நம்ப ஆசைப்படுபவன் – பேர் லாகர்குவிஸ்டின் அன்பு வழி

பிப்ரவரி 10, 2019

பேர் லாகர்குவிஸ்டு எழுதிய அன்பு வழி (Par Lagerkvist – Barabbas) நாவலை முதலில் ஆங்கிலத்தில் படிக்கத்தொடங்கினேன். ஒரு சில அத்தியாயங்களுக்குப் பிறகு, தமிழுக்கு மாறிவிட்டேன். இதற்கு முன், பிற நூல்களைத் தமிழில் தொடங்கி ஆங்கிலத்தில் முடித்திருக்கிறேன். இது மாறுபட்ட அனுபவம்தான். சுவீடிஷ்ஷிலிருந்து ஆங்கிலம் வழியாக மொழிபெயர்க்கப்பட்டிருந்தாலும்கூட க.நா.சு.வின் மொழிபெயர்ப்பு ஆங்கில மொழிபெயர்ப்பைப் படிப்பதை விட மேலானதொரு வாசிப்பு அனுபவத்தைத் தந்தது [சொல்லுக்குச் சொல் இணையாக இல்லாவிட்டாலும், ஆங்கில மூலத்துக்கு நெருக்கமாகவே மொழிபெயர்த்திருக்கிறார். இரண்டாம் முறை மீண்டும் வேகமாக ஆங்கிலத்திலும் படித்து முடித்தேன். எந்த இடமும் நெருடவில்லை.] நல்ல மொழிபெயர்ப்புகளுக்கு இன்னும் அவசியம் இருப்பதாகவே நினைக்கிறேன். ஆங்கிலத்தில் நேரடியாக எழுதப்படாத உலக இலக்கியங்களை (நல்ல) தமிழிலேயே படிப்பது சில சமயங்களில் நிறைவாகவும், மனதுக்கு நெருக்கமாகவும் உள்ளது.

‘மனதை உய்விக்கிற இலக்கியத்தை, எப்போதாவது ‘அன்பு வழி’யைப் போன்ற ஒரு நாவலை எழுதிவிட முடியுமென்று நினைத்துத்தான் எழுதிப் போகிறேன்,’ என்று வண்ணநிலவன் கடல்புரத்தில் முன்னுரையில் குறிப்பிட்டிருப்பார். அந்த வகையில், அதிக எதிர்பார்ப்போடு நிகழ்ந்த முதல் வாசிப்பில் எனக்குக் கொஞ்சம் ஏமாற்றமாகத்தான் இருந்தது. ‘அன்பு வழி’ என்ற தலைப்பு காட்டிய தடத்தில் நான் எதிர்பார்த்தது பக்கத்துக்குப் பக்கம் பீறிடும் அன்பை. ஆனால், அங்கு அதிகமாகக் கண்டதோ, பீறிடத்துடிக்கும் அன்பை அடக்கி எழும் அவநம்பிக்கையை. எனினும் வண்ணநிலவனுக்காகச் செய்த இரண்டாம் வாசிப்பில் வேறு ஓர் உணர்வு கிடைத்தது; முதல் வாசிப்பில் விட்ட இடைவெளிகளை இரண்டாம் வாசிப்பில் நிரப்பிக் கொள்ள முடிந்தது; தொய்வாகத் தெரிந்த இடங்கள் அவ்வளவு தொய்வாகத் தெரியவில்லை. யேசு காட்டிய அன்பு வழியை மையமாகக் கொண்டிருந்தாலும், அன்பை அறிந்திராத, யாருக்கும் அன்பை வழங்கவியலாத பாரபாஸின் கதைதான் இது. ‘வானத்திலும் பூமியிலும் உள்ள எல்லாவற்றையும் வெறுத்து அவ்வெறுப்பிலே உயிர் வைத்திருந்தவன் பாரபாஸ்.’ தனக்குப் பதிலாக யேசு சிலுவையில் அறையப்படுவதை மறைந்திருந்து கண்ட நாள் முதலே ஒரு தேடல் தொடங்கியிருந்தாலும், அவனால் யேசு கடவுள் என்பதையோ கடவுளின் மகன் என்பதையோ அவர் புத்துயிர்ப்பு பெற்று மீண்டார் என்பதையோ நம்பமுடியவில்லை. லசாரஸைச் சந்தித்தபின் அவனை மரணத்திலிருந்து அவர் எழுப்பினார் என்பதை நம்பினாலும், அப்படி எழுப்பியிருக்கக்கூடாது என்று நினைக்கிறான். இந்த நம்பிக்கையின்மையே அவனை நீங்காப் பெருந்துயரில் ஆழ்த்துகிறது. அடிமைத்தனத்தின் அடையாளமான அவனது கழுத்துப்பட்டையில் ‘கிருஸ்து-ஏசு’ என்று பொறித்துக்கொண்டிருந்தாலும், விசாரணையின் போது அவரை நம்பாமலிருப்பதாகவே சொல்கிறான். பின் ஏன் அப்பெயரைப் பொறிக்கவேண்டும் என்று கேட்டதற்கு, ‘நான் நம்ப ஆசைப்படுவதால்’ என்கிறான். அப்பெயரை அடித்துவிடவும் ஒப்புக்கொள்கிறான்.

ஏசுவின் மீதான நம்பிக்கையின் பொருட்டு உயிரைத் துறக்கும் இரண்டு பாத்திரங்கள் பாரபாஸுக்கு நெருக்கமானவர்களாக வருகின்றனர். யேசுவுக்குச் சாட்சியம் கூறியதால் கல்லடிபட்டு மரணமடைந்த உதடு பிளந்த பெண்ணைப் பல காத தூரம் கைகளால் சுமந்து சென்று அடக்கம் செய்கிறான். அவனோடு பல காலம் சங்கிலியில் பிணைக்கப்பட்டிருந்த ஸஹாக் யேசுவை மறுக்க மறுத்து, மரணத்தைத் தேர்ந்தெடுக்கிறான். சிலுவைக்கு அனுப்பப்படுகிறான்.
/“உன் கடவுளை நீ மறுக்காவிட்டால், உன்னை யாரும் காப்பாற்றமுடியாது. நீ சாகவேண்டியதுதான்.”
‘என் பிரபுவை, என் கடவுளை நான் மறுப்பது எப்படி?”/

ஸஹாக்கின் மரணத்தையும் கண்ணீர் மல்க மறைந்து நின்று பார்க்கிறான் பாரபாஸ். ஆனால் எதுவும் பாரபாஸின் அவநம்பிக்கையை முழுவதுமாக அசைக்கமுடியவில்லை. ரோமாபுரியின் புதுமைகளாலும் அவனது வெறுப்பை அகற்ற முடியவில்லை.

‘பல தேசத்து மக்கள், பல பாஷை பேசுகிறவர்கள் இங்கு வந்து கூடினர். பொருளும் பணமும் ஏராளமாக எங்கும் இறைபட்டது. […] இதெல்லாம் கண்டு வேறு ஒருவனின் கண்கள் பரவசப்பட்டிருக்கும். பாரபாஸ் இதெல்லாவற்றையும் கண்டும் காணாதமாதிரி நடமாடினான். அவனுக்கும் இதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பது தெளிவு. இந்த உலகத்தின் படாடோபங்களைப் பற்றி அவனுக்கு என்ன கவலை? இது அவன் கவனத்துக்குரியதல்ல என்றே அவன் எண்ணினான். அப்படி அவனால் அலட்சியமாகவ இருக்கவும் முடியவில்லை. இதெல்லாம்பற்றி அவன் அடிமனதிலே ஒரு வெறுப்பும் தோன்றிக் கொண்டிருந்தது.’

அவன் இறுதியில் கிருத்துவத்துக்கு உதவுவதாக நினைத்துச் செய்யும் ஒரே செயலும் அதற்கு எதிரானதாக, சீசருக்கு இயைந்ததாக, ஒருவித துன்பியல்-நகைப்பில் முடிகிறது. யேசுவைச் சிலுவையில் ஏற்றுவதற்காக, முதலில் சிலுவையிலிருந்து விடுவிக்கப்பட்ட அவன் இறுதியில் சிலுவையிலேயே அறையப்படுகிறான்.

/அவன் ஆயுள் பூராவும் பயந்து நடுங்கிய சாவு நெருங்கியதை உணர்ந்ததும் அவன் சுற்றிச் சூழ்ந்திருந்த இருட்டைப் பார்த்து, அதனிடம் பேசுகிற மாதிரிச் சொன்னான்.

“என் ஆத்மாவை உனக்கு அளித்துவிடுகிறேன்.” /

அப்போதும் அவன் ஆத்மாவை அளித்தது இருளுக்கா, இறைவனுக்கா என்பது உறுதியாகத் தெரிவதில்லை.

வேறு எவரை விடவும் தனக்காகவே யேசு உயிர்விட்டதாக பாரபாஸ் கருதுகிறான். அப்படித் தனக்காக உயிர் துறந்த ஒருவனுக்காக பிறர் தமது உயிர்களையும் தரத் தயாராக இருக்கும் போது தன்னால் குறைந்தபட்சமான நம்பிக்கையைத் தர முடியவில்லையே என்பதுதான் பாரபாஸை வருத்திய உணர்வாக இருக்கவேண்டும். அந்த அவநம்பிக்கை தரும் குற்றவுணர்வே வெறுப்பாகவும் அக்கறையின்மையாகவும் மாறுகிறது. நம்ப விரும்புகிற ஒருவனுக்கு நம்பிக்கை வராத போது நிகழும் துயரமும், ஒரே சங்கிலியால் பல்லாண்டுகள் பிணைக்கப்பட்டாலும் மனம் பிணைக்கப்படாமல் தனிமையில் உழல்வதும், அத்தனை வெறுப்பையும் மீறி எப்போதாவது பீறிட்டெழும் அன்புமே பாரபாஸ்.

பாரபாஸை அடிமைப்படுத்தியிருந்த கவர்னரைப் பற்றிய ஒரு நுட்பமான சித்திரம் வருகிறது. இக்காலத்துக்கான பொருத்தப்பாடு கருதி, உக்கிரமான கதையினிடையே குறுமுறுவல் எழும்பியது.

/சில நாள்களில் கவர்னர் தனது பதவியிலிருந்து ஓய்வு பெற்றுக் கொண்டார். அவர் ஆட்சி செலுத்திய காலத்தில் தனக்கும் அரசாங்கத்துக்கும் நிறையப் பொருளீட்டினார். எத்தனையோ அடிமைகளும் அடிமை ஓட்டிகளும் இந்தப் பொருளீட்டுதலுக்கு உதவினார்கள். எத்தனையோ கொடுமைகள் எத்தனையோ பேர்வழிகளுக்கு இழைக்கப்பட்டன. அந்தத் தீவின் இயற்கை வளத்தையும் சுரங்கச் செல்வத்தையும் பூரணமாக ஆராய்ந்து லாபமடைந்தார் அந்த கவர்னர். ஆனால் அவர் கொடூர சித்தமுள்ள மனிதர் அல்ல. அவர் ஆட்சி கொடுமையாக இருந்ததே தவிர, அவர் நல்லவர்தான். அவரைக் குறை சொல்லக்கூடியவர்கள், அவரைச் சரியாகத் தெரிந்து கொள்ளாதவர்கள்தான். அவரைப் பலருக்குத் தெரியாது என்பதும் உண்மையே! எட்டாத உயரத்தில் இருந்தவர் அவர். அவர் போகப் போகிறார் என்றறிந்து கஷ்டப்பட்ட பலர் ஆறுதல் பெருமூச்சு விட்டார்கள். புதிதாக வருபவர் நல்லவராக இருக்க மாட்டாரா என்று அவர்கள் எண்ணினார்கள். ஆனால் அந்தப் பசுமையான அழகிய தீவை விட்டு மனசில்லாமல்தான் பிரிந்தார் அவர். அவர் பல சந்தோஷ நாட்களை அங்கு கழித்திருந்தார்./

நிற்க. அடிமைகளின் கழுத்துப்பட்டையை (ஆங்கிலப் பிரதியில் slave’s disk) க.நா.சு. எல்லா இடங்களிலும் தாலி என்றே மொழிபெயர்க்கிறார். அதில் ஏதாவது சிறப்புக் குறியீடு இருக்குமோ?


ஒரு கவிதை – சில கவிஞர்கள்

நவம்பர் 20, 2018

Here with a Loaf of Bread beneath the Bough,
A Flask of Wine, a Book of Verse – and Thou
Beside me singing in the Wilderness –
And Wilderness is Paradise enow.

– Rubaiyat of Omar Khayyam, Edward FitzGerald (1859)

பத்துப் பன்னிரண்டு-தென்னைமரம்
பக்கத்திலே வேணும்;-நல்ல
முத்துச் சுடர்போலே-நிலாவொளி
முன்புவர வேணும்; – அங்கு
கத்துங் குயிலோசை-சற்றே வந்து
காதிற்பட வேணும்;-என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே-நன்றாயிளந்
தென்றல்வர வேணும்.

பாட்டுக் கலந்திடவே-அங்கேயொரு
பத்தினிப் பெண்வேணும்;-எங்கள்
கூட்டுக் களியினிலே-கவிதைகள்
கொண்டுதர வேணும்;-அந்தக்
காட்டு வெளியினிலே,-அம்மா!நின்றன்
காவலுற வேணும்;என்றன்
பாட்டுத் திறத்தாலே-இவ்வையத்தைப்
பாலித்திட வேணும்.

—–

அகத்தூண்டுதல்? தற்செயல்? பலருக்கும் தோன்றும் கரு? எதுவாக இருந்தாலும், ஒரு மகாகவியின் ஒளி இவ்வரிகளில் மிளிர்கிறது. குறிப்பாக, ‘in the wilderness’ – ‘காட்டுவெளியினிலே’ இரண்டுக்கும் உள்ள ஒப்புமை அருமை. உமர்கய்யாம் ஒரு மரக்கிளை கேட்டால், இவன் சற்றே அதிகமாய், காணி நிலமும் ஒரு மாளிகையும் பத்துப்பன்னிரண்டு தென்னைமரமும் கேட்கிறான். நிலவொளியும், குயிலோசையும், இளந்தென்றலும் இருக்கையில் ரொட்டியைப்பற்றிய கவலை இவனுக்கில்லை. பக்கத்திலே பெண்ணும் பாட்டும் வேண்டும் என்று இருவரும் கேட்கின்றனர் – அதிலும் இவனுக்குப் பத்தினிப் பெண் வேண்டும். கவிதை நூல் வேண்டுமென அவன் கேட்க, கவிதைகள் கொண்டுதர வேணும் என்று இவன் வேண்டுகிறான். கூட்டுக் களியில் பிற போதை வஸ்துகள் பற்றிய நினைப்பு பாரதிக்கு இப்போது வரவில்லை. காட்டுவெளியில் களித்திருப்பதே சொர்க்கம் என்று உமர்கய்யாம் நினைக்கிறான். அந்தக் காட்டுவெளியில் களித்திருக்கும்போதும் வையத்தைப் பாலித்திடல் பற்றி பாரதி அக்கறை கொள்கிறான்.

பாரதி உமர்கய்யாமை படித்திருக்கிறானா என்று தெரியவில்லை. (தெரிந்தவர்கள் சொல்லவும். என்னிடமுள்ள கட்டுரைத் தொகுப்புகளிலும், இணையத்திலும் தேடிய வரை எதுவும் கண்ணில் படவில்லை. பாரதியின் முழுத்தொகுப்பில் தேடினால் உறுதிசெய்யலாம்.) விட்மனையும், ஜப்பானிய ‘ஹொக்கு’வையும், நவீனக் கவிதைப் போக்குகளையும் உள்வாங்கியிருந்த பாரதி, முகமது நபி பற்றி உரையாற்றிய பாரதி, பிட்ஸ்ஜெரால்டின் உமர்கய்யாமைப் படித்திருக்கும் வாய்ப்புகள் அதிகம் என்றுதான் நினைக்கிறேன். சாகா வரம் கேட்டு, மரணம் பொய்யாம் என்று சொன்ன பாரதி, நிலையாமையையும் முழுமுற்றான மரணத்தையும் அதிகம் பாடிய உமர்கய்யாமை எப்படி எடை போட்டிருப்பான் என்று தெரியவில்லை.

பாரதியின் சமகாலத்தவரான கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை உமர்கய்யாமைப் பின்னாளில் மொழிபெயர்த்திருக்கிறார். அ.கா.பெருமாள் ஒரு கட்டுரையில் கவிமணியின் கருத்துப்படி தமிழில் ‘பாரதி ஒருவர்தான் மகாகவி’ என்று எழுதியுள்ளார். கவிமணி பாரதியைப் பற்றி இப்பிரபல வரிகளைப் பாடியுமிருக்கிறார்:

பாட்டுக் கொருபுலவன் பாரதியடா! – அவன்
பாட்டைப் பண்ணொடொருவன் பாடினானடா!
கேட்டுக் கிறுகிறுத்துப் போனேனேயடா! – அந்தக்
கிறுக்கில் உளறுமொழி பொறுப்பாயடா!

சொல்லுக்குச் சொல்லழகும் ஏறுமேயடா! – கவி
துள்ளும் மறியைப்போலத் துள்ளுமேயடா !
கல்லும் கனிந்துகனி யாகுமேயடா ! – பசுங்
கன்றும் பால் உண்டிடாது கேட்குமேயடா!

—*—*—*—

உமர்கய்யாமின் இக்கவிதையை மொழிபெயர்ப்பதில் கவிமணி நிறைய சுதந்திரம் எடுத்திருக்கிறார். பிட்ஸ்ஜெரால்டின் ஆங்கில மொழிபெயர்ப்புமே அப்படித்தான் என்கிறார்கள் (wonderfully unfaithful translation).

வெய்யிற் கேற்ற நிழலுண்டு – வீசும் தென்றற் காற்றுண்டு,
கையிற் கம்பன் கவியுண்டு, கலசம் நிறைய மதுவுண்டு,
தெய்வ கீதம் பலவுண்டு, தெரிந்து பாட நீயுண்டு,
வையந் தருமிவ் வனமின்றி வாழும் சொக்கம் வேறுண்டோ?


இதே கவிதையை, ஒமர் கய்யாமை வேறு பல மொழிபெயர்ப்புகள் மூலம் மொழிபெயர்த்துள்ள ஆசை இப்படி மொழிபெயர்த்திருக்கிறார்:

.ஜாடி மதுவும் கவிதை நூலும்

ரொட்டித் துண்டும் வேண்டும் எனக்கு,

பிறகு நீயும் நானும் யாருமற்ற இடத்தில்

சுல்தானின் ராஜ்யத்தை விட அதிக செல்வம் நமதாகும்.


கண்ணதாசனின், ‘ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு, ஒரு கோலமயில் என் துணையிருப்பு’ என்ற வரியும் நினைவுக்கு வருகிறது.



லேலி லாங் சோல்ஜர் கவிதைகள்

நவம்பர் 20, 2018

[லேலி லாங் சோல்ஜர் அமெரிக்காவின் பூர்வக்குடிகளுள் ஒன்றான லகோட்டா இனத்தைச் சேர்ந்த கவிஞர். அவரது Whereas, 38ஆகிய நீள் கவிதைகள் முக்கியமானவை. Whereas மிகவும் அடர்த்தியான கவித்துவ மொழியிலும், 38 மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட, நேரடியான மொழியிலும் நுட்பமான அரசியல் பிரச்சனையை அணுகுகின்றன. Whereas என்ற தலைப்பில் அவரது கவிதைத் தொகுப்பு நூல் வெளிவந்துள்ளது. Whiting Writers விருது வென்றிருக்கிறார்.] – தமிழினி மின்னிதழில் வெளிவந்தது

38

இங்கு வாக்கியம் (sentence) மதிக்கப்படும்.

எழுத்துவிதிகள் வலியுறுத்துவதற்கு மதிப்பளித்து, ஒவ்வொரு வாக்கியத்தையும் கவனத்துடன் அமைப்பேன்.

உதாரணமாக, எல்லா வாக்கியங்களும் பெரிய எழுத்துகளோடு (capital letters) தொடங்கும்.

அதேபோல, ஒரு வாக்கியத்தின் வரலாறு மதிக்கப்படும். ஒவ்வொன்றையும் முற்றுப்புள்ளி அல்லது கேள்விக்குறி என்று பொருத்தமான நிறுத்தற்குறிகளுடன் முடித்து அதன்மூலம் ஒரு கருத்து (கணநேர) முடிவுக்குக் கொண்டுவரப்படும்.

நீங்கள் அறிந்துகொள்ள விரும்பலாம், நான் இதை ஒரு ‘இலக்கியப் படைப்பாகக்’ கருதவில்லை.

வேறு வார்த்தைகளில் சொல்வதானால், சிறந்த கற்பனை மிகுந்த கவிதையாகவோ புனைவாகவோ இதை நான் கருதவில்லை.

வாசிப்பு சுவாரசியத்துக்காக வரலாற்று நிகழ்வுகள் நாடகீயமாக்கப்படமாட்டா.

எனவே, ஒழுங்கு கூடிய வாக்கியத்துக்கான பொறுப்பை நான் உணர்கிறேன்; அது எண்ணங்களைக் கடத்தும் கருவி.

நிற்க; இனி நான் தொடங்குகிறேன்.

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

சிறுநா அளவளாவிய சொல்

ஏப்ரல் 28, 2015

என் மகளும் நானும் எதற்கோ பச்சை நிறத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். இயற்கையின் நிறம் பச்சை, என்று தொடங்கி வைத்தேன். இலையின் நிறம் பச்சை, கிளியின் நிறம் பச்சை என்று தொடர்ந்தாள்.
தாவும்புல் பச்சை என்று முடித்தாள். சீக்கிரம், தொழில்முறை மொழிபெயர்ப்பாளர்களின் துல்லியத்துடன், புல்தாவி என்று சொல்லும் திறன் பெற்றுவிடுவாள் என்பது அவள் எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையை நீர்வீழ்ச்சியாய்ப் பொழிந்தது.

என் மனைவி கொஞ்சம் யதார்த்த தளத்தில் இயங்குபவள் – வெட்டுக்கிளியென்று திருத்துகிறாள். அவள் இப்படித்தான். காந்தி பற்றி கல்கி எழுதிய வாழ்க்கை வரலாற்று நூலின் இரண்டாம் பகுதியை – 1956ம் ஆண்டு அச்சிடப்பட்ட பிரதியைப் பத்திரமாக பைண்ட் செய்து வைத்து, கண்டுபிடித்தும் கொடுத்துவிட்ட தியாகுவின் நூலகத்திலிருந்து நேற்று எடுத்துவந்திருந்தாள். மகிழ் அப்புத்தகத்தைப் பிரித்து, எழுத்துக்கூட்டி, மாந்தருக்குள் ஒரு மாணிக்கம் என்று தலைப்பைப் படிக்கிறாள். நான் மாந்தர் என்றால் மனிதர், மாணிக்கம் என்றால் என்ன தெரியுமா என்று அவளை கேட்கிறேன். மனைவி குறுக்கிட்டு, அந்தத் தலைப்பு மாந்தருக்குள் ஒரு தெய்வம் என்கிறாள். மோனை நயம் தெரியாத மனிதராக இருந்திருப்பாரோ என்று கல்கியை நொந்துகொள்கிறேன்.