சென்ற வாரம், எங்கள் பயிலக மாணவர்கள் ஒரு நிகழ்வைப் பற்றிக் கூறினார்கள். அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கிற அவர்கள் பள்ளி முடிந்து வீட்டுக்கு வருவதற்குப் பேருந்துக்காகக் காத்திருந்திருக்கிறார்கள். பேருந்து வந்ததும் எப்போதும் போல் முண்டியடித்துக்கொண்டு ஏறியிருக்கிறார்கள். நடத்துனர் கோபமாகத் திட்டி, அவர்கள் யாரையும் ஏற்றாமலே பேருந்தை நகர்த்தச்சொல்லிவிட்டார். பேருந்து கொஞ்ச தூரம் போனதுமே, யாரோ ஒரு மாணவன் கல்லை வீசியெறிய, கண்ணாடி சிதறியிருக்கிறது. உடனே காவல்துறையினர் அழைக்கப்பட்டு, 9வது, 10வது படிக்கும் எல்லா மாணவர்களையும் மிரட்டி, விசாரித்திருக்கிறார்கள். ஜட்டியோடு உட்கார வைத்துவிடுவேன் போன்ற மிரட்டல்களையெல்லாம் மாணவர்கள் கேட்டிருக்கிறார்கள். ஒரு சிலர் சின்னதாக அடியும் வாங்கியிருக்கலாம். ஆசிரியர்களும் காவல்துறையினருக்கும் நடத்துனருக்கும் ஆதரவாகவே பேசினார்களாம்.
எங்கள் மாணவர்கள் சேதமில்லாமல், தாமதமாக வீடு திரும்பினார்கள்.
‘நீங்க ஏன்டா நெருக்கியடிச்சுட்டு ஏறணும். வரிசையா ஏறலாமில்ல?’
’30-40 பேர் உட்கார்ர பஸ்ஸுல, நாங்க 100 பேர் எறணுங்கண்ணா. அடிதடியில்லாம எப்படிண்ணா ஏற முடியும்? எத்தனை தடவை நானே படில விழுகிற மாதிரி தொங்கிட்டு வந்திருக்கேன். பிரவீன்கூட ஒரு நாள் விழுந்தாட்டாங்கண்ணா.’
பல நூறு மாணவர்கள் படிக்கிற பள்ளி. மேற்கே போகும் பேருந்து அந்த நேரத்துக்கு அது ஒன்றுதான். அடுத்த வண்டி அரை மணிநேரம் கழித்து வரும்.
அடுத்த முறை இப்படி நடந்தால், இது மாதிரி கல்லெறியாதீர்கள். புகார் எழுதிப் பழகுங்கள். கலெக்டர் வரைகூடப் போகலாம். தேவைப்பட்டால் அமைதியாகப் போராடிப் பழகுங்கள். எப்போதும் உங்கள் தரப்பில் தப்பில்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள், என்று அறிவுரைகளை அடுக்கினேன். வேறென்ன சொல்ல?