மகா கணபதிம்

மார்ச் 2, 2018

எங்கள் பயிலகம் ஒரு பரந்த அரச மரத்தடியில் நடக்கிறது. அந்த அரசோடு ஒரு வேம்பும் பிணைந்து வளர்ந்து நிற்கிறது.
அங்கு வினாகயருக்கு ஒரு சிலையும் மேடையும் அமைத்திருக்கின்றனர்.

அங்கு வரும் குழந்தைகள் படிக்கிறார்கள். விளையாடுகிறார்கள். சில சமயம் படம் பார்க்கிறோம். வானம் பார்க்கிறோம். மிகுந்த விருப்புடன் பாடக் கற்றுக்கொண்டு குழுவாகப் பாடுகிறார்கள்.

பாரதியின் ‘எனக்கு வேண்டும் வரங்களை இசைப்பேன் கேளாய் கணபதி’ பாடலை மிக ஆர்வமாகப் பாடுகின்றனர்.

வினோபாவின் சர்வசமயப் பாடலான ‘ஓம் தத் சத்’ பாடுகிறார்கள். அதை ஆங்காங்கே தமிழொலிப்பு கொண்ட வடமொழி/சர்வமொழிப் பாடல் எனலாம்.
அகர முதல எழுத்தெல்லாம் பாடுகிறார்கள்.

எங்களிடம் வருபவர்களில் பெரும்பாலானோர் தலித் மாணவர்கள். தனியார் பள்ளிகளில் ஆங்கில வழியில் படிக்கும் பிற சாதி மாணவர்கள் ஓரிரு வாரங்களிலேயே நின்றுவிட்டார்கள். தனியார் பள்ளியில் படிக்கும் ஓரிரு தலித் மாணவர்களும் அடுத்த சில வாரங்களில் நின்றுவிட்டார்கள். அரசுப் பள்ளியில் படிக்கும் பிற சாதி மாணவர்கள் மேலும் சில வாரங்களில்.

அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழி வந்துவிட்டது. ஒரு சிலர் தமிழ்வழியிலும், ஒரு சிலர் ஆங்கிலவழியிலும் படிக்கிறார்கள். ஐந்தாவதுக்குள் இருக்கும் பெரும்பாலனவர்கள் ஓரளவு நன்றாக ஆங்கிலம் படிக்கப்பழகிவிடுகிறார்கள், எதுவும் புரியாமலே. அண்மையில், வெளிநாட்டிலிருந்து வந்திருந்த குழந்தைகள்-மனோதத்துவ நிபுணரோடு, நாங்கள் சென்றிருந்த ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில், பட்டவகுப்பு மாணவர்கள் ஒருவர்கூட ஆங்கிலத்தில் பேசமுடியவில்லை. நாங்கள் ஆங்கிலம்-தமிழ்-ஆங்கிலம் மொழிபெயர்ப்பு செய்யவேண்டியிருந்தது.

எங்கள் பங்குக்கு எங்கள் குழந்தைகளுக்கு நாங்களும் ஆங்கிலம் கற்றுக்கொடுக்க முயல்கிறோம். ஷேக்ஸ்பியரின் Where the bee sucks பாடுகிறார்கள். Flyய்ய்ய்ய்ய்ய் என்று இழுக்கும்போதும், Merrily, merrily shall I live now என்னும் போதும் ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை படித்துப் பழகாதவர்களும் சேர்ந்துகொள்கிறார்கள்.

செந்தமிழ் நாடெனும் போதினிலே விரும்பிப் பாடுகிறார்கள். ஒளி படைத்த கண்ணினாய் பாடுகிறார்கள்.

மிக அதிக ஆரவாரத்துடன், ‘தன்னன்ன னாதினும்’ என்று பூஞ்சோலைக்கு வரும் ஆத்தாவைக் கூவி அழைக்கிறார்கள். இது என்ன சந்தைக் கடையா, மீன் விற்கிறாங்களா என்று தினமும் ஒரு எட்டு வயதுக் குழந்தை கேட்கிறாள்.

ஒரு சிலர் சர்ச்சுக்கும் போவதாகச் சொல்கிறார்கள்.

இந்தப் பாடல்களையெல்லாம் அவர்களுக்குக் கற்றுத் தரும் எங்கள் மகள், சகவாச தோசத்தால் எந்தக் கடவுளையும் வணங்குவதில்லை. திருமுறை பாடக்கற்றுத்தரும் அவளது ஆசிரியை சொல்லும்போது மட்டும் எப்போதாவது திருநீறு இட்டுக்கொள்கிறாள். நிறைய கல்லூரிகளில் இறைவணக்கம் பாடிவிட்டாள்.

பயிலகம் தொடங்கிச் சில நாட்களில் ஒரு பெரியவரும் வேறு சிலரும், கோயில் மேடையின் மீது அமரக்கூடாது, கீழேதான் அமர வேண்டும் என்று பிரச்சனை செய்ய ஆரம்பித்தனர். “சீட்டாடுவதற்கும் தண்ணி அடித்துவிட்டும் மேடை ஏறினால் பிரச்சனை இல்லையா?” என்று கேட்டோம். ‘ச**** பசங்கள மேல ஏத்திட்டீங்களா?’ என்று பொங்கினார்கள். கொஞ்ச நாள் போராடிப் பார்த்துவிட்டு, ‘நீங்களாச்சு உங்க கோயிலாச்சு, கிடைத்த இடத்தில் இவர்களைப் படிக்க வைப்பது முக்கியம்’ என்று இப்போது கீழேயே அமர்ந்துகொள்கிறோம்.

பொங்கலின் போது எங்கள் குழந்தைகளெல்லாம் புத்தாடையுடனும் முகமெங்கும் அப்பிய புன்னகையுடனும், ஒரு சிலர் பெரியவர்களோடு சேர்ந்து வெவ்வேறு வகைத் தாள வாத்தியங்களை அடித்துக்கொண்டும், ஊர்வலமாக ‘பூ நோம்பி’க்கு மாதங்கியம்மன் கோவிலுக்குச் சென்றார்கள். கோயில் வாசல் ஒரு வடிகட்டியானது. எங்கள் குழந்தைகள் அனேகரும் குதூகலம் குன்றாமல் வெளியில் தான் நின்றனர். குதூகலம் வற்றிப்போய் நாங்களும் வெளியில் நின்றுகொண்டோம்.

கோயில் திருவிழாவில் கலந்துகொள்ளாமல் கிராமத்தோடு ஒன்றவே முடியாது என்று அனுபவசாலி நண்பர்கள் கூறக்கேட்டிருக்கிறேன். இன்றைக்குக் காளியாத்தா கோயில் திருவிழா. மீண்டும் இதே காட்சிகள் அரங்கேறும். சென்ற ஆண்டு பக்கத்து கிராமத்தில் இருந்தோம். மஞ்சள் நீராட்டின் போது, ஊர் முழுக்க வலம் வந்த அம்மன், காலனிக்கு வெளியிலேயே நின்று, எல்லாரும் ஆடிய பின்னர், திரும்பினாள். இங்கும் இவ்வாறான வடிகட்டிகள் மேலும் இருக்கும். யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே என்று கிராமத்தில் எல்லாரும் இருக்கிறார்கள்.

நாங்கள்தான் கலகம் செய்யவும் மனமில்லாமல், கலந்து கொள்ளவும் மனமில்லாமல் கிராமத்துக்குக் கிளம்பிக் கொண்டிருக்கிறோம்.

 

27/Feb/2018

Advertisements

அனுபவக் கல்வி

நவம்பர் 7, 2017

நாராயணன் நாங்கள் குடியிருக்கும் வீடு அமைந்துள்ள தோப்பில் வேலை செய்பவர். சரியாகக் காது கேட்காது. கடும் உழைப்பாளி. காலை ஐந்தரை-ஆறு மணிக்கு வந்து தொழுவத்தைச் சுத்தம் செய்து பால் கறப்பதில் தொடங்கி, மாலை ஆறு மணிக்கு மேல் மாலை கறந்த பாலை பால்க்காரரிடம் ஒப்படைத்துவிட்டுச் செல்வதுவரை ஓயாமல் உழைத்துக்கொண்டிருப்பார்.

எங்கள் கிராமத்தில் பலரும் பாம்புகளைப் பற்றிப் பல கதைகள் சொல்லக்கேட்டிருக்கிறேன். அவர்கள் பார்க்கும் பாம்புகள் எப்போதும் கட்டுவிரியனாகவோ நாகமாகவோ தான் இருக்கின்றன. ஐந்து தலை நாகம் பற்றியெல்லாம் சிறுவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன். உண்மையில் அவர்களுக்குப் பாம்புகளை அடையாளம் காண முடிகிறதா, அல்லது எந்தப் பாம்பைப் பார்த்தாலும் விஷப்பாம்பு என்று அஞ்சுகிறார்களோ என்று எனக்குச் சில சமயங்களில் சந்தேகம் தோன்றுவதுண்டு.

‘நம்முடன் வாழும் பாம்புகள்’ என்று என்.பி.டி. பதிப்பித்துள்ள ஒரு புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்தேன். பிரபல பாம்பு நிபுணர் விட்டேக்கரின் நூலின் மொழிபெயர்ப்பு. கருப்பு வெள்ளைப் படங்களுடன், பாம்புகளுக்கான தமிழ்ப் பெயர்களும் ஆங்கிலப் பெயர்களும், அவற்றைப் பற்றிய ஓரளவு விரிவான குறிப்புகளும் கொண்ட நூல்.

அப்போது அவ்வழியே சென்று கொண்டிருந்த நாராயணனால் பாம்புகளை அடையாளம் காண முடிகிறதா என்று சோதித்துப் பார்க்கலாம் என்று தோன்றியதோ, அல்லது பாம்புப் படங்களைப் பார்ப்பதில் அவருக்கு ஆர்வம் இருக்கும் என்று தோன்றியதோ தெரியவில்லை- அவரிடம் அப்புத்தகத்தில் ஒரு படத்தைக் காண்பித்து இது என்ன பாம்பு என்று சைகையில் கேட்டேன். அவருக்குப் படிக்கத் தெரியாது. படத்தைப் பார்த்த உடன் கண்ணாடி விரியன் என்றார். அதற்கு முன்புள்ள படத்தில் கட்டுவிரியனையும், அதற்கும் முன்பு நாகத்தையும் சரியாகக் காண்பித்தார்.

‘எங்க அப்பா கண்ணாடி விரியன் கடிச்சுத்தான் செத்துப்போனார். அப்போ நான் நம்ம பாப்பா வயசுகூட இருந்திருக்க மாட்டேன். என் கடைசித் தம்பி கைக்குழந்தை,’ என்றார்.

‘அப்போ மழைக்கு வீடெல்லாம் ஒரே சொத சொதன்னு இருக்கும். தூங்கிட்டு இருக்கும் போது ஏதோ கடிச்சுது. ரொம்ப நேரம் எங்க அப்பா ஒன்னும் இல்லேன்னுட்டாரு. அப்புறம்தான் எங்க அம்மா கண்ணாடி விரியனப் பார்த்தாங்க. உடனே அடிச்சுட்டாங்க. பின்னாடியே முருங்க மரத்துகிட்ட இருந்து இன்னும் நாலு பாம்புக வந்தது. அந்தக் காலத்துல ஏது பஸ்ஸூ காரெல்லாம். அதுவும் நடு ராத்திரி வேற. வண்டிகட்டி அவர கொண்டு போறதுக்குள்ள இறந்துட்டாரு. மொழங்காலுக்கிட்ட கடிச்சிருந்தது. அம்மா அவருக்குத் தொடைல இறுக்கிக் கட்டுப் போட்டிருந்தாங்க. புதூர்ல ஒரு அம்மா, அந்த கட்டு எதுக்குன்னு அவுத்தாட்டாங்க. சீக்கிரமா விஷம் தலைக்கேறிடுச்சு.’

‘அதுக்கப்புறம் நாங்க யாரும் படிக்கலை. நான் பெரிசானப்புறம் என்னையும் ஒரு கட்டுவிரியன் கடிச்சிடுச்சி. ஆனா, அப்ப நான் வேலை செஞ்சிட்டிருந்த காட்டுக் கவுண்டர் கிட்ட கார் இருந்துச்சு. உடனே என்னை கேரளாவுல ஒரு கிருஸ்துவங்க ஆஸ்பித்திரி இருக்கு. அங்க கூட்டிட்டுப் போனாங்க. ஒரு கல்லு வைச்சு விஷத்தை உறிஞ்சி எடுத்துட்டாங்க.’

‘அப்புறம் எங்க அண்ணன் பொன்னுசாமி இல்ல…அவரு மாட்டுக்குச் சோளத்தட்ட அறுத்திட்டு இருக்கும் போது, சர்ருன்னு சுத்தி வந்து ஒரு கண்ணாடி விரியன் அவரு மொழங்கால்ல கடிச்சிருச்சு. ராத்திரி எட்டு மணிக்கு கே.பி.கே. பஸ்ஸூலதான் பொள்ளாச்சி கொண்டு போனோம். அப்பவே பத்தாயிரம் ரூபா செலவாச்சு.’

மேலும் சாரைப் பாம்பு பற்றி, நாகப் பாம்பு பற்றியெல்லாம் சொன்னார். அவர் சொன்ன தகவல்கள், உடல்கூறுகள் பெரும்பாலும் அந்தப் புத்தகத்தோடு ஒத்துப் போகிற மாதிரித்தான் இருந்தன.

உண்மையில், எத்தனை புத்தகங்களைப் புரட்டினாலும் என்னால் பாம்புகளைச் சரியாக அடையாளம் காணமுடியும் என்றோ, பாம்பு கடித்தால் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று எனக்குத் தெரியும் என்றோ நம்பிக்கை இல்லை. குழவியோ தேனீக்களோ வீட்டுக்குள் கூடு கட்டிவிட்டால்கூட நாராயணனிடம்தான் ஓடுகிறோம். யார் யாருக்குக் கற்றுக்கொடுக்கிறோம்?

வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் ஊசலாடியபடியே அவர்களுக்கு நிகழும் அனுபவக் கல்வியை எந்தக் கல்விமுறையால் கொடுக்க முடியும்? அவர்களது அனுபவங்களில் இருந்து அவர்களை அந்நியப் படுத்தாமலேனும் இருக்கமுடியுமா?


ஒரு சிறுமியின் மரணம்

ஒக்ரோபர் 14, 2017

எங்கோ நடக்கும் மரணங்களைக் குறித்து ஆவேசமாகப் பொங்கும் மனம் விரைவில் வேறு செயல்களில் ஈடுபட்டுவிடுகிறது. அருகில் நிகழும் மரணம் விளைவிக்கும் குற்றவுணர்வு எத்தனை திசைதிருப்பல்களுக்குப் பின்னும் அகல மறுக்கிறது.

இவ்வாரம், பத்தாவது படிக்கும் மாணவியான நித்யா எங்கள் கிராமத்தில் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டாள். பள்ளியில் ஆசிரியர் அடித்திருக்கிறார் என்பதுதான் ஊரில் பேச்சு. பத்து நாட்களுக்கு முன்பே மருத்துவமனையில் கைக்காயத்துக்கு சிகிச்சை எடுத்துக்கொண்டதாகக்கூட கூறுகிறார்கள். சரியாகப் படிக்காததால், ஆசிரியர் பெற்றோரை அழைத்துவரச் சொல்லிக் கட்டாயப் படுத்தியிருக்கிறார். கூலி வேலை செய்யும் பெற்றோர் வேலைப் பளுவாலோ, அறியாமையாலோ அசட்டையாலோ பள்ளிக்குச் செல்லாமலே இருந்திருக்கின்றனர். ஆசிரியர் தொடர்ந்து கண்டித்தும் எச்சரித்தும் வந்திருக்கிறார். அந்த நாளில், பள்ளிக்குக் கிளம்பி விட்டு, தலைசீவி, பேருந்துக்குக் காசு வாங்கிவிட்டு, பையை வீட்டிலேயே விட்டுவிட்டு அந்தக் கிணற்றில் விழுந்திருக்கிறாள். புதர் மண்டி, அது நாள் வரையில் வற்றிக் கிடந்த கிணற்றில் இந்த வாரம் தான் ஆழ்குழாய்க்குழியிலிருந்து நீர் நிரப்பியிருக்கிறார்கள். அந்த தோட்டத்துக்குச் செல்வதைக் கூட நாங்கள் குடியிருக்கும் தோட்டத்தில் வேலை செய்பவர் பார்த்திருக்கிறார். காலைக் கடன்களுக்காகச் செல்லலாம் என்று நினைத்து ஏதும் கேட்காமல் இருந்திருக்கிறார். பெற்றோர் ரேசன் கடை வரிசையில் நின்றிருந்துவிட்டு, அவளது பையையும் செருப்பையும் வீட்டில் பார்த்ததால், மகளைக் காணோம் என்று எல்லா இடங்களிலுல் தேடியிருக்கிறார்கள். எதேச்சையாக அந்தக் கிணற்றில் எட்டிப் பார்த்த யாருக்கோ பள்ளிச் சீருடை தெரிந்திருக்கிறது. பின் ஊரே கூடிவிட்டிருக்கிறது.

இது எதுவும் தெரியாமல் நாங்கள் ஊரைவிட்டுத் தள்ளியிருக்கும் எங்கள் தோப்பில் இருந்தோம். மாலை அந்தச் சிறுமியின் பிணம் அடக்கம் செய்யப்படும் போதுதான் செய்தி கேள்விப்பட்டு வந்து சேர்ந்தோம்.

‘நாங்களா இருந்திருந்தா வாத்தியாரத் தூக்கிட்டுவந்து வெட்டிப்போட்டிருப்போம்,’ என்கிறார்கள் சில மலையாளிகள்.
‘படிப்பு வரலைன்னா வாத்தியார் அடிக்காம என்ன பண்ணுவாங்க? அதுக்காக இந்தப் பொண்ணு இப்படிப் பண்றதா?’
‘யாரைச் சொல்லி என்ன பண்றது? இவங்க அப்பா அம்மா ஸ்கூலுக்குப் போயிருக்கணுமில்ல? போறதுக்குப் பயந்திட்டு இதுக பாட்டுக்கு வீட்டிலையோ உக்காந்துட்டா என்ன செய்யறது?’
‘ஒண்ணும் இல்லாதவங்கங்கிறாதால ஒண்ணும் செய்யாம விட்டுட்டாங்க. வசதியான குடும்பமா இருந்திருந்தா பெரியா ரகளை ஆயிருக்கும்.’
‘இதுவே எஸ்.சி. பொண்ணா இருந்திருந்தா சும்மா விட்டிருக்க மாட்டாங்க. நடந்திருக்கிறதே வேற.’

எத்தனையோ பேச்சுகள். மரணத்தை நோக்கித்தள்ளும் அளவிற்குப் பள்ளியில் ஏதோ நடந்திருக்கிறது. குழந்தையைக் குறைகூறுவதில் நியாயமில்லை. பெற்றோரைக் குறை சொல்வதிலும் பயனில்லை. நித்யா அமைதியான பெண் என்றும் பயந்த சுபாவம் என்றுமே எல்லாரும் கூறக்கேட்கிறேன். நித்யாவின் அண்ணனும் பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டு பெட்ரோல் பங்கில் வேலை செய்துகொண்டிருக்கிறான்.

காவல்துறை விசாரணையில், ஆசிரியர் கண்டித்திருக்கிறார்/அறிவுறுத்தியிருக்கிறார் என்று மட்டுமே குறிப்பிட்டிருக்கிறார்கள் போலும். அடுத்த நாள் செய்தித்தாள்களில் அவ்வாறே வந்தது.

அடுத்த நடவடிக்கை குறித்து நான் உரையாட முனைந்தபோது, பெற்றோரும் ஊர்ப்பெரியவர்களும் இதைப் பெரிதுபடுத்த விரும்பவில்லை.

ஆசிரியருக்குத் தண்டனை வாங்கித்தந்தாக வேண்டும் என்பதில் ஏனோ எனக்கும் பெரிய வெறி இல்லை. தண்டனைகளில் எனக்குப் பெரிய நம்பிக்கை இல்லை என்பதால் இருக்கலாம். மனமாற்றம் தான் இங்கு அவசியம். இது ஒருவரிடமுள்ள பிரச்சனையல்ல. இன்றும் பெரும்பாலான பள்ளிகளில் குழந்தைகளை அடித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். பல பெற்றோர்களே அடிப்பதை ஊக்குவிக்கிறார்கள். பத்தாம் வகுப்புத் தேர்வில் நல்ல முடிவுகள் வரவேண்டும் என்கிற அழுத்தம் இன்று அரசுப் பள்ளிகளையும் நெருக்கத்தொடங்கிவிட்டது. நன்றாகப் படிக்காத குழந்தைகள், முன்பே வடிகட்டப்பட்டிருக்கவேண்டும் என்று ஆசிரியர்கள் நம்புகிறார்கள். அவர்களைப் பெரும் சுமையாகக் கருதுகிறார்கள்.

எனக்கு நானே என்னென்னவோ சால்சாப்புகளைச் சொல்லிக்கொள்கிறேன்.

இது இன்னொரு குழந்தைக்கு மறுபடி நேர்ந்துவிடக்கூடாது. எவரும் தட்டிக்கேட்க மாட்டார்கள் என்கிற எண்ணம் ஆசிரியர்களுக்கு வந்துவிடக்கூடாது.

அடுத்த வாரம் இன்னொரு நண்பருடன் அந்தப் பள்ளிக்குச் செல்ல இருக்கிறேன். ஆசிரியர்களோடு கலந்துரையாடல், கவுன்சலிங் என்று என்னால் இயன்ற செயல்களைச் செய்வதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக்கொள்ள முனையவிருக்கிறேன்.

எங்கள் தோட்டம் இக்கிராமத்தில் இருந்தாலும், இதுவரை பக்கத்து கிராமத்தில்தான் குடியிருந்தோம். இதே கிராமத்துக்குக் குடிபெயர்ந்து ஒன்றரை மாதங்கள்தான் ஆகின்றன. குழந்தைகளோடு கூடுவதற்கு இங்கு இடம் அமையாததால், இன்னும் பயிலகம் தொடங்கவில்லை. குழந்தைகளோடு பணியாற்றத் தொடங்கவில்லை. ஒருவேளை இந்தத் தாமதத்தைத் தவிர்த்திருந்தால், இந்த மரணத்தைக்கூடத் தவிர்த்திருக்க முடியுமோ என்னவோ? என் தெளிவின்மையும் போதாமைகளும் பெரும் குற்றவுணர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

எங்கள் வீட்டுச் சன்னல்களிலிருந்து பார்த்தால் அந்தக் கிணறு இருக்கும் இடம் தெரிகிறது. அங்கு கிணறு இருப்பதை இதுநாள்வரை நாங்கள் அறியவில்லை. நித்யாவை நாங்கள் சந்தித்ததில்லை. ஆனால், அவள் அந்தக் கிணற்றினை நோக்கிப் பதுங்கிச் சென்று, புதர்களில் சரிந்து விழுந்தபோது நாங்கள் நூறடி தொலைவில் தான் இருந்திருக்கிறோம். அங்கு பார்வை திரும்பியிருந்தால், அவளைக் கண்டிருக்கக்கூடும். அவள் அலறியிருந்தால் கேட்டிருக்கக்கூடும். எங்கள் தோட்டத்துக்குச் செல்லும் வழியில்தான் அவளுக்கு எழுப்பப்பட்ட மண் சமாதி, மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது. அந்தச் சமாதி இனிவரும் மழையில் தரையோடு சமனாகிவிடும். என் மனம் ஒருபோதும் சமாதனமாகப் போவதில்லை.

ஒவ்வொரு முறை ஒரு குழந்தையை நோக்கிக் கையை உயர்த்தும் ஒவ்வொரு ஆசிரியருக்கும் தனது கைகளில் கொலைக்கயிறு இருக்கக்கூடும் என்கிற உணர்வு எழட்டும். அவர்கள் உதிர்க்கும் வசைச் சொற்கள், கொடுக்கும் தண்டனைகள் உயிரைக் குடிக்கக்கூடும் என்பதை உணரட்டும். அன்பை மட்டுமே விதையுங்கள். கல்வி, மதிப்பெண்கள், உங்கள் ஊதியம் எல்லாமே இரண்டாம்பட்சம். நித்யா தேர்வில் தோல்வியடைந்திருந்தால் அடைந்திருக்கட்டுமே. மரணம் எல்லாவற்றையும் அர்த்தமற்றதாக்குகிறது. கல்வி, கல்விமுறை, குழந்தைகள் குறித்து நமது பார்வைகளில், புரிதல்களில் பெருமாற்றங்கள் வந்தாகவேண்டும் – இன்னொரு அனிதாவையோ நித்யாவையோ இழப்பதற்குமுன்.


குழந்தைகளுக்கான புத்தகங்கள்

ஜனவரி 9, 2017

2016ல் படித்தவை என்று நானும் நண்பர்களும் பெரிய பட்டியல்கள் போடுவததைப் பார்த்துவிட்டு மகிழ்மலர், தானும் ஒரு பட்டியல் போட்டு வைத்திருக்கிறாள். மகிழின் சமவயதுக் குழந்தைகளுக்கும் இப்பட்டியல் பயன்படும் என்பதால் இங்கு பகிர்ந்துகொள்கிறேன்.

1. கு. அழகிரிசாமி சிறுகதைகள்
– அன்பளிப்பு
– இருவர் கண்ட ஒரே கனவு
– சாப்பிட்ட கடன்
– ராஜா வந்திருக்கிறார்

[இக்கதைகள் எவையுமே சிறுவர்களுக்காக எழுதப்பட்டவை என்று சொல்லமுடியாது. ஆனால், சிறுவர்களும் படிக்கக்கூடியவை. சாப்பிட்ட கடன் கதையின் முதல் பாதி அவளுக்குச் சற்றே சிரமமாக இருந்தது. அதன் பின் பாதியையும், மற்ற மூன்று கதைகளையும் மிகவும் ரசித்துப்படித்தாள்.]

2. குட்டி இளவரசன் (பிரெஞ்சு நாவல்: அந்த்வான் து செந்த் எக்சுபெரி – தமிழில், வெ.ஸ்ரீராம்)
[குக்கூ நண்பர்கள் சில ஆண்டுகளுக்கு முன்னர் கொடுத்தது. முந்தைய ஆண்டுகளில் இதை நான் அவளோடு சேர்ந்து வாசித்தபோது, அவ்வளவு ஈர்ப்பாக இல்லை; இவ்வாண்டு, அவளே படிக்கும்போது, ஒரு தனி ஈர்ப்பு ஏற்பட்டுவிட்டது; நான் ரசித்த பல இடங்களை அவளாலும் ரசிக்க முடிந்தது – உதாரணமாக, ஒரு வேற்றுக் கிரகத்து வியாபாரி விண்மீன்களை எண்ணிக்கொண்டு, அவற்றைத் தனது சொத்து என்று உரிமை கொண்டாடிக்கொண்டிருக்கும் பகுதி]

3. பனி மனிதன் (நாவல் – ஜெயமோகன்)
[நண்பர் செந்தில் கொடுத்தது. முதல் சில அத்தியாயங்களைப் படித்துவிட்டு, அவளுக்குப் பிடிக்குமோ என்கிற சந்தேகத்தோடுதான் அவளுக்குத் தந்தேன். மிக சுவாரசியமாகவும் வேகமாகவும் படித்து முடித்தாள். நாவலுக்கு இடையிடையே உள்ள பெட்டிச் செய்திகளைப் படிப்பதற்குக் கொஞ்ச காலம் பிடித்தது. ஆனால், அவற்றைப் படிப்பதற்கான ஒரு பிடி கிடைத்தபின், ‘எப்படிப்பா இவருக்கு இதெல்லாம் தெரியும்,’ என்று வியந்துகொண்டே படித்தாள்.]

4. வான்வெளிக் கொள்ளையர் (முத்து காமிக்ஸ்)
[இதுவும் நண்பர் செந்தில் கொடுத்தது. ‘லாரன்ஸ் தப்பிச்சிடுவாரா?’ என்று அடிக்கடி கேட்டபடியே விறுவிறுப்பாகப் படித்தாள்.]

இச்சிறு பட்டியலில் சற்றே பெரிய குழந்தைகள் படிக்கக்கூடிய புத்தகங்கள் என்று அவள் கருதுபவை, அதிலும் அப்பாஅம்மாவின் துணையின்றிப் படித்தவை மட்டுமே இடம்பெற்றுள்ளன. குட்டிக்குட்டி படக்கதைகள் இல்லை…பாரதி புத்தகாலயம், NBT பதிப்பித்த குட்டி நூல்களில் அநேகமாக அனைத்தையும் அவளுக்காகவும் எங்கள் பயிலகத்துக்காகவும் வாங்கியுள்ளோம்; பலவற்றை அவள் படித்தும்விட்டாள். சுப்பாண்டி கதைகள் (தொகுதி 1)தான் அவளாகப் படித்த முதல் பெரிய புத்தகம். அதனை அதற்குப்பிறகும் அவ்வப்போது மறுவாசிப்பு செய்கிறாள்.

எங்கள் பயிலகத்து மாணவர்கள் நிறைய வண்ணப்படங்களுடன் கூடிய சிறிய குழந்தைப் புத்தகங்களைப் புரட்டுவதையே விரும்புகின்றனர். தெனாலிராமன் எல்லா வயதினரிடமும் மிகப் பிரபலம். பெரிய வயது(12-15) மாணவர்கள் அப்துல் கலாமின் அக்கினிச் சிறகுகள் படிக்கவேண்டும் என்று அவ்வப்போது எடுக்கின்றனர்…இதுவரை யாரும் அதிக பக்கங்களைக் கடக்கவில்லை. DK’s Visual Dictionary அவர்கள் அடிக்கடி நாடும் இன்னொரு புத்தகம்; பெரும்பாலும் புரியாமலே படம்பார்ப்பார்கள்; சில சமயம் விளக்கச்சொல்லிக் கேட்பார்கள். தமிழில் அது போல் கிடைத்தால், பிரமாதமாக இருக்கும்.

இந்த மாணவர்கள் மத்தியில்தான் தோழர் இரா.முருகவேளின் முகிலினி வெளியிடப்பட்டது. ‘நம்ம முகிலினி’ என்று ஒவ்வொரு முறையும் பாசத்தோடு அப்புத்தகத்தை அவர்கள் பார்ப்பார்கள். ஒரே ஒருவன் மட்டும், அதன் முதல் அத்தியாத்தைப் படித்துவிட்டு, ‘அண்ணா சூப்பர்’ என்றான். விரைவில் எவரேனும் முழுவதும் படிப்பார்கள் என்று நம்புகிறேன். குழந்தைகள் புத்தகங்களைப் படிக்கும்போது, எழுத்தாளர் யார் என்பதைவிட, அந்தப் புத்தகம் எந்தச் சூழலில் எவர் கொடுத்துக் கிடைத்தது என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகிவிடுகிறது.

நாங்கள் செல்லும் இரண்டு துவக்கப்பள்ளிகளிலும், பாவண்ணனின் ‘யானை சவாரி’ குழந்தைப் பாடல்களுக்கு (பாரதி புத்தகாலயம்) நல்ல வரவேற்பு கிடைக்கிறது. குழந்தைகள் விரும்பிப்பாடுகிறார்கள்.

ஆங்கிலத்தில் பெரியவர்களுக்காக எழுதப்பட்ட பல கிளாசிக்குகள் சிறுவர்களுக்கான சுருக்கப்பட்ட வடிவங்களில் பிரபலமாக உள்ளன. குழந்தைகளுக்காகவென்றே பிரத்யேகமாக எழுதப்பட்ட கதைகளில் கிடைக்காத ஒரு பரந்த அனுபவம் இக்கதைகளில் கிடைப்பதுண்டு. (குழந்தைக் கதைகளில் வேறுவகையான அனுபவம் கிடைக்கும்…அதையும் குறைத்து மதிப்பிடமுடியாது. அவற்றிற்கான தேவையும் உள்ளது.) தமிழில் அப்படியொரு நிலை இல்லை. கு.அழகிரிசாமியின் இச்சிறுகதைகளைப் போன்றவை இந்த இடைவெளியை நிரப்பக்கூடும். நாஞ்சில் நாடனின் ஒரு சிறுகதையையும் மகிழுக்குப் படித்துக் காண்பித்திருக்கிறேன். தேவதச்சனின் கவிதைகள் பலவற்றை அவளோடு படித்தது நான் எதிர்பாராத ஒரு புது அனுபவமாக அமைந்தது; எனக்கும் அவரது கவிதைகளுக்குள் நுழைவதற்கு உதவியாக இருந்தது. அதை அவரிடம் பகிர்ந்துகொண்டபோது பரவசமாகிவிட்டார்.

சென்ற ஆண்டு, மகிழ் உடல்நிலை சரியில்லாமல் இருந்த இரு முறைகளில், ஒரு தடவை பாரதியின் வசன கவிதைகளையும், அடுத்த முறை கல்கியின் பார்த்திபன் கனவில் கணிசமான பகுதியையும் அவளுக்கு உரக்கப் படித்தேன். அதனால் உடல்நிலை சரியானது என்றெல்லாம் கூறமாட்டேன்; ஆனால் மோசமாகவில்லை என்பதற்கு உத்திரவாதம் தரமுடியும். குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் ஆகியவற்றை முழுமையாகப் படித்துக்காட்டும்படி கேட்டிருக்கிறாள். பார்த்திபன் கனவைத் தானே படித்து முடிக்கப்போவதாகக் கூறியிருக்கிறாள். படித்துவிட்டால், பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் என்று பல மாதங்களுக்குக் கல்கியிலிருந்தே பெரிய விருந்து வைத்துவிடலாம்.

Roald Dahl எழுதிய The Magic Finger மற்றும் The Umbrella Man, சேக்ஸ்பியரின் The Merchant of Venice, The Tempest (abridged versions) அவளுக்குப் படித்துக்காண்பித்திருக்கிறேன்; விரும்பிக் கேட்டாள். The Wizard of Oz, Twenty thousand leagues under the Sea ஆகியவற்றை அவளே படிக்க முனைகிறாள். ஏனோ, அவை பல மாதங்களாகப் பாதியிலேயே நிற்கின்றன. (இவ்வரிசையில் பல புத்தகங்களை நண்பர் தியாகு தனது நூலகத்திலிருந்து எங்கள் பயிலகத்திற்கு அன்பளிப்பாக அளித்துள்ளார். பெரிய பொக்கிஷமாக எங்கள் குழந்தைகளுக்காக அவை காத்துக்கொண்டிருக்கின்றன.)

தற்போது, உதயசங்கர் எழுதிய மாயக்கண்ணாடி (தமிழினியிலிருந்து எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணனின் அன்பளிப்பு), மலையாளத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ள காட்டிலே கதைகள் ஆகிய சிறுவர் கதைத்தொகுப்புகளைப் படித்துக்கொண்டிருக்கிறாள்.

(நண்பர்களும் தங்களது பரிந்துரைகளைப் பகிர்ந்துகொண்டால், சிறுவர்களுக்கான ஒரு விரிவான பட்டியல் உருவாகலாம்.)


இதையும் இங்கு சொல்லவேண்டும்: மகிழ், தோட்டத்தில் விளையாடியபடி குதூகலமாகக் கேட்டு, ஒரு சில பத்திகளை மனனம் செய்துகொண்ட ஆங்கிலக் கவிதை, வேர்ட்ஸ்வர்த்தின், ‘The Tables Turned’:

Up! up! my Friend, and quit your books;
Or surely you’ll grow double:Books! ’tis a dull and endless strife:
Come, hear the woodland linnet,
How sweet his music! on my life,
There’s more of wisdom in it.

அம்மாவோடு சேர்ந்து பறவைகளையும் தொடர்ந்து பார்க்கிறாள் என்பது கூடுதல் ஆறுதல்.


ஓர் ஓவியம், ஒரு கொண்டாட்டம்

ஜனவரி 8, 2017

பேயோன் ட்விட்டரில் தொடர்ந்து பல சிறப்பான ஓவியர்களின் ஓவியங்களைப் பகிர்ந்து வருகிறார். என்னைக் கவர்ந்த சில ஓவியங்களை எனது மடிகணினியில் சேமித்து வைத்து, இந்த வாரம் எங்கள் பயிலக்கத்தில் குழந்தைகளுக்குக் காண்பித்தேன்.

முந்தைய நாள் வகுப்பு முடிந்து திரும்பிச்செல்கையில், தனது தம்பியையும், இன்னொரு சிறுவனையும் சாலையில் அடித்துவிட்ட கதையைப் பற்றி நான் கேட்டதால், அதுவரை என் மீது கோபித்துக் கொண்டு பாரா முகத்துடன் அமர்ந்திருந்த ஹசீன், முதல் ஆளாக அந்த ஓவியங்களைப் பார்க்க வந்தான். (என் மகள், ‘அப்பா லேப்டாப்ல ஏதாவது படம் போடறேன்னு சொன்னா, ஹசீனண்ணா சரியாயிடுவாங்க,’ என்று அறிவுரை வழங்கியிருந்தாள்.)

பெரும்பாலான ஓவியங்களைப் பார்த்து முடித்த பின்னர், அவனே ஓர் ஓவியத்தைத் தேர்ந்தெடுத்து (Gabriele Münter “On the Seine”, 1930) வரையத் தொடங்கினான். சஹானாவும், தமிழ்ச்செல்வியும் அவனோடு சேர்ந்து கொண்டு அதே ஓவியத்தை தத்தம் பாணிகளில் வரையத் தொடங்கினர். வண்ணம் தீட்ட, எல்லாரையும் தனது குறும்புகளால் சீண்டிக்கொண்டிருந்த ஜுமானா தனது க்ரையான்களைக் கொடுத்தாள்.

‘அக்கா, பெங்களூரு பிஸ்கட் இருக்காக்கா,’ என்று ஜெய் கேட்க, (அவை என்றோ தீர்ந்து விட்டதால்) வேறு பிஸ்கட்டுகளைப் பகிர்ந்தளித்தோம்.

பயிலகத்தில் புதுக்களை கட்டியது. புகைப்படங்கள் எடுக்கத்தொடங்கினோம். ஒரு குதூகல உணர்வு எல்லாரையும் தொற்றிக்கொண்டது. எதிர்பாராமல் ஒரு கொண்டாட்டம் அரங்கேறியது.


ஒரு கிராமத்து மாணவன்

ஜூலை 19, 2016

கிராமத்தில் எங்கள் பயிலகத்திற்கு வரும் ஒரு மாணவன் பத்தாவது முடித்திருக்கிறான்.மிகக் குறைந்த மதிப்பெண்கள். மேலே படிப்பதற்கான ஆர்வம் இல்லை. ஆனால், நல்ல துடியான பையன். தொழிற்பயிற்சி பெற்று, சீக்கிரம் வேலைக்கு வரவேண்டும் என்று ஆசைப்பட்டான். வீட்டிலோ எப்படியாவது ஒரு டிகிரி வாங்கிவிட வேண்டும் என்று நினைத்தார்கள். எங்களுக்கு அவனை ITIல் சேர்த்தால் நல்லது என்று தோன்றியது. நண்பர் அன்பழகன் ஐடிஐ.யில் பணியாற்றுகிறார். அந்த மாணவனையும் அவனது தந்தையையும் ஐடிஐக்கு அழைத்துச் சென்று நண்பரைச் சந்தித்தோம். அவர் அங்கு படிப்பதன் சாதகபாதகங்களைப் பற்றிக் கூறி, வளாகத்தைச் சுற்றிப் பார்க்க ஏற்பாடு செய்தார். அங்கு சேர்ப்பது என்று ஒருமனதாக முடிவு செய்தோம். நண்பரே விண்ணப்பத்தை இணையத்தில் பூர்த்தி செய்தார். அதற்குப் பிறகும் அடிக்கடி விண்ணப்ப நிலவரம் பற்றி மிகுந்த அக்கறையுடன் அழைத்துக் கூறிவந்தார்.கவுன்சலிங் நடக்க ஒரு மாதத்திற்கும்
மேலாகும், அவனுடைய மதிப்பெண்களுக்கு இடம் கிடைப்பது சற்றே சந்தேகம் என்பதால், தற்காலிகமாகப் பள்ளியில் சேர்ந்து கொண்டான்.

நேற்றைக்கு கவுன்சலிங். சென்ற வாரம் முழுவதும் அதைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தான். இடம் கிடைக்குமோ கிடைக்காதோ, அவன் ஆர்வத்தை எப்படி மட்டுப்படுத்துவது என்று சிந்தித்த வண்ணம் இருந்தோம். வெள்ளிக்கிழைமை கோவைக்கு வந்துவிட்டோம். ஞாயிறு அன்று கைபேசியில் அவன் தந்தையோடு பேசினோம். ஒரு திருவிழாவிற்குப் போக வேண்டியிருக்கிறது, அவன் தனியாகத்தான் வருவான் நீங்களே அழைத்துச்செல்லுங்களேன் என்றார். கொஞ்சம் அதிர்ச்சியடைந்த என் மனைவி, ‘இல்லை, நீங்களும் வாங்க – என்ன கோர்ஸ் கிடைக்கும் என்பதெல்லாம் பார்த்து நிறைய முடிவெடுக்கவேண்டியிருக்கும்’ என்று நிர்ப்பந்தித்தாள். அவர் சரி என்றிருந்தார். ‘கண்டிப்பா முதல் பஸ் பிடிச்சுடுங்க. வர்றதுக்கு எப்படியும் மூணு மணிநேரம் ஆயிடும்.’

நேற்று காலை, கதர் சட்டை அணிந்து கொண்டு கிளம்பினேன். ஐடிஐ செல்லப் பேருந்து நிலையம் நோக்கிச் செல்லும் வழியில், அவர்கள் வந்துவிட்டார்களா என்று உறுதிசெய்துகொள்ள அவன் தந்தையை அழைத்தேன். ‘நானே பேசணும்னு இருந்தங்க. போன்ல காசில்லை. பிரக்காசுக்கு இன்னிக்கு ஸ்கூல்ல ஃபுட்பால் மேட்ச் இருக்குன்னு கட்டாயம் வரணும்னாங்க. நேத்து மேட்ச்ல ஜெயிச்சு பைனல்ஸ் வந்துட்டாங்க. அவன் கிணத்துக்கடவு கிட்ட எங்கயோ விளையாடப் போயிட்டான்.’

வீட்டிற்கு வந்து கதர் சட்டையைக் கழட்டி வைத்துவிட்டு, பியூஷ் மனுஷுக்கான இணையப் போராட்டத்தில் முழுமூச்சுடன் பதிவிட ஆரம்பித்தேன்.


சர்வோதய தின நிகழ்வுகள் – சில நினைவுகள்

மே 30, 2016

சர்வோதயம் மலர்கிறது மார்ச் 2016 இதழில் வெளிவந்த கட்டுரை.


 

சர்வோதய இயக்கத்தில் அர்ப்பணிப்புடன் பங்காற்றி, உயிர்ப்புடன் வழிநடத்திய ஜெகந்நாதன் அவர்களை நினைவுகூரும் கருத்தரங்கம் ஒரு மாறுபட்ட முயற்சியாக ஆண்டுதோறும் (பிப்ரவரி 10,11,12 தேதிகளில்) மேற்கொள்ளப்ப்பட்டு வருகிறது. ஜெகந்நாதன் என்கிற ஒரு தனிநபரைப் பற்றிய அஞ்சலிகளாகவும், பலராலும் மதிக்கப்படுகிற ஒரு தலைவரைப் பற்றிய புகழுரைகளாகவும் மட்டும் குறுக்கிவிடாமல், அவர் விரும்பிய சமூக மாற்றத்திற்கான ஒரு தேடலாக இந்த மூன்று தினங்கள் அமைந்துவிடுகின்றன. இவ்வாண்டு கல்வி, மருத்துவம் ஆகியவை குறித்த கருத்தரங்குகள் நடைபெற்றன. துறை வல்லுனர்களும், இளம் மாணவர்களும் ஒன்றிணைந்து சிந்தித்து, கருத்துகளைப் பரிமாறி, செயலூக்கம் பெற்றுச் செல்வதற்கான ஒரு களமாக இந்த நிகழ்ச்சி அமைந்துவிட்டது.

முதல் நாளன்று, மருத்துவர் பூமிக்குமார் வரவேற்புரையாற்ற, க.மு.நடராஜன் அவர்கள் தொடக்கவுரையாற்றினார்.   ஜகந்நாதன் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். ஆசிரியராக இருந்தபோது ஜகந்நாதன் தனது கைக்கடிகாரத்தை மகாத்மா காந்தியிடம் ஹிரிஜன் சேவை நிதிக்காக நேரடியாக அளித்ததைப் பற்றிப் பேசினார். மு.அருணாசலம் போன்ற பல சர்வோதயத் தலைவர்கள் அவரது மாணவர்களாக இருந்து உருவானவர்கள் என்பதைச் சுட்டிக்காட்டினார். ஜகந்நாதன் ஜவ்வாது மலையில் பழங்குடியினக் குழந்தைகளுக்குக் கல்வி பயிற்றுவித்ததையும் நினைவுகூர்ந்தார்.

அடுத்து பேசிய காந்திகிராம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர், முனைவர் பங்கஜம், பள்ளிமுதல் பட்டப்படிப்புவரை ஆதாரக்கல்வி முறையில் தான் பயின்றதாகக் கூறினார். எதிர்காலக் கல்வித்திட்டம் மாணவர்களிடமிருந்து வரவேண்டும் என்றார். எல்லாருக்குமான கல்வி மறுக்கப்படுவது, தரமான கல்வி எல்லாருக்கும் கிடைக்காதது, ஊரகப் பகுதிகளில் அதிக மாணவர்கள் பள்ளியிலிருந்து விலகிவிடுவது, கற்றவர்கள் வேலைவாய்ப்பில்லாமல் தவிப்பது, திறன்மிக்கவர்கள் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்வது, ஆசிரியர்களின் தரத்தில் வீழ்ச்சி என்று இன்றைய கல்வித்துறை எதிர்நோக்கும் சவால்களைப் பட்டியலிட்டார்.  ஆதாரக் கல்வி முறை காலத்திற்கேற்ற மாற்றங்களுடன் வளர்க்கப்பட வேண்டும்; ஆய்வுகள் பட்டங்களும் பதவியுயர்வும் பெறுவதற்காகவன்றி, செயல்படுத்தப்படக்கூடிய தீர்வுகளை நோக்கியனவாக இருக்க வேண்டும்; தில்லியிருந்து பாடத்திட்டம் வகுக்கப்படாமல், கிராமங்களின் தனித்தன்மைக்கேற்ப உள்ளூரில் வடிவமைக்கப்படவேண்டும்; இளவயதிலேயே திறமைகளை அடையாளம் காணவேண்டும்; ஆரம்பக்கல்விக்கும் முன்பிருந்தே குழந்தைகளும் அதிக அறிவூட்டம் அளிக்கவேண்டும்; மாணவர்கள் தேர்வு செய்யப் பல்வேறு மாற்றுகளை வழங்கவேண்டும்; நீடிக்கத்தக்க வளர்ச்சியை நோக்கி நகர வேண்டும் என்று மேலும் பல கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.

அடுத்து பேசிய ஜெனிஃபர் லேட், அமெரிக்காவில் ‘Class Action’ என்ற அமைப்பை நடத்தி வருபவர்.  பொருளாதார மாற்றங்களும், பருவநிலை மாற்றங்களும் நிகழ்ந்துவரும் சூழலில் உறுதியான சமூகக்கட்டமைப்பினை உருவாக்குவது எப்படி என்கிற கேள்வியை எழுப்பி அதனுள் கல்வியின் பங்கினைப் பற்றிப் பேசினார். கல்வியின் அடித்தளம் என்று ஆறு அம்சங்களை அடையாளப்படுத்தினார்: ஒவ்வொருவருக்குள்ளும் ஓர் ஒளி உள்ளது – கல்வியின் நோக்கம் அந்த ஒளியை வெளிக்கொணர்வது; சூழலுக்கேற்ப, காலத்திற்கேற்ப மாறும் தன்மை; குடும்பம், சமூகம், சரித்திரம் ஆகியவற்றை கணக்கில் கொள்ளும் அமைப்பு சார்ந்த சிந்தனை; பெருமாற்றம் விளைவிக்கும் வழிகளைக் கண்டடைதல்; நீடிக்கும்திறன் மீதான கவனம் – ஏழு தலைமுறைகளின் மீதான பாதிப்பினை மனதில் வைத்து முடிவெடுத்தல்; துணிவு. அதைத் தொடர்ந்து, ஜெனிஃபர் என்னோடும் என் மனைவி நித்யாவோடும் ஓர் உரையாடலை நிகழ்த்தியது இனிய அனுபவமாக அமைந்தது. பெருநிறுவன வாழ்விலிருந்து விலகி கிராமத்திற்கு இடம்பெயர்ந்து விவசாயத்தையும் கிராமக் குழந்தைகளுக்கு கற்பித்தலையும் மேற்கொண்டிருப்பதையும், எங்கள் மகள் வீட்டிலேயே கற்றுக்கொள்வதையும் கவனப்படுத்தினார்.

பின்னர் குழுமியிருந்த அனைவரும் சிறு குழுக்களாகப் பிரிந்து, கல்வி குறித்து உரையாடி, தங்கள் கருத்துகளை முன்வைத்தனர். குழுவிவாதங்களின் சாரமாகப் பின்வரும் கருத்துகள் அமைந்தன:

கல்வி சார்ந்து திட்டமிடுதல் பன்முகப்படுத்தப்படவேண்டும். உள்ளூர் தேவைகளுக்கும் சூழலுக்கும் ஏற்ப அமைய வேண்டும்.
ஆதாரக் கல்வியின் அடிப்படையில் கைத்தொழில் மூலமாகப் பல செய்திகள் கற்றுத்தரப்பட வேண்டும்.
அறம் குறித்தும் விழுமியங்கள் குறித்தும் கவனத்தை ஏற்படுத்தவேண்டும்.
மாணவர்களின் திறன்கள் மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே அளவிடப்படக்கூடாது.
எல்லாருக்கும் தரமான கல்விக்கான சமமான வாய்ப்புகள் வழங்கப்படவேண்டும்.
தாய்மொழி பயிற்று மொழியாக அமையவேண்டும்.
ஆசிரியர்கள் பயிற்சியிலும் மதிப்பிடலிலும் மாற்றங்கள் நிகழவேண்டும்.
அரசுப் பள்ளிகளின் தரம் உயர்த்தப்படவேண்டும்.
அச்சமின்றி எல்லாரும் கற்கும் நிலை உருவாகவேண்டும்.

இரண்டாம் நாளுக்கான கருப்பொருளாக மருத்துவம் அமைய, நிகழ்ச்சிகளை டாக்டர்.சத்யா ஒருங்கிணைத்தார். அரவிந்த் கண்மருத்துவமனையின் நிறுவனர்களில் ஒருவரான கண்மருத்துவர். நாச்சியார் தன் நிறுவனத்தின் சமூகப்பயணம் குறித்து உரையாற்றினார். உலகில் 39 மில்லியன் மக்களும் இந்தியாவில் 12 மில்லியன் மக்களும் கண்பார்வை இழந்துள்ளதாகவும், 80 விழுக்காடு பார்வைக் குறைபாடுகளை மருத்துவம் மூலமாகக் குணப்படுத்த முடியும் என்றார். அரவிந்த் மருத்துவமனை கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள 56 ஆரம்ப சுகாதார மையங்களின் மூலமாக மக்களை நேரடியாகச் சென்றடைவதாகக் கூறினார். நகரங்களிலுள்ள பெருமருத்துவமனைகளைவிட கிராம மையங்கள் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை; அவற்றில் உள்ளூர் மக்களுக்கே பயிற்சி அளித்துப் பணியில் அமர்த்த வேண்டும் என்றார். இலவச மருத்துவம் அளித்தாலும் நோயுற்றவர்களுக்கு அது இலவசமாக இருப்பதில்லை; அந்த உதவியைப் பெற அவர்கள் குறிப்பிடத்தக்க விலையை அவர்கள் வழங்க வேண்டியிருக்கிறது என்று அவர் கூறியது முக்கியமான திறப்பாக எனக்கு அமைந்தது.

மனநல மருத்துவரும் எம்.எஸ்.செல்லமுத்து அறக்கட்டளை நிறுவனருமான ராமசுப்பிரமணியன் சமூக மனநல மருத்துவத்தில் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். இன்றைய சமூகம் மனநிலைக் குறைபாடுகளை ஒரு சாபமாகக் கருதுகிறது; தனிநபர்கள் மட்டுமல்லாமல் குடும்பம் முழுவதும் பாதிக்கப்படுகிறது என்றார். அறியாமையாலும், பயத்தாலும், அதிக கட்டணத்தாலும் மனநல மருத்துவர்களைப் பெரும்பாலானவர்கள் அணுகவதில்லை; ஆனால் ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடித்து சிகிச்சை அளித்தால் எல்லா மனநோய்களும் குணப்படுத்தகூடியவையே என்றார். அவரது அறக்கட்டளை வாயிலாக முசுண்டகிரிப்பட்டி என்ற கிராமத்தில் ஒரு மனநல மருத்துவமனை தொடங்கியதன் பின்னணியைப் பகிர்ந்துகொண்டார். ஆரம்பத்தில் கிராம மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை; ஆனால் அதே கிராமத்தைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரைக் குணப்படுத்தி, அவரையே பணியில் அமர்த்தியபிறகு கிராம மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டது என்றார். ஏர்வாடி தீவிபத்துக்குப் பிறகு, அங்கு இருந்த மத நிறுவனங்களோடு இணைந்து, அவர்கள் மூலமாகவே மனநல மருத்துவர்களிடம் நோயாளிகளை அனுப்பும்படியான ஒரு ஏற்பாட்டினைச் செய்ததாகக் கூறினார். சமூக மாற்றங்களுக்கான நடவடிக்கைகளின் போது, மத நம்பிக்கைகளோடு முரண் ஏற்படும்போது கையாள்வதற்குச் சிறந்த வழியாக இது தெரிந்தது.

நார்வே நாட்டில் ஸ்டாவெங்கர் பல்கலைக்கழக மருத்துவமனையின் பல்பண்பாட்டு மையத்தில் மனநல மருத்துவராக உள்ள ஜோனே சான்சே ஓல்சன் (Jone Schanche Olsen), போரில் பாதிக்கப்பட்டவர்களோடும் அகதிகளோடும் பணிசெய்ததில் கிடைத்த அனுபவங்களைப் பதிவுசெய்தார். எரித்ரியா போன்ற ஆப்ரிக்க நாடுகளிலிருந்து நார்வே போன்ற ஐரோப்பிய நாடுகளுக்கு பல ஆண்டுகளாக அகதிகள் வந்த வண்ணம் உள்ளனர். தற்போது சிரியாவிலிருந்தும் அகதிகள் பெருமளவில் வரத்தொடங்கியுள்ளனர். பல நாடுகளைத் தரை வழியாகவும், நீர் மார்க்கமாகவும் இவர்கள் கடந்து வரவேண்டியுள்ளது. இவர்களில் பலரும் சிறுவர்கள்; பதின்பருவத்தினர். பல கோர சம்பவங்களைக் கண்டதாலும், பாலியல் ரீதியான துன்பங்களை அனுபவித்ததாலும் இவர்களது மனநிலை பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறது. இவர்களோடு பணி செய்ய செவிலியர்க்கும், சமூகப் பணியாளர்களுக்கும் பயிற்சி வழங்கப்படுகிறது. குழு சிகிச்சை வழங்கப்படுகிறது.

டேவிட் ஆல்பர்ட் இந்தியாவிற்கு நாற்பது ஆண்டு காலமாக வந்துகொண்டிருப்பவர்; ஜகந்நாதன்- கிருஷ்ணம்மாள் தம்பதியினரோடு நீண்ட காலமாக நெருங்கிய தொடர்பிலிருப்பவர்; இல்லக்கல்வி (Homeschooling) குறித்து பல நூல்களை எழுதியுள்ளார். Friendly Water for the World என்கிற நிறுவனத்தின் மூலமாக ஆப்ரிக்க நாடுகளிலும் இந்தியாவிலும் சுகாதாரமான குடிநீர் வழங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். கல்விக்கும் சுகாதாரத்துக்கும் குடிநீருக்குமான தொடர்பினைக் குறித்துப் பேசினார். இந்தியாவில் 40 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததைவிட நீரின் தரம் குறைந்துவிட்டது. நிலத்தடி நீர்நிலை தாழ்ந்துவிட்டது. 48 விழுக்காடு குழந்தைகள் பிறப்பின்போது ஊட்டச்சத்துக்குறைவால் வளர்ச்சி குன்றிப் பிறக்கின்றனர். குழந்தைகள் நீரினால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அமெரிக்காவிலும்கூட கறுப்பினக் குழந்தைகளிடம் ஊட்டச்சத்துக் குறைபாடு இந்தியா அளவிற்கே உள்ளது. அவர்களிடம் இறப்புவீதமும் இந்தியாவின் அளவிலேயே உள்ளது. நீர் சுத்திகரிப்பு, நீர் மேலாண்மை குறித்த அறிவினை நமது கல்வி நிறுவனங்கள் வழங்கத் தவறிவிட்டன. ஒவ்வொரு ஆசிரியரும் கழிப்பறைகளைச் சுத்தம் செய்ய வேண்டும்; ஒவ்வொரு குழந்தைக்கும் சுத்தமான நீர் குறித்தும் கைகளைச் சுத்தம் செய்வது குறித்தும் கற்றுத்தர வேண்டும். காந்தி கழிப்பறைகள் தொடர்பாகச் செய்த சோதனைகள் அனைத்தும் சத்திய சோதனைகள். ஊழலும், சுகாதாரமற்ற நிலையை ஏற்றுக்கொள்வதும் மனநலக் குறைபாடுகளே என்று பல விஷயங்களைத் தொட்டுப் பேசிய டேவிட், அவற்றையெல்லாம் நீருடனான தொடர்பால் இணைத்தார்.

மூன்றாம் நாள் (பிப்ரவரி 12) ஜகந்நாதனின் நினைவுநாள். சர்வோதய தினமாகக் கொண்டாடப்படுகிறது. காந்தியப் பணிகளில் ஈடுபட்டுவரும் பல ஊழியர்கள் ஒன்றுகூடும் தினம் இது. கிருஷ்ணம்மாள்-ஜகந்நாதன் பணியாற்றிய நாகப்பட்டினம் பகுதியிலிருந்து பல கிராம மக்களும் வந்து கூடியிருந்தனர். ம.பா.குருசாமி, பாதமுத்து, மார்க்கண்டன், மருத்துவர் ஜீவானந்தம் ஆகியோர் உரையாற்றினர். இனாமுல் ஹசன், ராஜேந்திரன் ஆகியோர் வெள்ள நிவாரணப் பணிகளின் போது ஏற்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்தனர். மருத்துவப் பணியில் நெடுங்காலமாகப் பெருஞ்சேவை செய்துவரும் மருத்துவர் கௌசல்யா தேவி, சர்வோதய இயக்கங்களில் தொடர்ந்து பணியாற்றித் தன் பாடல்கள் மூலம் உணர்வெழுச்சி ஏற்படுத்திவரும் வேங்கையன் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. காந்திகிராம் பல்கலைக்கழகத் துணைவேந்தர் எஸ். நடராஜன் மருத்துவர் கௌசல்யா தேவி குறித்தும், க.மு.நடராஜன் வேங்கையன் குறித்தும் பேசினர்.

இந்த மூன்று நாட்களும் மேலும் உத்வேகத்துடன் நாம் மேற்கொண்டுள்ள பணிகளைச் செய்வதற்கும் இன்னும் பல பணிகளை மேற்கொள்வதற்கும் ஊக்கம் தருவனவாக அமைந்தன. மூன்று நாட்களின் முத்தாய்ப்பாக அமைந்த நிகழ்வு, கடைசி நாள் காலை நிகழ்வுகள் முடிவுக்கு வரும் போது நடந்தது. பலரும் பேசிய பிறகு, உணவு வேளையும் நெருங்க, குழுமியிருந்தவர்களின் கவனம் சற்றே குலையத் தொடங்கியிருந்த போது, கிருஷ்ணம்மாள் ஜகந்நாதன் பேச வேண்டிய தருணம் வந்தது. மேடையில் அமர்ந்திருந்த அவர் எழுந்து வேகமாக நடக்கத்தொடங்கினார்; அறையின் நடுவில் நின்று ஒரு சிறு பிரார்த்தனைக்குப் பின் உருக்கமான பேச்சுத் தமிழில் உரையாடத் தொடங்கினார்.  அவர் தட்டிவிட்ட மைக்கை ஒருவர் பிடிவாதமாக நீட்ட வேண்டியிருந்தது.  என்னருகில் மொழிபுரியாதபோதும், மரியாதை நிமித்தம் அத்தனை நேரம் பொறுமையாக அமர்ந்திருந்த அமெரிக்க நண்பர், ‘This is the way to do it,” என்று எழுந்துவிட்டார். கூட்டம் நடந்த அதே இடத்தில், 1948ல் தான் ஒரு விடுதியில் தலைவியாக இருந்து, அங்கிருந்த ஆதரவற்ற பெண்களைச் செவிலியராக்க உதவியதையும், பல ஆண்டுகளுக்குப் பின்னர் அங்கிருந்தபோது கீழவெண்மணிப் படுகொலை பற்றிக் கேள்விப்பட்டவுடன் அங்கு விரைந்து சென்று, அங்கேயே தங்கி நிலமற்ற தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நிலம் வாங்கித் தரும் பணியைத் தொடங்கியதையும் நினைவு கூர்ந்தார். “பேப்ர்ல வந்துச்சு – எல்லாருக்கும் பொங்கலுக்கு அரிசி, வெல்லம், ஒரு துண்டு கரும்பு….வக்கத்தா போனீங்க, கழுதைகளா? வக்கத்துப் போனீங்களேடா – பத்து ரூபாய்க்கு அரிசியும், வெல்லமும், கரும்பும் வாங்க. இத்தனை வருஷமா ஆட்சியில இருந்தவங்க, அறுபது ஆண்டுகள் இந்த நாட்டை ஆண்டவங்கெல்லாம் என்ன வேலை செய்தாங்க. மக்களுக்கு நிலம் கொடுத்தானா, வீடு கட்டுனானா, அல்லது எல்லாரையும் படிக்க வைச்சானா, மிஞ்சினதெல்லாம் ‘இவன் தாழ்ந்தவன்’னு பேரு,” என்று முடித்துவிட்டு சட்டென்று திரும்பிவிட்டார். அதுவரை நீடித்திருந்த துல்லியமான அமைதி, சில நொடிகள் திக்கற்று நின்று, பின் கரவொலியில் கலைந்தது. அந்த சில கணங்கள், கூட்டத்துள் மின்சாரம் பாய்ந்த உணர்வு எழுந்தது.