(19-அக்டோபர்-2019)
நேற்று காந்திகிராமுக்குப் பேருந்தில் செல்லும்போது பின் இருக்கையில் இருந்த ஒரு பெண் கைபேசியில் உரக்கப் பேசிக்கொண்டிருந்தார். மும்முரமாகப் படித்துக்கொண்டிருந்த புத்தகத்தைத் தாண்டி அவரது சொற்கள் செவிப்பறையில் அறைந்தன. மறுமுனையில் அவருடைய மகனாக இருக்கவேண்டும். பள்ளிசெல்லும் சிறுவன்.
‘ஏன் ஷூ நனைஞ்சுது?
சரி, இன்னிக்கு வேற ஷூ இருக்கில்ல, அதைப் போட்டுக்க. இல்லைனா, செருப்புப் போட்டுட்டு ஸ்கூலுக்குப் போ.
லேஸ் வைச்ச ஷூவேதான் போடணும்னு ஏதாவது கட்டாயமா?
ஃபைன் கட்டச்சொன்னா கட்டிருடா. எத்தன ரூபா ஃபைன்?
சரி, பத்து ரூபா எடுத்துட்டுப் போய்க்கோ. ஃபைன் கேட்டாக் கட்டிரு.
திட்டினாங்கன்னா திட்டு வாங்கிக்க.
அடிச்சாங்கன்னா அடி வாங்கிக்க.
இங்க இருந்துட்டு என்னை என்ன செய்யச் சொல்ற?
—
அழைப்பைத் துண்டித்து விட்டார். சற்று நேரத்தில் அவரே மறுபடி அழைத்துப் பேசினார். இம்முறை மூத்த மகனிடம் பேசினார் போலும்.
‘டேய், அவன் என்னடா ஷூ நனைஞ்சுபோச்சுன்னு அழுகறான்?
ஒன்னு செய். நீ உன்னோடு ஷூவை அவனுக்குக் குடுத்துடு. நீ செருப்புப் போட்டுட்டுப் போய்க்க.
என்ன லீவு போட்டுக்கிறேங்கிறானா. அவங்கிட்டக் குடு.
ஷூ இல்லைன்னு யாராவது லீவு போடுவாங்களாடா?
இப்ப நீ கிளம்பிப் போகப்போறியா இல்லையா? தோலை உறிச்சுருவேன்.
லீவப் பத்தி எங்கிட்டப் பேசாத. வந்தேன்னாப் பாரு…பிச்சுப் போடுவேன்.
—
அதற்குள் அவர்கள் நிறுத்தம் வந்துவிட்டது. பேசிக்கொண்டே இறங்கிச் சென்றுவிட்டார்.
வாழிய நம் பள்ளிகள். வாழ்க எம்மக்கள், வாழிய மணித்திரு நாடு.