நேற்று மழை வராமலே ஏராளமான ஈசல்கள் வந்தன. கொஞ்ச நேரத்தில் மகிழ்மலர்தான் கவனித்துச் சொன்னாள், ‘அம்மா, அங்க பாரு, 7 பல்லிக’. 7 விரைவில் 10 ஆனது. மின்விளக்கைச் சுற்றிப் பல்லிகளின் உக்கிரமான ஈசல் வேட்டைக்குப்பின் ஈசல்கள் கிட்டத்தட்ட காணாமல் போயின.
இன்று காலை, கோழிக்குஞ்சுகளைப் பிடிக்கக் காத்திருந்த அண்டங்காக்கைகளை விரட்டப் போனவள், சற்று நேரத்தில் சன்னலோரம் நின்று கூவுகிறாள், ‘அப்பா, ஒரு குட்டிப் பல்லி கோழிகிட்ட வந்துச்சா, அது புடிச்சு குத்து குத்துனு குத்திக் கொன்னே போடுச்சு. அப்புறம் எல்லாக் குஞ்சுகளும் வந்து ஓடிப் புடிச்சு விளையாண்டுட்டு, கொஞ்சம் கொஞ்சமாத் தின்னுதுக.’
—
முத்திநெறி அறியாத என்ற திருவாசகப் பாடலைப் பாடிக்கொண்டிருந்தாள். ஓரளவு எளிமையான பாடல்தான். உரை எதுவுமின்றி நானும் அவளுமே பொருள் கூட்டி அறிந்துகொள்ள முயன்றுகொண்டிருந்தோம். (இடையிடையே புணர்முலையார் போகம், கணியிழையார் கலவி எல்லாம் வேறு.)
‘பஞ்சாய அடிமடவார் கடைக்கண்ணால் இடர்ப்பட்டு’ என்ற வரிக்கு ‘இளம்பெண்களுடைய சுட்டெரிக்கும் கடைக்கண் பார்வையின் முன்னால் பஞ்சுபோல எரிந்து துன்பப்பட்டு’ என்று நாங்களாக ஒரு பொருள் கற்பித்தோம்.
உடனே அவள், “நெஞ்சுக்கு நீதியும் பாட்டுல, ‘ பஞ்சுக்கு நேர்பல துன்பங்களாம், இவள் பார்வைக்கு நேர்பெருந்தீ’னு ஒரு வரி வருமில்லப்பா?” என்று அவளுக்குத் தோன்றிய வகையில் இணைத்துப்பார்த்தாள். [அதன் பொருளை நானும் ஆராய்ந்ததில்லை. பெருந்தீ முன் பஞ்சுபோல அவள் பார்வைக்குமுன் துன்பங்கள் இல்லாமற் போகும் என்று பொருள் கொள்ளலாம். தீ முன் பஞ்சு படும் துன்பங்கள் போல, அவள் பார்வைக்கு முன் பெருந்தீயும் பொசுங்கிப்போகும் என்றும் பொருள்படுமோ? இரண்டையும் பின்னர் விவாதித்தோம்.]
“அட, ஆமாண்டா கண்ணு. பாரதியார் எங்க இருந்து இன்ஸ்பைர் ஆகி எடுத்திருக்கார் பாரு.”
[பின்னர் இணையத்தில் தேடியபோது திருவாசக வரிக்கு வேறு பொருள் கொடுத்திருப்பதை அறிந்தோம். பஞ்சு ஆய – பஞ்சு போன்ற, அடி – பாதங்கடையுடைய, மடவார் – பெண்டிரது, கடைக்கண்ணால் இடர்ப்பட்டு – கடைக்கண் பார்வையால் துன்பப்பட்டு. சரி, இருந்துவிட்டுப் போகட்டும். ]
—-
அவள் பள்ளிக்குச் செல்லாமல் இருப்பது சரியான முடிவுதானா என்ற சஞ்சலம் ஏற்படும்போதெல்லாம், இப்படியாகப் போகிறது அவளது கல்வி. எங்களுடையதும்.
The child is father of the man – இதுவும் கவிஞர் வேறு அர்த்தத்தில் சொன்னதுதான். நான் இன்னொரு விதமாகப் புரிந்துகொள்கிறேன்.