மூளையில் ஒரு புத்தக அடுக்கு

செப்ரெம்பர் 19, 2013

 

crow-ஆ

குப்பைத்தொட்டியின் மீது அமர்ந்திருந்த காக்கை, தீடீரென்று பறக்கவும், அதிர்ந்து குனிந்தாள் மகிழ். நேற்று மொட்டைமாடியிலும் இதே போல் நடந்தது – அவளோடு சேர்ந்து நானும் ஒரு கணம் குனிந்திருந்தேன். அப்போது, ‘காக்கா தலைல கொட்டிருச்சுனா வலிக்கும், இல்லப்பா?’ என்று சொல்லியிருந்தாள். அவள் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரே தொடரான லிட்டில் கிருஷ்ணாவையும் நிறுத்திவிட அவளைச் சம்மதிக்க வைக்கவேண்டும்.
‘காக்காயைப் பார்த்து பயப்படக்கூடாதுடா. நீ தினமும் சாப்பாடு வைக்கறியில்ல? பாரதியார் என்ன சொல்லியருக்கார்:
காக்கைகுருவி எங்கள்…..’

‘என்னப்பா? காக்கைச் சிறகினிலேவா?’

‘இல்ல, இல்ல. காக்கைகுருவி எங்கள் ஜாதி. உனக்கு அந்தப் பாட்டு தெரியுமில்ல? நீ சொல்லு.’ அவள் கற்றுக்கொண்ட முதல் கவிதைகளில் இது ஒன்று. நோக்க நோக்கக் களியாட்டம் என்று ஆனந்தமாய்ச் சொல்வாள்.

‘எனக்கு மறந்து போச்சுப்பா’

‘நீ பாட்டுக்கு சொல்லத்தொடங்கு. உன்னோட மூளை அந்த புக் ஷெல்ஃபிலயிருந்து இந்தப் பாட்டை எடுத்துக் கொடுக்கும்.’

நேற்றுத்தான் அவள் மூளை எப்படி வேலை செய்கிறது என்று ஆராய்ந்து கண்டுபிடித்திருந்தாள். அவள் கற்றுக்கொள்கிற விஷயங்கள், மூளையில் ஒரு புத்தகத்தில் எழுதப்பட்டு, ஒரு பெரிய புத்தக அடுக்கில் வைக்கப்பட்டுவிடுமாம். தேவைப்படும்போது, தேவையான புத்தகம் திறக்கப்பட்டு சரியான செய்தியை மூளை அவளுக்குத் தெரிவிக்குமாம்.

‘இல்லப்பா. அந்தப் பாட்டை என்னோட பிரெய்ன் எழுதிவைக்காம விட்டுருச்சு. ஆசை முகம் எல்லாம் மறக்காம எழுதி, புக் ஷெல்ஃப்ல வைச்சுருச்சு. ஆனா இந்தப் பாட்டு இல்லை.’

‘சரி நான் சொல்றேன். உனக்கு ஞாபகம் வந்துரும். காக்கைகுருவி எங்கள் ஜாதி, நீள்கடலும் மலையும்…’

‘இங்க ரோட்ல வேண்டாம்பா. ஸ்கூல்ல இருந்து வந்தவுன்ன நீ எனக்கு சொல்லிக்குடு.’

 

ஆங்கிலத்தில் காக்கைகுருவி


விழித்திருந்த இரவினிலே

நவம்பர் 24, 2011

உடல் சாய்ந்தவுடன் கண்சாய்ந்துவிடும் எனக்கு

அரிதாய் வாய்க்கும் சில உறக்கமற்ற இரவுகள்.

அப்போதுதான் தெரிகிறது

அருகிலுறங்கும்

அவள்

தளிர்க்கரங்கள் மார்மீது விழுவதுவும்,

மென்முகம் என்முகத்தோடு இணைவதுவும்,

இசைபாடும் அவள் சுவாசத்தின் இளஞ்சூடும்,

மடிமீது படர்ந்திடும் அவள் சிறுபாதமும்,

உடலெங்கும் பரவிடுமோர் பரவசமும்

எனக்கெனக் கென்றேங்கும் முழங்காலும் அதன்கீழும்,

மனதினிலே அரும்பிடுமோர் பெருங்கனிவும்

ஆற்றொழுக்காய் ஊற்றெடுக்கும் கவிச்சொல்லும்

மறக்குமுன்னே பதியவெண்ணும் படபடப்பும்

எழுந்துவிட்டால் இதையிழப்போ மெனும்பதைப்பும்

இடையிடையே இடைவருடும் அவளுதைப்பும்

அப்பப்பா!

முகம்திருப்பி அவள் தேன்னுதலில்

இதமாகப் பதிக்கின்றேன் என்னிதழை.

இன்று மட்டும்

என்னைக் கொஞ்சம் விழிப்பில் வைத்தால்

வணங்குவேன் தாயே!


காற்றடைத்த பலூன்

ஏப்ரல் 20, 2011

என் மகளுக்கு பலூன் மிகப்பிடிக்கும்.

காற்று நிரப்பிப் பெரிதாய் ஊதிக்கொடுத்தேன்.

உருட்டியும், விரட்டியும், தாவியும் ஓடியும்

பரவசமாய் விளையாடினாள்.

பட்டென்று வெடித்தது.

வீலென்று கத்தினாள். ஓவென்று அழுதாள்.

சே! இப்படி ஏமாற்றமடைகிறாளே.

இனி இவளுக்கு பலூன் ஆசையே காட்டக்கூடாது.

கண்ணீர் காயுமுன் வேறென்னவோ வேடிக்கை.

ஓடிவிட்டாள்.

மறுநாளே,

அப்பா! எனக்கு பிங்க் பலூஊன் வேணும்.

ஆசையாய் ஓடிவந்தாள்.

மறுபடியும் வெடிக்கும். மறுபடியும் அழுவாய்.

இல்லப்பாஆ, வெடிக்காஆது.

வெடிச்சா,

நாளைக்கு யெல்லோஓ பலூஊன் ஊதிக்கலாம்.

​காற்று நிரப்பிப் பெரிதாய் ஊதிக்கொடுத்தேன்.

உருட்டியும், விரட்டியும், தாவியும் ஓடியும்

பரவசமாய் விளையாடுகிறாள்.


அப்பாவின் சொத்து

மார்ச் 25, 2011

கொஞ்சம் சம்பளத்தில்

கொஞ்சம் கொஞ்சமாய்ப்

புத்தகம் சேர்த்தார்

என் அப்பா.

கம்பனும் இளங்கோவும்

திருவாசகமும் தேவாரமும்

ஜெயகாந்தனும் லாசாராவும்.​

ஓய்வுக்குப்பின் படிக்க.​

முப்பத்தைந்து ஆண்டுகள்

காத்திருந்து​

ஓய்வும் ​பெற்றுவிட்டார்.

கொஞ்சம் சம்பளம்

நிறைய பென்ஷனாகிவிட்டதால்

அவ்வளவாய்ப் பிடிக்காத​

பெரிய புராணம்கூட

வாங்கிவிட்டார்​.​

கண்மங்கி

கவனம்சிதறிப்​ போவதால்

​இப்போது சொல்லத்

தொடங்கியிருக்கிறார்:​

இதுதான் நான்

உங்களுக்குச் சேர்த்து

வைக்கும் சொத்து​.

கைப்படாமலே பழசாகும்​

​அப்பாவின் சொத்தும்

தாத்தாவின் சொத்தும்

சேர்ந்து அச்சு உறுத்த

என் மகள் இப்போதே

கிண்டிலுக்கு மாறிவிட்டாள்.​


முத்த மறுப்பு

ஜூலை 12, 2010

மெத்த மகிழ்ச்சியுற்றேன் –

அலுவலகம் செல்லும்முன்

முத்தமொன்று கேட்டு, அவள்

முடியாதென்ற போது.

வாயில் கைவைத்து,

அப்பா தயிர் என்றாள்,

வெண்திட்டாய்ப் படிந்திருந்த

உணவின் மிச்சத்தை.


நவம்பர் 21, 2008 முதல்

ஏப்ரல் 25, 2010

என் வீட்டைச் சுற்றிலும்

அரிதாய் வரும் காகங்கள்,

அடிக்கடி வந்துபோகும் அணில்,

தூரத்தில் கம்பீரமாய்ப் பறக்கும் கழுகுகள்

(அருகில் அமரும்போது ஒடுங்கிப்போய் அழுக்காய்த் தெரிந்தன)

அங்கே எப்போதும் பூத்து நிற்கும் பெயர்தெரியாத

ஏதோ மரத்தில் பச்சைக் கிளிகள்,

மாடிமீது தண்ணீர் தொட்டியின்மேல்

அமர்ந்திருக்கும் புறாக்கள்,

மழைக்காலம் துவங்கும்வரை

வட்டமிட்ட வண்ணவண்ண பட்டாம்பூச்சிகள்,

நீண்டநாள் கண்டிராத தும்பிகள்,

சில வெட்டுக்கிளிகள், கீழ்வீட்டில்

கூண்டுக்குள் லவ் பேர்ட்ஸ்,

ஓணான்கள், இன்னும் பெயர்தெரியாத

எத்தனையோ பூச்சிகள், ஊர்வன பறப்பன,

அடையாளம் காணமுடியாத பறவைகளின் ஒலிகள்,

எதிர்வீட்டில் எப்போதும் குறைக்கும் நாய்,

எல்லாம் தெரியத் தொடங்கின

நவம்பர் 21, 2008 முதல்.

நவம்பர் 21 –

என் மகளுக்கு மட்டுமல்ல

இனிமேல்

எனக்கும் பிறந்தநாள்தான்.


மகிழ்மலர்

மார்ச் 22, 2010

மகிழ் பற்றிய என் முதல் தமிழ்ப்பதிவு. காரணம் அவள்  இன்று கோவையில்.

இல்லம் திரும்பும் போது, துள்ளி வந்து, கதவு திறந்து, தலை சாய்த்து, புன்னகை பூத்து அவள் என்னிடம் தாவி வரப்போவதில்லை இன்று.

வெறிச்சோடி இருக்கிற அலுவலகம் விட்டு வீடு செல்ல – முதல் முறையாய் – முனைப்பு ஏதும் தோன்றவில்லை.