ராசு

நவம்பர் 20, 2018

(என் மனைவி நித்யா செப்டெம்பர் 6ம் தேதி முகநூலில் எழுதியது)

மதுரா
எங்கள் வீடு உள்ள தோட்டத்தில் இருக்கும் நாட்டு மாடுக்கு மகிழ் வைத்த பெயர் “மதுரா”. ” வாணி”யும், “நிலா” வும் காலேஜ் மாடுகள். போன வாரத்திலிருந்து எப்போ மதுரா ஈனுவால் என்று எல்லோரும் காத்துக்கொண்டு இருந்தோம், குறிப்பாக மகிழ்.

“அம்மா இந்த humansக்கு தான் labour ward,அது இதுனு… அன்னிக்கு விடமாட்டேங்கிறாங்க. ஆனா மதுரா ஈனும் போது, நான் பக்கத்திலே இருந்து குட்டி எப்படி வருதுனு பார்க்கப் போகிறேன். யாரும் ஒன்னும் சொல்ல மாட்டாங்க இல்ல அம்மா” என்றாள்.

போன வார இறுதில், வெள்ளிக்கிழமை வழக்கம் போல ஊருக்கு கிளம்பும்போது, ” அம்மா இந்த வாரம் எனக்கு ஊருக்கு வர மனசே இல்லை. இங்கையே பாட்டு class இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும்! நம்ம ஊருக்கு போயிட்டு வருவதற்குள்ள மதுரா கன்னு போட்டுவிடுவாள். எனக்கு இங்கு இருக்கனும்” னாள். சமாதானம் சொல்லி அழைத்து சென்றோம். தோட்டத்து உரிமையாளர்களை அவள் பாட்டி, தாத்தா என்று அழைப்பாள், ஊருக்குப் போகும் முன்பு, பாட்டியிடம் “கன்னு போட்டுச்சுனா போன் பண்ணி சொல்லுங்கனு” சொல்லிவிட்டு வந்தாள்.

நான், ஐய், நமக்கு இந்த வாரம் சுவையான நாட்டு மாட்டு சீம்( சீப்பம்) பால் கிடைக்கும் என்ற குஷியோடு இருந்தேன்.

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

காவல்துறை, ராணுவம் – இரு சிறுகதைகள்

நவம்பர் 20, 2018

(முகநூலில் 13 ஆகஸ்டு அன்று பதிந்தது.)

இம்மாதம் தமிழினி இணைய இதழில் காவல்துறை, ராணுவ அத்துமீறல்கள் குறித்து, சமகாலத்தில் கவனித்த நிகழ்வுகளையும் இலக்கியப் பதிவுகளையும் முன்வைத்து, ஆங்கிலத்தில் ஒரு கட்டுரை எழுதியுள்ளேன்.

கட்டுரையை அனுப்பிய பிறகு தமிழில் இரண்டு முக்கியமான சிறுகதைகள் படிக்க நேர்ந்தது:

எம்.கோபாலகிருஷ்ணனின் சீசர்,
பாவண்ணனின் கண்காணிப்புக் கோபுரம்.

சீசர் கதையில் காவல்துறையினர் தமது நாய்க்கு அளிக்கப்பட்டிருக்கும் பயிற்சியைச் சோதிப்பதற்காகவோ, மேலும் பயிற்சி அளிப்பதற்காகவோ, சுற்றி இருக்கும் மக்கள் மீது ஏவி வேடிக்கை பார்க்கின்றனர். அவர்கள் பாதிக்கப்படும் போது, ஈரமோ குற்றவுணர்வோ துளியுமின்றிக் கடந்து செல்கின்றனர்.

கண்காணிப்புக் கோபுரம் கதை, ஓர் எளிமையான நேர்மையான ராணுவ வீரன் சக வீரர்களாலும் அதிகாரிகளாலும் பாதிக்கப்பட்டு, ‘மானம் மரியாத கோபம் ரோஷம் எல்லாத்தயும் காத்துல பறக்க உட்டாதான் ராணுவத்துல சிப்பாயா வாழமுடியும்ங்கறது இப்ப நல்லாவே புரிஞ்சிட்டுது’ என்கிற நிலைக்குத் தள்ளப்படுவதைப் பேசுகிறது.

இரண்டு கதைகளும் இந்த அமைப்புகளிலுள்ள தனிமனிதர்களின் சிக்கல்களை மட்டும் பேசாமல், அமைப்பு ரீதியாகவே இவை எப்படி மனிதாபிமானத்தைத் துடைத்தெடுத்து வன்முறைக்கும் அத்துமீறலுக்கும் வித்திடுகின்றன என்பதை மையமாகக் கொண்டுள்ளதாக நான் எடுத்துக்கொள்கிறேன்.


சோதனைக்கூடச் சிறையில் அறிவியல்

நவம்பர் 20, 2018

பல பழைய முகநூல் பதிவுகளை இப்போது வலைத்தளத்தில் பதிவிடுகிறேன். ஆகஸ்டு மாதம் முகநூலில் எழுதியது. கிராம ராஜ்ஜியம் இதழிலும் வெளிவந்தது. இதை எழுதிய பிறகு, நான் பேசிய ஓர் இடத்தில், ஹீலர் பாஸ்கரும் பேசினார். முரண்படுவதற்கு ஏராளமாக இருப்பதாகவே உணர்ந்தேன். அப்பேச்சிலும் குறிப்பிட்டேன். ஆனால், அறிவியல், மருத்துவம், அடக்குமுறை பற்றி இதில் கூறப்பட்டுள்ள கருத்துகளில் மாற்றமில்லை.

ஆனால், அவரது கைது கண்டிக்கப்பட வேண்டியது என்று உறுதியாகச் சொல்வேன்.

எனக்கு ஹீலர் பாஸ்கர் பற்றி அதிகம் தெரியாது. தெரிந்த வரை, பெரிய அபிமானம் ஏற்படவில்லை. நான் மிகவும் மதிக்கிற சில நண்பர்கள் அவர்பால் பெரிதும் ஈர்க்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை அறிவேன். என்னையும் சந்திக்கச்சொல்லியிருக்கிறார்கள் – எனக்கு ஈடுபாடு வரவில்லை என்று இதுவரை விட்டுவிட்டேன். கிராமத்தில் நாங்கள் குடியிருக்கும் வீட்டுக்குச் சொந்தக்காரர்கள் தினமும் அவரது உரையைத் தொலைக்காட்சியில் காண்கிறார்கள். அவர்களுக்குத் தேவையானவற்றை எடுத்துக்கொள்கிறார்கள் – நவீன மருத்துவர்கள் தரும் மருந்துகளையும் உட்கொள்கிறார்கள். நான் பார்த்த அவரது ஒன்றிரண்டு காணொளிகளில் என்னால் பாதியைத் தாண்ட முடிந்ததில்லை. நான் நேரில் கேட்க நேரிட்ட அவரது ஒரு சீடரின் உரைகளில் பெருமளவு எனக்கு உடன்பாடில்லை. குறிப்பாக, இன்றைய சூழலில், வீட்டில் பிரசவம் என்பதை நான் கடுமையாகவே எதிர்க்கிறேன்.

அவரது கருத்துகளைக் கருத்துகளால் எதிர்கொள்ளலாம். அவரது மருத்துவ முறை தவறென்றால், பிற மருத்துவர்கள் அதைத் தவறென்று நிறுவலாம். எதிர்ப் பிரச்சாரங்களின் மூலமும் அர்ப்பணிப்பான மருத்துவ சேவையின் மூலமும் அவரது வாதங்களைத் தகர்த்தெறியலாம். அது தான் அறிவியலின் வழி. அது தான் சுதந்திரச் சிந்தனையைப் பேணுகிறவர்களின் வழி.

தமது கருத்துகளுக்கு முரணான கருத்துகள் கொண்ட எழுத்தாளர்கள் பாதிக்கப்படும்போது குரல் கொடுக்கும் சில எழுத்தாளர்களும் பதிவர்களும் கூட இவரது கைதினை வரவேற்றிருப்பது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

இக்கைது அறிவியலுக்கும் அறிவியல்-எதிர்ப்புக்குமான போராட்டம் அல்ல. அரசு அங்கீகாரம் பெற்ற அமைப்புகளுக்கும், அங்கீகாரம் பெறாத அமைப்புகளுக்கும் நடைபெறுகிற உரசலாகத்தான் இதைப் பார்க்கிறேன்.

இன்றைக்கு இது மருத்துவத்துறையில் நடைபெற்றிருக்கிறது. நாளை எத்துறையில் வேண்டுமானாலும் நடைபெறலாம் – விவசாயத்தில், கல்வியில், பொருளாதாரத்தில், பொறியியலில், இலக்கியத்தில், ஆன்மீகத்தில், அரசியலில். மாற்று முறைகள் எங்கெல்லாம் முன்வைக்கப்படுகின்றனவோ அங்கெல்லாம் நிறுவன வலிமை மாற்றுகளை நசுக்க முயல்கிறது.

இலுமினாட்டிச் சதி என்று ஒன்றும் கிடையாதுதான். அதை வெகு எளிதாக மறுத்துவிடமுடியும். ஆனால், இன்றைக்கு உலகின் சொத்துக்களும் நிறுவனங்களும் அதிகாரமும் 1% மக்களிடம் கணிசமான அளவு இருக்கிறது, 10% மக்களிடம் மேலும் கணிசமானவை உள்ளன என்பதற்கான தரவுகள் மறுக்கமுடியாதவை. அறிவியல் ஆராய்ச்சிகளின் போக்கினையும் பெருநிறுவனங்கள் பெருமளவு நிர்ணயிக்கின்றன என்பதையும் மறுக்கமுடியாது. இன்றைய அமைப்பில் தவிர்க்கவும் முடியாது.

நிறுவனமயமாக்கப்பட்ட அறிவியலை, அமைப்புகளுக்குள் முடங்கிக்கிடக்கும் அறிவியலை ஏற்றும் மறுத்தும், மாற்று முறைகளை முன்னெடுப்பதில்தான் அறிவியலின் அடுத்தகட்டப் பாய்ச்சல் நிகழமுடியும். அதை ஹீலர் பாஸ்கர் செய்தாரா என்பது விவாதத்திற்குரியது. ஆனால், அவரைப் போன்றவர்களைச் சிறைப் படுத்துவதன் மூலம், நிறுவனங்களுக்குள்ளும் அமைப்புகளுக்குள்ளும் அறிவியலைச் சிறைப்படுத்துகிறோம்.

இன்றைக்கு, மாற்று முறைகளைத் தேடி மக்கள் அலைபாய்வதற்குக் காரணம் யாரோ செய்கிற பிரச்சாரங்களோ, மரபின் மீதான பாசமோ, நவீன அறிவியல் மீதும் மருத்துவம் மீதும் உள்ள காழ்ப்போ அல்ல. மருத்துவ அமைப்பில் அவர்கள் அவ்வப்போது சந்திக்கிற அலட்சியமும், வியாபாரச் சுரண்டலும்தான் அவர்களை மாற்றுகளை நோக்கி – பல சமயம் தவறான மாற்றுகளை நோக்கி – நகர்த்துகிறது. அவர்கள் நவீன மருத்துவத்தைத் துறந்துவிட்டு அங்கு செல்வதில்லை. நவீன மருத்துவம் தீர்வுகள் தராத போதோ, அல்லது பிரச்சனைகளைப் பெரிதுபடுத்துகிற போதோ, மாற்றுகளை நாடிச் செல்கிறார்கள். அங்கும் வெற்றியும் தோல்வியும் சந்திக்கிறார்கள். உடனே அவர்கள் எல்லாரையும் முட்டாள்களாகவும் அறிவியலுக்கு எதிரானவர்களாகவும் சித்தரிப்பது என்ன மாதிரியான அறிவியல் அணுகுமுறை?

ஆரோக்கிய வாழ்வுக்கான வழிகளை இன்றைய நிறுவனங்களும் மருத்துவர்களும் மக்களுக்கு வழங்குவதில்லை என்றே சொல்லலாம். அவர்களது கவனத்தில் பெருமளவு நோய்களுக்கான சிகிச்சைகளிலேயே உள்ளது. தடுப்பூசி போன்றவை நோய் தடுப்புமுறைகள் தாம்எனினும், அவற்றின் கவனமும் நோய்கள் மீதுதான் குவிந்திருக்கின்றன. நோய்களுடன் நீண்ட நாள் வாழக் கற்றுக்கொண்டுவிட்டோம். கொள்ளைநோய் மரணங்களைத் மட்டுப்படுத்திவிட்டோம். இது நவீன மருத்துவத்தின் பெரும் சாதனைதான். ஆனால், ஒரு சராசரி மனிதனின் தேடல் நோய், நோயின்மை என்பதைத் தாண்டிய ஓர் ஆரோக்கியமான வாழ்க்கையை நோக்கியதாக உள்ளது. அதை அன்றாட உணவுப்பழக்கவழக்கங்கள், உடற்பயிற்சிகள், சரியான வாழ்க்கைமுறை ஆகியவற்றின் மூலமாகவே அடையமுடியும். இந்தத் தேடலும் மக்களை இத்தகைய அக்கறைகள் கொண்ட அமைப்புசாரா நபர்களிடம் அழைத்துச்செல்கிறது. தமது உடல்களையும் வாழ்க்கையையும் சோதனைக்களங்களாக்கி நலமான வாழ்வுக்கான சிறுசிறு தீர்வுகளைக் கண்டறிந்து பகிர்ந்து கொள்கிற எல்லாரையும் அறிவியலின் எதிரிகளாகக் கட்டமைப்பது அறிவியல் வளர்ச்சியை முடக்குகிற செயலன்றி, வேறென்ன? பல்கலைக்கழகங்களுக்கும், பெருநிறுவனச் சோதனைக்கூடங்களுக்கும், ஒப்புக்கொள்ளப்பட்ட வழிமுறைகளுக்கும் நாமொன்றும் அறிவியலைப் பொட்டுக்கட்டிவிட வேண்டியதில்லை. பொதுமக்களின் அன்றாடச் செயல்பாட்டிலும், மரபான சிந்தனைமுறைகளிலும் அறிவியல் இருக்கக்கூடும் என்கிற குறைந்தபட்ச அங்கீகாரம் கொடுப்பது அறிவியலை ஜனநாயகப்படுத்துவதன் முதல்படி. அவற்றில் சரியானவற்றை விரிவான சோதனைக்கு உற்படுத்தி ஏற்பதும், சரியல்லாதவற்றை நிராகரிப்பதும் அறிவியலின் தொடர் பயணம். மரபான சிந்தனைமுறைகளிலோ, பாமர மக்களின் அனுபவப் பாடங்களிலோ, அமைப்புசாரா நபர்களின் செயல்பாட்டிலோ, அங்கீகாரம் கிடைக்கும்பவரை அறிவியலே இல்லை என்ற மறுப்பிலிருந்து தொடங்குவது அறிவியலின் பெயரால் நிகழ்த்தப்படும் அடக்குமுறை.

மருத்துவமனைகளிலும் மரணங்களும் இதர பாதிப்புகளும் மருத்துவர்களின் பிழைகளாலும் அலட்சியத்தாலும் நடக்கத்தான் செய்கின்றன. எத்தனை மருத்துவர்கள் இதற்கெதிராகக் குரல் கொடுத்திருக்கின்றனர்? எத்தனை பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? பெரும்பாலும், நல்ல மருத்துவர்கள்கூட குழு மனப்பான்மையுடன் மோசமான சக மருத்துவர்களைக் காப்பாற்றுகிறார்கள், அல்லது, கண்டுகொள்ளாமல் விட்டிருக்கிறார்கள். இப்போது, வெளிச்சத்துக்கு வந்திருக்கும் ஒரு சோகமான மரணத்தை முன்வைத்து மாற்று முறைகள் மொத்தத்தையும் ஓரங்கட்டி ஒழிக்க நினைப்பதன் மூலம், அறிவியல் போர்வை போர்த்திக்கொண்டு அமைப்புரீதியான பிழைகளையும் குறைகளையும் மூடிமறைப்பதற்கு வழிவகுக்கிறோம்.

அறிவார்ந்த விவாதங்களின் மூலமும், நடுநிலை தவறாத துணிச்சல் மூலமும், நேர்மையான செயல்பாட்டின் மூலமும், உயிர்கள் மீதும் இயற்கை மீதும் கொண்ட கரிசனத்தாலும் வளர்க்க வேண்டிய அறிவியலை, அமைப்புகளின் அசுர பலத்தின் மூலமாக வளர்ப்பது அறிவியலுக்கு எதிரானது. ஒரு சான்றிதழுக்குள் அறிவியலை முடக்கிவிடலாம் என்று நினைப்பது மூடநம்பிக்கை. மாற்றுக்குரல்களை நசுக்குவது சர்வாதிகாரம்.