பசுமை நிறைந்த எதிர்காலம்

ஓகஸ்ட் 4, 2008

Go green என்று உலகம் சொல்லளவில் நின்று தவித்துக்கொண்டிருக்கையில், இந்தியா ஏன் பசுமையை அரவணைக்கக் கூடாது என்று உலகுக்கு நியாயப் படுத்திக்கொண்டிருக்கையில், நம் முன் எழுவது நாளை உலகம் எப்படி பாதுகாக்கப்படும் என்கிற மலைப்பு. அந்த மலைப்பையும், தவிப்பையும் தள்ளிவைத்து ஆராய்ந்தால் கண்முன் விரிவது ஒரு மாபெரும் வாய்ப்பு.

 நீராவியின் உந்துதலில் வளர்ந்தது ஐரோப்பா. பெட்ரோல் இயந்திரங்களின் உந்துதலில் வளர்ந்தன அமெரிக்கா, ஜப்பான், வளைகுடா. நம் முன் அப்படியொரு வாய்ப்பு இப்போது கிடக்கிறது.

உலகப் பொருளாதரத்தின் அடுத்தகட்ட வளர்ச்சியை, தலைமை நிலையை நிர்ணயிக்கப்போவது ‘பசுமை’ தொழில்நுட்பங்கள். நிலக்கரியோ, பெட்ரோலோ, அணுசக்தியோ பெருமளவு நம்மிடம் இல்லாத இயற்கைவளங்கள். ஆனால் பசுமைத் தொழில்நுட்பங்கள் இயற்கை வளங்களை அழிக்காமல் உருவாக வேண்டியவை என்கிற காரணத்தாலேயே, ஒளியையும், காற்றையும் இதுவரை பயன்படுத்தாத இன்னபிறவற்றையும் கட்டுப்படுத்தத் தெரிந்த எவர் வேண்டுமானாலும் இத்துறைகளில் முன்னேறலாம். நாமும் தான்.

இத்துறைகளில் வளர்ந்த நாடுகள் இன்னமும் பெருவளர்ச்சி அடையவில்லை. பெருமளவு பணம் இன்னும் முதலீடு செய்யப்படவில்லை. ஓரளவு எல்லோரும் சம அளவு வளர்ச்சி(யின்மை)யில் தான் இருக்கிறோம். யார் முதலடி எடுப்பது என்று போராடிக்கொண்டிருக்கற மற்றவர்களுக்கு முன்னர் நம் முழுக் கவனமும் இங்கே திரும்பினால், நாளை உலகம் நமது கைகளில்.

பசுமையான கனவுகள் கண்டுதான் பார்ப்போமே. அணுசக்தித் தீண்டாமையிலிருந்து மீளப்போகிறோம். உலகிலேயே மலிவான பெட்ரோல் வாகனங்கள் செய்ய முயற்சித்து ஓரளவு வெற்றியும் கண்டுவிட்டோம்.  இவற்றோடு, அல்லது இவற்றிற்குப் பதிலாக, உலகிலேயே மலிவான (சூரியஒளி மாதிரி) மாற்றுசக்தி வாகனங்கள் செய்து பார்ப்போமே! மாற்று முறைகளில் மின்சாரம் உற்பத்தி செய்து பார்ப்போமே. வெற்றிபெற்றால் உலகம் நம்மைப் பின்பற்றும். இதைவிடப் பெரிய பொருளாதார வாய்ப்பு நமக்குக் கிட்டாது. இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் அமெரிக்கா இருந்த நிலையில் இன்று நாம் நிற்க முடியும் – அரசும், தனியார் நிறுவனங்களும், விஞ்ஞானிகளும் முனைப்போடு மனம் வைத்தால். 21ம் நூற்றாண்டின் ஹென்றி ஃபோர்ட் நம்மிடையே எங்கோ உலவிக்கொண்டிருக்கக்கூடும்; அவரை வளர விடுவோம்.


தேய்பிறையில் வாடிக்கையாளர் சேவை

பிப்ரவரி 21, 2008

அனைத்துத் துறைகளிலும், இந்தியாவில் பெருகிவரும் பெரும் நிறுவனங்கள் வாடிக்கையாளர் சேவையில் பின்னோக்கியே சென்று கொண்டிருக்கின்றன. இந்திய நிறுவனங்களாகட்டும், பண்ணாட்டு நிறுவனங்களாகட்டும், அனைத்தின் மீதும் இக்குற்றச்சாட்டை சுமத்தலாம். இந்நிறுவனங்களின் வளர்ச்சி குறித்த எதிர்ப்புகளை ஒதிக்கிவிட்டு, அவைகளின் செயல் திறத்தையும், சேவை தரத்தையும் ஆராய்ந்து பார்த்தால், கடக்க வேண்டிய பாதை வெகு தொலைவு என்பது புரியும்.

வங்கிகளில் நான் சந்தித்த தரக்குறைவான சேவைகள் அநேகம். என் அண்மைக்கால அவதிகளை, ஒரு நெடிய புலம்பலாக இங்கு பதிவு செய்திருக்கிறேன். தேவையற்ற தவறுகளால் எத்தனை உலைச்சல், அலைச்சல்.

ரிலையன்ஸ், ஸ்பென்ஸர், ஃபுட் வேர்ல்ட் போன்ற பல பெரிய தொடர்கடைகளில், பல நேரங்களில் அழுகிய தக்காளிகளும், வெங்காயமும் அகற்றப்படாமலே கிடக்கின்றன. பல மாதங்களுக்கு முன் தயாரிக்கப்பட்ட பழைய பொருள்கள் நிறையக் காணக்கிடைக்கின்றன. தயாரிப்பான தேதியைக் காணாமல் நான் இங்கு எதுவும் வாங்குவதில்லை. வசதியையும் பழக்கத்தையும் முன்னிட்டு என்னைப் போன்றவர்கள் அங்கு குவிந்த வண்ணம் இருந்தாலும், உலகத் தரத்தை இன்னும் இந்நிறுவனங்கள் எட்டவில்லை என்பது கசப்பான உண்மை.

நிர்வாகத் திறனாலும், விளம்பர பலத்தாலும், சரியான இடங்களின் தேர்ந்தெடுப்பாலும், தேசிய அளவில் பரந்திருப்பதால் குறைந்த விலைகளை நிர்ணயிக்கமுடிகிறதாலும், தயாரிப்பாளர்கள் மற்றும் உழவர்களோடான நேரடித் தொடர்புகளாலும், பல தரப்பட்ட பொருள்களை ஒரே இடத்தில் விற்க முடிவதாலும், குளிர்சாதன வசதி, கார் நிறுத்துமிடம் என்ற பிற அனுகூலங்களாலும் ரிலையன்ஸ், வால்மார்ட் போன்ற தொடர்கடைகளின் வளர்ச்சி பெறுகத்தான் போகிறது. இதனால் ஏற்பட சாத்தியமான பரவலான பொருளாதார வளர்ச்சியின் பொருட்டு, இவ்வளர்ச்சியை எதிர்ப்பதுவும் ஏற்றதல்ல.

ஆயினும் இவை வாடிக்கையாளர் சேவையில் முன்னேற்றம் காண முடியாவிட்டால் சந்திக்க வேண்டிய சிக்கல்கள் ஏராளமிருக்கும். வர்த்தக வளர்ச்சியில், இயந்திரமயமான சேவையை அளிக்கும் முயற்சியில் மனித நயத்தை (human touch) இழந்துவிடக்கூடாது. 

இப்பெரு நிறுவனங்கள் தடுமாறப்போகிற சேவை அம்சத்தில்தான், சிறிய கடைகள் சிறப்பாகச் செயல்பட்டு நசுங்கிப்போகாமல் தமக்கென ஓர் இடத்தை உருவாக்கிக் கொள்ளும் வாய்ப்பும் இருக்கிறது. பொருள்பலத்தை புன்னகை கொண்டு சிறு வணிகர்களால் எதிர்கொள்ள முடியும்.