நாடெல்லாம் சுற்றியலைந்துவிட்டு, இவ்வாரம்தான் எங்கள் கிராமத்துக்குப் பெருமழை வந்துசேர்ந்தது. வந்தவுடன் விரிந்து பரந்த ஒரு புளியமரம் விழுந்துவிட்டது. யாரும் வகுத்தற்கரிய பிராயத்தது அம்மரம்.
மரம் விழும் போது கோவையில் இருந்தோம். அடுத்த நாள்தான் ஊருக்குச் சென்றேன்.
மரம் விழுந்த அதே நாள், எங்கள் பயிலகத்துக்கு வரும் 9 வயதுச் சிறுவன் இளங்கோவின் அம்மாவும் இறந்துவிட்டார். அவனைத்தான் முதலில் பார்க்கச் சென்றேன். வழியிலேயே கண்ணில் பட்டான். அவனது 4 வயது தங்கையுடனும் வேறு இரு குழந்தைகளுடன் சென்றுகொண்டிருந்தான்.
இளங்கோ எங்கள் பயிலகத்துக்கு வரும் மாணவர்களில் மிகவும் கட்டுக்கடங்காதவன். எந்த வேலை சொன்னாலும், செய்யாமலிருக்க ஆயிரம் காரணங்கள் கண்டுபிடித்துவிடுவான். மனது வைக்கும்போது, எதைச் சொல்லிக்கொடுத்தாலும் எளிதில் கற்றுக்கொள்வான். நல்ல புஷ்டியாக இருப்பான். எந்த உணவானாலும் அலாதியான அடக்கமுடியாத ஆவலுடன் உண்பான்.
அவனது தங்கையைச் சில சமயம் அழைத்துவருவான். மிகுந்த அக்கறையோடு பார்த்துக்கொள்வான்.
ஒரு முறை அவனது ஆசிரியர் அவனைக் கழுத்தைப் பிடித்துத் தூக்கியிருக்கிறார். அதைப் பற்றி விசாரிக்க, அவனது பெற்றோரைப் பள்ளிக்குச் சென்று விசாரிக்குமாறு அறிவுறுத்த அவனது வீட்டுக்குச் சென்றிருக்கிறேன். அப்போதுதான் அவன் அம்மாவுடன் பேசியிருக்கிறேன்.
‘என்னாச்சு இளங்கோ? உங்க வீட்டுக்குத்தான் வந்தேன். வா போகலாம்,’ என்றேன்.
‘அண்ணா, இருங்கண்ணா வந்தர்றேன். தாத்தா காசு குடுத்தாரு. கடைக்குப் போயிட்டிருக்கேன்,’ என்று அருகிலிருந்த கடைக்குச் சென்று குழந்தைகள் எல்லாருக்கும் மிட்டாய் வாங்கி வந்தான்.
அவனது அப்பா வீட்டிலிருந்தார். எனக்கு நாற்காலி போட்டுவிட்டு, திண்ணையில் அமர்ந்துகொண்டார். இளங்கோவின் அம்மாவுக்கு இரண்டு மாதமாகவே உடம்பு சரியில்லை; காச நோய் வந்து, கழுத்தில் நீர்கோர்த்து, அது கண்டுபிடிக்க ஒரு மாதம் ஆகி, கல்லீரல் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார் என்று ஒருவகையாகப் புரிந்து கொண்டேன்.
எங்கள் நாய் காரியைக் காணவில்லை என்று கடந்த இரு வாரங்களாய்த் தேடிக்கொண்டிருந்தோம். இளங்கோவும் அவன் நண்பர்களும்தான் சாலையில் வாகனம் அடித்து மடிந்து கிடந்த ஒரு கறுப்பு நாயைக் காண்பித்தனர். காரி என்றுதான் நான் நினைத்தேன். மகிழ் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டாள். ‘காரி இத்தாச்சோடு இருக்குமாப்பா? அடியில இத்தனை வெள்ளையும் காரிகிட்டக் கிடையாது. வேறெங்காவது போயிருக்கும், திரும்பி வந்துரும்.’
மறுபடி இளங்கோவைச் சந்தித்த போதும் காரியைப் பார்த்தானா என்று கேட்டேன்.
‘ஆமாங்கண்ணா.’
‘எங்க?’
‘அந்தப் பீக்குழில தான். அது காரி தாங்கண்ணா,’ என்று அப்போதும் உறுதியாகக் கூறினான்.
‘போன வாரம் கூட இளங்கோவ தினமும் பார்த்தோமே. அவன் ஒன்னுமே சொல்லலையே. என்ன ஏதுன்னாவது பார்த்திருக்கலாம்,’ என்று அவன் அப்பாவிடம் அங்கலாய்ப்பாகக் கூறினேன்.
‘அவனுக்கே அம்மாவுக்கு இவ்வளவு முடியலைனு தெரியாதுங்க. இப்ப அவந்தான் காரியமெல்லாம் பண்ணினான். இவனிருக்கும் போது நான் எப்படி பண்ணமுடியும்? இந்தப் புள்ளைக்குத்தான் எப்படிப் புரியவைக்கிறதுன்னு தெரியலங்க. அம்மாவை ஆஸ்பித்திரிக்குக் கூப்பிட்டுப் போயிருக்காங்க, மருந்து கொடுத்திட்டிருங்ககாங்கனுதான் சொல்லிட்டிருக்கேன்,’ என்றார் இளங்கோவின் அப்பா.
‘அண்ணா, இன்னிக்கு ட்யூசன் இருக்கா,’ என்றாள் அவன் தங்கை, மழலை தீராக் குரலில்.
‘இல்லம்மா, மழையா இருக்கு. அடுத்த வாரம் வைச்சுக்கலாம். நீயும் வா, சரியா.’
இளங்கோ கையிலிருந்த சீப்பால் கீழே கிடந்த நாவல் பழக் கொட்டைகளை நோண்டிக்கொண்டிருந்தான். ‘சும்மா இருக்க மாட்டியா,’ என்று அவன் தாத்தா அதட்டினார்.
‘டேய் இளங்கோ, பெரிம்மாட்டப் போயி சாருக்கு டீ வாங்கிட்டு வா’ என்று அவன் அப்பா கூறியதும்,
‘இல்லை பரவால்ல, வேண்டாங்க,’ என்று எப்போதும் போல் சம்பிரதாயமாக மறுத்தேன்.
சற்று தள்ளி அமர்ந்திருந்த இன்னொருவர், என்னை அங்கு தேநீர் குடிக்கச் சொல்வது சரியல்ல என்று சைகை காண்பிப்பது தெரிந்தது. மறுத்திருக்கக்கூடாது என்று நினைத்துக்கொண்டேன்.
‘ஆஸ்பித்திரில இருந்து வந்தவுடனேயே எடுத்துட்டோம்ங்க. உடம்பு ஒரே கொதியா இருந்திச்சு. நல்ல வேளையா நேத்து அந்த மரம் நாங்க புதைச்சுட்டு வந்ததுக்கு அப்புறமாத்தான் கீழே விழுந்துச்சு. இல்லைனா வண்டிய ஊருக்குள்ளதான் விட்டு எடுத்துட்டுப் போயிருக்கணும். இதுவரைக்கு யாரையும் நாங்க ஊருக்குள்ள கொண்டு போனதில்லை. பெரிய பிரச்சனையாப் போயிருக்கும்.’
—-
வேரோடு பெயர்ந்து சாய்ந்து கிடந்த மரத்தின் முன்னால் நிற்கும்போது, நெருங்கிய உறவுக்காரர் வீழ்ந்துகிடக்கும் சோகம் அப்பிக்கொண்டது. இளங்கோவின் வீட்டிலிருந்த போது எழுந்த அதே உணர்வு. காரியின் இன்மையில் எழும் அதே வெறுமை.
மரத்தின் அருகில் குடியிருக்கும் பார்வதி, ‘மரம் விழுந்த சத்தமே கேட்கல. அவ்வளவு மெதுவா சாய்ஞ்சுது,’ என்றார்.
பார்வதியின் வீட்டு மாடுகள் எல்லாம் அம்மரத்தடியில்தான் கொட்டகை அமைத்துக் கட்டிவைத்திருப்பார்கள். கொட்டகை மரத்துக்கு வடமேற்காக உள்ளது. அவர்களது வீடும் மரத்துக்கு வடக்கே மிக அருகில் உள்ளது. மரத்தின் தென்புறம் உயரமான கைபேசி கோபுரம் ஒன்று உள்ளது.
மரம் கிழக்கு நோக்கிச் சாலையின் மீது சாய்ந்திருந்தது. சாலையைத் தாண்டியுள்ள வீட்டின் சுற்றுச்சுவரைக்கூடத் தொடாமல், யாருக்கும் பாதிப்பில்லாமல் விழுந்துகிடந்தது. சில மின்கம்பிகள் மட்டுமே அறுந்துபோயிருந்தன. சாலையை மறித்த கிளைகளை விரைவிலேயே வெட்டி அகற்றிவிட்டனர்.
மீதி மரம் மணியகாரரால் ஏலம் விடப்படக் காத்துக்கிடக்கிறது. பல ஆயிரங்கள் பெறும்.
அந்த பிரம்மாண்ட மரத்தின் இன்னும் வாடிப்போகாத இலைகளில் பசுமை கசிந்துகொண்டிருந்தது. மழை மீண்டும் தூறத்தொடங்கியது. சிறது நேரம் மௌனமாக நின்றுவிட்டு நகர்ந்தேன்.