள்கிறான். வேளாள ஜான் ஐயர் வேளாளராகவே இருக்கிறார் – தானே முன்னின்று மதம்மாற்றிய தானியேலை “பறக்கழுதை வீட்டைவிட்டு வெளியே இறங்கு” என்று கழுத்தைப் பிடித்து நெட்டித் தள்ளுகிறார்.


பின்னர் கத்தோலிக்க மத‍த்தைத் தழுவி ‘சுவாமியார்’ ஆகப் பயிற்சிபெறுகிறான். அங்கும் ‘சில சுவாமியார்களின் இயற்கைக்கு விரோதமான இச்சைகளும், மனதிற்குச் சற்றும் சாந்தி தராத இரும்புச்சட்டம்’ ஆகியவற்றைப் புதுமைப்பித்தன் சுட்டுகிறார்.


தானியேல் ராமசாமிப் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் இணைகிறான். தோழர் நரசிங்கம் ஆகிறான். ராமநாதனுக்கும் தன் தங்கைக்கும் திருமணம் செய்துவைக்க வேண்டும் என்று தந்தையைக் கட்டாயப்படுத்துகிறான் நரசிங்கம். ஆனால் அவனாலும் கருப்பனின் நம்பிக்கையைத் தகர்க்கமுடிவதில்லை.


தமிழ்நாட்டுக்கு ஹரிஜன நிதி திரட்ட வரும் காந்தியை ஆதனூருக்கு வருவதற்கு ஏற்பாடு செய்கிறான் ராமநாதன். அவனது சனாதனத் தந்தையும் பெரியாரிய நரசிங்கமும் காந்தியிடம் வாதம் செய்து வெல்லக் காத்திருக்கிறார்கள்.


ராமநாதனும் நரசிங்கமும் – இரண்டு பேரும் ஒரே உண்மையை இரண்டு விதமாகக் கண்டார்கள். புதிய ஒளியை இருவிதமாக‍க் காண்கின்றனர்.


ஆனால் இறுதியில் அவர்கள் இருவரும் கருப்பனை ரயிலில் அடிபடாமல் காக்க முயன்று மூவருமாய் இரத்தக்களரியில் மடிந்து, மூவரது இரத்தமும் கலக்கும்போது, கருப்பனும் அதே ஒளியை வேறுவிதமாக‍க் கண்ட‍டைந்திருப்பான் என்பதை ஆசிரியர் நேரடியாக‍க் கூறாமல் விட்டுவிடுகிறார்.


உண்மையில், இது மூன்று பேர் மூன்று விதமாக‍க் கண்ட ஒரே ஒளிதான்.


கில்காமெஷ் – நம்காலத்தைப் பேசும் ஆதிகாவியம்

திசெம்பர் 27, 2018

உலகின் ஆதிகாவியமாகக் கருதப்படும் கில்காமெஷ் (c. 2100 BCE) தமிழில் க.நா.சு. மொழிபெயர்ப்பில் கிடைக்கிறது (சந்தியா பதிப்பகம்). சுமேரிய மொழியில், குனிப்பார்ம் எழுத்துகளில் பொறிக்கப்பட்ட பல கற்கள் கிடைத்து, அவற்றிலிருந்து பலரது பங்களிப்பால் புரிந்துகொண்டு தொகுக்கப்பட்டது இக்காவியம்.

அதிலேயே சமகாலச் சிக்கல்கள் பலவற்றின் வேர்களைக் காணலாம்.

இதன் நாயகன் கில்காமெஷ். ‘எந்தக் கன்னிப் பெண்ணையும் அவள் காதலுக்கு அவன் விட்டு வைப்பதில்லை. பிரபுவின் மனைவியானாலும் சரி, போர் வீரனின் பெண்ணானாலும் சரி – எல்லாரும் அவன் பௌருஷத்துக்குப் பலியாகிவிடுகிறார்கள். ஆனால் இவன் மன்னன். நாட்டுக்குக் காவலன்; அறிஞன்; ஞானி; அழகன்; தீர்மானமுள்ளவன்.’

கில்காமெஷ் பெண்களிடம் அத்துமீறுவதைப் பொறுக்கமுடியாமல், தேவர்கள் அவனுக்குச் சமமான வலிமையுடன் எங்கிடுவைப் படைக்கிறார்கள். ஆனால், எங்கிடுவை ஒரு பெண் மூலமாகவே மயக்கி நகரத்து ஈர்க்கிறான் கில்காமெஷ். எங்கிடுவைத் தோற்கடிக்கிறான். எங்கிடு அவனது உற்ற நண்பனாக மாறுகிறான். ஆனால் அதன் பிறகு கில்காமெஷ் பெண்களிடம் எப்படி நடந்துகொள்கிறான் என்பது குறித்து எந்தக் குறிப்பும் இல்லை.

கில்காமெஷும் எங்கிடுவும் சேர்ந்து, கிருஷ்ணன்-அர்ச்சுனனை நினைவுபடுத்தும் வகையில், செடார் மரங்கள் நிறைந்த ஒரு காட்டினை அழிக்கிறார்கள். அந்த காட்டின் ரட்சகனாக இருக்கும் ஹம்பாபா ஒரு ராட்சசனாகக் காட்டப்படுகிறான். கில்காமெஷ் ஹம்பாபாவை வீழ்த்த சூரியக்கடவுளான காமாஷின் உதவியைக் கோருகிறான்.

கில்காமெஷ் நூலின் இப்பகுதியில் சில கவித்துவமான வரிகள் உள்ளன.

‘காமாஷ் இரவு உறங்கப் போய்விட்டான். அவன் தாயின் மடியில் வெளிச்சம் நிறைந்த தன் முகத்தைப் புதைத்துக்கொண்டு அவன் உறங்குகிறான்.’

காமாஷிடம் கில்காமெஷ்,

“ஹம்பாபாவின் இருப்பிடம் நோக்கி நான் ஒரு நீண்ட பயணம் மேற்கொண்டேயாக வேண்டும். இந்தக் காரியத்தை என்னால் செய்து முடிக்கமுடியாவிட்டால் ஏன் நீ இந்த எண்ணத்தை என் மனதில் தோற்றுவித்தாய்? நீ எனக்கு உதவி செய்ய மறுத்தால் நான் எப்படி என் காரியத்தில் வெற்றி பெற முடியும்?”

என்று முறையிடுகிறான். காமாஷ் உதவுகிறான். நண்பர்கள் இருவரும் செடார் மரங்களை வெட்டத் தொடங்குகின்றனர்.

/செடார் மரம் விழுகிற சப்தம் கேட்டு விழித்துக்கொண்ட ஹம்பாபா கோபத்துடன் உரத்த குரலில் காடு அதிர, “யாரடா அவன் என் இருப்பிடம் வந்து என் செடார் மரத்தை வெட்டுவது? யாரடா அவன்?” என்று கத்தினான்./

ஹம்பாபா கில்காமெஷுக்கு ஈடுகொடுக்கமுடியாமல் சரணடைந்தபோதும், நண்பர்கள் இருவரும் அவனை கொன்றுவிடுகின்றனர். செடார் மரங்களை வெட்டி, வேர்களை எரித்து, எடுத்துச்செல்கின்றனர். மரத்தைக் காக்கப்போரிடும் ‘ராட்சசன்’ நகரங்களைக் கட்டமைக்கும் வீர மனிதர்களிடம் தோற்கிறான்.

பின்னர் இங்கிடுவின் மரணத்துக்குப் பிறகு, கில்காமெஷ் மரணமிலா வாழ்வினை நாடிப் பெரும்பயணம் மேற்கொள்கிறான். மரணத்தை வென்று வாழும் உத்னபிஷ்டிம் என்பனைச் சந்திக்கிறான். உத்னபிஷ்டிம் நோவாவைப் போலவே ஒரு பெரும் பிரளயத்தைச் சந்தித்தவன். கடவுள் எச்சரிக்கை செய்ததால், அவனும் ஒரு படகினைக் கட்டி, அதில் விலங்குகளோடு குடியேறி பிரளயத்திலிருந்து தப்புகிறான்.

உத்னபிஷ்டிம், ‘மரணத்தை வெல்வதிருக்கட்டும்; முதலில் உன்னால் உறக்கத்தை வெல்லமுடிகிறதா பார்’ என்று கூறுவதுபோல், கில்காமெஷை ஏழு இரவுகள் உறங்காமலிருக்கச் சொல்கிறான். அவனோ ஏழ நாட்களையும் உறங்கியே கழிக்கிறான்.

மரணத்தை வெல்வதில் தோல்வியுற்ற கில்காமெஷுக்கு, உத்னபிஷ்டிம் மூப்பினை வெல்லும் ஒரு மலர் கடலுக்கடியில் இருப்பது பற்றிக் கூறுகிறான். அந்த மலரை கடலுக்கடியில் மூழ்கித் தேடி எடுத்துச் செல்கிறான் கில்காமெஷ். ஆனால், அவன் ஏமாந்த வேளையில், அதையும் ஒரு பாம்பு உண்டுவிடுகிறது.

மரணத்தையும் மூப்பையும் வெல்லமுடியாமல் தனது ஊரான ஊருகி திரும்பிய கில்காமெஷ் இந்தக் கதையை கல்லில் பொறிக்கிறான். பின்னர் இறந்துபோகிறான். ‘அவன் மகாபலசாலி – அவன் கைகளில் வீரம் செயல்பட்டது. அவன் செய்யாத தீரச் செயல்கள் இல்லை. ஆனாலும் அவன் மீண்டும் வரமாட்டான்.’

பல்லாயிரம் ஆண்டுகளாக மனிதன் இயற்கையோடும் நிலையாமையோடும் பொருது கொண்டிருக்கிறான்.


தன்னோய்க்குத் தானே மருந்து – எம்.கோபாலகிருஷ்ணனின் மனைமாட்சி

ஜூலை 23, 2018

(எம்.கோபாலகிருஷ்ணனின் ‘மனைமாட்சி’ நாவல் வெளியீட்டு விழாவின் போது பேசிய அறிமுக உரையின் விரிவான எழுத்து வடிவம்)

கடந்த ஒரு வாரத்தை, எங்கள் கிராமத்தின் மெல்லிய பருவ மழையிலும் இதமான குளிர் காற்றிலும் கோபாலகிருஷ்ணனின் வெம்மையான எழுத்துகளோடு கழித்தேன்.

அழைப்பிதழில் மனைமாட்சியின் அட்டையிலும் ஈரமாய் மழைப்படம். என்னைத் தழுவிய மழையின் ஒரு துளியை உங்களோடு பகிர்ந்து கொள்ள முடிந்தால் மகிழ்ச்சியே.

கோபாலகிருஷ்ணனின் எழுத்துகளைப் படிப்பதற்கு முன்பே தியாகு நூலகத்தில் அவரது அறிமுகம் கிடைத்துவிட்டது. ஒரு நல்ல வாசகராகவே அவரை முதலில் அறிந்துகொண்டேன். பழகப்பழக ஓர் இனிய நண்பராக அறிந்துகொண்டேன். பின்னர்தான் மணல்கடிகை படித்தேன். அவரை ஒரு நல்ல நாவலாசிரியாக அடையாளம் கண்டுகொண்டேன். மனைமாட்சியில் அது உறுதிப்பட்டிருக்கிறது. ‘வாழ்விலே ஒரு நாள்’ என்ற புத்தகம் அரசு நூலகத்தில் தேடும் போது என் கைகளில் விழுந்தது. அலெக்ஸாண்டர் சோல்ஸனிட்சினின் ‘One day in the life of Ivan Denisovich” என்ற ரஷிய நாவலின் மொழிபெயர்ப்பு. சோவியத் குலாக்களின் கொடூரமும், நம் சூழலுக்கு அந்நியமான பனியும் குளிரும் தமிழில் அற்புதமாக வந்திருந்தது. அப்போது அவரை மிகச் சிறந்த மொழிபெயர்ப்பாளராகக் கண்டுகொண்டேன். ஆங்காங்கு படித்த பல கவிதைகளின் மூலமாக சிறந்த கவிஞராகவும் கண்டுகொண்டேன். இப்போது, இந்த உரையின் பொருட்டுதான் அவரது சிறுகதைகளைத் தொகுப்பாகப் படித்தேன். வேறு எதற்காக இல்லாவிட்டாலும் அவரது சிறுகதைகளுக்காகவே அவரைக் கொண்டாடித்தீர்க்கவேண்டும் என்று தோன்றியது.

தொடர் மின்வெட்டுகளால், அடுத்த வீட்டுத் திண்ணையில் அமர்ந்துகொண்டு, மழையில் நள்ளிரவில் அவரது முதல் தொகுப்பான ‘பிறிதொரு நதிக்கரை’யிலிருந்த ‘ஒற்றைச் சிறகு’ சிறுகதையைப் படித்துக்கொண்டிருந்தேன். அடிபட்டிருந்த ஒரு பறவையையும், குப்பைத்தொட்டியருகில் கைவிடப்பட்ட ஒரு குழந்தையையும் பற்றிய கதை. படிக்கும் போது என் மீது ஒரு கரப்பான் பூச்சி பறந்துவந்து விழுந்தது. கையிலிருந்த புத்தகத்தால் அனிச்சையாய்த் தட்டிவிட்டேன். பூச்சி தலைகீழாக மழையில் வீழ்ந்தது. அதனால் திரும்ப முடியவில்லை. கதையை முடித்தபிறகு என்னால் அடுத்த கதைக்குச் செல்ல முடியவில்லை. மழையில் இறங்கிப் பூச்சியைத் திருப்பிவிட்டுவந்துதான் தொடர முடிந்தது.

அந்த அளவுக்கு வலுவான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய கதைகளை கலைநேர்த்தியோடு படைத்திருக்கிறார். மானுடத்தின் மீதான நேயம் என்பதைத் தாண்டி அனைத்துயிர்களின் மீதும், இயற்கையின் மீதும், சூழல் மீதும் அக்கறை கொண்ட ஒரு எழுத்தாளனாக ஆரம்ப காலம் முதலே கோபாலகிருஷ்ணனின் கதைகள் அவரைப் பிரகடணம் செய்கின்றன.

கு.ப.ரா.வின் ஆற்றாமை கதையைக் கொண்டாடுகிற அல்லது விமர்சிக்கிற அளவுக்கு கோபாலகிருஷ்ணனின் இரவு கதையையும் நாம் கொண்டாடலாம். ஆற்றாமை கதையில் கணவனைவிட்டுப் பிரிந்திருக்கிற சாவித்திரி அடுத்த உள்ளில் மகிழ்ந்திருக்கும் இளம் தம்பதியினரைக் கண்டு பொருமி, வாய்ப்பு கிட்டியபோது தடங்கல் ஏற்படுத்துகிறாள். இரவு கதையில் gender role reversal நடக்கிறது. உடல் செயலிழந்து படுத்தபடுக்கையாக இருக்கும் அண்ணன் திருமலை, தம்பியின் திருமணம் முடிந்த முதலிரவன்றுத் தொடர்ந்து இடையூறு செய்கிறான். “உடலற்றக் காமத்தின் ஊமை வலி உனக்குத் தெரிய நியாயமில்லை அம்மா” என்று கறுவுகிறான்.
இறுதியில், ‘திருப்திதானா பேயே’ என்று சாவித்திரியின் குற்றவுணர்வு ஆற்றாமையில் வெடிக்கிறது. திருமலையின் தாய், ‘ஏன்டா திருமலே இப்பிடி பண்றே..நீ செய்யறது உனக்கே நல்லாருக்கா…பாவம்டா’ என்கிறாள். ‘பாவந்தான்ம்மா..எதையாச்சும் அரச்சு ஊத்திரு. பாவந்தீந்துரும்’ என்கிற திருமலையின் மூலமாக, காமம் மட்டுமல்ல, ஆற்றாமையும் ஆண்பால் பெண்பால் அறியாது என்பதை இக்கதைமூலம் வெளிப்படுகிறது.

இத்தகைய gender role reversal மனைமாட்சியில் தொடர்ந்து நிகழ்கிறது.

மனைமாட்சியில் ஆறு கதைகள் மூன்று பகுதிகளாகச் சொல்லப்பட்டிருகின்றன. மனைமாட்சியைப் படிக்கும் போதும், படித்து முடிந்த பிறகும் எனக்குள் எழுந்த முதல் கேள்வி – ஒவ்வொரு பகுதியிலும் வருகிற இரண்டிரண்டு கதைகளுக்குள்ளே, ஒரு மெல்லிய இழைதான் தொடர்ச்சியாக இருக்கிறது. இவை ஆறும் தனித்தனி நாவல்களாகவேகூட வெளியிடப்பட்டிருக்கிலாம். அந்தளவுக்கு ஒவ்வொரு கதையிலும் அடர்த்தியும் சாராம்சமும் இருக்கின்றன. இந்த ஆறு கதைகளும் சேர்ந்து எப்படி ஒற்றை நாவலாகின்றன?

ஏற்கனவே தமிழிலும் உலக இலக்கியங்களிலும் பல கதைச்சரடுகளையுடைய நாவல்களை நாம் பார்த்திருக்கிறோம். அவை ஓர் ஊரின் கதையைச் சொல்லக்கூடும். ஒரு மனிதன் ஒரு நாளில் சந்திக்கின்ற பல்வேறு மனிதர்களின் கதைகளைக் கூறக்கூடும். ஒரு காலகட்டத்தின் கதையைக் கூறக்கூடும். ஒரு குடும்பத்தின் வெவ்வேறு உறுப்பினர்களின் கதைகளைக் கூறக்கூடும். ஒரு குடியின் பல்வேறு தலைமுறைகளைப் பற்றி கூறக்கூடும். ஏதோ ஒரு வகையில் இவையெல்லாம் ஒரு மையச்சரடால் பிணைக்கப்படுகின்றன. மணல்கடிகையே கூட இப்படிப் பல கதைகளை ஒருங்கே கையாண்ட ஒரு நாவல்தான். ஐந்து நண்பர்களின் வாழ்க்கையைப் பின்தொடர்வதன் மூலமாக ஒரு நகரத்தின் கதையை, சமூகமாற்றத்தின் கதையை, ஒரு காலமாற்றத்தின் கதையைக் கூறுவார்.

அப்படியாக மனைமாட்சியின் ஆறு கதைகளை இணைக்கிற சரடு, அதன் தலைப்பிலேயே தொடங்கி, தொடர்ந்து வாழ்க்கைத் துணைநலம் அதிகாரத்தில் வள்ளுவன் விரல்பிடித்து அவனை ஏற்றும் மறுத்தும் நாவல் நகர்கிறது எனலாம்.

மனைமாட்சி நாவல் இன்றைய சமூகத்தில், குடும்ப வாழ்வின் வெவ்வேறு பரிமாணங்களைச் சொல்கிறது. சிக்கலான இன்றைய குடும்ப வாழ்வின் முக்கிய பரிமாணங்களை வெளிப்படுத்த ஒரு குடும்பம், ஒரு கதையால் சாத்தியமில்லை என்று கோபாலகிருஷ்ணன் ஆறு கதைகளைக் கையாண்டிருக்கிறார் போலும். பெண்ணின் பெருமைகளையும் சிறுமைகளையும் பேச வந்த நாவலாகவும் இதைக்காணலாம்.

மணமான ஒரு சில நாட்களிலேயே எந்தத் தவறும் செய்யாமல் கணவனைப் பிரிந்த பின்னும், ஒரு பெண் பிரிவை மிக வலுவாக முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு எதிர்கொள்கிறாள். இன்னொரு பெண் கணவனோடு சேர்ந்தே இருக்கமுடியாத ஒரு சூழலை உருவாக்கிய பின், தன் மீது சுமத்தப்பட்ட பிரிவால் நொறுங்கிப்போகிறாள்.

உடன்வாழத்தகுதியற்றவன் என்று ஒற்றை நிகழ்வின் மூலமாக ஒரு பெண் நிராக்கிற ஒருவனை இன்னொரு பெண் அரவணைத்து ஏற்றுக்கொள்கிறாள்.

வீட்டினர் அனைவுரும் வற்புறுத்தும்போதுகூட கணவனை இழந்த ஓர் இளம்பெண் மறுமணம் புரிய மறுக்கிறாள். வீட்டினர் கட்டாயத்தால் மணம்புரிந்துகொண்ட இன்னொரு பெண் உடனடியாக மணவாழ்வை முறிக்க முனைகிறாள்.

இப்படியாக இக்காலகட்டத்தில் குடும்ப வாழ்க்கையை எதிரெதிர் கோணங்களில் இந்நாவல் அணுகுகிறது. இரண்டிரண்டு கதைகளாய் வெம்மையையும் தண்மையையும் மாறிமாறித் தருகின்றது என்றும் சொல்லலாம்.

பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து.

என்கிறார் வள்ளுவர், ஒரே பெண்ணிடம்தான் பிணியும் மருந்தும் உள்ளன என்கிற பொருளில். கோபாலகிருஷ்ணன் ஒரு கதையில் பெண்ணால் ஏற்படும் நோய்க்கு, இணைகதையில் பெண்ணையே மருந்தாக்கிக் காண்பிக்கிறார்.

இக்கதைகளின் சில கூறுகளையும் கதைமாந்தரின் சில சாயல்களையும் நாம் வேறு கதைகளில் பார்த்திருக்கிறோம். ஏன் வணிகத் திரைப்படங்களில் கூட கண்டிருக்கிறோம். முதல் கதையின் சாந்தியில் புதுபது அர்த்தங்கள் கீதாவும், கடைசிக் கதையின் கலைவாணியில் மௌன ராகம் ரேவதியும் எனக்கு நினைவில் வரத்தான் செய்தார்கள். ஆனால், நிஜ வாழ்வோடு இருக்கக்கூடிய நெருக்கம், கதைகளில் இருக்கிற அடர்த்தி, வாழ்க்கைக்குள் அவை செல்கின்ற ஆழம் என்று இந்நாவல் எட்டிப்பிடிக்கற தளம் முற்றிலும் வேறானது, வெகுவாய் மேலானது.

சில உறவுச்சிக்கல்களைப் பார்க்கும்போது, இவை நம்ப முடியாத நிகழ்வுகளோ என்றுகூடத் தோன்றலாம். ஆனாலும், அவை நாம் நம்ப விரும்பாத நிகழ்வுகளாகவே இருக்கின்றன.

முதல் கதையின் ஆரம்பமே இப்படித்தான் இருக்கிறது.

/கனலும் இரும்புக் கம்பியுடன் நெருங்கி நிற்கும் சாந்தியின் முகத்தைக் கண்டதும் பட்டென்று உடலைக் குறுக்கினான் தியாகு. வெறியேறிய கண்கள். வறட்டுச் சிரிப்பு. பாதங்களைப் பார்க்கிறாள். மறுகணம் அவள் பார்வை அவன் முகத்தில் படிகிறது. “ஒரு இழுப்பு இழுத்தாத்தான் நீ சரியா வருவே.”/

முதல் முறை இதைப் படிக்கும்போது ஏதோ நனவோடைக் காட்சியென அதிகம் கவனம் செலுத்தாமல் கடந்து சென்றுவிட்டேன். மறுமுறை பார்க்கும்தோதுதான் இப்படியொரு காட்சியை மனம் நம்ப மறுத்ததன் விளைவுதான் என்னை அப்படிக் கடந்து போகச் செய்தது என்று தோன்றுகிறது.

பிறகு கொஞ்சம் கொஞ்சமாய் சாந்தி என்கிற பாத்திரத்தின் சிக்குகளை அவிழ்த்துச் செல்வதில் கோபாலகிருஷ்ணனின் படைப்பாளுமை வெளிப்படுகிறது. அவளது பாத்திரப்படைப்பு ஊகங்களுக்கு இடமில்லாமல் முற்றிலும் துலங்கிய பிறகு நம்மை ஓர் உலுக்கு உலுக்குகிறது. இங்கும் ஒரு gender role reversal செய்கிறார்.

பெண்கள் உள ரீதியான மிரட்டல்களாலும், வசைச்சொற்களாலும் ஆண்களைத் அச்சுறுத்துவதை நாம் பல கதைகளில் கண்டிருக்கலாம். ஆனால், உடல்ரீதியான வன்முறையைச் செலுத்துவதை இந்தக் கதை அளவுக்கு மூர்க்கமாய்ச் சொன்ன ஆக்கம் என்று நான் வாசித்தவற்றுள் வேறு எதுவும் இல்லை.

குழந்தைகளின் பொருட்டு தியாகு சாந்தியின் தாக்குதல்களைத் தாங்கிக்கொள்கிறான். கதையை இன்னும் கூர்ந்து கவனித்தால், சாந்தியின் பொருட்டுமே அவன் சாந்தியைச் சகித்துக்கொள்கிறான்.

இன்னொரு தளத்தில், இது நுகர்வு கலாச்சாரம் நம் வாழ்க்கையில் ஏற்படுத்தியுள்ள மாபெரும் சீர்கேட்டைச் சித்தரிக்கிற கதையாகவும் உள்ளது. அண்மையில் வந்த சுனில் கிருஷ்ணனின் பேசும் பூனை கதையை இதனோடு ஒப்பிடலாம்.

உண்மையில் இக்கதையைப் படிக்கிறவரை இப்பகுதியின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இக்குறள் என்னுள் இவ்வளவு விரிந்திருக்கவில்லை.

மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.

இல்வாழ்க்கைக்குத் தேவையான மாண்புகளை உடையவளாக, கணவனின் வருவாய்க்கு ஏற்ற வாழ்க்கை நடத்துகிறவளே சரியான துணையாக இருப்பாள் என்கிறார் வள்ளுவர். கதையை முடித்தபின் இக்குறள் பெரும் விரிவை ஏற்படுத்தியது.

காண்கிற பொருள்ளையெல்லாம் கட்டாயம் வாங்கியாக வேண்டும் என்பது ஒரு நோயாக இன்று உருவெடுத்துவிட்டது. கடனட்டைகள் எந்த அளவுக்கு நம்மை complusive buying disorder நோக்கித் தள்ளுகின்றன என்பதை இக்கதை விவரிக்கிறது. பல அதிர்ச்சியான தருணங்கள் இக்கதையில் உள்ளன.

இதன் இணைக்கதையும் அதிர்ச்சி அளிக்கக்கூடிய ஒரு புள்ளியிலிருந்து தொடங்கினாலும், போகப்போக வெம்மையைத் தணிக்கும் தென்றாய் வருடத்தொடங்குகிறது.

தொடிற்சுடின் அல்லது காமநோய் போல
விடிற்சுடல் ஆற்றுமோ தீ.

என்று காமத்துப்பாலில் ஒரு குறளுண்டு. தீ தொட்டால்தான் சுடும். காம நோய் போல் விட்டாலும் சுடுமா என்கிறார் வள்ளுவர். இக்கதையின் பிரச்சனையே, ராஜம்பாய்க்கு தொட்டாலும் தீ சுடவில்லை என்பதுதான். எத்தனை தொலைவும், காலமும் கடந்தபின்னும் காமநோய் சுடுவதாக இருக்கிறது.

இரண்டாவது பகுதியில் வருகிற இரு கதைகளும் ஓரளவு பிணைக்கப்பட்ட இணை கதைகளாகவே உள்ளன.

ஆரம்பத்தில், ஓர் உக்கிர நாடகத்தில் இருந்து அபத்த நாடகத்துக்குள் நுழைந்த விட்ட உணர்வு ஏற்பட்டது. கட்டியவளைத் தெருவில் விட்டுவிட்டு அவளறியாமல் உணவகத்தில் ஒரு கட்டுகட்டுகிறான் கணவன். பொறுக்கமாட்டாத புது மனைவி பிரிந்து செல்கிறாள். இப்படியொரு அபத்த நிகழ்வோடு தொடங்கும் கதை பின்னர் பல்வேறு உளவியல் சிக்கல்கள் உறவுச் சிக்கல்கள் என்று விரிந்து செல்கிறது.

நாவலின் மூன்றாம் பாகத்தில் வரும் விநோதினி, இளம் வயதில் கணவனை இழந்துவிட்டு மறுமணம் செய்ய மறுப்பவளாக இருக்கிறாள். ஆனால், சுற்றத்தார் வற்புறுத்துகின்றனர். மறுமணம் ஓரளவு பரவலாகிவிட்ட இந்தக் காலகட்டத்திலும், இறந்துவிட்ட கணவன் குடும்பத்தின் சொத்து அவளுக்குச் சென்றடைவதில் தயக்கங்கள் இருக்கவே செய்கின்றன. ஆனால், இந்நாவலில் அவள் மாமனார் சொல்கிறார்:
“என் பெரிய மருமகளுக்கும் பேரன் பேத்திக்கும்னு நான் குடுத்துட்டேன். நீங்க சொல்ற மாதிரி அவ நாளைக்கு மனசு மாறி இன்னொருத்தரைக் கட்டிட்டாலும் என் முடிவுல எந்த மாத்தமும் இருக்காது. ஆமா. நல்லாக் கேட்டுக்குங்க.”

இது இந்நாவலின் உச்சமான தருணங்களில் ஒன்றாக நான் கருதுகிறேன்.

சில உடலுறவுக் காட்சிகளையும் வன்புணர்வுக் காட்சியையும் இத்தனை அப்பட்டமாகச் சொல்ல வேண்டுமா என்று, என்னுடைய இயல்புக்கு, எனக்கொரு விலகல் ஏற்படத்தான் செய்தது. ஆனால், கோபாலகிருஷ்ணன் ஒரு காட்சியையோ உணர்வையோ விவரிக்க முடிவுசெய்துவிட்டால், கட்டுக்கடங்கா ஆறாகத்தான் பாய்கிறார்.

உதாரணமாக, அவரது முனிமேடு தொகுப்பில் உள்ள பிற்பகல் விளையும் என்ற சிறுகதையில், ஒரு சிறுவன் தேங்காய் பன் மீது பிரியமாக இருக்கிறான். அந்தத் தேங்காய் பன் காட்சியை அத்தனைத் தித்திப்பாய் விவரிக்கிறார்:

‘தேங்காய் பன்னை சாப்பிடும்போது பலரும் பக்குவம் தெரியாமல் சாப்பிடுவதைப் பார்க்கும்போது சிரிப்புதான் வரும். முக்கோண வடிவில் இருக்கும் தேங்காய் பன்னின் கூரிய முனையை முதலில் பார்க்கும்போது வாகாய் பிளந்துகொண்டு விரல்களால் விண்டெடுக்க வசதியாகத்தான் தெரியும். பிளவினூடாக தேங்காயும் சர்க்கரையும் கலந்து மின்னும் பரப்பு பரவசப்படுத்தும். ஆனாலும் நுனியிலிருந்து பன்னை பிய்த்து சாப்பிடக்கூடாது. தேங்காயும் சர்க்கரையும் இதமான சூட்டிலிருக்கும் பன்னும் சேர்ந்து வெகு ருசியாகத்தான் இருக்கும். ஆனால் இந்த ருசிக்கு மயங்கிவிட்டால் அதோ கதிதான். பிறகு கடைசியில் முக்கோணத்தின் அடிப்பக்கம் வரும்போதுதான் தெரியும் சேதி. பன்னின் தடிச்ச அடிப்பக்கத்தை வாயில் போட்டு மெல்லும்போது தேங்காயில்லாமல் சவசவப்பு மட்டும்தான் மிஞ்சும்.

சண்முகம் முதலில் வெறும் பன்னை மட்டும்தான் தின்பான். இதமான சூட்டில் வெறும் பன்கூட லேசான தித்திப்புடன் சுவையாகவே இருக்கும். இனிப்புக்கு நாக்கு மெல்லப்பழகுவதுபோல சுவை கூடும். இரண்டு அல்லது மூன்றாவது விள்ளலில் தேங்காயும் சர்க்கரையும் வாய்க்கத்தொடங்கிவிடும். இப்போது வெறும் பன்னின் சவசவப்பு காணாமல் போய் தேங்காய் பன்னின் அசலான சுவை தென்பட்டிருக்கும்.’

ஒரு தேங்காய் பன்னைக்கூட இத்தனை ரசனையுடன் விவரிப்பவர் காமத்தைப் பட்டும்படாமல் சொல்லிவிடவா முடியும்?

ஒரு இளம் பெண் எழுத்தாளர் ஸ்காட் பிட்ஜெரால்டுக்கு தனது கதையை அனுப்பி அவரது கருத்தைக் கேட்டிருந்தார். அதற்கு அவர் இப்படி மறுமொழி அனுப்பியிருந்தார்.

Dear Frances:

I’ve read the story carefully and, Frances, I’m afraid the price for doing professional work is a good deal higher than you are prepared to pay at present. You’ve got to sell your heart, your strongest reactions, not the little minor things that only touch you lightly, the little experiences that you might tell at dinner. This is especially true when you begin to write, when you have not yet developed the tricks of interesting people on paper, when you have none of the technique which it takes time to learn. When, in short, you have only your emotions to sell.

This is the experience of all writers. It was necessary for Dickens to put into Oliver Twist the child’s passionate resentment at being abused and starved that had haunted his whole childhood. Ernest Hemingway’s first stories “In Our Time” went right down to the bottom of all that he had ever felt and known. In “This Side of Paradise” I wrote about a love affair that was still bleeding as fresh as the skin wound on a haemophile.

[….]

பின் குறிப்பாக அவர் சொன்னதும் முக்கியமானது:

P.S. I might say that the writing is smooth and agreeable and some of the pages very apt and charming. You have talent—which is the equivalent of a soldier having the right physical qualifications for entering West Point.

‘ஒரு எழுத்தாளன் தன் இதயத்தைத் திறந்து, தன் ஆழமான உணர்வுகளைக் கொட்டத் தயாராக இருக்கவேண்டும். எழுதுவதற்கான விலையை நீ கொடுக்கத்தயாராக இல்லை,’ என்கிறார்.

கோபாலகிருஷ்ணன் அந்த விலையையும் அதற்கு மேலும் தருவதற்குத் தயாராக இருப்பதாலேயே அவரால் இப்படியொரு படைப்பைப் படைக்க முடிகிறது. கசப்பும் வேதனையும் கருணையும் எல்லாம் உதிரமும் சதையுமாய்க் கலந்தே வருகின்றன. நாவலின் மங்கையின் சொற்களில்,

“அந்த ஒரு ராத்திரியில் எல்லாவற்றையும் நான் பார்த்துவிட்டேன் ஆயுள் மொத்தத்திலேயும் அனுபவிக்க வேண்டிய கசப்பையும் வேதனையையும் ஒரே ராத்திரியில் அனுபவித்துவிட்டேன். வாழ்க்கையின் இரண்டு பக்கங்களையும் பார்த்துவிட்டேன். வக்கிரமும் குரூரமுமான ஒன்று, பயங்கரமானது. நினைத்தாலே வலிக்கும். ஆனால் அதே ராத்திரியில்தான் அந்த இருவரையும் பார்த்தேன். இப்போது நான் உயிரோடு இருப்பது அவர்களின் கருணையில்தான். அந்தப் பெண்ணின் கண்ணீரும் அவளது அம்மாவின் ஆக்ரோஷமும் மாறி மாறி என்னை அலைகழிக்கும். அடியோடு நினைவிலிருந்து அழிக்க முயன்றும் மறக்கவே முடியாத ராத்திரி. அதுதான் எனக்கு இத்தனை பக்குவத்தையும் துணிச்சலையும் தந்திருக்கிறது.”


இன்றும் வருவது கொல்லோ – நட் ஹாம்சனின் பசி

ஜூன் 11, 2018

இணையம், கிண்டில், நண்பர் தியாகுவின் நூலகம், தங்கை உறுப்பினராக உள்ள ஜஸ்புக்ஸ் நூலகம், நான் சளைக்காமல் வாங்கும் புத்தகங்கள் என்று படிப்பதற்கான நூல்களுக்குப் பஞ்சமே இல்லை எனும் போதும், இன்னும் நான் அரசு நூலகத்தை விடவில்லை. நாங்கள் மூன்று பேரும் உறுப்பினர்களாக உள்ளதால், கைநிறைய அள்ளிவரமுடிகிறது. பலரும் குறையாகக் கருதுவதுதான் எனக்கு அரசு நூலகங்களுக்குச் செல்வதில் இருக்கக்கூடிய அணுகூலமாகத் தெரிகிறது – எதையும் குறிப்பாகத் தேடாமல், எந்தத் திட்டமும் எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் புத்தகங்களை அடைய முடிவது. இதுவரை கேள்விப்பட்டிராத, யாரும் பரிந்துரைத்திருக்காத புத்தங்களைக்கூட அவ்வப்போது படித்துப்பார்க்கத் தோன்றும். பல சமயங்களில் புத்தகங்கள்தாம் நம்மைக் கண்டடைகின்றன.

அப்படி என்னைக் கண்டடைந்த ஒரு புத்தகம் நட் ஹாம்சனின் பசி. க.நா.சு. மொழிபெயர்ப்பு என்ற ஒரே காரணத்துக்காகத்தான் எடுத்தேன். மூல எழுத்தாளரைப்பற்றிக் கேள்விப்பட்டதில்லை. புத்தகத்திலும் எந்தக் குறிப்பும் இல்லை. எந்த நாடு என்று தெரியவில்லை. பெயர்கூட ஆங்கிலத்தில் சரியாகத் தரப்படவில்லை. புரட்டிப் பார்த்தபோது முதல் பக்கத்தின் சில வரிகளே என்னை உள்ளே இழுத்துவிட்டன. படித்துக்கொண்டிருந்த வேறு பல புத்தகங்களை எல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு இதைப் படிக்கத்தொடங்கினேன். பல பக்கங்கள் கடந்தபிறகுதான் கதை நடக்குமிடமான கிறிஸ்டியானியா நார்வே நாட்டில் உள்ளது என்று புரிந்தது. பாதிப் புத்தகம் முடிந்தபிறகுதான் இணையத்தில் தேடிப்பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அது என் அறியாமைக்குக் கண்ணாடி பிடித்தது. இந்த நாவல் (Hunger/Sult) 1890ல் வெளிவந்திருக்கிறது. உடன் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எழுதிய நார்வே எழுத்தாளர் Knut Hamsun, 1920ல் நோபல் பரிசு வாங்கியிருக்கிறார். ஓஸ்லோ நகரத்தின் முந்தைய பெயர்தான் கிறிஸ்டியானியா (‘அங்கிருந்து வசித்தவன் எவனும் அதைப்பற்றிய நினைவுகளிலிருந்து என்றும் தப்ப முடியாது’ என்பது இப்புத்தகத்தின் தொடக்க பத்தியில் வருகிறது. க.நா.சு ஜார்ஜ் எகெர்டனின் ஆங்கிலப் பதிப்பைப் பின்பற்றியிருப்பார் என்று நினைக்கிறேன். பிந்தைய Robert Bly மொழிபெயர்ப்பில் இவ்வரி இன்னும் சிறப்பாக வந்துள்ளது: that strange city no one escapes from until it has left its mark on him. . .).

நட் ஹாம்சனை நவீன இலக்கியத்தின் தந்தை என்று ஐசக் பாஷ்விஸ் சிங்கர் கூறுகிறார். “The whole modern school of fiction in the twentieth century stems from Hamsun, just as Russian literature in the nineteenth century ‘came out of Gogol’s greatcoat. They were completely Hamsun’s disciples: Thomas Mann and Arthur Schnitzler (…) and even such American writers as Fitzgerald and Hemingway,” என்கிறார். ஹாம்சன் நனவோடை எழுத்துமுறையின் முன்னோடிகளில் முக்கியமானவராகக் கருதப்படுகிறார். நார்வேவின் தஸ்தயெவ்ஸ்கி என்று அறியப்பட்டிருக்கிறார். இந்த நாவலின் நாயகனையும் குற்றமும் தண்டனையும் ரஸ்கோல்னிக்கோவையும் பலரும் ஒப்பிடுகின்றனர்; தனது நூலைவிட ரஸ்கோல்னிக்கோவிடம் அதிக ஆன்ம உணர்வெழுச்சிகளைக் கண்டுவிடமுடியாது என்று ஹாம்சனும் ஒரு கடிதத்தில் எழுதுகிறார். நாவலின் கூறுமுறை நிலவறைக் குறிப்புகளையும் நினைவுக்குக்கொண்டுவருகிறது.

35142960_10155555315598148_8873543016405532672_n

‘பசி’ நாவலின் கதைசொல்லி ஓர் இளம் எழுத்தாளன். எப்போதாவது, ஒருசில கதை கட்டுரைகள் சொற்ப ஊதியத்துக்குப் பதிப்பிக்கப்படுகின்றன. வேறு வேலை தேடும்போதெல்லாம் நிராகரிப்பைச் சந்திக்கிறான். விண்ணப்பக்கடிதத்தில் தேதி தவறாக எழுதியதால் ஒரு கடையில் கணக்கெழுதும் வேலைகூட கிடைக்காமல் போகிறது. உண்மையில் பசி தான் கதையின் நாயகன். 160 பக்கங்களுக்கு, வரிக்கு வரி பசி வியாபித்திருக்கிறது. பசி கதைநாயகனை விரட்டுகிறது; புரட்டி எடுக்கிறது; பைத்தியமாக்குகிறது; சிறப்பான கதை எழுதவைக்கிறது; உலகின் மிகச்சிறந்த படைப்பு அது என்று நம்பவைக்கிறது; அது பதிப்புக்கு ஏற்கப்பட்டபின், வேறு எதுவும் நல்லதாக எழுத முடியாமற் செய்கிறது; எழுதிய பக்கங்களைக் கிழத்தெறிய வைக்கிறது; காரணமில்லாமல் ஒரு பெண்ணை வம்புக்கிழுக்கவைக்கிறது; தேவையின்றிப் பொய் சொல்லவைக்கிறது; எதேச்சையாகக் கிடைக்கும் பணத்தை தானம் செய்யவைக்கிறது; தானம் கொடுத்துவிட்டுப் பின்னர் அதே பெண்ணிடமிருந்து மீண்டும் திருட வைக்கிறது; போட்டிருக்கும் சட்டைமுதல் கடைசிக் கோட்டின் பொத்தான்கள் வரை எல்லாவற்றையும் அடமானம் வைக்கச் செய்கிறது.

‘உடலில் பசி வயிற்றைத் திருகிற்று. ஒரு விநாடி ஓய்வு கிடைக்கவில்லை. எச்சிலை விழுங்கினேன் – அது உணவாகும் என்று நம்பினேன். பசியையாற்றும் என்று எண்ணினேன்,’ என்கிற வரி என்னை உலுக்கிப்போட்டது. எப்போதாவது கிடைக்கும் உணவையும் அதீத பசியால் வாந்தியெடுக்கிறான். தண்ணீர் கூட அவன் வயிற்றில் தங்குவதில்லை. வழியில் கிடைக்கும் மரத்துண்டுகளை, குப்பையில் கிடக்கும் ஆரஞ்சு தொப்பையை, தனது சட்டைப் பையை என்று அவன் எல்லாவற்றையும் சுவைத்துப்பார்க்கிறான். தனது கைவிரலைக்கூட உண்ணலாமா என்கிற எண்ணம் அவனை ஆட்கொள்கிறது. ‘கண்கள் திறந்திருக்க நான் செத்துக் கொண்டிருந்தேன். கை விரலை வாயில் போட்டுச் சப்பினேன். உடனே ஒரு பைத்தியக்கார யோசனை தோன்றிற்று. கடித்துப் பார்த்தால்? சிறிதும் யோசிக்கத் தயங்காமல், கண்களை மூடிக்கொண்டு கடித்தேன்.’

இத்தனை பசியிலும் தன்மான உணர்வும் வறட்டுப் பெருமையும் அவனைவிட்டுப் பெரும்பாலும் விலகுவதில்லை. பசியின் உச்சங்களில் அவையும் அவ்வப்போது சமரசத்துக்கு உள்ளாகின்றன. நண்பன் அவனுக்கு இரவலாகத் தந்திருந்த கம்பளியைப் பல நாட்கள் அடமானம் வைக்காமல் பிடிவாதமாக இருக்கிறான். இறுதியில் அடமானம் வைக்கச்செல்லும்போது, அடகுக்கடைக்காரன் மறுத்துவிடுகிறான். ஒருவகையில் அது அவனுக்குத் திருப்தியாக இருக்கிறது. அவச்செயலிலிருந்து தப்பிவிட்டதாக மகிழ்கிறான்.

அவன் துரத்திச்சென்று வம்புக்கிழுத்த பெண் பின்னர் அவனைச் சந்திக்கும் போது அவன்பால் ஈர்க்கப்படுகிறாள். குடி போதையில்தான் அவன் அவ்வாறு நடந்துகொண்டான் என்று நம்புகிறாள். அவனும் முதலில் அதை மறுக்காமல் இருக்கிறான். பிறகு தன்னைப்பற்றியும் தனது ஏழ்மையைப் பற்றியும் கூறுகிறான். தனது பைத்தியகாரத்தனமான சில செயல்களைப்பற்றியும் அவளோடு பகிர்ந்துகொள்கிறான்.

“அன்றுகூட நீ குடித்திருக்கவில்லை. பைத்தியம் போல.’
“பசி, பைத்தியம் ஒன்றுமில்லை. நான் அப்போதுதான் சாப்பிட்டிருந்தேன்,” என்று அப்போதும் அவனது வறட்டு கௌரவத்தை விட்டுத்தராமல் பேசுகிறான்.

சிறிது நேரத்திலேயே உரையாடலுக்கும் கலவிக்குமிடையில் அவர்களது உறவு பிளவுபடவும், ‘காலிப்பயல் அல்ல என்பது அவளைச் சோர்வடையச் செய்ததா? நான் வெறும் ஏழை என்பது பிடிக்கவில்லையா?’ என்று நினைக்கிறான்.

அவளைவிட்டு விலகி வெளியேறும் போது: ’நான் வாசற்படியை விட்டு நகராமல் நின்று பிதற்றிக் கொண்டேயிருந்தேன். பைத்தியமாக இருக்க வேண்டுமா உணர்ச்சி மிகுந்து காணப்படுவதற்கு? அதற்கு அவசியமே இல்லையே! அறிவுள்ள ஏழை கவனிப்பவற்றை பணக்காரன் அறிவுள்ளவன் கவனிப்பதில்லை. பைத்தியகாரன், ஏழை இருவருமே ஒன்றுதான். நெருப்புச் சுட்ட வடுப் போல என் உடலிலும் உள்ளத்திலும் ஆன்மாவிலும் ஏழ்மை வடுக்கள் இருந்தன.’

காஃப்காவின் பசிக் கலைஞன்(The Hunger Artist) என்ற சிறுகதை இந்நாவலோடு இணைத்துப்பார்க்கப்படுகிறது. பசிக் கலைஞனில் பசி குறியீட்டுத்தன்மையுடன் வருகிறது. தஸ்தயெவ்ஸ்கியின் முதலை (The Crocodile) கதையில், முதலையால் விழுங்கப்பட்டு அதன் வயிற்றுக்குள்ளிருந்து பேசும் மனிதனைக் காண மக்கள் கட்டணம் கட்டி வருவார்கள். அது போல, பசிக்கலைஞன் பட்டினிகிடப்பதை நிகழ்த்துகலையாகச் செய்கிற ஒருவனைப் பற்றிய கதை; கூண்டுக்குள் உணவின்றி பல நாட்கள் இருக்கும் அவனை மக்கள் கட்டணம் கட்டி வேடிக்கை பார்க்கிறார்கள். பிறகு அதில் ஆர்வம் இழந்துவிடுகின்றனர். சர்க்கஸில் சேர்கிறான். அங்கும் கூட்டம் விலங்குகளைப் பார்க்க நகர்ந்துவிடுகிறது. கவனிப்பாரற்று பசிக்கலைஞன் இறந்துபோகிறான். பசியோடு இருப்பதைத்தவிர அவனுக்கு வேறு எதுவும் தெரியாது, அல்லது அவன் விரும்புகிற உணவு அவனுக்குக் கிடைப்பதில்லை என்கிற வாதங்களையும் வெவ்வேறு தருணங்களில் முன்வைக்கிறான். ஆனால், பசி நாவலின் நாயகன் பசியின் ருசியில் அவ்வப்போது திளைத்தாலும், பெரும்பாலும் பசியால் துடிக்கிறான். அவன் பசியைக் கலையாகக் கொண்டவன் என்று கருதமுடியுமா, தெரியவில்லை. அவன் பசியால் வாடுகிற கலைஞன். பசியால் தன்னையே வருத்திக்கொள்கிற கலைஞன். பசியைத் தவிர்ப்பதற்கான சாத்தியங்கள் அவனுக்கு இருக்கின்றன. ஆனால் வாய்ப்புகள் கிடைப்பதில்லை, அல்லது அவன் சரியாகப் பயன்படுத்திக்கொள்வதில்லை.

இந்நாவலில் பசி ஒரு குறியீடாக இல்லை. அபத்தமாக இல்லை. அதன் பேரியல் பொருளாதார, அரசியல் காரணிகளுக்குள் ஹாம்சன் செல்வதில்லை. முகத்தில் அறைகிறமாதிரி இயல்பாக, அப்பட்டமாக உள்ளது. இத்தனை இருண்ட, கனமான, சம்பவங்களும் பாத்திரங்களும் அதிகமற்ற ஒரு கதை ஒரு சில பக்கங்களில் விரக்தியை ஏற்படுத்திச் சலிப்பூட்டக்கூடும். இதில் அவ்வாறு நிகழாமற் தடுப்பது கசப்பும் அவலமும் கலந்த அங்கதம்.

ஹப்பால்டி என்கிற ஒரு பொய்யான பெயரையும் நபரையும் இவன் உருவாக்க, ‘ஆமாம், ஹப்பால்டி’ என்று தலையை ஆட்டிய கிழவனுடனான நீண்ட உரையாடல் இதற்கு எடுத்துக்காட்டு. ஹப்பால்டியின் அண்ணன், மனைவி, மகள் யாலஜாலி, அவர்களது தொழில், அழகு என்று விரிந்துகொண்டே செல்கிறது. ‘நான் சொன்னதை பூராவும் நம்பிவிட்டான். அதுபற்றி அவன் ஆச்சரியப்படவும் இல்லை. இது பற்றி எனக்குக் கொஞ்சம் ஏமாற்றம்தான். நான் சொல்வதைக்கண்டு அவன் ஆச்சரியப்பட வேண்டும் என்று நினைத்தேன் நான்,’ என்று அடுக்கிக்கொண்டே போகிறான். கடைசியில் சலித்துப்போய், ‘ஏனையா கிழவரே! நான் இங்கே உட்கார்ந்து கொண்டு பொய்யாகப் புளுகிக் கொண்டிருக்கிறேன் என்று எண்ணுகிறாயா நீ? ஹப்பாலடி என்கிற பெயருடைய மனிதன் ஒருவன் இல்லவேயில்லை என்று எண்ணுகிறாயா நீ?’ என்று கோபித்துக்கொள்கிறான்.

கிறிஸ்டியானியா நகரில், தங்குமிடமற்றவர்களுக்கு, காவல்நிலையத்தில் இரவு தங்க அறை ஒதுக்குகிறார்கள். அவனும் ஓர் இரவு அங்கு தங்குகிறான். பத்திரிக்கையாளன், வீட்டு சாவி தொலைந்துவிட்டது என்று கதைக்கிறான். அதனாலேயே, காலையில் கிளம்புகையில், எல்லாருக்கும் உணவுச் சீட்டுகள் தரப்படும்போது, இவனுக்குத் தேவைப்படாது என்று தராமல் விட்டுவிடுகிறார்கள். கௌரவத்தை விடாமல், பசியோடு திரும்புகிறான். ‘ஒரு சீட்டு, எனக்கும் ஒரு சீட்டு வேண்டும், மூன்று நீண்ட இரவுகளும் பகல்களும் நான் ஒன்றுமே புசிக்கவில்லையே, ஒரு துண்டு ரொட்டி, எனக்கு யாரும் சீட்டுத் தரவில்லை, எனக்கும் கேட்கத் தைரியம் வரவில்லை. […] லக்‌ஷப் பிரபு மாதிரி கைகளை என் கோட்டுப் பைக்குள் போட்டுக்கொண்டு தலையை நிமிர்த்திக் கொண்டு ஜோராக வெளியேறினேன்.’

அங்கு தனியறையில் தங்கியிருந்த அந்த இரவிலும், சகிக்கமுடியாப் பசியும் ஆழ்ந்த இருளும் அவனைப் போதையேறிய உன்மத்த நிலைக்குத் தள்ளுகின்றன.

‘என் கற்பனையில் நான் ஒரு புதுவார்த்தையைக் கண்டுபிடித்துவிட்டேன். என் படுக்கையில் எழுந்து சொன்னேன். மொழியிலே இல்லாத வார்த்தை அது. நானாகக் கண்டுபிடித்தது. ‘குபோவா’ அதிலே அட்சரங்கள் இருக்கின்றன. கடவுள் பெயரால் சொல்லுகிறேன் – அது ஒரு புது வார்த்தைதான். ‘குபோவா’ மிகவும் ஆழ்ந்த அர்த்தம் பொதிந்த வார்த்தை இது.

கண்களைத் திறந்து கொண்டு உட்கார்ந்திருந்த என் கற்பனையைக் கண்டு நானே ஆனந்தமடைகிறேன் – சிரிக்கிறேன்.என் கற்பனையை ரகசியமாக வைத்துக் கொள்ளவேண்டும் – யாராவது திருடி விடுவார்கள். ரகசியமாக எனக்கு நானே பேசிக் கொள்கிறேன். பசி இப்போது இன்ப போதையைத் தந்துவிட்டது. பசிப் பரவசம் இது. காலியாகவும் வலியில்லாமலும் இருக்கிறேன் நான்.’

தான் கண்டுபிடித்த அச்சொல்லுக்கு ஒவ்வொரு அர்த்தமாகக் கொடுத்துப்பார்த்து ஒதுக்குகிறான். ‘அவ்வார்த்தை மனதை மீறியதொன்றைக் குறிக்க வேண்டும் – ஒரு ஆன்மீக அனுபவம், உணர்ச்சி, ஒரு நிலையைக் குறிக்க வேண்டும். அதைக் கண்டுபிடிக்க முடியவில்லையே என்னால். ஆன்மீகத்தைப் பற்றிச் சிந்திக்கிறேன். என் மன அரங்கிலே யாரோ எப்படியோ குறுக்கிட்டு ஏதோ தொல்லை தருவது போல இருக்கிறது.’

பாரதி ‘ஓம்’க்கு இணையான சொல்லைத் தமிழில் உருவாக்க முனைந்தது நினைவுக்கு வந்தது. அவனுக்கும் பசி பழக்கப்பட்ட கலைதானே.

——-

பி.கு.:
தனது முதுமையில், நட் ஹாம்சன் நாசிச ஆதரவாளராக இருந்திருக்கிறார். யூத வெறுப்பாளர் என்று சொல்லமுடியாது; ஆங்கிலேயர்கள் மீதான காழ்ப்பு அதற்குப் பெரும் காரணமாக இருந்திருக்கலாம். நார்வேயை ஜெர்மனி கைப்பற்றியபோது வரவேற்றிருக்கிறார். தனது நோபல் பரிசை கோயபல்ஸுக்கு அனுப்பியிருக்கிறார். ஹிட்லரைச் சந்தித்து உரையாடியிருக்கிறார். ஆனால், ஹிட்லருடனான சந்திப்பு சுவாரசியமானது. அப்போது ஹாம்சனுக்கு 84 வயது. சரியாகக் காதுகேட்காது. ஹிட்லர் இலக்கியம் பற்றியும் மேதைமை குறித்தும் பேச நினைக்க, ஹாம்சன் அரசியல் பற்றியே பேசியிருக்கிறார். நார்வே நாட்டிலிருந்த ஜெர்மானியப் பிரதினிதியை விலக்க வேண்டும் என்று ஹாம்சன் ஹிட்லருடன் காரசாரமாக விவாதித்திருக்கிறார். ஹிட்லர் பேசும்போது அடிக்கடி குறுக்கிட்டு மறுத்துப்பேசியிருக்கிறார். இடையிடையே அழுதிருக்கிறார். ‘ஒரு சுவரோடு உரையாடிக்கொண்டிருக்கிறோம்,’ என்று மொழிபெயர்ப்பாளரிடம் கூறியிருக்கிறார். நல்ல வேளையாக, மொழிபெயர்ப்பாளர் அதையும் வேறு பல கூற்றுகளையும் மொழிபெயர்க்கவில்லை. ஹிட்லர், இறுதியாக, ‘வாயை மூடுங்கள்! உங்களுக்கு எதுவும் புரியவில்லை,’ என்று கோபமாகச் சென்றுவிட்டார். ‘குட் பை’ சொல்லி தனிப்பட்ட முறையில் ஹிட்லர் விடைபெறவில்லை என்று ஹாம்சன் அழுதிருக்கிறார். ஹிட்லர் தனது உதவியாளர்களிடம், ‘இதுமாதிரியான நபரை இனி ஒரு போதும் நான் சந்திக்க விரும்பவில்லை,’ என்று சினந்து கூவியிருக்கிறார்.

நாசிகளிடமிருந்து பலரை மீட்பதற்கும் ஹாம்சன் உதவியிருக்கிறார்.

உலகப்போர் முடிந்த பின்னர், ஹாம்சன் நாசிகளுடனான ஒத்துழைப்புக்காகக் கைதுசெய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டிருக்கிறார். முதுமையாலும் அறியாமையாலும் அவ்வாறு நடந்திருக்கிறார் என்று தீர்ப்பாகி விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்.

படைப்பாளி யார் என்று தெரியாமல் படைப்பை ரசித்தாகிவிட்டது. யாரென்று அறிந்தபின் ரசித்ததைத் திரும்பப் பெறமுடியுமா என்ன? இனியும் அவரது நூல்களைப் படிக்காமலிருக்கப் போவதில்லை. ஆனால் ஹிட்லர் நினைவு வராமல் படிக்கமுடியுமா என்பது சந்தேகமே. பசி நாவலை எழுதிய இளம் ஹாம்சனும், எழுத்துலக வாழ்க்கை முடிந்து நாசி ஆதரவாளரான முதிய ஹாம்சனும் ஒரே நபரெனக் கொள்ளமுடியுமா? இலக்கிய ரீதியாக, படைப்பு வேறு படைப்பாளி வேறு என்ற பாகுபாட்டினை அமைத்துக்கொண்டாலும்கூட, படைப்புக்கும் படைப்பாளிக்கும் உள்ள தொடர்புகள் குறித்த அறம்சார்ந்த சிக்கலான கேள்விகள் எழ ஹாம்சன் போன்றவர்கள் காரணமாகிறார்கள்.

நார்வேயில் மறுபடியும் ஹாம்சனை எச்சரிக்கையுடன் கொண்டாடத் தொடங்கியிருக்கிறார்கள். ஹாம்சனின் நூல்களின் புதிய மொழிபெயர்ப்புகள் வந்துள்ளன. கார்டியன் இதழின் புத்தக வலைப்பூவில், இப்படி எழுதுகிறார்கள்:
“The novel is what it is today in large part because of what Knut Hamsun wrought, which is a fact that no amount of revisionist history can wipe away. It’s time we accept this and try to figure some way to bring the man’s books back into the canon, while leaving his horrid politics out in the cold where they belong.”

நவீன இலக்கியத்தின் இரு முக்கியமான முன்னோடிகள் – மற்றவர் எஸ்ரா பவுண்ட் – பாசிச ஆதரவாளர்களாக இருந்திருக்கிறார்கள். ஹிம்.


கே.என்.செந்திலின் அரூப நெருப்பு

மே 31, 2016

கே.என்.செந்திலை கோவையில் அடிக்கடிப் பல இலக்கிய நிகழ்வுகளின் போது சந்திப்பது உண்டு. இனிமையாகப் பழுகுவார், கபாடபுரம் போன்ற ஒரு நேர்த்தியான இணையச் சிற்றிதழை நடத்தச் சிரத்தையுடன் முயன்றுவருகிறார் என்பதில் எனக்கு அவர் மீது ஒரு மதிப்பு உண்டு. ஆனால் அவரது கதைகளை நான் படித்திருக்கவில்லை. ஒரு எழுத்தாளரை அவரது படைப்புகளைப் படிக்காமல் சந்திப்பது என்பது எப்போதும் நெருடலை ஏற்படுத்தக் கூடியது. அவரோடு நெருங்குவதற்குத் தடையாக இருப்பது. அந்தக் குறை, செந்திலைச் சந்திக்கும்போது இனி இருக்காது.

அவரது ‘அரூப நெருப்பு’ சிறுகதைத் தொகுப்பினைப் படித்தேன். செந்திலே முன்னுரையில் சொல்வது போல் குறுநாவல் அம்சம் மிகுதியாகக் கொண்ட கதைகள். (இத்தகைய வகைமைகள் என் வாசிப்பு அனுபவத்திற்கு எப்போதும் தடையாக இருந்ததில்லை.) அதிகம் பேசப்படாத மனிதர்களின் வாழ்க்கையைப் பேசுபவை. நேரடியான அனுபவங்கள் சார்ந்து எழுதுகிறாரா, அல்லது ஒரு சிறு பொறியிலிருந்து கிளம்பிப் பெரும்பாலும் தன் படைப்பாற்றலால் அவர்களது யதார்த்தத்தைக் கட்டமைக்கிறாரா என்பதை எளிதில் ஊகித்துவிடமுடியாது; ஆனால், அவற்றில் ஒரு நம்பகத்தன்மை இருக்கிறது. உதாரணமாக, பிணக்கிடங்கில் வேலை செய்யும் செய்யும் மனிதனையும் அவன் மனைவியையும் அவரவர் கோணங்களில் அணுகி, அவர்களது எதிர்பார்ப்புகளையும் ஏமாற்றங்களையும் எளிதில் நம்முடையவையாக்கிவிடுகிறார். செந்திலின் கதைகளில் உரையாடல்கள் மிகக் குறைவாக இருக்கின்றன. அவ்வப்போது வரும் உரையாடல்களும் மிகவும் காட்டமாக அமைந்துவிடுகின்றன; வசைச்சொற்கள் இயல்பாக நிகழாமல், திணிக்கப்பட்டவையோ என்பது மட்டும் உறுத்தியது. உத்திகள், வடிவம் என்பதையெல்லாம் மீறிச் சொல்லப்படாத கதையைச் சொல்லும் எத்தனிப்பும், கதை மாந்தர்களின் வாழ்க்கைக்குள் ஆழமாகப் பயணிக்கும் முயற்சியுமே மேலோங்கித் தெரிந்தன. அதனாலேயே இந்தக் கதைகள் அனைத்தையும், எனது தற்போதைய இயல்புக்கு மாறாக, தொடர்ச்சியாக வாசித்துவிட முடிந்தது.

இளம் எழுத்தாளர்களின் படைப்புகளை மிகக் குறைவாகவே படித்திருக்கிறேன். செந்திலை அடையாளம் கண்டுகொள்ளமுடிந்தது மகிழ்ச்சி தருகிறது. தொடர்ந்து வாசிக்கவேண்டும்.


இரா. முருகவேளின் முகிலினி – நதியின் வழியில் ஒரு சமூகப் பயணம்

மே 30, 2016

நாவல் அனுபவம் என்கிறார்கள். முகிலினி எனக்குப் பல முதல் அனுபவங்களை அளித்த ஒரு நாவல். முகிலினியின் புத்தக ஆக்கத்தில் (அறிந்தும் அறியாமலும்) மிகச்சிறு பங்காற்றும் வாய்ப்பு கிடைத்தது பெருமையாக இருந்தது. முன்னுரையில் என்னையும் என் மனைவியையும் ஆசிரியர் குறிப்பிட்டிருக்கிறார் என்பது மிகவும் நெகிழ்ச்சியாகவும், பெரும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. தியாகு நூலகத்து நண்பர்களும், எங்கள் கிராமத்தில் நாங்கள் நடத்தும் பயிலகத்தின் மாணவர்களும் சூழ, முகிலினி நூல் வெளியீட்டு விழா எங்கள் தோட்டத்தில் நடந்தது விழாக்காலக் களிப்பினை அளித்தது. இங்கேயே பிறந்து வளர்ந்தும், நானறிந்திராத கோயமுத்தூரை இந்நாவல் எனக்கு அறிமுகம் செய்தது வெட்கத்தையும் வியப்பையும் ஏற்படுத்தியது.

கோவை தியாகு நூலகத்தில் அறிமுகமாகி, மிளிர் கல் மூலமாக அறிந்து, ஒரு சில சந்திப்புகளில் மிக நெருக்கமான நண்பராக இரா.முருவேளை உணர்ந்து கொண்டேன். நூலகத்தில் சனிக்கிழமை சங்கமங்களின் போதும், விஷ்ணுபுரம் விழாவின் போதும் சுற்றிலும் உள்ள அனேகரும் அவருக்கு முரணான கருத்துகளை அடித்துப் பேசும்போது, புன்சிரிப்பு மாறாமல் அனைவரையும் தனியொருவராய் அவர் எதிர்கொண்ட விதம் அவர்மீது ஒரு தனியான மதிப்பை ஏற்படுத்தியிருந்தது. விவசாயப் பின்னணியில் ஒரு நாவல் எழுதிக்கொண்டிருப்பதாய்ச் சொன்னதும், எங்கள் தோட்டத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்தேன். அடுத்த வாரமே வந்திருந்தார். பல விஷயங்களைப் பற்றி நீண்ட நேரம் உரையாடினோம். மார்க்சியப் பார்வையில் அவரும் காந்தியப் பார்வையில் நானும் வெகுசில முரண்களையும் பெரும்பாலும் ஒத்த நோக்கும் கொண்டிருந்ததாகவே உணர்ந்தேன். இயற்கை வேளாண்மை என்பது ஆரோக்கியமான உணவு சார்ந்ததாகவோ, தொழில்நுட்பமாகவோ மட்டும் குறுகிவிடக்கூடாது, ஒரு சமூக மாற்றத்துக்கான அடித்தளமாக அமையவேண்டும் என்கிற புள்ளியில்தான் நாங்கள் சந்தித்தோம் என்று நினைக்கிறேன். இந்த அம்சத்தை மிக அழகாக நாவலின் பிற்பகுதியில் வளர்த்து எடுத்திருக்கிறார். ஒரு சிறு புள்ளி, ஒரு தேர்ந்த படைப்பாளியின் கைகளில் எப்படி ஒரு அழகான சிற்பமாக மாறுகிறது என்பதை நேரடியாக உணர முடிந்தது ஒரு பேரனுபவம் தான்.

DSC_2932
முகிலினி ‘உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட புனைவு’ என்று முருகவேள் முன்னுரையிலேயே இந்நாவலை அடையாளப்படுத்துகிறார். அதிலும் அண்மைக்கால வரலாற்றினை அடிப்படையாகக் கொண்ட ஒரு நூலில், புனைவு எது, உண்மை எது என்கிற குறுகுறுப்பு வாசகனுக்கு இருந்துகொண்டே இருக்கும். புனைவு மிகுந்தால் நம்பகத்தன்மை சிதைந்துவிடும்; வரலாறு மிகுந்தால் வாசிப்பின்பம் குறைந்துவிடக்கூடும். இரண்டும் நேர்ந்துவிடாமல், 487 பக்கங்கள் பெரும்பாலும் விறுவிறுப்பாக நகர்கின்றன.

ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்து பல இழைகள் நாவலில் வருகின்றன. டெக்கான் ரேயான் (விஸ்கோஸ்) ஆலையின் வரலாறு, கோவையின் தொழிற்சங்க வரலாறு, இந்தி எதிர்ப்பு, திராவிட இயக்கம், சாதியச் சிக்கல்கள், சுற்றுச்சூழல் போராட்டங்கள், நவீன இயற்கை விவசாயத்தின் தோற்றம், ஓர் இளம் வழக்குரைஞனின் வாழ்க்கை, பழங்குடியினர் பிரச்சனைகள் என்று பல்வேறு திரிகள்; இவையனைத்தும் கோவை மாவட்டத்தின் அறுபது ஆண்டுகால மாற்றத்தைச் சித்தரிப்பனவாகவும் அமைந்துவிடுகின்றன; ஒருவகையில் மனித வரலாற்றின் ஒரு காலகட்டத்தை விவரிப்பதாகவும் கொள்ளலாம்; நம் காலத்தின் முக்கியமான பொருளாதார, சுற்றுச்சூழல் சித்தாந்தங்களின் வளர்ச்சியையும் வீழ்ச்சியையும், மோதல்களையும் முரண்களையும் சமரசங்களையும் காட்சிப்படுத்தும் படைப்பாகவும் முகிலினியைப் பார்க்கலாம். எல்லாத் திரிகளையும் இணைத்து நொய்யல் நதியும், முகிலினி என்ற செல்லப்பெயருடன் பவானியும் நாவல் முழுவதும் ஓடுகின்றன.

கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டைக் கண்டுவிட்ட என் தாத்தா மரணமடைவதற்குச் சில மாதங்கள் முன்னால் நொய்யல் நதிபற்றி என்னோடு நீண்ட நேரம் பேசினார். நொய்யலிருந்து குறிச்சிக் குளத்திற்கு (அது ஒரு தாசியால் நிர்மாணிக்கப்பட்டதால், தாசி குளம் என்று அறியப்பட்டது என்றார்) நீர் பாயும் வழித்தடத்தில் தான் அவரது வயல் இருந்தது. நெல் பயிரிட்டிருக்கிறார். நொய்யல் நதிமீது 32 சிறு அணைகள்  இருந்ததாகச் சொன்னார். இருட்டில் கைக்குக் கிடைத்த குமுதத்தையோ விகடனையோ எழுத்துக்கூட்டி உரக்கப் படிப்பார். நிறையப் படித்துவிட்டதாய் நினைத்திருந்த எனக்கு நொய்யல் பற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை. என் தாத்தா பெயரும் ராஜு. நொய்யலை நேசித்த முகிலினியின் ராஜு என் தாத்தாவின் அடுத்த தலைமுறைதானெனினும், அவர்களது நொய்யல் அனுபவங்கள் ஓரளவு ஒரே மாதிரி இருந்திருக்கக்கூடும். என் அப்பாவும், தன் ஒரே பள்ளிச்சீருடையைத் துவைத்துக்கொண்டிருந்தபோது, நொய்யலின் ஓர் அணைமீதிருந்து விழுந்து காவிரியில் கலந்திருக்கவேண்டியவர்தான்; எப்படியோ பிழைத்துக்கொண்டார். முருகவேளின் நொய்யல் பழைய குடும்ப நினைவுகளைக் கிளறிக்கொண்டே இருந்தது.

இன்றைக்குப் பெரும் சிதைவை உருவாக்கும் பல தொழில்நுட்பங்களை, விடுதலைக்குப் பின்னான ஆரம்ப கட்டத்தில் அறிமுகப்படுத்தியவர்களை மிக எளிதில் கொடியவர்களாய், சதிகாரர்களாய்ச் சித்தரித்துவிடும் அபாயம் உள்ளது. பலரும் இன்று அதைச் செய்து கொண்டும் இருக்கிறோம். ஆனால், கஸ்தூரிசாமியையும், சௌந்திரராஜனையும், சௌதாமினியையும் முருகவேள் கருப்பு வெள்ளையில் காட்டிவிடவில்லை. தொழிற்சங்கப் போராளியான ஆரானைப் படைத்துள்ள அதே அக்கறையோடும் கவனத்தோடும் கரிசனத்தோடும்தான் முதலாளி வர்க்கத்தின் பிரதிநிதிகளான இவர்களையும் படைத்துள்ளார். இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதி வரையில், உலகம் முழுவதும் நவீனத் தொழில்நுட்பத்தின் மீது ஒரு விமர்சனமற்ற ஈர்ப்பு இருந்திருக்கிறது. இடதுசாரிகளுக்கும் வலதுசாரிகளுக்கும் இதில் பெரிய மாறுபாடு இருந்ததாகத் தெரியவில்லை. வளரும் மக்கள் தொகையையும், அதைவிட வேகமாக வளர்ந்துவந்த மக்களின் தேவைகளையும் நிறைவு செய்ய அதி நவீன தொழில்நுட்பத்தாலும் விஞ்ஞானத்தின் பாய்ச்சலாலும் சாத்தியப்படும் என்கிற நம்பிக்கை அன்றைய தலைமுறைக்கு முழுமையாக இருந்திருக்கிறது. நேருவும் காமராஜரும் திராவிட இயக்கங்களும் அன்றைய இடதுசாரிகளும் முதலாளிகளும் முகிலினியில் இந்த நம்பிக்கையைப் பிரிதிபலிக்கும் வகையில் வருகின்றனர். அதற்கு எதிர்க்குரல் காந்தியிடமிருந்தும் குமரப்பாவிடமிருந்தும் கிளம்பின. தாகூருடையது அவர்களது கருத்தை ஒட்டியும் வெட்டியும்  ஒலித்த இன்னொரு மாற்றுக்குரல் (முருகவேள் தாகூருக்கும் காந்திக்குமிடையில்  அடிப்படையான வேறுபாடுகள் இருந்ததாக நினைக்கிறார். நான் அடிப்படையான ஒற்றுமைகளும் வழிமுறைகளில் மட்டுமே குறிப்பிடத்தக்க முரண்களும் இருந்ததாகவே நோக்குகிறேன்). இந்த மாற்றுக்குரல்களின் மெல்லிய எதிரொலியையும் முகிலினியில் கேட்கலாம். வரைமுறையற்ற தொழில் வளர்ச்சியின் போதாமைகளுக்கும் பெரு நிறுவனப் பேராசைகளுக்கும் எதிரான வலுவான குரலை எழுப்புகிறது இயற்கை – மாசுபட்ட முகிலினியின் சீற்றமாய்.

இத்தகைய தொழில் வளர்ச்சிக்கு எதிராகவும் மாற்றாகவும் எழும் சுற்றுச்சூழல் போராட்டங்கள், இயற்கை வேளாண்மை சார்ந்த தனிநபர் முயற்சிகள், பிற மாற்றுகளுக்கான தேடல் என்று சித்தாந்தங்களைத் தாண்டிய அடுத்த கட்டத்திற்கு இளம் வழக்குரைஞர் கௌதம் வாயிலாக முகிலினி பயணிக்கிறது. அமெரிக்காவிலிருந்து திரும்புகிற இரு இளைஞர்கள் மூலமாய் மேலும் இரு எதிர்நிலைகளை முருகவேள் படைக்கிறார். டெக்கான் ரேயானைத் தோற்றுவித்த அதே குடும்பத்தைச் சார்ந்த ராஜ்குமார் சுற்றுச்சூழல் மீதான அக்கறையை வியாபார லாபத்திற்குப் பயன்படுத்துகிறான். துணையாக நாமறிந்த பல கார்ப்பரேட் சாமியார்களின் சாயலில் ஆஸ்மான் ஸ்வாமிகள். அதே வேளையில் உண்மையான தேடலில் தன் வாழ்வையே சோதனைக்கூடமாக்கிக் கொள்கிற திருநாவுக்கரசு. இயற்கை வேளாண்மையின் நோக்கங்களும் கிராமப் பொருளாதாரத்தை நிலைப்படுத்துவதில் அதன் இடமும் அதன் போதாமைகள் குறித்த ஐயங்களும் பல விவாதங்கள் மூலமாக வலுவாக வெளிப்படுகின்றன.

இடையில் ஜான் க்ரிஷாம் நாவல்களின் விறுவிறுப்போடு ஒரு தனித் திரி நாவலில் பிரிகிறது. மூடப்பட்ட ஆலையில் கொள்ளை, வாகனங்களின் துரத்தல் காட்சி, நீதி மன்ற விவாதங்கள் என்று திடீரென்று வேறொரு தளத்திற்கு திசைமாறுவது போலிருந்தது. இது அவசியம்தானா என்கிற கேள்வியும் எழாமலில்லை. ஆனால், இந்தத் திரியையும் நாவலின் மையமான தேடலோடு அழகாக இணைத்து விடுகிறார் முருகவேள். தொழில் வளர்ச்சியால் வாழ்வாதாரங்களை இழந்த மக்கள் எதற்கு நகர்கிறார்கள் அல்லது தள்ளப்படுகிறார்கள் என்பதன் தேடல் இந்த வழக்கின் மூலமாக நிகழ்கிறது.   ‘ஒரு பகுதி மக்களின் வாழ்க்கையை நாசமாக்கி விட்டு அவர்கள் கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள் என்று குற்றமும் சாட்டுவது நியாயமானது அல்ல. இந்த அணை கட்ட உழைத்தவர்கில் இவர்களின் முன்னோர்களும் உண்டு. அந்த அணை டெக்கான் ரேயானுக்கும் பயன்பட்டது. அதற்கு நிதியுதவி அளித்த அனைத்து நிறுவனங்களுக்கும், அரசுக்கும் இந்த கம்பெனி ஏற்படுத்திய பேரழிவில் பங்குண்டு. அடித்த கொள்ளையிலும் பங்குண்டு. இவர்கள் நஷ்டப்படக்கூடாது என்று அரசு முனைந்து நிற்கிறது. ஆனால் எல்லாவற்றையும் இழந்த இந்த மக்கள் நீதி மன்றத்தில் குற்றவாளிகளாக நிற்கிறார்கள்,’ என்று பல நெருடலான வாதங்களை இந்த வழக்கின் வாயிலாக முன்வைக்கிறார் முருகவேள்.

திருநாவுக்கரசு பாத்திரம் நான் எனது அண்மைக்காலப் பயணங்களில்  சந்தித்த பல உண்மை மனிதர்களை நினைவுபடுத்துகிறது. தேவைகளைக் குறைப்பதும், தற்சார்பை அடைவதுமே ஒரு நிலையான தீர்வுக்கான வழி என்கிற தரப்பின் பிரதிநிதியாய்த் திருநாவுக்கரசு வருகிறான். ‘தமிழகம் முழுவதும் அறிவு ஜீவிகள் தங்கள் சொந்த வாழ்க்கையைப் பணயம் வைத்து பரிசோதனைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒரு ஆயுதப் புரட்சியின்போது செய்யப்படுவதைப் போன்றே இந்த சோதனை முயற்சிகளிலும் தியாகங்கள் செய்யப்படுகின்றன,’ என்கிற சொற்கள் நானறிந்த பலருக்கும் நெருக்கமாகப் பொருந்துகிறது.

டெக்கான் அக்ரோ கெமிக்கல்ஸ், இயற்கைக்குத் திரும்புவோம் போன்ற அமைப்புகளாக டெக்கான் ரேயான் மறு அவதாரம் எடுக்கிறது.

ராஜூவும் ஆரானும் தொடங்கிய தேடலை கௌதமும், திருநாவுக்கரசுவும் தொடர்கிறார்கள்.

நொய்யல் சாக்கடையாகிவிட்டாலும் முகிலினியின் கலகலவென்ற சிரிப்போடு நாவல் முடிகிறது.

மிகுந்த சமூக அக்கறையுடனும் நிறைந்த இலக்கிய நேர்த்தியுடனும் ஒரு சிறப்பான படைப்பினை அளித்துள்ள முருகவேளுக்கு வாழ்த்துகள்.

நூல்: முகிலினி
ஆசிரியர்: இரா.முருகவேள்
பதிப்பகம்: பொன்னுலகம் பதிப்பகம், திருப்பூர்

பி.கு.
நாவலின் முன்னுரையில் தோழர் முருகவேள் எங்களைப் பற்றி என்ன குறிப்பிட்டிருக்கிறார் என்பதையும் இங்கே கூறிவிடுகிறேன்.
‘இந்நூலை முடிக்கும் தருவாயில் இயற்கை வழி வேளாண்மையில் ஈடுபடுபவர்களின் நோக்கம் பற்றிய குழப்பம் ஏறக்குறைய ஒரு பெரிய மனத்தடையை ஏற்படுத்திவிட்டது. அந்த நேரத்தில் நண்பர் வெ.சுரேஷ் மூலம் அறிமுகமான நண்பர் கண்ணன், நித்யா ஆகியோருடனான உரையாடல் நல்ல புரிதலை வழங்கியது. கண்ணன் வழங்கிய அறிவார்ந்த, கூர்மையான, அதேநேரம் சுருக்கமான கருத்துகள் இல்லையென்றால் நான் மேலும் பலபக்கங்கள் எழுதி வாசகரின் மதிப்பிற்குரிய நேரத்தை வீணடித்திருக்கக்கூடும்.’

இவ்வளவு பெருந்தன்மையுடன் அவர் இப்படி எழுதியிருக்காவிட்டாலும், இதே மாதிரியான ஓர் உணர்வைத்தான் முகிலினி எனக்கு அளித்திருக்கும் என்று நம்புகிறேன்.


18வது அட்சக்கோடு – அசோகமித்திரன்

செப்ரெம்பர் 21, 2013

அசோகமித்திரனின் 18வது அட்சக்கோடு பற்றிச் சில மாதங்களுக்கு முன்பு, ஆம்னிபஸ் தளத்தில் எழுதியதை இங்கு மீள்பதிவு செய்கிறேன்.

—————————————————————————————————————————————

ஒரு நாவல் எப்படி ஒரு வாசகனைத் தன்னுள் முழுமையாய் மூழ்கடித்து, ஓர் உச்சகட்ட மனநிலைக்கு இழுத்துச் செல்ல முடியும் என்பதற்கு மிகச்சிறந்த சான்று – அசோகமித்திரனின் 18வது அட்சக்கோடு.

சந்திரசேகரன் என்கிற ஒரு சிறுவன் ஆளாகி முதிரும் கதை. இந்திய விடுதலைக்குப் முன்னும் பின்னும் கொந்தளித்துக் கொண்டிருக்கும் ஐதராபாத் களம். பிரபலமான எந்தவொரு ‘coming of age’ நாவலுக்கும் நிகராக ஒப்பு நோக்கக்கூடிய ஒரு படைப்பு.

சந்திரசேகரனின் வளர்ச்சியும் சமகால சரித்திரமும் பிண்ணிப் பிணைந்து வருகின்றன.

படிக்கும்போது, வழக்கமான அசோகமித்திரனையும் காண முடிகிறது; முற்றிலும் மாறுபட்ட அசோகமித்திரனும் தென்படுகிறார். அவரது முத்திரை துளங்கும் எளிய (அல்லது எளிமைபோல் மாயத்தோற்றம் தரும்) நடையும் உள்ளது; துள்ளிப் பாயும் நினைவுகளுக்குள் நம்மை இழுத்துச் செல்லும் துள்ளலான நடையும் ஆங்காங்கே உள்ளது.

மாணவர் போராட்டங்கள் வலுவாக நடந்து முடிந்த இந்தக் காலகட்டத்தில் இந்நாவலின் பல நிகழ்ச்சிகள் ஓர் அண்மைத்தன்மைப் பெறுகின்றன.

தலைகாணி அளவில் இல்லாவிடினும், இந்த ஒற்றைப் படைப்பில் பல்வேறு இழைகளைப் பிசிறின்றித் தொகுத்திருக்கிறார்:

பதின்ம வயதுச் சிறுவனின் மனவோட்டங்கள்; அந்தப் பருவத்திற்கே உரித்தான அனுபவங்கள், ஆசைகள், அச்சங்கள், சச்சரவுகள், நட்புகள், காதல்கள்.

ஓர் இந்து பிராமணக் குடும்பத்துக்கு மற்ற மதத்தினர் மீதிருந்த ஐயங்கள், வெறுப்புகள், உறவுகள்.

வேற்றூரில் வாழும் தமிழர்களுக்கு இருந்த மொழிச்சிக்கல்கள்; மாற்று மொழியினரோடு இருந்த தொடர்புகள்.

ஓர் அடித்தட்டு உயர்வகுப்பு இளைஞன், மேல்த்தட்டு முஸ்லிம் மாணவர்களோடு இணையும் போது விளையும் அனுபவங்கள்.

கிரிக்கெட் அப்போதே செலுத்தத் தொடங்கியிருந்த ஆதிக்கம்; ஒரு கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் போதும் இந்தியா-ஆஸ்திரேலியா மேட்ச் என்ன ஆனது என்று அறியும் ஆர்வம்; பிராட்மேனும் லாலா அமர்நாத்தும் எவ்வளவு ரன்கள் எடுத்தனர் என்பதைக் கவனிக்கும் வெறி.

பிரிட்டிஷ் அரசாங்க ரயில்வே ஊழியர்களுக்கு இருந்த ஒருவிதப் பெருமிதம்; அவர்களுக்கும் ஐதராபாத் அரசு அதிகாரிகளுக்கும் இருந்த உரசல்.

போராட்டத்தில் ஈடுபட மற்றவர்கள் ஏற்படுத்தும் நிர்ப்பந்தம்; அப்படிப் போராடக் கிளம்புவது நிர்ப்பந்தத்தாலா, உண்மையான உணர்வுகளாலா, இரண்டும் கலந்த கலவையா என்று எழும் கேள்விகள்.

போராடப் போகும்போது ஏற்படும் அச்சங்கள், சலனங்கள், சந்தேகங்கள்.

போராடத் தூண்டியவர்கள், போராட்டம் தீவிரமாகும்போது காணாமற் போகும் மாயம். பாதியில் போராட்டம் தடைபட்டு நிற்க, கல்லூரிக்கும் செல்லமுடியாமல், எவரது வழநடத்தலும் இல்லாமல் தவிக்கும் தவிப்பு.

அரசாங்க வேலையில் இருக்கும் ஆசிரியருக்கு, சந்திரசேகரன் பாடிய ‘விடுதலை, விடுதலை’ பாடல் மீது ஏற்பட்ட ஈர்ப்பு; விடுதலைப் போராட்டத்தில் அவன் ஈடுபட்டிருக்கிறான் என்று தெரிந்ததும் ஏற்படும் படபடப்பு; வேண்டாம் என்று விடுக்கும் எச்சரிக்கை.

1948லும் கூட, நிறையத் தமிழர்களுக்குப் பாரதி யாரென்று தெரியாத நிலை.

தமிழகத்திலிருந்து இடம்பெயர்ந்து வந்த முஸ்லிம் குடும்பத்துக்கு நிஜாம் மீது இருந்த வெறித்தனமான பக்தி, நம்பிக்கை.

அருகிலேயே பல ஆண்டுகள் அமைதியாக வாழ்ந்த குடும்பங்களுக்கிடையில், சூழல் மாற்றம் ஏற்படுத்தும் உரசல்கள்; வெளிக்கொணரும் வன்மங்கள்.

பாரதி நினைவகத்துக்குப் பணம் அனுப்பிய, காந்தி மீது ஈர்ப்பு கொண்ட, எந்த வம்புக்கும் போகாத, ஏன் கல்லூரிக்குச் செல்லவில்லை என்று எப்போதும் கேட்காத, கேட்கக்கூடிய சந்தர்ப்பங்களைக்கூடத் தவிர்க்கிற தந்தை; தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான ஓர் அழகான உறவு.

எருமை மாட்டின் மீதிருக்கும் பரிவு, எரிச்சல்.

அன்றைய சினிமாக்கள், சினிமாக் கொட்டகைகள்.

‘ஒட்டி உலர்ந்து காரின் பின் சீட்டில் சிறு பகுதியை நிரப்பிக்கொண்டு இருக்கும்’ ஹிஸ் எக்ஸால்டட்  ஹைனஸ் மீர் உஸ்மான் அலி கான்பகதூர் ப்ளாக்வா வ்ளா வ்ளா நிஜாம்.

இரண்டு ஆண்டுகள் அச்சமூட்டிய ரஜாக்கர்கள்; துப்பாக்கிகளோடு வந்த இந்தியப் படையை வாள்கொண்டு எதிரத்து மாண்ட இரண்டாயிரம் ரஜாக்கர்கள்.

பஞ்ச காலத்தில் அரிசிக்குப் பதில் வேண்டா வெறுப்பாய் சோளத்தை உண்ணும் நிலை.

வீட்டுக்குள் ஒளிந்து கொள்ள ஓடிவந்தவனைக் காட்டிக் கொடுக்காத ஏழை முஸ்லிம் கிழவி; இறுதியில், ஓடி நுழைந்த இன்னொரு வீட்டில் அவனைக் கூசச்செய்த அந்த இளம்பெண்.

கதை நெடுகச் சொல்லப்பட்டும் சொல்லப்படாமலும் வரும் காந்தியின் நிழல்; காந்தியின் மரணம் ஏற்படுத்தும் தாக்கம்.

உண்மையில் கோலோச்சும் வறுமை.

இத்தனை அடுக்குகளையும் தாங்கி நிற்கின்றன அசோகமித்திரனின் ஐதராபாத்-செகந்தராபாத் இரட்டை நகரங்கள். அவற்றின் டாங்காக்கள், ஆலமரம், லான்சர் பாரக்ஸ், சாலைகள், குடிசைகள், முட்கள், புதர்கள், பசுக்கள் என்று ஒவ்வொன்றும் துல்லியமாய் சித்தரிக்கட்டிருக்கின்றன. ஐதராபாத்திற்கு நான் ஓரிரு முறைதான் சென்றிருக்கிறேன்; அதிகம் பார்த்ததில்லை. ஆனாலும், என் இளமையை நான் கழித்த கோவையை விடவும் பழக்கமான ஓர் இடத்துக்கு அசோகமித்திரன் என்னை அழைத்துச் சென்றுவிட்டதாகவே  உணர்ந்தேன்.

அவர் இந்த நாவலை எழுதிய போது ஐதராபாத்திலிருந்து நீங்கி 20-25 ஆண்டுகளுக்கு மேலிருக்கும். எப்படி இந்த நிலச்சித்திரங்கள் இவ்வளவு துல்லியமாய் (துல்லியம் குறித்துச் சந்தேகம் வர வாய்ப்பே இல்லை) ஒருவர் மனதில் பதிந்திருந்து எழுத்தில் வெளிப்பட்டிருக்கிறது என்பது வியக்கத்தக்கதுதான்.

பல்வேறு தருணங்கள் ஆழமான கேள்விகளை எழுப்புகின்றன. அவற்றிற்கான பதில்களை இன்றைக்கும் நாம் தேடிக்கொண்டிருக்கிறோம்.

போராட்டத்திற்கு வராத மாணவர்களை வழிமறித்து வளையல் தருகின்றனர் சில பெண்கள். ஆனால் அவர்களும்கூட காரில் வந்திறங்கும் பணக்கார மாணவர்களை அணுகவதில்லை. சந்திரசேகரனுக்குள் எழும் உணர்வுகள் நமக்குள்ளும் அதிர்வுகளை ஏற்படுத்துகின்றன.

‘அப்படி என்றால் வாழ்க்கையில் தத்தளித்துக் கொண்டிருப்பவர்களுக்கும் திருப்பிப் பதில் தரமுடியாத சாதுக்களுக்கும்தான் சத்யாகிரஹமும் பள்ளி மறுப்பும்: அவர்கள்தான் அவர்களுக்கென்று இருக்கும் சிறிதையும் தியாகம் செய்துவிட வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால் அவர்களைக் கேலி செய்யலாம், நிர்ப்பந்தப்படுத்தலாம், பலவந்தம் செய்யலாம்.’

இன்னொரு இடத்தில், வறுமை நிறைந்த பகுதியில் உலவும் போது சந்திரசேகரனுள் எழும் எண்ணங்கள்:

‘அழுக்கும் நோயும் சர்வசாதரணமாகிப்போன வாழ்க்கை. இங்கே மதத்திற்கு என்ன வேலை? ஆனால், இம்மாதிரி இடங்களில்தான் மதக் கலவரங்கள் நடக்கும்போது வீடுகள் கொள்ளையடிக்கப்படுகின்றன, மண்டைகள் உடைகின்றன, உடைமைகள் கொளுத்தப்படுகின்றன.’

எந்த ரெஃப்யூஜிக்களைப் பயத்தோடும், கரிசனத்தோடும் தொடர்ந்து கவனித்து வந்தானோ, அந்த அகதிகள் திடீரென்று காணாமற் போனபோது அவர்களுக்காக வருந்துகிறான்.

‘மிகவும் அமைதியாக வாழ்ந்து வந்த அந்த ஜனக்கூட்டம் அத்தனையும் எங்கோ மறைந்து போயிருந்தது. எங்கே ஒருவர்கூடப் பாக்கி இல்லாமல் போயிருக்கக்கூடும்? இப்போது எதைப் பாதுகாத்துத் தூக்கிக் கொண்டு போயிருப்பார்கள்? அவர்கள் தூக்கிக்கொண்டு போக என்ன இருக்க முடியும்?’

துலுக்கன் என்றே பல இடங்களிலும் பெயரிட்டுச் சிந்தித்து வரும் சந்திரசேகரன் இறுதி சில பக்கங்களில் இஸ்லாமியப் பள்ளி, முஸ்லிம் குடும்பம் என்று நினைக்கத் தொடங்குவது, அவன் பக்குவமடையத் தொடங்கியதன் வெளிப்பாடோ என்று எண்ணத் தோன்றுகிறது.

18வது அட்சக்கோடு படித்து முடித்து ஒரு வாரம் ஆகிறது. மனதில் அது ஏற்படுத்திய அசைவுகள் இன்னும் அடங்கவில்லை.


சிலம்பொலியும், குற்றாலச் சாரலும் – ஓர் இனிய இசைவிருந்து

ஜூலை 31, 2008

சிலப்பதிகாரம் என்று இசைத்தட்டில் பெயர் பார்த்ததும், என்ன, என்று ஆர்வமாய்ப் எடுத்தேன். அட்டையில் மருத்துவர் ராமதாசுவின் படம் பார்த்ததும், வேண்டாம், வைத்துவிடலாம் என்றுதான் முதலில் தோன்றியது – மருத்துவர் அய்யாவின் சாதி அரசியல் மீது உள்ள வெறுப்பில்.  ஆனாலும், பின்னட்டையில் பாடகர்கள் தேர்வில சாதிச்சாயம் தெரியாததால், ஆர்வம் மேலோங்க சிலப்பதிகாரத்தையும் அருகிலிருந்த குற்றாலக்குறவஞ்சியையும் (அதிலும் மருத்துவர் ராமதாசுவின் படம்)  வாங்கிவந்தேன். இரண்டும் பொங்கு தமிழ் அறக்கட்டளையின் வெளியீடுகள்.

என் வெறுப்பை ஒதுக்கிவிட்டு நடுநிலையில் பாடல்களைக் கேட்கத் துவங்கினேன். இனிய ஆச்சர்யம் காத்திருந்தது. இரண்டுமே தரமான படைப்புகள். தமிழில் இத்தகைய முயற்சிகள் வெகு சில. இளையராஜாவின் திருவாசகத்தோடு ஒப்பிட முடியாது என்றாலும், அந்த வகை முயற்சி இது. தமிழ் இலக்கியங்களை நவீன ஒலிகளில் நேர்த்தியாய் வெளிக்கொணர முடியும் என்பதற்கு இன்னுமோர் எடுத்துக்காட்டு.

இசையமைப்பாளர் ந.கோபிநாத் ஓர் அரிய கண்டுபிடிப்பு. பழந்தமிழ்ப் பாடல்களை அழகாய் இக்கால இசைக்குள் கட்டுப்படுத்துவது கடினம். பாரதியின் பாடல்களையே இளையராஜா, விசுவநாதன் தவிர பலரும் சிதைத்திருக்கிறார்கள். நவீன இசை என்பது கீபோர்ட், தபலா, சலிப்பூட்டும் பழைய தூர்தர்ஷன் இசையைத் தாண்டியதில்லை. கர்நாடக இசையில், திருப்புகழ் தவிர வேறு பாடல்கள் இடம்பெறுவது அரிது. தமிழ்ப் பாடல்கள் இசைக்குப் பொருந்தாது என்று அவர்களாய் முடிவுகட்டிக் கொண்டிருக்கிறார்கள் போலும்.

இத்தகு சூழலில், இதுவரை கேட்டறியாத ஓர் இசையமைப்பாளர் இனிய பாடல்கள் மூலம் ஒரு புதிய பாதையில் பயனிக்கறார். தமிழ்ச் சொற்கள் இதமாய் செவிகளுக்கு விருந்தாயின. மிகக்குறைந்த நேரமே நீடித்ததுதான் பெரும் குறை. மற்றபடி இப்படியோர் முயற்சியில் சிறுபிழைகள் மனதில் நிற்பதில்லை.

இக்கட்டுரை எழுதும் போதே எஸ்.ராமகிருஷ்ணின் இதே ஏக்கம் குறித்துப் படிக்க நேர்ந்தது. இளையராஜா இன்னமும் இந்தப் பக்கம் முழுக்கவனத்தை திருப்ப மறுத்தாலும், ந.கோபிநாத் அந்தக் குறையைக் கொஞ்சம் குறைத்திருக்கிறார். இருந்தாலும் இளையராஜாவின் கைவண்ணம் பட்டால் இன்னும் எத்தனை திருவாசகங்கள் உருவாகக்கூடும்! ஹீம்…

இம்முயற்சிக்காக ந.கோபிநாத்தைப் போற்றுதும். பொங்கு தமிழ் அறக்கட்டளையைப் போற்றுதும். இத்தோடு நின்று விடாதீர்கள். உங்கள் இலக்கிய-இசைப் பயணம் இன்னமும் நீளட்டும்.


காலச் சுழலில் சிக்கிய கர்நாடகஇசை

ஜூலை 17, 2008

ஓர் அழகான கலை, பழம்பெருமைகளுக்குச் சிறைபட்டதாலேயே வளராமல் தேக்கமடைந்துவிட்டது. ஒவ்வொரு முறை கர்நாடக இசைப்பாடல்களைக் கேட்கிற பொழுதும், இசைப் பாமரனான, என்னுள் எழுகிற முதல் எண்ணம் இது.

சந்தேகமில்லாமல் நம் இசை, உலக இசைக்கு இணையானது; பல வகைகளில் மேலானதும் கூட, என்றே தோன்றுகிறது. சில நாட்களாய் இரண்டையும் கேட்கிறேன், இரண்டுமே பிடித்திருக்கிறது என்பதால் சமநிலையில் எழுந்தது இந்த ஞானம். வேறு எந்தத் துறையைக் குறித்தும் நாம் இவ்வளவு உறுதியாய்க் கூறமுடியாது.

ஆனாலும், நம் நாட்டிலேயே மிகக் குறுகியவட்டத்திற்குள் சிறைபட்டிருக்கிறதே இக்கலை, ஏன்?

முதல் காரணம், மாற்று மொழியின் ஆதிக்கமே. இசை கற்க விரும்புகிற இளைஞர்கள், குழந்தைகள் உடன் வேறு மொழியையும் கற்க வேண்டியது எதற்காக? மொழி புரியாமல் என்னைப் போன்றவர்களும் எத்தனை நாட்கள் இந்த இசையை ரசிக்க முடியும் – ஒவ்வொரு முறையும் சில நாட்களில் சலிப்பு ஏற்பட்டு விலகியே சென்றிருக்கிறேன்.

அடுத்தது, புதிய முயற்சிகள் மிகக் குறைவாக இருப்பதால். தியாகராஜருக்கு மேல் சிறப்பாய் யாரும் படைக்க முடியாது என்று நினைத்தால், முடியாது தான். ஆனால், எத்தனை நாட்கள், புரியாமல் தியாகராஜரையே கேட்பது. இளையராஜாவின் படைப்புகளை மான்டலின் ஸ்ரீநிவாஸ் வாசிப்பது எந்த வகையில் அதற்கு குறைந்தது என்பது எனக்கு இன்னும் புரியவில்லை. பாலமுரளிகிருஷ்ணா அவரறிந்த தமிழில் எழுதியுள்ள பாடல்கூட அவரது கணீர் குரலில் அற்புதமாய்த்தான் இருக்கிறது. கல்கியின் எளிமையான பாடல்கள் எம்.எஸ். குரலில் வேறு தளத்திற்கு இட்டுச்செல்லப்படுகின்றன. காந்தி பற்றிய ஒரு பாடல், ‘வையத்தை வாழவைக்க வந்த மகாத்மா’ – அவர் இறந்த போது எழுதப்பட்டிருக்க வேண்டும் – இவ்வளவு சோகத்தை, உறுக்கத்தை, இவ்வளவு இனிமையாய் வெளிப்படுத்த முடியுமா என்று வியக்க வைக்கிறது. ஆனால் இப்படிப்பட்ட முயற்சிகள் மிகக்குறைவானவையே. பெரும்பாலும், கர்நாடக சங்கீதத்தில், தரமான புதிய படைப்புகளுக்கு இடமில்லை.

ஒரு நல்ல இசைக்கலைஞர், ஒரு நல்ல தமிழ்க் கவிஞரோடு இணைந்தால் உருவாகக்கூடிய சாத்தியங்கள் பிரமிக்கவைக்கும். ‘திருவாசகம்‘ கேட்டவர்களுக்குப் புரியும் (மேற்கத்திய இசை என்றாலும் கூட, வேர்கள் இங்குதானே). புத்தம்புதிய தமிழ்ப்படைப்புகளோடு மட்டும் ஒரு முழுக் கச்சேரி நிகழ்கிற நாளன்று, சில நூற்றாண்டுகளைக் கடந்து நம் இசை நிகழ்காலத்திற்கு வந்தடையும். தமிழர்கள் குத்துப்பாடல்களை மட்டுமே படைக்க, சுவைக்கத் தெரிந்தவர்கள் அல்ல என்பது கண்டறியப்படும்.