உடுக்கை மாறிய வள்ளுவனுக்கு வந்த இடுக்கண் களையக் களத்தில் இறங்காவிட்டால் அவருடனான நட்புக்கொன்றும் களங்கம் வந்துவிடாதுதான். தற்காத்துத் தன்னைப் பேணிக்கொள்ளும் தகைமை அவர் எழுத்துக்குண்டு. இருப்பினும்…
வள்ளுவன் இனிய உளவாக மட்டுமே கூறியவரில்லை. கடும்சொற்களையும் அவ்வப்போது அள்ளி வீசுவார். தன்னை வியந்து அணியும் சிறுமை கண்டு பொங்குவார்.
பேதைமை, புல்லறிவாண்மை, இகல், கயமை போன்ற அதிகாரங்களில் புகுந்து விளையாடியிருப்பார்.
‘மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாம்கண்ட தில்.’
என்று நக்கலாகவும் அதிரடித் தாக்குதல் நிகழ்த்துவார். முதலில் வள்ளுவனது வெண்தாடியைக் களைந்தால்தான் அவனைச் சரியாகப் புரிந்துகொள்ளமுடியும். மழித்தலா, நீட்டலா, பட்டையா, நெட்டையா என்பதெல்லாம் பின்னர் பார்த்துக்கொள்ளலாம். ஔவையும் பாட்டியல்லள், ஐயனும் கிழவனல்லன் என்பது என் துணிபு.
இந்த முகநூல் யுகத்துக்கு மிகவும் தேவையான அதிகாரங்கள் நட்பு குறித்தவை. நட்பு, நட்பாராய்தல், பழைமை, தீநட்பு, கூடாநட்பு என்று ஐந்து அதிகாரங்கள் எழுதியிருக்கிறார். படித்துப் பயன்பெறுங்கள். யாருடைய நட்பு அழைப்பை ஏற்கலாம், யாரைத் தொடர்வதை நிறுத்தவேண்டும் (unfollow), யாரை நட்புநீக்கம் செய்யவேண்டும் (unfriend), யாரை block செய்யவேண்டும், எவரிடம் அகலாது அணுகாது இருக்கவேண்டும் என்பதையெல்லாம் வள்ளுவனைப் படித்துத் தெளிவுறலாம்.
‘ஊதியம் என்ப தொருவற்குப் பேதையார்
கேண்மை ஒரீஇ விடல்.’