17-4-2020
கிணற்றிலிருந்து வரும் குழாய் இணைப்பு விட்டுப்போய் இரண்டு வாரங்கள் ஆகிவிட்டன. அழைத்துப்பார்த்த குழாய்நுட்பர் [ப்ளம்பர் ] வருவதாகச் சொல்லிச்சொல்லி வரவேயில்லை. இரண்டு மழை கிடைத்ததால் நானும் அதிகம் கவலைப்படவில்லை. இப்போது ஈரம் காய்ந்துவிட்டது. வெயில் கொளுத்துகிறது. இன்றைக்கு நாமே ஒட்டிவிடலாம் என்று இரண்டு கிராமம் தள்ளியிருக்கும் கடைக்குச் சென்று குழாய் ஒட்டும் பசைவாங்கிவர நானே கிளம்பிவிட்டேன். எங்கள் ஊர் தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, நுழைவாயிலில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, எந்நேரமும் மூன்று நான்கு காவல்துறையினர் அமர்ந்திருக்கின்றனர். காரில் செல்ல வாய்ப்பில்லை. முகக்கவசம் அணியாதவர்களுக்கு ஐந்நூறு ரூபாய் அபராதம் விதிப்பதாகவும் பேச்சு.
மத்திய அரசு விதிமுறைகளைப் பின்பற்றி கைக்குட்டையையும் இரண்டு ரப்பர் வளையங்களையும் கொண்டு நானே ஒரு முகக்கவசம் செய்துகொண்டேன். சின்னதாக இருப்பினும் மூக்கு வாயினை நன்றாக மூடுகிறது.
கடை மூன்று கிலோமீட்டர் தள்ளியுள்ளது. யாருமற்ற சாலையில் முகமூடியோடு நடந்துசெல்வது வினோதமாகத்தான் இருந்தது. கிழக்கு நோக்கி நடந்துகொண்டிருந்ததால், காலை நேரத்து இளம் வெயில் முகத்தில் நேராக விழுந்தது. ஒவ்வொரு முறை மூச்சுவிடும்போதும் நான் அணிந்திருந்த கண்ணாடி ஈரமாகிக் கண்ணை மறைத்தது.
பாதிவழியில் ஒரு மரத்தடியில் புதிய சாலையோரக் காய்க்கடை முளைத்திருந்தது. நிறையக் காய்வகைகள் ஓரளவு புதிதாக இருந்தன. திரும்பும் போது வாங்கிக்கொள்வதாகச் சொல்லிவிட்டுச் சென்றேன்.
கடைக்குச் சென்றதும் ஏக வரவேற்பு. அக்கடைக்கு எதிரில் இரண்டாண்டுகள் குடியிருந்திருக்கிறோம். கடைக்காரர் ஜப்பார் (ஜாஃபர்) பொருள்கள் வாங்க வெளியில் சென்றிருந்தார். அவரது மனைவி, மக்கள், மருமக்கள் எல்லாரும் இருந்தனர். காபி வேண்டுமா தேநீர் வேண்டுமா ஜூஸ் குடியுங்கள் என்று உபச்சாரம் பலமாக இருந்தது. பழமாவது சாப்பிடுங்கள் என்றார்கள். நான் வாங்க வந்த பசை என்னவோ 16ரூபாய்தான். மகளுடைய செருப்பினை நாய்க்குட்டிகள் கடித்துப்பிய்த்துவிட்டன. ஊரடங்கின் போது செருப்பெதற்கு என்று அவை நினைத்திருக்கலாம். அவளுடைய அளவுக்கு அங்கு செருப்பும் இருந்தது. 100 ரூபாய், உங்களுக்கு எழுபதுக்குத் தருகிறேன் என்றார் கடைக்காரம்மா. அவற்றுடன் இரண்டு சோப்புகளும் வாங்கிக்கொண்டேன்.
எதிர் வீட்டில் இருப்பவர் ஊர்ஊராக நெகிழி வாளிகளையும் பிற சாமான்களையும் எடுத்துச்சென்று விற்பவர். மகன் சுவர்ச்சாயம் பூசுபவர். இருவரும் வெளியில் செல்ல வழி இல்லை. எப்படியோ சமாளிக்கிறோம் என்றார்.
வழியில் காய்கறிகள் வாங்கிக்கொண்டேன். அங்கும் எங்களிடம் படித்த பையன் துணைக்கிருந்தான். 120 ரூபாய்க்கு ஐந்தாறு நாட்களுக்குத் தேவையானவை கிடைத்தன.
வீட்டுக்கு வந்ததும் கைக்குட்டையைக் கழற்றித் துவைத்துக் காயப்போட்டபிறகுதான் இதை எந்நேரமும் அணிந்துகொண்டு பணிசெய்பவர்களின் பாடு புரிந்தது.
நாராயணனை ஐந்து நிமிட வேலைதான் என்று உதவிக்கு அழைத்துக்கொண்டு, தோட்டத்துக்குச் சென்றேன். அவரே குழாய்களை இணைத்து ஒட்டிவிட்டார். குழாய் மீண்டும் பெயர்ந்துவராமல் இருக்கக் குழிதோண்டிக் கம்பு நட்டு அணைப்புக்கொடுத்தார். ஆனால் மோட்டார் ஓட்ட வழியில்லை. மின்சாரம் ஒரு ஃபேஸ் போயிருந்தது. நாளைவரை காத்திருக்கவேண்டும்.
அவர் சென்ற பிறகு தேங்காய்களை எடுத்துப் போட்டேன். ஓரிடத்தில் கீழே விழுந்தேன். கையிலிருந்த தேங்காய் தரையில்பட்டுத் தெறித்து வாய்மீது பட்டதில், உதடு சிறிதே கிழிந்து சற்று நேரம் உதிரம் சொட்டியது. இரு நாட்களாக மகளுக்குக் காலிலும் மனைவிக்குத் தலையிலும் அடிபட்டிருந்தன.
பார்வதி நிலத்தை உழுது விதைத்திருந்த சோளம் இன்னும் பெரிதாக முளைக்கவில்லை. டிராக்டர் கிடைக்கத் தாமதமாகியிருந்தது. நிழலடியில் மட்டும் கொஞ்சம் துளிர்த்திருந்தன. பார்வதிக்கு நாலாயிரம் செலவாகியிருக்கும். இன்னொரு தூறலாவது கிடைக்காவிட்டால் கடினம்தான் என்கின்றனர்.
நாளை தேங்காய் உடைத்து எண்ணெய் ஆட்டலாம் என்றிருக்கிறோம். செக்குக் கடை திறந்துள்ளதாம். மழைக்குமுன் காயவைத்துவிடவேண்டும். காரில் எடுத்துச்செல்வதில் சிரமங்கள் இருக்கலாம். பார்ப்போம்.
மாலையில் மாபி டிக் கொஞ்சம் படித்தேன். மகள் தாகூர் சிறுகதைகள் படித்தாள். அம்மாவோடு வாழைப்பழ கேக் செய்தாள். பின்னர் திடீரென்று இந்தி கற்றுக்கொள்ளலாம் என்றாள். உயிரெழுத்துகள் சொல்லிக்கொடுத்தேன். இணையத்தில் வரிசை உச்சரிப்பு எல்லாம் மாறிமாறிச் சொல்கிறார்கள் – குறிப்பாக ஐ, ஔ, ரி அல்லது ரூ (சின்ன வயதில் க்ரூ என்று படித்த நினைவு). என்ன மொழியோ என்று கிண்டலடித்தாள். நானும் மனைவியும் இரவு முபியில் ஒரு ஜார்ஜியப் படம் [Brother] மெதுவான இணைய இணைப்பில் பார்த்தோம். அவ்வப்போது இரு காட்சிகளுக்கிடையே விழும் இடைவெளிகளில் காரோட்டும் போது சிக்னலில் உறங்குவதுபோலத் தூங்கித்தூங்கி விழித்தேன்.
அவ்வளவுதான். சொல்வதற்கு வேறொன்றும் பெரிதாக இல்லை. ஊரடங்கில் ஒரு நாள் கழிந்தது.