பொறுமையானவர்கள்

ஓகஸ்ட் 12, 2019

உண்மையில், எல்லாரையும்விட
அவர்கள்
பொறுமையானவர்கள்.

அதனால்தான்
பனிமலை பற்றியெரியும்போது
நிதானமாக அவர்களால்
விவாதிக்கமுடிகிறது.
நம் கொந்தளிப்பைப் பார்த்துக்
கைகொட்டிச் சிரிக்கமுடிகிறது.
மக்களாட்சி பற்றி
சகிப்புத்தன்மை பற்றி
வகுப்பெடுக்கமுடிகிறது.
கல்லெறியும்
கல்லெறிவதாய்ச் சொல்லப்படும்
சிறுவர்களின்
கண்களைக் குருடாக்குவதை
இரும்புக்கரம் கொண்டு அடக்குதல் என்று
விளக்கமுடிகிறது.
அன்னையர் தம் மக்களுடன்
ஒரே ஒரு நிமிடம்
ஒற்றைத் தொலைபேசியில் உரையாட
அனுமதித்து மேற்பார்வையிடுவதை
மென்மையான அடக்குமுறையென்று
மெச்சமுடிகிறது.

அதனால்தான்
ஒவ்வொருமுறையும்
கோட்சேவால் காந்தியைக்
கைநடுக்கமில்லாமல்
சுடமுடிகிறது.


ஒரு கவிதை – சில கவிஞர்கள்

நவம்பர் 20, 2018

Here with a Loaf of Bread beneath the Bough,
A Flask of Wine, a Book of Verse – and Thou
Beside me singing in the Wilderness –
And Wilderness is Paradise enow.

– Rubaiyat of Omar Khayyam, Edward FitzGerald (1859)

பத்துப் பன்னிரண்டு-தென்னைமரம்
பக்கத்திலே வேணும்;-நல்ல
முத்துச் சுடர்போலே-நிலாவொளி
முன்புவர வேணும்; – அங்கு
கத்துங் குயிலோசை-சற்றே வந்து
காதிற்பட வேணும்;-என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே-நன்றாயிளந்
தென்றல்வர வேணும்.

பாட்டுக் கலந்திடவே-அங்கேயொரு
பத்தினிப் பெண்வேணும்;-எங்கள்
கூட்டுக் களியினிலே-கவிதைகள்
கொண்டுதர வேணும்;-அந்தக்
காட்டு வெளியினிலே,-அம்மா!நின்றன்
காவலுற வேணும்;என்றன்
பாட்டுத் திறத்தாலே-இவ்வையத்தைப்
பாலித்திட வேணும்.

—–

அகத்தூண்டுதல்? தற்செயல்? பலருக்கும் தோன்றும் கரு? எதுவாக இருந்தாலும், ஒரு மகாகவியின் ஒளி இவ்வரிகளில் மிளிர்கிறது. குறிப்பாக, ‘in the wilderness’ – ‘காட்டுவெளியினிலே’ இரண்டுக்கும் உள்ள ஒப்புமை அருமை. உமர்கய்யாம் ஒரு மரக்கிளை கேட்டால், இவன் சற்றே அதிகமாய், காணி நிலமும் ஒரு மாளிகையும் பத்துப்பன்னிரண்டு தென்னைமரமும் கேட்கிறான். நிலவொளியும், குயிலோசையும், இளந்தென்றலும் இருக்கையில் ரொட்டியைப்பற்றிய கவலை இவனுக்கில்லை. பக்கத்திலே பெண்ணும் பாட்டும் வேண்டும் என்று இருவரும் கேட்கின்றனர் – அதிலும் இவனுக்குப் பத்தினிப் பெண் வேண்டும். கவிதை நூல் வேண்டுமென அவன் கேட்க, கவிதைகள் கொண்டுதர வேணும் என்று இவன் வேண்டுகிறான். கூட்டுக் களியில் பிற போதை வஸ்துகள் பற்றிய நினைப்பு பாரதிக்கு இப்போது வரவில்லை. காட்டுவெளியில் களித்திருப்பதே சொர்க்கம் என்று உமர்கய்யாம் நினைக்கிறான். அந்தக் காட்டுவெளியில் களித்திருக்கும்போதும் வையத்தைப் பாலித்திடல் பற்றி பாரதி அக்கறை கொள்கிறான்.

பாரதி உமர்கய்யாமை படித்திருக்கிறானா என்று தெரியவில்லை. (தெரிந்தவர்கள் சொல்லவும். என்னிடமுள்ள கட்டுரைத் தொகுப்புகளிலும், இணையத்திலும் தேடிய வரை எதுவும் கண்ணில் படவில்லை. பாரதியின் முழுத்தொகுப்பில் தேடினால் உறுதிசெய்யலாம்.) விட்மனையும், ஜப்பானிய ‘ஹொக்கு’வையும், நவீனக் கவிதைப் போக்குகளையும் உள்வாங்கியிருந்த பாரதி, முகமது நபி பற்றி உரையாற்றிய பாரதி, பிட்ஸ்ஜெரால்டின் உமர்கய்யாமைப் படித்திருக்கும் வாய்ப்புகள் அதிகம் என்றுதான் நினைக்கிறேன். சாகா வரம் கேட்டு, மரணம் பொய்யாம் என்று சொன்ன பாரதி, நிலையாமையையும் முழுமுற்றான மரணத்தையும் அதிகம் பாடிய உமர்கய்யாமை எப்படி எடை போட்டிருப்பான் என்று தெரியவில்லை.

பாரதியின் சமகாலத்தவரான கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை உமர்கய்யாமைப் பின்னாளில் மொழிபெயர்த்திருக்கிறார். அ.கா.பெருமாள் ஒரு கட்டுரையில் கவிமணியின் கருத்துப்படி தமிழில் ‘பாரதி ஒருவர்தான் மகாகவி’ என்று எழுதியுள்ளார். கவிமணி பாரதியைப் பற்றி இப்பிரபல வரிகளைப் பாடியுமிருக்கிறார்:

பாட்டுக் கொருபுலவன் பாரதியடா! – அவன்
பாட்டைப் பண்ணொடொருவன் பாடினானடா!
கேட்டுக் கிறுகிறுத்துப் போனேனேயடா! – அந்தக்
கிறுக்கில் உளறுமொழி பொறுப்பாயடா!

சொல்லுக்குச் சொல்லழகும் ஏறுமேயடா! – கவி
துள்ளும் மறியைப்போலத் துள்ளுமேயடா !
கல்லும் கனிந்துகனி யாகுமேயடா ! – பசுங்
கன்றும் பால் உண்டிடாது கேட்குமேயடா!

—*—*—*—

உமர்கய்யாமின் இக்கவிதையை மொழிபெயர்ப்பதில் கவிமணி நிறைய சுதந்திரம் எடுத்திருக்கிறார். பிட்ஸ்ஜெரால்டின் ஆங்கில மொழிபெயர்ப்புமே அப்படித்தான் என்கிறார்கள் (wonderfully unfaithful translation).

வெய்யிற் கேற்ற நிழலுண்டு – வீசும் தென்றற் காற்றுண்டு,
கையிற் கம்பன் கவியுண்டு, கலசம் நிறைய மதுவுண்டு,
தெய்வ கீதம் பலவுண்டு, தெரிந்து பாட நீயுண்டு,
வையந் தருமிவ் வனமின்றி வாழும் சொக்கம் வேறுண்டோ?


இதே கவிதையை, ஒமர் கய்யாமை வேறு பல மொழிபெயர்ப்புகள் மூலம் மொழிபெயர்த்துள்ள ஆசை இப்படி மொழிபெயர்த்திருக்கிறார்:

.ஜாடி மதுவும் கவிதை நூலும்

ரொட்டித் துண்டும் வேண்டும் எனக்கு,

பிறகு நீயும் நானும் யாருமற்ற இடத்தில்

சுல்தானின் ராஜ்யத்தை விட அதிக செல்வம் நமதாகும்.


கண்ணதாசனின், ‘ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு, ஒரு கோலமயில் என் துணையிருப்பு’ என்ற வரியும் நினைவுக்கு வருகிறது.



லேலி லாங் சோல்ஜர் கவிதைகள்

நவம்பர் 20, 2018

[லேலி லாங் சோல்ஜர் அமெரிக்காவின் பூர்வக்குடிகளுள் ஒன்றான லகோட்டா இனத்தைச் சேர்ந்த கவிஞர். அவரது Whereas, 38ஆகிய நீள் கவிதைகள் முக்கியமானவை. Whereas மிகவும் அடர்த்தியான கவித்துவ மொழியிலும், 38 மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட, நேரடியான மொழியிலும் நுட்பமான அரசியல் பிரச்சனையை அணுகுகின்றன. Whereas என்ற தலைப்பில் அவரது கவிதைத் தொகுப்பு நூல் வெளிவந்துள்ளது. Whiting Writers விருது வென்றிருக்கிறார்.] – தமிழினி மின்னிதழில் வெளிவந்தது

38

இங்கு வாக்கியம் (sentence) மதிக்கப்படும்.

எழுத்துவிதிகள் வலியுறுத்துவதற்கு மதிப்பளித்து, ஒவ்வொரு வாக்கியத்தையும் கவனத்துடன் அமைப்பேன்.

உதாரணமாக, எல்லா வாக்கியங்களும் பெரிய எழுத்துகளோடு (capital letters) தொடங்கும்.

அதேபோல, ஒரு வாக்கியத்தின் வரலாறு மதிக்கப்படும். ஒவ்வொன்றையும் முற்றுப்புள்ளி அல்லது கேள்விக்குறி என்று பொருத்தமான நிறுத்தற்குறிகளுடன் முடித்து அதன்மூலம் ஒரு கருத்து (கணநேர) முடிவுக்குக் கொண்டுவரப்படும்.

நீங்கள் அறிந்துகொள்ள விரும்பலாம், நான் இதை ஒரு ‘இலக்கியப் படைப்பாகக்’ கருதவில்லை.

வேறு வார்த்தைகளில் சொல்வதானால், சிறந்த கற்பனை மிகுந்த கவிதையாகவோ புனைவாகவோ இதை நான் கருதவில்லை.

வாசிப்பு சுவாரசியத்துக்காக வரலாற்று நிகழ்வுகள் நாடகீயமாக்கப்படமாட்டா.

எனவே, ஒழுங்கு கூடிய வாக்கியத்துக்கான பொறுப்பை நான் உணர்கிறேன்; அது எண்ணங்களைக் கடத்தும் கருவி.

நிற்க; இனி நான் தொடங்குகிறேன்.

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

காசிநகர் தமிழ்ப்புலவர்

திசெம்பர் 24, 2016

குமரகுருபரரின் சகலகலாவல்லி மாலை முழுவதும், பேரூர் கோயிலில், பச்சைநாயகி கருவறை முன்பு, ஒரு கரும்பளிங்குக் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. சென்ற வாரம் அங்கு சென்றிருந்தபோது, அங்கேயே நின்று முழுவதையும் படித்துச் சுவைத்தேன்.

நாஞ்சில் நாடன் குமரகுருபரரை ‘மேஜர் போயட்’ என்று குறிப்பிடுவது மிகவும் பொருத்தமாகத் தெரிந்தது.

காசியில் மடம் நிறுவுவதற்காக அருள் வேண்டி சகலகலாவல்லி மாலையைக் குமரகுருபரர் பாடியதாகக் கூறப்படுகிறது. இப்பாடலின் பல வரிகள், அவர் வேறொரு நவீன காசிவாசிக்கு முன்னோடியாக இருந்திருப்பார் என்று எண்ணவைக்கின்றன.

‘நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்
பாடும் பணியிற் பணித்தருள் வாய்’

‘மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும்என்
பண்கண்ட அளவில் பணியச் செய்வாய்’

ஆகிய வரிகள் பாட்டுத்திறத்தாலே வையத்தைப் பாலித்திட வேண்டும், எமக்குத் தொழில் கவிதை போன்றவற்றை நினைவுபடுத்தின.

இன்றைக்கும் விஷ்ணுபுரம் விழாவில் நாஞ்சில் நாடனுடன் சிறிது நேரம் தனியே உரையாட முடிந்தது. குமரகுருபரர் குறித்துப் பேசினோம். ‘வெண் தாமரைக்கன்றி நின்பதந்தாங்க’ என்று குமரகுருபரர் தொடங்கியுள்ளதையும் வெள்ளைத்தாமரையில் வீற்றிருப்பாள் என்று பாரதி தொடங்கியதையும் ஒப்பிட்டுப்பார்த்தார்.

சகலாவல்லி என்கிற சொற்றொடரே எத்தனை அழகாக அமைந்துள்ளது என்று வியந்தார். குமரகுருபரர் தாமரைக்குக் கஞ்சத்தவிசு என்ற பதத்தைப் பயன்படுத்தியுள்ளதையும், கம்பன் கஞ்சம் என்ற சொல்லைப் எடுத்தாண்டுள்ளதையும் (கஞ்சநிமிர் சீரடியளாகி) குறிப்பிட்டார். [பாரதியும் பாஞ்சாலி சபதத்தில் ‘கஞ்ச மலரிற் கடவுள் வியப்பக் கட்டிநிறுத்தினார் பொற்சபை ஒன்றே’ என்கிறான்.]

முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் வாங்கிவைத்திருப்பதாய்க் கூறினேன். குமரகுருபரனின் பிள்ளைத்தமிழ் நூல்கள் அனைத்தையும் கட்டாயம் படிக்கவேண்டும் என்று அறிவுறுத்தினார்.

படிக்கத்தான் வேண்டும்.


ஜனவரி 15, 2015

கானகத்தின் ஓரத்தில்
சுள்ளி எரித்துக் குளிர்காயும்
சில்லுண்டிகளை வைத்து
எடை போடாதே என்றார்கள்.
சரி, நியாயம் தான் என்று
மையத்தைப் பார்த்தேன்.
கானகத்தை எரித்தவர்கள்.


மாண்ட சொர்க்கம்

ஜனவரி 14, 2015

சொர்க்கம் நிச்சயம்
என்றுதான் சொன்னார்கள்.
ஆனாலும்
அவனே எதிர்பார்க்கவில்லை
சொர்க்கத்துக்கு அனுப்புவார்கள் என்று.

காலணிகளை மட்டும் கழற்றவியலாது என்றார்கள்.
அதனாலென்ன, இங்கே வியர்க்கவா போகிறது என்றான்.

சொர்க்கத்தின் தோட்டத்தில்
எதிரிகளின் குண்டுகளில் சிதறிய
அவனது குழந்தை
விளையாடிக்கொண்டிருந்ததுகண்டு
பரவசமாகி நெருங்கினான்.
அவனது மகளின்
நீட்டிய கரங்களில்
பவளமல்லிப் பூக்களை
அள்ளிப் போட்டாள்
இன்னொரு
சிறுமி.

பள்ளிக்கூடத்து பெஞ்சுக்கடியில்
ஒளிந்திருந்தபோது
பின்மண்டை துளைக்கப்படுமுன்
அவனது செந்நிற பூட்ஸ்களை
மட்டுமே பார்த்திருந்தாள்
அவள்.

கடக்க முடியாத
காலச்சுழலில்
நரகத்தின்
நுழைவாயில்களடைத்த
சுவர்ணப்பரப்பில்
கழற்ற முடியாத
செந்நிறம் படர்ந்த பூட்ஸ்களைப்
பாதங்களில் சுமந்தொளிந்தலைகிறான்.


புழுவையும் பறவையாக்கும்

ஜனவரி 4, 2015

நேற்று ‘எப்போ வருவாரோ’ நிகழ்ச்சியில் ஆண்டாள் பற்றிய உரை. தாமல் ராமகிருஷ்ணன். இதற்கு முன் அவர் பேசியதை வீட்டில் யாரும் கேட்டதில்லை. அழைத்துச்செல்லச்சொல்லி என்னைக் கேட்டால் பிலுக்குவானே என்று அப்பா முறிந்த கையைப் பிசைய முடியாமல் இரண்டு நாட்களாய்த் தவித்துக்கொண்டிருந்தார். சரி ஆண்டாள் ஆயிற்றே என்று பெற்றோர், மனைவி மகளுடன் நானும் ஆஜராகிவிட்டேன். தொடங்கிய கொஞ்ச நேரத்திலேயே எப்போ முடிப்பாரோ என்ற கவலை கவிந்தது. சுற்றியிருந்தவர்களின் லயித்த சிரிப்பு என் கவலையை இரட்டிப்பாக்கியது. இதே கூட்டத்தில் ஜெயமோகன் எப்படிப் பேரூரையாற்றப்போகிறாரோ என்று கவலை பேரருவியானது. இந்த மாதிரியான இக்கட்டுகளைச் சமாளிக்கத்தானே உடன் மகளை அழைத்துச்செல்கிறோம். அவள் நெளிந்துகொண்டிருப்பதைக் கண்டு புதுக்கரிசனம் பொங்க, சூடிக்கொடுத்த சுடர்க்கொடியைப் பாதியில் விட்டுவிட்டு, மகிழ்மலரோடு விளையாடுவதற்காக வெளியேறினேன்.

அவள் கல்லூரியிலிருந்து விடுமுறைக்கு வீடுதிரும்பும் பெண்ணாம். நான் அவ்வளவாக முடிநரைக்காத அப்பா. அவள் வளர்ந்து பெரிய பெண்ணாகிவிட்டதால், தூக்கியணைத்துக் கொஞ்ச முடியவில்லையே என்று என்னைப் பீடித்த துக்கத்தைப் பகிர்ந்துகொண்டேன்; அவள் கைகளை மென்மையாகப் பற்றியவாறு தோட்டத்து வீட்டுக்கு நடந்து சென்றேன். கல்லூரியின் இறுக்கமான விதிகளைப் பற்றிப் பிரஸ்தாபித்தாள். விடுதியின் வசதிகள் பற்றியும், யார் அவள் அறைத் தோழி என்றும் விசாரித்தேன்.

‘நந்தன்,’ என்றாள்.
‘என்னது?’
‘கல்யாணம் ஆயிட்ட மாதிரி boyக்கும் கேர்ல்க்கும் ஒரே ரூம் குடுத்துட்டாங்கப்பா.’
பின் என் அதிர்ச்சியைக் குறைக்கத் தலைப்பட்டாள்.
‘ஆனா, அதெல்லாம் ஒத்துக்க முடியாதுன்னு நான் போராடினேன். அப்புறம் எனக்கு வேற ஃப்ரெண்ட் குடுத்தாங்க. அவ பேரு கிருத்திகா. நல்ல பொண்ணுப்பா.’
‘அப்ப சரி.’
‘எனக்கு மட்டும் தான் கேர்ல் கேர்ல். மத்தவங்களுக்கெல்லாம் உடனே மாத்துல. ரொம்ப நாள் போராடுனதுக்குப் பின்ன இப்பத்தான் மாத்தியிருக்காங்க.’ (மகளைப் பெற்ற அப்பா என்பதால் பாவம் பையன்கள் என்ற கண்ணோட்டம் தோன்றவில்லை.)

என் போராளி மகளை, பசிக்கிறது, அம்மா ஆண்டாள் பேச்சு கேட்கப் போய்விட்டாள் என்று சொல்லி, சமையலறைக்கு அனுப்பி வைத்தேன்.

கல்லை நுணுக்கித் தாளில் சுற்றித்தந்த சப்பாத்தி ரோல் சுவையாகவே இருந்தது.

‘இன்னும் LKG மாதிரி God’s Love பாட்டுத்தான் ப்ரேயர்ல பாடுறாங்க. தமிழ்ப் பாட்டே பாடறதில்லை. தமிழ் மீடியம்னா ஃபீஸ் அதிகம்பா,’ என்று அலுத்துக் கொண்டாள்.
‘சரி வா. நாம இங்க தமிழ்ல கவிதை படிக்கலாம்.’ எதற்கும் இருக்கட்டும் என்று ஒரு பாதுகாப்புக்காக தேவதேவனின் ‘விண் வரையும் தூரிகைகள்’ கவிதைத் தொகுப்பு எடுத்து வந்திருந்தேன். தலைவலியோடு திரும்பிய அம்மாவும் சேர்ந்துகொண்டாள்.

‘கொக்கு’ கவிதை அவளுக்கு விளக்க வாகாக இருந்தது.

நிலைநின்ற நிலையால்
கன்றிச் சிவந்த கால்களும்
இடையறாது கழுவிச் செல்லும் நீரால்
வெண்மை கொண்ட உடலுமாய்
கொக்கு;
நமக்கு தேவதைகளை ஈன்றளித்த தாய்.
சிறகு விரித்தால் வானுலகு
சிறகு குவித்தால் நீர் விரிப்பு.
புழுவையும் பறவையாக்கும்
செயலே உயிர்வாழ்வு.

ஆண்டாள் உரை முடிந்ததும் தரைக்குத் திரும்பினேன்.


ஆவி பறக்க

திசெம்பர் 30, 2014

இதயத்தில் அரும்பியதும்
அவரசரமாய்
விரல்வழி வெளியேறியது.
இன்னும் கொஞ்ச நாள்
இதயத்திலேயே
அடைகாத்திருக்கலாம்.
மடிகணினியின் வெப்பத்திலாவது
பத்திரப்படுத்திச் செப்பனிட்டிருக்கலாம்.

தன்னிச்சையாய்
முகநூலுக்குள் துள்ளிக்குதித்தது.
சூடு ஆறிவிடுமாம்.

இப்போது குறைப்பிரசவமாய்
உங்கள் விழிகளுக்குள்
வழிந்தோடிக் கொண்டுள்ளது.


போதை

திசெம்பர் 17, 2014

இந்த போதை

இத்தோடு தெளியட்டும்.

உன் கோப்பையில்

வேறு கள்

என்று மட்டும்

ஏமாந்துவிடாதே.


அவளோடு விளையாடக் குழந்தைகள் யாருமில்லை

நவம்பர் 10, 2014

தாத்தாவிடம் நீங்க ஸ்டூடன்ட் நான் ப்ரின்சிப்பல் என்கிறாள்
ஆத்தாவை, தாத்தா குறும்பு செய்யாமல் பார்த்துக்கொள் என்கிறாள்
அத்தையும் மாமாவும் சீண்டவும் சண்டையிடவும் வேண்டியதை வாங்கிவரவும்.

காது சரியாகக் கேளாத கொள்ளுத்தாத்தாவுக்குத்
விஸ்தாரமாய்த் தாளம் போட்டுப் பாடிக் காண்பிக்கிறாள்.

கண் பிடுங்கப்பட்ட பார்பி பொம்மை
பள்ளங்களை மறைக்கத் துணி கட்டிக்கொண்டு
நேற்றுவரை காந்தாரியாக இருந்தது;
இன்று கையில் தென்னங்குச்சித் தராசு சகிதம்
நீதி தேவைதையாகிவிட்டது.
விழி என்ற செல்லப்பெயருமுண்டு.

தோட்டம் பார்க்கச் செல்லும்போது
கன்றுக்குட்டிக்குக் கைபேசியில்
தான்வருவதைத் தெரியப்படுத்துகிறாள்.

அவளோடு விளையாடக் குழந்தைகள் யாருமில்லை.
அதைப் பற்றிய கவலை அவளுக்கு மட்டும் இல்லை.
சுற்றியிருந்த எல்லோரையும் எல்லாவற்றையும்
குழந்தைகளாக்கிக் கொண்டாள்.