(29-Nov-2019)
திருவண்ணாமலை மருதம் பள்ளி சென்றிருந்தபோது, அப்பள்ளியை நடத்தும் முக்கிய நபர்களில் ஒருவரான அருணோடு பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அவருக்குக் கைபேசியில் ஓர் அழைப்பு வந்தது – தொடக்கப்பள்ளி வகுப்பறையின் அருகில் ஒரு லூனா மாத் (Luna moth) இருப்பதாக.
[Butterfly – வண்ணத்துப்பூச்சி, moth – பட்டாம்பூச்சி என்றோ அந்துப்பூச்சி என்றோ சில இயற்கை இதழ்களில் மொழிபெயர்க்கிறார்கள்; அந்திப்பூச்சி என்றும் சொல்கிறார்கள். ஆனால் பகலில் பறக்கும் அந்திப்பூச்சிகளையும் பார்த்திருப்பதாக அருண் கூறினார். சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதியில் தம்பலப்பூச்சி, தனுப்பீசம், பதமம், பொட்டு, விட்டிகை, விட்டில், ஈயலி, வெள்ளைவண்ணாத்தி, தட்டாரப்பூச்சி ஆகிய சொற்களும் ஏதேனும் mothஐக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளன].
இதுவரை அங்கு லூனா மாத் தென்பட்டதில்லை என்பதால் அருணுக்கு நம்பிக்கையில்லை. வேறு ஏதாவது பொதுவான அந்திப்பூச்சியாக இருக்கலாம் என்றார். வேறொரு மாணவனை அனுப்பி உறுதி செய்யச் சொன்னார். அவன் சென்ற சிறிது நேரத்தில் மீண்டும் அழைப்பு வந்தது. லூனா மாத் தானாம் என்று உடனிருந்தவர்களை அழைத்துக்கொண்டு ஓடினார். ஒன்றும் புரியாமல் நானும் சென்றேன். உண்மையிலேயே காண்பரிய காட்சிதான். ஒரு கொய்யா மரத்தின் இலைகளோடு இலையாய், அசையாது தொங்கிக்கொண்டிருந்த லூனா மாத் அத்தனை அழகு. அடுத்த சில நிமிடங்களில் குழந்தைகள் பெரியவர்கள் என்று அப்பள்ளியைச் சேர்ந்த அனைவரும் வந்து வந்து அதைக் கண்டு களிப்புடன் சென்றனர்.
அடுத்த நாள் மதியம் இன்னொரு நண்பரோடு உரையாடிக் கொண்டிருந்தேன். மருதம் பள்ளி வளாகத்தில் சில ஓலைக் குடில்கள் உண்டு. அவற்றில் ஒன்றில் அமர்ந்திருந்தோம். அவ்வழியே சென்ற அருண் அடுத்த குடிலில் ஒரு பாம்பு வந்திருப்பதாகச் சொன்னார். சென்று பார்த்தோம். அதனருகில் ஒரு சிறுவன் அமர்ந்திருந்தான். அது ரஸ்ஸல்ஸ் குக்ரி என்ற வகைப் பாம்பின் குட்டி என்றான். (Russell’s kukri; Common/Banded kukri என்ற பாம்பினத்தை எண்ணெய்ப் பனையன் என்கிறது விக்கி). சன்னமாக இருந்தது. பெரிதானால் மேலும் சற்று தடிமனாகும் என்று விரல்களால் அளவு காட்டினான்.
“கடிக்காதா?” என்றேன்.
“அவ்வளவு சீக்கிரம் கடிக்காது. மிகவும் அருகில் கைவைத்தால் சீறும். தொட்டால்தான் கடிக்கும். மிகவும் சின்னப் பல்தான். பெரிதாகக் காயம் ஆகாது. விஷமும் கிடையாது,” என்றான்.
“எத்தனை நேரம் பார்த்துக்கொண்டிருப்பாய்?”
“அது நகர்ந்து செடிகளுக்குள் மறையும் வரை.”
சிறிது நேரம் நின்று, சில படங்கள் எடுத்துவிட்டுத் திரும்பிவிட்டோம். அந்தப் பச்சைவெளியில், ஓலைக்குடிலின் வாயிலில் ரஸ்ஸல்ஸ் குக்ரியோடு அவன் தனியே அமர்ந்து அமைதியாக அதன் அசைவுகளை நோக்கியவாறு இருந்தான்.
எந்தப் பொதுத் தேர்வில் ரஸ்ஸல்ஸ் குக்ரி பற்றியும் லூனா மாத் பற்றியும் இவர்கள் பெற்றுள்ள கள அறிவைச் சோதிக்கப்போகிறார்கள்?