க.மு.நடராஜன் : அஞ்சலி

நம் காலத்தின் மிகப்பெரிய காந்திய ஆளுமைகளில் ஒருவரான க.மு.நடராஜன் மறைந்துவிட்டார். காந்தியக் காலத்தின் கடைசிக் கண்ணிகளில் ஒருவர். பூமிதான இயக்கத்தில் ஈடுபட்டவர். வினோபா, ஜெயப்பிரக்காஷ் நாராயணன் ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர். அவர்களது தமிழ்நாட்டுப் பயணங்களின் போது பல சமயங்களில் அவர்களது உரைகளை மொழிபெயர்த்தவர். ஜெகந்நாதன், கிருஷ்ணம்மாள் தம்பதியரின் செயல்பாடுகளில் அவர்களுக்கு உற்ற துணையாக இருந்தவர். பெரும் அறிஞர். தொண்ணூறு வயதிலும் மூன்று அச்சிதழ்களுக்கு (சர்வோதயம் மலர்கிறது, கிராம ராஜ்ஜியம், Sarvodaya Talisman) ஆசிரியராக இருந்தவர். எதையும் அஞ்சாமல் பேசவும் எழுதவும் செய்தவர். பல சர்வோதய நிறுவனங்களுக்குத் தலைவராக இருந்தார். அவரொரு வரலாற்றுப் பெட்டகம். உலகச் செய்திகள் அனைத்தையும் தொடர்ந்து கவனித்துவந்தார். மத நல்லிணக்கம், அனைவருக்குமான வளர்ச்சி ஆகியவற்றை வலியுறுத்தியும் அரசின் செயல்பாடுகளை விமர்சித்தும் எத்தனையோ தலையங்கங்கள் எழுதியுள்ளார்.

தனிப்பட்ட முறையில் என்மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தவர். கடந்த சில ஆண்டுகளாக என் மதிப்புக்குரிய வழிகாட்டியாக இருந்தவர். வாரமொருமுறையேனும் பேசாமலிருக்கமாட்டார். ஒவ்வொரு முறையும் ஒருமணிநேரமாவது பேசுவார். நான் அண்மைக் காலங்களில் அதிகம் உரையாடியது அவருடன்தான். இதுகுறித்து என் மனைவிக்கு அவர் மீது ஓர் அன்பான பொறாமையே உண்டு. புதியவர்களை சர்வோதயக் குடும்பத்துக்குள் கொண்டுவர வேண்டும் என்பதில் எப்போதும் தணியாத ஆர்வம் கொண்டிருந்தார். ஒருமுறை அவருடன் தொடர்பில் வந்துவிட்டால் தன் அன்புக்கரங்களால் பற்றிக்கொள்வார். இரண்டாண்டுகளுக்கு முன்னர் எழுத்தாளர் பாவண்ணனோடு தொடர்பு ஏற்பட்டபிறகு அவர் பல ஆளுமைகளைப் பற்றி எழுதத் தூண்டுதலாக இருந்தார். ஒவ்வொரு முறை பேசும்போதும் அவரை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி கூறுவார். என்னையும் பல மூத்த காந்தியர்களுக்கு அறிமுகப்படுத்திவைப்பார். பல நிகழ்வுகளுக்கு அழைத்துச் சென்றார். மதுரையில் இல்லாமல் போய்விட்டேன் என்று ஆதங்கப்படுவார். ஏதேனும் புத்தகம் படித்ததாகக் கூறினால் உடனே அதுகுறித்து எழுதி அனுப்பச் சொல்வார். அவரும் புத்தகங்கள் அனுப்பி வைப்பார். என் மனைவி என்னைவிட நன்றாக மொழிபெயர்ப்பதாகக் கூறி அவரையும் எழுதுவதற்குத் தூண்டுவார். மகளின் மீதும் பேரன்பு கொண்டிருந்தார்.

கடந்த எண்பது ஆண்டுகளில் நடந்த நிகழ்வுகள், வாழ்ந்த ஆளுமைகள் குறித்தெல்லாம் பதிவு செய்யப்படாத பல அரிய தகவல்களைத் தொடர்ந்து பகிர்ந்துகொண்டே இருப்பார். அவற்றை முறையாகப் பதிவு செய்யவேண்டும் என்பது என் நீண்டகால ஆவல். அவரிடமும் பிற நண்பர்களிடமும் தெரிவித்துக் கொண்டே இருந்தேன். ஆனால் செய்யாமலே விட்டுவிட்டேன். அது எனக்கு எப்போதும் பெரிய மனக்குறையாகவே இருக்கும். நம் எல்லாருக்கமே அது பெரிய இழப்புதான்.உண்மையிலேயே அவரது மரணம் ஈடுசெய்யமுடியாத பேரிழப்பு.

One Response to க.மு.நடராஜன் : அஞ்சலி

  1. தங்கவேல் சொல்கிறார்:

    சட்டென்று மூன்று பெரும் ஆளுமைகள் (கி.ரா, எஸ். என். நாகராஜன், க.மு. நடராஜன்) இந்த சில நாட்களில் காலமானது வருத்தமாக உள்ளது. மற்ற இருவரையும் படித்துள்ளேன். இவரை சில நாட்களாக தான் தெரியும் அதுவும் உங்கள் மூலமாக. அவரின் நீட்சியாக உங்களை போன்றவர்கள் தொடர்கிறீர்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: