இடுக்கில் நுழைதல்

உலகம் திருக்குறளைப் பொதுமறையாக ஒப்புக்கொள்கிறதோ இல்லையோ, தமிழர்கள் திருக்குறளைப் பொதுமறையாகத்தான் கொண்டாடிவந்துள்ளார்கள். மதம் தாண்டி, ஒரு மொழியின், அம்மொழிபேசும் மக்களின் பொது அடையாளமாகக் குறள் கருதப்பட்டுவந்துள்ளது. இது ஏதோ திராவிடக் கட்சியினரின் சதியோ சாதனையோ அல்ல. அவர்களுக்கு முன்பே திருக்குறள் பல அறிஞர்களாலும் பொதுமறையாகப் பார்க்கப்பட்டிருக்கிறது. பரிமேலழகர் உரையை விளக்கவுரையுடன் பதிப்பித்த வை.மு.கோ. அவ்வாறுதான் கூறுகிறார். சைவ மடமான திருப்பனந்தாள் காசி மடத்தின் உரைக்கொத்துப் பதிப்புகளிலேயே கூட இதைக்காணலாம். ராமக்கிருஷ்ண மடம் பதிப்பித்த கி.வ.ஜ. ஆய்வுரையிலும் இதே முடிவுக்கே வருகிறார்கள்.

வள்ளுவர் இன்ன மதம் என்று எதை வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளும் உரிமை பாஜகவுக்கும் உண்டு. ஆனால் திடீரென்று அவருக்கு ஆதாரமற்ற சமயச்சாயம் பூசுவதிலுள்ள அரசியல் கணக்குகள் ஆபத்தானவை. சமூகத்தின் அனைத்துத் தரப்பினரையும் இணைக்கும் ஒரு முக்கியமான சரடினை அறுக்கும் முயற்சி இது. ஒருவகையில் இது இவர்கள் இந்துத்துவக் கட்டமைப்பில் உள்ளடக்கியிருக்கும் சமணர்களையும் அந்நியப்படுத்தக்கூடும். தமிழின் முக்கியமான சமண, பௌத்தப் படைப்புகளை அனைத்துத் தமிழர்களும் கொண்டாடும் வழக்கமே உ.வே.சா. காலம் தொடங்கி இங்குண்டு.

குறள் சைவ நூல் அல்ல என்று சொல்பவர்கள் எல்லாரும் சைவ எதிர்ப்பாளர்களோ, இந்துமத எதிர்ப்பாளர்களோ அல்லர். சைவ நூல் என்பதால் திருவாசகத்துக்கு உருகாமலோ போய்விட்டோம். உண்மையில் என் மகள் திருமுறையிசை கற்றுக்கொள்ளத்தொடங்கிய கடந்த ஐந்தாண்டுகளில், திருக்குறளை விடவும் தேவாரமும் திருவாசகமுமே என் காதில் அதிகம் விழுந்துகொண்டிருக்கின்றன. திருக்குறள் சைவ நூலாக இருந்தால் அதை ஏற்றுக்கொள்வதில் என்ன தயக்கம் இருக்கமுடியும்.

திருக்குறள் பரிமேலழகர் உரைப் பதிப்பில் (உமா பதிப்பகம்) வை.மு.கோபாலக்கிருஷ்ணமாச்சாரியார் வள்ளுவர் வைதிகக் கொள்கையினர் என்று கொண்டாலுமே இன்ன மதத்தவர் என்று கூறமுடியாது என்று எழுதுகிறார்:

/இவரது மதம் இன்னதென்று எவ்விதத்திலும் நன்கு விளங்கவில்லை. இவர் இந்நூலின் முதலிற் கூறிய கடவுள் வாழ்த்தும், பல சமயங்கட்கும் பொதுவாகவே உள்ளது; மற்ற விஷயங்களும் பெரும்பாலும் இப்படியே. இவரைச் சைவரென்றாவது வைஷ்ணவரென்றாவது ஒருசார்பாகக் கூறி யாவரும் ஒத்துக்கொள்ளும்படி நிறைநிறுத்துதற்குத் தக்க ஆதாரமொன்றுமில்லை. இவர்க்கு நாயனாரென்று வழங்குகிற பெயர் மாத்திரத்தைக் கொண்டு அவரைச் சைவரென்று சாதிக்கலாகாது; நாயனாரென்னும் அச்சொல் சைவசமயத்தில் மாத்திரமேயன்றி வைஷ்ணவ சமயத்திலும் ஜைந சமயத்திலும் கடவுளுக்கும் அடியார்கட்கும் பெயராக வழங்குதல் உணர்க. […]

இது நிற்க: இவரது மதம் ஜைனமாயிருக்கலாமென்று சிலர் ஊகிக்கிறார்கள்; […] ஜைநர்க்குச் சிறப்பாகவுள்ள புலால்மறுத்தல், கொல்லாமை என்ற ஒழுக்கங்களை மிக வற்புறுத்திக் கூறுதலும், அதிலும் “அவிசொரிந்தாயிரம் வேட்டலினொன்ற னுயிர்செகுத்துண்ணாமை நன்று” என யாகத்தை மறுத்தலும் முதலிய என்ப. அந்தத் திருக்குறளில் “உலகியற்றியான்”, “அந்தணர் நூல்”, “மறப்பினுமோத்துக் கொளலாகும் பார்ப்பான்”, “பிறப்பொழுக்கம் குன்றக்கெடும்”, “அறுதொழிலோர் நூன்மறுப்பர்”, “அவியுணவி னான்றோர்” என்பவை முதலாகக் கூறியன கொண்டு இக்கொள்கை மறுக்கப்படும். இவர் வேதம், கடவுள், உயிர், பூதமைந்து, புலால்மறுத்தல், தவம் முதலியன கொண்டிருத்தலால், பௌத்தருமாகார். இனி, “மடியிலா மன்னவனெய்தும் அடியளந்தான், தாஅயத்தெல்லாம் ஒருங்கு” என்று கூறியிருத்தலாலும், “தாம்வீழ்வார் மென்தோட்டுயிலினினிதுகொல் தாமரைக்கண்ணானுலகு”, என்று சிற்றின்பத்தை எல்லாவற்றினுஞ் சிறந்த மோட்சலோகத்துப் பேரின்பத்தினும் சிறந்தது என்று சொல்ல வேண்டிய விடத்துத் தாமரைக் கண்ணானுலகு என்று திருமாலினது ஸ்ரீ வைகுண்ட லோகத்து இன்பத்தையே குறித்தலாலும், இவ்வுலகமாகிய லீலாவிபூதிக்கும் ஸ்ரீவைகுண்டமென்கிற நித்திய விபூதிக்கும் இறைவன் திருமாலேயென்று தெரிவித்த ஆசிரியர் திருமாலுக்கு உரிய அகாரத்தையே முதன்மொழியாகத் தொடங்கினாலும், இங்ஙன் அகச்சான்று பல இருத்தலால் இவரை வைஷ்ணவர், தம்மதத்தவரென்று சாதிக்கலாம். ஆயினும், தாமரைக்கண்ணானென்பது “மலர்மிலசையேகினான்” என்றாற்போன்று அடியார்களின் இதய கமலத்தின்கணுள்ளானென்ற பொருளைக் காட்டலாமாதலால் திருமாலையே சிறப்பாகக் காட்டுவதென்று கொள்ளவேண்டியதில்லை யென்றும், “அடியளந்தான் தாஅயது” என்று கூறியமாத்திரத்தானே திருமாலினிடத்துப் பக்தியினாற்றான் கூறினாரென்று கொள்ள முடியாதென்றும், பாணினி பகவான் “அ இ உண்” என்று தொடங்கினாற்போல இந்நூலாசிரியர் மங்களவெழுத்தாக அகரத்தைத் தொடங்கியிருக்கலாமென்றும், ஆகவே, இந்த அகச்சான்றுகள் இவரை வைணவரென்று நிலைநாட்டப்போதா என்று வைணவர் கூறுவதற்கு மறுப்புக் கூறவியலும்: இங்கனிருத்தலால், இந்த நூலாசிரியரை வேதவேள்விகளையும் சாதிகளையும் உடன்பட்ட வைதிகக் கொள்கையினரென்று சொல்லலாவதன்றி, இன்ன மதத்தவர்தாம் என்று உறுதியாகச் சொல்லி நாட்டுதற்கு ஏற்ற சிறந்த ஏது ஒன்றும் காணப்பட்டிலது. இங்ஙன் இருப்பது கருதியே திருவள்ளுவரின் திருக்குறளைப்பற்றி

“ஒன்றே பொருளெனின்வேறென்ப வேறெனின்,
அன்றென்ப வாறுசமயத்தார் – நன்றென்ன,
எப்பாலவரு மியைபவே வள்ளுவனார்
முப்பால் மொழிந்த மொழி”

என்று கூறியதுமென்க./

திருப்பனந்தாள் காசிமடம் பதிப்பித்த திருக்குறள் உரைக்கொத்து நூலின் பதிப்புரையில் இவ்வாறு கூறுகிறார்கள்:
“திருக்குறள் எனும் தமிழ்மறை ஓர் ஒப்பற்ற நூலாகும். […] எல்லா மதத்தினரும் எல்லாத் துறையினரும் உரிமை கொண்டாடும் சிறப்புடையது.”

இவர்களே இவர்களது பதிப்பில் (2002) சமய அடையாளமற்ற திருவள்ளுவரின் படத்தையே போட்டிருக்கிறார்கள்.

திரு.வி.க. திருக்குறளைப் பொதுநெறி, அருநெறி என்றும், தமது தமதென்று இடுக்கில் நுழைதல் கூடாது என்றும் கூறுகிறார். ( திருக்குறள் பன்முக வாசிப்பு – பதிப்பு: மாற்று/வெ.பிரகாஷ்)

“திருவள்ளுவர், நாயன்மார் ஆழ்வார்கட்கு முற்பட்டவர். அவர் அருளிய திருக்குறளோ மன்பதைக்குரிய அருள் மறை; பொது மறை. அத்தகைய ஒருவர் திருவுருவம் சைவ வைணவக் கோயில்களில் ஏன் அமைக்கப்படுவதில்லை? சைவ வைணவ நூல்களில் அடியவர் வாழ்த்தில் அவர் ஏன் சேர்க்கப்படவில்லை? அவர் நூல் பூசைக்காலங்களில் ஏன் ஓதப்படுவதில்லை? அன்பவர்கள் உன்னுவார்களாக. முன்னாளில் திருவள்ளுவர் ஜைநர் என்று கொள்ளப்பட்ட வழக்கே, அவரைச் சைவ வைணவக் கோயில்களும், நூல்களும், சம்பிரதாயமும் புறக்கணிக்கக் காரணமாக நின்றிருக்கலாம் என்று எவரும் ஊகிக்கக் கூடும். பின்னே போந்த சைவ வைணவ அறிஞர்கள், திருவள்ளுவர் அறிவுறுத்திய அருணெறியின் பெற்றியுணர்து, அவரை ஏற்றுப் போற்றுவதோடு, அவரைத் தம்மவர் தம்மவர் என்று கொள்ளச் சொற்போரும் நிகழ்த்தலானார்கள்.

திருவள்ளுவர் அறிவுறுத்தியது பொதுநெறி – அருணெறி. ஜீவகாருண்ய ஒழுக்கம். அந்நெறியை எவர் எப்பெயரிட்டழைப்பினும் அழைக்க. திருவள்ளுவரைச் சைவரெனில், வைணவரெனில், பிறரெனில், அவரது சைவமும் வைணவமும் பிறவும் அருகதேவர் கண்ட அருணெறியின்பாற் பட்டனவென்க. அருகர் குறிப்பிட்ட ஒரு கூட்டத்தார்க்கு மட்டும் உரியவரல்லர். அவர் உலகிற்கே உரியர். அருணெறியோம்பப் போந்த ஆசிரியர் பலரும் உலகிற்குரியராவர். அவரைச் சமயவாதிகள் தங்கள் தங்களுக்கே உரியர் என்று கருதிக் கொள்கிறார்கள். அச்சுட்டறிவு பொது உணர்விற்கே கேடு சூழ்கிறது. சுட்டி இடுக்கில் நுழைதல் கூடாது. இடுக்கு இடுக்கணுறுத்தல் இயல்பு. பரந்த பொது வெளியில் உலவ முயல்வதே அறிவுடைமை. அவ்வறிவு சிறப்பளிக்கும்.”

2 Responses to இடுக்கில் நுழைதல்

  1. dagalti@gmail.com சொல்கிறார்:

    /“அவிசொரிந்தாயிரம் வேட்டலினொன்ற னுயிர்செகுத்துண்ணாமை நன்று” என யாகத்தை மறுத்தலும் /

    வைமுகோ ஏன் இப்படி சொல்கிறார் என்று புரியவில்லை.
    ஒன்றை விடச் சிறந்தது மற்றொன்று என்று சொன்னால் என்ன பொருள்?

    உயர்ந்தது என்று கொள்ளத்தக்க ஒன்றைக் காட்டிலும் உயர்ந்தது என்று தானே பொருள்படும்?இது எப்படி யாக மறுப்பு என்று பொருள்படும்?

    உதாரணமாக பாரதியின் வரிகளைப் பார்ப்போம்:

    அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்,
    ஆலயம் பதினாயிரம் நாட்டல்,
    பின்னருள்ள தருமங்கள் யாவும், 
    பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல், 
    அன்னயாவினும் புண்ணியம் கோடி
    ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்

    எழுத்தறிவித்தல் மேற்படி உயர்ந்த தர்மங்களை விட மிக உயர்ந்தது என்றல்லவா பொருள்படும்? இதிலிருந்து ‘பாரதி பிற தர்மங்களை இடித்துரைத்தார்’ என்றா பொருள்கொள்வோம்?

    அவர் ‘சந்த்’ திருவள்ளுவர் என்றெல்லாம் எவ்வாறு சொல்லமுடியாதோ, அதுபோலவே அவர் சொற்களைக் கொண்டு அவர் வேதமறுப்பாளர் என்றெல்லாம் நிறுவிவிடமுடியாது என்றே நினைக்கிறேன்.

    எல்லாரும் தங்கள் தர்மம், மார்க்கம் திரட்டித்தரும் உச்சம் என்று எண்ணுவதை குறளில் காணமுடிவதனால் தான் ‘இவர் எம்மவர்’ என்று விழுந்து புரண்டு கொண்டாடும் முனைப்பாக வெளிப்படுகிறது.

    சென்ற வாரம் குழந்தைகளுடன் வள்ளுவர்கோட்டம் சென்றிருந்தேன். அத்தேரில் ஒவ்வொரு பகுதியிலும் ஒரு அதிகாரத்திற்கான குறுஞ்சிற்பத்தை, அதில் ஒரு கதை/காட்சியைக் காணலாம் என்பதை அறிந்திருப்பீர்கள்.

    பொறை உடைமைக்கு passion of the Christ குறுஞ்சிற்பம் இருந்திருந்தது. 

    மயிலையில் முண்டகக்கண்ணி அம்மன் கோயில்பக்கம் வாழ்ந்த வள்ளுவர் ஜாகையில், தோமையார் சிலநாள் பேயிங் கெஸ்டாக இருந்தபோது, குறட்சாரத்தை போதித்ததாக ‘நிறுவி’ பிஹெச்டி வாங்கிய தரப்பின் சதியாக மேற்படி சிற்பத்தைக் கண்டு ஹிந்துத்வர்கள் கொதிப்பார்களோ என்னவோ.

    ஆனால் தான் அரையப்படப்போகும் சிலுவையை ஏந்திச்செல்லும்போதும் வெறுப்பில்லாமல் முன்செல்லும் இயேசுபிரான், எத்தனை அழகான உதாரணம்! ‘இகழ்வாரைப் பொறுத்த’லுக்கு அதை விட சிறந்த ஒரு காட்சி உண்டா? அந்த பொருத்தப்பாடு நெகிழ்ச்சி அளிக்காத மனங்களை என்னவென்பது?
    இயேசுநாதரின் மலைப்பிரசங்கத்தில் ஒரு வரி:

    உங்கள் சகோதரரை மாத்திரம் வாழ்த்துவீர்களானால், நீங்கள் விசேஷித்துச் செய்கிறது என்ன? ஆயக்காரரும் அப்படிச் செய்கிறார்கள் அல்லவா? (மத்தேயு 5:47)

    இதேதானே நம்மாள் எழுதுகிறார்:

    இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால் 
    என்ன பயத்ததோ சால்பு

    • Kannan சொல்கிறார்:

      இல்லை, அவர் வேத/யாக மறுப்பாளர் என்று வை.மு.கோ. நிறுவவில்லை. இக்குறளைக் கொண்டு சமணர்கள் வள்ளுவரைத் தமது என்கிறார்கள் என்பதாகக் கூறுகிறார்.
      /இவரது மதம் இன்னதென்று எவ்விதத்திலும் நன்கு விளங்கவில்லை. / என்பதே அவர் முடிபும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: