96

நவம்பர் 20, 2018

96 சன் டீவியில் வரும்வரை காத்திருக்காமல் ஞாயிறன்றே கே.ஜி.யில் பார்த்தோம். பள்ளிக்கால நினைவுகள் ஏராளமாகத் திரண்டு வந்தன.

எத்தனை தடவை இதே போல பேருந்தில் அடித்துப்பிடித்து வந்திருப்போம் என்று மகளிடம் சொல்லியவாறு வந்தேன். எத்தனை முறை அந்தப் படிகளில் அமர்ந்து காத்திருந்திருப்போம். டிக்கெட் வாங்கித்தருவதாகச் சொல்லி 30 ரூபாயை எப்படி என்னிடமிருந்து ஒருவன் ஏமாற்றினான்.

திருமணத்துக்குப்பின் முதன்முதலாக ஒரு படத்துக்கு வந்தோம்…யாராவது அப்பா அம்மாவைக் கூட கூட்டீட்டு வருவாங்களா என்று மனைவிக்கும் அலறும் நினைவுகள்.

உள்ளே சென்றோம். புகைப்படக் கலைஞராக நாயகன். ‘அப்பா, அந்தப் பக்கத்துக்கும் இந்தப் பக்கத்துக்கும் கலர் வித்தியாசமா இருக்குப்பா,’ என்றாள் மகள். இருள் காட்சியொன்றில் தோன்றிய விண்மீன்கள் விடிந்த பின்னும் விலகவே இல்லை. கொஞ்ச நேரம் ஏதோ புது திரை மொழியோ என்று நினைத்திருந்தேன். பின்னர் தான் புரிந்தது.

திரையில் மேலிருந்து கீழாய் நான்கு கோடுகள். நிறைய ஓட்டைகள், ஒளி பாய்ந்து விண்மீன்களாய் மிளிர்ந்தன.


CIAவின் Animal Farm: நவயுக விலங்குப் பண்ணைகள்- பாகம் 2

பிப்ரவரி 18, 2008

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர், Animal Farm திரைப்படத்தை CIA மாற்றியமைத்ததாம்; படித்தபோது வியப்பாக இருந்தது. கம்யூனிஸத்தை வீழ்த்த அமெரிக்கர்கள் அபத்தத்தின் எல்லைகளை அளந்திருக்கிறார்கள்.

Animal Farm புத்தகத்தின் இறுதியில், நான் முன்பு எழுதியது போல், மனிதர்களின் கொடுங்கோல் ஆட்சியை மாற்றி பன்றிகளின் கொடுங்கோலாட்சி உருவாகிறது. மற்ற விலங்குகள் மனிதர்களையும் பன்றிகளையும் வேறுபடுத்த முடியாமல் மாறிமாறிப் பார்க்கின்றன.

இந்தக் காட்சியை, திரைப்படத்தில் திட்டமிட்டு மாற்றியிருக்கிறதாம் அமெரிக்க ஒற்று நிறுவனம்.  காட்சியிலிருந்து மனிதர்களை நீக்கிப் பன்றிகளை மட்டும் மையப்படுத்தியிருக்கிறார்கள். இதனால் முதலாலித்துவ மனிதர்களை மறக்கடித்து கம்யூனிஸ்ட்டுப் பன்றிகளை மட்டும் மட்டம் தட்டிவிட்டார்களாம். இருவரையுமே ஒரே தட்டில் வைத்த Orwell அப்போது மறுத்துப்பேச உயிரோடு இல்லை.

 உலக அரசியல் அரங்கிலும் சிறுபிள்ளை விளையாட்டுகள் சாத்தியம்தான் போலும்.


Seemabaddha – சத்யஜித் ரே

ஜனவரி 2, 2008

எத்தனை பேர் zee studioவில் ஞாயிற்றுக்கிழமை சத்யஜித் ரே படங்கள் பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை. பழைய தூர்தர்ஷனில் பன்மொழிப் படங்கள் பார்த்த நாட்கள் நினைவுக்கு வருகின்றன. இன்றைய குழந்தைகள் இழக்கிற நிறைய விஷயங்களில் ஒன்று.

அன்றாட நிகழ்வுகளை அழகாய், துல்லியமாய் தர முடிந்திருக்கிறது ரே’யால். ஒரு மனிதன் வெற்றி என்று தான் நினைக்கிற ஒன்றை அடையத் தர நேர்கிற விலைதான் படம். நாயக்கனுக்கும் நாயக்குமான (மனைவியின் தங்கை) உறவில் நளினம். இத்தகைய உறவுகளைத் திண்ணமாய் விளக்காமல், define செய்யாமல், விடுவதின் மூலம்தான் கதைக்கு ஓர் ஆழம் கிடைக்கிறது – நம்மவர்களும் இதைப் புரிந்து கொண்டால் நாமும் அடுத்த படியில் அடிவைப்போம்.

 கடைசிக்காட்சியின் symbolism அழகு. படிகளில் உயர ஏற ஏற நாயகன் தளர்ந்து போகிறான்.

ஒரு தமிழ் பாத்திரமும் உண்டு. தமிழில் தத்துவார்த்தமாய்ப் பேசுகிறார். ‘நெருப்பை விட்டு மிகவும் விலகியிருக்காதே, பயனில்லை. மிக அருகே சென்றாலும் சுடும். சரியான தொலைவில் இரு.’

அதிக உழைச்சலில்லாமல் எளிதாக ஒரு நல்ல படம் எடுக்க முடிந்திருக்கிறது.


One flew over the cuckoo’s nest

திசெம்பர் 31, 2007

உலக சினிமாக்களில் அவ்வப்போது சஞ்சரித்து வருகிறேன். அண்மையில் One flew over the cuckoo’s nest பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. Milos Forman படம். Michael Douglas தயாரிப்பு (ஆச்சர்யம்!).

ஆழமானது என்றாலும், சாதரணக் கதை (நாவலைத் தழுவிய படம் – நாவலைப் படித்ததில்லை; பிடித்திருக்கும் என்று தோன்றவில்லை). நிர்ணயிக்கப்பட்ட விதகளுக்கும் மனித விருப்பத்திற்கும் விடுதலையுணர்வுக்கும எதிரான போராட்டம். சொன்ன விதம் உலுக்குகிறது. அத்தனை பேரும் அழுத்தமாக நடித்திருக்கிறார்கள். Jack Nicholson நடித்து As good as it gets, Departed பார்த்திருக்கிறேன். Al Pacino, Robert DeNiro வரிசையைச் சார்ந்தவர். சுற்றிலும் அனைவரும் அவ்வளவு சிறப்பாக நடித்திருக்கிற போதும் இவரால் தனித்துத் தெரிய முடிகிறது.

நாயக்கனுக்கும் நாயகிக்கும் இடையில் இடைவிடாத போராட்டம். இறுதியில், தமிழ்ப்படமாக இருந்தால் காதலித்திருப்பார்கள். இதில் பார்வை பரிமாற்றத்தற்கான அர்த்தத்தை (நிறைய வெறுப்பு,போட்டி கொஞ்சம் காமம்கூட இருக்கலாம்) பார்ப்பவர்கள் கற்பனைக்கு விட்டுவிட்டார்கள்.

தமிழில் இப்படி படம் எடுக்க முடியும் என்றே தோன்றுகிறது. சிவாஜியால், கமலால் நடிக்க முடிந்த பாத்திரங்கள்தான். சுற்றிலும் ஈடுகொடுக்க இவ்வளவு துணைநடிகர்கள் கிடைப்பார்களா தெரியவில்லை. பாடல்கள் இல்லாத படத்தை எடுக்க இயக்குனர் கிடைப்பாரா தெரியவில்லை. காதல் இல்லாத படத்தை எடுக்கத் தயாரிப்பாளர் கிடைப்பாரா தெரியவில்லை. ரசிப்பதற்கு நிச்சயம் ஆட்கள் இருக்கிறார்கள்.