தியான வனம்

ஜனவரி 1, 2017

சென்ற வாரம் முற்றிலும் புதியதோர் அனுபவத்தைக் கொணர்ந்து தந்தது. காந்திகிராம் பல்கலைக்கழகத்தில் பணிசெய்கின்றவர்களும், கடந்த சில ஆண்டுகளில் எங்கள் இனிய குடும்ப நண்பர்களாகவும் ஆகிவிட்ட ராஜா-கல்பனா தம்பதியினர், பள்ளி மாணவர்களுக்காக ஒருங்கிணைத்த ஒரு பயிற்சி முகாமுக்காகச் சென்றிருந்தோம். இம்முறை, கல்லூரி வளாகத்தில் அல்லாமல், அருகிலிருந்த தியான வனம் என்கிற ஆசிரமத்தில் நிகழ்ச்சி நடந்தது.

தியான வனத்தை நடத்திவருபவர் கோர்கோ மோசஸ் – காவி உடை அணிந்த ஒரு ஜெசூயிட் பாதிரியார். அவ்வப்போது பயிற்சிக்காக வருகின்ற பாதிரியார்களின் துணையோடும், பெரும்பாலும் தனியாகவும் ஆறரை ஏக்கர் நிலத்தை நிர்வகித்து வருகிறார். நல்ல மழை வந்து ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்ட போதும், அருகிலிருந்த அணையில் நீர் முழுவதுமாக வற்றிவிட்ட போதும், இன்னும் நிறைய பசுமை அங்கு மிச்சமிருந்தது. நாங்கள் சென்று சேர்ந்த காலைப் பொழுதில் பெய்த சிறு மழையின் கருணையில் பசுமை மெருகேறியிருந்தது.

ஃபாதர் கோர்கோ மிக எளிய ஒரு துறவு வாழ்வினை வாழ்ந்து வருகிறார். அவரது படுக்கை அறை இதுவரை நான் எங்கும் கண்டிராத ஒரு கோலத்தைக் கொண்டிருந்தது. பிரமிட் வடிவத்தில் கட்டப்பட்டுள்ள அந்த அறையில், நான்கு அடிக்குக்கும்  உயரமாக இருந்த ஒரு மரக்கட்டிலும், அதன் மீது ஒரு மெல்லிய மெத்தை விரிப்பும் இருந்தன. அறையின் ஒரு மூலையில் சில தடுப்பகளால் அமைக்கப்பட்ட ஒரு கழிவறை. இவற்றைத் தவிர அந்த அறையில் எந்த ஒரு பொருளும் இல்லை.

‘பொருட்களே இல்லாத ஒரு அறையை இப்போதுதான் பார்க்கிறேன்,’ என்றேன்.
‘எனது சில பொருட்கள் என் அலுவலக அறையில் இருக்கின்றன,’ என்றார்.

நான்கு சிறுமிகள் குத்துவிளக்கு ஏற்ற, ‘ஒளிவளர் விளக்கே’ என்ற திருமுறைப் பாடலை மகிழ்மலர் பாட நிகழ்ச்சி தொடங்கியது.

நிகழ்ச்சி நடந்த பெரிய அரங்கில், தலாய் லாமா, விவேகானந்தர், ஃபிரான்சிஸ் அஸிசி, ரூமி, மகாவீரர் என்று பல சமயத் தலைவர்களின் புகைப்படங்கள் தொங்கவிடப்பட்டிருந்தன. அவர்கள் அனைவரைப் பற்றியும் சில குறிப்புகளைக் குழந்தைகளோடு பகிர்ந்துகொண்டார். பத்மாசனம் போட்டிருந்த ஒரு சித்தரின் ரூபத்தில் யேசுவின் படம். யேசுவை ஒரு சித்தராகத்தான் பார்ப்பதாகக் கூறினார்.

வங்காளத்தில் சுவாமி சதானந்த கிரி என்பவரிடம் பல ஆண்டுகள் யோகப்பயிற்சி பெற்றிருக்கிறார். சுவாமி சரணானந்தா என்ற பெயரையும் இந்தப் பாதிரியார் பூண்டிருக்கிறார். யேசு நாம செபம் என்ற புத்தகத்தை வங்காள மொழியில் எழுதி, ஆங்கிலத்திலும் தமிழிலும் மொழிபெயர்த்திருக்கிறார்.

தியான அறை என்று தனியே ஓர் அறை இருந்தது. மிகவும் ரம்மியமான சூழலில், அமைதியின் மடியில் அமைந்துள்ள அந்த அறையின் வாயிலை நோக்கிய சுவரின் மையத்தில், 12 சமயங்களின் சின்னங்களை ஒருங்கே கொண்டுள்ள ஒரு படம் இடம்பெற்றிருந்தது. ‘ஒன்றே குலம், ஒருவனே தேவன்’ என்ற திருமூலரின் வாசகம் அதன் மேல் பிரதானமாக எழுதப்பட்டிருந்தது. படத்தின் நடுவில் தியானம் செய்யும் ஓர் உருவம்.

அனைத்துச் சமயங்களை நிறுவியவர்களும், ஆழ்ந்த தியானத்தின் மூலமாகவே ஞான நிலையை எய்தியதாகக் கூறினார்.

படத்தின் முன்னே கீதை, பைபிள், குரான் மூன்றும் விரித்து வைக்கப்பட்டுள்ளன. அறையின் புத்தக அடுக்கில், அந்த நூல்களின் பல பிரதிகள் இருந்தன.

முதல் நாள் மாலையில், 10-15 வயதுக்குள் இருந்த 30 குழந்தைகளும் ஒரு மணிநேரம் பக்திப்பாடல்கள், வினோபாவின் சர்வசமயப் பாடல், தியானம், பைபிலிலிருந்து அன்று நாங்கள் கண்ட சில குறள்களுக்கு இணையான சில பத்திகள் படிக்கப்படுவதைக் கேட்பது என்று அமைதியாகக் கழித்தனர். பாதிரியார் 12 சமயங்கள் குறித்தும் குழந்தைகளுக்குச் சுருக்கமாகக் கூறினார். புத்தரின் கதையைச் சொன்னார்.

மையப் படத்துக்கு தீபாராதனை செய்து தியானத்தை முடித்தார்.

அடுத்த நாள் காலை 6 மணிக்கு, சில உடற்பயிற்சிகளுக்குப் பின்னர், மீண்டும் தியான அறையில் ஒரு மணி நேரம். இம்முறை பைபிலுக்குப் பதில், கீதையிலிருந்து சில பத்திகளைத் தேர்ந்தெடுத்துத் தந்து, என்னைப் படிக்கச் சொன்னார்.

அவர் சொன்ன புத்தர் கதையின் பல பகுதிகள் நடந்திருக்க வாய்ப்பில்லை என்று தர்மானந்த கோஸம்பி எழுதியிருப்பதைச் சுட்டிக்காட்டினேன். ‘ஆம், அவை புராணங்கள் தான்; எல்லா ஞானிகள் குறித்தும் வெகுசில ஆண்டுகளில் புராணங்கள் எழுப்பப்படுகின்றன; அவர்களது தத்துவங்களை விளக்கவே அந்தப் புராணங்கள் பயன்படுகின்றன,’ என்றார்.

பயிற்சியின் இடையில் ஃபாதர் கோர்கோ கொரிய நடனம் கற்பித்தார். எல்லாரும் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். நித்யா பறவைகள் குறித்து ஒரு வகுப்பெடுத்தபோது, மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

குறள் அடிப்படையிலான எங்களது வகுப்புகள் எளிமையானவையாக மாறின; ஒரு வகையில் அவசியமற்றும் போயின. கண்ணெதிரில் அறமும் அன்பும் நிறைந்த ஒரு எளிய மனிதர் இருக்கும்போது நாம் சொல்லிப் புரியவைப்பதற்கு என்ன இருக்கிறது.

கிராமத்துள் குழந்தைகளைக் குழுக்களாக அனுப்பி, ஒவ்வொரு குழுவும் 5 வீடுகளுக்கேனும் சென்று, மக்களோடு பழகி, உரையாடி வருமாறு செய்தார். ஒரு சில வீடுகளில் நாய்கள் குரைத்தன; ஓரிரு வீடுகளில் மனிதர்கள் குரைத்தனர்; பெரும்பாலும் உள்ளே அழைத்துவைத்து அளவளாவி, உண்ண ஏதேனும் கொடுத்து அனுப்பினர். வறட்சியால் வருமானமின்றி, வேலையின்றித் தவித்தாலும், மனங்களில் இன்னும் ஈரம் இருக்கத்தான் செய்கிறது.

தனக்குப் பின் தியான வனத்தை நடத்துவதற்கு எவரும் இதுவரை ஆர்வம் காட்டவோ பயிற்சி பெறவோ இல்லை என்கிற ஏக்கம் ஃபாதர் கோர்கோவுக்கு இருக்கிறது. இந்த இடம் பக்தர்களைக் (devotees) காட்டிலும் ஆன்மீகத் தேடலுடையவர்களுக்கானது(Seekers) என்று குறிப்பிட்டார். நிறுவன எதிர்ப்பு என்று பெரிதாக இல்லாவிட்டாலும், பெரிய ஆதரவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆண்டுதோறும் வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொண்டு தியான வகுப்புகள் மூலமாகவும், ஆசிரமத்தில் நடத்தப்படும் முகாம்களின் மூலமாகவும் நிர்வாகத்திற்குத் தேவையான நிதி திரட்டிக்கொள்கிறார். குடிப்பழக்கத்திலிருந்து விடுபடவும் முகாம்கள் நடத்துகிறார்.

‘ஒளிவளர் விளக்கே’ பாடலைப் பழகவேண்டும் என்று கூறி, மகிழ்மலரை மீண்டும் பாடச்சொல்லி பதிவு செய்துகொண்டார். வரிகளை எழுதிக்கொண்டார். ஆனந்த பைரவி ராகமாக இருக்கவேண்டும் என்றார். பாடல் இயற்றியது யார் என்பது அப்போது உறுதியாக நினைவில்லை (திருமாளிகைத் தேவர்). அவரது நூலகத்துக்கு அழைத்துச் சென்றார். திருமுறை முழுவதும் 20க்கும் மேற்பட்ட பாகங்களாக இருந்தது. மேக்ஸ் மியூலரின் கிழக்கத்திய சமயங்கள் குறித்த நூல்களின் முழுத்தொகுதியும் வைத்திருக்கிறார். தனது 18ம் வயது முதல், 38 ஆண்டுகள் வங்காளத்தில் இருந்துவிட்டதால், தமிழில் போதிய அளவு தேர்ச்சி பெற இயலவில்லை எனக் குறைபட்டார்.

இரண்டு நாட்களின் முடிவில் மாணவர்களிடம் நிகழ்ச்சி பற்றிய கருத்துகளைக் கேட்டுக்கொண்டிருந்த போது ஒரு சிறுமி கூறினாள், ‘நான் ஃபாதர் கிட்ட இந்துக்கள் பைபிள் படிக்கலாமான்னு கேட்டேன். அவர் படிக்கலாம்னு சொன்னார். அது எனக்கு ரொம்பப் பிடிச்சது.’


பேருந்துப் பயணம் 1

திசெம்பர் 11, 2016

பொதுவாக பொள்ளாச்சி-கோவை பாதையில் தனியார் பேருந்துகளில் நான் ஏறுவதில்லை. சாதாரணக் கட்டணம் வசூலிக்கும் அரசுப் பேருந்துகளாகப் பார்த்து, நடத்துனரிடம் உறுதி செய்துகொண்டுதான் ஏறுவேன். நேற்றிரவு, நேரமாகிவிட்டதாலும், சாதாரணக் கட்டண அரசுப் பேருந்து எதுவும் தயாராக இல்லாததாலும், தனியார் பேருந்தில் ஏறினேன்.

கிண்டிலில் படித்தபடியும், உரக்க ஒலித்துக் கொண்டிருந்த பாட்டுகளைக் கேட்ட படியும் பயணம் அமைந்தது. பாட்டோடு பாட்டாக குடிமகன் ஒருவன் பாடிக் கொண்டே வந்து கொண்டிருந்தான். இடையிடையே அஜித் பற்றிப் புகழாரங்கள்.

நடத்துனர் பாட்டை நிறுத்தினார். அஜித் பாட்டு ஒன்றைப் போடச் சொல்லிக் கேட்டான். பதில் வராததால், அவனே பாடத் தொடங்கினான். பின் இருக்கையில் அமர்ந்து கொண்டு என் இருக்கை மீது அவன் தாளம் போட்டது, கிண்டிலில் படிப்பதற்கு இடையூறாக இருந்தது.

‘தல பத்தி யாராவது தப்பா பேசினா, மொட்டைத் தலையில குட்டு வைச்சுருவேன்,’ என்று ஒரு வசனம் சொல்கிற வரை யாரும் அவனைக் கண்டுகொள்ளவில்லை.

மொட்டை அடித்திருந்த இளைஞன் ஒருவன் தன் நண்பனோடு வந்திருந்தான். சந்தனம் பூசியிருந்த மொட்டைத் தலையைச் சுற்றி ஒரு துணி கட்டியிருந்தான். வேகமாக எழுந்து வந்து,
‘நானும் பார்த்துக்கிட்டே இருக்கேன். சத்தம் போட்டுகிட்டே வந்துட்டிருக்க. வாயைப் பொத்திகிட்டு உக்காரு,’ என்று கையை ஓங்கினான்.

குடிமகன், ‘பாஸ், நானும் மதுரதான். என்னை அடிச்சுருவியா,’ என்றான் விடாப்பிடியாக. இருவரும் வாட்ட சாட்டமான இளைஞர்கள்.

மார்பின் மீது ஒரு அடி விழுந்தது. இளைஞனின் நண்பன் தடுத்து அவனை இழுத்துச் சென்றுவிட்டான்.

குடிமகன் கொஞ்ச நேரம் புலம்பிக் கொண்டும் பொருமிக் கொண்டும் அமர்ந்திருந்தான்.

உக்கடம் நெருங்கும் போது, எழுந்து லுங்கியை இறுக்கிக் கட்டியபடி சென்று, ‘என்னை அடிச்சுட்ட இல்ல. கீழ எறங்குடா..ஒத்தைக்கு ஒத்தை பார்த்துடலாம்,’ என்றான் வீறாப்பாக.

மொட்டை இளைஞனும் வேகமாக எழுந்து, ‘எறங்கு பாத்துறலாம்,’ என்றான்.

குடிமகனின் வலது கண்ணில் ஒரு சொட்டுக் கண்ணீர் துளிர்த்தது.நரம்புகள் புடைத்து நின்ற வலுவான வலது கையால் துடைத்துக்கொண்டே,
‘நான் அடிக்க வேண்டாம்னு சொல்லல. என்னை ஏன் பாஸ் அடிச்சீங்க?’ என்று கேட்டுவிட்டு இறங்கிச் சென்றான்.


தஞ்சைப் பயணம்

ஜனவரி 12, 2011

எனது தஞ்சைப் பயணம் குறித்த ஆங்கிலப் பதிவு இங்கே.

இந்தப் பயணத்தை மேற்கொள்வதற்கு உந்துதலாகவும், உறுதுணையாகவும் இருந்தது,  எழுத்தாளர் ஜெயமோகனின் பயணக் கட்டுரைகள். இது குறித்து அவருக்கு நான் எழுதிய கடிதமும், அவரது பதிலும் இங்கே.

———————————————-

அன்புள்ள ஜெயமோகன்,

அண்மையில் தஞ்சைப் பயணம் சென்றிருந்தேன். உங்கள் தஞ்சைப் பயணம் குறித்த கட்டுரைகளால் உந்தப்பட்டது ஒரு முக்கிய காரணம். நீங்கள் சென்ற இடங்கள் அனைத்திற்கும் செல்ல இயலவில்லை எனினும், நாங்கள் சென்றவை அனைத்தும் நீங்கள் சுட்டிக்காட்டியவை. குடுமியான்மலை, தாராசுரம், கொடும்பாளூர் ஆகிய அற்புதமான இடங்களுக்குச் செல்ல ஆர்வமூட்டியதற்கு என் நன்றிகள்.

மூன்று ஆண்டுகளாய் உங்கள் பதிவுகளைத் தொடர்வதன் விளைவாய், இந்த வருடம் நான் வாங்கிப் படித்துக்கொண்டிருக்கிற பல புத்தகங்களும், நீங்கள் அடையாளம் காட்டியவை…நாஞ்சில் நாடன், ஆ.மாதவன், சுகுமாரன், வண்ணநிலவன் போன்றோர் எழுதியவை. சக எழுத்தாளர்கள் மீதும் வெளிச்சம் போட்டுக்காட்டுவது, ஓர் அரிய பங்களிப்பு.

தஞ்சைப் பயணம் குறித்த என் ஆங்கிலப்பதிவு இங்கே. தமிழறியாத என் நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளும் நோக்கில் எழுதியது.

நான் ‘திசைகளின் நடுவே’ குறித்து எழுதிய கடிதம் உங்கள் கவனித்தில் பட்டதா எனத்தெரியவில்லை. எனவே அந்த மடலின் தொடர்ச்சியாகவே இதையும் இணைத்திருக்கிறேன்.

அன்புடன்
த.கண்ணன்

https://urakkacholven.wordpress.com/

அன்புள்ள கண்ணன்

பதிவைக் கண்டேன். நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.

பொதுவாக நாம் நம்முடைய பண்பாட்டு மூலங்களைப்பற்றி இன்னும் விரிவாக தொடர்ச்சியாகப் பேசுவது அவசியம் என்று நினைக்கிறேன். தமிழின் சொத்துக்கள் எனச் சொல்லப்படும் பல கோயில்கள் பற்றி மிகக்குறைவாகவே பொதுவெளியில் பேசப்பட்டிருக்கின்றன

ஜெ

——————————————–