அரசியல் குறள்

மார்ச் 27, 2020

நீண்ட நாள்களுக்குப் பிறகு சமகாலக் கட்சியரசியல் பற்றி எதுவும் குறிப்பிடாமல் திருக்குறள் குறித்து இவ்வாரம் ஒரு நீண்ட உரையாற்றினேன். வள்ளுவன் அரசியல் பற்றிச் சொன்ன சில குறள்களை மட்டும் சொல்லிவைத்தேன்.

வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉங் கோடா தெனின். (546)

இயற்றலு மீட்டலுங் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு. (385)

காட்சிக் கெளியன் கடுஞ்சொல்ல னல்லனேல்
மீக்கூறு மன்ன னிலம். (386)

முறைசெய்து காப்பாற்று மன்னவன் மக்கட்
கிறையென்று வைக்கப் படும். (388)

செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ் தங்கு முலகு. (389)

எண்பதத்தா னோரா முறைசெய்யா மன்னவன்
தண்பதத்ததாற் றானே கெடும். (548)

தம்மிற் பெரியார் தமரா வொழுகுதல்
வன்மையு ளெல்லாந் தலை. (444)

இடிப்பாரை யில்லாத வேமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும். (448)

நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே யொழிய விடல். (113)

கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்
டல்லவை செய்தொழுகும் வேந்து. (551)

அல்லற்பட் டாற்றா தழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்கும் படை. (555)

குடிதழிக் கோலோச்சு மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கு முலகு. (544)


இடுக்கில் நுழைதல்

நவம்பர் 7, 2019

உலகம் திருக்குறளைப் பொதுமறையாக ஒப்புக்கொள்கிறதோ இல்லையோ, தமிழர்கள் திருக்குறளைப் பொதுமறையாகத்தான் கொண்டாடிவந்துள்ளார்கள். மதம் தாண்டி, ஒரு மொழியின், அம்மொழிபேசும் மக்களின் பொது அடையாளமாகக் குறள் கருதப்பட்டுவந்துள்ளது. இது ஏதோ திராவிடக் கட்சியினரின் சதியோ சாதனையோ அல்ல. அவர்களுக்கு முன்பே திருக்குறள் பல அறிஞர்களாலும் பொதுமறையாகப் பார்க்கப்பட்டிருக்கிறது. பரிமேலழகர் உரையை விளக்கவுரையுடன் பதிப்பித்த வை.மு.கோ. அவ்வாறுதான் கூறுகிறார். சைவ மடமான திருப்பனந்தாள் காசி மடத்தின் உரைக்கொத்துப் பதிப்புகளிலேயே கூட இதைக்காணலாம். ராமக்கிருஷ்ண மடம் பதிப்பித்த கி.வ.ஜ. ஆய்வுரையிலும் இதே முடிவுக்கே வருகிறார்கள்.

வள்ளுவர் இன்ன மதம் என்று எதை வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளும் உரிமை பாஜகவுக்கும் உண்டு. ஆனால் திடீரென்று அவருக்கு ஆதாரமற்ற சமயச்சாயம் பூசுவதிலுள்ள அரசியல் கணக்குகள் ஆபத்தானவை. சமூகத்தின் அனைத்துத் தரப்பினரையும் இணைக்கும் ஒரு முக்கியமான சரடினை அறுக்கும் முயற்சி இது. ஒருவகையில் இது இவர்கள் இந்துத்துவக் கட்டமைப்பில் உள்ளடக்கியிருக்கும் சமணர்களையும் அந்நியப்படுத்தக்கூடும். தமிழின் முக்கியமான சமண, பௌத்தப் படைப்புகளை அனைத்துத் தமிழர்களும் கொண்டாடும் வழக்கமே உ.வே.சா. காலம் தொடங்கி இங்குண்டு.

குறள் சைவ நூல் அல்ல என்று சொல்பவர்கள் எல்லாரும் சைவ எதிர்ப்பாளர்களோ, இந்துமத எதிர்ப்பாளர்களோ அல்லர். சைவ நூல் என்பதால் திருவாசகத்துக்கு உருகாமலோ போய்விட்டோம். உண்மையில் என் மகள் திருமுறையிசை கற்றுக்கொள்ளத்தொடங்கிய கடந்த ஐந்தாண்டுகளில், திருக்குறளை விடவும் தேவாரமும் திருவாசகமுமே என் காதில் அதிகம் விழுந்துகொண்டிருக்கின்றன. திருக்குறள் சைவ நூலாக இருந்தால் அதை ஏற்றுக்கொள்வதில் என்ன தயக்கம் இருக்கமுடியும்.

திருக்குறள் பரிமேலழகர் உரைப் பதிப்பில் (உமா பதிப்பகம்) வை.மு.கோபாலக்கிருஷ்ணமாச்சாரியார் வள்ளுவர் வைதிகக் கொள்கையினர் என்று கொண்டாலுமே இன்ன மதத்தவர் என்று கூறமுடியாது என்று எழுதுகிறார்:

/இவரது மதம் இன்னதென்று எவ்விதத்திலும் நன்கு விளங்கவில்லை. இவர் இந்நூலின் முதலிற் கூறிய கடவுள் வாழ்த்தும், பல சமயங்கட்கும் பொதுவாகவே உள்ளது; மற்ற விஷயங்களும் பெரும்பாலும் இப்படியே. இவரைச் சைவரென்றாவது வைஷ்ணவரென்றாவது ஒருசார்பாகக் கூறி யாவரும் ஒத்துக்கொள்ளும்படி நிறைநிறுத்துதற்குத் தக்க ஆதாரமொன்றுமில்லை. இவர்க்கு நாயனாரென்று வழங்குகிற பெயர் மாத்திரத்தைக் கொண்டு அவரைச் சைவரென்று சாதிக்கலாகாது; நாயனாரென்னும் அச்சொல் சைவசமயத்தில் மாத்திரமேயன்றி வைஷ்ணவ சமயத்திலும் ஜைந சமயத்திலும் கடவுளுக்கும் அடியார்கட்கும் பெயராக வழங்குதல் உணர்க. […]

இது நிற்க: இவரது மதம் ஜைனமாயிருக்கலாமென்று சிலர் ஊகிக்கிறார்கள்; […] ஜைநர்க்குச் சிறப்பாகவுள்ள புலால்மறுத்தல், கொல்லாமை என்ற ஒழுக்கங்களை மிக வற்புறுத்திக் கூறுதலும், அதிலும் “அவிசொரிந்தாயிரம் வேட்டலினொன்ற னுயிர்செகுத்துண்ணாமை நன்று” என யாகத்தை மறுத்தலும் முதலிய என்ப. அந்தத் திருக்குறளில் “உலகியற்றியான்”, “அந்தணர் நூல்”, “மறப்பினுமோத்துக் கொளலாகும் பார்ப்பான்”, “பிறப்பொழுக்கம் குன்றக்கெடும்”, “அறுதொழிலோர் நூன்மறுப்பர்”, “அவியுணவி னான்றோர்” என்பவை முதலாகக் கூறியன கொண்டு இக்கொள்கை மறுக்கப்படும். இவர் வேதம், கடவுள், உயிர், பூதமைந்து, புலால்மறுத்தல், தவம் முதலியன கொண்டிருத்தலால், பௌத்தருமாகார். இனி, “மடியிலா மன்னவனெய்தும் அடியளந்தான், தாஅயத்தெல்லாம் ஒருங்கு” என்று கூறியிருத்தலாலும், “தாம்வீழ்வார் மென்தோட்டுயிலினினிதுகொல் தாமரைக்கண்ணானுலகு”, என்று சிற்றின்பத்தை எல்லாவற்றினுஞ் சிறந்த மோட்சலோகத்துப் பேரின்பத்தினும் சிறந்தது என்று சொல்ல வேண்டிய விடத்துத் தாமரைக் கண்ணானுலகு என்று திருமாலினது ஸ்ரீ வைகுண்ட லோகத்து இன்பத்தையே குறித்தலாலும், இவ்வுலகமாகிய லீலாவிபூதிக்கும் ஸ்ரீவைகுண்டமென்கிற நித்திய விபூதிக்கும் இறைவன் திருமாலேயென்று தெரிவித்த ஆசிரியர் திருமாலுக்கு உரிய அகாரத்தையே முதன்மொழியாகத் தொடங்கினாலும், இங்ஙன் அகச்சான்று பல இருத்தலால் இவரை வைஷ்ணவர், தம்மதத்தவரென்று சாதிக்கலாம். ஆயினும், தாமரைக்கண்ணானென்பது “மலர்மிலசையேகினான்” என்றாற்போன்று அடியார்களின் இதய கமலத்தின்கணுள்ளானென்ற பொருளைக் காட்டலாமாதலால் திருமாலையே சிறப்பாகக் காட்டுவதென்று கொள்ளவேண்டியதில்லை யென்றும், “அடியளந்தான் தாஅயது” என்று கூறியமாத்திரத்தானே திருமாலினிடத்துப் பக்தியினாற்றான் கூறினாரென்று கொள்ள முடியாதென்றும், பாணினி பகவான் “அ இ உண்” என்று தொடங்கினாற்போல இந்நூலாசிரியர் மங்களவெழுத்தாக அகரத்தைத் தொடங்கியிருக்கலாமென்றும், ஆகவே, இந்த அகச்சான்றுகள் இவரை வைணவரென்று நிலைநாட்டப்போதா என்று வைணவர் கூறுவதற்கு மறுப்புக் கூறவியலும்: இங்கனிருத்தலால், இந்த நூலாசிரியரை வேதவேள்விகளையும் சாதிகளையும் உடன்பட்ட வைதிகக் கொள்கையினரென்று சொல்லலாவதன்றி, இன்ன மதத்தவர்தாம் என்று உறுதியாகச் சொல்லி நாட்டுதற்கு ஏற்ற சிறந்த ஏது ஒன்றும் காணப்பட்டிலது. இங்ஙன் இருப்பது கருதியே திருவள்ளுவரின் திருக்குறளைப்பற்றி

“ஒன்றே பொருளெனின்வேறென்ப வேறெனின்,
அன்றென்ப வாறுசமயத்தார் – நன்றென்ன,
எப்பாலவரு மியைபவே வள்ளுவனார்
முப்பால் மொழிந்த மொழி”

என்று கூறியதுமென்க./

திருப்பனந்தாள் காசிமடம் பதிப்பித்த திருக்குறள் உரைக்கொத்து நூலின் பதிப்புரையில் இவ்வாறு கூறுகிறார்கள்:
“திருக்குறள் எனும் தமிழ்மறை ஓர் ஒப்பற்ற நூலாகும். […] எல்லா மதத்தினரும் எல்லாத் துறையினரும் உரிமை கொண்டாடும் சிறப்புடையது.”

இவர்களே இவர்களது பதிப்பில் (2002) சமய அடையாளமற்ற திருவள்ளுவரின் படத்தையே போட்டிருக்கிறார்கள்.

திரு.வி.க. திருக்குறளைப் பொதுநெறி, அருநெறி என்றும், தமது தமதென்று இடுக்கில் நுழைதல் கூடாது என்றும் கூறுகிறார். ( திருக்குறள் பன்முக வாசிப்பு – பதிப்பு: மாற்று/வெ.பிரகாஷ்)

“திருவள்ளுவர், நாயன்மார் ஆழ்வார்கட்கு முற்பட்டவர். அவர் அருளிய திருக்குறளோ மன்பதைக்குரிய அருள் மறை; பொது மறை. அத்தகைய ஒருவர் திருவுருவம் சைவ வைணவக் கோயில்களில் ஏன் அமைக்கப்படுவதில்லை? சைவ வைணவ நூல்களில் அடியவர் வாழ்த்தில் அவர் ஏன் சேர்க்கப்படவில்லை? அவர் நூல் பூசைக்காலங்களில் ஏன் ஓதப்படுவதில்லை? அன்பவர்கள் உன்னுவார்களாக. முன்னாளில் திருவள்ளுவர் ஜைநர் என்று கொள்ளப்பட்ட வழக்கே, அவரைச் சைவ வைணவக் கோயில்களும், நூல்களும், சம்பிரதாயமும் புறக்கணிக்கக் காரணமாக நின்றிருக்கலாம் என்று எவரும் ஊகிக்கக் கூடும். பின்னே போந்த சைவ வைணவ அறிஞர்கள், திருவள்ளுவர் அறிவுறுத்திய அருணெறியின் பெற்றியுணர்து, அவரை ஏற்றுப் போற்றுவதோடு, அவரைத் தம்மவர் தம்மவர் என்று கொள்ளச் சொற்போரும் நிகழ்த்தலானார்கள்.

திருவள்ளுவர் அறிவுறுத்தியது பொதுநெறி – அருணெறி. ஜீவகாருண்ய ஒழுக்கம். அந்நெறியை எவர் எப்பெயரிட்டழைப்பினும் அழைக்க. திருவள்ளுவரைச் சைவரெனில், வைணவரெனில், பிறரெனில், அவரது சைவமும் வைணவமும் பிறவும் அருகதேவர் கண்ட அருணெறியின்பாற் பட்டனவென்க. அருகர் குறிப்பிட்ட ஒரு கூட்டத்தார்க்கு மட்டும் உரியவரல்லர். அவர் உலகிற்கே உரியர். அருணெறியோம்பப் போந்த ஆசிரியர் பலரும் உலகிற்குரியராவர். அவரைச் சமயவாதிகள் தங்கள் தங்களுக்கே உரியர் என்று கருதிக் கொள்கிறார்கள். அச்சுட்டறிவு பொது உணர்விற்கே கேடு சூழ்கிறது. சுட்டி இடுக்கில் நுழைதல் கூடாது. இடுக்கு இடுக்கணுறுத்தல் இயல்பு. பரந்த பொது வெளியில் உலவ முயல்வதே அறிவுடைமை. அவ்வறிவு சிறப்பளிக்கும்.”


உடுக்கை மாறிய வள்ளுவன்

நவம்பர் 7, 2019

உடுக்கை மாறிய வள்ளுவனுக்கு வந்த இடுக்கண் களையக் களத்தில் இறங்காவிட்டால் அவருடனான நட்புக்கொன்றும் களங்கம் வந்துவிடாதுதான். தற்காத்துத் தன்னைப் பேணிக்கொள்ளும் தகைமை அவர் எழுத்துக்குண்டு. இருப்பினும்…

வள்ளுவன் இனிய உளவாக மட்டுமே கூறியவரில்லை. கடும்சொற்களையும் அவ்வப்போது அள்ளி வீசுவார். தன்னை வியந்து அணியும் சிறுமை கண்டு பொங்குவார்.

பேதைமை, புல்லறிவாண்மை, இகல், கயமை போன்ற அதிகாரங்களில் புகுந்து விளையாடியிருப்பார்.

‘மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாம்கண்ட தில்.’

என்று நக்கலாகவும் அதிரடித் தாக்குதல் நிகழ்த்துவார். முதலில் வள்ளுவனது வெண்தாடியைக் களைந்தால்தான் அவனைச் சரியாகப் புரிந்துகொள்ளமுடியும். மழித்தலா, நீட்டலா, பட்டையா, நெட்டையா என்பதெல்லாம் பின்னர் பார்த்துக்கொள்ளலாம். ஔவையும் பாட்டியல்லள், ஐயனும் கிழவனல்லன் என்பது என் துணிபு.

இந்த முகநூல் யுகத்துக்கு மிகவும் தேவையான அதிகாரங்கள் நட்பு குறித்தவை. நட்பு, நட்பாராய்தல், பழைமை, தீநட்பு, கூடாநட்பு என்று ஐந்து அதிகாரங்கள் எழுதியிருக்கிறார். படித்துப் பயன்பெறுங்கள். யாருடைய நட்பு அழைப்பை ஏற்கலாம், யாரைத் தொடர்வதை நிறுத்தவேண்டும் (unfollow), யாரை நட்புநீக்கம் செய்யவேண்டும் (unfriend), யாரை block செய்யவேண்டும், எவரிடம் அகலாது அணுகாது இருக்கவேண்டும் என்பதையெல்லாம் வள்ளுவனைப் படித்துத் தெளிவுறலாம்.

‘ஊதியம் என்ப தொருவற்குப் பேதையார்
கேண்மை ஒரீஇ விடல்.’


காந்தியும் திருக்குறளும்

நவம்பர் 6, 2019

(சில ஆண்டுகளுக்கு முன் ‘காந்தி இன்று’ தளத்துக்காக எழுதிய கட்டுரையின் விரிவுபடுத்தப்பட்ட வடிவம்)

ஓர் இலக்கியப் படைப்பின் மீது பெருந்திரளான மக்கள் பேரன்பைப் பொழிய முடியுமா என்ற கேள்வி எழுந்தால், திருக்குறள் மீது தமிழர்கள் கொண்டிருக்கும் உணர்வையே உதாரணமாகக் காட்டமுடியும்.  பெரும்பாலும் ஒரு நீதி நூலாகவே அறியப்படுகிற ஒரு படைப்பு (அது நீதிநூல் மட்டுமே அல்ல என்றாலும்கூட), எப்படி இத்தனை அன்புக்குப் பாத்திரமானது என்பது ஆச்சரியமானதுதான். அந்தத் திருக்குறள் காட்டும் நெறிக்கு மிக நெருக்கமான வாழ்வை வாழ்ந்தவர்கள் என்று ஒரு பட்டியல் இட்டால், அதில், தமிழர் அல்லாத போதினும், காந்தியின் பெயரைத் தவிர்க்கமுடியாது. காந்தி, திருக்குறள், தால்ஸ்தோய் குறித்து நிறையப் புனைவுகள் உள்ளன. காந்தியைத் திருக்குறள் எந்த அளவுக்கு நேரடியாகப் பாதித்தது என்பதை உறுதியாகக் கூறவியலாது.  ஆனால், காந்தி திருக்குறளைப் பற்றி நன்றாக அறிந்திருந்தார் என்பதை அவரது பதிப்புகளிலும், எழுத்துகளிலும் காணலாம்.

தென்னாப்ரிக்காவில் தமிழர்களோடு ஏற்பட்ட தொடர்பிற்கு முன், காந்தி திருக்குறள் பற்றிக் கேள்விப்பட்டிருக்க  வாய்ப்பில்லை. அறிந்திருந்தால், அது அவரைப் பெரிதும் கவர்ந்திருக்கும் என்பதிலும் சந்தேகமில்லை. சிறுவயதில் அவரை மிகவும் ஈர்த்து வழிநடத்தியவை என்று இரண்டு கோட்பாடுகளைத்தான் குறிப்பிடுகிறார்: உண்மை, தீங்கிழைத்தவர்க்கும் நன்மையே செய்தல். (1) இரண்டுமே திருக்குறள் முன்வைக்கும் முக்கிய நெறிகள். அப்போது அவரைக் கவர்ந்த ஒரு குஜராத்திப் பாடலை, சத்திய சோதனையில் குறிப்பிடுகிறார். லண்டனில் இருந்தபோதும், ஷாமல் பட் எழுதிய அதே பாடலை மீண்டும் நினைவுகூர்கிறார்; புதிய ஏற்பாட்டில்  மலைப் பிரசங்கத்தைப் படிக்கும்போது இப்பாடல் அவர் நினைவுக்கு வருகிறது. 

பெற்ற ஒரு குவளை நீருக்கு, நிறைவான ஒரு வேளை உணவை அளி:

ஓர் எளிய வாழ்த்துக்கு, உற்சாகமாய்ப் பணிந்து வணங்கு:

சில நாணயங்கள் பெற்றிருந்தால், பொற்குவை திரும்பக் கொடு:

உயிர்காத்தவனுக்காய் உயிரையும் தரத் தயங்காதே.

சொற்களையும் செயல்களையும் இங்ஙனமே கருதுவர் அறிவோர்,

பெற்ற சிற்றுதவிக்குப் பதிலாய் பன்மடங்கு பேருதவி புரிவர்.

ஆனால், பெருஞ்சான்றோர் மனிதன் ஒன்றே என்றரிவர்;

இன்னாசெய்தார்க்கும் இனியவே செய்திடுவர்.

இப்பாடல், பல குறட்பாக்களின் இணைவடிவமாகத் தெரிகிறது:

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்

கொள்வர் பயன்தெரி வார். [104]

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்

ஞாலத்தின் மாணப் பெரிது. [102]

இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்

என்ன பயத்ததோ சால்பு. [987]

அதற்குப்பின்னும் காந்தியைப் பாதித்த, அவரே எழுதிய பலவற்றுள்ளும் குறளின் கருத்துகள் பொதிந்திருந்தாலும், வளரும் பருவத்தில் அவரை ஈர்த்த இப்பாடல் குறிப்பிடத்தகுந்தது.

காந்திக்குத் திருக்குறள் பற்றிய முதல் அறிமுகம் ஜி.யு.போப் மூலமாக நிகழ்ந்திருக்கலாம். (2) “நான் தமிழும் உருதுவும் கற்றுத்தருவதற்கு முன்வந்திருந்தேன். எனக்குத் தெரிந்த சிறிதளவு தமிழை கடற்பயணங்களின் போதும் சிறைவாசங்களின் போதும் கற்றிருந்தேன். போப் எழுதிய அருமையான தமிழ்க் கையேட்டினை நான் தாண்டவில்லை.” (3) ஜி.யு.போப் திருக்குறளை 1886ம் ஆண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டிருந்தார். அது இன்றளவும் பிரபலமாக உள்ளது. இக்கையேட்டுக்கான அறிமுகத்தில், போப் திருவள்ளுவரின் குறள் குறித்து, “இப்படைப்பின் ஆசிரியல் இதனை எல்லாவிதமான அறிவின் பெட்டகமாக அமைத்து, தமிழ் மக்களுக்கு வேதத்தின் இடத்தில் இருத்தக் கருதினார்.” திருக்குறளின் அமைப்பை விளக்கும்போது, ஏங்கிலிக்கன் கிருத்துவப் பாதிரியாரான இவர், ‘மூன்றாம் பால் புலனின்பம் சார்ந்தது; அதன் பெரும்பகுதி படிக்கத் தகுதியானதன்று,’ என்று காமத்துப்பாலைப் புறந்தள்ளிப் பேசுகிறார்.(4) (எனினும், மொழிபெயர்க்கும்பொது காமத்துப்பாலையும் சேர்த்தே மொழிபெயர்த்தார்.) கூடுதலாக, கையேட்டின் இரண்டாவது பகுதியில், திருக்குறளுக்கென்றே தனியாக ஒரு விரிவான அறிமுகம் தந்து, முதல் நான்கு அதிகாரங்களுக்கு ஆங்கில மொழிபெயர்ப்பையும் தருகிறார். ‘தமிழ்க் கவிதைக்கு மிகச் சிறந்த அறிமுகம்’ என்றும், ‘திருவள்ளுவரின் கவிதை எவ்வகையிலும் நீளமானதல்ல; ஆயினும், மதிப்பில், மொத்தத் தமிழ் இலக்கியத்தின் பிறநூல்களைக் காட்டிலும் உயர்ந்து நிற்கிறது; ஒட்டுமொத்த மக்கள் குழுவொன்றின் கூட்டு ஆன்மாவுக்குள் நுழைந்த மிகச்சில மகத்தான நூல்களில் இதுவும் ஒன்று; இதற்கு அழிவே கிடையாது,’ என்றும் திருக்குறளை விதந்து கூறுகிறார். ‘வள்ளுவர் பிராமணத் தந்தைக்கும் கீழ்ச்சாதிப் பெண்ணுக்கும் பிறந்தவர் என்று வாய்மொழி மரபுகள் கூறுகின்றன’ என்று சொல்லிவிட்டு, உடன் இக்கதைக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று ஒப்புக்கொள்கிறார். ஆனால் வள்ளுவர் ‘உறுதியாக ஒரு பறையர்’ என்ற முடிவுக்கு வருகிறார். மேலும், ‘கிருத்துவ ஆகமநூல்களும் இக்கவிஞருக்கு உந்துதலாக இருந்த நூல்களில் அடங்கும்,’ என்றும் தயங்காமல் கூறுகிறார். “தற்போதும் பிற காலங்களிலும் தென்னிந்தியாவில் நிலவிய பல சிந்தனைகள் செயல்பாடுகளின் தடயமே திருக்குறளில் இல்லை; ஏனெனில், இம்முனிவரின் பரந்துபட்ட நம்பிக்கையாலும் நடத்தையாலும் இவை ஒதுக்கப்பட்டிருக்கும்; இவரது படைப்பு அறிவுறுத்துவதாகவும் சர்ச்சைகளைத் தவிர்ப்பதாகவும் உள்ளது. அவரது மெய்யியல் பகவத் கீதையைப் போன்ற பரந்துபட்ட தரிசனத்தைச் சார்ந்தது,” என்று போப் சொன்னது காந்தியைப் பெரிதும் ஈர்த்திருக்கக்கூடும். (5)

காந்தியின் எழுத்துகளில் போப்பின் திருக்குறள் மொழிபெயர்ப்பு பற்றி எந்தக் குறிப்பும் இல்லை. ஆனால், அவரது பிந்தைய எழுத்துகளின் அடிப்படையில், அவர் போப்பின் மொழிபெயர்ப்பைப் படித்திருக்கக்கூடும் என்று ஊகிப்பது தவறாக இருக்காது. 

1905ம் ஆண்டு முதலே, அவரது உறவினர்களான சகன்லால் காந்தி, மகன்லால் காந்தி ஆகியோருக்கு எழுதிய பல கடிதங்களில் ஜி.யு.போப் பற்றிக் குறிப்பிடுகிறார். சகன்லாலை ஜி.யு.போப்பின் கையேட்டின் புதிய பதிப்பின் மூன்று பாகங்களையும் மூன்று பிரதிகள் வாங்கும்படி அறிவுறுத்துகிறார். (6) மார்ச் 1908ல், ஜி.யு.போப்புக்கு இந்தியன் ஒப்பினியன் இதழில் ஓர் அஞ்சலிக் குறிப்பு எழுதுகிறார். டைம்ஸ் இதழில் வந்த அஞ்சலிக் கட்டுரையையும் பதிவிடுகிறார். இரண்டு அஞ்சலிக் குறிப்புகளிலுமே திருக்குறள் குறிப்பிடப்படவில்லை என்பது ஆச்சரியம்தான். “சென்னை மக்கள் மதிப்பும் மரியாதையும் செலுத்தவேண்டியர்களில் டாக்டர்.போப்பைவிடத் தகுதியான ஆங்கிலேயர்கள் எவரும் இல்லை. அவரது உதாரணம் சென்னை மக்களை ஆராய்ச்சிப் பாதையில் வழிநடத்தி, அண்மைக்காலத்தில் புதைந்துபோன அவர்களது பெரும் வரலாற்றைக் குறித்து உலகம் அறியவும், இலக்கியம், மொழியியல், மெய்யியல், இறையியல் ஆகியவற்றின் பொக்கிசங்கள் வெளிச்சத்திற்கு கொணரவும், மக்கள் தங்கள் எதிர்கால வளர்ச்சிப்பாதையைப் பற்றிய ஓர் அறிகுறியைப் பெறவும் மிளிரும் ஒளியாக உள்ளது,” என்று எழுதி அஞ்சலி செலுத்தினார். (7)

1909ல்தான் காந்தியின் வாழ்வில் திருக்குறள் நேரடியாக நுழைந்ததற்கான தடயத்தைக் காண்கிறோம். லியோ தால்ஸ்தோய் எழுதிய ‘ஓர் இந்துவுக்குக் கடிதம்’ (A Letter to a Hindu)  என்ற கட்டுரையைக் காந்தி தனது இந்தியன் ஒப்பீனியன் பத்திரிக்கையில் பதிப்பித்தார். அந்தக் கட்டுரையில் தால்ஸ்தோய் கீதையிலிருந்தும் திருக்குறளிலிருந்தும் மேற்கோள்களை எடுத்தாள்கிறார்.  

சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்கு இன்னா

செய்யாமை மாசற்றார் கோள். [311]

கறுத்தின்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா

செய்யாமை மாசற்றார் கோள். [312]

செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்

உய்யா விழுமந் தரும். [313]

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண

நன்னயஞ் செய்து விடல். [314]

அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்

தந்நோய்போல் போற்றாக் கடை. [315]

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா

பிற்பகல் தாமே வரும். [317]

இந்த ஆறு குறட்பாக்களையும் குறிப்பிட்டு,  ‘இவ்வாறே எங்கும் நடந்தது. அன்பே மிக உயர்ந்த அறம் என்கிற புரிதல் எங்கும் மறுக்கப்படவில்லை. ஆனால், இந்த உண்மை பல்வேறு பொய்களோடு பிணைந்து  சிதைந்திருந்ததால், வெறும் சொற்களே எஞ்சியிருந்தன,’ என்கிறார் தால்ஸ்தோய். ‘இல்வாழ்க்கைக்கு மட்டுமே இந்த உயர்ந்த அறம் அவசியமாகக் கற்பிக்கப்பட்டது. பொது வாழ்வில் எல்லாவிதமான வன்முறையும் (சிறை, மரணதண்டனை, போர்கள்) பெரும்பான்மை மக்களைக் காக்க, அவர்களுக்குத் தீங்கிழைக்கும் சிறுபான்மையினர் மீது ஏவப்படுதல் ஏற்றுக்கொள்ளப்படுகிறது – இன்னமும் சிறிதே எஞ்சியிருக்கும் அன்புக்கு அது நேர்மாறாக இருந்தபோதிலும்.’ (8)

காந்திக்கு இக்குறள்களும், அவற்றையொட்டிய தால்ஸ்தோயின் கருத்துகளும் உறுதியாகப் பிடித்திருக்கும். தனிவாழ்வையும் பொதுவாழ்வையும் என்றைக்கும் அவர் பிரித்து வைத்ததில்லை. இக்கட்டுரையை முன்வைத்துத்தான் காந்திக்கும் தால்ஸ்தோய்க்கும் இடையிலான கடிதப் பரிமாற்றம் தொடங்கியது. ஆனால், திருக்குறள் பற்றிக் குறிப்பாக எந்த உரையாடலும் நடைபெறவில்லை.

மகன்லால் காந்திக்கு 1910ல் எழுதிய ஒரு கடிதத்தில், திருக்குறள் வாசகம் ஒன்றைச் சற்றே வினோதமான சூழலில் குறிப்பிடுகிறார். “சந்தோக்கிற்குக் குழந்தை பிறந்துவிட்டதால், அவளைப்பற்றி இனி நாம் கவலைப்பட வேண்டியதில்லை. கற்க கசடறக் கற்பவை. போப்பின் இலக்கண நூலின் முதல் பக்கத்தில் உள்ள இந்த வாசகத்தை மனதில் அசைபோட்டுப் பார். தனது மனைவி மீதான காம உணர்வை வெல்வதைக் காட்டிலும் கடினமான பணி எதுவும் இருக்கமுடியாது.”  (9)

கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக. [391]

என்ற குறளை மனதில் கொண்டு எழுதியுள்ளார். ஆனால், இதில் சுவையான செய்தி என்னவெனில், ‘கற்கக் கற்கக் கசடறும்’ என்ற பழமொழிதான் போப்பின் கையேட்டில் முதல்பக்கத்தில் உள்ள வாசகம். காந்தி தவறுதலாகச் சரியான ஒரு குறளைக் குறிப்பிட்டிருப்பது, அவர் திருக்குறளைப் படித்திருக்கவேண்டும் என்பதைப் பெருமளவு உறுதிசெய்கிறது என்பது இதில் ஓர் எதிர்பாராத நன்மை. இன்னொரு கடிதத்திலும் இத்தவறினை மீண்டும் செய்வார் என்பதைக் காண்போம். 

இந்தியா திரும்பியபின், நண்பர் ஜி.ஏ.நடேசனுக்கு, “எனக்கு தயவுசெய்து தமிழ்ப் புத்தங்களை அனுப்பி வையுங்கள். ஆரம்ப கட்டத்தில் இருப்பவர்களுக்கும், சுந்தரம் போன்றவர்களுக்கும் எனக்குப் புத்தகங்கள் வேண்டும். டாக்டர்.போப்பின் அனைத்துப் புத்தகங்களும் வேண்டும். எத்தனை விரைவாக முடியுமோ அத்தனை விரைவாக இதைச் செய்துவிடுங்கள்,” என்று எழுதினார். (10)

மகன் தேவதாஸ் காந்திக்கு, 1919ல் எழுதிய ஒரு கடிதத்தில் முன்பு போலவே தவறுதலாகத் திருக்குறள் வாசகத்தைக் குறிப்பிடுகிறார். “இவ்வாசகத்தை தமிழில் அடைமொழியாகக் கொள்ளவும்: கற்க கசடறக் கற்பவை. […] போப்பின் கையேட்டில் முதல் பக்கத்தில் இது வருகிறது. தெலுங்கில் இதன் மொழிபெயர்ப்பையும் அறிந்து அதையும் கொடுத்துவிடு.”  (11)

1920ல், அகமதாபாத்தில் ஆற்றிய ஓர் உரையில், ஜி.யு.போப் பற்றிக் கவித்துவமாகப் பேசினார்: “சென்னையில் எந்த இந்தியரும் போப் அளவுக்குத் தென்னிந்தியாவுக்குச் சேவை செய்துவிடவில்லை – இவர் இலியட் புகழ் போப் அல்லர். மனிதர்கள்மீது எப்போதும் நான் பேரன்போடு இருக்கிறேன். எனவே அவர்களது உள்ளங்களைக் கவரவேண்டும் என்று எப்போதும் விரும்புகிறேன். தென்னிந்தியச் சகோதரர்களின் உள்ளங்களைக் கவர்வதற்காக, அவர்களது மொழியைக் கற்க வேண்டியிருந்தது. இப்போது போப் அவர்களின் எழுத்துகளில் இருந்து உடனடியாக மேற்கோள் காட்டமுடியவில்லையெனினும், இதைச் சொல்வேன்: விவசாயிகள்கூட தோட்டத்துக்கு நீர்பாய்ச்சும்போது இன்புற்று அனுபவிக்கக்கூடிய வகையில் தமிழில் இருக்கும் கவிதைகள் அற்புதமானவை. கதிரவன் உதிக்கும் முன்பே தோட்டங்களுக்குத் நீர் பாய்ச்சும் வேலை தொடங்கிவிடும். கம்பு, கோதுமை ஆகிய அனைத்தும் பனி முத்துகளால் மூடப்பட்டுள்ளன. மரங்களின் இலைகள் மீதுள்ள நீர்த்துளிகள் முத்துகள் போல ஒளிர்கின்றன. இப்பாடல்களைத்தான் விவசாயிகள் தோட்டங்களுக்கு நீர்பாய்ச்சும்போது பாடுகிறார்கள்.” (12) இது அவர் போப்பின் கவிதைகளைப் படித்துள்ளார், குறிப்பாகத் திருக்குறளையும் படித்திருக்கக்கூடும் என்பதற்கான சான்றாக உள்ளது.

அடுத்து, நாம் திருக்குறளை காந்தியின் பதிவுகளில் 1927ம் ஆண்டு காண்கிறோம். ரங்கூன் நகரிலிருந்து ஒரு நண்பர், கதர்ப் பிரச்சாரத்துக்காக இருபத்தைந்து ரூபாய் கொடையும் அதனோடு ஒரு கடிதமும் அனுப்புகிறார். அக்கடிதத்தை இறந்துபோன தனது தந்தைக்குப் பதினாறாம் நாள் சடங்குகளைச் செய்வதில் தனக்கிருக்கும் ஒவ்வாமையை வெளிப்படுத்தித் தொடங்குகிறார். அது அடிமைத்தனமானதாகவும், அர்த்தமற்றதாகவும் இருப்பதாகவும், மக்களின் மத நம்பிக்கைகளைப் பயன்படுத்தி அவர்கள்மீது திணிக்கப்படும் ஒரு ஏமாற்றுவேலையாகயும் கருதுகிறார். அர்ப்பணிப்புடனும் கொடைநோக்குடனும் செய்யப்படும் ஈமச்சடங்குகளில் தனக்கு நம்பிக்கை இருப்பதாகத் திருக்குறளைப் பயன்படுத்தி நிறுவுகிறார். 

“24-2-1927 யங் இந்தியா இதழில், நீங்கள் சொல்வது போல, ‘கொடைபெறுவதற்கு இரண்டு வர்க்க மக்களுக்கு மட்டுமே உரிமையுள்ளது, பிறருக்கில்லை – தனக்கென எதுவுமே வைத்துக்கொள்ளாமல், புனிதக் கல்வியைப் பிறருக்குக் கற்றுத்தரும் பிராமணன், உடல் ஊனமுற்றவர்கள் அல்லது பார்வையற்றவர்கள்.’ மரணமற்ற எங்கள் மாமுனி திருவள்ளுவர் ‘எல்லா உயிர்களிடத்தும் பொங்கிப்பெருகும் அன்பைக் கொண்டுள்ள சந்நியாசிகளே அந்தணர்’ என்று சொல்லியிருக்கிறார். கொடையளிப்பதற்கு உங்களைவிடச் சிறப்பான மனிதரையும்  ராட்டையைவிடச் சிறப்பான ஒரு நோக்கத்தையும் என்னால் காணமுடியவில்லை என்பதால் உங்களுக்கு இத்தொகையை அனுப்பியுள்ளேன். பெற்றோரின் நினைவினைப் போற்றுவதற்கு இன்னொரு வழியும் உண்டு. முனி வள்ளுவன் சொல்கிறான்: ‘மகன் தந்தைக்குச் செலுத்தக்கூடிய நன்றி என்பது இவனது தந்தை இவனைப்பெறப் பெருந்தவம் புரிந்திருக்கவேண்டும என்ற பெயரை எடுக்கும்வண்ணம் உலகில் மிகச் சிறப்பாக நடந்துகொள்ளவதுதான்.’ இக்குறிக்கோளை எனது மனதில் நான் தாங்கியுள்ளேன் என்பதையும் நான் கூறிக்கொள்கிறேன்.” (13)

இக்கடிதம் பின்வரும் குறள்களையொட்டி அமைந்துள்ளது:

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர் க்கும்

செந்தண்மை பூண்டொழுக லான். [30]

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை

என்நோற்றான் கொல் எனும் சொல். [70]

காந்தி இக்கடிதத்தின் கருத்தினை அமோதிக்கும்வகையில், அர்த்தமற்ற சடங்குகளைத் தானும் எதிர்ப்பதாகவும், இக்கடிதம் எழுதியவரைப் போல பிறரும் தமக்குச் சரியென்று படுவதையே செய்ய முனைந்து தம்மையே ஏமாற்றிக்கொள்வதில் இருந்து விடுதலை பெறவேண்டும் என்றும் எழுதினார். எனினும் திருக்குறள் பற்றி நேரடியாக அவர் ஏதும் குறிப்பிடவில்லை.  

1927ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் முதன்முதலில் காந்தி திருக்குறள் பற்றி நேரடியாகப் பேசியது பதிவாகியுள்ளது. தூத்துக்குடியில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுகையில், தமிழுக்கு அவர் அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று எழுந்திருந்த ஒரு குற்றச்சாட்டை மறுத்துரைத்தார். அப்போது,

‘திருக்குறளில் காணக்கிடைக்கிற புதையல்களின்பால் எனது கவனத்தை நீங்கள் ஈர்த்தது சரிதான். உங்களுக்கு ஒன்று கூறவிரும்புகிறேன் – சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன், திருக்குறளை அதன் மூலமொழியில் படிக்கவேண்டும் என்கிற ஆசையோடும் குறிக்கோளோடும் நான் தமிழ் கற்றுக்கொள்ளத் தொடங்கினேன். தமிழைக் கற்று முடிப்பதற்கு எனக்குக் கடவுள் போதிய நேரம் கொடுக்கவில்லை என்பது என் ஆழ்ந்த வருத்தத்துக்குரிய ஒரு விஷயம். பிராந்திய மொழிகளையேப் பாடமொழியாக ஆக்குவதற்கு நடத்தப்படும் போராட்டங்களை நான் முழுக்க ஆதரிக்கிறேன். நாம் தமிழ்மொழியைக் கற்க வேண்டும்; ஆங்கிலத்தைவிட தமிழையே விரும்பவேண்டும்; தமிழை மற்ற மொழிகளுக்கெல்லாம் மேலான இடத்தில் இருத்தவேண்டும்,’ என்று கூறியதாக இந்து நாளிதழில் செய்தி வெளியானது. (14)

அதே ஆண்டு, காந்தி தமிழகப் பயணத்தில் சந்தித்த பல கேள்விகளை, குறிப்பாக பிராமணர்-பிராமணரல்லாதார் மோதல் குறித்த உரையாடல்களைத் தொகுத்து, மகாதேவ் தேசாய் ஒரு குறிப்பு எழுதினார். ஒரு கேள்வியில் திருக்குறள் குறிப்பிடப்பட்டுள்ளது. 

“கேள்வி. நீங்கள் குறள் பற்றி அறிவீர்கள். இந்நூலின் ஆசிரியர் பிறப்பால் சாதி இல்லை என்று சொல்கிறார் என்பதை அறிவீர்களா? பிறப்பொக்கும் எவ்வுயிர்க்கும் என்கிறார் அவர். 

பதில்: நிகழ்கால அத்துமீறல்களுக்கு எதிர்வினையாக அவர் இதைச் சொல்கிறார். தாம் உயர்ந்தவர் என்று ஒரு வர்ணம் கூறிக்கொள்ளும்போது, அதற்கெதிராக அவர் குரலை எழுப்ப வேண்டியிருந்திருக்கும். ஆனால் அது வர்ணத்தின் வேரைப் பிறப்பிலிருந்து அறுக்கவில்லை. ஏற்றத்தாழ்வுகளின் வேரையறுக்கும் ஒரு சீர்திருத்தவாதியின் முயற்சியே இது.” (15)

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான். [972]

என்ற குறளை முன்வைத்து இந்த உரையாடல் நடைபெறுவதை உணரலாம்.

இது திட்டமிடப்பட்ட உரையாடல் இல்லையெனினும், காந்தி சரியான குறிளை விரைவாக அடையாளம் கண்டுகொண்டு அதைக்குறித்துப் பெருமளவு சரியான புரிதலுடன் விளக்குவதாகவே தெரிகிறது. 

அடுத்து, 1935ல், ஹரிஜன் இதழில் திருக்குறள் பற்றித் ‘தமிழ் மறை’ என்ற தலைப்பில் ஒரு சிறு கட்டுரையை காந்தி எழுதியுள்ளார். (16)

“திருவள்ளுவர் ஒரு தமிழ்த் துறவி. அவரை ஒரு ஹரிஜன நெசவாளர் என்கின்றன தொன்மங்கள். கி.பி. முதலாம் நூற்றாண்டில் அவர் வாழ்ந்ததாகக் கூறுகிறார்கள். புகழ்மிக்க திருக்குறளை அவர் அளித்துள்ளார் – திருக்குறள் புனித முதுமொழிகளைக் கொண்டது; தமிழர்களால் தமிழ்மறை என்று அறியப்படுகிறது; எம்.ஏரியலால், ‘மனிதச் சிந்தனையின் வெளிப்பாட்டில் மிக உயர்ந்த, தூய்மையானவற்றில் ஒன்று,’ என்று போற்றப்பட்டது. இதில் 1330 முதுமொழிகள் உள்ளன. பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பல ஆங்கில மொழிபெயர்ப்புகள் உள்ளன. ஹரிஜன மற்றும் பிற சேவைகளுக்காகச் சர்மாதேவி (சேரன்மாதேவி) ஆசிரமத்தை நிறுவிய வ.வே.சு.ஐயர் அண்மையில் ஒரு மொழிபெயர்ப்பைச் செய்திருந்தார். சர்மாதேவி ஆசிரமத்தையும், இந்த மொழிபெயர்ப்பையும் நாட்டுக்கு அர்ப்பணித்துவிட்டு மறைந்துவிட்டார். சர்மாதேவி இப்போது ஹிரிஜன் சேவா சமிதியின் வசம் உள்ளது. இந்த மொழிபெயர்ப்பின் இரண்டாம் பதிப்பில் 1000 பிரதிகள் மீதமுள்ளன. இந்த நூலின் விலை ரூ.5 ஆக இருந்தது. இப்போது ரூ.2/8 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்பாளர் எழுதியுள்ள ஒரு விரிவான முன்னுரையை இந்நூல் கொண்டுள்ளது. இதிலிருந்து வரும் வருமானம் ஹரிஜன சேவைக்காகப் பயன்படுத்தப்படும்.  வாசகர்களின் ஆர்வத்தைத் தூண்ட, இரண்டு குறள்களை நேர்ந்தவாக்கில் தேர்ந்தெடுத்து இங்கு தருகிறேன்.

தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது

இன்னுயிர் நீக்கும் வினை. [327]

இதனை ஆலிவர் கோல்ட்ஸ்மித் எழுதிய வரிகளோடு ஒப்புநோக்குவோம்:

‘சுதந்திரமாய் இப்பள்ளத்தாக்கில் உலவும் எந்த மந்தைக்கும்

மரணத்தை நான் விதிப்பதில்லை;

என்னைக்கண்டு இரங்கும் பேராற்றலால் கற்பிக்கப்பட்ட நான்,

அவற்றைக் கண்டிரங்கவும் கற்றுக்கொண்டேன்.’

அடுத்த தேர்வு:

உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி

விழிப்பது போலும் பிறப்பு. [339] 

இதனை வேர்ட்ஸ்வொர்த்தின் வரிகளோடு ஒப்புநோக்கலாம்:

மரணம் என்பது உறக்கமும் மறதியும் அன்றி வேறில்லை.’ “

காந்திக்குத் திருவள்ளுவர் ஒரு ஹரிஜன் என்றும், நெசவாளர் என்றும் கூறப்பட்டது இரட்டை ஈர்ப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும். அப்போது தீண்டாமை இயக்கமும், கதர் இயக்கமும் தான் அவரது ஈடுபாட்டை மிகவும் அதிகமாய்க் கோரிய இயக்கங்கள். திருவள்ளுவர் முன்வைக்கும் அன்பு, அறம், கொல்லாமை, வாய்மை, ஈகை என்ற பல கருத்துகள் காந்தியின் கருத்துகளுக்கு முழுக்கவே இணையானவை.

காந்தியின் முதன்மைச் சீடரான வினோபா, திருக்குறளை நன்றாகக் கற்றிருந்தார். பல உரைகளில் திருக்குறளைத் தமிழிலும் பிற மொழிகளிலும் மேற்கோள் காட்டுவார் என்று அவரோடு நெருங்கிப் பழகிய நாராயண் தேசாய், என்னுடன் நிகழ்ந்த ஒரு நேர்காணலில் குறிப்பிட்டார். காந்தியோடு தன் குழந்தைப் பருவத்தில் வளர்ந்த நாராயண் தேசாயை,  குஜராத்தில், அவரது சம்பூர்ண கிராந்தி வித்தியாலயத்தில் சந்தித்தபோது, புதிதாக வெளிவந்த ஒரு குஜராத்தி இலக்கியச் சிற்றிதழில் இருந்த திருக்குறள் பற்றிய ஒரு கட்டுரையை எனக்கு இந்தியில் மொழிபெயர்த்துப் படித்துக் காட்டியது ஒரு மறக்க முடியாத அனுபவம்.

காந்திகிராம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர், மார்க்கண்டன் அவர்களோடு ஒருமுறை உரையாடிக் கொண்டிருந்தபோது, வினோபாவிடம் அவர் ஏதேனும் செய்தி கேட்டதாகவும், அப்போது அவரது கைப்பட எழுதித்தந்த ஒரு குறள் பற்றியும் குறிப்பிட்டார்.

காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றின்

நாமம் கெடக்கெடும் நோய். [360]

ஆனால், காந்தியைப் பொருத்தவரை, இந்த இரு குறிப்புகளைத் தவிரத் திருக்குறள் பற்றிப் பேசியதற்கான வேறு தரவுகள் இதுவரை தென்படவில்லை. எனினும், ‘என் வாழ்க்கைதான் எனது செய்தி’ என்று சொன்னவரின் அச்செய்தியில் பல குறள்கள் மிளிரக் காணலாம்.

குறிப்புகள்:

  1. M.K.Gandhi, An Autobiography, Navajivan Publication, www.mkgandhi.org, Page 44
  2. Dr. G. U. Pope (1820.1908), translator of Thirukkural and Thiruvasagam, author of First Lessons in Tamil, A Handbook of the Ordinary Dialect of the Tamil Language, A Textbook of Indian History, etc.
  3. M.K.Gandhi, An Autobiography, Navajivan Publication, www.mkgandhi.org, Page 406
  4. G.U. Pope, First Lessons in Tamil: A Handbook of the Ordinary Dialect of the Tamil Language, London: W.H.Allen & Co. 1883, Part I, Page 5. 
  5. ibid…Part II, Pages 52-76.
  6. LETTER TO CHHAGANLAL GANDHI, Johannesberg, May 1, 1905, The Collected Works of Mahatma Gandhi, Volume 4
  7. THE LATE DR. POPE, The Collected Works of Mahatma Gandhi, Volume 8…Indian Opinion, 14-3-1908
  8. Leo Tolstoy, ‘A Letter to a Hindu’, Dec 14th, 1908….Indian Opinion, November 26, 1910. [Translation of the kurals as given in the original. Numbering of the Kurals done for this essay]
  9. LETTER TO MAGANLAL GANDHI, Tolstoy Farm [July 25, 1910], The Collected Works of Mahatma Gandhi, Volume 4
  10. LETTER TO G. A. NATESAN, Bombay, May 10, 1915, The Collected Works of Mahatma Gandhi, Volume 14
  11.  LETTER TO DEVDAS GANDHI, Ahmedabad, February 23, 1919, The Collected Works of Mahatma Gandhi, Volume 17
  12.  SPEECH AT GUJARATI SAHITYA PARISHAD, Ahmedabad, April 2, 1920, The Collected Works of Mahatma Gandhi, Volume 20
  13. TRUE ‘SHRADDHA’, The Collected Works of Mahatma Gandhi, Volume 39…Young India, 1-9-1927
  14. SPEECH AT PUBLIC MEETING, TUTICORIN, October 6, 1927, The Collected Works of Mahatma Gandhi, Volume 40…The Hindu, 8-10-1927.
  15. BRAHMIN-NON-BRAHMIN QUESTION, The Collected Works of Mahatma Gandhi, Volume 40…Young India, 24-11-1927
  16. TAMIL HOLY BOOK, The Collected Works of Mahatma Gandhi, Vol 67…Harijan, 6-7-1935 [Translation of the kurals as given in the original. Numbering of the Kurals done for this essay]

பயிலகத்தில் திருக்குறள்

நவம்பர் 20, 2018

இந்த மனிதர் உண்மையிலேயே கவிதைக்குள் மாயங்கள் செய்திருக்கிறார். எங்கள் குழந்தைகள் திருக்குறள் கற்றுக்கொள்வதை நேசிக்கின்றனர். கற்றுத்தரும்படி கட்டாயப்படுத்துகின்றனர் – ஒவ்வொரு நாளும் ஒரு சில நிமிடங்களுக்காவது. புத்தகத்தையே தொட மறுப்பவர்களும், குறள்களைக் கேட்டு மனனம் செய்து ஒப்பிப்பதில் பேருவப்பு கொள்கின்றனர். ஒரு சொல்லைக்கூட உரக்கப் படிக்க மறுப்பவர்களும், தொண்டை கிழிய இக்குறளைக்கூடக் கூவுகின்றனர்:

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்கு
துப்பாய தூஉம் மழை.

திருக்குறள் முழுவதையும் பாடத்திட்டத்தில் சேர்க்கவேண்டும் என்று ஒரு தீர்ப்பு தரப்பட்டது. என்னைக் கேட்டால், திருக்குறளைப் பாடத்திட்டத்திலிருந்தும், தேர்வுகளிலிருந்தும் முழுவதுமாய் நீக்கிவிடுங்கள் என்பேன். அதை ஒரு கொண்டாட்டமாக்குங்கள். எங்கள் குழந்தைகளைப் போலவே எல்லாக் குழந்தைகளும் திருக்குறளைக் கற்றுக்கொடுங்கள் என்று கட்டாயப்படுத்துவார்கள், அவர்களாகவே அவரவர் வேகத்தில் கற்பார்கள், மற்றவர்களோடும் மற்றவர்களிடமிருந்தும் கற்பார்கள், ஒருவர் மற்றவரை நிறைவு செய்வார்கள், மகிழ்ச்சியுடன் கற்பார்கள்.


தியான வனம்

ஜனவரி 1, 2017

சென்ற வாரம் முற்றிலும் புதியதோர் அனுபவத்தைக் கொணர்ந்து தந்தது. காந்திகிராம் பல்கலைக்கழகத்தில் பணிசெய்கின்றவர்களும், கடந்த சில ஆண்டுகளில் எங்கள் இனிய குடும்ப நண்பர்களாகவும் ஆகிவிட்ட ராஜா-கல்பனா தம்பதியினர், பள்ளி மாணவர்களுக்காக ஒருங்கிணைத்த ஒரு பயிற்சி முகாமுக்காகச் சென்றிருந்தோம். இம்முறை, கல்லூரி வளாகத்தில் அல்லாமல், அருகிலிருந்த தியான வனம் என்கிற ஆசிரமத்தில் நிகழ்ச்சி நடந்தது.

தியான வனத்தை நடத்திவருபவர் கோர்கோ மோசஸ் – காவி உடை அணிந்த ஒரு ஜெசூயிட் பாதிரியார். அவ்வப்போது பயிற்சிக்காக வருகின்ற பாதிரியார்களின் துணையோடும், பெரும்பாலும் தனியாகவும் ஆறரை ஏக்கர் நிலத்தை நிர்வகித்து வருகிறார். நல்ல மழை வந்து ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்ட போதும், அருகிலிருந்த அணையில் நீர் முழுவதுமாக வற்றிவிட்ட போதும், இன்னும் நிறைய பசுமை அங்கு மிச்சமிருந்தது. நாங்கள் சென்று சேர்ந்த காலைப் பொழுதில் பெய்த சிறு மழையின் கருணையில் பசுமை மெருகேறியிருந்தது.

ஃபாதர் கோர்கோ மிக எளிய ஒரு துறவு வாழ்வினை வாழ்ந்து வருகிறார். அவரது படுக்கை அறை இதுவரை நான் எங்கும் கண்டிராத ஒரு கோலத்தைக் கொண்டிருந்தது. பிரமிட் வடிவத்தில் கட்டப்பட்டுள்ள அந்த அறையில், நான்கு அடிக்குக்கும்  உயரமாக இருந்த ஒரு மரக்கட்டிலும், அதன் மீது ஒரு மெல்லிய மெத்தை விரிப்பும் இருந்தன. அறையின் ஒரு மூலையில் சில தடுப்பகளால் அமைக்கப்பட்ட ஒரு கழிவறை. இவற்றைத் தவிர அந்த அறையில் எந்த ஒரு பொருளும் இல்லை.

‘பொருட்களே இல்லாத ஒரு அறையை இப்போதுதான் பார்க்கிறேன்,’ என்றேன்.
‘எனது சில பொருட்கள் என் அலுவலக அறையில் இருக்கின்றன,’ என்றார்.

நான்கு சிறுமிகள் குத்துவிளக்கு ஏற்ற, ‘ஒளிவளர் விளக்கே’ என்ற திருமுறைப் பாடலை மகிழ்மலர் பாட நிகழ்ச்சி தொடங்கியது.

நிகழ்ச்சி நடந்த பெரிய அரங்கில், தலாய் லாமா, விவேகானந்தர், ஃபிரான்சிஸ் அஸிசி, ரூமி, மகாவீரர் என்று பல சமயத் தலைவர்களின் புகைப்படங்கள் தொங்கவிடப்பட்டிருந்தன. அவர்கள் அனைவரைப் பற்றியும் சில குறிப்புகளைக் குழந்தைகளோடு பகிர்ந்துகொண்டார். பத்மாசனம் போட்டிருந்த ஒரு சித்தரின் ரூபத்தில் யேசுவின் படம். யேசுவை ஒரு சித்தராகத்தான் பார்ப்பதாகக் கூறினார்.

வங்காளத்தில் சுவாமி சதானந்த கிரி என்பவரிடம் பல ஆண்டுகள் யோகப்பயிற்சி பெற்றிருக்கிறார். சுவாமி சரணானந்தா என்ற பெயரையும் இந்தப் பாதிரியார் பூண்டிருக்கிறார். யேசு நாம செபம் என்ற புத்தகத்தை வங்காள மொழியில் எழுதி, ஆங்கிலத்திலும் தமிழிலும் மொழிபெயர்த்திருக்கிறார்.

தியான அறை என்று தனியே ஓர் அறை இருந்தது. மிகவும் ரம்மியமான சூழலில், அமைதியின் மடியில் அமைந்துள்ள அந்த அறையின் வாயிலை நோக்கிய சுவரின் மையத்தில், 12 சமயங்களின் சின்னங்களை ஒருங்கே கொண்டுள்ள ஒரு படம் இடம்பெற்றிருந்தது. ‘ஒன்றே குலம், ஒருவனே தேவன்’ என்ற திருமூலரின் வாசகம் அதன் மேல் பிரதானமாக எழுதப்பட்டிருந்தது. படத்தின் நடுவில் தியானம் செய்யும் ஓர் உருவம்.

அனைத்துச் சமயங்களை நிறுவியவர்களும், ஆழ்ந்த தியானத்தின் மூலமாகவே ஞான நிலையை எய்தியதாகக் கூறினார்.

படத்தின் முன்னே கீதை, பைபிள், குரான் மூன்றும் விரித்து வைக்கப்பட்டுள்ளன. அறையின் புத்தக அடுக்கில், அந்த நூல்களின் பல பிரதிகள் இருந்தன.

முதல் நாள் மாலையில், 10-15 வயதுக்குள் இருந்த 30 குழந்தைகளும் ஒரு மணிநேரம் பக்திப்பாடல்கள், வினோபாவின் சர்வசமயப் பாடல், தியானம், பைபிலிலிருந்து அன்று நாங்கள் கண்ட சில குறள்களுக்கு இணையான சில பத்திகள் படிக்கப்படுவதைக் கேட்பது என்று அமைதியாகக் கழித்தனர். பாதிரியார் 12 சமயங்கள் குறித்தும் குழந்தைகளுக்குச் சுருக்கமாகக் கூறினார். புத்தரின் கதையைச் சொன்னார்.

மையப் படத்துக்கு தீபாராதனை செய்து தியானத்தை முடித்தார்.

அடுத்த நாள் காலை 6 மணிக்கு, சில உடற்பயிற்சிகளுக்குப் பின்னர், மீண்டும் தியான அறையில் ஒரு மணி நேரம். இம்முறை பைபிலுக்குப் பதில், கீதையிலிருந்து சில பத்திகளைத் தேர்ந்தெடுத்துத் தந்து, என்னைப் படிக்கச் சொன்னார்.

அவர் சொன்ன புத்தர் கதையின் பல பகுதிகள் நடந்திருக்க வாய்ப்பில்லை என்று தர்மானந்த கோஸம்பி எழுதியிருப்பதைச் சுட்டிக்காட்டினேன். ‘ஆம், அவை புராணங்கள் தான்; எல்லா ஞானிகள் குறித்தும் வெகுசில ஆண்டுகளில் புராணங்கள் எழுப்பப்படுகின்றன; அவர்களது தத்துவங்களை விளக்கவே அந்தப் புராணங்கள் பயன்படுகின்றன,’ என்றார்.

பயிற்சியின் இடையில் ஃபாதர் கோர்கோ கொரிய நடனம் கற்பித்தார். எல்லாரும் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். நித்யா பறவைகள் குறித்து ஒரு வகுப்பெடுத்தபோது, மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

குறள் அடிப்படையிலான எங்களது வகுப்புகள் எளிமையானவையாக மாறின; ஒரு வகையில் அவசியமற்றும் போயின. கண்ணெதிரில் அறமும் அன்பும் நிறைந்த ஒரு எளிய மனிதர் இருக்கும்போது நாம் சொல்லிப் புரியவைப்பதற்கு என்ன இருக்கிறது.

கிராமத்துள் குழந்தைகளைக் குழுக்களாக அனுப்பி, ஒவ்வொரு குழுவும் 5 வீடுகளுக்கேனும் சென்று, மக்களோடு பழகி, உரையாடி வருமாறு செய்தார். ஒரு சில வீடுகளில் நாய்கள் குரைத்தன; ஓரிரு வீடுகளில் மனிதர்கள் குரைத்தனர்; பெரும்பாலும் உள்ளே அழைத்துவைத்து அளவளாவி, உண்ண ஏதேனும் கொடுத்து அனுப்பினர். வறட்சியால் வருமானமின்றி, வேலையின்றித் தவித்தாலும், மனங்களில் இன்னும் ஈரம் இருக்கத்தான் செய்கிறது.

தனக்குப் பின் தியான வனத்தை நடத்துவதற்கு எவரும் இதுவரை ஆர்வம் காட்டவோ பயிற்சி பெறவோ இல்லை என்கிற ஏக்கம் ஃபாதர் கோர்கோவுக்கு இருக்கிறது. இந்த இடம் பக்தர்களைக் (devotees) காட்டிலும் ஆன்மீகத் தேடலுடையவர்களுக்கானது(Seekers) என்று குறிப்பிட்டார். நிறுவன எதிர்ப்பு என்று பெரிதாக இல்லாவிட்டாலும், பெரிய ஆதரவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆண்டுதோறும் வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொண்டு தியான வகுப்புகள் மூலமாகவும், ஆசிரமத்தில் நடத்தப்படும் முகாம்களின் மூலமாகவும் நிர்வாகத்திற்குத் தேவையான நிதி திரட்டிக்கொள்கிறார். குடிப்பழக்கத்திலிருந்து விடுபடவும் முகாம்கள் நடத்துகிறார்.

‘ஒளிவளர் விளக்கே’ பாடலைப் பழகவேண்டும் என்று கூறி, மகிழ்மலரை மீண்டும் பாடச்சொல்லி பதிவு செய்துகொண்டார். வரிகளை எழுதிக்கொண்டார். ஆனந்த பைரவி ராகமாக இருக்கவேண்டும் என்றார். பாடல் இயற்றியது யார் என்பது அப்போது உறுதியாக நினைவில்லை (திருமாளிகைத் தேவர்). அவரது நூலகத்துக்கு அழைத்துச் சென்றார். திருமுறை முழுவதும் 20க்கும் மேற்பட்ட பாகங்களாக இருந்தது. மேக்ஸ் மியூலரின் கிழக்கத்திய சமயங்கள் குறித்த நூல்களின் முழுத்தொகுதியும் வைத்திருக்கிறார். தனது 18ம் வயது முதல், 38 ஆண்டுகள் வங்காளத்தில் இருந்துவிட்டதால், தமிழில் போதிய அளவு தேர்ச்சி பெற இயலவில்லை எனக் குறைபட்டார்.

இரண்டு நாட்களின் முடிவில் மாணவர்களிடம் நிகழ்ச்சி பற்றிய கருத்துகளைக் கேட்டுக்கொண்டிருந்த போது ஒரு சிறுமி கூறினாள், ‘நான் ஃபாதர் கிட்ட இந்துக்கள் பைபிள் படிக்கலாமான்னு கேட்டேன். அவர் படிக்கலாம்னு சொன்னார். அது எனக்கு ரொம்பப் பிடிச்சது.’


நீயா நானாவில் திருக்குறளும் நானும்

பிப்ரவரி 28, 2015

இதுவரை நான் செய்திராத அளவு கடுமையான உடலுழைப்பு செய்து முடித்த ஒரு தினத்தில், மாலை 6 மணிக்கு, மனமகிழ்ச்சியுடனும் உடற்சோர்வுடனும் மண்புழுதியோடும் நண்பரின் நிலத்திலிருந்து வீட்டிற்குத் திரும்புவதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் போதுதான் ‘நீயா நானா’ நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கான அழைப்பு வந்தது.

‘திருக்குறள் பற்றி ஒரு நிகழ்ச்சி நடத்துகிறோம். நாளை காலை 10மணிக்கு ஏவிஎம் ஸ்டூடியோ வரமுடியுமா,’ என்றார்கள்.

‘நான் இப்ப கோயமுத்தூர் பக்கத்துல ஒரு கிராமத்தில் இருக்கனே. காலைல வந்து சேர்வது சிரமமாயிற்றே’ என்றேன்.

‘சரி, யோசிச்சுச் சொல்லுங்க. வந்தா நல்லாயிருக்கும்.’

திருக்குறள் குறித்து கடந்த 3 ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகளிலும், சில மேடைகளிலும் பேசிக்கொண்டிருந்து ஒரு 5000 பேரை அடைந்திருப்பேன் என்று நினைக்கிறேன். (சிறிது காலமாய் தடைபட்டிருக்கும்) எனது திருக்குறள் மொழிபெயர்ப்புப் பக்கத்தினை 1600 பேர் தொடர்ந்துகொண்டிருக்கிறார்கள். இவற்றோடு ஒப்பிடும்போது நீயா நானாவின் பெரும் வீச்சு நான் அறியாததில்லை. திருக்குறளை மக்களுக்குச் சென்றுசேர்க்கும் ஒரு நிகழ்வில் பங்கேற்பதற்கு நான் எப்படி மறுக்கமுடியும். எப்படியாவது வந்து சேர்கிறேன் என்றேன்.

பேருந்துகள் மாறி அவசரமாய் வீட்டை அடைந்து கிளம்பி, கொஞ்சமேனும் தூங்கவேண்டும் அதிகாலையிலேயே சென்றடையவேண்டும் என்கிற இரட்டைக் கவலையோடு, 3 ஆண்டுகளாய்த் தவிர்த்துவந்த சொகுசுப் பேருந்து ஒன்றில் ஏறிச் சென்னைக்குச் சென்றேன். நண்பர் விஜயசாகரின் வீட்டில் ஆயத்தமாகி நிகழ்ச்சிக்குச் சரியான நேரத்தில் சென்றடைந்தேன்.

எங்கே, சர்ச்சைக்குரிய விவாதங்கள் நிறைந்த ஒரு பரபரப்பு நிகழ்ச்சியாக அமைந்துவிடுமோ, என்கிற அச்சம் இருந்தது. ஆனால், ஆன்டனியும் கோபிநாத்தும் எல்லா சர்ச்சைகளையும் விவாதங்களையும் தவிர்ப்பதில் கவனமாக இருந்தது திருப்தியளித்தது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்குப் புதியவன் எனினும், பேசுவதற்கு ஓரளவு நிறைய வாய்ப்புகள் கிடைத்தன. இருப்பினும் பேசவேண்டியதெல்லாம் பேசிவிடவும் முடியவில்லை.

நிகழ்ச்சி ஒளிபரப்பான பின், ‘உழவுபற்றி ஏதாவது பேசுவீங்கன்னு நினைச்சேன்,’ என்று விவசாய நண்பர் குறைபட்டுக்கொண்டார். ‘நீங்க எப்பவும் செய்வது போல காந்தியையும் குறளையும் இணைத்துப் பேசியிருக்கலாமே,’ என்று காந்திய அன்பர்கள் ஆதங்கப்பட்டனர்.

5-6 மணிநேரம் பதிவு செய்ததை ஒன்றரை மணிநேரத்துக்குள் திறம்பட அடக்கியிருந்தார்கள். அறம்பற்றி நான் பேசியது எடிட்டிங்கில் வெட்டுப்படாமல், முழுமையாகக் காட்டியிருக்கலாம் என்பது மட்டுமே என் தரப்புக் குறைபடல்.

திருக்குறள் அறத்தை அடிப்படையாகக் கொண்ட நூலெனினும், ஓர் அறநூல் மட்டுமே அன்று; இலக்கிய நயமும் கவித்துவ எழுச்சியும் கொண்ட ஆக்கம் என்று பேசினேன். திருக்குறளில் கவனிக்கப்படாமல் இருக்கும் நகைச்சுவை உணர்வு பற்றியும் கோடிட்டுக்காட்டினேன். அப்போது ‘செல்லிடத்துக் காப்பான் சினம்காப்பான்’ என்று நான் கூறிய குறள் ஒளிபரப்பில் இடம்பெற்றது. ‘இரவு’ அதிகாரம் பற்றியும் குறிப்பிட்டிருந்தேன். மிகச்சுருக்கமாகப் பேசியதால் அது இடம்பெறவில்லை என்று நினைக்கிறேன். இந்தப் பதிவையே அதைக் குறித்து விரிவாக எழுதும் வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்கிறேன். அந்த நிகழ்ச்சிப் படமாக்கலின் இடைவேளையில் கூட இரண்டு நண்பர்கள் திருக்குறளின் முரண்கள் பற்றிப் உரையாடிக்கொண்டிருக்கும் போது, இரவச்சத்தில் இரப்பதை இகழும் வள்ளுவர் இரவு அதிகாரத்தில் புகழ்கிறாரே என்று பேசக்கேட்டேன். இரவு அதிகாரத்துக்கான மரபான உரைகளில் நேரடிப் பொருளையே எடுத்துள்ளனர். பரிமேலழகர், “இனி , ‘மானந் தீரா இரவு இரவாமையோடு ஒத்தலின் அதனானும் வீடெய்தற்பயத்ததாய உடம்பு ஓம்பப்படும் ,’ என்னும் அறநூல் வழக்குப்பற்றி , மேல் எய்திய துவரத் துறத்தல் விலக்குதற் பொருட்டு இரவு கூறுகின்றார்” என்று எழுதுகிறார். பரிமேலழகர் தொடர்ந்து இப்படியான உரையையே இரவு அதிகாரத்தின் எல்லாக் குறள்களுக்கும் எழுதுகிறார். மணக்குடவர் உரையிலும் பெரிய வேறுபாடில்லை. நான் படித்த சில நவீன உரைகள் இவர்களை அடியொற்றியே உள்ளன.

எனது வாசிப்பில், இரத்தலை வள்ளுவர் நியாயப்படுத்துவதாகக் காணவில்லை; இரவச்சம் எழுதிய ஒருவர் அப்படிச்செய்வது எப்படிச் சாத்தியம்? இரவு அதிகாரத்தில் ஓர் அற்புதமான அங்கதம் மிளிர்வதாய் உணர்கிறேன். வள்ளுவர் நம்மோடு விளையாடும் விளையாட்டாகவே அந்த அதிகாரத்தை நான் கருதுகிறேன்.

இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின்
அவர்பழி தம்பழி அன்று.
[அ. இரந்து கேட்கத் தக்கவரைக் கண்டால் அவரிடம் இரக்கவேண்டும்; அவர் இல்லையென்று ஒளிப்பாரானால் அது அவர்க்குப் பழி; தமக்குப் பழி அன்று. (மு.வ. உரை)
ஆ. கொடுக்கும் நிலையில இருக்கிற ஒருத்தன் கிடைச்சா, அவன்கிட்ட கேட்றணும். கொடுக்க முடியலைனா அவனுக்குத்தான் அவமானம்; நமக்கு அதிலென்ன இழிவு (என் ‘உரை’)]

இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை
துன்பம் உறாஅ வரின்.
[அ.இரந்து கேட்ட பொருள்கள் துன்பமுறாமல் கிடைக்குமானால், அவ்வாறு இரத்தலும் இன்பம் என்று சொல்லத் தக்கதாகும்.
ஆ. எதையாவது யாராவதுகிட்டக் கேட்டு நோகாமல் கிடைத்தால், அதன் சுகமே அலாதியானது.]

கரப்பிலா நெஞ்சின் கடனறிவார் முன்நின்று
இரப்பும் ஓர்ஏஎர் உடைத்து.
[அ. ஒளிப்பு இல்லாத நெஞ்சும் கடமையுணர்ச்சியும் உள்ளவரின் முன்னே நின்று இரந்து பொருள் கேட்பதும் ஓர் அழகு உடையதாகும்.
ஆ. இருப்பதை ஒளித்துவைக்காத, கடமை தவறாத பெரிய மனுஷனத் தேடி அவங்கிட்டக் கேட்பதிலையும் ஒரு அழகு இருக்குப்பா]

இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்
கனவினும் தேற்றாதார் மாட்டு.
[அ. உள்ளதை மறைத்துக் கூறும் தன்மையைக் கனவிலும் அறியாதவனிடத்தில் இரந்து கேட்பதும் பிறர்க்குக் கொடுப்பதே போன்ற சிறப்புடையது.
ஆ. இருப்பதைக் கனவுலகூட மறைக்காத புண்ணியவான்கிட்ட எதையாவது கேட்பதும் மற்றவங்களுக்கு அள்ளிக்கொடுக்கிறதுக்குச் சமம்தான்]

இகழ்ந்துஎள்ளாது ஈவாரைக் காணின், மகிழ்ந்துள்ளம்
உள்ளுள் உவப்பது உடைத்து.
[அ.இகழ்ந்து எள்ளாமல் பொருள் கொடுப்பவரைக் கண்டால், இரப்பவரின் உள்ளம் மகிழ்ந்து உள்ளுக்குள்ளேயே உவகை அடையும் தன்மையுடையதாகும்.
ஆ. திட்டாம தர்மம் பண்ற மவராசனைப் பார்த்தா, ஒரே குஷியா இருக்குங்க]

இரப்பாரை இல்லாயின், ஈர்ங்கண் மாஞாலம்
மரப்பாவை சென்று வந்தற்று.
[அ. இரப்பவர் இல்லையானால், இப் பெரிய உலகின் இயக்கம் மரத்தால் செய்த பாவை கயிற்றினால் ஆட்டப்பட்டுச் சென்று வந்தாற் போன்றதாகும்.
ஆ. தர்மம் பண்ணுங்க சாமின்னு கேட்கிறதுக்கு ஆளில்லைனா, இந்த உலகம் பொம்மை உலகம் மாதிரி உயிர்ப்பே இல்லாமப் போயிடுமே]

ஈவார்கண் என்உண்டாம் தோற்றம் இரந்துகோள்
மேவார் இலாஅக் கடை?
[அ. பொருள் இல்லை என்று இரந்து அதைப் பெற்றுக் கொள்ள விரும்புவோர் இல்லாதபோது, பொருள் கொடுப்பவரிடத்தில் என்ன புகழ் உண்டாகும்?
ஆ. கேட்பதற்கு யாருமில்லைனா, கொடுக்கிறவனுக்குப் பெருமை சேர்க்க என்ன இருக்கு? அதனாலதான் நாங்க பெரிய மனசு பண்ணி எதையாவது கேட்கிறோம்.]

மேற்கண்ட குறட்பாக்களை, வள்ளுவரின் நேரடிக் கூற்றாகப் பார்க்காமல், இரக்கின்ற ஒருவன் தன் செயலை நியாயப்படுத்தச்சொல்லும் தர்க்கங்களைப் பகடி செய்வதாக வாசித்தால், நாம் பெறும் அர்த்தங்களும் அனுபவங்களும் வேறாகின்றன. வள்ளுவர் தனது குரலில் அல்லாது, கவிமாந்தரின் குரலிலும் பேசும் இலக்கிய உத்தியை வேறு பல குறட்பாக்களிலும் காணலாம்.

திருக்குறளில் நகைச்சுவை பற்றி மேலும் கூர்ந்து கவனித்து எழுதவேண்டும்.

நிகழ்ச்சியில் நான் கலந்துகொண்டது குறித்து என்னைவிட நண்பர்களுக்கு மகிழ்ச்சி என்பதை முகநூல் வாழ்த்துகள் மூலம் காணமுடிந்தது. நன்றி. நண்பர்களின் மகிழ்ச்சியில் நானும் பங்குகொள்கிறேன்.

———————————

இணையத்தில் காண:

Chapter 18 – Episode 451:
http://www.hotstar.com/#!/neeya-naana-1584-s


காந்தியும் திருக்குறளும்

ஓகஸ்ட் 19, 2014

‘காந்தி இன்று’ தளம் மின்னிதழாக மாறியிருக்கிறது. முதல் இதழில் வெளிவந்துள்ள எனது கட்டுரை.

(6-நவம்பர்-2019: இக்கட்டுரையை மேலும் விரிவுபடுத்தித் தனியே பதிந்துள்ளேன்.)

காந்தியும் திருக்குறளும்

ஓர் இலக்கியப் படைப்பின் மீது பெருந்திரளான மக்கள் பேரன்பைப் பொழிய முடியுமா என்ற கேள்வி எழுந்தால், திருக்குறள் மீது தமிழர்கள் கொண்டிருக்கும் உணர்வையே உதாரணமாகக் காட்டமுடியும்.  பெரும்பாலும் ஒரு நீதி நூலாகவே அறியப்படுகிற ஒரு படைப்பு (அது நீதிநூல் மட்டுமே அல்ல என்றாலும்கூட), எப்படி இத்தனை அன்புக்குப் பாத்திரமானது என்பது ஆச்சரியமானதுதான். அந்தத்  திருக்குறள் காட்டும் நெறிக்கு மிக நெருக்கமான வாழ்வை வாழ்ந்தவர்கள் என்று ஒரு பட்டியல் இட்டால், அதில், தமிழர் அல்லாத போதினும், காந்தியின் பெயரைத் தவிர்க்கமுடியாது. காந்தி, திருக்குறள், தால்ஸ்தோய் குறித்து நிறையப் புனைவுகள் உள்ளன. காந்தியைத் திருக்குறள் எந்த அளவுக்கு நேரடியாகப் பாதித்தது என்பதை உறுதியாகக் கூறவியலாது.  ஆனால், காந்தி திருக்குறளைப் பற்றி நன்றாக அறிந்திருந்தார் என்பதை அவரது பதிப்புகளிலும், எழுத்துகளிலும் காணலாம்.


இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »


நத்தங்கள் எத்தனையோ?

திசெம்பர் 14, 2010

நத்தம்போற் கேடும் உளதாகுஞ் சாக்காடும்
வித்தகர்க் கல்லா லரிது. [235]

இதுவரை நான் மொழிபெயர்த்ததில் என்னைப்பெரிதும் தடுமாறச்செய்த குறள் இது.  இறுதியில் எழுதயது இது:

Growth (of fame) amidst adversity and survival (of name) after death, are possible only for the smartest. [235]

இது எளிய உரையாகத்தான் அமைந்துள்ளதே ஒழிய, நல்ல மொழிபெயர்ப்பாகவல்ல. இதற்கு சரியான மொழியாக்கம் சாத்தியமே இல்லை என்றே நினைக்கிறேன்.

வள்ளுவர் ‘நத்தம்’ என்கிற மாயச்சொல்லைப் பயன்படுத்தியிருப்பது அற்புதம்.

நத்தம் என்பதை ஆக்கம் என்று பரிமேலழகரும், மணக்குடவரும் உணர்ந்து உரை கூறுகின்றனர். (பரி: ‘நந்து’ என்னும் தொழிற்பெயர் விகாரத்துடன் ‘நத்து’ என்றாய் பின் ‘அம்’ என்னும் பகுதிப் பொருள் விகுதிபெற்று ‘நத்தம்’ என்று ஆயிற்று. ‘போல்’ என்பது ஈண்டு உரையசை.)

நந்தல் என்பதற்கு நேர் எதிராய் ‘கேடு ‘என்ற பொருளும் உள்ளது!! (Miron Winslow அகராதி, சென்னைப் பல்கழகத் தமிழ்ப் பேரகராதி இரண்டிலும்)

மேலும் ‘நத்தம்’ என்ற சொல் நத்தை, சங்கு, வாழை, இடம், இருள், கடிகார முள் என்று பல பொருள்கள் கொண்டது. இவற்றுள் எந்தப் பொருளையும் இந்தக்குறளில் பொருத்தி ஒருவகையான பொருள் கொள்ளமுடியும் என்று தோன்றுகிறது.

ம.ர.பொ.குருசாமியும் ‘இக்குறள் உரையாசிரியர்களைத் திகைக்கவைத்த குறள்’ எனக்கூறி, ‘வாழைபோல் கேடும் [தாய் வாழை அழிந்தாலும், சிங்கம் வெடித்தல் எனப்படுகின்ற பக்கக் கன்றுகளின் தோற்றத்தால் வாழை அழிவதில்லை]’ என்ற பொருளில் உரைதருகிறார்.

நான் சற்றே மலைப்போடு இணையத்தில் தேடியபோது, ‘உரையாசிரியர்கள்’ நூலில் மு.வை.அரவிந்தனும் இதுகுறித்து விரிவாய் எழுதியிருப்பது தெரிந்தது. (நான் இதற்கு முன்பு மலைத்த ‘இலனென்னு மெவ்வ முரையாமை‘ குறளுக்கும் அவர் விளக்கமளித்திருக்கிறார்.)

குறளுக்குள் இன்னும் எத்தனை நத்தங்கள் காத்திருக்கின்றனவோ?


இலனென்னு மெவ்வ முரையாமை

திசெம்பர் 13, 2010

இலனென்னு மெவ்வ முரையாமை யீதல்
குலனுடையான் கண்ணே யுள. [223]

இந்தக் குறளில் வருகிற எளிய தொடரான ‘இலனென்னு மெவ்வ முரையாமை’, எத்தனை அர்த்தங்களைத் தன்னுள் புதைத்து வைத்திருக்கிறது! பரிமேலழகரின் உரை இந்தக் குறளின் ஆழத்திற்குள் நம்மை அழகாக இழுத்துச்செல்கிறது.

1. கொடுப்பவன் இரந்தவனின் வறுமையைப் பற்றிப் பிறரிடம் கூறாமலிருப்பது. (பரிமேலழகர்)

2. இரப்பவன் கொடுப்பவனிடம் தன் வறுமையை உரைக்காமுன் கொடுப்பது.  (மணக்குடவர்)

3. இரந்தவன் மறுபடி இரக்க நேராவண்ணம் அள்ளிக் கொடுப்பது. (பரிதியார்)

4. கொடுப்பவன் வறுமையுற்ற போதும் தன் வறுமையை வெளிக்காட்டாது கொடுப்பது (தருமர் நச்சர் தாமத்தர் ஆகியவர்களில் யாரேனும ஒருவர் கூறியதாக இருக்கலாம்)

(மு.வை.அரவிந்தன் எழுதிய உரையாசிரியர்கள் என்ற ஆய்வுநூல் இணையத்தில் உள்ளது. அதிலிருந்து மாறுபட்ட ஒவ்வொரு கருத்துக்கும் ஆசிரியர் யாரென அறிந்துகொள்ளமுடிந்தது)

பரிமேலழகர் உரைக்கு, வை.மு.கோபாலகிருஷ்ணமாச்சார்யரின் விளக்கவுரையின் துணையோடு திருக்குறளைப் படித்து மொழிபெயர்க்க நேர்ந்தது ஓர் அற்புதமான நிகழ்வு என்று மறுபடியும் நினைத்துக் கொள்கிறேன். இது எனக்குக் கேளாமல் கிடைத்த பெருங்கொடை.

பரிமேலழகர் உரை இதோ:

‘இலன் என்னும் எவ்வம் உரையாமை – யான் வறியன் என்று இரப்பான் சொல்லும் இளிவரவைத் தான் பிறர்கண் சொல்லாமையும், ஈதல் – அதனைத் தன்கண் சொன்னார்க்கு மாற்றாது ஈதலும், உள குலன் உடையான் கண்ணே- இவை இரண்டும் உளவாவன குடிப் பிறந்தான் கண்ணே.

(மேல் தீது என்றது ஒழிதற்கும் நன்று என்றது செய்தற்கும் உரியவனை உணர்த்தியவாறு. இனி இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல் என்பதற்கு, அவ்விளிவரவை ஒருவன் தனக்குச் சொல்வதற்கு முன்னே அவன் குறிப்பறிந்து கொடுத்தல் எனவும், அதனைப் பின்னும் பிறனொருவன்பால் சென்று அவன் உரையா வகையால் கொடுத்தல்’ எனவும், அதனைப் பின்னும் பிறனொருவன்பால் சென்று அவன் உரையா வகையால் கொடுத்தல் எனவும், யான் இதுபொழுது பொருளுடையேன் அல்லேன் ‘எனக் கரப்பார்’ சொல்லும் இளிவரவைச் சொல்லாது கொடுத்தல் எனவும் உரைப்பாரும் உளர். அவர் ‘ஈதல்’ என்பதனைப் பொருட்பன்மை பற்றி வந்த பன்மையாக உரைப்பர்.)

இக்குறளுக்கு Facebook பக்கத்தில் என் மொழிபெயர்ப்பு:

Charity, without mention of the distress of poverty, is present only in those from a good family. [223]

Charity, without mention of the distress of poverty, is the mark of noble birth. [223] V2

[பரிமேலழகர் உரையோடு, மணக்குடவர் உரையும் இங்கு காணலாம். உடன் மு.வ., தேவநேயப் பாவாணர், கலைஞர் உரைகளும் உள்ளன – அவை பெருமளவு பரிமேலழகர் உரையை ஒட்டியே எழுதப்பட்டுள்ளன. ]


Þôªùù¢Â ªñõ¢õ º¬óò£¬ñ ò¦îô¢
°ô¬ìò£ù¢ èí¢«í à÷.