சர்வோதய தினம் 2019

பிப்ரவரி 18, 2019

சுதந்திரத்துக்குப் பின்னான காந்தியத் தலைவர்களுள் மிகவும் முக்கியமான ஒருவரான ஜெகந்நாதன் நினைவு நாளையொட்டி, கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் முன்னெடுப்பில் காந்திகிராமப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் சர்வோதய தின நிகழ்வுகளில், கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து கலந்து கொள்ள முடிந்திருக்கிறது.

இவ்வாண்டுக்கான ஜெகந்நாதன் விருது கட்டிடத் தொழிலாளர் சங்கம் மற்றும் பல்வேறு சமூகப்பணிகளில் ஈடுபட்டு வரும் ஆர்.கீதா, மூத்த சர்வோதய இயக்கச் செயல்பாட்டாளர்களான சுந்தரராஜன், ராஜேந்திரன் ஆகியோருக்கும், மறைந்த இத்தாலிய காந்தியத் தலைவர் ஆல்பர்டோ லபாட்டே ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

இந்த மூத்த செயல்பாட்டாளர்களோடு சேர்த்து இளம் நண்பர்களான ‘தன்னாட்சி’ நந்தகுமார், ‘குக்கூ’ சிவராஜ் ஆகியோருக்கும் இவ்விருது வழங்கப்பட்டது மிகுந்த மகிழ்ச்சி அளித்தது.

நந்தகுமார் சிவா கிராம சபைகள் குறித்த விழப்புணர்வை ஏற்படுத்துவதில் கடந்த சில ஆண்டுகளாக பெரும்பங்காற்றியிருக்கிறார்.

சிவராஜ் குழந்தைகளோடு பணியாற்றுவதற்கு ஒரு பெரிய இளைஞர் திரளை ஈர்த்திருக்கிறார்.

முந்தைய நாள், மாணவர்களோடு பேசிய ‘துலா’ அனந்து சமூகத்தின் மீதும், இயற்கையின் மீதும் கரிசனத்துடன் செய்ய வேண்டிய தொழில்கள் குறித்த தன் விரிவான, செறிவான, உணர்வுப்பூர்வமான உரை மூலம் வந்திருந்த அனைவரின் மனசாட்சிகளையும் ஓர் உலுக்கு உலுக்கிவிட்டார்.

நண்பர்கள் சிவகுருநாதன், ஸ்டாலின் ஆகியோரும் மூன்று நாட்களும் கைத்தறி ஆடைகள், கருப்பட்டி கடலைமிட்டாய், குக்கூ நூல்கள் ஆகியவற்றுக்கான விற்பனையரங்குகளை அமைத்து, மாணவர்களோடு உரையாடி சமூகநலத் தொழில்கள் குறித்த ஓர் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

விழா முடிந்தபிறகு, கடந்த ஐம்பது வருடங்களாகத் தொடர்ந்து இந்தியா வந்துகொண்டிருக்கும் அமெரிக்கப் பேராசிரியர் டேவிட் வில்லிஸ் தன் மனைவி மிக்காவுடன் எங்களோடு வந்து எங்கள் கிராமத்திலும், கோவையில் பெற்றோர் வீட்டிலும் தங்கியிருந்தது மாறுபட்ட ஓர் அனுபவமாக அமைந்தது. கிராம மாணவர்களுக்கும் அயல்நாட்டினரோடு முதன்முதலாக உரையாடி பல்வேறு கேள்விகளைத் தொடுத்து உறவாட ஒரு வாய்ப்பு.

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.


பேருந்து

நவம்பர் 20, 2018

சென்ற வாரம், எங்கள் பயிலக மாணவர்கள் ஒரு நிகழ்வைப் பற்றிக் கூறினார்கள். அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கிற அவர்கள் பள்ளி முடிந்து வீட்டுக்கு வருவதற்குப் பேருந்துக்காகக் காத்திருந்திருக்கிறார்கள். பேருந்து வந்ததும் எப்போதும் போல் முண்டியடித்துக்கொண்டு ஏறியிருக்கிறார்கள். நடத்துனர் கோபமாகத் திட்டி, அவர்கள் யாரையும் ஏற்றாமலே பேருந்தை நகர்த்தச்சொல்லிவிட்டார். பேருந்து கொஞ்ச தூரம் போனதுமே, யாரோ ஒரு மாணவன் கல்லை வீசியெறிய, கண்ணாடி சிதறியிருக்கிறது. உடனே காவல்துறையினர் அழைக்கப்பட்டு, 9வது, 10வது படிக்கும் எல்லா மாணவர்களையும் மிரட்டி, விசாரித்திருக்கிறார்கள். ஜட்டியோடு உட்கார வைத்துவிடுவேன் போன்ற மிரட்டல்களையெல்லாம் மாணவர்கள் கேட்டிருக்கிறார்கள். ஒரு சிலர் சின்னதாக அடியும் வாங்கியிருக்கலாம். ஆசிரியர்களும் காவல்துறையினருக்கும் நடத்துனருக்கும் ஆதரவாகவே பேசினார்களாம்.

எங்கள் மாணவர்கள் சேதமில்லாமல், தாமதமாக வீடு திரும்பினார்கள்.

‘நீங்க ஏன்டா நெருக்கியடிச்சுட்டு ஏறணும். வரிசையா ஏறலாமில்ல?’

’30-40 பேர் உட்கார்ர பஸ்ஸுல, நாங்க 100 பேர் எறணுங்கண்ணா. அடிதடியில்லாம எப்படிண்ணா ஏற முடியும்? எத்தனை தடவை நானே படில விழுகிற மாதிரி தொங்கிட்டு வந்திருக்கேன். பிரவீன்கூட ஒரு நாள் விழுந்தாட்டாங்கண்ணா.’

பல நூறு மாணவர்கள் படிக்கிற பள்ளி. மேற்கே போகும் பேருந்து அந்த நேரத்துக்கு அது ஒன்றுதான். அடுத்த வண்டி அரை மணிநேரம் கழித்து வரும்.

அடுத்த முறை இப்படி நடந்தால், இது மாதிரி கல்லெறியாதீர்கள். புகார் எழுதிப் பழகுங்கள். கலெக்டர் வரைகூடப் போகலாம். தேவைப்பட்டால் அமைதியாகப் போராடிப் பழகுங்கள். எப்போதும் உங்கள் தரப்பில் தப்பில்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள், என்று அறிவுரைகளை அடுக்கினேன். வேறென்ன சொல்ல?


பயிலகத்தில் திருக்குறள்

நவம்பர் 20, 2018

இந்த மனிதர் உண்மையிலேயே கவிதைக்குள் மாயங்கள் செய்திருக்கிறார். எங்கள் குழந்தைகள் திருக்குறள் கற்றுக்கொள்வதை நேசிக்கின்றனர். கற்றுத்தரும்படி கட்டாயப்படுத்துகின்றனர் – ஒவ்வொரு நாளும் ஒரு சில நிமிடங்களுக்காவது. புத்தகத்தையே தொட மறுப்பவர்களும், குறள்களைக் கேட்டு மனனம் செய்து ஒப்பிப்பதில் பேருவப்பு கொள்கின்றனர். ஒரு சொல்லைக்கூட உரக்கப் படிக்க மறுப்பவர்களும், தொண்டை கிழிய இக்குறளைக்கூடக் கூவுகின்றனர்:

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்கு
துப்பாய தூஉம் மழை.

திருக்குறள் முழுவதையும் பாடத்திட்டத்தில் சேர்க்கவேண்டும் என்று ஒரு தீர்ப்பு தரப்பட்டது. என்னைக் கேட்டால், திருக்குறளைப் பாடத்திட்டத்திலிருந்தும், தேர்வுகளிலிருந்தும் முழுவதுமாய் நீக்கிவிடுங்கள் என்பேன். அதை ஒரு கொண்டாட்டமாக்குங்கள். எங்கள் குழந்தைகளைப் போலவே எல்லாக் குழந்தைகளும் திருக்குறளைக் கற்றுக்கொடுங்கள் என்று கட்டாயப்படுத்துவார்கள், அவர்களாகவே அவரவர் வேகத்தில் கற்பார்கள், மற்றவர்களோடும் மற்றவர்களிடமிருந்தும் கற்பார்கள், ஒருவர் மற்றவரை நிறைவு செய்வார்கள், மகிழ்ச்சியுடன் கற்பார்கள்.


குடி

நவம்பர் 20, 2018

கிராமம் நலம்பெற என்னவெல்லாம் செய்யலாம் என்று பயிலக மாணவர்களோடு எதேச்சையாக ஒரு சிறிய உரையாடல் நடந்தது. சுத்தம், பசுமை, கல்வி, சுற்றுச்சூழல் என்று பலவாறாகச் சொன்னார்கள்.

‘பசங்களா, எல்லாம் சரி, குடியை விட்டுட்டீங்களே,’ என்றேன்.

‘டாஸ்மாக்க மூடணும்ணா’

‘சரி, நாம என்ன பண்ணலாம்?’

‘நாங்க சொன்னா வீட்டுல அடிக்கிறாங்கண்ணா.’

‘எல்லாருக்கும் ஒரு மாலையைப் போட்டுவிடறது தாங்கண்ணா ஒரே வழி.’

‘அப்பவும் ரொம்ப நினெப்பு எடுத்தா, மாலையக் கழட்டி வைச்சிட்டுக் குடிச்சிட்டிட்டு வந்துட்டு, அப்புறமா மறுபடியும் மாலையப் போட்டுப்பாங்கண்ணா.’