குழந்தைகளுக்கான நூல்கள்: மகளின் பரிந்துரை

ஜனவரி 17, 2020

எல்லாரும் புத்தக சிபாரிகள் போடுகிறார்கள். குழுந்தைகளுக்கான ஒரு பரிந்துரைப் பட்டியலைப் போடலாமே என்று சில நண்பர்கள் முன்பே கேட்டிருந்தார்கள். நான் மகளைக் கேட்டேன். அவளுக்குப் பிடித்த ஐந்து, பத்து என்று தொடங்கினோம். வளர்ந்து நாற்பதைத் தாண்டிவிட்டது. இவை அனைத்தையும் நான் படிக்கவில்லை. பட்டியல் அவளுடைய தேர்வுதான். அனைத்தும் குழந்தை நூல்களல்ல. ஆனால் குழந்தைகளுக்குமானவை என்று கொள்ளலாம். [அவள் வயது பதினொன்று.]

1 டோட்டோ சான் – சன்னலில் ஒரு சிறுமி – National Book Trust [Totto-Chan: The Little Girl at the Window – Tetsuko Kuroyanagi]
2 மாயி-சான் – தோசி மாருகி – Books for Children [The Fire of Hiroshima – Toshi Maruki]
3 குட்டி இளவரசன் – அந்த்வான் து செந்த்-எக்சுபெரி; தமிழில்: வெ. ஸ்ரீராம் – க்ரியா பதிப்பகம் [The Little Prince – Antoine de Saint-Exupéry]
4 பனி மனிதன் – ஜெயமோகன் – கிழக்குப் பதிப்பகம்
5 வெள்ளி நிலம் – ஜெயமோகன் – விகடன்
6 குழந்தைகளும் குட்டிகளும் – ஓ பெரோவ்ஸ்கயா (தமிழில் : ருக்மணி) – Books for Children [Kids and Cubs – Olga Perovskaya]
7 கானகத்தின் குரல் – ஜாக் லண்டன் – தமிழில்: பெரியசாமித் தூரன் – தமிழினி பதிப்பகம் [The Call of the Wild – Jack London]
8 ஐம்பேரியற்கை – மாற்கு – தமிழினி பதிப்பகம்
9 தேவமலர் மற்றும் கதைகள் – தேசாந்திரி பதிப்பகம் (தேவமலர் – செல்மா லாகர்லெவ் – க.நா.சு., உயிராசை – ஜாக் லண்டன் – புதுமைப்பித்தன்; மேல்கோட்டு – நிக்கலாய் கோகல் – பாஸ்கரன்; விருந்தாளி – ஆல்பர் காம்யூ – க.நா.சு.) [The Legend of the Christmas Rose – Selma Lagerlöf, Love of Life – Jack London, The Overcoat – Nikolai Gogol, The Guest – Albert Camus]
10 மகாபாரதம் (வியாசர் விருந்து) – ராஜாஜி [Mahabharata – C. Rajagopalachari]
11 இளைஞர்களுக்கான கம்ப ராமாயணம் – சரஸ்வதி ராம்நாத் முன்னுரை – எழுதியவர் பெயர், பதிப்பகம் குறித்துவைக்கவில்லை [Ramayana]
12 நிழல் காட்டும் நிஜங்கள் (திருக்குறள் கதைகள்) – மலர்க்கொடி ராஜேந்திரன் – விஜயா பதிப்பகம்
13 மாயக்கண்ணாடி – உதயசங்கர் – நூல் வனம்
14 கடவுளைப் பார்த்தவனின் கதை – லியோ டால்ஸ்டாய் – தமிழில்: பாலு சத்யா – Books for Children [Leo Tolstoy – can’t identify the original – can someone help?]
15 ஒரு நாயின் கதை – பிரேம் சந்த் – தமிழில்: யூமா வாசுகி- Books for Children [ कुत्ते की कहानी/Story of a Dog – Munshi Premchand]
16 ரஸ்டியின் வீரதீரங்கள் – ரஸ்கின் பாண்ட் – தமிழில்: கே.பாலச்சந்திரன் – National Book Trust [The Adventures of Rusty – Ruskin Bond]
17 சாவித்திரிபாய் பூலே – வழிகாட்டியின் வாழ்க்கைப் பயணம் – தமிழில்: சாலை செல்வம் – அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகப் பதிப்பகம் [Savitri Bai – Journey of a Trailblazer – Azim Premji University Publication]
18 பாப்பாவுக்கு காந்தி – தி.ஜ.ர. – காந்திய இலக்கிய சங்கம்
19 ஐந்து சீன சகோதரர்கள் – Books for Children
20 ஃபெலுடா வரிசை – சத்யஜித் ரே – Books for Children [Feluda Series – Satyajit Ray]: அனுபிஸ் மர்மம், டார்ஜிலிங்கில் ஓர் அபாயம், பம்யாய் கொள்ளையர்கள்,…
21 சிறுவர் நாடோடிக் கதைகள் – வீர வேலுசாமி (பதிப்பாசிரியர்: கி.ரா) – அகரம் பதிப்பகம்
22. பெரிய மரமும் சிறிய புல்லும்: உலக நாடோடிக் கதைகள் – யூமா வாசுகி – Books for Children
23 காட்டிலே கதைகள் – மலையாள மூலம்: சிப்பி பள்ளிபுறம், தமிழில்: எல்.பி.சாமி – Books for Children
24 மாகடிகாரம் – விழியன் – Books for Children
25 Prodigy Series (Kizhakku) – லெனின், அக்பர், அலெக்ஸாண்டர், இலியட், பரமஹம்சர், விவேகானந்தர், வீரபாண்டிய கட்டபொம்மன், அமேசான் காடுகள், மலைகள்…
26 லயன் காமிக்ஸ் : உரைபனி மர்மம் , பெயிரூட்டில் ஜானி, மலைக்கோட்டை மர்மம், ஃளைட் 731, வான்வெளிக்கொள்ளையர்கள்,…
27 தும்பி இதழ்கள்
28 சுப்பாண்டியின் சாகசங்கள்

1. The Adventures of Burratino or the Little Gold Key – Alexei Tolstoy – Raduga Publishers Moscow
2. Black Beauty – Anna Sewell (Abridged)
3. The Call of the Wild – Jack London (Original)
4. Ben Hur – Lew Wallace (Abridged)
5. Alice’s Adventures in Wonderland – Lewis Carroll (Original)
6. The Wonderful Wizard of OZ – L. Frank Baum (Abridged)
7. The Black Arrow – Robert Louis Stevenson (Abridged)
8. 20,000 Leagues Under the Sea – Jules Verne (Abridged)
9. The Last of the Mohicans – James Fenimore Cooper (Abridged)
10. Gulliver’s Travels – Jonathan Swift (Abridged)
11. The Hound of the Baskervilles (Sherlock Holmes) – Sir Arthur Conan Doyle (Abridged)
12. Blue Umbrella – Ruskin Bond
13. Angry River – Ruskin Bond
14. The Magic Finger – Roald Dahl
15. Charlie and the Chocolate Factory – Roald Dahl
16. Charlie and the Great Glass Elevator – Roald Dahl


வேருக்கு நீர்

நவம்பர் 12, 2019

ராஜம் கிருஷ்ணனின் ‘வேருக்கு நீர்’ நாவலை இம்மாதம்தான் படித்தேன். தமிழ் இலக்கியத்தில் காந்தி குறித்துப் பேசும்போது சிலர் இதைக்குறிப்பிட்டதாலும், தற்செயலாகக் Kindle Unlimitedல் கண்ணில் பட்டதாலும் படிக்கத்தொடங்கினேன். மிகவும் பிடித்திருந்தது. காந்தி நூற்றாண்டு விழாவின் பின்னணியில் எழுதப்பட்ட நாவல். காந்தி 150க்கும் பொருந்தி வருகிறது. பல ஆழமான உரையாடல்கள் மூலமகாக லட்சியவாதத்துக்கும் வாழ்வின் யதார்த்தங்களுக்கும் ஏற்படும் உரசல்களுக்குள் ஆழமாகச் செல்கிறது. காந்தியின் மீதான அன்றைய ஆயுதம் தாங்கிய மார்க்சியர்களின் விமர்சனங்களையும் சித்தரிக்கிறது. இப்பகுதியை அசோகமித்திரனின் ‘காந்தி’ சிறுகதையோடு ஒப்புநோக்கலாம். அவர் பல அடுக்குகளை அமைத்துத் தொட்ட ஒரு புள்ளியை, இவர் இந்நாவலில் மிக நேரடியாகத் தொட்டுவிடுகிறார். காந்தியத்தால் ஈர்க்கப்பட்ட ஒரு பெண் குடும்ப வாழ்வில் சந்திக்க நேரும் சவால்களைச் சொல்வதில் பி.எஸ்.ராமையாவின் பதச்சோறு கதையோடு இணைத்துப்பார்க்கலாம்.

அரசியல், இலட்சியவாதப் பின்புலத்தில் நடைபெறும் பல உரையாடல்களும், நிகழ்ச்சிகளும் ஒரு பழைய ருஷ்ய நாவலைப் படிக்கும் நிறைவைத் தந்தன. கேள்விகளை எழுப்பின. எளிமையான, இனிமையான நடை. ராஜம் கிருஷ்ணனின் பெயர் சிறுவயது முதலே பரிச்சயமானதுதான் என்றாலும், அவரது தனிமையான இறுதிக்காலம் குறித்து முகநூல் மூலமாகக் கொஞ்சம் அறிந்திருந்தாலும், ஏன் இவரை இதுவரை நான் படித்ததே இல்லை என்பதை என்னை நானே கேட்டுக்கொள்கிறேன். இந்நூலுக்காக சாகித்ய அகாதெமி விருது பெற்றிருக்கிறார். 80 படைப்புகளுக்கு மேல் எழுதியிருக்கிறார் என்கிறது விக்கி. பிற நூல்கள் எப்படியோ, இது நல்லதொரு படைப்புதான்.


காந்தியும் திருக்குறளும்

நவம்பர் 6, 2019

(சில ஆண்டுகளுக்கு முன் ‘காந்தி இன்று’ தளத்துக்காக எழுதிய கட்டுரையின் விரிவுபடுத்தப்பட்ட வடிவம்)

ஓர் இலக்கியப் படைப்பின் மீது பெருந்திரளான மக்கள் பேரன்பைப் பொழிய முடியுமா என்ற கேள்வி எழுந்தால், திருக்குறள் மீது தமிழர்கள் கொண்டிருக்கும் உணர்வையே உதாரணமாகக் காட்டமுடியும்.  பெரும்பாலும் ஒரு நீதி நூலாகவே அறியப்படுகிற ஒரு படைப்பு (அது நீதிநூல் மட்டுமே அல்ல என்றாலும்கூட), எப்படி இத்தனை அன்புக்குப் பாத்திரமானது என்பது ஆச்சரியமானதுதான். அந்தத் திருக்குறள் காட்டும் நெறிக்கு மிக நெருக்கமான வாழ்வை வாழ்ந்தவர்கள் என்று ஒரு பட்டியல் இட்டால், அதில், தமிழர் அல்லாத போதினும், காந்தியின் பெயரைத் தவிர்க்கமுடியாது. காந்தி, திருக்குறள், தால்ஸ்தோய் குறித்து நிறையப் புனைவுகள் உள்ளன. காந்தியைத் திருக்குறள் எந்த அளவுக்கு நேரடியாகப் பாதித்தது என்பதை உறுதியாகக் கூறவியலாது.  ஆனால், காந்தி திருக்குறளைப் பற்றி நன்றாக அறிந்திருந்தார் என்பதை அவரது பதிப்புகளிலும், எழுத்துகளிலும் காணலாம்.

தென்னாப்ரிக்காவில் தமிழர்களோடு ஏற்பட்ட தொடர்பிற்கு முன், காந்தி திருக்குறள் பற்றிக் கேள்விப்பட்டிருக்க  வாய்ப்பில்லை. அறிந்திருந்தால், அது அவரைப் பெரிதும் கவர்ந்திருக்கும் என்பதிலும் சந்தேகமில்லை. சிறுவயதில் அவரை மிகவும் ஈர்த்து வழிநடத்தியவை என்று இரண்டு கோட்பாடுகளைத்தான் குறிப்பிடுகிறார்: உண்மை, தீங்கிழைத்தவர்க்கும் நன்மையே செய்தல். (1) இரண்டுமே திருக்குறள் முன்வைக்கும் முக்கிய நெறிகள். அப்போது அவரைக் கவர்ந்த ஒரு குஜராத்திப் பாடலை, சத்திய சோதனையில் குறிப்பிடுகிறார். லண்டனில் இருந்தபோதும், ஷாமல் பட் எழுதிய அதே பாடலை மீண்டும் நினைவுகூர்கிறார்; புதிய ஏற்பாட்டில்  மலைப் பிரசங்கத்தைப் படிக்கும்போது இப்பாடல் அவர் நினைவுக்கு வருகிறது. 

பெற்ற ஒரு குவளை நீருக்கு, நிறைவான ஒரு வேளை உணவை அளி:

ஓர் எளிய வாழ்த்துக்கு, உற்சாகமாய்ப் பணிந்து வணங்கு:

சில நாணயங்கள் பெற்றிருந்தால், பொற்குவை திரும்பக் கொடு:

உயிர்காத்தவனுக்காய் உயிரையும் தரத் தயங்காதே.

சொற்களையும் செயல்களையும் இங்ஙனமே கருதுவர் அறிவோர்,

பெற்ற சிற்றுதவிக்குப் பதிலாய் பன்மடங்கு பேருதவி புரிவர்.

ஆனால், பெருஞ்சான்றோர் மனிதன் ஒன்றே என்றரிவர்;

இன்னாசெய்தார்க்கும் இனியவே செய்திடுவர்.

இப்பாடல், பல குறட்பாக்களின் இணைவடிவமாகத் தெரிகிறது:

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்

கொள்வர் பயன்தெரி வார். [104]

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்

ஞாலத்தின் மாணப் பெரிது. [102]

இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்

என்ன பயத்ததோ சால்பு. [987]

அதற்குப்பின்னும் காந்தியைப் பாதித்த, அவரே எழுதிய பலவற்றுள்ளும் குறளின் கருத்துகள் பொதிந்திருந்தாலும், வளரும் பருவத்தில் அவரை ஈர்த்த இப்பாடல் குறிப்பிடத்தகுந்தது.

காந்திக்குத் திருக்குறள் பற்றிய முதல் அறிமுகம் ஜி.யு.போப் மூலமாக நிகழ்ந்திருக்கலாம். (2) “நான் தமிழும் உருதுவும் கற்றுத்தருவதற்கு முன்வந்திருந்தேன். எனக்குத் தெரிந்த சிறிதளவு தமிழை கடற்பயணங்களின் போதும் சிறைவாசங்களின் போதும் கற்றிருந்தேன். போப் எழுதிய அருமையான தமிழ்க் கையேட்டினை நான் தாண்டவில்லை.” (3) ஜி.யு.போப் திருக்குறளை 1886ம் ஆண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டிருந்தார். அது இன்றளவும் பிரபலமாக உள்ளது. இக்கையேட்டுக்கான அறிமுகத்தில், போப் திருவள்ளுவரின் குறள் குறித்து, “இப்படைப்பின் ஆசிரியல் இதனை எல்லாவிதமான அறிவின் பெட்டகமாக அமைத்து, தமிழ் மக்களுக்கு வேதத்தின் இடத்தில் இருத்தக் கருதினார்.” திருக்குறளின் அமைப்பை விளக்கும்போது, ஏங்கிலிக்கன் கிருத்துவப் பாதிரியாரான இவர், ‘மூன்றாம் பால் புலனின்பம் சார்ந்தது; அதன் பெரும்பகுதி படிக்கத் தகுதியானதன்று,’ என்று காமத்துப்பாலைப் புறந்தள்ளிப் பேசுகிறார்.(4) (எனினும், மொழிபெயர்க்கும்பொது காமத்துப்பாலையும் சேர்த்தே மொழிபெயர்த்தார்.) கூடுதலாக, கையேட்டின் இரண்டாவது பகுதியில், திருக்குறளுக்கென்றே தனியாக ஒரு விரிவான அறிமுகம் தந்து, முதல் நான்கு அதிகாரங்களுக்கு ஆங்கில மொழிபெயர்ப்பையும் தருகிறார். ‘தமிழ்க் கவிதைக்கு மிகச் சிறந்த அறிமுகம்’ என்றும், ‘திருவள்ளுவரின் கவிதை எவ்வகையிலும் நீளமானதல்ல; ஆயினும், மதிப்பில், மொத்தத் தமிழ் இலக்கியத்தின் பிறநூல்களைக் காட்டிலும் உயர்ந்து நிற்கிறது; ஒட்டுமொத்த மக்கள் குழுவொன்றின் கூட்டு ஆன்மாவுக்குள் நுழைந்த மிகச்சில மகத்தான நூல்களில் இதுவும் ஒன்று; இதற்கு அழிவே கிடையாது,’ என்றும் திருக்குறளை விதந்து கூறுகிறார். ‘வள்ளுவர் பிராமணத் தந்தைக்கும் கீழ்ச்சாதிப் பெண்ணுக்கும் பிறந்தவர் என்று வாய்மொழி மரபுகள் கூறுகின்றன’ என்று சொல்லிவிட்டு, உடன் இக்கதைக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று ஒப்புக்கொள்கிறார். ஆனால் வள்ளுவர் ‘உறுதியாக ஒரு பறையர்’ என்ற முடிவுக்கு வருகிறார். மேலும், ‘கிருத்துவ ஆகமநூல்களும் இக்கவிஞருக்கு உந்துதலாக இருந்த நூல்களில் அடங்கும்,’ என்றும் தயங்காமல் கூறுகிறார். “தற்போதும் பிற காலங்களிலும் தென்னிந்தியாவில் நிலவிய பல சிந்தனைகள் செயல்பாடுகளின் தடயமே திருக்குறளில் இல்லை; ஏனெனில், இம்முனிவரின் பரந்துபட்ட நம்பிக்கையாலும் நடத்தையாலும் இவை ஒதுக்கப்பட்டிருக்கும்; இவரது படைப்பு அறிவுறுத்துவதாகவும் சர்ச்சைகளைத் தவிர்ப்பதாகவும் உள்ளது. அவரது மெய்யியல் பகவத் கீதையைப் போன்ற பரந்துபட்ட தரிசனத்தைச் சார்ந்தது,” என்று போப் சொன்னது காந்தியைப் பெரிதும் ஈர்த்திருக்கக்கூடும். (5)

காந்தியின் எழுத்துகளில் போப்பின் திருக்குறள் மொழிபெயர்ப்பு பற்றி எந்தக் குறிப்பும் இல்லை. ஆனால், அவரது பிந்தைய எழுத்துகளின் அடிப்படையில், அவர் போப்பின் மொழிபெயர்ப்பைப் படித்திருக்கக்கூடும் என்று ஊகிப்பது தவறாக இருக்காது. 

1905ம் ஆண்டு முதலே, அவரது உறவினர்களான சகன்லால் காந்தி, மகன்லால் காந்தி ஆகியோருக்கு எழுதிய பல கடிதங்களில் ஜி.யு.போப் பற்றிக் குறிப்பிடுகிறார். சகன்லாலை ஜி.யு.போப்பின் கையேட்டின் புதிய பதிப்பின் மூன்று பாகங்களையும் மூன்று பிரதிகள் வாங்கும்படி அறிவுறுத்துகிறார். (6) மார்ச் 1908ல், ஜி.யு.போப்புக்கு இந்தியன் ஒப்பினியன் இதழில் ஓர் அஞ்சலிக் குறிப்பு எழுதுகிறார். டைம்ஸ் இதழில் வந்த அஞ்சலிக் கட்டுரையையும் பதிவிடுகிறார். இரண்டு அஞ்சலிக் குறிப்புகளிலுமே திருக்குறள் குறிப்பிடப்படவில்லை என்பது ஆச்சரியம்தான். “சென்னை மக்கள் மதிப்பும் மரியாதையும் செலுத்தவேண்டியர்களில் டாக்டர்.போப்பைவிடத் தகுதியான ஆங்கிலேயர்கள் எவரும் இல்லை. அவரது உதாரணம் சென்னை மக்களை ஆராய்ச்சிப் பாதையில் வழிநடத்தி, அண்மைக்காலத்தில் புதைந்துபோன அவர்களது பெரும் வரலாற்றைக் குறித்து உலகம் அறியவும், இலக்கியம், மொழியியல், மெய்யியல், இறையியல் ஆகியவற்றின் பொக்கிசங்கள் வெளிச்சத்திற்கு கொணரவும், மக்கள் தங்கள் எதிர்கால வளர்ச்சிப்பாதையைப் பற்றிய ஓர் அறிகுறியைப் பெறவும் மிளிரும் ஒளியாக உள்ளது,” என்று எழுதி அஞ்சலி செலுத்தினார். (7)

1909ல்தான் காந்தியின் வாழ்வில் திருக்குறள் நேரடியாக நுழைந்ததற்கான தடயத்தைக் காண்கிறோம். லியோ தால்ஸ்தோய் எழுதிய ‘ஓர் இந்துவுக்குக் கடிதம்’ (A Letter to a Hindu)  என்ற கட்டுரையைக் காந்தி தனது இந்தியன் ஒப்பீனியன் பத்திரிக்கையில் பதிப்பித்தார். அந்தக் கட்டுரையில் தால்ஸ்தோய் கீதையிலிருந்தும் திருக்குறளிலிருந்தும் மேற்கோள்களை எடுத்தாள்கிறார்.  

சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்கு இன்னா

செய்யாமை மாசற்றார் கோள். [311]

கறுத்தின்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா

செய்யாமை மாசற்றார் கோள். [312]

செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்

உய்யா விழுமந் தரும். [313]

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண

நன்னயஞ் செய்து விடல். [314]

அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்

தந்நோய்போல் போற்றாக் கடை. [315]

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா

பிற்பகல் தாமே வரும். [317]

இந்த ஆறு குறட்பாக்களையும் குறிப்பிட்டு,  ‘இவ்வாறே எங்கும் நடந்தது. அன்பே மிக உயர்ந்த அறம் என்கிற புரிதல் எங்கும் மறுக்கப்படவில்லை. ஆனால், இந்த உண்மை பல்வேறு பொய்களோடு பிணைந்து  சிதைந்திருந்ததால், வெறும் சொற்களே எஞ்சியிருந்தன,’ என்கிறார் தால்ஸ்தோய். ‘இல்வாழ்க்கைக்கு மட்டுமே இந்த உயர்ந்த அறம் அவசியமாகக் கற்பிக்கப்பட்டது. பொது வாழ்வில் எல்லாவிதமான வன்முறையும் (சிறை, மரணதண்டனை, போர்கள்) பெரும்பான்மை மக்களைக் காக்க, அவர்களுக்குத் தீங்கிழைக்கும் சிறுபான்மையினர் மீது ஏவப்படுதல் ஏற்றுக்கொள்ளப்படுகிறது – இன்னமும் சிறிதே எஞ்சியிருக்கும் அன்புக்கு அது நேர்மாறாக இருந்தபோதிலும்.’ (8)

காந்திக்கு இக்குறள்களும், அவற்றையொட்டிய தால்ஸ்தோயின் கருத்துகளும் உறுதியாகப் பிடித்திருக்கும். தனிவாழ்வையும் பொதுவாழ்வையும் என்றைக்கும் அவர் பிரித்து வைத்ததில்லை. இக்கட்டுரையை முன்வைத்துத்தான் காந்திக்கும் தால்ஸ்தோய்க்கும் இடையிலான கடிதப் பரிமாற்றம் தொடங்கியது. ஆனால், திருக்குறள் பற்றிக் குறிப்பாக எந்த உரையாடலும் நடைபெறவில்லை.

மகன்லால் காந்திக்கு 1910ல் எழுதிய ஒரு கடிதத்தில், திருக்குறள் வாசகம் ஒன்றைச் சற்றே வினோதமான சூழலில் குறிப்பிடுகிறார். “சந்தோக்கிற்குக் குழந்தை பிறந்துவிட்டதால், அவளைப்பற்றி இனி நாம் கவலைப்பட வேண்டியதில்லை. கற்க கசடறக் கற்பவை. போப்பின் இலக்கண நூலின் முதல் பக்கத்தில் உள்ள இந்த வாசகத்தை மனதில் அசைபோட்டுப் பார். தனது மனைவி மீதான காம உணர்வை வெல்வதைக் காட்டிலும் கடினமான பணி எதுவும் இருக்கமுடியாது.”  (9)

கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக. [391]

என்ற குறளை மனதில் கொண்டு எழுதியுள்ளார். ஆனால், இதில் சுவையான செய்தி என்னவெனில், ‘கற்கக் கற்கக் கசடறும்’ என்ற பழமொழிதான் போப்பின் கையேட்டில் முதல்பக்கத்தில் உள்ள வாசகம். காந்தி தவறுதலாகச் சரியான ஒரு குறளைக் குறிப்பிட்டிருப்பது, அவர் திருக்குறளைப் படித்திருக்கவேண்டும் என்பதைப் பெருமளவு உறுதிசெய்கிறது என்பது இதில் ஓர் எதிர்பாராத நன்மை. இன்னொரு கடிதத்திலும் இத்தவறினை மீண்டும் செய்வார் என்பதைக் காண்போம். 

இந்தியா திரும்பியபின், நண்பர் ஜி.ஏ.நடேசனுக்கு, “எனக்கு தயவுசெய்து தமிழ்ப் புத்தங்களை அனுப்பி வையுங்கள். ஆரம்ப கட்டத்தில் இருப்பவர்களுக்கும், சுந்தரம் போன்றவர்களுக்கும் எனக்குப் புத்தகங்கள் வேண்டும். டாக்டர்.போப்பின் அனைத்துப் புத்தகங்களும் வேண்டும். எத்தனை விரைவாக முடியுமோ அத்தனை விரைவாக இதைச் செய்துவிடுங்கள்,” என்று எழுதினார். (10)

மகன் தேவதாஸ் காந்திக்கு, 1919ல் எழுதிய ஒரு கடிதத்தில் முன்பு போலவே தவறுதலாகத் திருக்குறள் வாசகத்தைக் குறிப்பிடுகிறார். “இவ்வாசகத்தை தமிழில் அடைமொழியாகக் கொள்ளவும்: கற்க கசடறக் கற்பவை. […] போப்பின் கையேட்டில் முதல் பக்கத்தில் இது வருகிறது. தெலுங்கில் இதன் மொழிபெயர்ப்பையும் அறிந்து அதையும் கொடுத்துவிடு.”  (11)

1920ல், அகமதாபாத்தில் ஆற்றிய ஓர் உரையில், ஜி.யு.போப் பற்றிக் கவித்துவமாகப் பேசினார்: “சென்னையில் எந்த இந்தியரும் போப் அளவுக்குத் தென்னிந்தியாவுக்குச் சேவை செய்துவிடவில்லை – இவர் இலியட் புகழ் போப் அல்லர். மனிதர்கள்மீது எப்போதும் நான் பேரன்போடு இருக்கிறேன். எனவே அவர்களது உள்ளங்களைக் கவரவேண்டும் என்று எப்போதும் விரும்புகிறேன். தென்னிந்தியச் சகோதரர்களின் உள்ளங்களைக் கவர்வதற்காக, அவர்களது மொழியைக் கற்க வேண்டியிருந்தது. இப்போது போப் அவர்களின் எழுத்துகளில் இருந்து உடனடியாக மேற்கோள் காட்டமுடியவில்லையெனினும், இதைச் சொல்வேன்: விவசாயிகள்கூட தோட்டத்துக்கு நீர்பாய்ச்சும்போது இன்புற்று அனுபவிக்கக்கூடிய வகையில் தமிழில் இருக்கும் கவிதைகள் அற்புதமானவை. கதிரவன் உதிக்கும் முன்பே தோட்டங்களுக்குத் நீர் பாய்ச்சும் வேலை தொடங்கிவிடும். கம்பு, கோதுமை ஆகிய அனைத்தும் பனி முத்துகளால் மூடப்பட்டுள்ளன. மரங்களின் இலைகள் மீதுள்ள நீர்த்துளிகள் முத்துகள் போல ஒளிர்கின்றன. இப்பாடல்களைத்தான் விவசாயிகள் தோட்டங்களுக்கு நீர்பாய்ச்சும்போது பாடுகிறார்கள்.” (12) இது அவர் போப்பின் கவிதைகளைப் படித்துள்ளார், குறிப்பாகத் திருக்குறளையும் படித்திருக்கக்கூடும் என்பதற்கான சான்றாக உள்ளது.

அடுத்து, நாம் திருக்குறளை காந்தியின் பதிவுகளில் 1927ம் ஆண்டு காண்கிறோம். ரங்கூன் நகரிலிருந்து ஒரு நண்பர், கதர்ப் பிரச்சாரத்துக்காக இருபத்தைந்து ரூபாய் கொடையும் அதனோடு ஒரு கடிதமும் அனுப்புகிறார். அக்கடிதத்தை இறந்துபோன தனது தந்தைக்குப் பதினாறாம் நாள் சடங்குகளைச் செய்வதில் தனக்கிருக்கும் ஒவ்வாமையை வெளிப்படுத்தித் தொடங்குகிறார். அது அடிமைத்தனமானதாகவும், அர்த்தமற்றதாகவும் இருப்பதாகவும், மக்களின் மத நம்பிக்கைகளைப் பயன்படுத்தி அவர்கள்மீது திணிக்கப்படும் ஒரு ஏமாற்றுவேலையாகயும் கருதுகிறார். அர்ப்பணிப்புடனும் கொடைநோக்குடனும் செய்யப்படும் ஈமச்சடங்குகளில் தனக்கு நம்பிக்கை இருப்பதாகத் திருக்குறளைப் பயன்படுத்தி நிறுவுகிறார். 

“24-2-1927 யங் இந்தியா இதழில், நீங்கள் சொல்வது போல, ‘கொடைபெறுவதற்கு இரண்டு வர்க்க மக்களுக்கு மட்டுமே உரிமையுள்ளது, பிறருக்கில்லை – தனக்கென எதுவுமே வைத்துக்கொள்ளாமல், புனிதக் கல்வியைப் பிறருக்குக் கற்றுத்தரும் பிராமணன், உடல் ஊனமுற்றவர்கள் அல்லது பார்வையற்றவர்கள்.’ மரணமற்ற எங்கள் மாமுனி திருவள்ளுவர் ‘எல்லா உயிர்களிடத்தும் பொங்கிப்பெருகும் அன்பைக் கொண்டுள்ள சந்நியாசிகளே அந்தணர்’ என்று சொல்லியிருக்கிறார். கொடையளிப்பதற்கு உங்களைவிடச் சிறப்பான மனிதரையும்  ராட்டையைவிடச் சிறப்பான ஒரு நோக்கத்தையும் என்னால் காணமுடியவில்லை என்பதால் உங்களுக்கு இத்தொகையை அனுப்பியுள்ளேன். பெற்றோரின் நினைவினைப் போற்றுவதற்கு இன்னொரு வழியும் உண்டு. முனி வள்ளுவன் சொல்கிறான்: ‘மகன் தந்தைக்குச் செலுத்தக்கூடிய நன்றி என்பது இவனது தந்தை இவனைப்பெறப் பெருந்தவம் புரிந்திருக்கவேண்டும என்ற பெயரை எடுக்கும்வண்ணம் உலகில் மிகச் சிறப்பாக நடந்துகொள்ளவதுதான்.’ இக்குறிக்கோளை எனது மனதில் நான் தாங்கியுள்ளேன் என்பதையும் நான் கூறிக்கொள்கிறேன்.” (13)

இக்கடிதம் பின்வரும் குறள்களையொட்டி அமைந்துள்ளது:

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர் க்கும்

செந்தண்மை பூண்டொழுக லான். [30]

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை

என்நோற்றான் கொல் எனும் சொல். [70]

காந்தி இக்கடிதத்தின் கருத்தினை அமோதிக்கும்வகையில், அர்த்தமற்ற சடங்குகளைத் தானும் எதிர்ப்பதாகவும், இக்கடிதம் எழுதியவரைப் போல பிறரும் தமக்குச் சரியென்று படுவதையே செய்ய முனைந்து தம்மையே ஏமாற்றிக்கொள்வதில் இருந்து விடுதலை பெறவேண்டும் என்றும் எழுதினார். எனினும் திருக்குறள் பற்றி நேரடியாக அவர் ஏதும் குறிப்பிடவில்லை.  

1927ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் முதன்முதலில் காந்தி திருக்குறள் பற்றி நேரடியாகப் பேசியது பதிவாகியுள்ளது. தூத்துக்குடியில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுகையில், தமிழுக்கு அவர் அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று எழுந்திருந்த ஒரு குற்றச்சாட்டை மறுத்துரைத்தார். அப்போது,

‘திருக்குறளில் காணக்கிடைக்கிற புதையல்களின்பால் எனது கவனத்தை நீங்கள் ஈர்த்தது சரிதான். உங்களுக்கு ஒன்று கூறவிரும்புகிறேன் – சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன், திருக்குறளை அதன் மூலமொழியில் படிக்கவேண்டும் என்கிற ஆசையோடும் குறிக்கோளோடும் நான் தமிழ் கற்றுக்கொள்ளத் தொடங்கினேன். தமிழைக் கற்று முடிப்பதற்கு எனக்குக் கடவுள் போதிய நேரம் கொடுக்கவில்லை என்பது என் ஆழ்ந்த வருத்தத்துக்குரிய ஒரு விஷயம். பிராந்திய மொழிகளையேப் பாடமொழியாக ஆக்குவதற்கு நடத்தப்படும் போராட்டங்களை நான் முழுக்க ஆதரிக்கிறேன். நாம் தமிழ்மொழியைக் கற்க வேண்டும்; ஆங்கிலத்தைவிட தமிழையே விரும்பவேண்டும்; தமிழை மற்ற மொழிகளுக்கெல்லாம் மேலான இடத்தில் இருத்தவேண்டும்,’ என்று கூறியதாக இந்து நாளிதழில் செய்தி வெளியானது. (14)

அதே ஆண்டு, காந்தி தமிழகப் பயணத்தில் சந்தித்த பல கேள்விகளை, குறிப்பாக பிராமணர்-பிராமணரல்லாதார் மோதல் குறித்த உரையாடல்களைத் தொகுத்து, மகாதேவ் தேசாய் ஒரு குறிப்பு எழுதினார். ஒரு கேள்வியில் திருக்குறள் குறிப்பிடப்பட்டுள்ளது. 

“கேள்வி. நீங்கள் குறள் பற்றி அறிவீர்கள். இந்நூலின் ஆசிரியர் பிறப்பால் சாதி இல்லை என்று சொல்கிறார் என்பதை அறிவீர்களா? பிறப்பொக்கும் எவ்வுயிர்க்கும் என்கிறார் அவர். 

பதில்: நிகழ்கால அத்துமீறல்களுக்கு எதிர்வினையாக அவர் இதைச் சொல்கிறார். தாம் உயர்ந்தவர் என்று ஒரு வர்ணம் கூறிக்கொள்ளும்போது, அதற்கெதிராக அவர் குரலை எழுப்ப வேண்டியிருந்திருக்கும். ஆனால் அது வர்ணத்தின் வேரைப் பிறப்பிலிருந்து அறுக்கவில்லை. ஏற்றத்தாழ்வுகளின் வேரையறுக்கும் ஒரு சீர்திருத்தவாதியின் முயற்சியே இது.” (15)

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான். [972]

என்ற குறளை முன்வைத்து இந்த உரையாடல் நடைபெறுவதை உணரலாம்.

இது திட்டமிடப்பட்ட உரையாடல் இல்லையெனினும், காந்தி சரியான குறிளை விரைவாக அடையாளம் கண்டுகொண்டு அதைக்குறித்துப் பெருமளவு சரியான புரிதலுடன் விளக்குவதாகவே தெரிகிறது. 

அடுத்து, 1935ல், ஹரிஜன் இதழில் திருக்குறள் பற்றித் ‘தமிழ் மறை’ என்ற தலைப்பில் ஒரு சிறு கட்டுரையை காந்தி எழுதியுள்ளார். (16)

“திருவள்ளுவர் ஒரு தமிழ்த் துறவி. அவரை ஒரு ஹரிஜன நெசவாளர் என்கின்றன தொன்மங்கள். கி.பி. முதலாம் நூற்றாண்டில் அவர் வாழ்ந்ததாகக் கூறுகிறார்கள். புகழ்மிக்க திருக்குறளை அவர் அளித்துள்ளார் – திருக்குறள் புனித முதுமொழிகளைக் கொண்டது; தமிழர்களால் தமிழ்மறை என்று அறியப்படுகிறது; எம்.ஏரியலால், ‘மனிதச் சிந்தனையின் வெளிப்பாட்டில் மிக உயர்ந்த, தூய்மையானவற்றில் ஒன்று,’ என்று போற்றப்பட்டது. இதில் 1330 முதுமொழிகள் உள்ளன. பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பல ஆங்கில மொழிபெயர்ப்புகள் உள்ளன. ஹரிஜன மற்றும் பிற சேவைகளுக்காகச் சர்மாதேவி (சேரன்மாதேவி) ஆசிரமத்தை நிறுவிய வ.வே.சு.ஐயர் அண்மையில் ஒரு மொழிபெயர்ப்பைச் செய்திருந்தார். சர்மாதேவி ஆசிரமத்தையும், இந்த மொழிபெயர்ப்பையும் நாட்டுக்கு அர்ப்பணித்துவிட்டு மறைந்துவிட்டார். சர்மாதேவி இப்போது ஹிரிஜன் சேவா சமிதியின் வசம் உள்ளது. இந்த மொழிபெயர்ப்பின் இரண்டாம் பதிப்பில் 1000 பிரதிகள் மீதமுள்ளன. இந்த நூலின் விலை ரூ.5 ஆக இருந்தது. இப்போது ரூ.2/8 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்பாளர் எழுதியுள்ள ஒரு விரிவான முன்னுரையை இந்நூல் கொண்டுள்ளது. இதிலிருந்து வரும் வருமானம் ஹரிஜன சேவைக்காகப் பயன்படுத்தப்படும்.  வாசகர்களின் ஆர்வத்தைத் தூண்ட, இரண்டு குறள்களை நேர்ந்தவாக்கில் தேர்ந்தெடுத்து இங்கு தருகிறேன்.

தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது

இன்னுயிர் நீக்கும் வினை. [327]

இதனை ஆலிவர் கோல்ட்ஸ்மித் எழுதிய வரிகளோடு ஒப்புநோக்குவோம்:

‘சுதந்திரமாய் இப்பள்ளத்தாக்கில் உலவும் எந்த மந்தைக்கும்

மரணத்தை நான் விதிப்பதில்லை;

என்னைக்கண்டு இரங்கும் பேராற்றலால் கற்பிக்கப்பட்ட நான்,

அவற்றைக் கண்டிரங்கவும் கற்றுக்கொண்டேன்.’

அடுத்த தேர்வு:

உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி

விழிப்பது போலும் பிறப்பு. [339] 

இதனை வேர்ட்ஸ்வொர்த்தின் வரிகளோடு ஒப்புநோக்கலாம்:

மரணம் என்பது உறக்கமும் மறதியும் அன்றி வேறில்லை.’ “

காந்திக்குத் திருவள்ளுவர் ஒரு ஹரிஜன் என்றும், நெசவாளர் என்றும் கூறப்பட்டது இரட்டை ஈர்ப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும். அப்போது தீண்டாமை இயக்கமும், கதர் இயக்கமும் தான் அவரது ஈடுபாட்டை மிகவும் அதிகமாய்க் கோரிய இயக்கங்கள். திருவள்ளுவர் முன்வைக்கும் அன்பு, அறம், கொல்லாமை, வாய்மை, ஈகை என்ற பல கருத்துகள் காந்தியின் கருத்துகளுக்கு முழுக்கவே இணையானவை.

காந்தியின் முதன்மைச் சீடரான வினோபா, திருக்குறளை நன்றாகக் கற்றிருந்தார். பல உரைகளில் திருக்குறளைத் தமிழிலும் பிற மொழிகளிலும் மேற்கோள் காட்டுவார் என்று அவரோடு நெருங்கிப் பழகிய நாராயண் தேசாய், என்னுடன் நிகழ்ந்த ஒரு நேர்காணலில் குறிப்பிட்டார். காந்தியோடு தன் குழந்தைப் பருவத்தில் வளர்ந்த நாராயண் தேசாயை,  குஜராத்தில், அவரது சம்பூர்ண கிராந்தி வித்தியாலயத்தில் சந்தித்தபோது, புதிதாக வெளிவந்த ஒரு குஜராத்தி இலக்கியச் சிற்றிதழில் இருந்த திருக்குறள் பற்றிய ஒரு கட்டுரையை எனக்கு இந்தியில் மொழிபெயர்த்துப் படித்துக் காட்டியது ஒரு மறக்க முடியாத அனுபவம்.

காந்திகிராம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர், மார்க்கண்டன் அவர்களோடு ஒருமுறை உரையாடிக் கொண்டிருந்தபோது, வினோபாவிடம் அவர் ஏதேனும் செய்தி கேட்டதாகவும், அப்போது அவரது கைப்பட எழுதித்தந்த ஒரு குறள் பற்றியும் குறிப்பிட்டார்.

காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றின்

நாமம் கெடக்கெடும் நோய். [360]

ஆனால், காந்தியைப் பொருத்தவரை, இந்த இரு குறிப்புகளைத் தவிரத் திருக்குறள் பற்றிப் பேசியதற்கான வேறு தரவுகள் இதுவரை தென்படவில்லை. எனினும், ‘என் வாழ்க்கைதான் எனது செய்தி’ என்று சொன்னவரின் அச்செய்தியில் பல குறள்கள் மிளிரக் காணலாம்.

குறிப்புகள்:

  1. M.K.Gandhi, An Autobiography, Navajivan Publication, www.mkgandhi.org, Page 44
  2. Dr. G. U. Pope (1820.1908), translator of Thirukkural and Thiruvasagam, author of First Lessons in Tamil, A Handbook of the Ordinary Dialect of the Tamil Language, A Textbook of Indian History, etc.
  3. M.K.Gandhi, An Autobiography, Navajivan Publication, www.mkgandhi.org, Page 406
  4. G.U. Pope, First Lessons in Tamil: A Handbook of the Ordinary Dialect of the Tamil Language, London: W.H.Allen & Co. 1883, Part I, Page 5. 
  5. ibid…Part II, Pages 52-76.
  6. LETTER TO CHHAGANLAL GANDHI, Johannesberg, May 1, 1905, The Collected Works of Mahatma Gandhi, Volume 4
  7. THE LATE DR. POPE, The Collected Works of Mahatma Gandhi, Volume 8…Indian Opinion, 14-3-1908
  8. Leo Tolstoy, ‘A Letter to a Hindu’, Dec 14th, 1908….Indian Opinion, November 26, 1910. [Translation of the kurals as given in the original. Numbering of the Kurals done for this essay]
  9. LETTER TO MAGANLAL GANDHI, Tolstoy Farm [July 25, 1910], The Collected Works of Mahatma Gandhi, Volume 4
  10. LETTER TO G. A. NATESAN, Bombay, May 10, 1915, The Collected Works of Mahatma Gandhi, Volume 14
  11.  LETTER TO DEVDAS GANDHI, Ahmedabad, February 23, 1919, The Collected Works of Mahatma Gandhi, Volume 17
  12.  SPEECH AT GUJARATI SAHITYA PARISHAD, Ahmedabad, April 2, 1920, The Collected Works of Mahatma Gandhi, Volume 20
  13. TRUE ‘SHRADDHA’, The Collected Works of Mahatma Gandhi, Volume 39…Young India, 1-9-1927
  14. SPEECH AT PUBLIC MEETING, TUTICORIN, October 6, 1927, The Collected Works of Mahatma Gandhi, Volume 40…The Hindu, 8-10-1927.
  15. BRAHMIN-NON-BRAHMIN QUESTION, The Collected Works of Mahatma Gandhi, Volume 40…Young India, 24-11-1927
  16. TAMIL HOLY BOOK, The Collected Works of Mahatma Gandhi, Vol 67…Harijan, 6-7-1935 [Translation of the kurals as given in the original. Numbering of the Kurals done for this essay]

நம்ப ஆசைப்படுபவன் – பேர் லாகர்குவிஸ்டின் அன்பு வழி

பிப்ரவரி 10, 2019

பேர் லாகர்குவிஸ்டு எழுதிய அன்பு வழி (Par Lagerkvist – Barabbas) நாவலை முதலில் ஆங்கிலத்தில் படிக்கத்தொடங்கினேன். ஒரு சில அத்தியாயங்களுக்குப் பிறகு, தமிழுக்கு மாறிவிட்டேன். இதற்கு முன், பிற நூல்களைத் தமிழில் தொடங்கி ஆங்கிலத்தில் முடித்திருக்கிறேன். இது மாறுபட்ட அனுபவம்தான். சுவீடிஷ்ஷிலிருந்து ஆங்கிலம் வழியாக மொழிபெயர்க்கப்பட்டிருந்தாலும்கூட க.நா.சு.வின் மொழிபெயர்ப்பு ஆங்கில மொழிபெயர்ப்பைப் படிப்பதை விட மேலானதொரு வாசிப்பு அனுபவத்தைத் தந்தது [சொல்லுக்குச் சொல் இணையாக இல்லாவிட்டாலும், ஆங்கில மூலத்துக்கு நெருக்கமாகவே மொழிபெயர்த்திருக்கிறார். இரண்டாம் முறை மீண்டும் வேகமாக ஆங்கிலத்திலும் படித்து முடித்தேன். எந்த இடமும் நெருடவில்லை.] நல்ல மொழிபெயர்ப்புகளுக்கு இன்னும் அவசியம் இருப்பதாகவே நினைக்கிறேன். ஆங்கிலத்தில் நேரடியாக எழுதப்படாத உலக இலக்கியங்களை (நல்ல) தமிழிலேயே படிப்பது சில சமயங்களில் நிறைவாகவும், மனதுக்கு நெருக்கமாகவும் உள்ளது.

‘மனதை உய்விக்கிற இலக்கியத்தை, எப்போதாவது ‘அன்பு வழி’யைப் போன்ற ஒரு நாவலை எழுதிவிட முடியுமென்று நினைத்துத்தான் எழுதிப் போகிறேன்,’ என்று வண்ணநிலவன் கடல்புரத்தில் முன்னுரையில் குறிப்பிட்டிருப்பார். அந்த வகையில், அதிக எதிர்பார்ப்போடு நிகழ்ந்த முதல் வாசிப்பில் எனக்குக் கொஞ்சம் ஏமாற்றமாகத்தான் இருந்தது. ‘அன்பு வழி’ என்ற தலைப்பு காட்டிய தடத்தில் நான் எதிர்பார்த்தது பக்கத்துக்குப் பக்கம் பீறிடும் அன்பை. ஆனால், அங்கு அதிகமாகக் கண்டதோ, பீறிடத்துடிக்கும் அன்பை அடக்கி எழும் அவநம்பிக்கையை. எனினும் வண்ணநிலவனுக்காகச் செய்த இரண்டாம் வாசிப்பில் வேறு ஓர் உணர்வு கிடைத்தது; முதல் வாசிப்பில் விட்ட இடைவெளிகளை இரண்டாம் வாசிப்பில் நிரப்பிக் கொள்ள முடிந்தது; தொய்வாகத் தெரிந்த இடங்கள் அவ்வளவு தொய்வாகத் தெரியவில்லை. யேசு காட்டிய அன்பு வழியை மையமாகக் கொண்டிருந்தாலும், அன்பை அறிந்திராத, யாருக்கும் அன்பை வழங்கவியலாத பாரபாஸின் கதைதான் இது. ‘வானத்திலும் பூமியிலும் உள்ள எல்லாவற்றையும் வெறுத்து அவ்வெறுப்பிலே உயிர் வைத்திருந்தவன் பாரபாஸ்.’ தனக்குப் பதிலாக யேசு சிலுவையில் அறையப்படுவதை மறைந்திருந்து கண்ட நாள் முதலே ஒரு தேடல் தொடங்கியிருந்தாலும், அவனால் யேசு கடவுள் என்பதையோ கடவுளின் மகன் என்பதையோ அவர் புத்துயிர்ப்பு பெற்று மீண்டார் என்பதையோ நம்பமுடியவில்லை. லசாரஸைச் சந்தித்தபின் அவனை மரணத்திலிருந்து அவர் எழுப்பினார் என்பதை நம்பினாலும், அப்படி எழுப்பியிருக்கக்கூடாது என்று நினைக்கிறான். இந்த நம்பிக்கையின்மையே அவனை நீங்காப் பெருந்துயரில் ஆழ்த்துகிறது. அடிமைத்தனத்தின் அடையாளமான அவனது கழுத்துப்பட்டையில் ‘கிருஸ்து-ஏசு’ என்று பொறித்துக்கொண்டிருந்தாலும், விசாரணையின் போது அவரை நம்பாமலிருப்பதாகவே சொல்கிறான். பின் ஏன் அப்பெயரைப் பொறிக்கவேண்டும் என்று கேட்டதற்கு, ‘நான் நம்ப ஆசைப்படுவதால்’ என்கிறான். அப்பெயரை அடித்துவிடவும் ஒப்புக்கொள்கிறான்.

ஏசுவின் மீதான நம்பிக்கையின் பொருட்டு உயிரைத் துறக்கும் இரண்டு பாத்திரங்கள் பாரபாஸுக்கு நெருக்கமானவர்களாக வருகின்றனர். யேசுவுக்குச் சாட்சியம் கூறியதால் கல்லடிபட்டு மரணமடைந்த உதடு பிளந்த பெண்ணைப் பல காத தூரம் கைகளால் சுமந்து சென்று அடக்கம் செய்கிறான். அவனோடு பல காலம் சங்கிலியில் பிணைக்கப்பட்டிருந்த ஸஹாக் யேசுவை மறுக்க மறுத்து, மரணத்தைத் தேர்ந்தெடுக்கிறான். சிலுவைக்கு அனுப்பப்படுகிறான்.
/“உன் கடவுளை நீ மறுக்காவிட்டால், உன்னை யாரும் காப்பாற்றமுடியாது. நீ சாகவேண்டியதுதான்.”
‘என் பிரபுவை, என் கடவுளை நான் மறுப்பது எப்படி?”/

ஸஹாக்கின் மரணத்தையும் கண்ணீர் மல்க மறைந்து நின்று பார்க்கிறான் பாரபாஸ். ஆனால் எதுவும் பாரபாஸின் அவநம்பிக்கையை முழுவதுமாக அசைக்கமுடியவில்லை. ரோமாபுரியின் புதுமைகளாலும் அவனது வெறுப்பை அகற்ற முடியவில்லை.

‘பல தேசத்து மக்கள், பல பாஷை பேசுகிறவர்கள் இங்கு வந்து கூடினர். பொருளும் பணமும் ஏராளமாக எங்கும் இறைபட்டது. […] இதெல்லாம் கண்டு வேறு ஒருவனின் கண்கள் பரவசப்பட்டிருக்கும். பாரபாஸ் இதெல்லாவற்றையும் கண்டும் காணாதமாதிரி நடமாடினான். அவனுக்கும் இதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பது தெளிவு. இந்த உலகத்தின் படாடோபங்களைப் பற்றி அவனுக்கு என்ன கவலை? இது அவன் கவனத்துக்குரியதல்ல என்றே அவன் எண்ணினான். அப்படி அவனால் அலட்சியமாகவ இருக்கவும் முடியவில்லை. இதெல்லாம்பற்றி அவன் அடிமனதிலே ஒரு வெறுப்பும் தோன்றிக் கொண்டிருந்தது.’

அவன் இறுதியில் கிருத்துவத்துக்கு உதவுவதாக நினைத்துச் செய்யும் ஒரே செயலும் அதற்கு எதிரானதாக, சீசருக்கு இயைந்ததாக, ஒருவித துன்பியல்-நகைப்பில் முடிகிறது. யேசுவைச் சிலுவையில் ஏற்றுவதற்காக, முதலில் சிலுவையிலிருந்து விடுவிக்கப்பட்ட அவன் இறுதியில் சிலுவையிலேயே அறையப்படுகிறான்.

/அவன் ஆயுள் பூராவும் பயந்து நடுங்கிய சாவு நெருங்கியதை உணர்ந்ததும் அவன் சுற்றிச் சூழ்ந்திருந்த இருட்டைப் பார்த்து, அதனிடம் பேசுகிற மாதிரிச் சொன்னான்.

“என் ஆத்மாவை உனக்கு அளித்துவிடுகிறேன்.” /

அப்போதும் அவன் ஆத்மாவை அளித்தது இருளுக்கா, இறைவனுக்கா என்பது உறுதியாகத் தெரிவதில்லை.

வேறு எவரை விடவும் தனக்காகவே யேசு உயிர்விட்டதாக பாரபாஸ் கருதுகிறான். அப்படித் தனக்காக உயிர் துறந்த ஒருவனுக்காக பிறர் தமது உயிர்களையும் தரத் தயாராக இருக்கும் போது தன்னால் குறைந்தபட்சமான நம்பிக்கையைத் தர முடியவில்லையே என்பதுதான் பாரபாஸை வருத்திய உணர்வாக இருக்கவேண்டும். அந்த அவநம்பிக்கை தரும் குற்றவுணர்வே வெறுப்பாகவும் அக்கறையின்மையாகவும் மாறுகிறது. நம்ப விரும்புகிற ஒருவனுக்கு நம்பிக்கை வராத போது நிகழும் துயரமும், ஒரே சங்கிலியால் பல்லாண்டுகள் பிணைக்கப்பட்டாலும் மனம் பிணைக்கப்படாமல் தனிமையில் உழல்வதும், அத்தனை வெறுப்பையும் மீறி எப்போதாவது பீறிட்டெழும் அன்புமே பாரபாஸ்.

பாரபாஸை அடிமைப்படுத்தியிருந்த கவர்னரைப் பற்றிய ஒரு நுட்பமான சித்திரம் வருகிறது. இக்காலத்துக்கான பொருத்தப்பாடு கருதி, உக்கிரமான கதையினிடையே குறுமுறுவல் எழும்பியது.

/சில நாள்களில் கவர்னர் தனது பதவியிலிருந்து ஓய்வு பெற்றுக் கொண்டார். அவர் ஆட்சி செலுத்திய காலத்தில் தனக்கும் அரசாங்கத்துக்கும் நிறையப் பொருளீட்டினார். எத்தனையோ அடிமைகளும் அடிமை ஓட்டிகளும் இந்தப் பொருளீட்டுதலுக்கு உதவினார்கள். எத்தனையோ கொடுமைகள் எத்தனையோ பேர்வழிகளுக்கு இழைக்கப்பட்டன. அந்தத் தீவின் இயற்கை வளத்தையும் சுரங்கச் செல்வத்தையும் பூரணமாக ஆராய்ந்து லாபமடைந்தார் அந்த கவர்னர். ஆனால் அவர் கொடூர சித்தமுள்ள மனிதர் அல்ல. அவர் ஆட்சி கொடுமையாக இருந்ததே தவிர, அவர் நல்லவர்தான். அவரைக் குறை சொல்லக்கூடியவர்கள், அவரைச் சரியாகத் தெரிந்து கொள்ளாதவர்கள்தான். அவரைப் பலருக்குத் தெரியாது என்பதும் உண்மையே! எட்டாத உயரத்தில் இருந்தவர் அவர். அவர் போகப் போகிறார் என்றறிந்து கஷ்டப்பட்ட பலர் ஆறுதல் பெருமூச்சு விட்டார்கள். புதிதாக வருபவர் நல்லவராக இருக்க மாட்டாரா என்று அவர்கள் எண்ணினார்கள். ஆனால் அந்தப் பசுமையான அழகிய தீவை விட்டு மனசில்லாமல்தான் பிரிந்தார் அவர். அவர் பல சந்தோஷ நாட்களை அங்கு கழித்திருந்தார்./

நிற்க. அடிமைகளின் கழுத்துப்பட்டையை (ஆங்கிலப் பிரதியில் slave’s disk) க.நா.சு. எல்லா இடங்களிலும் தாலி என்றே மொழிபெயர்க்கிறார். அதில் ஏதாவது சிறப்புக் குறியீடு இருக்குமோ?


புதுமைப்பித்தனின் புதிய ந‍ந்தன் – இருவர் இருவிதமாகக் கண்ட ஒரே ஒளி

ஜனவரி 12, 2019

புதுமைப்பித்தனின் புதிய ந‍ந்தன் கதை நான் மொழிபெயர்த்துவரும் காந்தி தொகுதிக்காகத்தான் படித்தேன். காந்தி வந்துசேர்வதற்கு முன்பே கதை முடிந்துவிட்டாலும், மிகச்சரியான கதையைத் தான் சுனில் கிருஷ்ணன் தேர்வு செய்திருக்கிறார்.


காந்தியும் பெரியாரும்(/அம்பேத்காரும்) எதிரெதிர் துருவங்களாக நிறுத்தப்படும் இன்றைய சூழலில், 1934ல் வந்த இக்கதை, அவர்களது அத்தனை முரண்களுடனும், அவர்கள் இணைகிற புள்ளியை மையப்படுத்துகிறது.
முதல் மேலோட்டமான வாசிப்புக்குச் சாதாரணமான தொடக்க‍ கால சீர்திருத்தக்கதையாகத்தான் தெரிந்தது.


ஆனால் மொழிபெயர்ப்பதில் இருக்க‍க்கூடிய அனுகூலம், படைப்புக்குள் நம்மை ஆழ்ந்து செல்ல வைத்துவிடுகிறது. புதிய ந‍ந்தன் கதையில் பல்வேறு அடுக்குகள் நுட்பமாகப் புனையப்பட்டிருப்பது புரிந்தது.


இப்போதுதான் ந‍ந்தனார் திரைப்படம் பார்த்திருந்த‍தால், ந‍ந்தன் கதையின் நவீன வடிவம் நன்றாக மனதில் நின்றிருந்த‍து.

‘நந்தன் பறைச்சேரியில் விடை பெற்றுக்கொண்ட பிறகு, பறைச்சேரிக்கு என்னமோ கதிமோட்சம் கிடையாது. பழைய பறைச்சேரிதான். பழைய கள்ளுக்கடைதான்.’ போன்ற கூரிய வாசகங்களுடன் கதை தொடங்குகிறது. ஆங்கில ஆட்சி வந்த‍தே அறியாத நெடுந்தூக்க‍த்தில் அவர்கள் இருக்கிறார்கள்.


ஆங்கில ஆட்சி வந்த‍தன் அடையாளமாக முனிசிபல் விளக்கு வந்துவிடுகிறது. ஆனால் அதுவும் தீண்டப்படாமல் இருக்க, மரியாதையான தூரத்திலேயே இருக்கிறது.


ந‍ந்தன் ஆண்டையிடம் அடிமைப்பட்டிருப்பதாக உணர்வதே இல்லை. அவனது அனுமதிக்காகவும் ஆணைக்காகவும் காத்திருக்கிறான். கருப்பனும் அப்படித்தான். தன்னை அக்கிரகாரக் கிணற்றில் நீரள்ளிக் குடித்த‍தற்காக அடித்துக் குருடாக்கிய ஆண்டையிடம்தான் கடைசிவரை காவலனாக வேலை செய்கிறான். அவன் கிணற்றில் நீரள்ளியது புரட்சி செய்வதற்காக அல்ல; அது அறியாமையால் நிகழ்ந்த விபத்து.


பெரிய நிலக்கிழார்களாக இருந்தவர்கள் பிரித்தானிய அரசாங்க வேலைகளில் சென்று சேர்கிற சித்திரமும் வருகிறது. அப்படியானவர்களின் அடுத்த தலைமுறை காந்தியின் உந்துதலால் ஏற்பட்ட லட்சிய வேகத்தில் பெரும் மன மாற்றமடையும் சித்திரமும் வருகிறது. பழைய வேதியர் வழியில் வந்த புதிய வேதியரான பெரிய பண்ணையாகவும், சப்-ரெஜிஸ்டிராராகவும் இருந்தவரின் பிள்ளையான ராமநாதன், எம்.ஏ. படித்து கலெக்டராவதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கும்போது காந்தியின் உப்பு சத்தியாகிரகத்தால் ஈர்க்கப்பட்டு எல்லாவற்றையும் உதறிவிட்டு சிறைக்குச் செல்கிறான்.


என்னதான் ஆண்டைக்கு விசுவாசமாக இருந்தாலும் கருப்பனும் பிள்ளையை ஆண்டை மாதிரி ஆக்குகிறேன் என்று மதம் மாற்ற வந்த ஜான் ‘ஐயர்’ என்கிற போதகர் ஆசை காட்டும்போது இணங்குகிறான். மகன் ஆங்கிலம் படிக்கவேண்டும் என்கிற ஆசையும் அவனுக்கு உள்ளது. ஆங்கிலத்துக்கு ‘இங்குருசி’ என்ற சொல்லைப் புதுமைப்பித்தன் பயன்படுத்துகிறார். இன்றும் இந்தியில் அங்கிரேசி என்றுதான் சொல்கிறார்கள்.


ஆனால் மகனை முன்னேற்றிவிட வேண்டும் என்று நினைக்கிற கருப்பன், ஆண்டையின் மகன் தன் மகளைத் திருமணம் செய்துகொள்ள விரும்பும்போது, பெரும் பாவம் என்று சொல்லி மறுக்கிறான். முன்னேற வேண்டும் என்கிற நினைப்பை, சாதியப்பழைமையில் ஊறிய உணர்வுகள் சமன்செய்துவிடுகின்றன.

கருப்பனின் மகன் பாவாடை தானியேல் ஜான் ஆகி, கிருத்துவத்திலும் சாதி மறையவில்லை என்பதை அறிந்து முதல் விலக்கம் கொள்கிறான். வேளாள ஜான் ஐயர் வேளாளராகவே இருக்கிறார் – தானே முன்னின்று மதம்மாற்றிய தானியேலை “பறக்கழுதை வீட்டைவிட்டு வெளியே இறங்கு” என்று கழுத்தைப் பிடித்து நெட்டித் தள்ளுகிறார்.


பின்னர் கத்தோலிக்க மத‍த்தைத் தழுவி ‘சுவாமியார்’ ஆகப் பயிற்சிபெறுகிறான். அங்கும் ‘சில சுவாமியார்களின் இயற்கைக்கு விரோதமான இச்சைகளும், மனதிற்குச் சற்றும் சாந்தி தராத இரும்புச்சட்டம்’ ஆகியவற்றைப் புதுமைப்பித்தன் சுட்டுகிறார்.


தானியேல் ராமசாமிப் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் இணைகிறான். தோழர் நரசிங்கம் ஆகிறான். ராமநாதனுக்கும் தன் தங்கைக்கும் திருமணம் செய்துவைக்க வேண்டும் என்று தந்தையைக் கட்டாயப்படுத்துகிறான் நரசிங்கம். ஆனால் அவனாலும் கருப்பனின் நம்பிக்கையைத் தகர்க்கமுடிவதில்லை.


தமிழ்நாட்டுக்கு ஹரிஜன நிதி திரட்ட வரும் காந்தியை ஆதனூருக்கு வருவதற்கு ஏற்பாடு செய்கிறான் ராமநாதன். அவனது சனாதனத் தந்தையும் பெரியாரிய நரசிங்கமும் காந்தியிடம் வாதம் செய்து வெல்லக் காத்திருக்கிறார்கள்.


ராமநாதனும் நரசிங்கமும் – இரண்டு பேரும் ஒரே உண்மையை இரண்டு விதமாகக் கண்டார்கள். புதிய ஒளியை இருவிதமாக‍க் காண்கின்றனர்.


ஆனால் இறுதியில் அவர்கள் இருவரும் கருப்பனை ரயிலில் அடிபடாமல் காக்க முயன்று மூவருமாய் இரத்தக்களரியில் மடிந்து, மூவரது இரத்தமும் கலக்கும்போது, கருப்பனும் அதே ஒளியை வேறுவிதமாக‍க் கண்ட‍டைந்திருப்பான் என்பதை ஆசிரியர் நேரடியாக‍க் கூறாமல் விட்டுவிடுகிறார்.


உண்மையில், இது மூன்று பேர் மூன்று விதமாக‍க் கண்ட ஒரே ஒளிதான்.


2018ல் படித்தவை

ஜனவரி 3, 2019

கூட்டிக்கழித்துப் பார்த்தால், சென்ற ஆண்டு சிறிதும் பெரிதுமாக, ஆங்கிலத்திலும் தமிழிலுமாக நிறையப் படித்திருப்பதாகத்தான் தெரிகிறது. ஆனாலும் நிறைவாக இல்லை என்றுதான் சொல்லவேண்டும். படித்து முடிக்க நினைத்த புத்தகங்கள் பலவும் முடிக்கப்படாமல் காத்திருக்கின்றன. பாதியில் தொக்கிக்கொண்டும், புத்தக அடுக்குகளில் புதையுண்டும் பல புத்தகங்கள் காத்துக்கிடக்கின்றன.

இந்த ஆண்டின் கணிசமான பகுதியைக் கவிதைகளோடு கழித்தேன். பட்டியலில் இடம் பெறாத புறநானூறு, குறுந்தொகை, திருக்குறள்-காமத்துப்பால் என்று பழந்தமிழ் இலக்கியங்கள் தொடங்கி கொங்குதேர் வாழ்க்கை (தமிழினி), இசை, போகன் சங்கரின் கவிதைகள் வரை தமிழிலும், ஆங்கிலத்திலும் கவிதை நூல்கள், இணைய தளங்கள் என்று ஆண்டு முழுவதும் கவிதையின் வாசனையை முகர்ந்துகொண்டும் தெரிந்துகொள்ள முயன்றுகொண்டும் இருந்தேன். (கூடவே தொடரும் மொழிபெயர்ப்பு முயற்சிகளும்.)

1984 – பல ஆண்டுகளாகப் படித்துப்படித்துக் குறிப்பான காரணம் ஏதுமின்றி பாதியில் விட்ட புத்தகம். இவ்வாண்டு முழுவதுமாய்ப் படித்துவிட்டேன். வலிமையான அரசுகள், தனிமனிதச் செயல்பாடுகளை வேவு பார்த்தல் ஆகியவை அதிகரித்து வரும் இக்காலகட்டத்தைக் கட்டியம் கூறும் நாவல். மேற்கோள்களுக்காக அடிக்கடி அங்கே செல்லப்போகிறேன் என்பது உறுதியாகப் புலப்படுகிறது. பாதியில் நிற்கும் மார்கரெட் ஆட்வுட்டின் Handmaid’s Tale இதே ரகம். ஜனவரியில் முடித்துவிட வேண்டும்.

ஹோமரின் இலியட், ஒடிசி ஆகிய நூல்களும் பல ஆண்டுகளாய்ப் படித்து விடுத்து எடுத்து, இவ்வாண்டு முடித்திருக்கிறேன். அலெக்ஸாண்டர் போப் மொழிபெயர்ப்பு அபாரமானது. மூலத்துக்கு நெருக்கமாகக் கருதப்படும் வேறு சில நவீன மொழிபெயர்ப்புகளையும் ஒப்புநோக்கியே படித்துக்கொண்டிருந்தேன். ஆனால், ஹோமரின் உச்சங்களைப் போப் போல யாராலும் தொடமுடியவில்லை. ஒடிசியின் பல பகுதிகளை போப் எழுதவில்லை என்றும், நேர நெருக்கடியால் வேறு இருவருக்கு அயலாக்கம் (outsource) செய்துவிட்டார் என்றும் அறிந்தேன். மொழிபெயர்ப்பில் இலியடின் நேர்த்தி ஒடிசியில் நூல் முழுவதும் சீராக இல்லை என்றே சொல்லலாம்.

டால்ஸ்டாயின் Resurrection (புத்தியிர்ப்பு) என்னோடு பல காலம் தங்கியிருக்கப்போகிற இன்னொரு புத்தகம். நான் படித்துள்ள மிக முக்கியமான நாவல்களில் ஒன்று. நம் சமூக அமைப்பின் மீதும் சட்ட அமைப்பின் மீதும் பல நுட்பமான கேள்விகளை எழுப்புகிறது.

சி.எஸ்.புஸ்பராஜாவின் ‘ஈழப்போராடத்தில் எனது சாட்சியம்’ தமிழ்ச்சூழலில் இன்னும் அதிகம் பேசப்பட வேண்டிய நூல். 70களில் ஈழத்தில் ஆயுதப் போராட்டம் தொடங்கிய பின்னணியை அறிய உதவும் நூல்.

இரா.குப்புசாமியின் அறிவு நிலைகள் பத்து தமிழினி வசந்தகுமாரின் அழுத்தமான சிபாரிசின் பேரில் படிக்கத்தொடங்கினேன். அவர் சொன்னதைக் காட்டிலும் சிறப்பாக இருந்தது.

வினோபாவின் வாழ்க்கை வரலாறான Moved by Love முன்பொரு முறை படித்ததைக் காட்டிலும் இப்போது ஆழமாய் மனதைத் தொட்டது.

Slaughterhouse Five அவல நகைச்சுவையோடு போரின் அபத்தத்தை அழுத்தமாய்ப் பேசிய நூல்.

Whereas, Citizen: An American Lyric ஆகிய இரண்டும் அமெரிக்காவில் ஆதிகுடிகளும் கறுப்பின மக்களும் ஒழிக்கப்பட்ட/ஒடுக்கப்பட்ட, ஒடுக்கப்படும் வரலாற்றின்மீது கூர்மையான கவிதைகளின் மூலம் ஒளிபாய்ச்சும் நூல்கள்.

Things Fall Apart – ஐரோப்பிய மிசனரிகள் ஆப்பிரிக்கப் பழங்குடி சமூகத்தில் கிருத்துவத்தைப் பரப்பிய போது ஏற்பட்ட சிக்கல்களைப் பேசிய நூல். ஆங்கிலம் பேசாத ஒரு பகுதியின் கதையை ஆங்கிலத்தில் இவ்வளவு அழகாகச் சொன்ன நாவல்கள் வேறு உள்ளனவா என்று தெரியவில்லை. குறிப்பாக ஆப்பிரிக்கப் பழமொழிகளையும் மக்கள் வழக்குகளையும் ஆங்கிலத்தில் கொண்டுவந்திருந்த விதம் ஒரு சிறப்பான முன்மாதிரியாகத் தெரிகிறது. வேற்று மனிதர்கள் தம் பண்பாட்டினைத் திணிக்கும் முன் அச்சமூகமே மாற்றத்துக்கான ஏக்கத்துடன் சிதைவுற்றுக் கொண்டிருப்பதையும் சினுவா அசபே சித்தரித்திருப்பார்.

பசி, கில்காமெஷ் போன்ற பல நூல்களைத் தமிழுக்குக் கொண்டுவந்திருக்கிறார் க.நா.சு. என்பதை ஒவ்வொரு முறையும் ஒரு நன்றியுணர்வுடனேயே நினைத்துப்பார்த்துக்கொள்கிறேன்.

ஆஸ்கார் வைல்டின் The Picture of Dorian Gray ஆரம்பத்தில் ஆஸ்கார் வைல்டின் நகைமுரண் மேற்கோள்களைத் தொகுத்துப் போட்ட மாதிரி இருந்தாலும், பின்னர் வேறொரு தளத்துக்கு நகர்கிறது. தமிழில் வானகெட், ஆஸ்கார் வைல்ட் போன்றவர்களின் கூர்மையான அங்கதமும் நகைமுரணும் கொண்ட உரையாடல்களுக்குப் பஞ்சம்தான். இவற்றைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்களா என்று தெரியவில்லை; மொழிபெயர்ப்பது பெரும் சவாலாகவே இருக்கும். ஆனால், தமிழுக்கு ஒரு புதிய பரிணாமத்தைக் கூட்ட இயலும்.

ஜூரெக் பெக்கரின் கட்டுரைத் தொகுப்பினை நூலகத்தில் எதேச்சையாகக் கண்டெடுத்தேன். அற்புதமான எழுத்தாளர். சிறு பிள்ளையாக இருந்தபோது யூத வதை முகாம்களில் இருந்து பின்னர் கிழக்கு ஜெர்மனியில் வளர்ந்தவர். உலகப் போருக்குப் பின்னர் ஜெர்மனியில் வாழ்ந்த யூதர் என்கிற முறையிலும், மேற்கு ஜெர்மனிக்கு குடிபெயர்ந்து விட்டாலும் சோசியலிசம் மீது மதிப்பு கொண்டிருந்தவர் என்கிற முறையிலும் அவரது கருத்துகள் கவனிக்கப்பட வேண்டியவை.

சந்தியா பதிப்பக வெளியீடாக வந்துள்ள ‘வைர ஊசி’ அஸ்வகோஷர் எழுதியதாகச் சொல்லப்படுகிறது. பாரதி வைர ஊசி என்ற உபநிஷத்தை மொழிபெயர்த்து ‘பிராமணன் யார்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியுள்ளான். இவ்விரண்டையும் தொகுத்து விரிவாக ஒரு குறிப்பு எழுதியுள்ளேன். விரைவில் பதிவிட வேண்டும்.

கஸ்தூர்பா குறித்த சுசீலா நய்யாரின் நினைவலைகளைப் படித்த உந்துதலில்தான் கஸ்தர்பா மீதான நீண்ட கட்டுரையை தமிழினி இதழில் எழுதத் தொடங்கினேன்.காந்திக்கும் கஸ்தூர்பாவுக்கும் இருந்த அற்புதமான உறவையும், கஸ்தூர்பாவின் கடைசிக் காலங்களில், சிறையில், காந்தி அவரை கனிவுடனும் அக்கறையுடனும் அர்ப்பணிப்புடனும் கவனித்தகொண்டதையும் பேசுகிற முக்கியமான சிறிய நூல் இது.

பன்னாலால் தாஸ்குப்தாவின் Revolutionary Gandhi காந்தி பற்றி நான் படித்த நூல்களில் மிகவும் முக்கியமான ஒன்று. இதற்கு ஒரு விரிவான மதிப்புரை எழுதுவதற்காக இந்நூலை இவ்வாண்டு மறுவாசிப்பு செய்யக் கிடைத்தது ஒரு நல்ல வாய்ப்புதான்.

சகுந்தலை பற்றிய ரோமிலா தப்பாரின் நூல் ஒரு வித்தியாசமான முயற்சி. மகாபாரதத்தில் வரும் சகுந்தலை கதை, காளிதாசனின் நாடகம், பிற சகுந்தலை கதைகள், காலினிய காலத்தில் வந்த சகுந்தலை மொழிபெயர்ப்புகள், அவற்றின் காலம், களம், தாக்கம், மொழிபெயர்ப்புகளுக்குக் கிடைத்த எதிர்வினைகள் என்று அனைத்தையும் தொகுத்து விரிவாக ஆய்வு செய்யும் ஒரு நூல்.

பாவண்ணனின் நூறு சுற்றுக் கோட்டை கன்னட இலக்கியத்தின் முக்கியமான எழுத்தளர்களுக்கு அறிமுகமாக அமையும் ஒரு அருமையான தொகுப்பு.

எம்.கோபாலகிருஷ்ணனின் மனைமாட்சி நூல் வெளியீட்டு விழாவில் என்னைப் பேச அழைத்திருந்ததை ஒட்டி அவருடைய பல படைப்புகளைப் படித்து முடித்தேன். அவரது இரண்டு சிறுகதைத் தொகுதிகளும் மிகவும் ஈர்த்தன. சு.வேணுகோபாலின் பூமிக்குள் ஓடுகிறது நதி தொகுப்பிலும் பல சிறப்பான சிறுகதைகள் உள்ளன.

அம்புப்படுக்கை நண்பர் சுனில் கிருஷ்ணனுக்கு சாகித்ய அகாதெமியின் யுவ புரஸ்கார் பெற்றுத்தந்த நூல். அது குறித்தும் ஏற்கனவே எழுதியுள்ளேன்.

என் மகளோடு சேர்ந்து படித்த சில புத்தகங்களும் உண்டு. நான் சிறுவயதில் முதன்முதலாகச் சுருக்கப்பட்ட வடிவில் படித்த ஆங்கில நாவல் Black Arrow. மகள் சுருங்கிய நாவலைப் படிக்க நான் முழு நாவலைப் படித்தேன். அடிக்கடி நாங்கள் ஆடும் இந்த ஆட்டம் பிடித்துள்ளது. அவள் படித்த நூல்களின் பட்டியல் ஒன்றும் உள்ளது. அவள் அனுமதி கொடுத்தால் விரைவில் வெளியிடுகிறேன் 🙂

எதிர்பாராமல் இவ்வாண்டு படித்தவை Game of Thrones வரிசை நாவல்கள். Binge reading செய்து வெகுசில நாட்களில் முடித்தேன். தொலைக்காட்சித் தொடருக்கு இணையான சுவாரசியத்தோடு இருந்தன. இப்படியான அதீத கற்பனை கொண்ட மிகு புனைவுகளையும் வணிக எழுத்துகளையும் அவ்வப்போது படிக்க வேண்டும் என்று முடிவுசெய்துள்ளேன்.

எழுத்தாளர்கள் எப்போதும் விருதுபெறும்போது மனைவிக்கு நன்றி சொல்வார்கள். அதுபோல, வாசகனாக, புத்தகங்கள் வாங்குவதற்கு நிதி ஒதுக்கீடு செய்து, படிப்பதற்கு அனுமதி தந்து, அதற்கான நேரத்தையும் சூழலையும் ஏற்படுத்தித்தந்து, போட்டி போட்டுக்கொண்டு தானும் படித்து ஒரு நீளமான பட்டியலைக் கைவசம் வைத்துள்ள மனைவிக்கு ஒவ்வொரு ஆண்டும் நன்றி சொல்லிவிடுவதென்றும், அவரது அனுமதியோடு முடிவுசெய்துள்ளேன்.

தமிழில்: (படித்துமுடித்த வரிசையில்)

  1. என் தந்தை – சகுந்தலா பாரதி
  2. சுயசரிதை, பாரதி அறுபத்தியாறு – பாரதி
  3. ஈழப்போராடத்தில் எனது சாட்சியம் – சி.எஸ்.புஸ்பராஜா
  4. சிவாஜி கணேசனின் முத்தங்கள் – இசை
  5. இறுதி யாத்திரை – எம்,டி.வாசுதேவன் நாயர் (தமிழில் கே.வி.ஷைலஜா)
  6. யுத்தங்களுக்கிடையில் – அசோகமித்திரன்
  7. மரநிறப் பட்டாம்பூச்சிகள் – கார்த்திகைப் பாண்டியன்
  8. செம்புலம் – முருகவேள்
  9. காலவெளி – விட்டல் ராவ்
  10. பூமிக்குள் ஓடுகிறது நதி – சு.வேணுகோபால்
  11. எல்லாம் கலந்த காற்று – கலாப்ரியா
  12. அறிவு நிலைகள் பத்து – இரா.குப்புசாமி
  13. ஆகாயத் தாமரை – அசோகமித்திரன்
  14. ஏழாம் உலகம் – ஜெயமோகன்
  15. குண்டலகேசி – இந்திரா பார்த்தசாரதி
  16. பசி – நட் ஹாம்சன் (க.நா.சு) (Hunger – Knut Hamsun)
  17. மண்ணில் தெரியுது வானம் – ந.சிதம்பர சுப்பிரமணியன்
  18. அம்புப் படுக்கை – சுனில் கிருஷ்ணன்
  19. ஜெயமோகன் குறுநாவல்கள்
  20. தந்திர பூமி – இந்திரா பார்த்தசாரதி
  21. காலம் – வண்ணநிலவன்
  22. பிறிதொரு நதிக்கரை – எம்.கோபாலகிருஷ்ணன்
  23. மனைமாட்சி – எம்.கோபாலகிருஷ்ணன்
  24. முனிமேடு – எம்.கோபாலகிருஷ்ணன்
  25. அம்மன் நெசவு – எம்.கோபாலகிருஷ்ணன்
  26. புயல் – ரவீந்திரநாத் தாகூர் (த.நா.குமாரசாமி) (Noukadubi – Rabindranath Tagore)
  27. நூறு சுற்றுக் கோட்டை – பாவண்ணன்
  28. பனி மனிதன் – ஜெயமோகன்
  29. வைர ஊசி – அஸ்வகோஷர்
  30. கில்காமெஷ் – மொழிபெயர்ப்பு: க.நா.சு
  31. எரிவதும் அணைவதும் ஒன்றே – போகன் சங்கர்
  32. இத்தாலியத் திரைப்பட மேதை டி சிகா – எஸ்.ஆனந்த்

ஆங்கிலத்தில்:

  1. 1984 – George Orwell
  2. Titus Andronicus – Shakespeare (RR)
  3. Slaughterhouse Five – Kurt Vonnegut
  4. The court statement of Nathuram Vinayak Godse
  5. Moved by Love – Vinoba Bhave (Kalindi/Marjorie Sykes) (RR)
  6. J.P. A Biography – Allan Scarfe, Wendy Scarfe
  7. Sakuntala – Texts, Readings, Histories – Romila Thappar
  8. Annihilation of Caste – Ambedkar (RR)
  9. The Shattered Thigh and other plays – Bhasa (Translated by A.N.D.Haskar)
  10. Rhyming Rilke – Rainer Maria Rilke (Tr. Rolf A. Eberle)
  11. Resurrection – Leo Tolstoy
  12. The Black Arrow – R.L.Stevenson (RR)
  13. Government Brahmana – Aravind Malagatti (Tr. Dharani Devi Malagatti, Janet Vucinich, N. Subramanya)
  14. Hadji Murad – Leo Tolstoy
  15. Game of Thrones series – George R.R.Martin
  16. The Illiad – Homer (Tr.Alexander Pope)
  17. Charlie and the Chocolate Factory – Roald Dahl
  18. The Odyssey – Homer (Pope, Emily Wilson, Robert Fitzgerald, Robert Fagles)
  19. Chasing the Monsoon – Alexander Frater
  20. Whereas – Layli Long Soldier
  21. If not, Winter – Fragments of Sappho – Anne Carson
  22. Gandhi on Health – Mark Lindley
  23. Kasturba – A personal Reminiscence – Sushila Nayar
  24. Gandhiji on Religious Conversion – Sandhya Mehta
  25. Things Fall Apart – Chinua Achebe
  26. Arms and the Man – G.Bernard Shaw (RR)
  27. Waiting for Godot – Samuel Beckett
  28. Citizen: An American Lyric – Claudia Rankine
  29. Revolutionary Gandhi – Pannalal Dasgupta (RR)
  30. Rubaiyat of Omar Khayyam – Edward FitzGerald
  31. The Picture of Dorian Gray – Oscar Wilde
  32. Typhus – Jean-Paul Sartre (Tr. Chris Turner)
  33. My Father, The Germans and I : Essays, Lectures, Interviews – Jurek Becker (Edited by Christine Becker)

(RR – Books that I re-read this year – இவ்வாண்டு மீண்டும் வாசித்த புத்தகங்கள்)

2017ல் படித்தவை

2016ல் படித்தவை

2015ல் படித்தவை


கில்காமெஷ் – நம்காலத்தைப் பேசும் ஆதிகாவியம்

திசெம்பர் 27, 2018

உலகின் ஆதிகாவியமாகக் கருதப்படும் கில்காமெஷ் (c. 2100 BCE) தமிழில் க.நா.சு. மொழிபெயர்ப்பில் கிடைக்கிறது (சந்தியா பதிப்பகம்). சுமேரிய மொழியில், குனிப்பார்ம் எழுத்துகளில் பொறிக்கப்பட்ட பல கற்கள் கிடைத்து, அவற்றிலிருந்து பலரது பங்களிப்பால் புரிந்துகொண்டு தொகுக்கப்பட்டது இக்காவியம்.

அதிலேயே சமகாலச் சிக்கல்கள் பலவற்றின் வேர்களைக் காணலாம்.

இதன் நாயகன் கில்காமெஷ். ‘எந்தக் கன்னிப் பெண்ணையும் அவள் காதலுக்கு அவன் விட்டு வைப்பதில்லை. பிரபுவின் மனைவியானாலும் சரி, போர் வீரனின் பெண்ணானாலும் சரி – எல்லாரும் அவன் பௌருஷத்துக்குப் பலியாகிவிடுகிறார்கள். ஆனால் இவன் மன்னன். நாட்டுக்குக் காவலன்; அறிஞன்; ஞானி; அழகன்; தீர்மானமுள்ளவன்.’

கில்காமெஷ் பெண்களிடம் அத்துமீறுவதைப் பொறுக்கமுடியாமல், தேவர்கள் அவனுக்குச் சமமான வலிமையுடன் எங்கிடுவைப் படைக்கிறார்கள். ஆனால், எங்கிடுவை ஒரு பெண் மூலமாகவே மயக்கி நகரத்து ஈர்க்கிறான் கில்காமெஷ். எங்கிடுவைத் தோற்கடிக்கிறான். எங்கிடு அவனது உற்ற நண்பனாக மாறுகிறான். ஆனால் அதன் பிறகு கில்காமெஷ் பெண்களிடம் எப்படி நடந்துகொள்கிறான் என்பது குறித்து எந்தக் குறிப்பும் இல்லை.

கில்காமெஷும் எங்கிடுவும் சேர்ந்து, கிருஷ்ணன்-அர்ச்சுனனை நினைவுபடுத்தும் வகையில், செடார் மரங்கள் நிறைந்த ஒரு காட்டினை அழிக்கிறார்கள். அந்த காட்டின் ரட்சகனாக இருக்கும் ஹம்பாபா ஒரு ராட்சசனாகக் காட்டப்படுகிறான். கில்காமெஷ் ஹம்பாபாவை வீழ்த்த சூரியக்கடவுளான காமாஷின் உதவியைக் கோருகிறான்.

கில்காமெஷ் நூலின் இப்பகுதியில் சில கவித்துவமான வரிகள் உள்ளன.

‘காமாஷ் இரவு உறங்கப் போய்விட்டான். அவன் தாயின் மடியில் வெளிச்சம் நிறைந்த தன் முகத்தைப் புதைத்துக்கொண்டு அவன் உறங்குகிறான்.’

காமாஷிடம் கில்காமெஷ்,

“ஹம்பாபாவின் இருப்பிடம் நோக்கி நான் ஒரு நீண்ட பயணம் மேற்கொண்டேயாக வேண்டும். இந்தக் காரியத்தை என்னால் செய்து முடிக்கமுடியாவிட்டால் ஏன் நீ இந்த எண்ணத்தை என் மனதில் தோற்றுவித்தாய்? நீ எனக்கு உதவி செய்ய மறுத்தால் நான் எப்படி என் காரியத்தில் வெற்றி பெற முடியும்?”

என்று முறையிடுகிறான். காமாஷ் உதவுகிறான். நண்பர்கள் இருவரும் செடார் மரங்களை வெட்டத் தொடங்குகின்றனர்.

/செடார் மரம் விழுகிற சப்தம் கேட்டு விழித்துக்கொண்ட ஹம்பாபா கோபத்துடன் உரத்த குரலில் காடு அதிர, “யாரடா அவன் என் இருப்பிடம் வந்து என் செடார் மரத்தை வெட்டுவது? யாரடா அவன்?” என்று கத்தினான்./

ஹம்பாபா கில்காமெஷுக்கு ஈடுகொடுக்கமுடியாமல் சரணடைந்தபோதும், நண்பர்கள் இருவரும் அவனை கொன்றுவிடுகின்றனர். செடார் மரங்களை வெட்டி, வேர்களை எரித்து, எடுத்துச்செல்கின்றனர். மரத்தைக் காக்கப்போரிடும் ‘ராட்சசன்’ நகரங்களைக் கட்டமைக்கும் வீர மனிதர்களிடம் தோற்கிறான்.

பின்னர் இங்கிடுவின் மரணத்துக்குப் பிறகு, கில்காமெஷ் மரணமிலா வாழ்வினை நாடிப் பெரும்பயணம் மேற்கொள்கிறான். மரணத்தை வென்று வாழும் உத்னபிஷ்டிம் என்பனைச் சந்திக்கிறான். உத்னபிஷ்டிம் நோவாவைப் போலவே ஒரு பெரும் பிரளயத்தைச் சந்தித்தவன். கடவுள் எச்சரிக்கை செய்ததால், அவனும் ஒரு படகினைக் கட்டி, அதில் விலங்குகளோடு குடியேறி பிரளயத்திலிருந்து தப்புகிறான்.

உத்னபிஷ்டிம், ‘மரணத்தை வெல்வதிருக்கட்டும்; முதலில் உன்னால் உறக்கத்தை வெல்லமுடிகிறதா பார்’ என்று கூறுவதுபோல், கில்காமெஷை ஏழு இரவுகள் உறங்காமலிருக்கச் சொல்கிறான். அவனோ ஏழ நாட்களையும் உறங்கியே கழிக்கிறான்.

மரணத்தை வெல்வதில் தோல்வியுற்ற கில்காமெஷுக்கு, உத்னபிஷ்டிம் மூப்பினை வெல்லும் ஒரு மலர் கடலுக்கடியில் இருப்பது பற்றிக் கூறுகிறான். அந்த மலரை கடலுக்கடியில் மூழ்கித் தேடி எடுத்துச் செல்கிறான் கில்காமெஷ். ஆனால், அவன் ஏமாந்த வேளையில், அதையும் ஒரு பாம்பு உண்டுவிடுகிறது.

மரணத்தையும் மூப்பையும் வெல்லமுடியாமல் தனது ஊரான ஊருகி திரும்பிய கில்காமெஷ் இந்தக் கதையை கல்லில் பொறிக்கிறான். பின்னர் இறந்துபோகிறான். ‘அவன் மகாபலசாலி – அவன் கைகளில் வீரம் செயல்பட்டது. அவன் செய்யாத தீரச் செயல்கள் இல்லை. ஆனாலும் அவன் மீண்டும் வரமாட்டான்.’

பல்லாயிரம் ஆண்டுகளாக மனிதன் இயற்கையோடும் நிலையாமையோடும் பொருது கொண்டிருக்கிறான்.


கரையேறாக் கரவுகள்

திசெம்பர் 4, 2018

/நீங்கள் நான்கு மொழிகளில் புலமைபெற்றிருக்கிறீர்கள். பிற மொழியறிவு உங்கள் படைப்பு மொழிக்கு எத்தகைய வலுசேர்த்திருக்கிறது?

பிறமொழி அறிவு தமிழை மேலும் செழுமைப்படுத்த உதவுகிறது. சொல்வளத்தைப் பெருக்குகிறது. குறிப்பிட்ட ஒரு பிறமொழிச் சொல்லுக்கான தமிழ்ச் சொல்லைத் தேடும்போது ஏற்கெனவே நாம் அறிந்த ஒரு சொல்லைத் தவிர, இதுவரையிலும் நாம் பயன்படுத்தாத சொற்களையும் அறிந்துகொள்ள முடிகிறது.

மொழியில் கச்சிதம் கூடுகிறது. மிகச் சரியான, பொருத்தமான சொல்லை இட வேண்டும் என்கிற முனைப்பையும் அக்கறையையும் உண்டாக்குகிறது. தவிர, வேறொரு மொழியைக் கற்றுக்கொள்வது என்பது அதனுடனான கலாச்சாரத்தையும் இலக்கியத்தையும் அறிந்துகொள்வதுதான். புனைவெழுத்தாளனுக்கு இது மிக அவசியமானது./

தமிழ் இந்துவில் வந்துள்ள பேட்டியில் எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணன் சொல்கிற இந்த கருத்து இன்னும் அதிக கவனமும் விரிவும் பெறவேண்டிய ஒன்று. பிறநாட்டு நல்லறிஞர் நூல்களைத் தமிழ்மொழியில் பெயர்க்கும்போது மொழியில் சொல்வளமும் கருத்துவளமும் கூடுகிறது; மொழிமீதான நமது (மொழிபெயர்ப்பவனின்) ஆளுமையும் அதிகரிக்கிறது.

நான் அண்மையில் சில ஆங்கிலக் கவிதைகளையும் சிறுவர்களுக்கான சரிதைகளையும் மொழிபெயர்த்தபோது, இதுவரை தமிழில் நான் பயன்படுத்தியிராத பல சொற்களைப் பயன்படுத்த நேர்ந்தது. புதிய தமிழ்ச்சொற்களை அறிந்துகொள்ளவும் முடிந்தது. உதாரணமாக, Alligator என்பதற்கு முதலில் வழக்கம்போல் முதலை என்ற சொல்லே விழுந்தது. பிறகு அகராதியில் தேடியபோது கரவு என்ற சொல் கிடைத்தது. திருவாய்மொழியில் கரவார்தடம் என்ற தொடர் இருப்பதாகச் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி சுட்டியது. மேலும் தேடியபோது,

 பரவாள் இவள் நின்று இராப்பகல்
    பனிநீர் நிறக் கண்ணபிரான்
விரவாரிசை மறை வேதியரொலி
   வேலையின் நின்று ஒலிப்ப
கரவார் தடந்தொறும் தாமரைக்கயம்
    தீவிகை நின்றலரும்
புரவார் கழனிகள் சூழ்
    திருப் புலியூர்ப் புகழ் அன்றி மற்றே

என்ற இனிய பாசுரத்தை அடைந்தேன். தமிழ்ப் பேரகராதியைப் புரட்டிப்பார்க்கும் (இணையத்தில்தான் எனினும்) வாய்ப்பு கிடைப்பதே ஒரு பேரனுபவம்தான். பல நூற்றாண்டுகளாய்ப் பல நாட்டு அறிஞர்களின் பேருழைப்பின் மூலம் உருவான பெட்டகம் அது. ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு இட்டுச்சென்று கொண்டே இருக்கும்.

கரவு என்ற சொல்லை ஏன் பயன்படுத்தக்கூடாது என்று அதையே போட்டிருக்கிறேன். கரவு என்பதற்குப் பிறபொருள்களும் உள்ளன (மறைவு, வஞ்சனை, பொய்). ஆனால், ‘கரவு கரையேறியது’ என்கிற இடத்தில் இப்பொருளில்தானே வரமுடியும்.

Crocodile, alligator என்ற சொற்களையும், அவற்றின் வகைகளையும் குறிக்கும் வகையில், தமிழ்ப் பேரகராதியில் மட்டும் 28 சொற்கள் உள்ளன. இவற்றுள் பல திசைச்சொற்களும் இருக்கும்தான்.

Crocodile – இடங்கர் (கொடுந்தாண் முதலையு மிடங்கருங் கராமும் (குறிஞ்சிப். 257)), கடு, கோதிகை, சிஞ்சுமாரம், சீங்கண்ணி, தாலுசிகுவம், தீர்க்கவர்ச்சிகை, துவிதாதகி, நக்கரம் (நக்கரக் கடற்புறத்து – கம்பராமாயணம்), மகரம், மகாமுகம், மாசலம், மாயாதம், வன்மீன் , விடங்கர், அவகாரம், ஆட்கடியன், ஆலாசியம் (ஆண் முதலை), கிஞ்சுமாரம், கும்பீலம், சலகண்டகம்

Alligator – ஆட்பிடியன், கரா, கராம், (ஆண் முதலை), சாணாகமுதலை [தீங்குசெய்யாத ஒருவகைத் தாழ்தரமான முதலை ], செம்மூக்கன், நக்கிரம், முசலி.

ஆனால், Alligator சீனாவிலும், அமெரிக்காவிலும் மட்டுமே உள்ளதால், உண்மையில் இச்சொற்கள் எல்லாமே crocodile வகைகளைக் குறிக்கின்றனவாகவே இருக்கக்கூடும்.

தடந்தொறும் கரையேறாக் கரவுகளாய், இத்தனை சொற்களும் மூழ்கிக்கிடக்கின்றன.

—-

அதே போல, மொழிபெயர்க்கும்போது புதிய சொற்றொடர்களை உருவாக்கவும் முடிகிறது. பழமொழிகளுக்கும் மொழிவழக்குகளுக்கும் இணையான வழக்குகள் தமிழில் இல்லாத போது, பெரும்பாலும் அதன் உட்பொருளையே தருகிறோம். ‘The tide had ebbed’ என்ற ஒரு ஆங்கில மொழிவழக்கு ஓரிடத்தில் வந்தது. ‘சூழல்/நிலைமை சீரடைந்துவிட்டது’ என்று எளிதில் பொருள்படும்படி சொல்லியிருக்கலாம். ஆனால், நேரடி மொழிபெயர்ப்பாக, ‘ஓதம் ஓய்ந்துவிட்டது’ (ஓதம் – tide) என்றே எழுதிப்பார்த்தேன். சரியாகத்தானே இருக்கிறது என்று அப்படியே எடுத்தாண்டுள்ளேன். நம் பண்பாட்டுச் சூழலுக்கும் ஏற்ற புதிய மொழிவழக்குகளை உருவாக்குவதில் தவறில்லையே. சினுவா ஆச்சிபி Things Fall Apart நூலில் ஆப்பிரிக்கச் சொலவடைகளை நேரடியாக ஆங்கிலத்தில் பெயர்த்திருப்பார். அவற்றின் பொருளை விளங்கவைக்கும் வகையில் அழகாகத் தன் கதையாடலை அமைத்திருப்பார். அதுவும் அவரது மொழிக்கு ஓர் எழிலைக் கூட்டியிருந்ததாகத் தோன்றியது.

பேச்சு வழக்குக்கு நெருக்கமாக மட்டுமே எழுத்துமொழியையும் அமைக்கும் போது, குறிப்பாகக் கவிதைகளிலும் அவ்வாறு செய்யும்போது, மொழியின் வளம் குன்றிப்போகிறது என்பதாக உணர்கிறேன். (கவிதை வளம் தான் கவிதைக்கு முக்கியம் என்று கவிஞர்கள் கருதலாம். ஆனால் புதிய சொற்கள் கவிதைக்கொன்றும் பகையல்லவே.) ஆங்கிலத்தில் அந்தச் சிக்கல் இல்லை. எளிய நடையிலும் அரிதான சொற்களைப் பயன்படுத்துகிறார்கள். ஏனோ, தமிழில் நமக்கு நாமே இந்த எளிமை விலங்கைப் பூட்டிக்கொண்டோம். புழக்கத்தில் ஒரு சொல் வந்துவிட்டால், அதை மட்டுமே எழுத்திலும் பயன்படுத்துகிறோம். அதற்கிணையான பிற சொற்கள் நாளடைவில் முற்றிலுமாக மறைந்துபோகின்றன. நாஞ்சில் நாடன் இதுகுறித்து நேர்ப்பேச்சிலும், எழுத்திலும் அதிகமும் வருந்துவார்.

ஆங்கிலத்தில் புதிய சொற்களைக் கற்றுக்கொள்ள தினமும் ஆங்கில இந்து படிக்கச்சொல்லித் தருகிறோம். தமிழைப் பள்ளியில் பாடமாக படிக்கின்றவர்களுக்குப் பழைய தமிழில் அருஞ்சொற்பொருள் காணவும் பழக்குகிறோம். ஆனால், நவீனத் தமிழில் புதிய சொற்களைக் கற்கும் வகையில் நம் வார இதழ்களும் நாளிதழ்களும் பெரும்பாலும் இல்லை, அப்படியிருக்க வேண்டும் என்றும் நாம் எதிர்பார்ப்பதுமில்லை. பல்லாயிரம் சொற்கள் யாரும் தீண்டாத அகராதிகளுக்குள்ளும், பழந்தமிழ் இலக்கியங்களுக்குள்ளும், சில சிற்றிதழ்களுக்குள்ளும் மட்டுமே சிறைப்பட்டுக்கிடக்கின்றன.

புரியாத சொற்களைக் காணும் போது, ஏன் புரியாமல் எழுதுகிறான் என்று திட்டுவதை விடுத்து, அகராதியைப் புரட்டுவதற்கான வாய்ப்பாக எடுத்துக்கொள்ளத்தொடங்கலாம் (இணையத்திலேயே பலவும் உள்ளன). சிடுக்கிலா நடைவேறு, பொருத்தமான அரிய சொற்களைக் கையாள்வது வேறு. மொழிக்குப் புதிதாக ஏதும் தராவிடினும், இருப்பதையேனும் இழக்காமல் காக்கலாம். மீட்டெடுக்கலாம். பேசாக்கிளவியும் பேசலாம்.


சிவராம காரந்த்தின் சுயசரிதை

நவம்பர் 20, 2018

சிவராம காரந்த்தின் சுயசரிதையான ‘பித்து மனத்தின் பத்து முகங்கள்’ நூலிலிருந்து (மொழிபெயர்ப்பு: பாவண்ணன், நூறுசுற்றுக்கோட்டை தொகுப்பு) :

[கன்னட எழுத்தாளர் சிவராம காரந்த் ஒத்துழையாமை இயக்கத்தின் போது, கல்லூரியைத் துறந்திருக்கிறார். கதராடை அணிந்து, கிராமங்கள்தோறும் அலைந்திருக்கிறார். சமூகப் பணிகளும் வெள்ளநிவாரணப் பணிகளும் செய்திருக்கிறார். காந்தியை ஆதர்சமாகக் கொண்டு, அப்போது பிரம்மச்சரிய விரதம் மேற்கொண்டிருக்கிறார். தாசிகள் பிரச்சனை அவரை மிகவும் வருத்தியிருக்கிறது.]

(தாசி குலத்தில் பிறந்த நண்பரிடம்) “உன் சகோதரிகளைப் பணத்திற்காக விற்காமல் இருக்கும் பட்சத்தில், எங்கிருந்தாவது அவர்களுக்குத் தகுந்த வரன்களைத் தேடிக்கண்டுபிடித்து கல்யாணம் செய்து வைக்கிறேன்” என்று சொன்னேன். அவனுக்கு ரொம்பவும் சந்தோஷம் ஏற்பட்டது. அவன் ஒத்துக் கொண்டான். ஆனாலும் அவனுடைய வீட்டுக்காரர்கள் இதற்கு ஒப்புக்கொள்வார்களா என்கிற ஐயம் எனக்கு இருந்தது. அவன் தன்னுடைய வீட்டுக்குச் சென்று அவர்களிடம் இந்த விஷயத்தை முறையிட்டான். அவர்களும் இத்திருமணத்துக்குத் தம் ஒப்புதலை அளித்தார்கள். அன்று என் வார்த்தையின் பின்னணியிலிருந்த பொறுப்பை உணர்ந்து கொண்டேன்.

காந்தியின் சமாதானப் பேச்சு

ஏறத்தாழ மூன்று நான்கு ஆண்டுகள், தாசிக் குலத்திலேயே இத்திருமணத்துக்குத் தகுந்த மாப்பிள்ளைகள் கிடைப்பார்களா என்று தேடியலைந்தேன். வடகன்னட மாவட்டம், பம்பாய், மைசூர்ப் பகுதிகளில் சுற்றியலைந்தேன். என் முயற்சிக்கு வெற்றி கிட்டவில்லை. என் வார்த்தைகளின் பின்னணியிலிருந்த பொறுப்பின் சுமை புரிந்தது. மிகவும் நிராசையோடு ஒருமுறை இதைப்பற்றிக் காந்திக்கும் கடிதம் எழுதினேன். அதற்கு அவர், அந்தப் பெண்கள் வாழ்நாள் முழுக்க பிரம்மச்சர்ய விரதம் மேற்கொண்டு வாழட்டும் என்று வழிசொல்லி எழுதினார். அதைப்படித்து நான் மிகவும் அலுத்துக் கொண்டேன். கண்ணீர் சுரந்தது. மனித சுபாவத்தின் அறிமுகமே காந்திக்கு இல்லை. தன்னால் செய்ய முடிந்ததை எல்லாராலும் செய்ய முடியும் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார் என்று தோன்றியது. அப்படிப்பட்ட நிலையில் எனக்கு என்ன பதில்? நண்பனின் வீட்டார் வயசுக்கு வந்த பெண்களை எவ்வளவு காலத்துக்கு வீட்டிலேயே வைத்திருக்க முடியும்? ஒருவேளை இது கைமீறிப்போகும் சந்தர்ப்பம் வரும்போது அம்மூவரில் யாரேனும் ஒரு பெண்ணை நானே திருமணம் செய்துகொண்டு என் வார்த்தையைக் காப்பேற்றவேண்டும் என எண்ணிக்கொண்டேன். அப்போது பிரம்மச்சரிய வாழ்க்கை என் லட்சியமாக இருந்தது.

(பிறகு அம்மூவருக்குமே வரன்கிடைத்துத் திருமணம் செய்து வைக்கிறார். ஆண்டுக்கொரு முறையாவது அவர்களைச் சந்திக்கிறார்.)


லேலி லாங் சோல்ஜர் கவிதைகள்

நவம்பர் 20, 2018

[லேலி லாங் சோல்ஜர் அமெரிக்காவின் பூர்வக்குடிகளுள் ஒன்றான லகோட்டா இனத்தைச் சேர்ந்த கவிஞர். அவரது Whereas, 38ஆகிய நீள் கவிதைகள் முக்கியமானவை. Whereas மிகவும் அடர்த்தியான கவித்துவ மொழியிலும், 38 மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட, நேரடியான மொழியிலும் நுட்பமான அரசியல் பிரச்சனையை அணுகுகின்றன. Whereas என்ற தலைப்பில் அவரது கவிதைத் தொகுப்பு நூல் வெளிவந்துள்ளது. Whiting Writers விருது வென்றிருக்கிறார்.] – தமிழினி மின்னிதழில் வெளிவந்தது

38

இங்கு வாக்கியம் (sentence) மதிக்கப்படும்.

எழுத்துவிதிகள் வலியுறுத்துவதற்கு மதிப்பளித்து, ஒவ்வொரு வாக்கியத்தையும் கவனத்துடன் அமைப்பேன்.

உதாரணமாக, எல்லா வாக்கியங்களும் பெரிய எழுத்துகளோடு (capital letters) தொடங்கும்.

அதேபோல, ஒரு வாக்கியத்தின் வரலாறு மதிக்கப்படும். ஒவ்வொன்றையும் முற்றுப்புள்ளி அல்லது கேள்விக்குறி என்று பொருத்தமான நிறுத்தற்குறிகளுடன் முடித்து அதன்மூலம் ஒரு கருத்து (கணநேர) முடிவுக்குக் கொண்டுவரப்படும்.

நீங்கள் அறிந்துகொள்ள விரும்பலாம், நான் இதை ஒரு ‘இலக்கியப் படைப்பாகக்’ கருதவில்லை.

வேறு வார்த்தைகளில் சொல்வதானால், சிறந்த கற்பனை மிகுந்த கவிதையாகவோ புனைவாகவோ இதை நான் கருதவில்லை.

வாசிப்பு சுவாரசியத்துக்காக வரலாற்று நிகழ்வுகள் நாடகீயமாக்கப்படமாட்டா.

எனவே, ஒழுங்கு கூடிய வாக்கியத்துக்கான பொறுப்பை நான் உணர்கிறேன்; அது எண்ணங்களைக் கடத்தும் கருவி.

நிற்க; இனி நான் தொடங்குகிறேன்.

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »