(சில ஆண்டுகளுக்கு முன் ‘காந்தி இன்று’ தளத்துக்காக எழுதிய கட்டுரையின் விரிவுபடுத்தப்பட்ட வடிவம்)
ஓர் இலக்கியப் படைப்பின் மீது பெருந்திரளான மக்கள் பேரன்பைப் பொழிய முடியுமா என்ற கேள்வி எழுந்தால், திருக்குறள் மீது தமிழர்கள் கொண்டிருக்கும் உணர்வையே உதாரணமாகக் காட்டமுடியும். பெரும்பாலும் ஒரு நீதி நூலாகவே அறியப்படுகிற ஒரு படைப்பு (அது நீதிநூல் மட்டுமே அல்ல என்றாலும்கூட), எப்படி இத்தனை அன்புக்குப் பாத்திரமானது என்பது ஆச்சரியமானதுதான். அந்தத் திருக்குறள் காட்டும் நெறிக்கு மிக நெருக்கமான வாழ்வை வாழ்ந்தவர்கள் என்று ஒரு பட்டியல் இட்டால், அதில், தமிழர் அல்லாத போதினும், காந்தியின் பெயரைத் தவிர்க்கமுடியாது. காந்தி, திருக்குறள், தால்ஸ்தோய் குறித்து நிறையப் புனைவுகள் உள்ளன. காந்தியைத் திருக்குறள் எந்த அளவுக்கு நேரடியாகப் பாதித்தது என்பதை உறுதியாகக் கூறவியலாது. ஆனால், காந்தி திருக்குறளைப் பற்றி நன்றாக அறிந்திருந்தார் என்பதை அவரது பதிப்புகளிலும், எழுத்துகளிலும் காணலாம்.
தென்னாப்ரிக்காவில் தமிழர்களோடு ஏற்பட்ட தொடர்பிற்கு முன், காந்தி திருக்குறள் பற்றிக் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை. அறிந்திருந்தால், அது அவரைப் பெரிதும் கவர்ந்திருக்கும் என்பதிலும் சந்தேகமில்லை. சிறுவயதில் அவரை மிகவும் ஈர்த்து வழிநடத்தியவை என்று இரண்டு கோட்பாடுகளைத்தான் குறிப்பிடுகிறார்: உண்மை, தீங்கிழைத்தவர்க்கும் நன்மையே செய்தல். (1) இரண்டுமே திருக்குறள் முன்வைக்கும் முக்கிய நெறிகள். அப்போது அவரைக் கவர்ந்த ஒரு குஜராத்திப் பாடலை, சத்திய சோதனையில் குறிப்பிடுகிறார். லண்டனில் இருந்தபோதும், ஷாமல் பட் எழுதிய அதே பாடலை மீண்டும் நினைவுகூர்கிறார்; புதிய ஏற்பாட்டில் மலைப் பிரசங்கத்தைப் படிக்கும்போது இப்பாடல் அவர் நினைவுக்கு வருகிறது.
பெற்ற ஒரு குவளை நீருக்கு, நிறைவான ஒரு வேளை உணவை அளி:
ஓர் எளிய வாழ்த்துக்கு, உற்சாகமாய்ப் பணிந்து வணங்கு:
சில நாணயங்கள் பெற்றிருந்தால், பொற்குவை திரும்பக் கொடு:
உயிர்காத்தவனுக்காய் உயிரையும் தரத் தயங்காதே.
சொற்களையும் செயல்களையும் இங்ஙனமே கருதுவர் அறிவோர்,
பெற்ற சிற்றுதவிக்குப் பதிலாய் பன்மடங்கு பேருதவி புரிவர்.
ஆனால், பெருஞ்சான்றோர் மனிதன் ஒன்றே என்றரிவர்;
இன்னாசெய்தார்க்கும் இனியவே செய்திடுவர்.
இப்பாடல், பல குறட்பாக்களின் இணைவடிவமாகத் தெரிகிறது:
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார். [104]
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது. [102]
இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு. [987]
அதற்குப்பின்னும் காந்தியைப் பாதித்த, அவரே எழுதிய பலவற்றுள்ளும் குறளின் கருத்துகள் பொதிந்திருந்தாலும், வளரும் பருவத்தில் அவரை ஈர்த்த இப்பாடல் குறிப்பிடத்தகுந்தது.
காந்திக்குத் திருக்குறள் பற்றிய முதல் அறிமுகம் ஜி.யு.போப் மூலமாக நிகழ்ந்திருக்கலாம். (2) “நான் தமிழும் உருதுவும் கற்றுத்தருவதற்கு முன்வந்திருந்தேன். எனக்குத் தெரிந்த சிறிதளவு தமிழை கடற்பயணங்களின் போதும் சிறைவாசங்களின் போதும் கற்றிருந்தேன். போப் எழுதிய அருமையான தமிழ்க் கையேட்டினை நான் தாண்டவில்லை.” (3) ஜி.யு.போப் திருக்குறளை 1886ம் ஆண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டிருந்தார். அது இன்றளவும் பிரபலமாக உள்ளது. இக்கையேட்டுக்கான அறிமுகத்தில், போப் திருவள்ளுவரின் குறள் குறித்து, “இப்படைப்பின் ஆசிரியல் இதனை எல்லாவிதமான அறிவின் பெட்டகமாக அமைத்து, தமிழ் மக்களுக்கு வேதத்தின் இடத்தில் இருத்தக் கருதினார்.” திருக்குறளின் அமைப்பை விளக்கும்போது, ஏங்கிலிக்கன் கிருத்துவப் பாதிரியாரான இவர், ‘மூன்றாம் பால் புலனின்பம் சார்ந்தது; அதன் பெரும்பகுதி படிக்கத் தகுதியானதன்று,’ என்று காமத்துப்பாலைப் புறந்தள்ளிப் பேசுகிறார்.(4) (எனினும், மொழிபெயர்க்கும்பொது காமத்துப்பாலையும் சேர்த்தே மொழிபெயர்த்தார்.) கூடுதலாக, கையேட்டின் இரண்டாவது பகுதியில், திருக்குறளுக்கென்றே தனியாக ஒரு விரிவான அறிமுகம் தந்து, முதல் நான்கு அதிகாரங்களுக்கு ஆங்கில மொழிபெயர்ப்பையும் தருகிறார். ‘தமிழ்க் கவிதைக்கு மிகச் சிறந்த அறிமுகம்’ என்றும், ‘திருவள்ளுவரின் கவிதை எவ்வகையிலும் நீளமானதல்ல; ஆயினும், மதிப்பில், மொத்தத் தமிழ் இலக்கியத்தின் பிறநூல்களைக் காட்டிலும் உயர்ந்து நிற்கிறது; ஒட்டுமொத்த மக்கள் குழுவொன்றின் கூட்டு ஆன்மாவுக்குள் நுழைந்த மிகச்சில மகத்தான நூல்களில் இதுவும் ஒன்று; இதற்கு அழிவே கிடையாது,’ என்றும் திருக்குறளை விதந்து கூறுகிறார். ‘வள்ளுவர் பிராமணத் தந்தைக்கும் கீழ்ச்சாதிப் பெண்ணுக்கும் பிறந்தவர் என்று வாய்மொழி மரபுகள் கூறுகின்றன’ என்று சொல்லிவிட்டு, உடன் இக்கதைக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று ஒப்புக்கொள்கிறார். ஆனால் வள்ளுவர் ‘உறுதியாக ஒரு பறையர்’ என்ற முடிவுக்கு வருகிறார். மேலும், ‘கிருத்துவ ஆகமநூல்களும் இக்கவிஞருக்கு உந்துதலாக இருந்த நூல்களில் அடங்கும்,’ என்றும் தயங்காமல் கூறுகிறார். “தற்போதும் பிற காலங்களிலும் தென்னிந்தியாவில் நிலவிய பல சிந்தனைகள் செயல்பாடுகளின் தடயமே திருக்குறளில் இல்லை; ஏனெனில், இம்முனிவரின் பரந்துபட்ட நம்பிக்கையாலும் நடத்தையாலும் இவை ஒதுக்கப்பட்டிருக்கும்; இவரது படைப்பு அறிவுறுத்துவதாகவும் சர்ச்சைகளைத் தவிர்ப்பதாகவும் உள்ளது. அவரது மெய்யியல் பகவத் கீதையைப் போன்ற பரந்துபட்ட தரிசனத்தைச் சார்ந்தது,” என்று போப் சொன்னது காந்தியைப் பெரிதும் ஈர்த்திருக்கக்கூடும். (5)
காந்தியின் எழுத்துகளில் போப்பின் திருக்குறள் மொழிபெயர்ப்பு பற்றி எந்தக் குறிப்பும் இல்லை. ஆனால், அவரது பிந்தைய எழுத்துகளின் அடிப்படையில், அவர் போப்பின் மொழிபெயர்ப்பைப் படித்திருக்கக்கூடும் என்று ஊகிப்பது தவறாக இருக்காது.
1905ம் ஆண்டு முதலே, அவரது உறவினர்களான சகன்லால் காந்தி, மகன்லால் காந்தி ஆகியோருக்கு எழுதிய பல கடிதங்களில் ஜி.யு.போப் பற்றிக் குறிப்பிடுகிறார். சகன்லாலை ஜி.யு.போப்பின் கையேட்டின் புதிய பதிப்பின் மூன்று பாகங்களையும் மூன்று பிரதிகள் வாங்கும்படி அறிவுறுத்துகிறார். (6) மார்ச் 1908ல், ஜி.யு.போப்புக்கு இந்தியன் ஒப்பினியன் இதழில் ஓர் அஞ்சலிக் குறிப்பு எழுதுகிறார். டைம்ஸ் இதழில் வந்த அஞ்சலிக் கட்டுரையையும் பதிவிடுகிறார். இரண்டு அஞ்சலிக் குறிப்புகளிலுமே திருக்குறள் குறிப்பிடப்படவில்லை என்பது ஆச்சரியம்தான். “சென்னை மக்கள் மதிப்பும் மரியாதையும் செலுத்தவேண்டியர்களில் டாக்டர்.போப்பைவிடத் தகுதியான ஆங்கிலேயர்கள் எவரும் இல்லை. அவரது உதாரணம் சென்னை மக்களை ஆராய்ச்சிப் பாதையில் வழிநடத்தி, அண்மைக்காலத்தில் புதைந்துபோன அவர்களது பெரும் வரலாற்றைக் குறித்து உலகம் அறியவும், இலக்கியம், மொழியியல், மெய்யியல், இறையியல் ஆகியவற்றின் பொக்கிசங்கள் வெளிச்சத்திற்கு கொணரவும், மக்கள் தங்கள் எதிர்கால வளர்ச்சிப்பாதையைப் பற்றிய ஓர் அறிகுறியைப் பெறவும் மிளிரும் ஒளியாக உள்ளது,” என்று எழுதி அஞ்சலி செலுத்தினார். (7)
1909ல்தான் காந்தியின் வாழ்வில் திருக்குறள் நேரடியாக நுழைந்ததற்கான தடயத்தைக் காண்கிறோம். லியோ தால்ஸ்தோய் எழுதிய ‘ஓர் இந்துவுக்குக் கடிதம்’ (A Letter to a Hindu) என்ற கட்டுரையைக் காந்தி தனது இந்தியன் ஒப்பீனியன் பத்திரிக்கையில் பதிப்பித்தார். அந்தக் கட்டுரையில் தால்ஸ்தோய் கீதையிலிருந்தும் திருக்குறளிலிருந்தும் மேற்கோள்களை எடுத்தாள்கிறார்.
சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்கு இன்னா
செய்யாமை மாசற்றார் கோள். [311]
கறுத்தின்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா
செய்யாமை மாசற்றார் கோள். [312]
செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமந் தரும். [313]
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல். [314]
அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை. [315]
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா
பிற்பகல் தாமே வரும். [317]
இந்த ஆறு குறட்பாக்களையும் குறிப்பிட்டு, ‘இவ்வாறே எங்கும் நடந்தது. அன்பே மிக உயர்ந்த அறம் என்கிற புரிதல் எங்கும் மறுக்கப்படவில்லை. ஆனால், இந்த உண்மை பல்வேறு பொய்களோடு பிணைந்து சிதைந்திருந்ததால், வெறும் சொற்களே எஞ்சியிருந்தன,’ என்கிறார் தால்ஸ்தோய். ‘இல்வாழ்க்கைக்கு மட்டுமே இந்த உயர்ந்த அறம் அவசியமாகக் கற்பிக்கப்பட்டது. பொது வாழ்வில் எல்லாவிதமான வன்முறையும் (சிறை, மரணதண்டனை, போர்கள்) பெரும்பான்மை மக்களைக் காக்க, அவர்களுக்குத் தீங்கிழைக்கும் சிறுபான்மையினர் மீது ஏவப்படுதல் ஏற்றுக்கொள்ளப்படுகிறது – இன்னமும் சிறிதே எஞ்சியிருக்கும் அன்புக்கு அது நேர்மாறாக இருந்தபோதிலும்.’ (8)
காந்திக்கு இக்குறள்களும், அவற்றையொட்டிய தால்ஸ்தோயின் கருத்துகளும் உறுதியாகப் பிடித்திருக்கும். தனிவாழ்வையும் பொதுவாழ்வையும் என்றைக்கும் அவர் பிரித்து வைத்ததில்லை. இக்கட்டுரையை முன்வைத்துத்தான் காந்திக்கும் தால்ஸ்தோய்க்கும் இடையிலான கடிதப் பரிமாற்றம் தொடங்கியது. ஆனால், திருக்குறள் பற்றிக் குறிப்பாக எந்த உரையாடலும் நடைபெறவில்லை.
மகன்லால் காந்திக்கு 1910ல் எழுதிய ஒரு கடிதத்தில், திருக்குறள் வாசகம் ஒன்றைச் சற்றே வினோதமான சூழலில் குறிப்பிடுகிறார். “சந்தோக்கிற்குக் குழந்தை பிறந்துவிட்டதால், அவளைப்பற்றி இனி நாம் கவலைப்பட வேண்டியதில்லை. கற்க கசடறக் கற்பவை. போப்பின் இலக்கண நூலின் முதல் பக்கத்தில் உள்ள இந்த வாசகத்தை மனதில் அசைபோட்டுப் பார். தனது மனைவி மீதான காம உணர்வை வெல்வதைக் காட்டிலும் கடினமான பணி எதுவும் இருக்கமுடியாது.” (9)
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக. [391]
என்ற குறளை மனதில் கொண்டு எழுதியுள்ளார். ஆனால், இதில் சுவையான செய்தி என்னவெனில், ‘கற்கக் கற்கக் கசடறும்’ என்ற பழமொழிதான் போப்பின் கையேட்டில் முதல்பக்கத்தில் உள்ள வாசகம். காந்தி தவறுதலாகச் சரியான ஒரு குறளைக் குறிப்பிட்டிருப்பது, அவர் திருக்குறளைப் படித்திருக்கவேண்டும் என்பதைப் பெருமளவு உறுதிசெய்கிறது என்பது இதில் ஓர் எதிர்பாராத நன்மை. இன்னொரு கடிதத்திலும் இத்தவறினை மீண்டும் செய்வார் என்பதைக் காண்போம்.
இந்தியா திரும்பியபின், நண்பர் ஜி.ஏ.நடேசனுக்கு, “எனக்கு தயவுசெய்து தமிழ்ப் புத்தங்களை அனுப்பி வையுங்கள். ஆரம்ப கட்டத்தில் இருப்பவர்களுக்கும், சுந்தரம் போன்றவர்களுக்கும் எனக்குப் புத்தகங்கள் வேண்டும். டாக்டர்.போப்பின் அனைத்துப் புத்தகங்களும் வேண்டும். எத்தனை விரைவாக முடியுமோ அத்தனை விரைவாக இதைச் செய்துவிடுங்கள்,” என்று எழுதினார். (10)
மகன் தேவதாஸ் காந்திக்கு, 1919ல் எழுதிய ஒரு கடிதத்தில் முன்பு போலவே தவறுதலாகத் திருக்குறள் வாசகத்தைக் குறிப்பிடுகிறார். “இவ்வாசகத்தை தமிழில் அடைமொழியாகக் கொள்ளவும்: கற்க கசடறக் கற்பவை. […] போப்பின் கையேட்டில் முதல் பக்கத்தில் இது வருகிறது. தெலுங்கில் இதன் மொழிபெயர்ப்பையும் அறிந்து அதையும் கொடுத்துவிடு.” (11)
1920ல், அகமதாபாத்தில் ஆற்றிய ஓர் உரையில், ஜி.யு.போப் பற்றிக் கவித்துவமாகப் பேசினார்: “சென்னையில் எந்த இந்தியரும் போப் அளவுக்குத் தென்னிந்தியாவுக்குச் சேவை செய்துவிடவில்லை – இவர் இலியட் புகழ் போப் அல்லர். மனிதர்கள்மீது எப்போதும் நான் பேரன்போடு இருக்கிறேன். எனவே அவர்களது உள்ளங்களைக் கவரவேண்டும் என்று எப்போதும் விரும்புகிறேன். தென்னிந்தியச் சகோதரர்களின் உள்ளங்களைக் கவர்வதற்காக, அவர்களது மொழியைக் கற்க வேண்டியிருந்தது. இப்போது போப் அவர்களின் எழுத்துகளில் இருந்து உடனடியாக மேற்கோள் காட்டமுடியவில்லையெனினும், இதைச் சொல்வேன்: விவசாயிகள்கூட தோட்டத்துக்கு நீர்பாய்ச்சும்போது இன்புற்று அனுபவிக்கக்கூடிய வகையில் தமிழில் இருக்கும் கவிதைகள் அற்புதமானவை. கதிரவன் உதிக்கும் முன்பே தோட்டங்களுக்குத் நீர் பாய்ச்சும் வேலை தொடங்கிவிடும். கம்பு, கோதுமை ஆகிய அனைத்தும் பனி முத்துகளால் மூடப்பட்டுள்ளன. மரங்களின் இலைகள் மீதுள்ள நீர்த்துளிகள் முத்துகள் போல ஒளிர்கின்றன. இப்பாடல்களைத்தான் விவசாயிகள் தோட்டங்களுக்கு நீர்பாய்ச்சும்போது பாடுகிறார்கள்.” (12) இது அவர் போப்பின் கவிதைகளைப் படித்துள்ளார், குறிப்பாகத் திருக்குறளையும் படித்திருக்கக்கூடும் என்பதற்கான சான்றாக உள்ளது.
அடுத்து, நாம் திருக்குறளை காந்தியின் பதிவுகளில் 1927ம் ஆண்டு காண்கிறோம். ரங்கூன் நகரிலிருந்து ஒரு நண்பர், கதர்ப் பிரச்சாரத்துக்காக இருபத்தைந்து ரூபாய் கொடையும் அதனோடு ஒரு கடிதமும் அனுப்புகிறார். அக்கடிதத்தை இறந்துபோன தனது தந்தைக்குப் பதினாறாம் நாள் சடங்குகளைச் செய்வதில் தனக்கிருக்கும் ஒவ்வாமையை வெளிப்படுத்தித் தொடங்குகிறார். அது அடிமைத்தனமானதாகவும், அர்த்தமற்றதாகவும் இருப்பதாகவும், மக்களின் மத நம்பிக்கைகளைப் பயன்படுத்தி அவர்கள்மீது திணிக்கப்படும் ஒரு ஏமாற்றுவேலையாகயும் கருதுகிறார். அர்ப்பணிப்புடனும் கொடைநோக்குடனும் செய்யப்படும் ஈமச்சடங்குகளில் தனக்கு நம்பிக்கை இருப்பதாகத் திருக்குறளைப் பயன்படுத்தி நிறுவுகிறார்.
“24-2-1927 யங் இந்தியா இதழில், நீங்கள் சொல்வது போல, ‘கொடைபெறுவதற்கு இரண்டு வர்க்க மக்களுக்கு மட்டுமே உரிமையுள்ளது, பிறருக்கில்லை – தனக்கென எதுவுமே வைத்துக்கொள்ளாமல், புனிதக் கல்வியைப் பிறருக்குக் கற்றுத்தரும் பிராமணன், உடல் ஊனமுற்றவர்கள் அல்லது பார்வையற்றவர்கள்.’ மரணமற்ற எங்கள் மாமுனி திருவள்ளுவர் ‘எல்லா உயிர்களிடத்தும் பொங்கிப்பெருகும் அன்பைக் கொண்டுள்ள சந்நியாசிகளே அந்தணர்’ என்று சொல்லியிருக்கிறார். கொடையளிப்பதற்கு உங்களைவிடச் சிறப்பான மனிதரையும் ராட்டையைவிடச் சிறப்பான ஒரு நோக்கத்தையும் என்னால் காணமுடியவில்லை என்பதால் உங்களுக்கு இத்தொகையை அனுப்பியுள்ளேன். பெற்றோரின் நினைவினைப் போற்றுவதற்கு இன்னொரு வழியும் உண்டு. முனி வள்ளுவன் சொல்கிறான்: ‘மகன் தந்தைக்குச் செலுத்தக்கூடிய நன்றி என்பது இவனது தந்தை இவனைப்பெறப் பெருந்தவம் புரிந்திருக்கவேண்டும என்ற பெயரை எடுக்கும்வண்ணம் உலகில் மிகச் சிறப்பாக நடந்துகொள்ளவதுதான்.’ இக்குறிக்கோளை எனது மனதில் நான் தாங்கியுள்ளேன் என்பதையும் நான் கூறிக்கொள்கிறேன்.” (13)
இக்கடிதம் பின்வரும் குறள்களையொட்டி அமைந்துள்ளது:
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர் க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான். [30]
மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல் எனும் சொல். [70]
காந்தி இக்கடிதத்தின் கருத்தினை அமோதிக்கும்வகையில், அர்த்தமற்ற சடங்குகளைத் தானும் எதிர்ப்பதாகவும், இக்கடிதம் எழுதியவரைப் போல பிறரும் தமக்குச் சரியென்று படுவதையே செய்ய முனைந்து தம்மையே ஏமாற்றிக்கொள்வதில் இருந்து விடுதலை பெறவேண்டும் என்றும் எழுதினார். எனினும் திருக்குறள் பற்றி நேரடியாக அவர் ஏதும் குறிப்பிடவில்லை.
1927ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் முதன்முதலில் காந்தி திருக்குறள் பற்றி நேரடியாகப் பேசியது பதிவாகியுள்ளது. தூத்துக்குடியில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுகையில், தமிழுக்கு அவர் அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று எழுந்திருந்த ஒரு குற்றச்சாட்டை மறுத்துரைத்தார். அப்போது,
‘திருக்குறளில் காணக்கிடைக்கிற புதையல்களின்பால் எனது கவனத்தை நீங்கள் ஈர்த்தது சரிதான். உங்களுக்கு ஒன்று கூறவிரும்புகிறேன் – சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன், திருக்குறளை அதன் மூலமொழியில் படிக்கவேண்டும் என்கிற ஆசையோடும் குறிக்கோளோடும் நான் தமிழ் கற்றுக்கொள்ளத் தொடங்கினேன். தமிழைக் கற்று முடிப்பதற்கு எனக்குக் கடவுள் போதிய நேரம் கொடுக்கவில்லை என்பது என் ஆழ்ந்த வருத்தத்துக்குரிய ஒரு விஷயம். பிராந்திய மொழிகளையேப் பாடமொழியாக ஆக்குவதற்கு நடத்தப்படும் போராட்டங்களை நான் முழுக்க ஆதரிக்கிறேன். நாம் தமிழ்மொழியைக் கற்க வேண்டும்; ஆங்கிலத்தைவிட தமிழையே விரும்பவேண்டும்; தமிழை மற்ற மொழிகளுக்கெல்லாம் மேலான இடத்தில் இருத்தவேண்டும்,’ என்று கூறியதாக இந்து நாளிதழில் செய்தி வெளியானது. (14)
அதே ஆண்டு, காந்தி தமிழகப் பயணத்தில் சந்தித்த பல கேள்விகளை, குறிப்பாக பிராமணர்-பிராமணரல்லாதார் மோதல் குறித்த உரையாடல்களைத் தொகுத்து, மகாதேவ் தேசாய் ஒரு குறிப்பு எழுதினார். ஒரு கேள்வியில் திருக்குறள் குறிப்பிடப்பட்டுள்ளது.
“கேள்வி. நீங்கள் குறள் பற்றி அறிவீர்கள். இந்நூலின் ஆசிரியர் பிறப்பால் சாதி இல்லை என்று சொல்கிறார் என்பதை அறிவீர்களா? பிறப்பொக்கும் எவ்வுயிர்க்கும் என்கிறார் அவர்.
பதில்: நிகழ்கால அத்துமீறல்களுக்கு எதிர்வினையாக அவர் இதைச் சொல்கிறார். தாம் உயர்ந்தவர் என்று ஒரு வர்ணம் கூறிக்கொள்ளும்போது, அதற்கெதிராக அவர் குரலை எழுப்ப வேண்டியிருந்திருக்கும். ஆனால் அது வர்ணத்தின் வேரைப் பிறப்பிலிருந்து அறுக்கவில்லை. ஏற்றத்தாழ்வுகளின் வேரையறுக்கும் ஒரு சீர்திருத்தவாதியின் முயற்சியே இது.” (15)
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான். [972]
என்ற குறளை முன்வைத்து இந்த உரையாடல் நடைபெறுவதை உணரலாம்.
இது திட்டமிடப்பட்ட உரையாடல் இல்லையெனினும், காந்தி சரியான குறிளை விரைவாக அடையாளம் கண்டுகொண்டு அதைக்குறித்துப் பெருமளவு சரியான புரிதலுடன் விளக்குவதாகவே தெரிகிறது.
அடுத்து, 1935ல், ஹரிஜன் இதழில் திருக்குறள் பற்றித் ‘தமிழ் மறை’ என்ற தலைப்பில் ஒரு சிறு கட்டுரையை காந்தி எழுதியுள்ளார். (16)
“திருவள்ளுவர் ஒரு தமிழ்த் துறவி. அவரை ஒரு ஹரிஜன நெசவாளர் என்கின்றன தொன்மங்கள். கி.பி. முதலாம் நூற்றாண்டில் அவர் வாழ்ந்ததாகக் கூறுகிறார்கள். புகழ்மிக்க திருக்குறளை அவர் அளித்துள்ளார் – திருக்குறள் புனித முதுமொழிகளைக் கொண்டது; தமிழர்களால் தமிழ்மறை என்று அறியப்படுகிறது; எம்.ஏரியலால், ‘மனிதச் சிந்தனையின் வெளிப்பாட்டில் மிக உயர்ந்த, தூய்மையானவற்றில் ஒன்று,’ என்று போற்றப்பட்டது. இதில் 1330 முதுமொழிகள் உள்ளன. பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பல ஆங்கில மொழிபெயர்ப்புகள் உள்ளன. ஹரிஜன மற்றும் பிற சேவைகளுக்காகச் சர்மாதேவி (சேரன்மாதேவி) ஆசிரமத்தை நிறுவிய வ.வே.சு.ஐயர் அண்மையில் ஒரு மொழிபெயர்ப்பைச் செய்திருந்தார். சர்மாதேவி ஆசிரமத்தையும், இந்த மொழிபெயர்ப்பையும் நாட்டுக்கு அர்ப்பணித்துவிட்டு மறைந்துவிட்டார். சர்மாதேவி இப்போது ஹிரிஜன் சேவா சமிதியின் வசம் உள்ளது. இந்த மொழிபெயர்ப்பின் இரண்டாம் பதிப்பில் 1000 பிரதிகள் மீதமுள்ளன. இந்த நூலின் விலை ரூ.5 ஆக இருந்தது. இப்போது ரூ.2/8 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்பாளர் எழுதியுள்ள ஒரு விரிவான முன்னுரையை இந்நூல் கொண்டுள்ளது. இதிலிருந்து வரும் வருமானம் ஹரிஜன சேவைக்காகப் பயன்படுத்தப்படும். வாசகர்களின் ஆர்வத்தைத் தூண்ட, இரண்டு குறள்களை நேர்ந்தவாக்கில் தேர்ந்தெடுத்து இங்கு தருகிறேன்.
தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை. [327]
இதனை ஆலிவர் கோல்ட்ஸ்மித் எழுதிய வரிகளோடு ஒப்புநோக்குவோம்:
‘சுதந்திரமாய் இப்பள்ளத்தாக்கில் உலவும் எந்த மந்தைக்கும்
மரணத்தை நான் விதிப்பதில்லை;
என்னைக்கண்டு இரங்கும் பேராற்றலால் கற்பிக்கப்பட்ட நான்,
அவற்றைக் கண்டிரங்கவும் கற்றுக்கொண்டேன்.’
அடுத்த தேர்வு:
உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு. [339]
இதனை வேர்ட்ஸ்வொர்த்தின் வரிகளோடு ஒப்புநோக்கலாம்:
‘மரணம் என்பது உறக்கமும் மறதியும் அன்றி வேறில்லை.’ “
காந்திக்குத் திருவள்ளுவர் ஒரு ஹரிஜன் என்றும், நெசவாளர் என்றும் கூறப்பட்டது இரட்டை ஈர்ப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும். அப்போது தீண்டாமை இயக்கமும், கதர் இயக்கமும் தான் அவரது ஈடுபாட்டை மிகவும் அதிகமாய்க் கோரிய இயக்கங்கள். திருவள்ளுவர் முன்வைக்கும் அன்பு, அறம், கொல்லாமை, வாய்மை, ஈகை என்ற பல கருத்துகள் காந்தியின் கருத்துகளுக்கு முழுக்கவே இணையானவை.
காந்தியின் முதன்மைச் சீடரான வினோபா, திருக்குறளை நன்றாகக் கற்றிருந்தார். பல உரைகளில் திருக்குறளைத் தமிழிலும் பிற மொழிகளிலும் மேற்கோள் காட்டுவார் என்று அவரோடு நெருங்கிப் பழகிய நாராயண் தேசாய், என்னுடன் நிகழ்ந்த ஒரு நேர்காணலில் குறிப்பிட்டார். காந்தியோடு தன் குழந்தைப் பருவத்தில் வளர்ந்த நாராயண் தேசாயை, குஜராத்தில், அவரது சம்பூர்ண கிராந்தி வித்தியாலயத்தில் சந்தித்தபோது, புதிதாக வெளிவந்த ஒரு குஜராத்தி இலக்கியச் சிற்றிதழில் இருந்த திருக்குறள் பற்றிய ஒரு கட்டுரையை எனக்கு இந்தியில் மொழிபெயர்த்துப் படித்துக் காட்டியது ஒரு மறக்க முடியாத அனுபவம்.
காந்திகிராம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர், மார்க்கண்டன் அவர்களோடு ஒருமுறை உரையாடிக் கொண்டிருந்தபோது, வினோபாவிடம் அவர் ஏதேனும் செய்தி கேட்டதாகவும், அப்போது அவரது கைப்பட எழுதித்தந்த ஒரு குறள் பற்றியும் குறிப்பிட்டார்.
காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றின்
நாமம் கெடக்கெடும் நோய். [360]
ஆனால், காந்தியைப் பொருத்தவரை, இந்த இரு குறிப்புகளைத் தவிரத் திருக்குறள் பற்றிப் பேசியதற்கான வேறு தரவுகள் இதுவரை தென்படவில்லை. எனினும், ‘என் வாழ்க்கைதான் எனது செய்தி’ என்று சொன்னவரின் அச்செய்தியில் பல குறள்கள் மிளிரக் காணலாம்.
குறிப்புகள்:
- M.K.Gandhi, An Autobiography, Navajivan Publication, www.mkgandhi.org, Page 44
- Dr. G. U. Pope (1820.1908), translator of Thirukkural and Thiruvasagam, author of First Lessons in Tamil, A Handbook of the Ordinary Dialect of the Tamil Language, A Textbook of Indian History, etc.
- M.K.Gandhi, An Autobiography, Navajivan Publication, www.mkgandhi.org, Page 406
- G.U. Pope, First Lessons in Tamil: A Handbook of the Ordinary Dialect of the Tamil Language, London: W.H.Allen & Co. 1883, Part I, Page 5.
- ibid…Part II, Pages 52-76.
- LETTER TO CHHAGANLAL GANDHI, Johannesberg, May 1, 1905, The Collected Works of Mahatma Gandhi, Volume 4
- THE LATE DR. POPE, The Collected Works of Mahatma Gandhi, Volume 8…Indian Opinion, 14-3-1908
- Leo Tolstoy, ‘A Letter to a Hindu’, Dec 14th, 1908….Indian Opinion, November 26, 1910. [Translation of the kurals as given in the original. Numbering of the Kurals done for this essay]
- LETTER TO MAGANLAL GANDHI, Tolstoy Farm [July 25, 1910], The Collected Works of Mahatma Gandhi, Volume 4
- LETTER TO G. A. NATESAN, Bombay, May 10, 1915, The Collected Works of Mahatma Gandhi, Volume 14
- LETTER TO DEVDAS GANDHI, Ahmedabad, February 23, 1919, The Collected Works of Mahatma Gandhi, Volume 17
- SPEECH AT GUJARATI SAHITYA PARISHAD, Ahmedabad, April 2, 1920, The Collected Works of Mahatma Gandhi, Volume 20
- TRUE ‘SHRADDHA’, The Collected Works of Mahatma Gandhi, Volume 39…Young India, 1-9-1927
- SPEECH AT PUBLIC MEETING, TUTICORIN, October 6, 1927, The Collected Works of Mahatma Gandhi, Volume 40…The Hindu, 8-10-1927.
- BRAHMIN-NON-BRAHMIN QUESTION, The Collected Works of Mahatma Gandhi, Volume 40…Young India, 24-11-1927
- TAMIL HOLY BOOK, The Collected Works of Mahatma Gandhi, Vol 67…Harijan, 6-7-1935 [Translation of the kurals as given in the original. Numbering of the Kurals done for this essay]
[…] […]