மகாராஷ்டிர விவசாயப் போராட்டமும் நதிநீர் இணைப்பும்

மார்ச் 13, 2018

மகாராஷ்டிரத்தில் போராட்டப்பாதையில் நடந்த விவசாயிகள் எழுப்பியிருக்கும் பிரச்சனைகளில் முக்கியமான, ஆனால் அதிகம் கவனிக்கப்படாத ஒன்று, நதிநீர் இணைப்பால் அவர்களது நிலங்கள் மூழ்கவிருப்பது குறித்தது.

நதிநீர் இணைப்புதான் நம் தண்ணீர் பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு என்று இந்த கானல்நீரைக் கேட்டுக் கோரிக்கை வைக்கும் பெருவாரியான தமிழக விவசாயிகள், இதற்குத்தான் ஆசைப்படுகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்வார்களாக. தமிழகத்திலும் பிற இடங்களிலும் நிலங்களை இழந்து, பாதச்சதைகிழிய நீங்கள் போராட்டம் செய்ய நேரிட்டால், நதிநீர் இணைப்பைத் தீர்வாகக் காட்டும் எந்த ஆன்மீக அறிவியல் அரசியல் சினிமா மேதைகளும் துணைவரப் போவதில்லை.

https://www.outlookindia.com/website/story/modis-pet-river-linking-project-is-a-reason-why-maharashtra-farmers-are-protesti/309398


நீரோட்டம்

செப்ரெம்பர் 16, 2013

200 ஏக்கர் விவசாய நிலங்களை நாற்பது ஆண்டுகளாய்ப் பராமரித்துக் கொண்டிருக்கும் ஒருவரோடு உரையாடிக்கொண்டிருந்தேன். ஆழ்குழாய்க் கிணறு தோண்டுவது பற்றிப் பேச்சு வந்தது. டிவைனர் (diviner)களை அழைத்துத்தான் சரியான இடத்தைத் தேர்ந்தெடுப்போம் என்றார்.

சென்னையில் நாங்கள் குடியிருக்கும் 6 வீடுகள் கொண்ட குடியிருப்பில் ஒரு கிணறு உள்ளது. நாற்பது வருடங்களாக அது வற்றியதே இல்லையாம். சுற்றியுள்ள இடங்களிலெல்லாம் நிலத்தடி நீர் கிடைக்காத போதும் இங்கு எப்போதும் இருக்கும் என்பார்கள். ஒரு தேர்ந்த டிவைனர் தான் இடத்தைத் தேர்ந்தெடுத்தாராம். எனவே, ஆர்வம் மேலிட விசாரித்தேன்.

’உடம்புல இரும்புச் சத்து இருக்கிறவங்கதான் டிவைனரா இருப்பாங்க. எனக்கே கூட அந்தச் சத்து இருக்குதுங்க. கையில ஏதாவது பொருளை – கடிகாரமோ இல்ல ஏதாவது இரும்புத் துண்டையோ – எடுத்துகிட்டு, கையை இப்படி நீட்டீட்டு நடந்து போவேன். நிலத்தடியில தண்ணி சின்னச்சின்ன ஓடையா ஓடும். பல திசைல இருந்து வர்ற ஓடைக ஒன்னு சேர்ற இடத்திலதான் நிறையத் தண்ணி இருக்கும். அந்த எடம் வரும்போது, கை மணிக்கட்டுல இருந்து இப்படி சுத்தும்ங்க. அங்கதான் தோண்டனும். ஒவ்வொருத்தரு ஒவ்வொரு மாதிரி செய்வாங்க – தேங்காய் எல்லாம் கூட வைச்சுப் பண்ணுவாங்க’ என்றார்.

‘உங்க நெலத்தில எல்லாம் நீங்களே தான் கிணறு வெட்டற எடத்தைத் தேர்ந்தெடுப்பீங்களா?’

‘இல்ல. நான் பார்த்து வைச்சுப்பேன். ஆனா அதுக்குனே டிவைனர்ங்க இருக்காங்க. அவங்களக் கூப்பிட்டுத்தான் வெட்டுவோம்ங்க.’

‘நீங்க தேர்ந்தெடுக்கிற எடத்தில எப்பவுமே தண்ணி இருக்குங்களா?’

‘எழுபது-எம்பது பெர்சண்ட சரியாத்தான் இருக்குங்க தம்பி.
பணக்காரங்களுக்குப் பார்க்கும் போது, சரியா அமைஞ்சுரும். சில சமயம், ரெண்டு ஏக்ரா மூணு ஏக்ரா வைச்சுருக்க விவசாயிங்க கடன்கிடன் வாங்கி கிணறு தோண்டுவாங்க. அப்பனு பார்த்து நாம சொல்றது தப்பாப் போயிடுங்க. போர் போடற கூலியை அவங்க கொடுத்துத்தானே ஆகனும், பாவம்.’