நாங்கள் குடியிருக்கும் தோட்டத்து வீட்டில், துணைக்கும் காவலுக்கும் இரண்டு நாய்களை வளர்க்கிறார்கள்.
முதல் நாய் உயர்சாதி. ஜெர்மன் ஷெப்பர்ட. நல்ல விலை கொடுத்து வாங்கி வந்தார்கள். பெயர் டஃபி (Duffy). அர்த்தம் அவர்களுக்கும் தெரியாது. எங்களுக்கும் தெரியாது.
இன்னொன்று நாட்டு நாய். எங்கோ சென்றவிடத்தில் கண்டெடுத்து வந்திருந்தார்கள். பெயர் காரி. முழுப்பெயர் காரொளி. என் மகள் வைத்தது. ‘காரொளி வண்ணனே என் கண்ணனே கதறுகின்றேன்’ என்று அவள் உருகிப் பாடக்கூடிய ஆழ்வார் பாசுரத்தில் இருந்து எடுத்தது. காரியையும் காரிம்மாஆ என்று உருகி உருகித்தான் அழைக்கிறாள்.
நாங்கள் மூவருமே நாய்களோடு அவ்வளவு நெருக்கமாய் இருந்ததில்லை. இப்போது இரண்டு நாய்களோடும் விளையாடுவதும் உணவிடுவதும் எங்களுக்கும் மகளுக்கும் பிடித்தமான ஒரு செயலாகிவிட்டது. இரண்டு நாய்களும் வெவ்வேறு வகைகளில் நேசிக்கத்தக்கவை. Lovable. காரி செருப்புகளை (குறிப்பாக என் மனைவியின் செருப்புகளை) எடுத்துச் சென்று ஒளித்துவைத்து விளையாடும். கொஞ்சம் மிரட்டுகிற என்னைக் கண்டால் பம்பும். மனைவியையும் மகளையும் பிராண்டும்; நக்கும்; கொஞ்சும். டஃபி ஆள் மீது தோள்வரை தாவும்; கைவைத்து நீவியவுடன், செவி மடல்களை மடித்துக்கொண்டு சொகுசாகப் படுத்துக்கொள்ளும்.
நாய்களுக்குத் தேவையான உணவை வீட்டு உரிமையாளர்களே சமைத்து விடுவார்கள். உணவெடுக்க, மகிழ் செல்லும்போது கேட்கக்கூடிய வாசகம்:
‘டஃபிக்கு நிறைய வை. காரிக்கு மிச்சத்தை வை.’
டஃபிக்குப் பூச்சிமருந்துகள், டானிக், பெடிக்ரீ என்று அனேக கவனிப்பு நிகழும்.
காரி, தோட்டத்தில் வேலை செய்யும் நாராயணனை அதிகாலையிலேயே ஓடிச்சென்று வரவேற்று நக்கித் தாவி, அவர் கரக்கும் புத்தம்புதுப் பசும்பாலில் ஒரு பங்கினை வாங்கிவிடும். எங்கள் வீட்டில் மீதமாகும் உணவும் காரிக்கே.
நாங்கள் பொறிவைத்துப் பிடித்த எலிகளை வெளியில் விடும்போது, காரி பாய்ந்து விரட்டிப் பிடித்து உண்டும் பழகிவிட்டது. தானே பிடிக்கவும் தொடங்கிவிட்டது.
டஃபிக்கு எப்போதாவது சில எலும்புத்துண்டுகள் கிடைக்கும்.
இளநீர் குடித்துவிட்டு தேங்காயை வைத்தால், காரி தன் கூரிய சிறு பற்களால் கரண்டி எடுத்து உண்டுவிடும். டஃபிக்கு அது கைவருவதில்லை. தனது கோட்டாவை முடித்துவிட்டு ஓடிவரும் காரி, டஃபிக்கு வைத்த தேங்காய் மூடிகளையும் பிடுங்கி உண்டுவிடுகிறது. சில சமயம் தேங்காயைக் கீறி டஃபிக்கு வைப்போம்.
காரி எங்கு புரண்டு வந்தாலும் பெரிதாக அழுக்காவதில்லை. டஃபிக்கு நிறைய முடியிருப்பதால், நிறைய முட்கள் குத்திப் படிந்துவிடுகின்றன. காரி வந்த இரண்டாம் நாள் முதலே வாசலை விட்டு நகர்ந்து சென்று மலஜலம் கழிக்கக்கற்றுக்கொண்டுவிட்டது. டஃபி இன்னுமே நினைத்த இடத்தில் அசுத்தம் செய்துவிடுகிறது. வேலைக்கு வரும் மாராத்தாவிடம் தினமும் வசை வாங்கும். காரி மாராத்தாவின் செருப்பையும் தூக்கிச் சென்று எங்கோ போட்டுவிட்டது.
காரி யார்வந்தாலும் குரைக்கும். துரத்தும். ஒரு பெரிய வண்டைப் பார்த்து ஒரு மாலை முழுதும் குரைத்துக்கொண்டிருந்தது. டஃபி சாது. சத்தமே இருக்காது. பசி வேளையில் உணவைக் கண்டால் மட்டும் வெறி கிளம்பும்.
காரியை முதல் ஒன்றிரண்டு நாட்கள் இரவில் ஒரு கூடை கொண்டு மூடியிருந்தார்கள். அதற்குப் பிறகு அதற்கு முழு சுதந்திரம் தான். வேண்டிய இடத்தில் குளிருக்கு இதமாய்க் கிடைத்ததை இழுத்துப் போர்த்திக் கொண்டு படுத்துவிடும்.
டஃபி தோட்டத்துக்குள் சென்று கண்டதையும் உண்டால் வாந்தி எடுத்துவிடுகிறது. வெளியில் சென்று மற்ற தெரு நாய்களோடு பழகிவிடும் என்ற பயமும் அவர்களுக்கு உண்டு. அதனால் அதற்கு ஆரம்பம் முதலே பெரும்பாலும் சங்கிலி வாழ்க்கைதான். சில நாட்களில் அது சங்கிலியைக் கொஞ்சம் கொஞ்சமாய்க் கடித்துக்கடித்து உடைத்துவிட்டது. அதற்குள் ஒரு பெரிய கூண்டு தயாராகிவிட்டது.
