2011ல் படித்தவை

திசெம்பர் 31, 2011

சென்ற ஆண்டில் படித்த புத்தகங்களைப் பட்டியலிட்ட போது எழுதியிருந்தேன்,

“2010ன் சிறந்த புத்தகங்கள் என்றெல்லாம் என்னால் பட்டியலிடமுடியாது. அந்த அளவிற்கு, நான் இப்போது அதிகம் படிப்பவனல்ல. வந்தவுடன் ஒரு புத்தகத்தைப் படித்துவிடவேண்டும் என்ற முனைப்புமில்லை. அதன் தேவையும் எனக்குப் புரிவதில்லை. இதுவரை வந்த அற்புதமான நூல்கள் எத்தனையோ இன்னும் படிக்கப்படாமல் இருக்கும்போது, இப்போது வந்தவை இன்னும் சில காலம் காத்திருக்கலாம் என்ற தள்ளிப்போடும் மனப்பான்மையாகவும் இருக்கலாம்.”

அதே நிலைமையும் எண்ணமும் தாம் இவ்வாண்டும். 2011ல் எழுதப்பட்ட புத்தகங்கள் எவற்றையும் படிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் எனக்கிருந்த நேரத்திற்கு ஓரளவு நிறைவாய், நிறையப் படித்திருக்கிறேன்.

இப்புத்தகங்களை ஒற்றை வரியில் விமர்சிக்கும் நோக்கமெல்லாம் எனக்கில்லை. அது சாத்தியமுமில்லை. இவை என்மீது ஏற்படுத்தியதாய் நான் இப்போது நினைக்கிற பாதிப்பினைப்பற்றி மட்டுமே எழுத விழைகிறேன்.

1. தலைகீழ் விகிதங்கள் – நாஞ்சில் நாடன்

நாஞ்சில் நாடனுடைய முதல் நாவல். சொல்ல மறந்த கதை திரைப்படமாய்ப் பார்த்தபோது பிடிக்கவில்லை. படிக்கும்போது கிடைக்கிற அனுபவம் முற்றிலும் வேறாக இருந்தது. தன்தகுதிக்கு மீறி மணம்புரிந்து கொள்ளும் ஓர் இளைஞனின் வாழ்க்கையை அழகாய், திரைப்படமளவிற்கு ஆர்ப்பாட்டாமில்லாமல், அமைதியாய்ச் சொல்லியிருக்கிறார் என்றே தோன்றியது. அவரைச் சென்ற ஆண்டில்தான் படிக்கத்துவங்கினேன். இன்னும் படிக்க வேண்டும்.

2. மரப்பசு – தி.ஜானகிராமன்

தி.ஜானகிராமனின் நடைமீது எனக்கு எப்போதும் ஒரு மோகமுண்டு. இந்த நூலிலும் அதற்குக் குறைவில்லை. ஆனாலும் இது ஒரு முழூமையான புத்தகமாய்த் தோன்றவில்லை. அதிர்ச்சி மதிப்பிற்காகச் செயற்கையாய்ப் பல நிகழ்ச்சிகளும் பாத்திரப்படைப்புகளும் திணிக்கப்பட்டதாகவே தோன்றியது. அவர் மீது எழுந்த விமர்சனங்களுக்கு உக்கிரமான ஒரு எதிர்வினையாக இதை எழுதியிருப்பாரோ என்றும் தோன்றுகிறது.

சிலிர்ப்பு போன்ற அவர் சிறுகதைகளைப் படித்து அவர்மீதுள்ள மோகத்தை மீட்டெடுத்துக் கொண்டேன்.

3. கம்பாநதி – வண்ணநிலவன்

இதற்குமுன் வண்ணநிலவனை நான் படித்ததில்லை. அதைச்சொல்வதற்கு இப்போது வெட்கமாகயிருக்கிறது. எவ்வளவு அற்புதமான எழுத்து. முதலில் மிக எளியநடைபோல் தோன்றினாலும், படிக்கப்படிக்க அதிலுள்ள வசீகரம் என்னை உள்ளே இழுத்துக்கொண்டது. எஸ்தர், மிருகம் போன்ற சிறுகதைகளிலும் அதே வசீகரிக்கும் எழுத்து.

4. உறுபசி – S.ராமக்கிருஷ்ணன்

நான் படிக்கும் முதல் எஸ்.ரா.வின் நாவல். அவ்வளவாய்ப் பிடிக்கவில்லை. நிறையப் பிழைகள் நிறைந்திருந்ததாக நினைவு. அவையே எழுத்தோடு ஒன்ற முடியாமற்செய்திருக்கலாம்.

அண்மையில் உயிர்மையில் படித்த ஒரு சிறுகதையிலும் அதே போன்ற பாத்திரப்படைப்பு. இது எஸ்.ரா.விற்குப் பிடித்த களம்போலும்.

5. Portrait of the Artist as a Young Man – James Joyce

இவ்வாண்டு படித்த ஒரே ஆங்கில நாவல். ஆங்கிலத்திலும் தமிழுலும் எத்தனை பேருக்கு முன்னோடியான எழுத்து என்பது படிக்கும்போது புரிந்தது. Ulysses ஏற்கனவே பாதிபடித்திருப்பதால் என்ன எதிர்பார்ப்பது என்பது தெரிந்திருந்தது. ஆனால் Dubliners மட்டும் படித்துவிட்டு இந்த நாவலைப் படிப்பவர்களுக்கு முற்றிலும் புதிய ஜாய்ஸ் தென்படுவார்.

6. பாரதி சில நினைவுகள் – யதுகிரி அம்மாள்

பாரதியை அருகிலிருந்து அறிந்துகொள்ள வாய்ப்புகிடைத்த ஒரு சிறுமியின் நினைவுகளை அப்படியே பாதுகாத்துவைத்து, எழுத்தில் பதிந்திருக்கிறார் யதுகிரி. பாரதி என்கிற மனிதனை, அவனது ஆளுமை சுற்றியிருந்தவர்கள் மீது செலுத்திய பாதிப்பைப் புரிந்துகொள்ள உதவும் முக்கியமான படைப்பு.

7. மகாகவி பாரதியார்  – வ.ரா

பாரதியைப் பற்றிய இன்னொரு சரிதை. அவரை இன்னொரு கோணத்திலிருந்து அணுக உதவும். ஒரு தேர்ந்த எழுத்தாளரின் கைவண்ணத்தில், இதுவே நான் பாரதியைக்குறித்துப் படித்துள்ள சிறந்த படைப்பு.

8. தலைமுறைகள் – நீலபத்மனாபன்

அன்றாட வாழ்வனுபவங்களை மட்டுமே வைத்து ஒரு மிகப்பெரிய புதினத்தை உருவாக்கமுடியும் என்பதற்கு இது சாட்சி. பெண்பார்த்தல், திருமணம், மணமுறிவு, பிள்ளை பிறத்தல், பெயர்வைத்தல் என்று அன்றாட நிகழ்வுகளும், சடங்குகளும் தொகுக்கப்பட்டு, தமிழ்வாழ்வைப்பற்றிய ஓர் ஆவணமாய் அமைந்துவிட்டது. ‘ஹம் ஆப் கே ஹேன் கோன்’ போன்ற திரைப்படங்களுக்கான டெம்ப்ளேட் இந்த நாவலில் உள்ளது. யதார்த்தமான சித்தரிப்புகளினூடே, யதார்த்த மொழியில், நுட்பமாய் எழுதப்பட்டிருப்பதே இதை அத்தகையத் திரைப்படங்களிலிருந்து வேறுபடுத்தி இலக்கியமாக்குகிறது.

9. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் – ஜெயகாந்தன்

ஹென்றி நாம் எங்குமே பார்த்திருக்க முடியாத மனிதன். முழுக்க முழுக்க ஒரு எழுத்தாளனின் கற்பனையிலிருந்து மட்டுமே உதித்திருக்கூடிய ஒரு பாத்திரம்.  எந்த சூதும் தீதும் அற்ற, தெரியாத, ஒருவன் இருக்கமுடியுமானால் அவன் ஹென்றியாக இருக்கவே வாய்ப்புள்ளது. பலராலும் ஜெயகாந்தனின் மிகச்சிறந்த நாவலாகக் கருதப்படுகிற நூல் இது. ஆயினும் அவரது சிறுகதைகள் தருகிற நிறைவினை என்னால் அவர் நாவல்களில் அடைய முடிவதில்லை.

10. சாயாவனம் – சா.கந்தசாமி

இயற்கைக்கும் மனிதனும் நடக்கும் போராட்டத்தை இதைவிட அழகாய் யாரும் எழுதிவிடமுடியுமா என்று தெரியவில்லை. கவித்துவமாய் வரிகின்றன பல காட்சிகள். உணர்வு பெற்று எழுந்தும் விழுந்தும் வருகின்றன மரங்களும், செடிகளும், கொடிகளும், காடும்.

11. புயலிலே ஒரு தோணி – பா.சிங்காரம்

என்ன எழுத்து! என்ன நுட்பம்! தன்னைச் சுற்றியுள்ள உலகை இந்த மனிதர் எப்படி இவ்வளவு தெளிவாகக் கவனித்து நினைவில் நிறுத்தி எழுத்தில் வடித்திருக்கிறார்? பாதிதான் படித்து முடித்திருக்கிறேன்…ஆனால் இந்த நாவல் ஏற்படுத்தியிருக்கிற பிரமிப்பு, அதற்குள்ளாக இந்தக் குறிப்பை எழுத வைத்திருக்கிறது. ஜாய்ஸ் புத்தகத்தை இந்தப் பட்டியலில் உள்ளடக்கியதற்கும் அதுதான் காரணம். அதற்கு எவ்வகையிலும் குறைந்ததல்ல, பாண்டியனின் நினைவுகளாய் இவர் பதிப்பவை. நிச்சயமாய் நான் படித்துள்ள ருஷ்டி, நைப்பால் படைப்புகளைவிட பலபடிகள் மேலாகவே இந்த நூலை வைப்பேன்.

ஆனால் இதை எழுதியவரின் இரண்டாவதும் கடைசியுமான நூல் இதுதான் என்பதும், நம்நாட்டின் தலைசிறந்த படைப்பாளிகளுள் ஒருவர் என்கிற அங்கீகாரம் கிடைக்காமலே முதுமையடைந்து மறைந்தார் என்பதும் நம் தமிழ் இலக்கியச்சூழலின் நிலையைத் தெளிவாய் வெளிப்படுத்துகின்றன.

2012ஐ ஒரு சிறந்த படைப்பின் துணையோடு துவங்குகிறேன்.

நீண்ட இடைவெளிக்குப்பின் இந்த ஆண்டு தமிழில் ஓரளவு நிறையப்படிக்கமுடிந்திருக்கிறது. இவையன்றி பல சிறுகதைகள் – என்னிடமுள்ள தொகுப்புகளிலும், இணையத்திலும் – அசோகமித்திரன், தி.ஜானகிராமன், கு.அழகிரிசாமி, கு.ப.ரா., வண்ணிநிலவன், வண்ணதாசன், சுந்தர ராமசாமி, பூமணி, ஜெயமோகன், சுஜாதா போன்ற பலருடைய அருமையான பல சிறுகதைகளைப் படித்தேன். பிரமிள், சுகுமாரன், கல்யாண்ஜி, மனுஷ்யபுத்திரன், தேவதேவன், தேவதச்சன் போன்றவர்களின் பல அற்புதமான கவிதைகளையும் படித்தேன்.

வண்ணதாசனின் முன்னுரைகளுக்காகவே அவருடைய எல்லா புத்தகங்களையும் வாங்கவேண்டும் என்றுள்ளேன். அவரது ஒவ்வொரு வரியின் சுகத்திலும் லயித்துப்போன நாட்கள் பலவுண்டு.

எல்லாவற்றிக்கும் மேலாக என்னுடன் எப்போதும் உடனிருக்கும் பாரதியும் வள்ளுவனும்.

தமிழின் தலைசிறந்த எழுத்தாளர்களின் துணையோடு, 2011 இனிதே நிறைவடைகிறது.

2012ல் தமிழோடான என்னுடைய தொடர்பு வலுப்பட உள்ளது என்கிற இனிய எதிர்பார்ப்போடு, இந்தப் புத்தாண்டை வரவேற்கிறேன்.


E=mc2, பிரமிள், ஜப்பான்

மார்ச் 13, 2011

E=mc2 – நேற்று காலை பிரமிளின் இந்த அற்புதமான கவிதை படித்தேன். பின் இணையம் எங்கும் ஜப்பான் அணுமின் நிலைய வெடிப்பு குறித்த செய்திகள் இரைந்து கிடந்ததைக் காணும்போது, அந்தக் கவிதை இன்னும் ஆழமாய் என்னுள் பதிகிறது.

ஜன்ஸ்டீனின் கண்ணீர்த்துளியில்

தெறிக்கிறது பரிதி.

பிரமிள் வாழ்ந்த காலத்தில், சில காலம் நானும் வாழ்ந்திருக்கிறேன். ஆயினும் அவன் இருந்தவரை அவன் பெயரே தெரியாமல் இருந்திருக்கிறேன் என்னும்போது கூசுகிறது. அதுவும் நல்லதுதான்…தருமு சிவராமு என்கிற மனிதன் குறித்து யாரும் நல்லவிதமாய் எழுதியிருப்பதாய்த் தெரியவில்லை. அந்த மனிதன், பிரமிள் என்கிற கவிஞனை அடையத் தடையாக இருந்திருக்கக்கூடும்.

இப்போதுதான் புதுக்கவிதை வெளியில் புரளத் தொடங்கியிருக்கிற எனக்கு, பாரதிக்குப்பின் மிகப் பெரிய கவிஞனாய் பிரமிள்தான் தெரிகிறான். உயிரோடு இருக்கிற காலத்தில் நாம் எந்த இலக்கியவாதியைப் போற்றியிருக்கிறோம்? பிரமிளின் இந்த வரிகள் அவனுக்கும் கச்சிதமாய்ப் பொருந்துகின்றன –

நேற்று நேற்று என்று

இறந்த யுகங்களில்

என்றோ ஒருநாள் அவிந்த

நக்ஷத்ர கோளங்கள்

ஒளிவேகத்தின்

மந்தகதி தரும் நிதர்சனத்தில்

இன்றும் இருக்கின்றன –

காலமே வெளி!

இன்று கண்டது

நேற்றையது,

இன்றைக்கு நாளைக்கு.

 

இதோ கவிதை…’கொங்குதேர் வாழ்க்கை – பகுதி 2′ என்கிற ராஜமார்த்தண்டனின் அற்புதமான கவிதைத் தொகுப்பிலிருந்து…இந்த நூல் புதுக்கவிதையின் அகநானூறு – அவசியம் அனைவரும் வாங்கவேண்டியது.

E=mc2

ஒற்றைக் குருட்டு

வெண்விழிப் பரிதி

திசையெங்கும் கதிர்க்கோல்கள்

நீட்டி

வரட்டு வெளியில் வழிதேடி

காலம் காலமாய்

எங்கோ போகிறது.

‘எங்கே?’

என்றார்கள் மாணவர்கள்.

ஒன்பது கோடியே

முப்பதுலெச்சம் மைல்

தூரத்தில்

எங்கோ

ஒரு உலகத்துளியின்

இமாலயப் பிதுக்கத்தில்

இருந்து குரல்கொடுத்து,

நைவேத்தியத்தை

குருக்கள் திருடித் தின்றதினால்

கூடாய் இளைத்துவிட்ட

நெஞ்சைத் தொட்டு

‘இங்கே’ என்றான் சிவன்.

‘அசடு’ என்று

மாணவர்கள் சிரித்தார்கள்.

 

ஒரு குழந்தை விரல்பயிற்ற

ஐன்ஸ்டீனின் பியானோ

வெளியாய்

எழுந்து விரிகிறது.

மேஜையில் அக்ஷர கணிதத்தின்

சங்கேத நதி!

மனித மனத்தின் மணற்கரையில்

தடுமாறும்

ஒரு பழைய பிரபஞ்ச விருக்ஷம்.

நதி பெருகி

காட்டாறு.

காலமும் வெளியும் ஒருமித்து

ஓடும் ஒற்றை நிழலாறு.

ஒரு புதிய பிரபஞ்சம்.

நேற்று நேற்று என்று

இறந்த யுகங்களில்

என்றோ ஒருநாள் அவிந்த

நக்ஷத்ர கோளங்கள்

ஒளிவேகத்தின்

மந்தகதி தரும் நிதர்சனத்தில்

இன்றும் இருக்கின்றன –

காலமே வெளி!

 

இன்று கண்டது

நேற்றையது,

இன்றைக்கு நாளைக்கு.

இக்கணத்தின் கரையைத்

தீண்டாத

இப்புதிய புவனத்தின் பிரவாகம்

வேறொரு பரிமாணத்தில்.

 

விரிந்து

விண்மீன்களிடையே

படர்ந்த நோக்கின்

சிறகு குவிகிறது.

பிரபஞ்சத்தின்

சிறகு குவிந்தால்

அணு.

அணுவைக் கோர்த்த

உள் அணு யாவும்

சக்தியின் சலனம்.

அணுக்கள் குவிந்த

ஜடப்பொருள் யாவும்

சக்தியின் சலனம்.

ஒளியின் கதியை

ஒளியின் கதியால்

பெருக்கிய வேகம்

ஜடத்தைப் புணர்ந்தால்

ஜடமே சக்தி!

மெக்ஸிக்கோவில்

பாலைவெளிச் சாதனை!

1945

ஹிரோஷிமா நாகசாகி.

ஜடமே சக்தி.

கண்ணற்ற

சூர்யப் போலிகள்.

கெக்கலித்து

தொடுவான்வரை சிதறும்

கணநேர நிழல்கள்.

பசித்து

செத்துக் கொண்டிருக்கும்

சிவனின்

கபாலத்துக்

கெக்கலிப்பு.

 

இசைவெளியின் சிறகுமடிந்து

கருவி ஜடமாகிறது.

 

பியானோவின் ஸ்ருதிமண்டலம்

வெறிச்சோடிக் கிடக்கிறது.

உலகின் முரட்டு இருளில்

எங்கோ ஒரு குழந்தை அழுகிறது.

ஜன்ஸ்டீனின் கண்ணீர்த்துளியில்

தெறிக்கிறது பரிதி.

ஒரு கணப் பார்வை.


பாரதி – சில இணைப்புகள்

செப்ரெம்பர் 24, 2008

 Subramania Bharati’s Letters: a treasure trove

Early views of nationalist-poet Subramania Bharati

“Without social reform, our political reform is a dream, a myth, for social slaves can never understand political liberty.” – காந்தியும் பாரதியும் ஒரே தளத்தில்தான் சிந்தித்திருக்கிறார்கள்.

 மகாகவி பாரதியின் கடிதங்கள்

பாரதியின் மொத்த எண்ணங்களின் சாரம் இந்தக் கடிதத்தில்…உரைநடையிலும் கவிதையின் காரம் மாறாமல்:

“தம்பி – நான் ஏது செய்வேனடா

தமிழை விட மற்றொரு பாஷை சுகமாக இருப்பதைப் பார்க்கும் போது எனக்கு வருத்தமுண்டாகிறது. தமிழனை விட மற்றொரு ஜாதியான் அறிவிலும் வலிமையிலும் உயர்ந்திருப்பது எனக்கு ஸம்மதமில்லை. தமிழச்சியைக் காட்டிலும் மற்றொரு ஜாதிக்காரி அழகாகயிருப்பதைக் கண்டால் என் மனம் புண்படுகிறது

தம்பி – உள்ளமே உலகம்


ஏறு 
ஏறு ஏறு  மேலே மேலே மேலே

நிற்கும் நிலையிலிருந்து கிழே விழாதபடி கயிறுகள் கட்டி வைத்துக் கொண்டு பிழைக்க முயற்சி பண்ணும் பழங்காலத்து மூடர்களை கண்டு குடல் குலுங்கச் சிரி

உனக்குச் சிறகுகள் தோன்றுக. பறந்து போ 
பற. பற – மேலே மேலே மேலே
**

தம்பி – தமிழ்நாடு வாழ்க என்றெழுது  

தமிழ்நாட்டில் நோய்கள் தீர்க் என்றெழுது

தமிழ்நாட்டில் வீதி தோறும் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் மலிக என்றெழுது

அந்தத் தமிழ் பள்ளிக்கூடங்களிலே நவீன கலைகளெல்லாம் பயிற்சி பெற்று வளர்க என்றெழுது

தமிழ்நாட்டில் ஒரே ஜாதி தான் உண்டு. அதன்பெயர் தமிழ் ஜாதி. அது ஆர்ய ஜாதி என்ற குடும்பத்திலே தலைக்குழந்தை என்றெழுது

ஆணும் பெண்ணும்  ஒருயிரின் இரண்டு தலைகள் என்றெழுது

அவை ஒன்றிலொன்று தாழ்வில்லை என்றெழுது

பெண்ணைத் தாழ்மை செய்தோன் கண்ணைக்குத்திக் கொண்டான் என்றெழுது

பெண்ணை அடைத்தவன் கண்ணை அடைத்தான் என்றெழுது

தொழில்கள், தொழில்கள் என்று கூவு

தப்பாக வேதம் சொல்பவனைக் காட்டிலும் நன்றாகச் சிரைப்பன் மேற்குலத்தான் என்று கூவு.

வியாபாரம் வளர்க, யந்திரங்கள் பெருகுக

முயற்சி ஒங்குக. ஸங்கீதம், சிற்பம் யந்திர நூல், பூமிநூல், வான நூல், இயற்கைநூலின் ஆயிரம் கிளைகள் இவை தமிழ் நாட்டிலே மலிந்திடுக என்று முழங்கு

சக்தி சக்தி சக்தி என்று பாடு “


பசுமை நிறைந்த எதிர்காலம்

ஓகஸ்ட் 4, 2008

Go green என்று உலகம் சொல்லளவில் நின்று தவித்துக்கொண்டிருக்கையில், இந்தியா ஏன் பசுமையை அரவணைக்கக் கூடாது என்று உலகுக்கு நியாயப் படுத்திக்கொண்டிருக்கையில், நம் முன் எழுவது நாளை உலகம் எப்படி பாதுகாக்கப்படும் என்கிற மலைப்பு. அந்த மலைப்பையும், தவிப்பையும் தள்ளிவைத்து ஆராய்ந்தால் கண்முன் விரிவது ஒரு மாபெரும் வாய்ப்பு.

 நீராவியின் உந்துதலில் வளர்ந்தது ஐரோப்பா. பெட்ரோல் இயந்திரங்களின் உந்துதலில் வளர்ந்தன அமெரிக்கா, ஜப்பான், வளைகுடா. நம் முன் அப்படியொரு வாய்ப்பு இப்போது கிடக்கிறது.

உலகப் பொருளாதரத்தின் அடுத்தகட்ட வளர்ச்சியை, தலைமை நிலையை நிர்ணயிக்கப்போவது ‘பசுமை’ தொழில்நுட்பங்கள். நிலக்கரியோ, பெட்ரோலோ, அணுசக்தியோ பெருமளவு நம்மிடம் இல்லாத இயற்கைவளங்கள். ஆனால் பசுமைத் தொழில்நுட்பங்கள் இயற்கை வளங்களை அழிக்காமல் உருவாக வேண்டியவை என்கிற காரணத்தாலேயே, ஒளியையும், காற்றையும் இதுவரை பயன்படுத்தாத இன்னபிறவற்றையும் கட்டுப்படுத்தத் தெரிந்த எவர் வேண்டுமானாலும் இத்துறைகளில் முன்னேறலாம். நாமும் தான்.

இத்துறைகளில் வளர்ந்த நாடுகள் இன்னமும் பெருவளர்ச்சி அடையவில்லை. பெருமளவு பணம் இன்னும் முதலீடு செய்யப்படவில்லை. ஓரளவு எல்லோரும் சம அளவு வளர்ச்சி(யின்மை)யில் தான் இருக்கிறோம். யார் முதலடி எடுப்பது என்று போராடிக்கொண்டிருக்கற மற்றவர்களுக்கு முன்னர் நம் முழுக் கவனமும் இங்கே திரும்பினால், நாளை உலகம் நமது கைகளில்.

பசுமையான கனவுகள் கண்டுதான் பார்ப்போமே. அணுசக்தித் தீண்டாமையிலிருந்து மீளப்போகிறோம். உலகிலேயே மலிவான பெட்ரோல் வாகனங்கள் செய்ய முயற்சித்து ஓரளவு வெற்றியும் கண்டுவிட்டோம்.  இவற்றோடு, அல்லது இவற்றிற்குப் பதிலாக, உலகிலேயே மலிவான (சூரியஒளி மாதிரி) மாற்றுசக்தி வாகனங்கள் செய்து பார்ப்போமே! மாற்று முறைகளில் மின்சாரம் உற்பத்தி செய்து பார்ப்போமே. வெற்றிபெற்றால் உலகம் நம்மைப் பின்பற்றும். இதைவிடப் பெரிய பொருளாதார வாய்ப்பு நமக்குக் கிட்டாது. இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் அமெரிக்கா இருந்த நிலையில் இன்று நாம் நிற்க முடியும் – அரசும், தனியார் நிறுவனங்களும், விஞ்ஞானிகளும் முனைப்போடு மனம் வைத்தால். 21ம் நூற்றாண்டின் ஹென்றி ஃபோர்ட் நம்மிடையே எங்கோ உலவிக்கொண்டிருக்கக்கூடும்; அவரை வளர விடுவோம்.


சிலம்பொலியும், குற்றாலச் சாரலும் – ஓர் இனிய இசைவிருந்து

ஜூலை 31, 2008

சிலப்பதிகாரம் என்று இசைத்தட்டில் பெயர் பார்த்ததும், என்ன, என்று ஆர்வமாய்ப் எடுத்தேன். அட்டையில் மருத்துவர் ராமதாசுவின் படம் பார்த்ததும், வேண்டாம், வைத்துவிடலாம் என்றுதான் முதலில் தோன்றியது – மருத்துவர் அய்யாவின் சாதி அரசியல் மீது உள்ள வெறுப்பில்.  ஆனாலும், பின்னட்டையில் பாடகர்கள் தேர்வில சாதிச்சாயம் தெரியாததால், ஆர்வம் மேலோங்க சிலப்பதிகாரத்தையும் அருகிலிருந்த குற்றாலக்குறவஞ்சியையும் (அதிலும் மருத்துவர் ராமதாசுவின் படம்)  வாங்கிவந்தேன். இரண்டும் பொங்கு தமிழ் அறக்கட்டளையின் வெளியீடுகள்.

என் வெறுப்பை ஒதுக்கிவிட்டு நடுநிலையில் பாடல்களைக் கேட்கத் துவங்கினேன். இனிய ஆச்சர்யம் காத்திருந்தது. இரண்டுமே தரமான படைப்புகள். தமிழில் இத்தகைய முயற்சிகள் வெகு சில. இளையராஜாவின் திருவாசகத்தோடு ஒப்பிட முடியாது என்றாலும், அந்த வகை முயற்சி இது. தமிழ் இலக்கியங்களை நவீன ஒலிகளில் நேர்த்தியாய் வெளிக்கொணர முடியும் என்பதற்கு இன்னுமோர் எடுத்துக்காட்டு.

இசையமைப்பாளர் ந.கோபிநாத் ஓர் அரிய கண்டுபிடிப்பு. பழந்தமிழ்ப் பாடல்களை அழகாய் இக்கால இசைக்குள் கட்டுப்படுத்துவது கடினம். பாரதியின் பாடல்களையே இளையராஜா, விசுவநாதன் தவிர பலரும் சிதைத்திருக்கிறார்கள். நவீன இசை என்பது கீபோர்ட், தபலா, சலிப்பூட்டும் பழைய தூர்தர்ஷன் இசையைத் தாண்டியதில்லை. கர்நாடக இசையில், திருப்புகழ் தவிர வேறு பாடல்கள் இடம்பெறுவது அரிது. தமிழ்ப் பாடல்கள் இசைக்குப் பொருந்தாது என்று அவர்களாய் முடிவுகட்டிக் கொண்டிருக்கிறார்கள் போலும்.

இத்தகு சூழலில், இதுவரை கேட்டறியாத ஓர் இசையமைப்பாளர் இனிய பாடல்கள் மூலம் ஒரு புதிய பாதையில் பயனிக்கறார். தமிழ்ச் சொற்கள் இதமாய் செவிகளுக்கு விருந்தாயின. மிகக்குறைந்த நேரமே நீடித்ததுதான் பெரும் குறை. மற்றபடி இப்படியோர் முயற்சியில் சிறுபிழைகள் மனதில் நிற்பதில்லை.

இக்கட்டுரை எழுதும் போதே எஸ்.ராமகிருஷ்ணின் இதே ஏக்கம் குறித்துப் படிக்க நேர்ந்தது. இளையராஜா இன்னமும் இந்தப் பக்கம் முழுக்கவனத்தை திருப்ப மறுத்தாலும், ந.கோபிநாத் அந்தக் குறையைக் கொஞ்சம் குறைத்திருக்கிறார். இருந்தாலும் இளையராஜாவின் கைவண்ணம் பட்டால் இன்னும் எத்தனை திருவாசகங்கள் உருவாகக்கூடும்! ஹீம்…

இம்முயற்சிக்காக ந.கோபிநாத்தைப் போற்றுதும். பொங்கு தமிழ் அறக்கட்டளையைப் போற்றுதும். இத்தோடு நின்று விடாதீர்கள். உங்கள் இலக்கிய-இசைப் பயணம் இன்னமும் நீளட்டும்.


காலச் சுழலில் சிக்கிய கர்நாடகஇசை

ஜூலை 17, 2008

ஓர் அழகான கலை, பழம்பெருமைகளுக்குச் சிறைபட்டதாலேயே வளராமல் தேக்கமடைந்துவிட்டது. ஒவ்வொரு முறை கர்நாடக இசைப்பாடல்களைக் கேட்கிற பொழுதும், இசைப் பாமரனான, என்னுள் எழுகிற முதல் எண்ணம் இது.

சந்தேகமில்லாமல் நம் இசை, உலக இசைக்கு இணையானது; பல வகைகளில் மேலானதும் கூட, என்றே தோன்றுகிறது. சில நாட்களாய் இரண்டையும் கேட்கிறேன், இரண்டுமே பிடித்திருக்கிறது என்பதால் சமநிலையில் எழுந்தது இந்த ஞானம். வேறு எந்தத் துறையைக் குறித்தும் நாம் இவ்வளவு உறுதியாய்க் கூறமுடியாது.

ஆனாலும், நம் நாட்டிலேயே மிகக் குறுகியவட்டத்திற்குள் சிறைபட்டிருக்கிறதே இக்கலை, ஏன்?

முதல் காரணம், மாற்று மொழியின் ஆதிக்கமே. இசை கற்க விரும்புகிற இளைஞர்கள், குழந்தைகள் உடன் வேறு மொழியையும் கற்க வேண்டியது எதற்காக? மொழி புரியாமல் என்னைப் போன்றவர்களும் எத்தனை நாட்கள் இந்த இசையை ரசிக்க முடியும் – ஒவ்வொரு முறையும் சில நாட்களில் சலிப்பு ஏற்பட்டு விலகியே சென்றிருக்கிறேன்.

அடுத்தது, புதிய முயற்சிகள் மிகக் குறைவாக இருப்பதால். தியாகராஜருக்கு மேல் சிறப்பாய் யாரும் படைக்க முடியாது என்று நினைத்தால், முடியாது தான். ஆனால், எத்தனை நாட்கள், புரியாமல் தியாகராஜரையே கேட்பது. இளையராஜாவின் படைப்புகளை மான்டலின் ஸ்ரீநிவாஸ் வாசிப்பது எந்த வகையில் அதற்கு குறைந்தது என்பது எனக்கு இன்னும் புரியவில்லை. பாலமுரளிகிருஷ்ணா அவரறிந்த தமிழில் எழுதியுள்ள பாடல்கூட அவரது கணீர் குரலில் அற்புதமாய்த்தான் இருக்கிறது. கல்கியின் எளிமையான பாடல்கள் எம்.எஸ். குரலில் வேறு தளத்திற்கு இட்டுச்செல்லப்படுகின்றன. காந்தி பற்றிய ஒரு பாடல், ‘வையத்தை வாழவைக்க வந்த மகாத்மா’ – அவர் இறந்த போது எழுதப்பட்டிருக்க வேண்டும் – இவ்வளவு சோகத்தை, உறுக்கத்தை, இவ்வளவு இனிமையாய் வெளிப்படுத்த முடியுமா என்று வியக்க வைக்கிறது. ஆனால் இப்படிப்பட்ட முயற்சிகள் மிகக்குறைவானவையே. பெரும்பாலும், கர்நாடக சங்கீதத்தில், தரமான புதிய படைப்புகளுக்கு இடமில்லை.

ஒரு நல்ல இசைக்கலைஞர், ஒரு நல்ல தமிழ்க் கவிஞரோடு இணைந்தால் உருவாகக்கூடிய சாத்தியங்கள் பிரமிக்கவைக்கும். ‘திருவாசகம்‘ கேட்டவர்களுக்குப் புரியும் (மேற்கத்திய இசை என்றாலும் கூட, வேர்கள் இங்குதானே). புத்தம்புதிய தமிழ்ப்படைப்புகளோடு மட்டும் ஒரு முழுக் கச்சேரி நிகழ்கிற நாளன்று, சில நூற்றாண்டுகளைக் கடந்து நம் இசை நிகழ்காலத்திற்கு வந்தடையும். தமிழர்கள் குத்துப்பாடல்களை மட்டுமே படைக்க, சுவைக்கத் தெரிந்தவர்கள் அல்ல என்பது கண்டறியப்படும்.


ஆனந்த விகடனா ஆயத்துலா கொமேனியா?

பிப்ரவரி 15, 2008

இணையத்தின் மட்டற்ற சுதந்திர உணர்வுக்கு விகடன் சவால்விட்டிருக்கிறது. ஜெயமோகனின் ‘ஆனந்த விகடனின் அவதூறு’ பதிப்பைப் பார்த்ததும் புரிந்தது. விகடன் இணையதளத்தில் (கட்டுரை முழுவதும் பதிவுசெய்யாமல் படிக்க முடியாது என்பதால்)   தலைப்பு மட்டும் தென்பட்டது; மிரட்டியது.

இது ஓர் ஆபத்தான அபத்தத்தின் உச்சம். எம்.ஜி.ஆர், சிவாஜி பற்றிய ஒரு சாதாரண அங்கதப்பதிப்பினைத் தாக்கித் தலைப்புச் செய்தியாக்குவதற்கு ஒரே உள்நோக்கம் தான் இருக்க முடியும் – ஜெயமோகனுக்கு எதிராய் எதிர்ப்பலை கிளப்பிக் குளிர்காய்ந்து, அதிகப் பிரதிகள் விற்கவேண்டும். இது ஜெயமோகனுக்கு மட்டும் எதிரான செயலில்லை, இணையத்தின் வலிமை உணர்ந்த வலியின் விளைவு. எழுத்தாளர்கள் இணையத்தின் மூலம் நேராய் மக்களைச் சென்றடையத் துவங்கிவிட்டால் பத்திரிக்கைகளின் தாக்கமும் தேவையும் குறைந்துவிடாதா?

இணையத்தில் யார்வேண்டுமானாலும், யாரைப்பற்றியும், எதுகுறித்தும் எதுவும் எழுதலாம். பத்திரிக்கைகளின் கட்டுப்பாடுகளுக்கும், வியாபர நிர்ப்பந்தங்களுக்கும் உட்படவேண்டிய கட்டாயமில்லை. தமக்குத் தேவையானதை வாசகர்கள் தேர்ந்தெடுத்துப் படித்துக்கொள்வார்கள். எழுத்தாளனும் வியாபர நோக்கங்களுக்கு விடுப்புகொடுத்துவிட்டுத் தன் ஆழ்மனதின் கதவுகளைக் கவலையில்லாமல் திறந்துவிட முடியும். பத்திரிக்கைகளில் செய்ய முடியாத பல்வேறு முயற்சிகளை, சோதனைகளைச் செய்துபார்க்க முடியும். இப்படி விளைந்ததுதான் ஜெயமோகனின் பதிப்பும். அதன் தரத்தைப் பற்றி நான் இங்கு அலசப் போவதில்லை. எம்.ஜி.ஆர், சிவாஜியைப் பிடிப்பதும் பிடிக்காததும் அவர் சொந்த விருப்பு. அவர்கள் பற்றி எழுதுவது அவர் உரிமை. இணையம் அளித்த சுதந்திரம். ஏற்பதும் நிராகரிப்பதும் வாசகன் உரிமை. 

அந்தப் பதிப்பை எம்.ஜி.ஆர், சிவாஜிக்கு நேர்ந்த இழிவாய்ச் சித்தரித்து, அளவுக்கதிகமான முக்கியத்துவமளித்து sensationalize செய்வது அரசாங்க அடக்குமுறையை விடவும் கீழ்த்தரமானது. வாய்ப்புக்காகக் காத்திருக்கும் அரசியல் இயக்கங்கள் ஏதேனும் வன்முறையில் இறங்கினால் விகடன் பொறுப்பேற்குமா? இத்தனை ஆண்டுகள் இவர்கள்தான் கருத்து சுதந்திரத்திற்காகக் கொடிபிடித்திருந்தவர்களா? நம்ப முடியவில்லை.

MF ஹூசைனுக்கும், சல்மான் ருஷ்டிக்கும், தஸ்லீமா நஸரீனுக்கும் மத வெறியர்களால், அரசியல் அடிப்படைவாதிகளால் விளைந்த இன்னல்களில் சிறுபகுதியேனும் ஜெயமோகனுக்கு விகடனால் விளைந்தால் அது விகடனுக்கு பெரும் இழுக்கு. பின் விகடனுக்கும் கொமேனிக்கும், டொகாடியாவுக்கும் என்ன வேறுபாடு? தலைவர்கள், கலைஞர்கள், கடவுள்கள், எவருமே விமர்சனங்களுக்கும் விகடத்துக்கும் அப்பாற்பட்டவர்கள் அல்ல என்பது விகடனுக்குத் தெரியாதா?

பிற பதிப்புகளில், ஜெயமோகன் போன்ற தரமான இலக்கியவாதிகள் சிறுபத்திரிக்கைகளுக்குள் சிறைபட்டிருப்பதால் மக்களைச் சென்றடைவதில்லை என்று எழுதியிருக்கிறேன். இச்செயல் பிரபல இதழ்களிலிருந்து அவர்களை மேலும் அந்நியப்படுத்தும். இழப்பு தமிழ் மக்களுக்குத்தான்.

இதிலிருந்து விளையக்கூடிய ஒரே  நன்மை – மேலும் பல எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் இணையத்தின் ஈர்ப்பும் சாத்தியங்களும் புரியும்.


நவயுக விலங்குப் பண்ணைகள்

ஜனவரி 29, 2008

பல நிகழ்வுகளைக் காணும்போது,  ஜார்ஜ் ஆர்வெல்லின் Animal Farm புத்தகம் அடிக்கடி நினைவுக்கு வருகிறது.

Animal Farmல், மனிதர்களின் கொடுங்கோலாட்சியைச் சகிக்கமுடியாத விலங்குகள், புரட்சி செய்து, மனிதர்களை விரட்டிப் பொதுவுடைமை ஆட்சியை நிறுவுகின்றன. அந்தப் பொதுவுடைமை அரசு மெதுவாய், பன்றிகளின் தலைமையில் இன்னொரு கொடுங்கோலாட்சியாய் மாறுகிறது. இறுதியில் பன்றிகள் மனிதரைப் போலவே இருகால்களை உயர்த்தி நடக்கக்கூடக் கற்றுக்கொள்கின்றன.

ரஷ்யப் புரட்சியையும், ஸ்டாலினின் எழுச்சியையும் நையத் தாக்கிய இந்த நையாண்டிக்கதை, அறுபது ஆண்டுகளாகியும் அதன் இயைபை இழக்கவில்லை. அதிகாரம் படைத்தவன் மனிதனாகினும், பன்றியாகினும் ஒரே விளைவுதான் – அதிகாரம் தவறாகவே பயன்படுத்தப்படுகிறது. ஏராளமான உதாரணங்கள்.

ஹிட்லரின் கொடுமைகளின் விளைவாய் உருவான இஸ்ரேல், அவனுக்கு இணையான கொடுமைகளைத் தொடர்ந்து புரிந்துவந்திருக்கிறது.

அப்கானிஸ்தானில் யார் ஆட்சிக்கு வந்தாலும் பலபடிகள் பின்னோக்கியே நகர்ந்திருக்கிறார்கள். ரஷ்சிய ஆக்ரமிப்பில் ஆட்சி செய்த நஜிபுல்லா ஆகட்டும், பின் அமெரிக்க ஆதரவில் எழுந்த முஜாகிதின்களாகட்டும், அவர்களை வீழ்த்திவந்த தாலிபன் ஆகட்டும், இப்போதைய அமெரிக்கக் கைப்பாவைகளாகட்டும் ஒருவருக்கொருவர் மிஞ்சிய கொடுங்கோலர்கள்.

தமிழகத்தில் பார்ப்பன எதிர்ப்பில் துவங்கிய திராவிட இயக்கம் வெற்றிபெற்று, பல நூறு சாதிச்சங்கங்களிடம் தமிழ்ச் சமுதாயத்தை ஒப்படைத்துவிட்டது.

காஷ்மீரில் இஸ்லாமியத் தீவிரவாதத்திற்கு எதிராய் குஜராத்தில் இந்துக்களின் தீவிரவாதம்.

இலங்கையில் சிங்கள இனவெறிக் கொடுமைக்கு மாற்றாய், புலிகளின் வன்முறை வெறியாட்ட முறைகள்.

வங்கத்திலும், கேரளத்திலும் இடதுசாரிகள் எந்தவிதத்திலும் மாறுபட்ட ஆட்சிகளை அளித்தவிடவில்லை. நந்திகிராம் – ‘முதலாளித்துவ’ இடதுசாரி சர்வாதிகாரத்திற்கான இன்னொரு எடுத்துக்காட்டு. 

இந்தியர்களும் ஆதிக்கம் செலுத்தும் வாய்ப்பு கிடைத்தால், ஆங்கிலேயரைவிட அதிகமாகவே செலுத்துவோம் என்பதற்கு பணபலம் படைத்த இந்திய கிரிக்கெட் வாரியம்(BCCI) சாட்சி. ஹர்பஜன்-சிமண்ட்ஸ் இனவெறிக் குற்றச்சாட்டை நியாயமான முறையில் அணுகி, உண்மையைக் கண்டறிந்து நிலைநாட்டாமல், அதிகாரத்தையும், மிரட்டலையும் பயன்படுத்துவது வெள்ளையரிடம் நாம் கற்றுக்கொண்ட பாடம்.

காணுமிடமெங்கும் இன்னும் ஏராள விலங்குப் பண்ணைகள்.


Elitist இலக்கியவாதிகளும் இலக்கிய வளர்ச்சி(யின்மை)யும்

ஜனவரி 25, 2008

தமிழ் இலக்கியம் மக்களைச் சென்றடையாமல், மிகச்சிறிய வட்டங்களுக்குள் சிறைபட்டுக் கிடப்பது வருத்தத்திற்குரியது. இதற்கு முதன்மையான காரணம் தமிழ் இலக்கியவாதிகளிடம், கர்நாடக சங்கத வித்வான்களிடம் போல், பரவலாகக் காணப்படுகிற ஒரு வகையான தீவிர brahminical elitist mentality தான்.

தமிழ் வாசகர்கள் வட்டம் ஆங்கில உலகமளவிற்கு விரிவானதல்ல. ஆனால் இங்குள்ள இலக்கியப் பாகுபாடுகள் ஆங்கிலத்தைவிடவும் அதிகம் என்றே தோன்றுகிறது. முற்போக்கு இலக்கியம், தலித் இலக்கியம், வட்டார இலக்கியம், தனித்தமிழ் இலக்கியம், திராவிட இலக்கியம், இடதுசாரி இலக்கியம், பெண்கள் இலக்கியம்  என்று எண்ணற்ற பிரிவுகள். இத்தனை வகைகள் இருப்பதில் தவறில்லை, ஆனால் ஒவ்வொரு வகையினரும் அவரவர்க்கென ஒரு வட்டமைத்து, அந்த வட்டத்திற்குள்ளேயே சிறைபட்டு, வெளியிலிருப்பவர்களை மட்டமாய் நினைப்பது ஒட்டுமொத்த இலக்கிய வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாகவே தெரிகிறது.

பல சமயங்களில் வர்த்தக வெற்றியை, இலக்கியத் தோல்வியாகவே கருதுகிறார்கள். வர்த்தக வெற்றி மட்டுமே இலக்கியத் தரத்திற்கு அளவுகோளாக முடியாது. அதேசமயம், எதிர்மறையாய், பெரும் வர்த்தக வெற்றி பெறுகிறவர்களை அந்த ஒரே காரணத்திற்காகத் தாழ்த்தி எடைபோடவும் கூடாது.

எடுத்துக்காட்டு – வைரமுத்துவிற்கு ஒரு சாராரிடம் கிடைக்கிற அவமரியாதை. இதோ ஜெயமோகன்  – ”’பில்லா’ கறுப்புக்கண்ணாடியை மாட்டிக்கொண்டு முப்பது பாகையில் முகம் திருப்பி ‘தமிழின் நிகழ்காலம்’ [இறந்தகாலம் முதல்வர் கருணாநிதியா?] என்று சுவரொட்டி அடித்து வெட்கமில்லாமல் தெருத்தெருவாக ஒட்டும் வைரமுத்து எப்படி உணர்வாரோ தெரியவில்லை, நல்ல வாசகராக நான் அறிந்த நா.முத்துக்குமார் அதைக் கண்டால் கூசிப்போவார் என்றே நினைக்கிறேன். [இதழில் எனக்குப்பிடித்த இரண்டு கவிதைகளில் ஒன்று அவர் எழுதியது] ”.

இலக்கியத்திற்கும் விளம்பரம் தேவைதான். விளம்பரம் கிடைப்பதாலேயே (சுய விளம்பரமா, தெரியவில்லை) அவரது இலக்கியத்தரம் ஏன் தாழ்ந்து போவதாய் நினைக்க வேண்டும். அவரது படைப்புகளில் நிறைய சேறிருந்தாலும், சேற்றை மறைக்குமளவிற்குச் செந்தாமரைகளும் நிறைந்துதானிருக்கின்றன. படைப்பாளிகள் அத்தனை பேருக்கும் இதே கூற்று ஓரளவு பொருந்தும்.

தனிமனித விருப்புவெறுப்புகளை ஒதுக்கிவிட்டு, பலவகைப்பட்ட படைப்புகளையும் சுவைத்துப்பாராட்டுகிற பக்குவம் நாம் வளர்த்துக் கொள்ளவேண்டும். ஆங்கிலத்தில் Naipaul, Rushdie போன்ற தனிமனிதர்கள் மீதும், அவர்கள் கருத்துகளுடனும் உடன்பாடில்லாதவர்கள்கூட அவர்களின் படைப்புகளுக்குத் தரவேண்டிய மதிப்பைத் தருவதைப் பார்க்கிறோம்.

எனக்கு Tolkien, Walter Scottம் பிடிக்கும், Franz Kafka, Albert Camusம் பிடிக்கும். அதேபோல கல்கியின் பொன்னியின் செல்வனும் பிடிக்கும், சுந்தர ராமசாமியின் ஜே.ஜே சில குறிப்புகளும் பிடிக்கும். ஜெயமோகனின் விஷ்னுபுரமும் பிடிக்கும், வைரமுத்துவின் சிகரங்களை நோக்கியும், ஏன், பல நயமான திரைப்பாடல்களும் பிடிக்கும். இவற்றில் முரண்பாடுகள் இருப்பதாய்த் தோன்றவில்லை.

ஜெயகாந்தன், சுஜாதா போன்றவர்கள் பிரபல வார இதழ்களில் எழுதியதாலேயே தரம்தாழ்ந்தவர்களாய்ச் சில சிற்றிதழ்கள் சித்தரிப்பதைப் பார்த்திருக்கிறேன். விந்தையான வாதம்தான். பத்துப்பேர் மட்டுமே படிப்பதுதான் இலக்கியம் என்று எண்ணுகிற இவர்களின் மனோபாவத்தைத்தான் brahminical elitist mentality என்று கூறினேன், ஜாதி அடிப்படையில் அல்ல (பார்ப்பனன் என்பதால் பாரதியை மட்டம்தட்டுகிறவர்களும் நம்மில் உண்டு!).

இலக்கியம் மக்களைச் சென்றடைய வேண்டும். அப்போதுதான் மென்மேலும் வளரும். அதற்காக நவீன வியாபர உத்திகள் தேவைப்பட்டால், அவற்றையும் பயன்படுத்தித்தான் பார்ப்போமே.  நாம் வறுமையால் இறந்த பாரதிகளையும் புதுமைப்பித்தன்களையும் பார்த்தது போதும்.  இலக்கியத்தால் செழிப்படைந்து, இன்னும் உற்சாகமாய் இலக்கியத்தைச் செழிப்படையச் செய்கிற நிலை, உலகெங்கிலும் போல் இங்கும், உதயமாகட்டும்.


இந்தியாவில் ஒரு Google உருவாகுமா?

ஜனவரி 24, 2008

இந்தியர்கள் கணிப்பொறியுலகில் பெரும் வெற்றிகளைக் குவித்திருக்கிறோம் என்பது உண்மைதான். ஆனாலும் மென்பொருள் சேவைகளில் (software services) செழிப்பாய் வளர முடிந்த அளவிற்கு, ஏன் இன்னமும் Google, Microsoft போல் மென்பொருள் ஆக்கப்பொருள்களையும் (software products என்பதற்கு என்னால் இயன்ற மொழிபெயர்ப்பு), கருவிகளையும் (software tools) இந்திய நிறுவனங்களால் உருவாக்கி உலக அரங்கில் விற்க முடியவில்லை என்பது விந்தையான புதிர்.

பத்தே ஆண்டுகளில் Google போன்ற நிறுவனங்கள், ஆண்டாடுகளாய் இந்தியத் தொழில்நுட்ப நிறுவனங்கள் எவருமே எட்டியிராத எல்லைகளைக் கடந்தது எப்படி? இந்த வெற்றிகளில் இந்திய வல்லுனர்களுக்குப் பெரும் பங்கு இருப்பதும், அமெரிக்க இந்தியர் சிலர் Hotmail, i2 மாதிரியான நிறுவனங்களை அங்கே உயிர்ப்பித்திருப்பதும் அடுத்த புதிர். இன்று அனைத்து மேனாட்டு ஆக்கப்பொருள் நிறுவனங்களும் (Microsoft, Intel, Google, TI, i2, SAP, Oracle)  ஆராய்ச்சிப் பணிகளை இந்தியாவிற்குப் பெருமளவு இடம்பெயர்த்துவிட்டன.

இத்தகைய நிறுவனங்களை நிறுவுவதற்குப் பெரும் முதலீடும் தேவையில்லை. மிகச் சிறிய அளவில், பல தருணங்களில் கார் கொட்டகைகளில், தொடங்கப்பட்டவைதாம் இந்நிறுவனங்கள்.

ஆக இத்தகு நிறுவனங்களை நிறுவ,

அ) இந்தியர்களுக்குத் தொழில்நுட்பத் திறன் இருக்கிறது.

ஆ) முதலீடு ஒரு பொருட்டல்ல

இ) புதுத்தொழில் துவங்கத் தேவையான நிர்வாக அறிவுக்கும் பஞ்சமில்லை.

தேவையானதெல்லாம் (இந்தியாவில் இருக்கும்போதே) வையத்தை விழுங்கும் விசாலப் பார்வை, அகண்ட சிந்தனை. ஒருமனதான விடாமுயற்சி. தெளிவான திட்டம். திண்ணமான நிர்வாகம். அவ்வளவே.

நம்பிக்கையுள்ளது.விரைவில் இங்கிருந்தும் ஒரு Google உருவாகும்.