/நீங்கள் நான்கு மொழிகளில் புலமைபெற்றிருக்கிறீர்கள். பிற மொழியறிவு உங்கள் படைப்பு மொழிக்கு எத்தகைய வலுசேர்த்திருக்கிறது?
பிறமொழி அறிவு தமிழை மேலும் செழுமைப்படுத்த உதவுகிறது. சொல்வளத்தைப் பெருக்குகிறது. குறிப்பிட்ட ஒரு பிறமொழிச் சொல்லுக்கான தமிழ்ச் சொல்லைத் தேடும்போது ஏற்கெனவே நாம் அறிந்த ஒரு சொல்லைத் தவிர, இதுவரையிலும் நாம் பயன்படுத்தாத சொற்களையும் அறிந்துகொள்ள முடிகிறது.
மொழியில் கச்சிதம் கூடுகிறது. மிகச் சரியான, பொருத்தமான சொல்லை இட வேண்டும் என்கிற முனைப்பையும் அக்கறையையும் உண்டாக்குகிறது. தவிர, வேறொரு மொழியைக் கற்றுக்கொள்வது என்பது அதனுடனான கலாச்சாரத்தையும் இலக்கியத்தையும் அறிந்துகொள்வதுதான். புனைவெழுத்தாளனுக்கு இது மிக அவசியமானது./
தமிழ் இந்துவில் வந்துள்ள பேட்டியில் எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணன் சொல்கிற இந்த கருத்து இன்னும் அதிக கவனமும் விரிவும் பெறவேண்டிய ஒன்று. பிறநாட்டு நல்லறிஞர் நூல்களைத் தமிழ்மொழியில் பெயர்க்கும்போது மொழியில் சொல்வளமும் கருத்துவளமும் கூடுகிறது; மொழிமீதான நமது (மொழிபெயர்ப்பவனின்) ஆளுமையும் அதிகரிக்கிறது.
நான் அண்மையில் சில ஆங்கிலக் கவிதைகளையும் சிறுவர்களுக்கான சரிதைகளையும் மொழிபெயர்த்தபோது, இதுவரை தமிழில் நான் பயன்படுத்தியிராத பல சொற்களைப் பயன்படுத்த நேர்ந்தது. புதிய தமிழ்ச்சொற்களை அறிந்துகொள்ளவும் முடிந்தது. உதாரணமாக, Alligator என்பதற்கு முதலில் வழக்கம்போல் முதலை என்ற சொல்லே விழுந்தது. பிறகு அகராதியில் தேடியபோது கரவு என்ற சொல் கிடைத்தது. திருவாய்மொழியில் கரவார்தடம் என்ற தொடர் இருப்பதாகச் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி சுட்டியது. மேலும் தேடியபோது,
பரவாள் இவள் நின்று இராப்பகல்
பனிநீர் நிறக் கண்ணபிரான்
விரவாரிசை மறை வேதியரொலி
வேலையின் நின்று ஒலிப்ப
கரவார் தடந்தொறும் தாமரைக்கயம்
தீவிகை நின்றலரும்
புரவார் கழனிகள் சூழ்
திருப் புலியூர்ப் புகழ் அன்றி மற்றே
என்ற இனிய பாசுரத்தை அடைந்தேன். தமிழ்ப் பேரகராதியைப் புரட்டிப்பார்க்கும் (இணையத்தில்தான் எனினும்) வாய்ப்பு கிடைப்பதே ஒரு பேரனுபவம்தான். பல நூற்றாண்டுகளாய்ப் பல நாட்டு அறிஞர்களின் பேருழைப்பின் மூலம் உருவான பெட்டகம் அது. ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு இட்டுச்சென்று கொண்டே இருக்கும்.
கரவு என்ற சொல்லை ஏன் பயன்படுத்தக்கூடாது என்று அதையே போட்டிருக்கிறேன். கரவு என்பதற்குப் பிறபொருள்களும் உள்ளன (மறைவு, வஞ்சனை, பொய்). ஆனால், ‘கரவு கரையேறியது’ என்கிற இடத்தில் இப்பொருளில்தானே வரமுடியும்.
Crocodile, alligator என்ற சொற்களையும், அவற்றின் வகைகளையும் குறிக்கும் வகையில், தமிழ்ப் பேரகராதியில் மட்டும் 28 சொற்கள் உள்ளன. இவற்றுள் பல திசைச்சொற்களும் இருக்கும்தான்.
Crocodile – இடங்கர் (கொடுந்தாண் முதலையு மிடங்கருங் கராமும் (குறிஞ்சிப். 257)), கடு, கோதிகை, சிஞ்சுமாரம், சீங்கண்ணி, தாலுசிகுவம், தீர்க்கவர்ச்சிகை, துவிதாதகி, நக்கரம் (நக்கரக் கடற்புறத்து – கம்பராமாயணம்), மகரம், மகாமுகம், மாசலம், மாயாதம், வன்மீன் , விடங்கர், அவகாரம், ஆட்கடியன், ஆலாசியம் (ஆண் முதலை), கிஞ்சுமாரம், கும்பீலம், சலகண்டகம்
Alligator – ஆட்பிடியன், கரா, கராம், (ஆண் முதலை), சாணாகமுதலை [தீங்குசெய்யாத ஒருவகைத் தாழ்தரமான முதலை ], செம்மூக்கன், நக்கிரம், முசலி.
ஆனால், Alligator சீனாவிலும், அமெரிக்காவிலும் மட்டுமே உள்ளதால், உண்மையில் இச்சொற்கள் எல்லாமே crocodile வகைகளைக் குறிக்கின்றனவாகவே இருக்கக்கூடும்.
தடந்தொறும் கரையேறாக் கரவுகளாய், இத்தனை சொற்களும் மூழ்கிக்கிடக்கின்றன.
—-
அதே போல, மொழிபெயர்க்கும்போது புதிய சொற்றொடர்களை உருவாக்கவும் முடிகிறது. பழமொழிகளுக்கும் மொழிவழக்குகளுக்கும் இணையான வழக்குகள் தமிழில் இல்லாத போது, பெரும்பாலும் அதன் உட்பொருளையே தருகிறோம். ‘The tide had ebbed’ என்ற ஒரு ஆங்கில மொழிவழக்கு ஓரிடத்தில் வந்தது. ‘சூழல்/நிலைமை சீரடைந்துவிட்டது’ என்று எளிதில் பொருள்படும்படி சொல்லியிருக்கலாம். ஆனால், நேரடி மொழிபெயர்ப்பாக, ‘ஓதம் ஓய்ந்துவிட்டது’ (ஓதம் – tide) என்றே எழுதிப்பார்த்தேன். சரியாகத்தானே இருக்கிறது என்று அப்படியே எடுத்தாண்டுள்ளேன். நம் பண்பாட்டுச் சூழலுக்கும் ஏற்ற புதிய மொழிவழக்குகளை உருவாக்குவதில் தவறில்லையே. சினுவா ஆச்சிபி Things Fall Apart நூலில் ஆப்பிரிக்கச் சொலவடைகளை நேரடியாக ஆங்கிலத்தில் பெயர்த்திருப்பார். அவற்றின் பொருளை விளங்கவைக்கும் வகையில் அழகாகத் தன் கதையாடலை அமைத்திருப்பார். அதுவும் அவரது மொழிக்கு ஓர் எழிலைக் கூட்டியிருந்ததாகத் தோன்றியது.
பேச்சு வழக்குக்கு நெருக்கமாக மட்டுமே எழுத்துமொழியையும் அமைக்கும் போது, குறிப்பாகக் கவிதைகளிலும் அவ்வாறு செய்யும்போது, மொழியின் வளம் குன்றிப்போகிறது என்பதாக உணர்கிறேன். (கவிதை வளம் தான் கவிதைக்கு முக்கியம் என்று கவிஞர்கள் கருதலாம். ஆனால் புதிய சொற்கள் கவிதைக்கொன்றும் பகையல்லவே.) ஆங்கிலத்தில் அந்தச் சிக்கல் இல்லை. எளிய நடையிலும் அரிதான சொற்களைப் பயன்படுத்துகிறார்கள். ஏனோ, தமிழில் நமக்கு நாமே இந்த எளிமை விலங்கைப் பூட்டிக்கொண்டோம். புழக்கத்தில் ஒரு சொல் வந்துவிட்டால், அதை மட்டுமே எழுத்திலும் பயன்படுத்துகிறோம். அதற்கிணையான பிற சொற்கள் நாளடைவில் முற்றிலுமாக மறைந்துபோகின்றன. நாஞ்சில் நாடன் இதுகுறித்து நேர்ப்பேச்சிலும், எழுத்திலும் அதிகமும் வருந்துவார்.
ஆங்கிலத்தில் புதிய சொற்களைக் கற்றுக்கொள்ள தினமும் ஆங்கில இந்து படிக்கச்சொல்லித் தருகிறோம். தமிழைப் பள்ளியில் பாடமாக படிக்கின்றவர்களுக்குப் பழைய தமிழில் அருஞ்சொற்பொருள் காணவும் பழக்குகிறோம். ஆனால், நவீனத் தமிழில் புதிய சொற்களைக் கற்கும் வகையில் நம் வார இதழ்களும் நாளிதழ்களும் பெரும்பாலும் இல்லை, அப்படியிருக்க வேண்டும் என்றும் நாம் எதிர்பார்ப்பதுமில்லை. பல்லாயிரம் சொற்கள் யாரும் தீண்டாத அகராதிகளுக்குள்ளும், பழந்தமிழ் இலக்கியங்களுக்குள்ளும், சில சிற்றிதழ்களுக்குள்ளும் மட்டுமே சிறைப்பட்டுக்கிடக்கின்றன.
புரியாத சொற்களைக் காணும் போது, ஏன் புரியாமல் எழுதுகிறான் என்று திட்டுவதை விடுத்து, அகராதியைப் புரட்டுவதற்கான வாய்ப்பாக எடுத்துக்கொள்ளத்தொடங்கலாம் (இணையத்திலேயே பலவும் உள்ளன). சிடுக்கிலா நடைவேறு, பொருத்தமான அரிய சொற்களைக் கையாள்வது வேறு. மொழிக்குப் புதிதாக ஏதும் தராவிடினும், இருப்பதையேனும் இழக்காமல் காக்கலாம். மீட்டெடுக்கலாம். பேசாக்கிளவியும் பேசலாம்.