முகநூல் பதிவுகள் – 2017

(2017ல் இதுவரை முகநூலில் நான் எழுதிய பதிவுகளின் தொகுப்பு)

(11-9-2017)

மூலப்பிரச்சனைகளைத் துளியும் தீர்க்காமல், அவற்றை இடம்பெயர்த்து, தீர்வு தந்துவிட்டதாய் மாய்மாலம் செய்யும் தந்திரத்தில் நாம் தேர்ந்தவர்கள். இத்தந்திரம் ‘டாஸ்மாக்கிஸம்’ என்ற நாமத்தால் இனி அறியப்படும்.

குடிப் பிரச்சனையா – அரசே மதுவை வாரிவழங்கும்.

நெடுஞ்சாலைகளில் மது விற்கக்கூடாதா – நோ ப்ராப்ளம். நெடுஞ்சாலைகளை வெறுஞ்சாலைகள் ஆக்கிவிடலாம்.

ஆங்கில வழிக் கல்வி தரும் தனியார் பள்ளிகளை மக்கள் நாடுகிறார்களா – அரசுப் பள்ளிகளை ஆங்கில வழிப்படுத்துவோம். அரசே தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான கட்டணத்தைக் கட்டும். (RTE)

அரசு மருத்தவமனைகளைப் பிடிக்கவில்லையா – இதோ, பிடியுங்கள் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்.

நீட்டால் பிரச்சனையா? – கவலையை விடுங்கள், இனி அரசே பயிற்சி மையங்கள் நடத்தும். (அப்படியே, பள்ளிகளை மூடிவிட்டால், மாணவச் செல்வங்களுக்குச் செலவும் நேரமும் மிச்சம். ஆசிரியர்கள் முழுநேரக் கணக்கெடுப்பாளர்களாகிவிடலாம்.)

 


(11-9-2017)

கோவையில் தனியார் பேருந்துகளில் பயணச்சீட்டுக் கட்டணத்தில் திடீரென்று 1ரூபாய் ஏற்றிவிட்டார்கள் போலுள்ளது. நேற்று இரண்டு பேருந்துகளில் சண்டைப் போடவேண்டிருந்தது.

தன்னிச்சையாய் விலையேற்றம் செய்யும் அதிகாரம் தனியார் பேருந்துகளுக்கு இருக்கிறதா என்ன?

‘நானே கூலிக்கு வேலை செய்யறவன். எங்கிட்ட சண்டைப் போட்டு என்ன சார் பிரயோசனம்? மொதலாளி இத்தனை ரூபாய்க்கு டிக்கெட் குடுன்றாங்க. குடுக்கறேன்.’

‘டிக்கெட்டப் புடிங்க சார். நீங்க ஒரு ரூபாயே தரவேண்டாம். இருக்கிற டிக்கெட்டத் தான குடுக்க முடியும்.’

‘நீ எல்லாத்துக்கும் சண்டைப் போடத் தொடங்கிட்ட. சரியான ஆள்கிட்ட சரியான சண்டைப்பிடி’ (இது என் மனைவி)

1 ரூபாய்க்காக இவர்களோடு சண்டைப் போட வேண்டியுள்ளதை எண்ணி வருந்துவதா, இல்லை இவர்களைவிட அதிகமாய்க் கட்டணம் வசூலிக்கும் (பெரும்பாலான) அரசுப் பேருந்துகளில் சண்டைப் போடாதிருப்பதை எண்ணி வருந்துவதா என்று தெரியவில்லை.


(10-9-2017)

விருதுநகரில் காமராஜரின் இல்லத்திற்குச் சென்றிருந்தோம். (நான் நம்பியிருந்த அளவிற்கு அது சிறிய வீடு இல்லை. நினைவகம் ஆக்குவதற்காகச் சீரமைக்கப்பட்டதால் கொஞ்சம் பகட்டும் கூடியிருப்பதாய்த் தோன்றியது. சேவாகிராமின் குடிலொன்றும் மனதில் நிழலாடிக்கொண்டிருந்தது.)

அங்கே எதற்கோ எழுப்பப்பட்டிருந்த ஒரு கல்வெட்டில் மாஃபா பாண்டியராஜன் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. பெயருக்கு அடுத்து MBA என்ற பின்னொட்டு. அதோடு அடைப்புக்குறிக்குள் (XLRI) என்றும் பொறிக்கப்பட்டிருந்தது. என்ன, சீனியர் இப்படி செய்திருக்கிறாரே என்று கூச்சமாக இருந்தது. அதுவும் பள்ளிப்படிப்பைத் தாண்டாமல், கல்வியைப் பரவலாக்கிய காமராஜர் நினைவகத்தில்.

நமது மேட்டிமைத்தனத்தின் அடையாளங்களை உதறமுடியாமல், கல்வெட்டுகளில் (அல்லது முகநூல் சுவரில்) கூடப் பதிக்கும் நாம் தான் எல்லாருக்குமான கல்விக் கொள்கைளை வகுக்கிறோம்; விவாதிக்கிறோம்.


(25-8-2017)

சிபிஎஸ்இ-சமச்சீர், நீட்/நுழைவுத் தேர்வுகள் – மாநிலப் பொதுத்தேர்வுகள், பாஜக-காங்கிரஸ், அதிமுக-திமுக என்ற இருதலைக்கொல்லி இருமைகளைக் கட்டமைப்பதன் மூலம் நமது கற்பனையையும், சுய சிந்தனையையும் மழுங்கடித்துத்தான் நமது அமைப்புகள் நம்மை வீழ்த்துகின்றன.


 

(31-7-2017)

விக்ரம்வேதா திரைப்படத்திற்கு நகர அரங்குகள் எதிலும் நுழைவுச்சீட்டு கிடைக்காத்தால், சுந்தராபுரம்/போத்தனூர் அருகிலுள்ள அரசன் அரங்கில் முன்பதிவு செய்துவிட்டு என் மைத்துனர் எங்களையும் அழைத்தார். சிறுவயதில் அவ்வரங்கு ‘சாமுண்டி’யாக இருந்தபோது, 50 காசுகளுக்கும் 1ரூபாய்க்கும் அதில் பழைய படங்களைப் பார்த்திருக்கிறேன். மூட்டைப் பூச்சிக்குப் பெயர்போன இடம். குறிச்சிப் பகுதியிலேயே கூட தரவரிசையில் அப்போது அதற்கு மூன்றாம்(கடைசி) இடம்தான். இப்போது குளிரூட்டப்பட்டு, புதிய ஒலி, புதிய இருக்கை, 80ரூ நுழைவுக்கட்டணம் என்று புதுப்பொலிவுடன் ஒளிர்ந்தது. இந்த அரங்கில் இத்தனை இருசக்கிர, நாற்சக்கிர வாகனங்கள் நிறுத்தப்படும் என்று 35 ஆண்டுகளுக்குமுன் நாங்கள் நினைத்திருக்கமுடியாது. படம் தொடங்கிய பிறகுதான் பழைய சாமுண்டியின் ஒரே சுவடு தென்பட்டது. புதிதாக வந்த சிலருக்காக நெகிழி இருக்கைகள் இடையிடையே இடப்பட்டன.

நிற்க. நான் சொல்லவந்தது அரங்கின் வரலாறன்று.

இப்படத்தைக் காண ஏன் தமிழ்கூறு நல்லுகம் திரள்திரளாய்ச் செல்கிறது என்கிற கேள்விக்கு விடை எனக்கு இடைவேளையின் போதுதான் கிடைத்தது. அரங்கம் முழுதும் ஆர்ப்பரித்து எழுந்தது. கரவோசையில் அதிர்ந்தது. சீழ்க்கையொலி பறந்தது. படம் தொடங்கும் முன் நாட்டுப்பண்ணுக்கு முக்கிமுனகி எழுந்தவரெல்லாம் தன்னிச்சையாய்த் துள்ளி நின்றனர்: வெண்திரையில் அஜித் பட முன்னோட்டம். அவரது படமொன்றைத் திரையரங்கில் பார்த்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு மேலிருக்கும். இத்தனை ஆண்டுகள் வேற்று கிரகத்தில் வசித்த உணர்வு என்னுள் ஊர்ந்தது. அசந்து போனேன்.

பின்னர் ஜெயலிலிதா, எம்.ஜி.ஆர். ஆகியோர் திரையில் தோன்றத்தொடங்கியதும்தான் கூட்டம் கழிப்பிடம் நோக்கிக் கலைந்தது.

[மற்ற படங்களிலெல்லாம் இந்த முன்னோட்டம் வருவதில்லையா அல்லது இணையத்தில் கிடைப்பதில்லையா என்ற ஆராய்ச்சிக்குள் நான் செல்லவில்லை.]


17-7-2017

வாள் வலந்தர மறுப்பட்டன
செவ்வானத்து வனப்புப்போன்றன
தாள் களங்கொளக் கழல்பறந்தன
கொல் ஏற்றின் மருப்புப்போன்றன

– பரணரின் இந்தப் புறநானூற்றுப் பாடல் வரிகளிலேயே கம்பனது சந்தநயத்தின் சாயலைக் காணமுடிகிறது. வன்முறையை மென்மையாகக் கடத்திவரும் இச்சொற்களின் வழியே, வாளின் செங்கறையை மீறிச் செவ்வானத்தின் வனப்பு என் விழிகளை நிறைத்துக்கொள்கிறது.

‘கடுந்தேர் குழித்த ஞெள்ளல்’ [தேர் ஓடியதால் குழிந்த தெரு] என்று நெட்டிமையாரின் பாடலொன்றில் ஒரு வரி வருகிறது. நாம் ஞெள்ளல் போன்ற சொற்களை மட்டுமல்ல, ஞெ போன்ற எழுத்துகளின் பயன்பாட்டையும் இழந்துவிட்டிருக்கிறோம். நெடுஞ்சாலைகள் ஞெள்ளல்களை விழுங்கிவிட்டன.

இந்த வரிகளுக்கெல்லாம் வந்துசேர்வதற்குள்ளேயே என் ஆயுளின் பெரும்பகுதி கழிந்துவிட்டது. சில நூற்றாண்டுகளின் புறக்கணிப்பையும், ஆற்று வெள்ளத்தையும், கரையான்களையும் கடந்து நம்மை வந்தடைந்திருக்கும் இந்தப் பெட்டகங்களைப் பிரித்துப் பார்க்கத் துணிந்த தமிழர்கள் கொடுத்துவைத்தவர்கள்.

ஏ.ஆர். ரஹ்மான் கச்சேரியை இந்திக்காரன் கேட்டாலென்ன கேட்காவிட்டாலென்ன.
(மன்னிக்கவும், என்னையும் மீறி இந்தக் கடைசி வரி விழுந்துவிட்டது. whatabouteryக்கு நல்ல தமிழ்ச் சொல் இருக்கிறதா?)


(1-7-2017)

என் பெயர் கண்ணன். அதை மட்டும் சொல்லி அழையுங்கள். அதில் இழிவும் இல்லை, உயர்வும் இல்லை. நன்றி.

ஆனா, பாருங்க….இப்படி எதையாவது எளிமையாச் சொல்லிட்டு, ஒரு தார்மீக மேட்டில் ஏறிஉட்கார்ந்து ஜாலியாக வேடிக்கை பார்க்கலாம்னா, அதிலேயும் ஒரு சிக்கல். 19 வருஷம் முன்னால, முதன் முதலா வடக்க போனப்போ இருந்தே என் பேர் குழப்பம் தொடங்கியாச்சு. அடேய் என் அப்பா பேரச் சொல்லி என்னைக் கூப்பிடாதீங்கடான்னு, சொல்லிச் சலிக்க வேண்டியதாச்சு. இதிலே என் அப்பா பேருக்கும் குளிர் நீருக்கும் எந்த சம்பந்தமும் இல்லைனு வேற தொண்டைக் குழி வரளக் கதறணும். அப்பத் தொடங்கின இந்தப் பாடு இப்ப ஆதார்-பேன் இணைப்புல முத்தி நிக்குது. எனக்கு நீங்களே ஒரு நல்ல பேரா வைச்சுடுங்க. ஆள விடுங்கப்பா.


28-6-2017

ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன், நான் அலுவலக வேலையில் இருந்தபோது, எனது நெருங்கிய நண்பர் ஒருவர், பெட்ரோல் விலை அதிகமாவது பொறுக்காமல், தனது டயோட்டா கரோலாவிற்குப் பதிலாக டீசல் எந்திரம் கொண்ட ஆடி காரில் வரத்தொடங்கினார்.

நேற்று, சிங்காநல்லூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து காந்திபுரம் செல்வதற்குப் பல 140களும் 95களும் பாதி காலியாகவே சென்றுவிட்ட பின்னும், என்னோடு சேர்ந்து ஒரு பெரிய கூட்டம் கால் மணி நேரமாக ஏறாமல் காத்திருந்தது. சாதாரணக் கட்டணம் வாங்கும் பேருந்துக்காக.

வீட்டிலிருந்து சிங்காநல்லூர் வரும்போதே, சாதாரணக் கட்டணப்பேருந்தில் ஏகப்பட்ட நெரிசல்.

‘சொகுசுப் பேருந்தில் காந்திபுரத்துக்கு பதினோரு ரூபா வாங்குவாங்க. தினமும் அவ்வளவு குடுக்க முடியுமா?’ சாதாரணக் கட்டணம்: 6 ரூபாய். இந்த இரண்டு நாட்களில் மட்டும், நான் காத்திருந்து காத்திருந்து சாதா பேருந்தில் சென்றதால் 40ருபாய் மிச்சம்.

‘மொதல்ல மூணு வண்டிக்கு ஒரு வண்டி சாதா வண்டி இருந்துச்சு. இப்ப எதைப்பார்த்தாலும் சொகுசு வண்டியா இருக்கு.’

‘மதுரை சேலத்துக்கெல்லாம் பாய்ண்ட் டு பாய்ண்டுனு விட்டுட்டாங்க. வழியில இருக்கிற ஊர்லயெல்லாம் நிறுத்தமாட்டேன்றாங்க. மக்களை அவங்கவங்க ஊருக்குக் கொண்டுபோறதுக்குத் தானேங்க பஸ்ஸூ? இடையில நிறுத்த மாட்டேன்னா என்ன அர்த்தம்?’
பெருநகரவாசிகளின் வசதிக்காக மட்டும்தானே நமது பொருளாதாரமே திருத்தியமைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.

‘100 பேர ஏத்திட்டுப் போயி சம்பாதிக்கிற காச, 50 பேர ஏத்தியே சம்பாதிச்சடலாம்னு அரசாங்கம் நினைக்குது.’

‘அது சரி. சம்பாதிக்கிறதுக்கா அரசாங்கம் பேருந்து விடுது?’

‘இந்த சொகுசுப் பேருந்துக்கெல்லாம், பத்து பன்னெண்டு சக்கர லாரிக்கு இருக்க மாதிரி வலுவான எஞ்சின் வைச்சிருக்காங்க. அது டீசலை அதிகமாத்தானே குடிக்கும்?’

‘இப்ப நல்ல நாயம் பேசிட்டு இருக்காங்க. இத மொதல்ல விட்டதே ஸ்டாலின் தான?’ நான் இங்கு எழுத விரும்பாத உடலமைப்பு சார்ந்த ஒரு வசைப்பெயரைப் பயன்படுத்தினார். தலைவன் தளபதி சாம்ராட் என்று சுவரொட்டிகளில் பட்டங்கள் சூட்டிக்கொண்டாலும் மக்கள் வாயில் வருவதுதானே வருகிறது.

வெள்ளைப் பலகையுடன் ஒரு 74 கூட்டமாக வரவும், கணிசமான கூட்டம் தடபுடலாகக் கலைந்தது.

கொஞ்சம் தயங்கி நின்ற ஒருவர், ‘சொகுசுப் பேருந்துல போனா உட்கார்ந்துட்டு வசதியாத்தாங்க போலாம். ஆனா நாம வாங்கற கூலிக்கு அதெல்லாம் கட்டுபடியாகுமா,’ என்று முணுமுணுத்தவாறே, கடைசிப் படிக்கட்டில் தொற்றிக் கொண்டார்.

நான் அதிலும் ஏறாமல் காத்திருந்தேன். பின்னாலேயே, சிங்காநல்லூரிலிருந்தே கிளம்புகின்ற 28 காலியாக வந்தது. தனியார் பேருந்து. எடுப்பதற்கு பத்து நிமிடங்கள் ஆகும் என்று தெரியும். ஐந்து ரூபாய் மிச்சம் பிடிப்பதற்காக அரசுப் பேருந்தை விட்டுவிட்டு தனியார் பேருந்தில் போவதா என்கிற அரசியல்-சித்தாந்தக் கேள்விகளையெல்லாம் அமுக்கிவிட்டு, ஒரு சன்னலோர இருக்கையில் சொகுசாக அமர்ந்தேன்.


(28-6-2017)

ஞாயிறன்று, மதுரைக்குச் சென்று திரும்பிய இரவுப் பயணத்தின் போது எனது பர்ஸையும் கைபேசியையும் திருடியவன் நல்ல இலக்கிய வாசகனாக இருக்கவேண்டும். நூலகத்திலிருந்து எடுத்துவந்திருந்த லா.ச.ரா.வின் ‘அன்புள்ள ஸ்நேகிதிக்கு’ சிறுகதைத் தொகுப்பையும் சேர்த்து எடுத்துவிட்டார் (என்ன இருந்தாலும் இலக்கிய வாசகர் – மரியாதையோடே விளிக்கிறேன்). அதே பையிலிருந்த (அவர் எடுக்காமல் விட்ட) கிண்டிலில் பல நூறு அற்புதமான புத்தகங்கள் உள்ளன. என்னைக் கேட்டிருந்தால் அந்த ஒரு புத்தகத்திற்குப் பதில் கிண்டிலைத் திருடியிருக்கச்சொல்லியிருப்பேன்.

என்ன, இந்த இலக்கிய வாசகர் 11ரூபாயையாவது எனது பையில் விட்டுச்சென்றிருக்கலாம். போக்குவரத்துத் துறையைச் சார்ந்த ஒரு நல்ல மனிதர், அந்தப் பின்னிரவு நேரத்தில் எனக்குப் பயணச்சீட்டு எடுத்துத்தந்து வீட்டுக்கு அனுப்பியிருக்கவேண்டியதில்லை.

இந்தப் புத்தகத்தின் பின்னட்டையில் லா.ச.ரா. தமிழில் 1000 பிரதிகள் கூட விற்பதில்லை என்று புலம்பியிருப்பார். தமிழில் நல்ல வாசகர்கள் 20-25 பேர்தான் இருப்பார்கள் என்றுவேறு அண்மையில் பேச்சு அடிபடுகிறது. இந்த வாசகர்கள் யார் என்று கண்டுபிடித்துவிட்டால், எனது தொலைந்துபோன பொருட்களை மீட்டுவிடலாம்.

***
இதை அன்றே எழுதிவிட்டுப் பதிவிடாமல் இருந்தேன்.

காவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டேன். புகாரில் புத்தகம் தொலைந்துபோனதையும் குறிப்பிட்டுவிட்டேன். ஆனால், புகாரைப் பதிவு செய்து, சி.எஸ்.ஆர். தர உதவி ஆய்வாளர் வரவேண்டுமாம். சிங்காநல்லூருக்கு நான்கு நடை பேருந்தில் சென்றுவந்துவிட்ட பின்னும் உதவி ஆய்வாளரை இன்னும் சந்திக்கவே முடியவில்லை. வேறு வேலைகளின் பொருட்டு வெளியில் சென்றுவிடுகிறார். பர்ஸில் எங்கள் இருவரது ஓட்டுனர் உரிமங்களும் இருப்பதால், நானும் விடாது நடந்து கொண்டிருக்கிறேன் (மறுபடி விண்ணப்பிக்க காவல்துறையிடமிருந்து, கண்டுபிடிக்க முடியவில்லை என்று கடிதம் தேவையாம்).

நேற்று ஏதோ தேடிக்கொண்டிருந்த போது லா.ச.ரா. புத்தகம் வீட்டிலேயே இருப்பது தெரிந்தது. தவறுதலாக வேறு புத்தகத்தை எடுத்துச் சென்றிருந்தேனா என்று தெரியவில்லை (அந்தப் பயணம் முழுவதும் ஏனோ எதுவும் படிக்கத்தோன்றவில்லை). அல்லது, புத்தகமே எடுத்துச்செல்லவில்லையா என்றும் ஐயம் எழும்புகிறது – அப்படியிருப்பின், இலக்கியம் தன் மீது விழ இருந்த இழுக்கிலிருந்து பிழைத்தது.


(17-6-2017)

அவ்வப்போது என்னைப்போன்றவர்களுக்கு இப்படியான சவுக்கடியும் தேவைப்படுகிறது. அதிலும் புதுமைப்பித்தன் சவுக்கடி என்றால் சும்மாவா…சுளீரென்று விழுகிறது.

—————

கிராம வாழ்க்கை என்பது கிராம்யமான ஒரு காரியம் அல்ல. ஏதோ வன போஜனத்துக்காகப் போகிறவர்கள், வழக்கமாக உட்காரும் ஸோபாவை இழப்பதால், தமக்குக் கிடைப்பதாகக் கருதிக்கொள்ளும் சுகானுபவம் போன்றதல்ல. ‘கிராமத்துக்குப் போங்கள்’ என்று உருக்கமான பிரசங்கங்கள் பட்டனத்துக்காரர்களை நெட்டி நெட்டித் தள்ளுகின்றன. “சார், நான் ரிட்டயரானதும் ஏதாவது சுகமா ஒரு கிராமத்திலே போய்க் கழிக்கலாம்னு ப்ளான் போட்டிருக்கேன். நீங்க என்ன நினைக்கிறியள்?” என்கிறார் ஒருவர். இருப்பத்தியைந்து வருஷ உழைப்பால் உடலைக் கெடுத்துக் கொண்டதுடன், நேர்ச்சைக் கடனுக்காகக் கைகளைக் கும்பிட்டபடி உயரத் தூக்கிச் சூம்ப வைத்துக்கொண்ட பைராகி மாதிரி காலை பத்து மணி முதல் மாலை 5 மணி வரை மூளையை ஒரே திசையில் விரட்டி விரட்டி இற்றுப்போக வைத்துக்கொண்ட ஒருவருக்குத் தாம் எரிந்து சாம்பலாக வேண்டிய சுடுகாட்டுக்கும், தம்முடைய மிச்ச வாழ்வுக்கும் இடையில் கிடக்கும் ரேழியாக கிராமம் தென்படுவதில் அதிசயமில்லை. அது அவர் பண்ணின புண்ணியம். டில்லி சர்க்கார் காரியாலயத்தில் ஒரு மகன், என்ஜினியரிங் கம்பெனியில் ஒரு மகன், ஒரு அட்வகேட் ஜெனரலின் மகனுக்கு சகதர்மிணியாக ஒரு மகள், காலேஜூக்கு ஐம்பது மைல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் போவதுதான் மோட்ச சாம்ராஜ்யம் என்று நினைக்கும் சுந்தா, இவ்வாறு ஒரு படியாகத் தமது வாரிஸ் வர்க்கத்தைப் பங்கீடு செய்துவிட்டு, தம்முடைய அஜீர்ணம், 1936-வருஷ மோட்டார் கார், தொய்ந்துபோன காதில் வைத்து ஊசலாடும் வைரக்கம்மல் மனைவி, விட்டமின் விசாரம், திருக்குறள் உபாசனை ஆகியவற்றுடன் இவர் போய் ஒரு கிராமத்தில் குடியேறுகிறார் என்று வைத்துக் கொள்வோம். பத்திரிக்கையும், பழக்கூடையும், பட்டணத்திலிருந்து வந்துகொண்டே இருக்கும். ஆறு நிறையத் தண்ணீர் போனாலும் வென்னீரில்தான் குளிப்பார். உடம்புக்குள் குளிர்பெய்வதுபோல் தென்றல் இழைத்தாலும் பிளானல் சட்டை போட்டுக்கொண்டு வெள்ளிப்பூண்தடியோடு உலாவ, அதாவது வாக்கிங் போவார். எதிரே உட்கார்ந்திருக்கும் வெட்டியான் கைகட்டி வாய்புதைத்து, “எசமான் புத்தி” என்று சொல்லிக்கொண்டு எழுந்திருப்பான். அவ்வளவுதான் அவர் கிராமத்தில் அனுபவிக்கப் போகிறதும், அனுபவிக்கிறதும். ராவணன், மண்ணோடு பெயர்த்துச் சீதையைத் தூக்கிக்கொண்டு போய் அசோகவனத்தில் சிறை வைத்தானாம். அது நிஜமோ பொய்யோ எனக்குத் தெரியாது. ஆனால் நான் சொன்னேனே, இந்த மாஜி உத்தியோக வர்க்கம், அது, பட்டணத்தில் கொஞ்சம் பெயர்த்துக்கொண்டு போய் கிராமத்தில் போட்டு, அதன்மேல் உட்கார்ந்துகொண்டுதான் கிராமத்தைப் பார்க்கிறார்கள், கிராமத்தை அனுபவிக்கிறார்கள். இவர்களுக்குக் கிராமம் தென்படாது; அனுபவத்துக்கும் கிட்டாது. இவர்களது இந்த ராவண கைங்கரியத்துக்குள் அகப்படாத கிராமம் என்பது என்ன என்று கேட்கிறீர்களா? அப்படிக் கேளுங்கள்.

– ‘தமிழர் நாகரிகத்தில் கிராம வாழ்க்கை’, புதுமைப்பித்தன்


(24-6-2017)

என்னுடைய பழைய மின்னஞ்சல் பெட்டியைத் திறக்க முடியாமல் போனபோது, அதில் இழப்பதற்குப் பெரிதாக என்ன இருக்கிறது என்று அதிகம் வருத்தப்படவில்லை.

அசோகமித்திரன் எனக்கு எழுதிய இரண்டு மடல்கள் அதில் இருக்கின்றன என்பது இன்றுதான் உறுத்துகிறது.

அவரோடு எடுத்துக்கொண்ட படங்கள் கணினியில் இருக்கின்றன. ‘இப்போதுதான் என்னை அதிகம் படம்பிடிக்கிறார்கள். ஆனால், நீங்கள் விரும்புகிற கதைகளை எழுதிய அசோகமித்திரனுக்கும் இந்த வயதான தோற்றத்துக்கும் சம்பந்தமில்லை’ என்று சற்றுமுன்பு அவர் சொல்லியிருந்ததால், தயங்கியபடியேதான் நித்யா காமராவை எடுத்தாள். மகிழ் உடனிருந்ததாலோ என்னவோ மகிழ்ச்சியுடன் படம்எடுத்துக்கொண்டார்.

காந்தி ஜெயந்தி நிகழ்ச்சி ஒன்றில் அவரைப் பேச அழைத்திருந்தார்கள். அவரது வீட்டிலிருந்து அழைத்து வந்து, திரும்ப விடும் பொறுப்பை நான் கேட்டு வாங்கிக்கொண்டேன். நான் மிகவும் ரசித்த போக்குவரத்து நெரிசல் அன்றுதான் கிடைத்தது. வண்டியோட்டியபடியே அவரோடு நீண்ட நேரம் பேசமுடிந்தது. திரும்பும்போது, உணவுவிடுதியில் உண்டோம். இரவு, நேரமாகிவிட்டபோதும், மேலே வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

இரண்டு புத்தகங்களையும், பல நினைவுகளையும் பரிசாகப் பெற்றுக்கொண்டு திரும்பினோம். அவரது கையெழுத்து அந்த இரண்டு புத்தகங்களிலும் இன்னும் இருக்கிறது.

– – – –

“நான் ஒம்மாதிரி இருந்தேன்னா தினம் தூக்குக் கயித்துக்கு ஓடிண்டிருக்கணும். உனக்கு மனசுக்கு ஆறுதலாகச் சொல்லணும்னு நான் சொல்லலை. உனக்கு என்ன ஆறுதல் வேண்டியிருக்கு? என்ன ஆயிடுத்து அப்படி உனக்கு? உன்னோட தொல்லையெல்லாம் உன் தலைக்குள்ளேதானிருக்கு. உன் கண்ணுக்குள்ளேயிருக்கு. உன் கண்ணு வெளியிலே ஒண்ணையுமே பாக்கறதில்லை. யாரைப் பார்த்தாலும் அவங்களைப் பாக்கிற மாதிரியில்லாம கண்ணாடியிலே உன்னை நீயே பாத்துக்கிற மாதிரிப் பண்ணிடறது. உன் கண்ணாடி பூதங் காட்டற கண்ணாடி.ஏன் உனக்குள்ளே இவ்வளவு சுயநலமே நிறைஞ்சிருக்கு? உனக்கு ஏன் மத்தவங்களைப் பாக்கவே முடியலை? ஏன் உனக்கு மத்தவங்களைப் பத்தி நினைக்க முடியலை? மத்தவங்களைப் பத்திக் கவலைப்பட முடியலை?”

ஜமுனா பதில் ஒன்றும் சொல்வதற்குத் தெரியாதவளாக நின்றாள். டீச்சரம்மா பதிலை எதிர்பார்த்துக் கேள்வி கேட்ட மாதிரித் தோன்றவில்லை. ஆனால், தொடர்ந்து அவள் பேசச் சொல்லி கேட்டுக் கொண்டிருந்துவிட்டு அது அப்படியே நின்றுபோனதும் ஜமுனாவைச் சங்கடம் கொள்ள வைத்தது.

ஜமுனா, “என்னைப் பத்தி யாரு கவலைப்படறாங்க?” என்றாள்.

“நான் கவலைப்படறேன். நான் கவலைப்படுவேன்னே உனக்குத் தோணலை. அப்படி இன்னும் எவ்வளவு பேரு உன்னைப் பத்திக் கவலைப்படறவங்க இருந்தும் உனக்குத் தோணாம இருக்கோ? அப்படியிருந்தாலும் உன்னைப் பத்தி யாராவது கவலைப்பட்டாத்தான் உனக்கு அவங்களைப் பத்திக் கவலைப்பட முடியுமா? ரொம்பச் சின்னத்தனமாயில்லே? ஏன் இப்படி ஏழையாயிருக்கே? உனக்கு மேலே ஒரு கூரையிருக்கு, உன் செலவுக்கு ஏதோ பணம் கிடைக்கிற மாதிரியிருக்கு, உனக்குப் பேசறதுக்கு, சிநேகிதம் செய்து கொள்ளறதுக்குன்னு மனுஷ பலம் இருக்கு, உனக்குப் பேசிப் பழகப் பழக்கம் இருக்கு, இருந்தும் ஏன் இப்படி ஏழையாயிருக்கே? உன் துக்கம் கஷ்டம் எல்லாம் நீ இப்படி ஏழையாக இருக்கிறதுனாலேதான். உனக்கு உன்னைத் தவிர வேறு யாருமே கிடையாது. நீயே சுத்த ஏழை. ஏழை, ஏழைகிட்டே என்ன பெற முடியும்?”

– ‘தண்ணீர்’, அசோகமித்திரன்

(போராட்டத்திற்கு வராத மாணவர்களை வழிமறித்து வளையல் தருகின்றனர் சில பெண்கள். ஆனால் அவர்களும்கூட காரில் வந்திறங்கும் பணக்கார மாணவர்களை அணுகவதில்லை.)

‘அப்படி என்றால் வாழ்க்கையில் தத்தளித்துக் கொண்டிருப்பவர்களுக்கும் திருப்பிப் பதில் தரமுடியாத சாதுக்களுக்கும்தான் சத்யாகிரஹமும் பள்ளி மறுப்பும்: அவர்கள்தான் அவர்களுக்கென்று இருக்கும் சிறிதையும் தியாகம் செய்துவிட வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால் அவர்களைக் கேலி செய்யலாம், நிர்ப்பந்தப்படுத்தலாம், பலவந்தம் செய்யலாம்.’

——–

‘அழுக்கும் நோயும் சர்வசாதரணமாகிப்போன வாழ்க்கை. இங்கே மதத்திற்கு என்ன வேலை? ஆனால், இம்மாதிரி இடங்களில்தான் மதக் கலவரங்கள் நடக்கும்போது வீடுகள் கொள்ளையடிக்கப்படுகின்றன, மண்டைகள் உடைகின்றன, உடைமைகள் கொளுத்தப்படுகின்றன.’

———

(பயத்தோடும், கரிசனத்தோடும் தொடர்ந்து கவனித்து வந்த அகதிகள் திடீரென்று காணாமற் போனபோது:)

‘மிகவும் அமைதியாக வாழ்ந்து வந்த அந்த ஜனக்கூட்டம் அத்தனையும் எங்கோ மறைந்து போயிருந்தது. எங்கே ஒருவர்கூடப் பாக்கி இல்லாமல் போயிருக்கக்கூடும்? இப்போது எதைப் பாதுகாத்துத் தூக்கிக் கொண்டு போயிருப்பார்கள்? அவர்கள் தூக்கிக்கொண்டு போக என்ன இருக்க முடியும்?’

– 18வது அட்சக்கோடு, அசோகமித்திரன்


(7-4-2017)

இனி சே குவேரா படத்தைப் பார்க்கும் போதெல்லாம் மருத்துவமனைப் படுக்கையில் பார்த்தி அணிந்திருந்த கறுப்பு சே டீ சர்ட் தான் நினைவுக்கு வரப்போகிறது.

கமலா ரஜினியா என்று சிறுவயதில் படுக்கையில் அடித்துப்புரட்டித் தொடங்கிய சண்டைகள், வளர்ந்தபின் காந்தி மாவோ என்று காரசாரமான விவாதங்களாக விரிந்தன. இடையில் எத்தனையோ புள்ளிகளில் இணைந்தோம்.

கடந்த பல ஆண்டுகளாக எனக்கு மேல் எனது இடத்தில் என் பெற்றோருக்குத் துணையாக இருந்திருக்கிறான்.

நேற்று அவன் மனைவியிடம் அவனது மரணத்தைச் சொல்கிற வலியையும், சின்னஞ்சிறு மகளிடம் தந்தையின் மரணத்தைச் சொல்கிற வலியையும், பெற்றவர்களின் ஆற்றாமையைக் காண்கிற வலியையும், பல மாதங்களாக அவனைக் காப்பாற்றப் போராடிக்கொண்டிருந்த அவனது அக்கா-மைத்துனரின் வலியையும் உணரவேண்டியிருந்தது.

இன்றைக்குத்தான் நானும் ஒரு தம்பியை இழந்திருக்கிறேன் என்கிற உணர்வு என்னுள் இறங்குகிறது.

நலிந்த கூட்டுக்குள் அடைப்பட்டுக் கிடக்கவிடாத சிறகுகள் அவனுக்கு


 

23-1-2017

கோபம், ஆற்றாமை, வெட்கம், குற்றவுணர்வு. வேறென்ன சொல்ல. உங்கள் போராட்டத்தின் கொண்டாங்களின் போது அருகிலிருந்து கலந்துகொண்டோம். உங்கள் துயரத்தை தூரத்திலிருந்தே பார்க்க முடிந்தது. அரசு எந்திரத்தின் குரூர முகத்தை அகிம்சை முறையில் எதிர்கொள்வதற்கான பயிற்சியும் வழிகாட்டுதலும் உங்களுக்கு இல்லை என்பதை உங்கள் குதூகலத்துக்கிடையில் மறந்து போனோம். மன்னியுங்கள் மாணவர்களே.


23-1-2017

இன்றிரவும் மாணவர் போராட்டித்திற்குச் சென்று வந்தோம். கடந்த இரு இரவுகளைவிடவும் கூட்டம் குறைவுதான் என்றாலும், இன்னும் கணிசமாகவே உள்ளது.

சல்லிக்கட்டுக் குழுவினரின் நிருபர்கள் சந்திப்புக்குப்பின் கொண்டாட்ட மனநிலை சற்றே குறைந்த மாதிரி இருந்தது. குறிப்பாக கோவைப் போராட்டத்தைப் பற்றித் தனித்துக்கூறியது ஒரு வித எச்சரிக்கை உணர்வினை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் மேலும் அதிக சுயக்கட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டிருக்கிறனர். கோஷங்களும், பதாகைகளும், கொண்டாட்டங்களும் குறைந்திருந்தன. ஆனால் இன்னும் உறுதி குலையவில்லை.

வெளியில் வரும்போது ஒரு கூட்டம் பழைய கோஷங்களுடன் உள்ளே நுழைந்து கொண்டிருந்தது. அப்போது ஒதுங்கி வந்துவிட்டோம். பெரிதாக உறுத்தவில்லை. ஆனால், சுப.உதயக்குமரன் அவர்களின் இந்தப் பதிவினைப் படிக்கும்போது சில ஐயங்கள் எழாமலில்லை. மாணவர்கள் அல்லாத பலரும் கடந்த நாட்களில் இப்படிக் கூட்டமாக மேளதாளங்களுடன் வந்துசென்று கொண்டுதான் இருக்கின்றனர் என்றபோதும், இது இப்பொது உறுத்துகிறது.

அவரது எச்சரிக்கையும் அறிவுரையும் தான் என்னுடையதும்.

குறைந்தபட்சம் தற்காலிகமாகவேனும், நிரந்தரமானதாகக்கூடிய ஒரு சாத்தியத்தோடும், ஒரு வெற்றி கிடைத்திருக்கிறது. பிளவுகள் ஏற்படாமல், கசப்புகள் வளராமல், நம் கரங்கள் உயர்ந்திருக்கும் போதே, வெற்றிக் களிப்போடு போராட்டத்தை முடித்துக்கொள்வது தான் விவேகம் என்று அனுபவ அறிவு கூறுகிறது.

இளைஞர்கள் தம் வேகமும் உறுதியும் குலையாமல் இன்னும் தொடர முடியும் என்று கருதினால், அதையும் குறைகூறிவிட முடியாது.

சல்லிக்கட்டுக்கான இந்தப் போராட்டம் நம் எதிர்காலத்தை மாற்றக்கூடிய ஒரு தொடரியக்கமாக மலரட்டும் என்கிற வாழ்த்துகளை மாணவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

—————-

/அன்பு வேண்டுகோள் !
குடியரசு தினத்தை நடத்த வேண்டும் என்ற சூழலில், மாநில மற்றும் மத்திய அரசாங்கங்கள் இப்போது பொறுமை இழந்த நிலையில் உள்ளன. எனவே மாணவர்கள் சிந்தித்து செயல்பட வேண்டும்.
போராட்டத்தை கலைக்கும் வகையில், மாணவர்களை பிளவு படுத்தும் நோக்கத்தோடு செயல்பாடுகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. சமூக விரோதிகளை உள்ளே நுழைத்து போராட்டத்தை சீர்குலைத்து, அசம்பாவிதம் ஏற்படுத்தும் நடவடிக்கைகள் நடப்பதாக அஞ்சுகிறேன்.
மாணவர்கள் செய்து வரும் போராட்டம் என்பது, கற்பனை கூட செய்ய முடியாத தவம். எனவே அவர்களின் உழைப்பு வீண் போய்விடக்கூடாது. கூடங்குளம் போராட்டம் என்பது சில கிராம மக்களை கொண்டு நடத்தப்பட்டது, ஒருங்கிணப்பு குழு இருந்தது, கட்டுப்பாடான தலைவர்கள் இருந்தார்கள்… அதிலேயே அவ்வளவு குழப்பங்களை உண்டாக்கினார்கள்.
அப்படிப்பட்ட நிலையில் மாணவ குழந்தைகள் போராட்டத்தை சீர்குலைப்பது, திசை திருப்புவது எளிதானது. எனவே, இப்போது பின்வாங்கிக் கொண்டு பின்னர் அடுத்த கட்டத்தை நோக்கி எடுத்து செல்வது விவேகமானது. இதையும் மீறி போராட்டத்தை தொடருகிறோம் என்றால் மாணவர்களோடு நான் தொடர்ந்து நிற்பேன்.
– சுப. உதயகுமார் �கூடங்குளம் போராட்டத்தை ஆயிரம் நாட்கள் கடந்து தொடர் போராட்டமாக கொண்டு சென்ற ஒருங்கிணைப்பாளர்./


23-1-2017

காந்தியின் முதல் ஒத்துழையாமை இயக்கத்தின் (1920-22) ஒரு முக்கியப் பகுதியும் மாணவர் போராட்டம்தான். கல்விச்சாலைகளிலிருந்து மாணவர்கள் வெளியேறினர்; பின்னர், புதிதாக நிறுவப்பட்ட தேசியக் கல்லூரிகளில் சேர்ந்தனர். அந்த இயக்கத்திலிருந்துதான் ஜெயப்பிரக்காஷ் நாராயண் போன்றவர்கள் உதித்தனர். தேசியப் பிரச்சனைக்காக, நம் நாட்டில் முதன்முதலாக மாணவர்கள் பெருமளவில் கலந்துகொண்ட போராட்டம் அதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

அதே ஜெ.பி.யின் பீகார் போராட்டத்தில், மாணவராக இருந்தபோது பங்கெடுத்த ராமச்சந்திர ராஹி என்கிற மூத்த சர்வோதய இயக்கத் தலைவரோடு மதுரை காந்தி அருங்காட்சியக்கத்தில் ஓரிரவு ஒரே அறையைப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர் பகிர்ந்து கொண்ட ஒரு நிகழ்வு என் நினைவில் பசுமையாய் நிற்கிறது.

மாணவர் போராட்டத்தின் உச்சத்தில், ஜெ.பி.யைக் கைது செய்யக்கூடும் என்ற செய்தி கிடைத்தபோது, போராட்டக் குழுவிலிருந்த மாணவர்கள், அவருக்கே தெரியாமல் அவரைச் சுற்றி ஒரு பாதுகாப்பு அரண் அமைத்து அவரைக் கைது செய்யவிடாமல் தடுக்க முடிவுசெய்தனர். அன்று ராஹி தன்னிடமிருந்ததிலேயே மிகச் சிறந்த உடையை அணிந்து சென்றாராம். ‘அன்றைய தினம் எனது திருமண தினத்தை விட முக்கியமான திருநாள். ஜெ.பி.யைப் பாதுகாத்து, அவருக்காகக் கைதாகக்கூடிய சாத்தியத்தைக் கொண்டிருந்த தினம் அது,’ என்றார்.

இத்தகைய கொண்டாட்டமான போராட்ட உணர்வினைத்தான் இன்றைய மாணவர்களிடம் காண்கிறோம்.


(22-1-2017)

நாட்டு மாடு: நம் காலத்தின் சர்க்காவை நாம் எதாச்சையாகக் கண்டறிந்துவிட்டோம் என்று நினைக்கிறேன்.

அது ஒரு பண்பாட்டின் புனித அடையாளமோ, ஒரு வீர விளையாட்டின் பெருமைமிகு அடையாளமோ மட்டுமன்று.

கிராமப் பொருளாதாரத்தின் மீட்சிக்கான சின்னமாக, தன்னிறைவின் சின்னமாக அது இருக்கலாம்.

பால் கொடுக்கும் இயந்திரங்களாகிவிட்ட ஜெர்சிப் பசுகளோடு ஒப்பிடும் போது நாட்டு மாடுகளின் உண்மையான, முழுமையான பொருளாதாரப் பங்களிப்பென்ன என்பதைக் கணக்கிட்டுப் பகிர்ந்துகொள்ளவேண்டும். நகர்ப்புற மக்களின் நல்வாழ்வு, நீடித்த தன்னிறைவான முறையில் அமையும் கிராமப்புறங்களின் மீட்சியில் தான் அடங்கியுள்ளது. மாடும் நீருமே அதற்கு முக்கியமான திறவுகோல்கள்.

ஒரு திடமான உண்மையை உயர்வு நிவிற்சியாகத் தோன்றச்செய்யக்கூடிய ஆபத்திருப்பினும், இதைச் சொல்லித்தான் ஆகவேண்டும்: மனித குலத்தைக் காப்பாற்றிக்கொள்வதற்கு நமத்து ஒரு வரலாற்றுத் தருணம் வாய்த்திருக்கிறது.

இதுவரை, பெருமளவில் ஒரு நகர்ப்புறப் போராட்டமாகவே இருக்கக்கூடிய ஒன்றை, இனி நாம் ஒரு கிராமிய இயக்கமாக மாற்றவேண்டும். அங்குதான் அது உண்மையிலேயே பொருட்படுத்தக்கூடிய விளைவுகளை ஏற்படுத்தும்.


 

20-1-2017

2013ல் தலைமையின்றி, தெளிவான இலக்கின்றி நடைபெற்ற பெரும் மாணவர் போராட்டம் அப்போது எந்த குறிப்பிடத்தகுந்த வெற்றியையும் பெற்றுவிட இயலவில்லை. ஆனால், இன்றைக்கு நடக்கும் இம்மாபெரும் போராட்டம் அன்றைய போராட்ட அனுபவமின்றிச் சாத்தியப்பட்டிருக்குமா என்பது சந்தேகமே. அப்போது எள்ளிநகையாடித் துள்ளித்தூற்றிய தேசிய ஊடகங்கள் இன்று மிகுந்த மதிப்புடன் இப்போராட்டத்தைப் பற்றிப் பேசுகின்றன. மத்திய அரசும் நிராகரித்து மௌனம் சாதிக்கமுடியாத வலுவுடன் போராட்டம் வளர்ந்துள்ளது.

அன்று போல, இன்றும் இப்போராட்டத்தின் இலக்கு மிகக்குறுகியதாகவே உள்ளது. ஜல்லிக்கட்டு என்பதைத் தாண்டி மேலும் பல முக்கியமான சமூக-பொருளாதார அம்சங்களை மாணவர்கள் புரிந்துகொண்டால் நன்றாகத்தான் இருக்கும். காளைகளைக் காப்பதற்கு ஜல்லிக்கட்டு போன்ற விளையாட்டுகளும் கொண்டாட்டங்களும் அவசியம்தான். ஆனால், நாட்டுமாடுகளைக் காப்பதற்கு ஜல்லிக்கட்டு மட்டுமே போதாது என்று நம்புகிறேன். மாட்டுப்பொருளாதாரத்தையும் கிராமத் தற்சார்பையும் மீட்டெடுப்பதன் மூலமே நாட்டு மாடுகளைக் காக்கமுடியும். ஏறுதழுவுதலைவிட ஏர் பிடித்தல் இன்று அழியும் நிலையில் உள்ளது. சாணிக்காகவும் பாலுக்காகவும் மட்டுமே மாடுகள் வளர்க்கப்பட்டால் மாடுகளுக்கும் நல்லதல்ல; நமக்கும் நல்லதல்ல. ஜல்லிக்கட்டுக்காக இன்று சாதிமதங்களைக் கடந்து எல்லாரும் திரண்டிருக்கும்போது அதை ஒரு சிற்றினக்குழுவின் விளையாட்டாக மட்டும் இனிப்பார்க்க முடியாது…சாதி பற்றியும் பேசித்தான் ஆகவேண்டும்.

ஆனால், இந்த அறிவுப்பூர்வமான முன்னெடுப்புகளெல்லாம் பின்னொரு பொழுதிற்குக் காத்திருக்கலாம். இப்போதைக்கு உணர்வுரீதியாக எல்லாரையும் இணைக்கும் ஒற்றைப் புள்ளியாக ஜல்லிக்கட்டு உருவெடுத்துள்ளது. இப்புள்ளியை நாம் பற்றிக்கொண்டால்தான், இதிலிருந்து நாளை பெரிய கோடுகள் விரிந்துசெல்லும் சாத்தியம் உயிர்ப்புடன் இருக்கும். அக்கினிக்குஞ்சுகள் தினந்தோறும் தோன்றுவதில்லை.

இன்றும் நேற்றும் வ.உ.சி. மைதானம் சென்று வந்தேன். நேற்றைக்கே நல்ல கூட்டம். இன்று மாணவர்கள் மட்டுமல்லாமல், திரள்திரளாகப் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். கோவையில் எந்தவொரு அரசியல் மாநாடும் இந்த அளவிற்கு கூட்டங்களைக் (குறிப்பாக, படித்த படிக்கும் பெண்களின் கூட்டத்தை) கண்டிருக்க வாய்ப்பில்லை. ஒரு வேளை உலகத்தமிழ் மாநாட்டிற்கு வந்திருக்கலாம். மைதானத்திற்கு வெளியே மட்டும்தான் காவலர்களைக் காணமுடிகிறது. பல்லாயிருக்கணக்கானவர்களை மாணவர்களே ஒழுங்குபடுத்திக்கொள்கிறார்கள். நான் விசாரித்துப் பார்த்தவரை தலைமை, ஒருங்கிணைப்புக்குழு என்றெல்லாம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனாலும், பெண்களுக்குத் தனியிடங்கள், பாதுகாப்பு (மனித) வளையங்கள், தண்ணீர், பிஸ்கட், உணவுப் பொட்டலங்களின் தொடர்ந்த விநியோகம், குப்பைகளை உறைகளில் சேகரிப்பது என்று மிகத்திட்டமாக ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு நிகழ்வினை ஒத்திருந்தது. என் மகளோடு சென்றிருந்த நாங்கள் எந்த ஒரு இடத்திலும், அத்தனை கூட்டத்தில் நெரிசலில் சிக்கிக்கொள்வோம் என்ற அச்சத்தை அடையவில்லை.

மாணவர்களுக்கு என்.சி.சி., ஸ்கவுட், தொடர் தேர்வுகள் என்று ஒழுங்கையும், கட்டுப்பாட்டையும் நம் கல்விச்சாலைகள் கற்றுத்தந்திருக்கின்றன. ஆனால், கலகத்தையும், எதிர்ப்புணர்வையும் இத்தனையாண்டு கால ஒடுக்குமுறைக் கல்வி ஒழித்துவிடவில்லை என்பதும் இப்போது தெளிவாகிறது. நம் இளைஞர்கள் கலகமும் கற்கத்தான் வேண்டும். அப்படிக் கற்க இதைவிட அவர்களுக்கு வேறு நல்ல களம் வேறெது அமையும்? அரசியல், கருத்தியல், பொருளாதாரம் பற்றிய தெளிவையெல்லாம் தேடிப்போக அவர்களுக்கு இக்களஅனுபவம் ஓர் உந்துதலாக இருக்கும் என்று நம்புவோம்.

எல்லாவற்றிற்கும் மேலாக, இப்போராட்டம் ஒரு மாபெரும் கொண்டாட்டமாக நடைபெறுகிறது. பேண்ட் வாத்தியங்கள், பறைகள், ஆட்டம், பாட்டம் என்று போராட்டக்களம் விழாக்கோலம் பூண்டிருக்கிறது. தம்மை வருத்திப் பல்லாண்டுகள் போராடுவதில் எந்தப் பயனும் இல்லையோ என்கிற ஐயங்கள் எழத்தொடங்கியிருக்கிற இக்காலகட்டத்தில், இக்கொண்டாட்டப் போராட்டம் ஒரு புது வழியைக் காண்பிக்கக்கூடும். நம் கண்ணீரையும், கோபத்தையும் விட நம் குதூகலமும், கிண்டலும், கேலியும், சிரிப்பலைகளும் அதிகார மையங்களை உலுக்கக்கூடும்.

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: