(2021 ஜூலை மாதக் காலச்சுவடு இதழில் வெளிவந்த அஞ்சலிக் கட்டுரை)
உலக அளவில் க.மு.நடராஜன் என்ற பெயரை அறியாத காந்தியர்களைக் காண்பது அரிது. ஆனால் சர்வோதய இயக்கத்துக்கு வெளியில் அதிகம் அறியப்படாமலே மறைந்த பெரும் ஆளுமை அவர். தமிழ்நாட்டில் கொரோனாக்காலத்தில் ஏற்பட்ட பேரிழப்புகளில் ஒன்று அண்மையில் நேர்ந்த அவரது திடீர் மரணம். 88 வயதிலும் அவர் சுமந்துகொண்டிருந்த பொறுப்புகள் ஏராளம். காந்தியையும் காந்தியத்தையும் காந்தியின் மறைவுக்குப் பிறகு உயிர்ப்புடன் வைத்திருந்து 21ம் நூற்றாண்டுக்குக் கடத்திவந்த காந்திய ஊழியர்களின் முதல் வரிசையில் நின்றவர் அவர். கே.எம். அண்ணாச்சி என்று மிகுந்த அன்புடன் சர்வோதய இயக்கத்தினரால் அழைக்கப்பட்டார். முதல் தலைமுறை காந்தியர்களுக்கும் அவர்களது நேரடிச் செயல்பாட்டினை அறியாத அடுத்தடுத்த தலைமுறையினருக்கும் அவர் ஒரு பாலமாகத் திகழ்ந்தார்.
க.மு.நடராஜன் ஒரு மிகப்பெரிய செயல்பாட்டாளராகவும் அதே நேரத்தில் தேர்ந்த அறிஞராகவும் இருந்தவர். அவர் மதுரை காந்தி அருங்காட்சியகம், தமிழ்நாடு சர்வோதய மண்டல், அனைந்திந்திய காந்தி நினைவு நிதி, சர்வ சேவா சங்கம், சர்வோதய இலக்கியப் பண்ணை ஆகிய நிறுவனங்களில் தலைமைப் பொறுப்புகள் வகித்தார். சர்வோதய இலக்கியப் பண்ணை, காந்திய இலக்கிய சங்கம் ஆகிய பதிப்பகங்களின் மூலம் பல முக்கியமான காந்திய நூல்களைப் பதிப்பித்திருக்கிறார். சர்வோதயம் மலர்கிறது, கிராம ராஜ்ஜியம் ஆகிய இதழ்களுக்கும், Sarvodaya Talisman என்ற ஆங்கிய இதழுக்கும் ஆசிரியராக இருந்தார். இறுதிவரை அவரது நேரடிப் பங்களிப்பில் வெளிவந்த இந்த மூன்று இதழ்களும் காந்தியக் கருத்துகளையும் சரித்திரத்தையும் காந்திய நோக்கில் சமகால விமர்சனங்களையும் தொடர்ந்து தாங்கி வரும் முதன்மையான காந்திய இதழ்களாக உருவெடுத்தன.

கிருஷ்ணம்மாள்-ஜெகந்நாதன் தம்பதியினரின் பல்லாண்டுகாலப் பணிகளுக்கு நடராஜன் உற்ற துணையாக இருந்தார். 1950ம் ஆண்டில் ஜெகந்நாதனின் கரம் பிடித்தே அவர் பொது வாழ்வுக்கு வந்தார். அதற்கு முன்பாகவே அவர் காந்தியால் ஈர்க்கப்பட்டிருந்தார். காந்தி 1946ம் ஆண்டு கடைசிமுறையாகத் தமிழ்நாடு வந்தபோது, மதுரையில் கூடியிருந்த பெருந்திரளான கூட்டத்தில் சிவகங்கையிலிருந்து வந்திருந்த நடராஜனும் இருந்தார். கூட்டத்தில் கட்டுக்கடங்காத சலசலப்பு ஏற்பட்டதால் காந்தி அன்று பேசவில்லை. மேடையிலிருந்த தலைவர்கள் பதின்மவயது நடராஜனுக்குச் சிறு புள்ளிகளாகவே தெரிந்ததாகக் கூறிவார். அடுத்தநாள் ஒரு கடையின் மேல்மாடியிலிருந்தும் காந்தியைப் பார்த்திருக்கிறார். அதுவே அவருக்குச் சமூகப் பணியில் ஈடுபடவேண்டும் என்ற வேகத்தை ஏற்படுத்தப் போதுமானதாக இருந்திருக்கிறது. மதுரையில் அருணா அஸப் அலியுடைய உரையாலும் உந்துதல் பெற்றிருக்கிறார்.
பள்ளிப்படிப்பு முடித்தவுடனேயே காந்திகிராமப் பல்கலைக்கழக வளாகத்தையொட்டியுள்ள ஊழியரகத்தில் ஜெகந்நாதன் ஒருங்கிணைத்திருந்த கோடைக்காலப் பயிற்சி முகாம் நடந்தது. அதில் ஜே.சி. குமரப்பா ஒருவாரம் தங்கியிருந்து பயிற்றுவித்திருக்கிறார். ரவீந்திர வர்மா, ஆச்சார்ய கிருபளாணி, வங்க முதல்வராக இருந்த பி.சி.கோஷ் போன்றவர்களெல்லாம் வகுப்பெடுத்திருக்கிறார்கள். அப்போதே குமரப்பாவின் உரைகளைத் தொகுத்து ‘உழவும் தொழிலும்’ என்ற இதழில் நடராஜன் எழுதியிருக்கிறார். பிறகு கல்லூரியில் சேர்ந்து இண்டர்மீடியட் முடித்துவிட்டு மீண்டும் ஜெகந்நாதனிடமே சேர்ந்துவிட்டார். அச்சமயம் அவருக்குக் கிடைத்த அரசு வேலையை உதறிவிட்டார். 2021ம் ஆண்டுக்கான சர்வோதயா-ஜெகந்நாதன் விருது நடராஜனுக்கு வழங்கப்பட்டது. அவ்விருதினை ஏற்றுப் பேசும்போது, “ஜெகந்நாதனை நம்பிப் போகாதே, அரசுவேலையில போயிச் சேரு; இதுலதான் ஜாப் செக்யூரிட்டி இருக்குன்னாக. இப்ப எனக்கு 89 வயதாகுது. இப்பவும் எனக்கு ஜாப் செக்யூரிட்டி இருக்கு, ஜெகந்நாதனோட சேர்ந்ததால,” என்றார். பிறிதொரு முறை கோடை வானொலிக்கு அளித்த நேர்காணலில், அரசு வேலையை உதறியதால், உலகெங்கும் உள்ள பல காந்தியர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததாகக் கூறினார்.
வினோபா பாவேயின் பூமிதான இயக்கம் தமிழகத்தில் தொடங்கிய காலம் முதலே நடராஜன் அதில் முக்கிய பங்காற்றினார். வினோபா தெலுங்கானாவில் பூமிதான யாத்திரையைத் தொடங்கிய உடனேயே அவருடன் ஜெகந்நாதன் நான்கைந்து மாதங்கள் நடந்திருக்கிறார். பிறகு தமிழ்நாட்டிலும் பூமிதான இயக்கத்தைத் தொடங்குவதற்காகச் சிவகங்கையில் ஒரு மாநாடு நடத்தியிருக்கிறார். அதற்கு அவினாசிலிங்கம் செட்டியார், ஓ.பி. ராமசாமி ரெட்டியார், சர்தார் வேதரத்தினம், சங்கர் ராவ் தியோ போன்ற காந்தியத் தலைவர்கள் வந்திருந்தனர். நடராஜன் அந்த மாநாட்டை நடத்தும் பணியில் ஈடுபட்டிருக்கிறார். பிறகு ராமேசுவரம் தனுஷ்கோடியிலிருந்து சங்கர் ராவ் தியோ தலைமையில் பூமிதான யாத்திரை தொடங்கியிருக்கிறது. அதிலும் இவர் கலந்துகொண்டிருக்கிறார். “எம்.ஜி.சங்கர ரெட்டியார் என்பவர் நாங்குநேரி பகுதியிலிருந்து 150 ஏக்கர் நிலத்தைத் தானமாக அளித்தார். அதைத்தொடர்ந்து ராமநாதபுரம் ராஜா 1000 ஏக்கர் கொடுத்தார்,” என்றும் நடராஜன் குறிப்பிட்டிருக்கிறார். தமிழ்நாட்டில் 26000 ஏக்கர் நிலம் கிடைத்ததாகவும், அவற்றில் பெரும்பங்கு நிலத்தை வேளாண்மைக்கு ஏற்றவாறு செப்பனிடும் பணிகளைச் செய்து கொடுத்தனர் என்றும் கூறியுள்ளார். 1956ல் வினோபா தமிழ்நாட்டுக்கு வந்தபோது பூமிதானம் பெறுவதை நிறுத்திவிட்டு கிராமதானம் கேட்கத்தொடங்கியிருந்தார். பீகாருக்கு அடுத்தபடியாகத் தமிழ்நாட்டில்தான் அதிகமாக கிராமதானம் நிகழ்ந்திருக்கிறது. காமராஜர் ஆட்சியிலிருந்த போது பூமிதான-கிராமதான இயக்கத்துக்குப் பெரும் ஆதரவாக இருந்திருக்கிறார். பின்னர் வந்த அரசுகள் அதிக அக்கறை காட்டவில்லையென்றும் நடராஜன் கூறுவார்.
ஜெகந்நாதன் பூமிதான இயக்கத்தோடு நின்றுவிடவில்லை. பல நிலவுரிமைப் போராட்டங்களிலும் ஈடுபட்டார். வலிவலம், விளாம்பட்டி போன்ற இடங்களில் கோயில் நிலங்கள் சரியான முறையில் குத்தகைக்கு விடப்படாமல் சில தனிநபர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதைக்கண்டு சத்தியாகிரகம் நடத்தியிருக்கிறார். வினோபாவுக்கு இப்படியான சத்தியாகிரகங்களில் முழு உடன்பாடு இல்லாதபோதும் ஜெகந்நாதனின் பொருட்டு இவற்றை அரைமனதுடன் அனுமதித்திருக்கிறார். ‘Gentle, gentler, gentlest’ ஆக சத்தியாகிரகங்கள் இருக்கவேண்டும் என்றிருக்கிறார். இப்போராட்டங்களின்போது நடராஜன் பல்வேறு பொறுப்புகளை ஏற்றிருக்கிறார். கூட்டங்களில் பேசுமாறு ஜெகந்நாதன் நடராஜனை மட்டுமே அனுமதிப்பாராம். ‘ஆள வையக்கூடாது. ஒழுங்கா அந்தப் பிரச்சனைய மட்டும் சொல்லணும்,’ என்று இருவரும் கவனமாக இருப்பார்கள். அமைச்சர்களுக்கும், பிற தலைவர்களுக்கும் கடிதங்கள் எழுதுவது, நாளிதழ்களுக்கு அறிக்கைகள் வழங்குவது, பல ஊர்களில் இருந்து சத்தியாகிரகிகளை ஒருங்கிணைத்து வரவழைப்பது என்று பல பணிகளையும் நடராஜனே செய்துவந்ததாக அவருடன் 60 ஆண்டுகாலம் பணியாற்றியுள்ள வாடிப்பட்டி சுந்தரராஜன் நினைவுகூர்கிறார்.
வடபாதிமங்கலத்தில் இருந்த ஒரு கரும்பு ஆலை செயல்படாமலிருந்து அதற்குச் சேர்ந்த 4000 ஏக்கர் நிலம் சும்மா கிடந்ததை எதிர்த்துப் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். போராட்டம் வெற்றிபெற்று, 4000 குடும்பங்களுக்கு அந்நிலத்தைப் பிரித்தளித்திருக்கின்றனர். நடராஜன் ஜெகந்நாதனுடன் சேர்ந்து 60களிலும், பிறகு 80களிலும் கிராம சுயராச்சிய பாத யாத்திரை மேற்கொண்டிருக்கிறார். எஸ்.ஆர்.சுப்பிரமணியம் நடத்திய மதுவிலக்கு யாத்திரையிலும் கலந்துகொண்டிருக்கிறார். ஜெகந்நாதன் தலைமையில் மதுவிலக்கு சத்தியாகிரகத்தையும் ஒருங்கிணைத்திருக்கிறார். தினமும் 100 பேர் மதுக்கடைகள் முன்னர் மறியல் செய்வார்கள் என்று தில்லி காந்தி அருங்காட்சியக இயக்குநர் அ.அண்ணாமலை கூறுகிறார்.
இந்திரா காந்தி கொணர்ந்த அவசரநிலைக் காலத்தில் ஜெகந்நாதன், நடராஜன் ஆகியோர் ஜெயப்பிரக்காஷ் நாராயணனின் தலைமையை ஏற்று அவருடன் இணைந்திருந்தனர். திமுக ஆட்சி கலைக்கப்பட்டு திமுக தலைவர்கள் சிறைப்படுத்தப்பட்டபோது ஜெகந்நாதனும் கைது செய்யப்பட்டார். வெளியிலிருந்து பல்வேறு ஒருங்கிணைப்புப் பணிகளையும், வடக்கிலிருந்து தமிழ்நாடு வந்திருந்த பலரையும் பாதுகாப்பாகத் தங்கவைக்கும் பணியையும் நடராஜன் செய்திருக்கிறார்.
1990களில் நாகப்பட்டினம் பகுதியில் இறால் பண்ணைகள் பெரும் சுற்றுச்சூழல் கேட்டையும் வேலைவாய்ப்பிழப்பையும் ஏற்படுத்துவதைக் கண்டு ஜெகந்நாதன் இறால் பண்ணைகளுக்கெதிராகப் போராடத் தொடங்கினார். அப்போதும் 90 வயதினை நெருங்கிக்கொண்டிருந்த ஜெகந்நாதன் உண்ணாவிரதம் இருந்து கைது செய்யப்பட்டார். பிறகு உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் பெண்களைத் திரட்டிப் போராட்டம் நடத்தினார். இறால் பண்ணைகளின் கேடுகள் குறித்த தகவல்களைத் திரட்டுவது முதல் பல்வேறு பணிகளையும் நடராஜன் உடனிருந்து செய்தார். உச்சநீதிமன்றம் 1996ல் இறால் பண்ணைகளுக்கெதிரான தீர்ப்பினை வழங்கியது. ஆனால் அத்தீர்ப்பை மழுங்கடிக்கும் மசோதா ஒன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படலாம் என்றறிந்த ஜெகந்நாதன் தில்லியில் காந்தி சமாதி முன்னர் மீண்டும் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். அப்போதும் அவருக்குத் துணையாக நடராஜன் இருந்தார். அரசு தரப்பிலிருந்து உறுதிகள் பெற்றபிறகே உண்ணாவிரதம் கைவிடப்பட்டது. ஆனால் அதன்பிறகும் அத்தீர்ப்பைச் செயல்படுத்துவதில் அரசுகள் மெத்தனமாகவே இருந்தன.
நடராஜன் இப்படியான பல்வேறு வரலாற்று நிகழ்வுகளின் போது அவற்றுக்குச் சாட்சியமாகவும் அவற்றை நிகழ்த்துபவராகவும் இருந்திருக்கிறார். அவருடைய அற்புதமான நினைவாற்றலும் பேச்சுத்திறனும் அவரை ஒரு வரலாற்றுப் பெட்டகமாக மாற்றியிருந்தன. சுதந்திர இந்தியாவின் பெரும்பாலான தலைவர்களைக் குறித்தும் நிகழ்வுகளைக் குறித்தும் கூறுவதற்கு அவரிடம் எப்போதும் ஏதேனும் தனிப்பட்ட செய்திகள் இருந்தன. வினோபாவோடும், ஜெயப்பிரக்காஷ் நாராயணனோடும் பயணம் செய்திருக்கிறார். அவர்களுடைய உரைகளை மொழிபெயர்த்திருக்கிறார்.
வினோபா திருவாசகத்துக்கு எப்போதும் உருகுவார் என்பார். பல இடங்களில் திருக்குறளிலிருந்தும் திருவாசகத்திலிருந்தும் வினோபா தமிழிலேயே மேற்கோள் காட்டிப் பேசுவார். கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனையும் வினோபா பார்க்கும் போதெல்லாம் ‘முத்தி நெறி அறியாத’ என்ற அச்சோ பதிகத்தைப் பாடச் சொல்வார். கோவை அருகில் வினோபா பேசவிருந்த ஒரு கூட்டத்தில் தலித் மக்கள் வெகுதொலைவில் தனியே கூடியிருந்ததைக் கண்டித்து, எல்லாரும் ஒன்றாக அமர்ந்தால்தான் பேசுவேன் என்று கூறிவிட்டாராம். பிறகு அனைவரும் ஒன்றாகக் கூடியபிறகே பேசியிருக்கிறார். ராமச்சந்திர குகா வினோபா மீது வைத்த கடுமையான விமர்சனங்களுக்கு மறுப்பாக நடராஜன் இந்நிகழ்வை முன்வைப்பார். அமெரிக்காவிலிருந்து இந்தியாவில் குடியேறி, ஜெகந்நாதனுடன் சேர்ந்து ஊழியரகத்தைத் தன் கைகளால் கட்டிய ரால்ப் ரிச்சர்ட் கெய்த்தானுடைய வாழ்க்கையை ஆய்வுசெய்துகொண்டிருக்கும் ராமச்சந்திர குகா நடராஜனை நேரில் சந்தித்தார். அப்போது வினோபா குறித்த கருத்துகளை குகா மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று கூறியதாக நடராஜன் சொல்வார். குகா நடராஜனுக்குச் சிறப்பானதொரு சிறு அஞ்சலிக் குறிப்பை எழுதியுள்ளார். அதில் நடராஜனுக்கு கிரிக்கெட்டின் மீதிருந்த ஆர்வத்தைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். கிரிக்கெட் பற்றிய ஒரு புத்தகத்தையும் நடராஜன் பதிப்பித்திருப்பதாகவும், அதைத் தனக்கு அன்பளிப்பாக வழங்கியதாகவும் எழுதினார். இந்த கிரிக்கெட் ஆர்வம் அவரோடு நெருங்கிப் பழகிய பலருக்குமே (நான் உட்பட) புதிய செய்தியாக இருந்தது.
நடராஜனைப் பற்றிய தனது அஞ்சலிக் கட்டுரையில், அமெரிக்கப் பேராசிரியர் டேவிட் ப்ளேக் வில்லிஸ் 1977ல் கெய்த்தான் மூலமாகத்தான் நடராஜனை முதன்முதலாகச் சந்தித்ததாகக் கூறுகிறார். அந்த உறவு இறுதிவிரை நீடித்தது. ’சர்வோதயா என்றாலே எனக்கு அண்ணாச்சிதான். அமைதி, திடம், கனிவு,’ என்கிறார் டேவிட். அவரது ஜப்பானிய-அமெரிக்க மனைவி மிக்கா ஓபயாஷி, ‘களிப்பு மின்னும் கண்களோடும் புன்னகையோடும் அவர் அமர்ந்திருப்பதே என் நினைவிலிருக்கும்,’ என்கிறார்.
காமராஜருக்கு ஜெகந்நாதன் மீது மிகுந்த நம்பிக்கை உண்டு என்பார் நடராஜன். ஜெகந்நாதன் காமராஜரிடம் சென்று நிலப்பிரச்சனை தொடர்பாகப் பேசிவிட்டு, சத்தியாகிரகம் செய்யப்போவதாகக் கூறினால், ‘நீங்க சத்தியாகிரகம் செய்யுங்க. எங்க அப்பன் சத்தியாகிரகம் செஞ்சாலும் பிடிச்சு ஜெயில்ல போட்டுறுவேன்,’ என்பாராம் காமராஜர். ஆனால் அவர் காங்கிரசு செயற்குழுவின் தலைவராகப் போனபிறகு இவர்கள் போராட்டம் செய்தபோது, கூட்டத்திலேயே வந்து, ‘என்னய்யா, எழுநூறு பேரு ஜெயிலுக்குப் போயிருக்கான். பேசாம இருக்கீங்க. யாரையாவது அனுப்பி சமரசம் பண்ணுங்கய்யா,’ என்றிருக்கிறார். அதன் விளைவாகத்தான் விளாம்பட்டி சத்தியாகிரகத்தில் கக்கன் வந்து சமரசம் செய்து போராட்டத்தை முடித்துவைத்திருக்கிறார்.
திருநெல்வேலியில் ஜெகந்நாதன் நடத்திய ஒரு போராட்டத்துக்கு வந்த ஜே.சி.குமரப்பாவை ‘கதர்ச் சட்டை போட்ட கம்யூனிஸ்டு’ என்று குறிப்பிட்டு நிலக்கிழார்கள் அப்போது உள்துறை அமைச்சராக இருந்த வல்லபாய் படேலுக்குப் புகார்க் கடிதம் எழுதினார்கள். அக்கடிதத்தைப் படேல் குமரப்பாவிடமே விளையாட்டாகப் பகிர்ந்து கொண்டதாக நடராஜன் கூறினார். குமரப்பாவுக்கும் நேருவுக்கும் பொருளாதார அடிப்படையில் நேர்எதிரான கருத்துகள் இருந்தன என்பார். திட்டக்குழுக் கூட்டத்துக்கு குமரப்பா மாட்டுவண்டியில் போக முயன்ற கதையையும் சொல்வார். ‘விவசாயிகள் வாழக்கூடிய இந்த நாட்டில் மாட்டு வண்டியை அனுமதிக்க மாட்டேன்னு சொல்லலாமா?’ என்று கேட்டதற்கு, நேரு, ‘ராணுவ வண்டிகள் வரக்கூடிய சாலையில் மாட்டுவண்டிகளுக்கு விபத்து நேர்ந்துவிடும்,’ என்று பதில் சொன்னதாகவும், அதற்கு குமரப்பா, ‘விபத்தை ஏற்படுத்துபவனை விட்டு ஏன் பாதிக்கப்படுகிறவனைத் தடுக்கவேண்டும்,’ என்று கேட்டார் என்பார். குமரப்பாவின் பேச்சுத்தமிழ் மழலைத் தமிழ் போல இருக்கும் என்றும் சொல்வார். காந்திகிராம அறக்கட்டளை அலுவலகத்தின் எதிரில்தான் கிருஷ்ணம்மாள்-ஜெகந்நாதன் திருமணம் நடைபெற்றது. சௌந்தரம், ஜி.ராமச்சந்திரன், குமரப்பா, கெய்த்தான் ஆகியோர் உடனிருந்தனர். கெய்த்தான் இருவருக்கும் சேர்த்து ஒரு கதர் சிட்டம் செய்து அவர்களது கழுத்துகளைச் சுற்றிப் போட்டார். குமரப்பா முதுகில் ஓங்கி அடித்துத் தன் ஆசிகளைத் தந்தார் என்றார் நடராஜன். அப்போது மாணவர் சேவாதளத்தின் பிரதினிதியாகச் சென்றிருந்த நடராஜன் ஒரு வாழ்த்து மடலைப் படித்திருக்கிறார்.
நடராஜனுக்கு இவான் இலிச், E.F. ஷூமேக்கர், மார்க் லிண்ட்லே, ராமச்சந்திர குகா போன்ற பல்வேறு அறிஞர்களுடன் வெவ்வேறு தருணங்களில் பழகும் வாய்ப்புக்கிட்டியது. உலகின் பல நாடுகளுக்கும் பயணம் செய்து அங்குள்ள காந்தியச் சோதனைகளைக் கண்டிருக்கிறார். பல மாற்றுக்கருத்துகள் கொண்டவர்களுடனும் சிறந்த நட்பிலிருந்தார். ருசிய இலக்கியங்களை மொழிபெயர்த்த நா.தர்மராஜன் இவரது நெருங்கிய நண்பர். கீழை மார்க்சிய அறிஞர் எஸ்.என்.நாகராசனுடனும் அடிக்கடி உரையாடுவார். பூமிதான இயக்க காலத்திலேயே கம்யூனிஸ்டு தலைவர் ஜீவானந்தத்தைப் பேசுவதற்கு அழைத்திருக்கிறார். நல்லக்கண்ணுவோடும் நெருங்கிய தொடர்பு உண்டு.
ஈரோடு ஜீவா, பாவண்ணன் போன்றோரை சர்வோதயம் மலர்கிறது இதழில் தொடர்ந்து எழுதவைத்தார். என்னையும் எப்போதும் எழுதுவதற்கு ஊக்கம் கொடுத்துக்கொண்டே இருப்பார். பிற செயல்களில் திசைமாறி நான் எழுதவதாகக் கூறிய ஏதேனும் கட்டுரையை எழுதாமல் காலம் கடத்திக்கொண்டிருந்தால், சிறிதும் கடிந்துகொள்ளாமல் தொடர்ந்து பொறுமையாக நினைவுபடுத்துவார். நல்ல நூல்களைச் சட்டென்று அடையாளம் கண்டுகொள்ளும் ஆற்றல் அவருக்கிருந்தது. அவற்றை வாங்கி அனுப்பி அவற்றுக்கான விமர்சனங்களை எழுதச் சொல்வார்.
சமூகச் செயல்பாட்டில் முழுமையாக ஈடுபட்டுவிட்டதால் இலக்கியமெல்லாம் அவர் விரும்பிய அளவு தீவிரமாகப் படிப்பதற்கு நேரமில்லாமல் போய்விட்டது என்பார். ஜெயகாந்தன் போன்றவர்களால் ஈர்க்கப்பட்டாலும் அவர் குடிப்பழக்கத்தை நியாயப்படுத்திப் பேசியது தனக்கு உவப்பாக இல்லை என்பார். இலக்கியவாதிகள் தனிவாழ்விலும் அறத்தைப் பேணவேண்டும் என்று கருதினார். ஜி.நாகராஜன் அவரது நெருங்கிய நண்பராக இருந்தார் என்ற சுவையான செய்தியைப் பாமயன் எழுதியுள்ளார். நடராஜன் விரும்பியவண்ணம் இலக்கியம் பயிலாவிட்டாலும் இருமொழிகளிலும் சிறப்பான தேர்ச்சி பெற்றிருந்தார். சொல்ல வந்த கருத்துகளை – எழுத்திலாகட்டும், பேச்சிலாகட்டும – மிகத் தெளிவாகவும், எளிமையாகவும், சுவையாகவும் கூறும் ஆற்றல் அவருக்கிருந்தது.
காந்தியப் பொருளாதாரத்திலும், கிராம சுயாட்சியிலும் நடராஜன் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார். அவற்றுக்கெதிரான போக்குகளைக் கடுமையாக விமர்சித்துப் பேசியும் எழுதியும் வந்தார். இன்றைய சூழலியல் சிக்கல்களுக்கு பரவலாக்கப்பட்ட அதிகாரமும், உற்பத்தி முறைகளும், வேலைவாய்ப்புகளும் அவசியம் என்று கருதினார். மதச்சார்பின்மையை வலியுறுத்தியும் அரசின் பல நடவடிக்கைகளைக் கண்டித்தும் பல தலையங்கங்களையும் கட்டுரைகளையும் எழுதினார்.
2012ம் ஆண்டு மதுரையில் நாராயண் தேசாயின் ‘காந்தி கதா’ நிகழ்வு நடக்கவிருப்பதாகத் தெரிந்தவுடன் சென்னையிலிருந்து மதுரைக்குக் கிளம்பிச் சென்றேன். நாராயண் தேசாய் காந்தியின் அணுக்கச் செயலாளராக இருந்த மகாதேவ் தேசாயின் மகன். காந்தியின் கண்பார்வையில் வளர்ந்த அனுபவங்களை அழகாகப் பதிவு செய்தவர். எனவே அந்நிகழ்ச்சியைத் தவறவிடக் கூடாது என்று நினைத்தேன். அங்குதான் க.மு.நடராஜன் அவர்களை முதன்முறையாகச் சந்தித்தேன். அந்த ஐந்து நாள் உரையை அவர்தான் ஒருங்கிணைத்திருந்தார். நாராயண் தேசாயிடம் நேர்காணல் செய்வதற்கான அனுமதியை அவரிடம்தான் பெற்றேன். ஆனால், அப்போது நடராஜனைப் பற்றி நான் எதுவும் அறிந்திருக்கவில்லை. ஒரு நீண்ட நெருங்கிய உறவு அன்று தொடங்கவிருக்கிறது என்பதையும் நான் அப்போது உணரவில்லை. முதலில் காந்தி-இன்று தளத்தில் அந்த நேர்காணல் வெளிவந்தது. பிறகு நண்பர்கள் சுனில் கிருஷ்ணன், ராட்டை ரகு ஆகியோர் அந்த நேர்காணலையும் சுனிலின் கட்டுரையையும் நடராஜனிடம் பகிர்ந்துகொண்டபோது, உடனே அதை சர்வோதய இலக்கியப் பண்ணை வெளியீடாக தமிழிலும் ஆங்கிலத்திலும் நூல்வடிவம் கொடுத்துப் பதிப்பித்தார். அப்போதுதான் அவரோடு எனது பழக்கம் முறையாகத் தொடங்கியது. ஒருவகையில் இந்த அனுபவமே எனக்கு அவரைப்பற்றி முழுமையாகப் புரிந்து கொள்வதற்கான வாய்ப்பாகவும் அமைந்தது. காந்தியின் மீது ஆர்வம் கொண்டவர்களை சர்வோதய இயக்கத்தோடுப் பிணைப்பதற்குக் கிடைக்கும் வாய்ப்பை அவர் தவறவிடுவதில்லை என்பதை உணர்ந்தேன். காந்தியப் பணியைச் செய்யக்கிட்டும் எந்த வாய்ப்பையும் அவர் தேடிப்போய்ப் பற்றிக்கொள்வார் என்பதையும் அறிந்தேன். முதலில் நாராயண் தேசாயின் காந்தி கதா கூடங்குளம் போராட்டக் குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அந்நிகழ்ச்சி அங்கு நடைபெற முடியாத சூழல் ஏற்பட்டதை அறிந்தவுடன், உடனே அவரை அணுகி மிகக்குறுகிய காலத்தில் மதுரை காந்தி அருங்காட்சியக வளாகத்தில் அந்நிகழ்ச்சி நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை நடராஜன் செய்தார். பலவகைகளில் இந்நிகழ்ச்சியின் மூலமாகக் கிடைத்த தொடர்புகளும், அனுபவங்களும் எனது வாழ்க்கையைப் புரட்டிப்போட்டு வேறு தடத்தில் செலுத்தக்கூடியவையாக மாறின. அந்த மாற்றத்தின்போது எனக்கும் என் குடும்பத்தினருக்கும் ஊக்கம் தருபவராகவும் வழிகாட்டுபவராகவும் நடராஜன் இருந்தார். அவரது எழுபதாண்டுகால காந்தியப் பணியில் இப்படி எண்ணற்ற நிகழ்ச்சிகளை அவருடன் தொடர்பில் வந்த ஒவ்வொருவராலும் நினைவுகூர முடியும்.
கடந்த சில ஆண்டுகளாக என்னோடு வாரமொருமுறையேனும் பேசாமலிருக்கமாட்டார். ஒவ்வொரு முறையும் ஒருமணிநேரமாவது பேசுவார். என்னைவிட இருமடங்கு வயதும் பன்மடங்கு அனுபவமும் அவருக்கு இருந்தாலும் என்னோடு ஒரு இணைநண்பனாகவே பழகினார். நான் அண்மைக் காலங்களில் அதிகம் உரையாடியது அவருடன்தான். அதிலும் கடந்த ஓராண்டாக இருந்த பொதுமுடக்கத்தின் போது கிராமத்திலுள்ள நான் சோர்ந்து போய்விடக்கூடாது என்பதில் கருத்தாக இருந்தார். எனது அப்பாவை முதுமையின் தனிமை தீண்டாமல் அடிக்கடி போய் பார்த்துக்கொள்ளும்படி அறிவுறுத்துவார். கபசுரக்குடிநீர் கிடைத்ததா என்று கேட்டு இல்லை என்றபோது மதுரையிலிருந்து கபசுரக்குடிநீர்த் தூளும் பிற மருந்துகளும் அனுப்பிவைத்தார்.
இப்படியான அனுபவங்களை அவரது அஞ்சலிக் கூட்டங்களில் ஒவ்வொருவரும் பகிர்ந்துகொண்டனர். ஒவ்வொருவரும் தம்மீது அவர் தனிக்கவனமும் தனிப்பிரியமும் வைத்திருந்ததாக எண்ணியிருந்தனர். எல்லோருடனும் தனித்துவமான உறவை அவரால் பேணமுடிந்தது. ஒரு கூட்டம் முடியும்வரை கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் தொடர்ந்து கண்ணீர் சொரிந்தபடியே அமர்ந்திருந்தார். அவர்களது நீண்ட நெடிய சமூகப்பயணத்தில் நடராஜன் எத்தனை உற்ற துணையாக இருந்திருக்கிறார் என்பதற்கு நாம் எழுதக்கூடிய எந்த சொற்களையும் விட அந்தக் கண்ணீரே சான்றாகியது.
பல சர்வோதய நிறுவனங்களுக்குத் தலைவராகவும் இருந்து, இரண்டு இதழ்களைத் தொடங்கி, மூன்று இதழ்களுக்கு ஆசிரியராக இருந்து தொடர்ந்து நடத்தியதென்பது ஓர் அரிய சாதனை. அதனை எண்பத்தெட்டு வயதுவரை அவர் செய்துவந்தார் என்பது அவருக்கு காந்தியத்தின் மீதிருந்த ஈடுபாட்டையும், நிறைவாழ்வு வாழ்ந்து முதுமையடைந்த பிறகும் தன் பணி முடிந்துவிடவில்லை என்ற எண்ணத்தையும், உலகநலனுக்காகத் தன்னால் இன்னும் பங்காற்ற முடியும் என்று அவருக்கிருந்த நம்பிக்கையையும் காட்டுகின்றன. தன்மீது அவருக்கிருந்த நம்பிக்கையும் மற்றவர்கள் மீதிருந்த தீராத அன்புமே அவரது இந்த எழுபதாண்டுகாலச் சமூகப்பணியைச் சாத்தியமாக்கியிருக்கிறது.