ஊரடங்கில் ஒரு நாள்

ஏப்ரல் 23, 2020

17-4-2020

கிணற்றிலிருந்து வரும் குழாய் இணைப்பு விட்டுப்போய் இரண்டு வாரங்கள் ஆகிவிட்டன. அழைத்துப்பார்த்த குழாய்நுட்பர் [ப்ளம்பர் ] வருவதாகச் சொல்லிச்சொல்லி வரவேயில்லை. இரண்டு மழை கிடைத்ததால் நானும் அதிகம் கவலைப்படவில்லை. இப்போது ஈரம் காய்ந்துவிட்டது. வெயில் கொளுத்துகிறது. இன்றைக்கு நாமே ஒட்டிவிடலாம் என்று இரண்டு கிராமம் தள்ளியிருக்கும் கடைக்குச் சென்று குழாய் ஒட்டும் பசைவாங்கிவர நானே கிளம்பிவிட்டேன். எங்கள் ஊர் தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, நுழைவாயிலில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, எந்நேரமும் மூன்று நான்கு காவல்துறையினர் அமர்ந்திருக்கின்றனர். காரில் செல்ல வாய்ப்பில்லை. முகக்கவசம் அணியாதவர்களுக்கு ஐந்நூறு ரூபாய் அபராதம் விதிப்பதாகவும் பேச்சு.

மத்திய அரசு விதிமுறைகளைப் பின்பற்றி கைக்குட்டையையும் இரண்டு ரப்பர் வளையங்களையும் கொண்டு நானே ஒரு முகக்கவசம் செய்துகொண்டேன். சின்னதாக இருப்பினும் மூக்கு வாயினை நன்றாக மூடுகிறது.

கடை மூன்று கிலோமீட்டர் தள்ளியுள்ளது. யாருமற்ற சாலையில் முகமூடியோடு நடந்துசெல்வது வினோதமாகத்தான் இருந்தது. கிழக்கு நோக்கி நடந்துகொண்டிருந்ததால், காலை நேரத்து இளம் வெயில் முகத்தில் நேராக விழுந்தது. ஒவ்வொரு முறை மூச்சுவிடும்போதும் நான் அணிந்திருந்த கண்ணாடி ஈரமாகிக் கண்ணை மறைத்தது.

பாதிவழியில் ஒரு மரத்தடியில் புதிய சாலையோரக் காய்க்கடை முளைத்திருந்தது. நிறையக் காய்வகைகள் ஓரளவு புதிதாக இருந்தன. திரும்பும் போது வாங்கிக்கொள்வதாகச் சொல்லிவிட்டுச் சென்றேன்.

கடைக்குச் சென்றதும் ஏக வரவேற்பு. அக்கடைக்கு எதிரில் இரண்டாண்டுகள் குடியிருந்திருக்கிறோம். கடைக்காரர் ஜப்பார் (ஜாஃபர்) பொருள்கள் வாங்க வெளியில் சென்றிருந்தார். அவரது மனைவி, மக்கள், மருமக்கள் எல்லாரும் இருந்தனர். காபி வேண்டுமா தேநீர் வேண்டுமா ஜூஸ் குடியுங்கள் என்று உபச்சாரம் பலமாக இருந்தது. பழமாவது சாப்பிடுங்கள் என்றார்கள். நான் வாங்க வந்த பசை என்னவோ 16ரூபாய்தான். மகளுடைய செருப்பினை நாய்க்குட்டிகள் கடித்துப்பிய்த்துவிட்டன. ஊரடங்கின் போது செருப்பெதற்கு என்று அவை நினைத்திருக்கலாம். அவளுடைய அளவுக்கு அங்கு செருப்பும் இருந்தது. 100 ரூபாய், உங்களுக்கு எழுபதுக்குத் தருகிறேன் என்றார் கடைக்காரம்மா. அவற்றுடன் இரண்டு சோப்புகளும் வாங்கிக்கொண்டேன்.

எதிர் வீட்டில் இருப்பவர் ஊர்ஊராக நெகிழி வாளிகளையும் பிற சாமான்களையும் எடுத்துச்சென்று விற்பவர். மகன் சுவர்ச்சாயம் பூசுபவர். இருவரும் வெளியில் செல்ல வழி இல்லை. எப்படியோ சமாளிக்கிறோம் என்றார்.

வழியில் காய்கறிகள் வாங்கிக்கொண்டேன். அங்கும் எங்களிடம் படித்த பையன் துணைக்கிருந்தான். 120 ரூபாய்க்கு ஐந்தாறு நாட்களுக்குத் தேவையானவை கிடைத்தன.

வீட்டுக்கு வந்ததும் கைக்குட்டையைக் கழற்றித் துவைத்துக் காயப்போட்டபிறகுதான் இதை எந்நேரமும் அணிந்துகொண்டு பணிசெய்பவர்களின் பாடு புரிந்தது.

நாராயணனை ஐந்து நிமிட வேலைதான் என்று உதவிக்கு அழைத்துக்கொண்டு, தோட்டத்துக்குச் சென்றேன். அவரே குழாய்களை இணைத்து ஒட்டிவிட்டார். குழாய் மீண்டும் பெயர்ந்துவராமல் இருக்கக் குழிதோண்டிக் கம்பு நட்டு அணைப்புக்கொடுத்தார். ஆனால் மோட்டார் ஓட்ட வழியில்லை. மின்சாரம் ஒரு ஃபேஸ் போயிருந்தது. நாளைவரை காத்திருக்கவேண்டும்.

அவர் சென்ற பிறகு தேங்காய்களை எடுத்துப் போட்டேன். ஓரிடத்தில் கீழே விழுந்தேன். கையிலிருந்த தேங்காய் தரையில்பட்டுத் தெறித்து வாய்மீது பட்டதில், உதடு சிறிதே கிழிந்து சற்று நேரம் உதிரம் சொட்டியது. இரு நாட்களாக மகளுக்குக் காலிலும் மனைவிக்குத் தலையிலும் அடிபட்டிருந்தன.

பார்வதி நிலத்தை உழுது விதைத்திருந்த சோளம் இன்னும் பெரிதாக முளைக்கவில்லை. டிராக்டர் கிடைக்கத் தாமதமாகியிருந்தது. நிழலடியில் மட்டும் கொஞ்சம் துளிர்த்திருந்தன. பார்வதிக்கு நாலாயிரம் செலவாகியிருக்கும். இன்னொரு தூறலாவது கிடைக்காவிட்டால் கடினம்தான் என்கின்றனர்.

நாளை தேங்காய் உடைத்து எண்ணெய் ஆட்டலாம் என்றிருக்கிறோம். செக்குக் கடை திறந்துள்ளதாம். மழைக்குமுன் காயவைத்துவிடவேண்டும். காரில் எடுத்துச்செல்வதில் சிரமங்கள் இருக்கலாம். பார்ப்போம்.

மாலையில் மாபி டிக் கொஞ்சம் படித்தேன். மகள் தாகூர் சிறுகதைகள் படித்தாள். அம்மாவோடு வாழைப்பழ கேக் செய்தாள். பின்னர் திடீரென்று இந்தி கற்றுக்கொள்ளலாம் என்றாள். உயிரெழுத்துகள் சொல்லிக்கொடுத்தேன். இணையத்தில் வரிசை உச்சரிப்பு எல்லாம் மாறிமாறிச் சொல்கிறார்கள் – குறிப்பாக ஐ, ஔ, ரி அல்லது ரூ (சின்ன வயதில் க்ரூ என்று படித்த நினைவு). என்ன மொழியோ என்று கிண்டலடித்தாள். நானும் மனைவியும் இரவு முபியில் ஒரு ஜார்ஜியப் படம் [Brother] மெதுவான இணைய இணைப்பில் பார்த்தோம். அவ்வப்போது இரு காட்சிகளுக்கிடையே விழும் இடைவெளிகளில் காரோட்டும் போது சிக்னலில் உறங்குவதுபோலத் தூங்கித்தூங்கி விழித்தேன்.

அவ்வளவுதான். சொல்வதற்கு வேறொன்றும் பெரிதாக இல்லை. ஊரடங்கில் ஒரு நாள் கழிந்தது.


ஜல்லிக்கட்டு – சில எண்ணங்கள்

ஜனவரி 22, 2020

முகநூல் மூன்றாண்டுகள் முன் நடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டங்கள் பற்றிய நினைவுகளைக் கிளறிக்கொண்டிருக்கிறது. அப்போது சில போராட்டங்களில் நான் அமைதியாகக் கலந்துகொண்டும், தீவிரமாக எழுதிக்கொண்டும் இருந்தேன். ஜல்லிக்கட்டுப் போராட்டம் மீதான எனது ஆர்வத்துக்கும் அதற்கான ஆதரவுக்கும் அடிப்படையாக அமைந்தது ஒரு முக்கியக் கூறு:

தமிழ்நாட்டில் மாணவ சமூகத்தை அரசியல்படுத்தி ஒன்றிணைப்பதற்கு ஜல்லிக்கட்டுப் போராட்டம் உதவியது. சுயநலம் சார்ந்து தம் பிழைப்பு, தம் வளர்ச்சி என்றிருந்த ஒரு தலைமுறை மாணவர்களையும் பெற்றோர்களையும் ஒரு சமூகப் பிரச்சனைக்காகக் களமிறங்கவைத்தது. நான் போராட்டங்களின் போது கண்ட நிகழ்ச்சிகளின் மூலமாக இது ஒரு பரந்த விழிப்புணர்வுக்கும் மாணவர்களிடம் பசுமைச் சிந்தனைக்கும் வழிவகுக்கும் என்று நம்பிக்கை கொண்டேன்.

உழவு, சுற்றுச்சூழல் சார்ந்து பெருமளவு ஆர்வத்தை இப்போரட்டங்கள் ஏற்படுத்தத்தான் செய்தன. சில இளைஞர்கள் சுற்றுச்சூழல் செயல்பாடுகளில் ஈடுபடவும் செய்தனர். தமிழகத்தின் சுற்றுச்சூழல் இயக்கத்தில் ஒரு முக்கியமான நிகழ்வாக இதை நாம் காணலாம். ஆனால் இது தன்னளவில் ஓர் இயக்கமாக வளரவில்லை. அதற்கு ஒரு காரணம், போராட்டத்தை ஒருங்கிணைத்த சிலர் அதை அவசரமாக முடிவுக்குக் கொண்டுவந்தனர். ஜல்லிக்கட்டு மட்டுமே போராட்டத்தின் நோக்கம் என்றும் அது நிறைவேறிவிட்டது என்று அறிவித்தனர். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தொடர்ந்து பல்வேறு விசயங்களைப் பற்றி பேசிவந்தனர். இது அடுத்த நாள் மாணவர்கள்மீது காவல்துறையினர் திட்டமிட்டு நிகழ்த்திய கொடூர வன்முறைத் தாக்குதலுக்கு வழிகோலியது. மீண்டும் அந்த மாணவர்கள் பிற காரணங்களுக்காகப் போராட்டம் செய்வதற்கு அஞ்சும்படியான ஒரு சூழலை உருவாக்கியது. அதனால்தான் தமிழக மாணவர்கள் நீட் எதிர்ப்பு, குடியுரிமைச் சட்ட திருப்பு எதிர்ப்பு என்று எதிலும் பெருமளவு ஈடுபடவில்லை என்று தோன்றுகிறது. இது அகிம்சைப் போராட்டங்களில் நமக்குப் போதிய புரிதலும் பயிற்சியும் இல்லையென்பதையும் வெளிப்படுத்தியது.

ஜல்லிக்கட்டு மூலமாக நாட்டு மாடுகள் மீது மக்களின் ஆர்வம் அதிகரிக்கும் என்றும் சொல்லப்பட்டது. ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்குப்பிறகு நாட்டு மாடுகளின் விலை அதிகரித்தது. மரபான உழவர்களிடையே – குறிப்பாக ஜல்லிக்கட்டு நடைபெறாத எங்கள் பகுதியில் – பெரிதாக ஆர்வம் அதிகமானது மாதிரித் தெரியவில்லை. ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதிகளில் வேறுமாதிரி இருக்கலாம். ஆனால், இது ஆர்வத்தை உயிர்ப்போடு வைத்திருப்பதற்கான ஒரு செயற்கையான வழிமுறைதான். உழவர்கள் நாட்டு மாடுகளை நோக்கித் திரும்புவதற்குத் தேவையான உண்மையான பொருளாதார காரணிகளை இது அடையாளம் கண்டு சரி செய்வதில்லை.

ஜல்லிக்கட்டுப் போராட்டம் இன்னொரு வகையில் முக்கியமானது. உள்ளூர்ச் சமூகங்கள் தங்கள் பழக்கவழக்கங்களைக் கடைபிடிப்பதற்கான உரிமையை நிலைநாட்டவும், அப்படியான உரிமைகளில் தலைநகர் தில்லியோ சர்வதேச நிறுவனங்களோ தலையிட்டு ஆதிக்கம் செலுத்துவதை எதிர்க்கவும் பயன்பட்டது. வெளியாட்களின் தலையீட்டால், உள்ளூர்ப் பழக்கங்களை மாற்றுவதில் எனக்கு இன்னும் உடன்பாடில்லையெனினும், உள்ளூர்ச் சமூகங்கள் தாங்களே தங்கள் மரபுகளையும் பழக்கங்களையும் கேள்விக்கு உட்படுத்தி, தொடர்ந்து பரிணமித்துக்கொண்டிருக்க வேண்டும் என்று உறுதியாக நம்புகிறேன்.

ஒரு விளையாட்டாகவோ, சடங்காகவோ ஜல்லிக்கட்டு என்னைத் தனிப்பட்ட முறையில் பெரிதாக ஈர்க்கவில்லை. உணர்வெழுச்சியில்லாமல் இப்போது இதைப் பார்த்தால், அதன்மீது எனக்கு எந்த ஆர்வமும் தோன்றவில்லை. ஜல்லிக்கட்டை நான் நேரில் பார்த்ததில்லை. தொலைக்காட்சியில் பார்த்திருப்பதோடு சரி. ஆனால் அதுவே இது குறித்துப் பேசுவதற்கான தகுதி எனக்கில்லை என்றாக்கிவிடாது. இதில் எந்தவிதமான அழகியலோ இக்காலத்துக்கேற்ற வேறு உயர்ந்த நோக்கமோ இருப்பதாக எனக்குப் புலப்படவில்லை.

இது வீரத்தைக் கொண்டாடுவதாகக் கொண்டால், இன்றைய உலகில் இத்தகைய வீரத்துக்கான இடம் என்ன என்பதைப்ற்றி நாம் கேள்வி எழுப்பவேண்டும். முரட்டுக் காளைகளின் பின்னால் ஓடித்தான், இன்றைய மக்களாட்சிக்கும், அகிம்சைப் போராட்டங்களுக்கும் எளிமையான வாழ்க்கைக்கும் தேவையான வீரத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றில்லை. ஜல்லிக்கட்டில் கலந்து கொள்பவர்கள் எல்லாருக்கும் ஒரு புதிய பாதையில் நடப்பதற்கான வீரத்தை இப்போட்டிகள் வழங்கிவிடுவதில்லை. இது ஒரு முக்கியான மரபுதான். ஆனால் எல்லா மரபுகளும் என்றென்றும் தொடரப்பட வேண்டியவையல்ல. தொடர்ச்சியாக மக்களைக் காயப்படுத்தியும் காவுவாங்கியும் வருகிற ஒரு விளையாட்டு நமக்கு இன்னும் தேவைதானா? இந்த மரணங்களையும் காயங்களையும் அவற்றின் மீது நாம் காட்டும் அக்கறையின்மையையும் பிற விளையாட்டுகளோடு ஒப்பிட்டு நியாயப்படுத்துவதையும் காண்பது எனக்கு மிகுந்த வருத்தமளிக்கிறது. இன்றைய காலகட்டத்தில் ஜல்லிக்கட்டு மனிதருக்கும் விலங்குகளுக்கும் தீங்கான ஒன்றாக உள்ளது. அப்போது குத்துச்சண்டை, மல்யுத்தம் ஆகியவை என்று கேட்டால், மேற்கோ கிழக்கோ எப்பகுதியாயினும் இத்தகைய வன்முறை விளையாட்டுகள் காட்டுமிராண்டித்தனமானவை என்றே நான் கருதுகிறேன்.

நாட்டு மாடுகள் – பசுக்கள் மாட்டுமல்லாமல் எருமைகளும், காப்பாற்றப்படவேண்டும். அதற்கு மாடுகளைப் பயன்படுத்தும் இயற்கை வேளாண்மை பொருளாதார ரீதியான தற்சார்புடையதாக வேண்டும். இன்றேல், ஜல்லிக்கட்டு மாதிரி என்தனை முட்டுகள் கொடுத்தாலும், நீண்டகால நோக்கில் பயன்படாது.

நாம் விரும்பியதைச் செய்யும் உரிமையை வென்றுவிட்டோம். இனி அந்த உரிமையை அறிவுப்பூர்வமாகப் பயன்படுத்தவேண்டும்.


மகா கணபதிம்

மார்ச் 2, 2018

எங்கள் பயிலகம் ஒரு பரந்த அரச மரத்தடியில் நடக்கிறது. அந்த அரசோடு ஒரு வேம்பும் பிணைந்து வளர்ந்து நிற்கிறது.
அங்கு வினாகயருக்கு ஒரு சிலையும் மேடையும் அமைத்திருக்கின்றனர்.

அங்கு வரும் குழந்தைகள் படிக்கிறார்கள். விளையாடுகிறார்கள். சில சமயம் படம் பார்க்கிறோம். வானம் பார்க்கிறோம். மிகுந்த விருப்புடன் பாடக் கற்றுக்கொண்டு குழுவாகப் பாடுகிறார்கள்.

பாரதியின் ‘எனக்கு வேண்டும் வரங்களை இசைப்பேன் கேளாய் கணபதி’ பாடலை மிக ஆர்வமாகப் பாடுகின்றனர்.

வினோபாவின் சர்வசமயப் பாடலான ‘ஓம் தத் சத்’ பாடுகிறார்கள். அதை ஆங்காங்கே தமிழொலிப்பு கொண்ட வடமொழி/சர்வமொழிப் பாடல் எனலாம்.
அகர முதல எழுத்தெல்லாம் பாடுகிறார்கள்.

எங்களிடம் வருபவர்களில் பெரும்பாலானோர் தலித் மாணவர்கள். தனியார் பள்ளிகளில் ஆங்கில வழியில் படிக்கும் பிற சாதி மாணவர்கள் ஓரிரு வாரங்களிலேயே நின்றுவிட்டார்கள். தனியார் பள்ளியில் படிக்கும் ஓரிரு தலித் மாணவர்களும் அடுத்த சில வாரங்களில் நின்றுவிட்டார்கள். அரசுப் பள்ளியில் படிக்கும் பிற சாதி மாணவர்கள் மேலும் சில வாரங்களில்.

அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழி வந்துவிட்டது. ஒரு சிலர் தமிழ்வழியிலும், ஒரு சிலர் ஆங்கிலவழியிலும் படிக்கிறார்கள். ஐந்தாவதுக்குள் இருக்கும் பெரும்பாலனவர்கள் ஓரளவு நன்றாக ஆங்கிலம் படிக்கப்பழகிவிடுகிறார்கள், எதுவும் புரியாமலே. அண்மையில், வெளிநாட்டிலிருந்து வந்திருந்த குழந்தைகள்-மனோதத்துவ நிபுணரோடு, நாங்கள் சென்றிருந்த ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில், பட்டவகுப்பு மாணவர்கள் ஒருவர்கூட ஆங்கிலத்தில் பேசமுடியவில்லை. நாங்கள் ஆங்கிலம்-தமிழ்-ஆங்கிலம் மொழிபெயர்ப்பு செய்யவேண்டியிருந்தது.

எங்கள் பங்குக்கு எங்கள் குழந்தைகளுக்கு நாங்களும் ஆங்கிலம் கற்றுக்கொடுக்க முயல்கிறோம். ஷேக்ஸ்பியரின் Where the bee sucks பாடுகிறார்கள். Flyய்ய்ய்ய்ய்ய் என்று இழுக்கும்போதும், Merrily, merrily shall I live now என்னும் போதும் ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை படித்துப் பழகாதவர்களும் சேர்ந்துகொள்கிறார்கள்.

செந்தமிழ் நாடெனும் போதினிலே விரும்பிப் பாடுகிறார்கள். ஒளி படைத்த கண்ணினாய் பாடுகிறார்கள்.

மிக அதிக ஆரவாரத்துடன், ‘தன்னன்ன னாதினும்’ என்று பூஞ்சோலைக்கு வரும் ஆத்தாவைக் கூவி அழைக்கிறார்கள். இது என்ன சந்தைக் கடையா, மீன் விற்கிறாங்களா என்று தினமும் ஒரு எட்டு வயதுக் குழந்தை கேட்கிறாள்.

ஒரு சிலர் சர்ச்சுக்கும் போவதாகச் சொல்கிறார்கள்.

இந்தப் பாடல்களையெல்லாம் அவர்களுக்குக் கற்றுத் தரும் எங்கள் மகள், சகவாச தோசத்தால் எந்தக் கடவுளையும் வணங்குவதில்லை. திருமுறை பாடக்கற்றுத்தரும் அவளது ஆசிரியை சொல்லும்போது மட்டும் எப்போதாவது திருநீறு இட்டுக்கொள்கிறாள். நிறைய கல்லூரிகளில் இறைவணக்கம் பாடிவிட்டாள்.

பயிலகம் தொடங்கிச் சில நாட்களில் ஒரு பெரியவரும் வேறு சிலரும், கோயில் மேடையின் மீது அமரக்கூடாது, கீழேதான் அமர வேண்டும் என்று பிரச்சனை செய்ய ஆரம்பித்தனர். “சீட்டாடுவதற்கும் தண்ணி அடித்துவிட்டும் மேடை ஏறினால் பிரச்சனை இல்லையா?” என்று கேட்டோம். ‘ச**** பசங்கள மேல ஏத்திட்டீங்களா?’ என்று பொங்கினார்கள். கொஞ்ச நாள் போராடிப் பார்த்துவிட்டு, ‘நீங்களாச்சு உங்க கோயிலாச்சு, கிடைத்த இடத்தில் இவர்களைப் படிக்க வைப்பது முக்கியம்’ என்று இப்போது கீழேயே அமர்ந்துகொள்கிறோம்.

பொங்கலின் போது எங்கள் குழந்தைகளெல்லாம் புத்தாடையுடனும் முகமெங்கும் அப்பிய புன்னகையுடனும், ஒரு சிலர் பெரியவர்களோடு சேர்ந்து வெவ்வேறு வகைத் தாள வாத்தியங்களை அடித்துக்கொண்டும், ஊர்வலமாக ‘பூ நோம்பி’க்கு மாதங்கியம்மன் கோவிலுக்குச் சென்றார்கள். கோயில் வாசல் ஒரு வடிகட்டியானது. எங்கள் குழந்தைகள் அனேகரும் குதூகலம் குன்றாமல் வெளியில் தான் நின்றனர். குதூகலம் வற்றிப்போய் நாங்களும் வெளியில் நின்றுகொண்டோம்.

கோயில் திருவிழாவில் கலந்துகொள்ளாமல் கிராமத்தோடு ஒன்றவே முடியாது என்று அனுபவசாலி நண்பர்கள் கூறக்கேட்டிருக்கிறேன். இன்றைக்குக் காளியாத்தா கோயில் திருவிழா. மீண்டும் இதே காட்சிகள் அரங்கேறும். சென்ற ஆண்டு பக்கத்து கிராமத்தில் இருந்தோம். மஞ்சள் நீராட்டின் போது, ஊர் முழுக்க வலம் வந்த அம்மன், காலனிக்கு வெளியிலேயே நின்று, எல்லாரும் ஆடிய பின்னர், திரும்பினாள். இங்கும் இவ்வாறான வடிகட்டிகள் மேலும் இருக்கும். யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே என்று கிராமத்தில் எல்லாரும் இருக்கிறார்கள்.

நாங்கள்தான் கலகம் செய்யவும் மனமில்லாமல், கலந்து கொள்ளவும் மனமில்லாமல் கிராமத்துக்குக் கிளம்பிக் கொண்டிருக்கிறோம்.

 

27/Feb/2018


காந்திய விழிப்புணர்வு யாத்திரை – ஓர் அகப் பயணம்

ஒக்ரோபர் 13, 2017

(சர்வோதயம் மலர்கிறது இதழுக்காக எழுதிய கட்டுரை. முதல் பகுதி பயண அனுபவங்களையும், இரண்டாம் பகுதி காந்தியம் குறித்த என் பார்வைகள் சிலவற்றையும் உள்ளடக்கியுள்ளன.)

(1)

காந்திகிராம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் மார்க்கண்டனின் ஒருங்கிணைப்பில், ஆகஸ்ட் மாதம் (3 முதல் 12ம் தேதி வரை) காந்திய விழிப்புணர்வு யாத்திரை மேற்கொள்ளப்பட்டது. கன்னியாகுமரி முதல் சென்னை வரை, பல்வேறு ஊர்களில் பள்ளி-கல்லூரிகளிலும், சர்வோதய சங்கங்களிலும், பொது இடங்களிலும் உரையாற்றியவாறு வாகனத்தில் சென்றோம். 7 பேர் முழு யாத்திரையையும் நிறைவுசெய்தோம். [மார்க்கண்டன், தலைவர், தமிழிக மக்கள் சேவை இயக்கம், கண்ணன், நித்யா, மகிழ்மலர் (சேர்வைகாரன்பாளையம், கோவை), சுப்பையன் (அன்னூர்), சிவக்குமார் (ஆசிரியர், விழிப்புணர்வின் குரல்), ராஜாமணி (திண்டுக்கல்)]. மேலும் சிலர் யாத்திரையின் சில பகுதிகளில் பங்கெடுத்தனர். நான் இந்த யாத்திரையில் மனைவி மகளோடு கலந்துகொண்டேன். புறத்தில் நிகழ்ந்த பயணத்தின் தாக்கம் வரும் காலங்களில்தான் தெரியும். தூவப்பட்ட விதைகள் கண்ணுக்குத் தெரியாமல் முளைக்கலாம்; முளைப்பதே தெரியாமலும் போகலாம். ஆனால் பயணம் செய்த எங்களது அகங்களில் நிகழ்ந்த யாத்திரை முக்கியமானது. காந்தியின் நிழலால் தீண்டப்படும் ஒவ்வொருவரும் அந்த அக யாத்திரையிலிருந்து தப்ப முடியாது.

DSC_1911

முதலில் புற யாத்திரை பற்றிய சில குறிப்புகள். ஆகஸ்ட் 3ம் தேதி கன்னியாகுமரியில் காந்தி மண்டபத்தில், சர்வமத வழிபாட்டுப் பாடல்களுடன் யாத்திரை தொடங்கப்பட்டது. பின்னர் நாகர்கோவில், திருநெல்வேலி, விருதுநகர், டி. கல்லுப்பட்டி, திருமங்கலம், மதுரை, காந்திகிராம் பல்கலைக்கழகம், திண்டுக்கல், திருச்சி, கரூர், காங்கயம், படியூர், திருப்பூர், கோவை, மேட்டுப்பாளையம், ஊட்டி, கோத்தகிரி, சத்தி, கோபி, ஈரோடு, நாமக்கல், மல்லூர், சேலம், திருப்பத்தூர், பச்சூர், வேலூர், காஞ்சிபுரம் வழியாக சென்னை தக்கர் பாபா மையத்தில் முடிந்தது.

நாகர்கோயில் இந்து கல்லூரி, பாளையங்கோட்டை புனித ஜான் கல்லூரி, காந்திகிராம் பல்கலைக்கழகம், கரூர் ஜெயராம்ஸ் கல்லூரி, மேட்டுப்பாளையம் நஞ்சய்யா லிங்கம்மாள் பாலிடெக்னிக், ஈரோடு வேளாளர் பெண்கள் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி ஆகிய கல்லூரிகளிலும், கல்லுப்பட்டி காந்தி நிகேதன், கோத்தகிரி விக்டோரியா ஆர்ம்ஸ்ட்ராங் (நாவா) பள்ளி, பச்சூர் அரசுப் பள்ளி ஆகிய பள்ளிகளிலும் உரையாற்றினோம். பெரும்பாலான இடங்களில் சர்வோதய சங்கங்கள் கூட்டங்களை ஒருங்கிணைத்திருந்தனர். சுற்றுப்புற கிராமங்களிலிருந்து சர்வோதய சங்கங்களைச் சார்ந்த நூற்போர், நெசவோர் இக்கூட்டங்களுக்குத் திரளாக வந்திருந்தனர். அனேகமாக எல்லா இடங்களிலும் வந்திருந்தோர் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. எல்லா இடங்களிலும் மார்க்கண்டன் இன்றைய சமூக அரசியல் சூழல் குறித்தும், அவற்றை எதிர்கொள்வதற்கான காந்தியத்தின் தேவை குறித்தும் நீண்ட உரைகளாற்றினார். பொதுவாழ்விலும் தனிவாழ்விலும் எளிமை, சுயநலமற்ற அர்ப்பணிப்பு, சாதி மத நல்லிணக்கம், மக்கள் அனைவரையும் அணைத்துச்செல்லும் வளர்ச்சி, அதிகாரத்தைப் பரவலாக்குதல், காந்திய வழியில் தொழில் சார்ந்த கல்வி, கைத்தொழில்களிலும் சூழலைப் பாதிக்காத அளவு நவீன முறைகளைப் புகுத்துதல், சர்வோதய சங்கங்களை வலுப்படுத்துதல் – அவற்றின் பணிகளை இன்றைய சூழலுக்கேட்ப விரிவு படுத்துதல் போன்ற பல்வேறு அம்சங்களை வலியுறுத்தினார். மற்றவர்களும் ஆங்காங்கு சிறுது நேரம் உரையாற்றினோம். எங்கள் ஒன்பது வயது மகள் பாடல்கள் பாடினாள் – பல இடங்களில் ‘சாந்தி நிலவ வேண்டும்’ பாடல் அவளது இளங்குரலில் உணர்ச்சிகரமாக ஒலித்தது. சர்வோதய ஊழியர்களும், மாணவர்களும் பல்வேறு கேள்விகள் கேட்டனர்; அந்த கேள்விகளுக்கான பதில்களின் வாயிலாக காந்தியத்தையும், இன்றைய சூழலையும் பற்றி மேலும் விவாதிக்கவும் புரிந்துகொள்ளவும் நல்ல வாய்ப்பாக அமைந்தது.

 

(2)

பயணம் முழுவதும் காந்தியே என் மனதை நிறைத்திருந்தார். புறக்காட்சிகளினூடாக அகப்பயணமே ஆழமாக நிகழ்ந்தது. வெம்மையான கோவில்பட்டியின் கரிசல் காடுகள் வழியாகப் பயணித்தபோதாகட்டும், நீலகிரியின் குளிர்ந்த மழைக்காடுகளின் வழியாகச் சென்றபோதாகட்டும், வேலூரருகே கொட்டும் மழையிலாகட்டும், சென்னையின் வாரயிறுதி போக்குவரத்து நெரிசலில் அகப்பட்டபோதாகட்டும், அகத்தினுள் நிகழ்ந்த பயணம் ஒரே திசையில்தான் இருந்தது. யாத்திரையின் பெரும்பாலான இரவுகளில் பயணக்களைப்பையும் மீறி காந்தி நித்திரையைக் கலைத்தார். அன்றாட வாழ்வின் சமரசங்கள் காந்தியின் கண்ணாடிவழியாகப் பார்த்தபோது பூதாகரமாகத் தெரிந்தன. மக்களுக்கு நாம் எடுத்துச்சென்றுகொண்டிருக்கும் காந்தி யார், எடுத்துச்செல்லவேண்டிய காந்தி யார் என்பவை குறித்து என்னுள் பல கேள்விகள் எழுந்தன. பயணத்தின்போது சந்திக்க நேர்ந்த பலரோடும், உடன் பயணித்தவர்களோடும், உரையாற்றியவர்களோடும் நிகழ்ந்த உரையாடல்களை மனம் அசைபோட்டுக்கொண்டேயிருந்தது. காந்தியின் இந்திய சுயராச்சியம் (ஹிந்த் ஸ்வராஜ்) பாணியில், ஆசிரியனும் வாசகனும் போல, என்னுள்ளேயே ஒரு விமர்சகனும் பயணியும் தோன்றி விவாதித்துக்கொள்ளத் தொடங்கினர். யாத்திரை முடிந்தபின்னும் இந்தப் பயணம் தொடர்ந்தது.

விமர்சகன்: காந்தியை அறியாதவர்கள் யார்? எதற்கு விழப்புணர்வு, பயணம் எல்லாம்?

பயணி: நம்மில் பெரும்பாலனவர்கள் அறிந்துள்ள காந்தி, நமக்குச் சுதரந்திரம் வாங்கித் தந்த காந்தி; பணத்தாள்களில் உள்ள காந்தி; பசுமை பாரதத்தின் விளம்பரப்படங்களில் தோன்றும் காந்தி. ஆனால், காந்தியின் ஆதாரமான கொள்கைகள், செய்திகள் குறித்தெல்லாம் அறிந்தவர்கள் மிகச்சிலரே. அறிந்தவர்களிலும் அக்கொள்கைகளைக் கடைபிடிப்பவர்கள் அதனினும் குறைவே. இப்பயணம் மூலம் உண்மையான காந்தி எதற்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணித்தார், அவரது கொள்கைகளில் பொருத்தமானவற்றை இன்றைய சூழலுக்கு எப்படிப் பொருத்திப் பார்க்கலாம் என்பவை குறித்த சிந்தனையைத் தூண்டி, மக்கள் நலச்செயல்களுக்கு உந்துதலாக இருக்கமுடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

விமர்சகன்: இது என்ன கதையாக இருக்கிறது. காந்தியுடைய கொள்கைகள் எங்களுக்குத் தெரியாதா? காந்தி சுதந்திரத்துக்காக அகிம்சை முறையில் போராடினார். எல்லோரிடமும் அன்பாக இருக்க வேண்டும் என்றார். உண்மையாக இருக்க வேண்டும் என்றார். நாடு சுத்தமாக இருக்க வேண்டும் என்றார். இவையெல்லாம் சின்னக் குழந்தைக்குக்கூட தெரியுமே!

பயணி: நாம் அனைவரும் அவரவர் வசதிக்குத் தேவையான காந்தியை எடுத்துக்கொண்டிருக்கிறோம். அவரவர் தேவைக்கேற்ப காந்தியைச் சுருக்கிக்கொண்டிருக்கிறோம் என்றும் சொல்லலாம். வாய்மை, அன்பு, அகிம்சை – இவையெல்லாம் காந்தியின் கொள்கைகளுக்கு ஆதாரமானவை. மறுக்க முடியாது. ஆனால், இவற்றின் நீட்சியாக காந்தி சமூகத்தைப் பாதிக்கும் எல்லா அம்சங்களைப் பற்றியும் தொடர்ந்து உரையாடியிருக்கிறார். பல்வேறு சோதனைகளைச் செய்திருக்கிறார். நாம் அவற்றையும் கவனிக்க வேண்டும்.

ஒருபுறம் காந்தியின் சுத்தம் பிடிக்கும் என்று சொல்லிக்கொண்டு, சுத்தம் செய்யும் ஏழை மக்களை உயர்த்த காந்தி என்ன செய்தார் என்பதை மறந்துவிட்டோம். ஒருபுறம் காந்தியின் அன்பு பிடிக்கும் என்று சொல்லிக்கொண்டு, இயற்கை மீதும் வருங்காலச் சந்ததியினர்மீது எந்த அக்கறையும் கருணையும் இல்லாமல், வளர்ச்சி என்ற பெயரில் நாம் கட்டவிழ்த்துவிட்டிருக்கும் வன்முறை காந்தியத்துக்கு முற்றிலும் விரோதமானது.

விமர்சகன்: அப்போது காந்தி வளர்ச்சிக்கு எதிரானவர் என்கிறீர்களா?

பயணி: காந்தி என்ன மாதிரியான வளர்ச்சியை விரும்பினார் என்பதை நாம் ஆராய வேண்டும். காந்தி முன்வைத்த வளர்ச்சி ‘சர்வோதயம்’ – கடையனுக்கும் கடைத்தேற்றம். இயற்கையோடு இயைந்து, இச்சமூகத்தின் ஒவ்வொருவரையும் முன்னேற்றுவதே காந்தி கண்ட வளர்ச்சி. எல்லாப் பணிகளையும் சமமாகக் கண்டு, எல்லாப் பணிகளுக்கும் சமமான வருமானம் வரும்படி செய்வதே காந்தி கண்ட வளர்ச்சி. இயற்கையைச் சுரண்டி, சமூகத்தில் ஒரு சிலர் மட்டும் பெரு வளர்ச்சி அடைந்து, பெரும்பகுதியினர் அவர்களைச் சார்ந்திருப்பதை காந்தி ஒரு போதும் வளர்ச்சி என்று ஒப்புக்கொண்டிருக்க மாட்டார். பேராசையின் வெளிப்பாடான நுகர்வுக் கலாச்சாரத்தால் உருட்டப்படும் பொருளாதாரத்தை வளர்ச்சி என்று ஒப்புக்கொண்டிருக்க மாட்டார்.

விமர்சகன்: நவீன வளர்ச்சியின் விளைவாகத்தானே உங்களது இந்த யாத்திரையே சாத்தியம் ஆகியிருக்கிறது. அகலமான நெடுஞ்சாலைகள் இருந்ததால்தானே உங்களால் இத்தனை வேகமாக இத்தனை ஊர்களுக்குப் பயணிக்க முடிந்தது.

பயணி: உண்மையில், இந்த யாத்திரையின் போதுதான் நவீன வளர்ச்சியின் இன்னொரு முகத்தையும் என்னால் காண முடிந்தது. வழியில் பல கிராமங்கள் இருக்கும்; நாங்கள் கிராமத்து மக்களைச் சந்திக்கலாம்; அவர்களோடும் உரையாடிச் செல்லலாம் என்று நினைத்திருந்தோம். ஆனால், இந்த அசுர நெடுஞ்சாலைகள் கிராமங்களை விழுங்கிவிட்டன. அல்லது கிராமங்களை ஒதுக்கிவிட்டன. வழியெங்கும் மக்களும் இல்லை, மரங்களும் இல்லை. இந்த மண்ணிலிருந்தும் மக்களிடமிருந்தும் விலகிச்செல்கின்ற வளர்ச்சியின் குறியீடாகவே இந்த வரண்டு நீண்டகன்ற நெடுஞ்சாலைகள் இருக்கின்றன.

இந்நவீன நெடுஞ்சாலைகள் இல்லாத போதும், காலங்காலமாய் இந்தியாவிலும் உலகெங்கிலும் யாத்திரைகள் நிகழ்ந்து கொண்டுதான் இருந்திருக்கின்றன. எங்களது யாத்திரையின் பலவீனமே இந்த வேகம்தான் என்று தோன்றுகின்றது.

விமர்சகன்: மக்கள் இத்தகைய நவீன வளர்ச்சித்திட்டங்களையே விரும்புகின்றனர். அதைத்தானே நீங்கள் தொடர்ந்து காண்கிறீர்கள். உதாரணமாக, திருச்சி சர்வோதயக்கூட்டத்திலும் ஓர் அம்மா நதிநீர் இணைப்பே இன்றைய உடனடித் தேவை என்று கூறினாரே.

பயணி: மக்கள் தண்ணீர் பிரச்சனையால் தவிப்பதைக் கண்டு அவர் அவ்வாறு கூறுகிறார். அவரது ஆதங்கம் உண்மையானது; அதை நம்மால் புரிந்துகொள்ளமுடிகிறது. ஆனால், காந்திய அணுகுமுறையில் நதிநீர் இணைப்பு என்கிற பேச்சு எழுவதற்குமுன் உள்ளூர் அளவில் வேறு பல முயற்சிகள் நடந்திருக்கும். முதலில் நாம் கிராமங்களிலும், நகரங்களிலும் உள்ள நீர்நிலைகளை மீட்க வேண்டும். அவற்றின் வழித்தடங்களை ஆக்கிரமிப்புகளிலிருந்து காக்கவேண்டும். நம் ஆறுகளில் மணல் கொள்ளையைத் தடுக்க வேண்டும். மழைநீர் தேக்கங்களை உருவாக்க வேண்டும். தண்ணீரை அளவாகப் பயன்படுத்தும் தொழில்களை ஊக்குவிக்க வேண்டும். தண்ணீரை விழுங்கும் பயிர்களையும் விவசாய முறைகளையும் தவிர்க்கவேண்டும். நிலத்தடி நீரை அளவுக்கதிகமாக உறிஞ்சி மண்ணைப் பாழாக்கி, வருங்காலச் சந்ததியினிருக்குச் சொந்தமானதை விரயமாக்கும் பழக்கத்தைக் கைவிட வேண்டும். நம் தேவைகளை, நம் வளங்களுக்கேற்றாற்போல் சுருக்கிக் கொள்ளவேண்டும். மழைக்காடுகளை அழிப்பதைத் தடுக்கவேண்டும்.

முக்கியமாக, நீர் மேலாண்மை கிராம மக்களின் அதிகாரத்துக்கு உட்பட்டதாக இருக்கவேண்டும். மத்திய, மாநில அரசுகளின் மையப்படுத்தப்பட்ட அணுகுமுறையே நீர் மேலாண்மையை மக்களிடமிருந்து விலக்கி, இன்றைய பற்றாக்குறையை நோக்கித் தள்ளியிருக்கிறது.

உள்ளூர் மக்களே செய்யக்கூடிய இத்தனை பணிகளை ஊக்குவிக்காமல், மைய அதிகாரத்தை மேலும் வலுவாக்கி, பெரும் சுற்றுச்சூழல் பாதிப்பினை உருவாக்கி, பெருமளவு மக்களை இடம்பெயரச்செய்யக்கூடிய நதிநீர் இணைப்பையோ அசுர அணைகளையோ பொதுநலனுக்கு எதிரானதாகவும் குறுகியகால நோக்கம் கொண்டதாகவும் காந்திய அணுகுமுறைக்கு மாறானதாகவுமே நாம் பார்க்கமுடியும்.

நாட்டின் நன்மைக்காக ஒரு கிராமம் தியாகம் செய்யவேண்டும், ஒரு கிராமத்துக்காக ஒரு குடும்பம் தியாகம் செய்யவேண்டும், குடும்பத்துக்காக ஒரு தனிநபர் தியாகம் செய்யவேண்டும் என்று காந்தி கூறியதாக கூறப்படுவதை, அவரது ஒட்டுமொத்தப் பார்வையிலிருந்து விலக்கி நாம் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறோம். தனிநபர்களும் கிராமங்களும் தியாகம் செய்யத் தயாராக இருக்கவேண்டும்; ஆனால் அரசுகள் மக்களையும் ஊர்களையும் பலியிடக்கூடாது. ஒவ்வொரு தனிநபரையும், ஒவ்வொரு கிராமத்தையும், இயற்கையையும் அக்கறையுடன் அரவணைத்து, அனைவரது நலனையும் கருத்தில் கொண்டு செயல்படுவதே சரியான காந்தியப் பார்வை. அவ்வாறு செயல்படும்போது, பொதுநலனுக்காகத் தங்கள் சுயநலன்களைத் தியாகம் செய்வதற்கு மக்களே முன்வருவார்கள்.

ஒவ்வொரு வளர்ச்சிப் பணியையும் நாம் இந்த அளவுகோள்களின்படி அணுகினால், எல்லா மட்டத்திலுள்ள மக்களுக்கும் இயற்கைக்கும் ஏதுவான திட்டங்களை வகுக்கமுடியும்.

விமர்சகன்: மைய அதிகாரத்தை வலுவாக்கக்கூடாது என்கிறீர்கள். மக்கள் வலுவான மையம் வேண்டும் என்றுதானே நினைக்கிறார்கள். எல்லாப் பிரச்சனைகளையும் விரைவாகத் தீர்க்கக்கூடிய வலுவான தலைவர்கள் என்று யாரைக் கருதுகிறார்களோ அவர்களைத்தானே தேர்ந்தெடுக்கிறார்கள்.

பயணி: வலுவான தலைமை நமக்குத் தேவைதான். ஆனால், அது வெறும் மத்திய மாநில அரசாங்கங்களில் இருந்து பயனில்லை. கிராமங்களிலும் நகரங்களிலும் உள்ளூர் அமைப்புகளைத் திறம்பட நிர்வகிக்கக்கூடிய வலுவான கூட்டுத்தலைமைதான் நமக்குத் தேவை. அதிகாரத்தைக் குவிக்கின்ற தலைமை சர்வாதிகாரத்தையும் சகிப்பின்மையையும் நோக்கியே இட்டுச்செல்லும்.

அதிகாரம் பரவலாகும் போதுதான், மக்கள் தங்களுக்கான பாதையை தாங்களே சரியான முறையில் தேர்ந்தெடுப்பார்கள். காந்தி கண்ட கிராம சுயாட்சியை அடையும்போதுதான் நாம் உண்மையான சுதந்திரத்தை அடைவோம்.

விமர்சகன்: சகிப்புத்தன்மை குறித்துப் பேசுகிறீர்கள். காந்தியவாதிகளுக்குச் சகிப்புத்தன்மை இருப்பதுபோலத் தெரியவில்லையே. கோவையில் நடந்த கூட்டத்தில், ஒரு காந்தியவாதி குளிர்சாதன வசதியைப் பயன்படுத்தக்கூடாது, கொக்கொ கோலா போன்ற நிறுவனங்களின் தண்ணீரைப் பயன்படுத்தக்கூடாது என்று கட்டாயப்படுத்தினாரே, இல்லையேல் வெளியேறிவிடுவேன் என்று அச்சுறுத்தினாரே. அப்போது, ஒரு பேச்சாளர்கூட காந்தியவாதிகளுக்கு சகிப்புத்தன்மை அவசியம் என்று சுட்டிக்காட்டினாரே.

பயணி: நான் சொல்கிற சகிப்பின்மை அதுவல்ல என்பது உங்களுக்கே தெரியும்.

நீங்கள் குறிப்பிடும் வகையான சகிப்புத்தன்மையை காந்தி ஒருபோதும் வலியுறுத்தியிருக்கமாட்டார். எந்தவொரு கூட்டத்திலும் தவறு நிகழும்போது சுட்டிக்காட்டுவதற்கு அவர் தயங்கியதே இல்லை. இங்கிலாந்து அரண்மனையில்கூட ‘எனக்கும் சேர்த்து அரசரே உடையணிந்திருக்கிறார்’ என்று சொன்னவர்தான் காந்தி. பொதுக்கூட்டங்களில் ஆங்கிலத்திலோ சமஸ்கிரதத்திலோ பேசும்போது, ஏன் தாய்மொழியில் பேசவில்லை என்று கேட்டவர்தான் காந்தி. சிறுமை கண்டு பொங்குகிறவராகவே அவர் எப்போதும் இருந்திருக்கிறார். எதிர்ப்பை வெளிப்படுத்தும் முறையில் தான் அகிம்சையைக் கடைபிடித்தார்.

விமர்சகன்: உங்கள் கருத்தை என்மீது திணிப்பதும் வன்முறைதானே.

பயணி: உண்மைதான். ஆனால், உங்கள் கருத்து தவறென்று சுட்டிக்காட்டுவதில் வன்முறை ஏதும் இல்லை. தான் ஆணித்தரமாக நம்பும் கருத்து ஏற்கப்படாவிட்டால், வெளியேறிவிடுவதாகச் சொல்வதிலும்கூட வன்முறை ஏதும் இருப்பதாக நான் கருதவில்லை. நம் கருத்தை நிலைநாட்டப் போராடுவதிலும் வன்முறை இல்லை. போராடுகிற முறைகளில்தான் வன்முறையும் அகிம்சையும் வருகின்றன.

காந்தியை முன்னிறுத்தி நாம் செயல்படும்போது, குறைந்தபட்ச எளிமையும் நேர்மையும் இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பதில் தவறில்லையே.

குளிரூட்டப்பட்ட வாகனங்களில் பயணிக்கும் போதோ, பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்தாமல், தனிவாகனத்தைப் பயன்படுத்தும்போதோ குற்றவுணர்ச்சி மேலெழுகிறது. மற்றவர்களுக்காகவும் நமது வசதிகளுக்காகவும் நாம் சிறிய அளவிலும் பெரிய அளவிலும் சமரசங்கள் செய்து பழகிவிட்டோம். அத்தகைய சமரசங்கள் நிகழும் போதெல்லாம் காந்தி நம்மைக் கேள்வி கேட்கிறார். காந்தியும் சமரசங்கள் செய்திருக்கிறார்; அவற்றை அவர் சொல்லித்தான் நமக்குத் தெரியும். நாமும் நம் சமரசங்களை நேர்மையுடன் ஒப்புக்கொண்டு, முடிந்தவரையில் களைவதுதான் காந்திய வழிமுறைக்கு நம்மை நெருக்கமாக இருக்கச்செய்யும்.

விமர்சகன்: காந்தியைப் பற்றி உயர்வாகவே பேசுகிறீர்கள். காந்தி மீதான விமர்சனங்கள் மீது உங்கள் சகிப்புத்தன்மை எப்படி? ஒரு பெண்கள் கல்லூரியில் ஒரு மாணவி கேள்வி கேட்டபோது, பெண்களைச் சோதனைக்குள்ளாக்கியது குறித்து விமர்சனம் எழுந்ததே.

பயணி: காந்தியும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் அல்லர். காந்தி மீது வைக்கப்படுகிற விமர்சனங்களைத் தொடக்கி வைத்தவரே காந்திதானே. எல்லா விமர்சனங்களுக்கும் காந்திய ஆர்வலர்கள் தொடர்ந்து பொறுமையாக பதிலளித்து வந்திருக்கின்றனர். உண்மையில், இன்றைக்கு உள்ள சூழலில், காந்தி மீதுதான் மிக எளிமையாக எந்தவிதமான விமர்சனமும் வைத்துவிட்டு எந்தவிதமான வன்முறையான எதிர்விளைவையும் சந்திக்காமல் இருக்க முடியும். அதுவே காந்தியின் வெற்றி.

பகத் சிங் குறித்து, நேதாஜி குறித்து, தலித்கள் குறித்து, வர்ணாசிரமக் கொள்கைகள் குறித்து, பெருமுதலாளிகளின் நிதியுதவியை ஏற்றுக்கொண்டது குறித்து, பெண்கள் குறித்து, ஆப்பிரிக்க மக்கள் பற்றிய ஆரம்பகால எழுத்துகள் குறித்து என்று பல்வேறு விமர்சனங்கள் எழுகின்றன. அவை ஒவ்வொன்றுக்கும் விரிவாக மறுப்புகளோ விளக்கங்களோ எழுதப்பட்டிருக்கின்றன.

இந்த யாத்திரையின் போது இரண்டு விமர்சனங்களைக் குறித்துப் பேச நேர்ந்தது.

முதலில் ஹரிஜன சேவை. ஹரிஜன் என்ற சொல்லை காந்தி உயர்ந்த நோக்கத்துடனேயே பயன்படுத்தினாலும், இன்றைக்கு அது அம்மக்களுக்கு ஏற்பற்றதாக ஆகிவிட்டது என்பதால் தலித் என்ற சொல்லைப் பயன்படுத்துவதே பொருத்தமானது. காந்தி அளவிற்குத் தலித் மக்களுக்காகப் பணியாற்றியவர் வேறு எவரும் இல்லை என்று உறுதியாகச் சொல்லலாம். பாதிக்கப்ப்பட்ட மக்களின் தரப்பிலிருந்து எதிர்ப்புக்குரல் எழுவது அவசியம் என்றபோதும், ஆதிக்கம் செலுத்தும் மக்களின் மனங்களை மாற்றும் பணி அதனைவிட அவசியம். பாதிக்கப்பட்டவர்களும் ஆதிக்கவாதிகளும் ஒரே சமூகமாக ஒரே இடத்தில் வாழவேண்டியிருக்கும்போது இந்த மனமாற்றம் மிகவும் முக்கியமானது. காந்தி அந்த மனமாற்றத்தைக் கொண்டுவந்தார். கடக்க வேண்டியது இன்னும் வெகு தூரம் என்ற போதினும், கடந்துவந்த பாதையும் வெகு நீளம்தான்.

தலித்களுக்கு அனுமதி மறுக்கும் கோயில்களுக்கு, தானோ தன்னைச் சார்ந்தவர்களோ செல்லக்கூடாது என்று காந்தி நினைத்தார். கஸ்தூர்பா காந்தியும், மகாதேவ் தேசாயும் பூரி ஜகன்னாதர் கோயிலுக்குச் சென்றபோது, அதைக் கண்டித்துப் பத்திரிக்கையில் எழுதினார். வர்ணாசிரமத்தை ஆரம்ப காலங்களில் வலியுறுத்திய அதே காந்தி, பின்னாளில் தான் கலந்துகொள்ளும் திருமணங்கள் கலப்புத் திருமணங்களாக – அதிலும் மணமக்களில் ஒருவர் தலித்தாக, இருக்கவேண்டும் என்று நிபந்தனைவிதித்தார்.

தலித்பெண் ஒருவர்தான் இந்தியாவின் முதல் ஜனாதிபதியாக வேண்டும் என்று விரும்பியவர் காந்தி. தலித் அறிஞரான அம்பேத்கர், அரசியல் ரீதியாக எதிர்தரப்பில் இருந்தபோதும்கூட, இந்தியாவின் அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குத் தலைமை தாங்கும் சூழலை ஏற்படுத்தியவர் காந்தி. தொகுதி ஒதுக்கீடு விவகாரத்திலும், அம்பேத்கர் காந்தி ஆகிய இருவரது தரப்பிலும் சில நியாயங்கள் இருந்தன. சமூகம் பிளவுபட்டுவிடக்கூடாது என்கிற நோக்கிலும், ஆதிக்கவாதிகளின் மனமாற்றம் நிகழவேண்டும் என்ற நோக்கிலும் காந்தியின் அணுகுமுறையே அன்றைய நாளுக்குப் பொருத்தமாக இருந்தது. அதனாலேயே தனிவாக்காளர் தொகுதிக் கோரிக்கையை ஏற்ற அம்பேத்கர், பின்னாளிலும் வலியுறுத்தவில்லை. தனித்தொகுதி ஒதுக்கீடு முறையில், ஆதிக்க சாதியினரின் விருப்பப்படிதான் தலித் பிரதிநிதிகள் செயல்படமுடியும் என்ற அம்பேத்கரின் அன்றைய வாதம் இன்றைக்கும் உண்மையாக உள்ளது. இருவரையும் எதிரெதிர் துருவங்களாகக் கட்டமைப்பதைவிடுத்து, இருவரது பங்களிப்பையும் அங்கீகரித்து, இவருவரது நியாயங்களையும் புரிந்துகொண்டு, காந்தியர்களும் தலித் இயக்கத்தினரும் ஒருங்கிணைந்து செயல்படுவதுதான் தலித் மக்களுக்கும் பிற சமூகத்தினருக்கும் நன்மை விளைவிக்கும்.

அடுத்து, பெண்கள் சார்ந்த சோதனை. காந்தியின் பிரம்மச்சரிய விரதம் குறித்த பார்வையும், பாலியல் உணர்வுகளை வென்றெடுக்க அவர் நிகழ்த்திய சோதனைகளும் இன்றைய மதிப்பீடுகளின்படி நெருடலானவை. ஆனால், அவரோடு நெருங்கிச் செயல்பட்ட பெண்கள் தரப்பிலிருந்து எந்தவிதமான குற்றச்சாட்டுகளும் எழுந்ததே இல்லை. அவரது சோதனைகள் குறித்து நாம் அறிந்துகொண்டதெல்லாம், பெரும்பாலும், அவரது எழுத்துகள் வாயிலாகத்தான். நவகாளியில் அவரது உக்கிரமான சோதனையின் போது உடனிருந்த மனு காந்தி, தனது புத்தத்திற்கு, ‘Bapu – My Mother’ என்று பெயரிட்டார். தந்தை என்றுகூடச் சொல்லவில்லை. அன்னை என்கிறார். இந்த ஒற்றை வாசகத்தின் முன் எந்தக் குற்றச்சாட்டும் அர்த்தம் இழக்கும். (யாத்திரையின் போது நிகழ்ந்த உரையாடலை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திய டாக்டர் ஜீவானந்தம் அவர்கள், இந்நூலை உடனே தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். விரைவில் பதிப்பில் வரும் என்று நினைக்கிறேன்.)

விமர்சகன்: பாலியல் சோதனைகளை விடுவோம். தனது மனைவியை அவர் நடத்திய விதத்தைப் பார்த்தால், பெண்ணுரிமை விஷயத்தில் மிகவும் பிற்போக்கானவராகத்தானே தெரிகிறார்.

பயணி: இளமைக் காலத்தில், கஸ்தூர்பாவைப் பல சமயங்களில் காந்தி தவறாக நடத்தியிருக்கிறார். இவையும் அவரது எழுத்துகளில் இருந்துதான் அறிகிறோம். அவர் நடந்துகொண்ட விதத்திற்காக வருத்தம் தெரிவித்தே எழுதியிருக்கிறார். ஆனால், பின்னாளில் கஸ்தூர்பாவிடம் மிகப்பெரும் பொறுப்புகளை ஒப்படைக்கிறார். போராட்டங்களைத் தலைமைதாங்கி நடத்த ஊக்குவிக்கிறார்.

பெண்களைப் போராட்டக் களத்தில் பங்கெடுக்க வழிவகுத்ததில், வரலாற்றில் மிகப்பெரிய இடம் காந்திக்கு என்றும் இருக்கும். கத்தி, துப்பாக்கி போன்ற ஆயுதங்களின் துணைகொண்டு நடந்த வரை போர்க்களங்கள் பெரும்பாலும் ஆண்களின் தனிக்களங்களாகவே இருந்துள்ளன. ஆனால், சத்தியாகிரகம் என்கிற ஆயுதத்தை காந்தி அறிமுகம் செய்த பின்னர்தான் திரளான பெண்கள் போராட்டக் களத்தில் இறங்கிப் பணியாற்றி, தலைமையேற்க வழி பிறந்தது.

பெண்களுக்கு காந்தி கொடுத்த அடுத்த ஆயுதம் ராட்டை. வீட்டிலிருந்தே தங்களது நேரத்தில், அவர்கள் பிரயோகிக்கக்கூடிய போர்க்கருவி.

விமர்சகன்: என்னது, ராட்டையா? பிற்போக்குத்தனத்தின் இன்னொரு அடையாளம்.

பயணி: உண்மையில், காந்தியின் ராட்டை ஏகாதிபத்திய எதிர்ப்பின் சின்னம். இங்கிலாந்து மீதான பொருளாதாரச் சார்பைத் துண்டித்து, ஆங்கிலேயரின் பொருளாதாரச் சுரண்டலைத் தடுக்க முனைந்த ஆயுதம்.

இன்றைக்கும் ராட்டை கிராம சுயாட்சியின் குறியீடு என்பதை இப்பயணத்தின் போதுதான் உணர்கிறேன். சர்வோதய சங்கங்கள் நடத்திய கூட்டங்களுக்கு வரும் நூற்போரையும், நெசவோரையும், குறிப்பாக பெண் ஊழியர்களைப் பார்க்கும் போது காந்தி விதைத்த சுயாட்சி விதை இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது என்று தெரிகிறது. காந்தியத்தின் மிச்சங்களில் முக்கியமானது சர்வோதய சங்கம்; அவர் தக்கார் என்பது காணப்படும் எச்சம். இன்றைக்குப் பல்லாண்டு கால இருப்பின்போது சேர்ந்துவிட்ட குறைகளோடே சர்வோதய சங்கங்கள் இயங்குகின்றன. ஆயினும் அவற்றின் சாத்தியக் கூறுகள் பிரமிக்கவைக்கின்றன.

நம் பொருளாதார அமைப்பு மக்களுக்காக மக்களால் இயங்க முடியும் என்பதன் சாத்தியத்தைச் சர்வோதய சங்கங்கள் போன்ற காந்திய அமைப்புகள் உள்ளடக்கியிருக்கின்றன.

சுதந்திர இந்தியாவில் முதன்முதலாக கதராடைகளுக்கும் கைவினைப்பொருள்களுக்கும் வரி விதிக்கப்பட்டிருப்பது, இந்த சுயாட்சிக்கு எதிரான ஒரு செயல்பாடாகவே நாம் பார்க்கவேண்டும்.

இத்தடைகளையும் மீறி, சர்வோதய சங்கம் போன்ற அமைப்புகள் மக்களுக்குப் பொருளாதார சுதந்திரம் ஏற்படுத்தித்தந்தால்தான், அதிகாரம் பரவலாக்கப்பட்ட அரசியல் சுயாட்சியை நோக்கி நாம் நகரமுடியும்.

இன்றைய சூழலியல் தேவைகளுக்கேற்பத் தங்களை மாற்றியமைத்துக்கொள்ளவேண்டிய அவசியமும் இந்த அமைப்புகளுக்கு உண்டு. அமைப்பின் செயல்பாடுகள், நோக்கங்கள், எதிர்காலக் குறிக்கோள்கள் குறித்து ஓர் ஆழமான அலசலும், கூர்நோக்கும், தொலைநோக்கும் தேவைப்படுகின்றன.

விமர்சகன்: நவீன உலகின் போக்குக்கு முற்றிலும் முரணானதாக இத்தகைய அரசியல், பொருளாதாரப் பார்வை உள்ளது. மைய நீரோட்டத்திற்கு இது ஒரு போதும் வர முடியாது. அதனால்தான் அம்பேத்கர், நேரு ஆகியோர் காந்தியத்தின் இந்த கூறுகளை முற்றிலும் நிராகரித்தனர்.

பயணி: மைய நீரோட்டத்திற்கு இப்பார்வை வராவிட்டால், மைய நீரோட்டம் என்ற ஒன்றே இல்லாத அளவிற்கு அழிவை நோக்கி நாம் சரிந்துவிடுவோம் என்பது நம்மை அச்சுறுத்தும் சூழலியல் சாத்தியம். அம்பேத்கர், நேரு ஆகியோர் அவர்களது காலகட்டங்களின் நிதர்சனத்தில் கால் பதித்திருந்தனர். அந்த நிதர்சனங்களே அவர்களது பார்வைகளைச் செதுக்கின. காந்தியின் ஒரு கால் நிதர்சனத்தில் இருந்தாலும், மறு கால் சத்தியத்தை நோக்கியே நீண்டுகொண்டிருந்தது.

விமர்சகன்: இச்சிக்கலால்தான், காந்தியை அரசியல் தளத்திலிருந்து விலக்கி தனிமனித தளத்தில் மட்டுமே வைக்கவேண்டும் என்று ஒரு பார்வை உள்ளதே.

பயணி: தனிமனித தளத்தில் காந்தி அவசியம் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், அது காந்தியத்தின் சாத்தியங்களைச் சுருக்கிவிடும். அது தொடக்கப்ப்புள்ளி மட்டுமே. எந்த ஒரு நேர்மையான ஆன்மீகவாதியும் காந்தி வெளிப்படுத்திய தனிமனித ஒழுக்கத்தையும், அன்பையும், நேர்மையையும் வெளிப்படுத்தியிருப்பார்கள். ஆனால், காந்தியை சமூக, அரசியல், பொருளாதார தளங்களில் விரித்தெடுக்கும் போதுதான் விசுவரூபம் கொள்கிறார். பல சங்கடம் தரும் கேள்விகளை எழுப்புகிறார். சங்கடம் தரும் தீர்வுகளைத் தருகிறார். தனிமனித தளத்தில் ஆன்ம சாந்தி தரும் காந்தியைவிட, சமூகத் தளத்தில் சங்கடம் தரும் காந்தி தான் நமக்கு அத்தியாவசியம்.

விமர்சகன்: காந்தியை இந்துத்துவர்கள் தமதாகக் கொண்டாடும் காலம் வந்துவிடும் போலிருக்கிறதே. இருவருக்கும் பொதுவான கூறுகள் பல இருக்கின்றனவே – பசுவதை எதிர்ப்பு, சைவ உணவு, இந்திய பண்பாட்டினை மீட்டெடுத்தல், ராமர் பற்று, தேசியம், சுதேசியம், இந்தி ஆர்வம் என்று அடுக்கிக்கொண்ட போகலாமே.

பயணி: காந்தியைச் சுவீகரிக்க முடியுமானால், இந்நேரம் இந்துத்துவர்கள் அதைச் செய்திருப்பார்கள். நீங்கள் குறிப்பிட்ட விஷயங்களில் காந்திக்கும் இந்துத்துவர்களுக்கும் மேலோட்டமான ஒற்றுமை இருப்பதுபோலத் தோன்றினாலும், ஆணித்தரமான மாறுபாடுகள் இருக்கின்றன.

காந்தியின் ராமனும் இந்துத்துவர்களின் ராமனும் ஒருவனல்ல. காந்தியின் ராமன் சரித்திர ராமனோ, புராண ராமனோ அல்ல; எல்லாருக்குமான கடவுளின் ஒரு பெயர்; அவர் கடவுளாகக் கருதிய வாய்மையின் ஒரு பெயர். காந்தியின் ராமன் ஒருபோதும் வன்முறையின் சின்னமாக இருக்கமாட்டான். ஒரு போதும், பெரும்பான்மையினர் ஆதிக்கத்தின் நாயகனாக மாறமாட்டான். எக்காரணம் கொண்டும் ஒரு வழிபாட்டுத்தலத்தை இடித்துவீழ்த்தமாட்டான்.

காந்தி பசுக்கொலையை எதிர்த்தது, பெருந்திரளான மக்களின் மதநம்பிக்கை சார்ந்திருப்பதனாலும், பசு கிராமப் பொருளாதாரத்தின் அச்சாணியாக இருந்ததாலும்தான். ஆனால், சட்டங்கள் மூலம் பசுக்கொலையைத் தடுக்க ஒருபோதும் அவர் துணைபோகவில்லை. பசுவின் பெயரால் இஸ்லாமியர்கள்மீதும், தலித்கள் மீதும் வன்முறை கட்டவிழ்த்துவிடப்படுவதை எப்போதும் எதிர்த்தே இருப்பார். அவர் கோரியது மாற்றுத்தரப்பின் மன மாற்றத்தையே. தம் தரப்பின் திணிப்பை அல்ல. அது மட்டுமன்றி, அவர் பசுவதை ஆங்கிலேயர் காலத்தில்தான் நிறுவனமாக்கப்பட்டு அதிகரித்தது என்று கருதினார். இந்துத்துவர்கள் இஸ்லாமிய ஆட்சியைத்தான் இதற்குக் காரணமாகக் காட்டுகின்றனர். பசுப் பொருளாதாரத்தைச் சிதையவிட்டுவிட்டு, பசுவுக்காகக் கண்ணீர்விடுவதில் உள்ள பாசாங்கினை காந்தி அம்பலப்படுத்தியிருப்பார்.

அதே போல, சைவ உணவை தனிப்பட்ட ஒழுக்கநெறியாகப் பார்த்தாரேயன்றி, ஒரு தேசியத் திட்டமாக அதை முன்வைக்கவில்லை. கான் அப்துல் கஃபார் கான் தன் மகன்களோடு வர்தாவில் தங்கியிருந்தபோது, அவரது மகன்களுக்கு அசைவ உணவு ஏற்பாடு செய்யலாம் என்று கூறியதை நாம் நினைவுகூர வேண்டும்.

காந்தியின் தேசியம் மனிதநேயத்துக்குக் கீழ்ப்படிந்ததாகத்தான் இருந்தது. பாக்கிஸ்தான் உருவாக்கத்தை கடுமையாக எதிர்த்த காந்தி, மக்களின் விருப்பம் அதுவாக இருப்பதை அறிந்தபோது, விரக்தியுடன் அதை ஏற்றுக்கொள்ளத்தான் செய்தார். மக்களின் மனங்களை மாற்றுவதிலேயே அவர் முனைப்பு இருந்தது. ஜின்னாவை பிரிக்கப்படாத இந்தியாவின் பிரதமராக்கலாம் என்ற கோரிக்கையை முன்வைக்கும் அளவிற்கு பிரிவினையைத் தவிர்க்க முயற்சிகள் எடுத்தார். ஆனால், பிரிவினையை எதிர்த்துப் போராட யாரும் துணையாக இருக்கப்போவதில்லை என்பதை அறிந்தபோது, தனியே அதை எதிர்த்துப் போராட அவர் முனையவில்லை. தன் கவனம் முழுவதையும் பிரிவினை விளைவித்த வன்முறையை எதிர்கொள்வதிலேயே செலுத்தினார். தேசியத்தின் பெயரால் எப்பகுதி மக்கள்மீதும் போர்தொடுக்கவோ, கட்டாயப்படுத்தவோ ஒருபோதும் காந்தி இணங்கமாட்டார். இந்தியாவின் பன்மைத்தன்மையை முழுவதும் உணர்ந்திருந்தார் காந்தி. ஒற்றைத்தன்மையுள்ள ஒரு கலாச்சாரத்தை எவர்மீதும் திணிப்பதை எதிர்த்தே இருப்பார். தேசியவாதத்தின் பெயரால், ராணுவப் பலப்பரீட்சைக்கு பெருந்தொகை செலவிடப்படுவதற்கு எதிராக இருந்திருப்பார்.

இந்தியப் பண்பாட்டின் மீது பெரும் மதிப்பு கொண்டிருந்த போதும், இந்தியப் பண்பாட்டின் எதிர்மறை அம்சங்களை விமர்சிக்கவும், துறக்கவும் காந்தி தயங்கியதில்லை. நடக்காதவற்றை நடந்ததாகக் கட்டமைக்கவும் அவர் முயலவில்லை. சாத்திரங்களுக்கும் சத்தியத்திற்கும் முரண் வரும்போது சத்தியத்தையே ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றார்.

காந்தியின் சுதேசியம் ஆத்மார்த்தமானது. கிராம சுயாட்சியையும் அதிகாரப் பரவலாக்குதலையும் அடித்தளமாகக்கொண்டது. வெறுப்பின் ஊற்றுக்கண்ணிலிருந்து உதித்ததல்ல. அதனால்தான், இங்கிலாந்தில் கதர் இயக்கத்தால் வேலையிழந்த மில் தொழிலாளர்கள் காந்தியைத் தம்மவராக ஏற்றுக்கொண்டாட முடிந்தது. பன்னாட்டு நிறுவனங்களும் இந்தியப் பெருநிறுவனங்களும் இந்தியாவில் உற்பத்தி செய்தாலும், சமூக ஏற்றதாழ்வுகளை அதிகரிப்பதை சுதேசியத்தின் பெயரால் ஒருபோதும் காந்தி ஏற்றுக்கொண்டிருக்கமாட்டார்.

ஏகாதியபத்திய எதிர்ப்பின் இன்னொரு ஆயுதமாகவும் தேச ஒருமைப்பாட்டின் கருவியாகவுமே காந்தி இந்தியைப் பார்த்தார். மாற்று மொழியினரின் விருப்பத்திற்கு எதிராக எந்த மொழியையும் திணிப்பது காந்தியம் ஆகாது. இந்தியாகட்டும், வேறு எந்த மொழியாகட்டும், இயல்பாக மக்கள் ஏற்றுக்கொள்வதற்கான சூழலை உருவாக்குவதே காந்திய வழி. சட்டங்கள் மூலமாகவும், அதிகார பலத்தின் மூலமாகவும் திணிப்பது அல்ல. அது மட்டுமன்றி, தாய்மொழி வழியில் கல்வி, தகவல் பரிமாற்றத்தில் தாய்மொழிக்கே தலையாய இடம் என்று தாய்மொழியின் பயன்பாட்டையே பிரதானமாக வலியுறுத்தியவர் காந்தி. ஒற்றைத்தன்மையை நிலைநாட்ட ஒருமைப்பாட்டைக் குலைக்கும் வகையில் செயல்பட்டிருக்கமாட்டார். (காந்தியர்கள் பலரும் மும்மொழிக் கொள்கையை முன்வைப்பவர்களாக உள்ளனர். இந்த யாத்திரையின் போதும், மார்க்கண்டன் அவர்கள் மும்மொழிக்கொள்கை வேண்டும் என்றே பேசினார். ஆனால், அவர்கள் எவரும் மக்கள் விருப்பத்துக்கு எதிரான மொழித்திணிப்பை ஆதரிப்பவர்களாக இருக்கமாட்டார்கள் என்றே நம்புகிறேன்.)

ஆக, இந்துத்துவர்கள் காந்தியை ஓர் ஆன்மீகவாதியாகவும், தூய்மை இந்தியா போன்ற திட்டங்களுக்கு வசதியான ஒரு பிம்பமாகவும் ஏற்றுக்கொள்ளமுடியமே அன்றி, அவரை முழுமையாக சுவீகரித்தால் அவர்களும் இந்துத்துவத்தைத் துறந்து காந்தியர்களாகிவிடுவார்கள். அவர்கள் இந்துத்துவர்களாக இருக்கும்வரை காந்தியைக் கூறு போட்டு, வெகுசில அம்சங்களைத்தான் எடுத்துக்கொள்ள முடியும். அவர் கையில் திணிக்கப்பட்ட விளக்குமாறு அவர்களையும் சேர்த்தே பெருக்கித்தள்ளும் என்பதை அவர்கள் அறியாதவர்களல்லர்.

விமர்சகன்: இந்துத்துவம் மிகவும் வலிமையாகிவரும் இந்த வேளையில், காந்தியர்கள் இந்துத்துவத்துக்கு எதிராகப் பெரிதாக ஏதும் போராட்டம் நடத்தவில்லையே? போராட்டக் களங்களில் இன்று பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் பெயர் கேட்கிற அளவிற்கு காந்தியின் பெயர் கேட்பதில்லையே? காந்தி ஒத்துழைப்பின் அடையாளமாகிவிட்டாரா?

பயணி: சர்வோதயம் மலர்கிறது இதழில் க.மு.நடராஜன், பாதமுத்து போன்றவர்கள் தொடர்ந்து இந்துவத்துக்கு எதிராக எழுதிக்கொண்டுதான் இருக்கிறார்கள். காந்திய விழிப்புணர்வு யாத்திரையில் மார்க்கண்டன் பள்ளி, கல்லூரிகளிலெல்லாம் இந்துத்துவத்துக்கு எதிரான குரலில்தான் பேசினார். இவர்கள் எல்லாம் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள். அடுத்தடுத்த தலைமுறையினர்களிலும், முகநூலிலும் பிற இதழ்களிலும் காந்தியர்கள்/காந்திய ஆர்வலர்கள் காந்தியத்தை முன்னிறுத்தி இந்துவத்துக்கு எதிராக எழுதிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

எனினும், இந்துவத்துக்கு எதிரான பெரிய இயக்கமெதுவும் இதுவரையில் காந்தியர்களால் நடத்தப்படவில்லைதான். தமிழகத்தின் பெரிய போராட்டக் களங்களில் பெரியார், அம்பேத்கர் அளவிற்கு இன்று காந்தியின் பெயர் ஒலிப்பதில்லைதான். கலகக்கார காந்தி இன்றைய மாணவர்களை/இளைஞர்களைச் சென்றடையவில்லை. அல்லது, போராட்டக் களத்தில் மட்டுமன்றி வாழ்க்கையிலும் அர்ப்பணிப்பையும் தியாகத்தையும் கோரும் காந்தி நமக்கு ஏற்புடையவராக இல்லை.

ஆனால், காந்தியை ஒத்துழைப்புக் குப்பிக்குள் நீண்ட நாள் அடைத்திருக்க வாய்ப்பில்லை. ஒத்துழையாமையின் தோற்றுவாய் அவர். காந்தியர்களின் போதாமைகளையும் மீறி, சங்கடப்படுத்தும் கேள்விகளைக் கேட்டு, சத்தியத்தை நோக்கித் தள்ளிக்கொண்டிருப்பவராகவே காந்தி இருப்பார்.

விமர்சகன்: காந்தி அப்படிச் செய்திருப்பார், இப்படிச் செய்திருப்பார் என்று சொல்வதில் என்ன பயன். ஏன், கடந்த காலத்தின் சிறைக்குள் நாம் இருக்கவேண்டும்? இன்றைய சூழலில் நாம் என்ன செய்யவேண்டும் என்பதுதான் முக்கியம், இல்லையா?

பயணி: காந்தி மானுடச் சிந்தனையின், செயல்பாட்டின் உச்சம். காந்தி இப்படி இருந்திருப்பார் என்று கணிப்பதும், நாம் செய்ய வேண்டியது இதுவென்று அறிவதும் வெவ்வேறல்ல. காந்தியைக் கடந்த காலத்தின் பிரதிநிதியாக நான் பார்க்கவில்லை. அவர் நம் நிகழ்காலத்துக்குரியவர்; எதிர்காலத்துக்கு வழிகாட்டி.

*****

மதுரை காந்தி அருங்காட்சியத்தை எனது மகளோடு பார்வையிட்டுக்கொண்டிருந்த போது, ஒரு படத்தைக் காண்பித்து, காந்தி செருப்பு அணியாமல் வெறுங்காலோடு நடந்துகொண்டிருப்பதைச் சுட்டிக் காட்டினாள். அந்தப் புகைப்படம் நவகாளி யாத்திரையின் போது எடுக்கப்பட்டது. தன் வாழ்வில் தான் சந்தித்த மிகச் சிக்கலானப் பிரச்சனையைத் தீர்க்க, தன்னைச் சூழ்ந்திருந்த இருளைக் கிழித்து ஒளி பிறக்க, மிகக் கடுமையான தவம் தேவைப்பட்டது என்று நம்பிய காந்தி, தன் ஏற்கனவே எளிமையான வாழ்க்கையை, மேலும் எளிமைப்படுத்திக் கொள்ள முயன்றார். அப்படியான ஒரு செயல்தான், 77 வயதில், செருப்பு அணியாமல், நவகாளியின் ஈரநிலங்கள் முழுவதும் நடக்கத் துணிந்தது.

யாத்திரையின் போது கேட்ட எல்லா உரைகளை விடவும், அங்கு கண்ட அந்த புகைப்படம் என் மகளின் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதுபோல், யாத்திரையின்போது ஒரு சொல், ஒரு காட்சி, ஒரு செயல் எங்காவது ஒரு விதையாக விழுந்து கொண்டே இருந்திருக்கும் என்ற நம்பிக்கை துளிர்த்தது.

புலம்பெயர்ந்த இந்தியர்களுக்காக தென்னாப்பிரிக்காவிலும், சுதந்திரத்துக்காக தண்டியை நோக்கியும், இந்துக்களுக்காக நவகாளியிலும், முஸ்லிம்களுக்காக பீகாரிலும், தலித்களுக்காக இந்தியாவெங்கும் பல்வேறு யாத்திரைகளை மேற்கொண்டவர் காந்தி. அவரது வாழ்க்கையே சத்தியத்தையும் சர்வோதயத்தையும் நோக்கிய ஒரு யாத்திரைதான். அந்த யாத்திரை இன்னும் தொடர்கிறது. தொடரவேண்டும்.


விட்டு விடுதலையாகி நின்றோம்

மே 31, 2016

முகநூலில் இருந்து ஒரு பழைய பதிவு:


 

அன்றிரவு கிராமத்திலிருந்து பொள்ளாச்சிக்குச் செல்லும் பேருந்தில் ஏறும்போதே பழைய எம்.ஜி.ஆர். பாடலொன்று வரவேற்றது. சற்றே வயதானவர், நின்றபடி உணர்ச்சி ததும்பப் பாடிக்கொண்டிருந்தார். பேருந்தின் நகர்வைவிட அவர் அருந்திய திரவம் அவரை அதிகம் தள்ளாட வைத்துக்கொண்டிருந்தது. சுருதிகூடவில்லையெனினும் மெட்டில் குறையில்லை. உச்சரிப்பில் நல்ல தெளிவு.
பின்புறம் கடப்பாரையுடன் அமர்ந்திருந்த பயணி, மஞ்சள் நிற வொயர் கூடையுடன் இருந்த சகபயணியிடம் சிலாகித்துக்கொண்டிருந்தார்.
‘இவரைக் கிண்டல் பண்ணக்கூடாதுங்க. அவருடைய வாழ்கை அனுபவம் தான் அவரைப் பாட வைக்குது.’
ஆர்வமாய்த் திரும்பிப் பார்த்த என்னிடம் மேலும் சொன்னார், ‘எல்லாம் அடிமைப்பட்டுக் கிடந்த ஜனங்க. இப்ப விடுதலைக்கப்புறம் இந்த அளவுக்குப் பாடறார்னா அப்ப எவ்வளவு கஷ்டப்பட்டுட்டு இருந்திருப்பாங்க பாருங்க.’
எந்த விடுதலையைச் சொல்கிறார்? ஆங்கிலேயர்களிடமிருந்து பெற்றதையா? பாடுபவர் வயதானவர்தான்…ஆனாலும் அந்த விடுதலையைச் சொல்கிற மாதிரித் தெரியவில்லை. ஒருவேளை சாதி விடுதலை குறித்துப் பேசுகிறாரோ?

பாடியவருக்குப் பேருந்து நிறுத்தம் வந்துவிட்டது. நடத்துனர் பத்திரமாக இறக்கிவிட்டார். இரவு நேரங்களில் நடத்துனர் பாடு படு திண்டாட்டம்தான் – மற்றவர் உயிரையும் தமது உயிரையும் கெட்டியாகப்பிடித்துக்கொண்டு செயல்படவேண்டும்.

சகபயணி பதிலளித்துக்கொண்டிருந்தார், ‘அவர் பார்த்த மொதல் படம் எதுன்னு கேட்டேன். மதுரை வீரன்னு சொன்னார். அதனாலதான் இப்படிப் பாடறார். என்னமாப் பாடறார்.’

‘நான் படிக்கும்போது பள்ளிக்கூடத்தில பெஞ்சிலதான் உட்கார வைச்சாங்க.’

‘அடப் போப்பா, நான் படிக்கும்போது பெஞ்சே கிடையாது,’ என்று வொயர் கூடைக்காரர் சொல்ல, உரையாடல் தொடர்ந்தது.

கூர்ந்து கவனித்து, கூட்டிக் கழித்துப் பார்த்ததில் விடுதலையின் அர்த்தம் புரிந்தது. எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்த தினமாம்.

அடுக்குமாடி அநாதைகள்

திசெம்பர் 20, 2010

ஞாயிற்றுக் கிழமை, என்

பெற்றோர்க்கு விடுமுறைதான்.

ஆனால், ஏனோ, என்

செவிலித்தாய்க்கு இன்றுமில்லை

விடுமுறை.

———————————————

ஜாதிஜாதி என்கிறார்களே!

எந்த யுகத்தில் இருக்கிறார்கள்?

என் சுத்த பிராமணப் பெற்றோர்கள்

செவிலித்தாய் வைக்கும்போது

பார்க்கிறார்களா ஜாதியை?

அவர்களுக்குத் தெரியுமா

அவளோடு செல்கையில்

எத்தனை ஜாதியினர்

என்னைக் கொஞ்சி

விளையாடுவ ரென்று?

——————————————————

ஆணாதிக்கம் அழிந்து

பெண்ணாதிக்கம் மலர்ந்ததா

தெரியாது.

அமரத்தெரிந்த நாளிலுருந்து

எனக்குத்தெரிந்த

ஆதிக்கம்

அரவணைப்பு

கைச்சுவை

என்

செவிலித் தாயினுடையதுதான்.

———————————–

ஊதியம் தேடி

என்னைப் பார்த்துக்

கொள்ள வந்திவிட்ட

அவள் குழந்தைகளை

யார் பார்ப்பார்?

——————————–

[எங்கள் அடுக்குமாடி இல்லத்தில், ஒரு ஞாயிறு உலாவின் போது கண்ட காட்சிகள், கேட்ட மழலைக் குரல்கள்]


ஈழப்போர் – தமிழக அரசியவாதிகளின் போர்வை

ஒக்ரோபர் 15, 2008

தமிழகத்தில் பிரச்சனைகள் வலுக்கிற போதெல்லாம், ஈழப்போர்வைக்குள் பதுங்கிக் கொள்கிறார்கள் நம் அரசியல் தலைவர்கள். ஈழப்போர் முப்பது ஆண்டுகளுக்கும் மேல் மூர்க்கமாய் நடந்து கொண்டுதானிருக்கிறது. ஆனால் நம் தலைவர்களுக்கு ஐந்தாண்டுக்கொருமுறை மட்டும் இந்தப் போர்வை தேவைப்படுகிறது. இந்து நாளிழதளில் குறிப்பிட்ட மாதிரி இது Tamil Chauvinism எல்லாமல்ல; அப்பட்டமான சந்தர்ப்பவாத அரசியல்.

தொடர் மின்வெட்டால் தமிழ்நாடே தவித்துக்கொண்டிருக்கும் போது, அதற்கான தீர்வு காணும் திறனும் அற்று, பிரச்சனைக்கான காரணங்களையேனும் தெளிவாக விளக்கும் துணிவுமற்று, மக்கள் கவனத்தை ஈழத்தின் பக்கம் திருப்புவது எதற்காக? இந்தத் தடங்கலை ஒரு வாய்ப்பாக மாற்ற முனையாமல், நம் அரசியல் தலைவர்களின் இந்த நடத்தை வெறும் திசைதிருப்பல் முயற்சியா, அல்லது, ஈழ மக்கள் மீது திடீரென எழுந்த இரக்கமா, அல்லது,  இக்கட்டில இருக்கும் ஒரு தீவிரவாத அமைப்பைக் காக்கும் முயற்சியா? உலகையே உலுக்கிக்கொண்டிருக்கிற ஒரு பொருளாதாரச்சரிவு இந்தியாவையும் நெருங்கிக்கொண்டிருக்கிற வேளையில், மத்திய அரசின் நெற்றியில் துப்பாக்கிவைப்பது மட்டமான, பொறுப்பற்ற அரசியல்.

விடுதலைப் புலிகள் தம் இரக்கமற்ற வன்முறையைக் கைவிடும்வரை ஒரு பயங்கரவாத இயக்கமாகத்தான் கருதப்படுவார்கள்; கருதப்படவேண்டும். சிங்கள அரசு வன்முறையை நிறுத்தட்டும், நாங்கள் நிறுத்துகிறோம் என்கிற பழைய வாதம், அகிம்சையின் வெற்றியை உலகுக்கு உணர்த்திய இந்த மண்ணில் என்றும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது; கூடாது.   நிலையான தீர்வு ஒருகாலும் தீவிரவாதத்தால் பெற முடியாது. 

பல்லாண்டுகால பயங்கரவாதம் சாதித்ததைவிட, ஒரு மாத அமைதிப்போர் காஷ்மீர் குறித்த இந்திய மக்களின் (நான் உட்பட)  எண்ணத்தைப் பெரிதும் மாற்றியதை அண்மையில் கண்டோம். ஈழத்தமிழர்கள் ஆயுதங்களையும், ஆயுதமேந்தத் தூண்டுகற இயக்கங்களையும் துறந்து, தீர்வுகளை அணுக வேண்டிய தருணம் வந்துவிட்டது. ஓர் அகிம்சை இயக்கத்திற்கு இந்திய அரசு மட்டுமல்ல, உலகம் முழுவதுமே செவிசாய்த்தே தீரும்.

அதுவரையில் ஈழப்போர், தமிழகத்தின் நெருக்கடி நேரங்களில்மட்டும் இங்கு மேலோட்டமாய் கவனிக்கப்படும். மத்திய அரசுக்குக் கலைஞர் விதித்திருக்கிற இரண்டு வார கெடு, அதற்குள் பருவமழை வந்து மின்வெட்டு நின்றுவிடும் என்கிற நம்பிக்கையில்தானோ?


தேய்பிறையில் வாடிக்கையாளர் சேவை

பிப்ரவரி 21, 2008

அனைத்துத் துறைகளிலும், இந்தியாவில் பெருகிவரும் பெரும் நிறுவனங்கள் வாடிக்கையாளர் சேவையில் பின்னோக்கியே சென்று கொண்டிருக்கின்றன. இந்திய நிறுவனங்களாகட்டும், பண்ணாட்டு நிறுவனங்களாகட்டும், அனைத்தின் மீதும் இக்குற்றச்சாட்டை சுமத்தலாம். இந்நிறுவனங்களின் வளர்ச்சி குறித்த எதிர்ப்புகளை ஒதிக்கிவிட்டு, அவைகளின் செயல் திறத்தையும், சேவை தரத்தையும் ஆராய்ந்து பார்த்தால், கடக்க வேண்டிய பாதை வெகு தொலைவு என்பது புரியும்.

வங்கிகளில் நான் சந்தித்த தரக்குறைவான சேவைகள் அநேகம். என் அண்மைக்கால அவதிகளை, ஒரு நெடிய புலம்பலாக இங்கு பதிவு செய்திருக்கிறேன். தேவையற்ற தவறுகளால் எத்தனை உலைச்சல், அலைச்சல்.

ரிலையன்ஸ், ஸ்பென்ஸர், ஃபுட் வேர்ல்ட் போன்ற பல பெரிய தொடர்கடைகளில், பல நேரங்களில் அழுகிய தக்காளிகளும், வெங்காயமும் அகற்றப்படாமலே கிடக்கின்றன. பல மாதங்களுக்கு முன் தயாரிக்கப்பட்ட பழைய பொருள்கள் நிறையக் காணக்கிடைக்கின்றன. தயாரிப்பான தேதியைக் காணாமல் நான் இங்கு எதுவும் வாங்குவதில்லை. வசதியையும் பழக்கத்தையும் முன்னிட்டு என்னைப் போன்றவர்கள் அங்கு குவிந்த வண்ணம் இருந்தாலும், உலகத் தரத்தை இன்னும் இந்நிறுவனங்கள் எட்டவில்லை என்பது கசப்பான உண்மை.

நிர்வாகத் திறனாலும், விளம்பர பலத்தாலும், சரியான இடங்களின் தேர்ந்தெடுப்பாலும், தேசிய அளவில் பரந்திருப்பதால் குறைந்த விலைகளை நிர்ணயிக்கமுடிகிறதாலும், தயாரிப்பாளர்கள் மற்றும் உழவர்களோடான நேரடித் தொடர்புகளாலும், பல தரப்பட்ட பொருள்களை ஒரே இடத்தில் விற்க முடிவதாலும், குளிர்சாதன வசதி, கார் நிறுத்துமிடம் என்ற பிற அனுகூலங்களாலும் ரிலையன்ஸ், வால்மார்ட் போன்ற தொடர்கடைகளின் வளர்ச்சி பெறுகத்தான் போகிறது. இதனால் ஏற்பட சாத்தியமான பரவலான பொருளாதார வளர்ச்சியின் பொருட்டு, இவ்வளர்ச்சியை எதிர்ப்பதுவும் ஏற்றதல்ல.

ஆயினும் இவை வாடிக்கையாளர் சேவையில் முன்னேற்றம் காண முடியாவிட்டால் சந்திக்க வேண்டிய சிக்கல்கள் ஏராளமிருக்கும். வர்த்தக வளர்ச்சியில், இயந்திரமயமான சேவையை அளிக்கும் முயற்சியில் மனித நயத்தை (human touch) இழந்துவிடக்கூடாது. 

இப்பெரு நிறுவனங்கள் தடுமாறப்போகிற சேவை அம்சத்தில்தான், சிறிய கடைகள் சிறப்பாகச் செயல்பட்டு நசுங்கிப்போகாமல் தமக்கென ஓர் இடத்தை உருவாக்கிக் கொள்ளும் வாய்ப்பும் இருக்கிறது. பொருள்பலத்தை புன்னகை கொண்டு சிறு வணிகர்களால் எதிர்கொள்ள முடியும்.


நொந்தாரை வாழவைக்கும் இந்தியா

பிப்ரவரி 21, 2008

இந்தியர்களை இனவெறியர்கள் என்று நினைத்திருந்த Andrew Symmondsக்கு அதிர்ச்சியாக இருந்திருக்கும், IPL ஏலக் கோமாளிக் கேளிக்கையில் மிக அதிக விலைக்கு ‘விற்க’ப்பட்ட வெளிநாட்டு வீரர் அவர்தான் என்பதை அறிந்தபோது. ஒரு மாதம் முன்பு, சிமண்ட்ஸுக்கு எதிராய் இந்திய தேசமே போர்க்குரல் உயர்த்தியது – ஹர்பஜன் உன் தாயைத் தானே அவமானப்படுத்தினார், இனத்தையல்லவே என்று. இன்றைக்கு ஹைதராபாத் நவாபாய் வலம் வருவதற்கு அழைப்பு விடுத்திருக்கிறோம். அவரும் தன் நாட்டை மறந்து, பாக்கிஸ்தானில் விளையாட மறுத்து, இந்தியாவின் நண்பனாகத் துணிந்து விட்டார்.

பணம் படுத்தும் பாட்டை என்னவென்று சொல்ல!

பி.கு… 

தனியுடைமைச் சமுதாயத்தில் பொருளாதார நோக்கங்கள் மேலெலும் போது, வளர்ச்சிக்கான வாய்ப்புகள் பெறுகி, விளைவுகளும் விளங்குகிற போது, மத இன வேறுபாடுகள் மறைவதற்கான வாய்ப்புகள் உருவாகுமா என்கிற கேள்வி எழுகிறது. விடை அவ்வளவு விளையாட்டாய் அறிந்துவிட முடியாது என்பதால் இப்போதைக்கு வினாவோடு விடைபெறுவோம். தொடரும் பதிவுகளில், வேறொரு பொருத்தமான தொனியில், தொடர்ந்து ஆராயலாம்.


நவயுக விலங்குப் பண்ணைகள்

ஜனவரி 29, 2008

பல நிகழ்வுகளைக் காணும்போது,  ஜார்ஜ் ஆர்வெல்லின் Animal Farm புத்தகம் அடிக்கடி நினைவுக்கு வருகிறது.

Animal Farmல், மனிதர்களின் கொடுங்கோலாட்சியைச் சகிக்கமுடியாத விலங்குகள், புரட்சி செய்து, மனிதர்களை விரட்டிப் பொதுவுடைமை ஆட்சியை நிறுவுகின்றன. அந்தப் பொதுவுடைமை அரசு மெதுவாய், பன்றிகளின் தலைமையில் இன்னொரு கொடுங்கோலாட்சியாய் மாறுகிறது. இறுதியில் பன்றிகள் மனிதரைப் போலவே இருகால்களை உயர்த்தி நடக்கக்கூடக் கற்றுக்கொள்கின்றன.

ரஷ்யப் புரட்சியையும், ஸ்டாலினின் எழுச்சியையும் நையத் தாக்கிய இந்த நையாண்டிக்கதை, அறுபது ஆண்டுகளாகியும் அதன் இயைபை இழக்கவில்லை. அதிகாரம் படைத்தவன் மனிதனாகினும், பன்றியாகினும் ஒரே விளைவுதான் – அதிகாரம் தவறாகவே பயன்படுத்தப்படுகிறது. ஏராளமான உதாரணங்கள்.

ஹிட்லரின் கொடுமைகளின் விளைவாய் உருவான இஸ்ரேல், அவனுக்கு இணையான கொடுமைகளைத் தொடர்ந்து புரிந்துவந்திருக்கிறது.

அப்கானிஸ்தானில் யார் ஆட்சிக்கு வந்தாலும் பலபடிகள் பின்னோக்கியே நகர்ந்திருக்கிறார்கள். ரஷ்சிய ஆக்ரமிப்பில் ஆட்சி செய்த நஜிபுல்லா ஆகட்டும், பின் அமெரிக்க ஆதரவில் எழுந்த முஜாகிதின்களாகட்டும், அவர்களை வீழ்த்திவந்த தாலிபன் ஆகட்டும், இப்போதைய அமெரிக்கக் கைப்பாவைகளாகட்டும் ஒருவருக்கொருவர் மிஞ்சிய கொடுங்கோலர்கள்.

தமிழகத்தில் பார்ப்பன எதிர்ப்பில் துவங்கிய திராவிட இயக்கம் வெற்றிபெற்று, பல நூறு சாதிச்சங்கங்களிடம் தமிழ்ச் சமுதாயத்தை ஒப்படைத்துவிட்டது.

காஷ்மீரில் இஸ்லாமியத் தீவிரவாதத்திற்கு எதிராய் குஜராத்தில் இந்துக்களின் தீவிரவாதம்.

இலங்கையில் சிங்கள இனவெறிக் கொடுமைக்கு மாற்றாய், புலிகளின் வன்முறை வெறியாட்ட முறைகள்.

வங்கத்திலும், கேரளத்திலும் இடதுசாரிகள் எந்தவிதத்திலும் மாறுபட்ட ஆட்சிகளை அளித்தவிடவில்லை. நந்திகிராம் – ‘முதலாளித்துவ’ இடதுசாரி சர்வாதிகாரத்திற்கான இன்னொரு எடுத்துக்காட்டு. 

இந்தியர்களும் ஆதிக்கம் செலுத்தும் வாய்ப்பு கிடைத்தால், ஆங்கிலேயரைவிட அதிகமாகவே செலுத்துவோம் என்பதற்கு பணபலம் படைத்த இந்திய கிரிக்கெட் வாரியம்(BCCI) சாட்சி. ஹர்பஜன்-சிமண்ட்ஸ் இனவெறிக் குற்றச்சாட்டை நியாயமான முறையில் அணுகி, உண்மையைக் கண்டறிந்து நிலைநாட்டாமல், அதிகாரத்தையும், மிரட்டலையும் பயன்படுத்துவது வெள்ளையரிடம் நாம் கற்றுக்கொண்ட பாடம்.

காணுமிடமெங்கும் இன்னும் ஏராள விலங்குப் பண்ணைகள்.