சுவட்ச் பாரத் – சில கேள்விகள்

திசெம்பர் 31, 2016

‘அங்கிள், முன்னேற்றம் என்கிற பெயரில் புதுசா ஃப்ரிட்ஜ்.
ஆனா மலம் கழிப்பதோ வெளியில்.’

‘அங்கிள், வீட்டில் உட்கார புதுசா சோபா செட்.
ஆனா மலம் கழிக்க உட்காருவதோ தண்டவாளத்தில்’

‘அங்கிள், டை பேண்ட் ஷூ போட்டிருக்கீங்க…’

போன்ற பொன்மொழிகளோடு பல பெரிய பெரிய ஃப்ளெக்ஸ் பேனர்கள், ஸ்வட்ச் பாரத் நிமித்தம், கோவையில் தோன்றியுள்ளன. நீட்டிய கைகளும், ஏளனப் புன்னகையுமாய் கொழுகொழுப்பான சிவத்த சிறுவர்களின் படங்கள், நம்மை ஆள்பவர்களும் அவர்கள் நியமித்திருக்கும் விளம்பர நிறுவனங்களும் நம்மை எந்த அளவுக்குப் புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்பதற்கு அத்தாட்சியாய் நிற்கின்றன.

அங்கிள், எனக்குச் சில கேள்விகள்.
1. வெளியில் மலம் கழிக்கின்றவர்களில், புதிய ஃப்ரிட்ஜ் வாங்குகிற, சோபா செட் வாங்குகிற, டை ஷூ அணிகின்ற நபர்கள் எத்தனை பேர் என்ற புள்ளிவிவரம் ஏதேனும் உண்டா?
2. வீட்டுக்குள் மலம் கழிப்பவர்களை, ‘ஃப்ரிட்ஜ் வாங்கவேண்டாம்; வெளியில் மலம் கழிப்பதை விட அதிகமாக ஃப்ரிட்ஜினால் பாரதத்தின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும்,’ என்று எப்போது அறிவுறுத்தப்போகிறீர்கள்?
3. இன்றைக்கு மலம், நாளைக்கு உரம். ஆனால், சுத்தமான பாரதத்தில், இந்த ஃப்ளெக்ஸ் பேனர் எல்லாம் என்னாகும்? எப்போது மக்கும்?
4. அங்கிள், சுற்றுச்சூழல் கிடக்கட்டும். ஃப்ரிட்ஜ் இருக்கிறதே என்று நாம் பதனப்படுத்தி உண்ணும் பல பெருநிறுவனத் தின்பண்டங்களாலும், தொலைக்காட்சிப் பெட்டிகளின் முன் சோபா செட்களில் எந்நேரமும் மலத்துளைகள் அடைந்துகிடப்பதாலும், மலம் கழிப்பதற்கே பிரச்சனை என்கிறார்களே, உண்மையா? இது குறித்தெல்லாம் உங்கள் பேனர்கள் எப்போது பேசப் போகின்றன?
5. இந்தியச் சூழலுக்கு ஏற்ற கழிப்பறைகளிலும், மலத்தைச் சேகரித்து உரமாக்கிப் பயன்படுத்தும் முறைகளிலும் பலரும் பல சோதனை முயற்சிகள் செய்திருக்கின்றனர். அவற்றையெல்லாம் கவனித்தீர்களா? ஆம் எனில், உரமாகக்கூடிய மலத்தைக் கழிவாகக் கருதும் இந்த மனநிலையை நிலைநிறுத்தவா இத்தனை கோடிகள் செலவு செய்ய வேண்டும்?
6. ஃப்ரிட்ஜுக்கும், செருப்புக்கும், சோபா செட்டுக்கும், கழிப்பறை கட்டுவதற்கான இடத்துக்கும், மூன்று வேளைச் சோற்றுக்கும் வக்கற்று மலம் கழிக்க, இருள் கவியும் வேளையில் சாலையோரங்களில் அமர்ந்து, ஒவ்வொரு முறை பளீரென்ற ஹெட்லைட் வெளிச்சத்தைப் பீச்சிக்கொண்டு வாகனங்கள் வரும் போதும், கூசி எழுந்து முகம் மறைத்துத் திரும்பிக் கொள்ளும் எம் கிராமத்துப் பெண்கள், எள்ளிநகையாடும் உங்கள் விளம்பரங்களைப் படித்தால், நொந்து துணுக்குறக்கூடுமோ என்று ஒரு கணமேனும் எண்ணியதுண்டா?

Advertisements

உள்ளங்கைக்குள் உதய சூரியன் மறைந்துபோகிறான்

பிப்ரவரி 20, 2009

மின்வெட்டை மறக்கப் போர்க்கொடி உயர்த்தி, இப்போது உள்ளங்கைக்குள் மறைந்து  போன உதய சூரியன்.

தம்மையும், தம்மக்களையும் பலி கொடுக்கத் தயாராக இருக்கும் புலிகள்.

பலியெடுக்கத் தயங்காத ஆதிக்க அரசு.

இந்தியாவின் இலங்கைக் கொள்கையை இன்னமும் நிர்ணயிக்கும் ராஜீவின் ஆவி.

இவற்றுக்கிடையில் வன்முறைக் கடலில் இன்னமும் தத்தளிக்கும் இலங்கைத் தமிழர்கள்.

நெருங்கும் இந்தியத் தேர்தல் தூரத்து நம்பிக்கை ஓடம்?


ஈழப்போர் – தமிழக அரசியவாதிகளின் போர்வை

ஒக்ரோபர் 15, 2008

தமிழகத்தில் பிரச்சனைகள் வலுக்கிற போதெல்லாம், ஈழப்போர்வைக்குள் பதுங்கிக் கொள்கிறார்கள் நம் அரசியல் தலைவர்கள். ஈழப்போர் முப்பது ஆண்டுகளுக்கும் மேல் மூர்க்கமாய் நடந்து கொண்டுதானிருக்கிறது. ஆனால் நம் தலைவர்களுக்கு ஐந்தாண்டுக்கொருமுறை மட்டும் இந்தப் போர்வை தேவைப்படுகிறது. இந்து நாளிழதளில் குறிப்பிட்ட மாதிரி இது Tamil Chauvinism எல்லாமல்ல; அப்பட்டமான சந்தர்ப்பவாத அரசியல்.

தொடர் மின்வெட்டால் தமிழ்நாடே தவித்துக்கொண்டிருக்கும் போது, அதற்கான தீர்வு காணும் திறனும் அற்று, பிரச்சனைக்கான காரணங்களையேனும் தெளிவாக விளக்கும் துணிவுமற்று, மக்கள் கவனத்தை ஈழத்தின் பக்கம் திருப்புவது எதற்காக? இந்தத் தடங்கலை ஒரு வாய்ப்பாக மாற்ற முனையாமல், நம் அரசியல் தலைவர்களின் இந்த நடத்தை வெறும் திசைதிருப்பல் முயற்சியா, அல்லது, ஈழ மக்கள் மீது திடீரென எழுந்த இரக்கமா, அல்லது,  இக்கட்டில இருக்கும் ஒரு தீவிரவாத அமைப்பைக் காக்கும் முயற்சியா? உலகையே உலுக்கிக்கொண்டிருக்கிற ஒரு பொருளாதாரச்சரிவு இந்தியாவையும் நெருங்கிக்கொண்டிருக்கிற வேளையில், மத்திய அரசின் நெற்றியில் துப்பாக்கிவைப்பது மட்டமான, பொறுப்பற்ற அரசியல்.

விடுதலைப் புலிகள் தம் இரக்கமற்ற வன்முறையைக் கைவிடும்வரை ஒரு பயங்கரவாத இயக்கமாகத்தான் கருதப்படுவார்கள்; கருதப்படவேண்டும். சிங்கள அரசு வன்முறையை நிறுத்தட்டும், நாங்கள் நிறுத்துகிறோம் என்கிற பழைய வாதம், அகிம்சையின் வெற்றியை உலகுக்கு உணர்த்திய இந்த மண்ணில் என்றும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது; கூடாது.   நிலையான தீர்வு ஒருகாலும் தீவிரவாதத்தால் பெற முடியாது. 

பல்லாண்டுகால பயங்கரவாதம் சாதித்ததைவிட, ஒரு மாத அமைதிப்போர் காஷ்மீர் குறித்த இந்திய மக்களின் (நான் உட்பட)  எண்ணத்தைப் பெரிதும் மாற்றியதை அண்மையில் கண்டோம். ஈழத்தமிழர்கள் ஆயுதங்களையும், ஆயுதமேந்தத் தூண்டுகற இயக்கங்களையும் துறந்து, தீர்வுகளை அணுக வேண்டிய தருணம் வந்துவிட்டது. ஓர் அகிம்சை இயக்கத்திற்கு இந்திய அரசு மட்டுமல்ல, உலகம் முழுவதுமே செவிசாய்த்தே தீரும்.

அதுவரையில் ஈழப்போர், தமிழகத்தின் நெருக்கடி நேரங்களில்மட்டும் இங்கு மேலோட்டமாய் கவனிக்கப்படும். மத்திய அரசுக்குக் கலைஞர் விதித்திருக்கிற இரண்டு வார கெடு, அதற்குள் பருவமழை வந்து மின்வெட்டு நின்றுவிடும் என்கிற நம்பிக்கையில்தானோ?


CIAவின் Animal Farm: நவயுக விலங்குப் பண்ணைகள்- பாகம் 2

பிப்ரவரி 18, 2008

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர், Animal Farm திரைப்படத்தை CIA மாற்றியமைத்ததாம்; படித்தபோது வியப்பாக இருந்தது. கம்யூனிஸத்தை வீழ்த்த அமெரிக்கர்கள் அபத்தத்தின் எல்லைகளை அளந்திருக்கிறார்கள்.

Animal Farm புத்தகத்தின் இறுதியில், நான் முன்பு எழுதியது போல், மனிதர்களின் கொடுங்கோல் ஆட்சியை மாற்றி பன்றிகளின் கொடுங்கோலாட்சி உருவாகிறது. மற்ற விலங்குகள் மனிதர்களையும் பன்றிகளையும் வேறுபடுத்த முடியாமல் மாறிமாறிப் பார்க்கின்றன.

இந்தக் காட்சியை, திரைப்படத்தில் திட்டமிட்டு மாற்றியிருக்கிறதாம் அமெரிக்க ஒற்று நிறுவனம்.  காட்சியிலிருந்து மனிதர்களை நீக்கிப் பன்றிகளை மட்டும் மையப்படுத்தியிருக்கிறார்கள். இதனால் முதலாலித்துவ மனிதர்களை மறக்கடித்து கம்யூனிஸ்ட்டுப் பன்றிகளை மட்டும் மட்டம் தட்டிவிட்டார்களாம். இருவரையுமே ஒரே தட்டில் வைத்த Orwell அப்போது மறுத்துப்பேச உயிரோடு இல்லை.

 உலக அரசியல் அரங்கிலும் சிறுபிள்ளை விளையாட்டுகள் சாத்தியம்தான் போலும்.


நவயுக விலங்குப் பண்ணைகள்

ஜனவரி 29, 2008

பல நிகழ்வுகளைக் காணும்போது,  ஜார்ஜ் ஆர்வெல்லின் Animal Farm புத்தகம் அடிக்கடி நினைவுக்கு வருகிறது.

Animal Farmல், மனிதர்களின் கொடுங்கோலாட்சியைச் சகிக்கமுடியாத விலங்குகள், புரட்சி செய்து, மனிதர்களை விரட்டிப் பொதுவுடைமை ஆட்சியை நிறுவுகின்றன. அந்தப் பொதுவுடைமை அரசு மெதுவாய், பன்றிகளின் தலைமையில் இன்னொரு கொடுங்கோலாட்சியாய் மாறுகிறது. இறுதியில் பன்றிகள் மனிதரைப் போலவே இருகால்களை உயர்த்தி நடக்கக்கூடக் கற்றுக்கொள்கின்றன.

ரஷ்யப் புரட்சியையும், ஸ்டாலினின் எழுச்சியையும் நையத் தாக்கிய இந்த நையாண்டிக்கதை, அறுபது ஆண்டுகளாகியும் அதன் இயைபை இழக்கவில்லை. அதிகாரம் படைத்தவன் மனிதனாகினும், பன்றியாகினும் ஒரே விளைவுதான் – அதிகாரம் தவறாகவே பயன்படுத்தப்படுகிறது. ஏராளமான உதாரணங்கள்.

ஹிட்லரின் கொடுமைகளின் விளைவாய் உருவான இஸ்ரேல், அவனுக்கு இணையான கொடுமைகளைத் தொடர்ந்து புரிந்துவந்திருக்கிறது.

அப்கானிஸ்தானில் யார் ஆட்சிக்கு வந்தாலும் பலபடிகள் பின்னோக்கியே நகர்ந்திருக்கிறார்கள். ரஷ்சிய ஆக்ரமிப்பில் ஆட்சி செய்த நஜிபுல்லா ஆகட்டும், பின் அமெரிக்க ஆதரவில் எழுந்த முஜாகிதின்களாகட்டும், அவர்களை வீழ்த்திவந்த தாலிபன் ஆகட்டும், இப்போதைய அமெரிக்கக் கைப்பாவைகளாகட்டும் ஒருவருக்கொருவர் மிஞ்சிய கொடுங்கோலர்கள்.

தமிழகத்தில் பார்ப்பன எதிர்ப்பில் துவங்கிய திராவிட இயக்கம் வெற்றிபெற்று, பல நூறு சாதிச்சங்கங்களிடம் தமிழ்ச் சமுதாயத்தை ஒப்படைத்துவிட்டது.

காஷ்மீரில் இஸ்லாமியத் தீவிரவாதத்திற்கு எதிராய் குஜராத்தில் இந்துக்களின் தீவிரவாதம்.

இலங்கையில் சிங்கள இனவெறிக் கொடுமைக்கு மாற்றாய், புலிகளின் வன்முறை வெறியாட்ட முறைகள்.

வங்கத்திலும், கேரளத்திலும் இடதுசாரிகள் எந்தவிதத்திலும் மாறுபட்ட ஆட்சிகளை அளித்தவிடவில்லை. நந்திகிராம் – ‘முதலாளித்துவ’ இடதுசாரி சர்வாதிகாரத்திற்கான இன்னொரு எடுத்துக்காட்டு. 

இந்தியர்களும் ஆதிக்கம் செலுத்தும் வாய்ப்பு கிடைத்தால், ஆங்கிலேயரைவிட அதிகமாகவே செலுத்துவோம் என்பதற்கு பணபலம் படைத்த இந்திய கிரிக்கெட் வாரியம்(BCCI) சாட்சி. ஹர்பஜன்-சிமண்ட்ஸ் இனவெறிக் குற்றச்சாட்டை நியாயமான முறையில் அணுகி, உண்மையைக் கண்டறிந்து நிலைநாட்டாமல், அதிகாரத்தையும், மிரட்டலையும் பயன்படுத்துவது வெள்ளையரிடம் நாம் கற்றுக்கொண்ட பாடம்.

காணுமிடமெங்கும் இன்னும் ஏராள விலங்குப் பண்ணைகள்.


Anil’s Ghost – இலங்கை பற்றிய பார்வை

ஜனவரி 18, 2008

இலங்கைக் கலவரங்கள் பற்றிய புத்தகம் Michael Ondatjeவின் Anil’s Ghost. இலங்கை பற்றிய நடுநிலையான பார்வையுடன், இலங்கையோடு நேரடித் தொடர்பில்லாத ஒரு மூன்றாம் மனிதனால் எழுதப்பட்ட புதினம்.

வன்முறைக்கு வன்முறை பதிலாகாது என்பதை அழுத்தமாய்க் கோடிட்டுக் காண்பிக்கிறது.  உயிர்ச் சேதம் ஒருபோதும் அமைதிக்கு வழிவகுக்கப் போவதில்லை. சிந்துவது சிங்கள ரத்தமாயினும், தமிழ் ரத்தமாயினும் விளைவு ஒன்றுதான் – இன்னும் சில சடலங்கள், தீர்வைவிட்டு இன்னும் கொஞ்சம் விலகல்.

நாவலில் எனக்குப்பிடித்த வரிகள் – ‘அமெரிக்கத் திரைப்படங்களிலும், புத்தகங்களிலும், இறுதியில் நாயகன், நிறைய சண்டைக்காட்சிகளுக்குப் பின், வியட்னாம் மாதிரியான நாட்டிலிருந்து, நிம்மதியாய் விமானத்தில் பறந்து செல்வான். அவனைப் பொருத்தவரை, வாசகர்களைப் பொருத்தவரை, கதை சுபமாய் முடிந்தது. கீழே தொடர்ந்து கொண்டிருக்கும் போர்பற்றி எவருக்கும் கவலையில்லை.’


போதுமே இந்தப் போர்கள்…

ஜனவரி 3, 2008

தீவிரவாதம்தான் உரிமைப்பிரச்சனைகளுக்குத் தீர்வு என்கிற எண்ணம் எப்போது மாறும்? என்றைக்கும்விட இன்றைக்கு, முற்றிலுமாக இணைக்கப்பட்ட உலகில், அகிம்சைப் போராட்டம் வலிமையானதாகிவிட்டது. அமைதிப்போரின் நிலையான வெற்றிகளை நிறையப் பார்த்துவிட்டோம். வன்முறையால் கிடைக்கிற வெற்றிகள் வெறும் தற்காலத் தீர்வுகளையே தரமுடிந்திருப்பதையும் பார்த்துவிட்டோம்.

ஆயுதங்கள் ஏற்படுத்துகிற காயங்கள் ஆறுவதேயில்லை; வன்முறையால் கிடைத்த வெற்றிக்குப் பின்னும், வெவ்வேறு வடிவங்களில் வன்முறை வளர்ந்துகொண்டேதான் இருக்கிறது. ஆனால் திடமான நியாயத்தின் அடிப்படையில் தொடரப்படுகிற அமைதிப்போரால் எவ்வளவு பெரிய எதிரியையும் வீழ்த்திவிட முடியும். வீழ்த்தியபின் எதிரியோடு நிரந்தரமாய் உறவாடவும் முடியும்.

இணையதளமும் நேரடித் தொலைக்காட்சிகளும் இல்லாத காலத்திலேயே காந்தியால் ஓர் அமைதிப்போர் தொடர முடிந்திருக்கிறது. காஷ்மீர் தீவிரவாதிகள் வன்முறையைக் கைவிட்டு ஒரு பரவலான அமைதிப்போர் வெடித்தால், இந்தியாவால் எத்தனை நாட்களுக்குத் தாக்குப்பிடிக்க முடியும். இன்று இந்திய மக்களில் எத்தனைபேர் காஷ்மீர் பக்கம் நியாயம் இருப்பதாய் நினைக்கிறார்கள்? இந்நிலை மாறும் வரை எத்தனை குண்டுகள் வெடித்தாலும் இந்தியா காஷ்மீர் மீதான உரிமையை விட்டுவிடப் போவதில்லை.

இலங்கையிலும் இதே நிலைதான் என்று தோன்றுகிறது. தொடரும் வன்முறையால் நியாயம் யார்பக்கம் என்கிற கேள்வி எழத்தான் செய்கிறது. ஏற்கனவே தேவையற்ற ராஜீவ் படுகொலையால் பெருவாரியான இந்தியத் தமிழர்களின் ஆதரவை இழந்துவிட்டது இந்தப் போராட்டம். இன்னும் தொடரும் வன்முறை இலங்கைத் தமிழர்களை உலக அரங்கில் மேலும் தனிமைப்படுத்தும். கண்ணெதிரே தெரியும் வன்முறை முன்னால், நியாமான உண்மைகள் கூட புதைந்துபோகும்.

போர்தொடுப்பதைவிட, தொடங்கிய போரை நிறத்துவதற்கும், போரின் போக்கை வேறுவிதமாய் திருப்புவதற்கும் அதிக துணிவும், அரசியல் திறனும் தேவை. கடினமான பாதைதான். ஆனால் நிரந்தனமான ஒரு தீர்வுகிட்ட இப்பாதையில் நடந்துதான் ஆகவேண்டும்.